-நிர்மலா ராகவன்

நலம்…நலமறிய ஆவல் (159)

நம்மோடு பிறரும் மகிழ

இது விந்தையான உலகம். லட்சாதிபதி கோடீஸ்வரனாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். கோடீஸ்வரனோ, தன்னிலும் அதிகச் சொத்து சேர்த்திருப்பவருடன் போட்டி போடுகிறார். பணத்தால் மகிழ்ச்சியையோ, திருப்தியையோ வாங்க முடியாது என்று இவர்கள் அனைவரும் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

பிறருக்கும் நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையுடன், தாம் எண்ணியதைச் சாதித்தவர்களுக்குத்தான் சிலை வைக்கிறார்கள்.

`என்னால் எதுவும் முடியாது!’ என்று மூக்கால் அழுபவர்கள், தன்னம்பிக்கை குறைந்தவர்கள். மேலானவர்கள் என்று தோன்றுபவர்களின் நடை, உடை, பாவனைகளை அப்படியே பின்பற்றுவார்கள்.

கதை (பார்த்தது)

சிற்றூரிலிருந்து வந்திருந்த ராதாவுக்குப் பெரிய நகரில் நல்ல வேலை கிடைத்தது. தனக்குப் பிறருடன் பழகத் தெரியவில்லை என்ற குறையும் கூடவே ஏற்பட்டது.

அதே அலுவலகத்தில் வேலைபார்த்த சுமனா கலகலப்பாகவும், எல்லாருக்கும் பிடித்தமானவளாகவும் இருந்தாள். அவளைப்போல் தானும் ஆகவேண்டும் என்ற வெறியே ராதாவுக்கு வந்தது.

சுமனா என்ன சாப்பிடுகிறாள் என்று கண்காணித்து, அதையே தானும் வாங்கிச் சாப்பிட்டாள்.

உடன் வேலைபார்த்த ஒருவன் சுமனாவிடம் மோசமாக நடந்துகொள்ள முயல, அவள் பகிரங்கமாக அவன் மானத்தை வாங்கினாள்.

`என்னிடம் எந்த ஆணும் இப்படி மயங்கவில்லையே!’ என்ற முட்டாள்தனமான ஏக்கம் உண்டாயிற்று ராதாவிற்கு. அக்கயவன் கவனத்தைக் கவரும் வகையில், புடவைத் தலைப்பை நழுவவிட்டாள். (எதைத்தான் பின்பற்றுவது என்று கிடையாதா!)

அவள் எண்ணியபடியே அவளை நெருங்கினான். தன் தந்திரம் பலித்துவிட்ட பெருமையில் ராதா மகிழ்ந்து சிரித்தாள்.

நம்மிடம் என்ன இருக்கிறது, என்ன செய்கிறோம், அல்லது எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து நிறைவு கிடைப்பதில்லை. நம்மைப் பற்றி நாம் என்ன எண்ணுகிறோமோ, அதுதான் முக்கியம்.

ராதாவைப் போன்றவர்கள், `நான் பிறரிடமிருந்து மாறுபட்டிருக்கக் கூடாது. என்னைவிட உயர்ந்தவர்களைப்போல் நடந்தால்தான் பிறர் என்னைப் பார்த்துப் பிரமிப்பார்கள்,’ என்று எண்ணமிடுகிறார்கள்.

இத்தகைய எண்ணப் போக்கு நேர் எதிரான விளைவைத்தான் தருகிறது. ராதாவின் நடத்தையை எவரும் சிலாகிக்கவில்லை. அவர்களது முகம்தான் சுளித்தது.

நம்மை நாம் இருக்கிறபடியே ஏற்றுக்கொண்டால்தான் தன்னம்பிக்கை வளரும். அப்போது கிடைக்கும் நிம்மதியால் நமக்கு நம்மையே பிடித்துப்போகும். அதன்பின் பிறரிடம் அன்பு செலுத்தத் தடையேது!

மிகப்பெரும் செல்வந்தர்கள் எல்லா உயிர்களிடமும் அன்பு வைத்து, சம்பாதிப்பதில் பெரும் பங்கைத் தான தர்மங்களுக்காகச் செலவிடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, சம்பாதிப்பது ஒரு விளையாட்டு.

வெற்றி என்பது கொள்ளைப் பணத்தை ஈட்டுவதால் அல்ல. செய்யும் காரியத்தால் திருப்தியும் நிம்மதியும் கூடவே வரவேண்டும் என்பதைப் புரிந்து வைத்திருப்பவர்கள் இவர்கள்.

பில் கேட்ஸ் Bill Gates அமெரிக்காவின் தலைசிறந்த கொடையாளி என்று புகழப்படுகிறார். அப்படி என்ன செய்துவிட்டார்?

பில் கேட்ஸ் அளித்த அமெரிக்க டாலர் 36 பில்லியன் (3,600 கோடி) உலகின் பல நாடுகளிலும் காணப்படும் ஏழ்மையை ஒழிக்கவும், அங்கெல்லாம் கல்வித்திறனையும் ஆரோக்கியத்தைப் பெருக்கவும் உபயோகப்படுகிறது.

அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பட்டப்படிப்பு பயிலும், வெள்ளைக்காரர்கள் அல்லாத ஆயிரம் மாணவர்களுக்கு உபகாரச்சம்பளம் வழங்கும் நற்பணியை மேற்கொண்டிருக்கிறார். இதைத் தவிர, ஊதியம் எதுவுமின்றி, வீட்டு வேலைகளையே செய்துகொண்டிருக்கும் இளம்பெண்கள் கல்வியில் பின்தங்கிவிடுகின்றனர், அதனால் தம் முழுத்திறமையை வெளிக்காட்ட முடியாது போகிறது என்று அந்த நிலைமையை மாற்றும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.

இந்தியாவிலேயே நடிப்புக்கு அதிகச் சம்பளம் வாங்கும் இந்தி நடிகர் ஓர் இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் கழுத்து நிறைய தங்கச்சங்கிலிகள். நிகழ்ச்சி முடியும் சமயத்தில்தான் தெரிந்தது எதற்காக அப்படி — குண்டர் கும்பல் தலைவரைப்போல் — தன்னை அலங்கரித்துக்கொண்டு வந்தார் என்பது.

நன்றாகப் பாடியவர்களைப் பாராட்டும் விதமாக, தன் கழுத்திலிருந்த சங்கிலிகளை ஒவ்வொன்றாகக் கழற்றி அவர்களுக்கு அணிவித்தார்! நடிகர்களிலேயே மிகச் சிறந்த கொடைவள்ளல் இவர்தான் என்று பிறிதொரு நிகழ்ச்சியில் அறிவிக்கக் கேட்டேன்.

தம்மிடமிருப்பதை பிறருக்கும் பகிர்ந்தளிப்பதால் இவர்களுக்கு நிறைவு கிட்டுகிறது போலும்! சிலருக்கு என்ன கிடைத்தாலும் திருப்தி என்னவோ கிடைப்பதில்லை.

கதை

பல வருடங்களுக்குமுன், மலேசியாவிலிருந்து இந்தியா போகும் கப்பலில் பயணித்திருந்தேன். (இப்போது அந்தச் சேவை கிடையாது). கப்பல் ஆடிய ஆட்டத்தில் பலருக்கும் தலைசுற்றல், வாந்தி. கப்பலின் போக்கைப் பழித்தார்கள்.

`இவங்க காசு மட்டும் வாங்கிக்கறாங்க! சாப்பாடு சகிக்கலே!’ என்றது இன்னொரு கும்பல். யாரோ ஒருவர் மட்டும் கூறினார், `இந்தக் கப்பல் 1,600 மைல் கடந்து, குறைந்த செலவில் நம்மை வேறு நாட்டுக்குக் கொண்டுபோகிறதே!’

யாரிடம் என்ன குறை இருக்கிறது என்று மட்டுமே ஆராய்ந்து கொண்டிருப்பதால் நாம் உயர்ந்துவிடமாட்டோம். ஆனால், திருத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், குறையையும், அதை நிவர்த்தி செய்யும் வழியையும் எடுத்துச் சொல்லலாம்.

ஏதாவது நோய்வாய்ப்பட்டு, விரைவில் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தவர்கள் தத்துவார்த்தமாகக் கூறுவது: `ஒவ்வொரு நாளையும் இதுதான் நாம் கடைசியாக வாழப்போகும் தினம் என்று நினைத்து வாழ்கிறேன். என்னைச் சுற்றிலும் அன்பானவர்கள் இருக்கிறார்களே என்று நிறைவாக இருக்கிறது’.

எந்த நிலையிலும் மனம் வெதும்பிவிடாது, இருக்கும் சில நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வது அறிவு.

ஆனால், தம்மிடம் இருப்பதை எண்ணி திருப்தி அடையாது, எதையோ எண்ணி ஏங்குகிறார்கள் பலரும்.

கதை

`நாற்பது வயதிற்குள் நான் லட்சாதிபதி ஆகவேண்டும்!’ என்று அடிக்கடி கூறிவந்தவர் அவர்.

அந்த லட்சியத்துடன், மேலதிகாரிகளின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காகக் கடுமையாக உழைத்தார். அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளையும் முன்னின்று கவனித்துக்கொண்டார். மனைவி மக்களுடனும் சிறிது நேரத்தைக் கழிக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றவில்லை. அவர்கள் தன்னைவிட்டு எங்கே போய்விடப்போகிறார்கள் என்ற அலட்சியம்தான். அத்துடன், ஒவ்வொரு நிமிடமும் காசாயிற்றே!

ஒரு விபத்தில் அவரது குடும்பமே அழிந்துபோயிற்று. `இனி யாருக்காக சம்பாதிப்பது!’ என்ற விரக்தி ஏற்பட்டது அம்மனிதருக்கு.

`இப்போது என் குடும்பத்தினர் வந்து வாசற்கதவைத் தட்டினால், அது லட்சத்திற்கும் மேலானது!’ என்று கதறினார். காலம் கடந்து புத்தி வந்து என்ன ஆகப்போகிறது!

கதை

சில ஆண்டுகளுக்குமுன், நேபாளத்தில் ஒரு சமூக சேவகியைச் சந்தித்தேன். துருக்கி நாட்டைச் சேர்ந்தவள்.

`இந்த மலைப்பிரதேசத்தில் பலரும் போலியோ நோயால் பாதிக்கப்படுகிறார்கள். தகுந்த வைத்தியம் கிடைப்பதில்லை. நான் வருடத்தில் பலமுறை இங்கு வந்து, அதற்கான மருந்துகளை கொடுத்து, பிற தேவைகளையும் கவனித்துப் போகிறேன்,” என்றவளுக்கு முப்பத்தைந்து வயதுதான் இருக்கும்.

“உனக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா?” என்று நான் கேட்டதும், பத்து வயதுக்குட்பட்ட இரு குழந்தைகள் இருப்பதாகத் தெரிவித்தாள்.

`ஊராருக்கு நல்லது செய்வதெல்லாம் கிடக்கட்டும். உன் குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிறாயோ?’ என்று உடனே தோன்ற, “உன் குழந்தைகளுடன் செலவழிக்க நேரம் கிடைக்கிறதா?’ என்று கேட்டேன்.

பெற்றோர் ஆதரவாக இல்லை என்று வருந்தி, தீய பழக்கங்களுக்கு ஆளான எவ்வளவு மாணவ மாணவிகளின் கதைகளைக் கேட்டிருக்கிறேன்! அதனால் அக்கேள்வி தன்னால் பிறந்தது.

அவள் ஆசியாவைச் சேர்ந்தவள். அதனால், `அதிகப்பிரசங்கி,’ என்று என்னைப் பார்த்து முகம் சுளிக்கவில்லை. இன்னொரு தலைமுறையைச் சேர்ந்த என் கேள்வி நியாயமாகப்பட்டிருக்கிறது.

“இயன்றவரை, அவர்களையும் என்னுடன் அழைத்துவருகிறேன்,” என்று பணிவாகப் பதிலளித்தாள்.

கதை

ஐம்பது வயதான பெண்மணி உமா என்னுடன் பிரயாணம் செய்துகொண்டிருந்தாள்.

நாலைந்து நாட்களுக்குப் பிறகு, “நீங்கள் ஏன் கல்யாணமே பண்ணிக்கொள்ளவில்லை?” என்று கேட்டேன், பேச்சுவாக்கில்.

“எங்கம்மா சமூக சேவகி. வீட்டில் இருந்ததே அபூர்வம். என்னவோ, என் அப்பாவுக்கும் எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கணும்னு தோணலே!” என்றாள் விரக்தியை மறைக்காது.

உமா பெரிய உத்தியோகத்தில் இருந்தாள். பிறர் மதித்தார்கள். ஆனாலும், தனிமையிலேயே வாழ்க்கையைக் கழிக்கவேண்டும் என்ற நிதரிசனத்தில் அவளுக்கு நிறைவு கிடைக்கவில்லை. ஏனெனில், பெற்றோர் அவளுடைய நலனைப்பற்றி யோசிக்கவில்லை. அதற்கான அவகாசமோ, ஆர்வமோ அவர்களுக்கு இருக்கவில்லை.

பிறருக்கு நன்மை செய்கிறோம் என்று, குடும்பத்தைக் கவனிக்காமல் விடலாமா?

ஒருவர் தன் சொந்த திருப்திக்காக தன்னைச் சேர்ந்தவர்களின் மகிழ்ச்சியைப் பறிப்பது என்ன நியாயம்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *