Blog

  • அழகான அபத்தங்கள்

    அழகான அபத்தங்கள்

    -சேஷாத்ரி பாஸ்கர்

    Picture courtesy – star2.com

    இருவரும் வாள் வீச ஆரம்பித்து
    முப்பது வருடங்கள் ஓடிவிட்டன!
    உன் அகந்தை உனக்குக் கேடயம்,
    என் பொய் எனக்கு!

    ஓர் நாள்
    என் வாளும் துருப்பிடித்து உடைந்தது!
    ஆனாலும் சண்டை நிற்கவில்லை!
    ஆதாரம் என்னவென
    இருவரும் யோசிக்கவில்லை
    இளமை எஃகுக் கோட்டை
    சட்டெனச் சரிந்தது!

    துரத்தும் சிந்தனை
    மரணமாய்ப் போனது
    உதிரும் முடியெல்லாம்
    வெள்ளையாய் ஆனது
    சுயம்
    இன்றும் சுழற்றிப் போட்ட
    பம்பரமாய்ப் போனது!
    காலமும் கரைந்து,
    கால்களும் தளர்ந்தன!

    காதலொன்று கனியவில்லை,
    கைப்பிடியும் இறுகவில்லை,
    நாம் அமர்ந்த மரம்,
    இன்றும் நிழல் தருகிறது!
    நீர் அருந்திய சுனையில்,
    இன்றும் நம் தடம் உண்டு!
    அன்றைய தென்றலே
    இன்றும் சுற்றிச் சுற்றி வருகின்றது
    மூளை இடுக்கில் அமர்ந்தன
    தெரியா நினைவுகள்!

    வண்டுகள்தாம் மறைந்துவிட்டன
    ஆனாலும் ரீங்காரம் இன்னும் செவிகளில்…..

    Share
  • அனைவருமே ஆசை கொள்வோம்!

    -மகாதேவஐயர் ஜெயராமசர்மா… மெல்பேண் ….. அவுஸ்திரேலியா

    பணத்தோடு வாழுகிறார் படிப்போடு வாழுகிறார்
    பட்டம்பல பெறுவதற்கும் திட்டம்பல போடுகிறார்
    இனம்பற்றி பேசுகிறார் எங்கள்மொழி என்கின்றார்
    ஈவிரக்கம் தனையவரும் எண்ணிவிட மறுக்கின்றார்!

    மாநாடு பலசெய்வார் மலர்கள் வெளியிடுவார்
    மேடைதனில் ஏறிநின்று விறுவிறுப்பாய் பேசிடுவார்
    உலகமதில் உன்னதத்தை உருவாக்க வேண்டுமென்பார்
    உள்ளமதில் உண்மைதனை இருத்திவிட மறுக்கின்றார்!

    நீதிநூல்கள் அத்தனையும் பாடமாக்கி வைத்துள்ளார்
    பாடலெலாம் பக்குவமாய் பலருக்கும் காட்டிடுவார்
    ஆதிமுதல் அந்தம்வரை அறங்காக்க வேண்டுமென்பார்
    அழுதுநிற்பார் துயரகற்ற அவரெண்ண மறுக்கின்றார்!

    எத்தனைதான் படிப்பிருந்தும் எவ்வளவு பணமிருந்தும்
    எண்ணமதில் நல்நினைப்பு இல்லாமல் என்னபயன்
    ஆரவாரம் தனையொழிப்போம் ஆணவத்தை அகற்றிநிற்போம்
    அன்புகொண்டு பார்த்துவிட அனைவருமே ஆசைகொள்வோம்!

    Share
  • அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அறிவியலாளர் – சர் ஐசக் நியூட்டன்

    அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அறிவியலாளர் – சர் ஐசக் நியூட்டன்

    -மேகலா இராமமூர்த்தி

    இயற்கையைக் கூர்ந்து நோக்குவதிலும், ஒன்றைப் போலவே மற்றொன்றை உருவாக்குவதிலும், புதிய பொருள்கள் படைப்பதிலும் இளமை முதலே ஊக்கமும் உற்சாகமும் கொண்டவராய்த் திகழ்ந்திருக்கின்றார் புவிபோற்றும் அறிவியல் அறிஞரான சர் ஐசக் நியூட்டன்.

    இங்கிலாந்தின் லிங்கன்ஷையர் (Lincolnshire) எனும் மாகாணத்திலுள்ள உல்ஸ்தோர்ப்பு (Woolsthorpe) எனும் குக்கிராமத்தில் 1642-ஆம் ஆண்டு திசம்பர் 25-ஆம் நாளன்று நியூட்டன் பிறந்தபோது, அளவில் சிறிய பலவீனமான குழந்தையாகவே இருந்திருக்கின்றார். இந்தக் குழந்தை நெடுநாள்களுக்கு உயிரோடு இருக்குமா என்று அனைவரும் கவலைப்பட்ட நிலையில், பின்னாளில் அவர் சர் ஐசக் நியூட்டன் எனும் பெயரோடு அறிவியல் அறிஞர்கள் உலகில் துருவ நட்சத்திரமாக ஒளிர்ந்தார் என்பது வியப்பினும் வியப்பே!

    தாம் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தந்தையை இழந்த நியூட்டன், பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையில்தான் தம்முடைய பள்ளிக் கல்வியை கிராந்தம் (Grantham) நகரிலிருந்த கிங்’ஸ் பள்ளியில் (King’s School) முடித்தார். பிறகு 1661-இல் தம்முடைய 18-ஆவது வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டிரினிட்டி கல்லூரியில் (Trinity College, Cambridge University) கல்வியைத் தொடர்ந்தார்.

    1665-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் பிளேக் (Plague) நோய் பரவியதால் டிரினிட்டி கல்லூரியைத் தற்காலிகமாக மூடிவிட்டார்கள். அதனால் சிறிதுகாலம் தம் சொந்த ஊரான உல்ஸ்தோர்ப்பு வந்து தங்கியிருந்தார் நியூட்டன். அப்போது அவர் தோட்டத்தில் உட்கார்ந்துகொண்டு ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தபோது ஆப்பிள் மரத்திலிருந்து ஒரு பழம் கீழே விழுந்ததைக் கவனித்தார். இந்த ஆப்பிள் பழம் மேல்நோக்கிச் செல்லாமல் கீழே விழுவானேன்? இதன் காரணமென்ன? என்று சிந்திக்கத் தொடங்கினார். அதன் விளைவாய் அவர் கண்டறிந்தவையே புவியீர்ப்பு விசையும் அதுசார்ந்த விதியும் (Newton’s law of gravitation).

    1669-இல் தம் முதுகலைப் படிப்பைக் கணிதத்துறையில் முடித்த நியூட்டன் பின்னர், தாம் பயின்ற டிரினிட்டி கல்லூரியிலேயே கணிதத்துறைப் பேராசிரியராய்ப் பணியில் அமர்ந்தார்.  ஈருறுப்புத் தேற்றத்தை (binomial theorem) உருவாக்கினார்; அதுவே பின்னாளில் கால்குலஸ் (Calculus) எனும் கணிதப் பிரிவாக வளர்ச்சியுற்றது.  

    விண்வெளி ஆய்வுகளிலும் ஈடுபட்ட நியூட்டன், வெண்மையாகக் கண்ணுக்குத் தோன்றும் சூரிய கிரணத்திலே பல வண்ணமுள்ள கிரணங்கள் நிறைந்திருக்கின்றன என்பதையும் அவற்றில் ஊதா நிறந்தான் அதிக அளவிலே இருக்கின்றது என்பதையும் கண்டறிந்தார். எட்டு அங்குல நீளமுள்ள தொலைநோக்கிக் கருவியொன்றையும் (Telescope) அவர் உருவாக்கினார். விண்வெளிப் பொருள்களை மிகத்துல்லியமாக அறிய உதவிய இத்தொலைநோக்கி, பலரையும் கவர்ந்தமையால் அறிவியல் அறிஞர்கள் நிறைந்திருந்த இங்கிலாந்தின் இராயல் சொசைட்டி (Royal Society) எனும் அமைப்பு நியூட்டனை உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டது. நியூட்டனுக்கு முன்பே இத்தாலிய வானியல் அறிஞரான கலிலியோ (Galileo Galilei) தொலைநோக்கியை உருவாக்கி வானியல் ஆய்வுகளை செய்திருந்தார் என்றபோதிலும் நியூட்டனின் ஆராய்ச்சி அதனை மேலும் ஒழுங்குபடுத்தித் துல்லியமாக்கியது எனலாம்.

    தொலைநோக்கி மட்டுமல்லாது வானில் தோன்றி மறையும் வால்நட்சத்திரங்களை (Comets) ஆராய்ச்சி செய்து அவற்றைப் பற்றி அறிந்துகொள்ளக்கூடிய கருவிகளையும் நியூட்டன் கண்டுபிடித்தார்.

    இயற்கைத் தத்துவத்தின் கணிதக் கொள்கைகள் (The mathematical priniciples of natural Philosophy) எனும் அரிய நூலை எழுதி வெளியிட்டார். நியூட்டனின் இயக்க விதிகள் (Newton’s laws of motion) இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மிகவும் புகழ்வாய்ந்த அந்த மூன்று விதிகளும் இன்றளவும் பள்ளி, கல்லூரிகளில் இயற்பியலின் முக்கியக் கோட்பாடுகளாகக் கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    1689-இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு (Parliament) தெரிந்தெடுக்கப்பட்டார் நியூட்டன். சுமார் இரண்டாண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்து அமைதியாய்த் தொண்டாற்றியிருக்கின்றார் அவர்.

    மறுதேர்தல் நடப்பதற்காக நாடாளுமன்றம் கலைந்துவிட்டதனால் மறுபடியும் தம்முடைய ஆசிரியப் பணியை டிரினிட்டியில் தொடர்ந்தார். கணிதம் மற்றும் அறிவியல் ஆய்வுகள் தொடர்பாகப் பல அறிஞர்களோடு மடலாடல் நடத்தினார். அவைகுறித்துப் பல குறிப்புகள் எடுத்துவைத்திருந்த நியூட்டன் அவற்றைத் தொகுத்து ஒரு பெரிய நூலாக வெளியிட எண்ணியிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வருந்தத்தக்க சம்பவம் ஒன்று நிகழ்ந்துவிட்டது. அரிய குறிப்புகள் அடங்கிய தம் கையெழுத்துப் படியை தம் எழுதுமேசையின்மீது வைத்துவிட்டு எங்கேயோ வெளியில் சென்றிருந்தார் நியூட்டன். அவ்வமயம் அம்மேசைமீது ஏறிய அவருடைய வளர்ப்பு நாயான ‘டார்லிங்’ அங்கே எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தியைத் தட்டிவிட, கையெழுத்துப் படி எரியத்தொடங்கியது. பெரும்பகுதி எரிந்தபின்பே உள்ளேவந்த நியூட்டன் அதைக் கண்டு, ”ஐயோ! டார்லிங் என்ன காரியம் செய்துவிட்டாய்?” என்று அலறித் துடித்திருக்கின்றார். பலனொன்றுமில்லை! மீண்டும் அவற்றை அவர் எழுதவேண்டிய அவலநிலையே வாய்த்தது. ஊழிற் பெருவலி யாவுள?

    நியூட்டன் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த காலத்தில் சார்ல்ஸ் மாண்டேகு (Charles Montague) என்ற அறிஞருடைய நட்பு அவருக்கு ஏற்பட்டது. மாண்டேகு அரசாங்கத்தின் பல மதிப்புமிக்க பதவிகளை வகித்தார். நியூட்டன்மீது தமக்கிருந்த அளப்பரிய அன்பின் காரணமாக அரசாங்கத்தில் அவருக்கு ஓர் நல்ல பணியை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று விரும்பிய மாண்டேகு, நாணயங்கள் அச்சடிக்கின்ற சாலையில் (Mint factory) ஓர் பொறுப்பான பதவியில் நியூட்டனை அமர்த்தினார். நியூட்டனும் அப்பதவியை ஏற்று அங்கே பல சீர்திருத்தங்களைச் செய்தார். போலி நாணயங்கள் வெளிவராதபடி தடுத்துநிறுத்தினார்.

    சிறிது காலத்தில் அந்த எந்திர சாலைக்குத் தலைவராகவே நியூட்டன் நியமிக்கப்பட்டார். பொறுப்புமிக்க இப்பணியில் இருந்தபோதும் தம் இயல்புக்கு ஏற்ப ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதையும் நியூட்டன் நிறுத்தினாரில்லை. நாள்காட்டியில் சில திருத்தங்கள் செய்தார்; உலோகங்களை உருக்கிவார்ப்பதில் பல புதிய நடைமுறைகளை உருவாக்கினார். தவிர, எந்திர சாலையில் நீண்ட காலமாக நடந்துவந்த ஊழல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். (ஊழல் ஒரு தனிநாட்டுக்குச் சொந்தமானதன்று! அஃது உலகளாவியது என்பது இதன்மூலம் நிரூபணமாகின்றது.)

    இக்காலக்கட்டத்தில் நியூட்டனின் புகழ் உலகெங்கும் பரவத்தொடங்கியது. இராயல் சொசைட்டியார் தங்கள் சங்கத்தின் தலைவராக நியூட்டனைத் தேர்ந்தெடுத்தனர். அரசாங்க ஆதரவும் அவருக்குக் கிடைத்தது. 1705-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஆன் மகாராணியார் (Queen Anne) தம் பரிவாரங்களோடு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வருகைதந்து ‘சர்’ பட்டத்தை நியூட்டனுக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

    பேரும் புகழும் எண்ணற்ற கௌரவங்களும் தம்மைத் தேடிவந்தபோதினும் நியூட்டன் மிகவும் எளிமையாகவே வாழ்ந்தார் என்று அறிகின்றோம். அத்தோடு, தம் வருமானத்தின் பெரும்பகுதியை ஏழைகளின் துயர் துடைக்கவும், அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், தம் உறவினர்களின் தேவைகளுக்குமே அவர் செலவு செய்திருக்கின்றார்.

    பொதுவாழ்வில் சிறந்த ஆளுமையோடு திகழ்ந்த நியூட்டனின் தனி வாழ்க்கையை ஆராய்வோமேயானால், அவருக்குக் காதல் இருந்ததாகவோ யாரையும் அவர் திருமணம் செய்துகொண்டதாகவோ எவ்விதத் தகவலும் இல்லை. இது வியப்பிற்குரிய ஒன்றாகவே இருக்கின்றது!

    எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வி கற்பதில் நேர்ந்த இடையூறுகள் அனைத்தையும் தம் விடாமுயற்சியின் துணைகொண்டு கடந்து, அடக்கத்தையும், அயரா உழைப்பையுமே அணிகளாகப் பூண்டு, பல அரிய கண்டுபிடிப்புகளையும் அறிவியல் கோட்பாடுகளையும் உருவாக்கிச் சகம் போற்றும் சாதனையாளராகத் திகழ்ந்த சர் ஐசக் நியூட்டன் 1727-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் நாள் தம்முடைய 85-ஆவது அகவையில் இவ்வியனுலக வாழ்வை நீத்தார்.

    நியூட்டனின் நினைவுச் சின்னங்கள் பல இப்போதும் இங்கிலாந்தின் கல்விநிலையங்கள் பலவற்றை அணிசெய்கின்றன. அவர் உபயோகித்தனவும் கண்டுபிடித்தனவுமான அறிவியல் கருவிகள் பல அவர் பணியாற்றிய டிரினிட்டி கல்லூரியில் இன்றளவும் காணக் கிடைக்கின்றன. அனைத்திற்கும் மேலாய், நியூட்டன் பிறந்த இடமான உல்ஸ்தோர்ப்பு கிராமத்து வீடு பழுதுபார்க்கப்பட்டு ஒரு புனிதத் தலமாகவே கொண்டாடப்பட்டு வருவது, செயற்கரிய செய்த அறிஞர் பெருமக்களை மன்னுலகம் என்றுமே மறப்பதில்லை என்பதற்குச் சான்றாய்த் திகழ்கின்றது. 

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:
    1. https://www.britannica.com/biography/Isaac-Newton
    2. https://en.wikipedia.org/wiki/Isaac_Newton

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-46

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-46

     46. சிற்றினம் சேராமை

    குறள் 451:

    சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
    சுற்றமாச் சூழ்ந்து விடும்

    கெட்டவங்க கூட சேருததுக்கு நல்ல மனசுக்காரங்க பயப்படுவாங்க. ஈன புத்தி உள்ளவங்க அவுகள தங்க சொந்தக்காரங்க கணக்கா நெனச்சி பழகுவாக.

    குறள் 452:

    நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
    கினத்தியல்ப தாகும் அறிவு

    தான் இருக்க நெலத்துக்கு ஏத்தாமாரி தண்ணியோட தன்ம மாறிக்கிடுது. அது கணக்கா தான் மனுசனோட புத்தியும் அவன் சேருத கூட்டத்துக்கு ஏத்தாப்போல மாறிக்கிடும்.

    குறள் 453:

    மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
    இன்னா னெனப்படுஞ் சொல்

    ஒருத்தனுக்கு உணர்ச்சி அவன் மனசப் பொறுத்து அமைஞ்சிகிடும். அவன் இப்டி பட்டவன்னு அளந்து சொல்லுதது அவன் சேருத கூட்டாளியப் பொறுத்து அமையும்.

    குறள் 454:

    மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
    கினத்துள தாகும் அறிவு

    ஒருத்தனோட நல்ல புத்தி அவன் மனசுக்குள்ளார இருக்கமாரி தோணிச்சின்னாலும் அது அவன் சேருத சேக்கையிலேந்து வெளிப்படுதது தான்.

    குறள் 455:

    மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
    இனந்தூய்மை தூவா வரும்

    சுத்தமான மனசும், செய்யுத காரியத்துல சுத்தமும் ஒருத்தன் சேருத கூட்டத்தோட தூய்மைய ஆதாரமா கொண்டுதான் பொறக்குது.

    குறள் 456:

    மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
    கில்லைநன் றாகா வினை

    சுத்த மனசுக்காரவுகளுக்கு அவுகளுக்குப் பொறவு அவுகளோட புகழ் சொச்சமா மிஞ்சி நிக்கும். சுத்திவர உள்ள கூட்டத்தார்(இனம்)  நல்லா அமைஞ்சவுகளுக்கு  நல்லா அமையாத செயல் னு எதுவுமே கெடையாது.

    குறள் 457:

    மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
    எல்லாப் புகழுந் தரும்

    நெலச்சு நிக்குத உசிருங்களுக்கு நல்ல மனசு செல்வத்தக் கொடுக்கும். அதோடு நிக்காம நல்ல கூட்டத்தார்(இனம்)  எல்லாப் புகழையும் கொடுக்கும்.

    குறள் 458:

    மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
    கினநலம் ஏமாப் புடைத்து

    மனசு நல்லதா இருக்க பெரிய மனுசங்களுக்கு கூட அவுக சேருத கூட்டத்தப் பொறுத்து தான் வலிம வந்து வாய்க்கும்.

    குறள் 459:

    மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
    இனநலத்தி னேமாப் புடைத்து

    மனசு நல்லதா இருந்தா மறுமையில கூட சந்தோசம் உண்டாவும். அதுவுங்கூட கூட்டத்தாரால வலிம பெறும்.

    குறள் 460:

    நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
    அல்லற் படுப்பதூஉம் இல்

    ஒருத்தனுக்கு நல்ல கூட்டத்தாரப்போல பெரிய தொணை ஒண்ணுமில்ல. கெட்ட கூட்டத்தாரப் போல தீம தருததும் வேற இல்ல.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share
  • சேக்கிழார் பா நயம் – 38

    சேக்கிழார் பா நயம் – 38

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி

     

    இதற்கு முன் திருமால் வழிபட்ட திருமாணிகுழி என்ற தலத்தைப் பற்றி நாம் கண்டோம். அதனை சிவக்கவிமணியார் மேலும் விளக்குகிறார்! செங்கணவன் வழிபட்ட திருமாணிகுழி – சிவந்த கண்ணுடைய திருமால் அப்பழி நீங்கும்பொருட்டுச் சிவபூசை செய்த திருமாணிகுழி என்ற தலத்தை. திருமாணிகுழி என்ற தலப் பேரின் காரணமும் முன் வரலாறும் குறிப்பித்த அழகினை நோக்குக. மாணி – பிரமசாரி; குழி – தலம். வாமனனாகிய பிரமசாரி பூசித்த தலம் என்க. உத்தம குணங்களுடையானும் சிவபத்தனுமான மாவலியை யாதொரு குற்றமுமின்றியே, தேவர்கள் வேண்டுதலுக்காக வஞ்சித்து அழித்தமையால் உளதாகும் பழியைப் போக்கிக்கொள்ளத் திருமால் இறைவனை வழிபட்டார் என்பது சிவபுராணங்களிற் கண்டது. குற்றுருவத்தோடு விளைத்த கேட்டினைச் சீர்ப் படுத்திக்கொள்ள அவ்வுருவத்தோடு பூசித்தவகையை,

    ‘நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறள னாகிமிகவும்
    சித்தம தொருக்கிவழி பாடுசெய நின்றசிவ லோகனிடமாம்“

    என்ற ஆளுடைய பிள்ளையாரது இத்தலத் தேவாரத்திற் காண்க.

    அதனையடுத்து, திருத்தினைநகர் என்ற தலத்தைச்சுந்தரர்சென்றடைந்தார். பெரியான் என்ற சிவனடியார் தினைப்புனம் உழுதுகொண்டிருக்கும்போது இறைவன் அங்குவந்து சோறு கேட்க, அதன்பொருட்டு அவர் ஊருக்குப்போய்த் திரும்புவதற்குள், தினைவித்தி முற்றி விளைந்திருக்கச் செய்த காரணத்தால். இத்திருத்தினைநகர் காரணப்பெயர் பெற்றது.

    அடுத்து சுந்தரர் தில்லையின் எல்லையை அடைந்தார் அங்கே கயல்பாயும் குளத்தையும், மலர்கள்சூழ்ந்த சோலையையும்கண்டார் இவற்றைக் கண்டாரின் மூவகை மலங்களும் நீங்கும்! ‘’ஆணவமாதி மூன்று வலிய பாசங்கள். மும்மலங்கள் அறுதலாவது, கன்ம மலத்திற் சஞ்சிதம் அத்துவ சுத்தியாலும், உடல் முகந்து கொண்ட பிராரத்தம் அநுபவத்தாலும், ஆகாமியம் சிவஞானத்தாலும் அழியவும்; அஃதழியவே, மாயாமலம் ஞாயிற்றின் ஒளிமுன் விளக்குப்போலச் சிவசத்தியிலடங்கவும்; ஆணவமலம் ஞாயிற்றின்முன் இருள்போலச் சிவசந்நிதியின் முன்னர் வலியழிந்து கிடக்கவும் பெற்றுக்கெடுதல். வீடருள் எல்லை என்க. வீடருள் தில்லை என்று கூட்டி யுரைத்தலுமாம்’’. உயிர்கள், இங்கு வருமுன் தமக்கு இருந்த பசுத்தன்மை இங்கு வந்தவுடன் திரியப் பெற்றுச், சிவத்தின் தன்மை அடையும் என்பதை ‘மும்மையா மலங்களற வீடருள்’ என உரைத்தார் . இவ்வாறு விளக்கிய உரையை உணர்ந்துகொண்டால்தான் அடுத்துவரும்பாடலின்நயம்புலப்படும் .அங்கே இறைவனை எப்போதும் அருகிலிருந்து காணக் கடலே அகழியாகிச் சூழ்ந்தது! அங்கே கருவறையுள் நடனமாடும் கழல் மலரின் திருவருள் தேனை நுகரும்விருப்பால், வண்டுகள் தாழம்பூவில் துதைந்து திருநீறணிந்த அடியாராகித் துதித்து முரன்றன! உள்ளே தில்லைப் பதியில் மாடமாளிகைகள் வரிசையாய் உயர்ந்து தோன்றின. அம்மாளிகைகள் பொருட்செல்வத்தின் சிறப்புடன் அருட்செல்வமும் பெற்றுச் சிறந்தோங்கின! இதனைத் திருஞானசம்பந்தர்,

    ‘’செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்
    செல்வ மதிதோயச் செல்வம் வளர்கின்ற
    செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய
    செல்வன் கழல்ஏத்துஞ் செல்வம் செல்வமே!’’

    என்றுபாடுகிறார். இப்பாடலில் ஏழுமுறை செல்வம் என்ற சொல் அமைந்து அம்மாளிகைகளின் பொருட்செல்வம், அருட்செல்வம் ஆகியவற்றின் உயர்வைக் காட்டுகின்றது! அவை போகத்தை வளர்க்கும் பொருட்செல்வம் பெற்ற குபேரனின் பட்டினம் போலக் காட்சியளித்தன! அச்செல்வம் மிக்க மாளிகைகள் வரம்பின்றி வானில் ஓங்கிய கோபுரங்களுடன் காட்சியளிக்கின்றன! அக்கோபுரங்கள் வானையே வளைத்து விழுங்குவன போல வளர்கின்றன! இதனைச் சேக்கிழார்,

    ‘’போக நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கி
    மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகைக் குலம்’’

    என்று பாடுகிறார். அங்கே வெண்கொடிகள் வானில் அசைந்தாடுகின்றன. மாளிகைகளின் உள்ளே அந்தணராகிய தவஸ்ரேஷ்டர்கள், ஓமாக்கினியை வளர்க்கும்போதே, உள்ளத்தை ஒடுக்கி தியானமும் பழகுகின்றனர்! அவர்கள் எழுப்பும் யோகப்புகை வானெங்கும் பரவுகின்றது.

    ‘’ஓமப்புகை வானிற்கு அடுப்பன – பொருந்துவன. [பிற புகைகள் (இயந்திரங்களின் புகை) அவ்வாறு அடுக்காதன] ஓமப்புகை ஆகிய மேகம் – புகையின் விளைவாம் மேகம் – என இருபொருளும் கொள்க. ஓமம் மேகத்துக்குக் காரணமாதல் குறித்தவாறுமாம்.

    அங்கே அங்குமிங்கும் பரவியுள்ள மேகங்களின் இடையே வெள்ளிமின்னல்கள் கொடிகளாய்ச்சுடர்கின்றன! இவை யோகசிந்தையின் மலர்ச்சி! தில்லைத்தலம்,இருதயாலயம்எனப்படும்உள்ளத்தலமும், தகராலயம் எனப்படும் யோகத்தலமும் ஆதலால் உள்ளே சிதம்பர ரகசிய வெளியிலும், புறத்தே தகராகாச வெளியிலும், இறைவன் விளங்குகிறார். அவரை அந்தணர்கள் தியானமாகிய தகரோ பாயத்தின் வழியே வெளியிலிருந்து உள்ளே இழுத்துச் சிந்தையில் வைத்துக் கூட்டுகின்றனர். ஆகவே பரவெளியில் கூத்தாடும் இறைவன் கருவறைக்குள் சிதம்பர ரகசிய வெளியாக விளங்குகிறார்! இதனையே புலவர்கள் ‘’தில்லைவெளி’’ என்று சிறப்பித்துப் பாடுவார்கள். இனி முழுப்பாடலையும் பயில்வோம்!

    ‘’போக நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கி
    மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகைக் குலம் மிடைந்த பதாகை
    யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓமதூமம் உயர்வானில் அடுப்ப
    மேக பந்திகளின் மீதிடைஎங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும்.”

    இப்பாடலில் கொடிகள் மின்னல் போல ஒளிர்கின்றன! சிலப்பதிகாரத்தில் கோவலனை மதுரை மதில்களின் கொடிகள், வராதே என்று கூறுவதாகப் பாடுகிறார்!

    ‘’போர் உழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
    வாரல் என்பன போல மறித்துக் கைகாட்ட ‘’

    என்பது அவர் பாட்டு. வில்லி பாரதத்தில் கண்ணன் வாழும் துவாரகை நோக்கி துரியோதனன் படைத்துணை கேட்க வரும்போது, துவாரகை மதிலின் கொடிகள், எங்கள் கண்ணபிரான், பாண்டவர்க்கே படைத்துணை யாவான், துரியோதனா, நீ மீண்டு போ !’’ என்று கூறுவது போல் பக்கவாட்டில் அசைகின்றன என்று வில்லிப்புத்தூரார் பாடுகின்றார். அப்பாடல் ,

    ‘’ஈண்டுநீ வரினும் எங்கள் எழிலுடை எழிலி வண்ணன்
    பாண்டவர் தங்கட் கல்லால் படைத்துணை ஆகா மாட்டான்,
    மீண்டுநீ போதி! என்று அவ் வியன்மதில் குடுமி தோறும்
    காண்டகு பதாகை ஆடை கைகளால் தடுப்பை போன்ற!’’

    என்பதாகும். கம்பராமாயணத்தில் மிதிலை வீதிகளின் குறுக்கே கயிற்றில் கட்டப் பெற்ற கொடித்துணிகள், ‘’இராமா, சீதை உனக்காக இங்கே காத்திருக்கிறாள்! விரைந்து வா !’’ என்று கைகளை அசைத்து அழைப்பதுபோல மேலும் கீழுமாக அசைகின்றன! என்று கம்பர் பாடுகின்றார்!

    ‘’மையறு மலரின் நீங்கி யாம்செய்மா தவத்தின் வந்து
    செய்யவள் இருந்தாள் என்றச் செழுமணிக் கொடிகள் என்னும்
    கைகளை நீட்டி அந்தக் கடிநகர், கமலச் செங்கண்
    ஐயனை, ‘’ஒல்லை வா !’’ என்று அழைப்பது போன்ற தம்மா!’’

    என்பது அப்பாடல்!

    சேக்கிழாரின் பெரிய புராணப்பாடலில் வரும் தில்லை மாளிகைப் பதாகைகள், மேகங்களின் இடையில் மின்னல்போல் மின்னி, ஒளியின் உருவமாகிய இறைவன் தில்லைக் கருவறைக்குள் ஒளிவெளியாக – ஆகாசமாக- விளங்குகிறான், வந்து தரிசியுங்கள்!’’ என்று நுட்பமாக உணர்த்துவதுபோல் உள்ளது! சேக்கிழார் பாடலின் நயம் இது!

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 9.1

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 9.1

    முனைவர் மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.1
    (நீராடற்பருவம்)

    பெண்பால் பிள்ளைத்தமிழில் அடுத்த பருவமாக நாம் காண்பது, நீராடற் பருவம். நதியில் நீராடும் இனிய அனுபவத்தை, விளையாட்டை, வளர்ந்த சிறுமிகள் ஐந்து முதல் ஒன்பது வயதில் செய்வார்கள். ஆயினும் முதலில் சிறுபெண்களுக்கு வயதில் பெரிய பெண்களும் தாயும் செவிலியருமே நதியில் இறங்கி நீந்தவும், நீராடவும் கற்றுக் கொடுப்பார்கள். பிள்ளைத்தமிழ் இலக்கிய மரபு பெண் குழந்தையின் ஐந்து முதல் ஒன்பது வயதில் இது நிகழும் என்கிறது.

    நதியில் நீராடுவதென்பது சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் ஒரு நல்ல பொழுது போக்காகவும், உடற்பயிற்சியாகவும் அக்காலத்தில் விளங்கியதைக் காணலாம். அது மட்டுமின்றி, நாட்டு நலனுக்காகவும், வீட்டு நலனுக்காகவும் செய்யும் வேண்டுதல்களுக்கும் இதுவொரு களமாக விளங்கியது எனவும் அறிகிறோம்.

    ஆடிமாதம், புதுவெள்ளத்தில் நீராடுவதென்பது நதியைப் போற்றி வழிபட்டு விளையாடி மகிழ்வதற்காக ஏற்பட்டது! புலராத அதிகாலை நேரத்துக்குளிரில், மார்கழிமாதம் நீராடுவது நாட்டில் நல்லமழை பெய்வதற்காகவும் நல்ல கணவனைப் பெறுவதற்கு வேண்டி நோன்பிருக்கவும் ஏற்பட்டது. ஆண்டு முழுவதுமே ஆற்றங்கரையில் தினசரிக் கடன்களைச் செய்தும், துணிமணிகளைத் துவைத்தும், நீரில் துளைந்து விளையாடியும், வாழ்வினைப் பல பொழுதுபோக்குகள் நிறைந்ததொரு இனியபயணமாக அமைத்துக் கொள்வதற்கென்றே ஏற்பட்டது எனலாம்!

    தம் நீர்ப்பெருக்கால் நமக்கெல்லாம், நாம் விதைக்கும் பயிர்களுக்கெல்லாம் உணவளித்து, உயிரூட்டி, அரவணைத்து வளர்த்துவரும் கங்கை, காவேரி, வைகை, இன்னும் பல நதிகளை நாம் தெய்வமெனக் கொண்டாடிப் பூசைகள்செய்து வழிபடுகிறோம். ‘நீரின்றி அமையாது உலகு,’ என்பது நாமறிந்த உண்மை! குழந்தைகள் தாயிடம் விளையாடுவதுபோல, ஆற்றுவெள்ளத்தில் ஆடிப்பாடி நீர்விளையாட்டுகளில் ஈடுபட்டுக் களிக்கிறோம். நிலம், நீர் (ஆறு) முதலியன வாழ்வின் இன்றியமையாத தேவைகளாக இருப்பதனால், அவற்றை இயற்கை தெய்வங்களாகக் கொண்டு போற்றுகிறோம். இவை உயர்வான நமது நாகரிகத்தின் வெளிப்பாடுகளே!

    ‘காவேரியே! உன் கணவனுடைய சோழநாடே உன்குழந்தையாகும்; நீதான் அதனை வளர்க்கும் தாயானவள். எத்தனையோ ஊழிக்காலங்களாக இந்தச்செயலைச் செய்துவருகின்றாய். இதற்குக் காரணம், உயிர்களைப் பாதுகாத்து, ஆணைச்சக்கரம் செலுத்துகின்ற சோழவேந்தனின் நடுவுநிலைமை தவறாத ஆட்சியே அல்லவா? நீடூழி வாழ்வாயாக காவேரியே!’ எனத் தலைவி வாழ்த்துவதாக சிலப்பதிகாரத்தில் கானல்வரிகளைக் காண்கிறோம்.
    ‘வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி
    ……………..
    ஊழி உய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிரோம்பும்
    ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி.1’
    (சிலப்பதிகாரம்- கானல்வரி- புகார்க்காண்டம்- கடலாடு காதை)

    சிவபிரானுக்கு உகந்த திருவாதிரை நாளில் பௌர்ணமி தினமும் கூடியிருந்த முன்பனிக்காலம் எனப்படும் மார்கழிமாதத்து நாளன்று வைகறைப்பொழுதிற்கு முன்பே வைகைக்கரையில் சிறுமியரும் மகளிரும் அந்தணர்களும் சிறுவர்களுமாகக் கூட்டம் கூடியுள்ளது; வைகையின் நீர்ப்பெருக்கிற்கு ஈடாக மக்கள்கூட்டம் கரைபுரண்டோடுகின்றது. வாணி(சரஸ்வதி), யமுனை, கங்கை ஆகிய மூன்று நதிகளின் கலவை எனப் புகழப்படும் வையை எனும் பாண்டியன் குலக்கொடி, மகிழ்ச்சியில் பொங்கிப் பெருகிப் புரண்டோடுகிறாள்.
    அந்தணர்கள் நீராடி முடித்துப் பொற்கலங்களிில் வையையின் நீரை நிரப்பிக் கொண்டு மந்திரங்களை உச்சரித்தவாறு வேள்விக்காக அமைக்கப்பட்ட சாலைகளை நோக்கி விரைந்தனர். வேள்விச்சாலைகளில் தீ வளர்க்கப்பட்டு மந்திரங்கள் முழங்கத் துவங்கிவிட்டன. தாய்மார்கள் தங்கள் சிறு மகள்களின் கைகளைப் பற்றிக்கொண்டு நீரில் மெல்ல இறக்கி நீராடவைக்கின்றனர்.

    சிவபிரானை வாழ்த்தி எழும்பும் அந்தணர்களின் மந்திர முழக்கம் வானைமுட்டுகிறது. இன்னும் பல தாய்மார்களும் சிறுமிகளும் இளம்கன்னியர்களும் அவர்களைப்போல் வேள்விக்குண்டங்களைச் சூழ்ந்து நிற்கிறார்கள். பற்களைக்கிட்டிக்கும் குளிரில், ஈர ஆடையில், சிறுமிகளின், ஏன் தாய்மார்களின் உடல்களும்கூட இலேசாக நடுங்குகிறன. ஓங்கியெழும் வேள்வித்தீயின் நாக்குகள் உமிழும் வெப்பத்தில் அப்பெண்களின் ஈர ஆடைகளிலிருந்து நீர் ஆவியாக வெளிப்படுகின்றது. பெண்களும் குளிரிலிருந்து சிறிது ஆசுவாசமடைகின்றனர்.

    ‘இவ்விளங்குழந்தைகள் தங்கள் தாய்மார்களுடன் கூடிநின்று வைகைக்கரையில் நீராடலாகிய இந்தத் தவத்தினைச் செய்வதற்கு, முன்பு என்ன தவம் செய்திருந்தனரோ,’ எனக் காண்போருக்கு எண்ணத்தோன்றுகிறது.*

    அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்,
    முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட,
    பனிப்புலர்பு ஆடி, பருமணல் அருவியின்
    ஊதை ஊர்தர, உறைசிறை வேதியர்
    …………………………………………….
    தீ எரிப்பாலும் செறிதவம் முன்பற்றியோ,
    தாய் அருகா நின்று தவத் தைந்நீராடுதல்?
    நீ உரைத்தி, வையை நதி!2
    (*பரிபாடல்-11- ஆசிரியர்: நல்லந்துவனார்)
    *****

    இனி குமரகுருபரர் காட்டும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழைக் காணலாம்! பொய்யாக் குலக்கொடியான வையை என்னும் நதியின் கரையில் கும்மாளமிடும் இளம்பெண்களின் கூட்டம்! குதூகலம் கொப்பளிக்க பாண்டிய இளவரசி தடாதகை தன் தோழியருடன் நீராட வருகிறாள். பற்பல கதைகளையும் பேசிக் களித்து மகிழ்ந்த வண்ணம் தடாதகையும் தோழிகளாகிய திருமகளும் கலைமகளும் இன்னும் பல பெண்களுடன் வைகைத் துறையை அடைகின்றனர். “பொங்கி வரும் வைகைப் புது நீரில் நீராடுவாயாக அம்மையே,” என்று தடாதகையிடம் கூறுகின்றனர்.

    வைகை நீர் பொங்கிப் புரண்டோடி வரும் அழகைக் கண்டு, மெய்ம்மறந்த பரவசத்தில் ஆழ்ந்து நிற்கிறாள் அங்கயற்கண்ணி. ‘இந்தப்படித்துறை பண்டு எம்பெருமான் பிட்டுக்கு மண்சுமந்த இடமாகும்,’ எனத் தோழியான வாணி சொல்கிறாள். அதனைக் கேட்டவுடன் தடாதகையின் உள்ளம் கசிந்துருகிக் காதலில் கண்களிலிருந்து ஆனந்த வெள்ளம் பொழிகின்றதாம்.

    நீர் பெருகிக் கரையுடைத்துக் கொண்டோடிய வைகையும், பிட்டு விற்கும் வந்திக்கு உதவ வேண்டி, கூடையில் மண்ணை வாரித் தலைச்சுமை எடுத்துக் கரையமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காதல் கொழுநனும், அவனைப் பிரம்பால் அடித்த பாண்டியனும் ஆகிய காட்சிகள் அம்மையின் மனக்கண்ணில் படமாக விரிகின்றன. கலைமகளும் தன் வாக்கு வன்மையினால் அந்தக் கதையை சுவைபட எல்லாருக்கும் விவரிக்கிறாள்.

    ‘என் உள்ளங்கவர் காதலர் மண் சுமந்த இடமல்லவா இது?’ என்ற பெருமிதத்தில் மீனாட்சியின் நெக்குருகி, நெஞ்சு விம்ம, கண்கள் சிவந்து ஆனந்த வெள்ளம் பெருகுகின்றது. அப்படியே சிலை போல நிற்கிறாள்.

    ‘இழியும் புனல் தண்துறை முன்றில் இதுஎம் பெருமான் மண்சுமந்த
    இடமென்று அலர்வெண் கமலப்பெண் இசைப்பக் கசிந்துள் உருகியிரு
    விழியும் சிவப்ப ஆனந்த வெள்ளம் பொழிந்து நின்றனையால்3..’

    “இப்படிக் கண்களிலிருந்து வெள்ளத்தைப் பெருகவிட்டுத் திரும்பவும் அப்பெருமானுக்கு வேலை வைப்பது பிழையல்லவா? விரைவில் நீராடுவாய்,” என அழைக்கின்றனர் தோழிகள்.

    ‘விழிநீரை மீண்டும் பெருக விடுத்து அவற்கோர்
    வேலை இடுதல் மிகையன்றே!’ என்கின்றனர்.

    ஆனால் எண்ணங்களில் ஆழ்ந்து அசையாமல் சிற்பமென நிற்கிறாள் இளவரசி தடாதகை. அவளை விரைந்து நீராடவைக்கத் தோழியர் இன்னொரு உபாயத்தைக் கையாளுகின்றனர்!

    “மடங்கி வரும் அலைகளையும் குளிர்ச்சி பொருந்திய நீரையுமுடைய வைகை நதியில், வண்டல் இடுகின்ற மண்ணைக் கூடையில் அள்ளி வைத்து முன்பே சுமந்தவர் உன் காதலர்தானே? நீரிலிறங்கி ஆடினாயானால் உன் மார்பிலணிந்துள்ள சிவந்த குங்குமச்சேறு கரைந்து வண்டல்மண் போல நீரில் சேர்ந்துவிடும். அதைத் திரும்பக் கூடையில் அள்ள எம்பெருமான் ஆசையாக விரைந்தோடி வருவார் பார்!” எனக்கூறுமுன்பே, மற்றொரு தோழி குறும்பாக, “அவ்வமயம் வெள்ளைப்பிட்டை அள்ளியள்ளிக்கொடுக்க வந்திக்கிழவி வேண்டுமே! பிரம்பினால் அடித்து வேலைவாங்கப் பாண்டிய மன்னன் வேண்டுமே,” எனப் பொய்யாகக் கவலைப்படுகிறாள்.

    ‘………………………. ஒருத்தி
    வெண்பிட் டிடவும் அடித்தொருவன் வேலைகொளவும் வேண்டுமெனக்
    குறிக்கும் இடத்தில் தடந்தூநீர் குடையப் பெறின் 4….’

    “சிவனாரை உன்னிடம் வரவழைக்க இது நல்ல உபாயமல்லவா? இமயமலையிலும் மீன்கொடி பறக்கவைத்த பெண்ணரசியே, நீராடி அருளுகவே, பொருநைத் துறைவன் பொற்பாவாய் புதுநீராடி அருளுகவே,” என்று வேண்டுகின்றனர். இவை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் நீராடல் பருவத்தில் குமரகுருபரர் தீட்டும் அழகான சொற்சித்திரங்கள்! அசதியாடல் எனும் நயத்தை இழைத்து அமைத்த இனிய பாடல்கள்.

    சொன்னயங்களும் கருத்து நயங்களும் பலவிதமாக வெளிப்படும் பாடல்களைக் கொண்டமைந்தது குமரகுருபரனார் இயற்றியருளியுள்ள மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூல்.
    அங்கயற்கண்ணி அம்மை, வேகவதி எனப்படும் வைகையில் நீராடிய போது, அவள் கைகளில் அணிந்துள்ள வெண்மையான வளைகள் ஒலித்தன; பவளம் போன்ற சிவந்த உதடுகள் வெளுத்தன; கருங்குவளை மலர்க் கண்கள் சிவந்து செங்குவளை போன்று காணப்பட்டன; கரிய மணல் போன்று காணப்பட்ட கூந்தல் சரிந்து விழுந்தது. இது, பெருகிடும் கங்கையாறு, சிறு திவலையாகி, ஆனந்தப் பெருங்கடலாக விளங்கும் சிவபெருமானுடன் (மீனாட்சியம்மை) கூடிக்கலந்து விளையாடியதால் உண்டாகிய வேறுபாடுகளை ஒத்திருந்ததாம்.

    ‘செழுந்தரங்கக் கங்கை நுண்
    சிறுதிவலையாப் பொங்கும் ஆனந்த மாக்கடல்
    திளைத்தாடுகின்ற தேய்ப்ப5…’ என்கிறார்.

    குழந்தை மீனாட்சி வளர்ந்து வரும் ஒவ்வொரு பருவத்தையும் சுவைமிகுந்த நிகழ்ச்சிகளால் பாடி வரும் குமர குருபரர் பின்வரும் பாடலில் உலகம் முழுவதுமே உமை அன்னையின் வடிவம் எனக் கண்டு பேரானந்தம் கொண்டு பாடிக் களிக்கிறார்.

    “கிளி பேசுவது போன்ற பண் பொருந்திய சொற்களைப் பேசும் பாவையே! நீராடும் உனது திருமேனி அழகிய பச்சை மரகத நிறத்தைப் பரப்பி ஒளி வீசுகின்றது. இதனால் எல்லாப் பொருள்களும் அந்த நிறத்தைத் தாமும் பெற்று ஒளிர்கின்றன. நதி நீரில் மிதக்கும் குளிர்ந்த பவளக்கொடி, பச்சை நிறம் பெற்று, பேரழகுடன் பசிய இளங்கொடி போலக் காட்சியளிக்கின்றது; பருத்த வெண்மையான முத்துக்கள் மரகத மணிகளாக மாறி விட்டன! நதியின் குளிர்ச்சி மிகுந்த துறைகளில் தங்கி விளையாடும் அன்னப் பறவைகள் பச்சை நிறம் அடைந்து களிப்பு மிகுந்த தோகை மயில்களாக மாறி விட்டன! இது, ‘எல்லாப் பொருள்களும் உனது அழகிய திருவடிவம் தான்,’ என்று வேதங்கள் காலகாலங்களாக முழங்கி வரும் பொருள் முற்றிலும் உண்மையே என நிரூபிப்பது போல உள்ளதம்மா.

    ‘சகலமும் நின் திருச் சொரூபம் என்று ஓலிடும்
    சதுர் மறைப் பொருள் வெளியிட…’ என வர்ணிக்கிறார்.

    அத்தனை பெண்களும் குடைந்து குடைந்து நீராடுவதனால் அவர்கள் தம் மார்பில் அணிந்திருக்கும் சிவந்த சாந்து (செங்களபம்), கருமையான கஸ்தூரிக் குழம்பு, வெண்கற்பூரம் ஆகியவை கரைந்து வைகை நீரில் கலக்கின்றன. இது சரஸ்வதி (வாணி எனப்படும் சிவந்த நிறமுள்ள சோணை நதி), யமுனை (கரிய நிறம் கொண்ட காளிந்தி ஆறு), வெண்மை நிறம் கொண்ட கங்கை எனப்படும் வான் நதி மூன்றும் கலந்து வைகையாற்று நீரில் விளையாடுவது போல உள்ளதாம்.

    ‘……………………………………வாணியும்
    காளிந்தியும் கங்கையாம்
    விண் ஆறும் அளவளாய் விளையாடு புதுவைகை
    வெள்ள நீர் ஆடியருளே
    விடைக் கொடியவர்க்கு ஒரு கயற்கொடி கொடுத்த கொடி
    வெள்ள நீர் ஆடியருளே.6’ என்கிறார்.

    அனைத்துப் பொருள்களும் அவளே! அவளிடம் இருந்தே உற்பத்தியாகி அவளிடமே அனைத்தும் தஞ்சம் அடைகின்றன. அவளை இடைவிடாது சிந்தையில் வைப்பவர்கள் அவளாகவே ஆகி விடுகின்றனர். ‘எங்கும் வியாபித்திருப்பவள், பலவகையான உருவம் கொண்டவள், ‘வ்யாபினீ, விவிதாகாரா7,’ என அம்பிகையை லலிதா சஹஸ்ர நாமம் போற்றுகிறது. (ஸ்லோகம் 87).

    நதிகளைப் பெண்மைக் குணம் கொண்டவர்களாக பெரியோர்கள் வருணித்துள்ளனர். அவற்றின் ஆற்றலும், இயக்கமும், ஓரிடத்தில் நில்லாது ஓடிக்கொண்டே இருக்கும் தன்மையுமே இதற்குக் காரணங்கள். கமலைநதி திருவண்ணாமலையருகே ஓடுகின்றது. அந்த நதிப்பெண் உண்ணாமுலையம்மையை நோக்கிக் கூறுவதாக அமைந்தவொரு அழகான பாடல்:

    “குறிஞ்சி நிலத்தில் வாழும் வெற்றி மிக்க வீரனான குமரனுக்கு சேவல்கொடியைக் காட்டிலிருந்து கொண்டு கொடுத்தவள் அன்னை நீதான்!

    “பாலைக்குமரி எனப்படும் பாலைநிலத்து தெய்வமான கொற்றவைக்கு கொடிய சிங்கத்தையும் வாகனமாகக் கொடுத்தாய்!

    “செழித்த முல்லைநிலத்துக் கடவுளான கோவிந்தனுக்கு அழகான மூங்கிலாலான புல்லாங்குழலை அளித்தாய்.

    “மருதநிலத்து இறைவனான இந்திரனுக்கு அவன் மகிழும்வகையில் நீர்வளத்தைக் கொடுத்தாய்.

    “நெய்தல் நிலக்கடவுளான வருணனுக்கு அந்நிலத்தின் புலால் வாசனை தீரும்விதத்தில் (தாழம்புதர்கள் முதலியவற்றிலிருந்து வரும்) நறுமணமும் கொடுத்த அன்னை நீதானே!

    “உனக்கு என்னால் எதனை அளிக்க முடியும்? ஆகவே, அன்னையே, நீயே வந்து என்னில் ஆழ்ந்து நீராடித் திளைக்க வேண்டும்; நான் அதனால் உருகிப்பெருகிப் பேரின்பமான கடலில் சென்று சேர்வேன்,” எனக்கூறுகின்றாள் கமலை எனும் நதிப்பெண்ணாள்,’ என்கிறார் உண்ணாமுலைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியரான சோணாசல பாரதியார்.

    மெய்சிலிர்க்க வைத்து, பக்தியில் திளைக்கும் மிக அருமையான கற்பனை இதுவன்றோ!

    ‘கொற்றக் குறிஞ்சிக் குமரனுக்குக்
    கொடியும் பாலைக் குமரிக்குக்
    கொடுங்கோ ளரியுஞ் செழுமுல்லைக்
    கோவிந் தனுக்குக் குழல்வேயு
    மற்ற மருதப் போகிக்கு
    மகிழ்வு நெய்தல் வருணனுக்கு
    மன்னும் புலவு தீர்மணமும்
    வழங்கு வேனிற் கென்னளிப்பேன்8

    பல தலைமுறைகளாக நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டும், நீரினைத் தெய்வமாகக் கொண்டு போற்றியும், நீர்நிலைகளில் தெய்வ வழிபாடுகளை முறையாக நடத்தியும் வாழும் பண்பாடு – நாகரிகம் நம்முடையது. நீரின், ஆறுகளின் பின்னணியில் புலவர் பெருமக்கள் இயற்றியளித்த இப்பாடல்கள் இனிமை நிரம்பித்ததும்பி நமது உள்ளங்களில் அழகுணர்ச்சியையும், ஆனந்தத்தையும் பக்திப் பெருக்கினையும் நிரப்பி மகிழ்விக்கின்றன அல்லவா?

    _______________&________________

    பார்வை நூல்கள்:

    1. சிலப்பதிகாரம்- கானல்வரி- புகார்க்காண்டம்- கடலாடுகாதை
    2. பரிபாடல்- பாடல் 11- நல்லந்துவனார்.
    3. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    6. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    7. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
    8. உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- சோணாசல பாரதியார்

    Share
  • நம்மோடு பிறரும் மகிழ

    நம்மோடு பிறரும் மகிழ

    -நிர்மலா ராகவன்

    நலம்…நலமறிய ஆவல் (159)

    நம்மோடு பிறரும் மகிழ

    இது விந்தையான உலகம். லட்சாதிபதி கோடீஸ்வரனாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். கோடீஸ்வரனோ, தன்னிலும் அதிகச் சொத்து சேர்த்திருப்பவருடன் போட்டி போடுகிறார். பணத்தால் மகிழ்ச்சியையோ, திருப்தியையோ வாங்க முடியாது என்று இவர்கள் அனைவரும் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

    பிறருக்கும் நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையுடன், தாம் எண்ணியதைச் சாதித்தவர்களுக்குத்தான் சிலை வைக்கிறார்கள்.

    `என்னால் எதுவும் முடியாது!’ என்று மூக்கால் அழுபவர்கள், தன்னம்பிக்கை குறைந்தவர்கள். மேலானவர்கள் என்று தோன்றுபவர்களின் நடை, உடை, பாவனைகளை அப்படியே பின்பற்றுவார்கள்.

    கதை (பார்த்தது)

    சிற்றூரிலிருந்து வந்திருந்த ராதாவுக்குப் பெரிய நகரில் நல்ல வேலை கிடைத்தது. தனக்குப் பிறருடன் பழகத் தெரியவில்லை என்ற குறையும் கூடவே ஏற்பட்டது.

    அதே அலுவலகத்தில் வேலைபார்த்த சுமனா கலகலப்பாகவும், எல்லாருக்கும் பிடித்தமானவளாகவும் இருந்தாள். அவளைப்போல் தானும் ஆகவேண்டும் என்ற வெறியே ராதாவுக்கு வந்தது.

    சுமனா என்ன சாப்பிடுகிறாள் என்று கண்காணித்து, அதையே தானும் வாங்கிச் சாப்பிட்டாள்.

    உடன் வேலைபார்த்த ஒருவன் சுமனாவிடம் மோசமாக நடந்துகொள்ள முயல, அவள் பகிரங்கமாக அவன் மானத்தை வாங்கினாள்.

    `என்னிடம் எந்த ஆணும் இப்படி மயங்கவில்லையே!’ என்ற முட்டாள்தனமான ஏக்கம் உண்டாயிற்று ராதாவிற்கு. அக்கயவன் கவனத்தைக் கவரும் வகையில், புடவைத் தலைப்பை நழுவவிட்டாள். (எதைத்தான் பின்பற்றுவது என்று கிடையாதா!)

    அவள் எண்ணியபடியே அவளை நெருங்கினான். தன் தந்திரம் பலித்துவிட்ட பெருமையில் ராதா மகிழ்ந்து சிரித்தாள்.

    நம்மிடம் என்ன இருக்கிறது, என்ன செய்கிறோம், அல்லது எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து நிறைவு கிடைப்பதில்லை. நம்மைப் பற்றி நாம் என்ன எண்ணுகிறோமோ, அதுதான் முக்கியம்.

    ராதாவைப் போன்றவர்கள், `நான் பிறரிடமிருந்து மாறுபட்டிருக்கக் கூடாது. என்னைவிட உயர்ந்தவர்களைப்போல் நடந்தால்தான் பிறர் என்னைப் பார்த்துப் பிரமிப்பார்கள்,’ என்று எண்ணமிடுகிறார்கள்.

    இத்தகைய எண்ணப் போக்கு நேர் எதிரான விளைவைத்தான் தருகிறது. ராதாவின் நடத்தையை எவரும் சிலாகிக்கவில்லை. அவர்களது முகம்தான் சுளித்தது.

    நம்மை நாம் இருக்கிறபடியே ஏற்றுக்கொண்டால்தான் தன்னம்பிக்கை வளரும். அப்போது கிடைக்கும் நிம்மதியால் நமக்கு நம்மையே பிடித்துப்போகும். அதன்பின் பிறரிடம் அன்பு செலுத்தத் தடையேது!

    மிகப்பெரும் செல்வந்தர்கள் எல்லா உயிர்களிடமும் அன்பு வைத்து, சம்பாதிப்பதில் பெரும் பங்கைத் தான தர்மங்களுக்காகச் செலவிடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, சம்பாதிப்பது ஒரு விளையாட்டு.

    வெற்றி என்பது கொள்ளைப் பணத்தை ஈட்டுவதால் அல்ல. செய்யும் காரியத்தால் திருப்தியும் நிம்மதியும் கூடவே வரவேண்டும் என்பதைப் புரிந்து வைத்திருப்பவர்கள் இவர்கள்.

    பில் கேட்ஸ் Bill Gates அமெரிக்காவின் தலைசிறந்த கொடையாளி என்று புகழப்படுகிறார். அப்படி என்ன செய்துவிட்டார்?

    பில் கேட்ஸ் அளித்த அமெரிக்க டாலர் 36 பில்லியன் (3,600 கோடி) உலகின் பல நாடுகளிலும் காணப்படும் ஏழ்மையை ஒழிக்கவும், அங்கெல்லாம் கல்வித்திறனையும் ஆரோக்கியத்தைப் பெருக்கவும் உபயோகப்படுகிறது.

    அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பட்டப்படிப்பு பயிலும், வெள்ளைக்காரர்கள் அல்லாத ஆயிரம் மாணவர்களுக்கு உபகாரச்சம்பளம் வழங்கும் நற்பணியை மேற்கொண்டிருக்கிறார். இதைத் தவிர, ஊதியம் எதுவுமின்றி, வீட்டு வேலைகளையே செய்துகொண்டிருக்கும் இளம்பெண்கள் கல்வியில் பின்தங்கிவிடுகின்றனர், அதனால் தம் முழுத்திறமையை வெளிக்காட்ட முடியாது போகிறது என்று அந்த நிலைமையை மாற்றும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.

    இந்தியாவிலேயே நடிப்புக்கு அதிகச் சம்பளம் வாங்கும் இந்தி நடிகர் ஓர் இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் கழுத்து நிறைய தங்கச்சங்கிலிகள். நிகழ்ச்சி முடியும் சமயத்தில்தான் தெரிந்தது எதற்காக அப்படி — குண்டர் கும்பல் தலைவரைப்போல் — தன்னை அலங்கரித்துக்கொண்டு வந்தார் என்பது.

    நன்றாகப் பாடியவர்களைப் பாராட்டும் விதமாக, தன் கழுத்திலிருந்த சங்கிலிகளை ஒவ்வொன்றாகக் கழற்றி அவர்களுக்கு அணிவித்தார்! நடிகர்களிலேயே மிகச் சிறந்த கொடைவள்ளல் இவர்தான் என்று பிறிதொரு நிகழ்ச்சியில் அறிவிக்கக் கேட்டேன்.

    தம்மிடமிருப்பதை பிறருக்கும் பகிர்ந்தளிப்பதால் இவர்களுக்கு நிறைவு கிட்டுகிறது போலும்! சிலருக்கு என்ன கிடைத்தாலும் திருப்தி என்னவோ கிடைப்பதில்லை.

    கதை

    பல வருடங்களுக்குமுன், மலேசியாவிலிருந்து இந்தியா போகும் கப்பலில் பயணித்திருந்தேன். (இப்போது அந்தச் சேவை கிடையாது). கப்பல் ஆடிய ஆட்டத்தில் பலருக்கும் தலைசுற்றல், வாந்தி. கப்பலின் போக்கைப் பழித்தார்கள்.

    `இவங்க காசு மட்டும் வாங்கிக்கறாங்க! சாப்பாடு சகிக்கலே!’ என்றது இன்னொரு கும்பல். யாரோ ஒருவர் மட்டும் கூறினார், `இந்தக் கப்பல் 1,600 மைல் கடந்து, குறைந்த செலவில் நம்மை வேறு நாட்டுக்குக் கொண்டுபோகிறதே!’

    யாரிடம் என்ன குறை இருக்கிறது என்று மட்டுமே ஆராய்ந்து கொண்டிருப்பதால் நாம் உயர்ந்துவிடமாட்டோம். ஆனால், திருத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், குறையையும், அதை நிவர்த்தி செய்யும் வழியையும் எடுத்துச் சொல்லலாம்.

    ஏதாவது நோய்வாய்ப்பட்டு, விரைவில் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தவர்கள் தத்துவார்த்தமாகக் கூறுவது: `ஒவ்வொரு நாளையும் இதுதான் நாம் கடைசியாக வாழப்போகும் தினம் என்று நினைத்து வாழ்கிறேன். என்னைச் சுற்றிலும் அன்பானவர்கள் இருக்கிறார்களே என்று நிறைவாக இருக்கிறது’.

    எந்த நிலையிலும் மனம் வெதும்பிவிடாது, இருக்கும் சில நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வது அறிவு.

    ஆனால், தம்மிடம் இருப்பதை எண்ணி திருப்தி அடையாது, எதையோ எண்ணி ஏங்குகிறார்கள் பலரும்.

    கதை

    `நாற்பது வயதிற்குள் நான் லட்சாதிபதி ஆகவேண்டும்!’ என்று அடிக்கடி கூறிவந்தவர் அவர்.

    அந்த லட்சியத்துடன், மேலதிகாரிகளின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காகக் கடுமையாக உழைத்தார். அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளையும் முன்னின்று கவனித்துக்கொண்டார். மனைவி மக்களுடனும் சிறிது நேரத்தைக் கழிக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றவில்லை. அவர்கள் தன்னைவிட்டு எங்கே போய்விடப்போகிறார்கள் என்ற அலட்சியம்தான். அத்துடன், ஒவ்வொரு நிமிடமும் காசாயிற்றே!

    ஒரு விபத்தில் அவரது குடும்பமே அழிந்துபோயிற்று. `இனி யாருக்காக சம்பாதிப்பது!’ என்ற விரக்தி ஏற்பட்டது அம்மனிதருக்கு.

    `இப்போது என் குடும்பத்தினர் வந்து வாசற்கதவைத் தட்டினால், அது லட்சத்திற்கும் மேலானது!’ என்று கதறினார். காலம் கடந்து புத்தி வந்து என்ன ஆகப்போகிறது!

    கதை

    சில ஆண்டுகளுக்குமுன், நேபாளத்தில் ஒரு சமூக சேவகியைச் சந்தித்தேன். துருக்கி நாட்டைச் சேர்ந்தவள்.

    `இந்த மலைப்பிரதேசத்தில் பலரும் போலியோ நோயால் பாதிக்கப்படுகிறார்கள். தகுந்த வைத்தியம் கிடைப்பதில்லை. நான் வருடத்தில் பலமுறை இங்கு வந்து, அதற்கான மருந்துகளை கொடுத்து, பிற தேவைகளையும் கவனித்துப் போகிறேன்,” என்றவளுக்கு முப்பத்தைந்து வயதுதான் இருக்கும்.

    “உனக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா?” என்று நான் கேட்டதும், பத்து வயதுக்குட்பட்ட இரு குழந்தைகள் இருப்பதாகத் தெரிவித்தாள்.

    `ஊராருக்கு நல்லது செய்வதெல்லாம் கிடக்கட்டும். உன் குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிறாயோ?’ என்று உடனே தோன்ற, “உன் குழந்தைகளுடன் செலவழிக்க நேரம் கிடைக்கிறதா?’ என்று கேட்டேன்.

    பெற்றோர் ஆதரவாக இல்லை என்று வருந்தி, தீய பழக்கங்களுக்கு ஆளான எவ்வளவு மாணவ மாணவிகளின் கதைகளைக் கேட்டிருக்கிறேன்! அதனால் அக்கேள்வி தன்னால் பிறந்தது.

    அவள் ஆசியாவைச் சேர்ந்தவள். அதனால், `அதிகப்பிரசங்கி,’ என்று என்னைப் பார்த்து முகம் சுளிக்கவில்லை. இன்னொரு தலைமுறையைச் சேர்ந்த என் கேள்வி நியாயமாகப்பட்டிருக்கிறது.

    “இயன்றவரை, அவர்களையும் என்னுடன் அழைத்துவருகிறேன்,” என்று பணிவாகப் பதிலளித்தாள்.

    கதை

    ஐம்பது வயதான பெண்மணி உமா என்னுடன் பிரயாணம் செய்துகொண்டிருந்தாள்.

    நாலைந்து நாட்களுக்குப் பிறகு, “நீங்கள் ஏன் கல்யாணமே பண்ணிக்கொள்ளவில்லை?” என்று கேட்டேன், பேச்சுவாக்கில்.

    “எங்கம்மா சமூக சேவகி. வீட்டில் இருந்ததே அபூர்வம். என்னவோ, என் அப்பாவுக்கும் எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கணும்னு தோணலே!” என்றாள் விரக்தியை மறைக்காது.

    உமா பெரிய உத்தியோகத்தில் இருந்தாள். பிறர் மதித்தார்கள். ஆனாலும், தனிமையிலேயே வாழ்க்கையைக் கழிக்கவேண்டும் என்ற நிதரிசனத்தில் அவளுக்கு நிறைவு கிடைக்கவில்லை. ஏனெனில், பெற்றோர் அவளுடைய நலனைப்பற்றி யோசிக்கவில்லை. அதற்கான அவகாசமோ, ஆர்வமோ அவர்களுக்கு இருக்கவில்லை.

    பிறருக்கு நன்மை செய்கிறோம் என்று, குடும்பத்தைக் கவனிக்காமல் விடலாமா?

    ஒருவர் தன் சொந்த திருப்திக்காக தன்னைச் சேர்ந்தவர்களின் மகிழ்ச்சியைப் பறிப்பது என்ன நியாயம்?

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-45

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-45

    45. பெரியாரைத் துணைக்கோடல்

    குறள் 441:

    அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
    திறனறிந்து தேர்ந்து கொளல்

    அறம் உணர்ந்த, தன்னைய விட மூத்த அறிவாளியோட நட்பப் பெறுத மொறைய ஆஞ்சு அறிஞ்சு தெரிஞ்சுக்கிடணும்.

    குறள் 442:

    உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
    பெற்றியார்ப் பேணிக் கொளல்

    வந்த துன்பத்தப் போக்கி இனி துன்பம் வாராம பாத்துக்கிடுத பெரியவங்கள தொணையா வச்சிக்கிடணும்.

    குறள் 443:

    அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
    பேணித் தமராக் கொளல்

    பெரிய மனுசங்களுக்கு வேணுங்கது எல்லாம் செஞ்சு அவங்க கிட்ட ஒறவு வச்சுக்கிட்டு அவர் காட்டுல வழில நடக்குதது ரொம்ப ஒசந்த பலம்.

    குறள் 444:

    தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
    வன்மையு ளெல்லாந் தலை

    தன்னைய விட அதிக புத்தியுள்ள பெரியவுகளோட ஒட்டுதலா இருந்து அவுக சொல்லுத வழியில நடக்கது எல்லாத்தையும் விடச் சிறந்தது.

    குறள் 445:

    சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
    சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

    கண்ணு கணக்கா எல்லாத்தையும் கண்டறிஞ்சு கூறுத அறிவாளிங்கள சுத்திவர வச்சிக்கிடுதது தான் ராசாவுக்கு நல்லது.

    குறள் 446:

    தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
    செற்றார் செயக்கிடந்த தில்

    ஒருத்தனச் சுத்தி தகுதியுள்ள பெரியவங்க இருந்து  அவுக சொல்படி அவன் நடந்தாம்னா பகையாளியாலையும் அவன ஒண்ணுஞ்செய்ய முடியாது.

    குறள் 447:

    இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
    கெடுக்குந் தகைமை யவர்

    குத்தங் கொறைய இடிச்சுக்காட்டி புத்தி சொல்லுத பெரியவங்கள தொணையா வச்சிருக்கவன கெடுக்கதுக்கும் ஆள் இருக்குமா என்ன?

    குறள் 448:

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும்

    குத்தங்கொறைய சொல்லிக்காட்டி காவலா இருக்க பெரியவங்க இல்லாத ராசா, பகையாளி இல்லன்னாலும் தானா அழிஞ்சு போவான்.

    குறள் 449:

    முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
    சார்பிலார்க் கில்லை நிலை

    முதல் போடாம வியாபாரம் செய்யுதவனுக்கு அதுலேந்து வார லாபம் கெடைக்காது. அது கணக்கா தான் பெரியவங்க தொணையில்லாத ராசாவுக்கும் அவகளால வருத பயனப் பெற ஏலாது.

    குறள் 450:

    பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
    நல்லார் தொடர்கை விடல்

    நல்லவங்க கிட்ட ஒட்டுதலில்லாம இருக்கது, பல பேரோட பகையினால வெளையுத தீமய விட பத்து மடங்கு தீமய கொடுக்கும்.

    (அடுத்தாப்லயும் வரும்…..)

    Share
  • (Peer Reviewed) சு.வேணுகோபாலின் ‘ஒரு துளி துயரம்’ சிறுகதை –  எடுத்துரைப்பு முறைகள்

    (Peer Reviewed) சு.வேணுகோபாலின் ‘ஒரு துளி துயரம்’ சிறுகதை –  எடுத்துரைப்பு முறைகள்

    ப.சுடலைமணி
    உதவிப் பேராசிரியர்,
    தமிழ்த் துறை,
    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
    பொள்ளாச்சி – 642 107
    மின்னஞ்சல்: sudalaimani77@gmail.com

    சு. வேணுகோபாலின் ‘ஒரு துளி துயரம்’ சிறுகதை –  எடுத்துரைப்பு முறைகள்

    புனைகதை எழுத்தாளர்கள் தங்களிடம் அதிக இணக்கம் கொண்ட மொழியைக் கருவியாகப் பயன்படுத்தி, தாங்கள் கண்ட மனிதர்களின் உலகினை மறுவுருவாக்கம் செய்வதில் பெரும் வெற்றியடைகின்றனர். இந்த வெற்றியை அடையும் படைப்பாளர்களின் படைப்புகளும் வாசகர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப்படுகின்றன. படைப்பின் வழியாக வாழ்க்கையைப் பதிவு செய்யப் பிரத்யேகமான மொழியைக் கொண்ட எடுத்துரைப்பு முறைகளை அடையாளம் காண வேண்டிய அவசியம் படைப்பாளனுக்கு ஏற்படுகின்றது. அறிவார்ந்த வாசகனிடம் தன்னுடைய படைப்புகளைக் கொண்டு சேர்க்க புதுமையான எடுத்துரைப்பு முறைகளைப் பயன்படுத்தி வெற்றியடைய வேண்டிய நிர்பந்தம் படைப்பாளனுக்கு ஏற்படுகிறது.

    புதுமையான எடுத்துரைப்பின் வழி கதை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க மொழியை முழுமையாக தன் ஆளுமைக்குள் கொண்டுவர வேண்டும். சின்னச் சின்ன நிகழ்ச்சிகளை இணைத்துத் தொடர்ச்சியான ஒழுங்குமுறைக்குள் கதையினை அமைக்க வேண்டும். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் படைப்பாளன், அதனைப் படிக்கும் வாசகனிடமும் நிகழ்ச்சியின் இணைவு முறைகளைத் தெளிவாகப் புலப்படுத்த வேண்டும்.

    புனைகதையினை எடுத்துரைப்பதற்கு நிகழ்ச்சிகளை இணைத்து ஓர் அமைப்பாக மாற்றுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். நிகழ்ச்சிகளை இணைப்பதன் மூலம் சிறந்த கதையினைக் கட்டமைத்து விடலாம். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதற்கு  எடுத்துரைப்பியலில் சில விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. விதிமுறைகளின்படி நிகழ்ச்சிகளைக் காலம் சார்ந்தும், காரண காரியம் சார்ந்தும் ஒருங்கிணைக்கலாம். சு.வேணுகோபாலின் ‘ஒரு துளி துயரம்’ என்ற சிறுகதையில் எடுத்துரைப்புத் தொடரொழுங்கு முறைகளின் கட்டமைப்புகளை இக்கட்டுரையில் ஆராயலாம்.

    ‘செத்துப் போ… செத்துப் போ… என்று வழி முழுக்கத் திட்டிக்கொண்டே வந்தார் அப்பா’ என்ற ஒரு வரியில் அமைந்த எடுத்துரைப்பிலிருந்து சு.வேணுகோபால் கதையினைத் தொடங்குகிறார். கதையின் தொடக்க வாக்கியத்தைப் படிக்கும் போது, இந்த மொழி, யாருடைய குரல், யாரைத் திட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற கேள்வி வாசகனிடம் எழுகிறது. இந்த வரியின் மூலமாக கதையினைத் தொடர்ந்து படிப்பதற்கான ஆர்வத்தினை முதலில் ஏற்படுத்திவிடுகிறார். கதை நிகழ்ச்சிகளை எடுத்துரைப்பதற்கான முன்னோட்டமாக இந்த வரியை அழுத்தம் கொடுத்து அமைத்துள்ளார்.

    ‘விமலா, அவரது பேச்சுக்குப் பதில் சொல்லும் உத்தேசத்தில்லை. காலையில் ரயில் ஏறியதிலிருந்து அப்பா துப்புகிறாற்போல் விதவிதமான வார்த்தைகளில் திட்டுகிறார்.’ இந்த எடுத்துரைப்பைப் படித்தவுடன், விமலாவை எதற்காக அவளின் அப்பா திட்டுகிறார் என்ற கேள்வி எழுகிறது. அதே நேரத்தில் விமலா என்ற பாத்திரத்தின் அறிமுகமும் நடந்துவிடுகிறது. இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து நிகழ்ந்துவிடுகின்றன.

    1. விமலா தன்னுடைய தந்தையுடன் பயணித்தல்
    2. விமலாவின் தந்தை விமலாவைத் தொடர்ச்சியாகத் திட்டுதல்

    இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் இணையும் இடத்தில் கதைக்கான கச்சாப்பொருள் மறைந்து மையம் கொள்ள இருப்பதை வாசகன் ஓரளவு தன்னுடைய பொதுப்புத்தி கொண்டு புரிந்துகொள்வான். இந்த இடத்தில் எந்தவிதமான தொடரொழுங்கும் இல்லை. ஆனால் கதையினைத் தொடங்கிப் பனுவலாக உருமாற்றம் செய்ய ஏதேனும் ஒரு காரண காரியத்தினைக் கதைசொல்லி ஏற்படுத்த வேண்டும் என்பதனை வாசக மனம் இயல்பாகவே விரும்புகிறது. வாசகன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த இடத்தில் காரண காரியத்துடன் நிகழ்ச்சிகளை அமைக்கக் கதைசொல்லி முடிவு செய்துவிட்டதை அறிய முடிகின்றது.

    இரயிலில் பயணம் செய்யும் விமலா அப்பாவின் பேச்சுக்குப் பதில் கூறாமல் அமைதியாக இருக்கிறாள். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் விமலா கண்மூடிச் சாய்கிறாள். மெதுவாகத் தன் வாழ்க்கையில் நடந்து முடிந்த பழைய நிகழ்வுகளை மனத் திரையில் ஓடவிடுகிறாள். விமலாவின் எண்ண ஓட்டங்களை எடுத்துரைப்புடன் ஊடு இழையாக இணைத்துக் கதை கூறுகின்றார்.

    விமலாவின் எண்ண ஓட்டங்களைக் கதையாக அமைத்துள்ள வேணுகோபால், விமலாவைத் தன்மைக் கூற்று முறையிலேயே கதை கூற வைத்துள்ளார். விமலா கதைசொல்லியாக இந்த இடத்தில் இருந்தாலும் இடை இடையே கதைசொல்லியும்   கதை கூறுகின்றார். விமலாவை முழுவதுமாகப் படர்க்கையில் வைத்துக் கதை கூறுவதைத் தவிர்த்துள்ளார். விமலா கதைசொல்லியாகச் செயல்படும் பனுவல் பகுதிகளை மிகவும் நுட்பமாக அமைத்துள்ளார்.

    1. விமலாவை ராஜேந்திரன் பெண் பார்த்தல்
    2. விமலா ராஜேந்திரன் திருமணம் நடைபெறுதல்
    3. முதல் இரவு உரையாடல்கள்
    4. திருமண மொய்ப்பணத்தை கிருஷ்ணன் அபகரித்தல்
    5. ராஜேந்திரனின் மனப்பிறழ்வு.

    மேற்கண்ட ஐந்து நிகழ்ச்சிகளையும் விமலாவின் மூலமாக காட்சிப்படுத்திவிடுகின்றார். ஐந்து நிகழ்ச்சிகளும் காரண காரியம் சார்ந்தும் இணைந்தும் காணப்படுகின்றன. விமலாவின் பார்வைக் கோணத்தில் கதை நிகழ்ச்சிகள் வாசகனுக்குக் குவிமையப்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து நிகழ்ச்சிகளுக்கும் காலம் சார்ந்த தொடரொழுங்கும் அமைந்து இருப்பதைக் காண முடிகின்றது. கதையில் இதுவரை இடம் பெற்றுள்ள நிகழ்ச்சிகளை எந்தக் கோணத்தில் உற்று நோக்கினாலும், விமலாவை அவளது அப்பா திட்டியதற்கான காரணம் புலப்படவில்லை. விமலாவின் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. விமலாவின் அப்பாவிற்கு விமலா மீது ஏற்பட்ட கோபத்திற்கான காரணம் எங்கும் இல்லை. கோபத்திற்கான காரணம் எந்த இடத்தில் கதையின் இயங்குதளத்தில் இணைக்கப்படும் என்பதையும் முன்னதாக அறிய முடியவில்லை.

    கதை நிகழ்வுகள் அனைத்தும் காரண காரியத் தொடரொழுங்கு இழையால் சேர்த்து இணைக்கப்பட்டிருந்தாலும் கதைக்கான மையத்தை ஐந்து நிகழ்ச்சிகளை மட்டுமே கொண்டு அவதானிக்க முடியவில்லை. ‘காலம் சார்ந்தும், காரண காரியம் சார்ந்தும் சிந்தித்துப் பழக்கப்பட்டுப்போன மனித மூளை, நிகழ்ச்சிகளை இணைத்துக் கதையாக வளர்த்தெடுத்துக்கொள்கிறது. அதே நேரத்தில் எல்லாவற்றிற்கும் காரண காரியக் கோட்பாட்டைப் பயன்படுத்தும் போது கதையில் பிரச்சினை எழுவதற்கு வழியில்லாமல் போய்விடும். ஆனால் உண்மையில் பனுவலின் உயிரே பிரச்சினையில் தான் மையம் கொண்டிருக்கிறது.’ என்ற பஞ்சாங்கத்தின் கூற்றினை முன்வைத்து கதையை ஆராயும் போது சில உண்மைகள் வெளிப்படுகின்றன.

    கதையின் முரண், விமலாவின் எடுத்துரைப்பைத் தாண்டி வேறு எங்கோ மையம் கொண்டுள்ளது. இந்தப் பனுவலில் ராஜேந்திரன் தற்கொலை செய்துகொள்வதுதான் மைய நிகழ்ச்சி போன்று புனையப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்த நிகழ்ச்சியானது விமலாவின் எண்ணவோட்டத்தின் மூலமாகக் கூறப்படவில்லை. விமலாவின் எடுத்துரைப்பை ஓர் இடத்தில் யதார்த்தமாக முடிவுக்குக் கொண்டு வருகிறார். கதையின் உண்மையான பிரச்சினையை வாசகனுக்குக் கடத்தும் பணியைக் கதைசொல்லி ஏற்கிறார். விமலாவின் கதைசொல்லிப் பணியைத் தக்க இடத்தில் பறித்துவிடுகிறார்.

    பனுவலின்படி, மிகச் சரியாகக் கூறுவதென்றால் ராஜேந்திரன், கிருஷ்ணனிடம் கடன் வாங்கிய செய்தியையும், அதற்காகத் திருமண மொய்ப்பணத்தை கிருஷ்ணன் அபகரித்துக்கொண்ட செய்தியையும் விமலா வாசகனுக்குப் புரியும் வண்ணம் கூறிவிடுகிறாள். இத்துடன் விமலாவின் எடுத்துரைத்தல் பணி நிறைவடைந்துவிடுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் எளிமையான தொடரொழுங்கு முறையில் இணைத்தும் விடுகின்றார். ராஜேந்திரன் தற்கொலை செய்துகொண்டதைக் கதைசொல்லி எடுத்துரைத்துவிடுகின்றார்.

    விமலாவைத் தொடர்ந்து கதைசொல்லி, கதையின் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கதை அமைப்புடன் இணைக்கிறார்.

    1. கிணறு வெட்ட கிருஷ்ணனிடம் ராஜேந்திரன் கடன் வாங்குதல்.
    2. வாங்கிய கடன் பணத்திற்கு வட்டி கட்டியது
    3. ராஜேந்திரன் தற்கொலை செய்துகொண்டது.
    4. ஊரார் விமலாவைத் தூற்றியது.

    மேற்கண்ட நான்கு நிகழ்ச்சிகளையும் ஓர் அமைப்புக்குள் கொண்டுவருகிறார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கதைசொல்லி தன்னுடைய கூற்று மூலம் எடுத்துரைக்கிறார். வேணுகோபால் கதைசொல்லியாக இருந்து கதையைக் கூறிச் சென்றாலும் ராஜேந்திரனையும் இடையில் பேச வைக்கிறார். ஒரே நேரத்தில் கதைசொல்லியும் ராஜேந்திரனும் மாறி மாறிக் கதையினை வளர்த்துச் செல்கின்றனர். இருவரும் கதைசொல்லியாக இருந்து ஒழுங்கு முறைக்குள் கதையினை நிகழ்ச்சிகளாக நிரல்படுத்துகின்றனர்.

    ‘ஒரு வார்த்த அவன் என்னய கேட்டுட்டு பணத்த எடுத்துருக்கக் கூடாதா…? பிடித்திருந்த விமலாவின் கைகளில் கண்ணீர்த்துளி சொட்டியது. பலப்பல சமாதானங்கள் சொல்லிப் படுக்க வைத்தாள்.’

    மேற்கண்ட ஒரே எடுத்துரைப்பில் ராஜேந்திரனும் கதைசொல்லியும் ஒன்றாகப் பேசுகிறார்கள். இந்த நிகழ்ச்சியைப் படிக்கும் வாசகன் கண்டிப்பாக ராஜேந்திரனுக்கு நிகழ இருக்கும் ஏதேனும் ஒரு சம்பவத்தைத் தன்னுடைய மனத்தில் கதையாக இணைக்க முயல்வான். இந்த இடத்தில் கதை ஆசிரியரின் எடுத்துரைப்பு, மையம் கொள்வதை உணரலாம்.

    ‘அதிகாலையில் அலறல் கேட்டு விமலா முழித்தாள். கட்டிலில் ராஜேந்திரன் இல்லை. சேலையைச் சரிசெய்து கொண்டு லவக் லவக்கென்று குறுகி நிமிர்ந்து ஓடிவரும் போது, ராஜேந்திரனின் உடலைத் தூக்கிக் கொண்டு வராந்தாவிற்கு ஓடினார்கள். உப்போடு சோப்பையும் நீரில் கரைத்து வாயில் ஊற்றினார்கள். வாந்தி வரவில்லை. அவர்கள் கையிலிருந்து நழுவி உடல் விழுந்தது.’

    ராஜேந்திரனின் புலம்பலைத் தொடர்ந்து அவனது தற்கொலையும் நிகழ்ந்ததாக கதைசொல்லி இணைக்கிறார். ஆனால் இதனோடு கதை நிறைவடையவில்லை. ராஜேந்திரனின் இறப்பிற்காக விமலாவின் தந்தை அவளைத் திட்டவில்லை. இதனையும் தாண்டி ஏதோ ஒரு முக்கியமான நிகழ்வு, காரண காரிய அடிப்படையில் இணைந்துள்ளதை வாசகன் புரிந்துகொள்வான். அந்த நிகழ்வினையும் கதைசொல்லி கட்டமைக்கிறார்.

    1. விமலாவை அப்பா திட்டுதல்
    2. ராஜேந்திரன் தற்கொலை செய்துகொள்ளல்
    3. விமலா, ராஜேந்திரனின் கடனை அடைத்தல்.

    கதையின் தொடக்கத்தில் இரயில் பயணத்தின் போது விமலாவின் அப்பா விமலாவைத் திட்டிக்கொண்டு வருகிறார். இதனைப் படிக்கும் வாசகன், கதையின் நீட்சியாக இடம் பெற்ற ராஜேந்திரனின் தற்கொலை நிகழ்வைப் படிக்கும் போது திட்டுதலுக்கான காரணத்தை நேரடியாக பொருள் விளங்கிக்கொள்ள முயல்வான். அதாவது விமலாவின் விதவைக் கோலத்தை மனத்தில் வைத்துக்கொண்டுதான் விமலாவின் அப்பா திட்டுவதாகக் கற்பிதம் செய்வான். ஆனால் இந்த இடத்தில் காரண காரியத் தொடர்பு என்பது பிரச்சினைக்கு உரியதாக அமைந்துள்ளது. இதனையே கதைசொல்லி, வாசகனைத் திசை திரும்பும் எடுத்துரைப்பாக அமைத்து வெற்றியடைந்துள்ளார்.

    ‘விமலா கூடையில் சுருட்டி வைத்திருந்த மஞ்சள் பையை எடுத்தாள். பிரிக்காத ஐம்பது ரூபாய்க் கட்டை நீட்டினாள். அவன் பார்த்தான்.’

    ‘அவர் பாக்கி தராமலே செத்திட்டாரில்ல? அதுக்குத்தான்.’

    ‘அப்ப கடன வசூல் பண்ணத்தான் இந்தக் கல்யாணத்தில் அக்கறை காட்டுறது மாதிரி பாவலா பண்ணுனீங்களா? நீங்க உலகத்தில் இந்த மனுஷன்கிட்டயாவது முழு நம்பிக்கை வைக்கலையேன்னுதான்’ கொண்டு வந்தேன்.’

    இந்த எடுத்துரைப்புகளின் வாயிலாக விமலா தன்னுடைய கணவன் இறந்த பிறகு, கிருஷ்ணனிடம் கடன் பணத்தை ஒப்படைத்தாள் என்பதை அறிய முடிகிறது. விமலாவின் அப்பா, விமலாவைத் திட்டுவதற்கு உச்சக்கட்டமாக ‘செத்துப் போ…’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதையும் வாசகனால் அறிய முடியும். அப்பாவின் பேச்சால் விமலாவை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்கான காரணத்தையும் கதையின் இறுதியில் கதைசொல்லி கூறிவிடுகின்றார்.

    ‘உண்மையாக என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா? என்று முதலிரவில் கேட்ட போது, உன்னை மட்டுமில்ல, உன் குழந்தைக் காலும் பிடிச்சிருக்கு என்று சவலையாகத் தொங்கும் பாதத்தில் இட்டாரே ஒரு முத்தம். அதுதானா இவ்வளவுக்கும் காரணம்? பின் ஏதோ ஒன்று பிரவாகமாக இறங்கி, என்னை உருக்கிய அபூர்வ கணம்…’

    விமலாவின் வார்த்தைகளாக அமைந்த எடுத்துரைப்பில் தன்னுடைய கணவனின் கடனை அடைக்கக் காரணமான செய்தியும் வாசகனை இறுதியாக எட்டிவிடுகின்றது. தன்னுடைய உடல் ஊனத்தைப் பொருட்படுத்தாமல் ராஜேந்திரன் தன்னை மனைவியாக ஏற்றுக்கொண்ட செயல் விமலாவை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. ராஜேந்திரனுடன் குறைந்த நாள்கள் வாழ்ந்தாலும் அது நிறைவான வாழ்க்கையாக அமைந்ததாகக் கருதுகிறாள். இதனால் கணவன் இறந்தாலும் அவன் பட்ட கடனை அடைக்கப்  போராடுகிறாள். இந்தச் செயலால் தன்னுடைய அப்பாவின் தீராத கோபத்திற்கும் ஆளாகிறாள். விமலாவின் செயல்பாடுகள் அனைத்தும் காரண காரியத்துடன் நிகழ்வதை வாசகன் கண்டறியும் வண்ணம் அமைந்துள்ளன.

    கதைசொல்லியின் கூற்றாக அமைந்த எடுத்துரைப்பின் இடையிடையே நிகழ்ச்சிகளைப் பாத்திரங்களின் உரையாடல் மூலமாகவும் காட்சிப்படுத்துகிறார். இதில் குறிப்பாக கிருஷ்ணனை ராஜேந்திரன் நேரிடையாகச் சந்திக்கும் காட்சியைக் கூறலாம். இருவரும் சந்தித்துக்கொள்ளும் காட்சியைத் தொடங்கி வைத்துவிட்டு கதைசொல்லி விலகி நின்று வேடிக்கை பார்க்கிறார்.

    ‘சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான்’

    ராஜேந்திரன் கிருஷ்ணனைச் சந்திக்கக் கிளம்பினான் என்ற அளவில் கதைசொல்லியின் எடுத்துரைப்பு முடிவடைந்துள்ளது. இருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சியைப் பாத்திரங்கள் வாயிலாகவே கட்டமைத்துள்ளார்.

    ‘நாந் தரமாட்டேனா? அப்படி நெனச்சிருந்தா மொய்யெழுத உங்கிட்ட ஒப்படச்சிருப்பேனா?’

    ‘இப்ப வாங்காம நா எப்ப கலெக்ஷன் பண்ண முடியும்? ரெண்டு மாசம் வட்டி சரியா
    வரலை’

    ‘ஒவ்வொரு வாட்டியும் வெள்ளாமயில தர்றேன்னுதான் சொல்றே! எனக்கு இதவிட்டா கை சேராது’

    இவ்வாறு பாத்திரங்களை உரையாடச் செய்து கதையின் நிகழ்ச்சிகளை இணைத்துவிடுகின்றார். மொய்ப்பணம் கிருஷ்ணனால் அபகரிக்கப்பட்ட நிகழ்ச்சியை உரையாடல் மூலமாக கதையின் இயங்குதளக் கட்டமைப்பு ஒழுங்குக்குள் கொண்டு வந்துவிடுகின்றார்.

    ராஜேந்திரனின் பிரச்சினையையும் உரையாடல் மூலமாக அமைத்துள்ளார். ராஜேந்திரனுடன் விமலாவைப் பேச வைத்து ஒரு காட்சியை அமைத்துவிடுகிறார். விமலா கேட்ட கேள்விகளுக்கு ராஜேந்திரன் ஓரிரு வார்த்தைகளில் பதில் கூறி, தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்துகிறான்.

    ‘உடம்புக்கு என்ன?’
    ‘ஒண்ணுமில்ல’
    ‘பின்னென்ன இந்தப் பக்கமே காணோம்?’
    ‘சும்மாதான்’
    ‘……………’
    நீண்ட நேரம் பேசாதிருந்தவன் எழுந்து உட்கார்ந்தான்
    ‘மொய்ப்பணத்தையெல்லாம் வச்சிக்கிட்டு தர மாட்டங்கிறான்’
    ‘யாரு?’
    ‘கிருஷ்ணா’

    மிகவும் குறைவான வார்த்தைகளைக் கொண்டே உரையாடல்களை உருவாக்கியுள்ளார். ஆனால் உரையாடலில் ராஜேந்திரனின் உளவியல் பாதிப்பை முழுமையாக வாசகனுக்கு எடுத்துரைத்து விடுகிறார். சிறுவயது முதல் கிருஷ்ணனிடம் நட்புப் பாராட்டி வந்துள்ளதை ராஜேந்திரனின் அமைதி பிரதிபலிக்கின்றது. தன்னுடைய நண்பன் பண விசயத்தில் தன்னை நம்ப மறுப்பது அவனை மிகவும் பாதிக்கிறது. கடன் தொல்லையால் திருமண வாழ்க்கையை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் திணறுகிறான்.

    ‘விமலாவின் கையைப் பற்றினான். பள்ளிக்கூடத்துக்குப் போகும் போது அவன் டிராக்டரில் ஏறுறேன்னு ஏறி, தவறி விழுந்து கால் முறிஞ்சிடுச்சு. செக்காலை முக்கிலிருந்து நான் ஒத்தாளாக அவனை உப்புக் குதிரை ஏத்தி வந்திருக்கேன் விமலா.’

    ராஜேந்திரன், விமலாவிடம் தன்னுடைய பால்ய கால நிகழ்ச்சிகளை வருத்தம் தொனிக்கக் கூறுவதாக அமைத்துள்ளார். இந்த எடுத்துரைப்பில் ராஜேந்திரனின் மன நெருக்கடி தெளிவாக வெளிப்படுகிறது. குறிப்பாக ராஜேந்திரனின் மனநிலையை அவனது குரல் மூலமாகவே பதிவு செய்துள்ளார். மேலும் கிருஷ்ணனின் பாத்திரம் குவிமையப்படுத்தப்படும் இடமும் இதுவாகும். இருவருக்குமான இளமைக் கால நிகழ்வுகள், பனுவலுக்கு அந்நியமானவை ஆகும். ஆனால் இதன் மூலம் விமலாவிடம் கிருஷ்ணனின் பிம்பம் அழுத்தமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளது. வாசகனின் கவனமும் கிருஷ்ணனின் மீது விழுகின்றது.

    ராஜேந்திரன் கூறும் பால்ய காலக் காட்சிகள், ஓரிரு சொற்களில் இடம் பெற்றிருந்தாலும் இது இடைப்பனுவலாகவே அடையாளம் காணப்படுகின்றது. கிருஷ்ணன் எதிர்முனைப் பாத்திரமாக சித்திரிக்கப்பட்டுள்ளதால் இடைப்பனுவல் தாக்கம் பெற்றுள்ளதை அறிய முடிகின்றது. கிருஷ்ணனிடம் ராஜேந்திரன் ஏமாந்து போனதற்கான காரணம், சிறுவயது முதல் இருவருக்கும் இடையில் இருக்கும் ஆழ்ந்த நட்பே என்பதைக் காரண காரியம் கொண்டு இணைத்துள்ளார்.

    கதையின் இறுதிக் காட்சிகள், விமலாவும் கிருஷ்ணனும் உரையாடுவது போல அமைக்கப்பட்டுள்ளன. அச்சூழலில் அப்பா மௌனமாக மட்டும் இருக்கிறார்.

    ‘என் ஏழாம் நாள் ராத்திரியில் என் கையைப் பிடிச்சு கதறினான். அதுக்கு…’

    ‘கடன வாங்கிட்டு இழுத்தடுச்சா முடியுமா?’

    ‘வச்சுப் பொழைக்க முடியலையன்னா… ஏதோ சொல்ல வந்தவன், ‘இதென்ன வம்பாய் போச்சு! வாங்குனவன் நாலு பேரு ஓடிப் போயிட்டா என்னாகுறது? பாவ புண்ணியம் பார்த்தா நா போண்டியாக வேண்டியதுதான்’ என்றான்.’

    ராஜேந்திரனின் கடனை விமலா அடைக்கிறாள். கடன் தொகையைக் கிருஷ்ணனிடம் கொடுப்பதற்காக அப்பாவுடன் பயணத்தைத் தொடர்ந்தாள். பயணத்திற்கான காரணம், கதையின் தொடக்கத்தில் இல்லை. கிருஷ்ணனுடன் விமலா பேசும் இடத்தில் பயணத்திற்கான காரணம் துலக்கம் அடைகிறது. இந்த உரையாடல் நிகழ்ச்சிகளைக் கதையின் இறுதிப் பகுதியில் அமைத்துள்ளார். விமலாவின் அப்பா திட்டுவதும், கடன் தொகையை விமலா கிருஷ்ணனிடம் ஒப்படைத்த நிகழ்வும் பனுவலின் இயங்குதளத்தில் பெரிய இடைவெளிவிட்டு இணைக்கப்பட்டுள்ளன. இதனை எடுத்துரைப்பின் நவீன அணுகுமுறையாகக் கருத இடம் உள்ளது. இந்த அணுகுமுறை, வாசகனின் வாசிப்புக்கு சற்று நெருக்கடியைக் கொடுக்கும் விதத்திலும் அமைந்துள்ளது.

    சிறுகதை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க வெளி (அல்லது) இடம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கதையின் இயங்குவெளி கதைசொல்லியால் நிர்ணயிக்கப்படுகிறது. வரையறுக்கப்பட்ட வெளிக்குள் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கதையின் இயங்கு தளத்துடன் ஓர் இழையில் பிணைக்கப்படுகின்றன. ‘ஒரு துளி துயரம்’ கதையில் கதை நிகழ்வு நடைபெறும் வெளியில் இரண்டு துணைமை நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    1. ராஜேந்திரன் தற்கொலை செய்துகொண்ட பிறகு, இழவு வீட்டில் நடைபெறும் நிகழ்வு.
    2. கிருஷ்ணனின் அலுவலகத்திற்கு மதுப்புட்டியுடன் இளைஞன் செல்லுதல்.

    சிறுகதையின் எடுத்துரைப்பு நிகழும் வெளியில் நிகழ்காலத்தில் மேற்கண்ட நிகழ்வுகள் கதைசொல்லியின் கூற்றின் இடையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இழவு வீட்டில் அடையாளம் காண முடியாத பாத்திரங்களைப் பேச வைத்து, ராஜேந்திரனின் இறப்பிற்கான வெவ்வேறு காரணங்களை வாசகனிடத்தில் சேர்க்கிறார். இதன் மூலம் வாசகனின் கவனம் சிதறடிக்கப்படுகிறது..

    ‘எமனா வந்திருக்காளே, நொண்டி அவுசாரி…’

    ‘எவங் கூடப்படுத்தாளோ, ரோசக்கார பையன் கேள்விப்படாமயா இப்படி முடிவெடுப்பான்!’

    இந்தக் கூற்றுகள், இழவு வீட்டில் அடையாளம் தெரியாத குரல்களாக வெளிப்படுகின்றன. இதற்கு விமலாவும் பதில் கூறவில்லை. அமைதியாக இருந்து ராஜேந்திரனின் தற்கொலைக்கான காரணத்தைப் பகிரங்கப்படுத்தாமல் தனக்குள் பாதுகாக்கிறாள். ஆகையால் இந்த எடுத்துரைப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. கணவன் தற்கொலை செய்துகொண்டாலும் அவன் மீது தனக்கு இருக்கும் அதீத அன்பினை அமைதியாக இருந்து வெளிப்படுத்துகிறார்.

    ‘பதிலை எதிர்பார்க்காமல் சுவரைப் பிடித்து, படியிறங்கினாள். கையில் பிராந்தி புட்டியோடு மேலேறி வந்த இளைஞன் இவர்களைப் பார்த்தும் சற்று ஒளித்து விலகினான்’

    கதையின் வெளிக்குள் நடைபெறும் இந்தக் காட்சியை விமலா பார்ப்பதாகப் படம் பிடித்துள்ளார். இதற்கான பின்புலத்தை வாசகன் அவதானிக்கும் முறையில் அமைத்துள்ளார். கிருஷ்ணனின் வாழ்க்கை, கோலாகலமான கொண்டாட்டங்களால் நிரம்பியது. ராஜேந்திரனின் இறப்பு, அவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. கிருஷ்ணனின் பாத்திர வடிவமைப்பு எந்த வகைமாதிரிக்குள் வரும் என்பதையும் கதையின் போக்கிலேயே இணைத்துக் காட்டுகிறார். விமலா, கிருஷ்ணனைச் சந்தித்துப் பணத்தைக் கொடுக்க வந்த நோக்கம் நிறைவேறாது என்பதை இந்தக் காட்சி புலப்படுத்திவிடுகிறது. விமலா கிருஷ்ணனிடம் பணத்தைக் கொடுக்கும் போது அவன் மன்னிப்புக் கேட்பான் என்று நினைத்து வந்தாள். ஆனால் அவன் பணத்தைப் பெற்றுக்கொண்டு எந்தவித பாவனையும் இன்றி இருந்தான். ராஜேந்திரனின் மரணத்திற்கான குற்ற உணர்ச்சி எதுவும் அவனிடம் இல்லை.

    ‘ஒரு துளி துயரம்’ கதையைப் படித்த பிறகு வாசகன் மனத்தில் பதிந்த காட்சிகளைக் கீழ்க்கண்டவாறு நிரல்படுத்தலாம்.

    1. ராஜேந்திரன் விமலா திருமணம்
    2. மொய்ப்பணம் அபகரிக்கப்படுதல்
    3. ராஜேந்திரனின் மனப்பிறழ்வு
    4. ராஜேந்திரன் தற்கொலை செய்துகொள்ளல்
    5. விமலா விதவை ஆதல்
    6. ராஜேந்திரனின் கடனை விமலா அடைத்தல்
    7. விமலா தன்னுடைய தந்தையிடம் திட்டு வாங்குதல்

    இந்த நிகழ்ச்சிகளைக் கதையின் கட்டமைப்பு தளத்திற்குள் கொண்டு வந்த வாசகன், தன்னுடைய அறிவு கொண்டு இணைத்துக் கதையினை முழுவதும் விளங்கிக் கொள்கிறான். படைப்பினை விளங்கிக்கொள்ள வாசகனுக்கும் படைப்பாளிக்கும் ஒரு புரிதல் நிகழ வேண்டும். ‘எடுத்துரைப்பு என்பது மொழி வழியாக நிகழும் தகவல் தொடர்பு முறையியல் ஆகும். இதில் சொல்பவர் கேட்பவர், எழுதுபவர் படிப்பவர் எனும் முனைகள் அமைந்திருக்கின்றன. இந்த இரு முனைகளும் மொழி எனும் ஊடகத்தால் தொடர்புபடுத்தப்படுகின்றன’ என்ற கே. பழனிவேலுவின் கூற்று இங்கு முக்கியமானதாக அமைகின்றது. பனுவலைப் படித்த வாசகன், கதையின் கட்டமைப்பினைக் காரண காரியத் தொடரொழுங்கு மூலம் கால வரிசைப்படி அமைத்துக் கண்டடைகிறான்.

    ஒரு துளி துயரம் கதையின் நிகழ்ச்சிகள் நேர்க்கோட்டு முறையில் இணைக்கப்படவில்லை. ஆயினும் வாசகன் கலைத்துப் போட்ட சீட்டுக் கட்டுகளில் இருந்து சீட்டினை எடுத்து நிரல்படுத்தி ரம்மி சேர்ப்பதைப் போன்று, நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கதையின் இயங்குதளத்தைக் கண்டடைகிறான். கதைசொல்லியின் எடுத்துரைப்புகள் அனைத்தும் இங்கே முழுமையாக வெற்றியடைந்துள்ளன.

    விமலா, தன்னுடைய தந்தையிடம் திட்டு வாங்குவதில் தொடங்கும் கதை பல்வேறு நிகழ்ச்சிகளை இணைத்துக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் காரண காரியத் தொடரொழுங்கு மூலம் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதை வாசகனால் அடையாளம் காண முடிகின்றது. ஆயினும் இந்த ஒழுங்குகள் அனைத்தும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை அல்ல. கதையின் எடுத்துரைப்பு ஓட்டத்தில் இயல்பாகவே அமைந்தவையாகும். கதை நிகழ்ச்சிகள் நேர்க்கோட்டு வரிசையில் இணைக்கப்படவில்லை. இருப்பினும் கதையின் சாராம்சத்தை வாசகனுக்குக் கொண்டு சேர்த்ததில் வெற்றியடைந்துள்ளார்.

    ஒரே பனுவலில் நிகழ்ச்சிகளை எடுத்துரைத்து நிரல்படுத்தும் பணியைப் பலரும் செய்கின்றனர். ஆசிரியர் கதைசொல்லியாக இருந்து சில நிகழ்ச்சிகளை எடுத்துரைத்துள்ளார். கதையில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களான விமலா, ராஜேந்திரன், கிருஷ்ணன் போன்றவர்களும் கூட கதை நிகழ்ச்சிகளை உருவாக்கி, கதையின் அமைப்பினைக் கட்டமைத்துள்ளனர். கதையின் எடுத்துரைப்புத் தொடரொழுங்கு முறைகள் எந்தவிதமான முன்வரைவுத் திட்டமுமின்றி கதையின் போக்கிலேயே சீராக இணைந்துள்ளதைக் காண முடிகின்றது.

    கதையின் எடுத்துரைப்பானது ஒரு விதமான துள்ளல் முறையில் அமைந்துள்ளது. ஒரு நிகழ்ச்சி நடைபெறும் வெளியில் வாசகனை நிறுத்திவிட்டு, திடீரென்று வேறு இடத்திற்கு வாசகனை அழைத்துச் செல்கிறார். வாசகனை அறிவார்ந்தவனாக நினைத்து இந்தச் செயலைச் செய்கிறார். வேறு கோணத்தில் பார்த்தால் முதல் நிகழ்ச்சிக்கான எடுத்துரைப்பு விவரிப்புகள் போதும் என்ற அளவில் அடுத்த நிகழ்ச்சிக்கு அனிச்சையாக கடந்து விடுவதாகவும் முடிவு செய்யலாம். எளிமையான கதையாக இருந்தாலும் எடுத்துரைப்பு ஒழுங்கமைவுகள் சிக்கலானதாக இருக்கின்றன.

    கதையினைப் படிக்கும் சாமானிய வாசகன், கதையினை எளிதில் அடையாளம் கண்டுவிடுவான். ஆனால் கதையின் இயங்கு தளத்தைச் சற்று சிரமப்பட்டுதான் அவதானிப்பான். ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் கொண்ட அறிவார்ந்த வாசகன் கதையின் இயங்குதளத்தைக் கண்டடைந்து, அதனுடன் பயணிக்கக் காரண காரியத் தொடரொழுங்கு அமைப்புகளை நுட்பமாக கவனிக்க வேண்டும். வாசகன் தனக்கான புரிதல் முறையில் நிகழ்வுகளைத் தொகுத்து எடுத்துரைப்புகளைத் தொடர்புபடுத்தி, பிரச்சினையின் மையத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த இடத்தில்தான் ஒரு துளி துயரம் கதையின் எடுத்துரைப்பு வெற்றியடைகிறது.

    பார்வை நூல்கள்:

    1. நவீன கவிதையியல் எடுத்துரைப்பியல்- க. பஞ்சாங்கம்
    2. பனுவல் எடுத்துரைப்பு திறனாய்வியல் – பழனிவேலு
    3. ஒரு துளி துயரம் – சு. வேணுகோபால்

    ====================================================================
    ஆய்வறிஞர் கருத்துரை(Peer Review):

    கட்டுரையாளர் தனது பணியைச் செம்மையாகச் செய்திருக்கிறார். பின் நவீனப் போக்குகளில் எடுத்துரைப்பியல், பரவலாகப் பேசப்பட்டு வரும் ஆய்வு அணுகுமுறை. ஒரு துளி துயரம் கதையை முழுமையாக உள்வாங்கிய பாங்கு, ஆய்வில் ஆழமாக வெளிப்படுகிறது. கதைமாந்தர்களும் கதை நிகழ்வுகளும் ஆய்வில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. அதேபோல் கதாபாத்திரம் மொழியும் சொற்களின் மூலம் கதை சொல்லும் உத்தி, எடுத்துரைப்பியலோடு கூறி இருப்பது மேலும் சிறப்பு.
    ====================================================================

    Share
  • கலகம் பற்றிய கல்வெட்டு பதிவுகள்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    கலகம் என்றால் சச்சரவு சண்டை எனப் பொருள். இதாவது, இருதரப்பார் நடுவில் நிகழும் பிணக்கு. இதன்போது ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் மீது அநியாயாமாக நடந்து கொள்வதும் நேரும். கல்வெட்களில் அது பற்றிய பதிவை கீழே காணலாம்.

    நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் திருத்துறைப்பூண்டி மூன்றாம் இராசராசன் 2 ஆம் ஆண்டு (1218 பொயு) 85 வரிக் கல்வெட்டு. இடங்கருதி எண்ணிற்கு பகரமாக சாய்வுக் கோடு இடப்பட்டுள்ளது.

    ஸ்வஸ்த்திசிரி திரிபுவனச் சக்கரவத்திகள் / சிரிராசராச தேவற்கு யாண்டு / இரண்டாவது ஆவ _ _ _ / இராசேந்திர வளநாட்டு உடையார் / திருத்துறைப்பூண்டி _ _ _ _ _ திருமடைவிளாகத்துக் கும்பிட்டிருக்கும் ஆண்டார்களில் / சிவஞானசம்பந்தரும் கிருதயதேவனும் / இவ்விருவோம் காசிக்ஹாவிக்குடி / ஆண்டார் திருச்சிற்றம்பலமுடைய / முதலியார் இத்திருத்துறைப் பூண்டியிலே / எழுந்தருளினவாறே இவரை கண்டு / பூண்டி உடையார்களுக்கும் மங்கலங்கி / ழையார்களும் எம்பெருமான் /  இத்திருப்பதியிலே எழுந்தருளி இருக்கவேணும் / இங்குத்தகைக்கு நாங்கள் ஒரு குகை எடுத்து / தருகிறோம் என்று சொல்லி பிச்சையும் / தங்கள் அகங்களிலே ஆக்கி படைத்து அமுது செய்துவார நீக்கச்சிதை பின்பு / எழுந்தருளி  இருக்க குகையும் எடுக்க வேண்டுகையில் /  வடகரையிலே பூண்டி உடையாருக்கு காணியான நிலத்திலே ஆற்றங்கரைக்கு / வடக்கே எழுபதி குழி நாயனாற்கு பரிவத்திச்ச / இக்குழிக்கு உடையார் ஸந்னிதிக்கு தெற்காக / பண்ணி சாதனமும் கொண்டு குகையும் எடுத்து / இவர் எழுந்தருளி இருந்து வாச்சே / இப்பூண்டி உடையாருக்கு முதலியார் இனக்கு /  பச்சைப்படைத்து வாரா நீக்க நீங்கள் உங்கள் / மடத்தில் வந்து தங்கின் தேசாந்திரி /  முதலிகள் அமுது செய்ய பெறாதே போக நில் என்று அருளிச் செய்தவாறே பின்பு / இப்பூண்டி உடையார் தங்கள் காணியாந தென்கரை / நிலத்து பாண்டியக்கல்லிலே மேற்க்கு இட்டு / மாவரை நிலம் விளைநிலமும் அரைமாநிலம் புஞ்சை / இந்நிலம் இரண்டு மாவும் தேசாந்திரிகளுக்குடலாக / இறையிலி செய்து குடுக்க இவ்வகையிலே / இதன் நிலம் அனுபோவித்து தேசாந்திரிகளுக்கு / அமுதுமாக்கி படைச்சி வைச்சதே பெரியதேவர்க்கு / இரண்டாவது நாளிலே குகையிடி கலகத்திலே இஸாதானங்கள் / அன்தாபமன் இதுக்கு பின்பு முதலியார் திருச்சிற்றம்பலம் / உடைய முதலியார் இருபத்துநாலாவது வரை / இப்படி அனுபவித்து வாச்சிதே இவர்களுக்கு இருபத்திநாலாவது / வரையிலே சிவலோகத்துக்கு எழுந்தருளினார் இம் / மடத்து முதலியார் சிவஞானசம்மந்தரும் முதலியார் கிருதயதேவரும் /  இரண்டு குகையிலும் எழுந்தருளி இருக்கையிலே / எழுந்தருளி இருந்தமை இப்படி அறிவேன் பூண்டி / உடையான் திருத்துறை நாயகன் இப்படிக்கு இவை என் எழுத்து /  இப்படி அறிவேன் நெடுமணலுடையான் ஆதிச்சதேவன் எழுத்து/  இப்படி அறிவேன் நெடுமணலுடையான் நம்பியாரு ஊரான் / எழுத்து இப்படி அறிவேன் மாதேவபட்டன் மகன் இருன்கிரிபட்டன் / எழுத்து இது பூண்டி உடையான் அஞ்சல் என்றாதுறையன் /  பிள்ளையாழ்வான் சயிஞாதனமைக்கும் இப்படிக்கும் /  இவை திருத்துறை நாயகவேளான் எழுத்து / இப்படி அறிவேன் இவை /  திருமாணிக்கப்பிள்ளை எழுத்து / இப்படிக்கு இவை இராபிச்சன் எழுத்து / இது தில்லைனாயபிச்சன் /   சதிசாதன்மைக்கும் / இப்படிக்கு /  இவை வேடம்பரம் உடையான் எழுத்து / இப்படி அறிவேன் / கங்கைகொண்ட பிச்சன் /  எழுத்து பூமி உடையான் /  அஞ்சல் என்றான் திருவாலவாய் /  உடையான் /  சஞாதன்மைக்கு இவை /  குடப்பலம் உடையான் எழுத்து /  இப்படி அறிவேன் /  நெடுமணல் உடையான் /  திருத்துறைநாயன் உடைய பிள்ளை / ஆண்டான் எழுத்து / இப்படி அறிவேன் மங்கலங்கிழையான் எழுத்து. / இப்படிக்கு இவை / நெடுமணலுடையான் ஆதிச்ச தேவன் எழுத்து / நெடுமணலுடையான் திருத்துறைபிச்சன் /  புலியூரந் சைச சாதனமைக்கு /  கடவக்குடையான் எழுத்து /  இப்படி அறிவேன் /  திருவீதிப்பிள்ளையார் எழுத்து /  இப்படி அறிவேன் / நம்பியார்யூரான் திருவீதி / பிள்ளை மகன் / தேவிமுன்டான் சைச்சாதனமைக்கு /  இவை சேந்த மங்கலமுடையான் எழுத்து.

    திருமடைவிளாகத்து – கோவிலைச் சுற்றி உள்ள இடம்; கும்பிட்டிருக்கும் ஆண்டார் – வணங்கிய அடியார், devotees; தகைக்கு – தங்குகை; குகை – முனிவர் இருப்பிடம், தவக்குடில்;  வாச்சே – வரச்சே, வருகையில்; முதலியார் – தலைவர், சுவாமிகள், மடாதிபதி; நீக்கச்சிதை –   ; தேசாந்திரி – ஊர் ஊராய் திரியும்; உடலாக – மூலமாக; இஸாதானங்கள் –  ; அன்தாபமன் –

    சோழவேந்தன் மூன்றாம் இராசராசனின் 2 ஆம் ஆட்சி ஆண்டில் (1218 பொ.யு) இராசேந்திர வளநாட்டு திருத்துறைப்பூண்டி இறைவர், “திருத்துறைப்பூண்டி கோவில் சுற்றிடத்தில் வாழ்ந்திருக்கும் அடியார்களில் திருஞானசம்பந்தனும் கிருதயதேனும் ஆகிய நாங்கள் இருவரும் காசிக்காவிக்குடி அடியார் திருச்சிற்றம்பலமுடைய  முதலியார் இத்திருத்துறைப் பூண்டியில் வந்துதங்கி இருக்கையில், இவரை நேரில் கண்டுப் பூண்டி உடையார்களும் மங்கலங்கிழையார்களும் ‘எம்பெருமான் இத்திருப்பதியிலே எழுந்தருளி இருக்கவேண்டும்’ என்று வேண்டி ‘இங்குத் தங்குகைக்கு நாங்கள் ஒரு தவக்குடில் எழுப்பித் தருகிறோம்’ என்று சொல்லி அவருக்கான பிச்சையையும் தங்கள் வீடுகளிலேயே ஆக்கி படைத்து உண்டுவித்துவர வடகரையில் பூண்டி உடையாருக்கு காணியான நிலத்தில் வினைக்கருவி கொண்டு குகையும் கட்டிஎழுப்பி அதில் இவர் எழுந்தருளி இருந்து வரும்நேரத்தே பூண்டி உடையார் ஊர் ஊராய் திரிபவர் உண்ண இறையிலி நிலம் ஒதுக்குகின்றார். அதில் இந்த தேசாந்திரிகளுக்கு சோறு ஆக்கிப் படைக்கப்படுகின்றது. இவ்வாறு நடந்து வர பெரியதேவர் இறப்பிற்கு இரண்டாவது நாளில் குகை இடிப்பு கலகம் நடந்தது. இடித்தவர் யார் என்ற குறிப்பு இல்லை. இதற்கு பின்பு திருச்சிற்றம்பலமுடைய முதலியார் 24 –ம் நாள் சிவலோக பதவி அடைந்தார். பின்பு முதலியார் சிவஞானசம்மந்தரும் முதலியார் கிருதயதேவரும் இரண்டு குகையில் எழுந்தருளி இருக்கையில் எழுந்தருளி இருந்தமையை அறிவேன் என்று 24 பேர் கையொப்பமிட்டு உள்ளனர்.

    தொடக்கத்தில் குறிப்பிடப்படும் பூண்டி உடையார் என்பவரே பெரியதேவன் என்று குறிக்கப்படுகின்றார். இவர் குகைஇடி கலகத்தில் பாதிப்புற்று 2 -ம் நாள் இறந்திருக்க வேண்டும். இதன் பிறகு திருச்சிற்றம்பலமுடைய முதலியார் 24 –ம் நாளில் இறந்துபோகின்றார். அவருக்குப் பின் சிவஞானசம்மந்தரும், கிருதயதேவரும் இரண்டு குகைகளில் முதலியார் (சுவாமிஜி) ஆகிவிடுகின்றனர். இதை கையொப்பமிட்ட பெரியோர்கள் நேரில் வந்திருந்து கண்டு ஆசிபெற்றனர். முதலியார் என்ற சொல் அக்காலத்தே எந்த சாதியையும் குறிப்பதல்ல. அதற்கு தலைவர் என்ற பொதுப் பொருள் தான் இருந்தது. இதில் தலைவர், படைத் தலைவர், தவக்குடிலின் தலைவர் ஆகியோர் அடங்குவர். தமிழில் தலைவர் என்பதை சமஸ்கிருதத்தில் சுவாமி என்பர். அந்த சுவாமி என்பது சுவாமிகள் ஆகி இக்கால் சுவாமிஜி ஆகிவட்டது. இந்த சுவாமிகள் என்ற சமஸ்கிருத சொல் புழக்கத்தில் வரும் முன், சுவாமிகள் என்பதை முதலியார் என்று விளிதனர் என்பதற்கு இக் கல்வெட்டு சான்றாக உள்ளது.

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக். 296-298, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர் செல்வம் 098867 69865 / 09632967153.      ARIEp 1999, B. No: 272

    நாகப்பட்டினம் மாவட்டம், நாகை வட்டம், கீழையூர், முதலாம் சுந்தரபாண்டிய தேவர் 10 ஆம் ஆண்டு (பொ.யு 1261) 5 வரிப் பெருங் கல்வெட்டு.

    1. ஹரி ஓம். ஸ்வஸ்த்திசிரி கோச்சடபன்மரான சிரி சுந்தர பாண்டிய தேவற்கு யாண்டு 10–த்தாவது மகறநாயற்று பூர்வ்வபச்சத்து பஞ்சமியும் செவ்வாய் கிழமையும் பெற்ற விசாகத்து நாள் இராசேந்திர வளநாட்டு ஆளநாட்டுப் பிரமதேயம் சிரிராசராச சதுர்வேதி மங்கலத்து உடையார் பார்த்தீஸவரமுடையார் கோயிலில் மூவாயிரவன் திருவெடுத்தக் கட்டிலிலே முதலிகளும், பட்டர்களும், மஹாசனமும் பெருங்குறி      செய்து கொண்டு இருந்து
    2. விவஸ்த்தை பண்ணியபடி நம்மூர் அரையன் மூவாயிரகோண் நாடாழ்வான் முன்னாள் பள்ளிகள் கலகம் செய்ததின் நாளில் தாமதைக் கீழ் காரியஞ் செய்தார் கணக்கு எழுதினாரும் அன்னியாயத்தால் பிரம்மச்சை தங்கள் விலையாக எழுதுவித்துக் கொண்டு அன்னாளில் அனுபவித்துப் போந்த நிலங்களாய் உலகுடையப் பெருமாள் இன்னிலங்கள் அவர்களைத் தடுத்து _ _ _ முன்னாலிலே பிரம்மசேத்திரமாக பற்றிக் கொள்வதென்று முன்னாள் பிரஸாதஞ் செய்து நினைப்பிட்டருள திருமுகம் வருகையில் திருவாசகம் கல் விநியோகம் திருமுகச் சம்படம் உள்ளிட்டு முதலான பணத்துக்கு அன்னியாயங்கள் விலையாக நிச்சயத்து நாம் பணம் ஒடுக்கி விற்றின நிலத்து நம்முடையார் கோயிலில் பாண்டி மண்டலத்து குடநாட்டு ஆலகுமங்கலமான வீரபாண்டியன் மடிகைமாநகரத்து நாயனார் அழுகன் சிங்கநாயன் எழுந்தருளிவித்து உடையார் நரசிங்கஈஸ்வர முடையார்க்கு பாசைக்கும் அமுதுபடி சாத்துப்படிக்கும் திருப்பணிக்கும் திருநாள் எழுந்தருளி _ _ _ கொள்படிக்கும் திருநாமத்துக் காணியாக கொண்டு இட்ட
    3. பிடாகை உத்தமச்சோழநல்லூரில் பட்டினம் பெருவழிக்கு கிழக்கு திருவரங்கவதிக்கு மேற்கு விருதராச பயங்கர நல்லூர் எல்லைக்கு நடுவுபட்ட காட்டுக்கண்டத்து தெற்கடைய நிலம் கோவன் நிலத்து தெற்கடைய தடி பலவால் கங்கைகொண்ட சோழநல்லூர் சுகுவ கிழக்கு தாரவாய்க்காலுக்கு கிழக்கு வடக்கு கூத்த திருவரங்க வதிக்கு கிழக்கும் ஆக நிலம் குலோத்துங்க சோழநல்லூரில் _ _ _ பரமேசுவர வாயக்காலுக்கு மேற்கு கூத்து
    4. வீரராசேந்திர நல்லூரில் காந்திய் சோழவாய்க்காலுக்கு தெற்கு கூத்து பெரிய _ _ _ _  இதன் கிழக்கு தடிபலவால் _ _ _ _ _ பெரியநாச்சி என்று சொல்லப்பட்ட சிறகு _ _ _ _ குத்து ஆக இந்நிலமாவரை அரைக்காணி _ _ _ _ _ _ இன்னமும் இன்னாயனாருக்கு குடுத்த _ _ _ _ _சோழநல்லூரில் கணபதி வாய்க்காலுக்கு வடக்கு தானபாதம் என்று பேர்கூவப்பட்ட தடியில் மூல ஆற்றுவாய்படுகையும் மனைதிடரும் உள்ப்பட இந்நிலம் நாலே முக்காலே ஒருமாவும் ஆக இன்னிலம் பத்தே அரைக்காணி முந்திரகையும் எதிராமாண்டு கார்முதல் இன்னிலத்தால் இறுப்புக்கு வரும் _ _ _ _ ழுத்து ஊருடனே கூட்டிக்கொண்டு ஸந்திராதித்தவரையும் இந்நாயனாருக்கு இறையிலியாக குடுத்தபடிக்கும்

    இதன் பிறகு இக்கல்வெட்டு உடைந்துள்ளது.

    திருவெடுத்தக் கட்டிலில் – தலைமை ஏற்ற இருக்கையில்; முதலிகள் – படைத்தலைவர்; பெருங்குறி – கருத்துப் பறிமாற்றம் செய்து: விவஸ்தை – தீர்மானம்;

    சடையவர்ம சுந்தரபாண்டியனின் 10 ஆம் ஆட்சி ஆண்டின் (1261 பொயு) போது மகர ராசி கூடிய ஞாயிற்றுக் கிழமையும் வளர்பிறையின் 5-ம் நாள் செவ்வாயக்கிழமை விசாக நட்சித்திரம் கூடிய நாளில் இராசேந்திர வளநாட்டில் அடங்கிய ஆளநாட்டு பிரமதேயமான ஸ்ரீ இராசராச சதுர்வேதி மங்கலத்து பார்த்தீசுவரமுடையார் கோயிலில் மூவாயிரவன் தலைமையில் கூடிய கூட்டதில் படைத் தலைவர், பூசகர்கள், பெரியோர் அவையினர் ஆகியோர் கருத்துப் பறிமாற்றம் நிகழ்த்தி ஒரு தீர்மானம் கொண்டபடி கீழையூர் மூவாயிரகோன் நாடாழ்வான் முன்னிலையில், ”முன்னாளிலே பள்ளிகளான வன்னியர் கலகம் செய்த காலத்தில் அதனினும் கீழான செயல் செய்தார் கணக்கு எழுதியவர். அநியாயமாக பிராமணர் நிலங்களை தாம் விலைக்கு வாங்கியதாக எழுதிக் கொண்டு அனுபவித்து இறந்தார் அந்த உலகுடையப் பெருமாள்.

    அவர்களின் இந்த செயலைத் தடுத்து இந்நிலங்களை மீண்டும் பிராமணர் வயல்களாக ஆக்க முன்னாளிலே எண்ணியிருந்த நேரத்தில் அதற்கான அரசாணை. வருகையில் திருவாசகம், கல் விநியோகம், திருமுகச் சம்படம் முதலானவற்றுக்கு ஆகும் பணம் அநியாய விலை நிச்சயத்து அதற்கு நாம் பணம் கொடுத்து விற்ற நிலத்தில் நம்இறைவர் கோயிலில் பாண்டி மண்டலத்து குடநாட்டு ஆலகுமங்கலமான வீரபாண்டியன் மடிகைமாநகரத்து நாயனார் அழகன் சிங்கநாயனை வருவித்து இறைவர் நரசிங்கஈஸ்வர முடையாருக்கு பாசைக்கும், அமுதுபடி சாத்துப்படிக்கும், திருப்பணிக்கும், திருநாமத்துக் காணியாக இரண்டு இடங்களில் இறையிலி  நிலம் தரப்படுகின்றது”. அந்த நிலங்களின் இருப்பிடம், எல்லை குறிக்கப்படுகின்றது.

    பள்ளிகள் ஆன வன்னியர் முன்னாளிலே கலவரத்தில் ஈடுபட்ட போது உலகுடையப் பெருமாள் என்பவர் பிராமணர் நிலங்களை விலைக்கு வாங்கியாதாக பொய் ஆவணம் எழுதி அவற்றை அனுபவித்தார் என்கின்றது இக்கலவெட்டு.

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக். 294-295, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர் செல்வம் 098867 69865 / 09632967153.      ARIEp 1947, B. No: 98

    திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோயில் அந்தராள வடக்கு வாயில் மேல். கொங்கு சோழன் வீரராசேந்திரன் 3 ஆம் ஆட்சி ஆண்டு (பொ.யு.1211 நாள் 301) 29 வரிக் கல்வெட்டு.  இடங்கருதி எண்ணிற்கு பகரமாக சாய் கோடு இடப்பட்டுள்ளது.

    ஸ்வஸ்தி ஸ்ரீ திருபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரிமேல் / கொண்டான் வடபரிசார நாட்டில் ஆளுடையார் திருமுருக / ன் பூண்டி ஆளுடையார் கோயில் சிவபிராமணரில் காசியபன் பிள் / ளை நாயனான பொன்னம்பல நம்பிக்கும் பொன்ன புகழ் வேந்த /  நுக்கு நம்மோலை குடுத்தபடியாவது இந்நாயனார் கோயில் / சிவபிராமணக் காணி தங்களது மாதவகள் பேசிக் குலவ / ட்டு முண்டாயிருக்க தம்பியான நாலேமுருகாண்டான் / அஞ்சவைத்து தங்காணியை அழிவு செய்கையாலே / தா நமக்கு மூன்றாவது நாளிலே நம்பக்கலே _ _ _ _ எங்கள் / காணி எங்களுக்கு ஆக வேணுமென்று நமக்கு தரும் அச்சு பத் / தும் தொண்டைமானார் பெறுவமுண்மைக்கு அச்சு மஞ்சும் / அச்சு பதினைஞ்சும் தாங்கள் வைக்கையில் இக்கோயில் / ரையநித _ _ _ _ த்தியங்களும் சைவாசாரி / யங்களும் மு_ _ _ _ல கல _ _ _ _ / விக்கவும்_ _ _ _ கோயில் பரிகலக்கடு பண்ணி /  சு நாழியும்_ _ _ _ ந படியில் அட்டிது செம்பாதி / யும் அட்டிது _ _ _ _ அச்சந போகமும் பிடி பி / டியிலும் _ _ _ _ இந்நான்கு எல்லைக்கு உட்பட்ட /  தேவதாநமும் எழுத்து _ _ _ _ பட்டன் மற்றும் எற்பட்டனவும் தன் மகன் மக்களுக்கு விலை ஒன்றி தன்ம / தானம் சீதனத்துக்கு உரித்தாகவும் இப்படிக்குச் / செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்ளப் / பெறுவானாகவும் இப்படிச் சந்திராதித்தவரை /  செல்வதாக நம் / ஓலை குடுத்தோ / ம் 3 ஆவது நாள் /. 301 இவை நந் / தியம்மந் எழுத்து. / _ _ _ _ . 

    மாதவகள் – தலைமை கணக்கர் அல்லது கோயில் கணக்கர்; குலவட்டு – உபாயம், வழிமுறை; நம்பக்கல் – என்னிடம் வந்து; அச்சு – பொற்காசு

    கோனேரின்மை கொண்டான் கொங்கு சோழன் வீரராசேந்திரனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் 1211 பொ.யு. வடபரிசார நாட்டில் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில் சிவபிராமணர் பொன்னம்பல நம்பிக்கும், (அரையன்) பொன்ன புகழ் வேந்தனுக்கும் கொங்கு வேந்தன் வீரராசேந்திரன் நேரடியாக ஓலை ஒன்றை அனுப்புகிறார். அதில் “சிவபிராமணன் காணி குறித்து தங்களது தலைமை கணக்கர் பேசித்தீர்த்து வழிமுறை தந்துள்ளார். அந்த வழிமுறை செயலாகும் முன்னமே உமது தம்பியான நாலே முருகாண்டான் சிவபிராமணரை அஞ்சுறுத்தி அவரது காணியை அழித்ததாக சிவபிராமணன் மூன்றாம் நாள் என்னிடம் வந்து என் காணி எனக்கு வேண்டும், மீட்டுத் தருக என்று முறைப்பாடு செய்துள்ளான்.  இந்த சிவபிராமணன் 10 பொற்காசைத் நமக்கு தருகிறான், அதோடு தொண்டைமானும் 5 பொற்காசைத் தருகின்றார். ஆக இந்த 15 பொற்காசையும் நீங்கள் பெற்றுக் கொண்டு” என்பதோடு கல்வெட்டு தெளிவுபட பொருள் அறியமுடியா வண்ணம் ஆங்காங்கே சிதைந்துள்ளது. அதன் பின் இந்நான்கு எல்லை என்பதில் இருந்து கல்வெட்டு தெளிவாகத் தெரிவதில் இருந்து வேந்தன் தேவதானமும் சிவபிராமணனுக்கு நிலமும் கொடுத்து அதற்கு வரிகள் தவிர்த்து இறையிலியாகத் தருகிறான்.  இந்நிலத்தை சிவபிராமணன் தனக்குப் பின் தனது மகன் அதன் பின் அவனது மக்கள் அனுபவிக்க, விலைக்கு விற்க, தானதருமமாக வழங்க, சீதனமாக வழங்க உரிமையும் தருகின்றான் வேந்தன். இதைக் கல்லிலும் செப்பிலும் வடித்துக் கொள்ள வேணுமாயும் இது நிலவும் ஞாயிறும் நின்று நிலவும் வரை நடக்கக் கடவதாக சொல்கிறான். இந்த ஓலையை வேந்தனின் அணுக்கன் நந்தியம்மன் வேந்தன் சொல்லக் கேட்டு எழுதிக் கையொப்பம் இடுகின்றான்.

    இதில் புழங்கும் குலவட்டு என்பதை கொலை வெட்டு என்று புரிந்துகொண்டு இது ஏதோ கலகம் பற்றி சொல்கின்றது என்று தவறாகக் கொண்டு விட்டேன். ஆழ்ந்து படித்தபோது தான் அது வழிமுறை என்று பொருள் உணர்ந்தேன். என்றாலும் தட்டச்சி முடித்ததால் இதனுடன் சேர்க்கின்றேன்.

    இக்கோயில் சிவபிராமணர் முன்னம் ஏதோ வட்டிக்கு கடன் பெற்று விட்டு அதைத் திருப்பி வட்டியுடன் கட்டமுடியாமல் போகவே தலைமை கணக்கர் அது பற்றி எச்சரித்து அதற்கு வழிமுறை சொல்லிச் செல்கின்றார் என்று ஊகிக்க முடிகின்றது. அதன் பின் அரையனின் தம்பி வட்டிக்கு அடமானம் வைத்த நிலத்தைப் பாழ்படுத்தி பறிமுதல் செய்கின்றார். சிவபிராமணன் இதை உடனே வேந்தனிடம் முறைப்பாடு செய்கின்றார்.

    கல்வெட்டால் தெரியவரும் ஒரு உண்மை என்னவென்றால் வேந்தனுக்கு கீழ் மன்னன் அவனுக்கு கீழ் அரையன் அவனுக்குக் கீழ் கிழான் என்று நான்கு அதிகார அடுக்கு நிலவிவந்ததை காட்டும் கல்வெட்டுகள், இது போக இந்த நான்கு அதிகார அடுக்கினரின் குடும்பத்தவரும் நிர்வாகத்தில் தலையிட்டு அதிகாரம் செலுத்தி வந்தது இக்கல்வெட்டு குறிக்கும் தம்பி நாலே முருகாண்டான் மூலம் தெரிகின்றது. இப்படி இருக்கும் போது தமிழர் அல்லது தமிழராக நடிக்கும் சிலர் முட்டாள்தனமாக ஆட்சியாளரை அந்தப்புரத்திலும் போர்க்களத்திலும் அனுப்பிவிட்டு பிராமணர் ஆட்சி அதிகாரம் செலுத்தினர் என்று கூசாமல் பொய் உரைக்கின்றனரே! அதையும் இந்த சிந்தனை சுருங்கிய தமிழர் நம்புகின்றனரே!! இவர்களை எல்லாம் மீறி ஒரு பிராமணனால் ஆட்சி அதிகாரம் செலுத்த இயலுமா? என்ற கேள்வி அல்லவா எழவேண்டும்!!

    பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக் 70 & 71. ஆசிரியர் மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

    https://tamilnadu-favtourism.blogspot.com/2017/07/piravi-maruntheeswarar-temple-thiruthuraipoondi.html

    Share
  • இந்தியா 2019 ஜூலை சந்திரயான் -2 இரண்டாம் நிலவுப் பயணத்தில் விண்சுற்றி, தளவுளவி, தளவூர்தி மூன்றையும் ஏவப் போகிறது.

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
    சந்திரயான் -2  விண்சிமிழ்
    ++++++++++++++++++++

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

    சந்திரயான் -2  தளவுளவி,  தளவூர்தி

    ++++++++++++++++++++++++

    1. https://youtu.be/eRIOHJ9gJS0
    2. https://youtu.be/NJOWi4tEVy8
    3. https://youtu.be/kFVjb1RpPK0
    4. https://www.britannica.com/science/Apollo-space-program
    5. https://www.news18.com/news/tech/gearing-for-july-launch-chandrayaan-2-will-carry-nasa-payload-too-says-isro-2142881.html
    6. https://youtu.be/xMDdaNLc8DU
    7. https://youtu.be/xTki6w1Ohnw

    +++++++++++++++

    நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்
    உளவிச் சென்று நாசா
    துணைக்கோளுடன் வடதுருவத்தில்
    ஒளிமறைவுக் குழியில்
    பனிப் படிவைக் கண்டது !
    நீரா அல்லது வாயுவா என்று
    பாரதமும் நாசாவும் ஆராயும் ஒன்றாக !
    சந்திரனில் சின்னத்தை வைத்தது
    இந்திய மூவர்ணக் கொடி !
    யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்
    பந்தய மில்லை !
    விந்தை புரிந்தது இந்தியா !
    இரண்டாம் சந்திராயன்
    2019  ஜூலையில் சென்று இறக்கும்
    விண்ணுளவி , தளவுளவி ! தளவூர்தி
    பாரத விண்வெளித் தீரர் இயக்கும்
    சீரான விண்கப்பல் ஓர்நாள்
    தாரணி சுற்றி வரும் !
    செவ்வாய்க் கோள் செல்ல
    சந்திரனில் சாவடி அமைக்கும்
    திட்ட முள்ளது !
    அடுத்து இரண்டாம் சந்தரயான்
    நிலவைச் சுற்றி வந்து
    தளவுளவி நிலவில் அமர
    தளவூர்தி
    தவழ்ந்து சென்று தளம் ஆயும்
    திட்டமும் உள்ளது.

    +++++++++++

    இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகத்தின் பேரார்வத் திட்டம் : சந்திரயான் -2 நிலவுப் பயணம்.

    இஸ்ரோவின் [(ISRO)  INDIAN SPACE RESEARCH ORGANISATION] சிக்கனச் செலவு பேரார்வ நிலவுத் திட்டம் “சந்திரயான் -2”  வருகிற  ஜூலை மாதம்  9 – 16 தேதிகளுக்கு இடையே, 2019 ஆண்டில் விண்சிமிழ் ஏவப் போகிறது என்றும், செப்டம்பர் 6 இல் தளவுளவி நிலவில் இறங்கப் போகிறது என்றும் இஸ்ரோவின் தலைமை ஆளுநர் டாக்டர் கே. சிவன் மே மாதம் 20 ஆம் தேதியன்று அறிவித்தார்.  சிக்கலான சந்திரயான் -2  திட்ட நிகழ்வு பன்முறை தள்ளி வைக்கப் பட்டு தாமதமானது.  சந்திரயான் -1 நிலவுப் பயணத் திட்டம் 2009 இல் வெற்றிகரமாய் முடிந்து, விண்சிமிழ் பாரத தேசச் சின்னமோடு நிலவில் விழும்படிச் செய்யப்பட்டது.  அந்தப் பயணத்தில் சந்திராயன் -1 நிலவில் நீர் இருப்பதைக் கண்டு பிடித்தது.  இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சைனா ஆகிய மூன்று நாடுகள்தான் 239,000 மைல் [384,000 கி.மீ] தூர நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து,  தமது தளவுளவியை இறக்கி,  அதன் மூலம் தளவூர்தியைச் சுமந்து நகர்த்தி,  இயக்கி வந்துள்ளன.  சந்திரயான் -2  இல் விண்சுற்றி, தளவுளவி, தளவூர்தி [Orbiter, Lander & Rover] ஆகிய மூன்று விண்வெளிச் சாதனங்களைத் [Modules]  தூக்கிச் செல்லும்.  தளவுளவியும், தளவூர்தியும் ஒன்றாய்ச் சேர்க்கப் பட்டு, விண்சுற்றியுடன் விண்சிமிழைப் பூத ராக்கெட் GSLV MK III சுமந்து செல்லும்.

    இந்திய நிபுணரின் சிக்கலான, சவாலான இரண்டாம் நிலவுப் பயணம்

    1. இதுவரை நிலவில் எந்த உலக நாட்டுத் தளவுளவியும் இறங்காத தென் துருவப்  பகுதியில் சந்திரான் -2 தளவுளவி முதன்முதல் இறங்கப் போகிறது.
    2. விண்சுற்றி  நிலவைச் சுற்றத் துவங்கி,  60 மைல் [100 கி.மீ] உயரத்தை அடையும் போது, தளவுளவி நிலவில் மெதுவாய் இறங்கி, அதிலிருந்து நகரும் தளவூர்தி,  விண்சுற்றி நிலவைச் சுற்றி வருவது நீடிக்கும்.   தளவூர்தி பயணம் செய்து, மண் மாதிரிகளைச் சேர்க்கும்.   வாகனம் அவற்றை ஆய்வு செய்ய தளவுளவிக்குத்  தூக்கிச் செல்லும்.  மூன்றின் பளுவைச் சுமக்கும் விண்சிமிழின் நிறை 3 டன்.
    3. சந்திராயன் -2 நிலவுத் திட்டத்தின் விண்சிமிழ் சுமக்கும் விண்சுற்றி, தளவுளவி, தளவூர்தி ஆகிய மூன்றும் இஸ்ரோ தயாரித்தவை.  தளவூர்தி நிலவுத் தளத்தில் 14 நாட்கள் இயங்கி வரும்.

    Image result for Chandrayaan 2 Rover

    சிக்கனச் செலவில் இந்தியா செய்யும் இரண்டு சந்திரயான் & மங்கல்யான் திட்டங்கள்

    1.  செவ்வாய்க் கோளுக்கு  2013 இல் அனுப்பிய மங்கல்யான்  திட்டத்துக்கு 470 கோடி ரூபாய் செலவானது.  ஒப்பு நோக்க அமெரிக்கா ஹாலிவுட் தயாரித்த  ” கிராவிட்டி ” [Gravity]  திரைப் படத்துக்குச் செலவு : 644 கோடி ரூபாய். [100 மில்லியன் டாலர்]

    2.  சந்திரயான் -2 நிலவுப் பயண நிதி ஒதுக்கு : 800 கோடி ரூபாய்.  ஒப்பு நோக்க 2014 இல் ஹாலிவுட் தயாரித்த “இண்டர்ஸ்டெல்லர்”  [Intersteller]  திரைப்படம் தயாரிக்கச் செலவு 1062 கோடி ரூபாய் [165 மில்லியன் டாலர்]

    Image result for Chandrayaan 2 Rover

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

    Image result for Chandrayaan 2 Rover

    இரண்டாம் நிலவுப் பயணத்துக்கு சந்திரயான் -2 விண்ணூர்தி தயாரிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  அப்பயணம்  2018 முதல் காலாண்த் திட்டமிடப் பட்டுள்ளது.  சந்திரனை நோக்கிப் போகும் சந்தரயான் -2 விண்ணூர்தி, [Mother Ship] கட்டுப்பாடுடன் மெதுவாய் நிலவில் தளவுளவியை இறக்க ஓர் எஞ்சின் இப்போது விருத்தியாகி வருகிறது. அதற்காகச் செயற்கை முறையில் நிலவுக்குழிகள் [Moon Craters] உள்ள சந்திரச் சூழ்வெளிப் போலி அமைப்பை விஞ்ஞானிகள்  ஏற்படுத்தி, அந்த அரங்கில் தளவுளவி இறக்கம், மீள் ஏற்றம் [Lander Descent & Ascent ] சோதிக்கப்படும். மேலும் தளவூர்தி [Rover] பிரிந்து நிலவில் இயங்குவதும் சோதிக்கப்படும்.

    கிரண் குமார் [இந்திய விண்வெளி ஆய்வு ஆணையக அதிபர்]

    Image result for Chandrayaan 2 Rover

    ரஷ்யாவின் கதிரியக்க ஏகமூலம் தயாரிக்கும் அணுவியல் கூடம் [JSC Isotope Sources] சந்திரயான் -2 விண்ணூர்தியில் இயங்கப் போகும், முக்கிய கியூரியம் -244 [Curium -244 (Cm-244)]  கதிர்வீச்சு உலோகத்தை அனுப்பியுள்ளது.  அது தளவூர்தி நிலவின் மண், பாறை ஆகியவற்றின் இரசாயனக் கலவைகளை அறிவிக்க உதவும் கருவிக்கு [Alpha Proton X-Ray Spectrometer] உடனிருக்கும்.

    ரோஸாட்டம் [ Rosatom State Atomic Energy Corporation]

    தளவுளவியில் உள்ள புதிய அமைப்புச் சோதிப்புகள் திட்டமிடப் பட்டன. தளவுளவி உணர்வுக் கருவிகள் இயக்கச் சோதனைகள் முடிந்தன. நிலவுத் தளப் போலிக்குழிகள் [Lunar Artificial Craters] கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் தயாரிக்கப் பட்டுப் பயிற்சிகள் முடிந்தன.

    Image result for Chandrayaan 2 Rover

    [Click to Enlarge]

    தளவுளவியை மெதுவாய் இறக்கப் பயிலும் நிலவுத் தளப்பரப்புச் சோதனைச் சாதனம் [Lunar Terrain Test Facility for Lander Drop] தயாராக உள்ளது. மற்றும் தளவூர்தி நகர்ச்சிச் சோதிப்புகளும் [Rover Mobility Tests] தயாராக உள்ளன.

    ஜித்தேந்திர சிங், விண்வெளி ஆய்வு உதவி மந்திரி

    சிக்கலான GSLV  இந்திய ராக்கெட் ஏவல்களில் வெற்றி எதிர்பார்ப்பு 50% மட்டுமே.   இந்தியா இந்த முற்போக்கு தொழில் நுணுக்கத்தை அறிந்து பளுவான விண்வெளிச் சாதனங்களைச் சுய முயற்சியில் சுமந்து செல்ல விரும்பியது.  அந்த முயற்சியில் தற்போதுதான் வெற்றி ஏற்பட்டுள்ளது.

    அஜய் லேலி (Space Expert, Institute of  Defense & Security Analysis, New Delhi)

    Image result for Chandrayaan 2 Rover

    [Click to Enlarge]

    2019 ஆண்டில் மீண்டும் நிலவை நோக்கிப் போகும் சந்திரயான் -2 விண்ணூர்தி

    2008 ஆம் ஆண்டு நவம்பர் 12 இல் சந்திரான் -1 விண்ணூர்தி நிலவை நெருங்கி வெற்றிகரமாகச் சுற்றி முதன்முதல் பனித்தள வடிவில் நீர் இருப்பதை எடுத்துக் காட்டியது.  அது செய்ய முடியாத பணிகளைச் செய்து முடிக்க இப்போது சந்திரயான் -2 தயாராகி வருகிறது.  சந்திரயான் -2 நிலவுத் தேடல் பயிற்சிகளில் தன்னுடன் நிலவில் மெதுவாய் இறங்கும் ஓர் தளவுளவியும் [Lunar Lander], அதிலிருந்து நிலவுத் தளப்பரப்பில் தவழ்ந்து சோதிக்கச் செல்லும் ஒரு தளவூர்தியும் [Lunar Rover] இணைக்கப் படும்.   ஆகவே சந்திரயான் -2 முதல் சந்திரயான் -1 விடப் பெரும் பளுவைத் தூக்கிச் செல்லும், பூத ராக்கெட் தயாரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் முதன்முதல் இந்திய விண்வெளி ஆய்வகம் நிலவில் மெதுவாய் இறங்கும் தளவுளவிப் பொறிநுணுக்கப் பயிற்சியில் வெற்றி பெற வேண்டும்.

    மேலும் இறங்கிய தளவூர்தியிலிருந்து, நகர்ந்து செல்லும் தளவுளவி சோதிக்கப்பட வேண்டும்.  மேலும் சிறப்பாக, தளவுளவி நிலவின் தளத்தை ஆழ்ந்து சோதிக்க மண் மாதிரிகள் அனுப்புவதை, சந்திரயான் -2 மீளூர்தி [Return Trip]  எடுத்துக் கொண்டு மீளவேண்டும். சவாலான இப்பணிகள் வெற்றி பெறப் பல்வேறு பயிற்சிகள் செய்து துணிவும், மன அழுத்தமும் வேண்டும்.  2013 ஆம் ஆண்டில் ஏவப்பட வேண்டிய சந்திரயான் -2, ஐந்து வருடங்கள் தாமதமாகி 2018 ஆண்டு துவக்க மாதங்களில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வகம் அறிவித்துள்ளது. சந்திரயான் -2 திட்டத்துக்குத் தேவைப்படும் கனப்பளு தூக்கும் ஏவுகணை தயாரிப்பில் தாமதமானது முதல் காரணம்.  அடுத்துச் செவ்வாய்க்கோள் சுற்றும் மங்கல்யான் திட்டம் முதன்மை இடம் பெற்றது இரண்டாம் காரணம்.

    Image result for Chandrayaan 2 Rover

    Image result for Chandrayaan 2 Rover

    2017 பிப்ரவரி 15 இல் கனப்பளு தூக்கும் ஒரே ஏவுகணையில் 104 துணைக்கோள்களை வெற்றிகரமாக ஏவி அனுபவம் பெற்றுள்ளது. சந்திரயான் -2 விண்வெளித் திட்டத்தில் நிலவுக்குச் செல்லும் ஒரு சுற்று விண்ணூர்தி, ஒரு தளவுளவி, ஒரு தளவூர்தி [One Orbiter, One Lander, One Rover]  ஆகிய மூன்று விண்வெளிச் சாதனங்கள் கொண்டிருக்கும். சந்திரயான் -2 விண்ணூர்தி நிலவுக்கு 60 மைல் [100 கி.மீ] உயரத்தில் பறக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.  விண்ணூர்தியிலிருந்து பிரித்து தளவுளவி மெதுவாய் இறக்கும் சிறிய எதிர்ப்பு ஏவுகணைகள் [Retro Rockets] நிலவுப் போலிக்குழிகள் [Lunar Craters] அமைக்கப்பட்டுச் சோதிக்கப் படுகின்றன.  தளவூர்தியைச் சுமந்து கொண்டு தளவுளவி மெதுவாய் இறங்கி நிலவின் தளத்தில் நிலையாக அமரும்.  பிறகு தளவூர்தி தானாகப் பிரிந்து தவழ்ந்து சென்று தளப்பரப்பு மண், பாறைகளைச் சோதிக்கும். இந்தியப் பெரும் சாதனையாகக் கருதப்படும் சந்திரயான் -2 நிலவுத் திட்டத்துக்கு ஆகப் போகும் நிதிச் செலவு : சுமார் 91 மில்லியன் அமெரிக்க டாலர் [450 கோடி ரூபாய்] 2017 நாணய மதிப்பு.  2018 இல் சந்திரனில் தவழ்ந்து செல்லும் இந்தியத் தளவுளவி உலக நாடுகளில் பெரும் பரபரப்பூட்டும் என்பதில் ஐயமில்லை..

    “முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லா மல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை !  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங் களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் !  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம் !”

    டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971).

    “நிலவின் களத்தில் விஞ்ஞானச் செல்வக் களஞ்சியம் குவிந்துள்ளது.  மேலும் சில வினாக்களுக்கு இன்னும் விடை தேட வேண்டியுள்ளது. உதாரணமாகப் பூமியிலிருந்து நேராக 41% பகுதி நிலவைக் காண முடியாது.  சந்திரயான்-1 துணைக்கோள் செய்து வரும் சோதனைகள் நிலவின் விஞ்ஞானத் தகவலை மேம்பட உதவும்.”

    எம். வொய். எஸ். பிரஸாத் (துணை ஆளுநர் ஸதிஷ் தவன் விண்வெளி மையம்)

    “சந்திரயான் -1 துணைக்கோளைத் திட்டமிட்ட வட்டவீதியில் வெற்றிகரமாய்ப் புகுத்திச் சந்திரனுக்குச் செல்லும் பயணம் இப்போது முடிந்தது.  அடுத்துத் தொடங்கப் போகும் ஆய்வுச் சோதனைகளை ஆரம்பிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

    மயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் திட்ட இயக்குநர் (Chandrayaan Project Director) [நவம்பர் 13, 2008]

    Fig 1G Indian Rockets

    “இந்த தனித்துவச் சோதனையை (Unique Bi-Static Experiment) நிலவைச் சுற்றும் இரண்டு விண்ணுளவிகள் (சந்திரயான்-1  & நாசாவின் LRO நிலவு விண்ணுளவுச் சுற்றி) ஒரே சமயத்தில் வட்ட வீதியில் சுற்றி வந்தாலன்றிச் செய்ய இயலாது.  விஞ்ஞானிகள் அந்த சோதனை சீராக இயங்கியதா வென்று இன்னும் சரிபார்த்து வருகிறார்.  இரண்டு விண்ணுளவிகளையும் சரியான தருணத்தில் சரியான இடத்தில் பறக்க வைத்துத் திட்டமிட்டபடிச் சோதனையைச் செய்து முடித்தார்.  இந்த இந்திய அமெரிக்கக் கூட்டு முயற்சி எதிர்காலத்தில் எழும் வாய்ப்பையும் காட்டு கிறது.  அந்தக் கூட்டுழைப்பு விண்வெளித் தேடலில் ஓர் உன்னத முன்னடி வைப்பு.”

    ஜேஸன் குரூஸன் நாசா தலைமைக் கூடம், வாஷிங்டன் D.C.

    “தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது.  நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை.  கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம்.  பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைவுகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”

    ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)

    “சந்திராயன் -1 நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டு சந்திரனைச் சுற்று வீதியில் நிபுணர் புகுத்தியது மகத்தானதோர் நிகழ்ச்சி.  அந்த இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிறு பிழை ஏற்பட்டிருந்தாலும் துணைக் கோள் நிலவை விட்டு வழிதவறி விண்வெளியில் எங்கோ போயிருக்கும்.”

    எஸ், ராமகிருஷ்ணன், திட்ட இயக்குநர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம் [நவம்பர் 9, 2008]

    சந்திரயான் -2  நிலவுத் தளவுளவித் திட்டத்தில் ஏற்பட்ட தாமதம்

    தற்போது ஏற்பட்ட GSLV -III (Geosynchronous Satellite Launching Vehicle III) முக்கட்ட ராக்கெட் சோதனைத் தோல்வியில் இந்தியாவின் சந்திரனில் இறக்கி ஆய்வு செய்யப் போகும் 2014 ஆண்டுச் சந்திரயான் -2 திட்டம் தாமதமாகப் போகிறது.   அந்தப் பெருஞ் செலவுத் திட்டத்தில் சந்திரயான் -2 விண்கப்பல் நிலவில் இறங்கி உருண்டோடி ஆராயும் தளவுளவி யைத் தூக்கிச் செல்ல வேண்டும்.    தளவுளவி தயாரிப்பில் இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்கிறது.   அப்போது அந்த உளவி எடுக்கும் நிலவுத் தள மண்கள் பூமிக்குக் கொண்டு வரப்படும்.    அந்த பேராசைத் திட்டம் 2014 ஆண்டில் இப்போது நிறைவேறாது என்பதே வருந்தத் தக்க செய்தி யாகும்.   பிரச்சனை எது வென்றால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய  அசுர சக்தி ஏவுகணைகள் சோதனை களில் பழுது /தவறு நேர்ந்து தோல்வி அடைந்து வருவதே !    2010 ஆண்டு நாணய மதிப்பில் அண்டவெளித் திட்டங்களுக்கு அரசாங்க நிதி  ஒதுக்கு 1.1 மில்லியன் டாலர் (58 பில்லியன் ரூபாய்).    அதில் GSLV -III முக்கட்ட ராக்கெட்விருத்திக்கு மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர்  நிதி ஒதுக்கு !   அந்த ராக்கெட் இணைப்பில் ரஷ்யாவின்  “பூஜிய பூரண உஷ்ண எஞ்சின்”  (Russian Cryogenic Engine)  சேர்க்கப் பட்டிருந்தது.     பின்னால் இந்தியா தயாரிக்கப் போகும் பூஜிய பூரண எஞ்சின் ராக்கெட் மூன்றாவது கட்டப் பகுதியோடு இணைக்கப் படும்.

    Image result for Chandrayaan 2 Rover

    Image result for Chandrayaan 2 Rover

    சந்திரயான் -1 விண்ணுளவியை வெற்றிகரமாய் நிலவைச் சுற்ற அனுப்பிய இந்தியா, கடந்த பல ஆண்டுகளாய் ராக்கெட் ஏவு முயற்சிகளில் வெற்றியும் தோல்வியும் அடைந்துள்ளது.    சந்திரயான் -1 தூக்கிச் செல்ல நடுத்தரம் உடைய  PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட் பயன் பட்டது.    இந்தியா PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட்களைப் பன்முறை இயக்கி வெற்றி அடைந்துள்ளது.   புதியதாய்த் தயாராகும் சந்திரயான் -2  மிகக் கனமானது.  தாய்க்கப்பல் ஆணைச்சிமிழ்  தளவுளவி இறக்கியையும், தளவூர்தி வாகனத்தையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  இந்தியாவுக்கு கிரியோஜெனிக் எஞ்சின் (Cryogenic Engine) இயக்க முறைகளைக் கற்றுக் கொள்ளும் தகுதி அனுபவம் இப்போது முழுமையாய்க் கிடைத்துள்ளது.  அமெரிக்கா, ரஷ்யா போல் அதிகப் பளுதூக்கும் ராக்கெட் ஏவும் அனுபவமின்றி நிலவுத் தேடல் முயற்சிகளில் இந்தியாவுக்கு வெற்றிகள் கிடைக்க மாட்டா.

    Image result for Chandrayaan 2 Rover

    பழுதடைந்த கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் சாதன விபரங்கள்

    GSLV -III ராக்கெட் நிலவுக்கு 4 டன் பளுவைத் தூக்கிச் செல்லும் தகுதி உடையது.   புவிச் சுற்றிணைப்பில் நிலைமாறும் வீதியில்  (Geosynchronous Transfer Orbit)   10 டன் பளுவைச் சுமக்க வல்லது.   ராக்கெட் எடை : 629 டன்,  உயரம் :  51 மீடர் (167 அடி), நிலைமாறும் சுழல்வீதியில் எடை : 10 டன், புவிச் சுற்றிணைப்புச் சுழல்வீதியில் எடை 5 டன்.    அதாவது அந்த ராக்கெட் புவிச் சுற்றிணைப்பு வீதியில் 10 டன் பளுவுள்ள துணைக் கோளை தூக்கி விட முடியும்.   இந்த கிரையோஜெனிக் எஞ்சின் விருத்தி செய்ய 500 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கில் சோதனை நடந்து வருகிறது.    எதிர்கால நிலவுப் பயணத்துக்குச் செல்லும் மூவர் விண்கப்பலை இந்த  GSLV -III ராக்கெட்  மூன்றாவது கட்ட எஞ்சின் இழுத்துச் சென்று பூமிக்கு மீளும்.    2010 ஏப்ரல் 15 ஆம் தேதி இந்தியா தயாரித்த கிரையோஜெனிக் எஞ்சின் முதலில் சோ திப்பாகி பழுதடைந்து சரிவர இயங்கவில்லை.

    Image result for Chandrayaan 2 Rover

    Image result for Chandrayaan 2 Rover

    2010 டிசம்பரில்  ஆந்திராவில் உள்ள சத்தீஸ் ஸாவன் விண்வெளி மையத்தில் இந்த GSLV -III ராக்கெட் எஞ்சின் சோதிக்கப் பட்டது.    எஞ்சின் சுடப்பட்டு 47 வினாடியில், ராக்கெட் வாகனக் கட்டுப்பாடை பொறித்துறை ஆணை நிபுணர் இழந்தனர்.   அடுத்த 16 வினாடியில் ராக்கெட் வெடித்து விட்டு நிபுணருக்கும், பார்வையாளருக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.  தூக்கிச் சென்ற துணைக்கோள் வங்காள விரிகுடாவில் வீசி எறியப்பட்டது.  ராக்கெட், துணைக்கோள் ஆகிய வற்றின் விலை மதிப்பான 39 மில்லியன் டாலர் (1.75 பில்லியன் ரூபாய்) ஒருசில நிமிடங்களில் கரும்புகையாய் எரிந்து மறைந்தது.   கடந்த 10 வருடங்களில் (2010 வரை) GSLV -III ராக்கெட் எஞ்சின் பூஸ்டர்கள் (Boosters : விரைவூக்கிகள்) ஏழில் நான்கு இதுபோல் பழுதாகிச் சிதைந்தன.   அதே சமயத்தில் தொடர்ந்து 16 முறை வெற்றிகரமாக GSLV ராக்கெட் எஞ்சின்கள் எழும்பி விண்வெளியில் ஏறிச் சென்றுள்ளன என்பதும்    குறிப்பிடத் தக்கதாகும்.   இந்திய ராக்கெட்கள் குறைந்த செலவில் பல வெளிநாட்டுத் துணைக்கோள்களைத் தூக்கி பூமிச் சுழல்வீதில் பன்முறை ஏற்றி விட்டுள்ளன.   இப்போது அந்த வெளிநாட்டு வணிக வரவுகளை இந்தியா இழக்க நேரும்.  முக்கியமாக 2014 ஆண்டில் சந்திரயான் -2 தளவுளவி நிலவில் தடம் வைக்கும் பேராசைத் திட்டம் தள்ளிப் போடப்படும்.  தாமதமாகும்.

    சந்திரனைச் சுற்றிவந்த முதல் இந்திய துணைக்கோள் 

    2008 நவம்பர் 12 ஆம் தேதி சந்தரயான் -1 துணைக்கோள் திட்டமிட்ட 100 கி.மீடர் (60 மைல் உயரம்) துருவ வட்டவீதியில் (Polar Orbit) நிலவைச் சுற்றிவரத் துவங்கியது.  பூமியைக் கடப்புச் சுற்றுவீதியில் சுற்றிவந்த சந்திரயான் நவம்பர் 8 ஆம் தேதியன்று, நிலவை நெருங்கும் போது 440 நியூட்டன் திரவ எஞ்சின் இயங்கி வேகம் குறைக்கப்பட்டு (367 metre/Sec) நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் கவரப்பட்டு முதன்முதல் நிலவைச் சுற்ற ஆரம்பித்தது.  சந்திர விண்வெளி யாத்திரையில் பூமியிலிருந்து மனிதர் மின் சமிக்கைகள் அனுப்பி விண்சிமிழைத் திசை திருப்பி வேகத்தைக் குறைத்து நிலவைச் சுற்ற வைப்பது மிகச் சிரமமான பொறியியல் நுணுக்க முயற்சி.  முதன்முதலில் அவ்விதம் செய்ய முயன்ற ரஷ்யா அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் துணைக்கோள்கள் சந்திரனைச் சுற்றாது சூரியநைச் சுற்றி வர நழுவிச் சென்றன.  இந்தியா முதல் முயற்சியிலேயே நிலவைச் சுற்ற வைத்தது பாராட்டத் தக்க ஒரு நிபுணத்துவம்.  இதற்கு முன்பு பன்முறைத் துணைக்கோள்களைப் “புவியிணைப்புச் சுற்று வீதியில்” (Geosynchronous Orbit) இறக்கிப் பூமியைச் சுற்ற வைத்த கைப்பயிற்சியே அதற்கு உதவி செய்திருக்கிறது !  இந்த மகத்தான சிக்கலான விண்வெளி இயக்க நுணுக்கத்தைச் செய்து காட்டி இந்தியா தன்னை ஐந்தாவது சாதனை நாடாக உயர்த்தி இருக்கிறது.  ஏற்கனவே இவ்விதம் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சைனா தேசங்கள் செய்து காட்டியுள்ளன.  ஈசா எனப்படும் ஐரோப்பாவின் பதினேழு கூட்டு நாடுகளின் விண்வெளி ஆய்வகமும் [European Space Agency (ESA)]) இந்த விந்தையைப் புரிந்துள்ளது.

    இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும், அமெரிக்க நாசாவும் இணைந்து செய்த சோதனை

    2009 ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும் நாசாவின் விண்ணுளவுக் குழுவும் ஒன்று சேர்ந்து ஒரு நூதனச் சோதனையை சந்திரனின் வடதுருவப் பகுதியில் புரிந்தன.  அந்த அரிய சோதனைக்கு இந்தியத் துணைக்கோள் சந்திராயன் -1, நாசாவின் நிலவு விண்ணுளவி (Lunar Reconnaissance Orbiter -LRO) ஆகிய இரண்டும் இணையாகத் துருவப் பகுதிகளைத் துருவி நோக்கிப் பனிப்படிவைக் கண்டுபிடித்து நிலவுத் தள ஆய்வில் ஒரு புது மைல் கல்லை நாட்டின !  முதன் முதலாகக் காணப்பட்ட அந்த பனிப்படிவு நிலவின் வடதுருவப் பகுதியில் பரிதி ஒளிக்கு மறைவான “எர்லாஞ்சர்” என்னும் ஓர் படுகுழியில் (Lunar Crater Erlanger in the Polar Region) கிடந்தது !   அதன் சமிக்கையை ஒரே சமயத்தில் இந்தியாவின் சந்திரயான் கருவியும், நாசாவின் நிலாச் சுற்றியும் உறிஞ்சி எடுத்துள்ளன என்பது வியக்கத் தக்க நிகழ்ச்சி.

    Image result for Chandrayaan 2 Rover

    அந்த ஆய்வுச் சோதனைக்குப் பெயர் ‘இரட்டை நிலைநோக்குச் சோதனை’ (Bi-Static Experiment).  நிலவைச் சுற்றி வரும் இரண்டு விண்ணுளவிகளில் உள்ள “நுண்ணலை ரேடியோ அதிர்வுக் கருவிகள்” (Miniature Radio Frequency Instrument: Mini-RF) பனிப்படிவுச் சமிக்கையை உறிஞ்சி தள ஆய்வு அரங்குகளுக்கு அனுப்பி யுள்ளன.  இன்னும் சில நாட்களில் அந்தப் பனிப்படிவில் உள்ளது நீரா அல்லது வேறு வாயுவா என்று ஆராய்ந்து உறுதி யாக உலகுக்கு அறிவிக்கப்படும் !  மேலும் ஆராய்ந்து சேமிக்கப்படும் தகவலில் மறைந்த குழிப் பகுதிகளில் ‘புதைபட்ட பனிப்படிவுகள்’ இருக்கலா மென்று தெரியவரும்.  இந்தப் பனிப்படிவு சமிக்கை நீர் என்று நிரூபிக்கப்பட்டால் நிலவில் நிரந்தர ஓய்வுக்கூடம் அமைக்கப் போகும் நாசாவுக்கு மாபெரும் வெற்றியாகும்.  இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பகமும் நாசாவைப் போல் பின்னால் சந்திரனில் ஓய்வகம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது !


    ஒன்பது மாதங்களாய்ச் சந்திரயான்-1 நிறைவேற்றிய சாதனைகள்

    அக்டோபர் 28 2008 முதல் ஆகஸ்டு 2009 வரைச் சந்தரயான்-1 நிலவை 3000 மேற்பட்ட சுற்றுக்கள் சுற்றி விட்டது.  மேலும் சந்திரனுக்கு அருகே தணிவாக 60 மைல் (100 கி.மீ.) வட்ட வீதி உயரத்தில் பறந்து நிலவில் 70,000 படங்களை எடுத்து அனுப்பி யதுடன் நிலவின் குழிகளையும் மலைகளை யும் வியப்புறும் வண்ணம் படமெடுத்து விபரங்களைக் காட்டி யுள்ளது.  நிலவின் துருவப் பகுதிகளில் நிரந்தரமாய் மறைந்துள்ள குழிகளின் படங்களை எடுத்துள்ளது. அத்துடன் தளப் பரப்புகளை உளவி  இரசாயன மற்றும் தாதுக்கள் இருக்கும் தகவலைக் கொடுத்துள்ளது.  மே மாதம் 19, 2009 தேதிதான் சந்திரயான்-1 விண்கப்பலின் உயரம் 60 மைலிலிருந்து 120 மைல் வட்ட வீதிக்குத் (100 கி.மீ –> 200 கி.மீ) தள்ளப் பட்டது.  நாசாவின் நிலவு விண்ணுளவுச் சுற்றி 2009 ஜூன் மாதம் 18 ஆம் தேதி ஏவப் பட்டது. ஏப்ரல் 26, 2009 இல் சந்திரயான்-1 விண்மீனை ஒப்புநோக்கித் தன் இருப்பிடத்தைக் காட்டும் “தாரகை நோக்கிக்” (Star Sensor) கருவிப் பழுதாகி இன்னல் விளைவித்தது.  இந்திய நிபுணர் துணைக் கோள் நேர்மைப்பாடுக் கருவியையும் ஏரியல் கம்பியையும் (Sensors of Gyroscopes & Antenna) பயன்படுத்திச் சந்திரயான் இருப்பிடத்தை அறிந்து கொண்டார்.  அந்த ஒரு பழுதைத் தவிர மற்ற கருவிகள் யாவும் இதுவரைச் செம்மையாக இயங்கி வந்துள்ளன.

    பனிப்படிவு இரட்டை நிலைநோக்குச் சோதனை (Bi-Static Experiment) புரிய இரண்டு விண்ணு ளவிகள் தேவைப்படும்.  இரண்டு விண்ணுளவிகளும் நெருங்கிப் பறந்து வட்ட வீதிகளில் நிலவைச் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்.  ஆகஸ்டு 20, 2009 ஆம் தேதி சந்திரயானும் நாசாவின் நிலவு விண்ணுளவுச் சுற்றியும் (Lunar Reconnaissance Orbiter -LRO) 20 கிலோ மீடர் (12 மைல்) தூரத்தில் பறந்து செல்லக் கட்டுப்பாடு செய்யப்பட்டு நிலவின் துருவப் பகுதியில் எர்லாஞ்சர் குழியின் பனிப் படிவைக் கண்வைத்தன.  அவற்றின் இரு உளவுக் கருவிகளும் (Mini Radio Frequency Instrument -Mini-RF) பனிப்படிவு இருப்பைக் கண்டு தமது ரேடார்க் (Synthetic Aperture Radars -SAR) கதிர்க் கற்றைகளை அனுப்பி அவற்றின் எதிரொலிப்பை உறிஞ்சின.  தெறித்த சமிக்கைகளை உள்வாங்கிப் பூமியில் உள்ள கட்டுப்பாடு அரங்குகளுக்கு ஆராய விண்ணுளவிகள் அனுப்பி வைத்தன.  அந்த பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும் என்று அறியப்படுகின்றது.

    விண்ணுளவியின் முக்கிய குறிப்பணி வெண்ணிலவின் மேற்தளத்தை ஆராய்வது.  நிலவின் துருவப் பரப்பில் அடித்தள நீர்ப்பனி உள்ளதா என்று அறிவது.  பூமியில் அரிதாக இருக்கும் ஹீலியம்-3 ஏகமூல வாயு (Helium-3 -An Isotope of Helium-4 Gas) இருப்பைக் கண்டறிவது.  எதிர்கால அணுப்பிணைவுச் சக்தி உற்பத்திக்கு ஹீலியம்-3 வாயு எரிசக்தியாகப் பயன்படும் என்று நம்பப் படுகிறது.  இந்தப் பேரிச்சை விண்வெளித் திட்டத்துக்கு இந்தியா 78 மில்லியன் டாலர் (3800 மில்லியன் ரூபாய்) (2008 ஆகஸ்டு நாணய மதிப்பு) செலவு செய்கிறது !

    இந்திய விண்வெளித் தேடலின் எதிர்காலத் திட்டங்கள்

    இந்திய விண்வெளி ஆய்வகத்தின் (ISRO) இரண்டாவது சந்திராயன் (Chandrayaan -2) விண்ணுளவி 2011-2012 இல் ஏவிச் செல்ல அடுத்து தயாராகி வருகிறது.  அது சந்திரயான் -1 விட பல முறைகளில் வேறுபட்டது.  முதன்முதல் இந்திய விண்ணுளவி சந்திராயன்-2 அணுக்கரு எரிசக்தியைப் பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  விண்சிமிழ் தன்னுடன் ஒரு தளவுளவியையும், வாகனத்தையும் (A Lander & Rover) சுமந்து சென்று பாதுகாப்பாகச் சந்திர தளத்தில் இறக்கும்.  தளவுளவி நிலவின் தளத்தை ஆராயும் போது வாகனம் நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்று தகவல் தயாரிக்கும்.  தளவுளவி, வாகன (Lunar Lander & Rover) அமைப்புகளுக்கு இந்தியா ரஷ்யாவின் கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.  அதற்காகும் நிதித்தொகை 4.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கூறுகிறார்.  16,000 பேர் பங்கெடுத்து வரும் ISRO வுக்கு 2008 ஆண்டு நாணய மதிப்புப்படி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கம் ஒரு பில்லியன் டாலர் என்று அறியப்படுகிறது !

    2015 ஆண்டுக்குள் இந்திய விண்வெளி ஆய்வுக் குழு இரண்டு அல்லது மூவர் இயக்கும் மனித விண்வெளிக் கப்பலைத் தயார் செய்யத் திட்டமிட்டுள்ளது.  அதற்காகும் நிதி மதிப்பு 242 மில்லியன் டாலர் (1240 கோடி ரூபாய்).  மூவர் இயக்கும் அந்த மனித விண்கப்பல் பூமியை 250 மைல் தணிந்த உயரத்தில் 7 நாட்கள் சுற்றி வரும்.  இந்திய அரசு மனிதப் பயணத் திட்டத் துக்கு 95 கோடி ரூபாய் நிதித் தொகையை அளித்துள்ளது.  விண்வெளிப் பயண மனிதப் பயிற்சிக்கு 1000 கோடி ரூபாய்ச் செலவில் பங்களூரில் பயிற்சிக் கூடம் ஒன்றும் அமைக்கப்படும்.

    அடுத்து இந்தியா செவ்வாய்க் கோள் பயணத்துக்கும், மனிதர் இயக்கும் விண்ணுளவியை நிலவுக்கு ஏவும் யாத்திரைக்கும் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.  “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப் படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது,” என்று ராக்கெட் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம், ஜனவரி 26, 2008 இல் நடந்த அகில நாட்டு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் பொதுக் கருத்தரங்கில் (International Conference on Aerospace Science & Technologies) கூறியிருக்கிறார். “கடந்த 50 ஆண்டுகளாய் விண்வெளி ஆராய்ச்சி, படைப்பல மேன்மை, அணுசக்தி ஆய்வுப் பங்கெடுப்பில் மூழ்கிய இந்தியா முதன்முதல் ஒரு வெற்றி கரமான சந்திரயான் -1 நிலவுப் பயணத்தைச் செய்து காட்டியுள்ளது,” என்று அந்தக் கருத்தரங்கில் டாக்டர் அப்துல் கலாம் பாரத நாட்டைப் பாராட்டினார்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 213-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நித்தி ஆனந்தின் புகைப்படக் கருவி பதிவுசெய்துவந்திருக்கும் படமிது. இதனை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 213க்கு அளித்திருப்பவர் சாந்தி மாரியப்பன். நித்திக்கும் சாந்திக்கும் என் நன்றிகள்!

    சிந்தனையை முகத்தில் தேக்கி வாயிலையே ஆவலோடு நோக்கியிருக்கும் இந்த முதுமகளுக்குத் துணை, சுவரில் இணையாகக் காட்சியளிக்கும் கண்ணேறுபோக்கு விநாயகர்கள் தாமோ?

    இப்படத்துக்கேற்ற கவிதைகள் வரைய ஆவலோடு காத்திருக்கும் கவிஞர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்!

    *****

    காதல் நாயகன் தன்னோடு வாசம் செய்யாது போனாலும் அவன் வரவை எதிர்நோக்கியே காத்திருக்கும் இந்தப் பெண்மணியின் நெஞ்சமெங்கும் அவன் நினைவுகளின் சுவாசம்தான் என்று நெகிழ்கின்றார் திரு. சுந்தர்.

    தன் எழிலை போற்றும்
    மாந்தர்தம் பரவிகிடக்கும்
    இப்பூவுலகில்
    உன் சிந்தையை விட்டு அகலாத
    காதல் நாயகனின்
    வரா வருகையை
    நித்தமும் எதிர்நோக்கி
    வீற்றிருக்கும் அன்னையே
    நீ பூண்ட இக்கோலம் ஊரறியும்
    உன் நினைவுகளின் ஏக்கங்களை
    முதற்கடவுள் அறியாத போதும்
    உன் வழிபாட்டில் சிறிதும்
    குறைவில்லை
    உன் நெற்றி இறக்கிய திலகம்
    பரிகார மோட்சமாக
    அறுகால்படியை அலங்கரிக்கின்றது.
    வறுமையின் வாசம் வீட்டை நிறைத்தாலும்
    அன்பானவனின் நினைவுகளைச் சுவாசித்து
    வாழும் தாயே நீ என்றுமே இல்லறத்தின்
     மகாலெட்சுமியே…….

    *****

    நேற்றைய சொல்வீச்சால் புண்பட்ட இந்த மனத்தின் எஞ்சிய நிம்மதியும் கண்பட்டுக் கழியாதிருக்கக் காவலிருக்கிறார் கண்திருஷ்டி கணபதி என்கிறார் திருமிகு. சக்திப்ரபா.

    நேற்று வீசிய ஏச்சாலே
    சொல்பட்டுச் சிதறிய மனம்
    புண்பட்டு இற்று விடுமென
    நூத்துப் போன சேலையுடன்
    வாசற்படியில் வாசமற்றுக்
    காத்துக் கிடக்கும் கணங்களில்
    எஞ்சிய கணநேர நிம்மதியும்
    கண்பட்டுக் கழியாதிருக்க
    அயராது காவலிருக்கும்
    கண்திருஷ்டி கண்பதி

    *****

    அறிவுக்கண் திறக்கக் கல்விகற்ற பிள்ளைகளால்தாம் இன்று முதியோர் இல்லங்கள் அதிகமாய்த் திறக்கின்றன; இந்நிலை என்று மாறும்? என்று வேதனையோடு  வினவுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    குறையுமா…?

    பருந்தை எதிர்க்கப்
    பறந்து காக்கும் தாய்க்கோழிபோல்
    பிள்ளைகளைப்
    பாதுகாத்து ஆளாக்கிய தாய்,
    வருந்திக் காத்திருக்கிறாள்
    எமனின்
    வரவுக்காக..

    படித்த பிள்ளைகளைப் பெற்ற
    பல தாய்களின்
    நிலை இதுதான்..

    அறிவுக் கண்கள் திறக்க
    அவர்கள் கற்ற கல்வியால்
    இன்று அதிகமாய்த் திறக்கின்றன
    முதியோர் இல்லங்கள்..

    மாறுமா இந்த அவல நிலை,
    ஏங்கிக் காத்திருக்கும்
    இத்தகு அன்னையரின்
    எண்ணிக்கை குறையுமா-
    காத்திருப்போம்…!

    *****

    ”ஏக்கமதைச் சுமந்து ஏழ்மையைப் பூண்டு அமர்ந்திருக்கும் ஏந்திழை நீ!” என்று இந்த அம்மையை  வருத்தத்தோடு அடையாளப்படுத்துகின்றார் திருமிகு. சத்யா இரத்தினசாமி.

    ஏழ்மை

    ஏக்கமதைச் சுமந்த
    விழிகள் மட்டும்
    ஏழைக்கு மாறவில்லை
    இற்றை மட்டும் – என
    எடுத்துக்காட்டாய் வீற்றிருக்கும்
    ஏழ்மை அணி பூண்டமர்ந்த
    ஏந்திழை நீ…!

    *****

    நீண்ட வாழ்க்கையில் பயிற்றுவிக்கப்படும் வறுமையைப் படிமமாய்த் தம்  கவிதையில் வடித்துத் தந்திருக்கின்றார் முனைவர் ம. இராமச்சந்திரன்.

    நிறைவின் அறியாமொழிகள்

    வாழ்தலின் அர்த்தத்தில்
    உழைப்பின் அதிசுகத்தில்
    மனதின் அடியாழ விழைவின்
    இயற்கை நுகர்ந்து கலை தெளிந்து
    நீண்ட வாழ்க்கையில்
    பயிற்றுவிக்கப்படும் வறுமையும்
    வறுமையில் பணமும்!

    *****

    வாயிற்படியில் வீற்றிருக்கும் முதுமகளையும் அவள் முகத்திலே குடிகொண்டிருக்கும் வெறுமையையும் கண்ணுற்ற நம் கவிஞர்கள் உணர்ச்சிப் பிழம்புகளாய் மாறி  நம் உள்ளந்தொடும் கவிதைகளை அள்ளித் தந்திருக்கின்றார்கள்; அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பது…

    சிறகு முளைத்து நகரம் பறந்த செல்லப்பறவைகள்
    இவ்வருடப் பண்டிகைக்கேனும்
    கூடு திரும்புமென்னும் நம்பிக்கையோடு
    குந்திக் கிடக்கிறது தாய்ப்பறவை!

    உள்ளும் புறமும் நடையாய் நடந்து
    நோகும் கால்கள் நீவி,
    வரவெதிர்பார்த்துப் பார்த்துப்
    புரையோடிய கண்கள் பூத்து,
    புன்னகை மறந்த உதட்டில் துடிக்கும்
    சிறுவிம்மல் மறைத்து
    பஞ்சப்பராரியெனக் காத்திருக்கும்
    நெஞ்சத்தின் தவிப்பு யாருக்குத் தெரியும்?
    உடையின் கிழிசல் பார்வைக்குத் தெரியும்
    இந்த உள்ளத்தின் கிழிசல் யாருக்குப் புரியும்?

    துணையிலா முதுமை துயரம்
    உறவிலாத் தனிமை பெருந்துயரம்
    அடக்கிவைக்கும் கேவல் வெடிக்குமுன்னே
    அன்பாயொரு விளிப்பு அம்மாவென வருமோ…?
    முடக்கிவைக்கும் ஆவி விடுபடுமுன்னே
    முன்னால் வந்து முகங்காட்டிப் போகுமோ…?

    ”துணையிலா முதுமை துயரம் நிறைந்தது. அதனினும் பெருந்துயரம் தருவது உறவிலாத் தனிமை. பிள்ளையின் வரவை எதிர்பார்த்து, விழிபூத்துக் காத்துக்கிடக்கும் இந்த முதியோளின் ஆவி விடுபடுமுன் அம்மா எனும் விளிப்பு இவள் காதில் விழுமோ?” என்ற கூரிய சொற்கள்மூலம் நம் விழிகளை ஈரமாக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. கீதமஞ்சரியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(257)

    -செண்பக ஜெகதீசன்

    எண்ணித் துணிக கருமந் துணிந்தபி
    னெண்ணுவ மென்ப திழுக்கு.

    -திருக்குறள் -467(தெரிந்து செயல்வகை)

    புதுக் கவிதையில்…

    செய்யத்தகுந்த செயல்களையும்
    செய்து முடிக்கும் வழிகளை
    ஆராய்ந்து அறிந்தபின்
    துணிந்து தொடங்கவும்..

    தொடங்கியபின்
    எண்ணிப் பார்த்துக்கொள்ளலாம்
    என்பது
    தவறாகிவிடும்…!

    குறும்பாவில்…

    செய்துமுடிக்கும் வழிகளை
    ஆராய்ந்தறிந்தபின் செயல்தொடங்கு,
    தொடங்கியபின் எண்ணுதல் தவறாகும்…!

    மரபுக் கவிதையில்…

    செயலைச் செய்யத் தொடங்குமுன்னே
    செயல்படும் வழிவகை தெரிந்தவைதான்
    பயன்படும் முறைகளை ஆய்ந்தறிந்தே
    புறப்படு செயலினைத் தொடங்கிடவே,
    செயல்படத் தொடங்கி நடக்கையிலே
    செயல்வகை எண்ணலாம் என்பதாலே
    பயனது யேதும் வருவதில்லை
    பழியாய்ச் சேரும் இழுக்கதுவே…!

    லிமரைக்கூ..

    செயல்படுமுன் ஆய்ந்தறிந்திடு வழியை,
    செயலதைத் தொடங்கியபின் எண்ணிக்கொள்ளலாமென்பது
    பயனிலாதுதரும் இழுக்காம் பழியை…!

    கிராமிய பாணியில்…

    எறங்கு எறங்கு செயலுல எறங்கு,
    எல்லாம் நல்லாத் தெரிஞ்சபின்னே
    எறங்கு எறங்கு செயலுல எறங்கு..

    வழிவகயெல்லாந் தெரிஞ்சபின்னே
    துணிச்சலா செயலுல எறங்கு,
    செயலச் செய்யத் தொடங்கிப்புட்டு
    அப்புறம் யோசிக்கலாமுண்ணு இருந்தா
    அதுவே பெரிய தப்பாப்போவும்..

    அதால
    எறங்கு எறங்கு செயலுல எறங்கு,
    எல்லாம் நல்லாத் தெரிஞ்சபின்னே
    எறங்கு எறங்கு செயலுல எறங்கு…!

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-44

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-44

     

    குற்றங்கடிதல்

    குறள் 431:

    செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
    பெருக்கம் பெருமித நீர்த்து

    இறுமாப்பு , கோவம், காமம் இவையெல்லாம் இல்லாதவங்களோட செல்வாக்குதான் ஒசந்தது.

    குறள் 432:

    இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
    உவகையும் ஏதம் இறைக்கு

    தேவப்படுதவங்களுக்கு கொடுக்காம பேராச வைக்கிதது, தான் பெரிய ஆள் னு நெனைப்புல பெரியவங்களுக்கு மரியாத கொடுக்காம இருக்கது, கெட்ட செயல்ல மகிழ்ச்சியடையதது இதெல்லாம் தலைவனா இருக்கவனுக்கு குற்றங்களாவும்.

    குறள் 433:

    தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
    கொள்வர் பழிநாணு வார்

    பழி பாவத்துக்கு பயப்படுத பெரிய மனுசங்க தினையளவு குத்தத்தையும் பனையளவா நெனச்சு அத செய்யாம தங்கள காத்திக்கிடுவாங்க.  .

    குறள் 434:

    குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
    அற்றந் தரூஉம் பகை

    குற்றமே அழிவ உண்டாக்குத பகையாளி. அதனால அக்குற்றத்த செய்யாம இருக்குததயே நோக்கமா வச்சி வாழணும்.

    குறள் 435:

    வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
    வைத்தூறு போலக் கெடும்

    குற்றம் வருததுக்கு முன்னமே காத்துக்கிடாதவனோட வாழ்க்க நெருப்பு முன்ன இருக்க வைக்கப்போர் கணக்கா அழிஞ்சு போயிடும்.

    குறள் 436:

    தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
    என்குற்ற மாகும் இறைக்கு

    மொதல்ல தங்கிட்ட இருக்க கொறைய நீக்கிட்டு பொறவு அடுத்தவங்கொறைய சொல்லுத தலைவனுக்கு என்ன கொற வரப்போவுது?

    குறள் 437:

    செயற்பால செய்யா திவறியான் செல்வம்
    உயற்பால தன்றிக் கெடும்

    செய்ய வேண்டிய நல்ல காரியத்த செய்யாம சேமிச்சு வைக்குத கருமியோட சொத்து வீணா அழிஞ்சு போயிடும்.

    குறள் 438:

    பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்
    எண்ணப் படுவதொன் றன்று

    மத்தவனுக்கு குடுக்காம சேத்து வைக்கித கஞ்சத்தனம் குற்றங்கள் எல்லாத்திலயும் கொடுங்குற்றம்.

    குறள் 439:

    வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
    நன்றி பயவா வினை

    எந்தவொரு காலத்திலயும் தற்பெரும பேசி மார்தட்டிட்டு அலயுதது கூடாது. நல்லது தராத செயல செய்யவும் கூடாது.

    குறள் 440:

    காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
    ஏதில ஏதிலார் நூல்

    பொறத்தியாருக்குத் தெரியாம தன்னோட விருப்பத்த நிறைவேத்தத் தெரிஞ்சவனுக்கு பகையாளி செய்யுத சூழ்ச்சி பலிக்காம போவும்.

    (அடுத்தாப்லையும் வரும்….

    Share
  • நிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++++++
    ++++++++++++++++++++

    மாறிடும் நிலவால் மாறிடும் பூமி.

    ஆறிப்போய்ச்

    சுருங்கிடும் நிலவு

    உட்கரு உஷ்ணம் குளிர்ந்து.

    நொறுங்கிடும் மேல் தளம்.

    குலுங்கிடும்

    நில நடுக்கம் நேர்ந்து.

    சுருங்கும் நிலவை ஈர்ப்பு விசை

    உருட்டி உண்டை யாக்கும்.

    ஒருதட்டு

    குதிரை ஏற மறு தட்டு

    தலை குனியும்

    தளப் பிறழ்ச்சியால் !..

    ஊர்ந்திடும் நிலவு

    பூமியையை விட்டு விலகிச் செல்லும்

    ஆமைபோல் !

    சேய் நிலவு தாய் பூமியை

    தாலாட்டும்

    ஓசை அலைகள்

    மூலமாய் !

    ++++++++++++++++++++

    நிலவின் தளம் நடுங்கும்  சுருங்கி வருகின்ற நிலவால் 

    நிலவின் உட்கரு உஷ்ணம் குளிர்ந்து பன்னூறு மில்லியன் ஆண்டுகளாக 150 அடிக்கும் மேலாக [50 மீடர்]  நமது நிலவு சுருங்கி வருகிறது.  தாறுமாறாக அடித்தட்டுகள், தளத் தட்டுகள் சில குதிரை ஏறும்.  சில அடி பணியும்.  திராட்சைப் பழங்கள் சுருங்கும் போது, பார்த்தால் மேல் தோல் மீது மடிப்புகள் [Wrinkles] உண்டாகும். அதுபோல் நிலவுத் தட்டுகள் மீதும்  மடிப்புகள் உண்டாகும்.  அவை உந்துப் பிழைகள் [Thrust Faults]  என்று குறிப்பிடப்படும்.  அப்பிழைகளால் நிலவில் நில நடுக்கம் ஏற்படலாம் என்று வானியல் நிபுணர் கருதுகிறார். 1969 முதல் 1972 வரை நிலவுக்குப் பயணம் செய்த அப்பொல்லோ அமெரிக்க விண்வெளி விமானிகள் அந்த உந்துப் பிழைகளை நிலவில் கண்டுள்ளார்.  அப்பொல்லோ -11, 12, 14, 15 & -16 பயணங்களில் நிலவின் தளங்களில் வைத்த நில நடுக்கக் கருவிகள் [Seismometer] இயங்கியுள்ளன.  அவை 28 சிறிய நடுக்கங்களைப் பதிவு செய்து வந்துள்ளன.  அவற்றின் ரிக்டர் அளவு : 2 முதல் 5.  நாசா நிலவுக்கு 2009 இல் ஏவியச் சுற்று விண்ணுளவி  [Lunar Reconnaissance Orbitor (LRO)] சுமார் 3500 நிலவு மடிப்புகளை பதிவு செய்துள்ளது.  சூரிய மண்டலத்தில் சுருங்கி வரும் வயதான நிலவைப் போல், புதன் கோளும் மிகப்பெரும் [600 மைல் (1000 கி.மீ.)] உந்துப் பிழை களைக் கொண்டுள்ளது என்று அறியப் படுகிறது.

     

    ++++++++++++++
    ++++++++++++++++
    நீர்க்கோளின் மகத்தான நிலவுக் காட்சி
    ++++++++++++++++++
    நிலவு பூமியை விட்டு அப்பால் நகரும்போது,  பனித்தள வழுக்கி காலணியில்  சுற்றும் மாது, மெதுவாகும் சமயம்  கைகளை நீட்டுவதுபோல், பூமியின் சுழற்சியும் தளர்ந்து குன்றுகிறது.
    எங்களது குறிக்கோளில் ஒன்று :  வானியல் காலநோக்கு  [Astro-Chronology] முறையில் பூர்வீக நிகழ்ச்சியின் தோற்ற காலத்தை அறிய முற்படுவது.  பில்லியன் ஆண்டுகட்கு முற்பட்ட  பாறை மாதிரிகளைத் துருவி உளவி, பூர்வீகப் புவித்தளவியல் காலப் பரிணாமத்தை கதிர் ஏகமூல நேர்ச்சி முறையில்  [Radioisotope Dating] அளப்பது.
    டாக்டர் ஸ்டீஃபன் மேயர்ஸ்  [பேராசிரியர் புவித்தளவியல் விஞ்ஞானம், விஸ்கான்சின் – மாடிஸன் பல்கலைக் கழகம்.]  துணை ஆசிரியர், அறிக்கைத் தாள் வெளியீடு, தேசீய விஞ்ஞானக் கழகம்]  [ஜூன் 4, 2018]   
    ++++++++++++++++
    பொங்கிவரும் பெருநிலவு
    இங்கில்லை என்றால்
    பரிதிக் கப்பால் வெகு தொலைவில்
    தங்கி விடும் பூமி !
    தட்ப, வெப்பம் மாறிவிடும் !
    உயிரின மெல்லாம்
    வெய்யிலில் எரிந்து  விடும் !
    நிலவில்லை யென்றால்
    கடல் வீக்கம் ஏது ?
    முடங்கிய
    கடல் வெள்ளத்தைக்
    கடைந்து கலக்க  அலை
    ஏற்ற மில்லை ! இறக்க மில்லை !
    காற்றின் சிறகுகள்
    முறிந்து விடும் !
    கடல் நீர் சுற்றியக்கம்
    முடங்கும், தடைப்படும் !
    கடல் நீட்சியும் மீட்சியும்
    நடைபெறா !
    கடல் வெப்பம் சீர்ப்படாது
    முடங்கும் ஓரிடம் !
    காலநிலை மாறுபடும் !
    சூழ்வெளி வாயு வேறுபடும் !
    பயிரினம் பரிதவிக்கும் !
    உயிரினம் பாதிக்கப் படும் !
    பூமியின் சுயச்சுற்று தடைப்பட்டு
    நாள் மணிக் கணக்கு
    நீளமாகும் !
    கருநிலவு பூமியை விட்டு
    வருடந் தோறும்
    ஒன்றை அங்குல தூரம் 
    அப்பால் நகரும் !
    +++++++++++
    பூமியின் நாட்பொழுது நீட்சிக்கு விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு 
    2018 ஜூன் 4 ஆம் தேதி நமது பூமிக்கும், நமது நிலவுக்கும் உள்ள உறவைப் புதிய கண்ணோட்டத்தில் மீளமைப்பு முறையில் ஆழ்ந்து வரலாற்றை விஞ்ஞானிகள் திருப்பி ஆராய்ந்த போது, 1.4  பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் டைனோசார்ஸ் வாழ்ந்த கடும் வெப்ப பூமியின் நாட்பொழுது 18 மணி நேரங்களே நீடித்தது !  அப்போது நமது நிலவு பூமியை மிகவும் நெருங்கி இருந்துள்ள தாகவும், அது பூமியின் சுய சுழற்சியைக் கட்டுப்படுத்தி மாற்றி வந்ததாகவும் விஞ்ஞானிகள் புதிய ஆய்வுகள் மூலம் கூறுகிறார்.
    இப்போதுள்ள நிலவின் நகர்ச்சிச் சுற்றில், பூமியின் சுழற்சி நாள் 24 மணி நேரமாக உள்ளது.  ஒரு பில்லியன் ஆண்டுக்குப் பிறகு, நிலவு நகரும் எதிர்காலச் சுற்றில், பூமியின் சுழற்சி நாட்பொழுது 30 மணி [?] நேரமாக மாறிவிடலாம் !
    நிலவு பூமிக்கு அப்பால் நகரும் போது, பூமியின் தன்னச்சு சுயச் சுழற்சி  தளர்ச்சி அடைந்து, மெதுவாகச் சுற்றுகிறது.  அப்போது நாட்பொழுது நீள்கிறது.  நிலவானது ஆண்டுக்கு 1.5 அங்குலம் [3.82 செ.மீ.] தூரம் புவிக்கு அப்பால் நகர்கிறது.  இந்த புதிய ஆய்வுக் கருத்து 2018 ஜூன் 4 ஆம் தேதி “தேசீய விஞ்ஞானக் கழக இதழில்  [National Academy of Sciences]  வெளியாகி உள்ளது.  வெளியிட்ட பூதளவியல் விஞ்ஞானி, விஸ்கான்சின் – மாடிஸன் பல்கழைக் கழகப் பேராசிரியர் ஸ்டீஃபன் மேயர்ஸ்.
    விண்வெளியில் பூமியின் சுயசுழற்சி, நிலவு போன்று பல்வேறு அண்டக் கோள்களால் பாதிக்கப் படுகிறது.  அதுபோல் பூமி சூரியனைச் சுற்றும் பாதையும் பல்வேறு கோள்களால் பாதிக்கப் படுகிறது.  இந்த மாறுதல்கள் யாவும் “மிலன்கோவிச் சுற்றுகள்” [Milankovitch Cycles] என்று அழைக்கப் படுகின்றன.
     

    “காலநிலை, காற்று, காரிகை, எதிர்பாரா செல்வீகம் (Fortune) – இவை யாவும் நிலவைப் போல் மாறிப் போய் விடுபவை !

    பிரெஞ்ச் பழமொழி.

    நம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.

    டெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)

    fig-1-relative-sizes-of-earth-moon

    பூகோளம் முதன்முதலில் தோன்றிய போது !

    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய போது பூர்வ பூமியானது எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்வது கடினம் !  திரண்டு உருவான பூமியின் கனல்கட்டி எந்த வடிவத்தில் காணப் பட்டது என்பது யாருக்கும் தெரியாது !  கண்டங்கள் குளிர்ந்து எப்போது உண்டாயின, கடல் வெள்ளம் எப்போது குழியில் நிரம்பியது என்று எவரும்  அறியமாட்டார் !  படிப்படியாகப் படிந்த வாயு மண்டலம் எப்போது பூமிக்குக் குடை பிடிக்கத் தொடங்கியது என்பதை யார் கணிக்க முடியும் ?  புத்தம் புதியக் குழந்தை பூமியை செவ்வாய்க் கோள் அளவுள்ள ஓரண்டம் தாக்கிச் சிதைத்து முதன்முதல் 6 மணி அளவு நாளாய்த் (6 Hour Day) தன்னச்சில் வெகு வேகமாய்ச் சுற்ற வைத்தது !  சிதைந்த சதைப் பிண்டம் உருகிப் போய் ஒன்றாய்த் திரண்டு துணைக்கோள் நிலவு ஆனது.  சக்தி குன்றிய, நிறை குன்றிய, ஈர்ப்பாற்றல் குறைந்த நிலவு தன்னச்சில் சுழாது ஒருமுகம் காட்டிப் பூமியை வலம்வர ஆரம்பித்தது !  ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் கடந்து பூமி குளிர்ந்து உருகிய தளத்துடன், ஆவி பறக்கும் சூழ்வெளியில் உருண்டு திரண்டு ஒரு கோளானது.  700 மில்லியன் ஆண்டுகள் கழிந்து அதாவது சுமார் 3.8 பில்லியன் வருடத்துக்கு முன்பு முதன்முதல் உயிரினம் தோன்ற ஆரம்பித்தது.

    fig-2-life-without-the-moon2

    4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய முதலே நீர்மயம் பூமியில் உண்டாகி விட்டது என்று ஒரு சில விஞ்ஞானிகள் கருதுகிறார்.  நிலவானது பூமியிலிருந்து சிதைக்கப்பட்டு அப்பால் தனியே சுற்ற ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட பெருங்குழியில் நீர் நிரம்பி கடல் உண்டாக ஏதுவானது.  ஆயினும் அப்போது பூமி வெட்ட வெளியாகத்தான் கிடந்தது.  நிலவு முதலில் 7300 மைல் தூரத்தில் சுற்ற ஆரம்பித்தது.  பிறகு நகர்ந்து இப்போதுள்ள தூரத்தில் பாதி அளவு (120,000 மைல்) தொலைவில் இருந்தது.  பூமியில் கடல் அலைகள் அதனால் பேரளவு உயரத்திலும், கொந்தளிப்பிலும் அடித்து வந்திருக்கின்றன.  கடல் நீட்சியால் (Tidal Bulge) பூமியின் “கோண முடுக்கம்” (Angular Momentum) தொடர்ந்து நிலவை ஆண்டுக்கு சுமார் 1.5 அங்குலம் (3.8 செ.மீ) அப்பால் நகர்த்தி வருகிறது !  பூமியின் நாட் கணக்கு நூறாண்டுக்குச் சுமார் 0.002 செகண்ட் நீள்கிறது !  தற்போதைய நிலவின் சராசரித் தூரம் பூமியிலிருந்து 235,000 மைல் (380,000 கி.மீ.).  பூமியின் வேகம் படிப்படியாகக் குறைந்து 6 மணி நாள் நீண்டு 24 மணி நாளாக மாறியது !

    fig-5-sea-tides-in-12-hours1

    பூமி இழக்கிறது ! நிலவு பெறுகிறது ! பூமி மெதுவாகிறது ! நிலவு விரைகிறது !

    பூமியின் ஈர்ப்பியல் வல்லமை நிலவின் ஈர்ப்பியல் வலுவை விட 3000 மடங்கு மிகையானது.  மேலும் பூமியின் திணிவு நிறை நிலவைப் போல் 80 மடங்கு பெரியது.  பூமி சக்தியை இழக்கிறது. நிலவு சக்தியைப் பெறுகிறது !  பூமி கடல் நீட்சியோடு (Tidal Bulge) சுற்றும் போது அந்த வெள்ளம் கண்டங்களின் கரைத் தளம், நதிச் சங்கமம், வளைகுடாக்கள் ஆகியவற்றைச் சூடாக்கும் .  எதிர்ப்படும் இடையூறுகளை தகர்க்கும் !  அத்தகைய கடல் நீட்சியும், மீட்சியும் (Tidal Swelling & Ebbing) சக்தியை இழக்கும் போது பூமியில் “கடல் நீர் உராய்வு” (Tidal Friction) உண்டாகிறது.  அந்தப் பேரளவு நீர் மண்டலம் நீட்சி உண்டாக்கும் போது பூமியின் சுழற்சி சக்திக்குத் தடையாக முட்டுக் கட்டை (Applies Brake to Earth’s Rotational Energy) போடுகிறது !  அதாவது பூமியின் வேகத்தைத் தணிக்கிறது !  அதாவது பூமி ஒரு முறை தன்னச்சில் சுழல அதிக நேரத்தை எடுக்கிறது !  4 பில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமி தோன்றிய காலத்தில் அதன் நாள் மணிக் கணக்கு 6 மணி நேரமாக இருந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கணிக்கி றார்கள் !  அப்போது நிலவு பூமிக்கு மிக அருகில் சுமார் 7300 மைல் தூரத்தில் இருந்ததாகவும் அறியப் படுகிறது !  இந்தக் குன்றிய தூரத்துக்கும் குறைவாக நிலவு பூமியை நெருங்கி இருக்க முடியாது.  அவ்விதம் தூரம் குன்றினால் பூமி நிலவைத் தன்வசம் இழுத்துத் தகர்த்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் !

    fig-1a-earth-tides

    படிப்படியாக பூமியின் ஈர்ப்புச் சக்தி குறைந்து தன்னச்சில் சுற்றும் அதன் வேகம் தணிகிறது.  பூமியின் ஆறு மணி நேர நாள் 4 பில்லியன் ஆண்டுகளில் நீண்டு இப்போது 24 மணி நேரமாக நீடித்துள்ளது !  இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிதி ஆண்டுக்கு 800 நாட்கள் என்று இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார் !  பூமி தன்னைத் தானே சுற்று வீதம் ஒரு நிலை இலக்கமில்லை !  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த சூரிய கிரகணங்களை வானியல் நிபுணர்கள் துல்லிய மாகச் சொல்லி இருப்பது வியப்பான கணிப்பே !  2.5 பில்லியன் ஆண்டுகட்கும் 650 மில்லியன் ஆண்டுகட்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவின் நகர்ச்சி ஆண்டுக்கு அரை அங்குலம் (1.27 செ.மீ.) வீதம் இருந்ததாகக் கணிக்கிடப் படுகிறது.  அந்த யுகங்களில் பூமிக்கு மிக அருகில் இருந்த நிலவு படிப்படியாகத் தள்ளப்பட்டு இதுவரை 235,000 மைல் தூரத்தில் நகர்ந்து பூமியைச் சுற்றி வருகிறது.  1970 ஆண்டுகளில் நாசாவின் அபொல்லோ விண்வெளித் தீரர்கள் நிலவிலே விட்டு வைத்த “மூன்று கோண மூலைக் கண்ணாடிகள்” மீது (Three-Cornered Mirrors Left on the Moon By the Apollo Astronauts) இப்போது லேஸர் ஒளிக்கதிரை அனுப்பித் துல்லியமாகச் சந்திரனின் நகர்ச்சியை [1.5 Inch per Year (3.8 cm per Year)] அளந்து வருகிறார் !

    fig-1b-tidal-movements-on-earth

    நிலவின் ஈர்ப்புக் கவர்ச்சி பூமியில் என்ன செய்கிறது ?

    நிலவால் கடலில் ஏற்படும் நீர் மட்ட உயர்ச்சி தாழ்ச்சி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் அனுதினமும் இயற்கையாக நேரும் கடல் வெள்ளத்தின் நீட்சி மீட்சி இயக்கங்கள் ஆகும் !  கடலின் நீட்சி பூமியின் ஒருபுறமும் கடலின் மீட்சி அல்லது தாழ்ச்சி பூமியின் எதிர்ப்புறமும் நிகழ்பவை.  அவை ரப்பர் பந்து போல் இழுப்புத் தன்மை உடையவை.  சந்திரனின் ஈர்ப்பு விசை இல்லை யென்றால் பூமியின் கடல் வெள்ளம் சுழற்சி அடையாமல் முடமாகி வெறும் பூமியோடு சுற்றி வரும்.  ஆனால் நிலவின் ஈர்ப்பு விசை கடலின் நீர் மண்டலத்தைத் தன்வசம் கவர்ந்துப் பிடித்து வைக்கிறது !  அவ்விதக் கடல் வெள்ள நீட்சி அடையும் போது ஒருவித “முறிப்பு நெம்புதலை” (Torque or Twisting Force) பூமி நிலவின் மீது உண்டாக்குகிறது !

    பரிதி, நிலவு, பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் உள்ள போது அவை நேர்முக நோக்கு ஈர்ப்பு விசையை மிகையாக்குகின்றன.  வசந்த காலத்தில் வரும் கடல் நீட்சி (Spring Tides) எல்லாப் பருவக் காலத்தையும் விட மிகையாக இருந்து வருகிறது !  நீள்வட்டத்தில் சுற்றும் நிலவு சிற்றாரத்தில் (Perigee) பூமிக்கு அருகில் உள்ள போது கடல் நீட்சி அதிகம்.  பிறகு பூமிக்கு அப்பால் நீளாரத்தில் (Apogee) நிலவு உள்ள போது கடல் நீட்சி குறைவு.

    fig-1c-spring-tides

    மேலும் சந்திரனின் ஈர்ப்பு விசை பூகோளத்தின் வாயுச் சூழ்வெளியைப் பாதிக்கிறது.  அது பூமியின் அடித்தட்டு நகற்சி (Plate Tectonics) இணைந்த மேற்தளக் கோளத்தையும் (Lithosphere – Topmost Layer of Earth along with the Crust) மாற்றுகிறது.  நமது பூகோளத்தின் அடித்தட்டு (crust) நிலவை நோக்கி அதன் ஈர்ப்பு விசையால் 12 அங்குலம் (30 செ.மீ) நீட்சி அடைகிறது

    துணைக்கோள் நிலவால் பூமிக்கு ஏற்படும் பலாபலன்கள்

    நிலவில்லாது போனால் கடலில் நீரோட்டம் முடக்கமாகி கடலியக்கம் தடைப்படும்.  அப்போது பேரளவு ஆக்ஸிஜன் வெளியாக்கும் ஆல்கே (Algae – Seaweeds) போன்ற கடற்களைகள் அழிந்து போகும்.  அதாவது சந்திரன் இல்லாவிட்டால் நாம் உண்ணும் உணவுச்  சங்கிலி (Food Chain) பாதிக்கப்படும்.  நிலவின் அமைப்பு மனிதரைப் போன்ற பூமியின் உயிரினச் செம்மை விருத்திக்குப் பல்வேறு செழிப்பு முறைகளில் பாதிப்பு செய்தற்கே.  அவற்றில் முக்கியமானவை :

    fig-1f-the-structure-of-earth

    1.  4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் அதிர்ஷ்ட வசமாக செவ்வாய்க் கோள் அளவில் பூமியைத் தாக்கிய ஓரண்டம் சிதைத்து 99% திணிவு மிக்க இயற்கையான உயிரினத் தடை உண்டாக்கும் சூழ்வெளியை (Natural Primordial Life-Prohibiting Dense Atmosphere) அகற்றியது !  அதன் பின்னர் மிக மெல்லிய தெளிவான உயிரின வளர்ச்சிச் சூழ்வெளி (Relatively Thin Translucent-Clear Life-Permitting Atmosphere) தோன்றியது.  அதே சமயத்தில்தான் முதன்முதல் சந்திரன் துணைக்கோளும் பூமிக்கு உண்டானதாகக் கருதப்படுகிறது !

    2.  அதே கொந்தளிப்புக் காலத்தில்தான் மிகையான மேற்பட்ட கதிர் வெப்பம் வீசும் யுரேனியம், தோரியம் மூலகங்கள் தோன்றி பூகோள உட்கரு செழிப்பாகத் துவங்கியது !  கதிரியக்க வெப்பம் அடித்தட்டுக் கண்ட நகர்ச்சியால் எழுந்த வாயுத் திடப் பொருட்களை சுற்றியக்கத்தால் (Recycling of Continents due to Plate Tectonics) பூமியிலிருந்து வெளியேற வழி வகுத்தது !  அதாவது அடித்தட்டு நகர்ச்சியில் ஒன்றின் மீது ஒன்று குதிரை ஏறிக் கரி கலந்த பொருட்கள் (Subduction of Carbonacious Materials) வெளியாகிக் காலம் செல்லச் செல்ல “சுக்கிரன் விளைவு” மாதிரி (Venus Effect of Global Warming over Time) பூகோளச் சூடேற்றத்தைப் படிப்படியாகத் தவிர்ப்பது.

    fig-1e-earths-lithosphere1

    3.  கடல் நீர்மட்டம் ஏறி இறங்கி கடல் வெள்ளத்தின் சுற்றோட்டத்தை அனுதினமும் நிகழ்த்தி கடல்நீர் முடமாவதைத் தடுப்பது.  அதன் விளைவு : மேலான மனித உயிர் வளர்ச்சிக்குத் தடையானவற்றை நீக்குவது.

    4.  நிலவின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் கடல் நீட்சி தடை செய்வதால் (Tidal Braking) பூமியின் சுயச் சுழற்சி வேகம் தணிகிறது !  அதனால் பூகோளத்தில் உயிரினம் செம்மையாக விருத்தியாகச் சூழ்வெளி மிதமாகிறது. பூமியின் சுழற்சி வேகம் மிகையானால் உயிரினம் பாதிக்கப்படும் பயங்கரச் சூழ்வெளி உருவாக வழி ஏற்படும்.

    5.  மேலும் பூமியின் சுற்றச்சு 23.4 டிகிரி பரிதிக்கு ஒப்பாகச் சரிந்திருக்க நிலவே நிலைப்பாடு செய்ய உதவுகிறது.  அதே சமயத்தில் யுரேனஸ் கோளின் அச்சு கட்டுப்பாடு இல்லாமல் சுற்றச்சு சுமார் 98 டிகிரி சாய்ந்து போய் உள்ளது.  அதாவது மிதமான பருவ நிலைக் காலம் பூமத்திய ரேகைப் பகுதிக்கு மேலும் கீழும் சுற்றியக்கம் பெற உயிரினங்களுக்கு வசதி உண்டாக்குகிறது.

    fig-4-spring-tide-neap-tide

    6.  உலகம் முழுவதிலும் நிலவின் அமைப்பே கடல் நீட்சிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.  நிலவு இல்லாவிட்டால் அலை ஏற்ற இறக்கங்கள் பேரளவில் மெலிந்து போய்விடும் !  நிலவில்லா விட்டால் பூமியின் சுழலச்சு தாறுமாறாக ஊஞ்சல் ஆடும் !  அந்த ஆட்டம் உஷ்ணக் கொந்தளிப்பையும் பெருத்த கால நிலை மாறுதல்களையும் உண்டாக்கும் !  பூமியில் சுமுகமாக வசித்த மனித இனங்கள் வசதியற்ற தட்ப வெப்பச் சூழ்வெளியில் தவிக்க நேரிடும் !

    சூரிய மண்டலத்தில் நூதனப் படைப்புக் கோள் பூகோளம்

    பிரபஞ்சக் காலாக்ஸிகளில் நாமறிந்த பால்மய வீதியின் பரிதி மண்டலத்தில் நாம் வசிக்கும் ஒரே ஒரு கோளில்தான் நூதனமாகப் பேரளவில் நீர்மயம் திரவ வடிவிலும், திடவ உருவிலும், ஆவியாகவும் (Liquid, Solid & Vapour) பல கோடி ஆண்டுகள் நீடித்து வருகிறது.  அதிலும் விந்தையாகப் பூமியின் பிரம்மாண்டன கடற்குழி எப்படி நீர்மயமாக நிரம்பியது என்பது புதிர்களில் ஒரு புதிராக உள்ளது !  அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது !  பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது !  ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது !  பூமிக்கு ஒரே முகத்தை மட்டும் மில்லியன் ஆண்டுகளாய்க் காட்டிச் சுற்றிவரும் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது என்பது உறுதியாக அறியப் பாடாமல் இன்னும் புதிரான ஒரு சிந்தனைக் கோட்பாடாகத்தான் உள்ளது.

    first-man-on-the-our-moon1

    fig-6-solar-eclipse-on-the-moon

    [தொடரும்]

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 On the Moon By : Patrick Moore (January 2001)
    12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40802271&format=html(நிலவு எப்படித் தோன்றியது ?)
    13 Wikipedia – Inner Structure of the Moon [January 31, 2008]
    14 Astronomical Society of the Pacific – Whait if the Moon Did not Exist ? By : Neil F. Comins, University of Maine (1996)
    15 AstronomyCafe.net What Would Have Happened if the Earth Did not Have the Moon ?
    16 Home Page. Natural World . Com – Formation of the Earth & The Moon, Tides & Gravity
    17 Earth-Moon Dynamics Page – Would We have Had Evolution Without the Moon ? By : Dan Green B.Sc. (Hons).
    18 Tides on Earth – The Recession of the Moon By : Tim Thompson (Matt Rosenberg http://geography.about.com/ )
    19 Scientific American – Without the Moon, Would There Be Life on Earth ? By : Bruce Dorminey (April 21, 2009)

    20. https://youtu.be/j91XTV_p9pc

    20 (a)  https://youtu.be/0tqgWuSIZUg

    21. https://newslikethis.com/2018/06/04/thank-moon-earth-s-lengthening-day [June 4, 2018]

    22.  https://news.wisc.edu/thank-the-moon-for-earths-lengthening-day/  [June 4, 2018]

    23.  https://phys.org/news/2018-06-moon-earth-lengthening-day.html  [June 4, 2018]

    24.  https://www.sciencedaily.com/releases/2018/06/180604151200.htm [June 4, 2018]

    25.  http://mentalfloss.com/article/546952/moon-making-days-earth-longer  [June 6, 2018]

    26. https://en.wikipedia.org/wiki/Milankovitch_cycles  [ June 8, 2018]

    27. https://www.independent.co.uk/life-style/gadgets-and-tech/news/moon-shrinking-nasa-moonquake-space-crust-lunar-surface-a8911881.html

    26. https://www.space.com/moonquakes-moon-is-shrinking-apollo-data.html

    29. https://www.nasa.gov/mission_pages/LRO/news/shrinking-moon.html

    30.  https://www.thehansindia.com/tech/shrinking-moon-may-be-generating-moonquakes-529274  [May 18, 2019]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] [May 18 , 2019] [R-2]

    Share