-மேகலா இராமமூர்த்தி

தமிழின் தலையாய இலக்கணநூலாக இன்றளவும் போற்றப்படுவது அகத்தியரின் தலைமாணாக்கரெனக் கருதப்படும் ஒல்காப் பெரும்புலமைத் தொல்காப்பியர் யாத்த தொல்காப்பியம் ஆகும். பிறமொழிகளின் இலக்கண நூல்களெல்லாம் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டும் இலக்கணம் வகுத்துவிட்டுத் தம்வேலை முடிந்தது என்று வாளாவிருந்துவிடத் தொல்காப்பியம் மட்டுமே வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தாலன்றி இலக்கணநூல் முழுமைபெறாது என்றுணர்ந்து, பொருள்பொதிந்த பொருளதிகாரத்தைப் பெருங்கொடையாய்த் தமிழர்க்கு நல்கியிருக்கின்றது.

தொல்காப்பியத்திற்குக் காலத்தால் மூத்ததும், முதற்சங்க காலத்தைச் சேர்ந்தது என்று மொழியப்படுவதுமான ’அகத்தியம்’ எனும் இலக்கணநூல் தென்னகத்துக்கு வந்த குறுமுனியான அகத்தியர் இயற்றியது என்று நம்பப்படுகின்றது. இந்தியாவின் வடபகுதியிலிருந்து தென்னகத்தின் பொதியில்மலை (பொதியமலை) வந்த அகத்தியர், தமிழின் இலக்கண இலக்கியங்களில் புலமை மிகப்பெற்று, அகத்தியம் எனும் அருந்தமிழ் இலக்கண நூலை இயற்றினார். அவரிடம் தமிழ்கற்பான் வேண்டிப் பலரும் அங்கே வருவாராயினர். பாண்டிய மன்னனும் அவர்களுள் அடக்கம். இவ்வாறு கூடிய கூட்டமே பின்னர் தமிழ்ச்சங்கமாய்த் தோற்றம்பெற்றிருக்கவேண்டும் என்று கூறப்படுகின்றது.

முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள் நம்மிடையே இருந்தன என்ற கருதுகோளும் உண்டு. முதன்முதலில் முச்சங்கங்கள் குறித்தும், அதில் இடம்பெற்றிருந்த நூல்கள், அச்சங்கங்களுக்கு அணிசேர்த்த தமிழ்ப்புலவோர், அவற்றைத் தலைமையேற்று நடாத்திய பாண்டியர் தொல்குடியைச் சேர்ந்த மன்னர்பெருமக்கள் உள்ளிட்ட செய்திகளைப் பரக்கப்பேசுவது இறையனார் அகப்பொருள் அல்லது களவியல் என்றழைக்கப்படும் இலக்கணநூலுக்கு வரையப்பட்ட உரையே (களவியலுரை) என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. இதற்கு மாறாக, சங்கம் எனும் கருதுகோளே கற்பனையானது, உண்மைக்குப் புறம்பானது என்று வா(சா)திக்கும் அறிஞர் பெருமக்களும் நம்மிடையே உளர்.

அது கிடக்க. முதல் இலக்கணநூலாய்க் கருதப்படும் அகத்தியம் இன்று நமக்கு முழுமையாய்க் கிடைக்கவில்லை. காலமெனும் பெருவெள்ளத்தில் அந்நூல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டபோதினும், அதில் இடம்பெற்றிருந்த ஒருசில சூத்திரங்கள் பிற தமிழ்நூல்களின் உரையாசிரியர்களால் மேற்கோளாய் எடுத்தாளப்பட்டதன் வாயிலாக இன்று நமக்குக் கிட்டியுள்ளன. அவ்வகையில் நாம் பேறுபெற்றோரே! அப்பாடல்களில் ஓரிரண்டைச் சுவைத்தின்புறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

அகத்தியத்தில் இடம்பெற்றுள்ள அழகான சூத்திரமொன்று, சொல்லின் திறத்தினை, அன்றைய மக்களின் அன்றாடப் பயன்பாட்டிலுள்ள பொருள்கள், அவைசார் தொழில்கள் மூலம் அழகாய்ச் செப்பியுள்ளது. அதனைக் காண்போம்.

வயிர ஊசியும்
-மயன்வினை இரும்பும்
செயிரறு பொன்னைச்
-செம்மைசெய் ஆணியும்
தமக்கமை கருவியும்
-தாமாம் அவைபோல்
உரைத்திறம் உணர்த்தலும்
-உரையது தொழிலே.

வயிரத்தால் செய்யப்பட்ட ஊசி வயிரத்தையும் அறுக்கக்கூடியது; இரும்பால் செய்யப்பட்ட அரம் பிற உலோகங்களை அறுக்கப் பயன்படுவதோடு இரும்பை அறுக்கவும் பயன்படும். அதுபோல், பொன்னை உரைத்துப்பார்க்க உதவும் உரையாணியும் பொன்னாலியன்றதே. (’முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்’ எனும் பழமொழியும் ஈதொத்த பயன்பாடு குறித்து எழுந்ததே!)

மேற்கண்ட உலோகங்கள் எவ்வாறு மற்றவற்றைச் சோதிக்கும் கருவியாக இருப்பதுடன் தம்மைச் சோதிக்கவும் பயன்படுகின்றனவோ, அதுபோன்றே ஒரு சொல்லானது பிறிதோர் பொருளைச் சுட்டுவதோடு, தன்னையே, தன் (ஒலி) உருவத்தையே சுட்டுவதற்கும் உதவுகின்றது என்பது அகத்தியரின் இந்தச் சூத்திரத்திற்கான பொருளாகும். தன் கருத்துக்கு வலுவூட்ட அவர் எடுத்தாண்டுள்ள உவமைகள் சிறப்பானவையாகவும், பொருத்தப்பாடு உடையனவையாகவும் இருப்பதைக் காண்க.

மொழியிலக்கணத்தை அறிந்துகொள்வதற்கு மட்டுமல்லாது, வயிரம், இரும்பு, பொன் போன்ற பல்வேறு உலோகங்களைக் கையாளுவதில் அன்றைய மக்கள் பெற்றிருந்த திறனை அறிந்துகொள்வதற்கும் இந்நூற்பா துணைசெய்கின்றது என்று கூறுவதில் தவறில்லை.

பிறவற்றைச் சோதிக்க உதவும் ஒருபொருள் தன்னைச் சோதிக்கவும் உதவுவது போலவே, உயிர்களின் உடல்நோய்க்குக் காரணமாயிருக்கின்ற ஒன்றே அதற்கு மருந்தாகவும் சில தருணங்களில் அமைந்துவிடக் காண்கின்றோம். எப்படி என்கிறீர்களா? அம்மைநோயை உண்டாக்கும் கிருமியையே அம்மைத் தடுப்பூசியிலும் (smallpox vaccine – The vaccine is made from a virus called vaccinia which is a pox-type virus related to smallpox.) உட்செலுத்தி அந்நோயைப் புறங்கண்டார் எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner – An English Physician and a scientist) எனும் ஆங்கில மருத்துவர். இங்கு நோயை உண்டாக்கும் நுண்ணுயிரியே அந்நோய்க்கான மருந்தாகவும் திகழ்கின்றது அல்லவா?

மாந்தகுலத்தை வாழவைக்கும்(!) காதலைக் கருத்தில்கொண்டாலும் இதே நிலைதான்! ஆம், காதல்நோயை உண்டாக்கும் பெண்ணின் பார்வையே அதற்கு மருந்தாகவும் (அவள் காதலனுக்கு) அமைந்துவிடுகின்றது என்கிறார் அறிவுலக மேதையான வள்ளுவப் பேராசான்.

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
(1091)

மீண்டும் அகத்தியத்தை நோக்கி நம் அகத்தைத் திருப்புவோம்!

பலபொருள்களின் தொகுதியால் இயை(ணை)ந்தவை ஒன்றெனக் கருதப்படுவது குறித்துப் பேசும் சூத்திரம் இது!

பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே
அடிசில் புத்தகம் சேனை அமைந்த
கதவம் மாலை கம்பலம் அனைய.

ஒரு பூம்பொழிலில் கண்ணைக் கவரும் வண்ணமலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. அவற்றைத் தனித்தனியாய்க் காணும்போது வெவ்வேறான வண்ணமும் வடிவமும் கொண்ட மலர்களாய் அவை நமக்குக் காட்சியளிக்கும். அதே வண்ணமலர்களைக் கொய்து வன்ன(அழகிய) மாலையாய்த் தொடுத்தபின்போ, அவற்றை நாம் ’மலர்கள்’ என்று பன்மையில் அழைப்பதில்லை; ’மாலை’ என்று ஒருமையில்தான் அழைக்கின்றோம்.  

இப்படியே சோறு, பொரியல், கூட்டு, பச்சடி எனும் பல்வேறு பண்டங்களை உள்ளடக்கியதை நாம் ’உணவு’ என்று ஒருமையிலேயே அழைக்கின்றோம்.

ஏடுகளின் தொகுப்பு ’புத்தகம்’ என்றும், வீரர்களின் கூட்டம் ’சேனை’ என்றும், மரத்துண்டுகளின் இணைப்பு ’கதவு’ என்றும், நூலிழைகளின் பின்னல் ’கம்பலம்’ (வேலைப்பாடமைந்த திரைச்சீலை அல்லது மேற்கட்டி) என்றும் ஒருமையில் அழைக்கப்படுவதற்கும் மேற்கண்டவிதி பொருந்துகின்றது.

இவ்வாறு தனித்தனியாகப் பார்க்கும்பொழுது பன்மையில் தோன்றுபவை ஒன்றாய் இணைந்தபின் ஒருமைத்தன்மை பெறும் பான்மையைத் தக்க சான்றுகளோடு நிறுவியுள்ளார் அகத்தியர் பெருமான். (இச்சூத்திரத்தில் கம்பலம், சேனை, புத்தகம் போன்ற வடசொற்கள் பயின்றுவருவதைக் கண்ட அறிஞர் பெருமக்களில் சிலர், இதனை இயற்றியவர் தொல்காப்பியரின் ஆசிரியரான பழைய அகத்தியராய் இருக்கவியலாது; இவர் காலத்தாற் பிற்பட்டவராயிருத்தல் வேண்டும் என்று கருதுகின்றனர்; இஃது ஆராய்ச்சிக்குரியது.)

இயலுக்கு மட்டுமல்லாது இசை, நாடகம் எனும் தமிழின் பிற பிரிவுகளுக்கும் இலக்கணம் கண்டது அகத்தியம் என்பது தமிழாய்ந்தோர் கருத்து. அவற்றையெல்லாம் கற்றுப் பயன்கொள்ளும் அரியவாய்ப்பை நாம் பெற்றிடாதபோதினும், நமக்குக் கிட்டியுள்ள ஒருசில சூத்திரங்களே பல்கேள்வித் துறைபோகிய நல்லாசிரியரான குறுமுனிவரின் பேராற்றலை உள்ளங்கை நெல்லியென நமக்குத் தெற்றெனப் புலப்படுத்திவிடுகின்றன.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *