என் பார்வையில் கண்ணதாசன்
—பி.எஸ்.டி. பிரசாத்
என் பார்வையில் கண்ணதாசன்
“வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்”
என்று பாட்டாலே வீரம் ஊட்டிய கவியரசு கண்ணதாசன், இன்று சரித்திரமாகி நிற்பதற்கான முக்கியமான காரணம் என நான் எண்ணுவது, பல்லாயிரம் தமிழ் ஆர்வலர்களுக்கு, கவிதை மற்றும் பாடல் அமைப்பு செய்வதற்கான இலக்கண எடுத்துக்காட்டுக்களாக விளங்கிய அவரது திரைப் பட பாடல் வரிகள்தான். அவரது பாடல் வரிகளை ரசித்து, நாமும் முயலலாம் எனக் கவிதை எழுத வந்தவர்கள் எத்தனை பேர்? அந்த வகையிலே, கவியரசு அவர்கள் என் பார்வையில், பாடலாசிரியர்கள் மற்றும் கவிஞர்களின் முன்னோடியாகவும், மாபெரும் தாக்கத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தியவராகவும் பார்க்கிறேன்.
முன்னோடிப் பாடல் வரிகள் (Inspirations):
“உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை” என்று துவங்கும் பாடலில் வரும் வரிகள்:
“தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்”
திரு.கமல்ஹாசனின் தசாவதாரம் திரைப்படத்தில் வரும்
“கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது..” என்ற பாடலுக்கு எப்பேர்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
“ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா” என்ற வரிகள்தான் பின் வந்த நாட்களில்,
“நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும்” என்ற பாடலுக்கு ஊக்கமாக இருந்திருக்குமோ?
‘கர்ணன்’ திரைப்படத்தில் வரும் இனிமையான பாடல்
“இரவும் நிலவும் வளரட்டுமே…நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே,,,”
“இலைமறை காய்மறை”யாகச் சொல்வதற்கு இந்த வரிகளை உதாரணம் சொல்லலாம். இந்த வரிகள், நிறைய பாடல்களில் வெவ்வேறு சொல்லாக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது. எடுத்துக்காட்டாக, “அன்பு” என்ற திரைப்படத்தில் வரும் “தவமின்றி கிடைத்த” என்று தொடங்கும் பாடலில் வரும் வரிகளைச் சொல்லலாம்.
“பகல் எல்லாம் இரவாகிப் போனால் என்ன? இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன?
நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தாலென்ன?”
“ரத்தத் திலகம்” என்ற திரைப்படத்தில் வந்த பிரபலமான பாடல்தான் “கோப்பையிலே என் குடியிருப்பு” என்ற பாடல். அந்தப் பாடலில் “படைப்பதனால் என் பேர் இறைவன்” என்ற வரிகள் “மடை திறந்து தாவும் எனத் துவங்கும் பாடலில் வரும் “புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே” என்ற வரிக்கும், “பாட்டுக்களை படைப்பதனால் பிரம்மனாகிறோம்” என்ற வரிக்கும் என்னவொரு தாக்கமாக அமைந்திருக்கிறது !
நீ காற்று…நான் மரம் என்று தொடங்கும் அருமையான பாடல். அப்பாடலில் “நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய்க் கல்ந்திருப்பேன்” என்ற வரிகள் வரும். இந்த பாடலின் அமைப்புக்கே கவியரசு அவர்களின் நீ எந்தன் வானம்…நான் அங்கு நீலம…நீ எந்தன் வாசல்…நான் அங்கு கோலம்” (படம்: அமரகாவியம் – பாடல்: செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன்) என்னும் வரிகள் தான் ஊக்கமாய் அமைந்ததோ!
வெவ்வேறு சூழ்நிலைகளுக்காக எழுதப்பட்ட பாடல்கள் என்றாலும், நாம் அடுத்து பார்க்க இருக்கும் பாடல், கண்ணதாசனின் தாக்கம் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தத் தான் செய்கிறது.
“சேச் சேச் சேச் சே ! ஆம்பளைங்களா நீங்க…ஆம்பளைங்களா – ஒரு ஆறு கஜம் சேலை கட்டி நாலு வளை போடுங்களேன் !”
என்ற பாடல் (படம்: உரிமைக் குரல்) – தேவர் மகன் படத்தில் வரும் “சாந்து பொட்டு…ஒரு சந்தன பொட்டு எடுத்து வெச்சுக்க வெச்சுக்க மாமா !” என்ற பாடல்கள் !
அடுத்ததாக, “பொம்பளையா லட்சணமா பொடவையக் கட்டு சும்மா குளுகுளுன்னு கிழுஞ்சு போன ட்ரௌசர விட்டு” (படம்: இளைய தலைமுறை) என்ற பாடல் வரிகளின் தாக்கம்….எந்த பாட்டில் தெரிகிறது சொல்லுங்கள்….ம்…சரியான விடை: “செந்தமிழ் நாட்டு தமிழச்சியே…சேல உடுத்தத் தயங்கினியே ! நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிருயே !” என்ற பாடலுக்குத் தான். மறைந்த திரு. சாகுல் ஹமீது அவர்கள் நன்றாகப் பாடியிருப்பார்.
முடிவுரை:
இவ்வாறாக, இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்….இது வரை மட்டுமல்ல…இனி வரும் கவிஞர்கள் பலருக்கும் கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள் மாபெரும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
“மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை ”
என்று முழங்கிய கண்ணதாசன் அவர்கள் இன்றைய கவிஞர் என்னும் நிலவுக்கெல்லாம், சூரியனாக ஒளி தந்து என்றும் வாழ்பவராக என் பார்வையை பதிவு செய்கிறேன் !..வளர்க அவர் புகழ் !
பி.எஸ்.டி. பிரசாத்
வலைத்தளம்: http://psdprasad-tamil.blogspot.com