திவாகர்

அனுபவம் அனுபவம் அனுபவம்.. உலகியல் வாழ்க்கையில் இந்த அனுபவம் ஒன்றே உண்மையான கல்வி ஞானம். எத்தனைதான் டாக்டரேட்டுகள் பட்டங்களை தன் பின்னே வைத்துக்கொண்டாலும் அனுபவம் அறியாத அத்தனை பட்டங்களும் விழலுக்கு விழைத்த நீரே. அதனால்தான் மருத்துவப்படிப்பில் அந்தக் காலத்திலிருந்தே ஒரு வருடம் கட்டாய சேவையை படிப்பில் புகுத்தினார்கள். படிக்கும்போது ஏற்படும் அனுபவம் என்பது வேறு. இந்தவகை அனுபவங்கள் பச்சைம்ரத்தாணி போல மனத்திலேயே தங்கிவிடும். பின்னாளில் பலவகை இக்கட்டுகளிலிருந்து காக்கும் அருமருந்து கூட இந்த வகை அனுபவங்களே.  அப்படிப்பட்ட அனுபவக் கட்டுரை ஒன்றை இந்த வாரம் வல்லமையில் பார்த்தேன். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆராய்ச்சி மாணவனாக இருந்தால் அடிமை வேலை செய்ய வேண்டும் என்பது பல்கலைக் கழகத்தில் எழுதப்படாத விதி.  அப்படியாகத்தான் எனக்குக் கிடைத்த வேலை ஆராய்ச்சி சஞ்சிகளைப் பதிப்பித்து விற்று வருமானம் ஈட்டுவது.  மூன்று சஞ்சிகளைப் பதிக்கும் வேலையைத் தொடங்கி அதன் வடிவமைப்பு விற்பனை என்று நானாவித வேலையையும் செய்து பழகிக் கொண்ட எனக்கு என்பலம் என்னவென்று ஒருநாள் தெரிந்தது.  சக ஆய்வு மாணவர் ஒருவன் என்னுடைய வழிகாட்டியான பேராசிரியத் தலைவர் என்னை வெளியேற்ற ஏற்பாடு செய்துவருவதைச் சொன்னார்.  வழிகாட்டிக்கும் ஆய்வு மாணவனுக்கும் உள்ள உறவு பலசரக்குக் கடைச் செட்டியாருக்கும் பொட்டலம் கட்டும் இளைஞனுக்கும் இடையே உள்ள உறவு போன்றது.  செட்டியார் எச்சரிக்கை எத்திராஜராகப் எதிர்க்கடை வராதவாறு வேலை செய்பவர்களுக்குப் பொட்டலம் கட்டுவது தவிர எந்த வேலையையும் கற்றுக்கொடுக்க மாட்டார்.  அப்படியே அவரைத் தாண்டிக் கற்றுக் கொண்டவனையே விட்டால் வினை என்று கூலியில்லாத வேலையாளாக மாற்றி மருமகனாக ஆக்கிக்கொள்வார்.  இங்கு நான் வெளியேற்ற்ப்படும் நிலையில் முன்யோசனை இல்லாமல் என் சக ஆய்வாளரிடம் இந்த மடம் இல்லையென்றால் எனக்கென்ன கவலை இங்கிருந்து நேராக எந்தப் பத்திரிக்கை வாசலில் நின்றும் நான் ப்ரூஃப் ரீடர் வேலைக்கு வந்திருக்கேன் என்று சொன்னால் அப்படியே தூக்கிட்டுப் போயிடுவாய்ங்க தெரியுமா என்று ஆண்டுக் கணக்காக ஆய்வு என்ற பெயரில் நான் செய்த புரூஃப் ரீடர் வேலையைச் சொல்ல அவர் என்னுடைய பேராசிரியரிடம் போட்டுக் கொடுக்க அதனால் என் வழிகாட்டி என்னை வெளியே போக முடியாதபடி செய்துவிட்டார். அதுமூலம் நான் பத்திரிக்கையில் ஒரு வேலையை உருப்படியாகச் செய்யமுடியும் என்று எண்ணத் தோன்றியது

எனது நண்பரின் புதிய முயற்சியில் அவர் முன் எடுத்த ஒரு திட்டம் சினிமாத் துறையில்  ஒரு வாரப் பத்திரிக்கை தொடங்குவது.  அந்தக் காலகட்டத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பும் சூல்நிலையில் அவரை ஆசிரியராகக் கொண்டு இந்தப் பத்திரிக்கையை நடத்தவேண்டும் என்பது அவரின் இந்த முயற்சிக்கு அடிப்படையாக அமைந்தது பத்திரிக்கையைத் தொடங்கி வடிவமைத்து உருவாக்கி வெளிவிடும் வேலையைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது.  ஆராய்ச்சி மாணவனாக இருந்தபோது சென்னை அரசினர் தோட்டத்தில் வசித்துக்கொண்டு கால் இடறிக்கீழே விழுந்தால் ஒரு தியேட்டர் படியில் விழவேண்டும் என்ற சூழலில் ஆய்வறிக்கைக்காக அல்லும் பகலும் நேரம் செலவழித்ததால் ஒரு திரைப்படம்கூடப் பார்த்ததில்லை.  ஒருமுறை என் சகஆய்வு மாணவரின் காதல் திருமண வரவேற்புக்காக இடம் புக் செய்ய ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன்.  வாசலில் ஏகப்பட்ட கூட்டம் என்னவென்று தெரியாமலேயே வரவேற்பாளரிடம் சென்று பணம்கட்டிவிட்டுத் திரும்பி வந்தால் கூட்டம் என்னைப் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பதுபோல் பார்த்தது.  ஏணிப்படி ஏறுமாறாக என்று கேடடதற்கு உன் அருகில் ரிசப்சனில் நின்றது யார் தெரியுமா  என்று கேட்டது கூட்டம். ஐயா தெரியாதய்யா என்று சொன்னேன்.  நீயெல்லாம் தமிழ்நாட்டில் பிறந்ததே ஒரு பெரிய பாவம் என்று சலித்துக்கொண்ட ஒரு பெரிசு பையா அதுதான் இந்தியத் திரை உலகின் கனவுக் கன்னி அவரைப் பார்க்க நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம் என்று சொன்னார்கள்.  இந்த இரண்டு நிகழ்வுகளுமே திரைத்துறையைப்பற்றிய என் பாண்டித்துவத்தைப் பறைசாற்றும்.

எப்படியோ போடப்போகும் பணம் 5 லட்சம் வந்தால் வரட்டும் போனால் போகட்டும் நான் கவலைப்படமாட்டேன் நீங்கள் நடத்துங்கள் உங்கள் நாடகத்தை என்று சொல்லிவிட்டார் நண்பர். நன்குபடித்துப் பட்டம் பெற்ற எழுத்தாற்ற்ல் மிக்க கணினிப் பயன்பாடு தெரிந்த தலைமை ஏற்கவும் தலைமையின்கீழ்ப் பணி செய்யவும் விழைவுள்ள ஆறுபேரை ஆசிரியக்குழுவாக அமைத்து இந்திய அளவில் தலை சிறந்த இயக்குனர் நடிகர்களை அழைத்துவந்து நேருக்குநேர் சந்திப்பு பேட்டி என்று பயிற்சி அளித்து ஒவ்வொரு வாரமும் ஒருவர் தலைமையில் மற்றவர்கள் குழுவாகப் பணி செய்து பத்திரிக்கையைக் கொண்டுவரும் அளவுக்குப் பயிற்சி அளித்துப் பத்திரிக்கையின் வெள்ளோட்டமாக மூன்று மாதங்கள் பத்திரிக்கையை முழுமையாக அச்சிட்டு தெரிந்தெடுத்த சிலருக்கு அனுப்பி அவர்களின் கருத்துக் கேட்டு இறுதியில் ஐந்து நிமிட விளம்பரப்படம் ஒன்றை சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வாழ்த்துக்களுடன் உருவாக்கி அந்தப் பத்திரிக்கை வெளியானது.  கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நாடுதிரும்பாமல் அமெரிக்காவில் உயிர் துறந்தார்.  அவருக்கென்று ஆரம்பித்த பத்திரிக்கை என்பதால் வேறு  யாரையும் ஆசிரியராகப் போடாமல் அந்தப் பத்திரிக்கை பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்தது.
அந்தப் பத்திரிக்கையின் ஆல் இன் அழகுராஜாவாக ஆல் ரவுண்டராக நான் இருந்த காலத்தில் ஒரு பெரிய அச்சுக்கூடத்தில் ஸ்டாப் தி பிரஸ் என்று அச்சிடுவதை நிறுத்தும் அதிகாரத்துடன் பவனிவந்து திரை உலகம் தொடர்பான ஒரு பெரிய தரவுத் தளத்தினை உருவாக்கி (திரை உலகக் கிசுகிசுவும் உள்ளடக்கம் ஆனால் வெளியிட்டதில்லை) புலனாய்வுக் கட்டுரை நம்பகமான் தகவல் என்று அது தரமான திரை உலகச் செய்திகளுடன் பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடக்க அடித்தளம் அமைத்தேன். (https://www.vallamai.com/literature/articles/33187/)

பேராசிரியர் நாகராஜனின் இந்த வாழ்க்கைப்படிப்புதான் எத்தனை சுவையாக இருக்கிறது.. ஆனாலும் இந்தப் பேராசிரியர் நகைச்சுவையோடு தம் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் வல்லவர். இந்த நகைச்சுவையுடனே அந்த அனுபவத்தில் உள்ள கஷ்டங்களையும் ஒருங்கே தெரிவிக்கிற அழகு ஒன்றே நம்மை அவர் பக்கம் ஈர்க்கிறது. இந்த வார வல்லமையாளராகவும் நம் வல்லமை குழு தேர்ந்தெடுப்பதில் பெருமை கொள்கிறது.

பேராசிரியர் நாகராஜன் மென்மேலும் பல கட்டுரைகள் எழுதவேண்டும் என்று ஆர்வத்தோடு இந்த வல்லமையாளரைக் கேட்டுக் கொள்கிறேன்.

கடைசி பாரா: இசைக்கவி இரமணன் அவர்கள் கவிதை ஒன்று இந்த வாரத்தில் ஃபேஸ்புக்’ இல் எழுதியது

நட்டநடு வேவிதை பிளந்திடாமல்
தளிரேதும் தரைமீது துளிர்ப்பதுண்டோ?
நட்டநடு நிசியில்மனம் வெடித்திடாமல்
நல்லதொரு கவிதைதான் பிறப்பதுண்டோ?
கொட்டுகிறேன் புதுமுரசம்! கொடிபிடித்தேன்!
குறுக்குத்துறை தனில்விழுந்து குலவும் மின்னல்
நட்புடனே எனைத்தழுவி நின்றபோது
நான்தீர்ந்தேன்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “இந்த வார வல்லமையாளர்

 1. இவ்வார வல்லமையாளர் விருது பெற்ற, மதிப்பிற்குரிய பேராசிரியருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் பேராசிரியர் இது போன்ற கட்டுரைகளை நமக்கு ஏன் அடிக்கடி வழங்குவதில்லை என்ற உண்மை தெரிஞ்சாகணும் சாமி.

  அன்புடன்

  ….. தேமொழி

 2. வல்லமையாளர் விருது பெற்றுள்ள மதிப்பிற்குரிய பேராசிரியர் நாகராஜன் ஐயா அவர்களுக்கும் எனது வணக்கமும் வாழ்த்துகளும்!!! 

  கடைசி பாராவில் இடம்பிடித்த கவிதை வரிகளை வடித்த கவி. இரமணன் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!

 3. பேராசிரியர் நிஜமாகவே திறமையிலும் குணத்திலும் பெரிய ஆசிரியர் தான்..சாதாரண வல்லமையாளரா மகாவல்லமையாளர்! இனிய எமது புகழ்பெற்ற இனிப்பான மைபாவுடன் பாராட்டுக்கள் புரபசருக்கு!

 4. எழுதப்பட்ட கட்டுரை முழுமையாக படிக்கவேண்டுமென்றால் அதில் கொஞ்சம் நகைசுவை கலந்திருக்க வேண்டும். இங்கே அது நிறைய.பேராசிரியரின் கட்டிரையில் அவரின் குனம் தான் அனுபவம்.

  மன நோயிலிருந்து காப்பது அனுபவம் மட்டுமே. நல்ல விஷயத்தை தந்த பேராசிரியருக்கு வாழ்த்துக்கள்.

 5. congratulations to Prof. Nagarajan. Totally agree that nothing to beat ones own experiences.
  Gopalan

Leave a Reply

Your email address will not be published.