அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அறிவியலாளர் – சர் ஐசக் நியூட்டன்

0

-மேகலா இராமமூர்த்தி

இயற்கையைக் கூர்ந்து நோக்குவதிலும், ஒன்றைப் போலவே மற்றொன்றை உருவாக்குவதிலும், புதிய பொருள்கள் படைப்பதிலும் இளமை முதலே ஊக்கமும் உற்சாகமும் கொண்டவராய்த் திகழ்ந்திருக்கின்றார் புவிபோற்றும் அறிவியல் அறிஞரான சர் ஐசக் நியூட்டன்.

இங்கிலாந்தின் லிங்கன்ஷையர் (Lincolnshire) எனும் மாகாணத்திலுள்ள உல்ஸ்தோர்ப்பு (Woolsthorpe) எனும் குக்கிராமத்தில் 1642-ஆம் ஆண்டு திசம்பர் 25-ஆம் நாளன்று நியூட்டன் பிறந்தபோது, அளவில் சிறிய பலவீனமான குழந்தையாகவே இருந்திருக்கின்றார். இந்தக் குழந்தை நெடுநாள்களுக்கு உயிரோடு இருக்குமா என்று அனைவரும் கவலைப்பட்ட நிலையில், பின்னாளில் அவர் சர் ஐசக் நியூட்டன் எனும் பெயரோடு அறிவியல் அறிஞர்கள் உலகில் துருவ நட்சத்திரமாக ஒளிர்ந்தார் என்பது வியப்பினும் வியப்பே!

தாம் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தந்தையை இழந்த நியூட்டன், பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையில்தான் தம்முடைய பள்ளிக் கல்வியை கிராந்தம் (Grantham) நகரிலிருந்த கிங்’ஸ் பள்ளியில் (King’s School) முடித்தார். பிறகு 1661-இல் தம்முடைய 18-ஆவது வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டிரினிட்டி கல்லூரியில் (Trinity College, Cambridge University) கல்வியைத் தொடர்ந்தார்.

1665-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் பிளேக் (Plague) நோய் பரவியதால் டிரினிட்டி கல்லூரியைத் தற்காலிகமாக மூடிவிட்டார்கள். அதனால் சிறிதுகாலம் தம் சொந்த ஊரான உல்ஸ்தோர்ப்பு வந்து தங்கியிருந்தார் நியூட்டன். அப்போது அவர் தோட்டத்தில் உட்கார்ந்துகொண்டு ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தபோது ஆப்பிள் மரத்திலிருந்து ஒரு பழம் கீழே விழுந்ததைக் கவனித்தார். இந்த ஆப்பிள் பழம் மேல்நோக்கிச் செல்லாமல் கீழே விழுவானேன்? இதன் காரணமென்ன? என்று சிந்திக்கத் தொடங்கினார். அதன் விளைவாய் அவர் கண்டறிந்தவையே புவியீர்ப்பு விசையும் அதுசார்ந்த விதியும் (Newton’s law of gravitation).

1669-இல் தம் முதுகலைப் படிப்பைக் கணிதத்துறையில் முடித்த நியூட்டன் பின்னர், தாம் பயின்ற டிரினிட்டி கல்லூரியிலேயே கணிதத்துறைப் பேராசிரியராய்ப் பணியில் அமர்ந்தார்.  ஈருறுப்புத் தேற்றத்தை (binomial theorem) உருவாக்கினார்; அதுவே பின்னாளில் கால்குலஸ் (Calculus) எனும் கணிதப் பிரிவாக வளர்ச்சியுற்றது.  

விண்வெளி ஆய்வுகளிலும் ஈடுபட்ட நியூட்டன், வெண்மையாகக் கண்ணுக்குத் தோன்றும் சூரிய கிரணத்திலே பல வண்ணமுள்ள கிரணங்கள் நிறைந்திருக்கின்றன என்பதையும் அவற்றில் ஊதா நிறந்தான் அதிக அளவிலே இருக்கின்றது என்பதையும் கண்டறிந்தார். எட்டு அங்குல நீளமுள்ள தொலைநோக்கிக் கருவியொன்றையும் (Telescope) அவர் உருவாக்கினார். விண்வெளிப் பொருள்களை மிகத்துல்லியமாக அறிய உதவிய இத்தொலைநோக்கி, பலரையும் கவர்ந்தமையால் அறிவியல் அறிஞர்கள் நிறைந்திருந்த இங்கிலாந்தின் இராயல் சொசைட்டி (Royal Society) எனும் அமைப்பு நியூட்டனை உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டது. நியூட்டனுக்கு முன்பே இத்தாலிய வானியல் அறிஞரான கலிலியோ (Galileo Galilei) தொலைநோக்கியை உருவாக்கி வானியல் ஆய்வுகளை செய்திருந்தார் என்றபோதிலும் நியூட்டனின் ஆராய்ச்சி அதனை மேலும் ஒழுங்குபடுத்தித் துல்லியமாக்கியது எனலாம்.

தொலைநோக்கி மட்டுமல்லாது வானில் தோன்றி மறையும் வால்நட்சத்திரங்களை (Comets) ஆராய்ச்சி செய்து அவற்றைப் பற்றி அறிந்துகொள்ளக்கூடிய கருவிகளையும் நியூட்டன் கண்டுபிடித்தார்.

இயற்கைத் தத்துவத்தின் கணிதக் கொள்கைகள் (The mathematical priniciples of natural Philosophy) எனும் அரிய நூலை எழுதி வெளியிட்டார். நியூட்டனின் இயக்க விதிகள் (Newton’s laws of motion) இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மிகவும் புகழ்வாய்ந்த அந்த மூன்று விதிகளும் இன்றளவும் பள்ளி, கல்லூரிகளில் இயற்பியலின் முக்கியக் கோட்பாடுகளாகக் கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

1689-இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு (Parliament) தெரிந்தெடுக்கப்பட்டார் நியூட்டன். சுமார் இரண்டாண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்து அமைதியாய்த் தொண்டாற்றியிருக்கின்றார் அவர்.

மறுதேர்தல் நடப்பதற்காக நாடாளுமன்றம் கலைந்துவிட்டதனால் மறுபடியும் தம்முடைய ஆசிரியப் பணியை டிரினிட்டியில் தொடர்ந்தார். கணிதம் மற்றும் அறிவியல் ஆய்வுகள் தொடர்பாகப் பல அறிஞர்களோடு மடலாடல் நடத்தினார். அவைகுறித்துப் பல குறிப்புகள் எடுத்துவைத்திருந்த நியூட்டன் அவற்றைத் தொகுத்து ஒரு பெரிய நூலாக வெளியிட எண்ணியிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வருந்தத்தக்க சம்பவம் ஒன்று நிகழ்ந்துவிட்டது. அரிய குறிப்புகள் அடங்கிய தம் கையெழுத்துப் படியை தம் எழுதுமேசையின்மீது வைத்துவிட்டு எங்கேயோ வெளியில் சென்றிருந்தார் நியூட்டன். அவ்வமயம் அம்மேசைமீது ஏறிய அவருடைய வளர்ப்பு நாயான ‘டார்லிங்’ அங்கே எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தியைத் தட்டிவிட, கையெழுத்துப் படி எரியத்தொடங்கியது. பெரும்பகுதி எரிந்தபின்பே உள்ளேவந்த நியூட்டன் அதைக் கண்டு, ”ஐயோ! டார்லிங் என்ன காரியம் செய்துவிட்டாய்?” என்று அலறித் துடித்திருக்கின்றார். பலனொன்றுமில்லை! மீண்டும் அவற்றை அவர் எழுதவேண்டிய அவலநிலையே வாய்த்தது. ஊழிற் பெருவலி யாவுள?

நியூட்டன் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த காலத்தில் சார்ல்ஸ் மாண்டேகு (Charles Montague) என்ற அறிஞருடைய நட்பு அவருக்கு ஏற்பட்டது. மாண்டேகு அரசாங்கத்தின் பல மதிப்புமிக்க பதவிகளை வகித்தார். நியூட்டன்மீது தமக்கிருந்த அளப்பரிய அன்பின் காரணமாக அரசாங்கத்தில் அவருக்கு ஓர் நல்ல பணியை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று விரும்பிய மாண்டேகு, நாணயங்கள் அச்சடிக்கின்ற சாலையில் (Mint factory) ஓர் பொறுப்பான பதவியில் நியூட்டனை அமர்த்தினார். நியூட்டனும் அப்பதவியை ஏற்று அங்கே பல சீர்திருத்தங்களைச் செய்தார். போலி நாணயங்கள் வெளிவராதபடி தடுத்துநிறுத்தினார்.

சிறிது காலத்தில் அந்த எந்திர சாலைக்குத் தலைவராகவே நியூட்டன் நியமிக்கப்பட்டார். பொறுப்புமிக்க இப்பணியில் இருந்தபோதும் தம் இயல்புக்கு ஏற்ப ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதையும் நியூட்டன் நிறுத்தினாரில்லை. நாள்காட்டியில் சில திருத்தங்கள் செய்தார்; உலோகங்களை உருக்கிவார்ப்பதில் பல புதிய நடைமுறைகளை உருவாக்கினார். தவிர, எந்திர சாலையில் நீண்ட காலமாக நடந்துவந்த ஊழல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். (ஊழல் ஒரு தனிநாட்டுக்குச் சொந்தமானதன்று! அஃது உலகளாவியது என்பது இதன்மூலம் நிரூபணமாகின்றது.)

இக்காலக்கட்டத்தில் நியூட்டனின் புகழ் உலகெங்கும் பரவத்தொடங்கியது. இராயல் சொசைட்டியார் தங்கள் சங்கத்தின் தலைவராக நியூட்டனைத் தேர்ந்தெடுத்தனர். அரசாங்க ஆதரவும் அவருக்குக் கிடைத்தது. 1705-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஆன் மகாராணியார் (Queen Anne) தம் பரிவாரங்களோடு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வருகைதந்து ‘சர்’ பட்டத்தை நியூட்டனுக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

பேரும் புகழும் எண்ணற்ற கௌரவங்களும் தம்மைத் தேடிவந்தபோதினும் நியூட்டன் மிகவும் எளிமையாகவே வாழ்ந்தார் என்று அறிகின்றோம். அத்தோடு, தம் வருமானத்தின் பெரும்பகுதியை ஏழைகளின் துயர் துடைக்கவும், அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், தம் உறவினர்களின் தேவைகளுக்குமே அவர் செலவு செய்திருக்கின்றார்.

பொதுவாழ்வில் சிறந்த ஆளுமையோடு திகழ்ந்த நியூட்டனின் தனி வாழ்க்கையை ஆராய்வோமேயானால், அவருக்குக் காதல் இருந்ததாகவோ யாரையும் அவர் திருமணம் செய்துகொண்டதாகவோ எவ்விதத் தகவலும் இல்லை. இது வியப்பிற்குரிய ஒன்றாகவே இருக்கின்றது!

எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வி கற்பதில் நேர்ந்த இடையூறுகள் அனைத்தையும் தம் விடாமுயற்சியின் துணைகொண்டு கடந்து, அடக்கத்தையும், அயரா உழைப்பையுமே அணிகளாகப் பூண்டு, பல அரிய கண்டுபிடிப்புகளையும் அறிவியல் கோட்பாடுகளையும் உருவாக்கிச் சகம் போற்றும் சாதனையாளராகத் திகழ்ந்த சர் ஐசக் நியூட்டன் 1727-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் நாள் தம்முடைய 85-ஆவது அகவையில் இவ்வியனுலக வாழ்வை நீத்தார்.

நியூட்டனின் நினைவுச் சின்னங்கள் பல இப்போதும் இங்கிலாந்தின் கல்விநிலையங்கள் பலவற்றை அணிசெய்கின்றன. அவர் உபயோகித்தனவும் கண்டுபிடித்தனவுமான அறிவியல் கருவிகள் பல அவர் பணியாற்றிய டிரினிட்டி கல்லூரியில் இன்றளவும் காணக் கிடைக்கின்றன. அனைத்திற்கும் மேலாய், நியூட்டன் பிறந்த இடமான உல்ஸ்தோர்ப்பு கிராமத்து வீடு பழுதுபார்க்கப்பட்டு ஒரு புனிதத் தலமாகவே கொண்டாடப்பட்டு வருவது, செயற்கரிய செய்த அறிஞர் பெருமக்களை மன்னுலகம் என்றுமே மறப்பதில்லை என்பதற்குச் சான்றாய்த் திகழ்கின்றது. 

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:
1. https://www.britannica.com/biography/Isaac-Newton
2. https://en.wikipedia.org/wiki/Isaac_Newton

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *