‘என் பார்வையில் கண்ணதாசன்’

– தென்றல் கமால் –

பாவையைக் காதலிக்கிற வயது வந்த போது பாவையை விட்டு என்னைப் “பா“வைக் காதலிக்க வைத்தவன் கண்ணதாசன்.

கண்ணதாசன் என்ற களஞ்சியத்தில் நான் எடுத்துக் கொண்ட கவிதை இது ஒன்றே என் கட்டுரைக்கு இது நன்றே !

ஆடிய ஆட்டமென்ன
பேசிய வார்த்தையென்ன
தேடிய செல்வமென்ன
திரண்டதோர் சுற்றமென்ன
கூடு விட்டு ஆவி போனால்
கூடவே வருவதென்ன

வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடி வரும் கூட்டம்
கொள்ளி வரை வருமா

வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்கு கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி

வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்

வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ

விட்டு விடும் ஆவி
பட்டு விடும் மேனி
சுட்டு விடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு

வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ

மனிதர்கள் பிறக்கிறார்கள் இறக்கிறார்கள்
கவிஞர்கள் மட்டுமே என்றும் நிலைக்கிறார்கள்

கண்ணதாசனை நான் மனிதனாகக் காணவில்லை
அவனை நான் கால் கொண்டு நடந்தக் கவிதை என்பேன்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்
முதற்றே உலகு என்றான் வள்ளுவன்

மனிதனைப் படைத்தோம் மொழியைக் கற்பித்தோம் என்கிறது இசுலாமியர்களின் திருமறை

மொழிக்கு வரும் ஊறினை கவிதை எனும் ஆறு கிளம்பி
மொழியை ஏறு பாதைக்கு அழைத்துச் செல்ல
இறைவன் செய்த ஏற்பாடோ கவிஞர்கள் என என நான் எண்ணுவதுண்டு

சிறு வயது முதலே மரணம் என்னை அதிகம் சிந்திக்க வைத்த ஒரு பொருள்

மனிதன் ஏன் பிறக்கிறான் ஏன் மரணிக்கிறான் ……… எதற்காக மரணிக்கிறான்
கேள்விகள் என்னுள் அதிகம் வேள்விகள் செய்த காலமது

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறான் வள்ளுவன்

மனந்திரும்புங்கள் பரலோக இராச்சியம் சமீபித்திருக்கிறது என்கிறது பைபிள்

எவர்கள் விசுவாசங் கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ அவர்களை நாம் மறுமையில் நல்லோர்களுடன் சேர்த்திடுவோம் என்கிறது இசுலாமியர்களின் இறைவேதம்

இம்மூன்றும் சொல்வது மரணத்திற்கு பிந்தைய ஒரு வாழ்க்கை அது இறைவனிடத்தில் அது யாருக்கு இந்த உலகில் வாழ்வியல் நெறிப்படி வாழ்பவர்களுக்கு நற்கருமங்களைச் செய்பவர்களுக்கு மனம் திருந்தியவர்களுக்கு

மரணத்தைப் பற்றிய சிந்தனை அற்ற மனிதனே உலக இச்சைகளில் மூழ்கியவனாக வாழ்க்கையின் நெறிப்படி வாழாதவனான நற்கருமங்களைச் செய்யாதவனாக மனம் திருந்தாதவனாக வாழக் காண்கிறோம்

வேதங்கள் மரணத்தைப் பற்றியும் மறு உலக வாழ்வைப் பற்றியும் சொல்லி முடித்த போது

மீண்டும் பாமரனுக்கு மரணத்தை அவன் புரியும் வண்ணம் அவன் மொழியில் படித்துக் காட்டியவன் அந்தக் க(எ)ண்ணதாசன்

ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீர வேண்டும் என்கிறது இஸ்லாம்

உலகப் பற்றை அறுத்து எறியக் கூடிய மரணத்தை அதிகம் நினைவு கூறுங்கள் என்றார் முஹம்மது நபியவர்கள்

அத்தகையை மரணத்தை சிந்தனையூறும் வகையில் பாமரனுக்கும் புரியும் வண்ணம் எடுத்தியம்பியவன் கண்ணதாசன்

அவனுடைய இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் மேனி சிலிர்க்கும் ஞானம் பிறக்கும்

எனக்கொரு அவா உண்டு …….

பத்தாம் வகுப்புக்கும் அதற்கும் மேலே உள்ள பாடத்திட்டத்தில் இந்தப் பாடலை மன்னிக்கவும் இந்தப்பாடத்தை வைக்க வேண்டும். மாணவர்களின் சிந்தனை சீர்படுகிற காலத்தில் இந்தப் பாடலை பாடத்தைக் கொண்டு மாணவர்களின் எண்ண நிலத்தில உழுது ஆழப் பதித்து விட்டால் ஒழுக்கம் எனும் பயிரை வளர்த்தெடுக்கலாம்

கண்ணதாசனின் இப்பாடல் வரிகளை ஒருவன் அனுதினமும் ஒரு முறை படித்துப் பார்த்துக் கொள்வானெனின் அவன் வாழ்வாங்கு வாழ்வான் மனந்திருந்துவான் நற்கருமங்கள் செய்வான் என்பது என் எண்ணம்

வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று வள்ளுவன் சொன்ன மரணத்திற்கு பிந்தைய தெய்வத்துடன் வாழக் கூடிய மறு உலக வாழ்வை அடைவான் அதுவே திண்ணம்a

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.