–முகவை முத்து.

 

என் பார்வையில் கண்ணதாசன்

 

 

Kannadasanமனிதப் பிறப்பின் மகத்துவம் சிலருக்கு நிரந்தரமானவை!!

அவ்வரிசையில் நான் கண்ட மகத்துவத்தின் “சுடர் ஒளியாய்”  திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள்; எண்ணற்ற எழுத்தாளர்கள் இருந்தபோதிலும் கவிதை உலகில் ஒரு “சூப்பர் ஸ்டார்” என்றே அவரைச் சொல்லலாம். புராணங்களாக இருக்கட்டும் இதிகாசங்களாக இருக்கட்டும் அத்தனை  நூட்களையும் கற்று அதற்கும் சில விளக்க உரைகளும் எழுதியவர். இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு திறமை இருக்கும் என்பார்கள். ஆனால் இவருக்கு ஒரு  திறமை இருந்ததாக தெரியவில்லை,  பல திறமைகளைத் தன்னுள் புடம் போட்டு வளர்த்தவராக இருந்தார்போலும். கம்பன் காலத்தில் கண்ணதாசன் பிறந்திருந்தால்  கம்பனுக்கு வரலாற்று சுவடுகளில் இடம் இருந்திருக்குமா என்று தெரியவில்லை.

கவியரசரின் முந்தைய காலத்தில் நான் பிறந்திருந்தால் அவரது படைப்புகளை நான் காணாமல் போயிருப்பேன் இருப்பினும் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள் படைப்புகளை அனுபவிக்க வாய்ப்பு அளித்த அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல  நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

படைப்பாளிகளின் குடும்பத்தில் – மூத்தமகன்
பருவத்தில் பயிர் செய்த – நெற்களஞ்சியம்
மனிதகுலத்தில் பிறந்த – பிரம்மன்

வெளிப்படையான வாழ்க்கை:
“கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் இல்லை, அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதும் அதைப்பற்றி படிப்பதிலும் ஆசை அதிகம் அதனால் தான் இந்த பெயரை வைத்துக்கொண்டேன்” என்றார்.  இது அவரே அளித்த விளக்கம்.

பெற்றொர் வைத்த பெயர் முத்தையா.  சிறுவயதில் 7,000 ரூபாய்க்கு தத்துக் கொடுக்கப்பட்தவர் கண்ணதாசன் அவர்கள். அந்த வீட்டில் அவர் பெயர் நாராயணன். “கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே” என்னும் ‘கன்னியின் காதலி’யில் எழுதிய முதல் பாட்டு,  மூன்றாம் பிறையில் வந்த “கண்ணே கலைமனே” கண்ணதாசன் அவர்களின் கடைசிப் பாட்டு.

ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படையாக சொல்ல தைரியம் வேண்டும். அந்த தைரியம் உள்ள துணிச்சலான மனிதன் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள். தன் வாழ்க்கையின் செயல்களை திறந்தவழி புத்தகமாக சொன்னவர். அரசியலாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி, அவரது பேச்சு மக்கள் மனத்தில் இடம் பிடிக்கச் செய்தது. தனது பேச்சுக்களில் மற்றவர் மனத்தில் எளிதில் இடம் பிடித்து விடுவார். உதாரணமாக கலைஞர் கருணாநிதி  அவர்களும் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர் அவர்களும் கலைத் துறை மற்றும் அரசியல் நண்பர்களாவர்.

தன் வாழ்வில் மது, மாது ஆகியவற்றில் மூழ்கித் திளைத்தவர்.  தன் படைப்புகளால் வலம்வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பெரியாரின் போதனைகளால் கண்ணதாசன் ஈர்க்கப்பட்டார். பல  மேடை பேச்சுக்களில் இந்து மதத்தை இழிவாக பேசியதும், “கடவுள் உண்டோ உலகில்”  என்று கோசம் போட்டவர்களில் கண்ணதாசன் அவர்களும் ஒருவர். ஆனால் அவரின் வாழ்க்கை துவக்கமானது மிகவும் பக்தி வாய்ந்த குடும்பத்தில் பிறந்தபோதும் நாத்திகம் சிறந்த போதனையாக அப்போது அவருக்கு தெரிந்தது குறிப்பிடத்தக்கது.

“மாற்றம் ஒன்றுதானே உலகில் மாற்றம் இல்லாதது” என்ற அடிப்படையில்  காலமாற்றத்தின் விளைவால் தன் தவறை உணர்ந்து ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் பெரும் பெயர் பெற்றவை. என்னைப் பொறுத்தவரை அர்த்தமுள்ள இந்துமதம் ஒரு புதிய கீதை என்பேன். இந்த காலகட்டத்தில் புராண வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் தேடுவது பெரும் சிரமமாக உள்ளது. உதாரணமாகச் சொன்னால் “ஆலிலை” என்ற வார்த்தையை அற்புதமாகச் சொன்னவர் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

மூடநம்பிக்கையில் இருந்த பலரை பக்தியினுள் பகுத்தறிவு புகுத்தியவர்!! “மனிதப் பிறப்பின் மகத்துவம்தான் என்ன?” சிறிது காலம் வாழும் வாழ்க்கையில் எத்தனை  எத்தனை  இடர்பாடுகள்!

“பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம்” இதுதான் வாழ்க்கையா !
இல்லை “இறந்தபோதும் வாழவேண்டும்” ஆம் அவ்வரிசையில் கண்ணதாசன் அவரது படைப்புகளால் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். ஒரு நாளில் அவரது பாடல்களோ அல்லது பெயரையோ எழுத்தையோ! கண்டிடாமல் அல்லது கேட்டிடாமல் படித்திடாமல் யாரேனும் உண்டோ! இதை யாரும் மறுக்க முடியுமா.. இல்லை! அல்லவா..
ராமாயணத்தை எழுதியவர் வால்மீகி என்றால் “அர்த்தமுள்ள இந்துமதம்” எழுதியதால் கண்ணதாசனும்  இன்னொரு வால்மீகிதான்.

“கவிதை எழுதத் துவங்கினேன்” வார்த்தைகள் வரவில்லை – ஆனால்  நான் கடைசியாக எழுதியது கண்ணதாசன் என்கின்ற பெயர் – மட்டும்தான்.

இங்கு ஒரு விசயத்தை நான் பதிவு செய்யவிரும்புகிறேன் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள் அவர் பாடலில் சொல்லுவார்..

“ஆடை இன்றி பிறந்தோமே – ஆசை இன்றி பிறந்தோமா?
ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர்  யாருமுண்டோ?”

மனிதனுக்கு ஆசை அது ஆரமித்திததுவிட்டால் அழிவு இல்லாமல் ஆசை அடங்குவதில்லை. மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இல்லாதவர் யாரேனும் உண்டோ? இல்லை, அவ்வாறு இருப்பினும் அவர்கள் மிகச் சிலரே.  புத்தர்கூட எல்லோரும் ஆசையை விட்டொழிக்கவேண்டும் என்று அவர் நினைத்ததே ஒரு ஆசை தானே!

தமிழ்த் திரை உலகில் கவிஞர் கண்ணதாசன் தன் அபார படைப்புகளால் தமிழ்த்திரை உலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க செய்தவர். அந்த காலகட்டத்தில் பல திறமை வாய்ந்த படைப்பாளிகள் இருந்த போதிலும் தனக்கென தனி இடத்தை தக்கவைத்தவர் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள் .

தமிழுக்கென தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். இவர் எழுத்தாளராகவும்,  பாடல் ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும், தமிழ் சினிமா துறையில் நீங்கா இடம் பதித்தார்.  1961ல் “குழந்தைக்காக” என்னும் படத்திற்காக “தேசியவிருதும்” 1980ல் சேரமான் காதலி நாவலுக்காக “சாகித்ய அகாடமி” விருதும் பெற்றது குறிப்பிடத்தக்கது .

சுதந்திரத்திற்காக உயிர் அர்ப்பணித்த மருது சகோதரர்களின் வாழ்க்கை வரலாற்றை “சிவகங்கைச் சீமை” என்கிற பெயரில் படமாகத் தயாரித்து இந்த நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தவர் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

தமிழுக்காக வாழ்ந்தார்! தமிழை வளர்த்தார்! தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் திரு கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

பக்தியினுள் பகுத்தறிவு போதித்த பண்பாளருக்கு எனது முதல் கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.
என்றும் திரு கவியரசு அவர்களின் நினைவுடன் …………

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.