படித்தேன்! சுவைத்தேன் பகிர்ந்தேன் – 11

0

முனைவர் ச. சுப்பிரமணியன்

நூல் மதிப்பீடு

முன்னுரை

இலக்கண, இலக்கியப் படைப்பு நுகர்ச்சியில் பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களும் அவற்றிற்கு உரையாசிரியப் பெருமக்கள் தந்திருக்கும் அரிய விளக்கப் பகுதிகளும் திரையிசைப் பாடல்களும் செயப்படுபொருட்களாக அமைந்து அவற்றுள் நான் கரைந்து போனது காலம் எனக்குத் தந்த கொடை என்றே கருதுகிறேன். போலிச் சடங்குகளால் நிறைந்த இந்தச் சமுதாயப் பெருவெளியில் என் சஞ்சலத்தைப் போக்கும் மாமருந்துகளாக அவை எனக்கு அமைந்திருக்கின்றன. அஞ்சலிக் கண்ணீர் உப்பில் கரிப்பில்லை. வாழ்த்துக்களில் ஈரமில்லை. எல்லாம் செயற்கை. போலிப்படைப்புக்களைப் புறங்கையால் ஒதுக்கும் பேராற்றலை அந்த இலக்கியப் பயிற்சியும் இலக்கணப் பயிற்சியும் எனக்களித்திருக்கிறது. என்னின் சிறு திறனுடையார் யாவரே எனினும் அவரெல்லாம் என் வணக்கத்திற்குரியவரே!. கவிதைகளில் நான் கரைந்து போகிறேன் என்பதைவிடக் காணாமல் போகிறேன் என்பதுதான் உண்மை. சொற்பயன்பாடும், கற்பனையும் எளிய யாப்பமைதியும் இடைமறிக்காத தொடை விகற்பங்களும் உள்ளத்தை வருடும் சந்தங்களும் கவிதையை ஒரு சதிராடு மண்டபமாகவே என் கண்களுக்குக் காட்டுகின்றன. சமுதாயத் தாக்கத்திலிருந்து இதயத்தை மூடியிருக்கும் பெரிகார்டியத்தைப்போல (PERICARDIUM) நான் என்னையும் என் உள்ளத்தையும் காத்து வருகிறேன். அந்த உள்ளத்தை ஊடுருவும் கவிதைகளைக் கவிதை வல்லாளர்கள் சிலர் அவ்வப்போது நறுக்குத் தெறித்தாற் போலப் பதிவிடுகிறார்கள். சிலர் பொருட்செலவைக் கருதாது நூலாக்கம் செய்து வருகிறார்கள் அத்தகைய ஆற்றலையும் திறனையும் தொண்டுள்ளத்தையும் கண்டு அவர்தம் படைப்புக்களுக்கு ஏற்பளிப்பதும் அதனை வெளியுலகிற்கு அறிமுகம் செய்வதும் ஒரு சாதாரண தமிழனின் இனம் சார்ந்த நித்திய கடமையாகும். அத்தகைய கடனை வலங்கைமான் வேல்முருகனுக்கு நான் செய்ய வேண்டிய தருணம் இது! இங்கே வேல்முருகன் என்பது ஆகுபெயர்!

வரலாற்றில் வலங்கைமான்

நாயன இசையில் தங்களை இழந்த எவரும் தவில் இசைக்கலைஞர் திரு. சண்முகசுந்தரத்தை மறந்துவிட இயலாது, அப்பெருமகனார் தோன்றிய ஊர்தான் வலங்கைமான்! இடங்கைப் பிரிவு, வலங்கைப்பிரிவு என்னும் இரண்டு பிரிவுகள் பத்தாம் நூற்றாண்டு அளவில் இயங்கி வந்த அரசியல், சமுதாயக் குழுக்கள் ஆகும். வரலாற்றுப் பேராசிரியர் திரு.நீலகண்ட சாஸ்திரியாரும் இதன் தோற்றத்தைக் கணிக்க முடியவில்லை.   உண்மையான வரலாற்று நிகழ்வுகளைத் தொன்மமாக்கியும் கற்பனைக்கெட்டாத தொன்மச் சித்திரிப்புக்களை வரலாறாக்கியும் திரிபுவாதம் செய்வதில் வல்லோர் சிலர் வரலாற்றில் எல்லாக் காலத்திலும் இருப்பார்கள். அவர்கள் வரலாற்றுப் பேராசிரியர்கள் என்னும் பாசாங்கு மொழிக்கும் உரியவர்கள். அத்தகைய திரிபுவாதத்தால் உருவானதுதான் இடங்கை – வலங்கைப் போர் என்பது! களத்தில் நிகழ்ந்தது அன்று. தெருவில் நடந்தது. உயர்சாதி அரசு அலுவலர்களால் கொல்லப்பட்ட ஆதித்திய கரிகாற் சோழனை ஆதரித்தவர்களுக்கும் ஆதித்திய சோழன் கொல்லப்படுவதற்குக் காரணமானவனும் அவசரமாக அரச பதவியேற்றுக் கொண்டவனுமான உத்தமச் சோழனை ஆதரித்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற தெருச்சண்டைதான் வலங்கை இடங்கைப்போர். தெருச்சண்டை என்றால் குழாயடிச் சண்டையில்லை. திருக்கோயில்களிலும் செழித்த வயல்களிலும் தங்கள் உரிமைகளை இழந்த பாட்டாளி வர்க்கத்தினருக்கும் அடியாட்கள் சிலரை வைத்துக் கொண்டு அவர்களை ஏமாற்றிக் கொள்ளையடித்த சில பிரிவினருக்கும் ஏற்பட்ட உரிமைப்போர்! கவிதை பற்றிய ஆராய்ச்சியில் ஊராராய்ச்சி தேவையா? ஒரு ஆராய்ச்சியில் மற்றொரு செய்தியைத் தெரிந்து கொள்வதை ஏன் ஒரு இலவச இணைப்பாகக் கருதிக் கொள்ளக் கூடாது? உள்ளடக்கம் அதனால் கனத்துவிடக் கூடாது. நமத்துவிடக் கூடாது அவ்வளவுதான். பயன் தெரிவார் எங்கும் இருப்பர் எண்ணிக்கையில் குறைவானாலும்! அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற அந்த ஊரின் பெருமையைத் தற்போது தமிழ்க்கவிதை வரலாற்றிலும் தக்க வைக்க வேண்டும் என்னும் தாளாத் தமிழ்க்காதலால் கவிதைப் பணி செய்துவருபவரே திரு.வலங்கைமான் வேல்முருகன்!. பொறியியல் துறை மற்றும் நிர்வாகத்துறையில் உயர்கல்வி பெற்ற அன்னார் படைத்துள்ள  நூல்களில் ‘நீர்வழி ராகம்’ என்னும் கவிதை நூலும் ஒன்று. அந்த நூலைப் படித்தேன்! அனைத்துப் பரிமாணங்களையும் உணர்ந்தேன். படிப்பார் உள்ளங்களின் கொள்ளளவு தெரியாமல் பரிமாறுகிறேன்!

வடிவமே கவிதையாகாது!

ஒருவர் சொல்கிறார் ‘நான் காணாமல் போன என் காதலியைப் பற்றிக் காவடிச் சிந்து பாடியிருக்கிறேன்!’ சரி! இன்னொருவர் சொல்கிறார்! ‘நான் முச்சந்தியில் நிற்கும் முனியாண்டிக்குப் பாடிய நேரிசை வெண்பாக்கள் முந்நூறைத் தாண்டும்’ சரி! ‘பிறக்காத பிள்ளைக்கு நான் பாடிய பிள்ளைத் தமிழ் குமரகுருபரரைத் தூங்க விடாது!’ சரி! ‘என் ஆசிரியர் பற்றி நான் பாடிய ஆசிரியர் ஆற்றுப்படையை நச்சினார்க்கினியர் அறியாமற் போனது அவரது போகூழ்!’ சரி! ‘கந்துவட்டி கண்ணுசாமிக்கு நான் பாடிய கலம்பகத்திற்கு உரையெழுத ஆள் கிடைக்காத காரணத்தால் வட்டியில்லாமலே கடன் கொடுக்க வந்திருக்கிறான் கண்ணுசாமி!’ சரி! இன்னும் சொன்னான்! நான் இத்தனையும் கேட்டுக் கொண்டேன்! பிறகுதான் அவனைக் கேட்டேன்! “நீ சொல்வதெல்லாம் சரிதான்! உன் படைப்பாற்றலைப் பாராட்டுகிறேன்!. ஆனால் நீ எழுதியவற்றுள் கவிதையாக ஏதேனும் சொல்லி என் இதயத்திற்கு நெருக்கமாக முடியுமா? என்று. இத்தனை வடிவங்களில் எழுதியிருக்கிறேனே? இவைகள் எல்லாம் கவிதைகள் இல்லையா? இல்லை உனக்குத்தான் இதயம் இல்லையா? என்றான். ‘இலை சோறாகுமா?’ என்றேன்! சோறுதானே விருந்து? இலை மட்டும் எப்படி விருந்தாகும் என்றேன்! விழித்தான்! அவன்மீது தவறில்லை! .அவன் அவ்வாறு நம்பவைக்கப்பட்டிருக்கிறான். கவிதையை எழுதுவதற்கு முன்னாலேயே அதுபற்றிய கற்பனை, உணர்ச்சி, கருத்து ஆகியன கருவறைக்குள் நுழைவதற்கு முன்பாகவே வாய்பாடுகளை எழுதி வைத்துக் கொள்ளும் ஒரு பரிதாப நிலை! இசையமைப்பாளர் எழுதிவைத்துக் கொள்ளும் ‘NOTATIONS’ என்பன தேமா புளிமா வாய்பாடுகளிருந்து வேறுபட்டன என்பதைக் கூட இவனால் அடையாளம் காண முடியவில்லை. ஏடுகள் கவிதைகளை வெளியிடுவதில்லை என்பது சரியான ஏக்கமே! “நாமும் வருந்தி இந்தப் பொங்கல் நாளில் வாசகர்களையும் வருத்த வேண்டுமா?” என்ற நல்லெண்ணமும் காரணமாக இருக்கலாம் அல்லவா? இதழில் வெளிவரவில்லையே என்பது எழுதியவரின் ஏக்கமென்றால் நல்ல கவிதையை எழுதமாட்டார்களா என்னும் என்னையொத்தார் ஏக்கத்தைப் புரிந்து கொள்வது யார்? புரிந்து தீர்த்து வைப்பது யார்? ஒரு நல்ல திரைப்படத்தில் கேமரா தன் இருப்பைக் காட்டாது! காட்டக் கூடாது! படத்தோடு ஒன்றாமல் போவதற்கு அதன் வேறுபட்ட கோணங்கள் காரணமாகிவிடக்கூடாது!. மார்க்கஸ்பார்ட்லே, பாலுமகேந்திரா முதலிய ஒளிப்பதிவாளர்கள் இதற்குச் சான்று. இதற்கு எதிரணியில் இருப்பவர்கள் வின்சென்ட், கர்ணன் மற்றும் ஜிகே இராமு போன்றோர். ஒரு நல்ல கவிதையில் வடிவம் முந்திரிக்கொட்டையாகிவிடக் கூடாது. வடிவங்களுக்கான ஓசையைப் பாடலுக்கேற்பப் பிரித்துக் காட்டிய நுண்ணியத்திற்கு அதுதான் காரணம். ‘மாசறு பொன்னே வலம்புரி முத்தே’ என்றால் கண்ணகியின் முகம் நம் கண்முன் வந்தால்தான் அது கவிதை!  அதனைவிட்டுத் கூவிளம் தேமா கருவிளம் தேமா என்பன முன்னிற்கக் கூடாது! கருத்து, உணர்ச்சி, கற்பனை இவற்றுக்குத் துணையாக இருப்பதுதான் வடிவம். இவற்றைப் பின்னுக்குத் தள்ளித் தன்னை முன்னிறுத்திக் கொண்டால் கவிதை சடுகுடுவில் சிக்கிக் கொள்ளும்.

நீர்விழி ராகத்தின் உள்ளடக்கத் தலைப்புக்கள்

கவிஞன் ஒருவனுக்கு அவனுடைய கவிதையே முகவரி. அவன் எழுதுகிற கவிதைக்கு அவன் தெரிவு செய்து வைத்திருக்கும் தலைப்பே முகவரி. ஒரு நூலின் தலைப்பு அல்லது ஒரு கவிதையின் தலைப்பே உள்ளடக்கத்தை உரசிப் பார்க்கும் உரைகல்லாகும். சிலப்பதிகாரம் என்னுந் தலைப்பு எத்தகைய விவாதங்களுக்கும் இடம் கொடுத்து நின்றதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. ‘இராமகாதை’ என்று பாத்திரத்தின் பெயரால் பெயரைப் படைப்பாளன் வைக்க, இலக்கிய உலகமோ அதனை அப்படியே புறந்தள்ளிக் ‘கம்பராமாயணம்’ என்று எழுதியவனுக்கு உரிமையாக்கியது.  ‘பாஞ்சாலி சபதம்’ என்று மகாகவி இட்ட பெயரை அவருக்கு முன்னாலே இருந்த வியாசரோ வில்லியோ வைக்கவில்லை. வியாசர் இந்தப் பகுதிக்குத் ‘திரௌபதியின் துயரம்’ என்று பெயரிட்டிருக்கிறார். வில்லியார் ‘சூதுபோர்ச்சருக்கம்’ என்று தலைப்பிட்டார். வைணவச் சமயச் சொற்பொழிவாளர்கள் ‘திரௌபதை மான சம்சரட்சணம்’ என்று சொன்னார்கள். பாரதிதான் இவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டுப் ‘பாஞ்சாலி சபதம்’ என்று பேர் வைத்தான். பாஞ்சாலியை வைத்துச் சூதாடியவர்கள் பாண்டவர்கள். பாஞ்சாலியை வைத்துப் பாரதத்தை அடையாளப்படுத்தியவன் பாரதி. எனவே ஒரு நூலின் தலைப்பும் ஆய்வுப் பொருளாகும். உள்ளடக்கங்களின் தலைப்பும் ஆய்வுப் பொருளாகும். படைப்பாளனின் உள்ளக் கிடக்கையினை அறிய முற்படுவதே ஆய்வு. அதற்கு உதவும் எதுவும் ஆய்வுப்பொருளே!

உள்ளடக்கத்தால் உயர்ந்து நிற்கும் ‘நீர்விழி ராகம்’

‘நீர்விழி ராகம்’ என்னும் இந்தக் கவிதை நூல் உள்ளடக்கத்தாலும் சிறக்கிறது உள்ளடக்கத்திற்கான தலைப்புக்களாலும் சிறக்கிறது. வழக்கமான தமிழ் வாழ்த்தையும் இவர் விட்டுவைக்கவில்லை. மேகம் போடும் தாளம் என்றும் ‘மேகமே மேகமே’ என்றும் மேகத்தைத் தூது விடுகிறார். ‘நிலவோடு ஒரு பயணம்’, ‘நிலவே வா’ என்றெல்லாம் நிலவைப் பாடுகிறார். ‘நதிக்கரை நாணலை’யும் பாடுகிறார். ‘கிணற்றுத் தவளை’யையும் பாடுகிறார். அகவை எத்தனையானாலும் காதல் யாரை விட்டது? ‘‘ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்று’’ என்று அருணகிரியார் பாடுவார். அவர் பாடிய வேல்முருகன் ‘மைதீட்டிய ஏவுகணை ஒன்று’ என்று அன்பு விழியை அம்புவிழியாக்கிப் பாடுகிறார். அடுத்த பாட்டிலேயே ‘மையூறும் கண்ணாள்’ என்றும் மயங்கி விழுகிறார். ‘வைகைக்கரை காற்றே நில்லு’ என்னும் இராஜேந்தரின் சொற்கள் இவர்வழியாக வருகிறபோது ‘தென்னையிளம் காற்றே கேளு’ என்று மாறுகிறது. ‘தென்னையிளம் காற்றுக்குக் காப்புரிமை பெற்றவர்  கண்ணதாசன் ‘தென்னையிளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது’ என்பது ஆண்டவன் கட்டளை! பரிசல் பற்றிப் பாடியவர் ‘கரிசல்’ பற்றியும் பாடியிருக்கிறார். நெருஞ்சி முள்ளையும் பாடி ஆவாரம்பூவையும் பாடியிருக்கிறார். பெண்கள் தாலாட்டை மறந்து போனதால் அவரிடத்தில் வந்து நின்ற வேல்முருகன் தாலாட்டையும் பாடியிருக்கிறார். பெண்ணுரிமை அமைப்புக்கள் காப்புரிமை கோரமாட்டார்கள் என்பது தம்பி வேல்முருகனுக்குத் தெரியும்.

இந்தத் தலைப்புக்களைத் தொகுத்தும் பகுத்தும் நோக்கினால் எதனையும் பாட கைவந்திருக்கும் இவரது படைப்பாற்றல் தெற்றெனப் புலப்படுகிறது. நாட்டுப்பாடல்கள் அமைப்பில் இவர் பாடியிருக்கும் பாடல்கள் பண்பாட்டுப் பதிவுகளாகும். ‘கனவுகள் ஆயிரம்’ என்னும் கவிதை கவிஞரின் சமுதாயப் பார்வையையும் ‘இரவும் பகலும்’ என்ற கவிதை தனிமனித நம்பிக்கையை வலியுறுத்துவதாக அமைந்திருக்கின்றன.

நீர்வழி ராகத்தில் கற்பனை

கற்பனை என்று சொல்ல முடியாது. சமுதாயத்தில் நாளும் பரவலாக நிகழ்கின்றவைதான். முறை மாப்பிள்ளை இருக்கிறபோது காதலனை வரச்சொல்லிப் பெண்ணே கவிதை பாடுவது தற்காலத்தில் வழக்கமாகிப் போன ஒன்று. பொதுவாகக் காதல் உணர்வுகளைப் பெண்கள் தாமே முன்வந்து முதலில் வெளிப்படுத்துவதில்லை என்பது அகத்திணை மரபு மட்டுமன்று. தமிழ்ப்பண்பாட்டு மரபும் கூட. பலர் புரட்சி என்ற பெயரில் எதனையோ எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பட்டுப்புடவையின் சரசரப்பைச் சுடிதாரில் எதிர்பார்ப்பவன் கோமாளி! போலிப்பெண்ணுரிமைக்காக நாம் கொடுத்திருக்கிற விலை எவ்வளவு என்பதை வைரமுத்து தான் எழுதிய இரத்த தானம் என்னும் நூலில் ‘அவசரத் தாலாட்டு’ என்னுந் தலைப்பில் அற்புதமாகச் சித்திரித்திருக்கிறார். நாம் அதற்குள் செல்வது கட்டுரைப் பொருளுக்கு அன்னியமாகிவிடும். ‘உன்வருகைக்காய்த் தவமிருக்கேன்’ என்னும் பெண்ணின் ஏக்கத்தில்,

“கண்வருகைக்காய் காத்திருப்பேன் உன்
‘காட்சியைத் தந்து விடு’

என்று பாடுகிறாள். ‘கண் வருகை’ என்பது ‘உன் வருகை’ என்பதற்காகப்  போடப்பட்ட இன எதுகையன்று, கற்பனைத் திறனே!. உன் பார்வைக்காகத் தவங்கிடந்த அனுபவ வெளிப்பாடு. இதனை ஆகுபெயராக்கி உரைசொன்னால் கவிதை ‘பாலிடால்’ குடித்துவிடும். கவிதை உணர்வதற்கு., உரைக்கல்ல! தொடர்ந்து தலைவி பாடுகிறாள்!

என்னுயிர் என்னுடல் காத்து நிற்கும்
தெய்வமாய் நின்றுவிடு!  —நானும்
உன்னுயிர் தன்னை என்னுயிராக
உரிமையாய்ப் பார்த்திருப்பேன்!”

தலைவி பாடுவதாகக் கவிஞர் பாடுகிறார். இது நடப்பியல் அன்று என்பதும் வேல்முருகனுக்குத் தெரியும். அவருடைய ஆதங்கத்தை இப்படிப் பதிவு செய்திருக்கிறார். கணவனுக்கு மனைவி தெய்வம் என்பதும் மனைவிக்குக் கணவன் தெய்வம் என்பதும் சகாராப் பாலைவனத்துத் தொலைத் தூரக் குடிலில் அணையப்போகும் சிறு அகல்விளக்குச் சுடராக இருக்கிறது என்பதுதான் உண்மை. தமிழக மகிளா நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மணமுறிவு வழக்குகளின் எண்ணிக்கை தெரியாமலேயே இங்கே பலர் பெண்ணுரிமை பற்றிப் பேசிவருகின்றனர். கவிஞரின் கற்பனைத் திறத்தினை ஓரிடத்தில் ஓர் உவமத்தால் காணமுடிகிறது.

‘பூ’ என்பதாலேயே ‘வாழைப்பூவைத் தலையில் வைக்க முடியாது, பூத்தரு புணர்ச்சியில் தலைமகன் தலைமகளுக்கு வாழைப்பூவையோ காலிபிளவரையோ கொடுத்துக் காதல் செய்ய முடியாது. ‘சாமத்திலே வந்தாலும் சாமந்திப்பூ’வைத்தான் கங்கை அமரன் கொண்டு வரவேண்டும்.  மருத்துவக் குணம் உடைய இந்தப் பூவை அதாவது மரத்ததில் இந்தப் பூ தொங்குகிற அழகைப் பார்த்த சுரதா ‘வாழைப்பூ வேதாந்தம்’ என்று பயன்படுத்தியிருக்கிறார். திரைப்படப் பாடலாசிரியர் வாலி ‘வாழை மலர் போலப் பூமி முகம் பார்க்கும் கோழை குணமாற்று தோழா!’ என்று எழுதியிருக்கிறார். கொண்டையில் பூ வைத்தவர்களைக் கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள். கொண்டையையே பூவாக்கிய கவிஞராக வேல்முருகன்  திகழ்கிறார்.

வட்ட வட்டப் பொட்டுக் காரி
வாழைப்பூ கொண்டைக்காரி!

வாழைக்குருத்தினைச் சடைப்பின்னலுக்கு உவமம் சொல்வது உண்டு. இங்கே கோடாலிக் கொண்டையைத்தான் கவிஞர் இவ்வாறு வாழைப்பூ கொண்டை என்று கற்பனை செய்திருக்கிறார்!. நானறிந்தவரையில் இவ்வளவு நுண்ணியமாகக் கொண்டையையும் நோக்கி வாழைப்பூவையும் கவனித்து உவமித்தவர் வலங்கையாராகத்தான் இருக்க இயலும்!

இல்லாத இடைதன்னைத் தேடி நான்
இருக்குமிடம் ஓடிடுவேன் நாடி!
சொல்லாத வரிகளையே போட்டு எனைச்
சொக்க வைத்த அவள்புதிய பாட்டு!

என்று தலைவன் பாடுகிறான். ‘சொல்லாத சொல்’, ‘பாடாத பாட்டு’ என்பன உலகத்தரம் வாய்ந்த இலக்கியத் தொடர்கள். Heard Melodies Are Sweet, but Those Unheard Are Sweeter” என்று ஆங்கிலக் கவிஞன் ஜான் கீட்ஸ் கிரேக்கத்தின் தாழியின் மீது வரையப்பட்ட ஓவியங்களைப் பார்த்துப் பாடியிருக்கிறான். ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை’ என்பார் கண்ணதாசன்! ‘பார்க்காமல் பார்க்கின்றான்’ என்பார் வாணிதாசன்! காதலைப் பற்றிப் பாடுகிற எவருடைய உணர்வுகளும் அடுத்த நொடியே இருபத்துக்கும் கீழ் இறங்கிவிடுவது ஒரு விந்தையே!

நீர்விழிராகத்தில் நாடகப் பாங்கு

நாடகப் பாங்கில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதும் தொடர்ந்து வரும் மரபு சார்ந்த இலக்கிய உத்தியே! இந்த உத்தி பள்ளு இலக்கியத்தில் உச்சம் பெற்றது. வினாவிடையாக,

காளையரின் கோமகன் உன்
கவிதைகளை நாடும்இரு
கண்கள் உனைத் தேடும் என்
கால்களுமே ஆடும் உன்
காந்தவிழிப் பார்வைகளோ
காவியப்பண் பாடும்!

தலைவியில்லாக் காவியங்கள்
தமிழிலெங்கே உண்டு? உன்
தயவதனைக் கொண்டு நான்
தமிழ்க்கனியை உண்டு தினம்
தங்கமென வைரமெனத்
தாங்கிடம் பூச்செண்டு!

கன்னித் தமிழ் நாட்டினில் நீ
காளையிளங் கன்று
தமிழ்க்காவியத்தில் நின்று
என் கடிமனதை வென்றுதினம்
களிப்புடனே ஏறிடுவாய்
காதலெனும் குன்று!”

இந்தப் பாட்டில் இழையும் ஓசை நயம் நம்மையும் அறியாமல் உள்ளத்தை ஈர்ப்பதை உணரலாம். தேமா புளிமா என்ற அளவுகோல்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட நிலையில் சந்த ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட புனையப்பட்ட இந்தக் காதல் பரிமாற்றத்தில் இளமை, இனிமை, அழகு, ஆழம் அனைத்தும் உள்ளன என்பதைப் பாடலை வாய்விட்டுப் படிப்பார் உணர முடியும்.

செவிக்கினிமையான இந்த ஓசை ஒழுங்கு, தலைவியில்லாத காப்பியங்களாகிய சீவக சிந்தாமணி, பெரியுராணம் ஆகியவற்றையும் கவனிக்காது பாடியிருக்கும் தலைமகனுடைய அறியாமையையும் ரசிக்க வைத்திருக்கிறது. காரணம் தலைவியை உயர்த்திப் பாடி எல்லாக் காப்பியங்களுமே தலைவியைப் பெற்றுத்தான் அமைந்திருக்கிறது என்று படைத்து மொழிகிறான்! காதலில் ‘பேதைமை’ உள்ளம் உணர்வு சார்ந்தது!. அங்கே ஆராய்ச்சிக்கு வேலையில்லை. கால் மீட்டர் தலை முடியைக் கார் கூந்தல் என்று சொல்வதில்லையா அதுபோல! அப்போதுதான் காதல் கைகூடும்!. அதனால்தான் ‘மனத்தை’ என்று அத்துச் சாரியைப் பெற்றுச் சொல்ல வேண்டியதை அல்லது எழுத வேண்டியதை நூலாசிரியர் ‘மனதை’ என்று பாட வைக்கிறார்!. அத்துச் சாரியை மொழியைச் சரியாகச் சொல்வது. சாரியை இன்றி உச்சரிக்கப்படுவது தலைவியின் மனதுக்கு இதமாகும்! அருமை! தலைவியின் முந்தானையில் மயங்கிக் கிடப்பவன் தலைவன்! அவன் ஒரு மொழியாராய்ச்சி வித்தகன் அல்லன்! இலக்கியம் இதயத்திற்கு நெருக்கமான தருணம்!

நீர்விழி ராகத்தில் கவிதைக் கட்டுமானம்

கவிதை எழுதுவதாகச் சொல்லிக் கொள்ளும் தற்காலப் படைப்பாளர்களில் பலரும் மரபுக்கவிதை என்ற சொல்லை அடிக்கடிப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் யாப்பற்றவை புதுக்கவிதைகள் எனப்படுவதால் யாப்புடையவை மரபுக்கவிதைகளே என்னும் கருத்தியலை முன்னெடுப்பதாகத் தெரிகிறது. உண்மையில் இரண்டுமே இமாலயத் தவறுகள். யாப்பில் சொற்களை அடைத்துக் காட்டுவதாலேயே ஒன்று மரபுக் கவிதையாகிவிடாது. அதுபோல யாப்பில்லாததாலேயே ஒன்று புதுக்கவிதையாகிவிட முடியாது. மரபுசார்ந்த பொருண்மைகளை மரபு சார்ந்த வடிவங்களில் மரபுசார்ந்த சொற்களாகிய சீர்களைக் கொண்டு மரபுசார்ந்த உத்திகளால் உருவாக்கப்படுபவையே மரபுக்கவிதை. சமுதாயத்தில் நாளும் தோன்றும் வாழ்க்கைச் சிக்கல்களை அதன் பரிமாணத்திற்கும் பாதிக்கப்படுவோன் அளவுக்கும் ஏற்ப நீட்டி முழக்காமல் நறுக்குத் தெறித்தாற்போலப் பொருண்மைக்கு முன்னுரிமை தந்து சொல்வதுதான் புதுக்கவிதை. புதுக்கவிதை என்பதில் உள்ள புதுமை என்னும் அடை பாரதியின் ‘சொல்புதிது பொருள் புதிது…. நவகவிதை’ என்ற ஆளுகையின் பொருளையே தருமேயன்றி அது யாப்பினைக் குறிக்கும் என்பது மயக்கம் கலந்த அறியாமை. புதுக்கவிதை கூறுகளைப் புறநானூற்றில் தேடுவது இமயமலையில் இலந்தமரத்தைத் தேடுவது போல!

‘நீர்விழி ராகம்’ என்னும் இந்தக் கவிதை நூலில் பல்வகை யாப்புக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  • ‘கரிகால் சோழன் வாழ்க’ என்னுந் தலைப்பில் அமைந்த பாடலும் ‘முகில்விடு தூது’ என்ற பாடலும் முறையே நிலைமண்டில ஆசிரியப்பாவிலும் நேரிசையாசிரியப்பாவிலும் அமைந்துள்ளன.
  • நீர்விழி ராகம் என்னும் நூற்தலைப்புக்குரிய பாடல் அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என எண்ணிக் கொண்டு எழுதப்பட்டதாகத் தெரிகிறது.
  • ‘நாட்டார் பாடல்கள்’, ‘பேரண்டப் பெருவெளி’, ‘கல்வீச்சு’ முதலிய பாடல்கள் எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தங்களால் அமைக்கப்பட்டுள்ளன.

ஆசிரியரின் யாப்பறிப் புலமை பற்றி ஐயமில்லை!. கற்பனை, உணர்ச்சி, கருத்து என்னும் கவிதைகளின் ஏனைய கூறுகளைச் சிறப்பிப்பதாக அமைவதே வடிவத்தின் பணி. வடிவம் ஒரு கவிதைத் தாங்கி! பாடல்களை எழுதி வெளியிடுவதற்குமுன் செப்பம் செய்வது இன்றியமையாக் கடன். ஒரு காப்பியம் பல யாப்புக்களைக் கொண்டிருக்கலாம். ஒரு பாடலே பல யாப்புக்களைக் கொண்டிருந்தால் கவிதை நொண்டியடிக்கும்.

கூடியே கழித்த காலம்
குறையாகப் போன தோடி
பாடியே திரிந்த காலம்
பாதியாய் போன தோடி?
ஆடிநாம் ரசித்த காலம்
அரைகுறை ஆகிப் போமோ?
வாடியே போனேன் இன்று!
வசந்தமே போன தேனோ?”

காரணம் சொல்ல மறுத்தேஎன்
கழுத்தையே அறுப்பதும் ஏனோ?
நாரதர் எவரும் வந்தேமனக்
குட்டையைக் குழப்பி னாரோ
பாரினில் காதலுக் கென்றும்
பெற்றோரே எதிரி யானாரோ?
ஆரிடம் சொல்வேன் நானே?
அறுக்குதே நெஞ்சம் தோழி!”

இவ்விரண்டு பாடல்களும் நூற்தலைப்புக்கான பாடல் வரிகள். அறுசீர் விருத்தத்தில் அல்லது எண்சீர் விருத்தத்தில் தனிச்சொல்லைப் பெய்து எழுதுவது ஒரு நடைதான். பல பாடல்கள் உண்டு. ஆனால் ஒரே பாட்டில் இருவேறு நிலைப்பாடுகள் இருக்கலாமா என்பதுதான் ஐயம்? முதல்பாட்டில் விருத்த யாப்பு திருத்தமாக அமைந்திருக்க இரண்டாவது பாட்டில் முதல் இரண்டு வரிகள் தனிச்சொல் பெற்றதொரு செப்பமில்லாத யாப்பு. மூன்றாவது அடியில் முதல் அரையடி ‘காதலுக்’ என்னும் தவிர்க்கப்பட்ட கூவிளம் வாய்பாடு! இரண்டாவது அரையடியில் ‘ஆனாரோ’ என்னும் மூவசைச்சீர்! ஒரே குழப்பமாக இருக்கிறதா இல்லையா? இவற்றுக்கெல்லாம் ஒரே காரணம் பாடல்களை மீள்பார்வை செய்யாமையே! எண்சீர் விருத்தங்கள் பலவற்றிலும் இந்த நிலை நீடிக்கிறது என்பது தகவலுக்காகப் பதிவு செய்யப்படுகிறது!

நிறைவுரை

எதனையாவது எழுத வேண்டும் அதுவும் கவிதையில் எழுத வேண்டும் என்னும் உந்துதல் எல்லார்க்கும் வந்துவிடாது. அடுத்த நிலையில் போலி இலக்கியச் சுவைஞர்களால் பாராமுகத்திற்கு ஆளாகியிருக்கும் இன்றைய தமிழ்க்கவிதைகளை நூலாக வெளியிடுவதற்கு இட்லரின் துணிச்சலும் இந்திராகாந்தி துணிச்சலும் தேவை. தம்பி வேல்முருகன் அந்தத் துணிச்சலைப் பெற்றிருக்கிறார். பாவலர் என்பதனினும் மிகச் சிறந்த பண்பாளர். கூடித் தமிழ்வளர்க்கும் கொள்கையாளர். என் பார்வைக்கு வரும் ஆய்வேடுகளில் பெரும்பாலும் பாரதிக்குப்பின் வந்த படைப்புக்களிலிருந்து மேற்கோள் காட்டுவதை ஆய்வாளர்களுக்கு முன்மொழிகிறேன். முன்மொழிந்த நானே செயல்படுத்திக் காட்டிக்கொண்டு வருகிறேன். அத்தகைய பெருமைக்குரிய படைப்புக்களில் கவிஞரின் கன்னித் தொகுப்பான ‘நீர்விழி ராகமும்’ ஒன்று! படித்துச் சுவைத்தவன் பகிர்ந்திருக்கிறேன், நீங்களும் பகிர வேண்டாமா?

(தொடரும்…)

கவிஞர் வலங்கைமான் திரு.இராம வேல்முருகன் M.A.,M.Sc.,M.Lib.Sc.,M.Ed.,

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *