பார்வதி இராமச்சந்திரன்

ஒரு சிறு மளிகைக் கடையின் முன் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டி, என் கவனத்தைக் கவர்ந்தது. சில்லறை வியாபாரத்தில் அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக நுழைவதற்கு அனுமதியளிக்கக் கூடாதென்ற கோரிக்கையுடன்,  அதற்கு ஆதரவாக‌ வாக்களிக்க வேண்டி ஒரு பெண்கள் பத்திரிகை வைத்திருந்த வாக்குப் பெட்டி அது.

நம் குடும்பத்தில் ஒருவராக இருப்பவரின் வியாபாரத்தை முடக்குவதா?’ என்பது போன்ற வாசகங்களுடன், வாக்குப் பெட்டிக்கு அருகில் இருந்த பேனர்கள் என் கருத்தைக் கவர்ந்தது.

அருகிலிருந்த என் மகள், சிரித்தவாறு, ‘ஒரு கடை வச்சிருக்கிறவர் எப்படி நம் குடும்பத்தில ஒருத்தர் மாதிரி ஆக முடியும்?, காசு கொடுத்து பொருள் வாங்குறோம், அவ்வளவு தானே?’ என்றாள். அவள் கையை அழுத்தியவாறு சொன்னேன்.

‘உனக்குப் புரியாதும்மா!!!!’

அவள் சிறுமி, ஊர் விட்டு ஊர் மாறும் வேலையுடைய என் கணவருடன், நிரந்தரமாக, ஓரிரண்டு வருடத்திற்கு  மேல் ஒரு ஊரிலும் இருந்ததில்லை. ஆகையால், அவளுக்கு அந்த வாசகத்தின் மகத்துவம் புரியவில்லை என நினைத்துக் கொண்டேன்.

கடையிலேயே ஒரு வாக்குச் சீட்டை வாங்கி, வாக்களிக்கையில், என் மனம்,  கணபதி மாமாவை நினைத்துக் கொண்டது. முகமெல்லாம் சிரிப்பாக, எப்போது பார்த்தாலும் ‘என்னா பாப்பா?’ என்று அன்போடு அரவணைக்கிற, எப்போது கடைப்பக்கம் போனாலும் கை நிறைய ஆரஞ்சு மிட்டாய் தருகிற அந்த முகம், எங்கள் குடும்பத்தோடு மட்டுமல்லாமல், ஊரில் எல்லோருடனும் வைத்திருந்த நல்லுறவு என ஒவ்வொன்றாக நினைவு வந்தது. அவர் கதையை பாதியிலிருந்து மட்டுமே நான் அறிவேன். என் பாட்டி, சித்திப் பாட்டி, மாமா, அப்பா என உறவுகள் சொல்லிக் கேட்டதே நிறைய.

முதன் முதலில் மாமா எங்கள் வீட்டுக்கு வந்ததை ஒரு ஆச்சரியம் போல் சொல்வாள் பாட்டி.

‘ஒரு நா வாசல்ல, ஒரு நடுவயசு மனுஷரும் சின்ன பையனும் நின்னா. ஊருக்குப் புதுசுன்னு பாத்த ஒடனே பளிச்சுன்னு தெரிஞ்சது. உள்ள வரலாமான்னுட்டு யோஜனை பண்ணிண்டு நின்னார் பாவம். ஒன் தாத்தா பாத்துட்டு, ‘வாங்கோ உள்ள’ன்னதும் அப்படி ஒரு ஆச்சரியம் அவர் மொகத்துல.

‘வெளியூர்லயிருந்து பொழைக்க வந்துருக்கோம், சின்னதா ஒரு மளிகை வக்கலாம்னு. நீங்க பெரியவங்க ஆதரிக்கணுன்னு’ கேட்டுண்டார். தாத்தா ஒடனே சரின்னுட்டார். பக்கத்துல இருந்த பையனப் பாத்து, ‘ஒம் பேரென்ன?’ன்னார். ‘கணபதி’ன்னு கணீர்னு வந்தது பதில். ‘படிக்கறியா’ன்னார்.’

அந்தக் கேள்விக்கு பதில் வரவில்லையாம். காரணம் கொஞ்சம் நெருடலானது. கணபதி மாமாவின் கால் விரல்கள் வித்தியாசமாக இருக்கும். வலக்காலில் இரண்டு விரல்கள் இருக்காது. கூடப்படிக்கும் பையன்களின் கேலிக்குப் பயந்து பள்ளிக்கூடம் போவதை நிறுத்தி விட்டிருக்கிறார்.

தாத்தா, உடனே அறிவுரை கூறியதோடல்லாமல், அப்போது சின்ன பையனாயிருந்த மாமாவை அழைத்து ‘வெங்கி, நாளைக்கு இந்தப் பையனையும் ஒன்னோட அழைச்சுண்டு போய் ஸ்கூல்ல சேத்துடு, செல்லத்துரை வாத்தியார்ட்ட நான் சொன்னேன்னு சொல்லு’ என்று சொல்லியிருக்கிறார். பூஜையறையிலிருந்து பழங்களை எடுத்து, கணபதி மாமாவின் இருகரங்களிலும் கொடுத்திருக்கிறார் பாட்டி.

‘மொகத்துல சிரிப்பப் பாக்கணுமே, பொன்னாட்டம் வாங்கிண்டுது கொழந்தை ‘!!.

அப்போது துவங்கியது. கடையிலும் அப்பாவுக்கு உதவியாக இருந்தாராம் கணபதி மாமா. சிட்டை(லிஸ்ட்) படி மளிகைப் பொருட்களை அவரவர் வீட்டுக்குக் கொண்டு சேர்ப்பது. சின்ன பற்று வரவு புத்தகத்தில் கையெழுத்து வாங்க வருவது என்று எல்லா வேலைகளும் செய்வார். அதனால் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

குறிப்பாக எங்கள் இல்லத்தில் ஒரு மகன் போலவே ஆனார். வெங்கி மாமாவுக்கு ‘கணா’, என் அப்பா, சித்தப்பாவுக்கு ‘அண்ணே’, என் தாத்தாவுக்கு ‘கணபதி’, என் சின்னத்தாத்தா(தாத்தாவின் தம்பி) மட்டும் மிக நெருக்கமாக ‘பிள்ளைவாள்’ என்பார். அதென்னமோ மாமாவின் மேல் அலாதி பாசம் அவருக்கு. வயதுக்கு மீறிய தோழமை இருவரின் நடுவேயும். இருவருக்கும் பயணம் செய்வதில் அடக்கமாட்டாத ஆசை. ஏதாவது குடும்ப விசேஷங்கள், திருவிழாக்களுக்காக கணபதி மாமா வெளியூர் செல்ல வேண்டி வந்தால், சின்னத் தாத்தாவும் புறப்பட்டு விடுவார். இருவரும் ஏதாவது ஒரு புள்ளியில் சந்தித்து, அருகில் இருக்கும் எல்லா ஊர்களையும் பார்த்து விட்டுத் திரும்புவது வழக்கம். அதைப் போலவே கணபதி மாமாவும் செய்வார்.

அதனால் இருவரில்  ஒருவர் வெளியூர் சென்றுவிட்டு, ஊர் திரும்பத் தாமதமானால், பரஸ்பரம் விசாரித்துக் கொண்டு அமைதி காண்பது இருவர் வீட்டு வழக்கமும்.

கணபதி மாமா, தன் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், படிப்பை பள்ளியிறுதியோடு நிறுத்திக் கொண்டார். உடனே திருமணமும் ஆயிற்று. நிறையக் குழந்தைகள் கணபதி மாமாவுக்கு.

கணபதி மாமாவைப் போலவே அவர் மனைவி மீனாட்சி அக்காவும். கலகல என்று இருப்பார். இருக்கும் இடமே திருவிழாப்போல இருக்கும்.

ஊரில் யார் வீட்டுக்கு யார் வந்தாலும்  கணபதி மாமாவுக்குத் தெரிந்துவிடும்.

கடைக்கு வருகிறவர்களிடம், காசு வாங்கினோம், பொருளைக் கொடுத்தோம் என்றிருப்பது அவரால் முடியாது.

‘யாரு, அக்காவா, என்னா சேமியா வேணுமா?, தாரேன். பாயாசம் வைக்கிறதுக்கா இல்ல உப்புமாவா?. பாயாசமா? அப்ப சீனி வேணும்ல? இருக்கா?. டே, அந்த சேமியாவ எடு!!, ஆமாக்கா, என்ன விசேசமா?!!, ஆரு வந்திருக்காங்க, நாத்தனாரா?, அதான் பாயாசமா!!, என்னா சும்மாத்தான் ஊரு பாக்கவா இல்ல வேற விசேசம் ஏதாச்சும் உண்டா?, என்னா பொண்ணு கேக்க வந்திருக்காகளா?, என்னா மெல்ல சொல்லுறீக, சட்டுப்புட்டுன்னு பண்ணிறலாம்ல!! வயசும் ஆச்சுல்ல பாப்பாவுக்கு, மாமா என்னா சொல்லுறாரு?,’ என்று கோர்வையாக விசாரிப்பார்.

அன்று சாயங்காலமோ, மறுநாளோ கடைக்கு வந்த அக்காவின் வீட்டுக்காரரைப் பார்க்க நேர்ந்தால், வாசாலகமாக, ‘வாங்க மாமா, என்னா கடப்பக்கமே ரொம்ப நாளா காணும்?’

என்று துவங்கி, ஒரு சுற்று பேசி விட்டு, ‘ஆமா, என்னா எப்ப பாப்பா கல்யாணத்துக்கு சமையல் சாமா(ன்) சிட்டை தரப்போறீக?, நேத்தென்னாமோ, ஒறமொறை வந்திருந்தாக போல’ என்று விஷயத்துக்கு வருவார்.

மாப்பிள்ளை பிடித்தம் இல்லை என்றால் தலையிடமாட்டார். மாறாக, பண விஷயத்துக்காக தவங்குகிறது என்றால் ‘கிடுகிடுவென’ உதவியில் இறங்குவார்.

‘நீங்க கவலப்படாதீங்க, நக நட்டுக்கு, துணிமணிக்கெல்லாம் எவ்வளவு தேவப்படுது?, மண்டபச்செலவு பத்தி பெரச்சனையில்ல, “அங்கயற்கண்ணி” ல சொல்லிரலாம். சமயல் பாத்திரத்துலருந்து, கூட்டிப் பெருக்குற ஆள் வரக்கும் இருக்கு, பாத்துக்கிரலாம். நம்ம ஒறமொறைதான் மண்டபம் வச்சிருக்கிறவ‌ரு. நாஞ்சொன்னா செரிம்பாரு. சமயலுக்கு ஆள மட்டும் பாருங்க, சாமா(ன்) செட்டு அத்தனையும்,  மஞ்சப்பொடிலருந்து, வெத்தல பாக்கு வரக்கும் நாங்கொணாந்து போடுறேன், பெறகு மொள்ளமா கொடுங்க, இப்ப என்னா?, வேற என்னா செலவு?’ என்று அலச ஆரம்பிப்பார். செட்டியார் கடையில், தவணை முறைக் கடனுக்கு ஏற்பாடு செய்வதிலிருந்து எல்லாவற்றிற்கும் உதவிக்கு நிற்பார். கண்டிப்பாய், ஏதேனும் ஒரு சிறிய செலவேனும் தன் பொறுப்பில் ஏற்பார். அநேகமாக, அது பூவாகத்தானிருக்கும். கல்யாணத்திற்கு வேண்டிய பூச்சரம், மாலைகள், உதிரிப்பூ எல்லாவற்றையும் தன் செலவில் வாங்கித் தருவார். திருமணம் முடிந்து, மணமக்களை வண்டி ஏற்றி அனுப்புவது வரை அந்த‌ வீட்டு மனுஷனாக உடனிருப்பார்.

ஒரு முறை பாட்டி சொன்னாள் என்று ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கப் போனது நன்றாக நினைவிருக்கிறது. சொன்னதும் உடனே எடுத்துக் கொடுக்கவில்லை.

‘என்னா பாப்பா வந்திருக்கீக, அண்ணன் இல்லையா, வள்ளி எங்க போனா?’

‘அண்ணா மாமா வீட்டுக்குப் போயிருக்கார். வள்ளி மார்க்கட்டுக்கு!!’

‘அதானா, செரி இந்தாங்க‌ ஆரஞ்சு மிட்டாயி, எப்பவாச்சும் தானே ஹார்லிக்ஸூ வாங்குறது நம்ம வீட்டுல, ஆமா, ஆராச்சும் விருந்து வந்திருக்காங்களா?’

‘இல்லல்ல… பக்கத்தாத்து சுந்தரம் மாமா இல்ல, அவர ஆஸ்பத்திரில சேத்துருக்கா… தாத்தா பாக்கப் போறா.. அங்க குடுத்து விடத்தான்’

‘அப்டியா, செரி நீங்க போயி பாட்டிக்கிட்ட நா(ன்) கொண்டாரேன்னு சொல்லுங்க!’

நேரே வீட்டுக்கு வந்து, என்ன ஏது என்று விசாரிப்பதோடு நிற்க மாட்டார். சுந்தரம் மாமாவின் வீட்டுக்குப் போய் என்ன உதவி வேண்டும் என்று கேட்டுச் செய்வதோடு, சுந்தரம் மாமா ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பும் வரை, எப்போது டவுன் பக்கம் போனாலும், தன் சைக்கிளில், அவர் வீட்டிலிருந்து,  சாப்பாடு மற்ற சாமான்கள் எடுத்துப் போய், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் கொடுப்பார்.

தன் கல்யாணமும் அவரால் தான் நடந்தது என்பாள் அம்மா. எங்கே பிள்ளைக்கு கல்யாணமானால், மருமகள் வந்து பிரித்து விடுவாளோ என்ற காரணமற்ற பயத்தினால், அப்பாவின் கல்யாணத்தை ஏதேனும் சாக்கு சொல்லி தள்ளிப் போட்டுக்கொண்டே போனாளாம் பாட்டி. பெண் பார்க்கும் வரை வந்தால் கூட ஏதாவது காரணம் கண்டுபிடித்து ‘வேண்டாம்’ என்று சொல்லிவிடுவாளாம். தாத்தா எவ்வளவு சொல்லியும் பாட்டிக்கு உறைக்கவில்லை. அப்பா,  த‌ன்  அம்மாவுக்கு அடங்கிய பிள்ளை.

இராமநாதபுரத்தில், அம்மாவைப் பெண்பார்த்து வந்ததும், வழக்கம் போல் பாட்டி காரணம் தேட ஆரம்பிக்க, அப்போது, சாமான் கொண்டு வந்து கொடுக்க வந்த கணபதி மாமா,

‘என்னங்கப்பா, பொண்ணு பாக்கப் போனீங்கல்ல, நல்ல விசயம்தான?’ என்று தாத்தாவிடம் ஆரம்பித்தாராம்.,

‘இல்லடா கணபதி,  பொண்ணு கொஞ்சம் குள்ளமாட்டமா இருக்கு!!  ..பாட்டி.

‘அதனால என்னா… ரவியும்  ஒயரங் கம்மிதான‌.. செரியா இருக்கும்ல’.

பாட்டி பதில் பேசாமல் இருக்க, ‘இந்தா பாருங்க அம்மா, ரவி வயசுல, எனக்கு கலா சடங்காயிருச்சு… இன்னம் கலியாணமுடிக்காம இருந்தீங்கன்னா, அது பிள்ளைகள வளத்தி நிமுத்த வயசு வேணாமா… இன்னம் சின்னப் புள்ளையா…. ஒங்களுக்கு பேரம்பேத்தி வேணுங்குற ஆச இருக்குதா இல்லையா?, என்ன மாதிரி சின்னவங்க, ஒங்ககிட்ட செரி, தப்பு எடுத்துச்  சொன்னா நல்லாவா இருக்கு?.. ஏம்ப்பா… ரவிக்கு பொண்ணு புடிச்சுருக்குல்ல… அப்ப ஆக வேணுங்குறத பாக்கலாம்ல… அம்மா ஒண்ணுஞ் சொல்ல மாட்டாங்க‌. நீங்க ஒண்ணு பண்ணுங்க… போயி, பொண்ணு புடிச்சுருக்குன்னு ஒரு தந்தி குடுத்துருங்க…. இப்பமே நிச்சயம் பண்ணினாத்தான் செரி வரும். இல்லன்னா மார்கழி வந்துரும். வர ஞாயித்துக்கெழம முகூர்த்த நாளுன்னு பாத்ததா ஞாபகம். அத செரிபாருங்க. செரியா இருந்துச்சுன்னா, அன்னைக்கே நிச்சியம் பண்ணிரலாமான்னும் ஒரு வரி சேருங்க…. நாம் போயி, ‘அங்கயற்கண்ணி’ல ஒரு வார்த்த சொல்லிர்றேன். அங்கயே  வச்சிரலாம் நிச்சியம். என்னா?’  என்று அடுக்க…

அப்பா, சின்னதாய்த் தலையசைக்க, பாட்டியின் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு, தாத்தா, ‘அப்படியே செய்துடுவோம், நான் உங்கூடவே வரேன். என்ன தந்தி ஆபீசுல இறக்கி விட்டுடு…’ என்று கணபதி மாமாவின் சைக்கிளில் ஏறிச் சென்று தந்தி அடித்து விட்டு வந்தாராம்.

‘அவர் மட்டும் பூனைக்கு மணி கட்டலைன்னா… அறுபதாம் கல்யாணம்தான் உங்கப்பாவுக்கு’ என்று சிரிப்பாள் அம்மா.

இது போல், கணபதி மாமா வீட்டுக் கல்யாணம் தாத்தாவால் நிச்சயம் செய்யப்பட்டதும் நடந்ததுண்டு.

கணபதி மாமா, தன் மக்கள் எல்லாரையும் உறவிலேயே மணமுடித்துக் கொடுத்து வந்தார். . கிட்டத்தட்ட எல்லா அக்கா தங்கை உறவிலேயும் கொள்வினை கொடுப்பினை உண்டு. மீனாட்சி அக்காவுக்கு, தன் ஐந்தாவது பிள்ளையை, தன் அண்ணன் மகளுக்கு மணமுடிக்க வேண்டும் என ஆசை. ஆனால், எதனாலேயோ ‘ஒன் ஒறவுல சம்மந்தம் வேணாம்’ என்று சொல்லிவிட்டார் என கண்ணைக் கசக்கிக் கொண்டு தாத்தாவிடம் வந்து நின்றார் மீனாட்சி அக்கா.

‘ஏண்டா, அவ சொல்றதும் ஞாயந்தானே!!’

‘அப்பா, அது சும்மா சொல்லுது… எத்தன பெரச்சன வந்துச்சு அவுங்களாலன்னு ஒங்களுக்கும் தெரியுந்தான…’

‘ஆமா, அதுக்கென்ன பண்றது.. அவங்கப்பா செஞ்சதுக்கு புள்ளை என்ன பண்ணுவான் சொல்லு..  நீரடிச்சு நீர் விலகாது. நாளக்கு அவ சொந்தத்துலயும் ஒருத்தர் வேணுன்னு நெனைக்கறா…’

‘அதுக்காக, இவங்கண்ணன்ட்ட நாம் போயி என்னா பேசுரது…’

‘அது ஒண்ணும் பெருசுல்லா.. சொல்லிவுட்டா அவங்களே வருவாங்க…’ என்றார் அக்கா.

‘எல்லாந் திட்டம் போட்டு வச்சாச்சா?’

‘ கணபதி… நீ கொஞ்சம் இறங்கி வா.. இத்தன நாள் ஒங்கூட சம்சாரம் பண்ணி இருக்கா.. இந்த ஒண்ணுல விட்டுக்குடுத்துடேன்..’

‘ நாளப்பின்ன, அண்ணன் வீட்டுல‌ அத செய்யல,  இத செய்யலன்னு இவளே பேசுவாப்பா..’

‘அதொண்ணுமில்ல… எங்க பொறந்தவூட்டுல யான மேல அம்பாரிகட்டி சீர் செய்வாங்க’

‘ஆத்தி!!!, அப்ப  ஒன்னோட வந்த  யானய முழுங்கிட்டுதா நீ இத்தத்தண்டிக்கு ஆனியா!’

இறுதியாக தாத்தாவின்  வார்த்தைக்காக, சம்மந்தத்துக்கு ஒத்துக் கொண்டாராம் கணபதி மாமா.

இப்படி, ஊரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் முக்கியமான நபராக, நல்லது கெட்டதுகளில் பங்களிப்புச் செய்து கொண்டு, ஊரே தன் குடும்பமாக வாழ்ந்தார். அவரை வேற்றாளாக நினைத்துப் பார்க்க முடியாது யாராலும். ‘உபகாரம்னா, கணபதி’ என்று பேரெடுத்திருந்தார்.

ஆயிரம் இருந்தாலும், கணபதி மாமாவுக்குத் தான் கால் விரல்கள் பற்றிக் குறையான குறை உண்டாம். தனிமையில், சின்னத் தாத்தாவிடம், நிறைய வருத்தப்பட்டிருக்கிறாராம்.

‘விடுடா.. எல்லாத்துக்கும் ஏதாவது காரணமிருக்கும்.. இதனால, ஒனக்கு என்ன கொறைஞ்சு போச்சு?’ என்பாராம் சின்னத் தாத்தா.

ஆனால், காரணம் எவ்வளவு கொடூரமானது என்பதை விதியைத் தவிர யாரும் அறிந்திருக்கவில்லை.

ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு இரவு திரும்ப வேண்டிய கணபதி மாமா, மறுநாள் ஆகியும் வராததால், மீனாட்சி அக்கா, எங்கள் வீட்டுக்கு விசாரிக்க வந்தார்.

‘சித்தியம்மா, சித்தப்பா ஊருக்கா?’.

‘இல்லடி..இங்கதான்  ஏன்?’.

‘இல்ல, அவரு திருச்சிக்கு ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டு வரக்காணும், சித்தப்பா கூட ஊரப்பாக்கப் போயிட்டாராக்கும்னு வந்தேன்’.

சித்திப்பாட்டி திகைத்தாள். இப்படி நடந்ததே இல்லை. ‘வந்துருவான்டி, வேற ஏதாவது வேலையாயிருக்கும்’  சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சின்னத்தாத்தா வந்துவிட்டார்.

விஷயம் தெரிந்து அவரும் யோசித்தார். ‘சரி, நீ போயிட்டு வா, மீனாட்சி,   வந்துடுவான்னே நினைக்கிறேன். இல்லன்னா நா சாயரட்சை கிளம்பிப் போய் விசாரிக்கிறேன்.

அக்கா, போனதும், ‘பருவதம், எனக்கு என்னமோ பண்றது. ஒண்ணும் மனசுக்கு சரியாப்படலை. நான் சரவணப் பொய்கைப் பக்கம் போய்ட்டு வரேன்’ என்று சொல்லிவிட்டு கலங்கிய முகத்துடன்  தெருவில் இறங்கினார்.

அதே நேரத்தில், ஒரு தெரு நாய்,  வீதியின் கோடியில் இருந்த‌ பதினாறு கால் மண்டபத்தில் உட்கார்ந்து  பேசிக்கொண்டிருந்த தெருக்காரர்களின் முன்பாக, இரைக்க, இரைக்க ஓடிவந்து ஒரு பொருளைக் கொண்டு போட்டு விட்டு ஓடியது. அது ஒரு மனிதக் கால். வலது கால். வித்தியாசமான விரல் அமைப்புகளோடு இருந்த அதில் இரு விரல்கள் இல்லை.

கொஞ்ச நேரத்தில் தெருவே அலறியது. தாத்தா உட்பட தெருவாசிகளுக்குத் தகவல் பறந்தது. அப்பாவும், சித்தப்பாவும், மாமாவும், கண்ணீருடன் தெருவில் பதறி ஓடியது நினைவிருக்கிறது. நாய் சென்ற வழியை உத்தேசமாகத் தொடர்ந்து கொண்டு, ஒரு ஊகத்தில் ஊர் எல்லையில் இருந்த இரயில்வே லைனை அடைந்த போது அத்தனை பேருக்கும் ஒரு கணம் இதயம் நின்று தான் விட்டது. ஊருக்குப் போய்த் திரும்பிய கணபதி மாமா, இரவில், ஆளில்லா இரயில்வே லைனைக் கடக்க முற்பட்ட போது, இரயில் வந்து தூக்கியடித்திருக்கிறது.  அவர் உடலின் முன் பாகம் சிதையாமல் இரயில்வே லைனுக்குப் பக்கத்தில் கிடந்ததைத் தூக்கி வந்தார்கள்.

பாட்டி, அம்மா, சித்தி எல்லாரும் கணபதி மாமா வீட்டுக்கு ஓடினார்கள். ஊரே கதறி அழுதது. சின்னத் தாத்தாவின் துயரம் சொல்லில் அடங்குவதாயில்லை. மீனாட்சி அக்கா..?, அதிர்ச்சியில் மயங்கி விழுந்தவர் எழவே இரண்டு நாட்கள் ஆயிற்று.  தாத்தா, கணபதி மாமாவின் மூத்த மகன் ராமுவின் பக்கத்திலேயே இருந்து எல்லாம் செய்ய வைத்தார்.

அதன் பின், மீனாட்சி அக்கா, தன்னை ஆச்சரியப்படும் விதத்தில் தேற்றிக் கொண்டு சோகத்தில் இருந்து மீண்டது, கடைப்பொறுப்பை ஏற்றுக் கொண்டது, திருமணமாகாமல் இருந்த   ஒரு மகள் மற்றும் இரு மகன்களுக்கு ஊர்க்காரர்கள் அனைவரும் முன்னிற்க,  திருமணம் செய்து வைத்தது,  எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் வீட்டில், ஊரில் கணபதி மாமாவின் இடத்தை நிரப்பியது என எல்லாமுமே மிகச் சாதாரண வாக்கியங்களால் சொல்லிவிடுகிற விஷயமில்லை. ஒவ்வொன்றும் சரித்திரம்.

சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது, அம்மா சொன்னாள் என்று கணபதி மாமாவின் கடையில் வெல்லம் வாங்கச் சென்றேன். அது இப்போது பல்பொருள் அங்காடியாகியிருந்தது. ராமு அண்ணா கல்லாவில் இருந்தார். நான் போனதும், நிமிர்ந்து பார்த்தவர், ‘ஆத்தி, ஆரு ரவி சித்தப்பா மகளா, என்னா ஊர மறந்து போயிட்டீக, வரப்போக இருக்க வேணாமா வீட்டுப் பொண்ணுக?’ என்று அன்பாகவும் உரிமையாகவும் விசாரித்தவர், புறப்படும் போது, வெல்லத்தோடு இரு பிஸ்கட் பாக்கெட்டுக்களையும் சேர்த்துக் கொடுத்தார்.

‘எதுக்குண்ணே?’ என்ற போது, ‘வச்சுக்க பாப்பா, வீட்டுல புள்ளைங்களுக்குக் கொடு, மறுக்கா எப்ப வரியோ? வாங்கிக்க!!!’ என்ற போது, என் கையில் இருந்த பிஸ்கட், க்ஷண நேரத்திற்கு ஆரஞ்சு மிட்டாயாகத் தெரிந்தது. நிமிர்ந்து பார்க்கையில், கடைச் சுவரில், சீரியல் செட்டுக்களால் சட்டமிடப்பட்ட படங்களில் கணபதி மாமாவும் மீனாட்சி அக்காவும் சிரித்தார்கள்.

 

.

பதிவாசிரியரைப் பற்றி

24 thoughts on “நம்மில் ஒருவர்….

  1. பார்வதி அவர்களின் கதையில் கணபதி கதாபாத்திரம் போலவே அட்டகாசமாக இருப்பது இன்னுமொன்று எதுவென்றால் அவரின் எழுத்து நடை. பிசுரு இல்லாமல் சலிப்பில்லாமல் போகும் கதையை தாங்கி நிற்பது அவரின் எழுத்து நடை தான். சர்வ சாதரனமாக் நடைமுறை பேச்சில் கதை நம்மை கடக்கும் போது, கண் எதிரில் நடக்கும் ஒரு சம்பவம் போலவே யாவும் காட்சி தருவது அருமை.

  2. அருமையாக எழுதியுள்ளீர்கள் பார்வதி, வாழ்த்துக்கள்.

    நீங்கள் விவரித்த மனிதரைப் போன்றே, கேரளாவில் இருந்து வந்து பகவதி ஸ்டோர் மளிகைக் கடை நடத்தி, அப்பகுதியில் வாழ்ந்த அனைவருக்கும் இன்றியமையாது போன ஒருவரை, எனது இளமைக் காலத்தில் இதே குணநலன்களுடன் நான் அறிந்த ஒருவரை என் நினைவிற்கு கொண்டு வந்துவிட்டீர்கள். அதனால் கதை படிப்பது போன்றே தோன்றவில்லை.

    அன்புடன்

    ….. தேமொழி

  3. கணபதி என்ற அந்த மனிதர் எவ்வாறு தங்கள் குடும்பத்தில் ஒருவரானார் என்பதனை அழகாக விவரித்திருக்கிறீர்கள். இதுபோன்று, ஊர் மக்களோடு கலந்து பழகி அவர்தம் சுக துக்கங்கள் அனைத்திலும் பங்கெடுத்துக்கொள்ளக்கூடிய நல்ல மனிதர்கள் சிலர் இருக்கவே செய்கின்றனர். அவர்கள், தம் தன்னலமற்ற அன்பாலும், வாஞ்சையாலும் நம் இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாகவே இடம்பிடித்து விடுகின்றனர்.
    உயர்ந்த குணங்களின் கொள்கலனாகத் திகழ்ந்த கணபதி என்னும் அப்பெரியவர் நம்மில் ஒருவராக எனக்குத் தோன்றவில்லை…….நம்மில் மிக உயர்ந்தவராகவே காட்சியளிக்கின்றார். இறுதியில், அந்த நல்லவருக்கு ஏற்பட்ட துர்மரணம் என் கண்களைக் குளமாக்கி, மனத்தைக் கனக்கச் செய்துவிட்டது.

    அருமையான படைப்பை மிக நேர்த்தியான நடையில் தந்த திருமதி. பார்வதி இராமச்சந்திரனுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

    –மேகலா

  4. “நம்மில் ஒருவரான” கணபதி அவர்களின் வியாபார நோக்கமற்ற உண்மையான அன்பை விளக்கும் யதார்த்தமான கதை. நன்றி பார்வதி ராமசந்திரன்.
    சச்சிதானந்தம்.

  5. இதைப் போன்ற உரிமையும் அன்பும் கலந்த அன்னியோன்யம்தான் இன்றைய வாழ்வில் நாம் இழந்து கொண்டிருக்கும் பொக்கிஷம். கணபதி மாமாவின் முடிவு கண் கலங்க வைத்தது… சொல்ல வந்ததை நேர்த்தியாகச் சொன்னமைக்கு பாராட்டுகள் பார்வதி!

  6. கவிஞர் தனுசுவின் கனிவான, மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். தங்களின் பாராட்டுதல்கள் எனக்கு மிகுந்த ஊக்கம் தருகின்றன. மிக்க நன்றி.

  7. தங்களின் மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்  தேமொழி. வால்மார்ட்டுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வரும் இவ்வேளையில், உள்ளூர் வியாபாரிகளின் முக்கியத்துவ‌ம் இன்னும் கூட மிகப் பலர் அறியாததாகவே இருக்கிறது. கணபதி மாமா, என் கண் முன் நிஜமாகவே நடமாடிய ஒரு நபர். அவரது முடிவும் நெஞ்சை உலுக்கும் நிஜமே. தங்களுக்கு மிக மிக நன்றி தேமொழி.

  8. தங்களின் உருக்கமான‌ கருத்துரைக்கும் கனிவான வாழ்த்துக்களுக்கும் பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மேகலா அவர்களே!!. தங்கள் கருத்துரை, என்னை மேன்மேலும் எழுதத் தூண்டுகிறது.

  9. மிகச் சரியான வார்த்தை கவிநயா அவர்களே!!, முந்தைய தலைமுறையினர், தத்தம் தூரத்து உறவுகளுடன் கூட சரியான தொடர்பில் இருந்தார்கள். இப்போது??. அன்பை துறந்து எதைச் சென்றடைய?!!. தங்களின் பாராட்டுதல்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

  10. எழுத்தாளர் பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு, சிறுவனின் வணக்கமும், வாழ்த்துகளும்! 
    தங்கள் கதையை தற்போது தான் படித்தேன். தோழி தேமொழியை மட்டுமல்ல என்னையும் எனது மழலைப் பருவத்திற்கு இட்டுச் சென்றது இந்தக் கதை. 
    மளிகைக் கடை, தேநீர் கடை, இஸ்திரி கடை, மேஸ்திரி, காய்கறி கடை, பால்காரர், பூக்கடை, செய்தித்தாள்-அம்புலிமாமா-பாலமித்ரா போடுபவர், கோயில் குருக்கள், போஸ்ட்மேன், தெருவில் அன்றாடம் இளநீர்-பொரி-ஐஸ்-சோன் பப்படி,  என்று எனக்கு பல கணபதி மாமாக்கள்; நம்மில் ஒருவராகப் பலர் இருந்தார்கள்; அவர்களில் சிலர் இப்போதும் இருக்கிறார்கள். உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் எனக்கு, அவர்களை எல்லாம்  நினைவுபடுத்தியதற்கு நன்றி. 
    இப்போதெல்லாம் மாநகரங்களில் GATED COMMUNITY என்று ஏதேதோ கூறுகிறார்கள்; பணம் பறிக்கிறார்கள். எங்களுடைய சிறுநகரத்தில் ஊரே அப்படித்தான் இருக்கும். ஊரே ஒரு குடும்பம்.  எனக்கு கிடைத்தவையெல்லாம் என் மகனுக்கு கிடைக்க வாய்ப்பில்லை எனும் போது வருத்தமாக இருக்கிறது. 
    இந்த வரி, ஒரு நிமிடம் மனதை நிற்க வைத்தது –  
    //‘விடுடா.. எல்லாத்துக்கும் ஏதாவது காரணமிருக்கும்..’
    காரணம் எவ்வளவு கொடூரமானது என்பதை விதியைத் தவிர யாரும் அறிந்திருக்கவில்லை.//
    இப்படி பல கொடூரங்களையும், அதிசயங்களையும், ரகசியங்களையும் தன் கைகளுக்குள் ஒளித்து  வைத்திருக்கும் விதி நம்மை பார்த்து சிரித்துக் கொண்டே இருப்பதாய்த் தோன்றுகிறது. நேரம் வரும் போது ஒவ்வொன்றாய் எடுத்து விடுகிறது. 
    வாழ்த்துகள்! 

  11. கதையில் இடம்பெற்ற சம்பவங்களைப் படிக்கும் போது, படிப்பவரின் பால்ய வயதில் நடந்த நிகழ்ச்சிகளை நினைவுக்குக் கொண்டு வருகிறார் கதாசிரியர். கதையின் முடிவு சோகமாக இருந்தாலும், நேர்த்தியாக எழுதப்பட்ட சிறப்பான சிறுகதை. 

  12. எழுத்தாளர் மாதவன் இளங்கோவின் சிறப்பான கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் பணிவான நன்றிகள். தங்கள் எழுத்துக்கள் எனக்கு மிகுந்த உத்வேகம் தருபவையாக இருக்கின்றன. மிக்க நன்றி.

  13. ஒரு சில பாட்டுக்களை கேட்கும் போது நம்மையும் அறியாமல் அவை நம்மை வேறொரு உலகத்திற்கு, மலரும் நினைவுகளுக்கு இழுத்து செல்லும்… ஒரு சில கதைகளும் அப்படித்தான் !!! 

    தங்களின் கதையும் இப்பொழுது அப்படியொரு தாக்கத்தைத்தான் ஏற்படுத்தி இருக்கிறது . உண்மைதான், நம் வீட்டிலே ஒருவராக வாழ்ந்த, மளிகை கடைக்கார அண்ணாச்சி , பால் ஊற்றும் தாத்தா , புடவை வியாபாரம் செய்யும் மாமா, சாஸ்த்ரிகள் என்று நீண்டு கொண்டே போகும் அந்த பட்டியலில் பணத்தால் செய்யப்படும் பரிவர்த்தனையை விட பாசமே மேலோங்கி நிற்கும் !
    80 களில் பிறந்த எனக்கு நிறைய கணபதி மாமாக்கள் இருந்தார்கள் ஆனால் இன்று என் மகனுக்கு சொந்த மாமாவையே சரியாக தெரியுமா என்று தெரியவில்லை. காலத்தின் கட்டயமாக உறவுகள் எல்லாம் உலகில் ஆளுகொரு திசையில் சிதறுண்டு கிடக்கிறார்கள் . 

    தகவல் தொழில்நுட்பத்தால் உலகமே சுருங்கி Global village ஆகி விட்டது என்று பெருமையாக சொல்லி கொள்ளலாம். ஆனால் 
    அன்னியோனியம் என்பது வெறும் பகற்கனவே !!! 

    சமூக வலைத்தளங்கள், skype போன்றவைதான் உறவுகளையே ஓட்ட வைத்து கொண்டிருக்கறது . நிழலான நிஜங்களோடு வாழ பழகி கொண்டு விட்டோம் என்பதே சுடுகின்ற உண்மை .

  14. தங்களது நீண்ட, அருமையான கருத்துரைக்கு மிக்க நன்றி தேவிப்ரியா இளங்கோ அவர்களே!!. தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை. மீண்டும் தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

  15. Hats off to Mrs Parvathy for two reasons.

    1. One for your style of writing. Very simple language and very interactive.

    2. Second for helping many realise the” Humanism”, which everyone has forgotten. Be it relation, friendship, office or Business every where and every one needs to understand & practice. But  naam ivatrai ellam tholaithu vittu Kaasukkaka alayund Kazhugugal Aaanon. Atleast this will help many to realise.

    Goodwork for a Social cause.  Good wishes.

  16. Excellently narrated story.
    The way of narration, makes us to get involved with the story in depth.
    Good one.
    PARAMESWARAN

  17. என்மகள் பார்வதி ராமச்சந்திரன் வல்லமையில் எழுதிய ‘நம்மில் ஒருவர்’ என்ற சிறுகதையைப் படித்தேன் நம் ஊர்களின் உயர்வுக்கு உதவிய சிறுகதை வியாபாரிகளின்பெரிய மனத்தைப் பொருத்தமாக விளக்கியுள்ளார். அவற்றை இழந்துகொண்டே இருக்கிறோமே என்கிற ஏக்கத்தை எல்லாருக்கும் உருவாக்கிவிட்டார். தொடர்ந்து இத்தகைய கதைகளை என் மகளிடமிருந்து எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.-(சித்தப்பா)புலவர் இராமமூர்த்தி அரிசோனா யு. எஸ்   

  18. என் தங்கையின் திருமணதிற்கு எங்கள் வாடிக்கை மளிகை கடை பாய் 
    திருமணதிற்கான மளிகை பொருட்கள் அனைத்தையும் கடனாக கொடுத்து உதவியதை 40 வருடங்களுக்கு பிறகு கண்களில் நீர் பனிக்க 
    நினைவுக்கு கொண்டுவந்தது.இதயமே இல்லாத வறட்டு அன்னியவணிகம் நெஞ்சில் ஈரமே இல்லாமல் லாபத்தைமட்டுமே குறியாய் செயல் படும் நிலையில் இதையெல்லாம் அதிர்பர்க்கமுடியுமா?ஓராயிரம் வால்மார்டுகள் வந்தாலும் தெருமுனை 
    மளிகை கடைகாரர் ஆக முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக நிலைநாட்டியது சிறுகதை!கதாசிரியரின் எழுத்துநடை மனதில்தைத்தது .மேலும்பலகதைகளை எதுர்பார்க்க ஆவலைதூண்டியது.
    ச.இராசன்
    திருச்சி 

  19. பாராட்டுதல்களை மனமாரத் தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். உங்கள் அனைவரின் பாராட்டுதல்களும்  நான் மேன்மேலும் எழுத, எனக்கு  ஊக்கம் தருபவையாக‌ இருக்கின்றன.

  20. மிகவும் தத்துருவமாகவும், தங்கு தடையில்லாமல் ஒரு தெளிந்த நீரோடையாகவும் அதிலே கணபதி எனும் தென்றல் நீந்தி எழுந்து வந்து எனத் இதயம் வருடிப் போவதாகவும் உணர்கிறேன். அருமை, அற்புதம், இவரைப் போன்ற நல்ல மனிதர்கள் அல்ல ஒரு மனிதரை ஊர் பெற்று இருந்தால் அது அந்த ஊர் செய்த புண்ணியம். 

    ஐந்தாறு வருடம் வரை பணத்தை கணக்கு செய்து பெறாமல் பெறாமல் காய்கறிகளை எங்களுக்கு கடனாகத் தந்த எங்கள் ஊர் ராமு அண்ணனை நான் பல நேரங்களில் நன்றியோ நினைப்பதுண்டு… அவரை இப்போது என் மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி இருத்தி விட்டீர்கள்.

    வாழ்த்துக்கள் சகோதரி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *