-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-45

45. பெரியாரைத் துணைக்கோடல்

குறள் 441:

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்

அறம் உணர்ந்த, தன்னைய விட மூத்த அறிவாளியோட நட்பப் பெறுத மொறைய ஆஞ்சு அறிஞ்சு தெரிஞ்சுக்கிடணும்.

குறள் 442:

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

வந்த துன்பத்தப் போக்கி இனி துன்பம் வாராம பாத்துக்கிடுத பெரியவங்கள தொணையா வச்சிக்கிடணும்.

குறள் 443:

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்

பெரிய மனுசங்களுக்கு வேணுங்கது எல்லாம் செஞ்சு அவங்க கிட்ட ஒறவு வச்சுக்கிட்டு அவர் காட்டுல வழில நடக்குதது ரொம்ப ஒசந்த பலம்.

குறள் 444:

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை

தன்னைய விட அதிக புத்தியுள்ள பெரியவுகளோட ஒட்டுதலா இருந்து அவுக சொல்லுத வழியில நடக்கது எல்லாத்தையும் விடச் சிறந்தது.

குறள் 445:

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

கண்ணு கணக்கா எல்லாத்தையும் கண்டறிஞ்சு கூறுத அறிவாளிங்கள சுத்திவர வச்சிக்கிடுதது தான் ராசாவுக்கு நல்லது.

குறள் 446:

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்

ஒருத்தனச் சுத்தி தகுதியுள்ள பெரியவங்க இருந்து  அவுக சொல்படி அவன் நடந்தாம்னா பகையாளியாலையும் அவன ஒண்ணுஞ்செய்ய முடியாது.

குறள் 447:

இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்

குத்தங் கொறைய இடிச்சுக்காட்டி புத்தி சொல்லுத பெரியவங்கள தொணையா வச்சிருக்கவன கெடுக்கதுக்கும் ஆள் இருக்குமா என்ன?

குறள் 448:

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

குத்தங்கொறைய சொல்லிக்காட்டி காவலா இருக்க பெரியவங்க இல்லாத ராசா, பகையாளி இல்லன்னாலும் தானா அழிஞ்சு போவான்.

குறள் 449:

முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை

முதல் போடாம வியாபாரம் செய்யுதவனுக்கு அதுலேந்து வார லாபம் கெடைக்காது. அது கணக்கா தான் பெரியவங்க தொணையில்லாத ராசாவுக்கும் அவகளால வருத பயனப் பெற ஏலாது.

குறள் 450:

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்

நல்லவங்க கிட்ட ஒட்டுதலில்லாம இருக்கது, பல பேரோட பகையினால வெளையுத தீமய விட பத்து மடங்கு தீமய கொடுக்கும்.

(அடுத்தாப்லயும் வரும்…..)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.