இணையம் எனும் இசைவில் இன்றைய கல்வி

புவனேஸ்வரி. மூ
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை- 641006.

முன்னுரை

குருகுலக் கல்வி எனும் பண்பாடுச்சூழல் பல்வேறு சூழ்நிலைத் தாக்கங்களுக்குப் பின், கல்விநிலையம் எனும் நிறுவனங்களாய் மாறி மாணவர்களை ஒரு தொகைமைக்குள் அடக்கிச் சென்றது. அதனை பழக்கப்படுத்திக் கொள்ள தமிழ்ச் சமூகம் பாடுபட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில் மாபெரும் புரட்சிக்கு நம்மை இடர்ப்படுத்தியிருக்கிறது கொரானா எனும் நோய்க்கிருமி. இணையவழி அனைத்தையும் கற்கலாம் என்ற நிலை மாறி இணையவழி மட்டுமே கற்க வேண்டும் என்னும் கட்டாயத்திற்கு உள்ளாக்கியுள்ளது இந்நோய்க்கிருமி. இணையவழிக் கல்விச்சூழல் குறித்த எனது பார்வைகளை இந்தக் கட்டுரையில் முன்வைக்கிறேன்.

கற்றல் முறை

இணையம் என்பது இன்று எல்லோரிடமும் கைக்குள் அடக்கமாகும் கைப்பேசியிலே அடங்கும் தொழில்நுட்பம்தான். இருப்பினும் கற்றலில் ஆசிரியர் மாணவர்களுக்கு இடையேயான நல்லுறவை அது வளர்க்கவில்லை. கல்வி கற்றுக்கொடுத்தல் என்பது, ஒரு ஆசிரியர் தாம் கற்ற கல்வியை அப்படியே மாணவர்க்குப் போதித்து அவனை இன்னொரு ஆசிரியனாய் உருவாக்கும் முயற்சியன்று. பல்வேறு சிந்தனைவாதிகளை, திறமையாளர்களைப் பண்படுத்தி ஊக்குவிப்பது, பாதை வகுப்பது எனப் பல்வேறு நிலைகளில் அமைகிறது. அவ்வாறு இருக்க, மாணவர்களும் ஆசிரியரும் இணையவழியில் தொடர்பில் உள்ளபோதும் தொடர்பில்லாதவர்களாகவே அறியப்படுகிறார்கள்.  நேரே கற்பிக்கும்போது ஆசிரியர்களுடைய முகக்குறிகளும் சொல்லமைப்புகளும் அதனை மேலும் தெளிவுபடுத்துதல் என்னும் பல்வேறு பயன்பாடுகளால் மாணவர்களால் பாடத்தைத் தொடர்புப்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், இணையவழியில் அத்தகைய பரப்பினைக் கொண்டுசெல்ல முடிவதில்லை. இம்முறை நீடிப்பின், அறிவாற்றல் குறைபாடுடைய ஒரு சமூகத்தை உருவாக்கிவிடுவோமோ என்ற அச்சம் ஓர் ஆசிரியராய் எனக்கு உள்ளது.

கல்வி நிலையங்கள்

கல்வி நிலையங்கள் என்பதைக் காட்டிலும் நிறுவனங்கள் என்பது சாலப்பொருந்தும் என எண்ணுகிறேன். ஏனெனில், நிறுவனம் ஒரு கொள்கையின் அடிப்படையில் செயல்படும். ஆதலால், பெரும்பாலான நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையில் மட்டுமே தனது முழு ஈடுபாட்டையும் செலுத்துகின்றன. சில நிறுவனங்கள் குறைவான ஊதியம், தேவைக்குக் குறைவான ஆசிரியர்கள் எனத் தனது பணஇழப்பை ஈடுகட்ட அரசாங்கத்திற்கு நாம் செலுத்தும் வரி போல ஆசிரியரது சம்பளத்தைக் குறைவாக வழங்கி, பெரும் வணிகமாய் மாற்றி வருகிறது. ஆசிரியர்களைத் தேடி மாணவர்கள் சென்ற காலம் போய், இன்று மாணவர்கள் நலன்கருதி ஆளில்லா, அரவமில்லாக் கல்வி நிலையங்களில் நான்கு திசைச்சுவர்களிலும் தன் ஏக்கத்தைச் செலுத்திக் கல்வி போதித்து வருகின்றனர்.

மாணவர்களின் நிலை

மாணவர்களின் நிலை குறித்து அறியவேண்டின் அதனை இருவகைப்படுத்த வேண்டுதற்பாலது. இணையவழிக்கல்வி நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு என வெவ்வேறுபாற்பட்டவையாக அமைகின்றன.

நகர்ப்புற மாணவர் நிலை

நகர்ப்புற மாணவர்கள் பெரும்பாலானோர் இணையவசதி உள்ளவர்களாக இருக்கின்றனர். இங்கு அரசுப் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவு. ஆகவே, இவர்கள் பொருளாதாரச் சூழ்நிலையில் கிராமப்புற மாணவர்களைக் காட்டிலும் சற்று வசதிகூடிய சூழ்நிலையிலேயே இருக்கின்றனர். ஆதலால், இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பழக்கப்படுவதில் அவர்களுக்குப் பெரிய சிக்கல் இல்லை. இருப்பினும், இன்றைய சூழல் இவர்களையும் பின்னடையச் செய்துள்ளது என்பது இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் வரலாறு காணாத மாணவர் சேர்க்கையை வைத்து அறிந்துகொள்ளலாம்.

கிராமப்புற மாணவர் நிலை

கிராமப்புற மக்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளையே நாடிச் செல்கின்றனர். அறிவுப் பின்னணியில் கைதேர்ந்தவர்களாக இருப்பினும் சமூகப் பின்னணியால் இடர்ப்படுகின்றனர். சில கிராமங்களில் போதுமான இணைய வசதி இல்லை. குறிப்பிட்டுச் சொல்லப்போனால் கல்விநிலையில் முன்னேற்றம் கண்டுவரும் பழங்குடிகளுக்கு இவை இன்னும் சிரமத்தைத் தருகின்றன. இன்னும் சரிவரப் போக்குவரத்து இல்லாத எத்தனையோ கிராமங்கள் நம் தமிழகத்திலும் இந்தியாவிலும் இருக்கின்றன. அந்தச் சூழ்நிலையில் கடுமையான உழைப்பின்வழி கல்வி கற்றுவரும் மாணவர்களிடையே இணையக்கல்வி முழுமையாகச் சென்றடையவில்லை என்பது மறுக்க இயலா உண்மை.

ஆசிரியர் நிலை

இருதலைக்கொள்ளிகளாய் மாறியிருக்கிறார்கள் ஆசிரியர்கள். கல்லூரிப் பேராசிரியர்களைக் காட்டிலும் பள்ளிக்கல்வி ஆசிரியர்கள் மிகுந்த சிக்கல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். மடிக்கணினியின்றி, பெரும்பாலும் கைப்பேசி வழியாகவே பாடம் புகட்டும் இவர்களுக்கு மாணவர்களைச் சமாளிப்பதில் இன்னும் சிக்கல். இணையவழிக்கல்வி, மாணவர்களுக்கு மட்டும் புதிதல்ல. ஆசிரியருக்கும்தான் என்பது யாருக்குப் புரியும்? எவ்வளவு தெளிவாகப் பாடம் எடுத்தாலும் தொழில்நுட்பம் மாணவர்களிடையே தொய்வை ஏற்படுத்துகிறது. இதன் காரணம் பல மணிநேரங்கள் கைப்பேசியில் செலவிடுவது. மாணவர்களிடையே கைப்பேசிப் பயன்பாட்டைக் குறைக்க ஆசிரியர்கள் எத்தனையோ ஆலோசனைகளை வழங்கிய காலம்போய் இவர்களாலேயே ஊக்குவிக்கும் காலமும் வந்துவிட்டது. இதுதான் சமூக மாற்றமோ.

முடிவுரை

இணையம் உலகையே தன்வயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அறிவியல் முன்னேற்றமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் தேவைதான். இருப்பினும் அது மனித மூளையைப் பாழ்படுத்தி நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் வல்லமை பொருந்தியதாய் மாறிவிடக் கூடாது என்பதில் சிறிதும் ஐயமில்லை. இணையத்தின் இசைவுக்குத் தக்க நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோமோ என்பது கவலை அளிக்கிறது. இவ்வாற்றல் மிக்க தொழில்நுட்பக் கல்விமுறைகள், மனிதமூளையை சிதைப்பதோடு சிந்திக்க விடாமலும் செய்கின்றன. உதாரணமாகச் சொல்லப்போனால் நாம் சமூகத்தில் எத்தனையோ விடயங்களைத் தேடிப் பெற்றிருக்கிறோம். அவை நமக்கு வாழ்க்கைக் கல்வியை மட்டுமல்ல, வாழவும் கற்றுக் கொடுத்திருக்கிறது. இன்று நம் தேடல் என்பது கூகுளோடு நின்றுவிடுகிறது. அதனாலே, நாம் சிந்தனை செய்யா உயிரினங்களோடு ஒன்றிவாழும் சூழலுக்கு நகர்ந்து விடுவோமோ எனச் சிந்திக்கத் தோன்றுகிறது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க