படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 12
முனைவர் ச. சுப்பிரமணியன்
ஏகாபுரம் வெங்கடேசன் அரற்றிய ‘பொல்லா வினையேம்!’- ஒரு பன்முக மதிப்பீடு!
முன்னுரை
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் ‘செய்யுமாறே’” என்றார் திருமூலர். படைப்பிலோ பாட்டிலோ நன்றாகப் படைப்பது, அதற்கு மாறாகப் படைப்பது என்பதெல்லாம் நமக்குப் புரியாத ஒன்று. பாட்டின் தொனி புரிந்தால் போதும். தொடங்கியதில் ஐக்கியமாவதே வாழ்வு. படைப்பின் நோக்கம் உலகம் உருண்டை என்றால் புறப்பட்டவன் புறப்பட்ட இடத்திற்கே சென்றடைவதுதான் நியதி. படைப்பவனைப் புரிந்து கொள்ளுதல். படைப்பவனைப் புரிந்து கொள்ளுங்கால் அவனின் சிறந்த வேறின்மை தானாகப் புரியும். புரிந்ததைப் புகழ்வது புரிந்தவர் கடன். அந்தக் கடனைத்தான் திருமூலர் கூறுகிறார். “நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்! நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்! ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்! அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்’ என்று பாரதி பாடியதில் சமுதாயம் சார்ந்ததொரு நல்வினைக்கு அவரவர் தன்னால் ஆன தனக்கு இயன்ற தனக்குத் தெரிந்த வகையில் உதவ முன்வர வேண்டும். ‘வாய்ச்சொல்லில் வீரர்’ என்ற ஒரு தொடரை வாழவைப்பதற்காகவே தமிழினம் என்ற நிலை தொடர்ந்து நிலைத்து விடக்கூடாது. ஓய்வு பெற்ற பேராசிரியர் என்ற முறையில் எனக்குத் தெரிந்த வகையில் என்னால் இயன்ற சிறு தொண்டினை என் தமிழினத்திற்காகவும் மொழிக்காகவும் செய்து வருகிறேன். அல்லது செய்து வருவதாகக் கருதிக் கொள்கிறேன். அருமைத் தம்பி அண்ணா கண்ணன் பதிப்பிக்கும் ‘வல்லமை’ மின்னிதழில் ‘படித்தேன் சுவைத்தேன் பகிர்ந்தேன்’ என்ற தொடர் என் கண்ணுக்குத் தெரிந்த சில அகல்விளக்குகளை ஆகாயச் சூரியனாக்க எத்தனிக்கிறேன். அவ்வொளியைப் பிழம்பு என அறிந்ததால். ஊரிருட்டை நீக்கும் கவிதையொளிப் பிழம்புகள் உள்ளிருட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பதில் எனக்குச் சம்மதமில்லை. அந்த வகையில் ஒரு நெசவாளர் குடும்பத்தில் பிறந்து பள்ளியிறுதி வகுப்புக்குப் பிறகு கல்வியைத் தொடர முடியாத சூழலில் தமிழைப் படிப்பதிலும் தமிழ்க் கவிதைகளைப் படிப்பதிலும் சுவைத்தனவற்றை உரைப்பகுதிகளுடன் பதிவிடுவதிலும் கவிதை படைப்பதிலும் தணியா ஆர்வம் காட்டிவரும் அன்புத் தம்பி ஏகாபுரம் வெங்கடேசன் முகநூல் பக்கங்களில் எழுதிய சில அறுசீர் விருத்தங்களில் அமைந்துள்ள பன்முகச் சிறப்பினை இந்தக் கட்டுரை பந்தி வைக்க முயலுகிறது.
முகஸ்துதியில் மயங்கிக் கிடக்கும் முகநூல்
‘முகஸ்துதி’ என்ற சொல் வடமொழியாக இருக்கலாம். இதற்கிணையான தமிழ்ச்சொல்லை என்னால் அறியக்கூடவில்லையாதலின் அதனை அப்படியே பயன்படுத்துகிறேன். அறிவியல் கண்டுபிடிப்புக்கள் இரண்டு வகையில் திசை மாறுகின்றன அல்லது தடம் கவிழ்கின்றன. ஒன்று கண்டுபிடிப்பின் நோக்கத்திற்கு எதிராகப் பயன்படுத்துவது. இரண்டு அதனைப் பயனற்ற முறையில் பயன்படுத்துவது. முன்னதற்குத் துப்பாக்கியும் பின்னதற்குச் செல்போனும் எடுத்துக்காட்டுக்களாகலாம். பின்னதோடு இன்றைக்குக் கூடுதலாக உடனடியாகச் சேர்க்க வேண்டியது முகநூல். பயனற்ற பதிவுகள், போலிப் பராட்டுக்கள், வீணான வாதங்கள் அதனால் ஏற்படும் வருத்தங்கள். இன்னும் பல. முகநூல் இயங்கும் இலக்கியக் குழுமத் துல்லியம், ஆழம், நுண்ணியம் என்பன அருமையினும் அருமை. வெற்றுச் சடங்குகளால் ஒரு அருமையான ஊடகப்பயன் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. தனிமனித வழிபாடு, தன்னை முன்னிலைப்படுத்துதல், தனக்காகவே கவிதை என்ற பெயரில் தான் எழுதியவையெல்லாம் கவிதை என எண்ணிக் கொள்ளுதல் என இதன் பரப்பு தொடுவானம்போல் விரிந்து கொண்டே செல்கிறது. நாற்புறமும் எரிந்து கொண்டிருக்கும் இந்த மின்மினி ஒளியில்,
“அகன்ற உலகம் நான் என்றது அகல்!
அழகிய உடல் நான் என்றது திரி!
அசையும் உயிர் நான் என்றது சுடர்
உழைப்பு வடித்த உதிரத் துளிகளாய்த்
தேங்கிய எண்ணெய் வாய்திறக்கவே இல்லை!”
என்னுமாறு நாளும் தமிழ்வளர்க்கும் சில அகல்விளக்குகளில் தம்பி ஏகாபுரம் வெங்கடேசனும் ஒருவர்.
முகநூலில் வெளிறும் கவிதை முகம்
‘இரத்த சோகை’ என்றதொரு சொல்லைச் செவிமடுத்திருக்கலாம். அந்தச் சொல் இன்றைய தமிழ்க் கவிதைகளுக்குப் பொதுவாகவும் முகநூல் கவிதைகளுக்குச் சிறப்பாகவும் பொருந்தும் என்பது என் கருத்து. அதனை உறுதி செய்வதற்கான வலிமையான தரவுகள் என்னிடம் ஏராளம்! கவிதையால் மட்டுமே சொல்ல முடியும் என்பவற்றைத்தான் கவிதையாக்க முடியும் என்னும் சாதாரண அடிப்படை உண்மை கூடத் தெரியாத பலரும் பாட்டெழுத வந்த பாவத்தை நான் அல்லவா அனுபவிக்க வேண்டியதிருக்கிறது? எழுதுகிற காதல் கவிதைகளில் காதல் இல்லை! சமுதாயச் சிக்கல்களைப் பற்றிய கவிதைகளில் சமுதாயப் பார்வை இல்லை. குழந்தைகளைப் பற்றிய பாடல்களில் மழலை இல்லை.
ஏகாபுரத்தாரின் இளகிய நெஞ்சம்
‘நெஞ்சக் கனகல்லும் நெகழ்ந்துருக’ என்பார் அருணகிரிநாதர். தம்பி வெங்கடேசன் மனமுருக மதுரை மீனாட்சியைச் சேலத்திலிருந்தே வணங்குகிறார். வாழ்த்துகிறார். பக்தியை விட்டு விலகினால் தமிழே இல்லை என்பது சுண்ணாம்பு சேராமல் வெற்றிலை மணக்காது வெளிநாக்கு சிவக்காது என்பது போலச் சத்தியம். பக்தி என்பது மூடநம்பிக்கை என்பது அறியாமையின் ஆளுமை. பக்தியுணர்வைப் பகுத்தறிவால் அளக்கலாம் என்றால் பகுத்தறிவைப் பக்தி வெல்ல முடியாதா என்ன? வல்லாண்மை மிக்கதொரு மாபெரும் தமிழ்ச்சமுதாயத்தைக் கட்டமைத்துக் காத்த பெருமை பக்தி இயக்கங்களுக்கு உண்டு. அதற்குக் கருவியாக இருந்தது செந்தமிழ். ‘எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம் பொதுமக்கள் விரும்பும் மெட்டு இவற்றினை உடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகின்றான்’ என்று எழுதினார் பாரதியார். பாரதி கையாளும் புதிய உயிர் என்னும் சொல்நேர்த்தி காண்க. அது அழகானது. ஆழமானது. செத்துப் பிணமான தமிழுக்கு இத்தகைய காவியங்கள் புதிய உயிராம். எனக்குத் தெரிந்தவரை உயிரில் பழையது, புதியது என்ற பார்வையைப் பாரதியைத் தவிர வேறு யாரிடமும் கண்டதாக நினைவில்லை. நையாண்டியும் நக்கலும் கிண்டலும் கேலியும் ஆரவாரமும் போலித்தனமும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் முகநூல் பக்கத்தைத் தம்பி வெங்கடேசனின் இந்த மீனாட்சிப் பரவல் தூய்மை செய்கிறது. எல்லாரும் மேற்கே செல்கிறபோது கிழக்கே செல்லுகிறார் வெங்கடேசன். தான் உதிக்க வேண்டிய திசையைத் தானே தீர்மானித்துக் கொள்கிறார்.
கடலை நோக்கிய நதிகளின் திசைகள்
இறைவனைப் போற்றிப் பரவும் பாடல்களில் பல நெறிகளைக் காணலாம். இவற்றை வெளிப்பாட்டு உத்திகள் என்பதைவிட இறைவன் அருள் வேண்டிய நிலையிலும் அதனைப் பெற்ற நிலையிலும் உணர்ந்த நிலையிலுமாக வெளிப்படும் உணர்ச்சிக் கோலங்கள் என்பது இன்னும் பொருத்தமாகலாம். வேண்டுதல் விண்ணப்பங்களாகும். விண்ணப்பம் ஏற்கப்பட்ட நிலையில் அடியவனுக்கு ஏற்படும் ஆனந்தக்களிப்பு, பெற்ற களிப்பினைப் பெறாஅர்க்குச் சொல்லி மகிழ்தல், அஃறிணையை நோக்கியும் அவன்புகழ் பாடச் சொல்லுதல் என எல்லா நிலையிலும் வெளிப்படுவது அவன் திருப்புகழே!. இறைவன் அருள் வேண்டிய நிலையில் பாடப்படும் விண்ணப்பங்கள் தமிழில் எராளம். இதனை மடலின் வளர்ச்சிநிலை என்றும் கூறலாம். சீட்டுக்கவி என்பதும் அது. சிறிய திருமடல், பெரிய திருமடல், பிள்ளைச் சிறுவிண்ணப்பம், பிள்ளைப் பெறுவிண்ணப்பம் என்றெல்லாம் தமிழில் உண்டு. மணிவாசகப்பெருமான் நீத்தல் விண்ணப்பம் என்றே ஒரு பதிகத்தைப் பாடியிருக்கிறார். இந்த இலக்கிய உத்தி கச்சை நெய்கின்ற ஒரு சாதாரண நெசவாளி இளைஞன் பாடுகிற பாடலில் இயல்பாக அமைகிறபோதுதான் அது மரபாகிறது. ‘பாடுகிறவன் நான் ‘மரபுப்பாடல் பாடுகிறேன்’ என யாப்பு முரசறைந்து கொண்டு இதனைப் பாடவில்லை. மதுரை மீனாட்சியை மனத்துள் எண்ணுகிற அவன் உதடுகள் முணுமுணுப்பில் மரபு தனியாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது. ‘விருத்தப்பொதி’ சுமப்பதனாலேயே தம்மை மரபுக் கவிஞர்கள் எனக் கருதிக் கொள்வார் கவனிக்க வேண்டும். கருவிளம், புளிமா என்பதால் இது மரபுப்பாடல் அன்று. இறைவியின் பெரும்புகழை மரபுவழி விதந்தோதி வேண்டுதலாதலின் இது மரபுப் பாடல்!
தொன்ம இழைகள்
வழக்காடி நீதி பெற பாண்டியன் அவைக்குச் சென்ற கண்ணகி வாயிற்காவலனிடத்தில் தன் வருகையைத் தெரியப்படுத்துகிறாள். எப்படி? இப்படி!
“வாயி லோயே! வாயி லோயே!
அறிவரை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே
இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத்தாள்’ என்று
அறிவிப்பாயே! அறிவிப்பாயே! என”
என்ற அளவில்தான் கண்ணகி பேசுகிறாள். அவள் கொந்தளிப்பு அடங்குதற்கு முன்பே காவலன் மன்னனிடம் பேசுவதாக அமைக்கிறார் அடிகள். கண்ணகியைக் கண்ட காவலனின் நடுக்கத்தையோ நடைவேகத்தையோ அவர் வண்ணனை செய்யவில்லை. ‘நாடுகாண் காதை’, ‘காடுகாண் காதை’, ‘அந்தி மாலை சிறப்புச் செய்த காதை’ என்றெல்லாம் பாடி நெடுங்கதையாக வண்ணனைச் செய்த அடிகள் ‘என’ என்னும் இடைச்சொல்லை வினைமாற்றாகப் பயன்படுத்தி மதுரையின் அழிவையும் பாண்டியனின் அழிவையும் விரைவுப்படுத்துகிறார். அந்த விரைவிலும் கண்ணகியின் தோற்றத்தை வாயிற் காவலன் வழியாகச் சித்திரித்துக் காட்டும் அடிகளின் படைப்பாளுமை வியக்கத்தக்கது.
வாயிற்காவலன் பாண்டியனிடத்தில் சொன்னவை
மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணீருமாக ஒருத்தி நின்றாள் என அடிகளே சொல்லியிருக்கிறார். அதனையே சொல்லியிருக்க வேண்டிய காவலனைத் தொன்மப் பின்புலத்தைச் சித்திரிக்க வைத்துக் கண்ணகியின் தோற்றத்தைக் காட்சிப்படுத்துகிறார். படைப்பாளர் நெசவுத் தொழில் வல்லாராதலின் தமது அரற்றல் கவிதையில் தொன்ம மரபுக் கூறுகளை இழைகளாக்கி நெய்துள்ளார். பாண்டியன் கோவில் வாசலில் தான் ‘நின்ற கோலத்தைக் கண்ணகி சொல்லவில்லை. தன்னைப் பற்றிய செய்திகளைத்தான் சொன்னாள். அவள் சொல்லை செவிமடுத்த வாயிற் காவலன் அவள் சொன்னதையும் சொன்னான். தான் கண்டதையும் சொன்னான். எப்படி?
“அடர்த்தொழு குருதி அடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலை பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேற் தடக்கை கொற்றவை அல்லள்!
அறுவர்க்கு இளைய நங்கை இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்
தாரகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்”
பதச்சோறாகக் காட்டப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டு இது. மரபிழை அறுந்துவிடாமல் இருக்கப் பழந்தமிழ்ச் சான்றோர்கள் செய்திருக்கிற கவிதை உத்தி இது. சங்க இலக்கியங்களில் தொன்மக் குறிப்புக்கள் இடம்பெற்றதற்கு இதுதான் காரணம். மரபு மண்ணொடு கலந்தது, மக்கள் மனத்தோடு கலந்தது! இனித் தொன்மம் என்பதே நாட்டார் வழக்கு என்பதை உணர்தல் வேண்டும். மக்கள் வழிவழியாகப் பேசிக் கொள்ளும் கதைகளே பின்னர் தொன்மச் சாயம் பூசப்பட்டிருக்கலாம் என்பது ஒதுக்கிவிட முடியாத அனுமானம். சிறுதெய்வ வணக்கங்களுக்கு வரலாறு இருப்பது போலப் பெருந்தெய்வம் தோன்றிய காலத்திலும் இருந்திருக்க வேண்டும். அவற்றைப் பற்றிய மிகைக் கற்பனையே தொன்மமாகலாம் என்பதும் ஒன்று.
“மங்கையர்க்கரசியாக மதுரைமா நகரினுள்ளே
அங்கயற்கண்ணியாகி அருந்தமிழாட்சி செய்யும்
செங்கண்மால் தங்கை”
என்னும் வரிகளில் திருவிளையாடற் புராணத்தின் உமையே மலையத்துவசன் செய்த வேள்வியில் தடாதகைப் பிராட்டியாராகத் தோன்றி ஆட்சிக்கு உரிமை பெற்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீனாட்சி மதுரையை ஆண்ட கதை
கந்தர்வலோகத்தில் வசித்த விசுவாவசு என்பவன், சிவனருளால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அவளுக்கு வித்யாவதி எனப் பெயர் சூட்டி வளர்த்தான். வித்யாவதி சிறு வயதிலேயே அம்பாள் மீது அளவற்ற பக்தி கொண்டாள். ஒரு சமயம் அவளுக்கு மண்ணகத்துள்ள புண்ணிய தலத்தில் அருளும் அம்பிகையைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை உண்டானது. தன் விருப்பத்தைத் தந்தையிடம் தெரிவித்தாள். தந்தையோ கடம்பவனம் எனப்பட்ட மதுரை தலத்தைச் சுட்டிக்காட்டி அங்கு அருளும் அம்பிகை சியாமளையை வழிபடும்படிக் கூறினான். அதன்படி அம்பாளைத் தரிசிக்க வித்யாவதி இங்கு வந்தாள். சியாமளாதேவி சன்னதி முன் நின்று மனம் உருக வழிபட்டாள். அந்தத் தலம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போகவே அங்கேயே தங்கிச் சேவை செய்தாள். அவளுக்கு மூன்று வயது சிறுமியாகக் காட்சி தந்த அம்பிகை, “என்ன வரம் வேண்டும் கேள்!’ என்றாள். அம்பாளைக் குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி எப்போதும் தான் அவள் மீது பக்தி கொண்டிருக்க வேண்டுமென்றும், குழந்தையாகக் காட்சி தந்த நீ எனக்கு மகளாகப் பிறக்கும் பாக்கியத்தைத் தர வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டாள்.
அம்பாள், அவளது விருப்பம் அடுத்த பிறவியில் நிறைவேறும் என்று வாக்களித்தாள். இதன்படி, அடுத்த பிறப்பில் சூரிய வம்சத்தில் வந்த மன்னன் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையாக அவதரித்தாள் வித்யாவதி. அம்பாள் பக்தையாகத் திகழ்ந்த அவளை மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னன் மணம் முடித்தான். இவ்விருவருக்கும் புத்திரப்பேறு இல்லை. காஞ்சனமாலை, இத்தலத்தில் தனக்கு முற்பிறவியில் அருள் செய்த சியாமளையிடம் குழந்தை பாக்கியம் அருளும்படி வேண்டிக் கொண்டாள்.
மன்னனும் புத்திரப்பேறுக்காக, இங்குப் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினான். அம்பிகை, அந்த யாகத்தில் 3 வயது குழந்தையாகத் தோன்றினாள். அப்போது காஞ்சனமாலைக்கு முற்பிறவியில் அவள் வாக்களித்தது நினைவுக்கு வந்தது. மகிழ்ந்த மலையத்துவசனும், காஞ்சனாதேவியும் அவளை சீரும், சிறப்புமாக வளர்த்தனர். ஆண் வாரிசு இல்லாத மன்னன், அவளுக்கு ஆயகலைகளையும் கற்றுக்கொடுத்தான். தனக்குப் பின்பு மதுரையை ஆட்சி செய்யும் பொறுப்பையும் ஒப்படைத்தான். இவள் மீன் போல எப்போதும் விழிப்புடன் இருந்து, மதுரையை ஆட்சி செய்ததால், “மீனாட்சி’ என்று பெயர் பெற்றாள். இதன்பிறகு சியாமளை என்ற பெயர் மங்கி, மீனாட்சி என்ற பெயரே இவளுக்கு நிலைத்து விட்டது. இவ்வாறு, தன்னை வேண்டிய பக்தைக்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் அருளுகிறாள்.
“வெள்ளியம்பலத்துறையும்
விரிசடைக்கடவுள் தன்னை
உள்ளியம் மணம்புரிந்த
உமையவள்”
என்னும் பதிவினால் ‘கொன்றையம் சடை குழகனாகிய சிவபெருமானே பிராட்டியின் மன்றலுக்கு உரியவன்’ என்னும் பரஞ்சோதியின் திருவாக்கை நினைவுபடுத்துகிறார்.
கால் மாறி ஆடியவனின் கருணை
மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் எனப் பலரும் மதுரைக்கு வந்தனர். இவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய மகரிஷிகளும் அடக்கம். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மட்டும் சாப்பிடவில்லை. இவ்விருவரும் சிதம்பரத்தில் நடராஜரின் நடனம் கண்டு உண்ணும் வழக்கமுடையவர்கள். அவர்களை மணவீட்டார் சாப்பிட அழைத்தனர்.
தாங்கள் சிவதாண்டவம் கண்ட பின்பே சாப்பிடுவோம் என்றனர் இருவரும். அதனைக் கேட்ட சிவன், மகரிஷிகளுக்காக இங்கு ஆனந்தத் தாண்டவம் ஆடிக்காட்டினார். இதைப் பார்த்த பிறகே மகரிஷிகள் சாப்பிட்டனர். பிற்காலத்தில் மதுரையை ராஜசேகர பாண்டிய மன்னன் ஆண்டான். சிவபக்தனான அவன் ஆயகலைகளில், அறுபத்து மூன்றினைக் (63) கற்றுத்தேர்ந்தான். பரதம் மட்டும் பாக்கியிருந்தது. ஒரு சமயம் அவன் மற்றொரு மன்னனுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனவே, பரதம் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படவே, அதைக் கற்றான். முதல் நாள் பயிற்சி எடுத்த மன்னனுக்குக், காலில் கடும் வலி உண்டானது. அப்போதுதான் அவனுக்கு ஓர் உண்மை உரைத்தது.
“ஒருநாள் ஆடிய நமக்கே இப்படி வலிக்கிறதே! இங்கே எம்பெருமான் தொடர்ந்து ஒரே காலை மட்டும் ஊன்றியல்லவா ஆடிக்கொண்டிருக்கிறார்? அவருக்கு எவ்வளவு வலி இருக்கும்?” என நினைத்தவன், நடராசர் சன்னதிக்குச் சென்றான். சென்று தனக்காக இடக்காலை ஊன்றி, வலக்காலைத் தூக்கி ஆடுமாறு வேண்டினார். சுந்தரேஸ்வரர் சன்னதி முன்புள்ள மகாமண்டபத்தில் கால் மாற்றி ஆடிய கோலத்தில் காட்சி தருகிறார் நடராசர்.
சிவன் பாதம் பார்க்க வேண்டுமா? சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும். எனவே சிவனின் இடக்கால் அம்பிகைக்குரியது ஆகிறது. பொதுவாக கோயில்களில் நடராஜர், இடக் காலை தூக்கித்தான் ஆடிய கோலத்தில் இருப்பார். எனவே, அவரது தூக்கிய திருவடியை அம்பாள் பாதமாகவே கருதுவர். ஆனால், இக்கோயிலில் வலக்காலை தூக்கி ஆடிய கோலத்தில் இருப்பதால், இந்த பாதத்தைச் சிவனின் பாதமாகக் கருதுகின்றனர். சிவத்தலங்களில் இங்கு மட்டுமே சிவனின் பாதத்தைத் தரிசிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.
“நின்றகால் மாற்றியாடி
நேயத்தார் விருப்பந்தீர்த்த
கொன்றையஞ்சடையன்”
என்னும் வரிகள் உணர்த்துகின்ற கதையை இப்படி வழிமொழிகிறார் ஏகாபுரத்தார்.
மீனாட்சி பெயர்க்காரணம்
கண்ணொளி தந்த அங்கயற்கண்ணி அன்னை மீனாட்சிக்கு அங்கயற்கண்ணி என்ற கண்ணோடு சம்பந்தப்பட்ட பெயர் உண்டு. இதற்கு மீன் போன்ற கண்களை உடையவள், மீன் தன் குட்டிகளைக் கண்களாலேயே பாதுகாப்பது போலக் காப்பவள் என்றெல்லாம் பொருள் சொல்வார்கள். ஆனால், தீயில் தன் கண்களை இழந்த ஒரு பக்தருக்கு அவள் கண்ணொளி வழங்கிய கதை பலரும் அறியாதது!
மெய் ஞானியான நீலகண்ட தீட்சிதர், சிறுவயதிலேயே மீனாட்சி உபாசகராகத் திகழ்ந்தார். இவரது ஞானத்தைக் கண்ட திருமலை நாயக்கர், இவரைத் தனது முதலமைச்சராக நியமித்தார். அரச பதவி ஏற்றாலும் ஆன்மீக வாழ்க்கையைக் கைவிடாது தத்துவ மார்க்கத்தில் ஈடுபாடு கொண்டு விளங்கினார் தீட்சிதர். நீலகண்டருக்கு ஒரு பெருஞ்சோதனை காத்திருந்தது. திருமலை மன்னரின் மனைவியின் சிலையைத் தீட்சிதரின் நேரடிப்பார்வையில் சிற்பி சுந்தரமூர்த்தி செதுக்கினார். ராணியின் வலத்தொடையில் மெல்லிய சில்லுக்கல் சிதறி விழுந்தது சிலையில் குறையாகத் தெரிந்ததால் சுந்தரமூர்த்தி அதைச் சரி செய்ய முயன்றார். மீண்டும் அதே இடத்தில் சில்லு சிதறி விழுந்தது. தெய்வீகக்கலையில் கைதேர்ந்த தீட்சிதரிடம் சிற்பி இதுபற்றித் தெரிவித்தார். ஞானக்கண் கொண்டு பார்த்த தீட்சிதருக்கு ராணியின் வலத்தொடையில் மச்சமிருப்பது தெரிந்தது. ஆகையால், அது அப்படியே இருக்கட்டும் என்று சிலையை அமைத்துவிடும்படிக் கட்டளையிட்டார். நடந்த நிகழ்ச்சிகளை அறிந்த திருமலை நாயக்க மன்னர் மனத்தில் ஐயம் ஏற்பட்டது. அவரைக் கைது செய்யும் படி உத்தரவிட்டார். காவலர்கள் அவரது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் நடந்ததைத் தெரிவித்துக் கைது செய்ய வந்திருப்பதாகக் கூறினர். அப்போது, மீனாட்சியம்மைக்குக் கற்பூர ஆராதனை செய்து கொண்டிருந்த தீட்சிதர் தன் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த மாமன்னர் தன் மீது ஐயமுற்றதை எண்ணி வருந்தினார். உணர்ச்சிவசப்பட்டவராய்க், கற்பூர ஜோதியைத் தம் கண்ணில் வைத்துக் கண்களைப் பொசுக்கிக் கொண்டார். மன்னருக்குச் செய்தி பறந்தது. அவர் தம் தவற்றை உணர்ந்துத் தீட்சிதரின் இல்லத்துக்கு ஓடோடி வந்து தவறுக்கு வருத்தம் தெரிவித்தார். ஞானமே வடிவான தீட்சிதர் மீனாட்சியம்மை மீது “ஆனந்த சாகர ஸ்தவம்” என்னும் 108 ஸ்லோகங்களைச் சொல்லிப் பாடினார். அப்போது மீண்டும் கண்ணொளி கிடைத்தது. பின்னர் திருமலை மன்னர், நீலகண்டருக்குத் திருநெல்வேலி அருகிலுள்ள ‘பாலாமடை’ என்ற இடத்தைத் தானமாக அளித்தார். அங்கே ஒரு சிவாலயம் அமைத்த தீட்சிதர், அம்மையையும் அப்பனையும் வழிபட்டு அங்கேயே சமாதிநிலை அடைந்தார்.
காலனை உதைத்த கதை
மார்க்கண்டேயன் வரலாறு அனைவருக்கும் தெரியும். ஆனால் அவனுயிரை எடுக்கின்ற அவசரத்தில் எமதருமன் செய்த தவற்றைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ‘என்றும் பதினாறு மார்க்கண்டேயன்’ வரலாற்றில் எம்பெருமான் சிவனையும் தம் பாசக்கயிற்றால் கட்டி இழுத்துப் பாவம் செய்தவன் காலதேவன். அந்தக் காலதேவனைத் தம் காலால் எட்டி உதைத்து மார்க்கண்டேயனைக் கரைசேர்த்தவர் சிவபெருமான்.
காலனையுதைத்த நீலக்
கழுத்தனோடுடனமர்ந்த
கோலமே அழகுக்கெல்லாம்
உயர்ந்தவோர் கோலமே!
மிருகண்டு முனிவருக்கும், மருத்துவதி அம்மைக்கும் நீண்ட நாட்களாக பிள்ளைப்பேறு இல்லாததால் முனிவர் சிவனை நினைத்து செய்த கடும் தவத்தின் மூலம் வரமொன்றினைப் பெற்றார். அவ்வரத்தினால் முனிவருக்கும், மருத்துவதி அம்மைக்கும் பிறந்த குழந்தைதான் மார்க்கண்டேயன். மார்க்கண்டேயனுக்கு 16 வயது ஆனவுடன் ஆயுள் முடிந்துவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்த வரலாறு. தனது பிறப்பைப் பற்றிய மந்தணைத்தை அறிந்து கொண்ட மார்க்கண்டேயன் 107 சிவத்தலங்களைத் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தான். 108 ஆவதாகத் திருக்கடையூரில் உள்ள சிவ தளத்திற்கு வந்து தரிசனம் செய்தான். அன்றுதான் மார்க்கண்டேயனுக்கு இறுதி நாளாக இருந்தது. எமதர்மன் மார்க்கண்டேயரின் உயிரைப் பறிப்பதற்காகப் பாசக்கயிற்றை வீச நேராகவே வந்து விட்டார். எமனைக்கண்டு நடுங்கிய மார்க்கண்டேயர் ஓடிச்சென்று அமிர்தகடேஸ்வரரை இறுகக் கட்டிக் கொண்டார். எமன் பாசக்கயிற்றை வீச, அது மார்க்கண்டேயரோடு இலிங்க உருவில் இருந்த அமிர்தகடேஸ்வரரையும் சேர்த்து சுருக்குப் போட்டு இழுத்து விட்டது. சிவபெருமானையே பாசக் கயிற்றால் கட்டி இழுத்த எமதர்மரைச், சினந்தெழுந்த சிவபெருமான் கீழே தள்ளிச் சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்து, மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறாக இருக்கவும், சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தையும் சிவபெருமான் அளித்துவிட்டார்.
கழுத்தனோடு அமர்ந்த கோலம் என்றது நுண்ணியம் மிக்கது. பக்கம் பக்கமாக அமர்வது வேறு மணமக்களைப் போல. மெய்யில் பாதியாக இடம் பெறுவது என்பது அதனினும் வேறு. மணமக்கள் என்னதான் ‘நீயின்றி நானில்லை நிலவன்றி வானில்லை’ எனத் திரைப்பட உரையாடலைப் பேசினாலும் அவ்வாறு இரண்டறக் கலப்பது இன்றைக்கு மட்டுமன்று என்றைக்கும் இயலாது. இங்கே கவிஞர் ‘கழுத்தனோடு உடன் அமர்ந்த’ என ஒரே உருபினை இரண்டுமுறை பயன்படுத்தியதற்கு அதுதான் காரணம். கழுத்தனோடு அமர்ந்த என்பது வேறு. கழுத்தனோடு உடன் அமர்ந்த என்பதன் பொருள் வேறு. பின்னது மாதொரு பாகனைக் குறிப்பது. ஒடு என்பதனை அசைநிலையாகக் கொள்வதும் ஒன்று.
மஞ்சு செய்த இன்னல்
சித்திரைத் திருநாளில் அபிடேகப் பாண்டியன் சோமசுந்தரப் பெருமானுக்கு நித்திய அநித்தியங்களைச் செம்மையாகச் செய்தான். அவனுடைய வழிபாட்டினாலே பெருமானுக்குக் கற்பூரச் சுந்தரர் என்னும் திருநாமம் வழங்கலாயிற்று. அது நாளில் பெருமானை வழிபட வேண்டிய இந்திரன் பாண்டியனுக்காகக் காத்திருக்க வேண்டியதாயிற்று. நாணிய இந்திரனுக்கு வருணன் அறிவுரை கூறுவதாக எண்ணித் தன் ஆணவத்தை வெளிப்படுத்தினான். கடல் நீரை ஆவியாக்கிப் பாண்டிய நாடு முழுமையும் பெருமழையால் பெருவெள்ளத்தை வரச்செய்தான். இதனை அறிந்த அபிடேகப் பாண்டியன் இறைவனிடம் முறையிட, இறைவன் எழுமேகங்களையும் கடல் அலைகளைக் குடிக்க ஆணையிட்டார். மேகங்களைத் தடுத்துப் பாண்டியனின் இன்னல் நீக்கிய கதையை,
“மஞ்சுவந் தின்னல் செய்த
மாடமா நகரத் தார்தம்”
என்ற வரிகளில் பதிவு செய்திருக்கிறார். வருணன் விட்ட மேகங்களைத் தடுத்ததையும் நான்மாடக் கூடல் ஆன வரலாற்றுப் புனைவுகளையும் கலந்து தருகிறார் வெங்கடேசன்.
கற்பனையும் நுண்ணியமும்
புலமை இருந்தால் பா புனையலாம். கற்பனைக்குப் புலமை பயன்படாது. புனைதல் அறிவின் தொழில். கற்பனை இதயத்தின் நிழல். இயற்கைப் பொருளோடு இரண்டறக் கலக்கும் உள்ளம் இருந்தாலேயொழிய. கற்பனை சிறக்காது. இறைவன் இயற்கை. கணவன் அழகாக அமைய வேண்டும் என்று நினையாத மனைவியோ மனைவி அசிங்கமாக அமையவேண்டும் என்று நினைக்கின்ற கணவனோ உலகில் இல்லை. ஆனால் உமாதேவி யாருக்குப் பாதியானாள் என்றால்,
‘வெந்தநீறணிந்த பெம்மான்
மேனியில் பகுதியாகி’
என்று எழுதுகிறார் கவிஞர். காடுடைய சுடலைப் பொடி பூசிய கணவனுக்குப் பாதியானாளாம் அன்னை. ‘சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடி’ என்பார் பட்டர்.
“எந்தமிழ்ப் புலவர் யாத்த
எழுத்துக்குப் பிள்ளையாகி
அந்தமில்லாட்சி செய்யும்
அன்னை”
என்ற வரிகளில் புதுமணம் வீசும் கற்பனையைப் பதிவு செய்திருக்கிறார் வெங்கடேசன். உலகிற்கு அன்னையாக இருப்பவள் அவள். ஆனால் இந்த மொழிக்குப் பிள்ளையாகி இருக்கிறாளாம். மன்னராட்சிக்குக் காலவரையறை உண்டாதலின் அன்னை மீனாட்சியின் அருளாட்சிக்கு எல்லையில்லை என்பார் ‘அந்தமில் ஆட்சி செய்யும் அன்னை’ என்றார். எல்லா உலகங்களையும் ஆளுகிற மாட்சியைக் குறிப்பால் உணர்த்தினார் என்பதாம். இனி எழுத்துக்குப் பிள்ளை என்பதைக் குமரகுருபரர் முதலியோர் பாடிப் பரவிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முதலிய இலக்கியங்களைக் குறித்ததாகவும் கொள்ளலாம்.
“கொன்றையஞ் சடையன் நெஞ்சைக்
கொய் பசுங்கிளியினாளின் மன்றம்”
என்று பாடுகிறார் கவிஞர். கிளி மேனியில் பல வண்ணம் உண்டேயன்றிப் பல வண்ணக் கிளிகள் யாண்டும் இல. ‘பச்சைக் கிளி’ என்பது ‘இயல்பு வழக்கு’. ஈண்டு பசுங்கிளி என அம்மையை உருவகப்படுத்தியது அடியவர் தன்னிடம் சொல்வதைக் கேட்டு அப்படியே நாயகன் சோமசுந்தரப் பெருமானிடம் மடை மாற்றம் செய்யும் செயலை நோக்கி. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்பது உலக வழக்கு. பசுங்கிளியினாள் என்னும் தலைவியின் உருவகத்திற்கு நிகராகத் தலைவனும் திகழ்கிறான் என்பார் ‘கொன்றை அம் சடையான்’ என்றார். பொதுவாகக் கிளியை ஆண்பாலுக்கும் கோவைப்பழத்தைப் பெண்பாலுக்கும் உவமிப்பது மரபு. அதனை மாற்றுகிறார். பெண்ணுக்குரிய கூந்தலை வண்ணனை செய்யும் மரபை மாற்றிக் கொன்றை அம் சடையன் என்று தலைவனுக்கு ஏற்றுகிறார்.
அவனுக்கு அந்தக் குறை தீர்த்தவள் நீ! இவளுக்கு இந்தக் குறை தீர்த்தவள் நீ! எனக்கு வந்த குறை தீர்க்கக் கூடாதா என்று வேண்டுவதுதான் அடியவர்களின் இயல்பு. அந்த இயல்பை வெங்கடேசன் தானும் பெற்றிருப்பதைக்,
“கூடல்மா நகரந் தன்னைக்
கொடுஞ்சினத் தாலெ ரித்த
மாடமா தவளி னின்னல்
மறுத்துரைத் தருளி னாளை
நாடியெங்கவலையெல்லாம்
நலங்கெடவருளக் கேட்டேம்”
என்னும் வரிகளில் பதிவு செய்திருக்கிறார். இந்தப் பதிவில் மதுரையைக் கண்ணகி எரித்ததும் மதுராபதி தெய்வம் கண்ணகியின் ஏவல் கேட்ட தொன்மத்தையும் கவிஞர் எளிமையாக அழகாகப் பதிவு செய்திருக்கிறார். அவள் துன்பத்தை நீக்கியது போலத் தம் துன்பத்தையும் நீக்க வேண்டும் என்பது மரபியல் சிந்தனை. எலும்பைப் பெண்ணாக்கியருளியதைப் போல, முதலையுண்ட பிள்ளையை மீண்டும் தந்தது போலத் தங்களுடைய துன்பத்தையும் போக்கியருள் என்னும் அடியவர்களின் வேண்டுதலையொத்தது இது!.
விருத்தக் கட்டுமானமும் தொடை விகற்பங்களும்
மரபுப் பாடல்கள் என்னுந் தொடர் பொதுவாக யாப்பமைப் பாடல்களையே குறிப்பதால் அத்தகைய பாடல்களில் தொடைவிகற்ப ஆராய்ச்சியும் கட்டுமானச் சிறப்பும் ஆய்வும் தவிர்க்க இயலாதனவே. யாப்பமைப் பாடல்களை எழுதிய பிறகு அதில் கவிதையைக் காணவேண்டுமே தவிர யாப்பினைக் காணக் கூடாது என்பது ஏற்புடைத்தன்று. அறுசீர் விருத்தமாதலின் தொடைவிகற்பங்கள் பற்றிய ஆய்வு பொருந்தாது. அவை அளவடிக்கே உரியதாதலின் என்பாரும் உளர்.
தொடைவிகற்பங்கள் அளவடியைப் பொருத்ததன்று!
அளவடியாகிய நேரடிக்குள் இடமாற்றி அமையும் எதுகை முதலாகிய தொடைகள் இணையெதுகை முதலான பெயர்களால் வழங்கப்படுகின்றன. இலக்கண நூல்களும் அதனையே எடுத்தியம்புகின்றன. ஆனால் அளவடியில் அமையாத பாடல்களின் தொடையின்பத்தைச் சுவைப்பதற்கு இந்த அளவடி வரையறை தடைசெய்வதாகக் கருத முடியாது. இலக்கண அடிப்படையில் சொல்லப்போனால் ஐந்தும் அதற்கு மேற்பட்டும் அமையும் சீர்களில் அமையும் தொடைவிகற்பங்களுக்குக் குறியீடு இல்லாத காரணத்தினாலேயே அதனைச் சுவைக்கக் கூடாது அல்லது சுவைக்க முடியாது என்பது பொருளன்று. தொடக்கப்பள்ளி மாணவர்களின் கணித வாய்ப்பாடு இருபது என்னும் எண்ணிக்கையில் நின்று விடுவதால் அதற்கு மேல் பெருக்கலே கூடாது என்பது பொருளன்று.
நெடிலடி என்பதே ஒரு சிந்தனை வளர்ச்சி. தொடைவிகற்பங்கள் நெடிலடிக்குப் பொருந்தாது என்றால் தொடைச்சுவை கிட்டுமா? கழிநெடிலடியில் அமைந்த பல்லாயிரம் பாடல்களின் நிலை என்னவாகும்? எனவே இலக்கண நூல்களின் தொடைவிகற்பக் குறிப்புக்களை வழிகாட்டிகளாகக் கொள்ள வேண்டுமேயன்றி வரையறையாகக் கொள்ளுதல் தேவையில்லை. தொடை விகற்பம் என்பதே செய்யுட் சுவையைப் பெருக்கும் உத்தி என்பதைப் புரிந்து கொண்டால் இக்கருத்தின் வன்மை மென்மைகள் ஓரளவு புரியக்கூடும்.
எனினும் ஒவ்வொரு அடியிலும் மற்றும் ஒவ்வொரு அரையடித் தொடக்கத்திலும் படைப்பாளர் செய்திருக்கும் செய்நேர்த்தியால் கவிதையின் ஒலியின்பம் கூடுவதை உணர முடியும்.
- “எங்குறை தீரக் கேட்டேம் எங்கணீர் சோரு மாறே”
- “மங்கைமா தெய்வந் தன்னை மனமொழி மெய்யால் வாழ்த்தி”
- “சேலம்வாழ் அடியேம் பட்ட சிறுமைகள் நீங்குமாறே.”
- “வெள்ளியம்பலத்துறையும் விரிசடைக்கடவுள் தன்னை”
- “உள்ளியம் மணம்புரிந்த உமையவள் திருத்தாள் நண்ணி”
- “மஞ்சுவந்தின்னல் செய்த மாடமா நகரத் தார்தம்”
- “நெஞ்சிலே குடியிருக்கும் நேரிழை திருத்தாள் நண்ணி”
- “நின்றகால் மாற்றியாடி நேயத்தார் விருப்பந்தீர்த்த”
என்னுமாறு அமைந்த அரையடி மோனைகள் ஓர் இலக்கணப் பதிவாக அன்றி இன்னிசைக் கச்சேரியாக இனிக்கிறது என்பதை ஓதுவார் உணரக்கூடும். இன எழுத்து, வர்க்க எழுத்து என்றெல்லாம் மோனைக்காகச் சொற்களைத் தேடித் தொகுப்பார் கவிதைகளில் இவ்வாறு அமைவது அரிது. பொருளோடு கூடிய உணர்ச்சி உண்மையாகவும் எளிதாகக் கைவரப்பெறப் பெற்ற யாப்பு வன்மையும் உடையார்க்கு இது எளிதிலும் எளிது. தம்பி வெங்கடேசன் பெற்ற பெருவரம் இது. இது இட்டுக் கட்டியதன்று என்பது எடுத்துக்காட்டிலிருந்து புரியக் கூடும்.
எதுகையிலும் வல்லார் ஏகாபுரத்தார்
சீர்களைச் சிலிர்க்க வைப்பது மோனை என்றால் அடிகளை அணுகுண்டாக்குவது எதுகை. ‘எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டு விட்டுச் சென்றானடி’ என்ற இடி எதுகையால் அடி அதிர்வது காண்க. ‘பட்டேனே பல துயரம் கெட்டேனா?’ என்ற உரையாடலில் அது வெடித்தே விடுவதையும் காணலாம். அதாவது மோனைகள் சீர்களைச் சிறக்கச் செய்யும். எதுகை அடிகளைச் சிறக்கச் செய்யும். இன்னுந் தெளிவாகச் சொன்னால் மோனைகள் அடிகளைச் சிறக்கச் செய்வதை விடச் சீர்களைச் சிறக்கச் செய்யும். எதுகைகள் சீர்களைச் சிறக்கச் செய்வதினும் அடிகளைச் சிறக்கச் செய்யும். எனவே தொடைவிகற்பங்களில் எதுகையால் சிறப்பன அடிகள். மோனையால் சிறப்பன சீர்கள். அத்தகைய அடிகளை எதுகையால் சிறக்கச் செய்திருக்கிறார் பாவலர்.
“மங்கையர்க்கரசியாக
மதுரைமா நகரினுள்ளே
அங்கயற்கண்ணியாகி
அருந்தமிழாட்சி செய்யும்
செங்கண்மால் தங்கை”
‘மங்கையர்க்கரசி அங்கயர்க்கண்ணி செங்கண்மால் தங்கை’ என்னும் ‘ங’கர எதுகைகள் எதுகைகளாக மட்டுமன்றி அம்மூவருக்கும் உள்ள உறவுநிலையை மனத்துள் பதிய வைக்கும் ஓர் உத்தியாகவும் செயல்படுகிறது என்பதை உச்சரிப்பார் உணர்வர். இவர் எதுகைக்காக எதுகையைக் கையாளவில்லை என்பதை இப்பாட்டிலும் தொடர்ந்து வரும் பாட்டிலும் பல அடிகளில் சரளமாக ‘ங’கரம் பயின்று வருதல் கொண்டு துணியலாம்.
“மங்கையர்க்கரசியாக
மதுரைமா நகரினுள்ளே
அங்கயற்கண்ணியாகி
அருந்தமிழாட்சி செய்யும்
செங்கண்மால் தங்கை தன்னைத்
திருவடி வீழ்ந்து பாடி
எங்குறை தீரக்கேட்டேம்
எங்கணீர் சோருமாறே”
“பொங்குதாமரைக்குளத்தில்
பொலிந்திருந்தாட்சி செய்யும்
மங்கைமா தெய்வந்தன்னை
மனமொழி மெய்யால் வாழ்த்தி
அங்கண்மா ஞாலத்தெல்லாம்
அகவிருள் நீக்கக்கேட்டேம்
எங்கண்கள் உகுத்தவெள்ளம்
யாறாகப் பாயுமாறே.”
‘ங’கர எதுகைப் பயன்பாடு அவ்வளவு எளிமையானது அல்ல என்பதைப் பயன்படுத்த முயன்று எதுகைகளை மாற்றிக் கொண்டோர் அறியக்கூடும்.
கண்ணதாசனும் வெங்கடேசனும்
இட்டு நிரப்புவது எதுகையன்று. இயல்பாக அமைவதே எதுகை. அழுகையைப் பற்றிப் பாடுகிற கண்ணதாசன் அழுவதற்காகவே தான் பிறப்பெடுத்ததாகக் கூறி இப்படி எழுதுகிறார்.
“சீசரைப் பெற்ற தாயும்
சிறப்புறப் பெற்றாள்! எகிப்து
நாசரைப் பெற்ற தாயும்
நாட்டிற்கே பெற்றாள்! காம
ராசரைப் பெற்ற தாயும்
நலம்பெறப் பெற்றாள்! என்னை
ஆசையாய்ப் பெற்ற தாயோ
அழுவதற்கென்றே பெற்றாள்!”
இந்தப் பாட்டில் கண்ணதாசன் சொல்ல வந்த சேதி தனது வாழ்க்கைத் துயரம். அதனால் வடிக்கும் கண்ணீர்! ஆனால் பாடுபொருள் முற்றிலும் மாறி முப்பெரும் உலகத்தலைவர்களின் தாயரைப் பெருமைப்படுத்தித் தன்னைப் பெற்றதற்காய்த் தன்னுடைய தாயைச் சலித்துக் கொள்வதுபோலப் பாடியிருக்கிறார். பெற்றார்கள் என்னும் ஒப்புமை நோக்கி ஒற்றுமையும் பிறப்பின் நோக்கமும் சிறப்பும் மாறுபட்டிருக்கிறது என்னும் வேற்றுமையும் நிலவுவதால் இது வேற்றுமையணி என்பர் தமிழாசிரியப் பெருமக்கள். நாம் சொல்ல வருவது என்னவென்றால் பாட்டிற்குத் தொடர்பில்லாத செய்திகளைக் கூட எதுகைத் தொடை இனிக்க வைக்கிறது என்பதாம். கண்ணதாசனின் ஒரு பாடல் இருபாடல்களில் அல்ல தொட்டவிடமெல்லாம் இந்தச் ‘செப்படி’ வித்தையைச் செய்துகாட்டியிருப்பார். “பாடுவது கவியா? இல்லை பாரிவள்ளல் மகனா?” என்று மோனையழகிற்காக மகனில்லாத பாரிக்கும் மகனிருந்ததாகப் பாடுவார் அவர். ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’ என்று உறவு நிலையின் போலித்தனத்தைப் பாட எத்தனிப்பவர் அவசரமான உலகம் என்ற சொல்லைப் போட்டு மோனையில் முத்தெடுப்பார். இத்தகைய முதிர்ச்சியான பதிவுகளைத் தம்பி வெங்கடேசன் பாட்டில் காணமுடிகிறது. இப்படி ஒரு பாடல் அரற்றல் அமைந்திருக்கிறது.
“காலனை யுதைத்த நீலக்
கழுத்தனோடுடனமர்ந்த
கோலமே அழகுக்கெல்லாம்
உயர்ந்தவோர் கோலமென்று
ஞாலமே போற்றாநிற்கும்
நங்கையை யருளக்கேட்டேம்
சேலம்வாழ் அடியேம் பட்ட
சிறுமைகள் நீங்குமாறே.”
பொதுநிலையில் வைத்துக் குறைதீர்க்கப் பாடியவர், தன் ஊர் அமைந்த மாவட்டத்தை எதுகையாக்கிக் கொள்கிறார். உண்மையில் இது காலன், கோலம், ஞாலம் என்பதற்கான எதுகையன்று. ஆனால் அவற்றின் அடிப்படையில் தோன்றிய வெகு இயல்பான எதுகை. கண்ணதாசனுக்குச் சீசரும் எதுகை. நாசரும் எதுகை. காமராசரும் எதுகை. வெங்கடேசனுக்குச் சேலமே எதுகை. அகன்ற படிப்பு என்பதனினும் ஆழ்ந்த புலமை என்பது சற்றுக் கடினமானதாக இருந்தாலும் அதனை நோக்கியே இவரது பயணம் நடக்கிறது என்பதற்கு இத்தகைய தொடைவிகற்பச் சொல்லாடல்கள் சான்றாகத் திகழ்கின்றன. ‘பச்சைப்பட்டுடுத்தி’ என்று எடுத்த எதுகைக்கு முரணாக ‘கச்சை நெய் அடியேம்’ என்று பதிவு செய்யும் பேரழகு எண்ணி மகிழத்தக்கது. வணங்கப்படுகிற அன்னைக்குப் பச்சைப்பட்டு! விழுந்து வணங்கும் அடியவன் நெய்வதோ கச்சைத் துணி! தொடை விகற்பங்களில் முரண் தனித்து நிற்பதில் வியப்பில்லை. கவிதைக் கட்டழகிக்கு முரண் ‘தொடை’தானே அழகு!
சில கருத்துரைகள்
பாடல்களின் சொல்லாட்சி உணர்வுப் பூர்வமாகவும் எளிமையாகவும் அமைந்திருக்கிறபோது செயற்கையானதொரு சொல்லாட்சி கவிதையின் ஓட்டத்தைத் தடுத்துவிடும். கேட்டோம் என்பது வழக்கு. கேட்டேம் என்பது செய்யுள். பாடல் வழக்கினைச் சார்ந்து அமையும் போது செய்யுள் தன்மைக்கு அங்கே இடமில்லை. ஒவ்வொரு பாட்டிலும் ‘கேட்டேம்’ என்னும் புலமைச் சொல் பாட்டின் ஏனைய எளிய தமிழ்ச் சொற்களோடு கலந்து நிற்காமல் கல்யாணராமன் பல்லைப்போல் தனித்து நிற்பதை உணரவேண்டும்.!
கண்ணீரை வெள்ளமாக உருவகம் செய்கிறபோது பாயும் என்ற வினை பாட்டைக் கிழடுதட்டச் செய்து விடுகிறது. வெள்ளம் பாய்கிறது என்பது கவிதையாகாது. கண்ணீர் வெள்ளம் என்பதுதான் உருவகம். ‘கொள்ளி வைக்கும் பிள்ளைகளே கொள்ளியிலே வேகுதடா! அள்ளி வச்ச தாய்விழியோ ஆறு குளம் ஆனதடா’ என்பதுதான் கவிதை. முன்னது உருவகமாகவும் அதன் வினை இயல்பாகவும் அமைவது முன்னதன் பெருமையை நிலைக்கச் செய்யாது. கண்ணீர் வெள்ளமானால் கண்கள் என்னவாகும்? என்பதைப் படைப்பாளர் சிந்தித்திருக்க வேண்டும்!.
பாட்டை எழுதி முடித்தபின் மீள் பார்வை செய்திருந்தால் இத்தகைய தடுமாற்றங்கள் களையப்பட்டிருக்கலாம். இவற்றை ஒத்துக் கொள்வதும் மறுதலிப்பதும் படைப்பாளர் உரிமை. ஆனால் அந்த உரிமை என் பார்வையைப் பங்கப்படுத்த முடியாது.
“மதுரை மாநகரினுள்ளே மங்கையர்க்கரசியாக
அங்கையற்கண்ணியாக அருந்தமிழ் ஆட்சி செய்யும்
செங்கண் மால் தங்கை தன்னைத் திருவடி வீழ்ந்து பாடி
எங்குறை தீரக்கேட்டேம் எங்கணீர் சோருமாறே” (1)
பொங்குதா மரைக்குளத்தில் பொலிந்திருந் தாட்சி செய்யும்
மங்கை மா தெய்வந்தன்னை மனமொழி மெய்யால் வாழ்த்தி
அங்கண்மா ஞாலத் தெல்லாம் அகஇருள் நீக்கக் கேட்டேம்!
எங்கண்கள் உகுத்த வெள்ளம் ஆறாகப் பாயுமாறே!” (2)
“காலனை யுதைத்த நீலக் கழுத்தனோ டுடன மர்ந்த
கோலமே அழகுக்கெல்லாம் உயர்ந்தவோர் கோலமென்று
ஞாலமே போற்றாநிற்கும் நங்கையை யருளக்கேட்டேம்
சேலம்வாழ் அடியேம் பட்ட சிறுமைகள் நீங்குமாறே”. (3)
“பச்சைப்பட் டுடுத்திக் கையில் பசுங்கிளியேந்தி வையம்
மெச்சவே இலங்கா நிற்கும் மென்றொடி தாளில் வீழ்ந்தாங்
கெச்சமென் வினைகளெல்லாம் எமைச்சேரா திருக்கக் கேட்டேம்
கச்சைநெய்யடியேம் பட்ட கவலைகள் நீங்குமாறே”. (4)
“வெள்ளியம் பலத்து றையும் விரிசடைக் கடவுள் தன்னை
உள்ளியம் மணம்புரிந்த உமையவள் திருத்தாள் நண்ணிக்
கொள்ளியாய்ச் சுடுமெம் மின்னல் குறைபட வருளக்கேட்டேம்
வெள்ளிமீன் தோன்றுமட்டும் விம்மிநெஞ் சழுத வாறே”. (5)
பாண்டியர் குலவிளக்காய்ப் பைந்தமி ழொளிவி ளக்காய்
ஆண்டருள் செய்யுந் தாயின் அருங்கழல் போற்றிப் பாடி
ஈண்டெமை வருத்து கின்ற இன்னல்கள் நீக்கக் கேட்டேம்
நீண்டகோ புரத்தின் முன்னம் நெடுங்கிடை விழுந்தவாறே”. (6)
“மஞ்சுவந் தின்னல் செய்த மாடமா நகரத் தார்தம்
நெஞ்சிலே குடியிருக்கும் நேரிழை திருத்தாள் நண்ணி
விஞ்சவே வருத்துகின்ற வினைகளை நீக்கக்கேட்டேம்
பஞ்சுநெய்யடியேம் பட்டபழவினை நீங்குமாறே”. (7)
“வெந்தநீறணிந்த பெம்மான் மேனியில் பகுதியாகி
எந்தமிழ்ப் புலவர் யாத்த எழுத்துக்குப் பிள்ளையாகி
அந்தமில் லாட்சி செய்யும் அன்னையை யருளக்கேட்டேம்
நொந்த வெம்முடலம் பட்ட நோய்நொடி நீங்குமாறே”. (8)
“நின்றகால் மாற்றி யாடி நேயத்தார் விருப்பந் தீர்த்த
கொன்றையஞ் சடையன் நெஞ்சைக் கொய்பசுங் கிளியி னாளின்
மன்றஞ் சேர்ந்தழுது பாடி மனக்குறை போக்கக்கேட்டேம்
இன்றியாம் பட்டவின்னல் இப்போதே தீருமாறே”. (9)
“கூடல்மா நகரந் தன்னைக் கொடுஞ்சினத் தாலெ ரித்த
மாடமா தவளி னின்னல் மறுத்துரைத் தருளி னாளை
நாடியெங் கவலை யெல்லாம் நலங்கெட வருளக்கேட்டேம்
ஓடிச்செந் நெல்வி ளைத்த வையைபோ லோய்ந்த வாறே”. (10)
நிறைவுரை
பலருக்கும் இயலாத பாடுபொருள்! பலருக்கும் கைவராத இயல்பான நடை! பலருக்கும் வசப்படாத பக்குவச் சீர்கள்! பலருக்கும் துணைசெய்யாச் சீர் பிரிப்புக்கள். எளிய அறுசீர் விருத்தங்கள்! நிரலான பதிவு! தொன்மக் கதைகளின் சாரத்தைச் சொல்லியிருக்கும் உயர்தர பாங்கு! வினையெச்சத்தை இறுதியாக்கிக் காட்டும் வியத்தகு யாப்பறி புலமை!. மணிவாசகத்தைத் தான் பின்பற்றியே எழுதுவதைப் ‘பொல்லா வினையேன்’ என்னும் தொடரால் குறிப்பாக உணரத்தும் சதுரப்பாடு! வள்ளற் பெருமானுக்குப் பிறகு எளிவந்த பிரானாக இறைவனை வேண்டும் இதயம்! இத்தனையும் நிறைந்த காவியமாய் அமைந்த பதிகமே “பொல்லா வினையேம்” என்னும் இப்பதிகமாகும்! அறிவியல் வளர்ச்சிக்கு அஞ்சி ஓடும் பரபரப்பான வாழ்தடத்தில் இளைப்பாறும் தருவாக அமைந்த இந்தப் பத்தினால் முகநூல் தன் முகத்தைப் புதுப்பித்துக் கொள்கிறது! நானும் புதுப்பித்துக் கொண்டேன். நீங்களும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற பணிவான விண்ணப்பத்தோடு என்னின் ஐம்பது வயது இளைய தம்பி ஏகாபுரம் வெங்கடேசனை வாழ்த்தி நிறைவு செய்கிறேன்!
(தொடரும்…)