இலக்கியம்கவிதைகள்

எதிர்காலம் மண்ணாகலாமா?

-வே.ம. அருச்சுணன் – மலேசியா

 

நடந்து முடிந்த
பதின்மூன்றாவது தேர்தலில்
மூவினத்தின்
அடையாளம் தெரிந்தது…..!

மூன்று வந்தேறிகளுக்கும்
நிலைமை தெரியவில்லை
ஆட்டத்தை நிறுத்தவில்லை
வயிற்றுக்காக வாடிய மக்கள்
வந்த இடத்தில்
வகை தெரியாமல் வாழ்கின்றன…..!

இங்கே
ஏற்றம் தராது மந்திரத்தை
துணிவாய் முழங்குவதும்
ஒருவரைவொருவர்
தின்று ஏப்பமிட எண்ணுவதும்
வீண் வம்பு
சொன்னால் நம்பு…..!

எடுப்பது பிச்சை
பேசுவதோ கொச்சை
பேச்சில் ஒற்றுமை
நடப்பில் வேற்றுமை
அகம்பாவம்
தனக்கே எல்லாமென்ற
குறுகிய உள்ளம்
சிறக்குமா இந்த பெருநிலம்….?

கேடு கெட்ட உள்ளமே
துன்மார்க்கனே
சுனாமி
எந்த உருவில்
வருமென்று தெரியுமா….?

முதுகொடிந்த
தமிழனுக்கு இன்னுமா
சோதனைகளும்….வேதனைகளும்……?

ஒரு சொல் கேளீர்
சீன சமூகம்
அவர்களோடு கூடிப்பழகு
ஒற்றுமையின் உச்சம் தெரியும்
போராடும் வல்லமை புரியும்
அவர்கள்
மொழி….பண்பாடு
கணமும் மறந்ததில்லை
எழுச்சியைக் கிஞ்சிற்றும்
துறந்ததில்லை…….!

யதேச்சயாய் எதையும் நம்புவதில்லை
யாரையும் ஏற்பதும் இல்லை
சுயமாய் சிந்திப்பதும்
செயல்படுவதும்
அவர்களின் வெற்றிக் கவசங்கள்……!

உண்மை உணர்வீர்
இனிய வாழ்வு
மாலையுடன் காத்திருக்கிறது ஏற்பீர்…..!

இளையோரே முன்வருவீர்
தமிழர் வாழ்வுக்கு வழிகாண்பீர்
அடிமை வாழ்வைத் துறந்தே
சுயமாய் வாழ்வு சிறக்க
சொந்தத் தொழில் புரிவோம்
அடிமைத்தொழிலை மறந்து
செல்வச் சீமானாகத் திகழ்வோம்……!

கையேந்தும் சமூகம் நாமில்லை என்றே
உரக்கக்கூறுவோம்

ஒரே குரலில்……!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க