திவாகர்

கல்வெட்டுக் குறிப்புகள் என்பது நாம் கடந்து போன காலத்தின் சுவடுகள், ஆவணங்கள், நம் முன்னோர் தம்மைப் பற்றி விட்டுச் சென்ற செய்திச் சேகரங்கள். நம் தேசம் எப்படியெல்லாம் இருந்தது., எப்படியெல்லாம் புகழ்பெற்றது, எப்படியெல்லாம் சண்டை போட்டுக் கொண்டோம், எப்படியெல்லாம் இந்தக் கோயில் குளங்களைக் கட்டினோம், எப்படியெல்லாம் பிறரைச் சாகடித்தோம் அல்லது தண்டனை வழங்கி திருப்தி அடைந்தோம், எப்படியெல்லாம் பாபங்கள் செய்தோம், எப்படியெல்லாம் புண்ணியங்கள் செய்தோம், யார் யாரைக் கொன்றார்கள், யார் யாரைக் காப்பாற்றினர், எந்தக் கோயிலில் எந்த தெய்வத்துக்கு எத்தனை விதமான ஆபரணங்கள் செய்வித்தோம், எந்த தெய்வத்துக்கு எப்படிப்பட்ட ஆராதனையை எந்த அரசன் தயவில் செய்வித்தோம், இந்த சமாதியில் உள்ள எம் முன்னோர் யாவர்.. என்றெல்லாம் ஏகப்பட்ட செய்திகளை வருங்காலத்துக்கு எடுத்துச் சொல்ல ஒரு காலப்பெட்டகமாக நமக்கு நம் முன்னோர் ஏற்பாடு செய்ததே இந்தக் கல்வெட்டுகள்.

திருச்சி மலைக்கோட்டையில் உள்ள ஒரு கல்வெட்டு புகழ்பெற்ற மகேந்திரபல்லவன் தான் ஏன் சைவத்துக்கு மாறினான் என்று குறிப்பிட்டுள்ளான் என்றால் புவனேஸ்வரில் உள்ள ஒரு கல்வெட்டு எப்படி 113 வருடங்கள் ஒற்றுமையாக இருந்த தமிழ் மன்னர் கூட்டத்தை ஒரு கலிங்க மன்னன் சிதறடித்தான் என்பதையும் தெரிவிக்கும். இப்படி எத்தனையோ விஷயங்கள்.. அதுவும் கல்வெட்டுகளை மிகத் தீவிரமாக ஆராய்ந்த, இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஆர்வலர்களுக்கு கல்வெட்டு விஷயம் என்பது காந்த நிலையைப் போன்றதும் அப்படியே கட்டிப் போட்டுவிடும் என்பதும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். விசாகப்பட்டினத்தில் கிடைத்த இரண்டு தமிழ் கல்வெட்டுகள்தான் எனது முதல் நாவல் வம்சதாராவுக்கான அஸ்திவாரம் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டும் உள்ளேன்.

இப்படிப்பட்ட காலப்பெட்டகம் என்று சொல்லப்படும் ஒரு அரிய விஷயங்கள் இன்னமும் ஏராளமாக மைசூரில் அரசாங்க ஆர்க்கியாலஜி அலுவலகத்தில் படியெடுக்கமுடியாமல் அழிந்து வருகின்றன என்பது எல்லா அறிஞர்களும் அறிந்த விஷயம்தான் என்றாலும், இதில் வேதனைக்குரிய விஷயம் எதுவென்றால் அப்படி அழிந்து போகும் ஆவணங்களில் முக்கால்வாசி தமிழில் வரையப்பட்டவையாகும் என்பதே. இதைப் பற்றி நண்பர் ஷஃபி முன்னா ஆனந்த விகடனில் ஒரு கட்டுரையில் எழுதியதை கீழேயுள்ள சுட்டியில் படிக்கலாம்.

http://news.vikatan.com/index.php

அதே சமயத்தில் இந்த விஷயத்தினை மிகத் தீவிரமாகக் கையாண்டு வரும் ஒரு பெண்மணி இந்த வாரம் நம் கவனத்தைக் கவர்கிறார். அவர்தாம் பேராசிரியர் சாந்தினி பீ அவர்கள்.

சாந்தினி பீ அலிகார் பல்கலையில் சரித்திரப் பாடம் புகட்டும் ஒரு தமிழர் என்பதோடு இந்தக் கல்வெட்டு விஷயத்தைப் பலர் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். சாந்தினியின் முயற்சி பலனளிக்கவேண்டும், இன்னமும் சேதமாகாத கல்வெட்டுகளாவது படியெடுக்கப்பட்டு காலப்பெட்டகம் சீர் செய்யப்படவேண்டும் என்பது எம்மைப் போன்றவர்களின் விருப்பம். எதிர்கால சந்ததியினர் இன்னமும் சிறப்பாகக் கடந்த காலம் பற்றித் தெரிந்திட இந்தக் கல்வெட்டுகள் உயிர் பெறும் அளவுக்கு சம்பந்தப்பட்டவர்கள் செயல்படவேண்டும் என்பதும் நம் அவா. பேராசிரியர் சாந்தினியின் முயற்சிகளுக்கு நம் வாழ்த்தை அள்ளி வழங்குவதோடு அவருக்கு இந்த வார வல்லமையாளர் விருதையும் வழங்கி கௌரவிக்கிறோம்.

கடைசி பாரா: திரு ஓம் சுப்பிரமணியம் இந்த வார வல்லமையில் எழுதியது:

சந்தேகம் என்பது ஒரு மன நோய். புலன்களைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்த சந்தேக நோய் ஏற்படுவது திண்ணம். எனவேதான் வள்ளுவர் பெருமான் இந்திரனைப் பற்றிக் குறிப்பிடும் போது, “ஐந்து புலஙளால் உண்டாகும் உணர்ச்சிகளை நாம் முளையிலேயேக் கிள்ளி எறிந்துவிடவேண்டும். இல்லையென்றால், வேறு ஒருவர் வந்து தன்னுடைய வலிமையால் அவற்றை நம்மிடமிருந்து அழித்து விடுவார். அதற்குச் சான்று தேவர்களின் தலைவன் இந்திரன்”- என்று கூறுகிறார்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்பு
வார்கோமன் இந்திரனே சாலுங்கரி

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. இருவருக்கும் எமது வாழ்த்தும் வணக்கமும்!!

  2. இந்த வார வல்லமையாளர், பேராசிரியர் சாந்தினி பீ அவர்களுக்கும்,  கடைசி பாராவில் இடம் பிடித்த திரு. ஓம்  சுப்பிரமணியம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  3. இந்த வார வல்லமையாளர் பேராசிரியர் சாந்தினி பீ அவர்களின் கல்வெட்டுக்களை காக்கும் முயற்சி வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    கடைசி பாராவில் இடம் பெற்ற திரு,ஓம் சுப்பிரமணியம் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  4. இந்த வார வல்லமையாளர் பேராசிரியர் சாந்தினி பீ அவர்களுக்கும், திரு.ஓம் சுப்பிரமணியம் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *