இசைக்கவி ரமணன்

images (1)கண்ணான கண்ணனிவன் பொல்லாதவன்
கணநேரம் கண்முன்பு நில்லாதவன்!

கண்ணனை ஏன் ஆனந்த ஸ்வரூபன் என்று கொண்டாடுகிறோம்? வல்லபாச்சாரியார், தனது மதுராஷ்டகத்தில், கண்ணனின் வடிவின் அங்கங்கள் ஒவ்வொன்றுமே இனிமையானவை என்றும், கண்ணன் இனிமையின் தலைவன் என்றும் ஏன் ஆனந்தமாகப் பாடுகிறார்? ‘கண்ணனை நான் ஆட்கொள்ளக் காரணங்கள் உள்ளனவே!” என்கிறான் பாரதி. ஏனாம்?

ஆன்மாவுக்கு குணங்கள் கிடையாது. ஆனால் அதற்கு ஒரு தன்மை உண்டு என்று வைத்துக்கொண்டால் அது சாந்தி அல்லது அமைதி என்றே கூறவேண்டும். மனம் என்பது ஆன்மாவை விட்டு அயலாய் இல்லை என்று கொண்டாலும், அது அமைதியை அறியாதது. சஞ்சலம் அல்லது சலனம் என்பது மனதின் இயல்பு. ஆன்மாவின் அமைதி, சித்தம் என்னும் திரையில் பிரதிபலிக்கும்போது, மனது அதனை ஆனந்தம் என்றே புரிந்துகொள்கிறது. ‘Peace emanating from the soul, reflecting itself on the canvas of consciousness is understood by the mind only as happiness.’ மகிழ்ச்சி அல்லது சந்தோஷம் என்பது வேறு. ஆனந்தம் வேறு. மகிழ்ச்சி என்பது வருவது, செல்வது. மேலும் பல சமயங்களில் துக்கத்தில் முடிவது. ஆனந்தம் என்பதோ தொடர்ந்து துலங்குவது. எப்படி ஆன்மாவும் சித்தமும் ஒன்றோ ஆனால் விளக்கும் வெளிச்சமும் போல இரண்டுபோல் தோன்றுமோ, அதேபோல்தான் அமைதியும் ஆனந்தமும்!

எல்லா ஆன்மாக்களின் தலைவனாகவும் விளங்கும் கண்ணனே பரமாத்மா. இதை, கண்ணனே எல்லாimages (2) ஆன்மாக்களுமாகவும் இருக்கிறான் என்று நம்பி, தன்னிலும் தானாய் இருப்பவன் அவனே என்று உறுதியாய் இருப்பவர்களிடம் அமைதி விழிப்புறுகிறது; ஆனந்தம் வெள்ளப் பெருக்காக விரைந்து வருகிறது.

அமைதியே நம் இயற்கை. ஆனந்தமே நம் இயல்பு. இதற்கு முரணான எதுவும் நாமில்லை, நமதில்லை. இதை நமக்கு மறுவுறுதி செய்யவே இறைவன் கண்ணனாக இறங்கிவந்தான். அர்ச்சுனனைச் சாக்காக வைத்துக்கொண்டு நமக்கு கீதை மொழிந்தான். அவன் வாய்மொழிந்த கீதையின் சாரமான கருத்து என்ன?

‘ஆனந்தத்தை நோக்கிய பாதையும் ஆனந்தமாகவே இருக்கட்டும்!” என்பதே!

உடனே ஒரு கேள்வி எழக்கூடும். ‘அழுதால் உன்னைப் பெறலாமே!’ என்றதே மணிவாசகம் அது தவறா? சிவனன்றி வேறேதும் சிந்தையில் நில்லாதவரின் வாசகம் எப்படித் தவறாகும்? நம்முடைய அழுகையும் நாயன்மாரின் அழுகையும் அறவே வெவ்வேறானவை. எப்போதும் ஏதேனும் ஒன்றை வேண்டியோ, அது கிடைத்தாலும் அது நிலைக்குமோ நிலைக்காதோ என்று அஞ்சியோ, அதை இழந்தால் மீண்டும் அதற்காக ஏங்கியோ அழுவதே நமது அழுகை. ஆண்டவனைத் தவிர வேறு எண்ணம் தோன்றிடின் நாணியும், அவனுடைய கருணையை எண்ணி உருகியும், அதற்குத் தகுதியாக நம்மால் இருக்க முடியவில்லையே என்று மறுகியும் அழுவதே அடியார்களின் அழுகை. அகத்தெ உள்ள நிஜத்தைக் காணமுடியாமல் அங்கும் இங்கும் அலைந்து புலம்புவதே நமது அழுகை. அகமே புறம், புறமே அகம், இரண்டிலும் தெரிவது இறைவனின் முகம் என்று மெய்சிலிர்த்து, உயிர் புளகமெய்திப் பொங்கி எழுவதே கண்ணனின் பக்தர்களின் கண்ணீர்.

ஆணவத்தின் வெளிப்பாடு நமது கண்ணீர். அதுகரைந்த புறப்பாடு அடியார்களின் கண்ணீர்.

ஆனந்தத்தை வேண்டி அழுபவர்கள் நாம். ஆனந்தம் தாங்க முடியாமல் அழுபவர்கள் அடியார்கள். முன்னது துன்பத்தின் வெம்மை நீர். பின்னது, தூய கங்கையின் தண்மை நீர்.

‘ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள், உலகு இன்பக் கேணி,’ என்றானே பாரதி. வாழ்ந்த காலம் முழுதும் வறுமை மற்றும் பலவிதமான துன்பங்களை அனுபவித்தவன் வாயிலாக இப்படி ஓர் ஆனந்த வாசகம் எப்படி வந்தது? ‘எல்லாம் புரக்கும் இறை, நமையும் காக்கும் என்ற சொல்லால் அழியும் துயர்!’ என்று எப்படி அவனால் சொல்ல முடிந்தது? பற்றற்றான் பற்றினைப் பற்றச் சொன்னாரல்லவா வள்ளுவர்? அவன் கண்ணனிடம் பற்றுவைத்தான் நட்பு நாடி, ஆலோசனை வேண்டி, பண்புகளின் உச்சத்தைக் காணவேண்டி, பார்வைக்கு எளியவனாய் ஆண்டவனை தரிசிக்கவேண்டி! அதனால்தான், ‘பற்று மிகுந்துவரப் பார்க்கின்றேன், கண்ணனால் பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது!’ என்றான்.

இறைவன் மேல் பற்று என்பதை இதயத்தில் பதியம் போட வேண்டும். உள்ளே இருப்பது அதுவேதானே? எனவே அந்த ஆனந்தப் பதியம் விரைவில் வளரத் துவங்குகிறது. விரிகிறது! சித்தம், புத்தி, மனது இவற்றைத் தாண்டி தேகத்தையும் சிலிர்க்கவைத்துப் புலன்களை அதிர வைக்கிறது! அப்போது, ‘நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய், கண்ணன், எங்கிருந்தோ வந்தவனாக எதிரே தெரிகிறான்!

உள்ளே இருந்த அமைதி உணரப்படும்போது ஊதப்பட்ட நெருப்பாக ஆனந்தம் ஊற்றாக எழுந்து வெள்ளமாக விரைந்து பரவுகிறது! ரகசியம் என்னவென்றால், கண்ணனை நாடியவர்களைப் பெண்ணாசை நீங்கிவிடுகிறது. பேதபுத்தி போய்விடுகிறது. நான் தேகம் என்ற உணர்வு நீங்கிவிடுகிறது. எங்கும் எதிலும் இருப்பது ஒன்றே, அது இறையே, அதன்பெயர் கண்ணனே என்ற தெளிவு வருகிறது. அப்போது, புற வாழ்க்கையின் சூழல்கள் எப்படி இருந்தாலும், ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!’ என்று ஆனந்தமாக ஆண்டவனைப் பாட முடிகிறது.

images (3)கண்ணனிடம் எதையும் கேட்கலாம். எச்சரிக்கை என்னவென்றால் அவன் அதனைக் கொடுத்து விடுவான், கொடுத்த கணமே அங்கிருந்து நீங்கியும் விடுவான்! ஆனால், அவனிடம் ரவீந்திரநாத் தாகூர் போல ‘நீ வேண்டும், எனக்கு நீதான் வேண்டும்,’ என்று உறுதியாக நின்றால் அவனால் எங்கும் போகமுடியாது. ஒரு கணம் கூட நம்மை விலக முடியாது. இடம், காலம், சூழ்நிலைகள் இவை எவற்றாலும் பாதிக்கப்படாத ஓர் அதீத உறவில் நாம் லயித்திருக்கலாம். நம் வாழ்க்கையின் சூழ்நிலைகள் மாறலாம் அல்லது மாறாமற் போகலாம். ஆனால் இந்த ஆனந்தம் மட்டும் மாறவே மாறாது.

எப்படி உண்மையே பேசும் ஒருவன் பேசுவதெல்லாம் உண்மையாகி விடுகிறதோ, அதுபோல, கண்ணனே ஆனந்தம் என்று நம்பியவர்கள் ஆனந்தக் கண்ணனை அகம்குளிர தரிசிக்கிறார்கள். நீண்ட மலைத் தொடரையும் சின்னப் புல்லின் நுனியையும் மழை எவ்விதம் பேதமின்றி நனைக்கிறதோ அதேபோல் இந்தக் கண்ணன் என்னும் ஆனந்தம் நம்முடைய புற வாழ்வின் எதையும் ஆனந்தமாகவே காணும். ஆனந்தமாகவே ஆக்கும்.

இதுவே ஆனந்தத்தின் சுபாவம். அமைதியின் ப்ரபாவம். கண்ணனின் ஸ்வரூபம்.

அழுதாலும் தொழுதாலும் தீராதது
ஆனந்தமே கண்ணன் பேரானது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *