தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 12.

0

திவாகர்

”தேவன் தம் எழுத்து, சொல் எதனாலும் பிறர் மனதிற்குத் துன்பம் புரிந்தவரன்று. அவர் ஹாஸ்யம் என்றும் பிறர் மனதை நோகக்கூடாது என்று மற்ற ஹாஸ்ய எழுத்தாளர்களுக்கு அவர் முன்மாதிரி” என்று தேவன் மறைந்த வேளையில் திரு மீ.பா.சோமசுந்தரம் உரையாற்றினார். அவர் சிறுகதைகளில் பொழியும் ஹாஸ்ய ரசம் அப்படிப்பட்டதாகும். ஒரு பத்திரிக்கை துணை ஆசிரியர் என்கிற முறையில் அவர் எழுதிய சிறுகதைகளாகட்டும், பத்திரிக்கை ஆசிரியர் என்ற வகையில் விகடனில் எழுதிய சிறுகதைகளும் ஒவ்வொன்றும் ரசிக்கக் கூடியவையாகவே இருந்தன. அவர் எழுதிய சிறுகதைகள் விச்சுவுக்குக் கடிதங்கள், ஜாங்கிரி சுந்தரம், சீனுப்பயல், ராஜாமணி போன்ற தலைப்புகளில் தொகுப்புகளாக பின்னாட்களில் வெளியிடப்பட்டன. நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியதாக அல்லையன்ஸ் பதிப்பகத்தினர் தங்கள் தேவன் புத்தகமொன்றில் எழுதியுள்ளனர்.

ஜாங்கிரி சுந்தரம் எனும் நகைச்சுவை கதையில் கோபால்சாமி என்பவன் தன் ஆப்த நண்பன் விரும்பும் யுவதியை பட்டணத்தைச் சேர்ந்த 54 வயதான ஹோட்டல்காரர் ஜாங்கிரி சுந்தரம் (ஜாங்கிரியில் பிரபலமானதால் அந்தப் பெயர்) கலியாண்ம் செய்துகொள்வதாகத் தெரிந்ததும், தன் ஆத்மநண்பனுக்காக பல் வைத்தியர் போல வேடமிட்டு, பல்வலியால் துடிக்கும் ஜாங்கிரி சுந்தரத்தின் கீதம் இருக்கும் பற்களையெல்லாம் கழட்டி விட்டுப் பழி வாங்கும் ஒரு நகைச்சுவைக் கதை. கடைசியில் அந்த ஆப்தநண்பனானவன் தன் பழைய காதலியை மறந்து புதியவளை ஏற்கனவே தெரிந்தெடுத்துவிட்டது என்ற விஷயம் இந்த கோபால்சாமிக்குத் தெரிந்ததும், பழிக்குப் பழியாக அந்த ஜாங்கிரி சுந்தரத்துக்குச் செய்ததை தன் நண்பனுக்குச் செய்யப் போவதாக பல்லைக் கடித்துக் கொண்டுப் போவதாக கதையை முடிப்பார் தேவன்.

நவரசங்களும் கலந்த சிறு கதைகளைப் படைத்திருக்கிறார் தேவன். முசாபரி பங்களா, பேயடைந்தவீடு, ஜவந்திக்கோட்டை மர்மம் எனும் பேய்க்கதைகளும் இவைகளில் அடங்கும். மல்லாரிராவ் கதைகள் அந்தக் கால கட்டத்தில் வாசகர்களின் உள்ளங்களை வெகுவாகக் கவர்ந்தவை என்று சொல்வர். என்னை மிகவும் கவர்ந்த தேவனின் ஒரு சிறுகதையை கீழே தருகிறேன். ‘அறியாமல் பிடித்த மோகம்’ எனும் ஒரு கதை.. ஒரு பஸ்ஸில் உட்கார்ந்தவனின் மனநிலையை அப்படியே நகைச்சுவையாகக் கொண்டு வரும் தேவனின் எழுத்துக் கலையை எவ்வளவுதான் புகழ்வது.. இதோ அவர் எழுத்தில்..

செவத்த பையன், பிடிவாதக்காரன் தான் என்பது அவன் முகரக் கட்டையைப் பார்த்தவுடனேயே நன்றாய்த் தெரிந்தது.

அவன் வந்து, எனக்கு முன்பு இருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்ட உடனேயே வாயோடு பாட ஆரம்பித்து விட்டான். பஸ்ஸும் கிளம்பிற்று. அப்படி இரைச்சல் போட்டும் பாடவில்லை. ஏதோ தன்னுடைய ஆத்ம திருப்திக்காகப் பாடிக்கொள்வது போலவே தோன்றிற்று.. பாடிக்கொண்டே முகத்தை அங்கும் இங்கும் நீட்டி, சுற்றி நடக்கும் காரியங்களைக் கவனித்தான்.

பாட்டு ஒரே மாதிரியாக இருந்தது. திருப்பித் திருப்பி ‘மாயப் பிரபஞ்சத்திலே ஆனந்தம் வேறில்லை’ என்று சொல்லிக்கொண்டு இருந்தானேயொழிய, மேலே அடுத்துப் போகவே இல்லை.சில சமயம் தடித்த ஊமைக் குரல்; ஒரு சமயம் கீச்சென்ற குரல், ஒரு சமயம் வாயில் டிக்கட்டைக் கௌவ்விக் கொண்டே….. இப்படியாக அந்த ஒரே அடியைப் பாடினான்.

கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தேன். தாங்கமுடியவில்லை. பாட்டு என்றால் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் என்னமோ இந்தப் பாட்டை இந்தவிதமாக கேட்கப் பிடிக்கவில்லை. ஆகவே அவன் பக்கம் திரும்பி கோபமாக விறைத்துப் பார்த்தேன். அவன் பதிலுக்கு, உனக்கும் அப்படித்தான் என்று சொன்னது போல விறைத்துவிட்டு மறுபடி விடாமல் பாடினான்.

இரண்டு நிமிஷம் பொறுத்தேன். பிறகு ”ஏனப்பா? உனக்கு வேறு ஒரு பாட்டும் ஏதும் தெரியாதா இதைத் தவிர?” என்று கேட்டேன்.

“தெரியும்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் “மாயப்பிரபஞ்சத்தில்” பாடினான்.

“இதைப் பாடித்தான் ஆகவேண்டுமோ இப்போது?’

”சும்மா பாடறேன்”

”சற்றுப் பேசாமல் பாடாமல்தான் இருந்து பாரேன்!”

”சரிதான்,” என்றான்.

ஆனால் மேலே பாடிக்கொண்டே போனான்.

“என்ன சத்தம் ஐயா?” என்று சள்ளென்று விழுந்தேன்.

“நான் டிக்கெட் வாங்கியிருக்கிறேன்.. என் இஷ்டப்படி இருக்கிறேன்..”

”நானும்தான் வாங்கியிருக்கிறேன்.. ஆனால் உன் மாதிரி இப்படிப் பாடுகிறேனா?”

“சரிதான் ஸார்!”: என்றான். என் வார்த்தையை ஒப்புக்கொண்டு, ஆனால் விடாமல் மேலே பாட்டு மாத்திரம் ஊமைக் குரலில் கேட்டது. “அடப் பழிகாரா!” என்று நினைத்துக் கொண்டேன்.

எனக்கு அடுத்தாற்போல் ஒரு ஆசாமியும் அவன் மனைவியும் உட்கார்ந்திருந்தார்கள். அந்த ஆசாமி என் வாக்குவாதத்தைக் கவனித்து, ’நீங்கள் சொன்னது சரிதான்’ என்றான். பாடுபவன் திரும்பி ஒரு புன்னகை செய்துவிட்டு, ’சரிதான்’ என்றான். பிறகு “மாயப்பிரபஞ்சத்திலே” என்று ஆரம்பித்தேன்.

“உன்னைப் பாட்டை நிறுத்தப் பண்ணுகிறேன் பார்!” என்றேன் ஆத்திரத்துடன். “அப்படித்தான் செய்யணும்” என்றாள் அந்த ஸ்திரீயும்.

“சரி, எங்கே அப்படி செய்யுங்கள் பார்ப்போம்?” என்றான் பாடுபவன்.

“ஆமாம், நிறுத்து பாட்டை” என்றார் கோடியிலிருந்த இன்னொரு பேர்வழி.

“நான் பாட்டுக்குப் பாடினால் உனக்கு என்ன ஐயா? என்று கேட்டான் குற்றவாளி.

“பிறத்தியாருக்கு உபத்திரவம் செய்யும்படியாகப் பாடக்கூடாதுதான்”

“யாரையா சொன்னது அப்படி?”

“அப்படி சட்டம் இருக்கு”

“எங்கே அந்த சட்டம்?”

“உன்னை மென்னியைப் பிடித்து கோர்ட்டுக்குத் தள்ளிக்கொண்டு போனால் தெரியும் இருக்கற இடம்!”

“எனக்கு லக்ஷயமில்லை”.. மறுபடி ‘மாயப் பிரபஞ்சத்தில்’ என்று பாட்டு ஆரம்பித்தான்.

“ஏண்டா, உனக்கு சொரணை கிடையாதா?” என்று கேட்டேன்.

“அதெல்லாம் செத்துடுத்து ஸார்!” என்றார் பக்கத்து ஆசாமி.

“அப்படியே மண்டையில் ஒரு தட்டு தட்டுங்களேன்!” என்று சிபாரிசு செய்தார் கோடி ஆசாமி.

“ஓஹோ”! என்றான் பாடகன். ஆனால் மறுபடியும் பாட்டுச்சத்தம் கேட்டது.

“நீ நிறுத்த முடியாதா?” என்று சற்று அடக்கமாக கடைசிமுறையாகக் கேட்டேன்.

“உனக்கு நான் என்னய்யா கெடுதல் செய்தேன்.. நான் பாட்டுக்கு..”

“பார், எங்களுக்கெல்லாம் எவ்வளவு அசௌகரியமாக இருக்கிறது. இதற்கு நியூசென்ஸ் என்று பெயர். ‘நியூசென்ஸ் செய்கிற பேர்களையெல்லாம் என்ன செய்வார்கள் தெரியுமா? நன்னடத்தை ஜாமீன் வாங்கிக்கொள்வார்கள். அப்படிக் கொடுக்கமுடியாத பேர் ஜெயிலுக்கும் போகவேண்டியதுதான்!” என்றேன்.

“கொயிட் ரைட்” என்றான் பக்கத்திலிருந்த மனிதன்.

“நாலு நாள் அங்கே போய்க் கல் உடைத்தால் இந்தப் பாட்டெல்லாம் பறக்காதோ” என்றார் கோடியிலிருந்த பேர்வழி.

பாடிக்கொண்டிருந்தவன் உண்மையிலேயே அரண்டுவிட்டான். சற்று நேரம் முகத்தைக் கோட்டான் மாதிரி வைத்துக்கொண்டிருந்தவன் பஸ் நிற்குமிடம் ஒன்று வந்தவுடன் எழுந்து பஸ்ஸை விட்டு கீழே இறங்கினான்.

வெற்றி அடைந்துவிட்டேன் என்பதில் எங்களுக்கு அசாத்திய சந்தோஷம். முக்கியமாக நானே ஊக்கமாய் சிரத்தை எடுத்துக் கொண்ட செயல் இல்லையா.. பத்து நிமிஷம் ஆயிற்று. என் தோள் பட்டையைப் பின்னால் இருந்த ஆசாமி மெதுவாகத் தொட்டார். திரும்பிப் பார்த்தால் என்னையே அவ்வளவு பேரும் முறைத்துப் பார்ப்பது தெரிந்தது.

“என்ன?” என்றேன்.

“நீங்களும் கொஞ்சம் ‘மாயப் பிரபஞ்சத்திலே’ பாடுவதை நிறுத்துகிறீர்களா, சார்?” என்று கேட்டார் அந்த ஆசாமி.

“ஓஹோ! எனக்குத் தெரியவே தெரியாதே!” என்று நானும் அடுத்த இடத்தில் இறங்கினேன்.

விச்சுவுக்குக் கடிதங்கள் என்பது ஒரு தாய்மாமா, தன் சகோதரி மகன் இண்டர் (12ஆம் வகுப்பு) படித்துமுடித்த வுடன் அவன் என்னென்ன துறைகள் தேர்ந்தெடுக்கலாம் என்பதை கடிதம் மூலமாக, அவனுக்கு எழுதி அனுப்பும் அறிவுரைக் கதைகள் அவை. தேவனின் அறிவுரைகளாக மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டதாகவே நினைக்கத் தோன்றும். குறிப்பாக ஆசிரியர் படிப்பு, பொறியியல், மருத்துவத்துறைகள் தேர்ந்தெடுப்பது பற்றியும் அந்தத் துறைகள் அன்றைய நிலையில் எப்படி இருந்தன என்பதையும் எழுதும்போது, அவர் எழுதியவை அனைத்தும் அறுபது வருடங்கள் ஆகியும் தற்போதுள்ள நிலைக்கு ஏராளமாகப் பொருந்துவதையும் நினைத்து ஆச்சரியத்தில் மூழ்குவோம். முக்கியமாக ஆசிரியர் என்பவர் புத்திசாலித்தனமான முறையில் ட்யூஷன் மூலமாகவும் அதிகம் சம்பாதிக்கமுடியும் என்பதை வெகு இயல்பாக விளக்குவது எந்தக் காலத்துக்கும் பொருந்தும்.

விச்சு ஒருவேளை மேல்படிப்பை விட்டு வியாபாரத்தில் இறங்கலாம் என்றும் யோசனை தெரிவித்து தாய்மாமன் கடிதம் எழுதும்போது, அந்த வியாபாரத்தின் கஷ்டநஷ்டங்களை விவரிப்பதுடன் அவர்கள் விளம்பரத் துறையையும் ஏகத்துக்கு நக்கல் செய்து எழுதுவார் தேவன். ஒரு வியாபாரி ஒரு பெரிய கடையை ஒரு கடைவீதியிலே திறந்துவிட்டு இந்தக் கடைதான் நகரத்திலேயே பெரிய கடை என்று விளம்பரம் செய்வதாகவும், அதே வீதியில் இன்னொருவன் இன்னொரு கடை போட்டியாகத் திறந்து இந்த நாட்டிலேயே இந்தக் கடைதான் பெரிய கடை என்று விளம்பரம் செய்து திருப்தி அடைவதாகவும், சிலநாட்கள் கழித்து அதே வீதியில் இன்னொரு பெரிய கடை இவர்களுக்குப் போட்டியாக எழுந்தது. அவன் என்ன விளம்பரம் செய்தான் தெரியுமா – இந்தக் கடைவீதியிலேயே எங்கள் கடைதான் பெரிய கடை!! தேவன் இப்படி எழுதிவிட்டு சாமர்த்தியாமான வியாபாரத்தொழிலைப் பற்ரி மென்மேலும் நகைச்சுவையாக விளக்கும் கதை அது. கடைசியில் விச்சு கல்யாணமும் செய்துகொண்டால் நல்லதுதான் என்று எழுதும்போது மனைவியின் அருமை பெருமைகளை கவிமணி எப்படி கவிதையில் எழுதியிருப்பார் என்பதை விச்சுவுக்கு விவரிப்பார்.  மனைவி என்பவளை எப்படிப்பட்ட தேவதையாக நினைத்து கவிமணியின் கவிதைகளைத் தேடிப்பிடித்து எழுதுகிறார், படியுங்களேன்..

“காரியம் பார்ப்பாள் கணக்கும் எழுதுபவள்
காய்கறியாக்கவும் கெட்டி அவள் கை பட்டால்
வேம்பும் கரும்பல்லவோ ருசி..

ஆபத்து வேளையில் அறிவு சொல் மந்திரி
அரும் பிணிக்கு அவளே சஞ்சீவி.
துன்பம் வரும்போது ஆறுதல்
தரித்திரகாலத்தில் அருநிதியாம் அந்தத் தேவி.

அங்குமிருப்பாள், பின்னிங்குமிருப்பாள் உம் அண்டையிலும்
கட்டிக் காப்பாள் உமக்கு கற்பவருத்தமில்லாமல்
கவலைகள் அத்தனையும் தலையேற்பாள்..”

(இன்னும் வரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *