என் பார்வையில் கண்ணதாசன்
–பவித்ரா நந்தகுமார்.
என் பார்வையில் கவியரசு கண்ணதாசன்
இந்த தாள் போதுமா?
நெஞ்சில் நீங்கா இடம் படித்த கவியரசர் கண்ணதாசனை பற்றி எழுத இந்த தாள் போதுமா? இந்த ஒரு தாள் போதுமா?
‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’ என்று அழகாக, இவ்வளவு வெளிப்படையாக விவரிக்க அவரைத் தவிர வேறு யாரால் இயலும்?
தடுமாறும் போதையிலும் கவிபாடிய மேதை அவர்.
தமிழ்த் திரைப்படப் பூஜைக்கு வந்த மலர் அவர்.
‘போனால் போகட்டும் போடா’ எனும் தத்துவ மழையை கொட்டித் தீர்த்த கார்முகில் அவர்.
‘செந்தமிழ் தேன்மொழியாளை’ மகிழ்ச்சி பொங்க கொண்டாடியவர் அவர்.
‘கண்ணன் வருவான் கதை சொல்லுவான்’ என பாடல்களிலும் பலகதைகள் சொன்னவர்.
‘ஆறு மனமே ஆறு’ என்று ஆண்டவன் கட்டளைகளை மனதுள் விதைத்தவர் அவர்.
‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்’ என்னும் வசிய வார்த்தைகளின் குத்தகைக்காரர் அவர்.
ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றவர் அவர்.
இரை தூக்கிக்கொண்டு ஓடும் எறும்பின் சுறுசுறுப்பு நம் மனதுள் எதிரொலிக்கும், நாம் அவர் வரிகளில் ஐக்கியமாகும்போது.
வெகுஜன ரசிகனை புன்னகைக்க வைக்கும் புத்திசாலித்தனம் இழையோடும் அவர் சாமர்த்தியத்தில் கைநனைக்கும் போது.
கருத்து வளமும் சமூகச் சிந்தனையும்
காதல் ரசமும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களின் பிரதிபலிப்பும்
யதார்த்த நிகழ்வுகளின் அலைவரிசையும்
தத்துவார்த்த மொழிகளின் சமிக்ஞைகளும் விரவியிருக்கும்
பெருங்கடலில் நாம் மூழ்கி முத்தெடுப்பது சிரமம்.
அவரின் வார்த்தை ஜாலங்களில் நம் மனம் சிக்கிச் சுழன்று மாயாஜாலப்பொலிவு பெறுவது உறுதி.
புதிதாய் திரைப்பாடல் எழுத வருபவர்க்கெல்லாம் திசை காட்டி நம்பிக்கை ஏற்படுத்தும் ‘கலங்கரை விளக்கம்’அவர்.
‘இந்து மத்தின் அர்த்தங்களில்’ ஆழம் கண்டவர். பலரின் ‘நாத்திகம்’ மனம் கரைய நீர் பாய்ச்சியவர்.
உண்மையில் ‘திராட்சை ரசம்’ அவருக்கு தந்ததோ போதை.
ஆனால் அவர் ‘பாட்டு ரசம்’ நமக்கு தந்ததோ தெளிவு.
என்னவொரு முரண்?
“எவரும் கண்ணதாசனுக்கு நிகரில்லை
எந்த நிலையிலும் அவருக்கு அழிவில்லை”