கலகம் பற்றிய கல்வெட்டு பதிவுகள்
-சேஷாத்ரி ஸ்ரீதரன்
கலகம் என்றால் சச்சரவு சண்டை எனப் பொருள். இதாவது, இருதரப்பார் நடுவில் நிகழும் பிணக்கு. இதன்போது ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் மீது அநியாயாமாக நடந்து கொள்வதும் நேரும். கல்வெட்களில் அது பற்றிய பதிவை கீழே காணலாம்.
நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் திருத்துறைப்பூண்டி மூன்றாம் இராசராசன் 2 ஆம் ஆண்டு (1218 பொயு) 85 வரிக் கல்வெட்டு. இடங்கருதி எண்ணிற்கு பகரமாக சாய்வுக் கோடு இடப்பட்டுள்ளது.
ஸ்வஸ்த்திசிரி திரிபுவனச் சக்கரவத்திகள் / சிரிராசராச தேவற்கு யாண்டு / இரண்டாவது ஆவ _ _ _ / இராசேந்திர வளநாட்டு உடையார் / திருத்துறைப்பூண்டி _ _ _ _ _ திருமடைவிளாகத்துக் கும்பிட்டிருக்கும் ஆண்டார்களில் / சிவஞானசம்பந்தரும் கிருதயதேவனும் / இவ்விருவோம் காசிக்ஹாவிக்குடி / ஆண்டார் திருச்சிற்றம்பலமுடைய / முதலியார் இத்திருத்துறைப் பூண்டியிலே / எழுந்தருளினவாறே இவரை கண்டு / பூண்டி உடையார்களுக்கும் மங்கலங்கி / ழையார்களும் எம்பெருமான் / இத்திருப்பதியிலே எழுந்தருளி இருக்கவேணும் / இங்குத்தகைக்கு நாங்கள் ஒரு குகை எடுத்து / தருகிறோம் என்று சொல்லி பிச்சையும் / தங்கள் அகங்களிலே ஆக்கி படைத்து அமுது செய்துவார நீக்கச்சிதை பின்பு / எழுந்தருளி இருக்க குகையும் எடுக்க வேண்டுகையில் / வடகரையிலே பூண்டி உடையாருக்கு காணியான நிலத்திலே ஆற்றங்கரைக்கு / வடக்கே எழுபதி குழி நாயனாற்கு பரிவத்திச்ச / இக்குழிக்கு உடையார் ஸந்னிதிக்கு தெற்காக / பண்ணி சாதனமும் கொண்டு குகையும் எடுத்து / இவர் எழுந்தருளி இருந்து வாச்சே / இப்பூண்டி உடையாருக்கு முதலியார் இனக்கு / பச்சைப்படைத்து வாரா நீக்க நீங்கள் உங்கள் / மடத்தில் வந்து தங்கின் தேசாந்திரி / முதலிகள் அமுது செய்ய பெறாதே போக நில் என்று அருளிச் செய்தவாறே பின்பு / இப்பூண்டி உடையார் தங்கள் காணியாந தென்கரை / நிலத்து பாண்டியக்கல்லிலே மேற்க்கு இட்டு / மாவரை நிலம் விளைநிலமும் அரைமாநிலம் புஞ்சை / இந்நிலம் இரண்டு மாவும் தேசாந்திரிகளுக்குடலாக / இறையிலி செய்து குடுக்க இவ்வகையிலே / இதன் நிலம் அனுபோவித்து தேசாந்திரிகளுக்கு / அமுதுமாக்கி படைச்சி வைச்சதே பெரியதேவர்க்கு / இரண்டாவது நாளிலே குகையிடி கலகத்திலே இஸாதானங்கள் / அன்தாபமன் இதுக்கு பின்பு முதலியார் திருச்சிற்றம்பலம் / உடைய முதலியார் இருபத்துநாலாவது வரை / இப்படி அனுபவித்து வாச்சிதே இவர்களுக்கு இருபத்திநாலாவது / வரையிலே சிவலோகத்துக்கு எழுந்தருளினார் இம் / மடத்து முதலியார் சிவஞானசம்மந்தரும் முதலியார் கிருதயதேவரும் / இரண்டு குகையிலும் எழுந்தருளி இருக்கையிலே / எழுந்தருளி இருந்தமை இப்படி அறிவேன் பூண்டி / உடையான் திருத்துறை நாயகன் இப்படிக்கு இவை என் எழுத்து / இப்படி அறிவேன் நெடுமணலுடையான் ஆதிச்சதேவன் எழுத்து/ இப்படி அறிவேன் நெடுமணலுடையான் நம்பியாரு ஊரான் / எழுத்து இப்படி அறிவேன் மாதேவபட்டன் மகன் இருன்கிரிபட்டன் / எழுத்து இது பூண்டி உடையான் அஞ்சல் என்றாதுறையன் / பிள்ளையாழ்வான் சயிஞாதனமைக்கும் இப்படிக்கும் / இவை திருத்துறை நாயகவேளான் எழுத்து / இப்படி அறிவேன் இவை / திருமாணிக்கப்பிள்ளை எழுத்து / இப்படிக்கு இவை இராபிச்சன் எழுத்து / இது தில்லைனாயபிச்சன் / சதிசாதன்மைக்கும் / இப்படிக்கு / இவை வேடம்பரம் உடையான் எழுத்து / இப்படி அறிவேன் / கங்கைகொண்ட பிச்சன் / எழுத்து பூமி உடையான் / அஞ்சல் என்றான் திருவாலவாய் / உடையான் / சஞாதன்மைக்கு இவை / குடப்பலம் உடையான் எழுத்து / இப்படி அறிவேன் / நெடுமணல் உடையான் / திருத்துறைநாயன் உடைய பிள்ளை / ஆண்டான் எழுத்து / இப்படி அறிவேன் மங்கலங்கிழையான் எழுத்து. / இப்படிக்கு இவை / நெடுமணலுடையான் ஆதிச்ச தேவன் எழுத்து / நெடுமணலுடையான் திருத்துறைபிச்சன் / புலியூரந் சைச சாதனமைக்கு / கடவக்குடையான் எழுத்து / இப்படி அறிவேன் / திருவீதிப்பிள்ளையார் எழுத்து / இப்படி அறிவேன் / நம்பியார்யூரான் திருவீதி / பிள்ளை மகன் / தேவிமுன்டான் சைச்சாதனமைக்கு / இவை சேந்த மங்கலமுடையான் எழுத்து.
திருமடைவிளாகத்து – கோவிலைச் சுற்றி உள்ள இடம்; கும்பிட்டிருக்கும் ஆண்டார் – வணங்கிய அடியார், devotees; தகைக்கு – தங்குகை; குகை – முனிவர் இருப்பிடம், தவக்குடில்; வாச்சே – வரச்சே, வருகையில்; முதலியார் – தலைவர், சுவாமிகள், மடாதிபதி; நீக்கச்சிதை – ; தேசாந்திரி – ஊர் ஊராய் திரியும்; உடலாக – மூலமாக; இஸாதானங்கள் – ; அன்தாபமன் –
சோழவேந்தன் மூன்றாம் இராசராசனின் 2 ஆம் ஆட்சி ஆண்டில் (1218 பொ.யு) இராசேந்திர வளநாட்டு திருத்துறைப்பூண்டி இறைவர், “திருத்துறைப்பூண்டி கோவில் சுற்றிடத்தில் வாழ்ந்திருக்கும் அடியார்களில் திருஞானசம்பந்தனும் கிருதயதேனும் ஆகிய நாங்கள் இருவரும் காசிக்காவிக்குடி அடியார் திருச்சிற்றம்பலமுடைய முதலியார் இத்திருத்துறைப் பூண்டியில் வந்துதங்கி இருக்கையில், இவரை நேரில் கண்டுப் பூண்டி உடையார்களும் மங்கலங்கிழையார்களும் ‘எம்பெருமான் இத்திருப்பதியிலே எழுந்தருளி இருக்கவேண்டும்’ என்று வேண்டி ‘இங்குத் தங்குகைக்கு நாங்கள் ஒரு தவக்குடில் எழுப்பித் தருகிறோம்’ என்று சொல்லி அவருக்கான பிச்சையையும் தங்கள் வீடுகளிலேயே ஆக்கி படைத்து உண்டுவித்துவர வடகரையில் பூண்டி உடையாருக்கு காணியான நிலத்தில் வினைக்கருவி கொண்டு குகையும் கட்டிஎழுப்பி அதில் இவர் எழுந்தருளி இருந்து வரும்நேரத்தே பூண்டி உடையார் ஊர் ஊராய் திரிபவர் உண்ண இறையிலி நிலம் ஒதுக்குகின்றார். அதில் இந்த தேசாந்திரிகளுக்கு சோறு ஆக்கிப் படைக்கப்படுகின்றது. இவ்வாறு நடந்து வர பெரியதேவர் இறப்பிற்கு இரண்டாவது நாளில் குகை இடிப்பு கலகம் நடந்தது. இடித்தவர் யார் என்ற குறிப்பு இல்லை. இதற்கு பின்பு திருச்சிற்றம்பலமுடைய முதலியார் 24 –ம் நாள் சிவலோக பதவி அடைந்தார். பின்பு முதலியார் சிவஞானசம்மந்தரும் முதலியார் கிருதயதேவரும் இரண்டு குகையில் எழுந்தருளி இருக்கையில் எழுந்தருளி இருந்தமையை அறிவேன் என்று 24 பேர் கையொப்பமிட்டு உள்ளனர்.
தொடக்கத்தில் குறிப்பிடப்படும் பூண்டி உடையார் என்பவரே பெரியதேவன் என்று குறிக்கப்படுகின்றார். இவர் குகைஇடி கலகத்தில் பாதிப்புற்று 2 -ம் நாள் இறந்திருக்க வேண்டும். இதன் பிறகு திருச்சிற்றம்பலமுடைய முதலியார் 24 –ம் நாளில் இறந்துபோகின்றார். அவருக்குப் பின் சிவஞானசம்மந்தரும், கிருதயதேவரும் இரண்டு குகைகளில் முதலியார் (சுவாமிஜி) ஆகிவிடுகின்றனர். இதை கையொப்பமிட்ட பெரியோர்கள் நேரில் வந்திருந்து கண்டு ஆசிபெற்றனர். முதலியார் என்ற சொல் அக்காலத்தே எந்த சாதியையும் குறிப்பதல்ல. அதற்கு தலைவர் என்ற பொதுப் பொருள் தான் இருந்தது. இதில் தலைவர், படைத் தலைவர், தவக்குடிலின் தலைவர் ஆகியோர் அடங்குவர். தமிழில் தலைவர் என்பதை சமஸ்கிருதத்தில் சுவாமி என்பர். அந்த சுவாமி என்பது சுவாமிகள் ஆகி இக்கால் சுவாமிஜி ஆகிவட்டது. இந்த சுவாமிகள் என்ற சமஸ்கிருத சொல் புழக்கத்தில் வரும் முன், சுவாமிகள் என்பதை முதலியார் என்று விளிதனர் என்பதற்கு இக் கல்வெட்டு சான்றாக உள்ளது.
பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக். 296-298, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர் செல்வம் 098867 69865 / 09632967153. ARIEp 1999, B. No: 272
நாகப்பட்டினம் மாவட்டம், நாகை வட்டம், கீழையூர், முதலாம் சுந்தரபாண்டிய தேவர் 10 ஆம் ஆண்டு (பொ.யு 1261) 5 வரிப் பெருங் கல்வெட்டு.
- ஹரி ஓம். ஸ்வஸ்த்திசிரி கோச்சடபன்மரான சிரி சுந்தர பாண்டிய தேவற்கு யாண்டு 10–த்தாவது மகறநாயற்று பூர்வ்வபச்சத்து பஞ்சமியும் செவ்வாய் கிழமையும் பெற்ற விசாகத்து நாள் இராசேந்திர வளநாட்டு ஆளநாட்டுப் பிரமதேயம் சிரிராசராச சதுர்வேதி மங்கலத்து உடையார் பார்த்தீஸவரமுடையார் கோயிலில் மூவாயிரவன் திருவெடுத்தக் கட்டிலிலே முதலிகளும், பட்டர்களும், மஹாசனமும் பெருங்குறி செய்து கொண்டு இருந்து
- விவஸ்த்தை பண்ணியபடி நம்மூர் அரையன் மூவாயிரகோண் நாடாழ்வான் முன்னாள் பள்ளிகள் கலகம் செய்ததின் நாளில் தாமதைக் கீழ் காரியஞ் செய்தார் கணக்கு எழுதினாரும் அன்னியாயத்தால் பிரம்மச்சை தங்கள் விலையாக எழுதுவித்துக் கொண்டு அன்னாளில் அனுபவித்துப் போந்த நிலங்களாய் உலகுடையப் பெருமாள் இன்னிலங்கள் அவர்களைத் தடுத்து _ _ _ முன்னாலிலே பிரம்மசேத்திரமாக பற்றிக் கொள்வதென்று முன்னாள் பிரஸாதஞ் செய்து நினைப்பிட்டருள திருமுகம் வருகையில் திருவாசகம் கல் விநியோகம் திருமுகச் சம்படம் உள்ளிட்டு முதலான பணத்துக்கு அன்னியாயங்கள் விலையாக நிச்சயத்து நாம் பணம் ஒடுக்கி விற்றின நிலத்து நம்முடையார் கோயிலில் பாண்டி மண்டலத்து குடநாட்டு ஆலகுமங்கலமான வீரபாண்டியன் மடிகைமாநகரத்து நாயனார் அழுகன் சிங்கநாயன் எழுந்தருளிவித்து உடையார் நரசிங்கஈஸ்வர முடையார்க்கு பாசைக்கும் அமுதுபடி சாத்துப்படிக்கும் திருப்பணிக்கும் திருநாள் எழுந்தருளி _ _ _ கொள்படிக்கும் திருநாமத்துக் காணியாக கொண்டு இட்ட
- பிடாகை உத்தமச்சோழநல்லூரில் பட்டினம் பெருவழிக்கு கிழக்கு திருவரங்கவதிக்கு மேற்கு விருதராச பயங்கர நல்லூர் எல்லைக்கு நடுவுபட்ட காட்டுக்கண்டத்து தெற்கடைய நிலம் கோவன் நிலத்து தெற்கடைய தடி பலவால் கங்கைகொண்ட சோழநல்லூர் சுகுவ கிழக்கு தாரவாய்க்காலுக்கு கிழக்கு வடக்கு கூத்த திருவரங்க வதிக்கு கிழக்கும் ஆக நிலம் குலோத்துங்க சோழநல்லூரில் _ _ _ பரமேசுவர வாயக்காலுக்கு மேற்கு கூத்து
- வீரராசேந்திர நல்லூரில் காந்திய் சோழவாய்க்காலுக்கு தெற்கு கூத்து பெரிய _ _ _ _ இதன் கிழக்கு தடிபலவால் _ _ _ _ _ பெரியநாச்சி என்று சொல்லப்பட்ட சிறகு _ _ _ _ குத்து ஆக இந்நிலமாவரை அரைக்காணி _ _ _ _ _ _ இன்னமும் இன்னாயனாருக்கு குடுத்த _ _ _ _ _சோழநல்லூரில் கணபதி வாய்க்காலுக்கு வடக்கு தானபாதம் என்று பேர்கூவப்பட்ட தடியில் மூல ஆற்றுவாய்படுகையும் மனைதிடரும் உள்ப்பட இந்நிலம் நாலே முக்காலே ஒருமாவும் ஆக இன்னிலம் பத்தே அரைக்காணி முந்திரகையும் எதிராமாண்டு கார்முதல் இன்னிலத்தால் இறுப்புக்கு வரும் _ _ _ _ ழுத்து ஊருடனே கூட்டிக்கொண்டு ஸந்திராதித்தவரையும் இந்நாயனாருக்கு இறையிலியாக குடுத்தபடிக்கும்
இதன் பிறகு இக்கல்வெட்டு உடைந்துள்ளது.
திருவெடுத்தக் கட்டிலில் – தலைமை ஏற்ற இருக்கையில்; முதலிகள் – படைத்தலைவர்; பெருங்குறி – கருத்துப் பறிமாற்றம் செய்து: விவஸ்தை – தீர்மானம்;
சடையவர்ம சுந்தரபாண்டியனின் 10 ஆம் ஆட்சி ஆண்டின் (1261 பொயு) போது மகர ராசி கூடிய ஞாயிற்றுக் கிழமையும் வளர்பிறையின் 5-ம் நாள் செவ்வாயக்கிழமை விசாக நட்சித்திரம் கூடிய நாளில் இராசேந்திர வளநாட்டில் அடங்கிய ஆளநாட்டு பிரமதேயமான ஸ்ரீ இராசராச சதுர்வேதி மங்கலத்து பார்த்தீசுவரமுடையார் கோயிலில் மூவாயிரவன் தலைமையில் கூடிய கூட்டதில் படைத் தலைவர், பூசகர்கள், பெரியோர் அவையினர் ஆகியோர் கருத்துப் பறிமாற்றம் நிகழ்த்தி ஒரு தீர்மானம் கொண்டபடி கீழையூர் மூவாயிரகோன் நாடாழ்வான் முன்னிலையில், ”முன்னாளிலே பள்ளிகளான வன்னியர் கலகம் செய்த காலத்தில் அதனினும் கீழான செயல் செய்தார் கணக்கு எழுதியவர். அநியாயமாக பிராமணர் நிலங்களை தாம் விலைக்கு வாங்கியதாக எழுதிக் கொண்டு அனுபவித்து இறந்தார் அந்த உலகுடையப் பெருமாள்.
அவர்களின் இந்த செயலைத் தடுத்து இந்நிலங்களை மீண்டும் பிராமணர் வயல்களாக ஆக்க முன்னாளிலே எண்ணியிருந்த நேரத்தில் அதற்கான அரசாணை. வருகையில் திருவாசகம், கல் விநியோகம், திருமுகச் சம்படம் முதலானவற்றுக்கு ஆகும் பணம் அநியாய விலை நிச்சயத்து அதற்கு நாம் பணம் கொடுத்து விற்ற நிலத்தில் நம்இறைவர் கோயிலில் பாண்டி மண்டலத்து குடநாட்டு ஆலகுமங்கலமான வீரபாண்டியன் மடிகைமாநகரத்து நாயனார் அழகன் சிங்கநாயனை வருவித்து இறைவர் நரசிங்கஈஸ்வர முடையாருக்கு பாசைக்கும், அமுதுபடி சாத்துப்படிக்கும், திருப்பணிக்கும், திருநாமத்துக் காணியாக இரண்டு இடங்களில் இறையிலி நிலம் தரப்படுகின்றது”. அந்த நிலங்களின் இருப்பிடம், எல்லை குறிக்கப்படுகின்றது.
பள்ளிகள் ஆன வன்னியர் முன்னாளிலே கலவரத்தில் ஈடுபட்ட போது உலகுடையப் பெருமாள் என்பவர் பிராமணர் நிலங்களை விலைக்கு வாங்கியாதாக பொய் ஆவணம் எழுதி அவற்றை அனுபவித்தார் என்கின்றது இக்கலவெட்டு.
பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக். 294-295, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர் செல்வம் 098867 69865 / 09632967153. ARIEp 1947, B. No: 98
திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோயில் அந்தராள வடக்கு வாயில் மேல். கொங்கு சோழன் வீரராசேந்திரன் 3 ஆம் ஆட்சி ஆண்டு (பொ.யு.1211 நாள் 301) 29 வரிக் கல்வெட்டு. இடங்கருதி எண்ணிற்கு பகரமாக சாய் கோடு இடப்பட்டுள்ளது.
ஸ்வஸ்தி ஸ்ரீ திருபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரிமேல் / கொண்டான் வடபரிசார நாட்டில் ஆளுடையார் திருமுருக / ன் பூண்டி ஆளுடையார் கோயில் சிவபிராமணரில் காசியபன் பிள் / ளை நாயனான பொன்னம்பல நம்பிக்கும் பொன்ன புகழ் வேந்த / நுக்கு நம்மோலை குடுத்தபடியாவது இந்நாயனார் கோயில் / சிவபிராமணக் காணி தங்களது மாதவகள் பேசிக் குலவ / ட்டு முண்டாயிருக்க தம்பியான நாலேமுருகாண்டான் / அஞ்சவைத்து தங்காணியை அழிவு செய்கையாலே / தா நமக்கு மூன்றாவது நாளிலே நம்பக்கலே _ _ _ _ எங்கள் / காணி எங்களுக்கு ஆக வேணுமென்று நமக்கு தரும் அச்சு பத் / தும் தொண்டைமானார் பெறுவமுண்மைக்கு அச்சு மஞ்சும் / அச்சு பதினைஞ்சும் தாங்கள் வைக்கையில் இக்கோயில் / ரையநித _ _ _ _ த்தியங்களும் சைவாசாரி / யங்களும் மு_ _ _ _ல கல _ _ _ _ / விக்கவும்_ _ _ _ கோயில் பரிகலக்கடு பண்ணி / சு நாழியும்_ _ _ _ ந படியில் அட்டிது செம்பாதி / யும் அட்டிது _ _ _ _ அச்சந போகமும் பிடி பி / டியிலும் _ _ _ _ இந்நான்கு எல்லைக்கு உட்பட்ட / தேவதாநமும் எழுத்து _ _ _ _ பட்டன் மற்றும் எற்பட்டனவும் தன் மகன் மக்களுக்கு விலை ஒன்றி தன்ம / தானம் சீதனத்துக்கு உரித்தாகவும் இப்படிக்குச் / செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்ளப் / பெறுவானாகவும் இப்படிச் சந்திராதித்தவரை / செல்வதாக நம் / ஓலை குடுத்தோ / ம் 3 ஆவது நாள் /. 301 இவை நந் / தியம்மந் எழுத்து. / _ _ _ _ .
மாதவகள் – தலைமை கணக்கர் அல்லது கோயில் கணக்கர்; குலவட்டு – உபாயம், வழிமுறை; நம்பக்கல் – என்னிடம் வந்து; அச்சு – பொற்காசு
கோனேரின்மை கொண்டான் கொங்கு சோழன் வீரராசேந்திரனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் 1211 பொ.யு. வடபரிசார நாட்டில் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில் சிவபிராமணர் பொன்னம்பல நம்பிக்கும், (அரையன்) பொன்ன புகழ் வேந்தனுக்கும் கொங்கு வேந்தன் வீரராசேந்திரன் நேரடியாக ஓலை ஒன்றை அனுப்புகிறார். அதில் “சிவபிராமணன் காணி குறித்து தங்களது தலைமை கணக்கர் பேசித்தீர்த்து வழிமுறை தந்துள்ளார். அந்த வழிமுறை செயலாகும் முன்னமே உமது தம்பியான நாலே முருகாண்டான் சிவபிராமணரை அஞ்சுறுத்தி அவரது காணியை அழித்ததாக சிவபிராமணன் மூன்றாம் நாள் என்னிடம் வந்து என் காணி எனக்கு வேண்டும், மீட்டுத் தருக என்று முறைப்பாடு செய்துள்ளான். இந்த சிவபிராமணன் 10 பொற்காசைத் நமக்கு தருகிறான், அதோடு தொண்டைமானும் 5 பொற்காசைத் தருகின்றார். ஆக இந்த 15 பொற்காசையும் நீங்கள் பெற்றுக் கொண்டு” என்பதோடு கல்வெட்டு தெளிவுபட பொருள் அறியமுடியா வண்ணம் ஆங்காங்கே சிதைந்துள்ளது. அதன் பின் இந்நான்கு எல்லை என்பதில் இருந்து கல்வெட்டு தெளிவாகத் தெரிவதில் இருந்து வேந்தன் தேவதானமும் சிவபிராமணனுக்கு நிலமும் கொடுத்து அதற்கு வரிகள் தவிர்த்து இறையிலியாகத் தருகிறான். இந்நிலத்தை சிவபிராமணன் தனக்குப் பின் தனது மகன் அதன் பின் அவனது மக்கள் அனுபவிக்க, விலைக்கு விற்க, தானதருமமாக வழங்க, சீதனமாக வழங்க உரிமையும் தருகின்றான் வேந்தன். இதைக் கல்லிலும் செப்பிலும் வடித்துக் கொள்ள வேணுமாயும் இது நிலவும் ஞாயிறும் நின்று நிலவும் வரை நடக்கக் கடவதாக சொல்கிறான். இந்த ஓலையை வேந்தனின் அணுக்கன் நந்தியம்மன் வேந்தன் சொல்லக் கேட்டு எழுதிக் கையொப்பம் இடுகின்றான்.
இதில் புழங்கும் குலவட்டு என்பதை கொலை வெட்டு என்று புரிந்துகொண்டு இது ஏதோ கலகம் பற்றி சொல்கின்றது என்று தவறாகக் கொண்டு விட்டேன். ஆழ்ந்து படித்தபோது தான் அது வழிமுறை என்று பொருள் உணர்ந்தேன். என்றாலும் தட்டச்சி முடித்ததால் இதனுடன் சேர்க்கின்றேன்.
இக்கோயில் சிவபிராமணர் முன்னம் ஏதோ வட்டிக்கு கடன் பெற்று விட்டு அதைத் திருப்பி வட்டியுடன் கட்டமுடியாமல் போகவே தலைமை கணக்கர் அது பற்றி எச்சரித்து அதற்கு வழிமுறை சொல்லிச் செல்கின்றார் என்று ஊகிக்க முடிகின்றது. அதன் பின் அரையனின் தம்பி வட்டிக்கு அடமானம் வைத்த நிலத்தைப் பாழ்படுத்தி பறிமுதல் செய்கின்றார். சிவபிராமணன் இதை உடனே வேந்தனிடம் முறைப்பாடு செய்கின்றார்.
கல்வெட்டால் தெரியவரும் ஒரு உண்மை என்னவென்றால் வேந்தனுக்கு கீழ் மன்னன் அவனுக்கு கீழ் அரையன் அவனுக்குக் கீழ் கிழான் என்று நான்கு அதிகார அடுக்கு நிலவிவந்ததை காட்டும் கல்வெட்டுகள், இது போக இந்த நான்கு அதிகார அடுக்கினரின் குடும்பத்தவரும் நிர்வாகத்தில் தலையிட்டு அதிகாரம் செலுத்தி வந்தது இக்கல்வெட்டு குறிக்கும் தம்பி நாலே முருகாண்டான் மூலம் தெரிகின்றது. இப்படி இருக்கும் போது தமிழர் அல்லது தமிழராக நடிக்கும் சிலர் முட்டாள்தனமாக ஆட்சியாளரை அந்தப்புரத்திலும் போர்க்களத்திலும் அனுப்பிவிட்டு பிராமணர் ஆட்சி அதிகாரம் செலுத்தினர் என்று கூசாமல் பொய் உரைக்கின்றனரே! அதையும் இந்த சிந்தனை சுருங்கிய தமிழர் நம்புகின்றனரே!! இவர்களை எல்லாம் மீறி ஒரு பிராமணனால் ஆட்சி அதிகாரம் செலுத்த இயலுமா? என்ற கேள்வி அல்லவா எழவேண்டும்!!
பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக் 70 & 71. ஆசிரியர் மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.
மேலும் படிக்க ://groups.google.com/d/msg/vallamai/dO3mHfo-RvU/UkVRl9DOAgAJ