ஏக ரேகா கண்ணன்….
——————————
“ஏகத்திற்(கு) ஏதுகை ரேகை, நாமெல்லாம்
காகநிறக் கண்ணனின் கைபொம்மை, -போகவர,
பூமத்ய ரேகையில் போட்டெடுத்து, ஏகாக்ர
சூமந்த்ர காளி, சுகம்”….கிரேசி மோகன்….
ஏக ரேகா கண்ணன்….
——————————
“ஏகத்திற்(கு) ஏதுகை ரேகை, நாமெல்லாம்
காகநிறக் கண்ணனின் கைபொம்மை, -போகவர,
பூமத்ய ரேகையில் போட்டெடுத்து, ஏகாக்ர
சூமந்த்ர காளி, சுகம்”….கிரேசி மோகன்….
மீ.விசுவநாதன்
வாங்கும் கையாய் இல்லாமல் -தினம்
வழங்கும் கையாய் இருந்திடணும் !
தீங்கைத் தட்டிக் கேட்கின்ற – நல்ல
தீரன் கையாய் பலப்படணும் !
கண்ணீர் வழியும் கன்னத்தில் – பாசக்
கைகள் நீண்டு துடைத்திடணும் !
மண்ணைத் திருடும் கொள்ளையரை -உடன்
மடக்கிப் பிடிக்க மனம்வரணும் !
ஓட்டுப் போடும் முன்னாலே – ஓர்கணம்
உயர்ந்த நாட்டை எண்ணிடனும் !
நீட்டும் கையில் கறைகண்டால் -அதை
நியாயத் தீயால் பொசுக்கிடணும்!
மனிதன் எவர்க்கும் விலையுண்டு – மா
மனிதர்க் கதிலே விலக்குண்டு !
பனியில் அழுக்கு படியாது – தூய
பணியில் ஊழல் நுழையாது !
(26.04.2016 22.02pm)
-பா.சிவக்குமார்
கி.பி. 21ஆம் நூற்றாண்டில் ஒன்றுபட்ட ஜனநாயகக் குடியரசான இந்தியாவில் வாழும் மக்களிடையே முல்லைப் பெரியாறு அணைநீரைப் பெறுவதற்கும், காவிரிநீரைப் பெறுவதற்கும் வழக்குமன்றத்தை நாடவேண்டியுள்ளது. மேக்கே தாட்டு (மேகதாது) எனும் இடத்தில் காவிரியின் குறுக்கே கர்நாடகத்தினர் அணைகட்டத் தீர்மானித்த நிலையிலேயே தமிழ், கன்னடம் என இருவேறு மொழி பேசுவோர் என்ற அடிப்படையில் கடையடைப்பு, பேருந்து நிறுத்தம் போன்ற அமைதியான வழிகளில் எதிர்ப்புத் தெரிவிக்கும் பொழுதுகூட பல நேரங்களில் கல்லெறிதல், கடை உடைப்பு, பேருந்தை எரித்தல், இருவேறு மொழி பேசுபவர்கள் அடித்துக் கொள்ளல், போன்ற வன்முறைகள் நிகழ்ந்துள்ளதைக் காணநேரிட்டது. முல்லைப் பெரியாறு பிரச்சனையின்போது சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்கள் மீது மலையாள மக்கள் வன்முறை நிகழ்த்தியுள்ளனர். இலங்கையில் சிங்களர்கள், தமிழர்கள் இடையே இன்றும் ஒற்றுமை ஏற்படாமல் ஆளும் வர்க்கம் அதிகாரத்தால் அடக்கியாளும் நிலையினையே கண்கூடாகக் காண்கிறோம். இது போன்ற மொழிசார் வன்முறை சங்கச் சமூகத்திலும் ஊடுருவி இருந்துள்ளமையை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.
சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்களும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும் இம்மூவரின் நாடுகளிலும் பேசப்படும் மொழி தமிழ்மொழியாகும். ஆனால், இம்மூவேந்தர்களும் வேற்றுமொழி பேசும் நாட்டினரைப் போர் வன்முறையால் அழித்து, மிரட்டி அவர்களிடம் திறை பெற்றுள்ளமையைக் காணமுடிகின்றது. இதனை,
“………………………………வென்றியொடு
வில்லலைத் துண்ணும் வல்லான் வாழ்க்கைத்
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே” (அகம்.31:12-15)
எனும் அகநானூற்றுப் பாடல் சான்று பகர்கின்றது. பிறமொழி பேசும் மக்களின் உழைப்பால் வந்த பொருட்களையும், அவர்களின் உரிமைகளையும் சுரண்டும் வன்செயல்களில் மூவேந்தர்களும் ஈடுபட்டிருந்தனர் என்பதை அறியமுடிகின்றது.
வேற்றுமொழிப் பேசுபவர்களைத் தன் ஆதிக்கத்தின் கீழ் அடிபணிய வைக்க வேலேந்திச் சென்றதனை,
“விலங்குஇருஞ் சிமையக் குன்றத்து உம்பர்,
வேறுபல் மொழிய தேஎம் முன்னி,
வினைநசைஇப் பரிக்கும் உரன்மிகு நெஞ்சமொடு
புனைமாண் எஃகம் வலவயின் ஏந்தி” (அகம். 215:1-4)
என்ற பாடல் எடுத்தியம்புகின்றது. வேற்றுமொழி பேசுபவர்களைத் தன் ஆதிக்கத்தின் கீழ் அடிபணிய வைக்கும் பொருட்டுத் தமிழ்அரசர்கள் கரிய கேடயத்தை ஏந்திப் படைநடத்திச் சென்றுள்ளதை அகம். 67:12-14ஆம் பாடல் வெளிப்படுத்துகின்றது.
மொழி அடிப்படையில் வேற்படையையுடைய ’கட்டி’ என்பவனுடைய நாட்டை ‘நல்லநாடு’ என்றும், வேற்றுமொழி பேசுபவர்களைப் பகைவர் நாடு என்றும் புலவர்கள் பதிவு செய்துள்ளமையை,
“குல்லைக் கண்ணி வடுகர் முனாஅது
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்” (குறுந்.11:5-7)
என்ற பாடல் வழி அறிந்து கொள்ளலாம். இவ்வாறு புலவர்களும் வேற்றுமொழி பேசுபவர்களைப் பகைவர்களாகப் பார்க்கும் நிலையினைச் சங்கப்பாக்களின் வழி அறியலாம்.
ஐ.நா.சபை போன்ற உலக சமாதான அமைப்பு, இந்திய தேசம் என்ற ஒருமைப்பாடு உள்ள நிலையிலேயே மொழிசார் வன்முறைகள் நிகழ்கின்ற பொழுது சுமார் இருபது நூற்றாண்டுகளுக்குமுன் எத்தகைய வன்முறைகள் நிகழ்ந்திருக்கும் என்பதனைக் கற்பனைசெய்து பார்க்கமுடியாத அளவில் இருந்திருக்கும் என்பது உண்மை. அதனையே மேற்கண்ட பாடல்கள் வழி உணரமுடிகின்றது.
***
பா.சிவக்குமார்,
முனைவர்பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
பாரதியார் பல்கலைக்கழகம்,
கோவை, 641 046.
ரா.பார்த்தசாரதி
தேர்தல் வந்தால் மாறுதல் உண்டு
சூழ்ச்சிகளில் சிறந்த வேட்பாளர் உண்டு
மக்களிடையே பல வாக்குறுதிகள் கொடுப்பதுண்டு
தேர்தல் என்பதே ஒரு நாடக மேடை என சொல்வதுண்டு !
கட்சிக்கு செய்ததை விட தொகுதிக்கு என்ன செய்வாய்
மாதம் ஒரு முறை மக்களை நேரில் சந்திப்பாயா
மக்கள் குறைக் கேட்டு தீர்ப்பாயா
இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுவாயா !
மக்களே வாக்கினை அட்சயப் பாத்திரமாக நினையுங்கள்
அதை பிச்சை இட்டு பிச்சைக்காரனாக நிற்காதீர்கள்
பணம் கொடுப்பவர்களுக்கு வாக்கு அளிக்காதீர்கள்
படித்த நற்பண்போடு உள்ளவர்களுக்கே வாக்களியுங்கள் !
அரசியல் ஆதாயம் தேடுபவர்களை புறக்கணியுங்கள்
மக்களை பலிகடா ஆக்கும் வேட்பாளரை எதிர்த்திடுங்கள்
வாக்கினை பொன்னாகக் கருதி வாக்கு அளித்திடுங்கள்
நல்ல தலைவனை நியமித்து நாட்டிற்கு நலம் சேர்த்திடுங்கள் !
-க. பிரகாஷ்
கடல்கோள்களால் அழிவுற்றனபோக எஞ்சியவற்றைப் பாண்டிய, சேர அவையங்களில் புலவா்களைக்கூட்டித் திட்டமிட்டுத் தொகுத்துத் தந்தவையே பழந்தமிழ் இலக்கியப் பாடல்களாகும். அவையே பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களாகும். தமிழ் இலக்கியம் – பண்பாடு, நாகரிகத்தின் ஊற்றுக்கண்ணாகும்.
குறுந்தொகையென்னும் நூல் பூரிக்கோ என்பவரால் தொகுக்கப்பட்டது. இதில் நான்கடிச் சிற்றெல்லைமுதல் எட்டடிப் பேரெல்லைவரை அமைந்த நானூறு பாடல்கள் அடங்கியுள்ளன. அடியளவால் குறுகிய இப்பாடல்களில் முதல், கருப்பொருளைவிட உரிப்பொருளே சிறப்பிடம் பெற்றுள்ளது.
குறுந்தொகையில் தலைவன், தலைவி:
ஊழ்வயத்தாலே ஒன்றுபடும் தலைவன் தலைவியரது வாழ்விலே ஏற்படுகின்ற கட்டங்கள் பல. அவை, இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், பாங்கியற் கூட்டம், பகற்குறி, பகற்குறி இடையீடு, இரவுக்குறி, இரவுக்குறியிடையீடு, வரைவுகடாதல், வரைபொருட் பிரிதல், அறத்தொடு நிற்றல், பொருள்வயிற் பிரிதல், பிரிவிடைத் தலைவனும், தலைவியும் ஒருவரையொருவா் நினைத்து புலம்பலும், ஏங்கலும், பிரிந்தவர் ஒன்றுபடுதல், பரத்தையரை நாடித் தலைமகன் பிரிதல், அவன் பழையபடி தலைவியோடு வந்து கூடுதல் என்னும் இவை போன்ற பலவாகும். இவர்களிடைத் தோன்றும் உள்ள நெகிழ்ச்சிகளையெல்லாம் நயம்பட அமைத்துக்காட்டுகின்றன இக்குறுந்தொகைச் செய்யுட்கள்.
தமிழில் தொன்மையுடையது சங்க இலக்கியமே என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. தொல்காப்பியர் அகத்திணை ஏழு என்பா். அவை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என்பவனாகும். இவற்றிற்கு ஏற்பப் புறத்திணையையும் ஏழு வகையாகக் குறிப்பிடுகிறார். அவை, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவாகும். இதில் தொல்காப்பியா் அகத்திற்கே முதன்மைதந்து புறத்தைச் சார்புபடுத்தி விளக்குகிறார்.
அக்காலத்தில் திணைப்பாடல்கள் வட்டாரப் பாடல்களாகத் திணைதோறும் வழங்கிவந்தன. நிலமே அதன் அடிப்படைப் பாகுபாட்டிற்கு காரணமாகும்.
“அவற்றுள்
நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே” – (948)
எனவும்,
மாயோன்மேய காடுறை உலகமும்
சேயோன்மேய மைவரை உலகமும்
வேந்தன்மேய தீம்புனல் உலகமும்
வருணன்மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்…….(தொல்: 951)
எனக் கூறப்படும் தொல்காப்பிய நூற்பாக்களால் நிலவழியாக வளா்ந்த திணைப் பாங்கினை உணரலாம். நிலம், பொழுது, கருப்பொருள்களை வைத்தே முதற்கண் ஒரு பாடல் இன்ன திணையென உணரப்படுகிறது. முதல் என்பது நிலமும், பொழுதுமாகும். பொழுது என்பது சிறுபொழுது, பெரும்பொழுது என இருவகைப்படும். கருப்பொருள்கள் என்பது அவ்வகை நிலப்பாகுபாட்டையும், அதிலுள்ள தெய்வம், பறவை, விலங்கு, உணவு, யாழ் உள்ளிட்டவற்றையும் குறிக்கும்.
ஐவகை நிலத்தினர்:
குறிஞ்சி நிலத்தவரே அளவளாவி இன்புறுவரென்பதும், முல்லைநில மகளிரே தலைவரைப் பிரிந்து ஆற்றியிருப்ப ரென்பதும், மருதநில மகளிரே தலைவருடன் ஊடிப்பிணங்கி இருப்பரென்பதும், நெய்தல்நில மகளிரே இரங்குவரென்பதும், பாலைநில மகளிரே பிரிவை நினைந்து புலம்புவரென்பதுமான ஒரு வரையறை உலகவாழ்வில் இல்லாதிருப்பினும், புலவா்கள் யாத்தமைக்கச் செய்யுட்களிலே இவ்வரையறைகள் காணப்படுகின்றன. இவற்றை நாடக வழக்கெனவும், நாடகப் புலவன் தானமைக்க நினைக்கும் காட்சிக்கேற்பக் களத்தைப் புனைந்தமைத்துக் காட்டுமாறு போலவே, புலவர்களும் காட்டிச் செல்கின்றனா். சிறுபான்மை உலகியலையும், பெரும்பான்மை புனைந்துரைகளையும் கொண்டு விளக்குவனவாகவே இச்செய்யுட்கள் அமைந்துள்ளன.
திணை:
திணை என்பது ஒழுக்கம் என்று பொருள்படும். ஐந்திணை என்பது ஐவகையான ஒழுக்கங்கள். இவை ஐந்தும் இல்வாழ்மக்கள் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய ஒழுக்கமுறையே ஆகும்.
குறுந்தொகையும் குறிஞ்சியும்:
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ….” (குறுந்: 2)
இயைற்கைப்புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகனை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், தலைமகளை நாணின் நீக்குதன் பொருட்டு மெய்தொட்டுப் பயிறல் முதலியன அவள்மாட்டு நிகழ்த்திக்கூடி தனது அன்புதோன்ற நலம் பாராட்டியது. இறையனார் என்பது இங்குச் சிவபெருமானைக் குறிக்கும். சிவபெருமான் ஒரு புலவராய்த் தோன்றி, தருமி என்னும் அந்தணன் பொருட்டுப் பாடியது இப்பாடல்.
மணமுடைய தேனை ஆராய்ந்து உண்டுவாழும் அழகிய சிறகுகளையுடைய தும்பியே! முற்பிறப்பில் பயின்றது இப்பிறப்பின் உரியதாகிய நட்பினையுடைய மயில் போன்ற சாயலினையும், வரிசையாய்ச் செறிந்துள்ள பற்களையும் கொண்ட இந்த அரிவையின் கூந்தல் நறுமணம் போன்றதொரு ஒப்பற்றமணம் நீ அறிந்த மலர்களில் உள்ளனவோ? பல மலா்கள்தோறும் சென்று அவற்றின் மணத்தை அறிந்துள்ள நீ, எனக்கின்பமான ஒன்றைக்கூறாது நீ துய்த்து அருந்திய மணமுடைய மலா் ஒன்று இருக்குமாயின் கூறுவாயாக.
“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே சாரல்……( குறுந்: 3)
தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்துகொள்வது வேண்டித் தோழி இயற்பழித்தவழித் தலைமகள் இயற்பட மொழிந்தது இப்பாடல் ஆகும். கரிய கொம்பினையுடைய குறிஞ்சிப் பூக்களைக்கொண்டு மிகுதியான தேனைத்தொடுக்கும் மலைப் பக்கத்தையுடைய நாட்டைச் சேர்ந்தவனோடு உண்டாகிய அரிய நட்பானது, சொல்லப்புகின் நிலத்தைக் காட்டிலும் அகலத்தால் பெரியது; நினைத்துப் பார்த்தால் வானத்தைக் காட்டிலும் உயா்வில் உயர்ந்தது. உள்ளே புகுந்து எல்லைகாணப்புகின் கடலைக் காட்டிலும் ஆழத்தால் அரிய அளவினது. பெருந்தேன் இழைக்கும் குறிஞ்சி நிலத் தலைவனின் நட்பு, தலைவன் பிரிந்திருத்தலால் பயனில்லாது கழிவது குறித்துத் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் அதனை மறுத்துத் தலைமகனின் நட்பின் சிறப்பை உயர்த்திக் கூறினாள். (நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மைகள்).
“யாரும் இல்லைத் தானே களவன்
தானவன் பொய்ப்பின் யான் எவன் செய்கோ…” (குறுந்: 25)
வரைவு நீட்டித்தஇடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
தலைமகன் வரைந்துகொள்ளாது களவினை நீட்டித்தவிடத்து ஆற்றாத தலைகள், ”தோழி! உணா்வார் எவருமிலர்; அவன் கூறிய சூளுரையை அவன் பொய்ப்பின் யான் என் செய்வேன்? அவன் மணந்தஅன்று ஆரலைப் பார்க்கும் குருகு இருந்தது எனக் கூறுதல்.”
தலைமகளிடம் அவன் கலந்தநாளில் வேறு எவருமில்லை… தலைவன் தானே நிகழ்ச்சி நடந்த இடத்துச் சான்றாவான். அவன், தான்கூறிய அச்சூளுரையிலிருந்து பொய்ப்பின் நான் என்ன செய்வேன்? அவன் மணந்த அன்று தினையினது தாளைப் போன்ற சிறிய பசுமையான கால்களையுடைய கொக்கு, இடையறாது ஒழுகும் நீரின்கண் நீந்தும் ஆரல்மீனை உணவாகக் கொள்ளுவதற்குக் காத்திருக்கும்.
சங்கஇலக்கிய நூல்களில் ஒன்றாகவும், பதினெண் மேல்கணக்கு நூல்களுள் ஒன்றாகவும் விளங்கும் குறுந்தொகை, சிறந்த நூலாகவும், குறுகிய நூலாகவும், தலைவன், தலைவி பற்றி செய்திகளை அழகாக எடுத்து இயம்பக்கூடியதாகவும் திகழ்கின்றது.
பார்வை நூல்கள்:
***
க.பிரகாஷ் எம்.ஏ, எம்பிஃல்,
தமிழ்த்துறை
தொழில்நுட்பக் களஆய்வுப் பணியாளர்
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 46
CALL – மேல் -CALL போட்டிடும் குந்தி மகனுக்காய்
கால்மேல்கால் போட்டபடி குந்தியிவன், – கால்மேல்
பசுவருடல் கூடப் பொருட்படுத் தாமல்
அசுவரதத் தட்டில் அமர்வு …. கிரேசி மோகன்….
ஸ்ரீ பகவான் உவாச:….
———————————————

”நெற்றியில் தொட்டு நவநீதன் அர்ஜுனர்க்கு
வெற்றியாம் கீதை வகுப்பெடுப்பு : -விற்போர்
கசடறச் செய்வாய், பசுவாய் பதத்தில்
அசடற நிற்பாய் அணைந்து’’….
“கைவல்யம் கேட்டாய் களத்தில் களைப்புற்று –
மைவண்ணன் சொன்னான் மறுமொழி -கைவல்யம் –
கைவில்யம் தானுனக்கு ,பொய்இப் புவிவாழ்வு –
செய்வனபார்த் தாதிருந்தச் செய் “….கிரேசி மோகன்….
செ. இரா.செல்வக்குமார்
இந்தக் கிழமையின் வல்லமையாளர், இரண்டு கைகளும் இரண்டு கால்களும் செயற்படாமல் இருந்தும் அருஞ்செயல் புரிந்து பல்லோருக்கும் பேருதவி ஆற்றிவரும் இளம் பெண் பிரீத்தி சீனிவாசன் .
செல்வி பிரீத்தி சீனிவாசன் துடிப்புமிக்க அறிவான ஒரே மகள் தன் பெற்றோருக்கு. இவருடைய தந்தை ந. சீனிவாசன் கிண்டி பொறியியற் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்று சீமென்சு (Siemens) நிறுவனத்தில் பல்லாண்டுகள் பணியாற்றியவர். சென்னையிலும், இடாய்ச்சுலாந்திலும் (செருமனி), அமெரிக்காவிலும் பணிபுரிந்துள்ளார். தாய் விச’யா அவர்கள் ஓவியக்கலையிலும் சமையற்கலையிலும், இனிதே இல்லறம் நடத்தும் கலையிலும் வல்லவர். செல்வி பிரீத்தியும் செல்லமாக வளர்ந்துவந்தார். படிப்பில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல் ஆங்கிலத்தில் கவிதை எழுதுவதும், ஓவியம் வரைவதும், நீச்சலடிப்பதும், கிரிக்கெட்டு விளையாடுவதும் என்று பல்துறையில் நற்திறன் பெற்றிருந்தார். நீச்சலில் இந்திய நாட்டளவிலான நீச்சல் வீரரராக உயர்ந்தார், தமிழநாட்டு மாநில அணியின் இளைஞர் அணியின் கிரிக்கெட்டு தலைவராகவும் (கேப்டன்) இருந்தார். ஆனால் ஒருநொடியில் தன் இனிய இன்பவாழ்க்கை தலைகீழாக மாறியது.
சக்கர இருக்கையில் இருக்கும் பிரீத்தியுடன் அவருடைய தாயார் விச’யா சீனிவாசன்.
ஒருநாள் புதுச்சேரியில் காலில் கடல்நீர் வந்து பாயுமாறு கடற்கரையில் நண்பர்களுடன் நின்றிருந்தார். நீர் பின்வாங்கிப்போகும்பொழுது காலுக்கடியில் இருந்த மணல் அரித்துக்கொண்டுபோக கால்தடுக்கிக் கீழே விழுந்தார். கல்லோ, பாறையோ எதிலும் அடிபடவும் இல்லை. ஒருதுளி இரத்தமும் வெளிப்படவில்லை. ஆனாலும் வியப்பூட்டும் விதமாக கழுத்தருகே எப்படியோ தண்டுவடத்தில் தாக்கம் ஏற்பட்டு கழுத்துக்குக்கீழே உடலியக்கத்தின் செயலிழந்துபோனார். கீழே விழுந்தவரால் எழமுடியவில்லை. இதனை அவர்கூற்றாகவே கூறுவதை இந்த நிகழ்படத்தில் கேட்கலாம். அருகில் இருந்த நண்பர்கள், பிரீத்தியை வெளிக்கொணர்ந்தனர். அப்பொழுது அவருக்கு அகவை 18!! எந்த ஒருவருக்கும் அவர்தம் பெற்றோருக்கும் நம்பவே முடியாத பேரிடியாய் இருந்திருக்கும். பிரீத்தியும், பிரீத்தியின் பெற்றோர்களும், அடுத்தடுத்து என்னென்ன செய்யவேண்டும் என கூர்ந்து சிந்தித்து விடாது முயன்றனர். பிரீத்தியின் அருமைமிகு தந்தை திரு. சீனிவாசனுக்கும் இதயநோய் ஏற்பட்டது. மிகவும் எதிர்பாராமால் ஒருநாள் அவரும் இயற்கை எய்திவிட்டார். வெளியுலகில் அனைத்தையும் செய்து வந்தவர் இவருடைய தந்தையாரே. திடீரென்று அவரும் மறைந்தது பேரதிர்ச்சி.
பிரீத்தியின் தண்டுவடம் சிதைவுற்றாலும், மிகுந்த உள உறுதியுடனும், சீரிய சிந்தனையின்வழியும் அவர் ஆற்றும் செயல்களே நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. தன்னைப்போன்ற உடல்நிலையுள்ள பல ஏழைமக்களுக்குப் பெரிய அளவிலே உதவிவருகின்றார். நம்பிக்கை இழந்து தவிக்கும் பலருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை ஊட்டிவருகின்றார். சோல்ஃபிரீ (Soulfree) என்னும் தொண்டுநிறுவனம் ஒன்றைத் தொடங்கி தண்டுவடம் அடிபடுவதால் ஏற்படும் உடற்குறையால் தவிக்கும் பலருக்குச் சக்கர இருக்கைகள் நல்குவது போன்ற உதவிகள் செய்துவருகின்றார் [2]. தண்டுவடம் அடிபடாமல் காப்பது பற்றியும், அடிபடும் தீவாய்ப்புகள் பற்றியும், உள்ளத்தில் உறுதியுடன் இருக்கவேண்டுவது பற்றியும் கல்விநிறுவனங்கள் முதல் பல நிறுவனங்களுக்குச் சென்று ஊக்கவுரை ஆற்றுகின்றார். சக்கர இருக்கையில் இருந்தாலும், கல்விகற்கவும் பல இடங்களுக்குப் போய்வர இருக்கும் இடையூறுகளைக் களைவது பற்றியும் விழிப்புணர்வு ஊட்டிவருகின்றார். சிதைந்த தண்டுவடம் சிதையாத நம்பிக்கை என்னும் தலைப்பில் இவரைப்பற்றி டாக்டர் விகடனில் ஒரு கட்டுரை பிப்பிரவரி 16, 2015 இல் வெளிவந்தது.
பிரீத்தியைப் பற்றி டாக்டர் விகடனில் வெளிவந்த கட்டுரை
பிரீத்தி ஊக்கவுரை நிகழ்த்துதல்
பீரீத்தி சீனிவாசன் அவர்கள், தன்னுடைய இன்னொரு நேர்காணலில் அவருடைய அருமையான, பெருநம்பிக்கைதரும் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலை இங்கே காணலாம்.
பிரீத்தியின் தொண்டுக்காகப் பல நிறுவனங்கள் அவருக்குப் பரிசுகள் வழங்கி ஊக்குவித்திருக்கின்றன. ஃபெமினா பெண்சக்தி விருதுகள் (Femina Penn Shakti awards), இந்திய இரத்தச் சிலுவைச் சங்கம் (Indian Red Cross) போன்ற பல நிறுவனங்கள் பரிசளித்து ஊக்கமளித்துள்ளன. இவர் ஊக்கவுரை நிகழ்த்தச்சென்ற இடங்களில் மாணவர்களும் இளைஞர்களும் மிக ஆழமாக உள்ளுணர்ந்து நெகிழ்ந்திருக்கின்றார்கள். பேச்சாலும் செயலாலும் அரியவிதத்தில் பலருடைய வாழ்வில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றார். கைகால்கள் இயங்காவிடினும், குரல் இருப்பதால், குரலால் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தமுடியும், பெரிய நம்பிக்கையை அளிக்கமுடியும் என உணர்ந்து குரல் வல்லமை (Throat Fort) என்னும் அமைப்பின் வழி விழிப்புணர்வு ஊட்டிவருகின்றார் [3].
தண்டுவடத்தில் ஏற்படும் பழுதால், உலகெங்கும் பலர் மிகவும் துன்புறுகின்றார்கள். அமெரிக்காவில்மட்டும் 250,000 பேர் முதல் 400,000 பேர்வரை இவ்வுடல் குறைபாட்டுக்கு ஆளாகியுள்ளனர்[4]. ஆண்டுதோறும் 7,800 முதல் 12,500 பேர் வரை இக்கொடுமைக்கு ஆளாகின்றனர். இக்குறைபாட்டுக்கு ஆளாவோருக்கு துணையாக இருக்க அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆகும் செலவும் ஓராளுக்கு ஏறத்தாழ $1.35 மில்லியல் அமெரிக்கவெள்ளி (இந்திய உருபாய் 8-9 கோடிக்கு மேல்) ஆகும் [4]. இந்தியாவில் இக்குறைபாடுகள் உள்ளவர்களை மதித்து அவர்களிடம் இருக்கும் திறமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு நல்வாழ்வு அமைத்துத்தரவும் வாழ்க்கையை நடத்தவும் வாய்ப்புகளும் வசதிகளும் செய்துதருவது ஒரு குமுகத்தின் நற்பொறுப்பு. இதனை உணர்ந்து உதவிகள் செய்ய செல்வி பிரீத்தி முனைந்து வருவது மிகவும் பாராட்டத்தகக்து. அவர்களின் முயற்சி பெருவெற்றி அடைய வாழ்த்துகின்றோம்.
செல்வி பிரீத்தி தன் தாய் தந்தையருடன்.
வாழ்வில் அரியதொரு எதிர்நீச்சல் போட்டுவரும் செல்வி பிரீத்தியை வாழ்த்தி அவரை இந்தக் கிழமையின் வல்லமையாளராக அறிவிக்கின்றோம்.
அடிக்குறிப்புகள்
[1] https://www.youtube.com/watch?v=x4Q1jTkeekg
[2] http://soulfree.org/
[3] https://www.facebook.com/ThroatFort
[4] http://www.makoa.org/nscia/fact02.html , http://www.sci-info-pages.com/facts.html
நிர்மலா ராகவன்

ஒரு தாயின் ஆதங்கம்: ஆறு மாதங்களுக்குமுன், என் மகன் தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவளையே மணக்க விரும்புவதாகவும் கூற, என் கணவர், `அப்படிச் செய்வதானால், இனி நீ இந்த வீட்டுக்குள் நுழையக்கூடாது!’ என்று இரைந்தார். அவனும் கோபித்துக்கொண்டு போய்விட்டான்.
சமீபத்தில், அவன் எல்லாருக்கும் தனது கல்யாணப் பத்திரிகை கொடுத்திருப்பதை ஒரு நண்பர்மூலம் அறிந்தோம். எங்களுக்கு அழைப்பில்லை. என் கணவர் அழுதபடி இருக்கிறார்.
அலசல்: திரைப்படங்களிலும், புதினங்களிலும் காதலின் மகத்துவத்தைப்பற்றி அறியும் இளைஞர்கள் காதல் கல்யாணத்தை விரும்புவதில் என்ன ஆச்சரியம்? ஆனால், இவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்வதில்லை. பெரியவர்கள் பார்த்து நிச்சயித்தாலும், காதலித்து மணந்தாலும், இரண்டு ஆண்டுகள்தாம் புது மோகம் நிலைக்கும். அதன்பின், எல்லா குடும்பத்திலும் ஏற்படும் சண்டை சச்சரவுகள் தவிர்க்க முடியாதவை.
வாழ்நாள் பூராவும் சேர்ந்து வாழப்போகிறவர்கள் கணவனும் மனைவியும்தானே! `தனக்கு இவள்தான் சரி!’ என்று உங்கள் மகன் முடிவெடுத்ததை உங்கள் கணவர் ஏன் அப்படி வன்மையாக எதிர்த்திருக்க வேண்டும்?
மகன் வளர்ந்திருந்தாலும், எல்லாவற்றிலும் தான் சொல்வதுபோலவே நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ, மிரட்டுவதோ சிறுபிள்ளைத்தனம். தனது எல்லா விருப்புவெறுப்புகளையும் ஒதுக்கிவிட்டு, தந்தை சொற்படியே நடந்துவந்தால், நாளடைவில் வெறுமைதான் மிஞ்சும்.
உங்கள் மருமகள் ஒரு பேரக்குழந்தையைப் பெற்றுக் கொடுத்தால் உங்கள் வீம்பு மறைந்துவிடக்கூடும். ஆனால், தன் கல்யாணத்துக்கு பெற்றோர் வந்து ஆசீர்வதிக்கவில்லையே என்று மகனும், அவனுடைய திருமணத்தைப் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லையே என்று நீங்களும் எக்காலத்திலும் வருந்த நேரிடும்.
பொதுவாக, பெற்றோர் மறுக்க மறுக்க, இளைஞர்களின் பிடிவாதம்தான் அதிகரிக்கும். அப்படியே ஒரு பெண் தங்கள் குடும்பத்திற்கு ஏற்றவளில்லை என்று அவர்கள் நம்பினால், அக்காரணத்தைப் பொறுமையாக விளக்க வேண்டும். `நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன், இனி உன் பாடு!’ என்று இருந்தால்தான் எக்காலத்திலும் நிம்மதி.
மருமகளுக்கும் என்றுமே உங்கள்மீது கசப்பு இருக்கும் — தன்னை ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொள்ளவில்லையே என்று. பெற்றோர் சம்மதத்துடன் மணந்தால், இரு தரப்பிலும் உறவு சுமுகமாக இருக்குமே!
(ஆறுமோ மனம் என்ற என் சிறுகதை வெளியானதும் ஒரு மாது தொலைபேசியில் என்னை அழைத்துப் பேசியதை ஒட்டியது).
தொடருவோம்
-மேகலா இராமமூர்த்தி
தமிழின் தலையாய இலக்கணநூலாக இன்றளவும் போற்றப்படுவது அகத்தியரின் தலைமாணாக்கரெனக் கருதப்படும் ஒல்காப் பெரும்புலமைத் தொல்காப்பியர் யாத்த தொல்காப்பியம் ஆகும். பிறமொழிகளின் இலக்கண நூல்களெல்லாம் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டும் இலக்கணம் வகுத்துவிட்டுத் தம்வேலை முடிந்தது என்று வாளாவிருந்துவிடத் தொல்காப்பியம் மட்டுமே வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தாலன்றி இலக்கணநூல் முழுமைபெறாது என்றுணர்ந்து, பொருள்பொதிந்த பொருளதிகாரத்தைப் பெருங்கொடையாய்த் தமிழர்க்கு நல்கியிருக்கின்றது.
தொல்காப்பியத்திற்குக் காலத்தால் மூத்ததும், முதற்சங்க காலத்தைச் சேர்ந்தது என்று மொழியப்படுவதுமான ’அகத்தியம்’ எனும் இலக்கணநூல் தென்னகத்துக்கு வந்த குறுமுனியான அகத்தியர் இயற்றியது என்று நம்பப்படுகின்றது. இந்தியாவின் வடபகுதியிலிருந்து தென்னகத்தின் பொதியில்மலை (பொதியமலை) வந்த அகத்தியர், தமிழின் இலக்கண இலக்கியங்களில் புலமை மிகப்பெற்று, அகத்தியம் எனும் அருந்தமிழ் இலக்கண நூலை இயற்றினார். அவரிடம் தமிழ்கற்பான் வேண்டிப் பலரும் அங்கே வருவாராயினர். பாண்டிய மன்னனும் அவர்களுள் அடக்கம். இவ்வாறு கூடிய கூட்டமே பின்னர் தமிழ்ச்சங்கமாய்த் தோற்றம்பெற்றிருக்கவேண்டும் என்று கூறப்படுகின்றது.
முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள் நம்மிடையே இருந்தன என்ற கருதுகோளும் உண்டு. முதன்முதலில் முச்சங்கங்கள் குறித்தும், அதில் இடம்பெற்றிருந்த நூல்கள், அச்சங்கங்களுக்கு அணிசேர்த்த தமிழ்ப்புலவோர், அவற்றைத் தலைமையேற்று நடாத்திய பாண்டியர் தொல்குடியைச் சேர்ந்த மன்னர்பெருமக்கள் உள்ளிட்ட செய்திகளைப் பரக்கப்பேசுவது இறையனார் அகப்பொருள் அல்லது களவியல் என்றழைக்கப்படும் இலக்கணநூலுக்கு வரையப்பட்ட உரையே (களவியலுரை) என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. இதற்கு மாறாக, சங்கம் எனும் கருதுகோளே கற்பனையானது, உண்மைக்குப் புறம்பானது என்று வா(சா)திக்கும் அறிஞர் பெருமக்களும் நம்மிடையே உளர்.
அது கிடக்க. முதல் இலக்கணநூலாய்க் கருதப்படும் அகத்தியம் இன்று நமக்கு முழுமையாய்க் கிடைக்கவில்லை. காலமெனும் பெருவெள்ளத்தில் அந்நூல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டபோதினும், அதில் இடம்பெற்றிருந்த ஒருசில சூத்திரங்கள் பிற தமிழ்நூல்களின் உரையாசிரியர்களால் மேற்கோளாய் எடுத்தாளப்பட்டதன் வாயிலாக இன்று நமக்குக் கிட்டியுள்ளன. அவ்வகையில் நாம் பேறுபெற்றோரே! அப்பாடல்களில் ஓரிரண்டைச் சுவைத்தின்புறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
அகத்தியத்தில் இடம்பெற்றுள்ள அழகான சூத்திரமொன்று, சொல்லின் திறத்தினை, அன்றைய மக்களின் அன்றாடப் பயன்பாட்டிலுள்ள பொருள்கள், அவைசார் தொழில்கள் மூலம் அழகாய்ச் செப்பியுள்ளது. அதனைக் காண்போம்.
வயிர ஊசியும்
-மயன்வினை இரும்பும்
செயிரறு பொன்னைச்
-செம்மைசெய் ஆணியும்
தமக்கமை கருவியும்
-தாமாம் அவைபோல்
உரைத்திறம் உணர்த்தலும்
-உரையது தொழிலே.
வயிரத்தால் செய்யப்பட்ட ஊசி வயிரத்தையும் அறுக்கக்கூடியது; இரும்பால் செய்யப்பட்ட அரம் பிற உலோகங்களை அறுக்கப் பயன்படுவதோடு இரும்பை அறுக்கவும் பயன்படும். அதுபோல், பொன்னை உரைத்துப்பார்க்க உதவும் உரையாணியும் பொன்னாலியன்றதே. (’முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்’ எனும் பழமொழியும் ஈதொத்த பயன்பாடு குறித்து எழுந்ததே!)
மேற்கண்ட உலோகங்கள் எவ்வாறு மற்றவற்றைச் சோதிக்கும் கருவியாக இருப்பதுடன் தம்மைச் சோதிக்கவும் பயன்படுகின்றனவோ, அதுபோன்றே ஒரு சொல்லானது பிறிதோர் பொருளைச் சுட்டுவதோடு, தன்னையே, தன் (ஒலி) உருவத்தையே சுட்டுவதற்கும் உதவுகின்றது என்பது அகத்தியரின் இந்தச் சூத்திரத்திற்கான பொருளாகும். தன் கருத்துக்கு வலுவூட்ட அவர் எடுத்தாண்டுள்ள உவமைகள் சிறப்பானவையாகவும், பொருத்தப்பாடு உடையனவையாகவும் இருப்பதைக் காண்க.
மொழியிலக்கணத்தை அறிந்துகொள்வதற்கு மட்டுமல்லாது, வயிரம், இரும்பு, பொன் போன்ற பல்வேறு உலோகங்களைக் கையாளுவதில் அன்றைய மக்கள் பெற்றிருந்த திறனை அறிந்துகொள்வதற்கும் இந்நூற்பா துணைசெய்கின்றது என்று கூறுவதில் தவறில்லை.
பிறவற்றைச் சோதிக்க உதவும் ஒருபொருள் தன்னைச் சோதிக்கவும் உதவுவது போலவே, உயிர்களின் உடல்நோய்க்குக் காரணமாயிருக்கின்ற ஒன்றே அதற்கு மருந்தாகவும் சில தருணங்களில் அமைந்துவிடக் காண்கின்றோம். எப்படி என்கிறீர்களா? அம்மைநோயை உண்டாக்கும் கிருமியையே அம்மைத் தடுப்பூசியிலும் (smallpox vaccine – The vaccine is made from a virus called vaccinia which is a pox-type virus related to smallpox.) உட்செலுத்தி அந்நோயைப் புறங்கண்டார் எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner – An English Physician and a scientist) எனும் ஆங்கில மருத்துவர். இங்கு நோயை உண்டாக்கும் நுண்ணுயிரியே அந்நோய்க்கான மருந்தாகவும் திகழ்கின்றது அல்லவா?
மாந்தகுலத்தை வாழவைக்கும்(!) காதலைக் கருத்தில்கொண்டாலும் இதே நிலைதான்! ஆம், காதல்நோயை உண்டாக்கும் பெண்ணின் பார்வையே அதற்கு மருந்தாகவும் (அவள் காதலனுக்கு) அமைந்துவிடுகின்றது என்கிறார் அறிவுலக மேதையான வள்ளுவப் பேராசான்.
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. (1091)
மீண்டும் அகத்தியத்தை நோக்கி நம் அகத்தைத் திருப்புவோம்!
பலபொருள்களின் தொகுதியால் இயை(ணை)ந்தவை ஒன்றெனக் கருதப்படுவது குறித்துப் பேசும் சூத்திரம் இது!
பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே
அடிசில் புத்தகம் சேனை அமைந்த
கதவம் மாலை கம்பலம் அனைய.
ஒரு பூம்பொழிலில் கண்ணைக் கவரும் வண்ணமலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. அவற்றைத் தனித்தனியாய்க் காணும்போது வெவ்வேறான வண்ணமும் வடிவமும் கொண்ட மலர்களாய் அவை நமக்குக் காட்சியளிக்கும். அதே வண்ணமலர்களைக் கொய்து வன்ன(அழகிய) மாலையாய்த் தொடுத்தபின்போ, அவற்றை நாம் ’மலர்கள்’ என்று பன்மையில் அழைப்பதில்லை; ’மாலை’ என்று ஒருமையில்தான் அழைக்கின்றோம்.
இப்படியே சோறு, பொரியல், கூட்டு, பச்சடி எனும் பல்வேறு பண்டங்களை உள்ளடக்கியதை நாம் ’உணவு’ என்று ஒருமையிலேயே அழைக்கின்றோம்.
ஏடுகளின் தொகுப்பு ’புத்தகம்’ என்றும், வீரர்களின் கூட்டம் ’சேனை’ என்றும், மரத்துண்டுகளின் இணைப்பு ’கதவு’ என்றும், நூலிழைகளின் பின்னல் ’கம்பலம்’ (வேலைப்பாடமைந்த திரைச்சீலை அல்லது மேற்கட்டி) என்றும் ஒருமையில் அழைக்கப்படுவதற்கும் மேற்கண்டவிதி பொருந்துகின்றது.
இவ்வாறு தனித்தனியாகப் பார்க்கும்பொழுது பன்மையில் தோன்றுபவை ஒன்றாய் இணைந்தபின் ஒருமைத்தன்மை பெறும் பான்மையைத் தக்க சான்றுகளோடு நிறுவியுள்ளார் அகத்தியர் பெருமான். (இச்சூத்திரத்தில் கம்பலம், சேனை, புத்தகம் போன்ற வடசொற்கள் பயின்றுவருவதைக் கண்ட அறிஞர் பெருமக்களில் சிலர், இதனை இயற்றியவர் தொல்காப்பியரின் ஆசிரியரான பழைய அகத்தியராய் இருக்கவியலாது; இவர் காலத்தாற் பிற்பட்டவராயிருத்தல் வேண்டும் என்று கருதுகின்றனர்; இஃது ஆராய்ச்சிக்குரியது.)
இயலுக்கு மட்டுமல்லாது இசை, நாடகம் எனும் தமிழின் பிற பிரிவுகளுக்கும் இலக்கணம் கண்டது அகத்தியம் என்பது தமிழாய்ந்தோர் கருத்து. அவற்றையெல்லாம் கற்றுப் பயன்கொள்ளும் அரியவாய்ப்பை நாம் பெற்றிடாதபோதினும், நமக்குக் கிட்டியுள்ள ஒருசில சூத்திரங்களே பல்கேள்வித் துறைபோகிய நல்லாசிரியரான குறுமுனிவரின் பேராற்றலை உள்ளங்கை நெல்லியென நமக்குத் தெற்றெனப் புலப்படுத்திவிடுகின்றன.
-சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
பிரமிடுகள் காலத்தில் தோன்றிய கால்வாய்
பெரோஸ், பெர்ஸியர் தோண்டிய கால்வாய்
கிரேக்கர், ரோமர் கைவிட்ட கால்வாய்
நெப்போலியன் திட்டம் துவங்கிய கால்வாய்
பிரெஞ்ச் நிபுணர் இறுதியில் பூர்த்தி செய்த
பெருநீளக் கடல்மட்ட சூயஸ் கால்வாய்.
++++++++
‘மகா பிரமிட் கூம்பகம் நான்கு திசை முனைகளுக்கு [Four Cardinal Points: North, South, East & West] ஒப்பி நேராகக் கட்டப் பட்டிருந்தது! கூம்பு வழியாக வரையப்படும் நேர்குத்து அச்சு [Meridian] பிரமிடை இணையாகச் சரி பாதி பிரித்தது! மேலும் அக்கோடு நைல் நதி பாயும் சங்கம அரங்கையும் [Nile River Delta Region] சரி பாதியாகப் பகுத்தது. ‘
நெப்போலியன் தளவியல் வரைவுக் குழு [Napolean Survey Team (1798)]

முன்னுரை: கி.மு.2650 ஆண்டு முதலே எகிப்தின் வல்லமை படைத்த கல் தச்சர்கள் பிரமிடுகள் [Pyramids] மற்றும் பலவித பிரம்மாண்டமான சிற்பப் பொறியியல் அற்புதங்களைப் படைத்ததற்குச் சான்றுகள் இப்போதும் அங்கே உள்ளன! நைல் நதியின் மேற்குக் கரையில் கட்டப்பட்ட பிரமிக்கத் தக்க பிரமிடுகள், இறந்தவரைப் புதைக்க அமைத்த கற்கோபுரங்கள்! நாற்புறச் சம கோணச் சாய்வு வடிவான பிரமிடுகள் கல் தச்சர்களின் வரைக் கணித ஞானத்தையும் [Geometrical], கூரிய நிபுணத்துவத்தையும் காட்டுகின்றன. சிற்பக் கலையும், ஓவியக் கலையும் உன்னத நிலையில் இருந்ததற்கு எகிப்தின் பிரமிட் கோபுரங்கள், கால வெள்ளம் அடித்துச் செல்லாதபடி நிலைத்த சரிதைகளாய் நிமிர்ந்து நிற்கின்றன! ஆனால் பெரோ மன்னர்கள் முதலில் தோண்டிய கடல் இணைப்புக் கால்வாய் பலமுறைச் சிதைந்து, பல்வேறு வல்லுநர்களால் பலவித வடிவங்களில் பலமுறை மாற்றமாகி இப்போது புது உருவம் பெற்றுள்ளது!
உலகிலே நீண்ட சூயஸ் கால்வாயிக்கு நெப்போலியன் திட்டம்
முதல் நைல் நதிக் கால்வாய் மூன்றாம் துத்மோஸிஸ் [Tuthmosis III] மன்னரால் தோண்டப் பட்டாலும், கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆண்ட மன்னன் பெரோ நெக்கோ [Pharaoh Necho] கட்டியதாகத்தான் சரித்திரச் சான்றுகள் கிடைத்துள்ளன. பின்னால் எகிப்தைக் கைப்பற்றிய பெர்ஸிய மன்னன் முதலாம் தாரியஸ் [Darius I] வெட்டப்பட்ட கால்வாயை முடிக்குமாறு உத்தரவிட்டதாக அறியப் படுகிறது. அந்தக் காலத்தில் கட்டிய கால்வாய், இரட்டை அமைப்பாடுகளைக் கொண்டது. முதலாவது, பெரிய பிட்டர் ஏரியை [Bitter Lake] சூயஸ் வளைகுடாவுடன் இணைத்தது; இரண்டாவது கட்டத்தில் பிட்டர் ஏரியை நீள நைல் நதிச் சங்கமப் பிரிவுகள் ஒன்றுடன் சேர்ப்பது. கால்வாயைக் கட்டும் பணியில் சுமார் 120,000 எகிப்திய பாமரர் மாண்டதாக அறியப்படுகிறது! புகழ்பெற்ற டாலமி காலத்தில் [Ptolemaic Era (323-30 B.C.)] கால்வாய் நீளமாக்கப்பட்டுச் சீரிய முறையில் இருந்ததாக வரலாறுகளில் உள்ளது. அதன் பின்னால் கால்வாய் சிதைவுற்றதை ரோமாபுரிப் பேரரசர் டிராஜன் [Roman Emperor Trajan (A.D.98-117)] சீர்ப்படுத்தினார்! பிறகு அரேபிய மன்னர் அமர் இபன்-அல்-ஆஸ் [Amr Ibn-Al-Aas] கால்வாயைச் செம்மைப் படுத்தினார்.
எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு கால்வாய் மறுபடியும் செப்பமிட முடியாத நிலையில் சிதைந்து கிடந்தது! 1671 இல் புகழ்பெற்ற ஜெர்மன் கணித மேதை லெப்னிட்ஸ் [Leibnitz (1646-1716)] தனது எகிப்து விஜயத் திட்டத்தின் போது, பிரென்ச் மன்னர் பதினான்காம் லூயியிடம் [Louis XIV] கடல்களை இணைக்கும் அத்தகைய கால்வாயைப் பற்றி உரையாடியதாகத் தெரிகிறது. தற்போதைய கால்வாய் முயற்சியில் சுல்தான் மூன்றாம் முஸ்தபா [Sultan Mustafa III (1757-1773)], அடுத்து நெப்போலியன் ஆரம்பிக்க தள ஆய்வு வேலைகள் ஆரம்பமாயின. அவ்வாறு எகிப்து நாகரீகத்தில் பிறந்து, பல மன்னர்களின் வசப்பட்ட ஒரு பண்டைக் கால்வாய், பல்லாயிரம் ஆண்டுகள் தாண்டி கி.பி.1869 ஆம் ஆண்டில் பிரென்ச் நிபுணர்களால் புத்துயிர் பெற்றுப் பூர்த்தியானது ஒரு சுவையானப் பொறியியல் வரலாறு! ஈரோப்பிற்கும் இந்தியாவுக்கும் எகிப்து கால்வாய் வழியாக சுருக்குப் பாதை அமைக்க முதன்முதல் ஆலோசனை கூறியவர் பிரென்ச் அதிபதி நெப்போலியன்! நூறு மைல் நீளம், 200 அடி அகலமுள்ள சூயஸ் கால்வாய், ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில், மனிதரால் படைக்கப் பட்ட மகத்தான ஒரு பொறியியல் பூதக் கால்வாயாகக் கருதப்படுகிறது!
கி.மு.1920 ஆண்டில் எகிப்து பெரோஸ் மன்னர்கள் [Pharaos] காலத்திலே மத்தியதரைக் கடலையும், செங்கடலையும் கால்வாய் மூலம் இணைக்கும் முன்னோடிப் பணிகள் முதலில் ஆரம்பிக்கப் பட்டன என்று எகிப்து சூயஸ் கால்வாய்ப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் மம்தோவ் ஹம்ஸா [Dr.Mamdouh Hamza] அறிவிக்கிறார். டாக்டர் ஹம்ஸா நிலவியல் யந்திரப் பொறியியல் நிபுணர் [Civil Engineer, Soil Mechanics]. நீள நைல் நதியின் கடல் சங்கமப் பகுதியில் ஒரு கால்வாயை வெட்டி, இரண்டு கடல்களையும் சேர்த்ததாக வரலாறுகளில் அறியப் படுகிறது. முற்காலத்தில் ஈரோப்பிலிருந்து இந்தியாவுக்கு வர நைல் நதியின் வழியாகக் கப்பல்கள் முதலில் பயணம் செய்து, கால்வாய் மூலமாகக் கடலை அடைந்ததாகத் தெரிகிறது. அதன் பின்பு கால்வாய் கவனிப்பாரற்று அடுத்து கிரேக்க, ரோமாபுரி வேந்தர்களால் பல தடவைத் தோண்டப் பட்டு மீண்டும் புறக்கணிக்கப் பட்டது! எகிப்து நாடு அரேபியர் கைவசம் ஆன பிறகு, மறுபடியும் கால்வாய் தோண்டப்பட்டு, நிரப்பப் படாமல் பல்லாண்டுகள் கிடந்தது! பின்னால் கால்வாயில் நீர் நிரப்பப்பட்டது.
எகிப்த் மீது படையெடுத்த நெப்போலியன்
1798 மே மாதம் 19 ஆம் தேதி பிரெஞ்ச் மாவீரன் நெப்போலியன் போனபார்ட் தென் பிரான்ஸின் டொவ்லான் [Toulon] கடற்கரையிலிருந்து 328 கப்பல்களில் 35,000 படைவீரர்களுடன் எகிப்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் கிளம்பினார். அப்போது நெப்போலியனுக்கு 29 வயது! பிரிட்டாஷ் இந்தியாவை அடுத்துப் பிடிக்க ஓர் பாதை அமைக்கவே நெப்போலியன் எகிப்தை முதலில் தன்வசப் படுத்தப் போர்தொடுத்ததாகத் தெரிய வருகிறது! மேலும் பிரெஞ்ச ஆதிக்கம் உலக அரங்கில் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும் என்ற பேராசையில் புறப்பட்டதாகும் வரலாறு கூறுகிறது! அந்தக் காலத்தில் எகிப்த் நாடு ஐரோப்பிய பேராசைப் போர்வாதிகளுக்கு ஒரு முக்கிய குறிவைப்பு நாடாகக் கருதப் பட்டது! பிரிட்டனுக்கும், இந்தியாவுக்கும் நடுப்பட்ட ராணுவக் குறுக்கு நாடாக எண்ணப் பட்டது! சிறப்பாக அப்படை எடுப்புக்கு சாவந்த் [Savants] எனப்படும் பிரெஞ்ச் ஞானிகள் 175 பேரைத் திரட்டி நெப்போலியன் தயார் செய்தார் என்று அறியப் படுகிறது! அவர்கள் யாவரும் எகிப்தின் பூர்வீக நாகரீகக் கலாச்சாரத்தை ஆழமாக அல்லது ஓரளவு அறிந்தவாராக இருந்தனர்! அவர்கள் மகா பிரமிட்கள், மற்ற எகிப்தின் பூர்வீகக் களஞ்சியங்களைத் தோண்டிக் காணும் பணிக்கு அழைத்து வரப்பட்டவர்!
அப்போது எகிப்தை துருக்கியின் சுலதான் ஆண்டு வந்தார். ராணுவக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்தால், நெப்போலியன் எகிப்தியப் படையெடுப்பு ஒரு படுதோல்வி முயற்சி என்று சொல்லப் படுகிறது. பாலை வனத்தின் மணல் மீது தாங்க முடியாத தீப்பறக்கும் நடு வேனிற் காலத்தில் பிரெஞ்ச் படை போய் இறங்கியது! பிரமிடை நெருங்கிய பிரெஞ்ச் படையினரைச் சுமார் 10,000 எகிப்தியக் குதிரை வீரர்கள் [Mameluke Horsemen] தாக்கினர். அதே எகிப்தியப் படைகள்தான் கெங்கிஸ் கானுடன் [Genghis Khan] போரிட்டு எதிர்த்து நின்றவர். ஆனால் அந்த உள்நாட்டுப் படை வீரர்கள், பிரெஞ்ச் வீரர்கள் கூரிய துப்பாக்கி ரவைகள் முன்பு தாக்க முடியாமல் அடிபட்டுப் போயின! இரண்டு மணி நேரத்திற்குள் 10,000 எகிப்தியர் சுடப்பட்டு மடிந்தனர்! வடக்கே மேற்புறத்தில் வெற்றி பெற்றாலும், நெப்போலியன் படை தெற்கே கீழ்ப்பகுதியில், மாமிலூக் குதிரை வீரர்கணின் கொரில்லாச் சூழ்ச்சிப் போரில் தோற்றுக் கைதி செய்யப் பட்டார்! அதே சமயத்தில் பிரெஞ்சின் பெரிய கடற்படை பிரிட்டன் கடற்படைத் தளபதி நெல்ஸனால் பேரளவு சிதைந்து போய், நெப்போலியன் சிறைப் பட்டார்! 1801 ஆம் ஆண்டில் எகிப்த் பிரெஞ்ச் வசமிருத்து மீட்கப் பட்டது!
நெப்போலியன் படையெடுப்பு எகிப்தின் புதையல் ஆய்வுகளுக்கு வழியிட்டது!
பல நூற்றாண்டுகளாய் எகிப்தின் கலாச்சார நாகரீகம் ஐரோப்பியருக்கு ஒரு பெரும் புதிராகவே இருந்து வந்தது. பொதுவாக கிறிஸ்துவர்கள் எகிப்தில் அந்தக் காலங்களில் வரவேற்கப் படுவதில்லை! ஐரோப்பிய அறிஞர்கள் எகிப்தில் கால்வைப்பதற்கு முன்பு, கிரேக்க ரோமானியர் எகிப்தின் களஞ்சியங்களை எடுத்துச் சென்று, துல்லியமற்ற அறிக்கைகளை வெளியிட்டனர்! நெப்போலியன் எகிப்த் நாடு முழுவதையும் கைப்பற்ற முடியாமல் போனாலும், அவர்தான் பூர்வீக எகிப்தியக் கலாச்சார நாகரீகத்தை வெளி உலகுக்கு முதன்முதல் அறிவித்தவர்! அதன் பிறகுதான் விஞ்ஞான முறையில் எகிப்தியர் பிரமிட்களும், ஆலயங்களும் ஆராயப் பட்டன! எகிப்தின் படை யெடுப்பைத் திட்டமிட்ட நெப்போலியன்தான், அதன் நாகரீகம் சரிவர ஆராய்ந்து பதிவு செய்யப் படவில்லை என்று கண்டறிந்தவர்! நெப்போலியன் அழைத்துச் சென்ற சாவந்த் ஞானிகள், படைவீரர் நுழைந்து சென்ற தளங்கள் எல்லாம் பின்தொடர்ந்து, பூதளவியல், வரலாறு, கலாச்சாரம், தொல்பொருள் சம்பந்தப் பட்ட, ஏராளமான தகவல்கள் [Description de l ‘Egypte] சேர்த்ததாக அறியப் படுகிறது! 12 நூலடுக்குகள் [Volumes] கொண்ட அவற்றில் ஏராளமான படங்கள் (910 Plates) வரையப் பட்டிருந்தன! 1809-1828 ஆண்டுகளில் அவை யாவும் சீரிய முறையில் பதிப்பில் வந்தன.
(முற்றும்)
https://youtu.be/Zj4O560cHaU
https://youtu.be/MJ85Fkz-VaE
தகவல்:
**************************
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
அனிதா சத்யம் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.04.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
க. பாலசுப்பிரமணியன்
ஆறாம் பத்து
சுவைத்து சுவைத்து சுவையை மறக்கும்
சொல்லிடும் சொல்லின் சொந்தத்தைத் தவிர்க்கும்
வல்லினம் மெல்லினம் நல்லினமறியா நாவினில்
சொல்லின் செல்வனே ! வல்லமை தந்திடு !
வித்தகன் சத்தியன் விருப்பங்கள் வென்றவன்
நித்தியம் இராமனை நினைவினில் வைத்தவன்
புத்தியில் பூரணன் சக்தியில் வல்லவன்
பக்தியில் இமயம் பாதங்கள் சரணம் !
விதியின் வலியினைக் குறைக்கும் மருந்து
மதியினைக் காக்கும் அமுதுடை விருந்து
கதியென வந்தோர் களிப்புறும் கரும்பு
இனியிலை கவலை நின்னருள் சிறப்பு !
யோசனை தூரங்கள் எளிதில் கடந்தும்
ஆசனம் தேடா அரும்பெரும் தெய்வம்
யாசகம் கேட்டு உன்னிடம் வந்தேன்
சாகசம் செய்யாது சடுதியில் அருள்வாய் !
பூசைகள் யாகங்கள் புனலும் வேண்டா
புண்ணிய மூர்த்தி புலன்களைக் காப்பாய்
ஆசைகள் அனைத்தையும் அறுத்திட வேண்டி
அடிகள் பணிந்தேன் அன்புடன் அருள்வாய் !
வணங்கிட உன்னை வார்த்தைகள் இல்லை
வாழ்த்திடப் போற்றிட மொழிகள் இல்லை
காற்றினில் உலகைக் கடந்திடும் தேவா
கனிவுடன் முன்னே கைகள் குவித்தேன் !
வரங்கள் ஆயிரம் வேண்டாம் எனக்கு
வரவாய் வேண்டும் உந்தன் அருளே !
வாடிய நேரத்தில் விரைந்தே வருவாய்
வாடா மலராய் நெஞ்சினில் மலர்வாய் !
கூப்பிய கைகள் குவிந்தே நிற்கும்
குலத்தின் நலத்தை விழைந்தே நிற்கும்
கோணிய உறவுகள் நேர்நிலை பெற்று
குவலயம் சிறப்புற குரலினை எழுப்பும் !
நாடினேன் உன்னையே நாசியின் மூச்சாய்
நிறைந்திடு உறைந்திடு உறுதியில் உணர்வினில்
நரம்பினில் தசையினில் நலமுடை நெஞ்சினில்
குருதியில் குடலினில் குறைவின்றி நினைவினில் !
கண்களில் நிற்ப்பாய் கலங்கரை விளக்காய்
காரிருள் நீக்கியே கதிரவன் ஒளியாய்
காலங்கள் வைத்தேன் காலடி முன்னே
காத்திட வருவாய் ! கருணா மூர்த்தி !
முனைவர் நா. சங்கரராமன்
2. உறவுகளைப் பேணுங்கள்

“சார் எங்க இருக்கீங்க. ஒரு பெரியவரு உங்கள பாக்கணும் சொல்றாரு. அழுதுகிட்டே நிக்குறாரு. எதுவும் சொல்ல மாட்டேங்குறாரு. கஷ்டமா இருக்கு” கல்லூரி அலுவலர் ஒருவர் அலைபேசியில் அழைத்தபோது நான் ஊரில் இருந்தேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை.
“அலைபேசியை பெரியவரிடம் கொடுங்க ” என்று சொல்லிவிட்டு பேசினால் எதிர்முனையில் இருந்து விம்மல் சத்தம் மட்டுமே கேட்டது. அப்படியே அவருக்கு நான் ஊரில் இருக்கும் விஷயத்தையும் மறுநாள் வந்துவிடுவேன் வாருங்கள் என்றும் சொல்லிவிட்டு அழைப்பினை துண்டித்தேன். என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்க முடியாத நிலை. அழகிரிசாமி அவர்களின் விடியுமா கதையில் வருவது போன்ற ஒரு பயணத்தில் மறுநாள் கல்லூரி வந்ததும் என்னை வாசலிலே காத்திருந்து கட்டியனணைத்தார் பெரியவர் ஒருவர். எனது புகைப்படம் மற்றும் நெற்றி நாம அடையாளங்களை முதன் நாள் வாங்கிச் சென்றது பின்னரே தெரிய வந்தது. மாணவர்கள் மத்தியில் திடீரென ஒரு பெரியவர் கட்டி அணைத்ததும் என்னவென்றே புரியாத நிலை ஆனால் மனம் இனம்புரியாத ஒரு கனத்தோடு… அவரை அழைத்து கல்லூரி உணவு விடுதியில் அமர வைத்து அவரின் அழுகை நின்றதும் தேநீர் பருகச் சொல்லிவிட்டு விசாரித்தேன் . “தம்பி நான் பல்லக்கா பாளையம். எனக்கு ரெண்டு பசங்க கல்யாணம் பன்னி வச்சேன். சந்தோசமா இருக்காங்க. கெழவி செத்ததும் கொஞ்சம் இருந்த நிலத்தையும் வித்துடு பா. நாங்க பாத்துக்கிறோம் சொன்ன பசங்கள நம்பி எல்லாத்தையும் வித்திட்டு அவங்களோட போயிட்டேன். கொஞ்ச நாளுல ரெண்டு பேருமே என்னை பாரமா நெனைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ரெண்டு நா முன்னாடி சண்டை பெரிசா வந்து “எங்காவது போய் சாக வேண்டியதுதானே ? ஏன் உசிர வாங்குறேனு திட்டிட்டாங்க. கோபமா வெளியே வந்து சாப்பிடக்கூட வழியில்லாம சாகலாம்னு முடிவெடுத்து குவார்ட்டர் வாங்கி அதில விஷம் குடிச்சு கதய முடிக்கலாம்னு இருந்தேன். டீக்கடைல இருக்கும் போது உங்க பேச்சு “தற்கொலை வேண்டாமே “அப்படினு உங்க காலேஜ் (எஸ் .எஸ் .எம் ) எப்.எம்ல கேட்டேன். நல்லா இருந்தது. இருவது நிமிஷம் பேசினீங்க. எனக்கு பேசுன மாதிரியே இருந்தது. அப்படியே பாட்டில தூக்கி போட்டுட்டு உக்காந்தேன்.கொஞ்ச நேரத்துல என் பசங்க வந்து மன்னிப்பு கேட்டு கூட்டிட்டு போயிட்டாங்க. அவங்களுக்கு கூட இந்த விஷயம் தெரியாது.நீ சொல்ல வேணாம் வருத்தப்படுவாங்க வேற எங்காவது சொல்லணும் தோணினா சொல்லு எனக்கு சந்தோசம் . உன்ன பாத்து கட்டி அணைச்சுக்கணும்னு தோணிச்சு அதான் நேத்து வந்தேன். இப்ப எனக்கு சந்தோசம்யா …நீ நல்லா இருக்கணும் ” என்று வாழ்த்தி விட்டு விடை பெற்றார்.
என் கண்ணில் நீர் சொரிய ஆரம்பித்தது.
இது நடந்தது 2012ம் வருடம். நம்பிக்கை கதைகளையும் நம்பிக்கை சார்ந்த செய்திகளையும் போடுவதற்கும் பேசுவதற்கும் இந்நிகழ்வு ஒரு காரணம். அவ்வப்போது பேசி அவர் கடந்த மாதம் உடல் உபாதையினால் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அவர் இறுதிச் சடங்கில் நான் யாரென்றே சொல்லாமல் நெருடலில்லாமல் பங்கேற்று மகன்களுக்கு ஆறுதல் சொல்லி வெளியேறினேன்.. யாரையும் மாற்றுவதற்காக எழுத வேண்டும் நம்பிக்கையோடு எழுதுவோம் யாரோ ஒருவர் உங்கள் எழுத்துக்களுக்காக காத்திருப்பார்.
நம்பிக்கையோடு பேசுங்கள்
யாரோ ஒருவர் உங்கள் பேச்சுக்காக காத்திருப்பார்
நம்பிக்கையோடு …
நம்மிடம் நம்முடைய பெற்றோர்களும் உறவுகளும் எதிர்பார்ப்பது அன்பான வார்த்தைகளையும் ஆறுதல்களையுமே ஆகும் . அவர்களை மதிக்க தொடங்கும்போதே நாம் உயர ஆரம்பித்து விடுகிறோம் . ஒவ்வொரு முறையும் நம்முடைய உயர்வுக்கும் நன்மைக்குமே போராடும் அவர்களை நாம் நம்முடைய இதயத்திலே வைத்து அன்பு பாராட்ட வேண்டும் . அவர்களை நாம் பார்த்துக்கொள்வதை நம்முடைய குழந்தைகள் பார்க்கும் . உண்மையிலே நம்முடைய சிறந்த பண்புகளை நமக்குப்பின்னர் வரும் நம்முடைய சந்ததியினருக்கு பரப்ப வேண்டும்
அன்பால் வெல்வோம் உலகை ….
சதா பாரதி
க.பாலசுப்பிரமணியன்
பேசும் கலை – சில அடிப்படை திறன்கள்
எனது நண்பர் ஒருவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தால் எப்போது நாம் அந்த இடத்தை விட்டுச் செல்வோம் என்ற எண்ணம் ஏற்பட்டு விடும்!
அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களில “நான் நெப்போலியனோடு பேசிக்கொண்டிருந்தபோது” என்று அவர் ஆரம்பிக்கும் பொழுது நமக்கு இந்த நெப்போலியன் யார்” என்ற வியப்பு ஏற்படும்.
முன்னாள் பிரான்ஸ் நாட்டு மன்னரைப் பற்றி அவர் வர்ணனை செய்யும் பொழுது அவர் ஏதோ பக்கத்து வீட்டுக்காரர் என்ற எண்ணத்தை உருவாக்குவார். தம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் அனைவரும் வடிகட்டிய முட்டாள்கள் என்ற நினைப்போடு பேசுவார். ஒரு பரிதாபமான நபர்.!
பேசும்பொழுது எதைப் பற்றிப் பேசுகிறோம், யாரைப் பற்றிப் பேசுகிறோம் எதற்காகப் பேசுகிறோம் – என்றெல்லாம் எண்ணிப் பேசுதல் அவசியம். பேசும் பொழுதில் கேட்பவரின் அறிவுத்திறனையோ, வாழ்க்கைத்தரத்தையோ, கல்வி அறிவையோ குறைத்தோ மட்டமாகவோ அல்லது இணையற்றதாகவோ மதிப்பீடு செய்யக்கூடாது. ஒருவரின் அறியாமையை கேலிக்கூத்தாகவோ அல்லது ஏழ்மையின் அறிகுறியாகவோ எண்ணுதல் மிகத் தவறு.
பேசும்கலையின் அடிப்படையை அழகாக விளக்கிய ஆங்கிலக் கவிஞர் செகப்பிரியர் (Shakespeare)”Brevity is the soul of Wit”- சுருங்கச் சொல்லுதலே அறிவின் உயிர். என்று கூறியுள்ளார். “சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் ஒரு அருமையான கலை.கற்றலில் பேசும் திறன்களைப் பற்றி அதிகமாகச் சொல்லிக் கொடுப்பதில்லை. இதன் முக்கியத்துவத்தை நாமும் நம் கல்வி வல்லுனர்களும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. உதாரணமாக ஒருவரிடம் பேசும்பொழுது
இது போன்ற பல கேள்விகளுக்கு நமக்கு நாமே பதில் தேடிக் கொள்ளவேண்டும்.
நம்முடைய உடல்மொழி மற்றும் முகபாவங்கள் நாம் சொல்லும் கருத்துக்களின் அடிப்படையை மட்டுமின்றி கேட்பவரின் உளநிலையையும் பாதிக்கும்.
“மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து “ என்ற வள்ளுவர் வாக்கு இதற்கு ஒரு நல்ல முன்னுதாரணம்.
“நம்முடைய சொற்கள் நமது தூதர்கள்” என்று சொல்லுவார்கள். நம்முடைய குணாதிசயங்கள், உள்நோக்கங்கள், பழக்க வழக்கங்கள், சமூக நோக்கங்கள் ஆகியவற்றை அவை தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகின்றன..
ஆகவே பேசுபவருடைய சொல்லாண்மை, சொல்லாட்சி, சொல்லாடல் ஆகியவை அந்தத் திறனை வளர்ப்பதற்கு அடிப்படைத் தேவைகள்.
“கண்டேன் சீதையை ” என்று அனுமன் சொல்லுவதாக கம்பன் எழுதியது கவிஞனின் சொல்லாடலின் உச்சநிலையை உறுதியாக வெளிப்படுத்துகின்றது. நாமும் பேசும் முன்னே கொஞ்சம் யோசித்துப் பேசுவோமா?
நம் குழந்தைகளுக்கும் பேசும் கலையின் அடிப்படைகளை முறையாக சொல்லிக் கொடுத்தாலென்ன?
தொடருவோம்