Author: admin

  • ஆச்சரியத்தில் அசத்திய சலூன்காரர்

    ஆச்சரியத்தில் அசத்திய சலூன்காரர்

    எம்.எஸ். லெட்சுமணன்
    காரைக்குடி

    ஒரு நாளைக்கு  எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறேன்? எவ்வளவு மணி நேரம் ஓய்வில் இருக்கின்றேன்? கணக்கிட்டு தன்னை சரிப்படுத்தி கொள்ளும் பணியாளரின் செயல் என்னை வியப்பில் ஆழ்த்திய அனுபவம்.

    காரைக்குடி – ஒரு வேலைக்கும், அடுத்த வேலைக்கும் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோம்? ஒரு நாளில் எவ்வளவு நேரம் ஓய்வாக இருக்கிறோம் என கணக்கிட்டு வேலைபார்க்கும் சலூன்காரர் சிதம்பரம் என்னை ஆச்சரியத்தில்அசத்தினார்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  அருகே உள்ள ஸ்ரீராம் நகரில் சலூன் கடையில் வேலை பார்ப்பவர் சிதம்பரம். சமீபகாலமாக அந்த கடைக்கு வாடிக்கையாளராக சென்று வருகின்றேன். இந்த முறை செல்லும் பொழுது வரும் வாடிக்கையாளர்கள் நோட்டில் எவ்வளவு பணம் கொடுத்துள்ளார்கள் என்பதை எழுதினார். பணம் தானே எழுதுகிறார் என்று நான் நினைத்தேன்.

    பிறகு கேட்டேன் நீங்கள் தானே கடை நடத்துகிறீர்கள்? பின்பு ஏன் பணத்தை நோட்டு போட்டு எழுதுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு சிதம்பரம் சொன்ன பதில்தான் என்னை ஆச்சரியத்தில் அசத்தியது:

    “நான் சம்பளத்திற்கு தான் இந்த கடையில் வேலை பார்க்கிறேன்.  எனது முதலாளி இரண்டு கடைகள் வைத்துள்ளார். ஆனால் என்னை இந்த கடையில் என்னை தொழிலாளி போல் நடத்தாமல், சக நண்பராக நடத்தும் அவருக்கு நேர்மையாக நடக்க வேண்டும் என்கிற நோக்கில் எத்தனை நபர்கள் வந்தாலும் அந்தக் கணக்கை நோட்டில் குறித்து விடுவேன். அது போக ஒரு வேலை முடிந்து அடுத்த வேலை ஆரம்பித்து அந்த வேலை முடிவதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்பதையும் நானே நோட்டில் குறித்து கொள்வேன். என்னுடைய கை சரியான வேகத்தில் செயல்படுகிறதா அல்லது ஒருவேலை பார்த்தவுடன் மெதுவாக ஆகிவிடுகிறது என்பது போன்று நானே அறிந்து கொள்வேன். சில நபர்கள் வரும் பொழுது மிக எளிதாக பாதி முடியை கட் செய்தால் போதும் என்று கூறிவிட்டு சென்று விடுவார்கள். அது போக ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நான் வாங்கும் சம்பளத்திற்கு ஓய்வாக இருக்கிறேன்?  எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறேன் என்கிற தகவலையும் நோட்டில் குறிப்பதன் மூலம் நான் அறிந்து கொள்வேன். எனது முதலாளியும் என்னை முழுவதுமாக நம்பி இந்த கடையை ஒப்படைத்திருக்கிறார். 14 வயது முதல் சவரத் தொழில் ஈடுபட்டு வருகின்றேன். இப்பொழுது எனக்கு வயது 34. எனது அனுபவத்தில் எனது பணியை நானே நேசிக்கின்றேன். என்று கூறி என்னை வியப்பில் ஆழ்த்தினார்.”

    நண்பர்களே எத்தனையோ இடங்களுக்கு நாம் செல்கின்றோம். நம்முடைய பணி எவ்வளவு நேரம் வேலை பார்த்தோம் என்பதை  சலூன் கடையில் பணியாற்றுபவர் குறித்தது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், புதிய அனுபவத்தையும் ஏற்படுத்தியது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்கிற நோக்கில் தான் இந்த தகவலை இங்கே குறிப்பிடுகின்றேன். தனது முதலாளிக்கு நேர்மையானவராகவும், தனது மனசாட்சிக்கு நேர்மையானவராகவும் செயல்பட வேண்டும் என்கிற நோக்கில் செயல்படும் சிதம்பரத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது.

    அன்னாருக்கு வாழ்த்து தெரிவிக்க மொபைல் எண்: 99412 24289

    Share
  • எங்கே சென்றாய்?

    எங்கே சென்றாய்?

    சரவிபி ரோசிசந்திரா
    சென்னை

    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்
    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்

    என்னை நீ தொலைத்து எங்கே சென்றாய்
    என்னை நீ அழைத்து எங்கே சென்றாய்

    தினந்தோறும் பணந்தேடி
    எங்கே சென்றாய்
    திசைதோறும் புகழ்தேடி எங்கே சென்றாய்
    உடலுக்குள் உயிர் காணாமல்
    எங்கே சென்றாய்
    உடலைத் தினம் பேணாமல்
    எங்கே சென்றாய்

    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்
    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்

    எதிலும் நான் தெரிகின்றேன்
    எங்கே சென்றாய்
    எல்லாம் நான் அறிகின்றேன்
    எங்கே சென்றாய்

    பேதமின்றி அள்ளித் தந்தேன்
    எங்கே சென்றாய்
    பேரிடரிலும் துணை வந்தேன்
    எங்கே சென்றாய்
    மும்மலம் நீ அறியாமல்
    எங்கே சென்றாய்
    முற்பிறவி நீ தெரியாமல்
    எங்கே சென்றாய்

    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்
    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்

    உயிர்தோறும் என்னைக் காணாமல்  நீ எங்கே சென்றாய்
    உள்ளத்தில்  என்னை எண்ணாமல் நீ எங்கே சென்றாய்

    சிற்றின்பத்தை ரசித்த  நீ
    எங்கே சென்றாய்
    சிந்தையை வெறுத்த நீ
    எங்கே சென்றாய்
    நான் அக்கத்தில்
    இருக்கின்றேன்  நீ
    எங்கே சென்றாய்
    நான் பக்கத்தில்
    பார்க்கின்றேன் நீ
    எங்கே சென்றாய்

    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்
    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்

    நிம்மதியாய்  தினம் வருகின்றேன்
    எங்கே சென்றாய்
    நிம்(ம)தியை மறந்து நீ
    எங்கே சென்றாய்

    Share
  • Every Child a Scientist Program at MSSRF

    Every Child a Scientist Program at MSSRF

    PRESS RELEASE

    Corporation school students benefit from Every Child a Scientist program at MSSRF

    Today March 23, 2022, thirty school students completed the 15-day science course at M S Swaminathan Research Foundation, Taramani, Chennai. Each of them was awarded a certificate by the Executive Director – Dr G N Hariharan, and the other scientists from MSSRF. The children (both girls and boys) are from Class VIII, and study in the English and Tamil medium Corporation Higher Secondary school, Taramani.

    “Every Child A Scientist” (ECAS) program at the M.S. Swaminathan Research Foundation (MSSRF) was initiated in the year 2002 with an aim to kindle scientific curiosity among students in the age group of 12- 15 years. These students lack access to recent developments in science and to use modern scientific and learning tools, but are eager and have a tremendous capacity to learn. The ECAS programme focuses on triggering the ability to question, in the students of classes VI to VIII studying in Corporation schools, that are overseen by the Education Department, Corporation of Chennai, Tamil Nadu. Every year about 300 students from Government schools from specific zones of Chennai Corporation utilize the facility.

    “Children’s scientific temperament directly contributes to a country’s progress,” says Prof. M.S. Swaminathan, who donated an initial endowment grant of Rs. 25.00 Lakhs associated with the Indira Gandhi Prize for Peace, Development, and Disarmament. Prof. Swaminathan was the recipient of the prize in 1999.

    Learning materials and Facilities at the Centre
    • The centre is equipped with modern learning tools specifically to bridge the digital divide. Individual desktop systems will provide for personalised educational platform, sharpen their computer skills to make them “Future Ready” in the era of digitization.
    • About fifty specially tailored multimedia learning modules have been prepared, and the 15-day course will be flexibly tailored using these modules.
    • The developed course content is based on topics prescribed in their school curriculum with additional relevant information to make learning easier and interesting.
    • Conducting basic laboratory experiments to promote “learning by doing” in physics, chemistry and biology
    • Field activities to nurture a connect with nature in all its diversity, specifically soil, water, flora and fauna and their inter- connectedness of all life forms

    This program continues with generous CSR funding by the Larsen and Toubro group as well as administrative support by the Education Department, Corporation of Chennai, Tamil Nadu.

    The inauguration program Hon’ble Minister for School Education, Government of Tamil Nadu, Shri Anbil Mahesh Poyyamozhi, is here https://www.mssrf.org/small-press/need-of-more-science-based-education-to-counter-misinformation-2/

    Share
  • Demise of Mrs Mina Swaminathan

    Demise of Mrs Mina Swaminathan

    PRESS RELEASE

    Mina Swaminathan

    Mina Swaminathan (née Bhoothalingam), school teacher, educator, educationist, and child care expert, who chaired the committee that recommended what became the Integrated Child Development Scheme (ICDS), died on March 14 at her home in Chennai. She was 89. She was one of the founders of the Mobile Creches, a former chair of the Delhi Social Welfare Board, an Emeritus Trustee of the M. S. Swaminathan Research Foundation, a founding member of the Centre for Women’s Development Studies, and an international consultant with UNESCO and UNICEF on Early Childhood Care and Education. She also worked in the field of theatre as a means of social and women’s empowerment.

    She is survived by her husband, M. S. Swaminathan, three daughters, Soumya Swaminathan, Madhura Swaminathan, Nitya Rao, five grandchildren, and her brother, Ravi Bhoothalingam.

    As Chair of the Central Advisory Board of Education (CABE) Committee on The Preschool Child she steered the development of the Report on the Preschool Child (1972) which led to the setting up of ICDS,  the largest and most comprehensive child care service in the developing world.  Her contribution to ICDS, particularly in Tamil Nadu, is notable after she moved to Chennai in 1989, setting up mobile training teams – a unique innovation, travelling widely across the state, working with ICDS frontline workers and providing practical guidance and encouragement.

    At a time when it was not publicly recognized she played a significant role in getting professional, political and national attention focussed on the rights and needs of the young child and women of the underprivileged and marginalized sections of the population. A fiery advocate and practitioner, she devoted with passion and conviction, five long decades to childcare and education and gender equality. Communication, especially the innovative use of creative and educational drama was critical to her work.

    She was the national President of the Indian Association for Preschool Education and the editor of its journal, BALAK.   She spearheaded the introduction of early childhood care and education (ECCE) into the National Policy on Education 1986 as well as its Plan of Action, 1989 and was chair of the Focus Group on Early Childhood of NCERT, which prepared the National Curriculum Framework in 2005.  She was a founder and leader of the Alliance for Early Childhood Care and Development (ECCD).

    She consolidated her life-long experience into the project Action for Child Care and Education Strategies and Services (ACCESS), a programme for networking of stakeholders to support training, research and advocacy on ECCE at the MS Swaminathan Research Foundation (MSSRF). Her work in this field, prescient at the time, brought to focus the need for all-round development of the young child, in particular attention to underweight, malnutrition and low birth-weight, all of which has adverse impact on the cognitive abilities in later life. The results of this unique project were summarized in the book titled As the Salt in the Seas, compiled by her and L.S Saraswathi.

    An activist with strong political commitment, she acted fearlessly, speaking out on behalf of the marginalized. She never cared for personal power or positions.  In her early years, soon after returning from Cambridge, she resigned from her Planning Commission job to take up her passion for teaching children.

    A writer and planner as well, her high levels of innovation, the ability to think pragmatically and most importantly, learning from her own and others’ mistakes spoke of her versatility. Through her ability to bridge different disciplines, she inspired and converted professionals, non-governmental organizations, child care workers, policy and decision makers to become champions for child rights and early childhood development.

    Among her numerous books, articles and papers, are three popular teachers’ manuals in ECCE entitled Play Activities For Young Children published (1984), The First Three Years (1989) and Play Activities For Child Development (2008). These were based on her experiences with the youngest age-group, first at the Nehru Experimental Centre at the Indian Agricultural Research Institute, in Mobile Creches and in Asian countries.  She also authored Who Cares? (1985) a study of day care services for low-income working women and The First Five Years (1998) a state-of-the-art review of child care services in India. Some of these publications have been widely translated into other Indian languages and went into many editions.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 12

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 12

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    ஏகாபுரம் வெங்கடேசன் அரற்றிய ‘பொல்லா வினையேம்!’- ஒரு பன்முக மதிப்பீடு!

    முன்னுரை

    “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் ‘செய்யுமாறே’” என்றார் திருமூலர். படைப்பிலோ பாட்டிலோ நன்றாகப் படைப்பது, அதற்கு மாறாகப் படைப்பது என்பதெல்லாம் நமக்குப் புரியாத ஒன்று. பாட்டின் தொனி புரிந்தால் போதும். தொடங்கியதில் ஐக்கியமாவதே வாழ்வு. படைப்பின் நோக்கம் உலகம் உருண்டை என்றால் புறப்பட்டவன் புறப்பட்ட இடத்திற்கே சென்றடைவதுதான் நியதி. படைப்பவனைப் புரிந்து கொள்ளுதல். படைப்பவனைப் புரிந்து கொள்ளுங்கால் அவனின் சிறந்த வேறின்மை தானாகப் புரியும். புரிந்ததைப் புகழ்வது புரிந்தவர் கடன். அந்தக் கடனைத்தான் திருமூலர் கூறுகிறார். “நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்! நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்! ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்! அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்’ என்று பாரதி பாடியதில் சமுதாயம் சார்ந்ததொரு நல்வினைக்கு அவரவர் தன்னால் ஆன தனக்கு இயன்ற  தனக்குத் தெரிந்த வகையில் உதவ முன்வர வேண்டும். ‘வாய்ச்சொல்லில் வீரர்’ என்ற ஒரு தொடரை வாழவைப்பதற்காகவே தமிழினம் என்ற நிலை தொடர்ந்து நிலைத்து விடக்கூடாது. ஓய்வு பெற்ற பேராசிரியர் என்ற முறையில் எனக்குத் தெரிந்த வகையில் என்னால் இயன்ற சிறு தொண்டினை என் தமிழினத்திற்காகவும் மொழிக்காகவும் செய்து வருகிறேன். அல்லது செய்து வருவதாகக் கருதிக் கொள்கிறேன். அருமைத் தம்பி அண்ணா கண்ணன் பதிப்பிக்கும் ‘வல்லமை’ மின்னிதழில் ‘படித்தேன் சுவைத்தேன் பகிர்ந்தேன்’ என்ற தொடர் என் கண்ணுக்குத் தெரிந்த சில அகல்விளக்குகளை ஆகாயச் சூரியனாக்க எத்தனிக்கிறேன். அவ்வொளியைப் பிழம்பு என அறிந்ததால். ஊரிருட்டை நீக்கும் கவிதையொளிப் பிழம்புகள்  உள்ளிருட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பதில் எனக்குச் சம்மதமில்லை. அந்த வகையில் ஒரு நெசவாளர் குடும்பத்தில் பிறந்து பள்ளியிறுதி வகுப்புக்குப் பிறகு கல்வியைத் தொடர முடியாத சூழலில் தமிழைப் படிப்பதிலும் தமிழ்க் கவிதைகளைப் படிப்பதிலும் சுவைத்தனவற்றை உரைப்பகுதிகளுடன் பதிவிடுவதிலும் கவிதை படைப்பதிலும் தணியா ஆர்வம் காட்டிவரும் அன்புத் தம்பி ஏகாபுரம் வெங்கடேசன் முகநூல் பக்கங்களில் எழுதிய சில அறுசீர் விருத்தங்களில் அமைந்துள்ள பன்முகச் சிறப்பினை இந்தக் கட்டுரை பந்தி வைக்க முயலுகிறது.

    முகஸ்துதியில் மயங்கிக் கிடக்கும் முகநூல்

    ‘முகஸ்துதி’ என்ற சொல் வடமொழியாக இருக்கலாம். இதற்கிணையான தமிழ்ச்சொல்லை என்னால் அறியக்கூடவில்லையாதலின் அதனை அப்படியே பயன்படுத்துகிறேன். அறிவியல் கண்டுபிடிப்புக்கள் இரண்டு வகையில் திசை மாறுகின்றன அல்லது தடம் கவிழ்கின்றன. ஒன்று கண்டுபிடிப்பின் நோக்கத்திற்கு எதிராகப் பயன்படுத்துவது. இரண்டு அதனைப் பயனற்ற முறையில் பயன்படுத்துவது. முன்னதற்குத் துப்பாக்கியும்  பின்னதற்குச் செல்போனும் எடுத்துக்காட்டுக்களாகலாம். பின்னதோடு இன்றைக்குக் கூடுதலாக உடனடியாகச் சேர்க்க வேண்டியது முகநூல். பயனற்ற பதிவுகள், போலிப் பராட்டுக்கள், வீணான வாதங்கள் அதனால் ஏற்படும் வருத்தங்கள். இன்னும் பல. முகநூல் இயங்கும் இலக்கியக் குழுமத் துல்லியம், ஆழம், நுண்ணியம் என்பன அருமையினும் அருமை. வெற்றுச் சடங்குகளால் ஒரு அருமையான ஊடகப்பயன் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. தனிமனித வழிபாடு, தன்னை முன்னிலைப்படுத்துதல், தனக்காகவே கவிதை என்ற பெயரில் தான் எழுதியவையெல்லாம் கவிதை என எண்ணிக் கொள்ளுதல் என இதன் பரப்பு தொடுவானம்போல் விரிந்து கொண்டே செல்கிறது. நாற்புறமும் எரிந்து கொண்டிருக்கும் இந்த மின்மினி ஒளியில்,

    “அகன்ற உலகம் நான் என்றது அகல்!
    அழகிய உடல் நான் என்றது திரி!
    அசையும் உயிர் நான் என்றது சுடர்
    உழைப்பு வடித்த உதிரத் துளிகளாய்த்
    தேங்கிய எண்ணெய் வாய்திறக்கவே இல்லை!”

    என்னுமாறு நாளும் தமிழ்வளர்க்கும் சில அகல்விளக்குகளில் தம்பி ஏகாபுரம் வெங்கடேசனும் ஒருவர்.

    முகநூலில் வெளிறும் கவிதை முகம்

    ‘இரத்த சோகை’ என்றதொரு சொல்லைச் செவிமடுத்திருக்கலாம். அந்தச் சொல் இன்றைய தமிழ்க் கவிதைகளுக்குப் பொதுவாகவும் முகநூல் கவிதைகளுக்குச் சிறப்பாகவும் பொருந்தும் என்பது என் கருத்து. அதனை உறுதி செய்வதற்கான வலிமையான தரவுகள் என்னிடம் ஏராளம்! கவிதையால் மட்டுமே சொல்ல முடியும் என்பவற்றைத்தான் கவிதையாக்க முடியும் என்னும் சாதாரண அடிப்படை உண்மை கூடத் தெரியாத பலரும் பாட்டெழுத வந்த பாவத்தை நான் அல்லவா அனுபவிக்க வேண்டியதிருக்கிறது? எழுதுகிற காதல் கவிதைகளில் காதல் இல்லை! சமுதாயச் சிக்கல்களைப் பற்றிய கவிதைகளில் சமுதாயப் பார்வை இல்லை. குழந்தைகளைப் பற்றிய பாடல்களில் மழலை இல்லை.

    ஏகாபுரத்தாரின் இளகிய நெஞ்சம்

    ‘நெஞ்சக் கனகல்லும் நெகழ்ந்துருக’ என்பார் அருணகிரிநாதர். தம்பி வெங்கடேசன் மனமுருக மதுரை மீனாட்சியைச் சேலத்திலிருந்தே வணங்குகிறார். வாழ்த்துகிறார். பக்தியை விட்டு விலகினால் தமிழே இல்லை என்பது சுண்ணாம்பு சேராமல் வெற்றிலை மணக்காது வெளிநாக்கு சிவக்காது என்பது போலச் சத்தியம். பக்தி என்பது மூடநம்பிக்கை என்பது அறியாமையின் ஆளுமை. பக்தியுணர்வைப் பகுத்தறிவால் அளக்கலாம் என்றால் பகுத்தறிவைப் பக்தி வெல்ல முடியாதா என்ன? வல்லாண்மை மிக்கதொரு மாபெரும் தமிழ்ச்சமுதாயத்தைக் கட்டமைத்துக் காத்த பெருமை பக்தி இயக்கங்களுக்கு உண்டு. அதற்குக் கருவியாக இருந்தது செந்தமிழ். ‘எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம்  பொதுமக்கள் விரும்பும் மெட்டு இவற்றினை உடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகின்றான்’ என்று எழுதினார் பாரதியார். பாரதி கையாளும் புதிய உயிர் என்னும் சொல்நேர்த்தி காண்க. அது அழகானது. ஆழமானது. செத்துப் பிணமான தமிழுக்கு இத்தகைய காவியங்கள் புதிய உயிராம். எனக்குத் தெரிந்தவரை உயிரில் பழையது, புதியது என்ற பார்வையைப் பாரதியைத் தவிர வேறு யாரிடமும் கண்டதாக நினைவில்லை. நையாண்டியும் நக்கலும் கிண்டலும் கேலியும் ஆரவாரமும் போலித்தனமும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் முகநூல் பக்கத்தைத் தம்பி வெங்கடேசனின் இந்த மீனாட்சிப் பரவல் தூய்மை செய்கிறது. எல்லாரும் மேற்கே செல்கிறபோது கிழக்கே செல்லுகிறார் வெங்கடேசன். தான் உதிக்க வேண்டிய திசையைத் தானே தீர்மானித்துக் கொள்கிறார்.

    கடலை நோக்கிய நதிகளின் திசைகள்       

    இறைவனைப் போற்றிப் பரவும் பாடல்களில் பல நெறிகளைக் காணலாம். இவற்றை வெளிப்பாட்டு உத்திகள் என்பதைவிட இறைவன் அருள் வேண்டிய நிலையிலும் அதனைப் பெற்ற நிலையிலும் உணர்ந்த நிலையிலுமாக வெளிப்படும் உணர்ச்சிக் கோலங்கள் என்பது இன்னும் பொருத்தமாகலாம். வேண்டுதல் விண்ணப்பங்களாகும். விண்ணப்பம் ஏற்கப்பட்ட நிலையில் அடியவனுக்கு ஏற்படும் ஆனந்தக்களிப்பு, பெற்ற களிப்பினைப் பெறாஅர்க்குச் சொல்லி மகிழ்தல், அஃறிணையை நோக்கியும் அவன்புகழ் பாடச் சொல்லுதல் என எல்லா நிலையிலும் வெளிப்படுவது அவன் திருப்புகழே!. இறைவன் அருள் வேண்டிய நிலையில் பாடப்படும் விண்ணப்பங்கள் தமிழில் எராளம். இதனை மடலின் வளர்ச்சிநிலை என்றும் கூறலாம். சீட்டுக்கவி என்பதும் அது. சிறிய திருமடல், பெரிய திருமடல், பிள்ளைச் சிறுவிண்ணப்பம், பிள்ளைப் பெறுவிண்ணப்பம் என்றெல்லாம் தமிழில் உண்டு. மணிவாசகப்பெருமான் நீத்தல் விண்ணப்பம் என்றே ஒரு பதிகத்தைப் பாடியிருக்கிறார். இந்த இலக்கிய உத்தி கச்சை நெய்கின்ற ஒரு சாதாரண நெசவாளி இளைஞன் பாடுகிற பாடலில் இயல்பாக அமைகிறபோதுதான் அது மரபாகிறது. ‘பாடுகிறவன் நான் ‘மரபுப்பாடல் பாடுகிறேன்’ என யாப்பு முரசறைந்து கொண்டு இதனைப் பாடவில்லை. மதுரை மீனாட்சியை மனத்துள் எண்ணுகிற அவன் உதடுகள் முணுமுணுப்பில் மரபு தனியாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது. ‘விருத்தப்பொதி’ சுமப்பதனாலேயே தம்மை மரபுக் கவிஞர்கள் எனக் கருதிக் கொள்வார் கவனிக்க வேண்டும். கருவிளம், புளிமா என்பதால் இது மரபுப்பாடல் அன்று. இறைவியின் பெரும்புகழை மரபுவழி விதந்தோதி வேண்டுதலாதலின் இது மரபுப் பாடல்!

    தொன்ம இழைகள்

    வழக்காடி நீதி பெற பாண்டியன் அவைக்குச் சென்ற கண்ணகி வாயிற்காவலனிடத்தில் தன் வருகையைத் தெரியப்படுத்துகிறாள். எப்படி? இப்படி!

    வாயி லோயே! வாயி லோயே!
    அறிவரை போகிய பொறியறு நெஞ்சத்து
    இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே
    இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்
    கணவனை இழந்தாள் கடையகத்தாள்என்று
    அறிவிப்பாயே! அறிவிப்பாயே! என

    என்ற அளவில்தான் கண்ணகி பேசுகிறாள். அவள் கொந்தளிப்பு அடங்குதற்கு முன்பே காவலன் மன்னனிடம் பேசுவதாக அமைக்கிறார் அடிகள். கண்ணகியைக் கண்ட காவலனின் நடுக்கத்தையோ நடைவேகத்தையோ அவர் வண்ணனை செய்யவில்லை. ‘நாடுகாண் காதை’, ‘காடுகாண் காதை’,  ‘அந்தி மாலை சிறப்புச் செய்த காதை’ என்றெல்லாம் பாடி நெடுங்கதையாக வண்ணனைச் செய்த அடிகள் ‘என’ என்னும் இடைச்சொல்லை வினைமாற்றாகப் பயன்படுத்தி மதுரையின் அழிவையும் பாண்டியனின் அழிவையும் விரைவுப்படுத்துகிறார். அந்த விரைவிலும் கண்ணகியின் தோற்றத்தை வாயிற் காவலன் வழியாகச் சித்திரித்துக் காட்டும் அடிகளின் படைப்பாளுமை வியக்கத்தக்கது.

    வாயிற்காவலன் பாண்டியனிடத்தில் சொன்னவை

    மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணீருமாக ஒருத்தி நின்றாள் என அடிகளே சொல்லியிருக்கிறார். அதனையே சொல்லியிருக்க வேண்டிய காவலனைத் தொன்மப் பின்புலத்தைச் சித்திரிக்க வைத்துக் கண்ணகியின் தோற்றத்தைக் காட்சிப்படுத்துகிறார். படைப்பாளர் நெசவுத் தொழில் வல்லாராதலின் தமது அரற்றல் கவிதையில் தொன்ம மரபுக் கூறுகளை இழைகளாக்கி நெய்துள்ளார். பாண்டியன் கோவில் வாசலில் தான் ‘நின்ற கோலத்தைக் கண்ணகி சொல்லவில்லை. தன்னைப் பற்றிய செய்திகளைத்தான் சொன்னாள். அவள் சொல்லை செவிமடுத்த வாயிற் காவலன் அவள் சொன்னதையும் சொன்னான். தான் கண்டதையும் சொன்னான். எப்படி?

    அடர்த்தொழு குருதி அடங்காப் பசுந்துணிப்
    பிடர்த்தலை பீடம் ஏறிய மடக்கொடி
    வெற்றிவேற் தடக்கை கொற்றவை அல்லள்!
    அறுவர்க்கு இளைய நங்கை இறைவனை
    ஆடல் கண்டருளிய அணங்கு சூருடைக்
    கானகம் உகந்த காளி தாருகன்
    தாரகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்

    பதச்சோறாகக் காட்டப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டு இது. மரபிழை அறுந்துவிடாமல் இருக்கப் பழந்தமிழ்ச் சான்றோர்கள் செய்திருக்கிற கவிதை உத்தி இது. சங்க இலக்கியங்களில் தொன்மக் குறிப்புக்கள் இடம்பெற்றதற்கு இதுதான் காரணம். மரபு மண்ணொடு கலந்தது, மக்கள் மனத்தோடு கலந்தது! இனித் தொன்மம் என்பதே நாட்டார் வழக்கு என்பதை உணர்தல் வேண்டும். மக்கள் வழிவழியாகப் பேசிக் கொள்ளும் கதைகளே பின்னர் தொன்மச் சாயம் பூசப்பட்டிருக்கலாம் என்பது ஒதுக்கிவிட முடியாத அனுமானம். சிறுதெய்வ வணக்கங்களுக்கு வரலாறு இருப்பது போலப் பெருந்தெய்வம் தோன்றிய காலத்திலும் இருந்திருக்க வேண்டும். அவற்றைப் பற்றிய மிகைக் கற்பனையே தொன்மமாகலாம் என்பதும் ஒன்று.

    மங்கையர்க்கரசியாக மதுரைமா நகரினுள்ளே
    அங்கயற்கண்ணியாகி அருந்தமிழாட்சி செய்யும்
    செங்கண்மால் தங்கை

    என்னும் வரிகளில் திருவிளையாடற் புராணத்தின் உமையே மலையத்துவசன் செய்த வேள்வியில் தடாதகைப் பிராட்டியாராகத் தோன்றி ஆட்சிக்கு உரிமை பெற்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மீனாட்சி மதுரையை ஆண்ட கதை

    கந்தர்வலோகத்தில் வசித்த விசுவாவசு என்பவன், சிவனருளால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அவளுக்கு வித்யாவதி எனப் பெயர் சூட்டி வளர்த்தான். வித்யாவதி சிறு வயதிலேயே அம்பாள் மீது அளவற்ற பக்தி கொண்டாள். ஒரு சமயம் அவளுக்கு மண்ணகத்துள்ள புண்ணிய தலத்தில் அருளும் அம்பிகையைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை உண்டானது. தன் விருப்பத்தைத் தந்தையிடம் தெரிவித்தாள். தந்தையோ கடம்பவனம் எனப்பட்ட மதுரை தலத்தைச் சுட்டிக்காட்டி அங்கு அருளும் அம்பிகை சியாமளையை வழிபடும்படிக் கூறினான். அதன்படி அம்பாளைத் தரிசிக்க வித்யாவதி இங்கு வந்தாள். சியாமளாதேவி சன்னதி முன் நின்று மனம் உருக வழிபட்டாள். அந்தத் தலம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போகவே அங்கேயே தங்கிச் சேவை செய்தாள். அவளுக்கு மூன்று வயது சிறுமியாகக் காட்சி தந்த அம்பிகை, “என்ன வரம் வேண்டும் கேள்!’ என்றாள். அம்பாளைக் குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி எப்போதும் தான் அவள் மீது பக்தி கொண்டிருக்க வேண்டுமென்றும், குழந்தையாகக் காட்சி தந்த நீ எனக்கு மகளாகப் பிறக்கும் பாக்கியத்தைத் தர வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டாள்.

    அம்பாள், அவளது விருப்பம் அடுத்த பிறவியில் நிறைவேறும் என்று வாக்களித்தாள். இதன்படி, அடுத்த பிறப்பில் சூரிய வம்சத்தில் வந்த மன்னன் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையாக அவதரித்தாள் வித்யாவதி. அம்பாள் பக்தையாகத் திகழ்ந்த அவளை மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னன் மணம் முடித்தான். இவ்விருவருக்கும் புத்திரப்பேறு இல்லை. காஞ்சனமாலை, இத்தலத்தில் தனக்கு முற்பிறவியில் அருள் செய்த சியாமளையிடம் குழந்தை பாக்கியம் அருளும்படி வேண்டிக் கொண்டாள்.

    மன்னனும் புத்திரப்பேறுக்காக, இங்குப் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினான். அம்பிகை, அந்த யாகத்தில் 3 வயது குழந்தையாகத் தோன்றினாள். அப்போது காஞ்சனமாலைக்கு முற்பிறவியில் அவள் வாக்களித்தது நினைவுக்கு வந்தது. மகிழ்ந்த மலையத்துவசனும், காஞ்சனாதேவியும் அவளை சீரும், சிறப்புமாக வளர்த்தனர். ஆண் வாரிசு இல்லாத மன்னன், அவளுக்கு ஆயகலைகளையும் கற்றுக்கொடுத்தான். தனக்குப் பின்பு மதுரையை ஆட்சி செய்யும் பொறுப்பையும் ஒப்படைத்தான். இவள் மீன் போல எப்போதும் விழிப்புடன் இருந்து, மதுரையை ஆட்சி செய்ததால், “மீனாட்சி’ என்று பெயர் பெற்றாள். இதன்பிறகு சியாமளை என்ற பெயர் மங்கி, மீனாட்சி என்ற பெயரே இவளுக்கு நிலைத்து விட்டது. இவ்வாறு, தன்னை வேண்டிய பக்தைக்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் அருளுகிறாள்.

    வெள்ளியம்பலத்துறையும்
    விரிசடைக்கடவுள் தன்னை
    உள்ளியம் மணம்புரிந்த
    உமையவள்

    என்னும் பதிவினால் ‘கொன்றையம் சடை குழகனாகிய சிவபெருமானே பிராட்டியின் மன்றலுக்கு உரியவன்’ என்னும் பரஞ்சோதியின் திருவாக்கை நினைவுபடுத்துகிறார்.

    கால் மாறி ஆடியவனின் கருணை

    மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் எனப் பலரும் மதுரைக்கு வந்தனர். இவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய மகரிஷிகளும் அடக்கம். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மட்டும் சாப்பிடவில்லை. இவ்விருவரும் சிதம்பரத்தில் நடராஜரின் நடனம் கண்டு உண்ணும் வழக்கமுடையவர்கள். அவர்களை மணவீட்டார் சாப்பிட அழைத்தனர்.

    தாங்கள் சிவதாண்டவம் கண்ட பின்பே சாப்பிடுவோம் என்றனர் இருவரும். அதனைக் கேட்ட சிவன், மகரிஷிகளுக்காக இங்கு ஆனந்தத் தாண்டவம் ஆடிக்காட்டினார். இதைப் பார்த்த பிறகே மகரிஷிகள் சாப்பிட்டனர். பிற்காலத்தில் மதுரையை ராஜசேகர பாண்டிய மன்னன் ஆண்டான். சிவபக்தனான அவன் ஆயகலைகளில், அறுபத்து மூன்றினைக் (63) கற்றுத்தேர்ந்தான். பரதம் மட்டும் பாக்கியிருந்தது. ஒரு சமயம் அவன் மற்றொரு மன்னனுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனவே, பரதம் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படவே, அதைக் கற்றான். முதல் நாள் பயிற்சி எடுத்த மன்னனுக்குக், காலில் கடும் வலி உண்டானது. அப்போதுதான் அவனுக்கு ஓர் உண்மை உரைத்தது.

    “ஒருநாள் ஆடிய நமக்கே இப்படி வலிக்கிறதே! இங்கே எம்பெருமான் தொடர்ந்து ஒரே காலை மட்டும் ஊன்றியல்லவா ஆடிக்கொண்டிருக்கிறார்? அவருக்கு எவ்வளவு வலி இருக்கும்?” என நினைத்தவன், நடராசர் சன்னதிக்குச் சென்றான். சென்று தனக்காக இடக்காலை ஊன்றி, வலக்காலைத் தூக்கி ஆடுமாறு வேண்டினார். சுந்தரேஸ்வரர் சன்னதி முன்புள்ள மகாமண்டபத்தில் கால் மாற்றி ஆடிய கோலத்தில் காட்சி தருகிறார் நடராசர்.

    சிவன் பாதம் பார்க்க வேண்டுமா? சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும். எனவே சிவனின் இடக்கால் அம்பிகைக்குரியது ஆகிறது. பொதுவாக கோயில்களில் நடராஜர், இடக் காலை தூக்கித்தான் ஆடிய கோலத்தில் இருப்பார். எனவே, அவரது தூக்கிய திருவடியை அம்பாள் பாதமாகவே கருதுவர். ஆனால், இக்கோயிலில் வலக்காலை தூக்கி ஆடிய கோலத்தில் இருப்பதால், இந்த பாதத்தைச் சிவனின் பாதமாகக் கருதுகின்றனர். சிவத்தலங்களில் இங்கு மட்டுமே சிவனின் பாதத்தைத் தரிசிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

    நின்றகால் மாற்றியாடி
    நேயத்தார் விருப்பந்தீர்த்த
    கொன்றையஞ்சடையன்

    என்னும் வரிகள் உணர்த்துகின்ற கதையை இப்படி வழிமொழிகிறார் ஏகாபுரத்தார்.

    மீனாட்சி பெயர்க்காரணம்

    கண்ணொளி தந்த அங்கயற்கண்ணி அன்னை மீனாட்சிக்கு அங்கயற்கண்ணி என்ற கண்ணோடு சம்பந்தப்பட்ட பெயர் உண்டு. இதற்கு மீன் போன்ற கண்களை உடையவள், மீன் தன் குட்டிகளைக் கண்களாலேயே பாதுகாப்பது போலக் காப்பவள் என்றெல்லாம் பொருள் சொல்வார்கள். ஆனால், தீயில் தன் கண்களை இழந்த ஒரு பக்தருக்கு அவள் கண்ணொளி வழங்கிய கதை பலரும் அறியாதது!

    மெய் ஞானியான நீலகண்ட தீட்சிதர், சிறுவயதிலேயே மீனாட்சி உபாசகராகத் திகழ்ந்தார். இவரது ஞானத்தைக் கண்ட திருமலை நாயக்கர், இவரைத் தனது முதலமைச்சராக நியமித்தார். அரச பதவி ஏற்றாலும் ஆன்மீக வாழ்க்கையைக் கைவிடாது தத்துவ மார்க்கத்தில் ஈடுபாடு கொண்டு விளங்கினார் தீட்சிதர். நீலகண்டருக்கு ஒரு பெருஞ்சோதனை காத்திருந்தது. திருமலை மன்னரின் மனைவியின் சிலையைத் தீட்சிதரின் நேரடிப்பார்வையில் சிற்பி சுந்தரமூர்த்தி செதுக்கினார். ராணியின் வலத்தொடையில் மெல்லிய சில்லுக்கல் சிதறி விழுந்தது சிலையில் குறையாகத் தெரிந்ததால் சுந்தரமூர்த்தி அதைச் சரி செய்ய முயன்றார். மீண்டும் அதே இடத்தில் சில்லு சிதறி விழுந்தது. தெய்வீகக்கலையில் கைதேர்ந்த தீட்சிதரிடம் சிற்பி இதுபற்றித் தெரிவித்தார். ஞானக்கண் கொண்டு பார்த்த தீட்சிதருக்கு ராணியின் வலத்தொடையில் மச்சமிருப்பது தெரிந்தது. ஆகையால், அது அப்படியே இருக்கட்டும் என்று சிலையை அமைத்துவிடும்படிக் கட்டளையிட்டார். நடந்த நிகழ்ச்சிகளை அறிந்த திருமலை நாயக்க மன்னர் மனத்தில் ஐயம் ஏற்பட்டது. அவரைக் கைது செய்யும் படி உத்தரவிட்டார். காவலர்கள் அவரது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் நடந்ததைத் தெரிவித்துக் கைது செய்ய வந்திருப்பதாகக் கூறினர். அப்போது, மீனாட்சியம்மைக்குக் கற்பூர ஆராதனை செய்து கொண்டிருந்த தீட்சிதர் தன் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த மாமன்னர் தன் மீது ஐயமுற்றதை எண்ணி வருந்தினார். உணர்ச்சிவசப்பட்டவராய்க், கற்பூர ஜோதியைத் தம் கண்ணில் வைத்துக் கண்களைப் பொசுக்கிக் கொண்டார். மன்னருக்குச் செய்தி பறந்தது. அவர் தம் தவற்றை உணர்ந்துத் தீட்சிதரின் இல்லத்துக்கு ஓடோடி வந்து தவறுக்கு வருத்தம் தெரிவித்தார். ஞானமே வடிவான தீட்சிதர் மீனாட்சியம்மை மீது “ஆனந்த சாகர ஸ்தவம்” என்னும் 108 ஸ்லோகங்களைச் சொல்லிப் பாடினார். அப்போது மீண்டும் கண்ணொளி கிடைத்தது. பின்னர் திருமலை மன்னர், நீலகண்டருக்குத் திருநெல்வேலி அருகிலுள்ள ‘பாலாமடை’ என்ற இடத்தைத் தானமாக அளித்தார். அங்கே ஒரு சிவாலயம் அமைத்த தீட்சிதர், அம்மையையும் அப்பனையும் வழிபட்டு அங்கேயே சமாதிநிலை அடைந்தார்.

    காலனை உதைத்த கதை

    மார்க்கண்டேயன் வரலாறு அனைவருக்கும் தெரியும். ஆனால் அவனுயிரை எடுக்கின்ற அவசரத்தில் எமதருமன் செய்த தவற்றைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ‘என்றும் பதினாறு மார்க்கண்டேயன்’ வரலாற்றில் எம்பெருமான் சிவனையும் தம் பாசக்கயிற்றால் கட்டி இழுத்துப் பாவம் செய்தவன் காலதேவன். அந்தக் காலதேவனைத் தம் காலால் எட்டி உதைத்து மார்க்கண்டேயனைக் கரைசேர்த்தவர் சிவபெருமான்.

    காலனையுதைத்த நீலக்
    கழுத்தனோடுடனமர்ந்த
    கோலமே அழகுக்கெல்லாம்
    உயர்ந்தவோர் கோலமே!

    மிருகண்டு முனிவருக்கும், மருத்துவதி அம்மைக்கும் நீண்ட நாட்களாக பிள்ளைப்பேறு இல்லாததால் முனிவர் சிவனை நினைத்து செய்த கடும் தவத்தின் மூலம் வரமொன்றினைப் பெற்றார். அவ்வரத்தினால் முனிவருக்கும், மருத்துவதி அம்மைக்கும் பிறந்த குழந்தைதான் மார்க்கண்டேயன். மார்க்கண்டேயனுக்கு 16 வயது ஆனவுடன் ஆயுள் முடிந்துவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்த வரலாறு. தனது பிறப்பைப் பற்றிய மந்தணைத்தை அறிந்து கொண்ட மார்க்கண்டேயன் 107 சிவத்தலங்களைத் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தான். 108 ஆவதாகத் திருக்கடையூரில் உள்ள சிவ தளத்திற்கு வந்து தரிசனம் செய்தான். அன்றுதான் மார்க்கண்டேயனுக்கு இறுதி நாளாக இருந்தது. எமதர்மன் மார்க்கண்டேயரின் உயிரைப் பறிப்பதற்காகப் பாசக்கயிற்றை வீச நேராகவே வந்து விட்டார். எமனைக்கண்டு நடுங்கிய மார்க்கண்டேயர் ஓடிச்சென்று அமிர்தகடேஸ்வரரை இறுகக் கட்டிக் கொண்டார். எமன் பாசக்கயிற்றை வீச, அது மார்க்கண்டேயரோடு இலிங்க உருவில் இருந்த அமிர்தகடேஸ்வரரையும் சேர்த்து சுருக்குப் போட்டு இழுத்து விட்டது. சிவபெருமானையே பாசக் கயிற்றால் கட்டி இழுத்த எமதர்மரைச், சினந்தெழுந்த சிவபெருமான் கீழே தள்ளிச் சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்து, மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறாக இருக்கவும், சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தையும் சிவபெருமான் அளித்துவிட்டார்.

    கழுத்தனோடு அமர்ந்த கோலம் என்றது நுண்ணியம் மிக்கது. பக்கம் பக்கமாக அமர்வது வேறு மணமக்களைப் போல. மெய்யில் பாதியாக இடம் பெறுவது என்பது அதனினும் வேறு. மணமக்கள் என்னதான் ‘நீயின்றி நானில்லை நிலவன்றி வானில்லை’ எனத் திரைப்பட உரையாடலைப் பேசினாலும் அவ்வாறு இரண்டறக் கலப்பது இன்றைக்கு மட்டுமன்று என்றைக்கும் இயலாது. இங்கே கவிஞர் ‘கழுத்தனோடு உடன் அமர்ந்த’ என ஒரே உருபினை இரண்டுமுறை பயன்படுத்தியதற்கு அதுதான் காரணம். கழுத்தனோடு அமர்ந்த என்பது வேறு. கழுத்தனோடு உடன் அமர்ந்த என்பதன் பொருள் வேறு. பின்னது மாதொரு பாகனைக் குறிப்பது. ஒடு என்பதனை அசைநிலையாகக் கொள்வதும் ஒன்று.

    மஞ்சு செய்த இன்னல்

    சித்திரைத் திருநாளில் அபிடேகப் பாண்டியன் சோமசுந்தரப் பெருமானுக்கு நித்திய அநித்தியங்களைச் செம்மையாகச் செய்தான். அவனுடைய வழிபாட்டினாலே பெருமானுக்குக் கற்பூரச் சுந்தரர் என்னும் திருநாமம் வழங்கலாயிற்று. அது நாளில் பெருமானை வழிபட வேண்டிய இந்திரன் பாண்டியனுக்காகக் காத்திருக்க வேண்டியதாயிற்று. நாணிய இந்திரனுக்கு வருணன் அறிவுரை கூறுவதாக எண்ணித் தன் ஆணவத்தை வெளிப்படுத்தினான். கடல் நீரை ஆவியாக்கிப் பாண்டிய நாடு முழுமையும் பெருமழையால் பெருவெள்ளத்தை வரச்செய்தான். இதனை அறிந்த அபிடேகப் பாண்டியன் இறைவனிடம் முறையிட, இறைவன் எழுமேகங்களையும் கடல் அலைகளைக் குடிக்க ஆணையிட்டார். மேகங்களைத் தடுத்துப் பாண்டியனின் இன்னல் நீக்கிய கதையை,

    மஞ்சுவந் தின்னல் செய்த
    மாடமா நகரத் தார்தம்

    என்ற வரிகளில் பதிவு செய்திருக்கிறார். வருணன் விட்ட மேகங்களைத் தடுத்ததையும் நான்மாடக் கூடல் ஆன வரலாற்றுப் புனைவுகளையும் கலந்து தருகிறார் வெங்கடேசன்.

    கற்பனையும் நுண்ணியமும்

    புலமை இருந்தால் பா புனையலாம். கற்பனைக்குப் புலமை பயன்படாது. புனைதல் அறிவின் தொழில். கற்பனை இதயத்தின் நிழல். இயற்கைப் பொருளோடு இரண்டறக் கலக்கும் உள்ளம் இருந்தாலேயொழிய. கற்பனை சிறக்காது. இறைவன் இயற்கை. கணவன் அழகாக அமைய வேண்டும் என்று நினையாத மனைவியோ மனைவி அசிங்கமாக அமையவேண்டும் என்று நினைக்கின்ற கணவனோ உலகில் இல்லை. ஆனால் உமாதேவி யாருக்குப் பாதியானாள் என்றால்,

    வெந்தநீறணிந்த பெம்மான்
    மேனியில் பகுதியாகி

    என்று எழுதுகிறார் கவிஞர். காடுடைய சுடலைப் பொடி பூசிய கணவனுக்குப் பாதியானாளாம் அன்னை. ‘சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடி’ என்பார் பட்டர்.

    எந்தமிழ்ப் புலவர் யாத்த
    எழுத்துக்குப் பிள்ளையாகி
    அந்தமில்லாட்சி செய்யும்
    அன்னை

    என்ற வரிகளில் புதுமணம் வீசும் கற்பனையைப் பதிவு செய்திருக்கிறார் வெங்கடேசன். உலகிற்கு அன்னையாக இருப்பவள் அவள். ஆனால் இந்த மொழிக்குப் பிள்ளையாகி இருக்கிறாளாம். மன்னராட்சிக்குக் காலவரையறை உண்டாதலின் அன்னை மீனாட்சியின் அருளாட்சிக்கு எல்லையில்லை என்பார் ‘அந்தமில் ஆட்சி செய்யும் அன்னை’ என்றார். எல்லா உலகங்களையும் ஆளுகிற மாட்சியைக் குறிப்பால் உணர்த்தினார் என்பதாம். இனி எழுத்துக்குப் பிள்ளை என்பதைக் குமரகுருபரர் முதலியோர் பாடிப் பரவிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முதலிய இலக்கியங்களைக் குறித்ததாகவும் கொள்ளலாம்.

    கொன்றையஞ் சடையன் நெஞ்சைக்
    கொய் பசுங்கிளியினாளின் மன்றம்

    என்று பாடுகிறார் கவிஞர். கிளி மேனியில் பல வண்ணம் உண்டேயன்றிப் பல வண்ணக் கிளிகள் யாண்டும் இல. ‘பச்சைக் கிளி’ என்பது ‘இயல்பு வழக்கு’. ஈண்டு பசுங்கிளி என அம்மையை உருவகப்படுத்தியது அடியவர் தன்னிடம் சொல்வதைக் கேட்டு அப்படியே நாயகன் சோமசுந்தரப் பெருமானிடம் மடை மாற்றம் செய்யும் செயலை நோக்கி. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்பது உலக வழக்கு. பசுங்கிளியினாள் என்னும் தலைவியின் உருவகத்திற்கு நிகராகத் தலைவனும் திகழ்கிறான் என்பார் ‘கொன்றை அம் சடையான்’ என்றார். பொதுவாகக் கிளியை ஆண்பாலுக்கும் கோவைப்பழத்தைப் பெண்பாலுக்கும் உவமிப்பது மரபு. அதனை மாற்றுகிறார். பெண்ணுக்குரிய கூந்தலை வண்ணனை செய்யும் மரபை மாற்றிக் கொன்றை அம் சடையன் என்று தலைவனுக்கு ஏற்றுகிறார்.

    அவனுக்கு அந்தக் குறை தீர்த்தவள் நீ! இவளுக்கு இந்தக் குறை தீர்த்தவள் நீ! எனக்கு வந்த குறை தீர்க்கக் கூடாதா என்று வேண்டுவதுதான் அடியவர்களின் இயல்பு. அந்த இயல்பை வெங்கடேசன் தானும் பெற்றிருப்பதைக்,

    கூடல்மா நகரந் தன்னைக்
    கொடுஞ்சினத் தாலெ ரித்த
    மாடமா தவளி னின்னல்
    மறுத்துரைத் தருளி னாளை
    நாடியெங்கவலையெல்லாம்
    நலங்கெடவருளக் கேட்டேம்

    என்னும் வரிகளில் பதிவு செய்திருக்கிறார். இந்தப் பதிவில் மதுரையைக் கண்ணகி எரித்ததும் மதுராபதி தெய்வம் கண்ணகியின் ஏவல் கேட்ட தொன்மத்தையும் கவிஞர் எளிமையாக அழகாகப் பதிவு செய்திருக்கிறார். அவள் துன்பத்தை நீக்கியது போலத் தம் துன்பத்தையும் நீக்க வேண்டும் என்பது மரபியல் சிந்தனை. எலும்பைப் பெண்ணாக்கியருளியதைப் போல, முதலையுண்ட பிள்ளையை மீண்டும் தந்தது போலத் தங்களுடைய துன்பத்தையும் போக்கியருள் என்னும் அடியவர்களின் வேண்டுதலையொத்தது இது!.

    விருத்தக் கட்டுமானமும் தொடை விகற்பங்களும்

    மரபுப் பாடல்கள் என்னுந் தொடர் பொதுவாக யாப்பமைப் பாடல்களையே குறிப்பதால் அத்தகைய பாடல்களில் தொடைவிகற்ப ஆராய்ச்சியும் கட்டுமானச் சிறப்பும் ஆய்வும் தவிர்க்க இயலாதனவே. யாப்பமைப் பாடல்களை எழுதிய பிறகு அதில் கவிதையைக் காணவேண்டுமே தவிர யாப்பினைக் காணக் கூடாது என்பது ஏற்புடைத்தன்று. அறுசீர் விருத்தமாதலின் தொடைவிகற்பங்கள் பற்றிய ஆய்வு பொருந்தாது. அவை அளவடிக்கே உரியதாதலின் என்பாரும் உளர்.

    தொடைவிகற்பங்கள் அளவடியைப் பொருத்ததன்று!

    அளவடியாகிய நேரடிக்குள் இடமாற்றி அமையும் எதுகை முதலாகிய தொடைகள் இணையெதுகை முதலான பெயர்களால் வழங்கப்படுகின்றன. இலக்கண நூல்களும் அதனையே எடுத்தியம்புகின்றன. ஆனால் அளவடியில் அமையாத பாடல்களின் தொடையின்பத்தைச் சுவைப்பதற்கு இந்த அளவடி வரையறை தடைசெய்வதாகக் கருத முடியாது. இலக்கண அடிப்படையில் சொல்லப்போனால் ஐந்தும் அதற்கு மேற்பட்டும் அமையும் சீர்களில் அமையும் தொடைவிகற்பங்களுக்குக் குறியீடு இல்லாத காரணத்தினாலேயே அதனைச் சுவைக்கக் கூடாது அல்லது சுவைக்க முடியாது என்பது பொருளன்று. தொடக்கப்பள்ளி மாணவர்களின் கணித வாய்ப்பாடு இருபது என்னும் எண்ணிக்கையில் நின்று விடுவதால் அதற்கு மேல் பெருக்கலே கூடாது என்பது பொருளன்று.

    நெடிலடி என்பதே ஒரு சிந்தனை வளர்ச்சி. தொடைவிகற்பங்கள் நெடிலடிக்குப் பொருந்தாது என்றால் தொடைச்சுவை கிட்டுமா? கழிநெடிலடியில் அமைந்த பல்லாயிரம் பாடல்களின் நிலை என்னவாகும்? எனவே இலக்கண நூல்களின் தொடைவிகற்பக் குறிப்புக்களை வழிகாட்டிகளாகக் கொள்ள வேண்டுமேயன்றி வரையறையாகக் கொள்ளுதல் தேவையில்லை. தொடை விகற்பம் என்பதே செய்யுட் சுவையைப் பெருக்கும் உத்தி என்பதைப் புரிந்து கொண்டால் இக்கருத்தின் வன்மை மென்மைகள் ஓரளவு புரியக்கூடும்.

    எனினும் ஒவ்வொரு அடியிலும் மற்றும் ஒவ்வொரு அரையடித் தொடக்கத்திலும் படைப்பாளர் செய்திருக்கும் செய்நேர்த்தியால் கவிதையின் ஒலியின்பம் கூடுவதை உணர முடியும்.

    1. “எங்குறை தீரக் கேட்டேம் எங்கணீர் சோரு மாறே”
    2. “மங்கைமா தெய்வந் தன்னை மனமொழி மெய்யால் வாழ்த்தி”
    3. “சேலம்வாழ் அடியேம் பட்ட சிறுமைகள் நீங்குமாறே.”
    4. “வெள்ளியம்பலத்துறையும் விரிசடைக்கடவுள் தன்னை”
    5. “உள்ளியம் மணம்புரிந்த உமையவள் திருத்தாள் நண்ணி”
    6. “மஞ்சுவந்தின்னல் செய்த மாடமா நகரத் தார்தம்”
    7. “நெஞ்சிலே குடியிருக்கும் நேரிழை திருத்தாள் நண்ணி”
    8. “நின்றகால் மாற்றியாடி நேயத்தார் விருப்பந்தீர்த்த”

    என்னுமாறு அமைந்த அரையடி மோனைகள் ஓர் இலக்கணப் பதிவாக அன்றி இன்னிசைக் கச்சேரியாக இனிக்கிறது என்பதை ஓதுவார் உணரக்கூடும்.  இன எழுத்து, வர்க்க எழுத்து என்றெல்லாம் மோனைக்காகச் சொற்களைத் தேடித் தொகுப்பார் கவிதைகளில் இவ்வாறு அமைவது அரிது. பொருளோடு கூடிய உணர்ச்சி உண்மையாகவும் எளிதாகக் கைவரப்பெறப் பெற்ற யாப்பு வன்மையும் உடையார்க்கு இது எளிதிலும் எளிது. தம்பி வெங்கடேசன் பெற்ற பெருவரம் இது. இது இட்டுக் கட்டியதன்று என்பது எடுத்துக்காட்டிலிருந்து புரியக் கூடும்.

    எதுகையிலும் வல்லார் ஏகாபுரத்தார்

    சீர்களைச் சிலிர்க்க வைப்பது மோனை என்றால் அடிகளை அணுகுண்டாக்குவது எதுகை. ‘எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டு விட்டுச் சென்றானடி’ என்ற இடி எதுகையால் அடி அதிர்வது காண்க. ‘பட்டேனே பல துயரம் கெட்டேனா?’ என்ற உரையாடலில் அது வெடித்தே விடுவதையும் காணலாம். அதாவது மோனைகள் சீர்களைச் சிறக்கச் செய்யும். எதுகை அடிகளைச் சிறக்கச் செய்யும். இன்னுந் தெளிவாகச் சொன்னால் மோனைகள் அடிகளைச் சிறக்கச் செய்வதை விடச் சீர்களைச் சிறக்கச் செய்யும். எதுகைகள் சீர்களைச் சிறக்கச் செய்வதினும் அடிகளைச் சிறக்கச் செய்யும். எனவே தொடைவிகற்பங்களில் எதுகையால் சிறப்பன அடிகள். மோனையால் சிறப்பன சீர்கள். அத்தகைய அடிகளை எதுகையால் சிறக்கச் செய்திருக்கிறார் பாவலர்.

    மங்கையர்க்கரசியாக
    மதுரைமா நகரினுள்ளே
    அங்கயற்கண்ணியாகி
    அருந்தமிழாட்சி செய்யும்
    செங்கண்மால் தங்கை

    ‘மங்கையர்க்கரசி அங்கயர்க்கண்ணி செங்கண்மால் தங்கை’ என்னும் ‘ங’கர எதுகைகள் எதுகைகளாக மட்டுமன்றி அம்மூவருக்கும் உள்ள உறவுநிலையை மனத்துள் பதிய வைக்கும் ஓர் உத்தியாகவும் செயல்படுகிறது என்பதை உச்சரிப்பார் உணர்வர். இவர் எதுகைக்காக எதுகையைக் கையாளவில்லை என்பதை இப்பாட்டிலும் தொடர்ந்து வரும் பாட்டிலும் பல அடிகளில் சரளமாக ‘ங’கரம் பயின்று வருதல் கொண்டு துணியலாம்.

    “மங்கையர்க்கரசியாக
    மதுரைமா நகரினுள்ளே
    அங்கயற்கண்ணியாகி
    அருந்தமிழாட்சி செய்யும்
    செங்கண்மால் தங்கை தன்னைத்
    திருவடி வீழ்ந்து பாடி
    எங்குறை தீரக்கேட்டேம்
    எங்கணீர் சோருமாறே”

    “பொங்குதாமரைக்குளத்தில்
    பொலிந்திருந்தாட்சி செய்யும்
    மங்கைமா தெய்வந்தன்னை
    மனமொழி மெய்யால் வாழ்த்தி
    அங்கண்மா ஞாலத்தெல்லாம்
    அகவிருள் நீக்கக்கேட்டேம்
    எங்கண்கள் உகுத்தவெள்ளம்
    யாறாகப் பாயுமாறே.”

    ‘ங’கர எதுகைப் பயன்பாடு அவ்வளவு எளிமையானது அல்ல என்பதைப் பயன்படுத்த முயன்று எதுகைகளை மாற்றிக் கொண்டோர் அறியக்கூடும்.

    கண்ணதாசனும் வெங்கடேசனும்

    இட்டு நிரப்புவது எதுகையன்று. இயல்பாக அமைவதே எதுகை. அழுகையைப் பற்றிப் பாடுகிற கண்ணதாசன் அழுவதற்காகவே தான் பிறப்பெடுத்ததாகக் கூறி இப்படி எழுதுகிறார்.

    சீசரைப் பெற்ற தாயும்
    சிறப்புறப் பெற்றாள்! எகிப்து
    நாசரைப் பெற்ற தாயும்
    நாட்டிற்கே பெற்றாள்! காம
    ராசரைப் பெற்ற தாயும்
    நலம்பெறப் பெற்றாள்! என்னை
    ஆசையாய்ப் பெற்ற தாயோ
    அழுவதற்கென்றே பெற்றாள்!”

    இந்தப் பாட்டில் கண்ணதாசன் சொல்ல வந்த சேதி தனது வாழ்க்கைத் துயரம். அதனால் வடிக்கும் கண்ணீர்! ஆனால் பாடுபொருள் முற்றிலும் மாறி முப்பெரும் உலகத்தலைவர்களின் தாயரைப் பெருமைப்படுத்தித் தன்னைப் பெற்றதற்காய்த் தன்னுடைய தாயைச் சலித்துக் கொள்வதுபோலப் பாடியிருக்கிறார். பெற்றார்கள் என்னும் ஒப்புமை நோக்கி ஒற்றுமையும் பிறப்பின் நோக்கமும் சிறப்பும் மாறுபட்டிருக்கிறது என்னும் வேற்றுமையும் நிலவுவதால் இது வேற்றுமையணி என்பர் தமிழாசிரியப் பெருமக்கள். நாம் சொல்ல வருவது என்னவென்றால் பாட்டிற்குத் தொடர்பில்லாத செய்திகளைக் கூட எதுகைத் தொடை இனிக்க வைக்கிறது என்பதாம். கண்ணதாசனின் ஒரு பாடல் இருபாடல்களில் அல்ல தொட்டவிடமெல்லாம் இந்தச் ‘செப்படி’ வித்தையைச் செய்துகாட்டியிருப்பார். “பாடுவது கவியா? இல்லை பாரிவள்ளல் மகனா?” என்று மோனையழகிற்காக மகனில்லாத பாரிக்கும் மகனிருந்ததாகப் பாடுவார் அவர். ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’ என்று உறவு நிலையின் போலித்தனத்தைப் பாட எத்தனிப்பவர் அவசரமான உலகம் என்ற சொல்லைப் போட்டு மோனையில் முத்தெடுப்பார். இத்தகைய முதிர்ச்சியான பதிவுகளைத் தம்பி வெங்கடேசன் பாட்டில் காணமுடிகிறது. இப்படி ஒரு பாடல் அரற்றல் அமைந்திருக்கிறது.

    காலனை யுதைத்த நீலக்
    கழுத்தனோடுடனமர்ந்த
    கோலமே அழகுக்கெல்லாம்
    உயர்ந்தவோர் கோலமென்று
    ஞாலமே போற்றாநிற்கும்
    நங்கையை யருளக்கேட்டேம்
    சேலம்வாழ் அடியேம் பட்ட
    சிறுமைகள் நீங்குமாறே.”

    பொதுநிலையில் வைத்துக் குறைதீர்க்கப் பாடியவர், தன் ஊர் அமைந்த மாவட்டத்தை எதுகையாக்கிக் கொள்கிறார். உண்மையில் இது காலன், கோலம், ஞாலம் என்பதற்கான எதுகையன்று. ஆனால் அவற்றின் அடிப்படையில் தோன்றிய வெகு இயல்பான எதுகை. கண்ணதாசனுக்குச் சீசரும் எதுகை. நாசரும் எதுகை. காமராசரும் எதுகை. வெங்கடேசனுக்குச் சேலமே எதுகை. அகன்ற படிப்பு என்பதனினும் ஆழ்ந்த புலமை என்பது சற்றுக் கடினமானதாக இருந்தாலும் அதனை நோக்கியே இவரது பயணம் நடக்கிறது என்பதற்கு இத்தகைய தொடைவிகற்பச் சொல்லாடல்கள் சான்றாகத் திகழ்கின்றன. ‘பச்சைப்பட்டுடுத்தி’ என்று எடுத்த எதுகைக்கு முரணாக ‘கச்சை நெய் அடியேம்’ என்று பதிவு செய்யும் பேரழகு எண்ணி மகிழத்தக்கது. வணங்கப்படுகிற அன்னைக்குப் பச்சைப்பட்டு! விழுந்து வணங்கும் அடியவன் நெய்வதோ கச்சைத் துணி! தொடை விகற்பங்களில் முரண் தனித்து நிற்பதில் வியப்பில்லை. கவிதைக் கட்டழகிக்கு முரண் ‘தொடை’தானே அழகு!

    சில கருத்துரைகள்

    பாடல்களின் சொல்லாட்சி உணர்வுப் பூர்வமாகவும் எளிமையாகவும் அமைந்திருக்கிறபோது செயற்கையானதொரு சொல்லாட்சி கவிதையின் ஓட்டத்தைத் தடுத்துவிடும். கேட்டோம் என்பது வழக்கு. கேட்டேம் என்பது செய்யுள். பாடல் வழக்கினைச் சார்ந்து அமையும் போது செய்யுள் தன்மைக்கு அங்கே இடமில்லை. ஒவ்வொரு பாட்டிலும் ‘கேட்டேம்’ என்னும் புலமைச் சொல் பாட்டின் ஏனைய எளிய தமிழ்ச் சொற்களோடு கலந்து நிற்காமல் கல்யாணராமன் பல்லைப்போல் தனித்து நிற்பதை உணரவேண்டும்.!

    கண்ணீரை வெள்ளமாக உருவகம் செய்கிறபோது பாயும் என்ற வினை பாட்டைக் கிழடுதட்டச் செய்து விடுகிறது. வெள்ளம் பாய்கிறது என்பது கவிதையாகாது. கண்ணீர் வெள்ளம் என்பதுதான் உருவகம். ‘கொள்ளி வைக்கும் பிள்ளைகளே கொள்ளியிலே வேகுதடா! அள்ளி வச்ச தாய்விழியோ ஆறு குளம் ஆனதடா’ என்பதுதான் கவிதை. முன்னது உருவகமாகவும் அதன் வினை இயல்பாகவும் அமைவது முன்னதன் பெருமையை நிலைக்கச் செய்யாது. கண்ணீர் வெள்ளமானால் கண்கள் என்னவாகும்? என்பதைப் படைப்பாளர் சிந்தித்திருக்க வேண்டும்!.

    பாட்டை எழுதி முடித்தபின் மீள் பார்வை செய்திருந்தால் இத்தகைய தடுமாற்றங்கள் களையப்பட்டிருக்கலாம். இவற்றை ஒத்துக் கொள்வதும் மறுதலிப்பதும் படைப்பாளர் உரிமை. ஆனால் அந்த உரிமை என் பார்வையைப் பங்கப்படுத்த முடியாது.

    மதுரை மாநகரினுள்ளே மங்கையர்க்கரசியாக
    அங்கையற்கண்ணியாக அருந்தமிழ் ஆட்சி செய்யும்
    செங்கண் மால் தங்கை தன்னைத் திருவடி வீழ்ந்து பாடி
    எங்குறை தீரக்கேட்டேம் எங்கணீர் சோருமாறே”  (1)

    பொங்குதா மரைக்குளத்தில் பொலிந்திருந் தாட்சி செய்யும்
    மங்கை மா தெய்வந்தன்னை மனமொழி மெய்யால் வாழ்த்தி
    அங்கண்மா ஞாலத் தெல்லாம் அகஇருள் நீக்கக் கேட்டேம்!
    எங்கண்கள் உகுத்த வெள்ளம் ஆறாகப் பாயுமாறே!” (2)

    காலனை யுதைத்த நீலக் கழுத்தனோ டுடன மர்ந்த
    கோலமே அழகுக்கெல்லாம் உயர்ந்தவோர் கோலமென்று
    ஞாலமே போற்றாநிற்கும் நங்கையை யருளக்கேட்டேம்
    சேலம்வாழ் அடியேம் பட்ட சிறுமைகள் நீங்குமாறே. (3)

    பச்சைப்பட் டுடுத்திக் கையில் பசுங்கிளியேந்தி வையம்
    மெச்சவே இலங்கா நிற்கும் மென்றொடி தாளில் வீழ்ந்தாங்
    கெச்சமென் வினைகளெல்லாம் எமைச்சேரா திருக்கக் கேட்டேம்
    கச்சைநெய்யடியேம் பட்ட கவலைகள் நீங்குமாறே. (4)

    வெள்ளியம் பலத்து றையும் விரிசடைக் கடவுள் தன்னை
    உள்ளியம் மணம்புரிந்த உமையவள் திருத்தாள் நண்ணிக்
    கொள்ளியாய்ச் சுடுமெம் மின்னல் குறைபட வருளக்கேட்டேம்
    வெள்ளிமீன் தோன்றுமட்டும் விம்மிநெஞ் சழுத வாறே. (5)

    பாண்டியர் குலவிளக்காய்ப் பைந்தமி ழொளிவி ளக்காய்
    ஆண்டருள் செய்யுந் தாயின் அருங்கழல் போற்றிப் பாடி
    ஈண்டெமை வருத்து கின்ற இன்னல்கள் நீக்கக் கேட்டேம்
    நீண்டகோ புரத்தின் முன்னம் நெடுங்கிடை விழுந்தவாறே. (6)

    மஞ்சுவந் தின்னல் செய்த மாடமா நகரத் தார்தம்
    நெஞ்சிலே குடியிருக்கும் நேரிழை திருத்தாள் நண்ணி
    விஞ்சவே வருத்துகின்ற வினைகளை நீக்கக்கேட்டேம்
    பஞ்சுநெய்யடியேம் பட்டபழவினை நீங்குமாறே. (7)

    வெந்தநீறணிந்த பெம்மான் மேனியில் பகுதியாகி
    எந்தமிழ்ப் புலவர் யாத்த எழுத்துக்குப் பிள்ளையாகி
    அந்தமில் லாட்சி செய்யும் அன்னையை யருளக்கேட்டேம்
    நொந்த வெம்முடலம் பட்ட நோய்நொடி நீங்குமாறே. (8)

    நின்றகால் மாற்றி யாடி நேயத்தார் விருப்பந் தீர்த்த
    கொன்றையஞ் சடையன் நெஞ்சைக் கொய்பசுங் கிளியி னாளின்
    மன்றஞ் சேர்ந்தழுது பாடி மனக்குறை போக்கக்கேட்டேம்
    இன்றியாம் பட்டவின்னல் இப்போதே தீருமாறே. (9)

    கூடல்மா நகரந் தன்னைக் கொடுஞ்சினத் தாலெ ரித்த
    மாடமா தவளி னின்னல் மறுத்துரைத் தருளி னாளை
    நாடியெங் கவலை யெல்லாம் நலங்கெட வருளக்கேட்டேம்
    ஓடிச்செந் நெல்வி ளைத்த வையைபோ லோய்ந்த வாறே. (10)

    நிறைவுரை

    பலருக்கும் இயலாத பாடுபொருள்! பலருக்கும் கைவராத இயல்பான நடை! பலருக்கும் வசப்படாத பக்குவச் சீர்கள்! பலருக்கும் துணைசெய்யாச் சீர் பிரிப்புக்கள். எளிய அறுசீர் விருத்தங்கள்! நிரலான பதிவு! தொன்மக் கதைகளின் சாரத்தைச் சொல்லியிருக்கும் உயர்தர பாங்கு! வினையெச்சத்தை இறுதியாக்கிக் காட்டும் வியத்தகு யாப்பறி புலமை!. மணிவாசகத்தைத் தான் பின்பற்றியே எழுதுவதைப் ‘பொல்லா வினையேன்’ என்னும் தொடரால் குறிப்பாக உணரத்தும் சதுரப்பாடு! வள்ளற் பெருமானுக்குப் பிறகு எளிவந்த பிரானாக இறைவனை வேண்டும் இதயம்! இத்தனையும் நிறைந்த காவியமாய் அமைந்த பதிகமே “பொல்லா வினையேம்” என்னும் இப்பதிகமாகும்! அறிவியல் வளர்ச்சிக்கு அஞ்சி ஓடும் பரபரப்பான வாழ்தடத்தில் இளைப்பாறும் தருவாக அமைந்த இந்தப் பத்தினால் முகநூல் தன் முகத்தைப் புதுப்பித்துக் கொள்கிறது! நானும் புதுப்பித்துக் கொண்டேன். நீங்களும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற பணிவான விண்ணப்பத்தோடு என்னின் ஐம்பது வயது இளைய தம்பி ஏகாபுரம் வெங்கடேசனை வாழ்த்தி நிறைவு செய்கிறேன்!

    (தொடரும்…)

    Share
  • குலதெய்வ வழிபாடும் சிவராத்திரியும்

    குலதெய்வ வழிபாடும் சிவராத்திரியும்

    பேராசிரியர். முனைவர் நா. அருணாசலம்,
    அழகப்பா பல்கலைக்கழகம்   

    ஒவ்வொரு நொடியும் பல கிரகங்கள் மற்றும் கோடானகோடி அண்ட நட்சத்திரங்களின் கதிர்வீச்சுக்கள் நம்மை இந்தப் பிரபஞ்சத்தில்  கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில் அண்ட இரகசியங்களையும்,  உலகத்தை உருவாக்கிய இயற்கையின் ஆதித் தலைவனையும், நாம் உணர்ந்தும் உணராமலும்,  வாழ்வியல் பரிணாமத்தின் ஒரு அங்கமாக  இயங்கிக் கொண்டிருக்கிறோம்.  நம்முள் அர்த்தம் கவனிக்கப்படும் பொழுது, நமக்குள் தத்துவம் புரிந்தால், காரணம் அறிந்த தேடலின் விடை ஒரு வேளைப் புரியப்படலாம்.

    உலகில் ஆண் பெண் என்று பாலின வேறுபாடு இருந்தாலும் நமக்கு உயிர் என்பது ஒன்றுதான். இறை என்றால் மங்களம் என்றும்  உயிர் என்றும் பொருள்.  உயிர் வாழ உணவும், இருப்பிடமும் மற்றும்  ஆரோக்கியமும்  தேவை . இவை அனைத்தும் நம் உடலை மட்டுமே வளர்க்கும். உடலை பாதுகாத்து நன்றாக வளர்க்கும் நாம், உயிரை வளர்க்க, அதை மேம்படுத்த என்ன செய்கிறோம்.  அவரவர்கள் நம்பிக்கையின் அடைப்படியிலும், கலாச்சாரத்தின் தாக்கத்தினாலும், நாம் இறை என்கிற ஒரு மூலம் உள்ளது என்று நம்புகிறோம் அல்லது அது இறை இல்லை, அதுவே இயற்கை என்கிற சித்தாந்தத்தைக் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிடுகிறோம்.

    மனிதன் தன் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் அவன் வெளிமுகமாகவும், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் உள்முகமாகவும் செயல்படுகிறான்.  மனிதன் சமநிலை தவறாதவண்ணம் அவனை உள்முகமாக இயங்கச் செய்து, பின்னர் ஒருமுகமான சமநிலைப்பாட்டில்வைத்திருக்க இறை சார்  செல்பாடுகள் தேவைப்படுகிறது . அதை அவன் உணர்ந்து,  உண்டாக்கி அதில்  நம்பிக்கையோடு பயணிக்கிறான்.  இதில் மனிதனை முழுமையாக ஈடுபடுத்த நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது தான் வழிபாடுகள் என்கிற இந்தக் கொண்டாட்டங்கள் மற்றும் விழாக்கள் ஆகும்.

    மனம் போக்கில் போனபடி அலையாமல், புலன்களைக் கட்டுபடுத்துவற்கே வழிபாடு தேவைப்படுகிறது. இறைவனைத் தேடி  ஒருவர் போகிறார்  என்றால் அவர் தன் உயிரின் முலத்தைத் தேடிப் போகிறார் என்று அர்த்தம்.  நமது அண்டவெளியில் பூமியானது சூரியனை நீள் வட்ட பாதையில் சுற்றுகிறது. இவை  சிறிய நீள்வட்ட பாதை,பெரிய நீள்வட்ட பாதை என இரண்டு வகையாக உள்ளன. பூமியானது பெரிய நீள்வட்ட பாதையில் இருந்து சிறிய நீள்வட்ட பாதைக்கு மாறுகின்ற நிகழ்வே நாம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். நம் விண்வெளியில் லூமினிபெரஸ் ஈதர் என்ற ஓர் அற்புத ஆற்றல் வாய்ந்த சக்தி அலைகள் நிரம்பி இருக்கிறது. இந்த சக்தி நம் மகாசிவராத்திரி அன்றுதான் பூமிக்கு முழுமையாக கிடைக்கிறது. இந்த ஈதர் சக்திக்கு இரு தன்மைகள் உள்ளன. ஒன்று ஸ்பிரிங் தன்மை, மற்றொன்று ஃபால்தன்மை என்பதாகும். இதில் ஸ்பிரிங் தன்மைக்கு ஆற்றல் அதிகம். ஃபால்தன்மைக்கு ஆற்றல் குறைவு. மகாசிவராத்திரியன்று மட்டுமே இந்த ஈதர் சக்தி ஸ்பிரிங் தன்மையில் ஒரு விண்கலன் வேகத்தோடு நேரடியாக பூமியை வந்தடைகிறது. எனவே இந்த மகா சிவராத்திரி அன்று இரவு முழுதும் தூங்காமலும் முதுகை நேராக நிமிர்ந்து அமர்ந்து இருப்பதன் மூலம் அளப்பரிய ஆற்றலையும் நன்மைகளையும் அனைவரும் பெற முடியும் என ஆன்மீக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

    மேலும், மகா சிவ ராத்திரி அன்று, வழக்கமான  குணத்தில் இருந்து விடுபட்டு விழிப்பு நிலை அடைந்து அதன் மூலம் நாம்,  இறை நிலையை உணர முயற்சிக்கிறோம். அன்று நாம் உணர முற்பட வேண்டியது மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலை மூலம் நம் ஆன்மாவில் உள்ள இறையை உணருதலே  என்பது ஆகும்.

    குலத்தை காப்பது குல தெய்வம். குலதெய்வ வழிபாடு தமிழர்களின் முக்கியமான வழிபாட்டு முறையாகும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினைச் சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக்காக்கும் வல்லமை படைத்தவை. நமக்கு ஒன்று என்றால் நம்மை காக்க முயல்வது குலதெய்வமே ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். குல தெய்வ வழிபாடுதான் முதலில் மற்ற தெய்வ வழிபாடுகள் எல்லாம் பிறகுதான் என்ற பொதுவான கருத்து உள்ளது. எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் முதல் வழிபாடு குல தெய்வத்திற்குத்தான் நடைபெறும். அதன் பிறகு தான் மற்ற நிகழ்ச்சிகளைத் தொடங்கவேண்டும். குல தெய்வ வழிபாடு பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. மணிமேகலை எனும் குலதெய்வம் பற்றி இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகிறார். கோவலன் நடுக்கடலில் தன் கலன் தடுமாறி உயிருக்கு தவிக்க, மணிமேகலை எனும்  குலதெய்வம் தோன்றி கோவலனைக் காப்பாறியதாகவும், தன் குலம் வாழ தன்னை மீட்ட தன் குலதெய்வத்தின் பெயரை, தன்  வாரிசுக்கு, மணிமேகலை என பெயர் சூட்டினான் கோவலன் என்று சொல்கிறார் இளங்கோவடிகள். நாள் செய்யாததைக் கோள் செய்யும். கோள் செய்யாததைக் குலதெய்வம் செய்யும் என்பார்கள்.

    அப்படி குலம் தழைத்தோங்க அனைவரும் சிவராத்திரி நாளில் குல தெய்வ வழிபாடு செய்வார்கள். மகா சிவராத்திரியை குல தெய்வ வழிபாட்டுக்கான நாளாக கொண்டாடுகின்றனர். மகா சிவராத்திரி திருநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலும் சிவராத்திரி திருநாள் கொண்டாடப்பட்டாலும், அதிகம் மக்கள் சென்று கொண்டாடுவது தங்கள் குலதெய்வத்தைத்தான். தமிழகத்தின் வட மாவட்டங்களில் அன்றைய தினத்தில் பாரி வேட்டை நிகழ்ச்சியும், மயானக் கொல்லை நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெறும். தென் தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் குல தெய்வத்தை வழிபடச் செல்கிறார்கள்.

    தமிழகத்தில் பெரும்பாலவரின் குலதெய்வமாக அய்யனார் மற்றும் அவரின் பரிவார தெய்வங்கள் இருந்து வருகிறது. அய்யனார் வழிபாட்டைக் குலதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு. பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிளும் அய்யனாரை காவல் தெய்வம் ஆக வழி படுகின்றனர். அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம்.  இந்த அய்யனார் தமிழர்களின் மூதாதையராக இருந்திருக்கலாம். இவர் மதம் சார்ந்து அறியப்படும் கடவுள் இல்லை. அய்யனார் கண்மாய்க்கரையில் தெய்வமாகப் பரமேசுவரன் மோகினியால் தோற்றுவிக்கப் பெற்றவர் என்கிற நம்பிக்கையும் மக்களிடையே நிலவி வருகிறது.

    அய்யனாரின் பரிவார தெய்வங்களாக  கருப்பணசாமி, வீரபத்திரர், இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன், பொன்னன், சேனையன், முன்னோடி, சுடலைமாடன்,  பட்டாணி, கருத்தாக்கலியான், அடைக்கலம்காத்தான், மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும், செல்லியாய், காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, இசக்கி, திரௌபதி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, காத்தாயி, காடேறி,  ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த கன்னியர்கள் முதலிய பெண்தெய்வங்களும் உள்ளனர். சிவராத்திரி அன்று அய்யனார் பிறந்தவர் என்பதால் அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றைய தினம், அய்யனாரைக் குலதெய்வமாகக் கும்பிடுவோர் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் மற்றும் உறவினர், பங்காளிகளுடன்  ஒன்றாகக் கூடிவந்து வழிபடுகின்றனர். ஐயனாரின் பரிவாரத் தெய்வங்களில் ஒன்றான கருப்பர் காவல் தெய்வமாவார். இவரையும் அனைவரும் சேர்ந்து வழிபடுவது குறிப்பிடத்தக்கது.

    அண்டத்தின் நேர்மறை கதிர் வீச்சு அதிகமாக உள்ள மகா சிவராத்திரி அன்று காலையிலிருந்து மறுநாள் காலை வரை உள்ள நேரத்தில், சில மணித்துளிகளாவது நம் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு பிடித்த பலகாரங்களையும் உணவு வகைகளையும் வைத்து வழிபட்டு, பின் குலதெய்வக்கோவிலுக்கும், சிவன் கோயிலுக்கும் சென்று பிரார்த்தனை செய்ய அனைவருக்கும் நற்கதிர் வீச்சால் பேராற்றல் ஏற்பட்டு தன்னம்பிக்கையும், வாழ்வியல் சூழலை எதிர் கொள்ளும் திறனும் அதிகரிக்கும் என்பதில் ஐயம் இல்லை.

    எனவே நாமும் இப்புனித மகா சிவராத்திரி தினத்தில் எல்லாம் வல்ல பிரபஞ்சப் பேரியக்க ஆற்றலை அடைய நம் முன்னோர்களையும், குல தெய்வத்தையும்  மற்றும் ஆதி சிவ வழிபாட்டையும், அனைவரும் சேர்ந்து மனம் ஒன்றிய பிரார்த்தனை மூலம் கடைபிடித்தும், அந்தந்த கோவில்களுக்கு சென்றும் அருள் பெற்று  மகிழ்வுடன் வாழ்வோமாக.

    Share
  • ​வாசகர் கடிதம்​:​ இப்படியும் ஒரு கொடுமை

    ​வாசகர் கடிதம்​:​ இப்படியும் ஒரு கொடுமை

    அன்புள்ள ஆசிரியருக்கு,

    வணக்கம்

    விழிப்புணர்வைத் தூண்டிட வேண்டிய தொலைக்காட்சி நாடகங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெண்களை இழிவுபடுத்தி,  தங்களது நாடகங்களின் ரேட்டிங்கை உயர்த்திக்கொண்டு  வருவது வேதனையான விஷயம்.

    தமிழகத்தின் பெருமை, “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற கொள்கையும் குடும்ப வாழ்க்கையும். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒவ்வொருவரின் பணி நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் காரணத்தால், கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை குறைந்துகொண்டே வருகிறது. இது ஒருபுறம் என்றாலும் இந்தத் தொலைக்காட்சிகள் தாங்கள்  ஒளிபரப்பும் நாடகங்கள் மூலம், கொஞ்சமாக இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கும் கூட்டுக் குடும்பங்களுக்கும் வேட்டு வைத்துக்கொண்டு உள்ளார்கள்.

    எந்த ஒரு நாடகத்தைப் பார்த்தாலும் இரண்டு பொண்டாட்டிகள் அல்லது மணமான ஹீரோவின்  மீது மையல் கொள்ளும்  பெண்கள் எனப் பெண்களை இழிவுபடுத்தியே தொடர்களை இயக்கிக்கொண்டு உள்ளார்கள். இப்படி ஒவ்வொரு கட்டமாகப் பெண்களை இழிவுபடுத்தி இப்போது சமீபத்தில் ஒரு நாடகத்தில் “பள்ளிக்குப் பிள்ளைகளைக் கொண்டு இறக்கிவிட்டு வரும் பெண்ணை வழிமறித்து, செல்பி எடுத்துக் கொடுமை செய்கிறார்கள். அதை அங்கு வரும் வேறு பெண்கள் குத்திக்காட்டிக் கொடுமை செய்யும் புது விதக் கொடுமையைப் பெண்களுக்கு அறிமுகப்படுத்தி  உள்ளார்கள். இந்தக் காட்சியை முன்னிறுத்தி மற்ற நாடக இயக்குநர்களுக்கும் இந்த கான்செப்ட் விரிவுபடுத்தி எடுக்க, கற்பனைக்  குதிரையைத் தட்டிவிட்டு இருப்பார்கள்.

    இதுபோன்ற கொடுமையான காட்சிகளை அடிக்கடி காண்கிறோம். அவர்கள் எடுக்கும் நாடகங்களின் ரேட்டிங் உயர்கிறது என்ற ஒரே காரணத்துக்காக, பெண்களை இழிவு செய்யும் இதுபோன்ற காட்சிகளை ஒளிபரப்புகிறார்கள். இவற்றைக் கண்டு எந்தப் பெண் விடுதலை இயக்கமும் குரல் கொடுக்க முன்வருவது இல்லை. இதுதான் கொடுமையான விசயம்.

    தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நாடகங்களைத் தணிக்கை செய்ய, சென்சார் போர்டு முன்வர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கான அரசாணை வெளியிட வேண்டும். மாதர் சங்கங்கள் இதுபோன்ற நாடகங்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிலையங்கள் முன்பு போராட்டங்கள் நடத்த முன்வரவேண்டும். இதற்கு வல்லமை மின்னிதழ் தகுந்த ஆலோசனைகளை மாதர் சங்கங்களுக்கும் அரசுக்கும் வழங்க வேண்டும் என்பது எனது ஆசை.

    நன்றி

    அன்புடன்
    சித்திரை சிங்கர்
    அம்பத்தூர்

    Share
  • படித்தேன்! சுவைத்தேன் பகிர்ந்தேன் – 11

    படித்தேன்! சுவைத்தேன் பகிர்ந்தேன் – 11

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    நூல் மதிப்பீடு

    முன்னுரை

    இலக்கண, இலக்கியப் படைப்பு நுகர்ச்சியில் பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களும் அவற்றிற்கு உரையாசிரியப் பெருமக்கள் தந்திருக்கும் அரிய விளக்கப் பகுதிகளும் திரையிசைப் பாடல்களும் செயப்படுபொருட்களாக அமைந்து அவற்றுள் நான் கரைந்து போனது காலம் எனக்குத் தந்த கொடை என்றே கருதுகிறேன். போலிச் சடங்குகளால் நிறைந்த இந்தச் சமுதாயப் பெருவெளியில் என் சஞ்சலத்தைப் போக்கும் மாமருந்துகளாக அவை எனக்கு அமைந்திருக்கின்றன. அஞ்சலிக் கண்ணீர் உப்பில் கரிப்பில்லை. வாழ்த்துக்களில் ஈரமில்லை. எல்லாம் செயற்கை. போலிப்படைப்புக்களைப் புறங்கையால் ஒதுக்கும் பேராற்றலை அந்த இலக்கியப் பயிற்சியும் இலக்கணப் பயிற்சியும் எனக்களித்திருக்கிறது. என்னின் சிறு திறனுடையார் யாவரே எனினும் அவரெல்லாம் என் வணக்கத்திற்குரியவரே!. கவிதைகளில் நான் கரைந்து போகிறேன் என்பதைவிடக் காணாமல் போகிறேன் என்பதுதான் உண்மை. சொற்பயன்பாடும், கற்பனையும் எளிய யாப்பமைதியும் இடைமறிக்காத தொடை விகற்பங்களும் உள்ளத்தை வருடும் சந்தங்களும் கவிதையை ஒரு சதிராடு மண்டபமாகவே என் கண்களுக்குக் காட்டுகின்றன. சமுதாயத் தாக்கத்திலிருந்து இதயத்தை மூடியிருக்கும் பெரிகார்டியத்தைப்போல (PERICARDIUM) நான் என்னையும் என் உள்ளத்தையும் காத்து வருகிறேன். அந்த உள்ளத்தை ஊடுருவும் கவிதைகளைக் கவிதை வல்லாளர்கள் சிலர் அவ்வப்போது நறுக்குத் தெறித்தாற் போலப் பதிவிடுகிறார்கள். சிலர் பொருட்செலவைக் கருதாது நூலாக்கம் செய்து வருகிறார்கள் அத்தகைய ஆற்றலையும் திறனையும் தொண்டுள்ளத்தையும் கண்டு அவர்தம் படைப்புக்களுக்கு ஏற்பளிப்பதும் அதனை வெளியுலகிற்கு அறிமுகம் செய்வதும் ஒரு சாதாரண தமிழனின் இனம் சார்ந்த நித்திய கடமையாகும். அத்தகைய கடனை வலங்கைமான் வேல்முருகனுக்கு நான் செய்ய வேண்டிய தருணம் இது! இங்கே வேல்முருகன் என்பது ஆகுபெயர்!

    வரலாற்றில் வலங்கைமான்

    நாயன இசையில் தங்களை இழந்த எவரும் தவில் இசைக்கலைஞர் திரு. சண்முகசுந்தரத்தை மறந்துவிட இயலாது, அப்பெருமகனார் தோன்றிய ஊர்தான் வலங்கைமான்! இடங்கைப் பிரிவு, வலங்கைப்பிரிவு என்னும் இரண்டு பிரிவுகள் பத்தாம் நூற்றாண்டு அளவில் இயங்கி வந்த அரசியல், சமுதாயக் குழுக்கள் ஆகும். வரலாற்றுப் பேராசிரியர் திரு.நீலகண்ட சாஸ்திரியாரும் இதன் தோற்றத்தைக் கணிக்க முடியவில்லை.   உண்மையான வரலாற்று நிகழ்வுகளைத் தொன்மமாக்கியும் கற்பனைக்கெட்டாத தொன்மச் சித்திரிப்புக்களை வரலாறாக்கியும் திரிபுவாதம் செய்வதில் வல்லோர் சிலர் வரலாற்றில் எல்லாக் காலத்திலும் இருப்பார்கள். அவர்கள் வரலாற்றுப் பேராசிரியர்கள் என்னும் பாசாங்கு மொழிக்கும் உரியவர்கள். அத்தகைய திரிபுவாதத்தால் உருவானதுதான் இடங்கை – வலங்கைப் போர் என்பது! களத்தில் நிகழ்ந்தது அன்று. தெருவில் நடந்தது. உயர்சாதி அரசு அலுவலர்களால் கொல்லப்பட்ட ஆதித்திய கரிகாற் சோழனை ஆதரித்தவர்களுக்கும் ஆதித்திய சோழன் கொல்லப்படுவதற்குக் காரணமானவனும் அவசரமாக அரச பதவியேற்றுக் கொண்டவனுமான உத்தமச் சோழனை ஆதரித்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற தெருச்சண்டைதான் வலங்கை இடங்கைப்போர். தெருச்சண்டை என்றால் குழாயடிச் சண்டையில்லை. திருக்கோயில்களிலும் செழித்த வயல்களிலும் தங்கள் உரிமைகளை இழந்த பாட்டாளி வர்க்கத்தினருக்கும் அடியாட்கள் சிலரை வைத்துக் கொண்டு அவர்களை ஏமாற்றிக் கொள்ளையடித்த சில பிரிவினருக்கும் ஏற்பட்ட உரிமைப்போர்! கவிதை பற்றிய ஆராய்ச்சியில் ஊராராய்ச்சி தேவையா? ஒரு ஆராய்ச்சியில் மற்றொரு செய்தியைத் தெரிந்து கொள்வதை ஏன் ஒரு இலவச இணைப்பாகக் கருதிக் கொள்ளக் கூடாது? உள்ளடக்கம் அதனால் கனத்துவிடக் கூடாது. நமத்துவிடக் கூடாது அவ்வளவுதான். பயன் தெரிவார் எங்கும் இருப்பர் எண்ணிக்கையில் குறைவானாலும்! அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற அந்த ஊரின் பெருமையைத் தற்போது தமிழ்க்கவிதை வரலாற்றிலும் தக்க வைக்க வேண்டும் என்னும் தாளாத் தமிழ்க்காதலால் கவிதைப் பணி செய்துவருபவரே திரு.வலங்கைமான் வேல்முருகன்!. பொறியியல் துறை மற்றும் நிர்வாகத்துறையில் உயர்கல்வி பெற்ற அன்னார் படைத்துள்ள  நூல்களில் ‘நீர்வழி ராகம்’ என்னும் கவிதை நூலும் ஒன்று. அந்த நூலைப் படித்தேன்! அனைத்துப் பரிமாணங்களையும் உணர்ந்தேன். படிப்பார் உள்ளங்களின் கொள்ளளவு தெரியாமல் பரிமாறுகிறேன்!

    வடிவமே கவிதையாகாது!

    ஒருவர் சொல்கிறார் ‘நான் காணாமல் போன என் காதலியைப் பற்றிக் காவடிச் சிந்து பாடியிருக்கிறேன்!’ சரி! இன்னொருவர் சொல்கிறார்! ‘நான் முச்சந்தியில் நிற்கும் முனியாண்டிக்குப் பாடிய நேரிசை வெண்பாக்கள் முந்நூறைத் தாண்டும்’ சரி! ‘பிறக்காத பிள்ளைக்கு நான் பாடிய பிள்ளைத் தமிழ் குமரகுருபரரைத் தூங்க விடாது!’ சரி! ‘என் ஆசிரியர் பற்றி நான் பாடிய ஆசிரியர் ஆற்றுப்படையை நச்சினார்க்கினியர் அறியாமற் போனது அவரது போகூழ்!’ சரி! ‘கந்துவட்டி கண்ணுசாமிக்கு நான் பாடிய கலம்பகத்திற்கு உரையெழுத ஆள் கிடைக்காத காரணத்தால் வட்டியில்லாமலே கடன் கொடுக்க வந்திருக்கிறான் கண்ணுசாமி!’ சரி! இன்னும் சொன்னான்! நான் இத்தனையும் கேட்டுக் கொண்டேன்! பிறகுதான் அவனைக் கேட்டேன்! “நீ சொல்வதெல்லாம் சரிதான்! உன் படைப்பாற்றலைப் பாராட்டுகிறேன்!. ஆனால் நீ எழுதியவற்றுள் கவிதையாக ஏதேனும் சொல்லி என் இதயத்திற்கு நெருக்கமாக முடியுமா? என்று. இத்தனை வடிவங்களில் எழுதியிருக்கிறேனே? இவைகள் எல்லாம் கவிதைகள் இல்லையா? இல்லை உனக்குத்தான் இதயம் இல்லையா? என்றான். ‘இலை சோறாகுமா?’ என்றேன்! சோறுதானே விருந்து? இலை மட்டும் எப்படி விருந்தாகும் என்றேன்! விழித்தான்! அவன்மீது தவறில்லை! .அவன் அவ்வாறு நம்பவைக்கப்பட்டிருக்கிறான். கவிதையை எழுதுவதற்கு முன்னாலேயே அதுபற்றிய கற்பனை, உணர்ச்சி, கருத்து ஆகியன கருவறைக்குள் நுழைவதற்கு முன்பாகவே வாய்பாடுகளை எழுதி வைத்துக் கொள்ளும் ஒரு பரிதாப நிலை! இசையமைப்பாளர் எழுதிவைத்துக் கொள்ளும் ‘NOTATIONS’ என்பன தேமா புளிமா வாய்பாடுகளிருந்து வேறுபட்டன என்பதைக் கூட இவனால் அடையாளம் காண முடியவில்லை. ஏடுகள் கவிதைகளை வெளியிடுவதில்லை என்பது சரியான ஏக்கமே! “நாமும் வருந்தி இந்தப் பொங்கல் நாளில் வாசகர்களையும் வருத்த வேண்டுமா?” என்ற நல்லெண்ணமும் காரணமாக இருக்கலாம் அல்லவா? இதழில் வெளிவரவில்லையே என்பது எழுதியவரின் ஏக்கமென்றால் நல்ல கவிதையை எழுதமாட்டார்களா என்னும் என்னையொத்தார் ஏக்கத்தைப் புரிந்து கொள்வது யார்? புரிந்து தீர்த்து வைப்பது யார்? ஒரு நல்ல திரைப்படத்தில் கேமரா தன் இருப்பைக் காட்டாது! காட்டக் கூடாது! படத்தோடு ஒன்றாமல் போவதற்கு அதன் வேறுபட்ட கோணங்கள் காரணமாகிவிடக்கூடாது!. மார்க்கஸ்பார்ட்லே, பாலுமகேந்திரா முதலிய ஒளிப்பதிவாளர்கள் இதற்குச் சான்று. இதற்கு எதிரணியில் இருப்பவர்கள் வின்சென்ட், கர்ணன் மற்றும் ஜிகே இராமு போன்றோர். ஒரு நல்ல கவிதையில் வடிவம் முந்திரிக்கொட்டையாகிவிடக் கூடாது. வடிவங்களுக்கான ஓசையைப் பாடலுக்கேற்பப் பிரித்துக் காட்டிய நுண்ணியத்திற்கு அதுதான் காரணம். ‘மாசறு பொன்னே வலம்புரி முத்தே’ என்றால் கண்ணகியின் முகம் நம் கண்முன் வந்தால்தான் அது கவிதை!  அதனைவிட்டுத் கூவிளம் தேமா கருவிளம் தேமா என்பன முன்னிற்கக் கூடாது! கருத்து, உணர்ச்சி, கற்பனை இவற்றுக்குத் துணையாக இருப்பதுதான் வடிவம். இவற்றைப் பின்னுக்குத் தள்ளித் தன்னை முன்னிறுத்திக் கொண்டால் கவிதை சடுகுடுவில் சிக்கிக் கொள்ளும்.

    நீர்விழி ராகத்தின் உள்ளடக்கத் தலைப்புக்கள்

    கவிஞன் ஒருவனுக்கு அவனுடைய கவிதையே முகவரி. அவன் எழுதுகிற கவிதைக்கு அவன் தெரிவு செய்து வைத்திருக்கும் தலைப்பே முகவரி. ஒரு நூலின் தலைப்பு அல்லது ஒரு கவிதையின் தலைப்பே உள்ளடக்கத்தை உரசிப் பார்க்கும் உரைகல்லாகும். சிலப்பதிகாரம் என்னுந் தலைப்பு எத்தகைய விவாதங்களுக்கும் இடம் கொடுத்து நின்றதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. ‘இராமகாதை’ என்று பாத்திரத்தின் பெயரால் பெயரைப் படைப்பாளன் வைக்க, இலக்கிய உலகமோ அதனை அப்படியே புறந்தள்ளிக் ‘கம்பராமாயணம்’ என்று எழுதியவனுக்கு உரிமையாக்கியது.  ‘பாஞ்சாலி சபதம்’ என்று மகாகவி இட்ட பெயரை அவருக்கு முன்னாலே இருந்த வியாசரோ வில்லியோ வைக்கவில்லை. வியாசர் இந்தப் பகுதிக்குத் ‘திரௌபதியின் துயரம்’ என்று பெயரிட்டிருக்கிறார். வில்லியார் ‘சூதுபோர்ச்சருக்கம்’ என்று தலைப்பிட்டார். வைணவச் சமயச் சொற்பொழிவாளர்கள் ‘திரௌபதை மான சம்சரட்சணம்’ என்று சொன்னார்கள். பாரதிதான் இவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டுப் ‘பாஞ்சாலி சபதம்’ என்று பேர் வைத்தான். பாஞ்சாலியை வைத்துச் சூதாடியவர்கள் பாண்டவர்கள். பாஞ்சாலியை வைத்துப் பாரதத்தை அடையாளப்படுத்தியவன் பாரதி. எனவே ஒரு நூலின் தலைப்பும் ஆய்வுப் பொருளாகும். உள்ளடக்கங்களின் தலைப்பும் ஆய்வுப் பொருளாகும். படைப்பாளனின் உள்ளக் கிடக்கையினை அறிய முற்படுவதே ஆய்வு. அதற்கு உதவும் எதுவும் ஆய்வுப்பொருளே!

    உள்ளடக்கத்தால் உயர்ந்து நிற்கும் ‘நீர்விழி ராகம்’

    ‘நீர்விழி ராகம்’ என்னும் இந்தக் கவிதை நூல் உள்ளடக்கத்தாலும் சிறக்கிறது உள்ளடக்கத்திற்கான தலைப்புக்களாலும் சிறக்கிறது. வழக்கமான தமிழ் வாழ்த்தையும் இவர் விட்டுவைக்கவில்லை. மேகம் போடும் தாளம் என்றும் ‘மேகமே மேகமே’ என்றும் மேகத்தைத் தூது விடுகிறார். ‘நிலவோடு ஒரு பயணம்’, ‘நிலவே வா’ என்றெல்லாம் நிலவைப் பாடுகிறார். ‘நதிக்கரை நாணலை’யும் பாடுகிறார். ‘கிணற்றுத் தவளை’யையும் பாடுகிறார். அகவை எத்தனையானாலும் காதல் யாரை விட்டது? ‘‘ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்று’’ என்று அருணகிரியார் பாடுவார். அவர் பாடிய வேல்முருகன் ‘மைதீட்டிய ஏவுகணை ஒன்று’ என்று அன்பு விழியை அம்புவிழியாக்கிப் பாடுகிறார். அடுத்த பாட்டிலேயே ‘மையூறும் கண்ணாள்’ என்றும் மயங்கி விழுகிறார். ‘வைகைக்கரை காற்றே நில்லு’ என்னும் இராஜேந்தரின் சொற்கள் இவர்வழியாக வருகிறபோது ‘தென்னையிளம் காற்றே கேளு’ என்று மாறுகிறது. ‘தென்னையிளம் காற்றுக்குக் காப்புரிமை பெற்றவர்  கண்ணதாசன் ‘தென்னையிளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது’ என்பது ஆண்டவன் கட்டளை! பரிசல் பற்றிப் பாடியவர் ‘கரிசல்’ பற்றியும் பாடியிருக்கிறார். நெருஞ்சி முள்ளையும் பாடி ஆவாரம்பூவையும் பாடியிருக்கிறார். பெண்கள் தாலாட்டை மறந்து போனதால் அவரிடத்தில் வந்து நின்ற வேல்முருகன் தாலாட்டையும் பாடியிருக்கிறார். பெண்ணுரிமை அமைப்புக்கள் காப்புரிமை கோரமாட்டார்கள் என்பது தம்பி வேல்முருகனுக்குத் தெரியும்.

    இந்தத் தலைப்புக்களைத் தொகுத்தும் பகுத்தும் நோக்கினால் எதனையும் பாட கைவந்திருக்கும் இவரது படைப்பாற்றல் தெற்றெனப் புலப்படுகிறது. நாட்டுப்பாடல்கள் அமைப்பில் இவர் பாடியிருக்கும் பாடல்கள் பண்பாட்டுப் பதிவுகளாகும். ‘கனவுகள் ஆயிரம்’ என்னும் கவிதை கவிஞரின் சமுதாயப் பார்வையையும் ‘இரவும் பகலும்’ என்ற கவிதை தனிமனித நம்பிக்கையை வலியுறுத்துவதாக அமைந்திருக்கின்றன.

    நீர்வழி ராகத்தில் கற்பனை

    கற்பனை என்று சொல்ல முடியாது. சமுதாயத்தில் நாளும் பரவலாக நிகழ்கின்றவைதான். முறை மாப்பிள்ளை இருக்கிறபோது காதலனை வரச்சொல்லிப் பெண்ணே கவிதை பாடுவது தற்காலத்தில் வழக்கமாகிப் போன ஒன்று. பொதுவாகக் காதல் உணர்வுகளைப் பெண்கள் தாமே முன்வந்து முதலில் வெளிப்படுத்துவதில்லை என்பது அகத்திணை மரபு மட்டுமன்று. தமிழ்ப்பண்பாட்டு மரபும் கூட. பலர் புரட்சி என்ற பெயரில் எதனையோ எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பட்டுப்புடவையின் சரசரப்பைச் சுடிதாரில் எதிர்பார்ப்பவன் கோமாளி! போலிப்பெண்ணுரிமைக்காக நாம் கொடுத்திருக்கிற விலை எவ்வளவு என்பதை வைரமுத்து தான் எழுதிய இரத்த தானம் என்னும் நூலில் ‘அவசரத் தாலாட்டு’ என்னுந் தலைப்பில் அற்புதமாகச் சித்திரித்திருக்கிறார். நாம் அதற்குள் செல்வது கட்டுரைப் பொருளுக்கு அன்னியமாகிவிடும். ‘உன்வருகைக்காய்த் தவமிருக்கேன்’ என்னும் பெண்ணின் ஏக்கத்தில்,

    “கண்வருகைக்காய் காத்திருப்பேன் உன்
    ‘காட்சியைத் தந்து விடு’

    என்று பாடுகிறாள். ‘கண் வருகை’ என்பது ‘உன் வருகை’ என்பதற்காகப்  போடப்பட்ட இன எதுகையன்று, கற்பனைத் திறனே!. உன் பார்வைக்காகத் தவங்கிடந்த அனுபவ வெளிப்பாடு. இதனை ஆகுபெயராக்கி உரைசொன்னால் கவிதை ‘பாலிடால்’ குடித்துவிடும். கவிதை உணர்வதற்கு., உரைக்கல்ல! தொடர்ந்து தலைவி பாடுகிறாள்!

    என்னுயிர் என்னுடல் காத்து நிற்கும்
    தெய்வமாய் நின்றுவிடு!  —நானும்
    உன்னுயிர் தன்னை என்னுயிராக
    உரிமையாய்ப் பார்த்திருப்பேன்!”

    தலைவி பாடுவதாகக் கவிஞர் பாடுகிறார். இது நடப்பியல் அன்று என்பதும் வேல்முருகனுக்குத் தெரியும். அவருடைய ஆதங்கத்தை இப்படிப் பதிவு செய்திருக்கிறார். கணவனுக்கு மனைவி தெய்வம் என்பதும் மனைவிக்குக் கணவன் தெய்வம் என்பதும் சகாராப் பாலைவனத்துத் தொலைத் தூரக் குடிலில் அணையப்போகும் சிறு அகல்விளக்குச் சுடராக இருக்கிறது என்பதுதான் உண்மை. தமிழக மகிளா நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மணமுறிவு வழக்குகளின் எண்ணிக்கை தெரியாமலேயே இங்கே பலர் பெண்ணுரிமை பற்றிப் பேசிவருகின்றனர். கவிஞரின் கற்பனைத் திறத்தினை ஓரிடத்தில் ஓர் உவமத்தால் காணமுடிகிறது.

    ‘பூ’ என்பதாலேயே ‘வாழைப்பூவைத் தலையில் வைக்க முடியாது, பூத்தரு புணர்ச்சியில் தலைமகன் தலைமகளுக்கு வாழைப்பூவையோ காலிபிளவரையோ கொடுத்துக் காதல் செய்ய முடியாது. ‘சாமத்திலே வந்தாலும் சாமந்திப்பூ’வைத்தான் கங்கை அமரன் கொண்டு வரவேண்டும்.  மருத்துவக் குணம் உடைய இந்தப் பூவை அதாவது மரத்ததில் இந்தப் பூ தொங்குகிற அழகைப் பார்த்த சுரதா ‘வாழைப்பூ வேதாந்தம்’ என்று பயன்படுத்தியிருக்கிறார். திரைப்படப் பாடலாசிரியர் வாலி ‘வாழை மலர் போலப் பூமி முகம் பார்க்கும் கோழை குணமாற்று தோழா!’ என்று எழுதியிருக்கிறார். கொண்டையில் பூ வைத்தவர்களைக் கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள். கொண்டையையே பூவாக்கிய கவிஞராக வேல்முருகன்  திகழ்கிறார்.

    வட்ட வட்டப் பொட்டுக் காரி
    வாழைப்பூ கொண்டைக்காரி!

    வாழைக்குருத்தினைச் சடைப்பின்னலுக்கு உவமம் சொல்வது உண்டு. இங்கே கோடாலிக் கொண்டையைத்தான் கவிஞர் இவ்வாறு வாழைப்பூ கொண்டை என்று கற்பனை செய்திருக்கிறார்!. நானறிந்தவரையில் இவ்வளவு நுண்ணியமாகக் கொண்டையையும் நோக்கி வாழைப்பூவையும் கவனித்து உவமித்தவர் வலங்கையாராகத்தான் இருக்க இயலும்!

    இல்லாத இடைதன்னைத் தேடி நான்
    இருக்குமிடம் ஓடிடுவேன் நாடி!
    சொல்லாத வரிகளையே போட்டு எனைச்
    சொக்க வைத்த அவள்புதிய பாட்டு!

    என்று தலைவன் பாடுகிறான். ‘சொல்லாத சொல்’, ‘பாடாத பாட்டு’ என்பன உலகத்தரம் வாய்ந்த இலக்கியத் தொடர்கள். Heard Melodies Are Sweet, but Those Unheard Are Sweeter” என்று ஆங்கிலக் கவிஞன் ஜான் கீட்ஸ் கிரேக்கத்தின் தாழியின் மீது வரையப்பட்ட ஓவியங்களைப் பார்த்துப் பாடியிருக்கிறான். ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை’ என்பார் கண்ணதாசன்! ‘பார்க்காமல் பார்க்கின்றான்’ என்பார் வாணிதாசன்! காதலைப் பற்றிப் பாடுகிற எவருடைய உணர்வுகளும் அடுத்த நொடியே இருபத்துக்கும் கீழ் இறங்கிவிடுவது ஒரு விந்தையே!

    நீர்விழிராகத்தில் நாடகப் பாங்கு

    நாடகப் பாங்கில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதும் தொடர்ந்து வரும் மரபு சார்ந்த இலக்கிய உத்தியே! இந்த உத்தி பள்ளு இலக்கியத்தில் உச்சம் பெற்றது. வினாவிடையாக,

    காளையரின் கோமகன் உன்
    கவிதைகளை நாடும்இரு
    கண்கள் உனைத் தேடும் என்
    கால்களுமே ஆடும் உன்
    காந்தவிழிப் பார்வைகளோ
    காவியப்பண் பாடும்!

    தலைவியில்லாக் காவியங்கள்
    தமிழிலெங்கே உண்டு? உன்
    தயவதனைக் கொண்டு நான்
    தமிழ்க்கனியை உண்டு தினம்
    தங்கமென வைரமெனத்
    தாங்கிடம் பூச்செண்டு!

    கன்னித் தமிழ் நாட்டினில் நீ
    காளையிளங் கன்று
    தமிழ்க்காவியத்தில் நின்று
    என் கடிமனதை வென்றுதினம்
    களிப்புடனே ஏறிடுவாய்
    காதலெனும் குன்று!”

    இந்தப் பாட்டில் இழையும் ஓசை நயம் நம்மையும் அறியாமல் உள்ளத்தை ஈர்ப்பதை உணரலாம். தேமா புளிமா என்ற அளவுகோல்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட நிலையில் சந்த ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட புனையப்பட்ட இந்தக் காதல் பரிமாற்றத்தில் இளமை, இனிமை, அழகு, ஆழம் அனைத்தும் உள்ளன என்பதைப் பாடலை வாய்விட்டுப் படிப்பார் உணர முடியும்.

    செவிக்கினிமையான இந்த ஓசை ஒழுங்கு, தலைவியில்லாத காப்பியங்களாகிய சீவக சிந்தாமணி, பெரியுராணம் ஆகியவற்றையும் கவனிக்காது பாடியிருக்கும் தலைமகனுடைய அறியாமையையும் ரசிக்க வைத்திருக்கிறது. காரணம் தலைவியை உயர்த்திப் பாடி எல்லாக் காப்பியங்களுமே தலைவியைப் பெற்றுத்தான் அமைந்திருக்கிறது என்று படைத்து மொழிகிறான்! காதலில் ‘பேதைமை’ உள்ளம் உணர்வு சார்ந்தது!. அங்கே ஆராய்ச்சிக்கு வேலையில்லை. கால் மீட்டர் தலை முடியைக் கார் கூந்தல் என்று சொல்வதில்லையா அதுபோல! அப்போதுதான் காதல் கைகூடும்!. அதனால்தான் ‘மனத்தை’ என்று அத்துச் சாரியைப் பெற்றுச் சொல்ல வேண்டியதை அல்லது எழுத வேண்டியதை நூலாசிரியர் ‘மனதை’ என்று பாட வைக்கிறார்!. அத்துச் சாரியை மொழியைச் சரியாகச் சொல்வது. சாரியை இன்றி உச்சரிக்கப்படுவது தலைவியின் மனதுக்கு இதமாகும்! அருமை! தலைவியின் முந்தானையில் மயங்கிக் கிடப்பவன் தலைவன்! அவன் ஒரு மொழியாராய்ச்சி வித்தகன் அல்லன்! இலக்கியம் இதயத்திற்கு நெருக்கமான தருணம்!

    நீர்விழி ராகத்தில் கவிதைக் கட்டுமானம்

    கவிதை எழுதுவதாகச் சொல்லிக் கொள்ளும் தற்காலப் படைப்பாளர்களில் பலரும் மரபுக்கவிதை என்ற சொல்லை அடிக்கடிப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் யாப்பற்றவை புதுக்கவிதைகள் எனப்படுவதால் யாப்புடையவை மரபுக்கவிதைகளே என்னும் கருத்தியலை முன்னெடுப்பதாகத் தெரிகிறது. உண்மையில் இரண்டுமே இமாலயத் தவறுகள். யாப்பில் சொற்களை அடைத்துக் காட்டுவதாலேயே ஒன்று மரபுக் கவிதையாகிவிடாது. அதுபோல யாப்பில்லாததாலேயே ஒன்று புதுக்கவிதையாகிவிட முடியாது. மரபுசார்ந்த பொருண்மைகளை மரபு சார்ந்த வடிவங்களில் மரபுசார்ந்த சொற்களாகிய சீர்களைக் கொண்டு மரபுசார்ந்த உத்திகளால் உருவாக்கப்படுபவையே மரபுக்கவிதை. சமுதாயத்தில் நாளும் தோன்றும் வாழ்க்கைச் சிக்கல்களை அதன் பரிமாணத்திற்கும் பாதிக்கப்படுவோன் அளவுக்கும் ஏற்ப நீட்டி முழக்காமல் நறுக்குத் தெறித்தாற்போலப் பொருண்மைக்கு முன்னுரிமை தந்து சொல்வதுதான் புதுக்கவிதை. புதுக்கவிதை என்பதில் உள்ள புதுமை என்னும் அடை பாரதியின் ‘சொல்புதிது பொருள் புதிது…. நவகவிதை’ என்ற ஆளுகையின் பொருளையே தருமேயன்றி அது யாப்பினைக் குறிக்கும் என்பது மயக்கம் கலந்த அறியாமை. புதுக்கவிதை கூறுகளைப் புறநானூற்றில் தேடுவது இமயமலையில் இலந்தமரத்தைத் தேடுவது போல!

    ‘நீர்விழி ராகம்’ என்னும் இந்தக் கவிதை நூலில் பல்வகை யாப்புக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    • ‘கரிகால் சோழன் வாழ்க’ என்னுந் தலைப்பில் அமைந்த பாடலும் ‘முகில்விடு தூது’ என்ற பாடலும் முறையே நிலைமண்டில ஆசிரியப்பாவிலும் நேரிசையாசிரியப்பாவிலும் அமைந்துள்ளன.
    • நீர்விழி ராகம் என்னும் நூற்தலைப்புக்குரிய பாடல் அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என எண்ணிக் கொண்டு எழுதப்பட்டதாகத் தெரிகிறது.
    • ‘நாட்டார் பாடல்கள்’, ‘பேரண்டப் பெருவெளி’, ‘கல்வீச்சு’ முதலிய பாடல்கள் எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தங்களால் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆசிரியரின் யாப்பறிப் புலமை பற்றி ஐயமில்லை!. கற்பனை, உணர்ச்சி, கருத்து என்னும் கவிதைகளின் ஏனைய கூறுகளைச் சிறப்பிப்பதாக அமைவதே வடிவத்தின் பணி. வடிவம் ஒரு கவிதைத் தாங்கி! பாடல்களை எழுதி வெளியிடுவதற்குமுன் செப்பம் செய்வது இன்றியமையாக் கடன். ஒரு காப்பியம் பல யாப்புக்களைக் கொண்டிருக்கலாம். ஒரு பாடலே பல யாப்புக்களைக் கொண்டிருந்தால் கவிதை நொண்டியடிக்கும்.

    கூடியே கழித்த காலம்
    குறையாகப் போன தோடி
    பாடியே திரிந்த காலம்
    பாதியாய் போன தோடி?
    ஆடிநாம் ரசித்த காலம்
    அரைகுறை ஆகிப் போமோ?
    வாடியே போனேன் இன்று!
    வசந்தமே போன தேனோ?”

    காரணம் சொல்ல மறுத்தேஎன்
    கழுத்தையே அறுப்பதும் ஏனோ?
    நாரதர் எவரும் வந்தேமனக்
    குட்டையைக் குழப்பி னாரோ
    பாரினில் காதலுக் கென்றும்
    பெற்றோரே எதிரி யானாரோ?
    ஆரிடம் சொல்வேன் நானே?
    அறுக்குதே நெஞ்சம் தோழி!”

    இவ்விரண்டு பாடல்களும் நூற்தலைப்புக்கான பாடல் வரிகள். அறுசீர் விருத்தத்தில் அல்லது எண்சீர் விருத்தத்தில் தனிச்சொல்லைப் பெய்து எழுதுவது ஒரு நடைதான். பல பாடல்கள் உண்டு. ஆனால் ஒரே பாட்டில் இருவேறு நிலைப்பாடுகள் இருக்கலாமா என்பதுதான் ஐயம்? முதல்பாட்டில் விருத்த யாப்பு திருத்தமாக அமைந்திருக்க இரண்டாவது பாட்டில் முதல் இரண்டு வரிகள் தனிச்சொல் பெற்றதொரு செப்பமில்லாத யாப்பு. மூன்றாவது அடியில் முதல் அரையடி ‘காதலுக்’ என்னும் தவிர்க்கப்பட்ட கூவிளம் வாய்பாடு! இரண்டாவது அரையடியில் ‘ஆனாரோ’ என்னும் மூவசைச்சீர்! ஒரே குழப்பமாக இருக்கிறதா இல்லையா? இவற்றுக்கெல்லாம் ஒரே காரணம் பாடல்களை மீள்பார்வை செய்யாமையே! எண்சீர் விருத்தங்கள் பலவற்றிலும் இந்த நிலை நீடிக்கிறது என்பது தகவலுக்காகப் பதிவு செய்யப்படுகிறது!

    நிறைவுரை

    எதனையாவது எழுத வேண்டும் அதுவும் கவிதையில் எழுத வேண்டும் என்னும் உந்துதல் எல்லார்க்கும் வந்துவிடாது. அடுத்த நிலையில் போலி இலக்கியச் சுவைஞர்களால் பாராமுகத்திற்கு ஆளாகியிருக்கும் இன்றைய தமிழ்க்கவிதைகளை நூலாக வெளியிடுவதற்கு இட்லரின் துணிச்சலும் இந்திராகாந்தி துணிச்சலும் தேவை. தம்பி வேல்முருகன் அந்தத் துணிச்சலைப் பெற்றிருக்கிறார். பாவலர் என்பதனினும் மிகச் சிறந்த பண்பாளர். கூடித் தமிழ்வளர்க்கும் கொள்கையாளர். என் பார்வைக்கு வரும் ஆய்வேடுகளில் பெரும்பாலும் பாரதிக்குப்பின் வந்த படைப்புக்களிலிருந்து மேற்கோள் காட்டுவதை ஆய்வாளர்களுக்கு முன்மொழிகிறேன். முன்மொழிந்த நானே செயல்படுத்திக் காட்டிக்கொண்டு வருகிறேன். அத்தகைய பெருமைக்குரிய படைப்புக்களில் கவிஞரின் கன்னித் தொகுப்பான ‘நீர்விழி ராகமும்’ ஒன்று! படித்துச் சுவைத்தவன் பகிர்ந்திருக்கிறேன், நீங்களும் பகிர வேண்டாமா?

    (தொடரும்…)

    கவிஞர் வலங்கைமான் திரு.இராம வேல்முருகன் M.A.,M.Sc.,M.Lib.Sc.,M.Ed.,

    Share
  • கல்வி 4.0 முதல் கலந்துரையாடல் அழைப்பிதழ்

    கல்வி 4.0 முதல் கலந்துரையாடல் அழைப்பிதழ்

    அனைவருக்கும் வணக்கம்

    அண்மையில் நடந்த கல்வியியல் 2ம் மாநாட்டில்  இணைந்த அனைந்து நிறுவங்களுக்கும் அதை நடத்தி வரும் நல்லுள்ளங்களுக்கும் இடையில் ஒரு நல்லுறவும், புரிந்துணர்வுமேற்பட்டு உள்ளது. இந்த உறவை நீடிக்கச் செய்யும் வகையிலும், இந்நிறுனங்களின் கூட்டு முயற்சி, நிறுவனங்களைச் சார்ந்துள்ள மாணவர்களும், சமுதாயமும்  பலம் பெற்று   தங்களுடைய  சுயத்தையும் சுற்றுப்புறத்தையும் பாதுகாத்து, மாணவர்களுக்கு  சுய வேலைவாய்ப்பை எற்படுத்திக் கொள்ள உதவி செய்யும்.

    நான்காம் தொழிற்புரட்சி என்று சொல்லபடும் கணினிசார் பொருளாதாரம் 2030களில் கண்டிப்பாகத் தேவை என்று உலகப் பொருளாதார மையம் கூறியுள்ளது, இப்புரட்சியை நோக்கி நடை போடும் விதமாக “அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நீடித்து நிலைக்கக் கூடிய வளங்களையும் நாடுகளின் மீட்டெழுச்சித் திறனை ஊக்குவிக்கத் தகுந்த ஒரு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்” என்றக் குறிக்கோளோடு நிறுவனங்கள்,  சமுதாயப் பொறுப்புணர்ச்சியோடு தங்கள் நிறுவன செயல்பாடுகளை நடத்துவர் என்று  எதிர்பார்க்கப்படுகின்றது.

    நம் மாணவர்களின்  திறன் சார் கல்வியை  நாம் மேம்படுத்த உதவும் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை நம் மாணவர்களுக்கு கொண்டு வருவதற்கான செயல் திட்டம் அவசியம். எனவே கல்வி 4.0 என்ற தலைப்பில் கல்வியாளர்களிடையே   கலந்துரையாடல்கள்  ஏற்பாடு செய்யப்படுள்ளன.   இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் கல்வி மூலம் நமது கலாச்சாரம் மற்றும் மொழிக்கு  ஒரு நிலைத்தன்மையைக் கொண்டு வருவதே இக்கூட்டத்தின் தலையாய நோக்கமாகும்.

    இதன் முதல் கட்டமாக பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி, திண்டுக்கல், தமிழ்த்துறையும் தமிழ் அநிதம் (அமெரிக்கா)மும் இணைந்து 27.01.2022 இந்திய நேரம் மாலை 7 மணிக்கு, கல்வி 4.0 (இணையவழி) கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை நடத்துக்கின்றன.

    இக்கூட்டத்தில் தமிழ்ச் சான்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களைத் தர உள்ளார்கள் அனைவரும்  கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

    இணையவழி இணைப்பு: https://meet.google.com/ima-gzih-rws

    அனைவரும் வருக;  ஆக்கம் செப்புக

    Share
  • ஆண்டாள் பிரியதர்ஷினி நூல்கள் அறிமுக விழா

    ஆண்டாள் பிரியதர்ஷினி நூல்கள் அறிமுக விழா

    ஆண்டாள் பிரியதர்ஷினி நூல்கள் அறிமுக விழா – 28.01.2022

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 50

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 50

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் M.A., M.Phil., Ph.D.,
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி-  egowrisss@gmail.com

    திருவள்ளுவர் – உவமங்களின் பிரம்மா!

    முன்னுரை

    ‘தெய்வப் புலமை’ என்னுந் தொடர் தெய்வத்தான் அருளப்பட்ட புலமை எனப் பொருள்படுமாறு நின்ற குறிப்புத் தொடர். கற்றறிந்தார் படைப்பில் காணமுடியாத அனைத்துப் படைப்புக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குவது திருக்குறள். மானுட ஆற்றல் அறிவுக்குட்படாதபோது தெய்வ நம்பிக்கை வருவது இயல்பு! தமிழில் திருக்குறளின் சாரமில்லாத எந்தப் படைப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஒரே ஒரு கூறில் மட்டும் திருக்குறள் யாரும் தொடமுடியாத இடத்தில் நிற்கிறது. அது அதில் காணப்படும் உவமங்கள். அழகியல் சார்ந்த உவமங்களைக் கருத்தியல் விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டதே தமிழ்க்கவிதைகளின் உவமக் கோட்பாடு. அந்தக் கோட்பாட்டை முழுமையாக யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் இருவகை அறிவும் புலப்படுமாறு பின்பற்றியவர்  திருவள்ளுவர். இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை நாயனாரின் உவம ஆற்றலை ஆராய்வதாக அமைகிறது.

    திருக்குறள் உவமங்களின் தனித்தன்மை

    பொதுவாக ஒரு கருத்தினை விளக்க ஒன்றுக்கும் மேற்பட்ட உவமங்கள் பொருத்தமாகலாம். பெண்ணின் முகத்துக்கு நிலவையும் ஒப்பிடலாம், மலரையும் ஒப்பிடலாம். தீக்குள் விரலை வைத்தாலும் விரல் துடிக்கும். பாம்பு தீண்டினாலும் விரல் துடிதுடிக்கும். இரண்டனையும் உவமமாக்கலாம். எனவே பொருளும் உவமமும் தம்முள் இடமாற்றம் செய்து கொள்ளலாம். அதாவது பொருள் தனக்கான உவமத்தை மாற்றிக் கொள்ளலாம். உவமம் தான் விளக்க வேண்டிய பொருளை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் திருக்குறளில் இது இயலாது. குறட்பாக்களில் பயின்று வரும் உவமங்கள் அவை விளக்கும்  பொருண்மைகளைத் தவிர வேறு பொருண்மைகளை விளக்கப் பயன்படாது. குறட்பாவின் பொருண்மைகளை விளக்க திருவள்ளுவர் பயன்படுத்திய உவமங்களைத் தவிர வேறு உவமங்களைக் கொண்டும் விளக்க முடியாது. இது விளக்கும் ஒளியும் போலப் பிணைந்தது. பிரிக்க இயலாதது.

    அகரத்தை உவமமாக்கியது ஏன்?

    திருக்குறளின் முதற்பால் அறத்துப்பால். அதன் முதற்பகுதி பாயிரம். நான்கு அதிகாரங்களைக் கொண்ட இந்தப் பாயிரத்தின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. கடவுள் வாழ்த்தின் முதற்குறள்,

    “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு”

    என்பதாகும். இதற்குப் பரிமேலழகர் “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை” என்று எழுதுகிறார். உவமத்தையும் பொருளையும் தனித்தனிச் சுட்டி இரண்டையும் இணைக்கின்ற உவமச்சொல் இல்லாத நிலைக்கு ‘எடுத்துக்காட்டுவமை’ என்பது அனைவருக்கும் தெரிந்த இலக்கண உண்மையே!. ஆனால் இந்த எடுத்துக்காட்டுக்கான காரணங்களைப் பரிமேலழகர் ஆராய்கிறார். அகரத்தை ஏன் உவமமாக்க வேண்டும்? அகரத்திற்கு ஏன் தலைமைப் பதவி? அகரம் எப்படித் தலைமையாகும்? எழுத்துக்களுக்குத் தலையெழுத்தாய் இருப்பதால் அகரம் உவமமாயிற்று என்றால் எப்படித் தலைமையெழுத்தாய் இருக்கிறது? எல்லா எழுத்தொலிகளுக்குள்ளும் ஊடுருவி நிற்பதால் அது தலைமையாயிற்று. இந்த நுட்பங்களையெல்லாம் ‘இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை’ என்னும் ஒரே தொடரால் குறிக்கிறார் பரிமேலழகர். அந்தத் தலைமைப் பண்பை விளக்குகிறார். எழுத்துக்களுக்கு அகரமாகிய ஒலி தலைமை தாங்குகிறது. உலகத்திற்கு ஆதியாகிய பகவன் தலைமை தாங்குகிறார். பொழிப்பில் ‘முதல்’ என்று எழுதி விளக்கத்தில் ‘தலைமை’ என்று தாம் எழுதிய விளக்கத்திற்கான காரணத்தை அவரே பதிவு செய்கிறார்.  “அகரத்திற்குத் தலைமை விகாரத்தானேயன்றி நாத மாத்திரையாகிய இயல்பால் பிறத்தலானும்” என அகரத்தின் தலைமைக்கான காரணத்தைத் தொடர்ந்து விளக்குகிறார். திருவள்ளுவர் கூறும் ‘அகரத் தலைமை’ வரிவடிவத்தை நோக்கியதன்று. ஒலி வடிவத்தை நோக்கியது. ஒலியை ‘நாதம்’ என்பது மரபு. ‘அ’ என்னும் வரிவடிவம் முதல் எழுத்தாக எழுதப்படுவதால் அதனைத் தலையெழுத்தாக எண்ணிவிடக் கூடாதல்லவா? அதனாலேதான் அகரம் என்பது ஒலியைக் (நாதமாத்திரை) குறித்தது என்று எழுதுகிறார். “ஆதி பகவற்குத் தலைமை செயற்கை உணர்வானன்றி இயற்கை உணர்வானும் முற்றும் உணர்தலானும் கொள்க” என்று எழுதுகிறார். உவமத்தின் சிறப்பினை விளக்கிய பரிமேலழகர் பொருளின் தலைமைச் சிறப்பையும் அதற்கான காரணத்தையும் இந்தத் தொடரில் விளக்குகிறார்.

    கடவுளா? உலகமா?

    இந்தக் குறட்பாவின் கிடக்கை நிலைக்கான உரை மேலே சொல்லப்பட்டது. “எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன. இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது” என்பதே அந்நிலையில் பெறப்படும் பொருள். மேலெழுந்தவாரியாக நோக்கினால் ‘இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது’ என்னுந் தொடர் சரியாக அமைந்திருப்பதுபோல் தோன்றும். தோன்றினால் என்ன ஆகும்? உலகம் முதலில் தோன்றியதாகவும் அவ்வாறு முன்னர்த் தோன்றிய உலகத்திற்கு இறைவன் முதலாக இருக்கிறான் என்பதுபோல் ஆகும்? அப்படி ஆனால் என்ன தவறு? உலகம் முன்னதாகவும் இறைவன் பின்னதாகவும் ஆக்கப்படுவான்! இறைவன்தான் உலக உயிர்களைப் படைத்தவனேயன்றி உலக உயிர்கள் இறைவனைப் படைக்கவில்லை. இந்தக் கருத்து கிடக்கை நிலைப்பொருளில் கிட்டாது. கிட்டாதாயின் என்ன செய்ய வேண்டும்? “இறைவனைக் காணமுடியாது. ஆனால் அவன் படைத்த உலகத்தைக் காணலாம். எனவே கண்ணால் காணக்கூடிய உலகத்தைக் காட்டி “இதோ உலகம்! இந்த உலகம் உண்மையானால் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா? ஆமாம்! அவன்தான் இறைவன். எனவே உலகத்துக்கு முதன்மை இறைவன் எனத் திருவள்ளுவர் கூறியிருந்தாலும் இறைவனால் படைக்கப்பட்டதுதான் உலகம்! எனவே இறைவன் ஒருவன் உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்”. இந்த விளக்கங்களையெல்லாம் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.

    “காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின்மேல் வைத்துக் (திருவள்ளுவர்) கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதி பகவன் என்பது கருத்தாகக் கொள்க”

    உலகத்தை முன்னிறுத்தி இறைவனுடைய இருப்பினைத் குறள் உணர்த்தியது. பரிமேலழகரோ அதனை மாற்றி இறைவனை முன்னிறுத்தி அவனால் படைக்கப்பட்டதுதான் இவ்வுலகம்! எனவே இறைவனது உண்மையை உணர்க என்று விளக்கிக்காட்டுகிறார். காட்டவே அகரம் எழுத்துக்களுக்குத் தலைமை. ஆண்டவன் உலகத்திற்குத் தலைமை என்னும் நிரல் பொருள் புலப்படுவது காண்க.

    உவமை அணி, வேற்றுமை அணி – ஒரு விளக்கம்

    தமிழ்க்கவிதை கோட்பாடுகளில் உவமம் உண்டு. ஆனால் உவம அணி என்பது இல்லை. அது வடமொழி வழக்கு. சிங்காரம் செய்வதாலேயே செத்தது பிழைக்காது! ‘உவம அணி’ என்பது சிங்காரம். அவ்வளவுதான். ஆனால் உவமம் அத்தகையதன்று. ஒளியைப் பிரதிபலிக்கும் ஆடியைப் போன்றது அது. அதன் பணியே பொருளைப் புலப்படுத்துவதுதான். ‘உவமம்’ என்பது ஒப்பீடேயானாலும் அது பொருளுணர்த்துகிற பாங்கு பன்முகத் தன்மை கொண்டது. ‘அது போன்றது இது’ என்பதும் உவமம். அதனை விட இது சிறந்தது என்பதும் உவமமே! முன்னது ஒப்புப் பொருண்மை. பின்னது உறழ்ச்சிப் பொருண்மை. ஒப்பு இல்லாமல் உறழ்ச்சி கிடையாது. ஒப்பு சொன்னால் உவமம். உறழ்ந்து சொன்னால் வேற்றுமை. இந்த நுண்ணியம் இழையும் குறட்பாக்கள் பல. அவற்றுள் ஒன்றினை ஆராய்வதன்வழித் திருவள்ளுவர் எப்படி உவமங்களின் பிரம்மா ஆகிறார் என்பதை அறிய முடியும்.

    “மோப்பக் குழையும் அனிச்சமும்
    நோக்கக் குழையும் விருந்தும்”

    திருக்குறளில் ‘ஒன்று மற்றொன்றைவிடச் சிறந்தது, ஒன்று மற்றொன்றைவிடத் தாழ்ந்தது’ என்பன போன்ற பதிவுகள் வரும். ஆனால் அவை எப்படிச் சிறந்தது? எப்படித் தாழ்ந்தது? என்பதற்கான காரணத்தைத் திருவள்ளுவர் கூறமாட்டார். அவற்றிற்கான காரணங்களைக் கண்டறிவது கற்பார் கடன். அல்லது உரையாசிரியர் பணி. இது ஓர் உரைநெறி. இந்நெறியில் பரிமேலழகர் உரை தனித்தன்மை பெற்றது. “பெண்ணின் பெருந்தக்க யாவுள?” என்னும் திருவள்ளுவரின் வினாவிற்கு விடையிறுத்த பரிமேலழகர், “கற்புடையாள்போல் அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் யாவுள?” (54) என்றார் என எழுதுவதையும், “செல்லா இடத்துச் சினம் பயப்பது இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே! ஏனையது இம்மைக்கண் பழியும் மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீய பிற இல்லை என்றார்” (302) என எழுதுவதும் காண்க. இந்த வகையில் எதிர்பாராச் சூழலில் இல்லத்திற்கு வரும் விருந்தின் இயல்பு அனிச்சப்பூவினும் மென்மையானது என்பதைச் சொல்ல வருகிறார். திருக்குறள் அறத்துப்பாலில் ஒன்பதாவது அதிகாரத்தின் பத்தாவது இறுதிப்பாடலாக அமைந்தது,

    “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து” (90)

    என்னும் குறட்பாவாகும். இதற்கு,

    • அனிச்சம் மோப்பக் குழையும் – அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது
    • விருந்து முகந்திரிந்து நோக்கக் குழையும் – விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர் எனப் பரிமேலழகர் பொழிப்புரை எழுதியிருக்கிறார்.

    அதிகாரக் கருத்துப் பகுப்பு

    ஒவ்வொரு அதிகாரத்து உட்பொருளையும் பாகுபடுத்திக் கொள்ள பரிமேலழகர் பெரிதும் முயன்றிருக்கிறார். இந்தப் பகுப்புத்தான் திருக்குறளுக்கான புத்துரைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்குகின்ற உரைத்தளவாடங்கள் ஆகும்.

    1. விருந்தோம்பலின் சிறப்பு (1-2)
    2. விருந்தோம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் (3-5)
    3. விருந்தோம்புவார் மறுமைக்கண் எய்தும் பயன் (6)
    4. இருமைப் பயனுக்கான காரணம் (7)
    5. விருந்தோம்பாவழிப் படும் குற்றம் (8-9)
    6. விருந்தோம்புவார்க்கு வேண்டிய இன்முகம் (10)

    எனப் பகுத்துக்காட்டி, விருந்தோம்பலின் பன்முகப் பரிமாணத்தை எடுத்து விளக்கியதால்தான், ‘இத்தகைய சிறப்புக்கள் உடைய விருந்தினை ஓம்புவார்க்கு இருக்க வேண்டிய எளிய ஆனால் தலையாய இயல்பு இன்முகமே’ என்பதை அவரால் இறுதிக் குறட்பாவிற்கான விளக்கமாக்க முடிந்தது.

    பொழிப்புரை நுட்பம்

    • ‘அனிச்சம் குழையும்’ என உடன்பாட்டில் குறளிருக்க ‘மோந்துழியன்றிக் குழையாது’ என எதிர்மறை வாய்பாட்டில் உரைகாண்கிறார். அதிகாரம் விருந்தோம்பல். விருந்தினர் மனம் குழைவதே பரிமேலழகரின் கருத்தில் நின்றதாதலின் உடன்பாட்டு உவமத்தை எதிர்மறை வாய்பாட்டிலும் பொருளை உடன்பாட்டிலும் வெளிப்படுத்துகிறார். ‘(காண்டல் தொடுதல் அன்றி,) மோந்தால்தான் அனிச்சம் குழையும்., திரிபு நோக்கினாலேயே விருந்து குழையும்’ என்பது கருத்து.

    விளக்கம்

    ‘அனிச்சம்’ ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப்பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது.

    விளக்கவுரையில் கண்ட உரைநுட்பம்

    • திருக்குறளில் ‘அனிச்சம்’, ‘குவளை’ ஆகிய இரண்டு பூக்கள், முறையே மென்மைக்கும் கண்ணுக்கும் ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளன. ‘வாழி அனிச்சமே’(1111) (மென்மையால்), ‘அனிச்சப்பூ கால்களையாள்’(1115) (மென்மை கருதாது) ‘அனிச்சமும்’ (1120) (மென்மைக்காக எடுக்கப்பட்ட) என்னும் இடங்களிலெல்லாம் ‘அனிச்சம்’ என்னும் சொல் தலைமகன், தலைமகள் நலத்தைப் புகழ்வது ஆதலின் பூவை நேரடியாகக் குறித்தது. இக்குறட்பா ஆசிரியர் கூற்றாக அமைந்ததாதலின் ‘அனிச்சம்’ என்னும் மரத்தின் பெயர் மலருக்கு ஆகுபெயர் ஆயிற்று. அதாவது தலைவன் மரத்தைப் பற்றிப் பேசாது மலரைப் பற்றித்தான் பேசுவான் என்பது குறிப்பு. பாட்டில் ‘குழையும்’ என்ற வினையால் ‘அனிச்சம்’ ஆகுபெயராயிற்று, குழைவது மரத்திற்கின்மையின். தலைமகன் கூற்றில் அனிச்சம் ஆகுபெயராகாததற்கு அவன் கருத்தில் அனிச்சப்பூ மட்டுமே நின்றதனான் என்க.
    • மேம்போக்காக இந்தப் பாடலைக் கண்ணுறுவார் இதனை எடுத்துக்காட்டுவமமாகவே கொள்ளக்கூடும். மோந்தால் அனிச்சம் குழையும் (மாறுபட்ட) நோக்கினால் விருந்து குழையும்’ என்னும் பாட்டின் கிடக்கை நிலையும் அவ்வாறு கொள்ளுமாறு அமைந்திருப்பதும் உண்மை.
    • மென்மைக்கு எடுத்துக்காட்டு அனிச்சப்பூ. ‘பூ’ என்னும் சொல்லுக்கே ‘மென்மை’ என்பது பொருள். ‘பூந்தென்றல்’, ‘பூங்கோதை’, ‘பூங்கதவு’ என்பன காண்க. அனிச்சப்பூ என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. வேற்றுமைத் தொகையாகவும் கொள்ளலாம். அனிச்சம் பூக்களில் மென்மையானது. அதனினும் விருந்தினர்கள் மென்மையானவர்கள் என்றுதான் வள்ளுவர் சொல்ல வருகிறார். பாட்டில் அதற்கான காரணம் வெளிப்பட இல்லை. அக்காரணத்தை ‘மோப்ப’, ‘திரிந்து நோக்க’ என்னும் இருசொற்களைக் கொண்டு கண்டறிய முற்படுகிறார். முற்பட்டு ‘மோத்தல்’ என்பது ‘காண்டல், தொடுதல், மோத்தல் என்னும் நிரலில் மூன்றாவதாகவும் ‘நோக்குதல்’ என்பது அவற்றின் தொடக்க வினையாகவும் அமைந்திருப்பதை அறிகிறார். கண்ணால் காணுகிறபொழுது அனிச்சம் வாடாது. விரல்களினால் தீண்டுகிறபோதும் வாடாது. மூக்கினால் மோந்தால்தான் அது வாடும். தொலைவில் வரும் விருந்தினர்களைக் காண்பது ஒருவினை. அவர்களை இன்சொல்லால் வரவேற்பது அடுத்தவினை. அவர்களை அறுசுவை உண்டியளித்து ஓம்புதல் அவற்றின் தொடர்வினை. ஓம்புபவர் தொலைவில் வரும் விருந்தினர்களைத் தம் பார்வையால் மாறுபட்டு நோக்கினாலேயே மனம் வாடுவர். எனவே மூன்றாம் நிலையில் வாடும் அனிச்சப்பூவினும் முதல் நிலையிலேயே வாடி விடும் விருந்தினர் மென்மையானவர் என்னும் உண்மையைப் பதிவு செய்கிறார். இதனைச் “சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின் தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப்பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம்” என்னும் பகுதி உணர்த்துவது காண்க.

    பாம்போடு குடும்பம் நடத்தினால்

    தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித் தமிழ்ப் பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இலக்கண வரையறை மாணவர்க்குக் கற்பிப்பது. இது மட்டுமே ஆசிரியப் பெருமக்களின் நாட்கடன் ஆகிவிட்டது. தொடர்கல்வியோ அதனடிப்படையிலான தொடர் சிந்தனை வளர்ச்சியோ புதியன கண்டறியும் ஆர்வமோ இல்லாமற்போனது. அவற்றுள் ஒன்றுதான் இல்பொருள் உவமம் பற்றிய பேராசிரியப் பெருமக்களின் அரைகுறைப் புரிதல்!

    இல்பொருள் உவமம் என்றால் என்ன?

    “காணப்பட்ட இந்த உலகத்தில் இல்லாததொரு பொருளைப் படைப்பாளன் தன் மனக்கண்ணில் அல்லது கற்பனைக் கண்ணில் கண்டு அதனைத்தான் சொல்ல வரும் கருத்து விளக்கம் பெறுவதற்காக உவமமாக்கினால் அது இல்பொருள் உவமம் எனப்படும்.” இதுதான் பள்ளிக்கல்வித் துறையால் ஏற்பளிக்கப்பட்ட இல்பொருள் உவமமத்திற்கான பொருள் வரையறை. உண்மையில் அணியிலக்கணம் கூறும் தண்டியலங்காரத்தில் ‘இல்பொருள் உவமம்’ என்னும் அணியே சொல்லப்படவில்லை.

    ‘பூதம்’ என்றால் மண்ணுலகம். ஐம்பெரும் பூதம் என்னும் வழக்கு உண்மையாயினும் சிறப்பு நோக்கிப் பூமியைக் குறித்தது! அதற்கு எதிர்ச்சொல் ‘அபூதம்’. அதாவது மண்ணுலகில் இல்லாததொன்று. மண்ணுலகில் இல்லாததொரு பொருளை உவமமாக்கினால் அதற்கு ‘அபூத அணி’ என்று பெயர். இதற்காக எடுத்துக்காட்டப்பட்ட பாட்டு இப்படி அமைந்திருக்கிறது.

    ‘‘எல்லாக் கமலத்து எழிலும் திரண்டொன்றின்
    வில்லேர் புருவத்து வேல்நெடுங்கண் – நல்லீர்!
    முகம்போலும் அன்ன முறுவலித்தார் வாழும்
    அகம்போலும் எங்கள் அகம்!’’

    1. “வில்லேர் புருவத்து வேல்நெடுங்கண் – நல்லீர்!” என்பது முன்னிலை!.
    1. எல்லாக் கமலத்து எழிலும் திரண்டொன்றின் முகம் போலும் அன்ன முறுவல் என்பது இவ்வுலகில் இல்லாத உவமம்

    தண்டியலங்காரத்தில் அபூத உவமத்தையே இல்பொருள் உவமமாகச் சொல்கிறோம் என்பதைக் கூடத் தமிழ்ப் பேராசிரியர்கள் அறியமாட்டார்கள்.

    “இருகை யானையை ஒத்திருந்து என்
    கருவை யான் கண்டிலேன்”

    என்று மணிவாசகர் ‘இருகை யானை’ என்று இந்த உலகத்தில் இல்லாததைத் தனக்கு உவமமாக்கிக் கொள்கிறார்.

    “தனித்தனி முக்கனி பிழிந்து, வடித்தொன்றாய்க் கூட்டி,
    சர்க்கரையும் கற்கண்டின் பொடியும்மிகக் கலந்தே,
    தனித்தநறும் தேன்பெய்து, பசும்பாலும் தெங்கின்
    தனிப்பாலும் சேர்த்தொரு தீம்பருப்பிடியும் விரவி,
    இனித்தநறு நெய்யளைந்தே, இளஞ்சூட்டின் இறக்கி
    எடுத்த சுவைக்கட்டியினும் இனித்திடும் தெள்ளமுதே,
    அனித்தமறத் திருப்பொதுவில் விளங்கு நடத் தரசே,!
    அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே!!’’

    என்று இறைவனின் தரிசன இன்பத்தை, இருக்கின்ற பொருட்களைக் கொண்டு தாமே உருவாக்கிக் கொண்ட இல்லாததொரு பொருளை உவமமாக்குவார் வள்ளற்பெருமான். அடிகள் சொல்லுகின்ற உவமம் பல உவமப் பொருட்களின் கலவை என்பதைக் கருத்திருத்துதல் வேண்டும். இந்தப் பின்புலத்தில்தான் திருவள்ளுவர் எழுதிய,

    “உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
    பாம்போ டுடனுறைந் தற்று” (890)

    என்னும் உவமம் சிந்திக்கப்படுகிறது. பாம்புடன் ஒருவன் வாழ்வது என்பது இவ்வுலகில் இல்லாத ஒன்று. உட்பகை அளவால் சிறிதாயினும் வருகின்ற கேட்டினால் பெரிது. எனவே கண்ணோடாத உட்பகையைக் கொல்ல வேண்டும் என்பதுதான் கருத்து. இந்தக் கருத்தினை விளக்க வந்த திருவள்ளுவர், அதாவது மனப்பொருத்தம் இல்லாதவரோடு வாழ்வது கூடாது என்னும் பொருண்மையை விளக்க ஒரு குடிலுக்குள் பாம்போடு உடன் உறைவதை’ உவமமாக்கியிருக்கிறார்.

    வினை, பயன், மெய், உரு என்னும் நான்கின் அடிப்படையில்தான் உவமம் அமையும் என்னும் கருத்தியலைத் தாண்ட முடியாதவர்கள் இந்த உவமத்தின் பொருளாழத்தையும் பொருண்மையை விளக்கிக் காட்டும் நுண்ணியத்தையும் அறிதல் அருமையே! குறட்பாவில் ‘வாழ்க்கை’ என்பது தொழிற்பெயர். ‘உறைதல்’ என்பதும் தொழிற்பெயர். இவ்விரண்டனை மட்டும் நோக்கி இதனை வினையுவமை என்று எளிதாகக் கொண்டால் ஏற்படுகிற இலக்கிய அனுபவ இழப்பினை உணர்தல் வேண்டும். பாம்பு இருக்கிறது. குடிலும் இருக்கிறது. மனிதர்களும் இருக்கிறார்கள். இருக்கிற பொருட்களையெல்லாம் ஒன்றாக்கி இல்லாததோர் ஓர் அரிய உவமத்தை உருவாக்கம் செய்து மாபெரும் அரசநீதியையும் வாழ்வியல் உண்மையையும்  கூறியிருக்கிறார். உடம்பாடு இல்லாதவர் வாழ்க்கை எதில் போய் முடியும் என்பதை விளக்க இவ்வுலகில் ஓர் உவமத்தைக் கண்டறிய இயலாத நிலையில் தாமே ஒரு உவமத்தைப் படைத்துக் கொள்கிறார் திருவள்ளுவர்.

    புலித்தோல் போர்த்திய பசு

    ‘கள்ளம், கபடம்’ என்பன உள்ளத்து எதிர்மறை இயல்புகள். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது பழமொழி. பழமொழி உண்மையானால் இயல்பு வெளிப்பட வேண்டும். ஆனால் சில நேர்வுகளில் சிலர் தங்களது உள்ளத்து இயல்புகளைப் பொய்ச் சிரிப்பாலும் போலிச் சொற்பூச்சுக்களாலும் மறைத்து நல்லவர்கள் போல நடமாடுவார்கள். ‘நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே!’ என்பார் கண்ணதாசன். இவர்கள் உண்மையில் புலிக்குணம் கொண்டவர்கள். வேடமோ பசு. இவர்களைத்தான் உலகியலில் பசுத்தோல் போர்த்திய புலி என்பார்கள். இது உலகியல். ஆனால் திருவள்ளுவர் இதனை மாற்றுகிறார். அதாவது உலகியலையும் மாற்றுகிறார். பழமொழியையும் மாற்றுகிறார். ஏன் மாற்றுகிறார் என்றால் அவர் சொல்ல வந்த கருத்தியலுக்கு இந்த உலகியல் உவமம் பொருந்தாது என அறிகிறார். எனவே உவமத்தைப் பொருளுக்கேற்ப மாற்றிக் கொள்கிறார்.

    ‘வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
    புலியின் தோல் போர்த்துமேய்ந் தற்று’ (273)

    பெற்றம் புலித்தோலைப் போர்த்திச் சாது வேடமிடும் உலகில் புலி பெற்றத்தின் தோலைப் போர்த்திக் கொண்டு தீவிரவாதி வேடம் கட்டுவதைத்தான் உவமமாக்கியிருக்கிறார்.

    புல்லை மேய்வதற்குப் புலித்தோல் தேவையில்லை!

    பசு புல்லைத்தான் மேயும். அது விளைச்சலை மேய முற்படுகிறபோதுதான் துரத்தப்படும். அச்சமின்றி மக்களும் துரத்துவார்கள். இங்கே கதையே வேறு. பசு தனக்குரிய புல்லைத் தவிர்த்து விளைச்சலை மேய்கிறது. விளைச்சலை மேய்ந்தால் வயலுக்கு உரிமையானவன் விடுவானா? எனவே வேடத்தை மாற்றிக் கொள்கிறது. பசு வேடத்தை மாற்றிப் புலிவேடம் போட்டுக் கொள்கிறது. காரணம் அதற்குப் புல்லுக்குப் பதிலாக விளைச்சல் மேல் பேராசை. தனது பேராசையைத் தணித்துக் கொள்ள வேண்டுமானால் பிறருக்கு அச்சத்தைத் தருகின்ற ஒரு வேடம் தேவை. பிறருடைய அறியாமையும் தேவை. புலித்தோல் போர்த்தியிருப்பதால் அதனிடம் செல்ல அஞ்சுவார்கள். புலி புல்லை மேயாது என்னும் அறியாமையையும் பசு பயன்படுத்திக் கொள்ளும்.

    போலித் துறவிகள் சமுதாயத்தின் அறியாமையையும் அச்சத்தையும் பயன்படுத்திக் கொண்டு பிறர்க்குரிய மகளிரைத் துய்க்கும் கூடாவொழுக்கத்தை விளக்குவதற்காக வள்ளுவர் பயன்படுத்திய உவமம்தான் ‘புலித்தோல் போர்த்திய பசு’

    “வலியின் நிலைமையான்’ என்ற அடையானும் ‘மேய்ந்தற்று’ என்னுந் தொழிலுவமையானும் வல்லுருவத்தோடு மனவழிப்படுதல் என்பது பெற்றாம்.

    காவலர் கடியாமை புலி புல் தின்னாது என்பதனானும் அச்சத்தாலுமாம்.

    ஆகவே வல்லுருவம் கோடற்குப் பயன் அன்ன காரணங்களால் உலகத்தார் அயிராமை ஆயிற்று.

    இவ்வாறு தனக்குரிய இல்லாளையும் துறந்து வலியுமின்றிப் பிறர் அயிரா வல்லுருவமும் கொண்டு  நின்றவன் மனவழிப்படுதலாவது தன் மனம் ஓடிய வழியே ஓடி மறைந்து பிறர்க்குரிய மகளிரை விழைதலாம்.

    அவ்வாறாதல் பெற்றம் தனக்குரிய புல்லைவிட்டுப் பிறர்க்குரிய பைங்கூழை மேய்ந்தாற் போலும் என்னும் உவமையான் அறிக”

    புலி புல்லை மேயாது என்பது உண்மை. பசுத்தோலைப் போர்த்திக் கொண்டு புலி உலாவுதல் போல வஞ்சகர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.  ஆனால் பசுபோலத் தோன்றிக் கொண்டு புலிவேலை செய்யும் சில போலித் துறவிகளைச் சாடுகிற திருவள்ளுவர் இந்த அரிய உவமத்தைப் பயன்படுத்துகிறார். எண்ணிப் பார்க்க வேண்டும்! தான் சொல்ல வந்த  கருத்தியல் உலகியல்! அதற்கான உவமம் அவருக்குக் கிட்டாத நிலையில் ஒரு மரபுசார்ந்த பழமொழியை முற்றிலும் மாற்றிப் புதிய அதாவது இவ்வுலகில் இல்லாத உவமத்தைக் கொண்டு தன்னுடைய பொருண்மையை விளக்கிக்காட்டுகிறார். இந்த உவமம் மரபார்ந்த தமிழிலக்கியப் பரப்பு காணாதது. நினைத்துப் பார்க்க முடியாதது! இந்த உவமத்தைக் கொண்டு வேறு எந்தப் பொருண்மையையும் விளக்க முடியாது. போலித்துறவிகளின் தோலுரிக்க இந்த உவமத்தைத் தவிர வேறு எந்த உவமத்தையும் பயன்படுத்த முடியாது.

    அறியாத பிணத்தை அணைப்பது போல

    காதல் உணர்வுக்கும் உறவுக்கும் மலரின் மென்மையை உவமமாக்குவார் திருவள்ளுவர். மலரினும் மெல்லிது காமம்!. அதன் செவ்வித் தலைப்படுவர் சிலராக இருத்தலைக் கண்ட திருவள்ளுவர் அதற்கான காரணத்தை ஆய்வாராயினார். விலைமகளிரின் கூட்டமும் அங்கே கிட்டுவதாகக் கருதப்படும் போலி இன்பமுமே காரணம் என்பதைக் கண்டார். மலர் என்று காதலை உருவகப்படுத்தியவரும் அவரே! பிணத்தோடு உறவு கொள்வது என்று எடுத்துக்காட்டியவரும் அவரே! கவிதையில் முரண் என்பதன் உச்சி தொட்டவர் திருவள்ளுவர். திருக்குறள் பொருட்பால் ‘வரைவில் மகளிர்’ என்னும் அதிகாரத்தில் ஒரு குறட்பா உள்ளது. அது,

    “பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
    ஏதில் பிணந்தழீஇ அற்று’’.  (913)

    ‘மைவிழியார் மனை அகல்’ என்பது ஔவை வாக்கு. ஒருத்தனுடைய மனைவி அவனுடைய இல்லிலேயே இருப்பதால் ‘அகல்’ என்ற ஏவல் விலைமகளிரிடம் செல்லும் ஒழுக்கக்கேடனுக்கே என்பது பெறப்படும். ஒரு தவறைத் திறமை என்று கருதுகிற வரைக்கும் அது தொடரும். அது அருவெறுப்பு எனப் புரிந்து கொண்டால் விரைவில் முடிவுக்கு வரும். இது தத்துவவியல். இருநாடுகளுக்குள் நடைபெறும் போர்களை நாம் திறமை என்று நினைக்கிறவரை அது தொடர்ந்து நடக்கத்தான் செய்யும். ‘போர்’ என்பது மனிதகுலத்திற்கு எதிரானது. அது ‘அருவெறுப்பானது’. ‘அசிங்கமானது’ என்ற கருத்தியல் விதைத்து முளைக்குமானால் போர் முடிவுக்கு வரும் சாத்தியம் உண்டு. இந்த உளவியலைத்தான் திருவள்ளுவர் இந்தக் குறட்பாவில் உவமமாக முன்னெடுத்துப் பதிவு செய்கிறார்.

    உவமச் சிறப்பு

    கணவன், மனைவி தனியின்பம் காணுகிற அறை பற்றிப் பாவேந்தர் தம் குடும்ப விளக்கில் சித்திரிப்பார். இங்கே அது இருட்டறை. அங்கே உயிர்த்துடிப்பான அன்போடு கூடிய உறவான மனைவி. இங்கே உயிரிழந்த பிணம். அந்தப் பிணத்தின் பால்பகுப்பைக் கூடத் திருவள்ளுவர் கூறவில்லை. முன்பின் தெரியாத (ஏதில்) ஒன்றனின் பிணம். பிணம் உயர்திணையா? அஃறிணையா? என்பதும் அறியக்கூடவில்லை. பிணத்தை எனப் பிணம் செயப்படுபொருள் ஆகியிருப்பதால் ‘கிடப்பதைத் தழுவியது’ என்பது பெறப்படும். ‘தாரும் மாலையும் மயங்கித் தழுவுவது’ உயிர்களின் தழுவல்! அதனால் அது உயிர்தளிர்ப்பத் தீண்டல்! வரைவில் மகளிரைத் தழுவுவதால் கிட்டுகிறது எனக் கருதப்படும் போலியின்பத்தை அறியாத பிணத்தைத் தழுவுவதால் வருவதாகக் கருதப்படும் இன்பத்தையொத்தது என்பது வள்ளுவரின் கருத்து.

    (பொருட்கு முயங்கும் மகளிர், கருத்தும் செயலும் ஆராயாது சாதியும் பருவமும் ஒவ்வாதானை முயங்குங்கால், அவர் குறிப்புக் கூலிக்குப் பிணம் எடுப்பார் காணப்படாத ஓரிடத்தின்கண் இயைபில்லாததோர் பிணத்தை எடுக்குங்கால், அவர் குறிப்போடு ஒக்கும். எனவே, அகத்தால் அருவராநின்றும் பொருள்நோக்கிப் புறத்தால் தழுவுவர்; அதனை ஒழிக என்பதாம்.)

    வரைவின் மகளிரால் பெறப்படும் இன்பம் இழிவானது. உவமம் உயர்ந்த பொருளைச் சொல்ல வேண்டும் என்பது இலக்கிய விதி. இழிவினைச் சுட்ட வந்த திருவள்ளுவர், இழிவின் உச்சமாக இந்த இன்பத்தைச் சுட்டுகிறார்.

    உவமம் பற்றிய அறிஞர் கருத்துக்கள்

    இந்தக் குறளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த உவமம் பற்றித் தங்கள் கருத்துக்களைச் சான்றோர் சிலர், பதிவு செய்திருக்கிறார்கள். அவற்றை அறிந்து கொள்வது தமிழ்க் கவிதைகளின் உவமக்கோட்பாட்டை இன்னும் ஆழமாக உணர வழிகோலும்.

    மொழியியல் பேரறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் “இத்தகைய பிணந்தழுவும் வழக்கம் தமிழரல்லாத வேற்றினத்தாரிடையே ஆசிரியர் தம் காலத்தில் இருந்தது கண்டு, அதை உவமமாக அமைத்திருத்தல் வேண்டும்” என்று கருத்துரைக்கின்றார்.

    18-ஆம் நூற்றாண்டிற்கும் 19-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் (1792-1823) தென்னாட்டில் வாழ்ந்த பிரெஞ்சுக் கிறித்தவ சமயக்குரவராகிய அப்பர் தூபாயிசு, தம் தாய்மொழியில் எழுதிய ‘இந்துப் பழக்க வழக்கங்களும் சடங்குகளும்’ என்னும் நூலில் கீழ்வருமாறு வரைந்திருக்கிறார்.

    “இதே மக்களிடை, இனி, அருவருப்பானதும் வெறுப்புண்டு பண்ணுவதுமான ஒரு வழக்கத்தைக் கொண்ட நம்பூதிரி என்னும் ஒரு தனிக்குலமும் உள்ளது. இக்குலப்பெண்கள் வழக்கமாகப் பூப்படையுமுன் மணஞ்செய்து வைக்கப்படுகின்றனர். ஆயின், பூப்புக்குறிகள் வெளிப்படையாகத் தோன்றும் பருவத்தையடைந்த பெண் ஆடவனொடு கூடுமுன் இறக்க நேரின், அவள் சவவுடம்பைப் பேய்த்தன்மையான புணர்ச்சிக்குட்படுத்த வேண்டுமென்பது கண்டிப்பான குலமரபாம். இதன் பொருட்டு அப்பெண்ணின் பெற்றோர் அத்தகைய அருவருப்பான மணவகையை முற்றுவித்தற்கு இசையும் ஒரு வெங்கப்பயலைப் பணப்பரிசு கொடுத்து அமர்த்த வேண்டியுள்ளது. ஏனெனின், அம்மணம் முற்றுவிக்கப்பெறாவிடின், அக்குடும்பம் தன்மானத்தை இழந்துவிட்டதாகக் கருதிக்கொள்ளும்.” (மூன்றாம் பதிப்பு, பக்.17-19.)

    மேற்கண்ட அறிஞர் பெருமக்களின் கருத்துக்களையெல்லாம் நோக்கினால் திருவள்ளுவர் தாம் சொல்லும் கருத்து விளக்கத்திற்காக சமுதாய நிகழ்வுகளை உற்று நோக்கியும் உவமம் சொல்வார் என்றும் கருதலாம். காரணம் பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் என்பதை ‘இல்பொருள் உவமம்’ என்றும் கூறமுடியாது. இட்டுக்கட்டிய உவமம் என்றும் கூற முடியாது. இத்தகைய அருவெறுப்பான கற்பனை உறுதியாகத் திருவள்ளுவருக்குத் தோன்றியிருக்க முடியாது.

    உவமத்தின் நுண்ணியம் எதுவெனின் பொருளுக்காகத் தழுவுவார் வரைவின் மகளிர் என்பது பொருண்மை. பொருளுக்காகக் தழுவுவது ஆண் என்பது உவமம். இந்த உவமத்தை வேறு பொருண்மையை விளக்க பயன்படுத்த முடியாது. அந்தப் பொருண்மையை இந்த உவமம் அன்றி வேறு ஒரு உவமம் கொண்டு விளக்கவும் முடியாது.

    நிறைவுரை

    குறட்பாக்களில் ஒன்றிரண்டும் தெரியாது அவரைப் ‘பேராசான்’ என்று புகழ்வதிலோர் மகிமை இல்லை. திருக்குறள் என்னும் நீதி நூலை இலக்கியமாக்கியதில் அவர் பயன்படுத்திய உவமங்களுக்குப் பெரும்பங்கு உண்டு. இலக்கியங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் உவம நெறிகளுக்கும் திருக்குறளில் அது பயன்படுத்தப்பட்டிருக்கும் நெறிகளுக்கும் வேறுபாடுகள் உண்டு. காமத்துப்பாலில் திருவள்ளுவர் தன்னை மறைத்துக் கொண்டு ஏனைய அகத்திணை மாந்தர்களாக வடிவெடுத்துப் பேசும் உவமங்கள் தனித்த நோக்கிற்கும் ஆய்விற்கும் உரியன. திருவள்ளுவர் நேரடியாகச் சொன்னாலும் மறைமுகமாகச் சொன்னாலும் திருக்குறள் உவமங்களும் அவை விளக்க வந்த பொருண்மைகளும் தம்முள் பிணைந்தவை., பிரிக்கக் கூடாதவை, பிரிக்க இயலாதவை. திருக்குறளின் பிரம்மாவான திருவள்ளுவர் உவமங்களின் பிரம்மாவாகவும் காட்சியளிக்கிறார்!

     (நிறைவு)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 49

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 49

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான்செக்கர்ஸ்மகளிர்கல்லூரி, 
    விளார்புறவழிச்சாலை, 
    தஞ்சைமாவட்டம் – 613006.
    மின்னஞ்சல்முகவரி-  egowrisss@gmail.com

    வைரமுத்து உவமங்களில் மரபு மாற்றம்

    முன்னுரை

    நாணத்திற்கு நாணலை உவமிப்பது மரபு. ‘பிழிந்த புடவை’யை உவமிப்பது புதுமை. ‘நிலவென்னும் அரசியைச் சுற்றித் தோழிமார்கள்’ என வெண்ணிலவையும் விண்மீன்களையும் உவமிப்பது மரபு. உவாநாள் அன்று ‘விண்மீனைக் காவல் வைத்து வெண்ணிலவு தூங்குவது’ என்பது புதுமை. தொன்று தொட்டு வழங்கி வரும் அதே உவமத்தை அதே பொருண்மை விளக்கத்திற்காகப் பயன்படுத்துவதும் வேறொரு பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதும் உவமத்தில் மரபு சார்ந்த நிலை. புதிய பொருண்மைக்குப் புதிய உவமங்களைப் பயன்படுத்துவதும் பழைய உவமச் சாரத்தைப் புதிய பொருண்மை விளக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதும் புதுமை. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மரபுப்பாவலர்களான மகாகவி பாரதியாரும் அவருடைய நண்பர் பாவேந்தர் பாரதிதாசனாரும் முன்னோர்களை மதித்துப் போற்றினர். முன்னோர் இலக்கியங்களை ஆராதித்தனர். முன்னோர் படைப்பு நெறியைப் பின்பற்றினர். மரபு காப்பதில் தங்களையே ஒப்படைத்துக் கொண்ட அப்பெருமக்கள் தாங்கள் வாழ்ந்த சமுதாயச் சூழலுக்கு ஏற்ப அவர்கள் படைத்துக் காட்டிய புத்திலக்கியங்கள் மரபின் வேர்களிலிருந்து புறப்பட்டன. பாரதிதாசனுக்குப் பின்வந்த கவிஞர்களில் எண்ணிக்கையிலும் தரத்திலும் வியக்கத்தக்க உவமங்களைப் பயன்படுத்திக் காட்டியவர் வைரமுத்து ஆவார். அவருடைய ஒட்டுமொத்த படைப்புக்களிலிருந்து எடுக்கப்பட்ட மாற்றத்திற்காளாகிப் புதுமை தேக்கிய மரபுவமங்களில் சிலவற்றின் சிறப்புக்களை இந்தக் கட்டுரை முன்னெடுக்க முனைகிறது.

    உவமம் — உருவகம் ஒரு சுருக்க விளக்கம்

    உவமத்திலிருந்து உருவகம் என்பதே சிந்தனைப் பிழை இவையிரண்டும் தனித்தன்மை வாய்ந்த இருவேறு பார்வைகள். இருவேறு வெளிப்பாட்டு உத்திகள். உவமம் படைப்பாளனின் அறிவுத்திறத்தையும் ஒப்பீடு மற்றும் நினைவாற்றலையும் காட்டும். உருவகமோ அவனுடைய கவியுணர்ச்சியையும் அவன் கலையுணர்வையும் காட்டும். ‘தாமரை முகம்’ என்னும் உவமத்தொகை ‘முகத்தாமரை’ என்று மாறுவது இயற்பியல் மாற்றமன்று, வேதியல் மாற்றம். ‘தாமரை முகம்’ என்பதில் தாமரை முதலில் பார்க்கப்படும். முகம் அதற்குப் பின்னர் பார்க்கப்படும். பின்னர் நோக்கப்படும் முகத்துக்கு முன்னர் பார்த்த தாமரை பொருத்திக் காட்டப்படும். இதுதான் உவமக் கோட்பாடு. இந்தக்  கோட்பாட்டில் கால இடைவெளி உண்டு. ஆனால் முகத்தாமரை என்பதில் முகத்திலேயே தாமரையைக் காண்கிறான். அதாவது முகத்தைப் பார்க்கின்ற அந்த நேரத்திலேயே அதனைத் தாமரையாகவே காண்கிறான். கால இடைவெளி கிடையாது. நம்முடைய தமிழாசிரியர்களும் தமிழ்ப்பேராசிரியர்களும் இத்தகைய படைப்பாளுமையையும் படைப்பாளனின் கவியுள்ளத்தையும் உணராது “உவமத்தின் பண்புகளைப் பொருளின் மேல் ஏற்றிக் கூறுவதற்கு’ உருவகம் என்று பெயர் என்று கோனார் குறிப்பேட்டின் குறிப்புக்களைப் பிழையில்லாமல் படித்து முடிக்கிறார்கள். தாமரை முகம் என்பது படைப்பாளனின் ஒப்பீட்டு உணர்வு. கால இடைவெளி கொண்டது. முகத்தாமரை என்பது அவனுடைய கலையுணர்வு. முன்னது ஓரளவு அறிவு சார்ந்தது. பின்னது முழுமையும் கலைமனத்தைச் சார்ந்தது. ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிடுவது அறிவு. ஒன்றை மற்றொன்றாக நோக்குவது மனம். அறிவுக்கு அங்கே வேலையே இல்லை.

    உவமத்தொகை என்றால் என்ன?

    தொகைகள் எல்லாம் தொடர்மொழிகள். ஐவகைத் தொகைகளுள் உவமத்தொகை என்பதும் ஒன்று. இதனை ‘உவமைத்தொகை’ என்று உச்சரிப்பதில் நம்மவர்க்கு ஒரு கோடி இன்பம். ஆனால் ‘பாட்டன் தொல்காப்பியன்’ என்று பட்டிமன்றத்தில் முழங்குவார்கள். தொல்காப்பியத்தில் ‘உவமை’ என்ற சொல்லே கிடையாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். ‘மை’ என்னும் பண்பு விகுதி பெற்ற அந்தச் சொல் ‘உவமத்தின் தன்மை’ என்ற பொருளில் கையாளப் பெற்றிருக்கும் ஒரே நூற்பா ‘உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்’ (1229) என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

    இந்த உவமத்தொகைக்கு இலக்கண வரைறையை இப்படிச் சொல்வார்கள். ‘உவமத்தைத் தனியாகக் கூறிப், பொருளைத் தனியாகக் கூறி இரண்டையும் இணைக்கின்ற உவம உருபு மறைந்து வருமானால்  அது உவமத்தொகை’. அவர்கள் கருத்துப்படித் ‘தாமரை முகம்’ என்பது உவமத்தொகை. இடையில் உருபாகிய ஒருசொல் மட்டுமே மறைந்திருப்பதாகக் கருதுகிறார்கள். தாமரை போன்ற சிவந்த முகம் என்பதுதான் விரி என்பதும் அவர்களுக்குத் தெரியும். பொருள், உவமம், பொதுத்தன்மை, உவம உருபு என உவம விரியின் கூறுகள் நான்கானால் ஒன்று மட்டும் குறைவது எப்படி உவமத்தொகையாகும்? இதனைக் கேட்டால் கடைசி பெஞ்சுக்கு அனுப்பிவிடுவார்கள். தாமரை போன்ற முகம் என்பதில் பொதுத்தன்மை மறைகிறதா இல்லையா? ‘தாமரை முகம்’ என்பதில் ‘போன்ற’ என்னும் உருபும் ‘சிவந்த’ என்னும் பொதுத்தன்மையும் மறைகின்றனவா  இல்லையா?  இரண்டு கூறுகள் மறைந்து வருவதே தொகையாயிருக்க உவம உருபு மட்டும் மறைந்து வருவது உவமத்தொகையாவது யாங்ஙனம்?

    இந்தக் குழப்பம் எதனாலே என்றால் ‘உவமத் தொகை’ என்னும் தொடரில் ‘உவமம் என்பது உவம உருபை மட்டுமே குறிக்கிறது’ என்னும் இலக்கண மயக்கம். அது உண்மையே. ஏனைய நான்கு தொகைகளில் வேற்றுமை உருபும், பண்புருபும், உம்மையும், காலம் காட்டும் இடைநிலைகளும் மறைந்து வருவதாகக் கருதியது போலவே உவமத் தொகையிலும் ‘உவம உருபு மறையும்’ என்பது இவர்களது அனுமானம். இன்னொன்றும் மறைகிறதே என்பதைக் கவனிக்கத் தவறியது மறதி. இந்த அனுமானம் முற்றிலும் தவறென்று கூற முடியாது. ஆனால் படைப்பாளனின் கலைமனத்தைக் காண முடியாது தடுக்கும் இரும்புத் திரை இது என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஒப்புக்கொள்வதில்லை. அப்படி ஒப்புக் கொண்டால்தான் கலைமனத்தின் அழகு புலப்படும். கவிதையை ரசிக்க முடியும். இல்லாவிட்டால் ‘குற்றுகரப்பிழையை’ எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

    அப்படியானல் இதற்கு என்னதான் முடிவு? மிக எளிது!. இலக்கணப் பார்வையில் உவம உருபோ, பொதுத்தன்மையோ இரண்டுமோ மறைந்து வருவது உவமத் தொகை. இலக்கிய நோக்கில் உருவகம் என்பது பொருளில் உவமத்தைக் காண்பது. ‘அவள் முகத்தாமரையில் என் விழிவண்டுகள் மொய்த்தன!’ முடிந்தது கதை! மறைந்ததைப் பற்றி மறந்து இருப்பதை எண்ணுவதே இன்பம்! உணர்வு சார்ந்த கவிதைகளை அறிவு சார்ந்த இலக்கணத்தால் அளக்க அல்லது தரமதிப்பீடு செய்ய முற்படுகிறபோது எச்சரிக்கையும் கவனமும் மிக மிகத் தேவை!.

    கண்ணகியும் நடுவண் அரசும்

    பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு கோவலனுக்கு உணவு சமைத்துக் குமரி வாழையைின் குருத்தகம் விரித்து உணவு பரிமாறும் கண்ணகி, அவன் இலைக்கு நீர் தெளித்ததை இளங்கோவடிகள்,

    “மண்ணக மடந்தையை மயக்கொளிப்பனள் போல்
    தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவி”

    எனக் குறிக்கின்றார். இருந்த நிலையையும் எதிர்வரும் துன்பத்தையும் அறிந்து கொண்டு மண் மடந்தை மயங்கியதாகவும் இனம் பற்றிய இரக்கத்தால் மண்ணக மடந்தையின் மயக்கத்தைக் கண்ணகி நீர் தெளித்துத் தெளிவித்தாள் எனவும் உரையாசிரியர்கள் நயம் காண்பர். ‘நிலமடந்தைக்கு நீர் தெளித்ததைப் போல்’ என்னும் உவமம் முறையான தமிழ்க்கல்வியைப் பெற்றுள்ள கவிஞரையும் அறியாமல் அவரை ஆட்கொண்டதைத்,

    “தாமரைப் பூவில் உறங்கிக் கொண்டிருக்கும் சரஸ்வதியின்
    முகத்தில் தண்ணீர் தெளிப்பதாக இருக்கின்றன”

    என்னும் உவமத்தால் அறியமுடிகிறது. பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்குத் தேர்வு கிடையாது என்னும் நடுவண் அரசின் சேதி, உறங்கிய கலைமகளின் முகத்தில் தண்ணீர் தெளிப்பதைப் போல் இருந்தது என்னும் உவமம் இளங்கோவடிகளின் உவமத்தின் தாக்கமாக இருந்தாலும் இலக்கியம் வளம் பெறுமேயன்றித் தரம் குறையாது என்பது உண்மை. கண்ணகி மண்மகளின் மயக்கம் தீர்த்தது அன்று. மத்திய அரசு கலைமகளின் மயக்கம் தீர்த்தது இன்று!

    ஆலையிட்ட கரும்பான தலைவி

    ‘ஆலையிட்ட கரும்பு’ என்பது வதைபடும் எப்பொருளுக்கும் காட்டப்படும் மரபுவழி உவமையாகும். வறுமையில் வாடும் மக்கள், பிரிவால் வாடும் காதலர்கள், வர்க்கப் போராட்டத்தால் வாடும் தொழிலாளர்கள் என எல்லாருடைய துன்பத்திற்கும் காட்டப்படும் மரபுவழிப்பட்ட இந்த உவமையைத் தலைவனைப் பிரிந்த தலைவியின் கூற்றில் வைத்து,

    “ஆலையிலே சிக்குண்ட கரும்பாய் என்னை ஆக்கிவிட்டான்”

    எனக் கூறுவதைக் காணமுடிகிறது. தலைவனுடைய எண்ணங்களால் துன்பப்படும் தலைவியின் நிலையை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் இதே உவமையை விதவையான பழைய காதலியைச் சந்திக்கும் தலைவன் கூற்றிலும் வைத்துக்காட்டுகிறார்.

    “நெஞ்சமும் துடிதுடிக்க நிம்மதி எனை மறக்க
    அஞ்சன விழியாள் நெஞ்சம் ஆலையின் கரும்பாய் ஆக”

    எனத் தலைவன் கூறினாலும் அவனும் தலைவியின் நெஞ்சத்துத் துன்ப நிலைக்கே இந்த உவமையைப் பயன்படுத்துகிறான்.

    வைரமுத்து உவமைகளில் மரபு மாற்றம்

    மரபை உவம வகையால் அதன் ஆற்றலுணர்ந்து எத்தகைய மாற்றமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளும் கவிஞர் தற்காலச் சிந்தனைப் போக்குகளுக்கேற்பத் தேவையான மாற்றங்களைச் செய்து கொண்டு பயன்படுத்திக் கொள்வதையும் காணமுடிகிறது. எத்தகைய புதுமையானாலும் அது மரபென்னும் ஆணிவேரில் கிளைத்தெழும் என்பதே உண்மை. புதுமையான உவமைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு முன் ஏற்கனவே இருக்கின்ற உவமைகளில் செய்யக்கூடிய சிறிதளவு மாற்றமே பொருள் புலப்பாட்டுக்குப் போதுமானது என்னும் எண்ணமே இதற்குக் காரணம்.

    மரபு மாற்றம் ஏன்?

    நேற்றைய புதுமை இன்றைய மரபாகிவிடுகிறது. இன்றைய புதுமை நாளைய மரபாகிவிடும். புதுமை என்பது மரபை அழித்து விட்டுத் தோன்றுவதன்று. மரபினின்றும் கிளைத்து எழுவது. இலையுதிர் காலங்களில் உதிர்வதும் வசந்த காலங்களில் அவை தளிர்ப்பதுமான நிகழ்வுகள் தொடர்ந்து வந்தாலும் அடிமரத்தில் வேறுபாடு காணமுடியாததைப் போல மரபு ஓர் அடிமரமாக நின்றுகொண்டிருக்கிறது. மற்ற களங்களில் எவ்வாறிருப்பினும் இலக்கியத்தில் மரபும் புதுமையும் பிணைந்து வருவது தவிர்க்க முடியாது. மரபுவழியாகச் சொல்லப்பட்டு வரும் உவமைகளில் காலப் பொருத்தமின்மையும் சலிப்பும் தோன்றுகிற பொழுதும், கவிஞனின் உள்ளத்தெழுச்சி புதிய வேகத்தோடு செயல்படும் பொழுதும் உவமைகளில் மாற்றம் தேவைப்படுகிறது. இதனால் பழைய மரபு புறக்கணிப்புக்கு ஆளாகிறது என்பதைவிட, விரைந்து செல்லும் காலவோட்டத்தில் தனக்குரிய இடத்தைத் தக்கவைக்க புதுமையோடு அது போராட வேண்டியிருக்கிறது என்பதே பொருந்தும்.

    குந்தியிருக்கும் கொக்கும் நதிக்கரை மக்களும்

    வாய்ப்புக்களைத் தேடிக் களைப்பது ஒருவகை. வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வது மற்றொரு வகை. கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிடாமல் எச்சரிக்கையுடன் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுவது வேறொரு வகை. இவற்றுள் எந்த வகையாயினும் அவற்றில் வெற்றி பெற வேண்டுமானால் எச்சரிக்கை உணர்வு தேவை. இது தமிழ்க் கவிதைகளின் உள்ளடக்கங்களில் ஒன்று.

    “எய்தற் கரிய இயைந்தக்கால் அந்நிலையே
    செய்தற் கரிய செயல்”

    “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த இடத்து”

    என்பன போன்ற குறட்பாக்களில் இத்தகைய சிந்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதற்குத் திருவள்ளுவர், கொக்கின் ‘கூம்புதல்’, ‘குத்துதல்’ என்னும் மாறுபட்ட இருவகை செயல்பாடுகளை உவமமாகக் கூறியிருக்கும் நுட்பத்தை அறிந்து,

    “கொக்கொக்க’ என்றாராயினும் அது கூம்புமாறு போலக் கூம்புக என்றும், ‘குத்தொக்க’ என்றாராயினும் அது குத்துமாறு போலக் குத்துக என்றும் உரைக்கப்படும்” (இரண்டிடங்களிலும் பொருள் உவமத்தை வினையுவமமாகக் கருத வேண்டும் என்கிறார்)

    என விளக்கம் எழுதும் ஆசிரியர் பரிமேலழகரின் உரை, ‘உவமநுட்பம்’ நிறைந்தது. வினையை விளக்க வேறொரு வினையையே உவமமாக்கியிருக்கும் திருவள்ளுரின் நுட்பத்தை உணர்ந்து கொண்ட வைரமுத்து, உவமச் சூழலில் சிறிது மாற்றம் செய்து கருத்து விளக்கம் செய்கிறார். காலமறிதல், இடமறிதல், வலியறிதல் என்பனவெல்லாம் திருவள்ளுவர் காலத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். வருமுன்னர் காத்துக் கொள்ளாத வாழ்க்கை, நெருப்புக்கு முன்னால் வைக்கப்பட்ட பஞ்சுப் பொதியாகும் என்பதும் ஓர் எச்சரிக்கையே. ஆள்வோருக்குச் சொல்லப்பட்ட அறிவுரையில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமென்பதற்கே கொக்கின் இருவகைச் செயல்பாடுகளைத் திருவள்ளுவர் உவமமாக்கினார். காலமாற்றம் சிந்தனை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. மகனுக்குத் தாய் பாட வேண்டிய தாலாட்டைத் தந்தை பாடுகிறார். அத்தாலாட்டில் தன் மகன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதைப் புதுமையான உவமத்தின் வாயிலாகப் புரியவைப்பதைக் காணமுடிகிறது.

    “நதிக்கரை ஓரத்து
    நகரம்
    வெள்ளப் பெருக்கை
    எதிர்பார்த்து
    விழிப்போடு இருப்பது போல்’
    எப்போதும் விழிப்பாய் இரு.”

    ‘நதிக்கரை ஓரத்து நகரம்’ என்பதால் நதிக்கரை ஓரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களையே குறிக்கும். எச்சரிக்கையாக இருந்து செயல்படுவதற்குக் கொக்கின் செயல்பாடுகளை உவமிக்கும் மரபுவழிச் சிந்தனையில் சிறிது மாற்றம் செய்து, காலத்திற்கேற்ப நதிக்கரை ஓரத்து மக்களின் விழிப்புணர்வை உவமமாகக் காட்டுகிறார்.

    வள்ளுவர் கண்ட முதலையும் வைரமுத்து கண்ட முதலையும்

    பொருள் ஒன்று. அதனை நோக்கும் பார்வைகள் பல. நோக்கத்திற்கு ஏற்பப் பார்வைகள் மாறுபடலாம். இடமறிந்து செயல்பட வேண்டும் எனக் கருதிய வள்ளுவர் முதலையின் நீராற்றலை விதந்து சொல்லி, நிலத்தாற்றலை நினைவுபடுத்துகிறார்.

    “நெடும்புனலுள் வெல்லும் முதலை., அடும்புனலின்
    நீங்கின் அதனைப் பிற”

    செயல்படும் இடத்தின் தன்மைக்கேற்பப் பொருளின் வலிமை மாறுபடும் என்னும் கருத்து விளக்கத்திற்காகத் திருவள்ளுவர் பயன்படுத்திக் கொண்ட உவமையைக் கவிஞர் வைரமுத்து,

    “முதலைகள் போல் நாம் கண்கள் திறந்தே உறங்குவோம்”

    எனத் தற்காலத்தில் தேவைப்படும் சமுதாய விழிப்புணர்வை விளக்குதற்கு உவமமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். தூங்குங்கால் தூங்கி, விழிக்குங்கால் விழித்தெழ வேண்டும் என்பது மரபுவழிச் சிந்தனை. விழித்துக் கொண்டே உறங்க வேண்டும் என்பது புதிய சிந்தனை. கொக்கு மரபுவழிச் சிந்தனைக்கு உவமமாகியிருப்பது போலப் புதிய சிந்தனைக்கு முதலையின் உறக்கம் உவமமாகியிருக்கிறது. ‘இடத்திற்கேற்ப வலிமை மாறும்’ என்னும் கருத்தாக்கம் முதலையால் வெளிப்பட, ‘உறங்காத விழிப்புணர்வே இன்றைய தேவை’ என்னும் கருத்தாக்கம் முதலையின் விழிமூடா உறக்கத்தால் வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம். முயல், ஆமை, காக்கை, நரி முதலிய கதைகளையே கேட்டு வந்த காதுகளுக்கு இந்த முதலைக்கதை புதுமையாகவும் புதியதோர் உண்மை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது.

    ஆமையின் இடத்தில் சுருக்குப்பை

    பொறியடக்கத்துள் சிறந்தது நாவடக்கம். “யாகாவா ராயினும் நாகாக்க” என்பதே அவ்வடக்கத்தின் இன்றியமையாமை உணர்த்தும் இந்த நாவடக்கத்திற்குத் திருவள்ளுவர் ஒரே அதிகாரத்தில் மூன்று பாடல்களை ஒதுக்கியதிலிருந்தே அதன் எதிர்மறை விளைவுகளை உணரக்கூடும். பொதுவான அடக்கத்திற்கு ஆமையை உவமித்தது மரபாயினும், அம்மரபைச் சற்றே மாற்றிப் புதிய கண்ணோட்டத்துடன் வைரமுத்து படைத்துக் காட்டுகிறார்.

    “ஒரு கலைப்படைப்பு எப்படி மரபினுக்கு ஒத்திருக்க வேண்டும் என்றால் அது மரபினால் வழிகாட்டப்படுதல் போன்று மரபினை மாற்றுவதாகவும் அமைய வேண்டும்’. முந்தைய மொத்த ஒழுங்கு முறையோடு புதிய கலையாக்கம் ஒவ்வொன்றின் உறவுகள் – விகிதங்கள் – மதிப்புகள் என்பன மறு இசைப்பு (RE-ADJUSTMENT) பெறுகின்றன. இதுதான் பழமைக்கும் புதுமைக்கும் இடையில் இருக்க வேண்டிய இயைபு (Conformity) ஆகும்”.

    என்னும் கருத்தின் அடிப்படையில் மரபோடு பின்னிப் பிணைந்தும் அதனை மாற்றியும்,

    “நாவே
    இன்னும் கொஞ்சம் மௌனம் கா
    வாயில்லாச் சில்லறைகள் சத்தமிட்டாலும்
    வாய்திறந்தும் பேசாத சுருக்குப்பைபோல”

    எனத் தலையாய அடக்கமான நாவடக்கத்திற்குச் சுருக்குப்பையை வைரமுத்து உவமையாக்கியிருக்கிறார்.

    செக்கில் சிக்கிய எள்ளும் எள்ளில்லாமல் ஆடும் செக்கும்

    ‘ஆலையில் சிக்கிய கரும்பு’ என்பதைச் சற்றே மாற்றி ஆலைக்குப் பதிலாகச் செக்கையும் கரும்புக்குப் பதிலாக எள்ளையும் இட்டு,

    “இடைவெளி கழிந்த மார்பக இடுக்கில்
    செக்குண்ட எள்ளாய்ச் சிக்குண்டேன்”

    என்னும் காதலன் வாக்கில் செக்கில் ஆடும் எள்ளை உவமமாகப் பயன்படுத்தும் கவிஞரே, எள்ளில்லாமல் ஆடும் வெறும் செக்கையும் தம் கற்பனையால் கண்டு அதனைப் பொருத்தமான பொருள் விளக்கத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறார்.

    “எள்ளில்லாமல் சுற்றும் செக்கைப் போல்
    கண்ணீரில்லாமல் பெண்கள் அழ”

    என்னும் வரிகளில் ஊராருக்காக வைக்கும் ஒப்பாரியில் நீரில்லாமலே கண்கள் அழும் என்னும் பொருள் விளக்கத்திற்காக எள்ளில்லாமலேயே சுற்றும் செக்கை உவமமாக்கியிருக்கும் உவமம் நேர்த்திக்குரியது.

    “ஒன்றை அறிவிப்பதன்று கவிஞனின் நோக்கம்,
    ஒன்றை உணர்த்தி வைப்பதே கவிஞனின் தொழிலாகும்”

    ஊராருக்காக வைத்து அழும் ஒப்பாரியில் உயிர்த்துடிப்பு இருக்காது என்னும் கருத்து நிலையை,

    “அழுகிற மாதிரி அழுது வராத கண்ணீரத்
    தொடச்சுக்கிட்டா பட்டுச் சீலையெடுத்து”

    என வண்டி நாயக்கர் வைப்பாட்டியின் நிலைப்பாட்டைக் ‘கள்ளிக்காட்டு இதிகாசத்திலும்’ கவிஞர் குறிப்பிடுவது பொருத்தம் கருதிச் சுட்டப்படுகிறது.

    நிலையாமை கூறும் மட்பாண்டம்

    நிலையாமை உணர்த்துவது குறள்நெறி. அனைத்து நிலையாமையுள்ளும் உடலது நிலையாமை சித்தர்களால் வெகுவாகக் குறிக்கப்பட்டது.

    “ஊத்தைக் குழியிலே மண்ணை யெடுத்தே
    உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே
    வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
    வரவோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே”

    குயவன் படைத்த மட்பாண்டத்திற்கு அதனை ஒப்பிடுகிறார். சிறிது கை நழுவினாலும் விழுந்து நொறுங்கும் அதன் நிலைப்பாட்டையும் உடைந்த பிறகு ஒன்றிணைக்க முடியாத இயலாமையையும் ஒருங்கே புலப்படுத்தும் அந்த உவமையின் உள்ளடக்கத்தைப் புரிந்த கொண்ட மற்றொரு சித்தரும்,

                                   “நந்தவனத்தில் ஓர்ஆண்டி – அவன்
    நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
    கொண்டு வந்தானொரு தோண்டி – மெத்தக்
    கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி”

    சிதைந்த உடலுக்கு உடைந்த மட்பாண்டத்தை உவமமாக்கியிருக்கிறார்கள். எனவே உடைந்து போவதற்கு மரபுவழியாகப் பின்பற்றப்பட்டு வந்த உவமமாகிய மட்பாண்டத்தைப்,

    “போட்டுடைத்த மண்பாண்டம் போலே நாட்டில்
    பூந்தமிழர் சிதறி”

    என்னும் வரிகளில் சிதைந்து போன தமிழின ஒற்றுமைக்கு எழுத்து மாறாமல் உவமமாக்கிக் கொள்வதைக் காணமுடிகிறது. உவமையில் ‘மண்பாண்டம்’ என்று கூறப்பட்டிருப்பினும் அதற்கிணையாகத் தமிழர்களைச் சொல்லவரும் கவிஞர் மிகவும் கவனமாகப் ‘பூந்தமிழர்’ என்ற சொல்லைக் கையாள்கிறார். உடைந்து போனதில் மட்டுந்தான் தமிழர்களும் மட்பாண்டமும் ஒன்றே தவிர தன்மையினால் தமிழர்கள் மண்பாண்டங்கள் அல்லர் என்பது அவர் கருத்து. ‘மண்பாண்டம்’ என்னும் சொல்லைக் கொண்டு அதனை மண் ஓடாகக் கற்பனை செய்து கொள்ளும் கவிஞர்,

    “எப்படியோ பிரிவானோம், இடிவிழுந்த ஓடானோம்”

    எனத் தோழிகளின் உடைந்த உறவுக்கு அதனை உவமமாக்குவதையும் இலட்சிய உணர்வின்றி, ஒற்றுமை உணர்வின்றி இன்றைய இளைஞர்கள் சிதறிக் கிடப்பதற்கு,

    “லட்சத்தீவுகளாய்ச் சிதறிக் கிடக்கிறாய்.”

    என இலட்சத்தீவுகளை உவமையாக்குவதையும் அறியமுடிகிறது. ‘சிகரங்களில் கூடு கட்ட வேண்டிய இளைஞர்கள் பள்ளத்தாக்குகளில் பதுங்குவது’ கண்டு பதறும் கவிஞர் இன்றைய இளைஞர்கள் கொள்கைப் பிடிப்பில்லாமல் மனம்போன போக்கில் திரிந்தலைகிறார்கள் என்ற காட்சியைத்தான் ‘லட்சத்தீவுகளாய்’ என்ற தொடரால் சுட்டுகிறார்.

    வனிதையர் கூந்தலும் வாழைக்குருத்தும்      

    பெண்களின் கூந்தலுக்கு மணற்படிவுகளையும் மயில்தோகையையும் கார்மேகத்தையும் கடல் அலைகளையும் கருநாகத்தையும் உவமைகள் சொல்லிச் சலித்துப் போன கவிதையுலகில்,

    “ஓரணா நாணயத்தின் விளிம்பு போன்ற கூந்தல்”

    என 1957இல் கூந்தற்சுருளுக்கு அன்றைக்கிருந்த மஞ்சள் மற்றும் வெள்ளை ஓரணாக்களின் விளிம்புகளை உவமம் காட்டி, மரபிலே மாபெரும் புரட்சி செய்தவர் கலைஞர். கலைஞருக்குப் பின்னால் வந்த கவிஞர் நா.காமராசன்,

    “நீண்ட கருங்கூந்தல்
    ஆலமர விழுதுகள்போல்
    அவள் முதுகில்
    விழுவதும் ஒரு அழகு”

    எனக் கூந்தலின் நெடுமைக்கு ஆலமரத்து விழுதுகளை உவமித்திருப்பது ஒரு புதிய முயற்சி. மரபு சார்ந்தும் புதுமை தழுவியும் கவிதை யாப்பதைத் தமது படைப்புக் கொள்கையாகக் கொண்டிருக்கும் கவிஞர் வைரமுத்து,  கூந்தலுக்கு முற்றிலும் மாறுபட்ட உவமையைக் கூறியிருப்பதன் மூலம் புதியதொரு மரபுக்கு அடித்தளம் அமைப்பதில் தனது பங்கைச் செய்திருக்கிறார் எனலாம்.

    “வாழைக் குருத்துப்போல் சுருண்டிருக்கும் குழல்”

    என்பது கூந்தலுக்கு வைரமுத்து கண்ட உவமை. உவமைகள் கவிஞனின் கற்பனைத்திறனை மட்டுமன்றி அவனுடைய வாழ்க்கை அனுபவங்களையும் வெளிப்படுத்தி நிற்கும். வைரமுத்து வேளாண் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆதலாலும் விருந்தோம்பும் பண்புடையவராதலாலும் விருந்தினருக்கு உண்ணும் இலை பெரும்பாலும் நுனிக்குருத்தாகவே அமைய வேண்டுமென்பதாலும் இவ்வுவமை கவிஞரின் பட்டறிவு உவமை என்பதோடு கூந்தலை நேருக்குநேர் காட்சிப்படுத்தும் திறனும் கொண்டதாகும்.

    வைரமுத்து உவமைகளில் பண்புகளும் அருவங்களும்

    பண்புகளுக்கு இயக்கம் கற்பிப்பது தமிழுக்குப் புதியதன்று. ஆனால் தற்காலத்தில் புதியது. ‘உண்மை வெல்லும்’ என்பது உலக வழக்கு. ‘அழுக்காறென ஒரு பாவி’ எனப் பண்பைப் பண்பியாகச் சொல்லுவது அக்கால இலக்கிய மரபு. இராமன் காட்டுக்குச் செல்கிற காட்சியில்,

    “விதிமுன் செல்லத் தருமம் பின்னிரங்கி ஏக”

    என விதிக்கும் தருமத்திற்கும் முறையே செல்லுதலும், ஏகுதலுமாகிய வினைகளை இணைத்துப் பண்பிற்கு இயக்கம் கூறியவன் கம்பன். மகாகவி பாரதி,

    “தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்”

    எனக் கூறியிருப்பதும் அத்தகையதே. இவ்வாறு பண்புகளைச் செயல்திறன் உடைய பொருள்களாக்கிக் கூறுகின்ற மரபிலிருந்து, அவற்றை உவமமாகவும் அமைத்துக் கூறும் போக்கை வைரமுத்து கவிதைகளில் காணமுடிகிறது.

    மரம் – நட்டுவைத்த மௌனம்

    இயற்கையைப் பாடுவதிலும் அவற்றை உவமமாக அமைப்பதிலும் கவிஞருக்குள்ள திறன் முன்பே ஆராயப்பட்டுள்ளது. மரத்தின் அசைவையும் பாடி, அமைதியையும் பாடியிருக்கும் அவர் வானுயர்ந்து நிற்கும் மரத்தை,

    “நட்டு வைத்த மௌனங்களாய் மரங்கள்”

    என்கிறார். ‘மௌனத்தின் சப்தங்கள்’ என்னும் தனது நூலொன்றின் தலைப்பில் மௌனத்தைப் பேசவைத்த கவிஞர் இங்கே மௌனத்தை நட்டு வைத்திருப்பதை அறியலாம். ‘மௌனத்தை நட்டு வைத்ததுபோல’ என்னும் உவமை அருவப்பொருளை உவமையாக்கும் அவருடைய படைப்புத்திறனையும் சுட்டுவதாகலாம்.

    மனைவியின் உறக்கமும் தியாகத்தின் தூக்கமும்

    மானுட உறவுகளில் கலப்படமில்லாத உறவு தாயுறவு. அவ்வுறவுக்கு அடிப்படையாக இருப்பது மனைவி பந்தம். போலி மதிப்பீடுகளாலும் சில அவசரத் தீர்ப்புக்களாலும் ‘மனைவி’ என்னும் பந்தம் இன்று தன்னுடைய முழுப்பரிமாணத்தையும் தூய்மையையும் காக்க இயலாவிடினும், வைரமுத்தின் பார்வையில் மனைவி தியாகத்தின் உருவாகவே தெரிகிறாள்.

    “தியாகம் உறங்குவது போல் கண்தூங்கும் மனைவி”

    எனப் புத்தரின் மனைவி சுஜாதாவின் உறக்கத்திற்குத் தியாகத்தின் உறக்கத்தை உவமமாக்கியிருப்பதன் மூலம், குடும்பக் கட்டமைப்பில் மனைவியின் பெருமையைச் சரியான முறையில் பதிவு செய்திருப்பதாகக் கருதலாம்.

    தாசுமகாலில் உறங்கும் கம்பீரசோகம்

    தாசுமகாலைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகளுக்குள்ளும் சொல்லப்பட்ட கருத்துக்களுக்குள்ளும் கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘உருவமில்லா மரணத்துக்கு மரணமில்லா உருவம் தாசுமகால்’ (Deathless form to the formless Death) என்பது தாகூரின் கருத்து. மும்தாஜ் உட்பட எவருடைய மரணத்திற்கும் உருவமில்லை., ஆனால் எல்லாருடைய மரணத்திற்கும் என்றும் அழியாத நினைவுச் சின்னங்கள் இல்லை. அந்தப் பெருமை மும்தாஜின் மரணத்திற்கு மட்டுமே கிட்டியது. அதனையே தாகூர் மேற்கண்டவாறு குறித்திருக்கிறார். தாகூரின் பார்வையிலிருந்து கவிஞர் வைரமுத்தின் பார்வை முற்றிலும் வேறுபடாவிட்டாலும், சற்று விலகியிருந்து நோக்குவதை அவருடைய கவிதை வரிகள் காட்டுகின்றன.

    “தாஜ்மகாலில் ஒரு கம்பீரசோகம் உறங்குவது மாதிரி”

    என்னும் கவிதை வரிகளில் தாசுமகாலின் தோற்றத்தை உவமமாக்கியுரைப்பதைக் காணமுடிகிறது. அழகியல் சார்ந்த தாசுமகாலின் தோற்றம், கவிஞருக்குத் தமிழ்ச்சிறுவர்களின் துடைக்க முடியாத சோகத்தை நினைவுபடுத்தியிருக்கிறது. தீபாவளிப் பண்டிகை ஒளி வெள்ளத்திற்கு நடுவே கொண்டாடப்படும். ஆனால் அவ்வொளியைக் கொடுக்கும் பட்டாசுகளையும் வெடிகளையும் சிவகாசியில் தயாரிக்கும் சிறுவர்களின் வேதனை மறக்கப்படுகிறது. அச்சிறுவர்களின் சோகத்தைத் தீபாவளியின் ஒளிவெள்ளம் மறைத்துவிடுகிறது. தாசுமகால் உருவாவதற்காகப் பாடுபட்ட தொழிலாளர்களின் ஓலத்தைத் தாசுமகாலின் பளிங்கொளி மறைத்துவிடுகிறது. உருவாக்கிய தொழிலாளர்களின் ‘சோகம் உறங்குகிறது’ என்னும் உவமம் அருவப்பொருள்களை உவமமாகக் கையாளும் வைரமுத்தின் கவித்திறனுக்கு மேலும் ஒரு சான்றாகலாம்.

    வெறுங்கலத்தில் ஊற்றி வைத்த நிசப்தம்

    மக்கள் அமைதியாகத் தூங்கினார்கள் என்பதைக் கவிஞர்கள் தங்கள் கற்பனை வளத்திற்கேற்பப் புனைந்துரைப்பதுண்டு. பாவேந்தர் பாரதிதாசன்,

    “சோலை உதிர் பூ அன்ன மக்கள் துயில் கிடக்கும் போதில்.”

    எனச் சோலையில் கிடக்கும் அமைதியான பூக்களைத் தூங்கிக் கிடக்கும் மக்களுக்கு உவமையாக்குவார். தூக்கத்தின் அமைதி இவ்வாறு இருந்ததெனின், யாருமில்லா முதியவரின் வீட்டில் நிலவும் அமைதியைக் குறிக்கவரும் கவிஞர்,

    “வெறுமையின் கலத்தில்
    நிசப்தம் ஊற்றி வைத்தது போல் வீடு”

    எனக் குறித்திருப்பதைக் காணமுடிகிறது. ‘வெறுமையான கலத்தில் நிசப்தத்தை ஊற்றி வைத்தாற்போலும்’ என அருவப் பொருள்களாகிய நிசப்தத்தைத் திரவப் பொருளாகக் கண்டு உவமிக்கும் கவிஞரின் திறனையும் காணமுடிகிறது.

    உண்மைக்கு எதற்கு ஒப்பனை?

    உவமத்தைக் கையாளுகிறபோது அதன் வெளிப்பாட்டு உத்திகள் ஒரேவகையாக இருப்பதில்லை. இருத்தல் வேண்டும் என்னும் விதிமுறையும் இல்லை. கருத்து விளக்கத்திற்காகவும் பொருள் புலப்பாட்டுக்காகவும் பயன்படுத்தப்படுகிற உவமங்கள் பல நிலைகளில் வெளிப்படும். அவற்றுள் வினா வடிவமும் ஒன்று. சான்றாகப்,

    “பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல்?”

    என்பது திருக்குறளில் வினா வடிவில் அமைந்த உவமம். கவிச்சக்கரவர்த்தி கம்பன்,

    “கனிவரும் காலத்து ஐய! பூக்கொய்யக் கருதலாமோ?”

    என உரைப்பதும் அத்ததையதே. மகாகவி பாரதி,

                                                   “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
    கைகொட்டிச் சிரியாரோ?”

    என வினவுவதும் உவமையின் ஒருவகை வெளிப்பாடே. இவர்களின் மரபில் வந்து,

    “காரிருளால் சூரியன் தான் மறைவதுண்டோ?
    கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?”

    என வினவும் பாவேந்தரின் உவமங்கள் வினாக்கள் வடிவில் அமைந்தவையே. உத்தியில் மரபினைப் பின்பற்றும் வைரமுத்து,

    “உண்மைக்கு எதற்கு ஒப்பனை?”

    எனப் பண்பாகிய அருவத்தை உருவமாகக் கொண்டு உவமமாக்கியிருக்கிறார். காசியில் தன் புற ஆசாரத்தை உதறித் தள்ளிய பாரதியை அவருடைய மாமன் பாராட்டுகிறார். ‘அக உணர்வைப் புறப்பூச்சுக்களால் அளக்க இயலாதது போலப்’ பூணூலையும் குடுமியையும் மட்டும் வைத்துக்கொண்டு உண்மையான பிராமணனை அடையாளம் காணமுடியாது’ என்னும் கருத்து விளக்கத்திற்காக இந்த உவமையைக் கவிஞர் பயன்படுத்தியிருக்கிறார்.

    தர்மம்போல் காத்திருந்த தமிழ்ச்சீதை

    அதர்மத்தைத் தர்மம் வெல்லும் என்பது வழக்கு. ‘தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்’ என்பது பாரதி வாக்கு. ஆனால் அறமகளான சீதை அசோகவனத்தில் தவமிருந்த காட்சி தருமமே சிறையிருந்ததாக வைரமுத்து கண்களுக்குப் புலப்பட்டுள்ளது. சீதையை இராமனுடைய மனைவியாகக் காணாமல் அறமாக உவமித்துத்,

    “தர்மம்போல் அன்றோ எங்கள் தமிழ்ச்சீதை காத்திருந்தாள்”

    எனக் கூறியிருப்பதைக் காணமுடிகிறது. தர்மம் தனக்குரிய காலத்தை எண்ணிக் காத்திருப்பது போல் சீதை காத்திருந்தாள் என்பதே உவம விளக்கம் ஆயினும் தர்மம் எப்பொழுதும் சோதனைக்கு ஆளாகும் என்பதும் இரட்டுற மொழியப்பட்டிருப்பது உவமத்தின் வன்மையைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.  மரபை அப்படியே பின்பற்றுவதோடு காலச் சூழலுக்கேற்பவும் கருத்து நிலைக்கேற்பவும் சற்று மாற்றியும் உவமங்களைப் பயன்படுத்தும் கவித்திறன் வைரமுத்துக்குக் கைவரப்பெற்றதே! இதனை இந்தக் கட்டுரையில் மேலே காட்டப்பட்ட சில சான்றுகள் கொண்டு அறியலாம்.!

    நிறைவுரை

    பாரதிதாசனுக்குப் பிறகு எண்ணிக்கையாலும் தரத்தாலும் அழகியல் குறையாமலும் கவிதையில் உவமங்களைப் பயன்படுத்தியவர் சிலரே!. சுரதா, அப்துல் ரகுமான் என்னும் இவர்களைத் தொடர்ந்து இந்தப் பயணத்தைத் தொடர்ந்தவர் வைரமுத்து என்பது கட்டுரையாளர் கருத்து. நுண்ணியத்தோடு கூடிய உவமங்களைச் சொன்னதில் இவர்கள் முன்னிற்கிறார்கள்!. பொரியலுக்குப் ‘பூனைக்கண்ணை’ உவமமாக்கியவர் பாவேந்தர். கவிதையின் தடையில்லா இயல்பு நடைக்கு வாழைத்தண்டை உவமமாக்கியவர் சுரதா! வாழ்க்கையில் பின்னோக்கிச் செல்பவனுக்குக் ‘கயிறு திரிப்பவனை’ உவமமாக்கியவர் அப்துல் ரகுமான்! அவர்களைப்  போல அரிய, அழகியலும் ஆழமும் குறையாத உவமங்களை, மரபைப் பின்பற்றுதல், மரபினைச் சற்றே மாற்றுதல், புதிய மரபிற்கு அடிக்கல் நாட்டுதல் என்னும் பல்லாற்றானும் பயன்படுத்தியிருப்பதன்வழி, வைரமுத்தின் படைப்புக்கள் ஓர் உவமக்காட்சிச் சாலையாகவே காட்சியளிக்கிறது!.

    (இந்தத் தொடர் அடுத்த கட்டுரையோடு நிறைவுறும்)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 10

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 10

    முனைவர் ச.சுப்பிரமணியன்                  

    நூல் மதிப்பீடு

    முன்னுரை

    முதல் மரியாதை’ படத்தைப் பற்றிக் கவிஞர் வைரமுத்து கூறுகையில் ‘தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு நந்தவனத்தற்குள் நடந்துபோன திருப்தி எனக்கு’ என்று நந்தவனத்தில் நடைபயின்று அனுபவித்த இன்பத்தை  உவமமாக்கிப் பார்த்துக் களித்த படத்தைப் பொருளாக்குவார். நான் அந்த நந்தவனத்தையே பொருளாக்குகிறேன். வைரமுத்துக்கு நந்தவனமாக இருந்தது கவிஞர் அந்தோணிசாமிக்குச் சோலையாகியிருக்கிறது. நந்தவனம் வடநூல் வழக்கு. சோலை தமிழ்வழக்கு. பழமுதிர்ச்சோலை, திருமாலிருஞ்சோலை, திருவளர்சோலை, என்பன போல!  படத்தின் பன்முகச் சுவையை அனுபவித்த வைரமுத்து பல்வகை தருக்கள நிரம்பிய சோலை நிழலின் குளிர்சசியோடு ஒப்பிட்டார்.  கவிதைப் பூக்கள் பூத்திருக்கும் இந்தச் சோலைக்கு இதற்கு முந்தைய கட்டுரையின் பொருளான கவிதை ஊருணியைத்தான் உவமமாக்க வேண்டியிருக்கும். ‘கவிதை ஊருணி’ என்னும் நூல் தணிக்கையாளர் திரு தணடபாணி அவர்களால்  எழுதப்பட்டது எனின், தமிழக்கவிதைகளால் நிரம்பியிருக்கும் இந்த நூல் ஆங்கிலப் பேராசிரியர் ஒருவரால் எழுதப்பட்டதாகும். சுவையுணர்விலும் திறனாய்விலும் எந்த நிலையிலும் சமரசம் செய்துகொள்வதை விரும்பாத நான் இந்த நூலின் கவிதைகளால் கவரப்பட்ட பாங்கினை இந்தக் கட்டுரை வழியாகச் சுருக்கமாக பந்தி வைக்க முயல்கிறேன்!.

    தமிழ் இலக்கியமும் பிறதுறை அன்பர்களும்

    இலக்கியப் புலமை என்பது வேறு இலக்கிய ஆர்வம் என்பது வேறு. இவையிரண்டும் வேறுபட்டனவேயன்றி முரண்பட்டவை அல்ல. ஒரு மொழியில் புலமை என்பது அம்மொழிச் செவ்விலக்கியங்களில் ஆழங்கால்படுவதும் இலக்கணத்தில் மீயுயர் புலமை பெறுவதுமாகும். வாகீச கலாநிதி, அறிஞர் மு.வ. முதலியோர் இந்த நிரலில் வருவர். இலக்கிய ஆர்வம் காரணமாகத் தமிழின் பல்வகை இலக்கியங்களைத் தாமே கற்று அவற்றின் நுண்ணியம் தேர்ந்து சுவைத்துப் பிறருக்கும் பரிமாறுபவர்கள் சிலர். சிலம்புச் செல்வர், கலைஞர், ஜீவா கண்ணதாசன், வாலி  முதலியோர் ,இந்த நிரலில் அடங்குவர். இவர்களுடைய தமிழார்வமும் உணர்ச்சியும் புலமையினும் சிறந்தது. இந்தக் குழுவில் பிறதுறை அன்பர்களும் பிறமொழிப் பேராசிரியர்களும் சில நேர்வுகளில் ஒளிர்வதுண்டு. தூத்துக்குடி பேராசிரியர் அ.சீனிவாசராகவன், மதுரை  எஸ்.இராமகிருஷ்ணன் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை முன்னாள்  தலைவர் பேராசிரியர் கா. செல்லப்பன் முதலியோர் .இதில் வருவர். கா.நமசிவாய முதலியார், ஆய்வறிஞர் வையாபுரிபிள்ளை, பல்கலைச்செல்வர் ;தெ.பொமீ முதலிய அறிஞர்கள் வழக்கறிஞராய் இருந்து தமிழ்வளர்த்த செம்மல்கள். அந்த நிரலில் வந்திருப்பவர்தான் நல்லாசிரியர் திரு. அந்தோணிசாமி அவர்கள். ஆங்கிலத்தில் முதுகலைப் படடம் பெற்று அத்துறை ஆசிரியராகப் பணியாற்றித் தமிழில் கவிதை யாக்கும் அளவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    படைப்பாளரும் படைப்பும்

    ஆங்கிலத்தில் ஒன்றும் தெரியாமல் முற்றும் கற்றவர்போல் போலித் தகுதியைத் தாமே கற்பித்துக் கொள்பவர் ஒருபுறம் தமிழில் பட்டம் பெற்றிருந்தும் ‘எனக்கு ‘ஆங்கிலத்தைப்போல் தமிழ் வராது’ என்று தம்மையே ஏமாற்றிக் கொள்ளும் இரண்டுங்கெட்டான்கள் இன்னொரு புறம்! சுருங்கச் சொன்னால் ஆங்கிலத்தை அறிந்தாலேயே ஆண்டவனை அறிந்தது போன்ற மயக்கம் நிலவுகிற ஒரு போலிச் சமுதாயக் கட்டமைப்பு இது. இந்தக் கட்டமைப்பில் ஆங்கிலத்தை முறையாகக் கற்று அத்துறையில் கல்விப் பணியாற்றிவரும் ஆசிரியர் ஒருவர் தமிழைப் படிப்பது என்பது முதல் நிலை! அதில் உரைநடை இலக்கியங்களைப் படைப்பது இரண்டாவது நிலை! கவிதைகளைப் படித்துப் புரிநது கொள்வது மூன்றாவது நிலை! அதில் கவிதை படைப்பது நான்காவது நிலை! ஆங்கில ஆசிரியர் திரு அந்தோணிசாமி அந்த நிலையை அடைந்திருக்கிறார்! நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்!  சமுதாயத்திற்கு ஏதாவது சொல்ல வேண்டுன் என்ற அவர்தம் துடிப்பைத் தாமறிந்துணர்ந்த ஆங்கிலத்தில் வெளிப்படுத்தாமல் தாய்மொழி தமிழில் வெளிப்படுத்தயிருப்பதே ‘கவிதைச் சோலை’ பிறரை ஈரக்கின்ற தலையாய காரணியாக அமைந்துவிடுகிறது.

    சான்றோர்களை மதிக்கின்ற மரபு!  

    பணிவும் இன்சொல்லும் தனிமனிதனுக்கே பெருமை தருவதெனின் கவிஞனுக்குச் சொல்ல வேண்டியதில்லை. நல்ல மனிதனாக இல்லாத எவனும் நல்ல கவிஞனாக ஒளிர இயலாது.. கள்ளமில்லாத வெள்ளை உள்ளமே கண்ணதாசனின கவிதை மூலதனம். முரண்பட்ட தத்துவங்களோடு அவர் உறவு வைத்துக் கொண்டாடினார்.  எந்தச் சூழலில் எந்தக் கொள்கையைக் கடைப்பிடித்தாரோ அந்த நேரத்தில் அந்தக் கொள்கைக்கு நம்பிக்கையானவராக அவர் இருந்தார். அந்த உள்ளம் தன்னல மறுப்புக்கு வழிகாட்டும். காட்டவே அனைவரையும் மதிக்கச் சொல்லும். கவிஞர் அந்தோணிசாமி தன்னைச் சூழ்ந்திருப்பவர்களையும் தன் சமுதாய முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட தலைவர்களையும் பாடி மகிழ்கிறார். சுருங்கச் சொன்னால் பாடாண் திணை பாடாத கவிஞனை நாம் எளிதில் எடைபோட்டு விடலாம்.

    அந்தோணிசாமி பார்வையில் பெரியார்

    பெரியாரின் போராட்டக்களம் உலகளவில் சற்று வேறுபட்டது. மககளால் பல்லாயிரம் ஆண்டுகளாக ஒப்புக்கொள்ளப்பட்டுப் பின்பற்றப்பட்டு வந்த வேர் பிடித்த மரபுகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த பெருமை அவருக்கு உண்டு. அந்த விசாரணைக் கூண்டில் குற்றம் சாட்டப்பட்டவற்றுள் சாதியமும் ஒன்று

    “சாதிவெறி பரப்பியதால் சாதித்த கூட்டத்தில்
    சாதியத்தை வேரறுத்துச சமதர்மம் படைத்திடவே
    பாதித்த மக்களிடம் பாசமுடன பகுத்தறிவைப
    வதத்தால் வளர்த்தாரே இறுதிவரை பெரியாரே!

    என்று பாடுகிறார். பெரியாரின் எல்லாக் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எலலாக் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகக் கருத்துக்களைக் கூறிய மகான் இது வரை பிறக்கவில்லை. ஒருவன் தான் தனிப்பட்ட முறையிலும் சமுதாய அளவில் பிறருடைய பார்வையில் மதிக்கப்படுவதற்கும் முன்னேற்றமடைவதற்கும் காரணமாயிருந்தவரை அடையாளம் காண்பதும் அவரை வணங்குவதும் மானுட இயல்பு. இங்கே இராமனைப் பாடிய கம்பரும் கவிஞர்தான். சிவனைப் பாடிய சேக்கிழாரும் புலவர்தாம். இருவர் கொள்கைகளையும் ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு எறறுக் கொள்ளப்படாததால் அவர்கள் குறையுடையவர்கள் என்றோ கறைபடிந்தவர்கள் என்நோ தரமதிப்பீடு செய்யும் தகுதி நம்மில் யாருக்கும் இல்லை. பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் பரவியிருந்திருக்காவிட்டால் கைம்மைத் துன்பததைப் போக்கியிருக்க முடியாது. பெண்கள் தங்களைப் புரிந்து கொண்டிருக்க முடியாது. மனித நேயத்தின் மாண்பினை நாம் உணர்நதிருக்க முடியாது. இநத அளவிலே அந்தோணிசாமி பெரியாரைப் பாடுகிறார். பாராட்டுகிறார்.

    கவிதை மதிப்பீடு

    ஒரு கவிதை நூலையோ அந்த நூலில் உள்ள கவிதைகளின் தரத்தையோ அதனை எழுதிய ஆசிரியரையோ மதிப்பிடுகிறபோது அந்த நூல் முழுமையும் அருமையான கவிதைகளால் நிரம்பியிருக்க வேண்டும என்பதில்லை. எலலாக் கவிதைகளும் கவிதை மூலங்களான கற்பனை உணர்ச்சி, கருத்து வடிவம் என எல்லாக் கூறுகளிலும் செப்பம் உடையதாக இருக்க வேண்டும் என்பதில்லை. கவிஞனும் ஒரே கொள்கை சார்ந்தவனாக முரண்பாடே இல்லாதவனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும என்பதுமில்லை.காரணம் அது கவிதை. அது ஒரு பரப்புரை சாதனமன்று. அதனைப் பரப்புரையாகப் பயன்படுத்திக் கொள்வது படைப்பாளனின் தனித்திறன். கவித்துவம் நம்மை அசைத்துப் பார்த்தால் அதனைக் கவனிப்போம்! நமக்கு அறிவுரை மட்டும் கூறுவதாக இருந்தால் பழைய ஔவையாரின் ஆத்திசூடிக்குள் போய்விட மாட்டோமா? கவிதையின் ஏதாவது ஒரு கூறு நம்மை அசைத்துப் பாரத்தால் அது போதும் நமக்கு! வைக்கப்படுகிற பந்தியில் ;உட்கார்ந்து எழுந்திருப்பவரும் இருக்கிறார்கள். இலையை மார்கழி மாதத்து வானமாக்கி வழித்தெடுப்பவர்களும் இருக்கிறார்கள். அது இலைகளின் உள்ளடக்கத்தைப் பொருத்தது.

    கடுகும் வேம்பும் நிறைந்த கவிதைச் சோலை

    முனைப்புடைய கவிஞர் என்பாரைக் காசு நெருங்கலாம். கவிதை நெருங்காது. இரக்கம், அன்பு, மனிதநேயம், ஒப்புரவறிதல் என்னும் மனிதகுல விழுமியங்களே சாதாரண மனிதன் ஒருவனை பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. வள்ளலாரும் பாரதியும் இதற்குச் சரியான எடுத்துக்காட்டு. அவர்கள் இருவரும் மாபெரும் அருளாளர்களாயிருந்து கவிஞராய் பரிணமித்தவர்கள். அவர்கள் தேமா புளிமா கவிஞர்கள் அல்லர்! உலகியலில் நகலுக்கு; இருக்கிற மதிப்பு அசலுக்கு இருப்பதில்லை. கவர்ச்சிக்கு இருக்கிற செல்வாக்கு அடக்கத்திற்கு இல்லை

    “கண்கவரும் வண்ணவண்ண விளக்கெரிய
    கண்ணாடிக் கதவுகளால் கவர்ந்திழுக்க
    சொன்னவிலை கொடுத்துவார்க்கும் கடைகளிலே
    சொக்கிப்போய் பொருள் வாங்கும் நண்பர்களே”

    என்று போலித்தனத்திற்கு மயங்கிச் செல்வாரைப் பாசத்துடன் அழைத்துப் பேசுகிற கவிஞர் என்ன சொல்கிறார்?

    வீடு தேடி வருவதாலே விலை குறைத்து
    விற்கத்தான் வேண்டுமென ஏதிர்பார்த்தல்
    பாடுபடும் எளியோரின் வாழ்வினையே
    பாதிக்கும் என்றுணர மறுப்பதேனோ?

    “அஞ்ஞானத்தைத் தேடிச் சென்று அறியாமையை வாங்கிவருகிறீர்கள். வெளிசசத்துக்குள் சென்று ;இருளில் மறைகிறீர்கள்1 வீடு தேடிவரும் ஞானத்தைப் புறக்கணிக்கிறீர்கள்.” என்கிறார். பழ வணிகர்கள், பூவிற்கும தாய்மார்கள், வேர்க்கடலை விற்றுப் பிழைக்கும் முதியவர்கள்  ஆகிய  இவர்களிடம் பேரம் பேசுவதும் ஒருவகை சுரண்டல்தானே!

    கவிதைச் சோலையில் கற்பனை மணம்

    இயற்கையைப் பேணுவோம் என்று எல்லாரும் முழங்குகிறார்கள். விழித்துக் கொண்டே இருப்பவர்களுக்கும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துகிறார்கள். அவர்களும் தூங்கிக் கொண்டே நடக்கிறார்கள். இது ‘தினசரி மூன்று காட்சிகள்’ என்பது போல நடந்து கொண்டேதான் இருக்கிறது ஆற்றுநீரைச் சுரண்டுவது பற்றி அந்தோணி எழுதுகிறார்

    ‘ஆறுகளின் முதுகெலும்பு தண்ணீர’

    இத்தகைய அழகியல் சார்ந்த வளமான கற்பனை ஆங்கில ஆசிரியர் ஒருவருக்கு வந்திருக்கிறது. முதுகெலும்பு உள்ளவனைப் பார்த்து முதுகெலும்பு இல்லாதவன் என்று சொல்லும் உலக வழக்கை நோக்கியவர்க்கு இந்தக் கற்பனையின் அழகு இன்னும் அழகு பெறும். கண் அழுவது உண்டு. காற்றுமா அழும்? அந்தோணிசாமிக்கு நீரில்லாத ஆறு நிற்க முடியாமல் படுத்துக்கிடப்பதன் காரணமாக முதுகெலும்பு இல்லாத ஆறு கற்பனை வந்திருக்கிறது! பெருவெள்ளக் கோலமே ஆறு ‘நின்ற கோலம்!’

    “மணல்அள்ளித் துகிலுரித்த போதெல்லாம் செயலற்று
    மண்ணாக இருந்து விட்டு
    அனலிடை அகப்பட்டுத் துடிக்கின்ற புழுவாக
    அவனியிலே தவிப்ப தேனோ?”

    என்று அதே பாட்டில் அவருடைய  மற்றொரு கற்பனைப் பதிவைக் காணலாம். இந்த இடத்தில் மரபு சார்ந்த கற்பனையைத் தன் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். ஆற்றினைப் பெண்ணாகக் கருதி பாடுவது தமிழ்க்கவிதை மரபு! கண்ணகியின் துன்பத்தைக் கண்ட வையை ஆறு.

    “வையை என்ற பொய்யாக் குலக்கொடி
    தையற் குறுவது தானறிந்தனள் போல்
    புண்ணிய நறுமலர் ஆடைபோர்த்த
    கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்
    புனல்யாறு அன்றிது பூம்புனல் ஆறு”

    சென்றதாக அடிகள் பாடியிருக்கிறார். அடிகள் போர்த்திய ஆடையை இங்கே பல முதலாளிகள் அவிழ்க்கிறார்கள். பண்பாடு குறைவான செயல் மட்டுமன்று பாதகமான செயலும் கூட!. அந்தப் பாதகத்தை இவர் பாட்டிலே பதிவு செய்திருக்கிறார்.

    கவிதைச் சோலையில் கட்டுமானச் சிறப்பு

    யாப்பு என்பது கற்பு, காப்பு, கலைப்பு என்பன போன்றதொரு  தொழிற்பெயர். கவிதையில் யாப்பு என்பது அதன் புறக்கட்டுமானத்தைக் குறிப்பது. படைப்பாளன் தான் எடுத்துக் கொண்ட அல்லது அவன் உள்ளத்தில் தோன்றிய பாடுபொருளுக்குத் தக்கவாறும் தன் மனநிலைக்கும் தக்கவாறும் அமைத்துக் கொள்கிற வெளிப்பாட்டு உத்தி. இந்தச் சிறிய கவிதை நூலில் காணப்படும் ஒரு சில கவிதைக் கட்டுமானத்தை ஆராய்வதாக இப்பகுதி அமைகிறது.

    “நான்விட்டுத் தரமாட்டேன் என்று சொல்லும்
    நட்பினரும் அதுபோலே நினைப்ப தாலே
    நானிலத்தில் குழப்பங்கங்கள் முற்றிப் போக
    நாள்தோறும் துன்பங்கள் தொடரும்போது
    நான் நினைக்கும் அத்தனையும் சரியே என்று
    நாள்தோறும் வாதிடுதல் சரியா சொல்வீர்?
    நானுணர்ந்தேன் என்தவற்றை! நாளும் வெற்றி
    நனிபெறவே தடைகளின்றி முயல்வோம் நாமே!”

    என்பது போன்ற எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் படைப்பாளின் ஆற்றொழுக்கான நடைக்கும் கவிதை படைப்பதில் அவருக்கிருக்கும் ஆர்வத்திற்கும் சான்றாகத் திகழ்கிறது!. தமிழ்க்கவிதைப் படைப்புலகில் மிகவும் நீர்த்துப்போன யாப்பு இது! இந்த யாப்பினைத் தக்க முறையில் தன் கவிதைப் பயிற்சிக்குப் பயன்படுததிக் கொண்டிருக்கிறார் பாவலர்!.

    சினத்தைத் தூண்டும் சொற்களையே
    சிறிதும் சொல்ல வேண்டாமே
    மனத்துள் சினத்தை அடக்குவதால்
    மனத்தில் அழுத்தம் உயர்கிறதே!
    குணத்தை யாரும் ஒப்பிட்டே
    குறையாய்க் கூற வேணடாமே!
    பணத்தைச் சிறுகச் சேர்ப்பதுபோல்
    பண்பை வளர்க்க முயல்வோமே!

    என்னும் பாட்டு அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களின் பல வடிவங்களில் ஒன்று. மா மா காய் என்று அரையடிக்கான இலக்கணத்தைப் பெற்று அமைகின்ற இநதப் பாட்டின் சந்தம் மகாகவிக்குப் பிடித்தமான சந்தங்களுள் ஒன்று. இதனை

    “மொய்க்கும கவலை பகைபோக்கி
    முன்னோன் அருளைத் துணையாக்கி
    எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி
    உடலை இரும்புக் கிணையாக்கிப்
    பொய்க்கும் கலியை நான்கொன்று
    பூலோ கத்தார் கண்முன்னே
    மெயக்கும் கிருத யுகத்தினையே
    கொணர்வேன தெய்வ விதியிஃதே!

    என்னும் பாடலால் அறியலாம். ‘விநாயகர் நான்மணி மாலையில்’ அமைந்துள்ள நான்கு வடிவஙகளில் ஒன்றினை இந்த யாப்பிற்கு அவர் அளித்திருக்கிறார். இனி இந்த அறுசீர்களை இதே வாய்பாட்டில் பன்னிரு சீர்களாக அமைத்துக் கொண்டு அமைப்பதே பிள்ளைத் தமிழ். இதனை

    பேரா தரிக்கும் அடியவர் தம்
    பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும்
    பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
    பெருமான் என்னும் பேராளா!!
    சேரா நிருதர் குல கலகா,
    சேவற் கொடியாய்த் திருச்செந்தூர்த்
    தேவா, தேவர் சிறைமீட்ட
    செல்வா என்று உன் திருமுகத்தைப்
    பாரா மகிழ்ந்து முலைத் தாயார்
    பரவிப் புகழ்ந்து விருப்புடன் அப்பா
    வா வா என்று உன்னைப் போற்றப்
    பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால்
    வாரா திருக்க வழக்குண்டோ?
    வடிவேல் முருகா வருகவே
    வளரும் களபக் குரும்பை முலை
    வள்ளிக் கணவா வருகவே!!

    என்னும் பகழிக்கூத்தர் எழுதிய திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமழின் வழியும் ஏனைய பிள்ளைத் தமிழ் நூல்களின் வழியும் உணர்க. இது பிள்ளைத் தமிழில் பெருவழக்கு இனி இந்த கட்டுமானத்தின் முதலடியிலும மூன்றாம் அடியிலும் தனிச்சொல் பெய்து சந்த இனிமையைக் கூட்டி அதனைச சிந்தாக்கும் முயற்சியும் நடந்தேறியிருக்கிறது.

    “அஞ்சி நடுங்கி வாழ்வதுவும்  — பிறர்
    அடிமையாக உழல்வதுவும்
    கெஞ்சித் திரிவதும் வாழ்வாமோ?  பிறர்
    கேட்டில் மகிழ்வது அறமாமோ?”

    என்று கவிஞர் கடவூர் மணிமாறன் பாடியிருக்கிறார். ஆற்றல் மிக்க கவிஞர் வல்லாளர வைரமுத்து

    “மாயக் கனவுகள் தின்பவரை – உயிர்
    மயங்கிக் கிடக்கும் தோழர்களை
    தீயைத் தின்னும் இளைஞர்களாய் – கவி
    செய்யாதொழிந்தால் ஏது பயன்?”

    என்று பாடியிருக்கிறார். பிறரும் பாடியிருக்கிறார்கள். விரிப்பின் பெருகும்.

    “குறுக்கிட்டுப் பேசுவதால் இருவ ருக்கும்
    குறைவான புரிதலுடன் மனவ ருத்தம்
    பொறுமையாய் இறுதிவரைக் கேட்ப தாலே
    பொன்னான நட்புகளைத் தொடர லாமே!”

    என்பதை யொத்த பாடல்களால் தனக்குக கலித்தாழிசையும் கைவந்ததே என்பதைக் காட்டியிருக்கிறார் அந்தோணிசாமி.

    “பொருதடக்கை  வாளெங்கே? மணிமார் பெங்கே?
    போர்முகத்தல் எவர்வரினும் புறங்கொடாத
    பருவயிரத் தோளெங்கே எங்கே என்று
    பயிரவியைக் கேட்பாளைக் காண்மின்! காண்மின்!

    என்பது கலிங்கத்துப் பரணி! எனவே எளிய சொற்களில் இனிய சந்தங்களக் கொண்ட பாடல்களை இயற்றுவதிலும் யாப்பிலக்கண நெறி பற்றி எழுதுவதிலும் அந்தோணிசாமி அவர்களின முயற்சி பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.. இவர்தம் கவிதைகளில் இழையும் தொடைவிகற்பங்களைப் பற்றி ஆராய்ந்து சொல்லலாம். அது கட்டுரையின் அளவை விஞ்சக்கூடும். யாப்பமைக் கவிதைகளில் காணப்படும் ஒரு சில பிழைகள் கவிதை வல்லாளர்களுக்கும் ஏற்படக்கூடியனவே என்பதாலும் எதிர்காலத்தில் மிக எளிதாக தவிர்க்கப்படலாம் என்பதாலும் அவை கருத்திற் கொள்ளப்படவில்லை.

    ஆன்றோரை மதிக்கும் அந்தோணிசாமி

    பண்பாட்டு விழுமியங்களின் அருமையறியா யாரும் மரபுக்கவிதை எழுதுவதாகச் சொல்லிக் கொள்வது அருவெறுப்பாக உள்ளது. வள்ளுவனுக்கு என்ன  தெரியும்? கபிலர் பாடல்களில் கற்பனை உண்டா? கதை சொன்னதைத் தவிர கம்பன் வேறு என்ன செயதான்? பாரதிக்கு யாப்பிலக்கணம் தெரியுமா? பாரதிதாசனுக்கு எந்தப் பல்கலைக்கழகமாவது டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறதா?’ என்று சான்றோர்களை எள்ளி நகையாடும் ஒரு கூட்டம் தமிழகத்து உயர்கல்வி நிலையங்களிலேயே இடம் பெற்றுள்ளது. இது என் நேரடி அனுபவம். என் முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஒரு முறை என்னிடம் சொன்னார். ‘திருக்குறளில்;  ‘கூறியது கூறல்’ என்ற குற்றம் அதிகமாக இருககிறது’ என்று. நான் திருப்பிக் கேட்டேன். ‘அப்படியானால் குறைவாக இருக்கலாமா? என்று. அதாவது திருக்குறளில் குறை காணும் அளவிற்குத் தன்னை தன் முனைப்பை வெளிப்படுத்திக் கொள்ளும் பேராசரியர் (?) ஒருவர் எப்படி மரபாளுநராக பணியாற்ற முடியும்?

    அந்தோணிசாமி அவர்கள் அந்த வகையில் பண்பின் கொள்கலமாகத் திகழ்வதைக் காணமுடிகிறது. ஆங்கிலப பேராசிரியர் ஷெல்லியைப் பாராட்டலாம். பைரனைப் புகழலாம். சேக்‌ஸ்பியரைச் சிலாகிக்கலாம். வால்ட் விட்மனை வாயாரப் புகழலாம். ராபர்ட் பிராஸ்ட் கவிதைகளை மெச்சலாம். அவர் முடியரசனைப் பாராட்டுகிறார். பாரதியைப் பேசுகிறார்!.சுரதாவின் உவமங்களில் இவர் சொக்கிக் கிடந்ததை இவருடைய கவிதைகளில் காணப்படும் மயக்கமே உணர்த்துகிறது. அதிலிருந்து இன்னும் எழவில்லை இவர்!

    “இல்லத்தில் பாராட்டைத் தொடங்கிடுவோம்!
    இளையோரை முதியோரைப் புகழ்ந்திவோம்1
    நல்ல செயல் செய்தவுடன சிறிதெனினும்
    நற்பண்பாய்ப் பாராட்டி ஊக்குவிப்போம்!

    என்று உளவியல் கற்ற இந்த ஆசிரியர் பின்னும் தொடர்கிறார்!  விடுதலைக் கவிஞர் நாமக்கல்லாரை நாவினிக்கப் போற்றுகிறார்! நகைச்சுவைப் புயல் சின்ன அண்ணாமலையை நினைவு கூர்ந்து பாடுகிறார். நான் சின்ன அண்ணாமலை அவர்களைச் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களோடு கண்டவன். அந்த நகைச்சுவை இமயத்தை அந்தோணிசாமி பாடியிருக்கிறார். எனக்குத் தெரிந்து சின்ன அண்ணாமலையின் படத்தைக்கூடத் திறக்காத தமிழகத்தில் அவரைக் கவிதையின் பாடுபொருளாக்கிய பெருமை அந்தோணிசாமிக்கு உண்டு.  அவருக்கு மட்டுமே உண்டு!

    நிறைவுரை

    ‘படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! என்ற பகுதியில் எழுபத்தாறு வயதான நான் எழுதிவரும் கட்டுரைகள் முழுமையும் என் நலன்  நோக்கியதே!  எனது தனிமைக்கு இந்தப் பிள்ளைகள் எழுதும் கவிதைகள் துணையாகின்றன.  இவர்களில் பெரும்பாலோரை நான் நேரில் சந்தித்தது கூட கிடையாது. சிலர் அலைப்பேசியில் தொடர்பு கொள்வர். அவ்வளவதான்! தம்பி அந்தோணிசாமி  ஆங்கிலமொழியிலக்கியத்தில் மேனிலைக் கல்வி ஆசிரியர் அவர் கொஞ்சம் முயன்றிருந்தால் ஒரு சிறிய நூலை ஆங்கிலத்திலேயே வெளியிட்டிருக்க இயலும். அவர் தமிழில் பாடியிருக்கிறார். சொந்தச் செலவில் பதிப்பித்தும் இருக்கிறார். பாராட்ட வேணடாமா? சமுதாய நோக்கு, கற்பனை, வடிவம், உணர்ச்சி என்னும்  கவிதைக்கான பல கூறுகளையும் கலந்த கலவையாகப் படைத்துக் காட்டியிருக்கும் இந்த நூலில் சொத்தைக் கருத்துக்கள இல்லை!. தூங்க வைக்கும் வடிவம் இல்லை!. தொட்ட இடமெல்லாம் தட்டுப்படுவது எளிமை! எளிமை! எளிமை! எளிமையுடையவர் பேறு பெற்றார். அந்தோணிசாமி கவிதைகள் உட்பட!

    நல்லாசிரியர் ம.அந்தோணிசாமி M.A.,M.A.,M.Ed.,M.Phil.,

    (தொடரும்)

    Share
  • இணையம் எனும் இசைவில் இன்றைய கல்வி

    இணையம் எனும் இசைவில் இன்றைய கல்வி

    புவனேஸ்வரி. மூ
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை- 641006.

    முன்னுரை

    குருகுலக் கல்வி எனும் பண்பாடுச்சூழல் பல்வேறு சூழ்நிலைத் தாக்கங்களுக்குப் பின், கல்விநிலையம் எனும் நிறுவனங்களாய் மாறி மாணவர்களை ஒரு தொகைமைக்குள் அடக்கிச் சென்றது. அதனை பழக்கப்படுத்திக் கொள்ள தமிழ்ச் சமூகம் பாடுபட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில் மாபெரும் புரட்சிக்கு நம்மை இடர்ப்படுத்தியிருக்கிறது கொரானா எனும் நோய்க்கிருமி. இணையவழி அனைத்தையும் கற்கலாம் என்ற நிலை மாறி இணையவழி மட்டுமே கற்க வேண்டும் என்னும் கட்டாயத்திற்கு உள்ளாக்கியுள்ளது இந்நோய்க்கிருமி. இணையவழிக் கல்விச்சூழல் குறித்த எனது பார்வைகளை இந்தக் கட்டுரையில் முன்வைக்கிறேன்.

    கற்றல் முறை

    இணையம் என்பது இன்று எல்லோரிடமும் கைக்குள் அடக்கமாகும் கைப்பேசியிலே அடங்கும் தொழில்நுட்பம்தான். இருப்பினும் கற்றலில் ஆசிரியர் மாணவர்களுக்கு இடையேயான நல்லுறவை அது வளர்க்கவில்லை. கல்வி கற்றுக்கொடுத்தல் என்பது, ஒரு ஆசிரியர் தாம் கற்ற கல்வியை அப்படியே மாணவர்க்குப் போதித்து அவனை இன்னொரு ஆசிரியனாய் உருவாக்கும் முயற்சியன்று. பல்வேறு சிந்தனைவாதிகளை, திறமையாளர்களைப் பண்படுத்தி ஊக்குவிப்பது, பாதை வகுப்பது எனப் பல்வேறு நிலைகளில் அமைகிறது. அவ்வாறு இருக்க, மாணவர்களும் ஆசிரியரும் இணையவழியில் தொடர்பில் உள்ளபோதும் தொடர்பில்லாதவர்களாகவே அறியப்படுகிறார்கள்.  நேரே கற்பிக்கும்போது ஆசிரியர்களுடைய முகக்குறிகளும் சொல்லமைப்புகளும் அதனை மேலும் தெளிவுபடுத்துதல் என்னும் பல்வேறு பயன்பாடுகளால் மாணவர்களால் பாடத்தைத் தொடர்புப்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், இணையவழியில் அத்தகைய பரப்பினைக் கொண்டுசெல்ல முடிவதில்லை. இம்முறை நீடிப்பின், அறிவாற்றல் குறைபாடுடைய ஒரு சமூகத்தை உருவாக்கிவிடுவோமோ என்ற அச்சம் ஓர் ஆசிரியராய் எனக்கு உள்ளது.

    கல்வி நிலையங்கள்

    கல்வி நிலையங்கள் என்பதைக் காட்டிலும் நிறுவனங்கள் என்பது சாலப்பொருந்தும் என எண்ணுகிறேன். ஏனெனில், நிறுவனம் ஒரு கொள்கையின் அடிப்படையில் செயல்படும். ஆதலால், பெரும்பாலான நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையில் மட்டுமே தனது முழு ஈடுபாட்டையும் செலுத்துகின்றன. சில நிறுவனங்கள் குறைவான ஊதியம், தேவைக்குக் குறைவான ஆசிரியர்கள் எனத் தனது பணஇழப்பை ஈடுகட்ட அரசாங்கத்திற்கு நாம் செலுத்தும் வரி போல ஆசிரியரது சம்பளத்தைக் குறைவாக வழங்கி, பெரும் வணிகமாய் மாற்றி வருகிறது. ஆசிரியர்களைத் தேடி மாணவர்கள் சென்ற காலம் போய், இன்று மாணவர்கள் நலன்கருதி ஆளில்லா, அரவமில்லாக் கல்வி நிலையங்களில் நான்கு திசைச்சுவர்களிலும் தன் ஏக்கத்தைச் செலுத்திக் கல்வி போதித்து வருகின்றனர்.

    மாணவர்களின் நிலை

    மாணவர்களின் நிலை குறித்து அறியவேண்டின் அதனை இருவகைப்படுத்த வேண்டுதற்பாலது. இணையவழிக்கல்வி நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு என வெவ்வேறுபாற்பட்டவையாக அமைகின்றன.

    நகர்ப்புற மாணவர் நிலை

    நகர்ப்புற மாணவர்கள் பெரும்பாலானோர் இணையவசதி உள்ளவர்களாக இருக்கின்றனர். இங்கு அரசுப் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவு. ஆகவே, இவர்கள் பொருளாதாரச் சூழ்நிலையில் கிராமப்புற மாணவர்களைக் காட்டிலும் சற்று வசதிகூடிய சூழ்நிலையிலேயே இருக்கின்றனர். ஆதலால், இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பழக்கப்படுவதில் அவர்களுக்குப் பெரிய சிக்கல் இல்லை. இருப்பினும், இன்றைய சூழல் இவர்களையும் பின்னடையச் செய்துள்ளது என்பது இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் வரலாறு காணாத மாணவர் சேர்க்கையை வைத்து அறிந்துகொள்ளலாம்.

    கிராமப்புற மாணவர் நிலை

    கிராமப்புற மக்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளையே நாடிச் செல்கின்றனர். அறிவுப் பின்னணியில் கைதேர்ந்தவர்களாக இருப்பினும் சமூகப் பின்னணியால் இடர்ப்படுகின்றனர். சில கிராமங்களில் போதுமான இணைய வசதி இல்லை. குறிப்பிட்டுச் சொல்லப்போனால் கல்விநிலையில் முன்னேற்றம் கண்டுவரும் பழங்குடிகளுக்கு இவை இன்னும் சிரமத்தைத் தருகின்றன. இன்னும் சரிவரப் போக்குவரத்து இல்லாத எத்தனையோ கிராமங்கள் நம் தமிழகத்திலும் இந்தியாவிலும் இருக்கின்றன. அந்தச் சூழ்நிலையில் கடுமையான உழைப்பின்வழி கல்வி கற்றுவரும் மாணவர்களிடையே இணையக்கல்வி முழுமையாகச் சென்றடையவில்லை என்பது மறுக்க இயலா உண்மை.

    ஆசிரியர் நிலை

    இருதலைக்கொள்ளிகளாய் மாறியிருக்கிறார்கள் ஆசிரியர்கள். கல்லூரிப் பேராசிரியர்களைக் காட்டிலும் பள்ளிக்கல்வி ஆசிரியர்கள் மிகுந்த சிக்கல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். மடிக்கணினியின்றி, பெரும்பாலும் கைப்பேசி வழியாகவே பாடம் புகட்டும் இவர்களுக்கு மாணவர்களைச் சமாளிப்பதில் இன்னும் சிக்கல். இணையவழிக்கல்வி, மாணவர்களுக்கு மட்டும் புதிதல்ல. ஆசிரியருக்கும்தான் என்பது யாருக்குப் புரியும்? எவ்வளவு தெளிவாகப் பாடம் எடுத்தாலும் தொழில்நுட்பம் மாணவர்களிடையே தொய்வை ஏற்படுத்துகிறது. இதன் காரணம் பல மணிநேரங்கள் கைப்பேசியில் செலவிடுவது. மாணவர்களிடையே கைப்பேசிப் பயன்பாட்டைக் குறைக்க ஆசிரியர்கள் எத்தனையோ ஆலோசனைகளை வழங்கிய காலம்போய் இவர்களாலேயே ஊக்குவிக்கும் காலமும் வந்துவிட்டது. இதுதான் சமூக மாற்றமோ.

    முடிவுரை

    இணையம் உலகையே தன்வயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அறிவியல் முன்னேற்றமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் தேவைதான். இருப்பினும் அது மனித மூளையைப் பாழ்படுத்தி நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் வல்லமை பொருந்தியதாய் மாறிவிடக் கூடாது என்பதில் சிறிதும் ஐயமில்லை. இணையத்தின் இசைவுக்குத் தக்க நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோமோ என்பது கவலை அளிக்கிறது. இவ்வாற்றல் மிக்க தொழில்நுட்பக் கல்விமுறைகள், மனிதமூளையை சிதைப்பதோடு சிந்திக்க விடாமலும் செய்கின்றன. உதாரணமாகச் சொல்லப்போனால் நாம் சமூகத்தில் எத்தனையோ விடயங்களைத் தேடிப் பெற்றிருக்கிறோம். அவை நமக்கு வாழ்க்கைக் கல்வியை மட்டுமல்ல, வாழவும் கற்றுக் கொடுத்திருக்கிறது. இன்று நம் தேடல் என்பது கூகுளோடு நின்றுவிடுகிறது. அதனாலே, நாம் சிந்தனை செய்யா உயிரினங்களோடு ஒன்றிவாழும் சூழலுக்கு நகர்ந்து விடுவோமோ எனச் சிந்திக்கத் தோன்றுகிறது.

    Share