கவியின் காதல்!
-புவனேஷ்வர்
நல்ல புகழுடைய வீணை யதன்
நாதமெ னக்குச்சுவை யில்லை – அரும்
மெல்லியலே திருக் குவையே! உயிர்ச்
சோதியு னக்குவய மானேன்!
கொல்லைப் பசுகொடுத்த பாலும் நல்ல
மாமி தந்தஉண வேதும் – மிக
நல்ல தாய்கொடுத்த பாகும் எனக்கு
சிந்தை மகிழ்வுதர வில்லை;
நல்ல நினைப்புடைய தோழர் அவர்
சொல்லில் எரிச்சலுமுண் டாச்சு – ஒரு
கள்வெறி போலிது வாச்சு வந்து
தெள்ளமு தேயருள் வாயோ?
சோலை மரநிழலில் மாந்தர் மகிழ்
சோடி யாச்செல்லற் கண்டா லுன்
னோடி ணைந்திடற் கெங்கும் எனக்
கோடி தள்ளுதற் செய்வாய்?
ஓய்வு ஒழிதலில் லாமல் லுன்றன்
உறவைநி னைந்திரங்கு வேனோ – ஓர்
வாழுமு றைமையறியேன் நான் வந்
திருந்தென் கலிதொலைத் திடாயோ?
அஞ்சு மானொத்த பெண்ணே இது
வஞ்சக மன்று நீ கண்டாய் – இனி
நெஞ்ச மறப்பதில்லை யுன்னை யொரு
தஞ்சமென் பேன்மறுக் காதே!
அருளில் பெரியவராம் மாதர் என்று
நாலும றைசொல்லக் கேட்டேன் – தனி
யிருளுன் னவனென்னை கொண்டால் அது
ஏலா துனக்கது சொல்வேன்;
திங்கள் முகம்பதிந்த நெஞ்சில் சிறு
தீப்பொறி தங்கிடு மோடீ? உனைக்
கண்டு மணந்திடவே வந்தேன் – இது
பண்டைமு றைமையடி கண்ணே!
வண்டு லாவுசோ லையில்நாம் இனிக்
கண்டுமனம் கலந்தே யிணைவோ மணம்
கொண்டு மறைவழி நின்றே புகழ்
மண்டு மனையறம் செய்வோம்!
வாவ், இதில் பாரதியின் வீச்சு மின்னுகின்றதே! யார் இந்த புவனேஷ்வர்? இவ்வளவு நாள் எங்கிருந்தார்? இன்னும் எழுதுங்கள்.
//திங்கள் முகம்பதிந்த நெஞ்சில் சிறுதீப்பொறி தங்கிடு மோடீ? உனைக்
கண்டு மணந்திடவே வந்தேன் – இது
பண்டைமு றைமையடி கண்ணே!//
இதை எழுதியவர் ஒன்று மகாகவி பாரதியாக இருக்கவேண்டும்! இல்லை அவரின் கவிதைகளில் ஊறித்திளைத்தவராக இருக்க வேண்டும்!
கவிஞர் புவனேஸ்வருக்கு என் வாழ்த்துகள்!!!
அன்புக்குரிய அண்ணாகண்ணன் மற்றும் மாதவன் இளங்கோ அவர்களே,
தங்கள் உளம் கனிந்த பாராட்டுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
எனது அம்மா முயற்சியால் சிறு வயது முதலே பாரதியின் கவிக்கு நான் வசப்பட்டவன். தமிழும் இலக்கியமும் செய்யுட்ச்சுவையும் எனது தோழர்கள்
கவிஞர் தனுசு அவர்கள் வல்லமையைப் பற்றி எனக்கு சொன்னார்.
நான் மின்வேதியியலில் முனைவர் பட்டம் பெற இருக்கிறேன். வசிப்பது குமரிமாவட்டத்தில். பிறந்தது ஆத்தூரில், வளர்ந்தது ஓசூரில். தமிழ் எனது முதற்காதல்.
இறையருளால், மேலும் எழுத விழைகிறேன்.
வணக்கங்களுடன்
புவனேஷ்வர்
எனது இந்த ஆக்கத்தினை பிரசுரித்த வல்லமை குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாகுகின்றேன். வளரும் எழுத்தாளர்களுக்கு இஃது ஒரு சிறந்த களமாகும். இம்முயற்சி மேன்மேலும் வளர்ந்து செழித்தோங்க இறையருளை வேண்டுகிறேன்.
புவனேஷ்வர்
இக்கவிதைக்கு மெட்டு – “ஆசைமுகம் மறந்து போச்சே” பாடகுக்கு உள்ள அதே மெட்டு. அதன் படி அமைத்துள்ளேன். கடைசி பாடலில் கொஞ்சம் இடிக்கிறது. மன்னிக்கவும்.
புவனேஷ்வர்
Arumai.. Proceed.. and ur Path to fame is done here
காதல் மின்வேதியியலில் இத்தகைய மாற்றங்கள் சகஜம் .
கவியின் காதல் வரும்!! காதலில் கவிதை வரும்
பாரதியின் பாட்டு காதலைக் கொடுத்தது உண்மை இனிக்கிறது
குடும்ப வாழ்வில் செல்லம்மாவின் பாடு ? உண்மை கசக்கிறது
பாட்டில் சிறக்க பாரதியைப் பார்
வாழ்வில் சிறக்க வள்ளுவனைப் பார்