-மேகலா இராமமூர்த்தி

நித்தி ஆனந்தின் புகைப்படக் கருவி பதிவுசெய்துவந்திருக்கும் படமிது. இதனை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 213க்கு அளித்திருப்பவர் சாந்தி மாரியப்பன். நித்திக்கும் சாந்திக்கும் என் நன்றிகள்!

சிந்தனையை முகத்தில் தேக்கி வாயிலையே ஆவலோடு நோக்கியிருக்கும் இந்த முதுமகளுக்குத் துணை, சுவரில் இணையாகக் காட்சியளிக்கும் கண்ணேறுபோக்கு விநாயகர்கள் தாமோ?

இப்படத்துக்கேற்ற கவிதைகள் வரைய ஆவலோடு காத்திருக்கும் கவிஞர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்!

*****

காதல் நாயகன் தன்னோடு வாசம் செய்யாது போனாலும் அவன் வரவை எதிர்நோக்கியே காத்திருக்கும் இந்தப் பெண்மணியின் நெஞ்சமெங்கும் அவன் நினைவுகளின் சுவாசம்தான் என்று நெகிழ்கின்றார் திரு. சுந்தர்.

தன் எழிலை போற்றும்
மாந்தர்தம் பரவிகிடக்கும்
இப்பூவுலகில்
உன் சிந்தையை விட்டு அகலாத
காதல் நாயகனின்
வரா வருகையை
நித்தமும் எதிர்நோக்கி
வீற்றிருக்கும் அன்னையே
நீ பூண்ட இக்கோலம் ஊரறியும்
உன் நினைவுகளின் ஏக்கங்களை
முதற்கடவுள் அறியாத போதும்
உன் வழிபாட்டில் சிறிதும்
குறைவில்லை
உன் நெற்றி இறக்கிய திலகம்
பரிகார மோட்சமாக
அறுகால்படியை அலங்கரிக்கின்றது.
வறுமையின் வாசம் வீட்டை நிறைத்தாலும்
அன்பானவனின் நினைவுகளைச் சுவாசித்து
வாழும் தாயே நீ என்றுமே இல்லறத்தின்
 மகாலெட்சுமியே…….

*****

நேற்றைய சொல்வீச்சால் புண்பட்ட இந்த மனத்தின் எஞ்சிய நிம்மதியும் கண்பட்டுக் கழியாதிருக்கக் காவலிருக்கிறார் கண்திருஷ்டி கணபதி என்கிறார் திருமிகு. சக்திப்ரபா.

நேற்று வீசிய ஏச்சாலே
சொல்பட்டுச் சிதறிய மனம்
புண்பட்டு இற்று விடுமென
நூத்துப் போன சேலையுடன்
வாசற்படியில் வாசமற்றுக்
காத்துக் கிடக்கும் கணங்களில்
எஞ்சிய கணநேர நிம்மதியும்
கண்பட்டுக் கழியாதிருக்க
அயராது காவலிருக்கும்
கண்திருஷ்டி கண்பதி

*****

அறிவுக்கண் திறக்கக் கல்விகற்ற பிள்ளைகளால்தாம் இன்று முதியோர் இல்லங்கள் அதிகமாய்த் திறக்கின்றன; இந்நிலை என்று மாறும்? என்று வேதனையோடு  வினவுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

குறையுமா…?

பருந்தை எதிர்க்கப்
பறந்து காக்கும் தாய்க்கோழிபோல்
பிள்ளைகளைப்
பாதுகாத்து ஆளாக்கிய தாய்,
வருந்திக் காத்திருக்கிறாள்
எமனின்
வரவுக்காக..

படித்த பிள்ளைகளைப் பெற்ற
பல தாய்களின்
நிலை இதுதான்..

அறிவுக் கண்கள் திறக்க
அவர்கள் கற்ற கல்வியால்
இன்று அதிகமாய்த் திறக்கின்றன
முதியோர் இல்லங்கள்..

மாறுமா இந்த அவல நிலை,
ஏங்கிக் காத்திருக்கும்
இத்தகு அன்னையரின்
எண்ணிக்கை குறையுமா-
காத்திருப்போம்…!

*****

”ஏக்கமதைச் சுமந்து ஏழ்மையைப் பூண்டு அமர்ந்திருக்கும் ஏந்திழை நீ!” என்று இந்த அம்மையை  வருத்தத்தோடு அடையாளப்படுத்துகின்றார் திருமிகு. சத்யா இரத்தினசாமி.

ஏழ்மை

ஏக்கமதைச் சுமந்த
விழிகள் மட்டும்
ஏழைக்கு மாறவில்லை
இற்றை மட்டும் – என
எடுத்துக்காட்டாய் வீற்றிருக்கும்
ஏழ்மை அணி பூண்டமர்ந்த
ஏந்திழை நீ…!

*****

நீண்ட வாழ்க்கையில் பயிற்றுவிக்கப்படும் வறுமையைப் படிமமாய்த் தம்  கவிதையில் வடித்துத் தந்திருக்கின்றார் முனைவர் ம. இராமச்சந்திரன்.

நிறைவின் அறியாமொழிகள்

வாழ்தலின் அர்த்தத்தில்
உழைப்பின் அதிசுகத்தில்
மனதின் அடியாழ விழைவின்
இயற்கை நுகர்ந்து கலை தெளிந்து
நீண்ட வாழ்க்கையில்
பயிற்றுவிக்கப்படும் வறுமையும்
வறுமையில் பணமும்!

*****

வாயிற்படியில் வீற்றிருக்கும் முதுமகளையும் அவள் முகத்திலே குடிகொண்டிருக்கும் வெறுமையையும் கண்ணுற்ற நம் கவிஞர்கள் உணர்ச்சிப் பிழம்புகளாய் மாறி  நம் உள்ளந்தொடும் கவிதைகளை அள்ளித் தந்திருக்கின்றார்கள்; அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பது…

சிறகு முளைத்து நகரம் பறந்த செல்லப்பறவைகள்
இவ்வருடப் பண்டிகைக்கேனும்
கூடு திரும்புமென்னும் நம்பிக்கையோடு
குந்திக் கிடக்கிறது தாய்ப்பறவை!

உள்ளும் புறமும் நடையாய் நடந்து
நோகும் கால்கள் நீவி,
வரவெதிர்பார்த்துப் பார்த்துப்
புரையோடிய கண்கள் பூத்து,
புன்னகை மறந்த உதட்டில் துடிக்கும்
சிறுவிம்மல் மறைத்து
பஞ்சப்பராரியெனக் காத்திருக்கும்
நெஞ்சத்தின் தவிப்பு யாருக்குத் தெரியும்?
உடையின் கிழிசல் பார்வைக்குத் தெரியும்
இந்த உள்ளத்தின் கிழிசல் யாருக்குப் புரியும்?

துணையிலா முதுமை துயரம்
உறவிலாத் தனிமை பெருந்துயரம்
அடக்கிவைக்கும் கேவல் வெடிக்குமுன்னே
அன்பாயொரு விளிப்பு அம்மாவென வருமோ…?
முடக்கிவைக்கும் ஆவி விடுபடுமுன்னே
முன்னால் வந்து முகங்காட்டிப் போகுமோ…?

”துணையிலா முதுமை துயரம் நிறைந்தது. அதனினும் பெருந்துயரம் தருவது உறவிலாத் தனிமை. பிள்ளையின் வரவை எதிர்பார்த்து, விழிபூத்துக் காத்துக்கிடக்கும் இந்த முதியோளின் ஆவி விடுபடுமுன் அம்மா எனும் விளிப்பு இவள் காதில் விழுமோ?” என்ற கூரிய சொற்கள்மூலம் நம் விழிகளை ஈரமாக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. கீதமஞ்சரியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 213-இன் முடிவுகள்

  1. சில படக்காட்சிகள் பார்த்தவுடனேயே உள்ளத்தை ஊடுருவி உலுக்கிவிடும். அப்படியான ஒரு படம்தான் இது. ஒரு முதியவளின் தனிமை, யாரையோ எதிர்பார்த்து ஏமாற்றமும் துளி நம்பிக்கையுமாய் வாசல் அமர்ந்திருக்கும் கோலம் என பார்த்தவுடனேயே மனம் பிசைந்துவிட்டது. இக்காட்சிக்கான அனைத்துக் கவிதைகளிலும் இந்த உணர்வைக் காண முடிந்தது. பங்குபெற்ற கவிதைகளுள் என்னுடைய கவிதை சிறப்புக்கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்வளிக்கிறது. திருமதி மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் வல்லமை குழுவினர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. வல்லமை தளம் திறப்பதில் சிக்கல் இருந்தமையால் உடனடியாக பின்னூட்டமிட இயலவில்லை.

Leave a Reply

Your email address will not be published.