விஜயன்

உருட்டும் சத்தம் கேட்டது. தூக்கம் என் கண்களை விட்டுப் பிரிய, அதே வினோத ஒலி வழக்கம் போல் ஒலிக்கத் துவங்கியிருந்தது. கண்களோரம் ஒட்டியிருந்த அழுக்கைத் துடைத்தேன். கொட்டாவி வந்தது. தூக்கம் போதவில்லையோ என்று தோன்றிய சிந்தனை, படுக்கையை விட்டு எழுந்தவுடன் தானாய் மறைந்தது.

அறைக் கதவை திறந்தேன். சமையல் வாசனை வீட்டை நிறப்பிக் கொண்டிருந்தது. அம்மா சமையல் செய்து கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம் அது. உறக்கத்தை விட்டு எழுந்திருக்கவே சிரமப்படுகிறேன், அம்மா எப்படி முன்பே எழுந்து, சமையல் செய்து, அப்பாவிற்கு பணிவிடை செய்து, தானும் வேலைக்கு கிளம்புகிறார்?

சிந்தனையுடன் வாசல் கதவைத் திறந்தேன். குளிர்காற்று முகத்தை வருடியது. நெஞ்சுக்குள் ஏதோ ஓர் இனம் புரியா உணர்வு மேலிட்டது. காலணி அணிந்து, மெல்ல நடந்தேன். பௌர்ணமியின் ஆதிக்கம் முழுமையாக இருந்தது. அவ்வற்புதக் காட்சியினைக் கண்டு இரசித்தேன். பக்கத்து வீட்டைப் பார்த்தேன். வீட்டு வாசலில் சுப்பையா தாத்தா அமர்ந்தபடியே நிலவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகே ஒரு நாயும் அமர்ந்திருந்தது.
“எப்படி தாத்தா இருக்கிங்க?” நான் வேளியருகே சென்றுக் கொண்டே, நலம் விசாரிக்கும் சாக்கில் அவரோடு உரையாட முயன்றேன். வழக்கம் போல் விடக்கென எழுந்து வீட்டினுள் சென்று தாழிட்டுக் கொண்டார். ஆனால் இம்முறை, என்னைப் பார்த்து ஒரு கனம் முறைத்தார். எனக்கு திக்கென்று இருந்தது.
சுப்பையா தாத்தாவிற்கு இப்பொழுது ஏறத்தாழ அறுபத்தைந்து வயதிருக்கும். முன்பு ஆசிரியராகப் பணிப்புரிந்தவர். சீரான உடை, சிறந்த பண்பு என்று என்றும் ஒரு ஆசிரியனாக்வே வாழ்ந்தவர். அவருடைய மகனும் மகளும் ரஷ்யாவில் மருத்துவம் பயின்றனர். அவர்களுடைய படிப்பிற்கும் இதர செலவிற்கும் கடன்பட்டு செலவளித்தார். மனைவி முனியம்மாள் இல்லத்தரசி. மென்மையான அகமும் முகமும் கொண்டவர்.
சுப்பையாவிற்கு மாதந்தோறும் பென்ஷென் வந்தாலும், வீட்டில் தனி வகுப்பு நடத்தி வருமானத்தைப் பெருக்கினார். அப்பொழுதெல்லாம் அவரைக் கண்டாலே எனக்குள் ஒரு வகை பயம் தோன்றும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சுப்பையா தாத்தாவிற்கு, குடல் நோய் ஏற்பட்டது. வெளிநாட்டில் மருத்துவம் பெற்று சில நாட்களிலே குணமடைந்தார். சில மாதங்கள் கழித்து, ஒரு முறை அவர் என் அப்பாவோடு பேசிக் கொண்டிருக்கையில், திடீரென இறும்பினார். அதில் இரத்தம் கசிந்திருந்தது. இறுமியவர் மயக்கமிட்டு விழுந்தார். இம்முறை மருத்துவம் பலனலிக்காது போனதுமட்டுமல்லாது அவருக்கு ஆயுள் காலத்தையும் கனித்துக் கொடுத்தது. டியூசன், அதிகாலை வாக்கிங் என்று ஒவ்வொன்றாக நிறுத்தினார், சுப்பையா தாத்தா. வீட்டில் சிறைவாசம் அனுபவித்தார். நாளுக்கு நாள், அவர் உடல் மெலிந்து கொண்டே போனது. கணவனின் நிலையை எண்ணி,எண்ணி, முனியம்மாளும் நோய்வாய்ப் பட்டாள். ஒரு நாள் நள்ளிரவில் அழுகைச் சத்தம் பெரிதாய் ஒலித்தது. அது சுப்பையா தாத்தாவின் குரல் தான். நானும் அப்பாவும் சென்று பார்த்தோம். முனியம்மாள் இறந்திருந்தார். மனைவியை மடியில் கிடத்தியபடியே சுப்பையா விம்மி விம்மி அழுதார்.

முனியம்மாளுக்கு ஈமச் சடங்குகள் முடிந்த பிறகு, சுப்பையாவின் மகனும் மகளும் அவ்விடத்தை விட்டு மறைந்தனர். சுப்பையா நாதியின்றி நின்றார். சில நாட்கள் வீட்டிலேயே இருந்தார். அப்பா மாலையில் அவருக்கு உணவு கொடுத்து ஆறுதலாக சற்று உரையாடிவிட்டு திரும்புவார். ஒருமுறை உணவு கொண்டு சென்றவர், அப்படியே அதை மீண்டும் வீட்டிற்கே கொண்டு வந்தார்.

“ஏங்க?..என்னாச்சி?..அப்படியே இருக்கு?” அம்மா ஆச்சரியத்தோடு வினாவினார்.

“தெரியல!…சாப்பாடு கொடுத்தேன்,..வேணாம்னு சொல்லிட்டாரு!…கடையில சாப்புட்டாரம்!..”

அப்பாவின் முகத்திலே பல விடையறியா கேள்விகள் பிரதிபலித்தன.

“வேணாம்னா விடுங்க,..நம்ப என்னா செய்ய முடியும்?!..” சலித்துக் கொண்டே, அம்மா சமையலறைக்குச் சென்றார்.

ஒரு பகலில் மீன் பிடிக்க நண்பர்களோடு சென்று கொண்டிருந்தேன். ஆச்சோங் தோட்டத்தை ஒட்டி ஒரு ஆறு உள்ளது. அதில் விரால் மீன்கள் அதிகம் கிடைக்கும். தோட்டத்தையொட்டியப் படியே நடந்தேன். தோட்டத்தில் சுப்பையா தாத்தா காய்ந்த இலைகளைப் பெருக்கிக் கொண்டிருந்தார். மாலையில், அப்பா வந்ததும் கண்டதைக் கூறினேன்.

“அதெல்லாம் போய் அவருகிட்ட கேட்காத!..புரியுதா?!” என் விழிகளை நோக்கியபடியே கட்டளையிட்டார்.
ஏன் என்று கேட்க துணிவில்லாமல் சரியென்று தலையசைத்தேன். சில நாட்களில் அப்பா ஷிஃப்ட் வேலை செய்ய நேரிட்டது. காலை ஆறு மணிக்கு சென்று இரவு ஒன்பது மணியளவில் வீடு திரும்புவார். சுப்பையா தாத்தா பேசவும் ஆளின்றி தனித்துப் போனார்.

சில நாட்கள், சுப்பையா தாத்தா வீட்டிலேயே இருப்பதைப் பார்த்தேன். வேலை நிறுத்தம் கொண்டார் என்று எண்ணினேன். மாலையில் காற்பந்து விளையாடி முடித்தவுடன், நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்.

“டேய், விஷயம் தெரியுமா?.. அந்த கிழவன அச்சோங் போட்டு உறிச்சிட்டானாம்!!!” மணி கூறியதும் என் மனதில் பகீரென்று இருந்தது.

“ஏண்டா அடிச்சான்?” முருகன் ஆவலாய் கேட்டான்.

“காசு திருடிருக்கான்!!..” மணி சிரித்துக் கொண்டே கூறினான்.

“வாங்கட்டும்! திமிறு டா அந்த கிழவனுக்கு!! எங்கப்பாவையே போடானு சொல்லிருக்கான்!…எங்கம்மா தடுத்துட்டாங்களாம்,..இல்லைனா அப்பவே உழுந்துருக்கும்!” முருகன் பெருமையாய்க் கூறினான்.

என் மனதில் உறுத்தல் அதிகரித்த வண்ணமாய் இருந்தது. உடனே அவ்விடத்தை விட்டுக் கிளம்பினேன். நாளை இறக்கப் போகும் கிழவனை அடித்து ஆண்மையைக் காட்டும் வீரர்கள். மனதுள் அவர்களை எண்ணி வருந்தினேன்.

மறுநாள் மாலையில், வீட்டின் முன் புற்கள், தினமும் நீர் ஊற்றாமல், உரமிடாமல், பாதுகாக்காமல் போனாலும் நன்கு செழித்து வளர்ந்திருந்ததால் அவற்றை முடிந்தவரை அழித்துக் கொண்டிருந்தேன். ஓர் மூலையில் யாரோ பார்ப்பது போல விழியோரத்தின் பிம்பம் தோன்றியது. திரும்பிப் பார்த்த போது, அங்கு சுப்பையா தாத்தா என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு சற்று உருத்தலாக இருந்தது. மண்வெட்டியை நிற்க வைத்துவிட்டு, கையுறையை அகற்றிவிட்டு, மெல்ல அவரை நோக்கிச் சென்றேன். நான் நெருங்கி வரும் வரை, என் பட்ட பார்வையிலேயே ஆழ்ந்திருந்தார் போலும் கண்கள் அசையவில்லை.

“என்ன தாத்தா?…” என்று வேறு என்ன பேசுவது என்று கன நேரத்தில் சிந்தனை செய்து கொண்டிருக்கையில், அவர் ஏதோ கூற முயன்றார். நீண்ட நாள் பசைபட்டு போன அவருடைய உதடுகள் மெல்ல வார்த்தைகளை உதிர முயற்சித்தது. தனக்குள் ஏதோ ஒன்று தடுக்க, திறந்த வாய் மௌனத்தோடு மூடியது.

“என்னாச்சி தாத்தா?!” அவருடைய தயக்கத்தை உடைக்க முயன்றேன்.
சுப்பையா தாத்தா ஏதும் பேசவில்லை. ஆனால் என் மேல் விழுந்திருந்த பார்வை மட்டும் அகலாமல் இருந்தது. வேலியின் மேல் இருந்த அவருடைய கையைத் தொட முயன்றேன். என்க்குள் ஏதோ ஒரு கலக்கம் தடுத்தது. என் கை விலகுவதை சுப்பையா தாத்தா பார்த்தார். அவர் கண்களில் கண்ணீர் கசியத் தொடங்கியது. என்னையும் அறியாமல் என் கண்கள் கண்ணீர் உதிர முயன்றது. என் கண்களில் கண்ணீர் பொங்குவதைப் பார்த்ததும், அவ்விடத்தை விட்டுச் சென்றார். வீட்டின் கதவை தாழிடும் முன் மீண்டும் ஒரு முறை என்னைப் பார்த்தார். அவருடைய பார்வையின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை.
ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை என்பதால் மாமா வீட்டிற்கு செல்லத் தயாரானோம். கிளம்புகையில் அப்பா, சுப்பையா தாத்தாவை அழைத்தார்.

“போடா!..” ஏசியபடியே சுப்பையா தாத்தா வீட்டிற்குள் சென்று தாளிட்டார்.

“இதுக்கு மேல அந்த ஆளுகிட்ட நீங்க பேசாதிங்க!!!” அம்மா கொதித்தார்.

அப்பாவின் முகத்தில் வியப்பும் கவலையும் குடி கொண்டிருந்தது. இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பினோம். சுப்பையா தாத்தா வீடு திறந்திருந்தது ஆனால் ஆள் காணவில்லை.

இன்று காலையில், சுப்பையா தாத்தா உள்ளே சென்று தாளிட்டுக் கொண்டார். “ஏது அந்த நாய்?.. எதற்காக நாய் வளர்க்க ஆரம்பித்து விட்டார்?…” எனக்குள் கேள்விகள் பிறக்கத் தொடங்கின.

மாலையில், விளையாடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். மணியனும் முருகனும் சுப்பையா தாத்தா வீட்டை நோக்கி கல்லெரிந்துக் கொண்டிருந்தனர். உடனே அவர்களை நோக்கி விரைந்தேன்.

“என்னாடா பன்றீங்க?!!”
“இல்லடா,…அந்த நாய் எங்கள பார்த்தாலே கொலைக்குது! தோ பாரு!! அத!…” கல்லை மீண்டும் ஓங்கினான். நான் அவன் கையிலிருந்த கல்லைப் பிடுங்கிக் கொண்டேன்.

“டேய், இப்ப ஒழுங்கா போறீங்களா, இல்ல உங்க அப்பாகிட்ட வந்து சொல்லட்டுமா?..” இருவரையும் மிரட்டினேன்.

“தோடா!.. வாடா முருகா போலாம்!…அய்யாவுக்கு நாய் மேல ரொம்பதான் பாசம்!…”
இருவரும் என்னை முறைத்தபடியே சென்றனர். ஏன் அப்படி நடந்தேன் என்று எனக்கேத் தெரியவில்லை. சுப்பையா தாத்தா கதவைத் திறந்து நாயை கட்டியணைத்தபடியே உள்ளே கொண்டு சென்றார்.

இரவில், சுப்பையா தாத்தாவின் இரும்பல் சத்தம், அமைதியை குலைக்கத் தொடங்கியது. நள்ளிரவிலும் இரும்பல் சத்தம் நின்றபாடில்லை. நான் எவ்வளவோ முயன்றும் என்னால் படிக்க முடியாமல் போனது. புத்தகத்தை மூடியதோடு கண்களையும் மூடிக் கொண்டேன். இன்று தூங்க முடியுமா என்று எனக்குள் ஐயம் முழைத்தது.
பொழுது புலர்ந்தது. எப்பொழுது தூங்கினேன் என்று சிந்தித்தேன். ஏதும் அகப்படவில்லை. மீண்டும் காலையை இரசித்தேன். சுப்பையா தாத்தாவின் இரும்பல் சத்தம் இல்லாதிருந்தது. பள்ளிக்குக் கிளம்பினேன். பள்ளியில் திடீரென சுப்பையா தாத்தாவின் ஞாபகம் வந்தது.
மாலையில் வீடு திரும்புகையில், சுப்பையா தாத்தா வீட்டைப் பார்த்தேன். வீட்டுக் கதவு திறக்காமலே இருந்தது. நாயும் காணவில்லை. என் வீட்டினுள் புகுந்தேன். அவ்வப்போது வெளியில் வந்து பார்த்தேன். கதவு திறந்தபாடில்லை. பொழுது சாய்ந்தது. அம்மாவும் அப்பாவும் வீட்டிற்கு வந்தனர்.

“அப்பா,…” உணர்ச்சிவசப்பட்டதில் அருகே அம்மா இருப்பதை மறந்து, விவரத்தைக் கூற முயன்று, சட்டென நிறுத்தினேன்.

“என்னாது சொல்லு,..” அப்பா கண்டிப்பாய் கேட்டார்.

“அப்பா, காலைலேந்து சுப்பையா தாத்தாவ காணும்! வீடு பூட்டியே இருக்கு!!”

“அது உள்ளையே இருக்கும்!!” என்று அம்மா கூறிவிட்டு சலித்துக் கொண்டே நகர்ந்தார். அப்பா என் தோளை தட்டிக்கொடுத்து அறைக்குச் சென்றார். உணவு உண்டபின் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பா எழுந்து அறைக்குச் சென்று சட்டை அணிந்து வந்தார்.

“கைலாம்பு எடு!” அம்மாவிற்கு உத்தரவு பிறப்பித்தார்.

“இப்ப எதுக்குங்க?…” அம்மா வினாவியபடியே எடுக்கச் சென்றார்.

“போய் பார்த்துட்டு வந்துர்றேன்!” அப்பா கூறியதற்கு இம்முறை அம்மா மறுப்பு தெரிவிக்கவில்லை.
நானும் அப்பாவும் சுப்பையா தாத்தா வீட்டின் கதவைத் தட்டினோம். நீண்ட நேரம் அழைத்தும் பதில் இல்லை. அப்பா உரக்க அழைத்தார். சத்தம் கேட்டு எதிர் வீட்டிலுள்ள கோபாலு மாமாவும் அவர் மனைவியும் வந்தனர்.

“கதவ ஒடைங்க!” என்று கூறியபடியே கதவை எட்டி உதைத்தார், கோபால்.
படாரென கதவு திறந்தது. வீட்டின் உத்தரத்தில் புடவையில் தூக்கிலிட்டபடியே தொங்கிக் கொண்டிருந்தார் சுப்பையா தாத்தா. தற்கொலை செய்து கொண்டாரா என்று என் மனம் அதிர்ந்தது. அக்காட்சினைக் கண்டதும், கோபாலின் மனைவி ஆவென கதறி ஊரைக் கூட்டினாள். காவல் துறைக்கும் மருத்துவத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சுப்பையா தாத்தாவை வெறித்துப் பார்த்தேன். வாய் முதல் வயிறு வரை இரத்தம் வடிந்து காய்ந்திருந்தது. வீட்டில் ஆங்காங்கே இரத்தம் சிந்தியிருந்தது.

“நேற்றே இறந்திருப்பாரோ?…” எனக்குள் புது சந்தேகம் பிறந்தது.

காவல் அதிகாரிகள் படம்பிடித்து, தகவல்கள் சேகரித்து முடித்தவுடன், சுப்பையா தாத்தாவின் உடல் மருத்துவமனை வண்டியில் கொண்டு செல்லப்பட்டது. வீட்டை விட்டு வெளியாகுகையில், ஏதோ ஒன்று என் பார்வையை என்னையும் அறியாமல் ஈர்த்தது. என்னவென்று நோக்கினேன். அங்கு, மூலையில் சுப்பையா தாத்தாவின் நாய் வாயில் நுரை தள்ள இறந்திருந்தது.

……………………………………………………….முற்றும்…………………………………………………

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *