சேக்கிழார் பா நயம் – 38
-திருச்சி புலவர் இராமமூர்த்தி
இதற்கு முன் திருமால் வழிபட்ட திருமாணிகுழி என்ற தலத்தைப் பற்றி நாம் கண்டோம். அதனை சிவக்கவிமணியார் மேலும் விளக்குகிறார்! செங்கணவன் வழிபட்ட திருமாணிகுழி – சிவந்த கண்ணுடைய திருமால் அப்பழி நீங்கும்பொருட்டுச் சிவபூசை செய்த திருமாணிகுழி என்ற தலத்தை. திருமாணிகுழி என்ற தலப் பேரின் காரணமும் முன் வரலாறும் குறிப்பித்த அழகினை நோக்குக. மாணி – பிரமசாரி; குழி – தலம். வாமனனாகிய பிரமசாரி பூசித்த தலம் என்க. உத்தம குணங்களுடையானும் சிவபத்தனுமான மாவலியை யாதொரு குற்றமுமின்றியே, தேவர்கள் வேண்டுதலுக்காக வஞ்சித்து அழித்தமையால் உளதாகும் பழியைப் போக்கிக்கொள்ளத் திருமால் இறைவனை வழிபட்டார் என்பது சிவபுராணங்களிற் கண்டது. குற்றுருவத்தோடு விளைத்த கேட்டினைச் சீர்ப் படுத்திக்கொள்ள அவ்வுருவத்தோடு பூசித்தவகையை,
‘நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறள னாகிமிகவும்
சித்தம தொருக்கிவழி பாடுசெய நின்றசிவ லோகனிடமாம்“
என்ற ஆளுடைய பிள்ளையாரது இத்தலத் தேவாரத்திற் காண்க.
அதனையடுத்து, திருத்தினைநகர் என்ற தலத்தைச்சுந்தரர்சென்றடைந்தார். பெரியான் என்ற சிவனடியார் தினைப்புனம் உழுதுகொண்டிருக்கும்போது இறைவன் அங்குவந்து சோறு கேட்க, அதன்பொருட்டு அவர் ஊருக்குப்போய்த் திரும்புவதற்குள், தினைவித்தி முற்றி விளைந்திருக்கச் செய்த காரணத்தால். இத்திருத்தினைநகர் காரணப்பெயர் பெற்றது.
அடுத்து சுந்தரர் தில்லையின் எல்லையை அடைந்தார் அங்கே கயல்பாயும் குளத்தையும், மலர்கள்சூழ்ந்த சோலையையும்கண்டார் இவற்றைக் கண்டாரின் மூவகை மலங்களும் நீங்கும்! ‘’ஆணவமாதி மூன்று வலிய பாசங்கள். மும்மலங்கள் அறுதலாவது, கன்ம மலத்திற் சஞ்சிதம் அத்துவ சுத்தியாலும், உடல் முகந்து கொண்ட பிராரத்தம் அநுபவத்தாலும், ஆகாமியம் சிவஞானத்தாலும் அழியவும்; அஃதழியவே, மாயாமலம் ஞாயிற்றின் ஒளிமுன் விளக்குப்போலச் சிவசத்தியிலடங்கவும்; ஆணவமலம் ஞாயிற்றின்முன் இருள்போலச் சிவசந்நிதியின் முன்னர் வலியழிந்து கிடக்கவும் பெற்றுக்கெடுதல். வீடருள் எல்லை என்க. வீடருள் தில்லை என்று கூட்டி யுரைத்தலுமாம்’’. உயிர்கள், இங்கு வருமுன் தமக்கு இருந்த பசுத்தன்மை இங்கு வந்தவுடன் திரியப் பெற்றுச், சிவத்தின் தன்மை அடையும் என்பதை ‘மும்மையா மலங்களற வீடருள்’ என உரைத்தார் . இவ்வாறு விளக்கிய உரையை உணர்ந்துகொண்டால்தான் அடுத்துவரும்பாடலின்நயம்புலப்படும் .அங்கே இறைவனை எப்போதும் அருகிலிருந்து காணக் கடலே அகழியாகிச் சூழ்ந்தது! அங்கே கருவறையுள் நடனமாடும் கழல் மலரின் திருவருள் தேனை நுகரும்விருப்பால், வண்டுகள் தாழம்பூவில் துதைந்து திருநீறணிந்த அடியாராகித் துதித்து முரன்றன! உள்ளே தில்லைப் பதியில் மாடமாளிகைகள் வரிசையாய் உயர்ந்து தோன்றின. அம்மாளிகைகள் பொருட்செல்வத்தின் சிறப்புடன் அருட்செல்வமும் பெற்றுச் சிறந்தோங்கின! இதனைத் திருஞானசம்பந்தர்,
‘’செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் வளர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழல்ஏத்துஞ் செல்வம் செல்வமே!’’
என்றுபாடுகிறார். இப்பாடலில் ஏழுமுறை செல்வம் என்ற சொல் அமைந்து அம்மாளிகைகளின் பொருட்செல்வம், அருட்செல்வம் ஆகியவற்றின் உயர்வைக் காட்டுகின்றது! அவை போகத்தை வளர்க்கும் பொருட்செல்வம் பெற்ற குபேரனின் பட்டினம் போலக் காட்சியளித்தன! அச்செல்வம் மிக்க மாளிகைகள் வரம்பின்றி வானில் ஓங்கிய கோபுரங்களுடன் காட்சியளிக்கின்றன! அக்கோபுரங்கள் வானையே வளைத்து விழுங்குவன போல வளர்கின்றன! இதனைச் சேக்கிழார்,
‘’போக நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கி
மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகைக் குலம்’’
என்று பாடுகிறார். அங்கே வெண்கொடிகள் வானில் அசைந்தாடுகின்றன. மாளிகைகளின் உள்ளே அந்தணராகிய தவஸ்ரேஷ்டர்கள், ஓமாக்கினியை வளர்க்கும்போதே, உள்ளத்தை ஒடுக்கி தியானமும் பழகுகின்றனர்! அவர்கள் எழுப்பும் யோகப்புகை வானெங்கும் பரவுகின்றது.
‘’ஓமப்புகை வானிற்கு அடுப்பன – பொருந்துவன. [பிற புகைகள் (இயந்திரங்களின் புகை) அவ்வாறு அடுக்காதன] ஓமப்புகை ஆகிய மேகம் – புகையின் விளைவாம் மேகம் – என இருபொருளும் கொள்க. ஓமம் மேகத்துக்குக் காரணமாதல் குறித்தவாறுமாம்.
அங்கே அங்குமிங்கும் பரவியுள்ள மேகங்களின் இடையே வெள்ளிமின்னல்கள் கொடிகளாய்ச்சுடர்கின்றன! இவை யோகசிந்தையின் மலர்ச்சி! தில்லைத்தலம்,இருதயாலயம்எனப்படும்உள்ளத்தலமும், தகராலயம் எனப்படும் யோகத்தலமும் ஆதலால் உள்ளே சிதம்பர ரகசிய வெளியிலும், புறத்தே தகராகாச வெளியிலும், இறைவன் விளங்குகிறார். அவரை அந்தணர்கள் தியானமாகிய தகரோ பாயத்தின் வழியே வெளியிலிருந்து உள்ளே இழுத்துச் சிந்தையில் வைத்துக் கூட்டுகின்றனர். ஆகவே பரவெளியில் கூத்தாடும் இறைவன் கருவறைக்குள் சிதம்பர ரகசிய வெளியாக விளங்குகிறார்! இதனையே புலவர்கள் ‘’தில்லைவெளி’’ என்று சிறப்பித்துப் பாடுவார்கள். இனி முழுப்பாடலையும் பயில்வோம்!
‘’போக நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கி
மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகைக் குலம் மிடைந்த பதாகை
யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓமதூமம் உயர்வானில் அடுப்ப
மேக பந்திகளின் மீதிடைஎங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும்.”
இப்பாடலில் கொடிகள் மின்னல் போல ஒளிர்கின்றன! சிலப்பதிகாரத்தில் கோவலனை மதுரை மதில்களின் கொடிகள், வராதே என்று கூறுவதாகப் பாடுகிறார்!
‘’போர் உழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பன போல மறித்துக் கைகாட்ட ‘’
என்பது அவர் பாட்டு. வில்லி பாரதத்தில் கண்ணன் வாழும் துவாரகை நோக்கி துரியோதனன் படைத்துணை கேட்க வரும்போது, துவாரகை மதிலின் கொடிகள், எங்கள் கண்ணபிரான், பாண்டவர்க்கே படைத்துணை யாவான், துரியோதனா, நீ மீண்டு போ !’’ என்று கூறுவது போல் பக்கவாட்டில் அசைகின்றன என்று வில்லிப்புத்தூரார் பாடுகின்றார். அப்பாடல் ,
‘’ஈண்டுநீ வரினும் எங்கள் எழிலுடை எழிலி வண்ணன்
பாண்டவர் தங்கட் கல்லால் படைத்துணை ஆகா மாட்டான்,
மீண்டுநீ போதி! என்று அவ் வியன்மதில் குடுமி தோறும்
காண்டகு பதாகை ஆடை கைகளால் தடுப்பை போன்ற!’’
என்பதாகும். கம்பராமாயணத்தில் மிதிலை வீதிகளின் குறுக்கே கயிற்றில் கட்டப் பெற்ற கொடித்துணிகள், ‘’இராமா, சீதை உனக்காக இங்கே காத்திருக்கிறாள்! விரைந்து வா !’’ என்று கைகளை அசைத்து அழைப்பதுபோல மேலும் கீழுமாக அசைகின்றன! என்று கம்பர் பாடுகின்றார்!
‘’மையறு மலரின் நீங்கி யாம்செய்மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்றச் செழுமணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடிநகர், கமலச் செங்கண்
ஐயனை, ‘’ஒல்லை வா !’’ என்று அழைப்பது போன்ற தம்மா!’’
என்பது அப்பாடல்!
சேக்கிழாரின் பெரிய புராணப்பாடலில் வரும் தில்லை மாளிகைப் பதாகைகள், மேகங்களின் இடையில் மின்னல்போல் மின்னி, ஒளியின் உருவமாகிய இறைவன் தில்லைக் கருவறைக்குள் ஒளிவெளியாக – ஆகாசமாக- விளங்குகிறான், வந்து தரிசியுங்கள்!’’ என்று நுட்பமாக உணர்த்துவதுபோல் உள்ளது! சேக்கிழார் பாடலின் நயம் இது!