குறளின் கதிர்களாய்…(392)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(392)
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.
– திருக்குறள் – 293 (வாய்மை)
புதுக் கவிதையில்…
தன் மனதுக்குத்
தெரிந்த ஒன்றை ஒருவன்,
பிறர் அறியாரென எண்ணிப்
பொய் சொல்ல வேண்டாம்..
பொய்த்தால் அவ்வாறு,
மற்ற தண்டனையேதும் தேவையில்லை
குற்றமுள அவன் நெஞ்சமே
வருந்தவைக்கும் அவனை…!
குறும்பாவில்…
தனநெஞ்சறிய ஒருவன் பொய்யற்க,
அவ்வாறு பொய்சொன்னால் பிறதண்டனை வேண்டாம்,
அவன்மனதே அவனை வருந்தவைக்கும்..!
மரபுக் கவிதையில்…
அடுத்தோ ரறியார் பொய்யென்றே
அகத்தி லறிந்த பொய்யொன்றை
எடுத்துக் கூறிடல் வேண்டாமே,
ஏற்கா தந்தப் பொய்யதுவும்
அடுத்தே உண்மை வெளிவந்தால்
அனைத்தும் போகும் அச்சமதால்
விடுவ தில்லை யவன்மனதை
விடாமல் வருத்தும் நெருப்பெனவே…!
லிமரைக்கூ…
சொல்லாதே நெஞ்சறிய பொய்யே,
பொய்த்தால் அதுவே உனது மனத்தையே
தீய்த்திடும் என்பது மெய்யே…!
கிராமிய பாணியில்…
சொல்லாத சொல்லாத
பொய் சொல்லாத,
சொல்லுறவன அழிக்கிற
பொய்யே சொல்லாத..
தன் மனசுக்குத்
தெரிஞ்ச ஒரு உண்மய
மத்தவங்களுக்குத் தெரியாதுண்ணு
நெனச்சிக்கிட்டு பொய் சொல்லாத..
அப்புடிப் பொய்சொன்னா
அதுக்குத்
தனியா தண்டன இல்ல,
அந்தப் பொய்யே
தீயாயிருந்து
ஒன் மனசச் சுட்டு
துன்பம் தருமே..
அதால
சொல்லாத சொல்லாத
பொய் சொல்லாத,
சொல்லுறவன அழிக்கிற
பொய்யே சொல்லாத…!