Blog

  • வாழ்க்கை நலம் – 2

    குன்றக்குடி அடிகள்

     

    2. மானிடமும் மொழியும்

    உலகியலை எண்ணிப் பார்க்கையில் எல்லாமே முதன்மையுடையவனாகவே தெரியும். அதாவது நாடு, மொழி, சமயம், கலை, பொருள் ஆகியன. இவையெல்லாவற்றுக்கும் அடிப்படையாகவும் ஆதாரமாகவும் அமையும் நாடு மிகமிக இன்றியமையாதது. எல்லா விழுமிய பற்றுக்களிலும் மிகவும் விழுப்பம் உடையது நாட்டுப் பற்றேயாம். விழுப்பம் தரும் நாட்டுப்பற்றிலும் மிக்குயர்ந்தது நாட்டு எல்லைகளைக் கடந்த உலகந்தழீயிய விருப்பம். நாட்டுப்பற்றோடு இணைந்தது, பிணைந்தது நாட்டில் வாழும் மக்களிடத்தே நிலவ வேண்டிய ஒருமைப்பாடு.

    ஒரு நாட்டின் மக்கள் ஒருமைப்பாடுடையவர்காளாயில்லாது போனால் அந்த நாடு சிந்தையில் ஒன்றாக விளங்கும் நாடாக உருப்பெறுதல் அரிது. நாட்டு மக்களிடத்தில் நல்ல வண்ணம் கலந்து பேசிக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும்; பழக்கம் மூலம்தான் நம்பிக்கை வளரும்; நல்லெண்ணம் வளரும்; நட்பு கால்கொள்ளும், உறவு தழைக்கும்; ஒருமைப்பாடு நிலவும். இந்த இனிய ஒப்புரவுப் பண்பாட்டுக்குத் துணையாகக் கற்கும் மொழிகள் அமைய வேண்டும். எந்த மொழி ஒருவரைப் பலருக்கு உறவாக்குகிறதோ அந்த மொழியை முயன்று கற்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பல மொழிகளைக் கற்பது மானிடத்திற்கு நல்லது.

    இந்தியா ஒரு பெரிய நாடு. பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாடு. நமது நாட்டிற்கு உணர்வு பூர்வமான ஒருமைப்பாடு தேவை. இந்த ஒருமைப்பாட்டை அவாவி வாழும் ஒழுக்க உணர்வின் வாயிலாகத்தான் உருவாக்க முடியும்; வளர்க்க முடியும். இதற்கு நாம் கற்கும் மொழிகள் துணை செய்தல் நல்லது.

    ஒரு மனிதன் எந்த மொழியைக் கற்பது என்ற வினா எழுமானால் ஐயத்திற்கிடமின்றிக் கிடைக்கக் கூடிய முதல் விடை அவனுடைய தாய்மொழி என்பதே. தாய்மொழியை ஆரம்பக் கல்வியிலிருந்து பல்கலைக் கழகம் ஈறாக ஆய்வு நிலையில் கூடப் பயிற்று மொழியாகவும் எழுதும் மொழியாகவும் இருக்க வேண்டும். இது மனிதவியல் விஞ்ஞானத்தின் தெளிந்த முடிவு. இந்த வகையில் தமிழகம் பின்தங்கியிருக்கிறது என்பதை நாம் உணர்ந்து, தமிழை துறைதோறும் பயிற்று மொழியாகக் கொண்டுவர வேண்டும்.

    அடுத்து, பிற மொழிகளைக் கற்பது என்பது நல்லது; வரவேற்கத் தக்கது. இங்ஙனம் கற்கும் பல மொழிகள் ஆய்வுக்கும் உறவுக்கும் பயன்படும். ஆனால் எந்த ஒரு மொழியையும் மக்கள் விரும்பிக் கற்குமாறு செய்வதே நல்ல மரபு. தமிழ் மக்கள் இந்த ஒப்புரவைக் காணத்தக்க வகையில் இந்திய மொழிகளையும் உலக உறவுகளையும் வளர்த்துக் கொள்ளும் வகையில் உலக மொழிகளையும் கற்க முன்வர வேண்டும். விரும்பிக் கற்பது என்பது எதிரதாகக் காத்துக்கொள்ளும் சமுதாய விழிப்புணர்வுடையோருக்கே உரியது. சாதாரண மக்கள் எளிதில் விழிப்படைய மாட்டார்கள். அவர்களை விருப்புமுறச் செய்வதும் அதற்குரிய நயத்தக்க மரபுகளைக் கடைப்பிடிப்பதும் தவிர்க்க முடியாதவை. இந்தியாவின் முதல் தேவை ஒருமைப்பாடேயாம். இரண்டாவது இடத்திலேயே மொழி இருக்க வேண்டும். இந்த விழுமிய கோட்பாட்டை நினைவிற் கொள்ள வேண்டும்.

    படம் உதவி: https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSM2FyJ-n1WJDF8yjwhfox-vfQk31dI9UvvQzoX7Zetu1jpb8Me
    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 13

    திவாகர்

    எத்தனைதான் கல்கி அவர்களால் தேவன் பத்திரிக்கை உலகுக்கு அழைக்கப்பட்டிருந்தாலும், தேவனை சற்று உயர்த்தியே பார்க்கிறார் முதுபெரும் எழுத்தாளர் அசோகமித்திரன். ‘அந்தக் காலகட்டத்திலேயே ‘அடுத்த தலைமுறை’ எழுத்தாளராக வாசகர்களால் பார்க்கப்பட்டு தன் எழுத்தால் அத்தனை பேரையும் கவர்ந்திருக்கிறார்’ என்று புகழ் பாடுகிறார்.. தமிழின் சார்லஸ் டிக்கின்ஸாக புகழ் பெற்றவர் தேவன் என்று எழுத்தாளர் அசோகமித்திரன் அவரை  வர்ணித்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை எந்தவொரு எழுத்தாளனும் தன்னுடைய தனித் திறமையாலும் சிந்தனையாலும் மாறுபட்டே இருக்கிறான் என்றே சொல்வேன். ஆகையினால் ’இந்த எழுத்தாளர் அந்த சிறந்த எழுத்தாளரைப் போன்றவர்’ என்ற ஒப்புநோக்குதலுக்கு அப்பாற்பட்டு இருப்பவர்தான் நல்ல எழுத்தாளர். அந்த நல்ல எழுத்தாளர் வரிசையைச் சேர்ந்தவர்தான் தேவன்.

    தேவன் எழுத்தில் மிளிர்ந்த ஒரு முக்கியமான தொடர் ‘அப்பளக்கச்சேரி’. இதைப் படித்தவர்கள் இதை எழுதியது தேவன் எனும் ஆண் எழுத்தாளர்தானா அல்லது யாரேனும் பெண் எழுத்தாளர் தேவன் பெயரில் எழுதி வருகிறாரா என்ற சந்தேகம் நிச்சயம் ஏற்படும். காரணம், இந்த அப்பளக் கச்சேரியில் அலசப்படும் சம்பவங்களும், பெண்களின் மனநிலையையும் அப்படியே வெளிப்படையாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கும் நேர்த்திதான். இப்போதெல்லாம் அப்பளம் இடுவதென்பது குடும்பங்களில் மிகவும் குறைந்து போயிற்றோ என்னவோ.. ஆனால் அந்தக் காலக் கூட்டுக் குடும்பங்களில் அல்லது குழுமக் குடும்பங்களில் இந்த அப்பளமிடுதல் என்பது ஏறத்தாழ வீட்டுப் பெண்டிருக்கு ஒரு பண்டிகை போல இருக்கும். (என் சின்ன வயதில் எங்கள் கிராமத்தில் எனக்கும் பிடித்த நிகழ்ச்சி இது – காரணம்  இந்த அம்மாக்கள் பாராத சமயத்தில் ருசிகரமான அந்தப் பச்சை அப்பள உருண்டைகள் ஓரிரண்டு அப்படியே ‘அபேஸ்’ செய்து சாப்பிடும்  தருணங்கள் விசேஷமானவைதான்).

    தேவனின் ’அப்பளக் கச்சேரியும்’ இந்த பெண்டிர்களின் கலாட்டா கச்சேரிதான். வயதான பாட்டிகளிலிருந்து இளம் வயது கன்னிப் பெண்கள் வரை கலந்து கொண்டு உலக  அரசியல் விஷயங்களோடு அத்தனை வீட்டு வம்புகளுடன், குடும்பம், நோய்நொடி, ஆன்மீகம், பண்டிகை, லேடிஸ் கிளப் கிண்டல்களோடு அத்தனையும் ஒரு விளாவல் விளாவி கடைசியில் ‘ஒரு ரெஸிபி’ யுடன் செய்முறையும் கலந்துரையாடல்களாக நகைச்சுவையாக விளக்கப்பட்டு ஒவ்வொரு தொடர் கட்டுரையும் முடியும். அப்பளக் கச்சேரியில் தேவனின் எழுத்துகள் அந்தக் கால வாசகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதாக இன்னமும் தேவனின் ரசிகர்கள் சொல்லிப் பெருமைப் படுகின்றனர். பெண்கள் உள்மனதில் ஓடும் எண்ணங்கள், அவர்கள் ஏக்கம், அன்பு, பாசம், குமைச்சல், அக்கறை என அவர்கள் உள்ளத்தில் புகுந்து கொண்டு அத்தனை எண்ணங்களையும் வெளிக்கொணர்ந்தது என்பது ஒரு சாதனைதான். ஆழ்கடலில் ஆழத்தை அளந்தாலும் அளக்கலாம், ஆனால் பெண்களின் உள் மன ஆழத்தை யாராலும் அளக்கமுடியாது என சினிமா வசனங்கள் உண்டு. நாமும் நிறைய கேட்டிருக்கிறோம், இதையெல்லாம் பொய்யாக்கியவர் தேவன்.

    அதே போல கடித இலக்கியம் தேவனால் பெருமைப் படுத்தப்பட்டது. அவர் காலத்தில் தமிழ் எழுத்துலகுக்கு சீரங்கத்து சீதனமாகக் கிடைத்த  எழுத்தாளர் ‘குமுதினி’ இராமாயணத்தில் சீதா பிராட்டி  தனக்கு ஒரு பட்டுச் சேலை வேண்டி தன் அம்மாவுக்குக் கடிதங்கள் நகைச் சுவையாக எழுதுவதாக ஆனந்த விகடனில் ஒரு கற்பனைக்கதை வந்தது. குமுதினியும் தேவனும் ஒரே வகை ரத்தம் போல. தேவன் கடிதம் வாயிலாக பல கதை கட்டுரைகள் எழுதியுள்ளார்.

    ஒரு நகைச்சுவை கடிதம் ஒன்று ‘செக்கு சமாசாரம் என்ற தலைப்பில்  ’பணமில்லாத’ வங்கிக் காசோலைப் பற்றியது. இந்த காசோலை கொடுத்த அந்த கடன்காரர் தம் வங்கியில் அதற்கு தேவையான பணமில்லாமையால் முதலில்  வேண்டுமென்றே தவறுகள் வைத்து எழுதிய ‘செக்’ ஒன்றை (ரூ 37 அணா 8 காசு 7 மதிப்பில்) கடன் கொடுத்தவருக்கு அனுப்புகிறார்.. இதற்கான சம்பந்தப்பட்ட அந்த இருவரிடையே கடிதப் போக்குவரத்து போராட்டம்தான் இந்தக் கதை. ஒவ்வொரு கடிதத்திலும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொள்வதும் குடும்ப நலன்கள் தெரிவிக்கப்படுவதுமல்லாமல் மறக்காமல் தவறான முறையில் எழுதப்பட்ட செக்கை மறுபடியாக சரியாக எழுதி கையொப்பமிட்டு அனுப்புக என்றும் இவர் கேட்பதும், அந்த கொடாக்கண்டர் அவர் பாணியிலேயே கடிதத்தில் உபயக்குசலோபரிகள் செய்து கொள்வதும் அதே சமயத்தில் ஏதோ சின்னத்தவறால் அந்தக் காசோலை அனுப்பிவிட்டதாகவும் எழுதிக் கடைசியில் அந்தக் கொடாக்கண்டர்  இந்த இடைப்பட்டக் கடிதப் போக்குவரத்துக்கிடையே அவர் சௌகரியத்துக்கு வேண்டிய காலம் எடுத்துக் கொண்டு ஒழுங்கான காசோலையை ஒழுங்காக அனுப்பி வைப்பதாக முடியும். இதோ அந்தக் கடைசிக் கடிதம்

    ஸ்ரீமான கில்லாடி சர்மாவிடமிருந்து சீமான் கிட்டி சுட்டி ஐயருக்கு!

    தங்கள் கடிதம் கிடைத்தது. தங்களுக்கு இதுவரை நம்பிக்கை இல்லாமல் இருந்தது ஒருபுறமிருக்க, என்னுடைய ‘செக்’ நான் முதலில் கொடுத்தவுடன் பாங்கிக்குப் போயிருந்தால், அதில் கண்ட தொகையில் ரூ 37-8-7 குறையத்தான் தங்களுக்குக் கிடைத்திருக்கும். அதனால்தான் இவ்வளவு காலதாமதம் செய்யவேண்டி வந்தது… தங்கள் சம்சாரம் குழந்தைகள் சௌக்கியமா?”

    தங்கள் அன்பார்ந்த

    கில்லாடி சர்மா.

    சரசுவுக்குக் கடிதங்கள், போடாத தபால் போன்றவை கடித இலக்கியங்களில் நிரந்தரமாக இருக்கவேண்டியவை. போடாத தபால் என்பதன் பெயரில் இருந்தே புரியும் அவை எப்படிப்பட்டதாக இருக்குமென்பது. இவை அந்தந்த காலகட்டத்தில் நடக்கும் நாட்டு நடப்புகளைக் கவனித்து எழுதப்படும் கடிதக் கட்டுரைகள்தானென்றாலும், ஒவ்வொரு நிகழ்ச்சியின் பேரில் தேவனின் அபிப்ராயங்கள் கூட நமக்கு விளங்க வைக்கும்.  அப்படிப்பட்ட ஒரு சிறிய கட்டுரை ஒன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் டோரிக் கட்சி தாம்தான் இந்தியாவின் சுதந்திரத்துக்கு பூர்வகாரணம் என்று தங்களை பெருமையோடு பேசிக்கொண்டதை தேவன் தன் பாணியில் கிண்டல் செய்கிறார் ஒரு கடிதம் மூலமாக, இதோ உங்களுக்காக தேவன் எழுத்தில் (நன்றி – பேராசிரியர் பசுபதி அவர்கள்)

    டோரிக்கட்சி அங்கத்தினர் திரு ரிச்சர்ட் பட்லர் அவர்களுக்கு

    ஒரு இந்தியன் எழுதிக் கொண்டது:

    பார்லிமெண்ட் சபையில் நீங்கள் எங்கள் தலைவர் நேருஜியைப் புகழ்ந்து பேசியதற்காக தொழிற்கட்சி அங்கத்தினர் மைக்கேல்புட் உங்களை பரிகாசம் பண்ணியதாக பத்திரிகையில் படித்தேன்.”இந்த டோரிக் கட்சி பதவியில் நீடித்திருந்தால் பிரிட்டிஷ் சர்க்கார் நேருஜியிடம் பேச சந்தர்ப்பமே ஏற்பட்டிராது.  ஏனெனில் அந்தக் கட்சி அவரை சிறையில்தான் வைத்திருக்கும்” என்று மைக்கேல்புட் உங்களை ஏளனம் செய்தாராம். அதற்கு நீங்கள் மைக்கேல்புட் இந்தியாவைப் பற்றி நினைப்பதற்கு முன்பிருந்தே அதன் சுயாட்சிக்காக நீங்கள் பாடுபட்டு வந்ததாகவும், இந்திய அரசியல் சட்டம் 1935 இலேயே நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டீர்கள் என்று அறிந்து கொண்டேன். இந்தியாவிடம் உள்ள உங்கள் நல்லெண்ணத்தை மதித்திருக்கமுடியுமென்றும், இப்படியெல்லாம் வாக்குவாதம் நடந்தது என்றும் படித்தேன்.

    இந்த விவாதத்திலிருந்து எனக்குப் புரிந்ததெல்லாம் இந்தியாவுக்கு சுயராஜ்ஜியம் அளித்ததில் நீங்கள் பங்கு உரிமை கொண்டாடுகிறீர்கள் என்பது. இதை நான் மறுக்கவே இல்லை. ஆனால் இந்திய சுதந்திரத்துக்கான பங்கு உரிமையை நீங்கள் கோரினால் அது உங்களோடு மட்டும் நின்றுவிடமுடியாது. உங்கள் மூதாதையர்கள் பலருக்கும் அதில் பங்குண்டு. உண்மையில் பிரிட்டிஷ் இந்தியாவை ஸ்தாபித்த ராப்ர்ட் கிளைவ், வாரன் ஹாஸ்டிங்ஸ் போன்றவர்களுக்கே முதல் பங்கு கொடுக்கவேண்டும். ஏனெனில் அவர்கள்தான் இந்தியாவின் சுதந்திரத்துக்கு மூலகாரணம்.

    இந்தியாவை அடக்கி ஒரே அன்னிய தேசக் கொடியின் கீழ்  (அவர்கள்) :வைக்கவில்லை என்றால் இந்த நாட்டில் சுதந்திர இயக்கம் நடந்தே இருக்காது. இந்தியா சிறு சிறு ராஜ்யங்களாக அந்தந்த சமஸ்தான மன்னர்களின் கையில் ஒவ்வொரு பகுதியாக இருந்திருக்கும். அவர்களும் தங்கள் சொந்த தேசத்தினரை இந்த அளவு சுரண்டவோ அடக்குமுறையைக் கையாளவோ செய்திருக்கமாட்டார்களாதலால் விடுதலைக் கிளர்ச்சியும் பெரிய அளவில் நடந்திராது. தேசமும் இப்போதுபோல் ஒன்றுபட்டு குடியரசாகி இருக்காது.

    ஆகையால் இந்தியா சுதந்திரம் பெற நீங்களும் உங்கள் தலைமுறையினர் மட்டுமல்ல காரணஸ்தர்கள். முதன் முதலில் இந்தியாவில் உங்கள் ஆட்சியை ஸ்தாபிக்க முயன்றவர்கள் தொட்டு சர்ச்சில் துரை கூட்டத்தார் அனைவருமே காரணஸ்தர்கள்தான். இந்தத் தொழிற்கட்சிக்கு ஒரு சிறு பங்கு கூட கிடையாது என்று நானே ஒப்புக் கொள்ளத் தயார். மறுபடியும் உங்கள் கட்சி பதவிக்கு வந்தால் ஒருவேளை இந்தியா ஒருபடி மேலும் சுதந்திரம் அடையலாம். அதாவது காமன்வெல்த் தொடர்பிலிருந்து கூட அது விலகவிடக் கூடிய நிர்ப்பந்தம் ஏற்படலாம்.

    ஒரு இந்தியன்.

    மேலே எழுதப்பட்ட கடிதத்தை ஊன்றிப்படித்தால் தேவனின் நகைச்சுவை உணர்வுடன் இன்னொன்றும் புரியும். ஏராளமான சிறு சிறு நாடுகளாகப் பிரிந்து தங்களோடு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த நம் இந்திய நாட்டு ராஜாக்களை, அவர்கள் நாடுகளையெல்லாம் ஒன்று சேர்த்த பெருமை இங்கிலாந்துக்குதான் உண்டு என்கிறார். அது உண்மைதானே. பிரிட்டிஷார் வருமுன்னே நம் பாரதத்தில்தான் எத்தனையெத்தனை நாடுகள் இருந்தன. 1911 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் இந்தியத் தலைநகரில் ’ஏகாதிபத்திய சக்கரவர்த்தி’ என முடிசூட்டிக் கொண்ட போது அவருக்குப் பரிசுகள் கொடுக்க போட்டிப் போட்டுக்கொண்டு வரிசை கட்டிய மன்னர்கள் படத்தை திரு ஏ.கே செட்டியார் திரைப்படமாக எடுத்திருக்கிறார். (இதுதான் இந்தியாவிலேயே இந்தியர் அதுவும் தமிழர் எடுத்த முதல் திரைப்படமாகும்)

    தேவன் இந்தக் கடிதக் கட்டுரையில் இந்தியா எனும் தேசத்தை ஒருமித்த குடியரசாக ஒன்று சேர்த்தது பிரிட்டிஷ்தான் என்று பாராட்டியதோடு மட்டுமல்லாமல் கூடவே பிரிட்டிஷாரின் இந்திய வளச் சுரண்டலையும் அடக்குமுறையும் தேவன் கண்டிக்கத் தவறவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

    ’போடாத தபாலி’ல் எல்லா அரசியல் நாட்டு நடப்புகளையும் அவர் பாணியில் அலசுவதைத் தவறாமல் ஆனந்த விகடனில் பிரசுரித்து வந்தார் தேவன். இப்போதெல்லாம கடித இலக்கியம் என்ற பகுதியே தமிழில் இல்லை என்பது ஒரு வருத்தத்துக்குரிய செய்திதானே.

    அதே போல பயணக் கட்டுரைகள் முக்கியமாக வெளிநாட்டு பயண அனுபவங்களை சுவையாக எழுத்தில் வடிப்பது என்பது சுவாரசியமான கலைதான். ஒரு வெளிநாட்டைப் பற்றி தெரிந்துகொள்வது இயல்பாகவே நமக்குப் பிடித்த விஷயமாகும். ஆனால் சில எழுத்துகள் நமக்கு மறவாத நினைவுகளைத் தருபவை. இந்த நிறைவைத் தரும் வகையில் தேவனின் ஐந்து நாடுகளில் அறுபது நாட்கள் தொடர் ஆனந்தவிகடனில் ஐம்பதுகளில் வந்தது. தெற்காசிய நாடுகளில் இரண்டு மாதம் பயணம் செய்து அந்த அனுபவங்களைத் தொடராக சுவாரசியமாக எழுதினார் அவ்ர். பயணக் கட்டுரைகள் தமிழில் முதல் முதலாக எழுதியது தமிழகத்தின் அன்றைய சாதனையாளராக திகழ்ந்த ஏ.கே. செட்டியார் என்பார்கள். அடுத்து 1930 களின் கடைசியில் கல்கி இலங்கைக்குப் பயணம் செய்து ஆனந்த விகடனில் ஒரு சிறு தொடராக தன் பயண அனுபவங்களை வெளியிட்டார். தேவனின் பயண எழுத்துகள் இயற்கையாகவே நகைச்சுவை கலந்து எழுதப்பட்டதால் தேன் கலந்த பலாச் சுளை போல வாசகர்களுக்கு இனித்தன என்று சொல்லவும் வேண்டுமோ.

    இத்தனை எழுதிய தேவன் ஏன் சரித்திர நாவல்கள் எழுதவில்லை என்று காரணம் கேட்டால் அவர் அல்பாயுசில் மறைந்து போனது மட்டும்தான் காரணம் என்பேன். தென்னாட்டுச் செல்வங்களில் பல கட்டுரைகளை எழுதியவர், அத்தனையும் சரித்திர சம்பந்தப்பட்டவை, புராணக்கதைகளின் அடிப்படையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் என நூற்றுக்கணக்கான விஷயதானங்கள் செய்தவர். இப்படிப்பட்ட கலைஞருக்கு, நல்ல கதையாளருக்கு ஒரு சரித்திர புதினம் எழுதுவது கடினமா என்று கேட்டால் யாருமே இல்லை என்றுதானே சொல்வார்கள். சரித்திர ஆராய்ச்சியும், பாரதத்தின் பண்பாட்டில் மிகுந்த அக்கறை கொண்டவருமான தேவன் மட்டும் 44 வயதில் மரணிக்காமல் இருந்திருந்தால் வாசகர்களுக்கு இருந்த இந்தக் குறையையும் நிவர்த்தித்திருப்பார் என்றே நினைக்கிறேன். ஆனாலும் ஒரு சரித்திர சிறுகதை ஒன்று இமயமலையில் ஒரு சிறு படையொன்று பனிக்காலத்தில் சென்று மாட்டிக்கொண்டதைப் பற்றிய கதை எழுதி இருக்கிறார். ஒருவேளை தேவன் தன் வாழ்நாள் குறைவாகவே இருந்தாலும் ’இவர் பழைய சரித்திரமே தொட்டதில்லை’ என்று எதிர்காலம் சொல்லிவிடக்கூடாதே என்பதற்காக அவசரம் அவசரமாக ஒரு கதை எழுதினாரோ என்னவோ.. அது அவரது சிறுவயதில் வாழ்நாள் முடிந்த சோகக்கதையைப் போலவே இந்த சிறுகதையும் அவரின் இயற்கையான ஹாஸ்யநடை இல்லாமல் சோகத்தில் முடிந்தது.

    (இன்னும் வரும்)

    Share
  • அறுமுகநூறு (5)

     

    -சச்சிதானந்தம்

     

    அச்சமுற்ற நெஞ்சம் அரகரா என்றிடட்டும்,

    அப்பனுற்ற பணிவைப் பணிவோடு கொண்டிடட்டும்,

    அப்பழுக்கு அற்று அன்புமனம் அமைந்திடட்டும்,

    அக்கினிக்கு ளுற்ற அறுமுகனைக் கொஞ்சிடட்டும்!                                                             21

     

    அச்சம் கொடுத்தான், அன்பைக் கொடுத்தான்,

    அத்தன் படைத்த அறிவைக் கொடுத்தான்,

    அல்லல் கொடுத்து, உள்ளத் தெளிவை,

    அள்ளிக் கொடுத்து அகிலம் காத்தான்!                                                                         22

     

     

    வடிவேலன் முகம்காணப் படியேறி வருவோம்,

    நெடியேறும் சந்தனக் காவடிகள் சுமப்போம்,

    கடிவாளம் இல்லாத மனதினைக் காக்க,

    அடியேனுன் னடியினில் அடிமையாய் ஆவோம்!                                                           23

     

    கந்தவேள் கண்களைக் காணு மென்னம்,

    வந்ததால் பூத்திடும் எண்ண மென்னும்,

    சிந்தையைக் குன்றெனக் கண்டு கந்தன்,

    வந்தமர்ந் தருளுவான் உள்ள மெங்கும்!                                                                         24

     

    கந்தனைப் பாடிடும் சந்த மெல்லாம்,

    வந்தெனைக் கூடிடும் சொந்த மென்று,

    பந்தமும் பாசமும் மேவி நின்று,

    விந்தைகள் செய்வது மாய மன்று!                                                                                  25

     

    படத்துக்கு நன்றி: http://www.kaumaram.com/pics/murugan_contents.jpg

     

    Share
  • ஓயாத மாற்றங்கள்

    விஜயன்

    உருட்டும் சத்தம் கேட்டது. தூக்கம் என் கண்களை விட்டுப் பிரிய, அதே வினோத ஒலி வழக்கம் போல் ஒலிக்கத் துவங்கியிருந்தது. கண்களோரம் ஒட்டியிருந்த அழுக்கைத் துடைத்தேன். கொட்டாவி வந்தது. தூக்கம் போதவில்லையோ என்று தோன்றிய சிந்தனை, படுக்கையை விட்டு எழுந்தவுடன் தானாய் மறைந்தது.

    அறைக் கதவை திறந்தேன். சமையல் வாசனை வீட்டை நிறப்பிக் கொண்டிருந்தது. அம்மா சமையல் செய்து கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம் அது. உறக்கத்தை விட்டு எழுந்திருக்கவே சிரமப்படுகிறேன், அம்மா எப்படி முன்பே எழுந்து, சமையல் செய்து, அப்பாவிற்கு பணிவிடை செய்து, தானும் வேலைக்கு கிளம்புகிறார்?

    சிந்தனையுடன் வாசல் கதவைத் திறந்தேன். குளிர்காற்று முகத்தை வருடியது. நெஞ்சுக்குள் ஏதோ ஓர் இனம் புரியா உணர்வு மேலிட்டது. காலணி அணிந்து, மெல்ல நடந்தேன். பௌர்ணமியின் ஆதிக்கம் முழுமையாக இருந்தது. அவ்வற்புதக் காட்சியினைக் கண்டு இரசித்தேன். பக்கத்து வீட்டைப் பார்த்தேன். வீட்டு வாசலில் சுப்பையா தாத்தா அமர்ந்தபடியே நிலவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகே ஒரு நாயும் அமர்ந்திருந்தது.
    “எப்படி தாத்தா இருக்கிங்க?” நான் வேளியருகே சென்றுக் கொண்டே, நலம் விசாரிக்கும் சாக்கில் அவரோடு உரையாட முயன்றேன். வழக்கம் போல் விடக்கென எழுந்து வீட்டினுள் சென்று தாழிட்டுக் கொண்டார். ஆனால் இம்முறை, என்னைப் பார்த்து ஒரு கனம் முறைத்தார். எனக்கு திக்கென்று இருந்தது.
    சுப்பையா தாத்தாவிற்கு இப்பொழுது ஏறத்தாழ அறுபத்தைந்து வயதிருக்கும். முன்பு ஆசிரியராகப் பணிப்புரிந்தவர். சீரான உடை, சிறந்த பண்பு என்று என்றும் ஒரு ஆசிரியனாக்வே வாழ்ந்தவர். அவருடைய மகனும் மகளும் ரஷ்யாவில் மருத்துவம் பயின்றனர். அவர்களுடைய படிப்பிற்கும் இதர செலவிற்கும் கடன்பட்டு செலவளித்தார். மனைவி முனியம்மாள் இல்லத்தரசி. மென்மையான அகமும் முகமும் கொண்டவர்.
    சுப்பையாவிற்கு மாதந்தோறும் பென்ஷென் வந்தாலும், வீட்டில் தனி வகுப்பு நடத்தி வருமானத்தைப் பெருக்கினார். அப்பொழுதெல்லாம் அவரைக் கண்டாலே எனக்குள் ஒரு வகை பயம் தோன்றும்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு, சுப்பையா தாத்தாவிற்கு, குடல் நோய் ஏற்பட்டது. வெளிநாட்டில் மருத்துவம் பெற்று சில நாட்களிலே குணமடைந்தார். சில மாதங்கள் கழித்து, ஒரு முறை அவர் என் அப்பாவோடு பேசிக் கொண்டிருக்கையில், திடீரென இறும்பினார். அதில் இரத்தம் கசிந்திருந்தது. இறுமியவர் மயக்கமிட்டு விழுந்தார். இம்முறை மருத்துவம் பலனலிக்காது போனதுமட்டுமல்லாது அவருக்கு ஆயுள் காலத்தையும் கனித்துக் கொடுத்தது. டியூசன், அதிகாலை வாக்கிங் என்று ஒவ்வொன்றாக நிறுத்தினார், சுப்பையா தாத்தா. வீட்டில் சிறைவாசம் அனுபவித்தார். நாளுக்கு நாள், அவர் உடல் மெலிந்து கொண்டே போனது. கணவனின் நிலையை எண்ணி,எண்ணி, முனியம்மாளும் நோய்வாய்ப் பட்டாள். ஒரு நாள் நள்ளிரவில் அழுகைச் சத்தம் பெரிதாய் ஒலித்தது. அது சுப்பையா தாத்தாவின் குரல் தான். நானும் அப்பாவும் சென்று பார்த்தோம். முனியம்மாள் இறந்திருந்தார். மனைவியை மடியில் கிடத்தியபடியே சுப்பையா விம்மி விம்மி அழுதார்.

    முனியம்மாளுக்கு ஈமச் சடங்குகள் முடிந்த பிறகு, சுப்பையாவின் மகனும் மகளும் அவ்விடத்தை விட்டு மறைந்தனர். சுப்பையா நாதியின்றி நின்றார். சில நாட்கள் வீட்டிலேயே இருந்தார். அப்பா மாலையில் அவருக்கு உணவு கொடுத்து ஆறுதலாக சற்று உரையாடிவிட்டு திரும்புவார். ஒருமுறை உணவு கொண்டு சென்றவர், அப்படியே அதை மீண்டும் வீட்டிற்கே கொண்டு வந்தார்.

    “ஏங்க?..என்னாச்சி?..அப்படியே இருக்கு?” அம்மா ஆச்சரியத்தோடு வினாவினார்.

    “தெரியல!…சாப்பாடு கொடுத்தேன்,..வேணாம்னு சொல்லிட்டாரு!…கடையில சாப்புட்டாரம்!..”

    அப்பாவின் முகத்திலே பல விடையறியா கேள்விகள் பிரதிபலித்தன.

    “வேணாம்னா விடுங்க,..நம்ப என்னா செய்ய முடியும்?!..” சலித்துக் கொண்டே, அம்மா சமையலறைக்குச் சென்றார்.

    ஒரு பகலில் மீன் பிடிக்க நண்பர்களோடு சென்று கொண்டிருந்தேன். ஆச்சோங் தோட்டத்தை ஒட்டி ஒரு ஆறு உள்ளது. அதில் விரால் மீன்கள் அதிகம் கிடைக்கும். தோட்டத்தையொட்டியப் படியே நடந்தேன். தோட்டத்தில் சுப்பையா தாத்தா காய்ந்த இலைகளைப் பெருக்கிக் கொண்டிருந்தார். மாலையில், அப்பா வந்ததும் கண்டதைக் கூறினேன்.

    “அதெல்லாம் போய் அவருகிட்ட கேட்காத!..புரியுதா?!” என் விழிகளை நோக்கியபடியே கட்டளையிட்டார்.
    ஏன் என்று கேட்க துணிவில்லாமல் சரியென்று தலையசைத்தேன். சில நாட்களில் அப்பா ஷிஃப்ட் வேலை செய்ய நேரிட்டது. காலை ஆறு மணிக்கு சென்று இரவு ஒன்பது மணியளவில் வீடு திரும்புவார். சுப்பையா தாத்தா பேசவும் ஆளின்றி தனித்துப் போனார்.

    சில நாட்கள், சுப்பையா தாத்தா வீட்டிலேயே இருப்பதைப் பார்த்தேன். வேலை நிறுத்தம் கொண்டார் என்று எண்ணினேன். மாலையில் காற்பந்து விளையாடி முடித்தவுடன், நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்.

    “டேய், விஷயம் தெரியுமா?.. அந்த கிழவன அச்சோங் போட்டு உறிச்சிட்டானாம்!!!” மணி கூறியதும் என் மனதில் பகீரென்று இருந்தது.

    “ஏண்டா அடிச்சான்?” முருகன் ஆவலாய் கேட்டான்.

    “காசு திருடிருக்கான்!!..” மணி சிரித்துக் கொண்டே கூறினான்.

    “வாங்கட்டும்! திமிறு டா அந்த கிழவனுக்கு!! எங்கப்பாவையே போடானு சொல்லிருக்கான்!…எங்கம்மா தடுத்துட்டாங்களாம்,..இல்லைனா அப்பவே உழுந்துருக்கும்!” முருகன் பெருமையாய்க் கூறினான்.

    என் மனதில் உறுத்தல் அதிகரித்த வண்ணமாய் இருந்தது. உடனே அவ்விடத்தை விட்டுக் கிளம்பினேன். நாளை இறக்கப் போகும் கிழவனை அடித்து ஆண்மையைக் காட்டும் வீரர்கள். மனதுள் அவர்களை எண்ணி வருந்தினேன்.

    மறுநாள் மாலையில், வீட்டின் முன் புற்கள், தினமும் நீர் ஊற்றாமல், உரமிடாமல், பாதுகாக்காமல் போனாலும் நன்கு செழித்து வளர்ந்திருந்ததால் அவற்றை முடிந்தவரை அழித்துக் கொண்டிருந்தேன். ஓர் மூலையில் யாரோ பார்ப்பது போல விழியோரத்தின் பிம்பம் தோன்றியது. திரும்பிப் பார்த்த போது, அங்கு சுப்பையா தாத்தா என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு சற்று உருத்தலாக இருந்தது. மண்வெட்டியை நிற்க வைத்துவிட்டு, கையுறையை அகற்றிவிட்டு, மெல்ல அவரை நோக்கிச் சென்றேன். நான் நெருங்கி வரும் வரை, என் பட்ட பார்வையிலேயே ஆழ்ந்திருந்தார் போலும் கண்கள் அசையவில்லை.

    “என்ன தாத்தா?…” என்று வேறு என்ன பேசுவது என்று கன நேரத்தில் சிந்தனை செய்து கொண்டிருக்கையில், அவர் ஏதோ கூற முயன்றார். நீண்ட நாள் பசைபட்டு போன அவருடைய உதடுகள் மெல்ல வார்த்தைகளை உதிர முயற்சித்தது. தனக்குள் ஏதோ ஒன்று தடுக்க, திறந்த வாய் மௌனத்தோடு மூடியது.

    “என்னாச்சி தாத்தா?!” அவருடைய தயக்கத்தை உடைக்க முயன்றேன்.
    சுப்பையா தாத்தா ஏதும் பேசவில்லை. ஆனால் என் மேல் விழுந்திருந்த பார்வை மட்டும் அகலாமல் இருந்தது. வேலியின் மேல் இருந்த அவருடைய கையைத் தொட முயன்றேன். என்க்குள் ஏதோ ஒரு கலக்கம் தடுத்தது. என் கை விலகுவதை சுப்பையா தாத்தா பார்த்தார். அவர் கண்களில் கண்ணீர் கசியத் தொடங்கியது. என்னையும் அறியாமல் என் கண்கள் கண்ணீர் உதிர முயன்றது. என் கண்களில் கண்ணீர் பொங்குவதைப் பார்த்ததும், அவ்விடத்தை விட்டுச் சென்றார். வீட்டின் கதவை தாழிடும் முன் மீண்டும் ஒரு முறை என்னைப் பார்த்தார். அவருடைய பார்வையின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை.
    ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை என்பதால் மாமா வீட்டிற்கு செல்லத் தயாரானோம். கிளம்புகையில் அப்பா, சுப்பையா தாத்தாவை அழைத்தார்.

    “போடா!..” ஏசியபடியே சுப்பையா தாத்தா வீட்டிற்குள் சென்று தாளிட்டார்.

    “இதுக்கு மேல அந்த ஆளுகிட்ட நீங்க பேசாதிங்க!!!” அம்மா கொதித்தார்.

    அப்பாவின் முகத்தில் வியப்பும் கவலையும் குடி கொண்டிருந்தது. இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பினோம். சுப்பையா தாத்தா வீடு திறந்திருந்தது ஆனால் ஆள் காணவில்லை.

    இன்று காலையில், சுப்பையா தாத்தா உள்ளே சென்று தாளிட்டுக் கொண்டார். “ஏது அந்த நாய்?.. எதற்காக நாய் வளர்க்க ஆரம்பித்து விட்டார்?…” எனக்குள் கேள்விகள் பிறக்கத் தொடங்கின.

    மாலையில், விளையாடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். மணியனும் முருகனும் சுப்பையா தாத்தா வீட்டை நோக்கி கல்லெரிந்துக் கொண்டிருந்தனர். உடனே அவர்களை நோக்கி விரைந்தேன்.

    “என்னாடா பன்றீங்க?!!”
    “இல்லடா,…அந்த நாய் எங்கள பார்த்தாலே கொலைக்குது! தோ பாரு!! அத!…” கல்லை மீண்டும் ஓங்கினான். நான் அவன் கையிலிருந்த கல்லைப் பிடுங்கிக் கொண்டேன்.

    “டேய், இப்ப ஒழுங்கா போறீங்களா, இல்ல உங்க அப்பாகிட்ட வந்து சொல்லட்டுமா?..” இருவரையும் மிரட்டினேன்.

    “தோடா!.. வாடா முருகா போலாம்!…அய்யாவுக்கு நாய் மேல ரொம்பதான் பாசம்!…”
    இருவரும் என்னை முறைத்தபடியே சென்றனர். ஏன் அப்படி நடந்தேன் என்று எனக்கேத் தெரியவில்லை. சுப்பையா தாத்தா கதவைத் திறந்து நாயை கட்டியணைத்தபடியே உள்ளே கொண்டு சென்றார்.

    இரவில், சுப்பையா தாத்தாவின் இரும்பல் சத்தம், அமைதியை குலைக்கத் தொடங்கியது. நள்ளிரவிலும் இரும்பல் சத்தம் நின்றபாடில்லை. நான் எவ்வளவோ முயன்றும் என்னால் படிக்க முடியாமல் போனது. புத்தகத்தை மூடியதோடு கண்களையும் மூடிக் கொண்டேன். இன்று தூங்க முடியுமா என்று எனக்குள் ஐயம் முழைத்தது.
    பொழுது புலர்ந்தது. எப்பொழுது தூங்கினேன் என்று சிந்தித்தேன். ஏதும் அகப்படவில்லை. மீண்டும் காலையை இரசித்தேன். சுப்பையா தாத்தாவின் இரும்பல் சத்தம் இல்லாதிருந்தது. பள்ளிக்குக் கிளம்பினேன். பள்ளியில் திடீரென சுப்பையா தாத்தாவின் ஞாபகம் வந்தது.
    மாலையில் வீடு திரும்புகையில், சுப்பையா தாத்தா வீட்டைப் பார்த்தேன். வீட்டுக் கதவு திறக்காமலே இருந்தது. நாயும் காணவில்லை. என் வீட்டினுள் புகுந்தேன். அவ்வப்போது வெளியில் வந்து பார்த்தேன். கதவு திறந்தபாடில்லை. பொழுது சாய்ந்தது. அம்மாவும் அப்பாவும் வீட்டிற்கு வந்தனர்.

    “அப்பா,…” உணர்ச்சிவசப்பட்டதில் அருகே அம்மா இருப்பதை மறந்து, விவரத்தைக் கூற முயன்று, சட்டென நிறுத்தினேன்.

    “என்னாது சொல்லு,..” அப்பா கண்டிப்பாய் கேட்டார்.

    “அப்பா, காலைலேந்து சுப்பையா தாத்தாவ காணும்! வீடு பூட்டியே இருக்கு!!”

    “அது உள்ளையே இருக்கும்!!” என்று அம்மா கூறிவிட்டு சலித்துக் கொண்டே நகர்ந்தார். அப்பா என் தோளை தட்டிக்கொடுத்து அறைக்குச் சென்றார். உணவு உண்டபின் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பா எழுந்து அறைக்குச் சென்று சட்டை அணிந்து வந்தார்.

    “கைலாம்பு எடு!” அம்மாவிற்கு உத்தரவு பிறப்பித்தார்.

    “இப்ப எதுக்குங்க?…” அம்மா வினாவியபடியே எடுக்கச் சென்றார்.

    “போய் பார்த்துட்டு வந்துர்றேன்!” அப்பா கூறியதற்கு இம்முறை அம்மா மறுப்பு தெரிவிக்கவில்லை.
    நானும் அப்பாவும் சுப்பையா தாத்தா வீட்டின் கதவைத் தட்டினோம். நீண்ட நேரம் அழைத்தும் பதில் இல்லை. அப்பா உரக்க அழைத்தார். சத்தம் கேட்டு எதிர் வீட்டிலுள்ள கோபாலு மாமாவும் அவர் மனைவியும் வந்தனர்.

    “கதவ ஒடைங்க!” என்று கூறியபடியே கதவை எட்டி உதைத்தார், கோபால்.
    படாரென கதவு திறந்தது. வீட்டின் உத்தரத்தில் புடவையில் தூக்கிலிட்டபடியே தொங்கிக் கொண்டிருந்தார் சுப்பையா தாத்தா. தற்கொலை செய்து கொண்டாரா என்று என் மனம் அதிர்ந்தது. அக்காட்சினைக் கண்டதும், கோபாலின் மனைவி ஆவென கதறி ஊரைக் கூட்டினாள். காவல் துறைக்கும் மருத்துவத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சுப்பையா தாத்தாவை வெறித்துப் பார்த்தேன். வாய் முதல் வயிறு வரை இரத்தம் வடிந்து காய்ந்திருந்தது. வீட்டில் ஆங்காங்கே இரத்தம் சிந்தியிருந்தது.

    “நேற்றே இறந்திருப்பாரோ?…” எனக்குள் புது சந்தேகம் பிறந்தது.

    காவல் அதிகாரிகள் படம்பிடித்து, தகவல்கள் சேகரித்து முடித்தவுடன், சுப்பையா தாத்தாவின் உடல் மருத்துவமனை வண்டியில் கொண்டு செல்லப்பட்டது. வீட்டை விட்டு வெளியாகுகையில், ஏதோ ஒன்று என் பார்வையை என்னையும் அறியாமல் ஈர்த்தது. என்னவென்று நோக்கினேன். அங்கு, மூலையில் சுப்பையா தாத்தாவின் நாய் வாயில் நுரை தள்ள இறந்திருந்தது.

    ……………………………………………………….முற்றும்…………………………………………………

    Share
  • உச்சத்தில் உழவு

     

    மாதவன் இளங்கோ

     

    “உணவு தின்றுக் கருவுக்கு

    குருதி தருவாள் – ‘தாய்!’

    தன்குருதி தந்து உலகோர்க்கு

    உணவு படைப்பான் – ‘உழவன்’!

     

    நிலமென்னும் கருவறையில் விதைவீசி

    உயிர்கொடுத்து உடல்வேர்க்க உழவுசெய்து

    உலகுக்கே உணவு படைத்தவனின்று

    சுருங்கிப் போனத்தன் வயிற்றிற்கே

    ஒருவேளைச் சோறின்றி வாழ்ந்திருக்க,

    எங்கனம் செய்வான் அவன் உழவு?

    அன்றாடம் அவன் வீட்டில் இழவு!

    பொய்த்துப்போன மழை,

    வற்றிப்போன கிணறுகள்,

    பாலையாகக் காட்சிதரும் ஆறுகள் – அந்தப்

    பாலையின்மேல் பதிந்திருந்த ஆறுகளின்

    பாதச் சுவடுகளைச் சுரண்டியதால்

    வெளித்தெரியும் களிமண் என

    இத்தனையும் மீறி

    அறுவடைக்கு எட்டிப்பார்த்த

    பயிர்களையும்

    வனப்புடனே வளர்ந்து நின்ற

    வாழைமரங்களையும்

    காணாமல் செய்துவிட்ட

    கோரப்புயலென்று

    எத்தனைதான் வேதனைகள் அவனுக்கு?

    மலடாகிப்போனது அவன் மண்ணல்ல!

    பாரபட்சம் காட்டும் அந்த

    அகண்ட வானமும்

    நீர்மறுக்கும் அண்டை மாநிலத்தின்

    நெஞ்சமும்தான்!

    கருவறையில் கல்நட்டு

    கட்டங்கட்டி விற்றுவிட்டான்

    வயிற்றுக்காக மட்டும் அன்று!

    வானம் பார்த்த பூமியின் மேலெழுந்து

    வான்தொட்டு நிற்குமந்த

    அடுக்குமாடிக் கட்டிடங்கள் மீதேறிச் சென்று

    மழைவேண்டி யாசிக்கலாமே என்று!

    வேண்டியும் பலனில்லை என்றால்

    வீழ்ந்து மாய்க்கலாமும் என்று!

    இப்படித்தான் நிற்கிறார்கள் –

    உச்சத்தில் உழவனும்,

    மரணத்தின் விளிம்பினில் உழவும்

    இன்று!

    Share
  • நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – தொடர்-28

    பெருவை பார்த்தசாரதி

    மனித சமுதாயம் முன்னேறும் விதமாக வாழ்ந்து காட்டிய அறிவாளிகள், சாதனையாளர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள், மாமேதைகள் இவர்களின் வெற்றி வழியைப் பின்பற்றிதான், பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், வாழ முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு துறையில் சிறந்து விளங்கி ஒவ்வொரு நூற்றாண்டிலும், தோன்றி மறைந்த மாமேதைகள் பலர் பின்வரும் சந்ததியினருக்கு அன்புடன் வழிகாட்டினார்கள் என்கிறது வரலாறு. பயணம் தொடர பாதை முக்கியம் என்பதுபோல, வழிகாட்டுதல் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    “அன்பில்லாதவர்கள் தமக்காகவே தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். பிறரிடத்தில் அன்புடையவர்கள் தமது வாழ்க்கையை பிறருக்காக அர்ப்பணிக்கின்றனர்” என்கிறார் தோழர் விலாடிமிர் லெனின். பிறருக்கு வழிகாட்டுகின்ற பலர், ஒரு வகையில் அன்புக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்திருந்திருக்கலாம் என்ற நோக்கில், லெனின் அவர்கள் இதைச் சொல்லி இருப்பார் போலும்….இதைப்பற்றிய சிந்தனையை மேலும் விரிவாக்கும்போது, ஒரு சில கேள்விகளும் நம் மனதில் எழுகின்றது.

    நாம் எவ்வளவோ பேரிடம் அன்றாடம் பழகுகிறோம்.  அவ்வளவு பேரும் நம்மிடம் அன்பு செலுத்துகிறார்களா?…….

    எல்லோரிடத்திலும் நம்முடைய சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறோமே, உண்மையில் அவர்கள் எந்தக் கண்னோட்டத்தோடு அதைப் பார்க்கிறார்கள்?…….

    சொந்த விஷயங்களை, பிறரிடம் அன்னியோன்யமாகப் பகிர்ந்து கொண்டாலும், அவர்கள் அதைப் பொருட்படுத்துவார்களா?….

    பல மணி நேரங்கள் பொருமையாக நம்முடைய சொந்தக்கதை, சோகக்கதை இவற்றையெல்லாம் கேட்டவரிடமிருந்து, ஒரு சில நிமிடமாவது அன்பான, இரக்கமான ஆறுதல் வார்த்தைகளை எதிர்பார்க்கமுடியுமா?……..

    ஏழையின் கூக்குரலை பணக்காரர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?

    அலுவலகத்தில் பொருப்பான உயர் பதவி வகிப்பவர்கள், என்றாவது ஒரு நாளாவது, சக ஊழியர்களுடைய துக்கத்தில் பங்கு கொண்டு, துன்பம் நேருகின்ற சமயத்தில், அன்பு செலுத்தி ஆறுதல் சொல்லி ஊக்கப்படுத்துபவர்கள் எண்ணிக்கையில் ஒரு சிலரே என்பது அனுபவத்தில் காணும் உண்மை.

    இந்நாளில், நண்பர்களோ, உறவினர்களோ, ஒருவருக்கு ஒருவர்  சுகதுக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டு அவ்வப்போது அறிவுரையோ?……..ஆறுதலோ?……சொல்லிக்கொள்கிறோமா?…..

    இத்தகய கேள்விகளுக்கு, இன்றளவும் பதில் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

    வெளியூரிலிருக்கும் மிக நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் இறந்து விட்ட செய்தி அறிந்தும்கூட உடனடியாகச் சென்று துக்கம் விசாரிப்பவர்கள் ஒரு சிலரே எனலாம். உடனடியாகச் சென்று  சோகத்தில் மூழ்கியிருக்கும் அக்குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லாமல், ‘ ஒரு முக்கியமான வேலை இருந்தது, உடனே போக நேரமில்லை’ என்று காலம் கடந்து வரும் பதிலே அநேகரிடமிருந்து வரும் பதிலாக இருப்பதை நம் அனுபவத்தில் காண்கிறோம்.

    பொதுவாக மேலேழுந்த கேள்விகளுக்கெல்லாம் நம்முடைய உள்மனது என்ன பதில் தரும். ஆறுதல் வார்த்தை என்பது நம்மில் எத்துணை பேருக்கு உதிக்கிறது அல்லது உதவுகிறது. ஆறுதலோ அறிவுரையோ சொல்லி, தக்க சமயத்தில், யாருக்காவது நாம் நல் வழிகாட்டியிருக்கிறோமா?..பிறரால் கடும் துயரத்துக்கும், வேதனைக்கும் ஆளாகியிருக்கும் இருக்கும் ஒருவரது மனம் நொந்து போயிருக்கும் சந்தர்ப்பங்களில், ஆறுதல் சொன்னால், பாதிக்கப்பட்டவருடைய பலவீனமான இதயம் பலப்படும் என்பது மருத்துவத்தில் கண்டறிந்த உண்மை.

    ஆறுதல் சொல்லக்கூடிய மனப்பக்குவத்தைப் பெற்றவனை, உதவும் எண்ணமுள்ளவனை ‘இளகிய நெஞ்சம் படைத்தவன்’ என்று சொல்வதில்லையா.   இதைத்தான் கவியரசு அவர்கள் அர்த்தமுள்ள இந்துமதத்தில் “இதயம் என்று எடுத்துக்கொண்டாலே ‘கனிந்த உள்ளம்’ என்ற பொருள் மறைந்தே இருக்கும். அவற்றில் இரக்க குணமும் இதயத்தை சார்ந்தே சொல்லப்படுகிறது. கல்நெஞ்சக்காரனை “இதயமில்லாதவன்” என்றே கூறுகின்றோம்” மேலும் நிரந்தரமற்ற நம் வாழ்வில் எவரும், எப்போதும் இல்லாமல் போகலாம், இப்படி இருக்கையில், ஒருவர்மேல் ஒருவருக்கு எதற்கு தேவையற்ற ஆதங்கங்கள், கோபங்கள், துவேஷங்கள்?……என்று மிக அருமையாக இதயத்தைப் பற்றி இதமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

    கடந்த வருடங்களில், ஒரு மூன்று நிமிட நேரத்திற்குள், ஆழிப்பேரலை (tsunami) பல ஆயிரம் பேர்களை அள்ளிக்கொண்டுசென்றபோது, எண்ணற்ற உயிர்கள் பலியாயின. இறந்த உடல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில்தான் எரியூட்ட முடிந்தது. பெற்றோர்களை இழந்த குழந்தைகள், சகோதரனை இழந்த சகோதரிகள் இப்படி பாதிக்கப்பட்டவர்களையெல்லாம் தூக்கி நிறுத்தி மறுவாழ்வு கொடுத்ததை உலகமே கண்ணுற்றதல்லவா?……ஒவ்வொரு மூலையிலிருந்தும் மற்றவர்கள் ஆறுதல் என்ற பலத்தைக்கொடுத்ததால்தான் இன்றும் பலர் உயிர் வாழ்கிறார்கள்.

    உலகத்தில் நடக்கின்ற பலவிதமான கொடுஞ்செயலுக்கெல்லாம் ஆளாகி வருந்துகின்ற மனிதர்களுக்கு, ஆறுதல் ஒன்றே மறுவாழ்விற்கு உறுதுணையாக அமைகிறது என்பதே உண்மை.

    திடீரென்று நிகழும் ஒரு அசம்பாவிதம், சட்டென்று முடிந்துவிடும் மரணம், எதிர்பாராத பேரதிற்ச்சி போன்றவைகளால் நம்முடைய மூளையில் ஒருவித அமிலம் சுரந்து, மூளையைச் செயலிழக்கச் செய்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இம்மாதிரி சந்தர்ப்பங்களில், தாங்கமுடியாத துயரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்தைக் கூட சந்திக்க நேரிடுமாம். இதைத் தவிர்ப்பதற்கு ‘ஆறுதல்’ வார்த்தைகளும், சமாதானமும் அருமருந்தாகச் செயல்படும் என்பதும் உண்மை.

    பட்டாசுத்தொழிற்சாலை, பள்ளிகள், திரையரங்குகள், இப்படி பலர் கூடும் இடத்தில் தொடர்ந்து ஏற்படும் தீவிபத்துகள் மற்றும் ரயில் விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பொதுநலத்தொண்டு புரிபவர்கள், இரக்ககுணம் மிக்கவர்கள், பரிவு காட்டுபவர்கள் அன்றாடம் ஆறுதல் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். இதிகாசங்களில் இறைவனுக்குக்கூட சில சந்தர்ப்பங்களில், தர்ம சங்கடமான நேரங்களில், ‘ஆறுதல் வார்த்தைகள்’ அவசியமானது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

    சப்தரிஷிகளில், ப்ருகு மகரிஷிக்கு அக்னிதேவன் சகோதரனாவார். ஒரு சமயம், அவர் மனைவி கருவுற்றிருக்கும்போது, அவளைப் பாதுகாக்க அக்னிதேவனுக்குக் கட்டளையிட்டிருந்தார்.

    ராட்சதன் ஒருவன், அவளை அபகரிக்கத் திட்டமிட்டான். மகரிஷி இல்லாத சமயத்தில், அக்னிதேவனையே தன் பேச்சுத்திறமையால் மடக்கி, அவளை அபகரித்துக் கொண்டான். ராட்சதனின் பிடியிலிருந்த மகரிஷியின் மனைவி, ஒருவாறு பலவந்தமாக தன்னை அவனிடமிருந்து விடுவிக்கும் தருணத்தில், அங்கே ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அவள் பிரகாசத்துடனும், பேரொளியுடனும் தோன்றிய ஒரு ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். பேரொளியின் கதிர்வீச்சைத் தாங்கமுடியாத ராட்சதன் சாம்பலானான். பேரொளியையும், பிரகாசத்தையும், சக்தியையும் ஒருங்கே பெற்ற இவனே “ச்யவனன்” என்ற பெயரால் அழைக்கப்பட்டான். இதனால்தானோ என்னவோ, ஆயுர்வேத மூலிகையால் ஆன, உடலைத் தேற்றுகின்ற பல வஸ்துக்களில் ஒன்றாகிய லேகியமும் இப்பெயருடன் இன்று வியாபாரமாகிக் கொண்டிருக்கிறது.

    ஞானதிருஷ்டியினால், நடந்ததை அறிந்த ப்ருகு முனிவருக்கு, தன் மனைவியைப் பாதுகாக்கத் தவறிய அக்கினிதேவன்மீது அளவுகடந்த கோபம் உண்டானது. “அக்னிதேவனே நீ யாகங்களுக்கும், ஹோமங்களுக்கும் நற்தீயாகச் செயல்பட்டாலும்,  இனி நீ தீயசெயல்களுக்கும்  காரணமாகி, இழிந்த நிலையை அடைந்து, உன்னைக்கண்டாலே எல்லொரும் பயந்து ஓடுவார்கள். என்னுடைய மனைவியைக் காக்கத் தவறிய நீ இத்தகய நிலையை அடைவாய். அனைத்து ஜீவராசிகளும் உன்னை வேண்டும்போது மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள்!…..என்று சாபமிட்டார்.

    பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய அக்னி இல்லாமல் உலகம் உய்ய முடியுமா?…நிலமையை அறிந்த படைப்புக் கடவுளான ப்ரம்மா, அக்னிதேவனுக்கு ஆறுதல் சொல்ல ஓடோடிவந்தார். அவன் பெற்ற சாபத்தில் திருத்தம் பல செய்து, மனம் வருந்திய அக்னிதேவனுக்கு பின்வருமாறு ப்ரம்மா சமாதானப் படுத்தியதாக மகாபாரத்தில் ஒரு சிறிய சம்பவம் இடம் பெற்றிருக்கிறது.

    “உலகம் இயங்குவதற்கு நீ மூலக்காரணமாதலால், உன்னால் அழியப் போகும் அனைத்துமே, இவ்வுலகத்திற்குத் தேவையானதாக இருக்காது. கர்மவினையால் அவதிப்படுபவர்கள் மட்டுமே தன்னுடைய உடமைகளையும், உயிரையும் உன்னால் இழக்க நேரிடும். மேலும், உலகில் இயங்கும் அனைத்துக்குமே நீ என்றும் உறுதுணையாக இருப்பாய். நீயல்லால் ஒர் அணுவும் இயங்காது. உயிர் இயங்க உயிராகவும், மறியாதைக்கு மறுபெயராகவும் விளங்குவாய்” என்று சொன்னதாக கதையில் வரும் இச்சிறிய சம்பவம் இக்கட்டுரைக்குப் பொருத்தமானதாக இருக்கும்.

    இதிகாச உதரணங்களை சற்று நிறுத்திவிட்டு, இன்றய உலகில் நடந்த ஒரு சில நிகழ்வுகளைப் பார்ப்போம்.  ஒரு குடும்பத்திலே கூட கணவன் மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, இன்பம் வரும்போது பங்கிட்டுக்கொண்டு, துன்பத்தில் உழலும்போது ‘ஆறுதல்’ சொல்லி இன்பமயமான வாழ்க்கை முறையை எடுத்துக் கூறினால்தான் வாழ்க்கைப் பயணம் இனிதே நடக்கும் என்பதை இந்த நூற்றாண்டில் வாழ்ந்த மிகச்சிறந்த எழுத்தாளனின் வாழ்க்கை நமக்கு எடுத்துரைக்கிறது.

    எழுதுவது, எழுதிக்கொண்டே இருப்பது என்பதைத் தவிர இவருக்கு வேறு எதுவும் தெரியாது. வேறு தொழில் தெரியாததால், எழுத்தை நம்பி வருமையிலே கூட வாடினார்.  தினமும் தாம் எழுதுவதை, எல்லாப் பத்திரிகைகளுக்கும் எழுதி எழுதி அலுத்துப் போய், வருமையின் எல்லைக் கோட்டிற்குச் சென்று, வாழ்க்கையை வெறுத்துவிட்ட நிலையில், இனிமேல் எந்தப் பத்திரிகையிலும் தன்னுடைய எழுத்துக்களுக்கு இடமில்லையா?..இனிமேல் குடும்பத்தை எப்படி நடத்துவது?…என்பதுபோல் மனைவியிடம் புலம்பிக் கொண்டிருந்தாராம். ஒரு பெண்ணைப்பற்றி கதை எழுத ஆரம்பித்து, மன சஞ்சலத்தால் அதை பாதியிலேயே நிறுத்தி இருந்தார். எழுதிய படைப்புகளையும் விட்டேறிந்தார், அவரது மனைவி அதைப் பாதுக்காத்து, அவருக்கு ஆறுதல் சொல்லியதோடு, தன்னம்பிக்கை அளித்து, அந்தக் கதையை முடிப்பதற்கு பேருதவி புரிந்தார். பிறகு ஒரு பத்திரிகை அலுவலகத்துக்கு, அவரது படைப்புகளை அங்கு அனுப்பி வைத்தார்.

    சில நாட்கள் கழித்து, பத்திரிகை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது, முதல் முறையாக அவரது எழுத்துக்களைப் பிரசுரிக்கப் போவதாகவும் அதற்காக ஒரு சொற்ப சன்மானம் ஒன்றையும் சேர்த்து அனுப்பியிருந்தார்கள். அன்றே அவரது வாழ்வில் துளிர்விட ஆரம்பித்த, அந்த நம்பிக்கைதான், 1976 ல் ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அவர் எழுதிய “கேரீ ”  (carrie), என்ற நாவல், 1976 ல் சுமார் 50 லட்சம் பிரதிகள் விற்று அவரது வருமையைத் தொலைத்து, வளமையைப் பெருக்கியது.  அதன் பிறகு, கேரீ எடுத்த முடிவு என்ன தெரியுமா?. அனுதினமும் 1500 வரிகளாவது எழுதிவிட்டுத்தான் தூங்குவது என்ற தீர்மானமான முடிவுக்கு வந்தாராம். இதை எழுதும் போது இவ்வரிகள் அனைத்தும் ஒவ்வொரு எழுத்தாளர்களளின் மனதில் நீங்காத இடம் பெற வேண்டும் என்பதே என் விருப்பம். உற்சாகம், அன்பு, இரக்கம் இவை கிடைக்காமல் யாரும் எதுவும் சாதிக்கமுடியாது என்பதுபோல் இவரது வாழ்க்கை பிறருக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

    திறமையான எழுத்துக்களை திகில் கதை மூலம் வெளிப்படுத்தி, உலகத்தில் அதிக அளவில் வாசகர்களைப் பெற்ற இவர், தன் வாழ்நாளில் சம்பாதித்த செல்வத்தின் பெரும்பகுதியை, பள்ளிக் குழந்தைகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் உதவும் வகையில் ஒரு பகுதியை எழுதி வைத்தார். எழுத்துக் கலையை ஊக்கப்படுத்துகின்ற பணிகளுக்கும் பெருந்தொகையை நன்கொடையாக அளித்தார். இவரது சரித்திரத்தைப் படித்து முழுவதுமாக ஆராய்ந்து பார்த்தோமானால், வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இவருக்குக் கிடைத்த அன்பும், ஆதரவும், ஊக்கமும், உற்சாகமுமே என்பதை அறியமுடியும். அவர்தான் ஸ்டீஃபன் எட்வின் கிங் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர், அவருக்கு சரியான தருணத்தில் ஊக்கமும், உற்சாகமும், அன்பும், பரிவும் அளித்த பெருமைக்குறிய அவரது மனைவி பெயர் தபிதா கிங்.

    இந்தக் கட்டுரை வெளியாகும் இதேவாரத்தில் வெளியான, இன்னொரு செய்தியும் இக்கட்டுரையின் தலைப்புக்குப் பெருமை சேர்க்கிறது. அடையார் புற்று நோய் மருத்துவ மையத்தின் நிறுவனர் திருமதி டாக்டர் சாந்தா அவர்களுக்கு தமிழக அரசாங்கம் சர்வதேச மகளிர் தினத்தன்று “அவ்வையார்” விருது (2013) வழங்கி கெளரவித்து இருக்கிறது. ‘நாளை என்பதே நிச்சயம் இல்லை’ என்ற நிலையில், அனுதினமும் புற்றுநோயால் அவதியுறும் மக்களிடம், அன்பு, ஆறுதல், பரிவு, இரக்கம், பொதுநலம் மூலம் தம் வாழ்நாளை அற்பணித்தற்காக இந்த உயரிய விருது அவருக்கு பெயரையும், புகழையும் தேடித் தந்திருக்கிறது என்பதையும் இங்கே நினைவு கூறுவோம். ‘ராமன் மெகஸேஸே’ பரிசு பெற்ற இவருக்கு வழிகாட்டி (Rollmodels) என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லையாகிலும், 78 வயது நிரம்பிய இவர் வாழ்வில் உயர்ந்ததற்கு, அகத்தூண்டுகோலாக அமைந்தவர்கள் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமனும், டாக்டர் சந்திரசேகர் அவர்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    மிகச்சிறந்த கவிஞனாக, ஓவியனாக, சிற்பியாக, இலக்கியவாதியாக, எழுத்தாளனாக அமைவது பிறவியிலேயே என்று சொல்வது சம்பிரதாயமாக அமைந்துவிட்டாலும், தக்க சமயத்தில் ஊக்கமும், உற்சாகமும், அன்பும், ஆறுதலும், உழைப்பும், முயற்சியும் ஒன்று சேர்ந்துவிட்டால், ஒரு மனிதனுக்கு சாதனை படைப்பதற்கு உறுதுணையாகும் என்பதையே இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

     தொடரும்……….

    Share
  • நம்மில் ஒருவர்….

    பார்வதி இராமச்சந்திரன்

    ஒரு சிறு மளிகைக் கடையின் முன் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டி, என் கவனத்தைக் கவர்ந்தது. சில்லறை வியாபாரத்தில் அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக நுழைவதற்கு அனுமதியளிக்கக் கூடாதென்ற கோரிக்கையுடன்,  அதற்கு ஆதரவாக‌ வாக்களிக்க வேண்டி ஒரு பெண்கள் பத்திரிகை வைத்திருந்த வாக்குப் பெட்டி அது.

    ‘நம் குடும்பத்தில் ஒருவராக இருப்பவரின் வியாபாரத்தை முடக்குவதா?’ என்பது போன்ற வாசகங்களுடன், வாக்குப் பெட்டிக்கு அருகில் இருந்த பேனர்கள் என் கருத்தைக் கவர்ந்தது.

    அருகிலிருந்த என் மகள், சிரித்தவாறு, ‘ஒரு கடை வச்சிருக்கிறவர் எப்படி நம் குடும்பத்தில ஒருத்தர் மாதிரி ஆக முடியும்?, காசு கொடுத்து பொருள் வாங்குறோம், அவ்வளவு தானே?’ என்றாள். அவள் கையை அழுத்தியவாறு சொன்னேன்.

    ‘உனக்குப் புரியாதும்மா!!!!’

    அவள் சிறுமி, ஊர் விட்டு ஊர் மாறும் வேலையுடைய என் கணவருடன், நிரந்தரமாக, ஓரிரண்டு வருடத்திற்கு  மேல் ஒரு ஊரிலும் இருந்ததில்லை. ஆகையால், அவளுக்கு அந்த வாசகத்தின் மகத்துவம் புரியவில்லை என நினைத்துக் கொண்டேன்.

    கடையிலேயே ஒரு வாக்குச் சீட்டை வாங்கி, வாக்களிக்கையில், என் மனம்,  கணபதி மாமாவை நினைத்துக் கொண்டது. முகமெல்லாம் சிரிப்பாக, எப்போது பார்த்தாலும் ‘என்னா பாப்பா?’ என்று அன்போடு அரவணைக்கிற, எப்போது கடைப்பக்கம் போனாலும் கை நிறைய ஆரஞ்சு மிட்டாய் தருகிற அந்த முகம், எங்கள் குடும்பத்தோடு மட்டுமல்லாமல், ஊரில் எல்லோருடனும் வைத்திருந்த நல்லுறவு என ஒவ்வொன்றாக நினைவு வந்தது. அவர் கதையை பாதியிலிருந்து மட்டுமே நான் அறிவேன். என் பாட்டி, சித்திப் பாட்டி, மாமா, அப்பா என உறவுகள் சொல்லிக் கேட்டதே நிறைய.

    முதன் முதலில் மாமா எங்கள் வீட்டுக்கு வந்ததை ஒரு ஆச்சரியம் போல் சொல்வாள் பாட்டி.

    ‘ஒரு நா வாசல்ல, ஒரு நடுவயசு மனுஷரும் சின்ன பையனும் நின்னா. ஊருக்குப் புதுசுன்னு பாத்த ஒடனே பளிச்சுன்னு தெரிஞ்சது. உள்ள வரலாமான்னுட்டு யோஜனை பண்ணிண்டு நின்னார் பாவம். ஒன் தாத்தா பாத்துட்டு, ‘வாங்கோ உள்ள’ன்னதும் அப்படி ஒரு ஆச்சரியம் அவர் மொகத்துல.

    ‘வெளியூர்லயிருந்து பொழைக்க வந்துருக்கோம், சின்னதா ஒரு மளிகை வக்கலாம்னு. நீங்க பெரியவங்க ஆதரிக்கணுன்னு’ கேட்டுண்டார். தாத்தா ஒடனே சரின்னுட்டார். பக்கத்துல இருந்த பையனப் பாத்து, ‘ஒம் பேரென்ன?’ன்னார். ‘கணபதி’ன்னு கணீர்னு வந்தது பதில். ‘படிக்கறியா’ன்னார்.’

    அந்தக் கேள்விக்கு பதில் வரவில்லையாம். காரணம் கொஞ்சம் நெருடலானது. கணபதி மாமாவின் கால் விரல்கள் வித்தியாசமாக இருக்கும். வலக்காலில் இரண்டு விரல்கள் இருக்காது. கூடப்படிக்கும் பையன்களின் கேலிக்குப் பயந்து பள்ளிக்கூடம் போவதை நிறுத்தி விட்டிருக்கிறார்.

    தாத்தா, உடனே அறிவுரை கூறியதோடல்லாமல், அப்போது சின்ன பையனாயிருந்த மாமாவை அழைத்து ‘வெங்கி, நாளைக்கு இந்தப் பையனையும் ஒன்னோட அழைச்சுண்டு போய் ஸ்கூல்ல சேத்துடு, செல்லத்துரை வாத்தியார்ட்ட நான் சொன்னேன்னு சொல்லு’ என்று சொல்லியிருக்கிறார். பூஜையறையிலிருந்து பழங்களை எடுத்து, கணபதி மாமாவின் இருகரங்களிலும் கொடுத்திருக்கிறார் பாட்டி.

    ‘மொகத்துல சிரிப்பப் பாக்கணுமே, பொன்னாட்டம் வாங்கிண்டுது கொழந்தை ‘!!.

    அப்போது துவங்கியது. கடையிலும் அப்பாவுக்கு உதவியாக இருந்தாராம் கணபதி மாமா. சிட்டை(லிஸ்ட்) படி மளிகைப் பொருட்களை அவரவர் வீட்டுக்குக் கொண்டு சேர்ப்பது. சின்ன பற்று வரவு புத்தகத்தில் கையெழுத்து வாங்க வருவது என்று எல்லா வேலைகளும் செய்வார். அதனால் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

    குறிப்பாக எங்கள் இல்லத்தில் ஒரு மகன் போலவே ஆனார். வெங்கி மாமாவுக்கு ‘கணா’, என் அப்பா, சித்தப்பாவுக்கு ‘அண்ணே’, என் தாத்தாவுக்கு ‘கணபதி’, என் சின்னத்தாத்தா(தாத்தாவின் தம்பி) மட்டும் மிக நெருக்கமாக ‘பிள்ளைவாள்’ என்பார். அதென்னமோ மாமாவின் மேல் அலாதி பாசம் அவருக்கு. வயதுக்கு மீறிய தோழமை இருவரின் நடுவேயும். இருவருக்கும் பயணம் செய்வதில் அடக்கமாட்டாத ஆசை. ஏதாவது குடும்ப விசேஷங்கள், திருவிழாக்களுக்காக கணபதி மாமா வெளியூர் செல்ல வேண்டி வந்தால், சின்னத் தாத்தாவும் புறப்பட்டு விடுவார். இருவரும் ஏதாவது ஒரு புள்ளியில் சந்தித்து, அருகில் இருக்கும் எல்லா ஊர்களையும் பார்த்து விட்டுத் திரும்புவது வழக்கம். அதைப் போலவே கணபதி மாமாவும் செய்வார்.

    அதனால் இருவரில்  ஒருவர் வெளியூர் சென்றுவிட்டு, ஊர் திரும்பத் தாமதமானால், பரஸ்பரம் விசாரித்துக் கொண்டு அமைதி காண்பது இருவர் வீட்டு வழக்கமும்.

    கணபதி மாமா, தன் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், படிப்பை பள்ளியிறுதியோடு நிறுத்திக் கொண்டார். உடனே திருமணமும் ஆயிற்று. நிறையக் குழந்தைகள் கணபதி மாமாவுக்கு.

    கணபதி மாமாவைப் போலவே அவர் மனைவி மீனாட்சி அக்காவும். கலகல என்று இருப்பார். இருக்கும் இடமே திருவிழாப்போல இருக்கும்.

    ஊரில் யார் வீட்டுக்கு யார் வந்தாலும்  கணபதி மாமாவுக்குத் தெரிந்துவிடும்.

    கடைக்கு வருகிறவர்களிடம், காசு வாங்கினோம், பொருளைக் கொடுத்தோம் என்றிருப்பது அவரால் முடியாது.

    ‘யாரு, அக்காவா, என்னா சேமியா வேணுமா?, தாரேன். பாயாசம் வைக்கிறதுக்கா இல்ல உப்புமாவா?. பாயாசமா? அப்ப சீனி வேணும்ல? இருக்கா?. டே, அந்த சேமியாவ எடு!!, ஆமாக்கா, என்ன விசேசமா?!!, ஆரு வந்திருக்காங்க, நாத்தனாரா?, அதான் பாயாசமா!!, என்னா சும்மாத்தான் ஊரு பாக்கவா இல்ல வேற விசேசம் ஏதாச்சும் உண்டா?, என்னா பொண்ணு கேக்க வந்திருக்காகளா?, என்னா மெல்ல சொல்லுறீக, சட்டுப்புட்டுன்னு பண்ணிறலாம்ல!! வயசும் ஆச்சுல்ல பாப்பாவுக்கு, மாமா என்னா சொல்லுறாரு?,’ என்று கோர்வையாக விசாரிப்பார்.

    அன்று சாயங்காலமோ, மறுநாளோ கடைக்கு வந்த அக்காவின் வீட்டுக்காரரைப் பார்க்க நேர்ந்தால், வாசாலகமாக, ‘வாங்க மாமா, என்னா கடப்பக்கமே ரொம்ப நாளா காணும்?’

    என்று துவங்கி, ஒரு சுற்று பேசி விட்டு, ‘ஆமா, என்னா எப்ப பாப்பா கல்யாணத்துக்கு சமையல் சாமா(ன்) சிட்டை தரப்போறீக?, நேத்தென்னாமோ, ஒறமொறை வந்திருந்தாக போல’ என்று விஷயத்துக்கு வருவார்.

    மாப்பிள்ளை பிடித்தம் இல்லை என்றால் தலையிடமாட்டார். மாறாக, பண விஷயத்துக்காக தவங்குகிறது என்றால் ‘கிடுகிடுவென’ உதவியில் இறங்குவார்.

    ‘நீங்க கவலப்படாதீங்க, நக நட்டுக்கு, துணிமணிக்கெல்லாம் எவ்வளவு தேவப்படுது?, மண்டபச்செலவு பத்தி பெரச்சனையில்ல, “அங்கயற்கண்ணி” ல சொல்லிரலாம். சமயல் பாத்திரத்துலருந்து, கூட்டிப் பெருக்குற ஆள் வரக்கும் இருக்கு, பாத்துக்கிரலாம். நம்ம ஒறமொறைதான் மண்டபம் வச்சிருக்கிறவ‌ரு. நாஞ்சொன்னா செரிம்பாரு. சமயலுக்கு ஆள மட்டும் பாருங்க, சாமா(ன்) செட்டு அத்தனையும்,  மஞ்சப்பொடிலருந்து, வெத்தல பாக்கு வரக்கும் நாங்கொணாந்து போடுறேன், பெறகு மொள்ளமா கொடுங்க, இப்ப என்னா?, வேற என்னா செலவு?’ என்று அலச ஆரம்பிப்பார். செட்டியார் கடையில், தவணை முறைக் கடனுக்கு ஏற்பாடு செய்வதிலிருந்து எல்லாவற்றிற்கும் உதவிக்கு நிற்பார். கண்டிப்பாய், ஏதேனும் ஒரு சிறிய செலவேனும் தன் பொறுப்பில் ஏற்பார். அநேகமாக, அது பூவாகத்தானிருக்கும். கல்யாணத்திற்கு வேண்டிய பூச்சரம், மாலைகள், உதிரிப்பூ எல்லாவற்றையும் தன் செலவில் வாங்கித் தருவார். திருமணம் முடிந்து, மணமக்களை வண்டி ஏற்றி அனுப்புவது வரை அந்த‌ வீட்டு மனுஷனாக உடனிருப்பார்.

    ஒரு முறை பாட்டி சொன்னாள் என்று ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கப் போனது நன்றாக நினைவிருக்கிறது. சொன்னதும் உடனே எடுத்துக் கொடுக்கவில்லை.

    ‘என்னா பாப்பா வந்திருக்கீக, அண்ணன் இல்லையா, வள்ளி எங்க போனா?’

    ‘அண்ணா மாமா வீட்டுக்குப் போயிருக்கார். வள்ளி மார்க்கட்டுக்கு!!’

    ‘அதானா, செரி இந்தாங்க‌ ஆரஞ்சு மிட்டாயி, எப்பவாச்சும் தானே ஹார்லிக்ஸூ வாங்குறது நம்ம வீட்டுல, ஆமா, ஆராச்சும் விருந்து வந்திருக்காங்களா?’

    ‘இல்லல்ல… பக்கத்தாத்து சுந்தரம் மாமா இல்ல, அவர ஆஸ்பத்திரில சேத்துருக்கா… தாத்தா பாக்கப் போறா.. அங்க குடுத்து விடத்தான்’

    ‘அப்டியா, செரி நீங்க போயி பாட்டிக்கிட்ட நா(ன்) கொண்டாரேன்னு சொல்லுங்க!’

    நேரே வீட்டுக்கு வந்து, என்ன ஏது என்று விசாரிப்பதோடு நிற்க மாட்டார். சுந்தரம் மாமாவின் வீட்டுக்குப் போய் என்ன உதவி வேண்டும் என்று கேட்டுச் செய்வதோடு, சுந்தரம் மாமா ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பும் வரை, எப்போது டவுன் பக்கம் போனாலும், தன் சைக்கிளில், அவர் வீட்டிலிருந்து,  சாப்பாடு மற்ற சாமான்கள் எடுத்துப் போய், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் கொடுப்பார்.

    தன் கல்யாணமும் அவரால் தான் நடந்தது என்பாள் அம்மா. எங்கே பிள்ளைக்கு கல்யாணமானால், மருமகள் வந்து பிரித்து விடுவாளோ என்ற காரணமற்ற பயத்தினால், அப்பாவின் கல்யாணத்தை ஏதேனும் சாக்கு சொல்லி தள்ளிப் போட்டுக்கொண்டே போனாளாம் பாட்டி. பெண் பார்க்கும் வரை வந்தால் கூட ஏதாவது காரணம் கண்டுபிடித்து ‘வேண்டாம்’ என்று சொல்லிவிடுவாளாம். தாத்தா எவ்வளவு சொல்லியும் பாட்டிக்கு உறைக்கவில்லை. அப்பா,  த‌ன்  அம்மாவுக்கு அடங்கிய பிள்ளை.

    இராமநாதபுரத்தில், அம்மாவைப் பெண்பார்த்து வந்ததும், வழக்கம் போல் பாட்டி காரணம் தேட ஆரம்பிக்க, அப்போது, சாமான் கொண்டு வந்து கொடுக்க வந்த கணபதி மாமா,

    ‘என்னங்கப்பா, பொண்ணு பாக்கப் போனீங்கல்ல, நல்ல விசயம்தான?’ என்று தாத்தாவிடம் ஆரம்பித்தாராம்.,

    ‘இல்லடா கணபதி,  பொண்ணு கொஞ்சம் குள்ளமாட்டமா இருக்கு!!  ..பாட்டி.

    ‘அதனால என்னா… ரவியும்  ஒயரங் கம்மிதான‌.. செரியா இருக்கும்ல’.

    பாட்டி பதில் பேசாமல் இருக்க, ‘இந்தா பாருங்க அம்மா, ரவி வயசுல, எனக்கு கலா சடங்காயிருச்சு… இன்னம் கலியாணமுடிக்காம இருந்தீங்கன்னா, அது பிள்ளைகள வளத்தி நிமுத்த வயசு வேணாமா… இன்னம் சின்னப் புள்ளையா…. ஒங்களுக்கு பேரம்பேத்தி வேணுங்குற ஆச இருக்குதா இல்லையா?, என்ன மாதிரி சின்னவங்க, ஒங்ககிட்ட செரி, தப்பு எடுத்துச்  சொன்னா நல்லாவா இருக்கு?.. ஏம்ப்பா… ரவிக்கு பொண்ணு புடிச்சுருக்குல்ல… அப்ப ஆக வேணுங்குறத பாக்கலாம்ல… அம்மா ஒண்ணுஞ் சொல்ல மாட்டாங்க‌. நீங்க ஒண்ணு பண்ணுங்க… போயி, பொண்ணு புடிச்சுருக்குன்னு ஒரு தந்தி குடுத்துருங்க…. இப்பமே நிச்சயம் பண்ணினாத்தான் செரி வரும். இல்லன்னா மார்கழி வந்துரும். வர ஞாயித்துக்கெழம முகூர்த்த நாளுன்னு பாத்ததா ஞாபகம். அத செரிபாருங்க. செரியா இருந்துச்சுன்னா, அன்னைக்கே நிச்சியம் பண்ணிரலாமான்னும் ஒரு வரி சேருங்க…. நாம் போயி, ‘அங்கயற்கண்ணி’ல ஒரு வார்த்த சொல்லிர்றேன். அங்கயே  வச்சிரலாம் நிச்சியம். என்னா?’  என்று அடுக்க…

    அப்பா, சின்னதாய்த் தலையசைக்க, பாட்டியின் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு, தாத்தா, ‘அப்படியே செய்துடுவோம், நான் உங்கூடவே வரேன். என்ன தந்தி ஆபீசுல இறக்கி விட்டுடு…’ என்று கணபதி மாமாவின் சைக்கிளில் ஏறிச் சென்று தந்தி அடித்து விட்டு வந்தாராம்.

    ‘அவர் மட்டும் பூனைக்கு மணி கட்டலைன்னா… அறுபதாம் கல்யாணம்தான் உங்கப்பாவுக்கு’ என்று சிரிப்பாள் அம்மா.

    இது போல், கணபதி மாமா வீட்டுக் கல்யாணம் தாத்தாவால் நிச்சயம் செய்யப்பட்டதும் நடந்ததுண்டு.

    கணபதி மாமா, தன் மக்கள் எல்லாரையும் உறவிலேயே மணமுடித்துக் கொடுத்து வந்தார். . கிட்டத்தட்ட எல்லா அக்கா தங்கை உறவிலேயும் கொள்வினை கொடுப்பினை உண்டு. மீனாட்சி அக்காவுக்கு, தன் ஐந்தாவது பிள்ளையை, தன் அண்ணன் மகளுக்கு மணமுடிக்க வேண்டும் என ஆசை. ஆனால், எதனாலேயோ ‘ஒன் ஒறவுல சம்மந்தம் வேணாம்’ என்று சொல்லிவிட்டார் என கண்ணைக் கசக்கிக் கொண்டு தாத்தாவிடம் வந்து நின்றார் மீனாட்சி அக்கா.

    ‘ஏண்டா, அவ சொல்றதும் ஞாயந்தானே!!’

    ‘அப்பா, அது சும்மா சொல்லுது… எத்தன பெரச்சன வந்துச்சு அவுங்களாலன்னு ஒங்களுக்கும் தெரியுந்தான…’

    ‘ஆமா, அதுக்கென்ன பண்றது.. அவங்கப்பா செஞ்சதுக்கு புள்ளை என்ன பண்ணுவான் சொல்லு..  நீரடிச்சு நீர் விலகாது. நாளக்கு அவ சொந்தத்துலயும் ஒருத்தர் வேணுன்னு நெனைக்கறா…’

    ‘அதுக்காக, இவங்கண்ணன்ட்ட நாம் போயி என்னா பேசுரது…’

    ‘அது ஒண்ணும் பெருசுல்லா.. சொல்லிவுட்டா அவங்களே வருவாங்க…’ என்றார் அக்கா.

    ‘எல்லாந் திட்டம் போட்டு வச்சாச்சா?’

    ‘ கணபதி… நீ கொஞ்சம் இறங்கி வா.. இத்தன நாள் ஒங்கூட சம்சாரம் பண்ணி இருக்கா.. இந்த ஒண்ணுல விட்டுக்குடுத்துடேன்..’

    ‘ நாளப்பின்ன, அண்ணன் வீட்டுல‌ அத செய்யல,  இத செய்யலன்னு இவளே பேசுவாப்பா..’

    ‘அதொண்ணுமில்ல… எங்க பொறந்தவூட்டுல யான மேல அம்பாரிகட்டி சீர் செய்வாங்க’

    ‘ஆத்தி!!!, அப்ப  ஒன்னோட வந்த  யானய முழுங்கிட்டுதா நீ இத்தத்தண்டிக்கு ஆனியா!’

    இறுதியாக தாத்தாவின்  வார்த்தைக்காக, சம்மந்தத்துக்கு ஒத்துக் கொண்டாராம் கணபதி மாமா.

    இப்படி, ஊரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் முக்கியமான நபராக, நல்லது கெட்டதுகளில் பங்களிப்புச் செய்து கொண்டு, ஊரே தன் குடும்பமாக வாழ்ந்தார். அவரை வேற்றாளாக நினைத்துப் பார்க்க முடியாது யாராலும். ‘உபகாரம்னா, கணபதி’ என்று பேரெடுத்திருந்தார்.

    ஆயிரம் இருந்தாலும், கணபதி மாமாவுக்குத் தான் கால் விரல்கள் பற்றிக் குறையான குறை உண்டாம். தனிமையில், சின்னத் தாத்தாவிடம், நிறைய வருத்தப்பட்டிருக்கிறாராம்.

    ‘விடுடா.. எல்லாத்துக்கும் ஏதாவது காரணமிருக்கும்.. இதனால, ஒனக்கு என்ன கொறைஞ்சு போச்சு?’ என்பாராம் சின்னத் தாத்தா.

    ஆனால், காரணம் எவ்வளவு கொடூரமானது என்பதை விதியைத் தவிர யாரும் அறிந்திருக்கவில்லை.

    ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு இரவு திரும்ப வேண்டிய கணபதி மாமா, மறுநாள் ஆகியும் வராததால், மீனாட்சி அக்கா, எங்கள் வீட்டுக்கு விசாரிக்க வந்தார்.

    ‘சித்தியம்மா, சித்தப்பா ஊருக்கா?’.

    ‘இல்லடி..இங்கதான்  ஏன்?’.

    ‘இல்ல, அவரு திருச்சிக்கு ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டு வரக்காணும், சித்தப்பா கூட ஊரப்பாக்கப் போயிட்டாராக்கும்னு வந்தேன்’.

    சித்திப்பாட்டி திகைத்தாள். இப்படி நடந்ததே இல்லை. ‘வந்துருவான்டி, வேற ஏதாவது வேலையாயிருக்கும்’  சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சின்னத்தாத்தா வந்துவிட்டார்.

    விஷயம் தெரிந்து அவரும் யோசித்தார். ‘சரி, நீ போயிட்டு வா, மீனாட்சி,   வந்துடுவான்னே நினைக்கிறேன். இல்லன்னா நா சாயரட்சை கிளம்பிப் போய் விசாரிக்கிறேன்.

    அக்கா, போனதும், ‘பருவதம், எனக்கு என்னமோ பண்றது. ஒண்ணும் மனசுக்கு சரியாப்படலை. நான் சரவணப் பொய்கைப் பக்கம் போய்ட்டு வரேன்’ என்று சொல்லிவிட்டு கலங்கிய முகத்துடன்  தெருவில் இறங்கினார்.

    அதே நேரத்தில், ஒரு தெரு நாய்,  வீதியின் கோடியில் இருந்த‌ பதினாறு கால் மண்டபத்தில் உட்கார்ந்து  பேசிக்கொண்டிருந்த தெருக்காரர்களின் முன்பாக, இரைக்க, இரைக்க ஓடிவந்து ஒரு பொருளைக் கொண்டு போட்டு விட்டு ஓடியது. அது ஒரு மனிதக் கால். வலது கால். வித்தியாசமான விரல் அமைப்புகளோடு இருந்த அதில் இரு விரல்கள் இல்லை.

    கொஞ்ச நேரத்தில் தெருவே அலறியது. தாத்தா உட்பட தெருவாசிகளுக்குத் தகவல் பறந்தது. அப்பாவும், சித்தப்பாவும், மாமாவும், கண்ணீருடன் தெருவில் பதறி ஓடியது நினைவிருக்கிறது. நாய் சென்ற வழியை உத்தேசமாகத் தொடர்ந்து கொண்டு, ஒரு ஊகத்தில் ஊர் எல்லையில் இருந்த இரயில்வே லைனை அடைந்த போது அத்தனை பேருக்கும் ஒரு கணம் இதயம் நின்று தான் விட்டது. ஊருக்குப் போய்த் திரும்பிய கணபதி மாமா, இரவில், ஆளில்லா இரயில்வே லைனைக் கடக்க முற்பட்ட போது, இரயில் வந்து தூக்கியடித்திருக்கிறது.  அவர் உடலின் முன் பாகம் சிதையாமல் இரயில்வே லைனுக்குப் பக்கத்தில் கிடந்ததைத் தூக்கி வந்தார்கள்.

    பாட்டி, அம்மா, சித்தி எல்லாரும் கணபதி மாமா வீட்டுக்கு ஓடினார்கள். ஊரே கதறி அழுதது. சின்னத் தாத்தாவின் துயரம் சொல்லில் அடங்குவதாயில்லை. மீனாட்சி அக்கா..?, அதிர்ச்சியில் மயங்கி விழுந்தவர் எழவே இரண்டு நாட்கள் ஆயிற்று.  தாத்தா, கணபதி மாமாவின் மூத்த மகன் ராமுவின் பக்கத்திலேயே இருந்து எல்லாம் செய்ய வைத்தார்.

    அதன் பின், மீனாட்சி அக்கா, தன்னை ஆச்சரியப்படும் விதத்தில் தேற்றிக் கொண்டு சோகத்தில் இருந்து மீண்டது, கடைப்பொறுப்பை ஏற்றுக் கொண்டது, திருமணமாகாமல் இருந்த   ஒரு மகள் மற்றும் இரு மகன்களுக்கு ஊர்க்காரர்கள் அனைவரும் முன்னிற்க,  திருமணம் செய்து வைத்தது,  எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் வீட்டில், ஊரில் கணபதி மாமாவின் இடத்தை நிரப்பியது என எல்லாமுமே மிகச் சாதாரண வாக்கியங்களால் சொல்லிவிடுகிற விஷயமில்லை. ஒவ்வொன்றும் சரித்திரம்.

    சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது, அம்மா சொன்னாள் என்று கணபதி மாமாவின் கடையில் வெல்லம் வாங்கச் சென்றேன். அது இப்போது பல்பொருள் அங்காடியாகியிருந்தது. ராமு அண்ணா கல்லாவில் இருந்தார். நான் போனதும், நிமிர்ந்து பார்த்தவர், ‘ஆத்தி, ஆரு ரவி சித்தப்பா மகளா, என்னா ஊர மறந்து போயிட்டீக, வரப்போக இருக்க வேணாமா வீட்டுப் பொண்ணுக?’ என்று அன்பாகவும் உரிமையாகவும் விசாரித்தவர், புறப்படும் போது, வெல்லத்தோடு இரு பிஸ்கட் பாக்கெட்டுக்களையும் சேர்த்துக் கொடுத்தார்.

    ‘எதுக்குண்ணே?’ என்ற போது, ‘வச்சுக்க பாப்பா, வீட்டுல புள்ளைங்களுக்குக் கொடு, மறுக்கா எப்ப வரியோ? வாங்கிக்க!!!’ என்ற போது, என் கையில் இருந்த பிஸ்கட், க்ஷண நேரத்திற்கு ஆரஞ்சு மிட்டாயாகத் தெரிந்தது. நிமிர்ந்து பார்க்கையில், கடைச் சுவரில், சீரியல் செட்டுக்களால் சட்டமிடப்பட்ட படங்களில் கணபதி மாமாவும் மீனாட்சி அக்காவும் சிரித்தார்கள்.

     

    .

    Share
  • இங்கிலாந்திருந்து ஓரு மடல்!……(49)

     

     

    சக்தி சக்திதாசன்

     

     

     

     

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்களுடன் வசந்த கால வாசலிலே நின்று இங்கிலாந்திலிருந்து இம்மடலை வரைகிறேன்.
    காலம் யாருக்காகவும் காத்து நிற்பதில்லை . கடலிலே வீசும் காற்று எந்தத் திசையில் வீசுகிறது என்பதை ஒரு பாய்மரக் கப்பலின் மாலுமி நிர்ணயிப்பதில்லை ஆனால் அக்காற்றின் திசையிலே தனது பாய்மரத்தைக் கட்டி தான் போக எண்ணும் திசையிலே தனது கப்பலை ஓட்டிச் செல்வதுதான் அம்மாலுமியின் திறமை .
    அது போலத்தான் ஓடும் காலத்திற்கேற்ப தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அந்தத் திசையிலே தனது வாழ்க்கைப் பயணத்தைச் செலுத்திச் செல்பவர்களே ஓரளவு நிம்மதியான வாழ்வைத் தேடிக் கொள்கிறார்கள்.
    புலம்பெயர் வாழ்க்கை என்பது பலருக்கு பலவிதமான சூழல்களிலே நிகழ்ந்துள்ளது. சிலர் மீது திணிக்கப்பட்டது ,சிலர் தாமாகவே தேடி எடுத்துக் கொண்டார்கள் வேறு சிலரோ காற்றுத் திசைமாறி வீசியதால் வேண்டாத கரையொதுங்கிய படகினைப் போல ஏதோ ஒரு காரணத்தினால் புலம்பெயர் வாழ்க்கையினுள் புகுந்து கொண்டார்கள்.
    சரி இத்தனை ஆலாபனையோடு எதைச் சொல்ல வருகிறேன் எனும் கேள்வி எழுவது இயற்கை . விடயத்திற்கு வருகிறேன்.
    புலம் பெயர்ந்த நாம் எத்தனையோன் வித்தியாசமான நாடுகளிஉல் இருந்து , வித்தியாசமான கலாச்சாரங்களிலிருந்து உதித்தவர்கள். ஆனால் எம்மையெல்லாம் ஒன்றிணைப்பது நாம் வாழ்வதற்காக வந்து சேர்ந்த இப்புதிய சமுதாயத்தின் கலாச்சாரம்.
    பல நாடுகளில் இருந்து வந்த பலரும் தமது கலாச்சார விழுமியங்களைத் தம்மோடு தக்க வைத்துக் கொள்வதற்காக தத்தமது கலாச்சாரங்களைத் தாம் புகுந்த நாடுகளில் வித்தியாசமான வகைகளிலே விதைக்கிறார்கள் . இதுதான் யதார்த்தம்.
    கலாச்சார விழுமியங்களைப் பாதுகாத்து தமது முகவரிகளைத் தக்க வைத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கைகள் நியாயமானவையே ஆனால் அந்நடவடிக்கைகள் தாம் வாழும் தமது சமுதாயத்தின் யதார்த்த வாழ்விலிருந்து அவர்களைப் பாகுபடுத்தத் தொடங்கும் போது அதைத் தவிர்த்துக் கொள்ள வகுக்க வேண்டிய எல்லைகளைப் பற்றிச் சிந்திப்பது அவசியமாகிறது. .
    இதற்கான அவசியம் என்ன வந்தது ? என்னும் கேள்வி சில முனைகளில் இருந்து எழுவது சகஜமே !
    புலம் பெயர்ந்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களின் அடுத்த தலைமுறை எதிர்நோக்கும் பிரச்சனைகள் அலசி ஆராயப்பட வேண்டியது அவசியமே !
    நான் இங்கிலாந்துக்கு வந்தி இப்போது 38 ஆண்டுகள் ஆகி விட்டது. என்னோடு சமகாலத்தில் புலம் பெயர்ந்தவர்களின் கண்ணோட்டத்திலே எடுத்துப் பார்க்கும் போது எமது அடுத்த தலைமுறை தமது வாழ்க்கையின் நடுப்பகுதியை விரைவாக அணுகிக் கொண்டிருக்கிறது .
    கல்வியின் அவசியத்தை எத்தனை ஆணித்தரமாக வர்களின் மனதிலே பதிவிக்கிறோமோ அத்தனை ஆணித்தரமாக சமுதாயத்தோடு எமது கலாச்சார முகவரியை இழக்காமல் எவ்வகையில் கலக்கலாம் என்பதை எடுத்துச் சொல்லுகிறோமா? என்பது சந்தேகமே !
    என் சமகாலத் தலைமுறையைச் சேர்ந்த பலர் தாம் வாழும் இச்சமூகத்திலே சிருபான்மையாக நடக்கும் இனத்துவேஷ நிகழ்வுகளை முக்கியமாகக் கணித்து வளரும் தலைமுறையின் மனதில் தன்னம்பிக்கையின் அளவைக் குறைத்து விடுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது .
    நான் அறிந்தவர்களில் பலரின் அடுத்த தலைமுறை தமது வாழ்க்கைத் துணைகளைத் தமது சமூக எல்லைகளுக்கப்பால் தேர்ந்தெடுக்கும் ஒரு நிலை பரவலாகக் காணப்படுகிறது .
    இன்றைய இங்கிலாந்துச் சமுதாயத்தை எடுத்துக் கொண்டால் மேம்பட்ட கல்வியறிவு ஒன்று மட்டும் வாழ்வைச் சரியான முறையில் நடத்திச் செல்ல உதவும் என்று சொல்ல முடியாது.
    இந்தச் சமுதாயத்தில் இச்சமூகத்தின் பெரும்பான்மையினராகிய வெள்ளை இனத்தவருடன் சமாளவில் பணிகளுக்காக போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்லப்படும் இளையதலைமுறையின் மனதில் தாழ்வு மனப்பான்மை எனும் தன்னம்பிக்கையைச் சிதைக்கும் மனோநிலை கணப்படுமாயின் அவர்கள் வாழ்க்கை எனும் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்வதே கடினமாகிவிடும்..
    நாம் தேடிக் கொண்ட வாழ்க்கையில் வாழ்வாதரத்திற்குத் தேவையான வசதிகளை நல்கி எம் வாழ்வில் ஓரளவு வெற்றியீட்டக்கூடிய சந்தர்ப்பங்களை அளிப்பதில் இச்சமூகத்தின் பொதுவான பெரும்பான்மை இனத்தவரில் பெரும்பான்மையோரின் ஆதரவு கிட்டிய உண்மையையும் வளரும் சமூகத்தின் இளமைப்பிராயங்களிலே எடுத்துச் சொல்வது பெரியோரின் கடமையாகிறது .
    கசப்பான உண்மை ஒன்று உண்டெனில் அது பல புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் தாம் நிலையாக வாழும் இப்புலம்பெயர் நாடு வாடகை வீடு என்றும் தாம் பிறந்த மண்ணே தமது சொந்த வீடு எனும் மனப்பான்மையும் மேலோங்கி இருக்கிறது என்பதே .
    இத்தகிய மனப்பான்மையின் விளக்கத்தை நான் எமது கலாச்சாரத்தைக் கைவிட்டு அந்நியக் கலாச்சாரத்தை பின்பற்றுவதை ஆத்ஹ்ஹ்ஹரிக்கிறேன் எனும் பிழையான விளக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டாம் .
    கலாச்சாரத்தின் அடையாளங்களை நிச்சயம் காத்துக் கொள்ல வேண்டும். ஆனால் அக்கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு நாம் அடுத்தவருடன் பழகும் பண்பின் தன்மையில் தங்கியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகிறது .
    அடையாளத்தைத் தொலைத்து விடாமல் , நாம் வாழும் சமுதாயத்தின் வாழ்வோட்டத்தில் எஏஎம்மை இணைத்துக் கொண்டு புலம்பெயர் நாட்டின் வளர்ச்சியில் நாம் முக்கிய பங்கு வகிக்கிறோம் ந்ன்பதில் பெருமிதம் கொண்டு வாழ்வதே ,
    ” தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா ” எனும் வாசகத்தை வாழ வைக்கும் .
    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    Share
  • தொல்லை காட்சி – பூஜா – சுருளி ராஜன்- வாணி ஜெயராம்

    மோகன் குமார்
    சீரியல் பக்கம்: கனா காணும் காலங்கள் – கல்லூரியின் கதை
    எந்த சீரியலும் பார்ப்பதில்லை. ஆனால் சேனல் மாற்றும் போது சில அழகான பெண்மணிகள் கண்ணில் பட்டால், அங்கேயே சற்று இளைப்பாறுவது உண்டு. அப்படி தான் கனா காணும் காலங்கள் – கல்லூரியின் கதையில் அவ்வப்போது லேண்ட் ஆகிறேன்.
    பூஜா என்ற டிவி நடிகை இதில் டீச்சர் ஆக வருகிறார். எந்த பூஜாவா? ஆமாங்க இந்த பூஜாக்கள் தொல்லை தாங்க முடியல.. ஏகப்பட்ட பேரு இருக்காங்க
    ஜோடி நம்பர் சீசன் ஒன்னில் டைட்டில் ஜெயிச்சார் ; அப்புறம் வேற சில சீரியல் கூட நடிச்சார் போல ( என் மாமியாரை கேட்டால் ஒன்று விடாம அவர் நடிச்ச எல்லா சீரியல் பேரும் சொல்லுவாங்க )
    இவருக்கு கல்யாணம் ஆன பின், ஒரேயடியாக கல்லூரி ப்ரபசர் ஆக்கிட்டாங்க. ம் கொடுத்து வச்ச பசங்க !
    மறக்க முடியுமா- சுருளி ராஜன்
    கேப்டன் நியூஸ் என்று ஒரு புதிய சானல் வருகிறது. (நம்ம கேப்டனின் டிவி தான். தேர்தல் சமயத்தில் பயன்படும் என துவங்கி உள்ளார் போல..)
    அதில் ” மறக்க முடியுமா” என ஒரு நிகழ்ச்சி. மறைந்த நடிகர்கள், பாடகர்கள் பற்றி நினைவு கூர்கிறார்கள்.
    நான் பார்த்த வாரம் – சுருளி ராஜன் பற்றி பேசினார்கள். 15 வருடம் தமிழ் திரை உலகை கலக்கிய சுருளி – ஒரு காலத்தில் கமல், ரஜினி, சிவாஜி என அனைத்து டாப் ஹீரோக்கள் படத்திலும் தவறாது இடம் பிடித்துள்ளார்.
    1980- ல் தனது 40 வது வயதில் குடி பழக்கத்தால் அவர் இறந்துள்ளார். அந்த வருடம் மட்டும் அவர் நடித்த படங்கள் 50 ரிலீஸ் ஆனதாம். 82 ஆம் ஆண்டு வரை அவரின் பல படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டே இருந்ததாம் !
    இப்படி காரியரில் பீக்கில் இருக்கும் போது இறக்கும் நடிகர்கள் அரிது தான் என நினைக்கிறேன் ! அடுத்த வாரம் பின்னணி பாடகி ஸ்வர்ணலதா பற்றி என்று முன்னோட்டம் காட்டினார்கள். முடிந்தால் பார்க்கணும் !
    பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி – 1
    CNN IBN -ல் சாதித்த இந்திய பெண்களுக்கு பரிசுகள் தந்தனர் 
    ஐஸ்வரியா ராய் மற்றும் கெளதம் கம்பீர் சிறப்பு விருந்தினர்களாக அனைவருக்கும் பரிசுகள் தந்து உரையாடினர்
    கார்த்திகா என்கிற தமிழ் பெண் விருது கிடைத்து பேசும் போது ” நான் ஏழை தான். ஏழைகள் சிந்தனை சின்ன அளவில் தான் இருக்கும் என்கிறார்கள். அது தவறு. இந்த நாட்டின் பிரதமர் ஆகவேண்டும் என்பது என் கனவு.  மனிதர்களை தயவு செய்து அவர்கள் வைத்துள்ள பணத்தை வைத்தோ, அவர்களது பாலினத்தை  ( Gender  ) வைத்தோ எடை போடாதீர்கள்” என கம்பீரமாக பேசினாள். ” உன் அம்மாவிடம் ஏதேனும் பேசணுமா ? ” என ஐஸ்வரியா ராய் கேட்க ” அம்மா – உன்னால் தான் நான் படிக்க முடிந்தது. என்னை வீட்டில் வைக்காமல் படிக்க வைக்க அனுப்பிய முடிவை நீ தான் எடுத்தாய். அதற்கு நன்றி. அதனால் தான் நான் இன்று நிற்கிறேன் ” என்று தமிழில் பேசி அசத்தினாள். 

    நெகிழ்வான  நிகழ்ச்சியாக இது இருந்தது 
    பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி – 2
    மெகா டிவி என்றொரு தொலைக்காட்சி இருக்கிறது (அப்படியா என்றெல்லாம் கேட்க கூடாது ) முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கே. வி.  தங்கபாலு நிர்வகிக்கும் இந்த டிவி யில் பெண்கள் தினத்தை முன்னிட்டு 5 ஆண்டுகளாக சாதனை பெண்களுக்கு விருது தருகிறார்களாம்.
    இவ்வருடன் வாணி ஜெயராம் அவர்களுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது  தர, அவரது அற்புத பாடல்களில் பலவற்றை காட்டினார்கள். அவர் இந்த 75 வயதில் மிக அருமையாக சில பாடல்களை பாடி காட்டினார். பாடல் வரிகளை தப்பு தப்பாக பாடும் இளம் தலைமுறை போலன்றி முப்பதுக்கும் மேற்பட்ட பாட்டுகளை மனப்பாடமாய் அடுத்தடுத்து பாடியது ஆச்சரிய பட வைத்தது
    இந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததில்,  இதை வாசிக்கும் – உங்களுக்கு ஒரு கஷ்டமிருக்கு.. .. வாணி ஜெயராம் பாடல்கள் பற்றி மட்டுமே ஒரு தனி பதிவு எழுத ஆசை வந்துடுச்சு  (ஒடுங்க.. ஒடுங்க.. அது உங்களை நோக்கி தான் வருது )

    டிவியில் வரும் சினிமா விளம்பரங்கள் 
    என்ன ஆச்சு தமிழ் சினிமாவுக்கு? ஒவ்வொரு சானலிலும் பத்துக்கும் மேற்பட்ட சினிமா விளம்பரங்கள் காட்டிய வண்ணம் உள்ளனர்.  மதில் மேல் பூனை, ஒன்பதுல குரு உள்ளிட்ட படங்கள் மிக அதிக முறை  காட்டினாலும், இன்னும் பெயர் நினைவில் வைத்து கொள்ள முடியாத எத்தனையோ படங்களும் கூட வருகிறது.

    டிரைலர் பார்க்கவே கண்ணை கட்டுதே … நம்ம உண்மை தமிழன் மற்றும் கேபிள் போன்றோர் எப்படி தான் இந்த படங்களை பார்க்கிறார்களோ.. தமிழ் சினிமா இயக்குனர்கள் இவர்களுக்கு ரொம்பவே  கடமை பட்டுள்ளனர் !
    பிளாஷ் பேக் : எதிரொலி (வாசகர் கடிதம்)

    தூர்தர்ஷனில் வாசகர் எழுதும் கடிதங்களை ஒரு பெண்மணி வாசிக்க, நிலைய இயக்குனர் அதற்கெல்லாம் பதில் சொல்லுவார்.. குவிந்து கிடக்கும் கடிதங்களை பார்த்தால் பிரமிப்பா  இருக்கும். குறைஞ்சது ஆயிரம் லெட்டராவது கிடக்கும். ஏற்கனவே அவற்றை வாசித்து விட்டு, தங்களால் எதற்கு பதில் சொல்ல முடியுமோ அதை மட்டுமே அந்த பெண்மணி  வாசிப்பார். பலவும் ” அருமை; அற்புதம்; ” என்று இருக்கும். அரிதாய் சில சந்தேகங்கள் வர, அப்போ மட்டும் முகம் முழுக்க மேக் அப் போட்ட நம்ம நிலைய இயக்குனர் பதில் சொல்றேன் என அறுத்து தள்ளுவார். 

    டிவி வந்த காலத்தில்  தூர்தர்ஷனில் வரும் எல்லா நிகழ்சிகளையும் பார்த்தாக வேண்டிய கட்டாயத்துக்கு பார்த்த நிகழ்ச்சி.. இன்னும் வருதா என தெரியலை !
    சூப்பர் சிங்கர் கார்னர்
    கடந்த வாரம் Zonal லெவலில் பெஸ்ட் பாடகர்களாக வந்தவர்கள்  பாடினார்கள். உண்மையில் அந்த கேட்டகரியில் பலரும் செம அட்டகாசமாய் பாடினார்கள் என்று தான் சொல்லணும்.
    ஐந்து ஜட்ஜ்கள் அமர்ந்து தங்களுக்குள் பேசியவாறும், சிரித்தவாறும் கேட்கிறார்கள். நன்கு பாடுகிறார் என நாம் நினைக்கும் போதே தேவன் ரொம்ப சீக்கிரம் ரெட் பட்டனை அழுத்துகிறார். அவரை பார்த்துட்டு அடுத்த நொடி அடுத்து சுபா அல்லது சௌமியா ரெட் அழுத்திடுறாங்க. ஏன் செலெக்ட் ஆகலை என்பதற்கு காரணம் சொல்றோம் என நல்லா டிஸ்கரேஜ் பண்ணி அனுப்பிடுறாங்க.
    பாடகர்களுக்கு பயிற்சி தருவது இருக்கட்டும்….விஜய் டிவி இந்த ஜட்ஜ்களுக்கு மனிதர்களிடம் எப்படி பேசுவது என கொஞ்சம் டிரைனிங் தந்தால் தேவலை !
    படத்துக்கு நன்றி
    Share
  • அதிசய லிங்கங்கள்!….

    விசாலம்

    பெங்கலூரு அருகில் சுமார் அறுபது கி மீ தூரத்தில் சிவகங்கா என்ற கிராமம் உள்ளது அங்கு நாம் பார்க்கப்போகும் லிங்கம் மலையடிவாரத்தில் ஒரு குகைக்குள் சுமார் ஐந்து அடி உயரத்துடன் காணப்படுகிறது இந்த லிங்கரூபத்தின் பெயர் கவி கங்காதீஸ்வரர் இங்கு பூஜை செய்ய வருபவர் லிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்கிறார் அந்த அபிஷேகம் முடிந்தவுடன் அந்த நெய் வெண்ணெயாக மாறிவிடுகிறது அந்த வெண்ணெயைப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்

    கேரளாவில் திருச்சூரில் இருக்கும் வடக்குநாதர் கோயிலிலும் சிவலிங்கம் இருக்கிறது பெயரும் வடக்குநாதர் தான் இங்கு பல்லாண்டுகளாக நெய் அபிஷேகம் தொடர்ந்து நடந்து வருகிறது இதனால் லிங்கமே தெரியாமல் சுமார் நாலு அடி உயரத்திற்கு லிங்கம் வளர்ந்து விட்டது இதில் இருக்கும் அதிசயம் என்னவென்றால் எத்தனை உஷ்ணமாக இருந்தாலும் .நல்ல கோடைக்காலத்திலும் அந்த நெய் உருகாமல் அமர்நாத் லிங்கம் போல் காட்சியளிக்கிறது

    தஞ்சாவூர் அருகே குடவாசல் என்ற இடம் .அதன் அருகில் நாலூர் திருமயானம் என்ற இடத்தில் ஒரு சுயம்பு லிங்கம் உள்ளது இதன் மேற்பகுதியைப்பார்த்தால் பலாப்பழத்தின் மேல் பாகம் போன்று முள்ளு முள்ளாக உள்ளது இந்த லிங்கத்தின் பெயர் பிலாச வனேஸ்வரர் அமர்நாத் லிங்கம் பனி லிங்கமாக காட்சியளிக்கிறது இது சந்திரனைப்போலவே பௌர்ணமியின் போது முழுமையாகவும் பின் அமாவாசை வர வர குறைந்து மறைகிறது பின் திரும்பவும் அடுத்த பௌர்ணமியில் முழுசந்திரன் போல் பிரகாசிக்கிறதாம் காசியில் அனுமன் காட் என்ற இடத்திற்குப்போனால் சிவபெருமான் அம்பிகை மடியில் சயனித்திருக்கும் காட்சியைக் காணலாம் இந்தக்கோயிலின் பெயர் “காமகோடீஸ்வரர் ” கோயில்

    இதே போல் சிவன் விஷ்ணு போல் பள்ளிக்கொண்ட க் காட்சியை ஆந்திராவில் சுருட்டப்பள்ளி என்ற இடத்தில் காணமுடிகிறது மஹாராஷ்டிராவில் எல்லோரா குகை அருகே “குஸ்மேஸம் “என்ற ஊரில் இருக்கும் சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது அது எப்படி கெட்டியாக உடையாமல் இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது நீடூரில் அருள் புரியும் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது இங்கு இருக்கும் சிவபெருமானின் பெயர் அருட்சோமநாதர் இந்த சுவாமியை ஒரு நண்டு தினமும் வணங்கி வந்ததாம்

    திருவக்கரை வக்ர காளியம்மன் கோயிலி,ல் இருக்கும் சிவபெருமான் அருள் மிகு சந்திரமௌலீஸ்வரர் . இவர் மும்முகம் கொண்ட லிங்கமாகக் காட்சி அளிக்கிறார் .கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் ,வடக்கு முகம் வாமதேவ முகம் தெற்கு முகம் அகோர மூர்த்தியாக அருள் புரிகிறார் , திருநல்லூரில் சிவலிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் இருக்கிறது பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்துக்கொண்டு

    இந்தச்சிவலிங்கத்தைப்பூஜித்தாராம் இங்கு இருக்கும் சிவபெருமானின் பெயர் பஞ்சவர்ணேஸ்வரர் காக்கும் கடவுள் வீஷ்னுவும் சிவனைப்பூஜித்த இடம் ஒன்று உண்டு அதுவே தலைச்சங்காடு . இங்கு திருமால் சிவபெருமானை வழிபட்டு பாஞ்சஜன்ய சங்கைப்பெற்றார் ,இதனால் ஈசன் சங்கு வடிவில் மூலவராக அருள் புரிகிறார் பெயரும் சங்காரேண்யஸ்வரர் .

    தேனி மாவட்டத்தில சின்னமனூர் என்ற கிராமத்தில் சுயம்புவாக இருக்கும் சிவலிங்கம் அருள்மிகு புலாந்தீஸ்வரர் , அந்த லிங்கம் பார்வையாளரின் உயர்த்துக்குத்தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொள்கிறார் அந்த லிங்கத்தைத் தழுவிக்கொண்ட ராஜசிங்க பாண்டியனின் மார்பு கவசத்தின் அடையாளம் அந்த லிங்கத்தின் மேல் தெரிகிறது தவிர இங்கிருக்கும் அம்பாள் சிவகாமிக்கு முகத்தில் எப்போதும் வியர்க்குமாம் இதேபோல் இன்னும் பல வியக்குமளவுக்கு நம் நாட்டில் கோயில்கள் மண்டிக்கிடக்கின்றன அவைகளில் சில எண்ணெய் விட்டு விளக்கேற்ற க்கூட வசதியில்லாமல் இருண்டு கிடக்கின்றன பல புது கோயில்கள் கட்டுவதைக்குறைத்துக்கொண்டு இந்த பழமையான கோயில்களை நாம் பாதுகாப்பது நமது கடமையல்லவா?

     

    Share
  • 2013 மார்ச் மாதத் தொடுவானில் அந்திம நேரம் கண்ணுக்கு நேரே தெரியும் ஒளிவீச்சு வால்மீன்

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=OZlenAvqLCI

    Comet Pan-STARRS (splash)

    A new Science Cast video explores the possibility that Comet Pan-STARRS
    will be visible to the naked eye in early March.

    வால்மீனின் வண்டுத் தலையில்
    பூர்வப் பொருள் களஞ்சியம் !
    பரிதிக்கு அருகில் வாலும்
    அனுமார் வாலைப் போல் நீளும் !
    கூந்தல் கோணிப் போகும் !
    சூரியனைச் சுற்றி வரும்போது
    முகம் காட்டி வணங்கும்
    வாலைப் பின்னே தள்ளி !
    வயிற்றுக்குள்
    உயிரினப் பனிக்கூறுகள் !
    வாயு வைரக்கல்
    வானத்தில் விந்தை ஒளிகாட்டும் !
    உயிர்க் குஞ்சுகள் உதிக்க
    வையகத்தின் மீது
    வாரி வாரிக் கொட்டும்
    நீர் வெள்ளம்
    மூலக் கூறுகளை !

    +++++++++++++

    வால்மீனின் சுற்றும் வீதிகளில் வண்டித்தொடர் போல் பிரம்மாண்ட வால் நீட்சியில் வாயுத் தூள்கள் நீராவி மின்னிகள் வெளியேறும் ! மங்கும் பரிதிகட்குப் புது எரிசக்தி அளித்து ஒளியூட்டும் உலகங்களுக் கெல்லாம் !

    ஜேம்ஸ் தாம்ஸன் “The Seasons” (1730)

    “உயிரினம் எப்படி ஆரம்பமானது என்பதை நாம் அறிய முடிய வில்லை என்று முதலில் ஒப்புக் கொள்வோம். பூர்வாங்க உலகில் எளிய ஆர்கானிக் மூலக்கூறுகள் தோன்ற பல்வேறு இயக்க முறைகள் ஒருங்கிணைந்து பாதை வகுத்தன என்று பொதுவாக நம்பப் படுகிறது ! அந்த மூலக்கூறுகள் இணைந்து மீண்டும் சிக்கலான இரசாயன அமைப்புக் கலவைகள் உண்டாகி, முடிவிலே உயிர் மூலவி என்று சொல்லப்படும் ஒரு பிறவி உருவானது ! இப்படி மேற்போக்கில் பொதுவாகச் சொல்லும் ஒரு விளக்கத்தில் எவரொவரும் திருப்தி அடைய முடியாது.”

    மில்லர் & ஆர்ஜெல் (Miller & Orgel in their Book “The Origin of Life on Earth -1974)

    “நாம் மட்டும்தான் தனியாக (பிரபஞ்சத்தில்) உள்ளோமா ? என்று கேட்டால் அதற்கு எனது எளிய, சிறிய பதில் ‘இல்லை’ என்பதே ! எனது சிந்தனை நோக்குகள் மூன்று : முதலாவது விண்வெளிப் புறக்கோள்களில் வேறு உயிரினங்கள் இல்லை என்பது. இரண்டாவது ஓரளவு நிச்சமின்றி ஏதோ இருக்கலாம் என்பது. ஆனால் அங்கிருந்து விண்வெளியில் நமக்குச் சமிக்கை அனுப்புகிறது என்று நம்பாத நிலை. நான் விரும்பும் மூன்றாவது பூர்வாங்க உயிரினம் (Primitive Life) பொதுவாகப் பரவி இருக்கிறது. ஆனால் அறிவு விருத்தியடைந்த ஓர் உயிர்ப்பிறவி (Intelligent Life) வசிப்பது என்பது அபூர்வம்.”

    ஸ்டீஃபன் ஹாக்கிங் (நாசாவின் 50 ஆண்டு நிறைவு விழா உரை)

    “விண்வெளி வேலி விளிம்பைத் தள்ளி அப்பால் ஆராய்ந்தால் நாம் அவற்றைக் (உயிரினத்தைக்) காண முடியும் ! நம்மைப் போல் அவை இல்லாமல் போகலாம்.”

    – மைக்கேல் ஃபோர்மன்

    “ஆனால் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் பிற கோள்களில் உயிரினம் இருக்காது என்பதை நம்புவது எனக்குக் கடினமாக உள்ளது. நம்மைப் போன்ற உயிரினம் வேறு கோள்களில் நிச்சயம் வசிக்க வேண்டும்”

    – டகோவா டோய், ஜப்பானிய விமானி

    “நான் உறுதியாக நம்புகிறேன், நாம் (உயிரினத்தை) காணப் போகிறோம், என்ன வென்று விளக்க முடியாத ஒன்றை.”

    – கிரிகரி ஜான்ஸன்.

    “ஐரோப்பியக் கடற்பயணத் தீரர்கள் கடந்த காலத்தில் பயணத்தைத் துவக்குவதற்கு முன்பு கடல் தாண்டிச் சென்றால் என்ன காணப் போகிறோம் என்று அறியாமல்தான் புறப்பட்டார். அண்டவெளியில் பயணம் செய்யும் போது நாமும் என்ன காண்போம் என்பதை அறிய மாட்டோம். அந்தச் அறியாமைதான் நம் பயணத்துக்கு மகத்துவம் அளிக்கிறது. நான் நிச்சயம் நம்புகிறேன். ஒருநாள் நாம் காணப் போகிறோம், நமக்குப் புரியாத ஒன்றை !”

    – டாமினிக் கோரி, எண்டவர் குழுத் தளபதி

    “வேறு அண்டவெளிக் கோள் உயிரினத்துடன் (Extraterrestrial Life) புவி மனிதர் தொடர்பு கொள்ள வெகுகாலம் ஆகலாம் ! துரதிட்டவசமாக நமது விண்வெளிப் பயணங்கள் எல்லாம் இன்னும் குழந்தை நடைப் பயிற்சியில்தான் உள்ளன!”

    – ரிச்சர்டு லின்னென்.

    2013 ஆண்டின் பூமித் தொடுவானில் தெரியும் முதல் ஒளிமிக்க வால்மீன்.

    விண்மீன் பான்-ஸ்டார் [Pan-STARRS] 2013 மார்ச் மாதம் 8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சூரியன் அத்தமனத் தருவாயில் மேற்குத் தொடும் வானில் பைனாகுலர் இல்லாமலே கண்களால் நேரே காணலாம் என்று விஞ்ஞானத் தகவல் வலையிதழ்கள் அறிவித்து வருகின்றன. வட கோளப் பகுதில் [Western Hemisphere] தெளிவாகத் தெரியும் இந்த வால்மீன் தென்கோளப் பகுதியில் தொலைநோக்கி மூலமே காணப்படும் என்பது அறியப் படுகிறது. இம்மாதிரி நேராகத் தெரியும் வால்மீன்கள் பத்தாண்டுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வரும் ஜெட் உந்துசக்தி ஆய்வகம் [Jet Propulsion Laboratory] கூறுகிறது. அந்தி மயங்கும் வேளையில் 15 நிமிடங்களுக்குப் பிறகு கண்ணுக்குத் தெரியும். மார்ச் 15 ஆம் தேதிக்குப் பிறகு வால்மீன் சூரிய வெளிச்சத்தில் எதிரொளியால் தெரியாமல் போகும்.

    தொடுவானில் வால்மீனை நோக்க வழிமுறைகள் :

    1. சூரியன் அத்தமிக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும். பைனாகுலரோ, தொலை நோக்கியோ பயன்படுத்தி பரிதியை நேராகப் பார்க்கக் கூடாது. பார்த்தால் கண்கள் எரிந்து போய்ப் பழுதடையலாம்.

    2. வால்மீன் பான் -ஸ்டார் மேற்புறத் தொடுவானில் அந்திமப் பொழுதில் தெரியும்.

    3. அந்திவானம் வெளிச்சமாக உள்ள போது வால்மீன் காணப் படாது.

    4. வானம் சூழ்வெளித் தூசியால் மங்கிய நிலையில் இருந்தால் வால்மீன் நோக்கப் பைனாகுலர் பயன்படுத்தலாம்.

    பிரபஞ்சத்தில் பூர்வாங்க உயிரினச் செல்கள் எப்படித் தோன்றின ?

    பூர்வாங்க பூமியிலே எப்படி உயிரினம் ஆரம்பமானது என்றோ அல்லது பிரபஞ்சத்தில் வேறு எங்காவது உயிரினம் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது என்றோ உறுதியாக நாம் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம் ! எங்கே முதலில் உயிரின மூலாதார உற்பத்தி ஆரம்பமானது என்பதற்குப் பல்வேறு கோட்பாடுகள் இருக்கின்றன. வான உயிரியல் (Astrobiology) விஞ்ஞானம் என்பது பிரபஞ்சத்தில் உயிரினத்தைப் பற்றிய கல்வி. அந்தப் பல்துறை அடைப்படைப் புது விஞ்ஞானம் உயிரினத்தின் மூலாதாரம், தோற்றம், பங்களிப்பு, முடிவு ஆகியவற்றையும் எங்கே அந்த உயிரினம் இருக்கலாம் என்றும் புகட்டுகிறது. பூமியிலே எப்படி உயிரினங்கள் ஆரம்பத்தில் உருவாயின என்று உளவிட விஞ்ஞானத்தின் பல்வேறு பகுதிகளில் ஒருவர் ஆழ்ந்து ஈடுபட வேண்டும். அந்த சிக்கலான கேள்விக்கு விடைகாணப் பௌதிகம், இரசாயனம், உயிரியல், வானியல் (Physics, Organic & Inorganic Chemistry, Biology & Astronomy) ஆகிய விஞ்ஞானப் பிரிவுகள் தேவைப்படுகின்றன.

    கடந்த 50 ஆண்டுகளில் விஞ்ஞானிகள் புரிந்த மூலாதார விண்வெளிக் கண்டுபிடிப்புக்கள் மூலம் பூமி உண்டான போது ஆரம்ப காலங்களில் “தன்னினம் பெருக்கும் சிக்கலான செல்கள்” (Self-Replicating Complex Cells) உதித்த போக்கு முறைகள் தெளிவாகின்றன ! உயிரின மூலாதாரக் குறிப்புக்கு அண்டக்கோளின் ஆரம்பகாலச் சூழ்வெளி அறியப் படவேண்டும். துரதட்டவசமாக பூகோளத்தின் துவக்கத்தில் உயிரினத் தோற்றத்துக்கு உதவும் சூழ்வெளியின் வாயுக்கள், தள உஷ்ணம், வாயு அழுத்தம், தள இரசாயனம், காற்றில் நீர்மை (Moisture), கடல்நீரின் pH அளவு (pH —> 0-14 Scale Measurement of Water Acidity/Alkalinity) போன்ற சான்றுகள் எவையும் உறுதியாக அறியப்பட வில்லை. உயிரினத் தோற்ற முதலில் உளவுகள் பூர்வப் பாறைகளில் உள்ள கார்பன், ஆக்ஸிஜன் கலவையைக் காட்டினாலும் தர்க்கத்தில் சிக்கி அவை நிச்சயம் ஆகவில்லை. ஆயினும் பூமி தோன்றிய முதல் பில்லியன் ஆண்டுகளில் உயிரினம் உதிக்க ஆரம்பித்தது என்பதில் விஞ்ஞானிகளிடையே உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.

    Comet's Parts

    உயிரின இரசாயனத்தின் (Biochemistry) இரு மகத்தான மைல்கற்கள்

    உயிரினம் என்பது இரசாயன இயக்க விளைவு (Chemical Phenomenon) என்பதை நாம் அறிவோம். பூமியின் உயிரின முளைப்பு அடிப்படைக்குப் “பிறவித் தாதுக்களான டியென்னே & ஆரென்னே” (Genetic Materials DNA & RNA) ஆகிய இரண்டும் மற்றும் புரோட்டின், (Protein & Membrane Components) (Biological Membrane -A Continuous Layer of Fat Molecules that encloses a Cell] ஆகியவையும் காரணமானவை. டியென்னே என்பது மூன்று மூலக்கூட்டுகள் (Nucleic Acid Bases +Sugars +Phosphates) கொண்ட “இரட்டை நெளிவு” (Double Helix). புரோட்டின் அமினோ அமிலத்தில் ஆனது.

    1950 ஆண்டுகளில் அமெரிக்க இரசாயன விஞ்ஞானிகள் ஹரால்டு யுரே & ஸ்டான்லி மில்லர் [Harold Urey (1893-1981) & Stanley Miller (1930-)] ஆகியோர் இருவரும் எப்படி உயிரின அமைப்பு மூலக்கூறு அமினோ அமிலம் (Amino Acid —> Water-soluble Organic Molecule with Carbon, Oxygen, Hydrogen & Nitrogen containing both Amino Group NH2 & COOH) பூர்வாங்கப் பூமியின் புழுதிக் கடலில் முதலில் தோன்றியிருக்கும் என்னும் முக்கியமான சோதனையை ஆய்வுக் கூடத்தில் செய்து காட்டினார்கள் !

    Fig 8 Comets from Oort Cloud Region

    விஞ்ஞான உளவுக்கு வால்மீன்கள் ஏன் முக்கியமானவை ?

    சிக்கலான ஆர்கானிக் மூலக்கூறுகள் விண்பாறைகளிலும், வால்மீன்களிலும் (Asteroids & Comets) இருப்பதை விஞ்ஞானிகள் பல சோதனைகள் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். சில விஞ்ஞானிகள் பரிதியைச் சுற்றிவந்த ஆரம்பகால வால்மீன்கள் வழி தவறிப் பூமியின் சுற்று வீதியில் புகுந்து வீழ்ந்திருக்கலாம் என்றும் அப்போது அவற்றிலிருந்து ஏராளமான ஆர்கானிக் இரசாயனக் கலவைகள் பூமியில் பொழிந்திருக்கலாம் என்றும் கருதுகிறார். அத்துடன் பூமி உருவான பிறகு அதன் மீது ஏராளமான விண்கற்கள், வால்மீன்களின் தாக்குதல் இருந்ததாகச் சான்றுகள் மூலம் அறிய வருகிறது. அப்போதுதான் வெளிக்கோள் ஒன்று பூமியைத் தாக்கி நிலவு உருவானது. வால்மீன்கள் பேரளவு நீர் வெள்ளத்தைப் பூமியில் கொட்டியதுடன், அதன் ஆர்கானிக் கூட்டுகளையும் இறக்கின ! விண்கற்களிலும் வால்மீன்களிலும் சிக்கலான “அமினோ அமிலம்” போன்ற இரசாயன மூலக்கூறுகள் இருக்கின்றன. 1969 இல் ஆஸ்திரேலியாவில் விழுந்த மர்சிஸன் விண்கல்லில் (Murchison Meteorite) கார்பன் கூட்டுப் பொருளும் இரண்டுவித அமினோ அமிலமும் (A Carbonaceous Chondrite & Two Types of Amino Acids) இருந்தது தெரியவந்தன. அப்படி விண்கற்களும், வால்மீன் சிதைவுகளும் விழுந்து பூமியில் சிந்திய அமிலோ அமிலம் போன்ற உயிராக்கப் புரோட்டின் மூலக்கூறுகள் பூதளத்திலும் கடல் நீரிலும் விழுந்து உயிரினச் செல்களை உற்பத்தி செய்திருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது. மேலும் சிக்கலான ஆர்கானிக் மூலக்கூறுகள் கனத்த மோதுதலில் சிதைந்து போக மாட்டா என்றும் பூமியில் செய்த சோதனைகளில் நிரூபிக்கப் பட்டிருக்கின்றன !

    Panspermia

     

    4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு சூரிய மண்டலம் உண்டான அதே ஆரம்ப காலங்களில் வால்மீன்களும் தோன்றி யிருக்கலாம் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் பரிதியும் அதன் கோள்களும் பன்முறை மாறியது போல் வால்மீன்கள் அடுத்தடுத்து மாற வில்லை ! காரணம் வால்மீன்கள் சிறிய வடிவம் கொண்டவை. கோள்களில் ஏற்பட்ட பேரளவு பூகம்பங்கள் போல் வால்மீனில் நிகழ்ந்து கொந்தளிப்புகள் நேர வாய்ப்புக்கள் இல்லை ! அவற்றில் கதிரியக்க உலோகங்கள் எவையும் தங்கி வெப்பம் ஊட்டி மாற்றியதாகவும் தெரியவில்லை.

    பிற அண்டங்கள் பொழிந்து பூகோளத்தில் உயிரினத் தோற்றம்

    உயிரனப் பிறப்புக்கும் விருத்திக்கும் வேண்டிய மூலாதாரங்கள்:

    1. ஏராளமான, நிலையான நீர் வளம்

    2. கூடாமலும் குன்றாமலும் மிதமான தொடர்ந்து கட்டுப்பாடாகும் எரிசக்தி (வெப்பம்)

    3. இரசாயன மூலக்கூறுகள் /ஆர்கானிக் மூலக்கூட்டுகள்

    4. உயிரனப் பெருக்கத்திற்கு ஏற்ற வினையூட்டி. (A Reproductive Mechanism)

    உயிரின இயக்க வாழ்வுக்கு முக்கியமான முறைகள்

    1. வளர்ச்சிக்கும் இயக்கத்துக்கும் வேண்டிய உயிரினத்தின் இரசாயன வினையியல் (Metabolism)

    2. சந்ததி விருத்திக்கு வேண்டிய உயிரினப் புணரியல் (Reproductive Life Process)

    3. உஷ்ணம், அழுத்தம், வெப்பக் கட்டுப்பாடு போன்ற சூழ்வெளி வாயு இயக்கவியல் (Evolution through Interaction with the Environment) [தொடரும்]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – Did Comets Bring Life to Earth ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? (April 2008)

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world (1998)

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)

    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 The Origin of Earth (www.moorlandschool.co.uk/earth/earthorigin.htm)

    20 Structure & Composition of Earth’s Atmosphere (http//:ess.geology.ufl.edu/)

    21 History of Earth (www.mansfield.ohio-state.edu/) (March 31 2007)

    22 Life in the Universe -What is Astrobiology ? By : Oratie P. Ehrenfreund.

    23 The Beginning of Life & Amphiphilic Molecules By Janet Woo (August 2004)

    24 NASA Endeavour Astronauts Debate Extraterrestrial Life By : Josh Hill, Rebecca Sato & Casey Kazan (www.dailygalaxy.com/) (May 14, 2008)

    25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40207071&format=html

    26 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301043&format=html

    27 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507071&format=html

    28 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507151&format=html

    29 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601202&format=html

    30 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601272&format=html

    31 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703011&format=html

    32 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703083&format=html

    33 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703151&format=html

    34 http://www.astronomy.com/en/News-Observing/News/2013/02/Get%20ready%20for%20Comet%20PANSTARRS%202013s%20first%20naked-eye%20comet.aspx .

    Get Ready for Comet PANSTARRS — 2013’s First Naked-Eye Comet,

    Comet PANSTARRS promises to be the brightest comet of in six years when it peaks in March.

    By Richard Talcott — [February 26, 2013]

    35 NASA Science News : A Possible Naked-eye Comet in March, 2013 [February 6, 2013]

    36 A Naked-Eye Comet Invites Itself to the March Sky, 2013 [March 8, 2013]

    37. Astronomy Magazine : http://lightyears.blogs.cnn.com/2013/03/08/rare-naked-eye-comet-now-visible/?hpt=hp_t2 [March 8, 2013]

    ******************

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) [March 9, 2013]

    http://jayabarathan.wordpress.com/

    YouTube – Videos from this email
    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    அனுபவம் அனுபவம் அனுபவம்.. உலகியல் வாழ்க்கையில் இந்த அனுபவம் ஒன்றே உண்மையான கல்வி ஞானம். எத்தனைதான் டாக்டரேட்டுகள் பட்டங்களை தன் பின்னே வைத்துக்கொண்டாலும் அனுபவம் அறியாத அத்தனை பட்டங்களும் விழலுக்கு விழைத்த நீரே. அதனால்தான் மருத்துவப்படிப்பில் அந்தக் காலத்திலிருந்தே ஒரு வருடம் கட்டாய சேவையை படிப்பில் புகுத்தினார்கள். படிக்கும்போது ஏற்படும் அனுபவம் என்பது வேறு. இந்தவகை அனுபவங்கள் பச்சைம்ரத்தாணி போல மனத்திலேயே தங்கிவிடும். பின்னாளில் பலவகை இக்கட்டுகளிலிருந்து காக்கும் அருமருந்து கூட இந்த வகை அனுபவங்களே.  அப்படிப்பட்ட அனுபவக் கட்டுரை ஒன்றை இந்த வாரம் வல்லமையில் பார்த்தேன். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    ஆராய்ச்சி மாணவனாக இருந்தால் அடிமை வேலை செய்ய வேண்டும் என்பது பல்கலைக் கழகத்தில் எழுதப்படாத விதி.  அப்படியாகத்தான் எனக்குக் கிடைத்த வேலை ஆராய்ச்சி சஞ்சிகளைப் பதிப்பித்து விற்று வருமானம் ஈட்டுவது.  மூன்று சஞ்சிகளைப் பதிக்கும் வேலையைத் தொடங்கி அதன் வடிவமைப்பு விற்பனை என்று நானாவித வேலையையும் செய்து பழகிக் கொண்ட எனக்கு என்பலம் என்னவென்று ஒருநாள் தெரிந்தது.  சக ஆய்வு மாணவர் ஒருவன் என்னுடைய வழிகாட்டியான பேராசிரியத் தலைவர் என்னை வெளியேற்ற ஏற்பாடு செய்துவருவதைச் சொன்னார்.  வழிகாட்டிக்கும் ஆய்வு மாணவனுக்கும் உள்ள உறவு பலசரக்குக் கடைச் செட்டியாருக்கும் பொட்டலம் கட்டும் இளைஞனுக்கும் இடையே உள்ள உறவு போன்றது.  செட்டியார் எச்சரிக்கை எத்திராஜராகப் எதிர்க்கடை வராதவாறு வேலை செய்பவர்களுக்குப் பொட்டலம் கட்டுவது தவிர எந்த வேலையையும் கற்றுக்கொடுக்க மாட்டார்.  அப்படியே அவரைத் தாண்டிக் கற்றுக் கொண்டவனையே விட்டால் வினை என்று கூலியில்லாத வேலையாளாக மாற்றி மருமகனாக ஆக்கிக்கொள்வார்.  இங்கு நான் வெளியேற்ற்ப்படும் நிலையில் முன்யோசனை இல்லாமல் என் சக ஆய்வாளரிடம் இந்த மடம் இல்லையென்றால் எனக்கென்ன கவலை இங்கிருந்து நேராக எந்தப் பத்திரிக்கை வாசலில் நின்றும் நான் ப்ரூஃப் ரீடர் வேலைக்கு வந்திருக்கேன் என்று சொன்னால் அப்படியே தூக்கிட்டுப் போயிடுவாய்ங்க தெரியுமா என்று ஆண்டுக் கணக்காக ஆய்வு என்ற பெயரில் நான் செய்த புரூஃப் ரீடர் வேலையைச் சொல்ல அவர் என்னுடைய பேராசிரியரிடம் போட்டுக் கொடுக்க அதனால் என் வழிகாட்டி என்னை வெளியே போக முடியாதபடி செய்துவிட்டார். அதுமூலம் நான் பத்திரிக்கையில் ஒரு வேலையை உருப்படியாகச் செய்யமுடியும் என்று எண்ணத் தோன்றியது

    எனது நண்பரின் புதிய முயற்சியில் அவர் முன் எடுத்த ஒரு திட்டம் சினிமாத் துறையில்  ஒரு வாரப் பத்திரிக்கை தொடங்குவது.  அந்தக் காலகட்டத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பும் சூல்நிலையில் அவரை ஆசிரியராகக் கொண்டு இந்தப் பத்திரிக்கையை நடத்தவேண்டும் என்பது அவரின் இந்த முயற்சிக்கு அடிப்படையாக அமைந்தது பத்திரிக்கையைத் தொடங்கி வடிவமைத்து உருவாக்கி வெளிவிடும் வேலையைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது.  ஆராய்ச்சி மாணவனாக இருந்தபோது சென்னை அரசினர் தோட்டத்தில் வசித்துக்கொண்டு கால் இடறிக்கீழே விழுந்தால் ஒரு தியேட்டர் படியில் விழவேண்டும் என்ற சூழலில் ஆய்வறிக்கைக்காக அல்லும் பகலும் நேரம் செலவழித்ததால் ஒரு திரைப்படம்கூடப் பார்த்ததில்லை.  ஒருமுறை என் சகஆய்வு மாணவரின் காதல் திருமண வரவேற்புக்காக இடம் புக் செய்ய ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன்.  வாசலில் ஏகப்பட்ட கூட்டம் என்னவென்று தெரியாமலேயே வரவேற்பாளரிடம் சென்று பணம்கட்டிவிட்டுத் திரும்பி வந்தால் கூட்டம் என்னைப் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பதுபோல் பார்த்தது.  ஏணிப்படி ஏறுமாறாக என்று கேடடதற்கு உன் அருகில் ரிசப்சனில் நின்றது யார் தெரியுமா  என்று கேட்டது கூட்டம். ஐயா தெரியாதய்யா என்று சொன்னேன்.  நீயெல்லாம் தமிழ்நாட்டில் பிறந்ததே ஒரு பெரிய பாவம் என்று சலித்துக்கொண்ட ஒரு பெரிசு பையா அதுதான் இந்தியத் திரை உலகின் கனவுக் கன்னி அவரைப் பார்க்க நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம் என்று சொன்னார்கள்.  இந்த இரண்டு நிகழ்வுகளுமே திரைத்துறையைப்பற்றிய என் பாண்டித்துவத்தைப் பறைசாற்றும்.

    எப்படியோ போடப்போகும் பணம் 5 லட்சம் வந்தால் வரட்டும் போனால் போகட்டும் நான் கவலைப்படமாட்டேன் நீங்கள் நடத்துங்கள் உங்கள் நாடகத்தை என்று சொல்லிவிட்டார் நண்பர். நன்குபடித்துப் பட்டம் பெற்ற எழுத்தாற்ற்ல் மிக்க கணினிப் பயன்பாடு தெரிந்த தலைமை ஏற்கவும் தலைமையின்கீழ்ப் பணி செய்யவும் விழைவுள்ள ஆறுபேரை ஆசிரியக்குழுவாக அமைத்து இந்திய அளவில் தலை சிறந்த இயக்குனர் நடிகர்களை அழைத்துவந்து நேருக்குநேர் சந்திப்பு பேட்டி என்று பயிற்சி அளித்து ஒவ்வொரு வாரமும் ஒருவர் தலைமையில் மற்றவர்கள் குழுவாகப் பணி செய்து பத்திரிக்கையைக் கொண்டுவரும் அளவுக்குப் பயிற்சி அளித்துப் பத்திரிக்கையின் வெள்ளோட்டமாக மூன்று மாதங்கள் பத்திரிக்கையை முழுமையாக அச்சிட்டு தெரிந்தெடுத்த சிலருக்கு அனுப்பி அவர்களின் கருத்துக் கேட்டு இறுதியில் ஐந்து நிமிட விளம்பரப்படம் ஒன்றை சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வாழ்த்துக்களுடன் உருவாக்கி அந்தப் பத்திரிக்கை வெளியானது.  கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நாடுதிரும்பாமல் அமெரிக்காவில் உயிர் துறந்தார்.  அவருக்கென்று ஆரம்பித்த பத்திரிக்கை என்பதால் வேறு  யாரையும் ஆசிரியராகப் போடாமல் அந்தப் பத்திரிக்கை பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்தது.
    அந்தப் பத்திரிக்கையின் ஆல் இன் அழகுராஜாவாக ஆல் ரவுண்டராக நான் இருந்த காலத்தில் ஒரு பெரிய அச்சுக்கூடத்தில் ஸ்டாப் தி பிரஸ் என்று அச்சிடுவதை நிறுத்தும் அதிகாரத்துடன் பவனிவந்து திரை உலகம் தொடர்பான ஒரு பெரிய தரவுத் தளத்தினை உருவாக்கி (திரை உலகக் கிசுகிசுவும் உள்ளடக்கம் ஆனால் வெளியிட்டதில்லை) புலனாய்வுக் கட்டுரை நம்பகமான் தகவல் என்று அது தரமான திரை உலகச் செய்திகளுடன் பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடக்க அடித்தளம் அமைத்தேன். (http://www.vallamai.com/literature/articles/33187/)

    பேராசிரியர் நாகராஜனின் இந்த வாழ்க்கைப்படிப்புதான் எத்தனை சுவையாக இருக்கிறது.. ஆனாலும் இந்தப் பேராசிரியர் நகைச்சுவையோடு தம் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் வல்லவர். இந்த நகைச்சுவையுடனே அந்த அனுபவத்தில் உள்ள கஷ்டங்களையும் ஒருங்கே தெரிவிக்கிற அழகு ஒன்றே நம்மை அவர் பக்கம் ஈர்க்கிறது. இந்த வார வல்லமையாளராகவும் நம் வல்லமை குழு தேர்ந்தெடுப்பதில் பெருமை கொள்கிறது.

    பேராசிரியர் நாகராஜன் மென்மேலும் பல கட்டுரைகள் எழுதவேண்டும் என்று ஆர்வத்தோடு இந்த வல்லமையாளரைக் கேட்டுக் கொள்கிறேன்.

    கடைசி பாரா: இசைக்கவி இரமணன் அவர்கள் கவிதை ஒன்று இந்த வாரத்தில் ஃபேஸ்புக்’ இல் எழுதியது

    நட்டநடு வேவிதை பிளந்திடாமல்
    தளிரேதும் தரைமீது துளிர்ப்பதுண்டோ?
    நட்டநடு நிசியில்மனம் வெடித்திடாமல்
    நல்லதொரு கவிதைதான் பிறப்பதுண்டோ?
    கொட்டுகிறேன் புதுமுரசம்! கொடிபிடித்தேன்!
    குறுக்குத்துறை தனில்விழுந்து குலவும் மின்னல்
    நட்புடனே எனைத்தழுவி நின்றபோது
    நான்தீர்ந்தேன்

    Share
  • தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 12.

    திவாகர்

    ”தேவன் தம் எழுத்து, சொல் எதனாலும் பிறர் மனதிற்குத் துன்பம் புரிந்தவரன்று. அவர் ஹாஸ்யம் என்றும் பிறர் மனதை நோகக்கூடாது என்று மற்ற ஹாஸ்ய எழுத்தாளர்களுக்கு அவர் முன்மாதிரி” என்று தேவன் மறைந்த வேளையில் திரு மீ.பா.சோமசுந்தரம் உரையாற்றினார். அவர் சிறுகதைகளில் பொழியும் ஹாஸ்ய ரசம் அப்படிப்பட்டதாகும். ஒரு பத்திரிக்கை துணை ஆசிரியர் என்கிற முறையில் அவர் எழுதிய சிறுகதைகளாகட்டும், பத்திரிக்கை ஆசிரியர் என்ற வகையில் விகடனில் எழுதிய சிறுகதைகளும் ஒவ்வொன்றும் ரசிக்கக் கூடியவையாகவே இருந்தன. அவர் எழுதிய சிறுகதைகள் விச்சுவுக்குக் கடிதங்கள், ஜாங்கிரி சுந்தரம், சீனுப்பயல், ராஜாமணி போன்ற தலைப்புகளில் தொகுப்புகளாக பின்னாட்களில் வெளியிடப்பட்டன. நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியதாக அல்லையன்ஸ் பதிப்பகத்தினர் தங்கள் தேவன் புத்தகமொன்றில் எழுதியுள்ளனர்.

    ஜாங்கிரி சுந்தரம் எனும் நகைச்சுவை கதையில் கோபால்சாமி என்பவன் தன் ஆப்த நண்பன் விரும்பும் யுவதியை பட்டணத்தைச் சேர்ந்த 54 வயதான ஹோட்டல்காரர் ஜாங்கிரி சுந்தரம் (ஜாங்கிரியில் பிரபலமானதால் அந்தப் பெயர்) கலியாண்ம் செய்துகொள்வதாகத் தெரிந்ததும், தன் ஆத்மநண்பனுக்காக பல் வைத்தியர் போல வேடமிட்டு, பல்வலியால் துடிக்கும் ஜாங்கிரி சுந்தரத்தின் கீதம் இருக்கும் பற்களையெல்லாம் கழட்டி விட்டுப் பழி வாங்கும் ஒரு நகைச்சுவைக் கதை. கடைசியில் அந்த ஆப்தநண்பனானவன் தன் பழைய காதலியை மறந்து புதியவளை ஏற்கனவே தெரிந்தெடுத்துவிட்டது என்ற விஷயம் இந்த கோபால்சாமிக்குத் தெரிந்ததும், பழிக்குப் பழியாக அந்த ஜாங்கிரி சுந்தரத்துக்குச் செய்ததை தன் நண்பனுக்குச் செய்யப் போவதாக பல்லைக் கடித்துக் கொண்டுப் போவதாக கதையை முடிப்பார் தேவன்.

    நவரசங்களும் கலந்த சிறு கதைகளைப் படைத்திருக்கிறார் தேவன். முசாபரி பங்களா, பேயடைந்தவீடு, ஜவந்திக்கோட்டை மர்மம் எனும் பேய்க்கதைகளும் இவைகளில் அடங்கும். மல்லாரிராவ் கதைகள் அந்தக் கால கட்டத்தில் வாசகர்களின் உள்ளங்களை வெகுவாகக் கவர்ந்தவை என்று சொல்வர். என்னை மிகவும் கவர்ந்த தேவனின் ஒரு சிறுகதையை கீழே தருகிறேன். ‘அறியாமல் பிடித்த மோகம்’ எனும் ஒரு கதை.. ஒரு பஸ்ஸில் உட்கார்ந்தவனின் மனநிலையை அப்படியே நகைச்சுவையாகக் கொண்டு வரும் தேவனின் எழுத்துக் கலையை எவ்வளவுதான் புகழ்வது.. இதோ அவர் எழுத்தில்..

    செவத்த பையன், பிடிவாதக்காரன் தான் என்பது அவன் முகரக் கட்டையைப் பார்த்தவுடனேயே நன்றாய்த் தெரிந்தது.

    அவன் வந்து, எனக்கு முன்பு இருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்ட உடனேயே வாயோடு பாட ஆரம்பித்து விட்டான். பஸ்ஸும் கிளம்பிற்று. அப்படி இரைச்சல் போட்டும் பாடவில்லை. ஏதோ தன்னுடைய ஆத்ம திருப்திக்காகப் பாடிக்கொள்வது போலவே தோன்றிற்று.. பாடிக்கொண்டே முகத்தை அங்கும் இங்கும் நீட்டி, சுற்றி நடக்கும் காரியங்களைக் கவனித்தான்.

    பாட்டு ஒரே மாதிரியாக இருந்தது. திருப்பித் திருப்பி ‘மாயப் பிரபஞ்சத்திலே ஆனந்தம் வேறில்லை’ என்று சொல்லிக்கொண்டு இருந்தானேயொழிய, மேலே அடுத்துப் போகவே இல்லை.சில சமயம் தடித்த ஊமைக் குரல்; ஒரு சமயம் கீச்சென்ற குரல், ஒரு சமயம் வாயில் டிக்கட்டைக் கௌவ்விக் கொண்டே….. இப்படியாக அந்த ஒரே அடியைப் பாடினான்.

    கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தேன். தாங்கமுடியவில்லை. பாட்டு என்றால் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் என்னமோ இந்தப் பாட்டை இந்தவிதமாக கேட்கப் பிடிக்கவில்லை. ஆகவே அவன் பக்கம் திரும்பி கோபமாக விறைத்துப் பார்த்தேன். அவன் பதிலுக்கு, உனக்கும் அப்படித்தான் என்று சொன்னது போல விறைத்துவிட்டு மறுபடி விடாமல் பாடினான்.

    இரண்டு நிமிஷம் பொறுத்தேன். பிறகு ”ஏனப்பா? உனக்கு வேறு ஒரு பாட்டும் ஏதும் தெரியாதா இதைத் தவிர?” என்று கேட்டேன்.

    “தெரியும்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் “மாயப்பிரபஞ்சத்தில்” பாடினான்.

    “இதைப் பாடித்தான் ஆகவேண்டுமோ இப்போது?’

    ”சும்மா பாடறேன்”

    ”சற்றுப் பேசாமல் பாடாமல்தான் இருந்து பாரேன்!”

    ”சரிதான்,” என்றான்.

    ஆனால் மேலே பாடிக்கொண்டே போனான்.

    “என்ன சத்தம் ஐயா?” என்று சள்ளென்று விழுந்தேன்.

    “நான் டிக்கெட் வாங்கியிருக்கிறேன்.. என் இஷ்டப்படி இருக்கிறேன்..”

    ”நானும்தான் வாங்கியிருக்கிறேன்.. ஆனால் உன் மாதிரி இப்படிப் பாடுகிறேனா?”

    “சரிதான் ஸார்!”: என்றான். என் வார்த்தையை ஒப்புக்கொண்டு, ஆனால் விடாமல் மேலே பாட்டு மாத்திரம் ஊமைக் குரலில் கேட்டது. “அடப் பழிகாரா!” என்று நினைத்துக் கொண்டேன்.

    எனக்கு அடுத்தாற்போல் ஒரு ஆசாமியும் அவன் மனைவியும் உட்கார்ந்திருந்தார்கள். அந்த ஆசாமி என் வாக்குவாதத்தைக் கவனித்து, ’நீங்கள் சொன்னது சரிதான்’ என்றான். பாடுபவன் திரும்பி ஒரு புன்னகை செய்துவிட்டு, ’சரிதான்’ என்றான். பிறகு “மாயப்பிரபஞ்சத்திலே” என்று ஆரம்பித்தேன்.

    “உன்னைப் பாட்டை நிறுத்தப் பண்ணுகிறேன் பார்!” என்றேன் ஆத்திரத்துடன். “அப்படித்தான் செய்யணும்” என்றாள் அந்த ஸ்திரீயும்.

    “சரி, எங்கே அப்படி செய்யுங்கள் பார்ப்போம்?” என்றான் பாடுபவன்.

    “ஆமாம், நிறுத்து பாட்டை” என்றார் கோடியிலிருந்த இன்னொரு பேர்வழி.

    “நான் பாட்டுக்குப் பாடினால் உனக்கு என்ன ஐயா? என்று கேட்டான் குற்றவாளி.

    “பிறத்தியாருக்கு உபத்திரவம் செய்யும்படியாகப் பாடக்கூடாதுதான்”

    “யாரையா சொன்னது அப்படி?”

    “அப்படி சட்டம் இருக்கு”

    “எங்கே அந்த சட்டம்?”

    “உன்னை மென்னியைப் பிடித்து கோர்ட்டுக்குத் தள்ளிக்கொண்டு போனால் தெரியும் இருக்கற இடம்!”

    “எனக்கு லக்ஷயமில்லை”.. மறுபடி ‘மாயப் பிரபஞ்சத்தில்’ என்று பாட்டு ஆரம்பித்தான்.

    “ஏண்டா, உனக்கு சொரணை கிடையாதா?” என்று கேட்டேன்.

    “அதெல்லாம் செத்துடுத்து ஸார்!” என்றார் பக்கத்து ஆசாமி.

    “அப்படியே மண்டையில் ஒரு தட்டு தட்டுங்களேன்!” என்று சிபாரிசு செய்தார் கோடி ஆசாமி.

    “ஓஹோ”! என்றான் பாடகன். ஆனால் மறுபடியும் பாட்டுச்சத்தம் கேட்டது.

    “நீ நிறுத்த முடியாதா?” என்று சற்று அடக்கமாக கடைசிமுறையாகக் கேட்டேன்.

    “உனக்கு நான் என்னய்யா கெடுதல் செய்தேன்.. நான் பாட்டுக்கு..”

    “பார், எங்களுக்கெல்லாம் எவ்வளவு அசௌகரியமாக இருக்கிறது. இதற்கு நியூசென்ஸ் என்று பெயர். ‘நியூசென்ஸ் செய்கிற பேர்களையெல்லாம் என்ன செய்வார்கள் தெரியுமா? நன்னடத்தை ஜாமீன் வாங்கிக்கொள்வார்கள். அப்படிக் கொடுக்கமுடியாத பேர் ஜெயிலுக்கும் போகவேண்டியதுதான்!” என்றேன்.

    “கொயிட் ரைட்” என்றான் பக்கத்திலிருந்த மனிதன்.

    “நாலு நாள் அங்கே போய்க் கல் உடைத்தால் இந்தப் பாட்டெல்லாம் பறக்காதோ” என்றார் கோடியிலிருந்த பேர்வழி.

    பாடிக்கொண்டிருந்தவன் உண்மையிலேயே அரண்டுவிட்டான். சற்று நேரம் முகத்தைக் கோட்டான் மாதிரி வைத்துக்கொண்டிருந்தவன் பஸ் நிற்குமிடம் ஒன்று வந்தவுடன் எழுந்து பஸ்ஸை விட்டு கீழே இறங்கினான்.

    வெற்றி அடைந்துவிட்டேன் என்பதில் எங்களுக்கு அசாத்திய சந்தோஷம். முக்கியமாக நானே ஊக்கமாய் சிரத்தை எடுத்துக் கொண்ட செயல் இல்லையா.. பத்து நிமிஷம் ஆயிற்று. என் தோள் பட்டையைப் பின்னால் இருந்த ஆசாமி மெதுவாகத் தொட்டார். திரும்பிப் பார்த்தால் என்னையே அவ்வளவு பேரும் முறைத்துப் பார்ப்பது தெரிந்தது.

    “என்ன?” என்றேன்.

    “நீங்களும் கொஞ்சம் ‘மாயப் பிரபஞ்சத்திலே’ பாடுவதை நிறுத்துகிறீர்களா, சார்?” என்று கேட்டார் அந்த ஆசாமி.

    “ஓஹோ! எனக்குத் தெரியவே தெரியாதே!” என்று நானும் அடுத்த இடத்தில் இறங்கினேன்.

    விச்சுவுக்குக் கடிதங்கள் என்பது ஒரு தாய்மாமா, தன் சகோதரி மகன் இண்டர் (12ஆம் வகுப்பு) படித்துமுடித்த வுடன் அவன் என்னென்ன துறைகள் தேர்ந்தெடுக்கலாம் என்பதை கடிதம் மூலமாக, அவனுக்கு எழுதி அனுப்பும் அறிவுரைக் கதைகள் அவை. தேவனின் அறிவுரைகளாக மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டதாகவே நினைக்கத் தோன்றும். குறிப்பாக ஆசிரியர் படிப்பு, பொறியியல், மருத்துவத்துறைகள் தேர்ந்தெடுப்பது பற்றியும் அந்தத் துறைகள் அன்றைய நிலையில் எப்படி இருந்தன என்பதையும் எழுதும்போது, அவர் எழுதியவை அனைத்தும் அறுபது வருடங்கள் ஆகியும் தற்போதுள்ள நிலைக்கு ஏராளமாகப் பொருந்துவதையும் நினைத்து ஆச்சரியத்தில் மூழ்குவோம். முக்கியமாக ஆசிரியர் என்பவர் புத்திசாலித்தனமான முறையில் ட்யூஷன் மூலமாகவும் அதிகம் சம்பாதிக்கமுடியும் என்பதை வெகு இயல்பாக விளக்குவது எந்தக் காலத்துக்கும் பொருந்தும்.

    விச்சு ஒருவேளை மேல்படிப்பை விட்டு வியாபாரத்தில் இறங்கலாம் என்றும் யோசனை தெரிவித்து தாய்மாமன் கடிதம் எழுதும்போது, அந்த வியாபாரத்தின் கஷ்டநஷ்டங்களை விவரிப்பதுடன் அவர்கள் விளம்பரத் துறையையும் ஏகத்துக்கு நக்கல் செய்து எழுதுவார் தேவன். ஒரு வியாபாரி ஒரு பெரிய கடையை ஒரு கடைவீதியிலே திறந்துவிட்டு இந்தக் கடைதான் நகரத்திலேயே பெரிய கடை என்று விளம்பரம் செய்வதாகவும், அதே வீதியில் இன்னொருவன் இன்னொரு கடை போட்டியாகத் திறந்து இந்த நாட்டிலேயே இந்தக் கடைதான் பெரிய கடை என்று விளம்பரம் செய்து திருப்தி அடைவதாகவும், சிலநாட்கள் கழித்து அதே வீதியில் இன்னொரு பெரிய கடை இவர்களுக்குப் போட்டியாக எழுந்தது. அவன் என்ன விளம்பரம் செய்தான் தெரியுமா – இந்தக் கடைவீதியிலேயே எங்கள் கடைதான் பெரிய கடை!! தேவன் இப்படி எழுதிவிட்டு சாமர்த்தியாமான வியாபாரத்தொழிலைப் பற்ரி மென்மேலும் நகைச்சுவையாக விளக்கும் கதை அது. கடைசியில் விச்சு கல்யாணமும் செய்துகொண்டால் நல்லதுதான் என்று எழுதும்போது மனைவியின் அருமை பெருமைகளை கவிமணி எப்படி கவிதையில் எழுதியிருப்பார் என்பதை விச்சுவுக்கு விவரிப்பார்.  மனைவி என்பவளை எப்படிப்பட்ட தேவதையாக நினைத்து கவிமணியின் கவிதைகளைத் தேடிப்பிடித்து எழுதுகிறார், படியுங்களேன்..

    “காரியம் பார்ப்பாள் கணக்கும் எழுதுபவள்
    காய்கறியாக்கவும் கெட்டி அவள் கை பட்டால்
    வேம்பும் கரும்பல்லவோ ருசி..

    ஆபத்து வேளையில் அறிவு சொல் மந்திரி
    அரும் பிணிக்கு அவளே சஞ்சீவி.
    துன்பம் வரும்போது ஆறுதல்
    தரித்திரகாலத்தில் அருநிதியாம் அந்தத் தேவி.

    அங்குமிருப்பாள், பின்னிங்குமிருப்பாள் உம் அண்டையிலும்
    கட்டிக் காப்பாள் உமக்கு கற்பவருத்தமில்லாமல்
    கவலைகள் அத்தனையும் தலையேற்பாள்..”

    (இன்னும் வரும்)

    Share
  • இஸ்ரேல் பயணம் – 11

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இப்போது இஸ்ரேலுக்கு உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் யூதர்கள் குடிவரலாம்.  அவர்களை இஸ்ரேல் அரசு இரு கரம் நீட்டி வரவேற்கிறது.  அவர்களுக்குக் குடியுரிமை உடனேயே வழங்கப்படுகிறது.  எடுத்த எடுப்பிலேயே அவர்கள் இஸ்ரேலின் இரகசிய உளவுப் படையான மோசாடில் (Mossad) கூட சேர்ந்து பணிபுரியலாம்.  வளம் நிறைந்த அமெரிக்காவிலிருந்து கூட பல யூதர்கள் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்திருக்கின்றனர்.  1948-இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதும் 3000 ஆண்டுகளுக்கு முன் தங்கள் மூதாதையர் வாழ்ந்த புண்ணிய பூமியில் தங்கள் இனத்திற்கென்று ஒரு நாடு உருவாகியிருக்கிறது, அங்கு சென்று வாழ்க்கையைக் கழித்தால்தான் சொர்க்கத்தை அடையலாம் என்று எண்ணிப் பல யூதர்கள் இஸ்ரேலுக்கு வந்திருக்கின்றனர்.  இப்போதும் இங்கேயே முழுவதுமாகக் குடிபெயரவில்லை என்றாலும் வருடத்தில் சில நாட்களாவது இங்கு வந்து தங்கிச் செல்ல வேண்டும் என்று பல அமெரிக்க யூதர்கள் நினைக்கிறார்கள். 

    ஆனால் அதே சமயம் பாலஸ்தீன அரேபியர்கள் ஏழாம் நூற்றாண்டிலிருந்து இஸ்லாம் மதத்தைத் தழுவி பதின்மூன்று நூற்றாண்டுகளாக இங்கேயே வசித்துவருகிறார்கள்.  இதற்கு முன்னால் இவர்கள் பழங்குடி மக்களாக இங்கு வாழ்ந்திருக்க வேண்டும்.  இந்த பாலஸ்தீன அரேபியர்களுக்கு தங்கள் சொந்த மண்ணில் வசிக்க எல்லாத் தொல்லைகளையும் இஸ்ரேல் அரசு கொடுத்து வருகிறது.  இப்படித் தொந்தரவுகள் கொடுப்பதால் அவர்களாக வெளியேறினால் நல்லது.  இல்லயென்றால் அவர்களை எப்படியாவது வெளியேற்றிவிடவும் பல திட்டங்களை வைத்திருக்கிறது.

    எங்களை புராதன நகருக்குள் அழைத்துச் சென்ற பயண வழிகாட்டி இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்.  இவர் மூன்று வருடங்கள் படிப்பதற்காக பெல்ஜியத்திற்குச் சென்றிருந்தாராம்.  திரும்பி வந்தபோது இஸ்ரேல் அரசு இவர் நாட்டிற்குள் வருவதற்குப் பல தடைகள் விதித்ததாம்.  சில ஆண்டுகள் நாட்டை விட்டு வெளியே இருந்தால் பாலஸ்தீன அரேபியர்கள் இஸ்ரேலியக் குடியுரிமையை இழந்துவிடுவார்களாம்.  தன்னுடைய குடியுரிமையைப் பெறுவதற்காக இவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறாராம்.  (இவருக்கு யூத இனத்தைச் சேர்ந்த காதல் தோழி இருக்கிறாள்.  ஆனால் சாதாரணமாக இப்படி இருப்பதைப் பார்க்க முடியாது.)

    எங்களை பெத்லஹேமுக்கும் ராமல்லாவுக்கும் அழைத்துச் சென்ற பயண வழிகாட்டியின் மனைவியும் குழந்தைகளும் கனடாவில் இருக்கிறார்கள்.  வருடம் ஒரு முறை அவர்கள் இங்கு வருகிறார்கள்.  அவர் இருப்பது வெஸ்ட் பேங்கில்.  அங்கிருப்பவர்கள் இஸ்ரேலுக்கு வருவதற்கு இஸ்ரேல் அரசு வழங்கியிருக்கும் அடையாள அட்டை வேண்டும்.  எந்த இடத்திலும் வெஸ்ட் பேங்கிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முடியாதபடி இஸ்ரேல் அரசு மிகப் பிரமாண்டமான மதில் சுவரை எழுப்பியிருக்கிறது.  சில இடங்களில் இதைச் சுற்றிக்கொண்டு இஸ்ரேல் அரசு அமைத்துள்ள சோதனைச் சாவடிகளின் மூலம்தான் வர வேண்டும்.  இப்படி இவர்களுக்குத் தடைகள் இருப்பதால் இவர் குடும்பம் கனடாவிலேயே இருக்க முடிவு செய்திருக்கிறது.

    நாங்கள் இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு டெல் அவிவிற்கும் ஜெருசலேமிற்கும் இடையில் இருக்கும் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து (இஸ்ரேல் உருவாவதில் இவர் முக்கிய பங்கு வகித்தவர்.  இவரின் பெயரை இந்த விமான நிலையத்திற்கு வைத்திருக்கிறார்கள்.) ஜோர்டன் தலைநகரான அம்மான் வந்துசேர்ந்தோம்.  ஜெருசலேமிற்கும் அம்மானுக்கும் இடையே உள்ள தூரம் நாற்பத்தைந்து மைல்கள்தான்.  ஆனால் அந்த தூரத்தைக் கடக்க ஜெருசலேமில் சர்வதேச விமானப் போக்குவரத்து இல்லை.  பேருந்துகளில்தான் பயணம் செய்ய வேண்டும்.  பேருந்தில் பயணம் செய்தால் இஸ்ரேலிய-ஜோர்டன் எல்லையில் இஸ்ரேலிய அரசு நடத்தும் சோதனை மிகவும் கெடுபிடியாக இருக்கும் என்றார்கள்.  பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றும் சொன்னார்கள்.  அதனால் டெல் அவிவிலிருந்து விமானம் மூலமே இஸ்ரேலை விட்டுக் கிளம்பவேண்டும் என்று முடிவு செய்தோம்.  விமானப் பயணம் ஒன்றரை மணி நேரம்தான்.  ஆனால் கட்டணம் எவ்வளவு தெரியுமா?  அறுநூறு அமெரிக்க டாலர்கள்.  அடிக்கடி ஒரே கம்பெனியில் விமானப் பயணம் செய்பவர்களுக்கு சில சலுகைகள் உண்டு.  என் மகளுக்கிருந்த அந்தச் சலுகையைப் பயன்படுத்தி எங்களுக்கு அந்தப் பயணத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தாள்.

    எங்களை அன்று ஜெருசலேமிலிருந்து டெல் அவிவ் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற டாக்சி ஓட்டுநர் ஒரு அரேபியர்.  இளவயதினர்.  சொந்தமாக டாக்சி வைத்திருக்கிறார்.  அவர் எங்களைக் கூட்டிக்கொண்டு டெல் அவிவ் விமான நிலையத்திற்குள் நுழைந்ததும் இஸ்ரேல் போலீஸ் துறையைச் சேர்ந்த ஒருவர் எங்கள் டாக்சியை நிறுத்தினார்.  எல்லா போலீஸார் கையிலும் நீண்ட துப்பாக்கி.  இவர் கையிலும் ஒன்று இருந்தது.  எங்கள் டாக்சி அருகே வந்து உள்ளே யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தார்.  எங்கள் சூட்கேசுகளைத் திறக்கச் சொன்னார்.  எங்கிருந்து வருகிறோம், எங்கே போகிறோம் போன்ற பல கேள்விகளைக் கேட்டுவிட்டு, டிரைவரை மட்டும் தன்னோடு அழைத்துச் சென்றார்.  அதற்கு முன்பே அவருக்கு அடையாள அட்டை இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டார்.  அவரைத் தனியாக அங்கு பக்கத்தில் இருந்த அவர்களுடைய அலுவலகத்திற்குள் கூட்டிச் சென்று பல கேள்விகள் கேட்டுவிட்டுப் பின் அனுப்பிவைத்தனர்.  அந்த டிரைவருக்கு இப்படி அவர்கள் தன்னை நடத்தியதைக் கண்டு அப்படி ஒரு எரிச்சல்.  ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  ‘உனக்கு நான் அடிமை இல்லை’ என்ற பாவத்தில் முகத்தை வைத்துக்கொண்டார்.  அதைத் தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.  இவர் பல தலைமுறைகளாக ஜெருசலேமில் வாழ்ந்து வருகிறாராம்.  இவரைப் போன்றவர்கள் இஸ்ரேல் நாடு உருவானதிலிருந்து இரண்டாம் பட்ச குடிமக்களாகி இருக்கின்றனர்.

    இஸ்ரேலில் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் ஒரே வேலைக்கு ஒரே மாதிரியான சம்பளம் இல்லையாம்.  யூதர்களுக்கு அதிகமாகவும் அரேபியர்களுக்குக் குறைவாகவும் கொடுக்கப்படுகிறதாம்.  பயண வழிகாட்டி எங்களை ராமல்லாவுக்கு அழைத்துச் சென்றபோது இஸ்ரேல் அரசால் குடியமர்த்தப்பட்டவர்களின் வீடுகளையும் அரேபியர்களின் வீடுகளையும் காட்டினார்.  அரேபியர்களுக்குத் தண்ணீர் சில நாட்களுக்கு ஒரு முறைதான் வழங்கப்படுவதால் அவர்களின் வீடுகளின் கூரைகளில் தண்ணீரைச் சேமித்துவைத்துக்கொள்ள பெரிய தொட்டிகளைப் பொருத்தியிருந்தார்கள்.  ஆனால் குடியமர்த்தப்பட்டவர்களின் வீடுகளில் அப்படி தொட்டிகள் எதுவும் இல்லை.  அவர்களுக்குத் தினமும் தண்ணீர் சப்ளை இருக்கிறதாம்.  அதனால் இவர்கள் வீடுகளுக்கு முன்னால் செழிப்பான புல்வெளிகள் இருக்கின்றன.

    பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான – ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட – இடங்களைப் பிடித்துக்கொண்டு அங்கு யூதர்களை இஸ்ரேலிய அரசு குடியேற்றியிருக்கிறது.  இது 1967–லிருந்து –  அதாவது இஸ்ரேல் போரில் பாலஸ்தீனர்களுக்குரிய இடங்களைப் பிடித்துக்கொண்டதிலிருந்து – தொடர்ந்து வருகிறது.  இப்படிக் குடியமர்த்தப்பட்டவர்கள் அவர்களுக்கு அருகில் வசிக்கும் அரேபியர்களுக்குப் பல தொல்லைகள் கொடுக்கிறார்கள்.  ஒரு முறை பெடுயின் (Bedouin) என்னும் இனத்தைச் சேர்ந்தவர்களின் ஆடுகளுக்கு விஷம் வைத்துவிட்டார்களாம்.

    நாங்கள் இஸ்ரேலுக்குப் போவதற்குக் காரணமாகயிருந்த யூத நண்பரும் இன்னொரு யூத நண்பரும் தீவிர இடதுசாரிகள்.  இவர்கள் பல முறை இஸ்ரேல் அரசு அரேபியர்களுக்கும் பெடுயின் இனத்தவர்களுக்கும் இழைத்த கொடுமைகளைத் தட்டிக் கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றிருக்கிறார்கள்.  ஒருவர் ‘முதல் யூதக் கோவில் இடிக்கப்பட்டதுதான் யூத இன சரித்திரத்திலேயே நடந்த சிறந்த சம்பவம்’ என்று நக்கலாகச் சொல்கிறார்.  இவர்தான் நாங்கள் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ளக் காரணமாக இருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.  இஸ்ரேலைச் சேர்ந்த இவர் சிகாகோ பல்கலைக் கழகத்தில் ஆறு வருடங்கள் வேலைபார்த்துவிட்டு மறுபடி இஸ்ரேலுக்கே திரும்பச் சென்றுவிட்டார்.  இவர் இப்படித் திரும்பக் காரணமாக இருந்தவர் இவர் மனைவி என்கிறார்.  ஒரு முறை  இவர் ரேடியோவில் பேட்டி கொடுத்தபோது இந்தியாவில் பாபர் மசூதியை இடித்ததைப் பற்றிக் கேள்வி கேட்டார்களாம்.  இஸ்ரேலில் போல் அங்கும் பழைய சரித்திரத்தைத் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றதும் அப்படியே பேட்டியை முடித்துவிட்டார்களாம்.  இன்னொருவர் அமெரிக்காவில் பிறந்து தனது பதினெட்டாவது வயதில் ஹீப்ரு மொழியால் ஈர்க்கப்பட்டு இஸ்ரேலுக்கு வந்தவர்.  இருவரும் அரசின் கொள்கைகளை வெகுவாகக் கண்டிப்பவர்கள்.  இருவரும் ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் வேலைபார்க்கிறார்கள்.  இஸ்ரேலில் யூதர்களுக்கிடையே திருமணங்கள் நிச்சயிக்கப்பட்ட பிறகு யூத மத குருமார்கள் அடங்கிய ஒரு குழு அதை அங்கீகரிக்க வேண்டுமாம்.  இவர் விவாகரத்து செய்துகொண்ட ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியபோது குருமார்கள் குழு எளிதில் அதை அங்கீகரிக்கவில்லையாம்.

    எல்லாச் சமூகங்களிலும் இருப்பது போல் யூத சமூகத்திலும்பல விதக் கொள்கைகள் உடையவர்கள் இருக்கிறார்கள்.  பழமை பேணும் யூதர்களிலிருந்து (conservative) பரந்த மனப்பான்மை கொண்ட முற்போக்காளர்கள் (liberal) வரை இருக்கிறார்கள்.  அமெரிக்காவில் இருக்கும் எங்கள் யூத நண்பர் வருடத்திற்கு ஒரு முறை இஸ்ரேலுக்குப் போக வேண்டியது தன் கடமை என்று நினைக்கிறார்.  பலர் சேர்ந்து வாங்கும் ஒரு அப்பார்ட்மெண்டை ஜெருசலேமில் வாங்கியிருக்கிறார்.  ஒவ்வொரு வருடம் ஜூன் மாதம் திவருடைய முறை.  அந்தச் சமயத்தில் இவர் அங்கு சென்று தங்கிக்கொள்ளலாம்.  அமெரிக்காவில் வாழும் இன்னொரு யூத நண்பர் ஓரிரு முறை யூதச் சட்டங்களைப் (Jewish Law) படிக்க ஜெருசலேம் சென்றுவருகிறார்.  இவரைப் பொறுத்தவரை யூத மதம் என்பது ஒரு மதம் மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை, அதற்கென்று சில சட்ட திட்டங்கள் இருக்கின்றன.  அவற்றைப் பின்பற்றுவது ஒவ்வொரு யூதனுடைய கடமை.  யூதர்கள் தங்கள் புண்ணிய தலம் என்று கருதும் பாலஸ்தீனத்திற்குப் போக வேண்டும், அங்கேயே தங்கி உயிரை விட வேண்டும் என்பதெல்லாம் இவருடைய கொள்கையல்ல.  ஆனால் யூத மதக் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்.  யூதர்களுடைய ஓய்வு தினமான (Sabbath Day) சனியன்று – அதாவது வெள்ளிக்கிழமை சூரியன் அஸ்தமித்ததிலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை – இவர் யாரிடமும் பேசுவதில்லை; தொலைபேசியை அன்று தொடவே மாட்டார்.  அன்று யார் தொலைபேசியில் கூப்பிட்டாலும் அவர் மனைவிதான் பேசுவார்.  பெரிய வேலை எதுவும் அன்று செய்வதில்லை.   இவர் அமெரிக்காவில் வாழ்ந்துவருவதால் அமெரிக்கப் பழக்க வழக்கங்களைக் கையாண்டாலும் இப்படிச் சில யூதக் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறார்.  யூதர்கள் தங்களுக்குள்ளேயேதான் திருமணம் செய்துகொள்ளுகிறார்கள்.  இவருடைய பிள்ளைகளும் யூதர்களுக்குள்ளேயே திருமணம் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

    இவருடைய நண்பர்களான ஒரு தம்பதி இப்போது இஸ்ரேலில் வாழ்ந்துவருகிறார்கள்.  இவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்துவந்தவர்கள்.  இஸ்ரேலில்தான் யூதப் பழக்க வழக்கங்களை நன்றாகப் பின்பற்ற முடியும் என்று எண்ணி அங்கு குடியேறியவர்கள்.  மேலே குறிப்பிட்டவர்களை விட இவர்கள் இன்னும் கொஞ்சம் பழமைவாதிகள் எனலாம்.  இருந்தாலும் இஸ்ரேல் அரசு பாலஸ்தீனர்களுக்கு எதிராகச் செய்யும் செயல்கள் இவர்களுக்கு உடன்பாடில்லை.  இவர்களும் அரசுக்கு எதிரான சில போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

    மேலே குறிப்பிட்ட சிகாகோ பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரின் மனைவிதான் அவர்கள் குடும்பம் இஸ்ரேலுக்குத் திரும்பிச் செல்லக் காரணமாக இருந்தவர் என்று மேலே சொன்னேன்.  இவருக்கு யூத மத நம்பிக்கை உண்டு போலும்.  திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு மத குருமார்கள் பெண்ணை ஆடைகளை அவிழ்க்கச் சொல்லி சில சோதனைகள் செய்வார்களாம்.  இது யூதப் பழக்கம் போலும்   இதை இவர் எதிர்க்கவில்லையாம்.  மேலும் அமெரிக்காவிலேயே தொடர்ந்து இருந்திருந்தால் இவர்களுடைய பிள்ளைகளுக்கு – இவர்களுக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன் – கட்டாய ராணுவ சேவை இருந்திருக்காது.  இஸ்ரேலில் மூன்று பிள்ளைகளுக்கும் அது உண்டு.  அப்படியும் இஸ்ரேலுக்கு வர வேண்டுமென்று இவர் நினைத்திருக்கிறார்.  இவர்கள் வீட்டில் ஒரு நாள் எங்களுக்கு விருந்து கொடுத்தார்கள்.  மத்திய கிழக்கில் தயாரிக்கப்படும் சிறந்த உணவு வகைகள் இருந்தன.  அதை சமைத்தது அல்லது இவருக்குச் சமைக்க உதவியது யார் தெரியுமா?  இவருக்கு வீட்டு வேலைகளில் அவ்வப்போது உதவும் ஒரு இஸ்ரேலிய அரேபியப் பெண்.

    இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கூற வேண்டும்.  அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்குக் குடியேறியிருக்கும் எல்லா யூதர்களுக்கும் அவர்கள் விரும்பினால் திரும்ப அமெரிக்காவிற்குச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது.  இவர்கள் இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றவர்கள்.  இஸ்ரேலும் இவர்களை அங்கேயே வைத்துக்கொண்டு நன்றாக நடத்தத் தயாராக இருக்கிறது; அமெரிக்காவும் திரும்ப அழைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறது.

    யூதர்களுக்காக இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முற்றிலும் சரி என்று நினைக்கும் யூதர்களிலும் சிலர் பாலஸ்தீனத்தில் பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்றும் அந்த முயற்சிகளை முறியடிக்க இஸ்ரேல் அரசு செய்து வருவது சரியில்லை என்றும் நினைக்கிறார்கள்.  பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் அரசு செய்யும் எல்லாக் காரியங்களையும் கண்டுகொள்ளாத யூதர்களும் உண்டு.  இப்படிப் பல தரப்பட்ட கொள்கைகளையுடைய யூதர்களின் விருப்பம் எப்படி 2013 ஜனவரியில் நடந்த பொதுத் தேர்தலில் பிரதிபலித்தது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

     (தொடரும்)

    Share
  • வால்ட் விட்மன் வசனக் கவிதை -15

    என்னைப் பற்றிய பாடல் – 8

    (Song of Myself)

    (1819-1892)
     (புல்லின் இலைகள் -1)
     மூலம் : வால்ட் விட்மன்

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
    +++++++++++++++++++++++++++++
    வால்ட் விட்மன், அவனோர் பிரபஞ்சம் !
    மன்ஹாட்டன் மைந்தன் !
    புரட்சிக் காரன் ! உப்பிய சதை !
    மோக முள்ளவன் ! பெருந் தீனியான் !
    குடிப்பான் !, பிள்ளைகள் பெற்றவன் !
    உணர்ச்சி வசப்படான் !
    உயர்ந்தவன் அல்லன் மனித குலத்தில் !
    தன்னடக்க மற்ற அகங்காரன் !
    பிறன் ஒருவனை அவமதிப் பவன்
    என்னை அவமதிப் பவன் !
    என்ன செய்தாலும், என்ன சொன்னாலும்
    இறுதியில் அது மீள்வது
    என்னிடமே !
    யுகங்களாய் முடிவற்றுத் தோன்றின
    மகத்தான வாக்கு மொழிகள் !
    என்னுடைய தெல்லாம்
    நவீன மொழி !
    நம்பிக்கை உறுதி மொழி
    மறுக்கப் படுவ தில்லை பின்தொடர !
    எல்லாம் ஏற்புடை யவை
    எனக்கு !

    காலத்தை ஒரு தனித்துவ மாய்
    ஏற்றுக் கொள்கிறேன்.
    காலம் பழுதற்றது !
    நம்மை மட்டும் வட்ட மிடுது
    வாழ்வுக்கு முழுமை அளிப்பது !
    குழப்பும் அப்புதிரான விந்தை
    முழுமைப் படுத்தும் !
    மெய்ப்பாடு எனக்கு ஏற்புடைத்து
    ஐயுற்று நான் அதன் மீது
    கேள்வி கேட்ப தில்லை !
    மூழ்க்கிடும் உலோகா யுதக் கோட்பாடே
    முதலும், முடிவும் என்றுபேன் !

    +++++++++++++
    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
    3. Britannica Concise Encyclopedia [2003]
    4. Encyclopedia Britannica [1978]
    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
    ********************
    jayabarat@tnt21.com [S. Jayabarathan] (March 13, 2013)
    http://jayabarathan.wordpress.com/

    Share