நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-44

 

குற்றங்கடிதல்

குறள் 431:

செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து

இறுமாப்பு , கோவம், காமம் இவையெல்லாம் இல்லாதவங்களோட செல்வாக்குதான் ஒசந்தது.

குறள் 432:

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு

தேவப்படுதவங்களுக்கு கொடுக்காம பேராச வைக்கிதது, தான் பெரிய ஆள் னு நெனைப்புல பெரியவங்களுக்கு மரியாத கொடுக்காம இருக்கது, கெட்ட செயல்ல மகிழ்ச்சியடையதது இதெல்லாம் தலைவனா இருக்கவனுக்கு குற்றங்களாவும்.

குறள் 433:

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்

பழி பாவத்துக்கு பயப்படுத பெரிய மனுசங்க தினையளவு குத்தத்தையும் பனையளவா நெனச்சு அத செய்யாம தங்கள காத்திக்கிடுவாங்க.  .

குறள் 434:

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை

குற்றமே அழிவ உண்டாக்குத பகையாளி. அதனால அக்குற்றத்த செய்யாம இருக்குததயே நோக்கமா வச்சி வாழணும்.

குறள் 435:

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

குற்றம் வருததுக்கு முன்னமே காத்துக்கிடாதவனோட வாழ்க்க நெருப்பு முன்ன இருக்க வைக்கப்போர் கணக்கா அழிஞ்சு போயிடும்.

குறள் 436:

தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு

மொதல்ல தங்கிட்ட இருக்க கொறைய நீக்கிட்டு பொறவு அடுத்தவங்கொறைய சொல்லுத தலைவனுக்கு என்ன கொற வரப்போவுது?

குறள் 437:

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்

செய்ய வேண்டிய நல்ல காரியத்த செய்யாம சேமிச்சு வைக்குத கருமியோட சொத்து வீணா அழிஞ்சு போயிடும்.

குறள் 438:

பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று

மத்தவனுக்கு குடுக்காம சேத்து வைக்கித கஞ்சத்தனம் குற்றங்கள் எல்லாத்திலயும் கொடுங்குற்றம்.

குறள் 439:

வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை

எந்தவொரு காலத்திலயும் தற்பெரும பேசி மார்தட்டிட்டு அலயுதது கூடாது. நல்லது தராத செயல செய்யவும் கூடாது.

குறள் 440:

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்

பொறத்தியாருக்குத் தெரியாம தன்னோட விருப்பத்த நிறைவேத்தத் தெரிஞ்சவனுக்கு பகையாளி செய்யுத சூழ்ச்சி பலிக்காம போவும்.

(அடுத்தாப்லையும் வரும்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *