நந்திதா

அன்பு மிக்க மணிமொழிக்கு,

உன் அன்பு தோழி கயல்விழி எழுதும் அன்பு மடல்.  உன் கடிதத்திற்கு உடனே பதில் எழுத இயலவில்லை. நாட்கள் பல ஆனாலும் நினைவில் தினம் ஒரு கடிதம் எழுதிக்கொண்டே இருந்தேன். ஊரிலிருந்து என் அத்தை குடும்பம் வந்திருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. நேற்றுதான் அவர்கள் தங்கள் ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இங்கு நான், என் கணவர் குழந்தைகள் அனைவரும் நலமாக இருக்கிறோம். இது போல் அங்கும் யாவரும் நலமென நினைக்கிறேன்.

விஞ்னானத்தின் வளர்ச்சியில் நமக்கு எத்தனையோ சாதனங்கள் கிடைத்து உள்ளது. அதில் ஒன்று தொலை பேசி, கை பேசி, இணைய தளம். இவற்றின் மூலம நாம் எப்பொழுது வேண்டுமானாலும் எங்கிருந்தும் தொடர்பு கொள்ளலாம். முக்கியமான செய்திகளை பகிர்ந்து கொள்ளலாமே அன்றி கடிதம் போல் விரிவாகவும் நிதானமாகவும் செய்திகளை பகிர்ந்து கொள்ள இயலுவதில்லை. கைபேசியில் தொடர்ந்து பேசினால் நமது மூளைக்குச் செல்லும் திசுக்கள் செயல் இழந்து பல வித மான நோய்கள் வ்ருவதாக இப்பொழுது கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.

எது எப்படியோ நானும் நீயும் இந்த 21-வது நூற்றாண்டில் மாதத்திற்கு ஒரு முறையாவது கடிதம் எழுதி எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறோம். பகலில் நேரம் இல்லை என்றால் இரவில் தலையணையில் தலை புதைத்தபின் உன் சொல் வளம், கற்பனை வளத்தில் நீ வடிக்கும் வரிகளைப் படித்தபின் நான் நானாக இருக்க மாட்டேன். நாள் முழுவதும் வேலை செய்த அலுப்பு பஞ்சு போல் பறந்து தேவதை வந்து தாலாட்டுவது போல் இருக்க ஒரு இனிய துயிலுக்கு இட்டுச் செல்லும் உன் கடிதம். எனக்கு உன்னைப் போல் இனிய நடையில் கடிதம் வடிக்கத்தெரியாது எனினும் ரசிக்கத் தெரியும்.

அவ்வப்போது எனக்கு வரும் பிரச்சனைகளை உன்னிடம் பகிரும் பொழுது நீ எனக்குத் தரும் நல் யோசனைகள் எனக்கு மருந்தாக அமைகிறது. வள்ளுவரின் வாக்குப் போல் “உடுக்கை இழந்தவன் கை போல் இடுக்கண் களைவதையே இலட்சியமாக கொண்டு இருக்கிறாய். இப்படிப் பட்ட தோழி கிடைத்தமைக்கு நான் அந்த இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.  என்னைப் போல் நீ குடும்ப தலைவி மட்டும் இன்றி அலுவலகத்தில் ஒரு அதிகாரியாகவும் இருக்கிறாய். எப்படி இரண்டு துறையிலும் நீ சிறந்து விளங்குகிறாய் என்னும் கேள்வி என்னுள் எழும். திறமை இருக்கிறது, அதை சரியாக பயன்படுத்தி செயல்படுகிறாய், இதனால் வெற்றி உன்னைத் தேடி வருகிறது. நீ அலுவலகத்தில் வேலை செய்யும் பொழுது தொலை பேசியின் மூலம் தொந்தரவு செய்வது சரியில்லை என்ற காரணத்தினால் கடிதம் எழுதுகிறேன். என் கடிதத்திற்கு உடனே பதில் எழுத முடியாவிட்டாலும் நேரம் கிடைக்கும் பொழுது, நான் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரியாக தீர்வு கொடுத்து விடுகிறாய். இதனாலேயே நான் கடிதம் எழுத விரும்புகிறேன். தொலை பேசியில் நான் பேச ஆரம்பித்தால் வேறு எவரும் உன்னையோ என்னையோ தொடர்பு கொள்ள முடிவதில்லை. அப்படி ஒரு தரம் பேசினோம் உனக்கு ஞாபகம் இருக்குமென நினைக்கிறேன். அப்பொழுது என் கணவர் என்ன சொன்னார் தெரியுமா; பி.எஸ்.என்.எல் நம் இருவரால் மட்டும்தான் ஓடுகிறதாம்…  நாம் இருவரும் அரசியல் முதல் அவியல் வரை அலுசுகிறோம். அதற்கு கடிதம் தான் சரி. இல்லையா.

சரி இப்பொழுது எனது விஷயங்களுக்கு வருகிறேன். குழந்தைகளுக்கு தேர்வு நேரம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இப்பொழுது முதலே எனக்கு பரபரப்பு, மன அழுத்தம் வருகிறது. குழந்தைகளைப் பார்க்கும் பொழுது மனம் மிகவும் வேதனை அடைகிறது. காரணம் உனக்கும் தெரிந்து இருக்கும். படிக்க வேண்டிய புத்தகங்களின் சுமையினால் முதுகில் கூன் விழுகிறது. என் மகன் ராகுல் பள்ளிக்கு காலையில் பள்ளி தொடங்க 1.1/2 மணி நேரம் முன்னால் தயாராகி விடவேண்டும். ஏன் என்றால் எங்கள் வீட்டைத்தாண்டிதான் மற்ற பிள்ளைகளின் வீடு உள்ளது. வேன் காரர் வீடு என் வீட்டுப் பக்கம் உள்ளதால் வண்டி எடுத்ததும் முதலில் ராகுல் தான் ஏறுவான். மாலையில் வீடு திரும்பும் போது எல்லா பிள்ளைகளும் வீட்டுக்குப் போய்விட்டபின்னர் தான் இவன் வீட்டுக்குள் நுழைவான். அதன் பிறகு மறுபடியும் டியூஷன் என்று போய்விடுகிறான். ஒரு விளையாட்டு இல்லை. நாம் படித்த காலத்தில் இவ்வளவு பாடங்களின் சுமைகள் இல்லை. அன்று பள்ளிப் படிப்பை விளையாட்டாக படித்தோம். அதே நேரம் விளையாடி மகிழ்ந்தோம். காலையில் பள்ளிக்குப் போகும் பொழுது தெருவில் போட்ட கோலங்களை ரசித்த படி, சுத்தமான காற்றை சுவாசித்துக்கொண்டு, வழியில் பால்காரன், மாடு, அவனது கன்று எப்படி ஓடுகிறது என்று பார்த்தபடி சென்றோம். இன்றைய நிலை…சிறு குழந்தைகள் தூக்க முடியாத புத்தக மூட்டையுடன் ஏதோ சர்க்கஸ் கம்பெனி வண்டியில் அடைத்துச் செல்லும் பிராணிகளைப் போல் பள்ளி வேன் கூட்டிச் செல்கிறது. இது என் பிள்ளைகளுக்கு மட்டும் நடக்கும் பிரச்சனை இல்லை. இன்றைய கால கட்டத்தில் நகரத்தில் நடக்கும் சர்வ சாதாரண நிகழ்ச்சியாகி விட்டது.

காலையில் தூக்கம் போதாமல், சரியாக சாப்பிடாமல், பெட்ரோல் புகையில் சுவாசித்து, புத்தகத்தின் தூக்கு தூக்கிகளாக செல்கிறது இவர்களின் மழலை வயது. கொஞ்சம் வயதாகி பள்ளி சென்றால் நல்ல பள்ளியில் இடம் கிடைப்பதில்லை. எங்கும் பணம் தான் பேசுகிறது. நாம் உயர் நிலைப் பள்ளியில் கூட இவ்வளவு பள்ளிக்கட்டணம் செலுத்தியதில்லை.

அடுத்த பிரச்சனை… குழந்தைகளின் உண்வு. முக்கியமாக உன் யோசனைகள் எனக்கு தேவை. என் குழந்தை சரியாக சாப்பிடுவதில்லை. காலையில் மென்று சாப்பிட நேரம் இல்லை. மதிய உணவைக் கட்டிக் கொடுத்தால் பாதியை அப்படியே திருப்பிக் கொண்டு வருகிறான். நாம் அந்த நாளில் பழைய சாதம், தயிர், ஊறுகாய் வைத்து சாப்பிட்டோம். இப்பொழுது குழந்தைகளுக்கு பழைய சாதம் என்றால் என்ன என்பதே தெரியாது. தொலைக்காட்சி, செய்திதாள், பத்திரிகையில் வரும் விளம்பரங்களைக் கண்டு அதில் வரும் பொருள்களைத்தான் கேட்கிறார்கள். காலை எழந்தவுடன் நாம் எந்த பற்பசை உபயோகிக்க வேண்டும்,  காலை உணவு, பானம் எதை எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற விளம்பரம் செய்கிறார்கள். அதைப் பார்த்து குழந்தைகள் அதையே கேட்கிறார்கள். நம் அவசரத்திற்கு ஒரு நாள் செய்து கொடுக்க அதுவே பழக்கமாகி விடுகிறது அவர்கள். நம்மைபோல் கீரை, சிறுதானியம், பனை வெல்லம், நமது பாரம்பரிய சிற்றுண்டியை விரும்புவதில்லை.மேலும் அவைகள் கிராமம் போல் நகரங்களில் கிடைப்பதும் மில்லை. மைதா, சக்கரை, வனஸ்பதி மூன்றும் உடலுக்கு மிக கெடுதி என்று என் பாட்டி சொன்னது எல்லாம் எங்கோ தொலைந்து விட்டது. நம் வயதுக்காரர்கள் இருக்கும் ஆரோக்கியம் இக் குழந்தைகளுக்கு இருக்குமா என்பது சந்தேகமே. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது பிட்சா, நூடுல்ஸ், சைனீஸ் உப்பு போட்ட உணவு, குளிர் பானகம். இதெல்லாம் வயிற்றில் எரிச்சலுடன் வாயுவை கொடுத்து மறுநாள் நான் டாக்டரிடம் போக வேண்டும். எனக்கு மிக அச்சமாக இருக்கிறது இவன் எதிர் காலத்தை எண்ணி. மேனாட்டு உணவு முறை, உடைகள் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி நாம் நமது பண்பாடு, கலாச்சாரத்தின் வேரையே கொஞ்சம் கொஞ்சமாக தோண்டி எறிகிறோமோ என்று தோன்றுகிறது. நீ என்ன நினைக்கிறாய். மேலும் வீட்டிற்கு கிராமத்திலிருந்து உறவினர் வந்தால் பிடிப்பதில்லை ராகுலுக்கு. வந்தால் பேசுவது இல்லை. விடுமுறை நாளில் எப்பொழுது பார்த்தாலும் வீடியோ கேம், மியூசிக் என்று காதில் வயரை சொருகிக் கொண்டு விடுகிறான். நாம் அக்காலத்தில் யாராவது வீட்டிற்கு வந்தால் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு பேசுவதும், அவர்களிடம் கதை கேட்பதும் எப்படி மகிழ்ந்திருப்போம். இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. என் அத்தை நம் ஊருக்கு வந்தால், பக்கத்து தெருவிலிருந்து நீ உடனே எங்கள் வீட்டுக்கு வந்து விடுவாய். முற்றத்தில் என் அத்தை நமக்கு கதை சொல்லிக் கொண்டே சாதத்தை பிசைந்து கையில் போடுவாள். முதலில் சாதம் வேண்டாம் என்போம். பிறகு அத்தை “வாங்க கதை சொல்கிறேன்” என்றதும் வட்டமாக உட்கார்ந்து கதை கேட்டுக் கொண்டே அவ்வளவு சாதம் சாப்பிடுவோம். நமக்கே தெரியாது. இப்பொழுது குழநதைகள் தொலைக் காட்சியின் பெட்டியில் கார்டூன் பார்க்கவே விரும்புகிறார்களே தவிர யார் வருகிறார்கள் என்ன கேட்கிறார்கள் என்றே அக்கறை காட்டுவதில்லை. வர வர உறவு என்ற சங்கிலி கூட அறுந்து விடும் என அச்சமாக இருக்கிறது. என் கணவர் தன் அலுவலக வேலையிலேயே மூழ்கி இருப்பதால் இந்த விஷயங்கள் மிகவும் துச்சமாக அவருக்குப் படுகிறது.

நீ கூட நினைக்கலாம் நான் என் பையனைப் பற்றி மிகவும் குறை சொல்கிறேன் என்று. ஒருநாள் ராகுலுடன் கடைக்குப் போயிருந்தேன் கடையில் இருந்த மிக விலை உயர்ந்த விளையாட்டுச் சாமான் கேட்டான். நான் வேறு ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். அவன் அதை வாங்கிக் கொள்ளவே இல்லை. அவன் நண்பர்கள் இதைப் போலவே வைத்துள்ளார்களாம்.. அது கூட ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டே விளையாடும் மின்விளையாட்டுப் பொருளே.  அவன் வயதில் நாம் இருக்கும் பொழுது ஆண் பிள்ளைகள் கிட்டிப் புள், பம்பரம், ஓடி பிடித்து விளையாடுதல். கபடி என்று எப்படி விளையாடுவார்கள். பெண்கள் நாமும் சொப்பு, சொக்கட்டான், பல்லாங்குழி, ஆடு புலி கும்மி, கோலாட்டம், நடனம் என்று ஆடுவோம். இப்படி ஆயிரம் ரூபாய் என்று விளையாட்டுச் சாமான் வாங்கியதே இல்லை.

தூங்கும் நேரத்தில் பாட்டி, தாத்தா கதை கேட்போம். அவர்கள் புராண இதிகாச கதைகள் சொன்னார்கள். அதில் உள்ள நீதிகள் அந்த பிஞ்சு வயதில் ஆழமாக நமக்குப் பதிந்தது. ஆனால் இப்பொழுதோ நிறைய காமிக் புத்தகங்கள் படிக்கிறார்கள் அதில் ஒரு நீதியும் இல்லை. அந்நாளில் பெற்றோர் எதை வாங்கிக் கொடுக்கிறார்களோ அதை வாங்கி திருப்தி அடைந்தோம் இப்பொழுது, குழந்தைகளை கடைக்கு அழைத்துக் கொண்டு போய் எல்லார் முன்னிலையில் அவர்கள் என்ன கேட்கிறார்களோ அதையே வாங்கி கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவர்களுக்கு நமது பர்ஸ்ஸின் நிலைமை எப்படித் தெரியும்.

ராகுல் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கிறான். நாம் படிக்கும் பொழுது திருக்குறள், நாலடியார், ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் எனப் படித்து வாழ்க்கைக்கு வேண்டிய அறவுரையை நன்றாக மனத்தில் பதிய வைத்துக் கொண்டோம். தமிழில் படித்ததால் இப்பொக்கிஷங்களால் நம் வாழ்கை சிறப்பாக அமைத்துக் கொண்டோம். இதனால் நமது இருவரின் திருமண வாழ்வில் வரும் பொருளாதாரம், குடும்ப பிரச்சனையால் பாதிக்கப் படுவதில்லை. என் அம்மா சொல்வாள். விரலுக்கு தகுந்தபடி வீக்கம் இருக்க வேண்டும் என்று. ஆனால் தற்பொழுது உள்ள சமூகத்தைக் கண்டால் பயமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் ஒரு போட்டா போட்டி, எல்லாருக்கும் எல்லாம் உடனடியாக கிடைக்க வேண்டும். காத்திருக்க ஒருவருக்கும் பொறுமையில்லை. பிறர் பொருளை பெருமையுடன் பார்க்க தவறி, பொறாமையுடன் பார்க்கின்றனர். இந்தப் போட்டியால் இன்னும் பணம் வேண்டும் என்று உழைக்க, அது உடலைப் பாதித்து மன அழுத்தம், ரத்த அழுத்தம் வருகிறது. இப்பொழுதே என் கணவர் கூறுகிறார்… பையனை டாக்டருக்குப் படிக்க வைக்க வேண்டுமாம். நான் கூறினேன்… முதலில் குழந்தை உடல் ஆரோக்கியத்துடனும், உள்ளத்தில் அன்புடனும் வளரட்டும் என… என் பதில் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. எனக்கு பாஸிட்டிவாக நினைக்கவே தெரியவில்லை என்றார். வீண் வாக்கு வாதம் வரும் என ஒரு புன்னகையுடன் உரையாடலை முடித்துக் கொண்டேன்.. நாளுக்கு நாள் விலைவாசியின் உயர்வு, நம்மைப் போன்ற நடுத்தர குடும்பத்தினர் என்ன கனவு காண முடியும். நமக்கே புரியாமல் இருக்கும் பொழுது குழந்தைகளுக்கு எப்படி புரிய வைப்பது நமது பொருளாதாரத்தைப் பற்றி.  எல்லாரும் என்னைப் போல் சிந்திக்கிறார்களா, அல்லது என் கணவர் சொல்வது போல் என்னிடம் தான் பாஸிடிவ் எண்ணங்கள் உதயம் ஆவது இல்லையா..

இம்முறை கடிதம் கொஞ்சம் நீண்டு விட்டது. மெதுவாகப் படி. எனக்கு என்ன வென்றால் நாம் ஒரு வகையில் நல்ல சூழ்நிலையில் மாசற்ற சுற்றுப்புறச் சூழலில், பெற்றோர், ஆசிரியர் அரவணைப்பில், அவசர இயந்திர வாழ்க்கை இல்லாமல் வாழ்ந்து விட்டோம். இன்று குடிக்கும் தண்ணீரிலிருந்து காற்றுவரை காசு கொடுத்து செயற்கைப் பொருளை வாங்கி வாழும் இக் கால கட்டத்திற்கு கட்டாயமாக தள்ளப்பட்டு உள்ள நம்மைப் போன்ற தாய்மார்கள் எப்படி குழந்தைகளை வளர்ப்பது. என்ன சொல்லி வளர்ப்பது. முளைத்து மூன்று இலை விட வில்லை, மூன்றாம் வகுப்பில் படிக்கும் என் பிள்ளை சொல்கிறான். ” அம்மா நான் ரொம்ப டென்ஷனாக இருக்கிறேன்” என்றும், “எனக்கு டயம் இல்லை” என்றும், “எல்லாமே போர் அடிக்கிறது” என்றும் சொல்வதைக் கேட்கும் பொழுது ஒரு பக்கம் சிரிப்பும் மறு பக்கம் பயமாகவும் இருக்கிறது.

மனதில் இத்தனை நாளாக உறுத்திக் கொண்டு இருந்தது. அம்மா, அப்பா கிராமத்தில் இருப்பதால் அவர்களுக்குப் புரியாது. நம் குழந்தைகள் போல் நாம் வளரவில்லை. இப்படிப்பட்ட நிலையை அவர்கள் எதிர் கொள்ளவுமில்லை. எனவேதான் உன்னிடம் மனம் திறந்து கொட்டிவிட்டேன். மேலும் நீயும் இதே சமூகத்தில் இதே பிரச்சனைகளுடன் எதிர் நீச்சல் போடுகிறாய்.  குழந்தைகளுக்கு எப்படி புரிய வைத்து வளர்ப்பது என்பதை எனக்கு எழுது. உன் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கும்

உன் அருமைத் தோழி

கயல்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *