Author: admin

  • சலனத்தைச் சகித்துக்கொள்!

    -தாரமங்கலம் வளவன்

    வாழ்கையின் வசதிகள் அல்ல,
    அதன் அவலங்களே மனிதனை
    உருவாக்குகின்றன!

    வாழ்க்கையின் அமைதி அல்ல,
    அதன் சலனமே
    வாழ்க்கைப் படகை ஓட்டுகிறது!

    சலனமற்ற வாழ்க்கை
    ஒரு எதிர்பார்ப்புதான்…
    நிஜத்தில்
    சலனமே வாழ்க்கை
    என்றாகும் போது
    சலனத்தைச்
    சகித்துக் கொள்!

    Share
  • பட்டணம் போகணும்

    சேசாத்ரி பாஸ்கர்

     

    என் அப்பா காலமாவதற்கு முன் அவருக்கு எப்படியாவது பென்ஷன் வாங்க கடும் முயற்சி செய்தேன் . கலெக்டர் முதல் கடை ஊழியன் வரை எல்லாரிடம் சொல்லியாகிவிட்டது . அவர் பணத்தை அவர் காண வேண்டும் என்ற ஆசை . ஏகப்பட்ட கடிதம் , தனி கோப்பு என்று எல்லாம் செய்தாகி பலன் இல்லை . கட் ஆப் எண்பத்தி ரெண்டு . ஒரு வருஷம் கூட .. சாரி என்றார்கள் . சார் , நாற்பது வருஷ சர்வீஸ் .என்றேன் …. கேஸ் போடு …. ஜட்ஜு கிட்ட கூட்டி போ ..

    ..தப்பில்லையா சார் …

    பணம் வேணும்னா எதை வேணா செய்யலாம் ..

    சண்டை போட்டு பணமா … வேணாம் .அடுத்த பஸ்ல போயிடலாம் .

    இல்ல .நாளைக்கு அம்மாவுக்கும் உபயோகமாக இருக்கும் என்றேன்

    அவர் பார்த்த பார்வையின் அர்த்தம் அப்போது விளங்கவில்லை .

    இல்ல பா … ரங்கா விலாஸ்ல காபி சாப்ட்டுட்டு போலாம் .

    ரெண்டு வாரம் கழித்து ஒரு கடுதாசி வந்தது

    கலெக்டரின் பச்சை கையெழுத்து .

    என் எழுத்துக்கு அவ்வளவு பலமா ?

    அப்பாவை எழுப்பினேன் . பத்து மணிக்கு பட்டணம போகணும்
    என்றேன் .

    என்னத்துக்கு என்றார் .

    பெரிய இடம் , கொஞ்சம் நல்லா போனும்…மணியை கூப்பிடவா …

    பிளேடு என்கிட்டே இருக்கு ..தாடியை எடுத்துடு …

    உன் இஷ்டம் என்றார் .

    அங்கவஸ்திரம் போட்டுப்ப இல்ல …

    இப்படி அலங்காரமா போனா எனக்கு வர பணமும் வராது .

    அப்படி இல்ல பா … ஒரு மாநேர்ஸ் என்றேன் ..

    நிறைய பேர் இருந்தார்கள் ..

    கலெக்டர் பேசினார் .. எல்லோரிடம் மன்னிப்பு கேட்டார் . பொருளாதார சூழ்நிலை சரியில்லை என்றார் . கூட்டம் கலைந்தது .

    ஆட்டோ என குரல் கொடுத்தேன் .

    பஸ்லயே போலாம் என்றார் . அவரை கண் கொண்டு பார்க்க முடியவில்லை . அந்த கனமான மனம் அவர் இறந்த போது கூட வரவில்லை .

    Share
  • வாயுள் உலகம்!

    -சேஷாத்ரி பாஸ்கர்

    ஒரு சின்னப் பந்து
    கருஞ்சிவப்பில்
    சுற்றி வெள்ளை முகப்பூச்சு
    பெண் பார்க்க செல்லும் பையன் போல்!

    குவியலாகக் கிடக்கும்
    நாம் நினைத்த இடத்தில்
    பார்த்தோர் செல்வார் பத்து வருடம் பின்பு
    சூரியன் போல் அனைவருக்கு பொது!

    அது உள் இருக்கையில் வராது பேச்சு
    சுரக்கும் அளவில்லாமல்
    சுழற்றியபடி பந்தாடும், வாய்
    உடைக்கத் துடிக்கும் மனம்!

    தடுக்க நினைக்கும் மறு கணம்
    மென்மை ஆக்கி நா உறிஞ்சும்
    பொறுக்க மாட்டா(து) பல் கடிக்கும்
    உடைந்திறங்கும் தேன் மிட்டாய்!

     

    Share
  • விடை

    -மன்னை சதிரா

    நாணத்தால் சிவந்த கண்கள்
    நகைதவழ்ந்து மின்னும் இதழ்கள்                       woman
    மான்கொடுத்த மருட்  பார்வையளே
    மனமிலையோ வாய் மலர்த்த!

    தங்கத்தில் வைரம் பதித்ததுபோல்
    அங்கமெலாம் அழகு மிளிர்ந்திடச்
    சிந்தையினிக்கும் செந்தமிழ்ச் சிலையே
    வந்து தானாக  மலர்வாய் திறவாயோ?

    நாளுக்கு நாளுன்னை நினைந்திரங்கி
    நான்மெலிந்து போனேன் வாடும்என்
    தோளுக்குத் தோள்கொடுக்க மனமிரங்கு!

    வாள்தோற்கும்  விழியழகுச் செல்வியே!
    வாய்  மலர என்னதடை? ஏது தடை?
    உன்னைச் சிலையென வர்ணித்ததாலா
    நான்விடுத்த சொல்லுக்கு விடையேயில்லை!

    Share
  • அழகி

    -வி.த.தமிழினி

    azhakiமுகமறியா ஊரில்…சேர்ந்த புதிய வேலையில் ஏற்படும் தனிமையில் தான் அவள் எனக்குப் பழக்கமானாள். பார்த்தவுடன் கொள்ளை கொள்ளும் அழகு கிடையாது அவளுக்கு. ஆனால் அப்பழுக்கற்றவள்…அவளுக்கும் எனக்குமான உறவு பலரின் சுயநலத்துக்குள்ளாகி விரோதத்தில்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். எத்தனை எத்தனை முகங்களை நாங்கள் கடந்திருக்க வேண்டும்.  அவளுக்கு நான் போட்டியாய்…எனக்கு அவளைப் போட்டியாய் மாற்ற வைக்க எத்தனை முகங்களை மாற்றியிருப்பார்கள் அந்த நிறுவனத்தில்… அத்தனைக்கும் காரணமாய் அந்த டார்கெட் மட்டுமே இருந்திருக்க வேண்டும். அத்தனை முகங்களைத் தாண்டியும் என்னைச் சகோதரியாய் ஏற்றுக் கொள்ள எப்படி முடிந்தது அவளால்? ஆம்.  பெண்களின் மனதை மனிதத்தை நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்தும் என்பதில் அனுபவம் இல்லாதவள் நான்.

    ஏதோ ஓர் நாள் பிறந்த நாளென அவள்  நீட்டிய மிட்டாயை வாங்கிக் கொண்டு ஒப்புக்குச் சப்பாய்  நானும் வாழ்த்தியது இன்னும் நினைவிலிருக்கத்தான் செய்கிறது. மாத இறுதி சமயமானதால் அவளுக்கு விடுப்புக் கிடைக்கவில்லை. அவளும் ஏனோ கேட்கவில்லை. கிளம்பும் சமயம் “அக்கா…உங்க போன் நம்பர் கிடைக்குமா…?” எனக் கண்களில் கண்ணீரோடு அவள் கேட்டபோது சற்றே மிரண்டுதான் போயிருந்தேன். என்னால் அவளுக்கு எந்தச் சிக்கலும் எழுந்திருக்க வாய்ப்பில்லைதான். இருப்பினும் ஏதோ இனம்புரியாத பதட்டத்தோடு என் எண்ணைக் கொடுத்து பார்த்துப்போ என அனுப்பியபோதும் ஏதோ குழப்பம்தான் நீண்டிருந்தது. அடுத்த ஐந்து நிமிடத்திலேயே அவள் அழைப்பாளென நான் எதிர்பார்க்கவில்லைதான்.

    அழைப்பை எடுத்தவுடனேயே அக்கா…என்றாள். நான் அக்காவா…? திருமாணவனவள் என்பதால் அவளே முடிவெடுத்துவிட்டாள் போல…  சொல்லும்மா…என்ற என் பதிலுக்குப்பின் அவள் அழுகையைக் கட்டுப்படுத்த எனக்கு 2, 3 நிமிடங்கள்  ஆகிப்போனது. “போன வருஷம்  என் பர்த்டேக்கு எங்க அப்பா என்கூட இருந்தாரு…நாங்க ஒன்னா செலிபரேட் பண்ணோம்…  இப்ப அவர் இல்ல…வீட்ல இருக்கப் பிடிக்கல…அதான் லீவ் போடல…இப்போ வீட்டுக்குப் போகப்பிடிக்கல…” அழுதுகொண்டே இருந்தாள். எத்தனை அன்பானவள் இவள்? அத்தனை முகமூடிகளையும் தாண்டி என்னை அவள் ஏற்றுக்கொள்ளக் காரணம் என்ன? அத்தனை பேரைத் தாண்டி என்னை அவள் சகோதரியாய்  ஏற்றுக்கொண்டு என்னிடம் மட்டும் பகிர வேண்டிய காரணம் என்ன? என் மனக்கேள்விகள் அத்தனையும் உடைத்தெறிந்து நான் இருக்கேன்மா… கவலைப்படாத… என்ற பதிலிலிருந்துதான் புரிந்தது நானும் அவளை என் தோழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

    வீட்டுச் சூழ்நிலைகளை எவ்வளவு அழகாய்த் தன் உழைப்பால் அவள் நிறைவேற்றுகிறாள். அவள் அம்மாவை எவ்வளவு தோழமையுடன் அணுகுகிறாள் அவள். என் பிறந்த தினத்தில் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு என் வீட்டிலிருந்து வாழ்த்துச் சொல்ல எவ்வளவு தைரியம் அவளுக்கு…?  முதலில் சொன்னது உண்மை இல்லை…அவள் மிக அழகானவள்!

    காதல் தோல்வியால் அவள் மறுத்துக் கொண்டே வந்த திருமணத்தை சம்மதிக்க வைத்து எவ்வளவு பெரிய தவறை நாங்கள் செய்தோம் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. அவன் தவறானவனாம்… திருமணத்திற்குப் பின் காவல்துறை மூலம்தான் தெரிந்தது அனைவருக்கும். அத்தனைக்குப் பின்னும் அவனை வெளிவிடுங்கள்…என்று கதறியல்லவா  இருக்க வேண்டும் அவள்? அதுதானே பெண்மைக்கான நியதி… எல்லாவற்றையும் உடைத்தெறிந்து அவன் சிறையிலேயே இருக்கட்டும், என் வாழ்வை நான் பார்த்துக் கொள்கிறேனென அவள் நின்றபோது அத்தனை பேருக்கும் அவள் பிரமிப்பாய்த்தான் தெரிந்தாள். என்ன எப்படியோ அவள் அன்பால், உழைப்பால், மனத்திடத்தால் மெருகேறிக் கொண்டேதான் இருக்கிறாள் தினம்!

     

    Share
  • உன் புன்னகை மறையாது…

     

    தாரமங்கலம் வளவன்

     

     

    இன்றைய நான்

    நீ சிந்திய வியர்வையினால் வந்தது..

     

    எனக்காக

    நீ இழந்ததை எல்லாம்

    என்னால் திருப்பி தர இயலாது…

     

    நீ பட்ட அவமானங்கள்

    நீ அமைதியாய் ஏற்றுக் கொண்ட வசவுகள்

    நீ தொலைத்த இளமை என்று

    நீ எனக்காக இழந்தவை எதையும்

    என்னால் திருப்பித்தர இயலாது..

     

    ஆனால் இன்று

    நீ பெற்ற இந்த புன்னகையை

    நீ இழக்காமல்

    என்னால் பார்த்துக் கொள்ள முடியும்..

     

    உன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாமல்-

    இன்று நிமிர்ந்த உன் தலை

    இனியொரு முறை கவிழாமல்-

    நீ பெற்ற இந்த புன்னகை

    உன் கடைசி பயணத்தில் கூட

    உன் முகத்திலிருந்து மறையாமல்-

    நான் பார்த்துக் கொள்வேன்.

     

    அதைத் தவிர நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்..  

     

    Share
  • மேடவாக்கம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள்

    கவிஞர் ஆர். கண்ணன்

    சென்னையில் வேளச்சேரி தாம்பரம் இடையில் மேடவாக்கத்தில் உள்ளது மேலத்திருப்பதி ஸ்ரீனிவாசப் பெருமாள்  திருக்கோவில். இந்தத் தொன்மையான  கோவில் ஒரு சிறு குன்றஸ்தலம். ஏழு மலையில் இருந்து பெருமாள் சாக்ஷாத் இறங்கி வந்தது போல் திவ்ய ஸ்வரூபம்.  மேன்மை பல தரும் ஸ்ரீ வேங்கடேசன் கேட்ட வரம் தரும் வள்ளல். இந்த கோயில் சந்நிதியின் கீழ் நரசிம்ஹர் வாசம் செய்வதாக ஒரு பக்தர் கூறுகிறார். உடனுறை பத்மாசினித் தாயார், நரசிம்ஹர், அனுமன், ராமர், வராஹர், சுதர்சனர், ஹயக்ரீவர் சந்நிதிகளையும் இங்கு சேவிக்கலாம். இங்குள்ள மஹா  மூர்த்தியை மனதில் நிறுத்தி இந்த திருவிருத்தம்  சொல்லும் யார்க்கும் பேரருள் கிடைக்கும் என்பது அடியேனுடைய பலத்த நம்பிக்கை.
                                                                               ஆச்சார்ய சமர்ப்பணம்
    வேதசாத்திர மறியேன் சிறியேன் கண்ணன் 
    நாதமுனி ஆளவந்தான் எதிராசன் கவிச்சிங்க  
    வேதாந்தன் மணவாளன் தாதகுரு மற்றடியார்
    பாதத்துகளருளால் கவிசொன்னேன் வேங்கடன்மேல் 
    Not versatile in Vedas or sastras adiyen Kannan just brimming with Bhakthi alone
    On Venkatesan made a poetic attempt. A small dust from the feet of the great
    Acharyas Nathamuni, Alavandaan, Ramanujan, Poetic lion vedhantha desikan
    Great Manavala Mamuni, adiyen kula guru Dadacharyan and other Acharya Mahapurush
    blessed me on this immature Attempt.
                                                              திருவிருத்தம்      
    வேங்கட மாமலை மேவும் திருமால்  E_1294046631
    இங்குளர் அன்பர் அனுதினம்  காண  
    பாங்கொடு வந்தெம் மேடவாக்கம் அமைந்தான்
    தாங்குவ  தெம்மைத் தாயினு மேலாய் 
     
    It appears that the seven hills pervading divya mangala perumal to
    bless the bhakthas here for daily darshan descended and seated at
    Medavakkam, a small hamlet in Chennai. A single thought on
    him, takes total care of us more than a mother.
    சத்திய  யுகத்தில் எழிலுறுக் கயலாய்  
    புத்துல கீந்துவேதங் கள்மீட்ட வள்ளல்    
    நித்திய வாழ்வில்யாம்  நிமலனருள் கோர  
    மெத்தகுக் குன்றமர் மேடவாக்கச் செம்மல் 
     
    In ‘Satya Yukam’ he assumed an avatar as a fish  ‘Matsya’  and saved
    the  earth and recovered great Vedas lost in pralaya. Such a master, to
    justify our daily life and to shower blessings, is seated on this gracious
    Medavakkam hill.
    மந்திரமலை தாங்கி   மாதவ ரமுதேற்கச்  
    சுந்தரச் செதிளாமை  சீர்கோலம் பூண்டான் 
    வந்தார் செல்லும் வாழ்வுச் சுழலூற்றில்    
    சொந்த மவனே  சுடர்மணி வேங்கடத்தான்  
    Lord Koorma bore the ‘Mandira Mountain’ and facilated the churning
    of the ocean to bless the devas with ‘amrut’ by assuming the shape of a tortoise
    with a beautifully tiled body. In this impermanent human life he the
    glittering gem is the only permanent support.
    பன்றிமுகம் துளிர்த்த  பால்வண்ணத் தெயிரிடை  
    அன்றெம் பூமித்தாய்  ஆழ்கடல்அமிழ்ந் துமீட்டான்     
    பொங்கும் நீர்க்குமிழி போல்நம்  சிறுவாழ்வில்   
    தங்கும்  பேரன்பன் தண்பொழில் குன்றமர்ந்தான்
    In between the milk white horns emerging from a boar face, Lord Varaha
    delved deep into the sea and recovered our mother earth. In our life
    short like a water bubble, he is the only solace and the dear to our soul
    which again is a part of his eternality. Such a serene lord is seated on
    this cool hill.
    பத்திக்கு வித்தாம் பாலகன் சொல்மடுத்து
    சத்தியம் ஆக்கப்  பெருந்தூண்  பிளந்துயிர்த்த 
    வெந்தணல் கனல்விழிகள் வெள்ளெயிறு நரசிங்கம்
    அகந்தைக் கிழங்கையறு ஆலயமாம் குன்றமர்ந்தான்  
    To make true the words of Prahlad the best role model and embodiment of bhakthi,
    Lord cracked a giant pillar and emerged out with burning eyes and threatening white
    teethed man-lion Narasimha and tore apart ‘hiranya’ whose bloated ego shielded his
    vision from the almighty’s existence. For deep plucking of our ego, the root cause for
    many troubles, he is seated on this divine hill.
    சிற்றுருவம் தாங்கித் த்ரேதாயுகத்  தோன்றி
    செற்றான் மாபலியை  மூன்றடி மண்ணளந்தான்       
    சிற்றறி  வெங்கள்  சிறுமதிக்குறை கொய்ய  
    நெற்றுயர் மேடவாக்கக் குன்றமர் வேங்கடத்தான்
    By assuming the shape of a short Brahmin ‘in ‘thretha’ yuka lord Vamana won over
    ‘Mahabali’ a rakshas, out of his sheer intelligence and three foot measurement of the
    three worlds, He is here on this hill only to sharpen our skills and to correct our
    mental deficiencies.
    சிறுவாள்  கரமேந்திச்  சீற்றம் அடங்காது
    உறைவாள் மன்னர்முடி பலமுறைக்  கொன்று
    திருமாலன்  பரசுராமன்  தீயமுறை ஆட்சிகளை  
    அரிவாளால்  கொன்றழிக்கக் குன்றமர்ந்தான் வாரீர் 
    With a small sword gracing his hand, Lord Parasurama  destroyed
    the kings clan again and again  to establish that a ruler is to behave
    like the most responsible representative of the god himself. He is
    seated on this divine  hill to correct and eliminate the misrulers and
    their evil deeds even today
    கானகம் நடந்த செம்மல் காகுத்தன்,  தம்பியொடும்
    ஜானகி அன்னையொடும்  மாருதி  அருகினொடும்
    ஆணவம் அழித்தெங்கள் மனக்குறை  முழுதகல 
    மானவம்  மகிழ்ந்துய்ய மாதவக் குன்றமர்ந்தான்
    Lord Rama tread in deep forests with ‘mother’ Janaki and
    his lovely brother Lord Lakshmana and late raccompanied by
    great Hanuman is seated on this holy hill, to correct us, to
    ward off our worries and to uplift the human race.
    கார்வண்ணன் கருமுகில் கருணைக்  கோவிந்தன்
    பார்வண்ணம்  சிறுவாயில்  அன்னைக்குக் காட்டியவன்
    சீர்பாடும்  மேடவாக்கச்  சிறுகுன்றம்  அமர்ந்து  
    வேரோடு வேதனைகள் அகழ்வான்  வேங்கடனாய் 
     
    Lord Krishna the cloud colored is ever blessing us, who showed
    the universe to his mother Devaki in his small mouth. He is seated
    on this holy Medavakkam as Venkatesan to release our deep
    rooted eternal worries.
    தொட்டில் கண்ணலர்ந்த   ஆயர்குலக் குழந்தை
    கத்தும் கன்றாம் நமைப்பற்றி யுய்விக்க   
    பற்றறுத்துப் பாதநிழல் சேர்க்கும் பரமபதன் 
    மெத்தை மேடவாக்கக் குன்றமர் வேங்கடத்தான்
    Lord krishna blossomed on cradle and the great
    master of cattle and herds is seated here on
    this soft mattress hill. He totally detaches us from our
    meaning less longings by hearing our prayers
    resembling the weak voice of a new born calf
    பாரதத்தில் பார்த்தனுக்குச் சாரதியாய் பாந்தவனாய் 
    மாரதமோட்டி வென்று  கீதைமறை பகன்று 
    சீரகமாக்கு மெங்கள்  சிற்றுள்ளத்  தேரோட்டி
    பாருய்ய மேடவாக்கக் குன்றமர் வேங்கடத்தான் 
    The driver of this  universe humbled and drove his
    friend Arjuna’s great chariot, won over the enemies
    tactfully and illuminated Arjuna through his ever mortal
    ‘Gita’. To enliven the mother earth and to ever steer our
    punic mental chariots, he is graciously seated on this holy
    hill
    வேதத்தின் நெறியை  வெற்றுச் சடங்காக்கி  
    ஓதும்  சிறுமாந்த ருள்ளம் தெளிவாக்க 
    திருவதரி மலைமுடி  சோதித் திருப்புத்தன் 
    அரும்பாதம் பதித்து மேன்மைக்  குன்றமர்ந்தான்
    Those who just memorise and recite the great vedas
    like baby school rhymes without understanding the nuances,
    is corrected by the Lord yogic Buddha seated on the holy top
    of Himalayas at ‘Badrinarh’. The same lord is seated on this
    hill to spread his radiance and brilliance.
    பிறப்பு மிறப்பும்  பிணைநூலாம்  வாழ்க்கை
    துறந்தும் மறந்தும்  அகலா துறவுவலை 
    அறுத்தெமக்  காதரவாய் ஆசிதரும்  கண்ணன்
    சிறுதாமரைக் குன்றாம்  மேடவாக்கம்  அமர்ந்தான் 
    Birth and death are intertwined. Even fully foregoing all
    relationships and practicing to forget the worldly chores
    we are helpless. Only the great lord Krishna cuts and
    relieves us from the worldly bondages. He is seated on
    this small lotus hill to grace us.
    கண்பொழிக் கருணை கவலைகள் நீக்கும்
    வண்ணமேல்  வேங்கடம் வலமிட ஈர்க்கும்  
    திண்ணம் அவன்திருப் பாதம் முடிவெனும்
    எண்ண முறைய மாமலை வாரீர்
    His beutiful eyes showering continuous grace clears our worries
    Superb holy hills lures us to visit and to do pradakshanam around.
    To concretise our understanding that  his ‘Tiruvadi’ alone is the
    final solace we should visit this lord of the great hill quiet often
    சுருள்பாம் புறையும் காரோளிச் சுடர்விழி  
    அருள்மழை வீசும் அன்னையாய்க்  காக்கும்  
    பொருளிகச் சுகமதே நிஜமெனும் அறியார் 
    மருள்மதி மாற்றும் குன்றமர் வேந்தன்
    Lying on a spiralled snake with glittering black eyes
    he pours his constant grace and guards us like our mother
    Innocent humans who still  beleive that the material pleasures
    are everything ,are made to realize the truth of our existence
    by this hill seated king.
    புத்திவழிச் செம்மல்  பக்திப் பொய்கை
    நித்தில மாமணி  நிகரில்  பூதம்
    சித்திர மயிலைச்  சீர்கவிப்  பேயும்
    முத்தெனச் சொன்ன மாலகம்  வாரீர்
     
    Poigai alwar preached to think, realize and practise bhakthi.
    Bhoodath alwar was a global gem, Peyalwar was born in
    artististic Thirumayilai. These Mudalwars preached the humans
    to be at the lord’s alm for continued happiness
     
    கச்சிப்பாம் புறைவன் பாய்சுருட்டிப் பின்திரும்ப    
    மெச்சும்கவி சொன்னான் திருமழிசை;  திருமங்கை
    இச்சகம் இன்புறத் திருமந்திரம் சொன்னான்     
    பச்சைமா மரகதக்  குன்றுற்றான் நம்பெருமான்  
    Once Lord acted per instructions of Thirumazhisai Alwar
    and vacated Kanchipuram, when the king constantly pressurised
    the alwar to sing praise on him. The town lost all charms, the king realised
    his mistake and pleaded the Alwar, on whose instructions our lord came back.
    Thirumangai Mannan graced this world with Thirumandiram. Our superb
    lord is seated on this green endowed hill only for our sake
    கவியரசன் சித்தன் அருள்மொழிக்  கோதை
    புவிப்புகழ் நம்மாழ்வான்  தொண்டரடிப்  பாணன்
    சுவைஊற்றுச் சேகரன்  மதுரகவி கூரநெந்தை 
    செவிநிறைக் கோமானம் குரல்கேளக் குன்றமர்ந்தான்
    The great king of poetry Perialwar, Goddess Andal’s
    Unrivalled gracious words, much adorned Nammalwar,
    Thondaradipodi alwar, Thirupanalwar , Sweet worded kulasekaran,
    Madura kavi and Koorathalwar enriched Lord’s ears with best of
    the words. However our lord is equally happy to hear our ordinary
    prayers too
    அலர்மகள் தாய்க்கருணை அருகில் ஆதித்தன்    
    மலர் தூவும் கருடன் மாருதி மாமணி 
    பெருங்குரு தேசிகன் கவிமழைச் செவியுறும் 
    ஒருங்கிணைக் கோலம் நலம்தரும் காண்பீர் 
    Our lord is sided by the lotus seated Mahalakshmi.  Garuda and
    Hanuman shower the rarest of the flowers on him. Unparalleled
    poet Desikan  adorns and the lord eagerly hears him. For a rare
    unified sight of all these please visit our lord of hill
    மனமுடல் பொருந்தி வேங்கடத்தாய் முன்நின்று      
    தினமிந்தப் பாடல்  இருபதுமுரு  கிச்சொல்வார் 
    மனக்குறை மாறும் தனமினம்  பெருகியேத்தும்  
    நிலம்பொதி வாழ்நாளென் றும்நிர்மல மாகமாறும்  
     
    With mind and body unified, standing before
    Elumalayan and reciting this 20 bhakthi verses
    shall clear all worries, multiply  wealth and offsprings
    and make the life pure and serene till this universe lasts.
    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –ப.கண்ணன்சேகர்.

     “கவியரசர் பார்வையில் மகளிர்”

    Kannadasan  பாரதிக்கு பின் வந்த பார்போற்றும் கவிஞர் நமது கவியரசு கண்ணதாசன்தான். இவர் எழுத்து வடிவில் தமிழ் சமுதயாத்திற்கு எண்ணற்ற காவியங்களையும் கவிதைகளையும் படைத்திருக்கிறார். இவை அனைத்தும் தலைமுறைகளைத் தாண்டி தமிழ்ச்சமுதாயத்திற்கு  பயன்படும் கல்வெட்டுக்களாக திகழ்கின்றன. இவர் பேனா தொடாத துறைகளே இல்லை என்று கூறும் அளவிற்கு எழுத்துலகில் கோலோச்சியுள்ளார்.

    குடும்பத்தில் ஒவ்வொரு உறவுக்கும் இவரின் வழிகாட்டுதல்கள் எல்லாத் தலைமுறையும் ஏற்றுக்கொள்ளும் முறையாக அமைந்துள்ளது. குறிப்பாக  மகளிர்காக இவரின் படைப்புக்கள் சிறப்பாகவே இருப்பதை அறிய முடிகிறது.பெண்மை, பக்தி, ஆளுமை, குடும்பம், உறவுகள் என பல வடிவங்களில் மகளிர் சிறப்பை குறிப்பிட்டுள்ளார். பெண்ணாக பிறந்து விட்டால் பக்தி என்பது இயல்பாய் வரக்கூடியது எனவும், நாத்திகனாக கணவன் இருந்தாலும் அந்த வீட்டில் இறை உணர்வுடன் மனைவி இருப்பது பல குடும்பங்களில் கண் கூடு. பட்டணத்தில் பூதம் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்த சிவகாமி மகனிடம் பாடலில்,

    பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
    வேலை வணங்காமல் வேறேன்ன வேலை?

    அதே போல “அவன் பித்தனா”  படத்தில் “இறைவன் இருக்கின்றானா..” பாடலில்,

    “மனிதன் இருக்கின்றானா..
    இறைவன் கேட்கின்றான்
    …………………………..
    ஒன்றையே நினைத்திருந்தும்
    ஒன்றாக வாழ்ந்திருந்தும்
    பெண்ணாக பிறந்தவரை
    கண்ணாக யார் மதித்தார்.. ”

    ஒரு பெண் கற்புடையவளாக தனது கணவன், குடும்பம் என வாழ்தாலும், அவளை மதிக்காத சமூகமே நிறைந்து காணப்படுவதை தமது வரிகளால் கவியரசர் குறிப்பிடுவது பெண்ணுக்கு வாதாடும் வக்கீலாகவே காணப்படுகிறார். அதே போல் மாதராண்டு வரவேற்போம் என தமது கவிதையில்,

    பாவையர் வாழ்க்கை என்றும்
    வீடு காப்பது – எங்கள்
    பாரதத்துப் பெண்மை
    இன்று நாடுகாப்பது
    சேவை செய்யும் பெண்மை
    இன்று அதிகமானது..

    (கண்ணதாசன் கவிதைகள் -6 பக்:164)

    மகளீரின் நாட்டுப்பற்றை குறிப்பிட்டு, இன்று எல்லாத்துறையிலும் பெண்களின் வளர்ச்சி கண்டிருப்பதை எழுதியுள்ளார். ஆணுக்கு பெண் சமம் என்ற பாரதியின் சமதர்ம சிந்தனைகளை கவியரசர் பாடல்களிலும் பல இடங்களில் காண முடிகிறது.  நல்லபெண்மணி இருக்கும் ஒரு வீடு கோவிலுக்கு இணையாகும் என்பதை,  ஒரு பாடலில் மகளிரின் பெருமையை உயர்த்திக் காட்டுகிறார். பச்சைவிளக்கு திரைப்படத்தில் “கேள்வி பிறந்தது அன்று…”  பாடலில்,

    குலமகள் வாழும் இனியகுடும்பம்
    கோயிலுக்கிணையாகும்
    குறை தெரியாமல் உறவு கொண்டாலே
    வாழ்வும் சுவையாகும்..

    இப்படி ஒரு பெண்ணிடம் சிறு குறை இருந்தாலும் அவற்றை பெரிது படுத்தாமல் இருக்கும் உறவுகள் நிறைந்த குடும்ப வாழ்க்கை சுவையானது என சுவைபட வார்த்தைகளை வகைப்படுத்தி எழுதும் பக்குவம் கவியரசரைத் தவிர வேறு யாருக்கு வரும்?

    இதை விட மிகச்சிறப்பாக தனது மனைவி பொன்னம்மாளுக்கு காது கேட்காது என்றாலும் அதை பக்குவமாக ஏற்றுக் கொண்டு, அந்த சீமாட்டியை சிறப்பிக்கும் கவியரசரின் குணம் குன்றின் மேல் வைத்த விளக்காய் ஒளிர்கிறது.

                                                      செவிகள்பழு தானாலும்
                                                                        சேவைச் சிறப்பால்என்
                                                     கவிகள்பழு தாகாமல்
                                                                     காத்துவந்த ராஜாத்தி!  
                                                    குடிக்க துணிந்ததற்கோ
                                                                         குத்துகின்ற ஊசிகட்கோ
                                                   கண்ணான என்மனைவி
                                                                         காரணமாய் இருந்ததில்லை!

    (“பொன்னம்மா என் மனைவி” கவிதை நூல்)

    இந்த வைரவரிகள் கவியரசரின் மனைவியை குறிப்பிடுவதாய் இருந்தாலும் ஊனமுற்ற மகளீருக்கும் இவரின் எழுத்துக்கள் பெருமை சேர்ப்பதாகவே இருக்கிறது. இப்படி பெண்ணின் பெருமைப் பற்றி கவியரசர் எழுதியுள்ளதை பல மேற்கோள்களுடன் பல பக்கங்களுக்கு எழுதலாம்.

    பெண்களை ஆடையில்லாமல் வர்ணிக்கும் ஆபாச உலகில் “ஆடைக் கட்டிய ரதமே ரதமே.. அருகில் அருகில் நான் வரவா… என்று பெண்மையை போற்றி புகழ்ந்தவன் நமது கவியரசு கண்ணதாசன். பெண்மையின் புகழை பெருமையாய் பாடிய அந்த கவிஞனை என்றும் போற்றுவோம்.

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    பி.எஸ்.டி. பிரசாத்

    என் பார்வையில் கண்ணதாசன்

     

    Kannadasan“வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மன‌தில் நிற்பவர் யார்
    மாபெரும் வீரர் மானம் காப்போர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்”

    என்று பாட்டாலே வீரம் ஊட்டிய கவியரசு கண்ணதாசன், இன்று சரித்திரமாகி நிற்பதற்கான முக்கியமான காரணம் என நான் எண்ணுவது, பல்லாயிரம் தமிழ் ஆர்வலர்களுக்கு, கவிதை மற்றும் பாடல் அமைப்பு செய்வதற்கான இலக்கண எடுத்துக்காட்டுக்களாக விளங்கிய அவரது திரைப் பட பாடல் வரிகள்தான். அவரது பாடல் வரிகளை ரசித்து, நாமும் முயலலாம் எனக் கவிதை எழுத வந்தவர்கள் எத்தனை பேர்? அந்த வகையிலே, கவியரசு அவர்கள் என் பார்வையில், பாடலாசிரியர்கள் மற்றும் கவிஞர்களின் முன்னோடியாகவும், மாபெரும் தாக்கத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தியவராகவும் பார்க்கிறேன்.

    முன்னோடிப் பாடல் வரிகள் (Inspirations):

    “உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை” என்று துவங்கும் பாடலில் வரும் வரிகள்:

    “தெய்வம் என்றால் அது தெய்வம்
    அது சிலை என்றால் வெறும் சிலை தான்”

    திரு.கமல்ஹாசனின் தசாவதாரம் திரைப்படத்தில் வரும்

    “கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது..” என்ற பாடலுக்கு எப்பேர்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

    “ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    ஆறடி நிலமே சொந்தமடா” என்ற வரிகள்தான் பின் வந்த நாட்களில்,

    “நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
    படுத்தால் ஆறடிபோதும்” என்ற பாடலுக்கு ஊக்கமாக இருந்திருக்குமோ?

    ‘கர்ணன்’ திரைப்படத்தில் வரும் இனிமையான பாடல்

    “இரவும் நிலவும் வளரட்டுமே…நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே,,,”

    “இலைமறை காய்மறை”யாகச் சொல்வதற்கு இந்த வரிகளை உதாரணம் சொல்லலாம். இந்த வரிகள், நிறைய பாடல்களில் வெவ்வேறு சொல்லாக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது. எடுத்துக்காட்டாக, “அன்பு” என்ற திரைப்படத்தில் வரும் “தவமின்றி கிடைத்த” என்று தொடங்கும் பாடலில் வரும் வரிகளைச் சொல்லலாம்.

    “பகல் எல்லாம் இரவாகிப் போனால் என்ன? இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன?
    நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தாலென்ன?”

    “ரத்தத் திலகம்” என்ற திரைப்படத்தில் வந்த பிரபலமான பாடல்தான் “கோப்பையிலே என் குடியிருப்பு” என்ற பாடல். அந்தப் பாடலில் “படைப்பதனால் என் பேர் இறைவன்” என்ற வரிகள் “மடை திறந்து தாவும் எனத் துவங்கும் பாடலில் வரும் “புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே”  என்ற வரிக்கும், “பாட்டுக்களை படைப்பதனால் பிரம்மனாகிறோம்” என்ற வரிக்கும் என்னவொரு தாக்கமாக அமைந்திருக்கிறது !

    நீ காற்று…நான் மரம் என்று தொடங்கும் அருமையான பாடல். அப்பாடலில் “நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய்க் கல்ந்திருப்பேன்” என்ற வரிகள் வரும். இந்த பாடலின் அமைப்புக்கே கவியரசு அவர்களின் நீ எந்தன் வானம்…நான் அங்கு நீலம…நீ எந்தன் வாசல்…நான் அங்கு கோலம்” (படம்: அமரகாவியம் – பாடல்:  செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன்) என்னும் வரிகள் தான் ஊக்கமாய் அமைந்ததோ!

    வெவ்வேறு சூழ்நிலைகளுக்காக எழுதப்பட்ட பாடல்கள் என்றாலும், நாம் அடுத்து பார்க்க இருக்கும் பாடல், கண்ணதாசனின் தாக்கம் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தத் தான் செய்கிறது.

    “சேச் சேச் சேச் சே ! ஆம்பளைங்களா நீங்க…ஆம்பளைங்களா – ஒரு ஆறு கஜம் சேலை கட்டி நாலு வளை போடுங்களேன் !”
    என்ற பாடல் (படம்: உரிமைக் குரல்)  – தேவர் மகன் படத்தில் வரும் “சாந்து பொட்டு…ஒரு சந்தன பொட்டு எடுத்து வெச்சுக்க  வெச்சுக்க மாமா !” என்ற பாடல்கள் !

    அடுத்ததாக, “பொம்பளையா லட்சணமா பொடவையக் கட்டு சும்மா குளுகுளுன்னு கிழுஞ்சு போன ட்ரௌசர விட்டு” (படம்: இளைய தலைமுறை) என்ற பாடல் வரிகளின் தாக்கம்….எந்த பாட்டில் தெரிகிறது சொல்லுங்கள்….ம்…சரியான விடை: “செந்தமிழ் நாட்டு தமிழச்சியே…சேல உடுத்தத் தயங்கினியே ! நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிருயே !” என்ற பாடலுக்குத் தான். மறைந்த திரு. சாகுல் ஹமீது அவர்கள் நன்றாகப் பாடியிருப்பார்.

    முடிவுரை:

    இவ்வாறாக, இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்….இது வரை மட்டுமல்ல…இனி வரும் கவிஞர்கள் பலருக்கும் கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள் மாபெரும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    “மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
    மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
    நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
    நிலையிலும் எனக்கு மரணமில்லை ​”

    என்று முழங்கிய கண்ணதாசன் அவர்கள் இன்றைய கவிஞர் என்னும் நிலவுக்கெல்லாம், சூரியனாக ஒளி தந்து என்றும் வாழ்பவராக என் பார்வையை பதிவு செய்கிறேன் !..வளர்க‌ அவர் புகழ் !

    பி.எஸ்.டி. பிரசாத்
    வலைத்தளம்: http://psdprasad-tamil.blogspot.com

    Share
  • ‘என் பார்வையில் கண்ணதாசன்’

    – தென்றல் கமால் –

    பாவையைக் காதலிக்கிற வயது வந்த போது பாவையை விட்டு என்னைப் “பா“வைக் காதலிக்க வைத்தவன் கண்ணதாசன்.

    கண்ணதாசன் என்ற களஞ்சியத்தில் நான் எடுத்துக் கொண்ட கவிதை இது ஒன்றே என் கட்டுரைக்கு இது நன்றே !

    ஆடிய ஆட்டமென்ன
    பேசிய வார்த்தையென்ன
    தேடிய செல்வமென்ன
    திரண்டதோர் சுற்றமென்ன
    கூடு விட்டு ஆவி போனால்
    கூடவே வருவதென்ன

    வீடு வரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ

    ஆடும் வரை ஆட்டம்
    ஆயிரத்தில் நாட்டம்
    கூடி வரும் கூட்டம்
    கொள்ளி வரை வருமா

    வீடு வரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ

    தொட்டிலுக்கு அன்னை
    கட்டிலுக்கு கன்னி
    பட்டினிக்குத் தீனி
    கெட்ட பின்பு ஞானி

    வீடு வரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ

    சென்றவனைக் கேட்டால்
    வந்துவிடு என்பான்
    வந்தவனைக் கேட்டால்
    சென்று விடு என்பான்

    வீடு வரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ

    விட்டு விடும் ஆவி
    பட்டு விடும் மேனி
    சுட்டு விடும் நெருப்பு
    சூனியத்தில் நிலைப்பு

    வீடு வரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ

    மனிதர்கள் பிறக்கிறார்கள் இறக்கிறார்கள்
    கவிஞர்கள் மட்டுமே என்றும் நிலைக்கிறார்கள்

    கண்ணதாசனை நான் மனிதனாகக் காணவில்லை
    அவனை நான் கால் கொண்டு நடந்தக் கவிதை என்பேன்

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்
    முதற்றே உலகு என்றான் வள்ளுவன்

    மனிதனைப் படைத்தோம் மொழியைக் கற்பித்தோம் என்கிறது இசுலாமியர்களின் திருமறை

    மொழிக்கு வரும் ஊறினை கவிதை எனும் ஆறு கிளம்பி
    மொழியை ஏறு பாதைக்கு அழைத்துச் செல்ல
    இறைவன் செய்த ஏற்பாடோ கவிஞர்கள் என என நான் எண்ணுவதுண்டு

    சிறு வயது முதலே மரணம் என்னை அதிகம் சிந்திக்க வைத்த ஒரு பொருள்

    மனிதன் ஏன் பிறக்கிறான் ஏன் மரணிக்கிறான் ……… எதற்காக மரணிக்கிறான்
    கேள்விகள் என்னுள் அதிகம் வேள்விகள் செய்த காலமது

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறான் வள்ளுவன்

    மனந்திரும்புங்கள் பரலோக இராச்சியம் சமீபித்திருக்கிறது என்கிறது பைபிள்

    எவர்கள் விசுவாசங் கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ அவர்களை நாம் மறுமையில் நல்லோர்களுடன் சேர்த்திடுவோம் என்கிறது இசுலாமியர்களின் இறைவேதம்

    இம்மூன்றும் சொல்வது மரணத்திற்கு பிந்தைய ஒரு வாழ்க்கை அது இறைவனிடத்தில் அது யாருக்கு இந்த உலகில் வாழ்வியல் நெறிப்படி வாழ்பவர்களுக்கு நற்கருமங்களைச் செய்பவர்களுக்கு மனம் திருந்தியவர்களுக்கு

    மரணத்தைப் பற்றிய சிந்தனை அற்ற மனிதனே உலக இச்சைகளில் மூழ்கியவனாக வாழ்க்கையின் நெறிப்படி வாழாதவனான நற்கருமங்களைச் செய்யாதவனாக மனம் திருந்தாதவனாக வாழக் காண்கிறோம்

    வேதங்கள் மரணத்தைப் பற்றியும் மறு உலக வாழ்வைப் பற்றியும் சொல்லி முடித்த போது

    மீண்டும் பாமரனுக்கு மரணத்தை அவன் புரியும் வண்ணம் அவன் மொழியில் படித்துக் காட்டியவன் அந்தக் க(எ)ண்ணதாசன்

    ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீர வேண்டும் என்கிறது இஸ்லாம்

    உலகப் பற்றை அறுத்து எறியக் கூடிய மரணத்தை அதிகம் நினைவு கூறுங்கள் என்றார் முஹம்மது நபியவர்கள்

    அத்தகையை மரணத்தை சிந்தனையூறும் வகையில் பாமரனுக்கும் புரியும் வண்ணம் எடுத்தியம்பியவன் கண்ணதாசன்

    அவனுடைய இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் மேனி சிலிர்க்கும் ஞானம் பிறக்கும்

    எனக்கொரு அவா உண்டு …….

    பத்தாம் வகுப்புக்கும் அதற்கும் மேலே உள்ள பாடத்திட்டத்தில் இந்தப் பாடலை மன்னிக்கவும் இந்தப்பாடத்தை வைக்க வேண்டும். மாணவர்களின் சிந்தனை சீர்படுகிற காலத்தில் இந்தப் பாடலை பாடத்தைக் கொண்டு மாணவர்களின் எண்ண நிலத்தில உழுது ஆழப் பதித்து விட்டால் ஒழுக்கம் எனும் பயிரை வளர்த்தெடுக்கலாம்

    கண்ணதாசனின் இப்பாடல் வரிகளை ஒருவன் அனுதினமும் ஒரு முறை படித்துப் பார்த்துக் கொள்வானெனின் அவன் வாழ்வாங்கு வாழ்வான் மனந்திருந்துவான் நற்கருமங்கள் செய்வான் என்பது என் எண்ணம்

    வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று வள்ளுவன் சொன்ன மரணத்திற்கு பிந்தைய தெய்வத்துடன் வாழக் கூடிய மறு உலக வாழ்வை அடைவான் அதுவே திண்ணம்a

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –மஸ்கட். மு. பஷீர்.

    என் பார்வையில் கண்ணதாசன்

    Kannadasanகவிஞன் என்பவன், தன்படைப்புக்கள் பேரறிவாளர் விருதுகள் பலபெற்று பெட்டகத்துள் அடைபட்டு, சட்டத்துக்குள்  வரம் பெற்று அலங்காரம் பெறுவதில் அல்ல வெற்றிபெறுகிறான். பட்டமும், பத்திரமும், பதக்கமும், பணமுடிப்பும், பளிங்கு விளக்குகள் மேடையில் பெறும் பரிசளிப்பும் என்றெல்லாம்  ஒரு குறுகிய வட்டத்துள் அடைபடும் கவிஞனாக என் பார்வையில் கவியரசர் கண்ணதாசனைக் காண முடியவில்லை. அந்தக் கவிவெளிச்சத்தை  சட்டங்களுக்குள்ளோ, குறுகிய கவிவட்டதுக்குள்ளோ  கட்டிப்பபோட என்னால் முடியவில்லை.

    மாறாக மக்கள் இதயக் கூட்டில் மட்டும் அடையும் பறவையாய் , தினம் தினம் மனிதனின் வாழ்வில் சிறகடிக்கும் பிரச்சனைகளின்  தீர்வாய், உறவுகளின் புனிதத்தைப்  பூஜிக்கும் மலர்களாய், சங்கடங்கள் தீர்க்கும் மருந்தாய், தனிமையில் சிந்தித்தால் கிடைக்கும் ஞான ஓளியாய், இதயத்தில் இயங்கும் ஜீவ நாதமாய், உலகத்தரக் கவிஞர்களின் தடாகத்தில் அவர் ஒரு ஜீவ நதியாய் அவரின் கவிதைகளையும்  பாடல்களையும் மக்கள் வைத்துப் போற்றுகின்றனர். அந்த வரிசையில் கவியரசர் கண்ணதாசன் முதல்வராகிறார். அங்கேதான் கவியரசர் ஒரு முழுமை பெற்றக்  கவிஞராக வித்தியாசமாய் ஜொலிக்கிறார்.

    ‘இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்  எல்லாம் சௌக்கியமே’ என வாழும் கவிஞர்கள் மத்தியில் தரத்தில் குறையாத தரமான படைப்புக்களைள தமிழ் சமூகத்துக்கு தந்தவர் கவியரசர். அவரின் வரிகள் காற்றோடு கலந்து தமிழ் மூச்சின் சுவாசமாய் கலந்தது. அந்தக் காற்றை  சுவாசித்து வாழ்ந்ததால்தான் என்போன்றவர்களின் தமிழறிவும் இலக்கிய அறிவும் சிறிதேனும் வளர்ந்தது என்றால் மிகையாகாது.

    கண்ணதாசன் என்ற அந்த கவிச்சோலைக்குள்  அத்துணை அமுதமும் தேனாய், தெவிட்டும் மதுவாய் தேங்கி வழிந்தாலும், கவியரசு என்னும் கவிஞர் கம்பனின் கவிரசம் பருகி மயங்கி கவின்மிகுக் கவிதைகள் வடித்தார் என்றால் மிகையாகாது! அவரைப் பற்றி என் கவிதைத்  தொகுப்பில் இவ்வாறு எழுதியுள்ளேன்;

    தமிழ்ச் சிப்பியில்
    பிறந்த முத்தையா
    நீ கவிக்கடலின்
    மொத்த  சொத்தையா !
    கம்பன் வரி
    நேசித்தாய் !
    கண்ணன் வரி
    வாசித்தாய் !
    தமிழ்க் காவியமாய்
    பிறந்து நீ சாதித்தாய் !
    பாரே போற்றிய
    கம்பனின் கவி நயத்தை
    பாமரன் உதடுகளில்
    பனிக்க வைத்தவன் !

    தமிழ்ப்பாலை  என்போன்ற மழலைக்கு அமுதூட்டிய கவித்தாய் கண்ணதாசன். மற்ற கவிஞர்களெல்லாம் நகைபோட்டு, அணிபோட்டு, வகை வகை  அழகுப்பூசி தமிழன்னையை அழகுபார்த்த வேளையில் முத்தான தமிழால் தமிழ்த்தாயின் முகத்தில் பொட்டு வைத்து அழகின் உச்சம் சேர்த்தவன்.

    “நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
    நடந்த இளந்தென்றலே வளர்
    பொதிகை மலைதோன்றி
    மதுரை நகர்கண்டு பொலிந்த தமிழ் மன்றமே”

    சந்த நடையும், தன் சொந்த நடையும் இணைத்து இசைத்து  கவிதை நடனம்  ஆடிய கவிச்சிவன். அது ஆனந்தக் கூத்தேதவிர ஆக்ரோஷ ஆட்டம் இல்லை.

    சந்தத்தில் பலக் கவிபாடி தமிழ்ச் சொந்தத்தை  மீளாமல் அடிமையாக்கியவன். அதனைப் படித்துப் பாடிய பலரும் பின்னாளில் நிரந்தர அடிமைகளாய் மாறிய விந்தையை  என்பனபவன்று சொல்வது.

    “வான் நிலா நிலா அல்ல – உன் வாலிபம் நிலா
    தேன் நிலா எனும் நிலா – என் தேவியின் நிலா
    நீயில்லாத நாளெல்லாம் – நான் தேதய்ந்த வெண்ணிலா
    மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
    பூவிலாத மண்ணலே ஜாடை பெண்ணிலா… ”

    ‘எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா’ என்று தொடங்கும் பாடலில்,
    உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
    கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!
    கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேதன்
    காலூரில் நடந்து வந்தேதன் காளையூர் வந்துவிட்டேன்!
    வேலூரைப்  பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன்
    பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடிபுகுந்தேன்!’

    ‘ஊர், ஊர்’ எனத் தொடரும்  வார்த்தைகளால் அலங்கரித்து, இலக்கியத் தேர்பிடித்து தமிழ்த்தேரோட்டம் நடத்தியவர்  கவிஞர். இந்தப் பாடலை  என் பள்ளிப் பருவத்தில் கேட்டு ‘இப்படியும் பாடல்  எழுதும் ஒரு மகாக்கவிஞன் தமிழ்மண்ணில் உள்ளாரா?’ என ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறேன்… அதிசயித்து வியந்திருக்கிறேன். இன்றளவும் என் நெஞ்சூரில் வைத்து  நித்தமும் அலங்கரிக்கிறேன்.

    ஒருவனுக்கு ஒருத்தி எனும் தமிழ்ப்பண்பாட்டை உரக்கப்பாடியவர் கவியரசர். கம்பனின் காப்பிய வரிகளிபல அடியோட்டமாகச் சொல்லப்படும் கருத்தும் இதுவேயாகும். சுந்தரகாண்டத்திலே, தன் கணவன் ராமனுக்கு அனுமனிடம் செய்திபசால்லி அனுப்புகிறாள் சீதை,

    ‘வந்து எனைக்கரம் பற்றிய வைகல்வாய்
    இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச்
    சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
    தந்த வார்த்தை  திருச்செசவி சாற்றுவாய்’

    எனச் சொல்கிறாள். அதையே  கண்ணதாசனும் இராமனைப்ப் பற்றிப் பாடும்வேளையில் ஒருதாரம் எனும் உயர்வினைக் காட்டிய அவதாரம் இராமன் என்பார்.

    ‘மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன.. மணி மாளிகைதான் கண்ணே’ என்ற திரைப்படப் பாடலில்  அதை  மீண்டும் வலியுறுத்துவார் கவிஞர்.

    “உன்னை அல்லால் ஒரு பெண்ணை இனி நான்
    உள்ளத்தினாலும் தொடமாட்டேன் ..”.

    “ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன ? –காதல்..”
    எனும் பாடலில்  ‘நினைத்ததும் வருவது காதல்’ என்பதை  அவர் சொல்லவில்லை. அதே நேரம் ஒருவனை மனதார இவன்தான் தன்னுடைய காதலன் என நினைத்து முடிவு செய்துவிட்டால்  பிறப்பதுதான் காதல் எனச் சொல்கிறார்.

    இருமனங்கள் இணைந்து  ஒருமனமாகிவிடும் அந்த வசந்த வேளையிலே, ஒருவேளை  பிரிவு எனும் துயரம் வந்துவிடுமானால் அந்த இழப்பைத்  தாங்கிக் கொள்ள  எத்தனைக்  கடினமான இதயம் வேண்டும்  என்பதை வார்த்தைகளால்  வருணிக்க முடியாது. இதயத்தின் கடினத்தைத்  தாங்காது கண்ணீர் சொரியும் சோகத்தின் வடிவத்தை நாம் சங்க இலக்கியத்தில் நிரம்பவே காணலாம்.
    அதில் ஒரு பாடலில்  ( அகநானூறு 233: பாலை).

    “அலமரல் மழைக்கண் மல்குபனி வாரநி ..” எனத் தொடங்கும் பாடலில் பிரிவின் துயரால் அழுகிறத் தலைவியின் கண்ணீரை  ஆற்றுமுகமாகத் தோழி சொல்லும் ஆறுதலில் கற்பனையின் செறிவு காணக்கிடைக்கிறது.

    அப்படிப் பிரிந்த காதலர்கள் மீண்டும் சேர்ந்துவிடும் போது கிடைக்கும் சுகத்திற்கு அளவேது…!
    பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி
    பொருந்தினர் மேனிபோல் பொற்பத் திருந்திழாய்
    வானம் பொழியவும் வாரார்கொல் இன்னாத
    கானம் கடந்து  சென்றார்

    பிரிந்தவர் மேனிபோல மழையின்றி வறண்டு கிடந்த முல்லைப் பூவானது, பெய்த மழையால் பொருந்தியனர் மேனி போலச் செழித்தது என்பதை இச்சங்கப் பாடல் விளக்குகிறது. பிரிந்தவர் சேரும் தருணம் பொதுவாக ஆர்ப்பரிக்கும் தருணமாகத்தான் இருக்கும். ஆனால் கவியரசரோ அதைக் காதலியின் அமைதியின் தருணமாக,  மௌனத்தின் நிலையாக வரைகிறார்.

    “பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால்
    அங்கு பெண்மையின் நிலை என்ன? – மௌனம்”

    ஆதலால்தான் காதலியின் நிலையைப் பற்றி சொல்கிறார் கவியரசர்… மௌன நிலை என்று !

    பிரிந்து மீண்டும் சேரும் காதலர்கள் பேச்சுவரமுடியாமல் கண்களால் மட்டுமே கவிதை  பாடிடுவர். பேச்சுகூடஅங்கு ஒரு சுமையாகத்தான் இருக்கும். கம்பன் இந்த நிலையை  நயமாகப் பாடியுள்ளார். ஆனால் கண்ணதாசனோ அந்த நிலையை  மௌனத்தின் நிலையாக, அமைதியான தெய்வத்தின் சன்னதி என்பதாகப் பாடுகிறார். காதலின் தெய்விகத்தைத் தன் காவிய வரிகளால் ஆளுகிறார்;

    “பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போதில்
    அழுதால் கொஞ்சம்  நிம்மதி.
    பேச மறந்து  சிலையாய் இருந்தால்
    அதுதான் தெய்வத்தின் சன்னதி…”

    “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?” என்ற இந்தப் பாடல் எதிர்மறைக் கருத்துக்கள் தாங்கி நிற்கும் பாடல்போல்  தோன்றினாலும், நேர்மறை  எண்ணமிக்கப் பாடலாக  கவிஞர்.கண்ணதாசனால் ஓவியமாய் வரையப்பட்ட பாடல். மனிதனின் வாழ்வில் எல்லா நிகழ்வுகளுக்குமே காரணம் மனம் தானே. மனத்தால் தான் இன்பமும் துன்பமும் நிகழ்கிறது.

    இன்பத்தில் எழுந்து விளயாடும் மனம்
    துன்பம் வரும்பபோது மட்டும் ஏனோ
    துவண்டு போகிறது !

    சோகத்தில் மனம் தளர்ந்து விடும்போது அது விடை தேடி இறைவனை நாடுகிறது! புரியாத புதிருக்கு ஆறுதலாய் விடைதேடி இறைவனை  நாடுவதாக அற்புதமமான வரிகளைக் கொண்ட  கருத்தாழமிக்க வரிகள்.

    ‘கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா’குளிர்நிலா என எல்லாக் கவிஞர்களும், நிலாவின் வெளிச்சத்தில் குளிர்ந்தபோது கொதிக்கும் நிலாவெனக் கண்ணாதாசன் பாடி வெப்பக்காதலை வெவளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

    யாப்பின் அச்சில் நின்று கொண்டே அவர் நெய்த பலவிதமான கவிதைப் பாக்கள் நவனீ க் கவிதை வடிவத்துக்கு சுக்கான் பிடித்தது. அது தமிழ்த்தாய்க்கு ஆடைபூட்டி, அடையாளம் காட்டி, மானம் காத்த நெசவாளியாக நமது கவிஞரை கவியுலகில் அடையாளம் காட்டியது.

    “பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்…”

    ‘மலைத்தேன்’ எனும் சிலேடை வரிகண்டு நானும் மலைத்தேன்…கவிஞரின் கற்பனைத் திறனின் தமிழாழம் கண்டு திகைத்தேன்!.

    அதிலும், ‘பார்வையால் குடித்தேன்..’ என்ற பட்டொளி வீசும்  வரிகண்டு இன்றளவும் வியந்தேன்… கவியரசரின் கவியாளுமை கண்டு தோற்று நான் அயர்ந்தேன் !

    கன்னியரைத் தொடாமல்  கவிதை என்பதை  எப்போது பாடிமுடிப்பது… நான் கன்னியர் பற்றி அவர் பாடல் வடிப்பதைச் சொல்கிறேன். அலையும் தோதாரணமாய் கவிஞரின் வரிகளில் அழகுப் பதுமைமயர் ஆடி நிற்பதைக் கண்டு, இன்றும் நான் நினைனத்து ரசித்து ரசித்து வியந்து போகிறேன். ரிஷிகள் கூட வியந்து ரசிக்கும் காதல் ரசமும், கவியமுதமும் கவிஞரின் வரிகளில் கொட்டி வடியும் அழகு ரசம்.

    காதல் ரசம் கம்பனின் வலையில் விழுந்து கவிஞரின் மடியில் கனிந்தது. அமுதக் காதலை அள்ளிப் பருகியும் தெவிட்டாத  கவிஞர், வெள்ளித்திரைச் சுருளுக்குள் அள்ளித் தெளித்த தங்க வரிகள்தான் எத்தனை எத்தனை!

    காதலைப் பாடச் சொன்னால்  … நிஜக் காதலியையே  நமக்குமுன் கொண்டு வந்து நிறுத்தும் மந்திரக் கவிஞர் அவர்.

    மதுவை  சுவைத்தால் கவிதை  பிறக்கும் என்பர்…! நான் கவிஞரின் கவிமதுவை சுவைத்ததால் என்னுள் கவிதை  மலர்ந்தது இன்னும் மலர்ந்துகொண்டே  இருக்கிறது.

    கவியரசு ஒரு தத்துவப் பள்ளிக் கூடம். ஏழைப் பாமரனின் உதடுகளில் கூட தத்துவத்தைப் பேசவைத்த  ஆசான். வாழ்வின் எல்லா நிலைகளிலும் பாமரன்கூட இன்றளவும் பேசும் தத்துவ வசனங்கள் கவிஞரின் திரைப்பாடல் தத்துவ வரிகள்.

    பட்டியிலும் தொட்டியிலும் பாட்டின் வடிவத்தில் தமிழன்னையை துதிக்க வைத்தவன் !

    “பூஜ்யத்துக்குள்ளே ஒரு
    ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
    புரியாமலே இருப்பான் ஒருவன், அவனைப்
    புரிந்து கொண்டால்  அவன் தான் இறைவன்…”

    தத்துவத்தின் முத்திரையாக மக்களின் மனத்தில் என்றும் வாழும் முத்தானப் பாடல். தன்முனைப்பாற்றலுக்கு இதைவிடச் சிறந்த வரிகள் உண்டா?

    உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை  வணங்காமல் நீ வாழலாம்

    மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
    மானென்று  சொல்வதில்லையா? தன்னைத்
    தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள்
    தலைவர்கள் ஆவதில்லையா?

    கீதாவுபதேசம் படித்து பாமரனுக்கும் கண்ணதாசா உபதேசம் தந்தவன். முன்னது ஆழம்மிக்க பமாழி.,. பின்னது அர்த்தம் மிக்க ஒளி.! இருட்டுக்குள் இருந்து தியானத்தில் தேடவண்டிய ஆன்மீகத்தை எளிய தமிழில் இலகு வெவளிச்சத்தில் எல்லோரும் அறிய ஒளிப்பாய்ச்சியவர் கவியரசர்.

    “வீடு வரை உறவு …வீதி வரை மனைவி
    காடுவரை பிள்ளை…கடைசி வரை யாரோ”

    வாழ்க்கையின் எல்லைக் கோட்டை அளந்து அதற்கான மைல்கல்லையும்  இந்த புண்ணிய வரிகளில் புதைத்து வைத்தவர் நம் கவிஞர்.

    ஆட்டுவித்தால் யார் ஒருவன்…..எனும் பாடலின் வரிகள் அத்துணையும் தத்துவத்தின் அர்த்தமிக்க வடிவங்கள்.

    “கடல்  அளவே இருந்தாலும் மயங்க மாட்டேன்
    அது கை அளவே ஆனாலும் கலங்க மாட்டேன்”

    என வாழ்வின் ஒப்புயர்வற்ற உன்னத நிலையை  எடுத்துச் சொன்னபதோடு அதுபோல் வாழ்ந்தும் காட்டியவர்.

    ‘சொல்லுதல் யார்க்கும் எளியவாம் அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்’

    என்ற வள்ளுவன் வாய்மொழிக்கேற்ப வாழ்ந்து மறைந்தவர், கவியரசு கண்ணதாசன்.

    அவர் உடலால்தான் மறைந்தாரே தவிர உயிராய் நம்மோடு என்றென்றும்  வாழ்கிறார், அவரின் பாடல் வரிகள் இன்றளவும் நம்மூச்சோடு இணைந்து  இசைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    -பாலகணேஷ்

    Kannadasanகண்ணதாசனை என் பார்வையில் எழுதுவது என்றதுமே பலத்த யோசனை சிந்தையை ஆட்டி வைத்தது. நண்பனாய், அண்ணனாய், ஆசானாய், ஞானியாய் பலப்பல முகம் காட்டி வாழ்வில் பங்குபெற்றவரான கண்ணதாசனின் எந்த முகத்தைச் சொல்வது நான்? சற்றே ஆழ்ந்து யோசித்தால் நான் கண்ணதாசனைக் கண்ணதாசனாகவே அதிகம் ரசித்திருக்கிறேன். அதாவது கண்ணனுக்கு அவர் தாசனாக இருந்த காரணத்தாலேயே எனக்கு அவரைப் பிடிக்கும்.

    பாரதியார் கண்ணனை அம்மாவாக, தோழியாக, காதலியாக, சேவகனாக இப்படிப் பலப்பல ரூபங்களில் கண்டு நெகிழ்ந்து கவிதைகளைப் பொழிந்தது போலக் கண்ணதாசனும் கண்ணனை நினைந்து நெகிழ்ந்து நெக்குருகித் தமிழ்த் திரையிசைக்கு அளித்த பாடல்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்தான். ’கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல; கல்லும் முள்ளுமே பூவாய் மாறும்’ என்றால் மானிடனான கண்ணதாசன் மலர்ந்து கவிதை மழை பொழிந்ததில் என்ன வியப்பு?

    ’ராமு’ படப்பாடலில் சொல்கிறார்: ’தேடிநின்ற கண்களிலே கண்ணன் வந்தான் ; தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்’ அப்படி வருகிற கண்ணன் எப்படியிருப்பான்? ’கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்; கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்’. யார் எந்த வடிவத்தில் பார்க்க விரும்பினாலும் அந்த வடிவில் கண்ணன் இருப்பானாம். அப்படி எதுக்குய்யா அவன் வரணும்?

    ’தர்மம் என்னும் தேரிலேறிக் கண்ணன் வந்தான்; தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்’ என்கிறார். தீராத துயரால் வருந்தி அழைப்பவர்க்கு விடிவெள்ளியாய்க் கண்ணன் வருவான், பிருந்தாவனம் அழைத்துச் செல்வான். அந்த இடம் எப்படிப்பட்டது? அதையும் சொல்கிறார் தாசன். முடவர்களை நடக்க வைக்கும், மூடர்களை அறிய வைக்கும், குருடர்களைக் காண வைக்கும், ஊமைகளைப் பேச வைக்கும்… கண்ணனின் வசிப்பிடமே அத்தனை மகிமை வாய்ந்ததெனில் கண்ணனை என் சொல்ல…?

    கடவுள் கண்ணன் அப்படி என்றால், கோபிகையருடன் ராஸலீலை செய்யும் காதலன் கண்ணனை எப்படிச் சொல்கிறார் தாசன்? ‘கண்ணன் என்னைக் கண்டு கொண்டான், கையிரண்டில் அள்ளிக் கொண்டான், பொன்னழகு மேனி என்றான், பூச்சரங்கள் சூடித் தந்தான்’ இப்படியெல்லாம் செய்து மயக்கிய கள்வன் ‘கண் திறந்து பார்த்தேன், கண்ணன் அங்கு இல்லை. கண்ணீர் பெருகியதே’ என்று புலம்பிக் கண்ணீர் வடிக்க வைத்துவிட்டு மாயாவியாக மறைந்து விடுகிறான் என்கிறார்.

    ’இப்படிச் செய்துவிட்டானே!’ என்று கண்ணன் மேல் கோபம் வருகிறதா என்ன…? அப்போதும்கூடக் ‘கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை, கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை’ என்று கண்ணனையே எண்ணி உருகத்தான் முடிகிறது. முத்தாய்ப்பாகக் ’கண்ணன் வரும் நாளில் நான் இருப்பேனோ, காற்றில் மறைவேனோ’ என்றுவிட்டு ‘நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில் நானே தவழ்ந்திருப்பேன்’ என்று முடிக்கிறார். இதில் காதல் பாவத்தை விட்டு அருள் புரியவரும் கண்ணனின் நெஞ்சில் எனக்கு ஓர் இடம் வேண்டும் என்று ஆன்மீக பாவத்திலும் கண்ணதாசன் துடிப்பை நம்மால் உணர முடியும்.

    கண்ணதாசன் இயற்றிய ‘கிருஷ்ண கானம்’ இசைத் தொகுப்பு மிகப்பிரபலமானது; கேட்பவரை உருக வைப்பது. அதில் ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் கண்ணனைத் தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பார். கோகுலத்தில் பசுக்களெல்லாம் அந்தக் கோபாலன் பேரைக் கேட்டாலே நூறுபடி பால் கறக்கின்றன என்று துவங்கிக் கண்ணன் பெருமைகளைப் பாடுவார். சகல உயிரினங்களையும மயக்கும் கண்ணனின் வேணுகானத்தைப் பொழியும் புல்லாங்குழலை, அதைத் தந்த மூங்கில்களையே புகழ்ந்து பாடச் சொல்லுவார் கண்ணதாசன். பாரதியாருக்குச் சற்றும் குறைவில்லாமல் இந்தத் தொகுப்பு முழுவதிலும் கண்ணனைப் பல பாவங்களில் பல கோணங்களில் வைத்துக் கவிஅடைமழை பொழிந்திருப்பார் கண்ணதாசன்.

    கண்ணனைக் கொண்டாடுதலின் உச்சமாகக் கண்ணன் நேரில் வந்தால் என்ன வரம் கேட்பது என்பதைச் சொல்கிறார். கண்ணதாசனின் வாழ்க்கை அனுபவங்கள் ஓருருக் கொண்டதுபோல் அது தொனிக்கிறது. ‘பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள், அந்தப் பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான், நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்? இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்!’’ இன்பத்தையே மனம் நாடும் இவ்வுலகில் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளத்தைக் கேட்க அந்தக் கவிஞன் எத்தனை அனுபவங்களால் பக்குவப்பட்டிருக்க வேண்டும்?

    அந்த அனுபவங்களின் சாறை நமக்கு அளிக்கிறார் ’உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா… இதை உணர்ந்து கொண்டல் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா’ என்கிற இரண்டே வரிகளில். நம் உள்ளம் எத்தனை உயரமோ அத்தனை உயரம்தான் உலகில் நமக்குக் கிடைக்கும் ஏற்றமும் வாழ்வும்.

    இன்னும்… இன்னும்… என சொல்லிக் கொண்டே போனால் அதற்கு முடிவேயிராது. ஆக…கண்ணனை எல்லா நிலைகளிலும் பார்த்துப் பரவசித்து அவனுக்குத் தாசனாக இருக்கும் கண்ணதாசன், அந்த அனுபவங்களையும் அதனால் தனக்குக் கிடைத்த ஞானத்தையும் எந்தவிதச் சிரமமும் இன்றி நமக்கும் இனிய திரைப்படப் பாடல்களின்வழி கடத்தி விட்டிருக்கிறார். ஒவ்வொன்றையும் கேட்கும் போதெல்லாம் புதுப்புது நயங்கள் மனதில் தோன்றி கண்ணதாசனை வியக்கத்தான் வேண்டி இருக்கிறது. எனவே கண்ணனுக்குத் தாசனாகவே என் மனதில் சிம்மாசனமிட்டு கண்ணதாசன் வீற்றிருப்பதில் வியப்பென்ன…?

     

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –எஸ். கிருஷ்ணசாமி

    என் பார்வையில் கண்ணதாசன்

    Kannadasanநம் செந்தமிழ் நாட்டில் இருபதாம் நுற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற கவிஞர்களில் தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவர்கள் மூவர். அவர்கள் தான் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவியரசு கண்ணதாசன்.

    அந்த மூவரின் படைப்புக்களில் நான் அதிகமாக படித்தது கவியரசு கண்ணதாசன் படைப்புக்களைத்தான். என் பார்வையில் கவியரசு கண்ணதாசன் மிகப்பெரிய கவிஞராக காட்சியளிக்கிறார்.

    கவிஞர், பாடலாசிரியர், வசனகர்த்தா, படத்தயாரிப்பாளர், நடிகர், அரசியல்வாதி, ஆன்மீகப் பேச்சாளர், இலக்கியவாதி என்று பன்முகம் கொண்ட பண்பட்ட மனிதராக நான் கவியரசு கண்ணதாசனை பார்க்கிறேன்.

    குறுகிய காலத்தில் கண்ணதாசன் 5000க்கும் மேற்பட்ட திரை இசைப் பாடல்களையும், 4000க்கு மேற்பட்ட கவிதைகளையும் 60க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். நோய் நாட்களைத் தவிர எஞ்சிய நாட்களிலெல்லாம் எழுதிக் கொண்டே இருந்திருந்தால் தான் இவ்வளவு படைப்புகள் சாத்தியமாகும். அவரின் எமுத்துப் பணியை நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது.

    அவர் தொட்டெழுதாத துறைகளே இல்லை. காதலை, கன்னியரை, மதுவை, அரசியலை, நீதியை, நியாத்தை, ஆண்டவனை, சிலுவையில் மாண்டவனை. தான் துய்த்த இன்பங்களை, பட்ட துன்பங்களை, செய்த தவறுகளை- அத்தனை பேர்களையும், அத்தனை நிகழ்வுகளையும் பாடலாக, கவிதையாக, கட்டுரையாகப் பதிவு செய்த ஒரே கவிஞர் கவியரசு கண்ணதாசன் ஒருவர் மட்டுமே!

    அவர் எழுத்துக்கள் எல்லோராலும் போற்றப்படக் காரணம்; தன் அனுபவங்களையே வார்த்தைகளாக வழங்கிச் சென்றுள்ளார் அந்த மகாகவிஞன்!

    ஒருவர் மாண்புற நடந்தால் அவரை வானளாவப் புகழ்வதும் அவர் மாறிவிட்டால் உடனே தாக்குவதும் அவர் எழுதுகோலின் இயல்பான வேலையாகும்.

    மானிடரைப்பாடி அவர்
    மாறியதும் ஏசுவதென்
    வாடிக்கையான பதிகம்
    மலையளவு தூக்கி உடன்
    வலிக்கும் வரை தாக்குவதில்
    மனிதரில் நான் தெய்வமிருகம்
    என்கிறார் கவியரசு. அதுபோலவே மற்றவர்கள் தன்னைப் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் அதை சமமாகப் பார்ப்பது அவர் பழக்கம்.

    கவிஞன் யானோர் காலக் கணிதம்
    கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்
    இகழ்ந்தால் என்னுல் இறந்துவிடாது
    புகழ்ந்தால் என்மனம் புல்லரிக்காது
    என்று சாதரணமாக பாடிவிட்டு போகிறார்.  எனது பார்வையில் கண்ணதாசன் எதையும் தாங்கும் இதயம் படைத்தவராக தெரிகிறார்.

    கண்ணதாசனின் கவிதைகள் இதுவரை ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. அதைப்போலவே அவரின்திரை இசைப்படால்கள் பல தொகுதிகள் வெளிவந்துள்ளன. நான் அவரின் படைப்புகள் அத்தனையும் படித்துள்ளேன். அதன் தாக்கத்தில் சென்ற ஆண்டு “கவியரசர் கண்ணதாசனின் கவிதைச் சிந்தனைகள்” என்ற ஒரு நுலை எழுதி வெளியிட்டுள்ளேன். அது அரசால் ஏற்கப்பட்டு அனைத்து நுலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அவரின் எழுத்துக்களை கவனமாகக் கவனித்துப் படித்தால் நம் வாழ்வின் பல நிகழ்வுகள் அதில் வெளிப்படும். “தனி மனித வாழ்வில் எங்கு ஒரு சம்பவம் சடந்தாலும் அங்கு எனது பாடல் ஒன்று ஒலிக்கும்” என்று கண்ணதாசனே ஏழுதியிருக்கிறார்.

    என்வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் எண்ணிப்பார்க்கிறேன். கவிஞரின் கூற்று நுற்றுக்கு நூறு என் வாழ்வில் நடந்துள்ளதை அறிகிறேன்.
    என் கல்லுரிக் காலங்களில் நான் ரசித்துக் காதலித்த நாட்களில் என் கூடவே வந்தது கவிஞரின் பாடல்கள்.

    காதலித்தவளைக் காணத் தவித்த நேரங்களிலெல்லாம் என் வாய் தானாக முணுமுணுத்த பாடல்:
    கண்கள் இரண்டும் என்று
    உன்னைக் கண்டு பேசுமோ!
    காலம் இனிமேல் நம்மை
    ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ!

    காதலில் வெற்றிடைந்த நான் மணநாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்பொழுது காற்றில் மிதந்து வருகிறது கண்ணதாசன் பாடல்:
    கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா…..நாம்
    கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா!
    செல்லாத இடம் நோக்கி செல்லலாமா?

    ஒவ்வொரு தருணத்திலும் கவிஞரின் பாடல் ஒலிப்பதை உளமாற உணர்கிறேன்.

    கவியரசர் வெள்ளை உள்ளம் படைத்தவர் தன் வாழ்நாளில் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாதவர். அவரைத் தான் பலபேர் பல துன்பங்களுக்கு ஆளாக்கியுள்ளனர்.

    தன் மனதில் பட்டதை துணிச்சலாக எழுதும் தன்மை பாரதிக்கு பிறகு கண்ணதாசனிடம் காண்கிறேன்.
    கோப்பையின் மதுவே உன்னைக்
    குடித்து துடித்தாலே நான்
    காப்பியக் கவிஞனானேன்

    கிண்ணம் உடைந்தால் … என்
    கிறுக்கும் முடிந்து விடும்

    ஒர் கையிலே மதுவும் ஒர் கையிலே மங்கையரும்
    சேர்ந்திருக்கும் வேளையிலே ஜீவன் பிரிந்தால் தான்
    நான் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும் இல்லையெனில்
    ஏன் வாழ்ந்தாய் என்றே இறைவன் என்னைக் கேட்பான்

    இப்படி தன்னைப் பற்றி வெட்ட வெளிச்சமாக எழுத எந்த கவிஞனால் முடியும்? தன்வாழ்வில் நடந்தவைகளை ஒளிவு மறைவின்றி எழுதிய ஒரே கவிஞன் என்னைப் பொருத்த வரையில் கவியரசு கண்ணதாசன் மட்டுமே!

    மதுவிலும் மங்கையரிலும் திளைத்த போதும் தான் ஒரு மாபெரும் கவிஞன் என்பதை தன் எழுத்தில் நிரூபித்தவர் கவிஞர் கண்ணதாசன்.

    தற்காலத்தில் ஒரு திரைப்படத்தின் பாடல் வெளிவந்தால், அடுத்த படம் வந்ததும் இப்பாடல் மக்களிடமிருந்து மறைந்து விடுகிறது. ஆனால் கண்ணதாசனின் பாடல்கள் காலங்கடந்தும் மக்களால் உச்சரிக்கப்பட்டே வருகின்றன.

    அவரின் கவிதைகள், காலத்தின் சாத்திரங்கள்; அவரின் நான்காயிரம் கவிதைகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஏழு தொகுதிகளையும் படித்த நான் எல்லாக் கவிதைகளுக்கு முத்தாய்ப்புக் கவிதையாக போற்றுவது கண்ணதாசன் எழுதிய:
    சுடுகாட்டு எலும்புகளை
    சோதித்து பார்த்ததிலே
    வடநாட் டெலும்பென்று
    வந்த எலும் பில்லையடி!
    தென்னாட் டெலும் பென்று
    தெரிந்த எலும் பில்லையடி
    எந்நாட் டெலும் பென்றும்
    எழுதிவைக்க வில்லையடி
    ஒரு நாட்டு மக்களுக்குள்
    ஓராயிரம் பிரிவை
    எரியூட்ட வில்லையெனில்
    எந்நாளும் துன்பமடி
    என்ற கவிதையைத்தான். இந்தக் கவிதையை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்த்து ஒவ்வொரு இந்தியனின் இல்லத்திலும் அவன் உள்ளத்திலும் மாட்டி வைத்தால் போதும்! இனச் சண்டை சாதிச் சண்டை என்றும் வராது!

    இனவேறுபாடுகளைக் களையப்பாடிய கவியரசர் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் “அர்த்தமுள்ள இந்து மதம்” “ஏசு காவியம்” போன்ற நுல்களையும் படைத்துள்ளார். இஸ்லாமியர்களின் வேத நுலான திருக்குரனை தமிழ் காவியமாக மொழி பெயர்க்க விரும்பி குரானின் முதல் வசனத்தை “திறப்பு” என்ற பெயரில் கவிதையாக எழுதினார். சிலரின் தலையீட்டால் அது அப்படியே நின்று போய்விட்டது.

    கண்ணதாசன் கவிதை பாடல் மட்டுமின்றி திரைப்பட வசனகர்த்தாவாவும் திறம்பட பணியாற்றி உள்ளார் பல படங்களுக்கு அவர் வசனம் எழுதியுள்ளார். அதில் நான் ரசித்துக் கேட்ட வசனம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த “நாடோடி மன்னன்” என்ற படத்துக்கு கவிஞர் எழுதிய கீழ்க்கண்ட வசனம். இதில் தமிழ் எவ்வளவு எளிமையாகவும், எதார்தமாகவும் கவிஞரால் கையாளப் பட்டுள்ளது என்று பாருங்கள்.

    அப்படத்தில் நடிகை பானுமதி ஏற்ற பாத்திரம் மதனா என்ற பெயருடையது. மதனா இறந்து விடுகிறாள். வீராங்கன் (எம்.ஜி.ஆர்) அழுது துடிப்பதைக் கண்ட மதனாவின் தந்தை “அழாதே! வீராங்கா” என்பார் அதற்கு வீராங்கன்,
    “இன்பம் வந்த போது சிரிக்கத்தான் விடவில்லை
    அழக்கூடவா விடக்கூடாது” என்பார்.
    அதற்கு மதனாவின் தந்தை பதில் கூறுவதாக வரும் வசனம்
    “இருளைப் போக்கும் விளக்குக்கு …. தன்
    நிழலைப் போக்கும் சக்தி இல்லை என்பார்.
    உடனே எம்.ஜி.ஆர். “விரலை அறுத்து விட்டா வீணை மீட்டுவது” என்று சொல்வார்.
    அது கேட்ட மதனாவின் தந்தை,
    “உலகில் சாதிக்கப்பட்ட சாதனைகள்  எல்லாம்
    பாதிக்கப்பட்டவர்கள் செய்தது வீராங்கா”
    என்று சொல்வார்.

    இப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாடோடியாகவும் மன்னாகவும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இருவரும் உரையாடும் ஒரு காட்சி. இதில் கவியராசரின் அற்புதமான அறிவுப்பூர்வமான வசனத்தைப் பாருங்கள்.

    மன்னன்:    எதற்காக புராட்சி? யாரை எதிர்த்து புராட்சி?
    நாடோடி: உங்கள் ஆட்சியை எதிர்த்து, சர்வாதிகாரமுறையை ஒழிப்பதற்கு!
    மன்னன்:    அப்படியானால் என்னை ஒழித்து விடப் போகிறீர்களா?
    மக்களின் ஒருவர் தானே மன்னன். ஏன் நானே ஆட்சி செய்யக் கூடாதா?
    நாடோடி:    மக்களில் ஒருவர்தான் நீங்கள், ஆனால் மக்களின் நிலையறியாதவர். ஏழைகள் இந்த நாட்டை ஆள வேண்டும் என்கிறோம்!
    மன்னன்:    அதெப்படி முடியும் விவசாயிக்கு உழத்தெரியும், வியாபாரிக்கு தொழில் தெரியும். மன்னனுக்குத் தானே ஆளத்தெரியும்!
    நாடோடி:    அப்படித்தான் மக்கள் இதுவரை நம்பி வந்தார்கள் ஆனால் விதிக்கப்படும் கொடிய வரிகளும், கொடுக்கப்படும் சவுக்கடிகளும், மன்னர்களாகிய நீங்கள் வாழத்தெரிந்தவர்கள் தானே தவிர, ஆளத் தெரிந்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து விட்டன. பாத்திரம் நிறைய பாலைக் கண்டு பழகிய உங்களுக்கு சாக்கடை நடுவே வாழும் மக்களின் நிலை புரியாதென்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இரண்டாயிரம் ஆடைகளில் எதை அணிவது என்று புரியாமல் திண்டாடும் நீங்கள், ஏதாவது ஒரு ஆடையிருந்தால் மானத்தை மறைக்கலாமே என்று ஏங்கும் ஏழைகள் பற்றி எப்படி அறிய முடியும்? இங்கே தாதியர்கள் பட்டு விரிக்கிறார்கள் நீங்கள் நடந்து போகிறீர்கள். அங்கே காலில் குத்திய முள்ளில் பாதியை ஒடித்து எரிந்து விட்டு கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள், ஏழை மக்கள்!

    என்ன அருமையான வசனம்! இதில் எங்காவது சினிமாத்தனம் தெரிகிறதா? இயல்பான நடை அது தான் கண்ணதாசன்.

    இன்னொரு படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகையர் திலகம் சாவித்திரி நடித்த மகாதேவி. அதில் வில்லன் பேசும் ஒரு வசனம்.
    “வசுந்தரா நாளை நீ எனக்கு இணங்க வேண்டும்
    இல்லையேல் உன் குழந்தையைக் கொன்று விடுவேன்”;

    அதே படத்தில் வேறொரு காட்சியில் கவிஞர் வசனம் எழுதுகிறார் இப்படி:
    “பித்துப் பிடித்தவர்களுக்கு மற்ற பேச்சு
    பிதற்றலாகவே இருக்கும்”

    “ ஆத்திரமே நீதிபதியாகிவிட்டால்
    அறிவுக்கு அங்கே வேலையில்லை”

    “இந்தக் காதல் ஒரு பாதி இல்லை சரிபாதி”

    “கண்ணீரில் சட்டம் கரைந்து விட்டால்
    நீதி சுடுகாடு போக வேண்டியது தான்”
    வசனத்தில் தான் என்ன ஒரு ஒட்டம்! என்ன ஒரு தெளிவு. கவியரசாரின் வசனத்திற்காகவே மகாதேவியை பலமுறை பார்த்தேன்.

    “சிவகங்கைச் சீமை” கவிஞரின் சொந்தப்படம். மற்ற படங்களுக்கு சிறப்பாக வசனம் எழுதிய கவிஞர் தன் சொந்தப் படத்துக்கு தன்திறமை முழுவதையும் காட்டி எழுதியுள்ளார் பாருங்கள்.
    ஒரு பெண் பாடுகிறாள்:
    இமையும் விழியும் எதிரானால்
    இயற்கை சிரிக்காதோ!
    தாயும் சேயும் பகையானால்
    தாரணி நகைக்காதோ!

    இதற்கு அப்பெண்ணின் கணவர் என்ன சொல்வான்? கவியரசனின் வசனம் வாள்வீசுகிறது பாருங்கள்.
    நகைக்கட்டும் நன்றாக நகைக்கட்டும் நீயும் சேர்ந்து
    நகைத்து விடு. வலுவுள்ளவன் வாழுகிறான். வாழத்
    தெரியாதவன் வறண்டு போன தத்துவங்களின் பிரதிநிதி.
    சாவைக் கண்டு சிரிக்கப் பழகு. உன் சஞ்சலம் மறைந்து விடும்.
    மண்டை ஓடுகளின் மேலே நடந்து மண்டலத்தை
    ஆண்டவர் பலர். தன் தம்பியின் தலைமீது நடந்து
    தரணியை ஆளாப்போகிறான் உன் கணவன்”
    கவியரசரின் வசனங்களுக்காகவே படம் வெற்றி பெற்றது.

    திரைத்துறை மட்டும் அல்லாமல் பத்திரிக்கைத் துறையிலும் வெற்றிக் கொடி நாட்டியவர் கண்ணதாசன். சண்டமாருதம், திருமகள், தாய்நாடு, திரைஒலி, கண்ணதாசன், தென்றல், தென்றல்திரை, அணிகலன், என்று பல்வேறு இதழ்களுக்கு ஆசிரியாராக இருந்து பத்திரிக்கையை திறம்பட நடத்தியுள்ளார் கண்ணதாசன்.

    தான் நடத்திய “கண்ணதாசன்” என்ற பத்திரிக்கையில் கவிதைப் போட்டி நடத்தி பல இளம் கலைஞர்களை, கண்ணதாசன் உருவாக்கியுள்ளார். ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதும் போட்டி அக்காலத்தில் அனைவராருலும் வரவேற்கப்பட்டது.

    காலத்தை வென்ற கவிஞராக வழ்ந்த கண்ணதாசன் அரசியலில் இறங்கி தன் பொன்னான நேரங்களை வீணடித்துள்ளார். அரசியலில் பேசும் பொய் பித்தலாட்டம் கவிஞருக்கு பழக்கமில்லாத ஒன்று. 1962 ஏப்ரால் 9 நாள் கண்ணதாசன் தான் சார்ந்திருந்த திராவிட முன்னேற்ற கழகத்தை விட்டு வெளியேறினார்.

    அரசியலை விட்ட பிறகு அவரின் எழுத்து மேலும் மேலும் கூர்மையானது. அன்மீகத்தில் இறங்கி அற்புதாமான பல நூல்களைப் படைத்தார்.

    கம்பனைப் போல் தானும் ஒரு பெரிய காவியம் படைக்க வேண்டும் என்பதே கவிஞரின் கடைசி ஆசை. அந்த ஆசை நிறைவேறுவதற்குள் காலன் அவசரப்பட்டு கவிஞரின் உயிரைப் பறித்து விட்டான்.

    சிறு கூடல் பட்டியில் பிறந்த  அம்மகாகவிஞன் சிகாகோவில் மறைந்து கண்ணணிடம் சென்றுவிட்டார்.

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    -எஸ். பழனிச்சாமி

    Kannadasanஎன் பார்வையில் கண்ணதாசன் என்ற தலைப்பைப் பார்த்ததுமே ஓராயிரம் பாடல்கள் மனதில் வந்து போனது.

    எழுபதுகளில் நான் பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே, எப்படி கண்ணதாசனால் ஈர்க்கப் பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை என்னைக் கவர்ந்த எல்லாச் சினிமாப் பாடல்களும் கண்ணதாசன் எழுதியவை என்று செய்தித்தாள்களில் படித்துத் தெரிந்து கொண்டதனால் இருக்கலாம்.

    அப்போது கிராமங்களில்கூடப் பிரபலமாக இருந்த இலங்கை வானொலி நிகழ்ச்சிகளும், அதில் தன்னுடைய குரல் வித்தையினால் பல்லாயிரம் மனிதர்களைக் கட்டிப் போட்டிருந்த கே. எஸ். ராஜா என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் கண்ணதாசனின் பாடல் வரிகளை ரசனையோடு விவரித்ததைக் கேட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    அதுமட்டும் இல்லாமல் என்னுடன் பழகிய நண்பர்கள் அனைவரும் கண்ணதாசனின் பாடல்களைச் சிலாகித்துப் பேசியதைக் கேட்க நேர்ந்ததாலும் இருக்கலாம். இவையே கண்ணதாசனிடத்திலும் அவருடைய பாடல்களிடத்திலும் எனக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று தோன்றுகிறது.

    அதனால்தான் பள்ளியில் மாதம் ஒருமுறை நடக்கும் இலக்கிய மன்றக்கூட்டத்தில் நான் ஒவ்வொரு முறையும் பாட்டு பாடுவதற்குப் பெயர் கொடுத்துப் பங்கெடுத்துக் கொள்வேன். அதிலும் ’சூரியகாந்தி’ படத்தில் வரும் ‘பரமசிவன் கழுத்திலிருந்து’ என்ற பாட்டையே மீண்டும் மீண்டும் பாடி இருக்கிறேன். இப்போதும் அந்தப் பாடல் நன்றாக ஞாபகம் இருக்கிறது.

    பரமசிவன் கழுத்திலிருந்து
    பாம்பு
    கேட்டது கருடா செளக்யமா?
    யாரும்
    இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம்
    செளக்யமே கருடன் சொன்னது
    அதில்
    அர்த்தம் உள்ளது

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
    உலகம்
    உன்னை மதிக்கும் உன்
    நிலைமை
    கொஞ்சம் இறங்கி வந்தால்
    நிழலும்
    கூட மிதிக்கும்!

    மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
    மானமுள்ள
    மனிதனுக்கு ஒளவை சொன்னது
    அது
    ஔவை சொன்னது
    அதில்
    அர்த்தம் உள்ளது

    ண்டி ஓடச் க்கங்கள்
    இர
    ண்டு ட்டும் வேண்டும் – அந்த
    இர
    ண்டில் ஒன்று சிறியதென்றால்
    எந்த
    ண்டி ஓடும்?

    உனைப்போலே அளவோடு உறவாட வேண்டும்
    உய
    ர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
    அது
    சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது!

    நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
    நில
    வும் வானும் போலே – நான்
    நில
    வு போலத் தேய்ந்து வந்தேன்
    நீ
    ளர்ந்ததாலே

    என் உள்ளம் எனைப் பார்த்துக்
    கேலி
    செய்யும் போது
    இல்லாதான்
    இல்வாழ்வில் நிம்மதி ஏது
    இது
    ன் சொன்னது
    இதில்
    அர்த்தம் உள்ளது”

    இந்த ஒரு பாடலில் எவ்வளவு கருத்துக்கள் புதைந்துள்ளன என்று நினைத்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

    இந்தப் பாடலுக்கு மற்றொரு விசேஷம் என்னவென்றால், அந்தப் படத்தில் இந்தப் பாடலைக் கவிஞர் கண்ணதாசனே பாடுவதுபோல் காட்சி அமைந்திருக்கும்.

    எத்தனையோ திரைப்படங்களின் வெற்றிக்குக் கவிஞரின் பாடல்களும் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன. எல்லா வகையான மனிதர்களின் மனதையும் கரைத்திருக்கின்றன.

    அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்வதென்றால் எனக்கும் அதை படிக்கும் உங்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படும் என்றாலும், இந்தக் கட்டுரையின் நீளமும், குறிக்கோளும் மாறி ஒருவித அலுப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இந்த ஒரு பாடலைப் பற்றி மட்டும் விவரித்து முடித்துவிடலாம் என்றுதான் நினைத்தேன்.

    ஆனால், என்னால் முடியவில்லை. அடுத்தடுத்துப் பல பாடல்களும் நினைவில் வந்து போனது. நமது கால கட்டத்தில் வாழ்ந்த அற்புதமான கவிஞர் அவர். அவருடைய அனுபவமும், சரஸ்வதியின் கடாட்சமும் நிறைந்து அற்புதமான பாடல்கள் அவர் மூலமாக வந்து கொட்டியது, தமிழுக்குக் கிடைத்த பெறும் பேறு.

    மனம் என்ற ஒன்று பாடாய்ப்படுத்துவதால் மனிதன் கவலைப்பட்டு, துக்கப்பட்டு எப்படியெல்லாம் நொந்து நூலாகிறான் என்று ஒரு பாடலில் சொல்லும் போது, விலங்கு மற்றும் பறவை இனங்கள் அப்படி இல்லை என்று உவமைப்படுத்துவார்.

    பெட்டைக் கோழிக்குக் கட்டுச் சேவலை
    கட்டி வைத்தவன் யாரடா…
    அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்
    சோறு போட்டவன் யாரடா…
    வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
    வருந்தவில்லையே தாயடா…
    மனித ஜாதியில் துயரம் யாவுமே
    மனதினால் வந்த நோயடா…

    மேலும் பணத்தைச் சுற்றிதான் உறவுகள் என்ற நிலைப்பாட்டினை இப்படிச் சொல்வார்…

    அண்ணன் என்னடா தம்பி என்னடா
    அவசரமான
    உலகத்திலே
    ஆசைகொள்வதில்
    அர்த்தம் என்னடா
    காசில்லாதவன்
    குடும்பத்திலே…
    தாயும்
    பிள்ளையும் ஆனபோதிலும் வாயும்
    வயிறும்
    வேறடா
    சந்தைக்
    கூட்டத்தில் வந்த மந்தையில்
    சொந்தம்
    என்பதும் ஏதடா…
    வாழும்
    நாளிலே கூட்டம் கூட்டமாய்
    வந்து
    சேர்கிறார் பாரடா
    கை
    வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
    மதித்து
    வந்தவர் யாரடா…
    பணத்தின்மீதுதான்
    பக்தி என்றபின்
    பந்தபாசமே
    ஏனடா…

    கவிஞரின் பாடல்கள் கடலைப் போன்றவை. அதில் நீங்கள் எத்தனையோ விதவிதமான முத்துக்களை த்தேடி எடுக்கலாம். அதில் மகிழ்ச்சியோடு நீந்தலாம்; வெகுதூரம் பயணிக்கலாம். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சரியான முடிவெடுக்கவும் அந்தப் பாடல்கள் உதவலாம்.

    அது மட்டுமல்லாமல், உற்சாகமான பாடலைப் பாடி மனதை நேர்மறையான சிந்தனைகளில் லயிக்க வைக்கலாம்.

    மானம் பெரிதென்று வாழும் மனிதர்களை
    மான்
    என்று சொல்வதில்லையா – தன்னைத்
    தானும்
    அறிந்து கொண்டு ஊருக்குச் சொல்பவர்கள்
    தலைவர்கள்
    ஆவதில்லையா’

    என்று உணர்த்தியவர் கவிஞர்.

    ‘உலகம் பிறந்தது எனக்காக’ என்று உணர்ந்து பாடினால் ஒரு நாள் உலகையே நீங்கள் சுற்றி வரலாம்.

    அதனால் கவியரசு கண்ணதாசனைப் போற்றுவோம். அவருடைய பாடல்களுக்காகப் பெருமைப்படுவோம்.

    ’கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’ என்று சொல்வார்கள். கவிஞரின் பாடல்கள் கடல் போன்றது என்று சிந்தித்ததாலோ என்னவோ, எனக்கும் ஒரு கவிதை தோன்றியது. அது ஒரு சிலேடைக் கவிதையாக உருவானது.

    கவிஞருக்கு ஒரு ரசிகனாக இந்தச் சிலேடைக் கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்.

    ”இசைக்கும் இன்பம் கொடுக்கும்; எட்டுத்
    திசைக்கும்
    விரிந்து கிடக்கும் – அதிசயம்
    அவிழ்க்கும்;
    அழியாது இருக்கும்; ஆழமிக்க
    கவியரசின்
    பாடல்கள் கடலுக்கு நேர்”

    சிலேடை என்பதால் அதன் விளக்கம் இங்கே:

    இசைக்கும் இன்பம் கொடுக்கும்.

    கடல் அலை அலையாக வந்து கரையில் மோதிச் சப்தமிட்டுக் கொண்டே இருக்கும். அதைப் பார்த்துக் கொண்டு இருப்பதே நமக்கு இன்பத்தைக் கொடுக்கும்.

    கவிஞரின் பாடல்களை வாசித்தாலே அதில் ஒரு இசைலயம் இருக்கும். அது இசையோடு சேர்ந்து வரும்போது அந்த இசைக்கே அது ஒருவித இன்பத்தைக் கொடுக்கிறது.

    எட்டுத் திசைக்கும் விரிந்து கிடக்கும்.

    இந்த உலகில் பெரும்பாலான பகுதியைக் கடல்தான் ஆக்கிரமித்திருக்கிறது. எல்லாத் திசைகளிலும் விரிந்து கிடக்கிறது.

    கவிஞரின் கவிதையில் எல்லா வகையான சுவைகளும் இருக்கும். எல்லாவிதமான கருத்துக்களும் அனுபவங்களும் இருக்கும். வாழ்வில் எந்த நிலையில் இருப்பவருக்கும் பொருந்தும்படி இருக்கும்.

    அதிசயம் அவிழ்க்கும்.

    கடலினுள்ளே இன்னும் மனிதர்கள் அறியாத பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. அது வெளிப்படும் போது ஒவ்வொன்றும் அதிசயிக்கத் தகுந்ததாக இருக்கும்.

    கவிஞரின் பாடல்கள் ஒவ்வொன்றும் எளிமையாகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் இருப்பது அதிசயிக்க வைக்கும். உண்மைகளை நிர்வாணமாக வெளிப்படுத்தும்.

    அழியாது இருக்கும்.

    கடல் என்றும் அழியாதது.

    அதுபோல கவிஞரின் பாடல்களும் காலத்தால் அழியாதது.

    ஆழமிக்க(து)

    கடல் ஆழம் அறிய முடியாதது.

    கவிஞரின் பாடல்களும் ஆழமான கருத்துக்களை உடையது.

     

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –முகவை முத்து.

     

    என் பார்வையில் கண்ணதாசன்

     

     

    Kannadasanமனிதப் பிறப்பின் மகத்துவம் சிலருக்கு நிரந்தரமானவை!!

    அவ்வரிசையில் நான் கண்ட மகத்துவத்தின் “சுடர் ஒளியாய்”  திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள்; எண்ணற்ற எழுத்தாளர்கள் இருந்தபோதிலும் கவிதை உலகில் ஒரு “சூப்பர் ஸ்டார்” என்றே அவரைச் சொல்லலாம். புராணங்களாக இருக்கட்டும் இதிகாசங்களாக இருக்கட்டும் அத்தனை  நூட்களையும் கற்று அதற்கும் சில விளக்க உரைகளும் எழுதியவர். இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு திறமை இருக்கும் என்பார்கள். ஆனால் இவருக்கு ஒரு  திறமை இருந்ததாக தெரியவில்லை,  பல திறமைகளைத் தன்னுள் புடம் போட்டு வளர்த்தவராக இருந்தார்போலும். கம்பன் காலத்தில் கண்ணதாசன் பிறந்திருந்தால்  கம்பனுக்கு வரலாற்று சுவடுகளில் இடம் இருந்திருக்குமா என்று தெரியவில்லை.

    கவியரசரின் முந்தைய காலத்தில் நான் பிறந்திருந்தால் அவரது படைப்புகளை நான் காணாமல் போயிருப்பேன் இருப்பினும் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள் படைப்புகளை அனுபவிக்க வாய்ப்பு அளித்த அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல  நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

    படைப்பாளிகளின் குடும்பத்தில் – மூத்தமகன்
    பருவத்தில் பயிர் செய்த – நெற்களஞ்சியம்
    மனிதகுலத்தில் பிறந்த – பிரம்மன்

    வெளிப்படையான வாழ்க்கை:
    “கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் இல்லை, அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதும் அதைப்பற்றி படிப்பதிலும் ஆசை அதிகம் அதனால் தான் இந்த பெயரை வைத்துக்கொண்டேன்” என்றார்.  இது அவரே அளித்த விளக்கம்.

    பெற்றொர் வைத்த பெயர் முத்தையா.  சிறுவயதில் 7,000 ரூபாய்க்கு தத்துக் கொடுக்கப்பட்தவர் கண்ணதாசன் அவர்கள். அந்த வீட்டில் அவர் பெயர் நாராயணன். “கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே” என்னும் ‘கன்னியின் காதலி’யில் எழுதிய முதல் பாட்டு,  மூன்றாம் பிறையில் வந்த “கண்ணே கலைமனே” கண்ணதாசன் அவர்களின் கடைசிப் பாட்டு.

    ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படையாக சொல்ல தைரியம் வேண்டும். அந்த தைரியம் உள்ள துணிச்சலான மனிதன் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள். தன் வாழ்க்கையின் செயல்களை திறந்தவழி புத்தகமாக சொன்னவர். அரசியலாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி, அவரது பேச்சு மக்கள் மனத்தில் இடம் பிடிக்கச் செய்தது. தனது பேச்சுக்களில் மற்றவர் மனத்தில் எளிதில் இடம் பிடித்து விடுவார். உதாரணமாக கலைஞர் கருணாநிதி  அவர்களும் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர் அவர்களும் கலைத் துறை மற்றும் அரசியல் நண்பர்களாவர்.

    தன் வாழ்வில் மது, மாது ஆகியவற்றில் மூழ்கித் திளைத்தவர்.  தன் படைப்புகளால் வலம்வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பெரியாரின் போதனைகளால் கண்ணதாசன் ஈர்க்கப்பட்டார். பல  மேடை பேச்சுக்களில் இந்து மதத்தை இழிவாக பேசியதும், “கடவுள் உண்டோ உலகில்”  என்று கோசம் போட்டவர்களில் கண்ணதாசன் அவர்களும் ஒருவர். ஆனால் அவரின் வாழ்க்கை துவக்கமானது மிகவும் பக்தி வாய்ந்த குடும்பத்தில் பிறந்தபோதும் நாத்திகம் சிறந்த போதனையாக அப்போது அவருக்கு தெரிந்தது குறிப்பிடத்தக்கது.

    “மாற்றம் ஒன்றுதானே உலகில் மாற்றம் இல்லாதது” என்ற அடிப்படையில்  காலமாற்றத்தின் விளைவால் தன் தவறை உணர்ந்து ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் பெரும் பெயர் பெற்றவை. என்னைப் பொறுத்தவரை அர்த்தமுள்ள இந்துமதம் ஒரு புதிய கீதை என்பேன். இந்த காலகட்டத்தில் புராண வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் தேடுவது பெரும் சிரமமாக உள்ளது. உதாரணமாகச் சொன்னால் “ஆலிலை” என்ற வார்த்தையை அற்புதமாகச் சொன்னவர் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

    மூடநம்பிக்கையில் இருந்த பலரை பக்தியினுள் பகுத்தறிவு புகுத்தியவர்!! “மனிதப் பிறப்பின் மகத்துவம்தான் என்ன?” சிறிது காலம் வாழும் வாழ்க்கையில் எத்தனை  எத்தனை  இடர்பாடுகள்!

    “பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம்” இதுதான் வாழ்க்கையா !
    இல்லை “இறந்தபோதும் வாழவேண்டும்” ஆம் அவ்வரிசையில் கண்ணதாசன் அவரது படைப்புகளால் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். ஒரு நாளில் அவரது பாடல்களோ அல்லது பெயரையோ எழுத்தையோ! கண்டிடாமல் அல்லது கேட்டிடாமல் படித்திடாமல் யாரேனும் உண்டோ! இதை யாரும் மறுக்க முடியுமா.. இல்லை! அல்லவா..
    ராமாயணத்தை எழுதியவர் வால்மீகி என்றால் “அர்த்தமுள்ள இந்துமதம்” எழுதியதால் கண்ணதாசனும்  இன்னொரு வால்மீகிதான்.

    “கவிதை எழுதத் துவங்கினேன்” வார்த்தைகள் வரவில்லை – ஆனால்  நான் கடைசியாக எழுதியது கண்ணதாசன் என்கின்ற பெயர் – மட்டும்தான்.

    இங்கு ஒரு விசயத்தை நான் பதிவு செய்யவிரும்புகிறேன் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள் அவர் பாடலில் சொல்லுவார்..

    “ஆடை இன்றி பிறந்தோமே – ஆசை இன்றி பிறந்தோமா?
    ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர்  யாருமுண்டோ?”

    மனிதனுக்கு ஆசை அது ஆரமித்திததுவிட்டால் அழிவு இல்லாமல் ஆசை அடங்குவதில்லை. மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இல்லாதவர் யாரேனும் உண்டோ? இல்லை, அவ்வாறு இருப்பினும் அவர்கள் மிகச் சிலரே.  புத்தர்கூட எல்லோரும் ஆசையை விட்டொழிக்கவேண்டும் என்று அவர் நினைத்ததே ஒரு ஆசை தானே!

    தமிழ்த் திரை உலகில் கவிஞர் கண்ணதாசன் தன் அபார படைப்புகளால் தமிழ்த்திரை உலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க செய்தவர். அந்த காலகட்டத்தில் பல திறமை வாய்ந்த படைப்பாளிகள் இருந்த போதிலும் தனக்கென தனி இடத்தை தக்கவைத்தவர் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள் .

    தமிழுக்கென தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். இவர் எழுத்தாளராகவும்,  பாடல் ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும், தமிழ் சினிமா துறையில் நீங்கா இடம் பதித்தார்.  1961ல் “குழந்தைக்காக” என்னும் படத்திற்காக “தேசியவிருதும்” 1980ல் சேரமான் காதலி நாவலுக்காக “சாகித்ய அகாடமி” விருதும் பெற்றது குறிப்பிடத்தக்கது .

    சுதந்திரத்திற்காக உயிர் அர்ப்பணித்த மருது சகோதரர்களின் வாழ்க்கை வரலாற்றை “சிவகங்கைச் சீமை” என்கிற பெயரில் படமாகத் தயாரித்து இந்த நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தவர் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

    தமிழுக்காக வாழ்ந்தார்! தமிழை வளர்த்தார்! தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

    பக்தியினுள் பகுத்தறிவு போதித்த பண்பாளருக்கு எனது முதல் கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.
    என்றும் திரு கவியரசு அவர்களின் நினைவுடன் …………

    Share