நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-46

 46. சிற்றினம் சேராமை

குறள் 451:

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்

கெட்டவங்க கூட சேருததுக்கு நல்ல மனசுக்காரங்க பயப்படுவாங்க. ஈன புத்தி உள்ளவங்க அவுகள தங்க சொந்தக்காரங்க கணக்கா நெனச்சி பழகுவாக.

குறள் 452:

நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு

தான் இருக்க நெலத்துக்கு ஏத்தாமாரி தண்ணியோட தன்ம மாறிக்கிடுது. அது கணக்கா தான் மனுசனோட புத்தியும் அவன் சேருத கூட்டத்துக்கு ஏத்தாப்போல மாறிக்கிடும்.

குறள் 453:

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னா னெனப்படுஞ் சொல்

ஒருத்தனுக்கு உணர்ச்சி அவன் மனசப் பொறுத்து அமைஞ்சிகிடும். அவன் இப்டி பட்டவன்னு அளந்து சொல்லுதது அவன் சேருத கூட்டாளியப் பொறுத்து அமையும்.

குறள் 454:

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
கினத்துள தாகும் அறிவு

ஒருத்தனோட நல்ல புத்தி அவன் மனசுக்குள்ளார இருக்கமாரி தோணிச்சின்னாலும் அது அவன் சேருத சேக்கையிலேந்து வெளிப்படுதது தான்.

குறள் 455:

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்

சுத்தமான மனசும், செய்யுத காரியத்துல சுத்தமும் ஒருத்தன் சேருத கூட்டத்தோட தூய்மைய ஆதாரமா கொண்டுதான் பொறக்குது.

குறள் 456:

மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை

சுத்த மனசுக்காரவுகளுக்கு அவுகளுக்குப் பொறவு அவுகளோட புகழ் சொச்சமா மிஞ்சி நிக்கும். சுத்திவர உள்ள கூட்டத்தார்(இனம்)  நல்லா அமைஞ்சவுகளுக்கு  நல்லா அமையாத செயல் னு எதுவுமே கெடையாது.

குறள் 457:

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும்

நெலச்சு நிக்குத உசிருங்களுக்கு நல்ல மனசு செல்வத்தக் கொடுக்கும். அதோடு நிக்காம நல்ல கூட்டத்தார்(இனம்)  எல்லாப் புகழையும் கொடுக்கும்.

குறள் 458:

மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநலம் ஏமாப் புடைத்து

மனசு நல்லதா இருக்க பெரிய மனுசங்களுக்கு கூட அவுக சேருத கூட்டத்தப் பொறுத்து தான் வலிம வந்து வாய்க்கும்.

குறள் 459:

மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து

மனசு நல்லதா இருந்தா மறுமையில கூட சந்தோசம் உண்டாவும். அதுவுங்கூட கூட்டத்தாரால வலிம பெறும்.

குறள் 460:

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்

ஒருத்தனுக்கு நல்ல கூட்டத்தாரப்போல பெரிய தொணை ஒண்ணுமில்ல. கெட்ட கூட்டத்தாரப் போல தீம தருததும் வேற இல்ல.

(அடுத்தாப்லயும் வரும்….)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *