தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 49

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான்செக்கர்ஸ்மகளிர்கல்லூரி, 
விளார்புறவழிச்சாலை, 
தஞ்சைமாவட்டம் – 613006.
மின்னஞ்சல்முகவரி-  egowrisss@gmail.com

வைரமுத்து உவமங்களில் மரபு மாற்றம்

முன்னுரை

நாணத்திற்கு நாணலை உவமிப்பது மரபு. ‘பிழிந்த புடவை’யை உவமிப்பது புதுமை. ‘நிலவென்னும் அரசியைச் சுற்றித் தோழிமார்கள்’ என வெண்ணிலவையும் விண்மீன்களையும் உவமிப்பது மரபு. உவாநாள் அன்று ‘விண்மீனைக் காவல் வைத்து வெண்ணிலவு தூங்குவது’ என்பது புதுமை. தொன்று தொட்டு வழங்கி வரும் அதே உவமத்தை அதே பொருண்மை விளக்கத்திற்காகப் பயன்படுத்துவதும் வேறொரு பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதும் உவமத்தில் மரபு சார்ந்த நிலை. புதிய பொருண்மைக்குப் புதிய உவமங்களைப் பயன்படுத்துவதும் பழைய உவமச் சாரத்தைப் புதிய பொருண்மை விளக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதும் புதுமை. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மரபுப்பாவலர்களான மகாகவி பாரதியாரும் அவருடைய நண்பர் பாவேந்தர் பாரதிதாசனாரும் முன்னோர்களை மதித்துப் போற்றினர். முன்னோர் இலக்கியங்களை ஆராதித்தனர். முன்னோர் படைப்பு நெறியைப் பின்பற்றினர். மரபு காப்பதில் தங்களையே ஒப்படைத்துக் கொண்ட அப்பெருமக்கள் தாங்கள் வாழ்ந்த சமுதாயச் சூழலுக்கு ஏற்ப அவர்கள் படைத்துக் காட்டிய புத்திலக்கியங்கள் மரபின் வேர்களிலிருந்து புறப்பட்டன. பாரதிதாசனுக்குப் பின்வந்த கவிஞர்களில் எண்ணிக்கையிலும் தரத்திலும் வியக்கத்தக்க உவமங்களைப் பயன்படுத்திக் காட்டியவர் வைரமுத்து ஆவார். அவருடைய ஒட்டுமொத்த படைப்புக்களிலிருந்து எடுக்கப்பட்ட மாற்றத்திற்காளாகிப் புதுமை தேக்கிய மரபுவமங்களில் சிலவற்றின் சிறப்புக்களை இந்தக் கட்டுரை முன்னெடுக்க முனைகிறது.

உவமம் — உருவகம் ஒரு சுருக்க விளக்கம்

உவமத்திலிருந்து உருவகம் என்பதே சிந்தனைப் பிழை இவையிரண்டும் தனித்தன்மை வாய்ந்த இருவேறு பார்வைகள். இருவேறு வெளிப்பாட்டு உத்திகள். உவமம் படைப்பாளனின் அறிவுத்திறத்தையும் ஒப்பீடு மற்றும் நினைவாற்றலையும் காட்டும். உருவகமோ அவனுடைய கவியுணர்ச்சியையும் அவன் கலையுணர்வையும் காட்டும். ‘தாமரை முகம்’ என்னும் உவமத்தொகை ‘முகத்தாமரை’ என்று மாறுவது இயற்பியல் மாற்றமன்று, வேதியல் மாற்றம். ‘தாமரை முகம்’ என்பதில் தாமரை முதலில் பார்க்கப்படும். முகம் அதற்குப் பின்னர் பார்க்கப்படும். பின்னர் நோக்கப்படும் முகத்துக்கு முன்னர் பார்த்த தாமரை பொருத்திக் காட்டப்படும். இதுதான் உவமக் கோட்பாடு. இந்தக்  கோட்பாட்டில் கால இடைவெளி உண்டு. ஆனால் முகத்தாமரை என்பதில் முகத்திலேயே தாமரையைக் காண்கிறான். அதாவது முகத்தைப் பார்க்கின்ற அந்த நேரத்திலேயே அதனைத் தாமரையாகவே காண்கிறான். கால இடைவெளி கிடையாது. நம்முடைய தமிழாசிரியர்களும் தமிழ்ப்பேராசிரியர்களும் இத்தகைய படைப்பாளுமையையும் படைப்பாளனின் கவியுள்ளத்தையும் உணராது “உவமத்தின் பண்புகளைப் பொருளின் மேல் ஏற்றிக் கூறுவதற்கு’ உருவகம் என்று பெயர் என்று கோனார் குறிப்பேட்டின் குறிப்புக்களைப் பிழையில்லாமல் படித்து முடிக்கிறார்கள். தாமரை முகம் என்பது படைப்பாளனின் ஒப்பீட்டு உணர்வு. கால இடைவெளி கொண்டது. முகத்தாமரை என்பது அவனுடைய கலையுணர்வு. முன்னது ஓரளவு அறிவு சார்ந்தது. பின்னது முழுமையும் கலைமனத்தைச் சார்ந்தது. ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிடுவது அறிவு. ஒன்றை மற்றொன்றாக நோக்குவது மனம். அறிவுக்கு அங்கே வேலையே இல்லை.

உவமத்தொகை என்றால் என்ன?

தொகைகள் எல்லாம் தொடர்மொழிகள். ஐவகைத் தொகைகளுள் உவமத்தொகை என்பதும் ஒன்று. இதனை ‘உவமைத்தொகை’ என்று உச்சரிப்பதில் நம்மவர்க்கு ஒரு கோடி இன்பம். ஆனால் ‘பாட்டன் தொல்காப்பியன்’ என்று பட்டிமன்றத்தில் முழங்குவார்கள். தொல்காப்பியத்தில் ‘உவமை’ என்ற சொல்லே கிடையாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். ‘மை’ என்னும் பண்பு விகுதி பெற்ற அந்தச் சொல் ‘உவமத்தின் தன்மை’ என்ற பொருளில் கையாளப் பெற்றிருக்கும் ஒரே நூற்பா ‘உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்’ (1229) என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

இந்த உவமத்தொகைக்கு இலக்கண வரைறையை இப்படிச் சொல்வார்கள். ‘உவமத்தைத் தனியாகக் கூறிப், பொருளைத் தனியாகக் கூறி இரண்டையும் இணைக்கின்ற உவம உருபு மறைந்து வருமானால்  அது உவமத்தொகை’. அவர்கள் கருத்துப்படித் ‘தாமரை முகம்’ என்பது உவமத்தொகை. இடையில் உருபாகிய ஒருசொல் மட்டுமே மறைந்திருப்பதாகக் கருதுகிறார்கள். தாமரை போன்ற சிவந்த முகம் என்பதுதான் விரி என்பதும் அவர்களுக்குத் தெரியும். பொருள், உவமம், பொதுத்தன்மை, உவம உருபு என உவம விரியின் கூறுகள் நான்கானால் ஒன்று மட்டும் குறைவது எப்படி உவமத்தொகையாகும்? இதனைக் கேட்டால் கடைசி பெஞ்சுக்கு அனுப்பிவிடுவார்கள். தாமரை போன்ற முகம் என்பதில் பொதுத்தன்மை மறைகிறதா இல்லையா? ‘தாமரை முகம்’ என்பதில் ‘போன்ற’ என்னும் உருபும் ‘சிவந்த’ என்னும் பொதுத்தன்மையும் மறைகின்றனவா  இல்லையா?  இரண்டு கூறுகள் மறைந்து வருவதே தொகையாயிருக்க உவம உருபு மட்டும் மறைந்து வருவது உவமத்தொகையாவது யாங்ஙனம்?

இந்தக் குழப்பம் எதனாலே என்றால் ‘உவமத் தொகை’ என்னும் தொடரில் ‘உவமம் என்பது உவம உருபை மட்டுமே குறிக்கிறது’ என்னும் இலக்கண மயக்கம். அது உண்மையே. ஏனைய நான்கு தொகைகளில் வேற்றுமை உருபும், பண்புருபும், உம்மையும், காலம் காட்டும் இடைநிலைகளும் மறைந்து வருவதாகக் கருதியது போலவே உவமத் தொகையிலும் ‘உவம உருபு மறையும்’ என்பது இவர்களது அனுமானம். இன்னொன்றும் மறைகிறதே என்பதைக் கவனிக்கத் தவறியது மறதி. இந்த அனுமானம் முற்றிலும் தவறென்று கூற முடியாது. ஆனால் படைப்பாளனின் கலைமனத்தைக் காண முடியாது தடுக்கும் இரும்புத் திரை இது என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஒப்புக்கொள்வதில்லை. அப்படி ஒப்புக் கொண்டால்தான் கலைமனத்தின் அழகு புலப்படும். கவிதையை ரசிக்க முடியும். இல்லாவிட்டால் ‘குற்றுகரப்பிழையை’ எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

அப்படியானல் இதற்கு என்னதான் முடிவு? மிக எளிது!. இலக்கணப் பார்வையில் உவம உருபோ, பொதுத்தன்மையோ இரண்டுமோ மறைந்து வருவது உவமத் தொகை. இலக்கிய நோக்கில் உருவகம் என்பது பொருளில் உவமத்தைக் காண்பது. ‘அவள் முகத்தாமரையில் என் விழிவண்டுகள் மொய்த்தன!’ முடிந்தது கதை! மறைந்ததைப் பற்றி மறந்து இருப்பதை எண்ணுவதே இன்பம்! உணர்வு சார்ந்த கவிதைகளை அறிவு சார்ந்த இலக்கணத்தால் அளக்க அல்லது தரமதிப்பீடு செய்ய முற்படுகிறபோது எச்சரிக்கையும் கவனமும் மிக மிகத் தேவை!.

கண்ணகியும் நடுவண் அரசும்

பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு கோவலனுக்கு உணவு சமைத்துக் குமரி வாழையைின் குருத்தகம் விரித்து உணவு பரிமாறும் கண்ணகி, அவன் இலைக்கு நீர் தெளித்ததை இளங்கோவடிகள்,

“மண்ணக மடந்தையை மயக்கொளிப்பனள் போல்
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவி”

எனக் குறிக்கின்றார். இருந்த நிலையையும் எதிர்வரும் துன்பத்தையும் அறிந்து கொண்டு மண் மடந்தை மயங்கியதாகவும் இனம் பற்றிய இரக்கத்தால் மண்ணக மடந்தையின் மயக்கத்தைக் கண்ணகி நீர் தெளித்துத் தெளிவித்தாள் எனவும் உரையாசிரியர்கள் நயம் காண்பர். ‘நிலமடந்தைக்கு நீர் தெளித்ததைப் போல்’ என்னும் உவமம் முறையான தமிழ்க்கல்வியைப் பெற்றுள்ள கவிஞரையும் அறியாமல் அவரை ஆட்கொண்டதைத்,

“தாமரைப் பூவில் உறங்கிக் கொண்டிருக்கும் சரஸ்வதியின்
முகத்தில் தண்ணீர் தெளிப்பதாக இருக்கின்றன”

என்னும் உவமத்தால் அறியமுடிகிறது. பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்குத் தேர்வு கிடையாது என்னும் நடுவண் அரசின் சேதி, உறங்கிய கலைமகளின் முகத்தில் தண்ணீர் தெளிப்பதைப் போல் இருந்தது என்னும் உவமம் இளங்கோவடிகளின் உவமத்தின் தாக்கமாக இருந்தாலும் இலக்கியம் வளம் பெறுமேயன்றித் தரம் குறையாது என்பது உண்மை. கண்ணகி மண்மகளின் மயக்கம் தீர்த்தது அன்று. மத்திய அரசு கலைமகளின் மயக்கம் தீர்த்தது இன்று!

ஆலையிட்ட கரும்பான தலைவி

‘ஆலையிட்ட கரும்பு’ என்பது வதைபடும் எப்பொருளுக்கும் காட்டப்படும் மரபுவழி உவமையாகும். வறுமையில் வாடும் மக்கள், பிரிவால் வாடும் காதலர்கள், வர்க்கப் போராட்டத்தால் வாடும் தொழிலாளர்கள் என எல்லாருடைய துன்பத்திற்கும் காட்டப்படும் மரபுவழிப்பட்ட இந்த உவமையைத் தலைவனைப் பிரிந்த தலைவியின் கூற்றில் வைத்து,

“ஆலையிலே சிக்குண்ட கரும்பாய் என்னை ஆக்கிவிட்டான்”

எனக் கூறுவதைக் காணமுடிகிறது. தலைவனுடைய எண்ணங்களால் துன்பப்படும் தலைவியின் நிலையை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் இதே உவமையை விதவையான பழைய காதலியைச் சந்திக்கும் தலைவன் கூற்றிலும் வைத்துக்காட்டுகிறார்.

“நெஞ்சமும் துடிதுடிக்க நிம்மதி எனை மறக்க
அஞ்சன விழியாள் நெஞ்சம் ஆலையின் கரும்பாய் ஆக”

எனத் தலைவன் கூறினாலும் அவனும் தலைவியின் நெஞ்சத்துத் துன்ப நிலைக்கே இந்த உவமையைப் பயன்படுத்துகிறான்.

வைரமுத்து உவமைகளில் மரபு மாற்றம்

மரபை உவம வகையால் அதன் ஆற்றலுணர்ந்து எத்தகைய மாற்றமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளும் கவிஞர் தற்காலச் சிந்தனைப் போக்குகளுக்கேற்பத் தேவையான மாற்றங்களைச் செய்து கொண்டு பயன்படுத்திக் கொள்வதையும் காணமுடிகிறது. எத்தகைய புதுமையானாலும் அது மரபென்னும் ஆணிவேரில் கிளைத்தெழும் என்பதே உண்மை. புதுமையான உவமைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு முன் ஏற்கனவே இருக்கின்ற உவமைகளில் செய்யக்கூடிய சிறிதளவு மாற்றமே பொருள் புலப்பாட்டுக்குப் போதுமானது என்னும் எண்ணமே இதற்குக் காரணம்.

மரபு மாற்றம் ஏன்?

நேற்றைய புதுமை இன்றைய மரபாகிவிடுகிறது. இன்றைய புதுமை நாளைய மரபாகிவிடும். புதுமை என்பது மரபை அழித்து விட்டுத் தோன்றுவதன்று. மரபினின்றும் கிளைத்து எழுவது. இலையுதிர் காலங்களில் உதிர்வதும் வசந்த காலங்களில் அவை தளிர்ப்பதுமான நிகழ்வுகள் தொடர்ந்து வந்தாலும் அடிமரத்தில் வேறுபாடு காணமுடியாததைப் போல மரபு ஓர் அடிமரமாக நின்றுகொண்டிருக்கிறது. மற்ற களங்களில் எவ்வாறிருப்பினும் இலக்கியத்தில் மரபும் புதுமையும் பிணைந்து வருவது தவிர்க்க முடியாது. மரபுவழியாகச் சொல்லப்பட்டு வரும் உவமைகளில் காலப் பொருத்தமின்மையும் சலிப்பும் தோன்றுகிற பொழுதும், கவிஞனின் உள்ளத்தெழுச்சி புதிய வேகத்தோடு செயல்படும் பொழுதும் உவமைகளில் மாற்றம் தேவைப்படுகிறது. இதனால் பழைய மரபு புறக்கணிப்புக்கு ஆளாகிறது என்பதைவிட, விரைந்து செல்லும் காலவோட்டத்தில் தனக்குரிய இடத்தைத் தக்கவைக்க புதுமையோடு அது போராட வேண்டியிருக்கிறது என்பதே பொருந்தும்.

குந்தியிருக்கும் கொக்கும் நதிக்கரை மக்களும்

வாய்ப்புக்களைத் தேடிக் களைப்பது ஒருவகை. வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வது மற்றொரு வகை. கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிடாமல் எச்சரிக்கையுடன் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுவது வேறொரு வகை. இவற்றுள் எந்த வகையாயினும் அவற்றில் வெற்றி பெற வேண்டுமானால் எச்சரிக்கை உணர்வு தேவை. இது தமிழ்க் கவிதைகளின் உள்ளடக்கங்களில் ஒன்று.

“எய்தற் கரிய இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்”

“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து”

என்பன போன்ற குறட்பாக்களில் இத்தகைய சிந்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதற்குத் திருவள்ளுவர், கொக்கின் ‘கூம்புதல்’, ‘குத்துதல்’ என்னும் மாறுபட்ட இருவகை செயல்பாடுகளை உவமமாகக் கூறியிருக்கும் நுட்பத்தை அறிந்து,

“கொக்கொக்க’ என்றாராயினும் அது கூம்புமாறு போலக் கூம்புக என்றும், ‘குத்தொக்க’ என்றாராயினும் அது குத்துமாறு போலக் குத்துக என்றும் உரைக்கப்படும்” (இரண்டிடங்களிலும் பொருள் உவமத்தை வினையுவமமாகக் கருத வேண்டும் என்கிறார்)

என விளக்கம் எழுதும் ஆசிரியர் பரிமேலழகரின் உரை, ‘உவமநுட்பம்’ நிறைந்தது. வினையை விளக்க வேறொரு வினையையே உவமமாக்கியிருக்கும் திருவள்ளுரின் நுட்பத்தை உணர்ந்து கொண்ட வைரமுத்து, உவமச் சூழலில் சிறிது மாற்றம் செய்து கருத்து விளக்கம் செய்கிறார். காலமறிதல், இடமறிதல், வலியறிதல் என்பனவெல்லாம் திருவள்ளுவர் காலத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். வருமுன்னர் காத்துக் கொள்ளாத வாழ்க்கை, நெருப்புக்கு முன்னால் வைக்கப்பட்ட பஞ்சுப் பொதியாகும் என்பதும் ஓர் எச்சரிக்கையே. ஆள்வோருக்குச் சொல்லப்பட்ட அறிவுரையில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமென்பதற்கே கொக்கின் இருவகைச் செயல்பாடுகளைத் திருவள்ளுவர் உவமமாக்கினார். காலமாற்றம் சிந்தனை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. மகனுக்குத் தாய் பாட வேண்டிய தாலாட்டைத் தந்தை பாடுகிறார். அத்தாலாட்டில் தன் மகன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதைப் புதுமையான உவமத்தின் வாயிலாகப் புரியவைப்பதைக் காணமுடிகிறது.

“நதிக்கரை ஓரத்து
நகரம்
வெள்ளப் பெருக்கை
எதிர்பார்த்து
விழிப்போடு இருப்பது போல்’
எப்போதும் விழிப்பாய் இரு.”

‘நதிக்கரை ஓரத்து நகரம்’ என்பதால் நதிக்கரை ஓரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களையே குறிக்கும். எச்சரிக்கையாக இருந்து செயல்படுவதற்குக் கொக்கின் செயல்பாடுகளை உவமிக்கும் மரபுவழிச் சிந்தனையில் சிறிது மாற்றம் செய்து, காலத்திற்கேற்ப நதிக்கரை ஓரத்து மக்களின் விழிப்புணர்வை உவமமாகக் காட்டுகிறார்.

வள்ளுவர் கண்ட முதலையும் வைரமுத்து கண்ட முதலையும்

பொருள் ஒன்று. அதனை நோக்கும் பார்வைகள் பல. நோக்கத்திற்கு ஏற்பப் பார்வைகள் மாறுபடலாம். இடமறிந்து செயல்பட வேண்டும் எனக் கருதிய வள்ளுவர் முதலையின் நீராற்றலை விதந்து சொல்லி, நிலத்தாற்றலை நினைவுபடுத்துகிறார்.

“நெடும்புனலுள் வெல்லும் முதலை., அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற”

செயல்படும் இடத்தின் தன்மைக்கேற்பப் பொருளின் வலிமை மாறுபடும் என்னும் கருத்து விளக்கத்திற்காகத் திருவள்ளுவர் பயன்படுத்திக் கொண்ட உவமையைக் கவிஞர் வைரமுத்து,

“முதலைகள் போல் நாம் கண்கள் திறந்தே உறங்குவோம்”

எனத் தற்காலத்தில் தேவைப்படும் சமுதாய விழிப்புணர்வை விளக்குதற்கு உவமமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். தூங்குங்கால் தூங்கி, விழிக்குங்கால் விழித்தெழ வேண்டும் என்பது மரபுவழிச் சிந்தனை. விழித்துக் கொண்டே உறங்க வேண்டும் என்பது புதிய சிந்தனை. கொக்கு மரபுவழிச் சிந்தனைக்கு உவமமாகியிருப்பது போலப் புதிய சிந்தனைக்கு முதலையின் உறக்கம் உவமமாகியிருக்கிறது. ‘இடத்திற்கேற்ப வலிமை மாறும்’ என்னும் கருத்தாக்கம் முதலையால் வெளிப்பட, ‘உறங்காத விழிப்புணர்வே இன்றைய தேவை’ என்னும் கருத்தாக்கம் முதலையின் விழிமூடா உறக்கத்தால் வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம். முயல், ஆமை, காக்கை, நரி முதலிய கதைகளையே கேட்டு வந்த காதுகளுக்கு இந்த முதலைக்கதை புதுமையாகவும் புதியதோர் உண்மை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது.

ஆமையின் இடத்தில் சுருக்குப்பை

பொறியடக்கத்துள் சிறந்தது நாவடக்கம். “யாகாவா ராயினும் நாகாக்க” என்பதே அவ்வடக்கத்தின் இன்றியமையாமை உணர்த்தும் இந்த நாவடக்கத்திற்குத் திருவள்ளுவர் ஒரே அதிகாரத்தில் மூன்று பாடல்களை ஒதுக்கியதிலிருந்தே அதன் எதிர்மறை விளைவுகளை உணரக்கூடும். பொதுவான அடக்கத்திற்கு ஆமையை உவமித்தது மரபாயினும், அம்மரபைச் சற்றே மாற்றிப் புதிய கண்ணோட்டத்துடன் வைரமுத்து படைத்துக் காட்டுகிறார்.

“ஒரு கலைப்படைப்பு எப்படி மரபினுக்கு ஒத்திருக்க வேண்டும் என்றால் அது மரபினால் வழிகாட்டப்படுதல் போன்று மரபினை மாற்றுவதாகவும் அமைய வேண்டும்’. முந்தைய மொத்த ஒழுங்கு முறையோடு புதிய கலையாக்கம் ஒவ்வொன்றின் உறவுகள் – விகிதங்கள் – மதிப்புகள் என்பன மறு இசைப்பு (RE-ADJUSTMENT) பெறுகின்றன. இதுதான் பழமைக்கும் புதுமைக்கும் இடையில் இருக்க வேண்டிய இயைபு (Conformity) ஆகும்”.

என்னும் கருத்தின் அடிப்படையில் மரபோடு பின்னிப் பிணைந்தும் அதனை மாற்றியும்,

“நாவே
இன்னும் கொஞ்சம் மௌனம் கா
வாயில்லாச் சில்லறைகள் சத்தமிட்டாலும்
வாய்திறந்தும் பேசாத சுருக்குப்பைபோல”

எனத் தலையாய அடக்கமான நாவடக்கத்திற்குச் சுருக்குப்பையை வைரமுத்து உவமையாக்கியிருக்கிறார்.

செக்கில் சிக்கிய எள்ளும் எள்ளில்லாமல் ஆடும் செக்கும்

‘ஆலையில் சிக்கிய கரும்பு’ என்பதைச் சற்றே மாற்றி ஆலைக்குப் பதிலாகச் செக்கையும் கரும்புக்குப் பதிலாக எள்ளையும் இட்டு,

“இடைவெளி கழிந்த மார்பக இடுக்கில்
செக்குண்ட எள்ளாய்ச் சிக்குண்டேன்”

என்னும் காதலன் வாக்கில் செக்கில் ஆடும் எள்ளை உவமமாகப் பயன்படுத்தும் கவிஞரே, எள்ளில்லாமல் ஆடும் வெறும் செக்கையும் தம் கற்பனையால் கண்டு அதனைப் பொருத்தமான பொருள் விளக்கத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறார்.

“எள்ளில்லாமல் சுற்றும் செக்கைப் போல்
கண்ணீரில்லாமல் பெண்கள் அழ”

என்னும் வரிகளில் ஊராருக்காக வைக்கும் ஒப்பாரியில் நீரில்லாமலே கண்கள் அழும் என்னும் பொருள் விளக்கத்திற்காக எள்ளில்லாமலேயே சுற்றும் செக்கை உவமமாக்கியிருக்கும் உவமம் நேர்த்திக்குரியது.

“ஒன்றை அறிவிப்பதன்று கவிஞனின் நோக்கம்,
ஒன்றை உணர்த்தி வைப்பதே கவிஞனின் தொழிலாகும்”

ஊராருக்காக வைத்து அழும் ஒப்பாரியில் உயிர்த்துடிப்பு இருக்காது என்னும் கருத்து நிலையை,

“அழுகிற மாதிரி அழுது வராத கண்ணீரத்
தொடச்சுக்கிட்டா பட்டுச் சீலையெடுத்து”

என வண்டி நாயக்கர் வைப்பாட்டியின் நிலைப்பாட்டைக் ‘கள்ளிக்காட்டு இதிகாசத்திலும்’ கவிஞர் குறிப்பிடுவது பொருத்தம் கருதிச் சுட்டப்படுகிறது.

நிலையாமை கூறும் மட்பாண்டம்

நிலையாமை உணர்த்துவது குறள்நெறி. அனைத்து நிலையாமையுள்ளும் உடலது நிலையாமை சித்தர்களால் வெகுவாகக் குறிக்கப்பட்டது.

“ஊத்தைக் குழியிலே மண்ணை யெடுத்தே
உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
வரவோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே”

குயவன் படைத்த மட்பாண்டத்திற்கு அதனை ஒப்பிடுகிறார். சிறிது கை நழுவினாலும் விழுந்து நொறுங்கும் அதன் நிலைப்பாட்டையும் உடைந்த பிறகு ஒன்றிணைக்க முடியாத இயலாமையையும் ஒருங்கே புலப்படுத்தும் அந்த உவமையின் உள்ளடக்கத்தைப் புரிந்த கொண்ட மற்றொரு சித்தரும்,

                               “நந்தவனத்தில் ஓர்ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி”

சிதைந்த உடலுக்கு உடைந்த மட்பாண்டத்தை உவமமாக்கியிருக்கிறார்கள். எனவே உடைந்து போவதற்கு மரபுவழியாகப் பின்பற்றப்பட்டு வந்த உவமமாகிய மட்பாண்டத்தைப்,

“போட்டுடைத்த மண்பாண்டம் போலே நாட்டில்
பூந்தமிழர் சிதறி”

என்னும் வரிகளில் சிதைந்து போன தமிழின ஒற்றுமைக்கு எழுத்து மாறாமல் உவமமாக்கிக் கொள்வதைக் காணமுடிகிறது. உவமையில் ‘மண்பாண்டம்’ என்று கூறப்பட்டிருப்பினும் அதற்கிணையாகத் தமிழர்களைச் சொல்லவரும் கவிஞர் மிகவும் கவனமாகப் ‘பூந்தமிழர்’ என்ற சொல்லைக் கையாள்கிறார். உடைந்து போனதில் மட்டுந்தான் தமிழர்களும் மட்பாண்டமும் ஒன்றே தவிர தன்மையினால் தமிழர்கள் மண்பாண்டங்கள் அல்லர் என்பது அவர் கருத்து. ‘மண்பாண்டம்’ என்னும் சொல்லைக் கொண்டு அதனை மண் ஓடாகக் கற்பனை செய்து கொள்ளும் கவிஞர்,

“எப்படியோ பிரிவானோம், இடிவிழுந்த ஓடானோம்”

எனத் தோழிகளின் உடைந்த உறவுக்கு அதனை உவமமாக்குவதையும் இலட்சிய உணர்வின்றி, ஒற்றுமை உணர்வின்றி இன்றைய இளைஞர்கள் சிதறிக் கிடப்பதற்கு,

“லட்சத்தீவுகளாய்ச் சிதறிக் கிடக்கிறாய்.”

என இலட்சத்தீவுகளை உவமையாக்குவதையும் அறியமுடிகிறது. ‘சிகரங்களில் கூடு கட்ட வேண்டிய இளைஞர்கள் பள்ளத்தாக்குகளில் பதுங்குவது’ கண்டு பதறும் கவிஞர் இன்றைய இளைஞர்கள் கொள்கைப் பிடிப்பில்லாமல் மனம்போன போக்கில் திரிந்தலைகிறார்கள் என்ற காட்சியைத்தான் ‘லட்சத்தீவுகளாய்’ என்ற தொடரால் சுட்டுகிறார்.

வனிதையர் கூந்தலும் வாழைக்குருத்தும்      

பெண்களின் கூந்தலுக்கு மணற்படிவுகளையும் மயில்தோகையையும் கார்மேகத்தையும் கடல் அலைகளையும் கருநாகத்தையும் உவமைகள் சொல்லிச் சலித்துப் போன கவிதையுலகில்,

“ஓரணா நாணயத்தின் விளிம்பு போன்ற கூந்தல்”

என 1957இல் கூந்தற்சுருளுக்கு அன்றைக்கிருந்த மஞ்சள் மற்றும் வெள்ளை ஓரணாக்களின் விளிம்புகளை உவமம் காட்டி, மரபிலே மாபெரும் புரட்சி செய்தவர் கலைஞர். கலைஞருக்குப் பின்னால் வந்த கவிஞர் நா.காமராசன்,

“நீண்ட கருங்கூந்தல்
ஆலமர விழுதுகள்போல்
அவள் முதுகில்
விழுவதும் ஒரு அழகு”

எனக் கூந்தலின் நெடுமைக்கு ஆலமரத்து விழுதுகளை உவமித்திருப்பது ஒரு புதிய முயற்சி. மரபு சார்ந்தும் புதுமை தழுவியும் கவிதை யாப்பதைத் தமது படைப்புக் கொள்கையாகக் கொண்டிருக்கும் கவிஞர் வைரமுத்து,  கூந்தலுக்கு முற்றிலும் மாறுபட்ட உவமையைக் கூறியிருப்பதன் மூலம் புதியதொரு மரபுக்கு அடித்தளம் அமைப்பதில் தனது பங்கைச் செய்திருக்கிறார் எனலாம்.

“வாழைக் குருத்துப்போல் சுருண்டிருக்கும் குழல்”

என்பது கூந்தலுக்கு வைரமுத்து கண்ட உவமை. உவமைகள் கவிஞனின் கற்பனைத்திறனை மட்டுமன்றி அவனுடைய வாழ்க்கை அனுபவங்களையும் வெளிப்படுத்தி நிற்கும். வைரமுத்து வேளாண் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆதலாலும் விருந்தோம்பும் பண்புடையவராதலாலும் விருந்தினருக்கு உண்ணும் இலை பெரும்பாலும் நுனிக்குருத்தாகவே அமைய வேண்டுமென்பதாலும் இவ்வுவமை கவிஞரின் பட்டறிவு உவமை என்பதோடு கூந்தலை நேருக்குநேர் காட்சிப்படுத்தும் திறனும் கொண்டதாகும்.

வைரமுத்து உவமைகளில் பண்புகளும் அருவங்களும்

பண்புகளுக்கு இயக்கம் கற்பிப்பது தமிழுக்குப் புதியதன்று. ஆனால் தற்காலத்தில் புதியது. ‘உண்மை வெல்லும்’ என்பது உலக வழக்கு. ‘அழுக்காறென ஒரு பாவி’ எனப் பண்பைப் பண்பியாகச் சொல்லுவது அக்கால இலக்கிய மரபு. இராமன் காட்டுக்குச் செல்கிற காட்சியில்,

“விதிமுன் செல்லத் தருமம் பின்னிரங்கி ஏக”

என விதிக்கும் தருமத்திற்கும் முறையே செல்லுதலும், ஏகுதலுமாகிய வினைகளை இணைத்துப் பண்பிற்கு இயக்கம் கூறியவன் கம்பன். மகாகவி பாரதி,

“தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்”

எனக் கூறியிருப்பதும் அத்தகையதே. இவ்வாறு பண்புகளைச் செயல்திறன் உடைய பொருள்களாக்கிக் கூறுகின்ற மரபிலிருந்து, அவற்றை உவமமாகவும் அமைத்துக் கூறும் போக்கை வைரமுத்து கவிதைகளில் காணமுடிகிறது.

மரம் – நட்டுவைத்த மௌனம்

இயற்கையைப் பாடுவதிலும் அவற்றை உவமமாக அமைப்பதிலும் கவிஞருக்குள்ள திறன் முன்பே ஆராயப்பட்டுள்ளது. மரத்தின் அசைவையும் பாடி, அமைதியையும் பாடியிருக்கும் அவர் வானுயர்ந்து நிற்கும் மரத்தை,

“நட்டு வைத்த மௌனங்களாய் மரங்கள்”

என்கிறார். ‘மௌனத்தின் சப்தங்கள்’ என்னும் தனது நூலொன்றின் தலைப்பில் மௌனத்தைப் பேசவைத்த கவிஞர் இங்கே மௌனத்தை நட்டு வைத்திருப்பதை அறியலாம். ‘மௌனத்தை நட்டு வைத்ததுபோல’ என்னும் உவமை அருவப்பொருளை உவமையாக்கும் அவருடைய படைப்புத்திறனையும் சுட்டுவதாகலாம்.

மனைவியின் உறக்கமும் தியாகத்தின் தூக்கமும்

மானுட உறவுகளில் கலப்படமில்லாத உறவு தாயுறவு. அவ்வுறவுக்கு அடிப்படையாக இருப்பது மனைவி பந்தம். போலி மதிப்பீடுகளாலும் சில அவசரத் தீர்ப்புக்களாலும் ‘மனைவி’ என்னும் பந்தம் இன்று தன்னுடைய முழுப்பரிமாணத்தையும் தூய்மையையும் காக்க இயலாவிடினும், வைரமுத்தின் பார்வையில் மனைவி தியாகத்தின் உருவாகவே தெரிகிறாள்.

“தியாகம் உறங்குவது போல் கண்தூங்கும் மனைவி”

எனப் புத்தரின் மனைவி சுஜாதாவின் உறக்கத்திற்குத் தியாகத்தின் உறக்கத்தை உவமமாக்கியிருப்பதன் மூலம், குடும்பக் கட்டமைப்பில் மனைவியின் பெருமையைச் சரியான முறையில் பதிவு செய்திருப்பதாகக் கருதலாம்.

தாசுமகாலில் உறங்கும் கம்பீரசோகம்

தாசுமகாலைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகளுக்குள்ளும் சொல்லப்பட்ட கருத்துக்களுக்குள்ளும் கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘உருவமில்லா மரணத்துக்கு மரணமில்லா உருவம் தாசுமகால்’ (Deathless form to the formless Death) என்பது தாகூரின் கருத்து. மும்தாஜ் உட்பட எவருடைய மரணத்திற்கும் உருவமில்லை., ஆனால் எல்லாருடைய மரணத்திற்கும் என்றும் அழியாத நினைவுச் சின்னங்கள் இல்லை. அந்தப் பெருமை மும்தாஜின் மரணத்திற்கு மட்டுமே கிட்டியது. அதனையே தாகூர் மேற்கண்டவாறு குறித்திருக்கிறார். தாகூரின் பார்வையிலிருந்து கவிஞர் வைரமுத்தின் பார்வை முற்றிலும் வேறுபடாவிட்டாலும், சற்று விலகியிருந்து நோக்குவதை அவருடைய கவிதை வரிகள் காட்டுகின்றன.

“தாஜ்மகாலில் ஒரு கம்பீரசோகம் உறங்குவது மாதிரி”

என்னும் கவிதை வரிகளில் தாசுமகாலின் தோற்றத்தை உவமமாக்கியுரைப்பதைக் காணமுடிகிறது. அழகியல் சார்ந்த தாசுமகாலின் தோற்றம், கவிஞருக்குத் தமிழ்ச்சிறுவர்களின் துடைக்க முடியாத சோகத்தை நினைவுபடுத்தியிருக்கிறது. தீபாவளிப் பண்டிகை ஒளி வெள்ளத்திற்கு நடுவே கொண்டாடப்படும். ஆனால் அவ்வொளியைக் கொடுக்கும் பட்டாசுகளையும் வெடிகளையும் சிவகாசியில் தயாரிக்கும் சிறுவர்களின் வேதனை மறக்கப்படுகிறது. அச்சிறுவர்களின் சோகத்தைத் தீபாவளியின் ஒளிவெள்ளம் மறைத்துவிடுகிறது. தாசுமகால் உருவாவதற்காகப் பாடுபட்ட தொழிலாளர்களின் ஓலத்தைத் தாசுமகாலின் பளிங்கொளி மறைத்துவிடுகிறது. உருவாக்கிய தொழிலாளர்களின் ‘சோகம் உறங்குகிறது’ என்னும் உவமம் அருவப்பொருள்களை உவமமாகக் கையாளும் வைரமுத்தின் கவித்திறனுக்கு மேலும் ஒரு சான்றாகலாம்.

வெறுங்கலத்தில் ஊற்றி வைத்த நிசப்தம்

மக்கள் அமைதியாகத் தூங்கினார்கள் என்பதைக் கவிஞர்கள் தங்கள் கற்பனை வளத்திற்கேற்பப் புனைந்துரைப்பதுண்டு. பாவேந்தர் பாரதிதாசன்,

“சோலை உதிர் பூ அன்ன மக்கள் துயில் கிடக்கும் போதில்.”

எனச் சோலையில் கிடக்கும் அமைதியான பூக்களைத் தூங்கிக் கிடக்கும் மக்களுக்கு உவமையாக்குவார். தூக்கத்தின் அமைதி இவ்வாறு இருந்ததெனின், யாருமில்லா முதியவரின் வீட்டில் நிலவும் அமைதியைக் குறிக்கவரும் கவிஞர்,

“வெறுமையின் கலத்தில்
நிசப்தம் ஊற்றி வைத்தது போல் வீடு”

எனக் குறித்திருப்பதைக் காணமுடிகிறது. ‘வெறுமையான கலத்தில் நிசப்தத்தை ஊற்றி வைத்தாற்போலும்’ என அருவப் பொருள்களாகிய நிசப்தத்தைத் திரவப் பொருளாகக் கண்டு உவமிக்கும் கவிஞரின் திறனையும் காணமுடிகிறது.

உண்மைக்கு எதற்கு ஒப்பனை?

உவமத்தைக் கையாளுகிறபோது அதன் வெளிப்பாட்டு உத்திகள் ஒரேவகையாக இருப்பதில்லை. இருத்தல் வேண்டும் என்னும் விதிமுறையும் இல்லை. கருத்து விளக்கத்திற்காகவும் பொருள் புலப்பாட்டுக்காகவும் பயன்படுத்தப்படுகிற உவமங்கள் பல நிலைகளில் வெளிப்படும். அவற்றுள் வினா வடிவமும் ஒன்று. சான்றாகப்,

“பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல்?”

என்பது திருக்குறளில் வினா வடிவில் அமைந்த உவமம். கவிச்சக்கரவர்த்தி கம்பன்,

“கனிவரும் காலத்து ஐய! பூக்கொய்யக் கருதலாமோ?”

என உரைப்பதும் அத்ததையதே. மகாகவி பாரதி,

                                               “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ?”

என வினவுவதும் உவமையின் ஒருவகை வெளிப்பாடே. இவர்களின் மரபில் வந்து,

“காரிருளால் சூரியன் தான் மறைவதுண்டோ?
கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?”

என வினவும் பாவேந்தரின் உவமங்கள் வினாக்கள் வடிவில் அமைந்தவையே. உத்தியில் மரபினைப் பின்பற்றும் வைரமுத்து,

“உண்மைக்கு எதற்கு ஒப்பனை?”

எனப் பண்பாகிய அருவத்தை உருவமாகக் கொண்டு உவமமாக்கியிருக்கிறார். காசியில் தன் புற ஆசாரத்தை உதறித் தள்ளிய பாரதியை அவருடைய மாமன் பாராட்டுகிறார். ‘அக உணர்வைப் புறப்பூச்சுக்களால் அளக்க இயலாதது போலப்’ பூணூலையும் குடுமியையும் மட்டும் வைத்துக்கொண்டு உண்மையான பிராமணனை அடையாளம் காணமுடியாது’ என்னும் கருத்து விளக்கத்திற்காக இந்த உவமையைக் கவிஞர் பயன்படுத்தியிருக்கிறார்.

தர்மம்போல் காத்திருந்த தமிழ்ச்சீதை

அதர்மத்தைத் தர்மம் வெல்லும் என்பது வழக்கு. ‘தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்’ என்பது பாரதி வாக்கு. ஆனால் அறமகளான சீதை அசோகவனத்தில் தவமிருந்த காட்சி தருமமே சிறையிருந்ததாக வைரமுத்து கண்களுக்குப் புலப்பட்டுள்ளது. சீதையை இராமனுடைய மனைவியாகக் காணாமல் அறமாக உவமித்துத்,

“தர்மம்போல் அன்றோ எங்கள் தமிழ்ச்சீதை காத்திருந்தாள்”

எனக் கூறியிருப்பதைக் காணமுடிகிறது. தர்மம் தனக்குரிய காலத்தை எண்ணிக் காத்திருப்பது போல் சீதை காத்திருந்தாள் என்பதே உவம விளக்கம் ஆயினும் தர்மம் எப்பொழுதும் சோதனைக்கு ஆளாகும் என்பதும் இரட்டுற மொழியப்பட்டிருப்பது உவமத்தின் வன்மையைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.  மரபை அப்படியே பின்பற்றுவதோடு காலச் சூழலுக்கேற்பவும் கருத்து நிலைக்கேற்பவும் சற்று மாற்றியும் உவமங்களைப் பயன்படுத்தும் கவித்திறன் வைரமுத்துக்குக் கைவரப்பெற்றதே! இதனை இந்தக் கட்டுரையில் மேலே காட்டப்பட்ட சில சான்றுகள் கொண்டு அறியலாம்.!

நிறைவுரை

பாரதிதாசனுக்குப் பிறகு எண்ணிக்கையாலும் தரத்தாலும் அழகியல் குறையாமலும் கவிதையில் உவமங்களைப் பயன்படுத்தியவர் சிலரே!. சுரதா, அப்துல் ரகுமான் என்னும் இவர்களைத் தொடர்ந்து இந்தப் பயணத்தைத் தொடர்ந்தவர் வைரமுத்து என்பது கட்டுரையாளர் கருத்து. நுண்ணியத்தோடு கூடிய உவமங்களைச் சொன்னதில் இவர்கள் முன்னிற்கிறார்கள்!. பொரியலுக்குப் ‘பூனைக்கண்ணை’ உவமமாக்கியவர் பாவேந்தர். கவிதையின் தடையில்லா இயல்பு நடைக்கு வாழைத்தண்டை உவமமாக்கியவர் சுரதா! வாழ்க்கையில் பின்னோக்கிச் செல்பவனுக்குக் ‘கயிறு திரிப்பவனை’ உவமமாக்கியவர் அப்துல் ரகுமான்! அவர்களைப்  போல அரிய, அழகியலும் ஆழமும் குறையாத உவமங்களை, மரபைப் பின்பற்றுதல், மரபினைச் சற்றே மாற்றுதல், புதிய மரபிற்கு அடிக்கல் நாட்டுதல் என்னும் பல்லாற்றானும் பயன்படுத்தியிருப்பதன்வழி, வைரமுத்தின் படைப்புக்கள் ஓர் உவமக்காட்சிச் சாலையாகவே காட்சியளிக்கிறது!.

(இந்தத் தொடர் அடுத்த கட்டுரையோடு நிறைவுறும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *