தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 13

1

திவாகர்

எத்தனைதான் கல்கி அவர்களால் தேவன் பத்திரிக்கை உலகுக்கு அழைக்கப்பட்டிருந்தாலும், தேவனை சற்று உயர்த்தியே பார்க்கிறார் முதுபெரும் எழுத்தாளர் அசோகமித்திரன். ‘அந்தக் காலகட்டத்திலேயே ‘அடுத்த தலைமுறை’ எழுத்தாளராக வாசகர்களால் பார்க்கப்பட்டு தன் எழுத்தால் அத்தனை பேரையும் கவர்ந்திருக்கிறார்’ என்று புகழ் பாடுகிறார்.. தமிழின் சார்லஸ் டிக்கின்ஸாக புகழ் பெற்றவர் தேவன் என்று எழுத்தாளர் அசோகமித்திரன் அவரை  வர்ணித்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை எந்தவொரு எழுத்தாளனும் தன்னுடைய தனித் திறமையாலும் சிந்தனையாலும் மாறுபட்டே இருக்கிறான் என்றே சொல்வேன். ஆகையினால் ’இந்த எழுத்தாளர் அந்த சிறந்த எழுத்தாளரைப் போன்றவர்’ என்ற ஒப்புநோக்குதலுக்கு அப்பாற்பட்டு இருப்பவர்தான் நல்ல எழுத்தாளர். அந்த நல்ல எழுத்தாளர் வரிசையைச் சேர்ந்தவர்தான் தேவன்.

தேவன் எழுத்தில் மிளிர்ந்த ஒரு முக்கியமான தொடர் ‘அப்பளக்கச்சேரி’. இதைப் படித்தவர்கள் இதை எழுதியது தேவன் எனும் ஆண் எழுத்தாளர்தானா அல்லது யாரேனும் பெண் எழுத்தாளர் தேவன் பெயரில் எழுதி வருகிறாரா என்ற சந்தேகம் நிச்சயம் ஏற்படும். காரணம், இந்த அப்பளக் கச்சேரியில் அலசப்படும் சம்பவங்களும், பெண்களின் மனநிலையையும் அப்படியே வெளிப்படையாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கும் நேர்த்திதான். இப்போதெல்லாம் அப்பளம் இடுவதென்பது குடும்பங்களில் மிகவும் குறைந்து போயிற்றோ என்னவோ.. ஆனால் அந்தக் காலக் கூட்டுக் குடும்பங்களில் அல்லது குழுமக் குடும்பங்களில் இந்த அப்பளமிடுதல் என்பது ஏறத்தாழ வீட்டுப் பெண்டிருக்கு ஒரு பண்டிகை போல இருக்கும். (என் சின்ன வயதில் எங்கள் கிராமத்தில் எனக்கும் பிடித்த நிகழ்ச்சி இது – காரணம்  இந்த அம்மாக்கள் பாராத சமயத்தில் ருசிகரமான அந்தப் பச்சை அப்பள உருண்டைகள் ஓரிரண்டு அப்படியே ‘அபேஸ்’ செய்து சாப்பிடும்  தருணங்கள் விசேஷமானவைதான்).

தேவனின் ’அப்பளக் கச்சேரியும்’ இந்த பெண்டிர்களின் கலாட்டா கச்சேரிதான். வயதான பாட்டிகளிலிருந்து இளம் வயது கன்னிப் பெண்கள் வரை கலந்து கொண்டு உலக  அரசியல் விஷயங்களோடு அத்தனை வீட்டு வம்புகளுடன், குடும்பம், நோய்நொடி, ஆன்மீகம், பண்டிகை, லேடிஸ் கிளப் கிண்டல்களோடு அத்தனையும் ஒரு விளாவல் விளாவி கடைசியில் ‘ஒரு ரெஸிபி’ யுடன் செய்முறையும் கலந்துரையாடல்களாக நகைச்சுவையாக விளக்கப்பட்டு ஒவ்வொரு தொடர் கட்டுரையும் முடியும். அப்பளக் கச்சேரியில் தேவனின் எழுத்துகள் அந்தக் கால வாசகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதாக இன்னமும் தேவனின் ரசிகர்கள் சொல்லிப் பெருமைப் படுகின்றனர். பெண்கள் உள்மனதில் ஓடும் எண்ணங்கள், அவர்கள் ஏக்கம், அன்பு, பாசம், குமைச்சல், அக்கறை என அவர்கள் உள்ளத்தில் புகுந்து கொண்டு அத்தனை எண்ணங்களையும் வெளிக்கொணர்ந்தது என்பது ஒரு சாதனைதான். ஆழ்கடலில் ஆழத்தை அளந்தாலும் அளக்கலாம், ஆனால் பெண்களின் உள் மன ஆழத்தை யாராலும் அளக்கமுடியாது என சினிமா வசனங்கள் உண்டு. நாமும் நிறைய கேட்டிருக்கிறோம், இதையெல்லாம் பொய்யாக்கியவர் தேவன்.

அதே போல கடித இலக்கியம் தேவனால் பெருமைப் படுத்தப்பட்டது. அவர் காலத்தில் தமிழ் எழுத்துலகுக்கு சீரங்கத்து சீதனமாகக் கிடைத்த  எழுத்தாளர் ‘குமுதினி’ இராமாயணத்தில் சீதா பிராட்டி  தனக்கு ஒரு பட்டுச் சேலை வேண்டி தன் அம்மாவுக்குக் கடிதங்கள் நகைச் சுவையாக எழுதுவதாக ஆனந்த விகடனில் ஒரு கற்பனைக்கதை வந்தது. குமுதினியும் தேவனும் ஒரே வகை ரத்தம் போல. தேவன் கடிதம் வாயிலாக பல கதை கட்டுரைகள் எழுதியுள்ளார்.

ஒரு நகைச்சுவை கடிதம் ஒன்று ‘செக்கு சமாசாரம் என்ற தலைப்பில்  ’பணமில்லாத’ வங்கிக் காசோலைப் பற்றியது. இந்த காசோலை கொடுத்த அந்த கடன்காரர் தம் வங்கியில் அதற்கு தேவையான பணமில்லாமையால் முதலில்  வேண்டுமென்றே தவறுகள் வைத்து எழுதிய ‘செக்’ ஒன்றை (ரூ 37 அணா 8 காசு 7 மதிப்பில்) கடன் கொடுத்தவருக்கு அனுப்புகிறார்.. இதற்கான சம்பந்தப்பட்ட அந்த இருவரிடையே கடிதப் போக்குவரத்து போராட்டம்தான் இந்தக் கதை. ஒவ்வொரு கடிதத்திலும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொள்வதும் குடும்ப நலன்கள் தெரிவிக்கப்படுவதுமல்லாமல் மறக்காமல் தவறான முறையில் எழுதப்பட்ட செக்கை மறுபடியாக சரியாக எழுதி கையொப்பமிட்டு அனுப்புக என்றும் இவர் கேட்பதும், அந்த கொடாக்கண்டர் அவர் பாணியிலேயே கடிதத்தில் உபயக்குசலோபரிகள் செய்து கொள்வதும் அதே சமயத்தில் ஏதோ சின்னத்தவறால் அந்தக் காசோலை அனுப்பிவிட்டதாகவும் எழுதிக் கடைசியில் அந்தக் கொடாக்கண்டர்  இந்த இடைப்பட்டக் கடிதப் போக்குவரத்துக்கிடையே அவர் சௌகரியத்துக்கு வேண்டிய காலம் எடுத்துக் கொண்டு ஒழுங்கான காசோலையை ஒழுங்காக அனுப்பி வைப்பதாக முடியும். இதோ அந்தக் கடைசிக் கடிதம்

ஸ்ரீமான கில்லாடி சர்மாவிடமிருந்து சீமான் கிட்டி சுட்டி ஐயருக்கு!

தங்கள் கடிதம் கிடைத்தது. தங்களுக்கு இதுவரை நம்பிக்கை இல்லாமல் இருந்தது ஒருபுறமிருக்க, என்னுடைய ‘செக்’ நான் முதலில் கொடுத்தவுடன் பாங்கிக்குப் போயிருந்தால், அதில் கண்ட தொகையில் ரூ 37-8-7 குறையத்தான் தங்களுக்குக் கிடைத்திருக்கும். அதனால்தான் இவ்வளவு காலதாமதம் செய்யவேண்டி வந்தது… தங்கள் சம்சாரம் குழந்தைகள் சௌக்கியமா?”

தங்கள் அன்பார்ந்த

கில்லாடி சர்மா.

சரசுவுக்குக் கடிதங்கள், போடாத தபால் போன்றவை கடித இலக்கியங்களில் நிரந்தரமாக இருக்கவேண்டியவை. போடாத தபால் என்பதன் பெயரில் இருந்தே புரியும் அவை எப்படிப்பட்டதாக இருக்குமென்பது. இவை அந்தந்த காலகட்டத்தில் நடக்கும் நாட்டு நடப்புகளைக் கவனித்து எழுதப்படும் கடிதக் கட்டுரைகள்தானென்றாலும், ஒவ்வொரு நிகழ்ச்சியின் பேரில் தேவனின் அபிப்ராயங்கள் கூட நமக்கு விளங்க வைக்கும்.  அப்படிப்பட்ட ஒரு சிறிய கட்டுரை ஒன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் டோரிக் கட்சி தாம்தான் இந்தியாவின் சுதந்திரத்துக்கு பூர்வகாரணம் என்று தங்களை பெருமையோடு பேசிக்கொண்டதை தேவன் தன் பாணியில் கிண்டல் செய்கிறார் ஒரு கடிதம் மூலமாக, இதோ உங்களுக்காக தேவன் எழுத்தில் (நன்றி – பேராசிரியர் பசுபதி அவர்கள்)

டோரிக்கட்சி அங்கத்தினர் திரு ரிச்சர்ட் பட்லர் அவர்களுக்கு

ஒரு இந்தியன் எழுதிக் கொண்டது:

பார்லிமெண்ட் சபையில் நீங்கள் எங்கள் தலைவர் நேருஜியைப் புகழ்ந்து பேசியதற்காக தொழிற்கட்சி அங்கத்தினர் மைக்கேல்புட் உங்களை பரிகாசம் பண்ணியதாக பத்திரிகையில் படித்தேன்.”இந்த டோரிக் கட்சி பதவியில் நீடித்திருந்தால் பிரிட்டிஷ் சர்க்கார் நேருஜியிடம் பேச சந்தர்ப்பமே ஏற்பட்டிராது.  ஏனெனில் அந்தக் கட்சி அவரை சிறையில்தான் வைத்திருக்கும்” என்று மைக்கேல்புட் உங்களை ஏளனம் செய்தாராம். அதற்கு நீங்கள் மைக்கேல்புட் இந்தியாவைப் பற்றி நினைப்பதற்கு முன்பிருந்தே அதன் சுயாட்சிக்காக நீங்கள் பாடுபட்டு வந்ததாகவும், இந்திய அரசியல் சட்டம் 1935 இலேயே நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டீர்கள் என்று அறிந்து கொண்டேன். இந்தியாவிடம் உள்ள உங்கள் நல்லெண்ணத்தை மதித்திருக்கமுடியுமென்றும், இப்படியெல்லாம் வாக்குவாதம் நடந்தது என்றும் படித்தேன்.

இந்த விவாதத்திலிருந்து எனக்குப் புரிந்ததெல்லாம் இந்தியாவுக்கு சுயராஜ்ஜியம் அளித்ததில் நீங்கள் பங்கு உரிமை கொண்டாடுகிறீர்கள் என்பது. இதை நான் மறுக்கவே இல்லை. ஆனால் இந்திய சுதந்திரத்துக்கான பங்கு உரிமையை நீங்கள் கோரினால் அது உங்களோடு மட்டும் நின்றுவிடமுடியாது. உங்கள் மூதாதையர்கள் பலருக்கும் அதில் பங்குண்டு. உண்மையில் பிரிட்டிஷ் இந்தியாவை ஸ்தாபித்த ராப்ர்ட் கிளைவ், வாரன் ஹாஸ்டிங்ஸ் போன்றவர்களுக்கே முதல் பங்கு கொடுக்கவேண்டும். ஏனெனில் அவர்கள்தான் இந்தியாவின் சுதந்திரத்துக்கு மூலகாரணம்.

இந்தியாவை அடக்கி ஒரே அன்னிய தேசக் கொடியின் கீழ்  (அவர்கள்) :வைக்கவில்லை என்றால் இந்த நாட்டில் சுதந்திர இயக்கம் நடந்தே இருக்காது. இந்தியா சிறு சிறு ராஜ்யங்களாக அந்தந்த சமஸ்தான மன்னர்களின் கையில் ஒவ்வொரு பகுதியாக இருந்திருக்கும். அவர்களும் தங்கள் சொந்த தேசத்தினரை இந்த அளவு சுரண்டவோ அடக்குமுறையைக் கையாளவோ செய்திருக்கமாட்டார்களாதலால் விடுதலைக் கிளர்ச்சியும் பெரிய அளவில் நடந்திராது. தேசமும் இப்போதுபோல் ஒன்றுபட்டு குடியரசாகி இருக்காது.

ஆகையால் இந்தியா சுதந்திரம் பெற நீங்களும் உங்கள் தலைமுறையினர் மட்டுமல்ல காரணஸ்தர்கள். முதன் முதலில் இந்தியாவில் உங்கள் ஆட்சியை ஸ்தாபிக்க முயன்றவர்கள் தொட்டு சர்ச்சில் துரை கூட்டத்தார் அனைவருமே காரணஸ்தர்கள்தான். இந்தத் தொழிற்கட்சிக்கு ஒரு சிறு பங்கு கூட கிடையாது என்று நானே ஒப்புக் கொள்ளத் தயார். மறுபடியும் உங்கள் கட்சி பதவிக்கு வந்தால் ஒருவேளை இந்தியா ஒருபடி மேலும் சுதந்திரம் அடையலாம். அதாவது காமன்வெல்த் தொடர்பிலிருந்து கூட அது விலகவிடக் கூடிய நிர்ப்பந்தம் ஏற்படலாம்.

ஒரு இந்தியன்.

மேலே எழுதப்பட்ட கடிதத்தை ஊன்றிப்படித்தால் தேவனின் நகைச்சுவை உணர்வுடன் இன்னொன்றும் புரியும். ஏராளமான சிறு சிறு நாடுகளாகப் பிரிந்து தங்களோடு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த நம் இந்திய நாட்டு ராஜாக்களை, அவர்கள் நாடுகளையெல்லாம் ஒன்று சேர்த்த பெருமை இங்கிலாந்துக்குதான் உண்டு என்கிறார். அது உண்மைதானே. பிரிட்டிஷார் வருமுன்னே நம் பாரதத்தில்தான் எத்தனையெத்தனை நாடுகள் இருந்தன. 1911 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் இந்தியத் தலைநகரில் ’ஏகாதிபத்திய சக்கரவர்த்தி’ என முடிசூட்டிக் கொண்ட போது அவருக்குப் பரிசுகள் கொடுக்க போட்டிப் போட்டுக்கொண்டு வரிசை கட்டிய மன்னர்கள் படத்தை திரு ஏ.கே செட்டியார் திரைப்படமாக எடுத்திருக்கிறார். (இதுதான் இந்தியாவிலேயே இந்தியர் அதுவும் தமிழர் எடுத்த முதல் திரைப்படமாகும்)

தேவன் இந்தக் கடிதக் கட்டுரையில் இந்தியா எனும் தேசத்தை ஒருமித்த குடியரசாக ஒன்று சேர்த்தது பிரிட்டிஷ்தான் என்று பாராட்டியதோடு மட்டுமல்லாமல் கூடவே பிரிட்டிஷாரின் இந்திய வளச் சுரண்டலையும் அடக்குமுறையும் தேவன் கண்டிக்கத் தவறவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

’போடாத தபாலி’ல் எல்லா அரசியல் நாட்டு நடப்புகளையும் அவர் பாணியில் அலசுவதைத் தவறாமல் ஆனந்த விகடனில் பிரசுரித்து வந்தார் தேவன். இப்போதெல்லாம கடித இலக்கியம் என்ற பகுதியே தமிழில் இல்லை என்பது ஒரு வருத்தத்துக்குரிய செய்திதானே.

அதே போல பயணக் கட்டுரைகள் முக்கியமாக வெளிநாட்டு பயண அனுபவங்களை சுவையாக எழுத்தில் வடிப்பது என்பது சுவாரசியமான கலைதான். ஒரு வெளிநாட்டைப் பற்றி தெரிந்துகொள்வது இயல்பாகவே நமக்குப் பிடித்த விஷயமாகும். ஆனால் சில எழுத்துகள் நமக்கு மறவாத நினைவுகளைத் தருபவை. இந்த நிறைவைத் தரும் வகையில் தேவனின் ஐந்து நாடுகளில் அறுபது நாட்கள் தொடர் ஆனந்தவிகடனில் ஐம்பதுகளில் வந்தது. தெற்காசிய நாடுகளில் இரண்டு மாதம் பயணம் செய்து அந்த அனுபவங்களைத் தொடராக சுவாரசியமாக எழுதினார் அவ்ர். பயணக் கட்டுரைகள் தமிழில் முதல் முதலாக எழுதியது தமிழகத்தின் அன்றைய சாதனையாளராக திகழ்ந்த ஏ.கே. செட்டியார் என்பார்கள். அடுத்து 1930 களின் கடைசியில் கல்கி இலங்கைக்குப் பயணம் செய்து ஆனந்த விகடனில் ஒரு சிறு தொடராக தன் பயண அனுபவங்களை வெளியிட்டார். தேவனின் பயண எழுத்துகள் இயற்கையாகவே நகைச்சுவை கலந்து எழுதப்பட்டதால் தேன் கலந்த பலாச் சுளை போல வாசகர்களுக்கு இனித்தன என்று சொல்லவும் வேண்டுமோ.

இத்தனை எழுதிய தேவன் ஏன் சரித்திர நாவல்கள் எழுதவில்லை என்று காரணம் கேட்டால் அவர் அல்பாயுசில் மறைந்து போனது மட்டும்தான் காரணம் என்பேன். தென்னாட்டுச் செல்வங்களில் பல கட்டுரைகளை எழுதியவர், அத்தனையும் சரித்திர சம்பந்தப்பட்டவை, புராணக்கதைகளின் அடிப்படையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் என நூற்றுக்கணக்கான விஷயதானங்கள் செய்தவர். இப்படிப்பட்ட கலைஞருக்கு, நல்ல கதையாளருக்கு ஒரு சரித்திர புதினம் எழுதுவது கடினமா என்று கேட்டால் யாருமே இல்லை என்றுதானே சொல்வார்கள். சரித்திர ஆராய்ச்சியும், பாரதத்தின் பண்பாட்டில் மிகுந்த அக்கறை கொண்டவருமான தேவன் மட்டும் 44 வயதில் மரணிக்காமல் இருந்திருந்தால் வாசகர்களுக்கு இருந்த இந்தக் குறையையும் நிவர்த்தித்திருப்பார் என்றே நினைக்கிறேன். ஆனாலும் ஒரு சரித்திர சிறுகதை ஒன்று இமயமலையில் ஒரு சிறு படையொன்று பனிக்காலத்தில் சென்று மாட்டிக்கொண்டதைப் பற்றிய கதை எழுதி இருக்கிறார். ஒருவேளை தேவன் தன் வாழ்நாள் குறைவாகவே இருந்தாலும் ’இவர் பழைய சரித்திரமே தொட்டதில்லை’ என்று எதிர்காலம் சொல்லிவிடக்கூடாதே என்பதற்காக அவசரம் அவசரமாக ஒரு கதை எழுதினாரோ என்னவோ.. அது அவரது சிறுவயதில் வாழ்நாள் முடிந்த சோகக்கதையைப் போலவே இந்த சிறுகதையும் அவரின் இயற்கையான ஹாஸ்யநடை இல்லாமல் சோகத்தில் முடிந்தது.

(இன்னும் வரும்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 13

  1. ‘இத்தனை எழுதிய தேவன் ஏன் சரித்திர நாவல்கள் எழுதவில்லை என்று காரணம் கேட்டால் அவர் அல்பாயுசில் மறைந்து போனது மட்டும்தான் காரணம் என்பேன்.’

    ~ என் கருத்தும் அதுவே. மேலும், தேவன் தத்க்ஷண தச்சன். எதை பற்றியும் அவரால் க்ஷணத்தில் எழுத முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *