இங்கிலாந்திருந்து ஓரு மடல்!……(49)
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்களுடன் வசந்த கால வாசலிலே நின்று இங்கிலாந்திலிருந்து இம்மடலை வரைகிறேன்.
காலம் யாருக்காகவும் காத்து நிற்பதில்லை . கடலிலே வீசும் காற்று எந்தத் திசையில் வீசுகிறது என்பதை ஒரு பாய்மரக் கப்பலின் மாலுமி நிர்ணயிப்பதில்லை ஆனால் அக்காற்றின் திசையிலே தனது பாய்மரத்தைக் கட்டி தான் போக எண்ணும் திசையிலே தனது கப்பலை ஓட்டிச் செல்வதுதான் அம்மாலுமியின் திறமை .
அது போலத்தான் ஓடும் காலத்திற்கேற்ப தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அந்தத் திசையிலே தனது வாழ்க்கைப் பயணத்தைச் செலுத்திச் செல்பவர்களே ஓரளவு நிம்மதியான வாழ்வைத் தேடிக் கொள்கிறார்கள்.
புலம்பெயர் வாழ்க்கை என்பது பலருக்கு பலவிதமான சூழல்களிலே நிகழ்ந்துள்ளது. சிலர் மீது திணிக்கப்பட்டது ,சிலர் தாமாகவே தேடி எடுத்துக் கொண்டார்கள் வேறு சிலரோ காற்றுத் திசைமாறி வீசியதால் வேண்டாத கரையொதுங்கிய படகினைப் போல ஏதோ ஒரு காரணத்தினால் புலம்பெயர் வாழ்க்கையினுள் புகுந்து கொண்டார்கள்.
சரி இத்தனை ஆலாபனையோடு எதைச் சொல்ல வருகிறேன் எனும் கேள்வி எழுவது இயற்கை . விடயத்திற்கு வருகிறேன்.
புலம் பெயர்ந்த நாம் எத்தனையோன் வித்தியாசமான நாடுகளிஉல் இருந்து , வித்தியாசமான கலாச்சாரங்களிலிருந்து உதித்தவர்கள். ஆனால் எம்மையெல்லாம் ஒன்றிணைப்பது நாம் வாழ்வதற்காக வந்து சேர்ந்த இப்புதிய சமுதாயத்தின் கலாச்சாரம்.
பல நாடுகளில் இருந்து வந்த பலரும் தமது கலாச்சார விழுமியங்களைத் தம்மோடு தக்க வைத்துக் கொள்வதற்காக தத்தமது கலாச்சாரங்களைத் தாம் புகுந்த நாடுகளில் வித்தியாசமான வகைகளிலே விதைக்கிறார்கள் . இதுதான் யதார்த்தம்.
கலாச்சார விழுமியங்களைப் பாதுகாத்து தமது முகவரிகளைத் தக்க வைத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கைகள் நியாயமானவையே ஆனால் அந்நடவடிக்கைகள் தாம் வாழும் தமது சமுதாயத்தின் யதார்த்த வாழ்விலிருந்து அவர்களைப் பாகுபடுத்தத் தொடங்கும் போது அதைத் தவிர்த்துக் கொள்ள வகுக்க வேண்டிய எல்லைகளைப் பற்றிச் சிந்திப்பது அவசியமாகிறது. .
இதற்கான அவசியம் என்ன வந்தது ? என்னும் கேள்வி சில முனைகளில் இருந்து எழுவது சகஜமே !
புலம் பெயர்ந்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களின் அடுத்த தலைமுறை எதிர்நோக்கும் பிரச்சனைகள் அலசி ஆராயப்பட வேண்டியது அவசியமே !
நான் இங்கிலாந்துக்கு வந்தி இப்போது 38 ஆண்டுகள் ஆகி விட்டது. என்னோடு சமகாலத்தில் புலம் பெயர்ந்தவர்களின் கண்ணோட்டத்திலே எடுத்துப் பார்க்கும் போது எமது அடுத்த தலைமுறை தமது வாழ்க்கையின் நடுப்பகுதியை விரைவாக அணுகிக் கொண்டிருக்கிறது .
கல்வியின் அவசியத்தை எத்தனை ஆணித்தரமாக வர்களின் மனதிலே பதிவிக்கிறோமோ அத்தனை ஆணித்தரமாக சமுதாயத்தோடு எமது கலாச்சார முகவரியை இழக்காமல் எவ்வகையில் கலக்கலாம் என்பதை எடுத்துச் சொல்லுகிறோமா? என்பது சந்தேகமே !
என் சமகாலத் தலைமுறையைச் சேர்ந்த பலர் தாம் வாழும் இச்சமூகத்திலே சிருபான்மையாக நடக்கும் இனத்துவேஷ நிகழ்வுகளை முக்கியமாகக் கணித்து வளரும் தலைமுறையின் மனதில் தன்னம்பிக்கையின் அளவைக் குறைத்து விடுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது .
நான் அறிந்தவர்களில் பலரின் அடுத்த தலைமுறை தமது வாழ்க்கைத் துணைகளைத் தமது சமூக எல்லைகளுக்கப்பால் தேர்ந்தெடுக்கும் ஒரு நிலை பரவலாகக் காணப்படுகிறது .
இன்றைய இங்கிலாந்துச் சமுதாயத்தை எடுத்துக் கொண்டால் மேம்பட்ட கல்வியறிவு ஒன்று மட்டும் வாழ்வைச் சரியான முறையில் நடத்திச் செல்ல உதவும் என்று சொல்ல முடியாது.
இந்தச் சமுதாயத்தில் இச்சமூகத்தின் பெரும்பான்மையினராகிய வெள்ளை இனத்தவருடன் சமாளவில் பணிகளுக்காக போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்லப்படும் இளையதலைமுறையின் மனதில் தாழ்வு மனப்பான்மை எனும் தன்னம்பிக்கையைச் சிதைக்கும் மனோநிலை கணப்படுமாயின் அவர்கள் வாழ்க்கை எனும் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்வதே கடினமாகிவிடும்..
நாம் தேடிக் கொண்ட வாழ்க்கையில் வாழ்வாதரத்திற்குத் தேவையான வசதிகளை நல்கி எம் வாழ்வில் ஓரளவு வெற்றியீட்டக்கூடிய சந்தர்ப்பங்களை அளிப்பதில் இச்சமூகத்தின் பொதுவான பெரும்பான்மை இனத்தவரில் பெரும்பான்மையோரின் ஆதரவு கிட்டிய உண்மையையும் வளரும் சமூகத்தின் இளமைப்பிராயங்களிலே எடுத்துச் சொல்வது பெரியோரின் கடமையாகிறது .
கசப்பான உண்மை ஒன்று உண்டெனில் அது பல புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் தாம் நிலையாக வாழும் இப்புலம்பெயர் நாடு வாடகை வீடு என்றும் தாம் பிறந்த மண்ணே தமது சொந்த வீடு எனும் மனப்பான்மையும் மேலோங்கி இருக்கிறது என்பதே .
இத்தகிய மனப்பான்மையின் விளக்கத்தை நான் எமது கலாச்சாரத்தைக் கைவிட்டு அந்நியக் கலாச்சாரத்தை பின்பற்றுவதை ஆத்ஹ்ஹ்ஹரிக்கிறேன் எனும் பிழையான விளக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டாம் .
கலாச்சாரத்தின் அடையாளங்களை நிச்சயம் காத்துக் கொள்ல வேண்டும். ஆனால் அக்கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு நாம் அடுத்தவருடன் பழகும் பண்பின் தன்மையில் தங்கியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகிறது .
அடையாளத்தைத் தொலைத்து விடாமல் , நாம் வாழும் சமுதாயத்தின் வாழ்வோட்டத்தில் எஏஎம்மை இணைத்துக் கொண்டு புலம்பெயர் நாட்டின் வளர்ச்சியில் நாம் முக்கிய பங்கு வகிக்கிறோம் ந்ன்பதில் பெருமிதம் கொண்டு வாழ்வதே ,
” தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா ” எனும் வாசகத்தை வாழ வைக்கும் .
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்




