Author: admin

  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 48

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 48

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    வைரமுத்து கவிதை உவமங்களில் மரபு

    முன்னுரை

    தற்காலத் தமிழ்க்கவிதை உலகில் சில கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களை எழுதி வைத்துக்கொண்டு தன்னையொரு ‘மரபுப்பாவலர்’ என்று சொல்லும் போக்கு பெருகிவருகிறது. இத்தகைய போக்கு  உண்மையில் இரண்டு வகையில் நெடிய தமிழ்க்கவிதை மரபினைப் பாதிக்கிறது. ஒன்று மரபு என்பது யாப்பு மட்டுமல்ல என்னும் புரிதலுக்கு எதிராக அமைகிறது. இரண்டு உண்மையான தமிழ்க்கவிதை மரபுகளை மீட்டுருவாக்கம் செய்யும் பணி முற்றிலும் தடைபடுகிறது. மரபு பற்றிய நிலைப்பாடு இதுவெனின் புதுமை பற்றிய நிலைப்பாடு இன்னும் மோசமாக இருக்கிறது. ‘சொல்புதிது பொருள்புதிது சோதிமிக்க நவகவிதை’ என்னும் மகாகவியின் தொடர் எவ்வளவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பதைத் தற்காலத்தில் வெளியாகும் கவிதை நூல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. மரபின் வேர்களிலிருந்து பிறக்க வேண்டிய புதுமைப்பூக்களைத் தவிர்த்து இறக்குமதிச் சரக்குகளைப் புதுமை என எண்ணும் போக்கும் நிலவுகிறது. புதிய பேனாவில் புதிய தாளில் எழுதுவதெல்லாம் புதுக்கவிதை ஆகிவிடாது. இந்தப் பின்புலத்தில் வைரமுத்து கவிதைகளில் இயல்பாகவே ஊடுருவி நிற்கும் மரபிழைகளை இந்தக் கட்டுரை சுருக்கமாக ஆராய முற்படுகிறது.

    பொருளதிகாரத்தின் உள்ளடக்கம்

    எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் அச்சொற்களால் அமையும் இலக்கியத்தைப் பற்றிப் பேசியதே பொருளதிகாரம். தமிழ்மீது அதீதப் பற்றும் உணர்ச்சி வசப்படும் இயல்பும் கொண்ட அறிஞர் சிலர் தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தமிழர்தம் வாழ்வியல் கூறும் நூல் என்று மயங்கினர். மயங்கி அக்கருத்தை வலியுறுத்தினர். வலியுறுத்தவே வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பவாகலின் உலகிலேயே வாழ்வுக்கு இலக்கணம் வகுத்தவன் தொல்காப்பியன் என்னும் பெருமைக்குள் அவரைத் திணிக்க முற்பட்டனர். காலம் செல்லச் செல்ல உலகம் தழுவிய இலக்கியம் மற்றும் திறனாய்வுக் கொள்கைகள் வெளிச்சத்திற்கு வந்த காரணத்தால் அவ்வாறு சொன்ன அறிஞர்களே தமது கருத்துக்களிலிருந்து பின்வாங்கினர். தொல்காப்பியம் அரிஸ்டாட்டிலின் ‘கவிதையியல்’ (POETICS) போலக் கவிதையிலக்கணம் கூறும் நூல் என்பதைப் புரிந்து கொள்ள நெடுங்காலத்தை நாம் இழந்திருக்கிறோம். எழுத்தினைத் தொடர்ந்து சொல், சொல்லினைத் தொடர்ந்து இலக்கியந்தானே இருக்க வேண்டும்? என்ற சாதாரண புரிதல் கூட இல்லாமல் போனது பேரிழப்பாக முடிந்தது. இந்த இழப்புத்தான் செய்யுள் மரபு அல்லது கவிதை மரபு என்பதைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் நம்மவர்க்கு இல்லாது போனதற்குக் காரணமாக அமைந்தது. அறிஞர் தமிழண்ணல், அ.சா.ஞானசம்பந்தனார் முதலிய அறிஞர்கள் காலம் கடந்து உணர்ந்த இந்த உண்மையை உணர்ந்து வெளிப்படுத்தினர். வளைந்து கோணிக் கொண்டு சென்ற தமிழ்க்கவிதைகள் பற்றிய கொள்கை விளக்கம் பெறுவதற்கு அவர்கள் உதவினர்.

    தமிழ்க்கவிதை மரபு

    வாழ்வியலைப் பேசுகிறவன் செய்யுளுக்கு இலக்கணம் செய்வானா? தொல்காப்பியச் செய்யுளியல் எந்த வகையில் வாழ்வியலாக முடியும்? தொல்காப்பியப் பொருளதிகாரத்தைக் கவிதை பற்றிய கொள்கை விளக்கக் குறிப்பு என்று தொடக்கத்திலேயே கண்டிருந்தால் தமிழ்த் திறனாய்வு இந்நேரம் உலக உச்சத்திற்குச் சென்றிருக்கும். இலக்கிய உருவாக்கத்தில் தொல்காப்பியத்தின் சட்ட திட்டங்கள் ஒரு பண்பட்ட சமுதாயத்தின் இலக்கியப் படைப்பாற்றலை எதிரொளிக்கிறது என்பதே உண்மை. இன்னார்தான் உவமம் சொல்ல வேண்டும்! இப்படித்தான் உவமிக்க வேண்டும்! இப்படித்தான் உவமம் அமைதல் வேண்டும்! தெரியாத பொருளை உவமம் சொல்லக் கூடாது. பெற்ற தாய் பேசவே கூடாது! என்றெல்லாம் ஓர் இலக்கியக் கட்டமைப்பை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தூக்கி நிறுத்திய இலக்கியப் பேராசிரியர் தொல்காப்பியர். தமிழில் ‘மரபு’ என்னும் சொல்லின் பொருளடர்த்தி மிகவும் ஆழமானது. தொல்காப்பியர் ‘நூன்மரபு’, ‘மொழிமரபு’, ‘தொகைமரபு’, ‘விளிமரபு’, ‘மரபியல்’ என்றெல்லாம் அதனை ஆராய்ந்திருக்கிறார். இவற்றைத் தவிர திணை மரபு, சொல் மரபு, பொருள் மரபு, கூற்று மரபு, யாப்பு மரபு எனப் பல்வகை மரபு சார்ந்த பொருண்மைகள் அவரால் ஆராயப்பட்டுள்ளன. ‘மரபுவழாநிலை’, ‘மரபுவழுவமைதி’ முதலியனவும் அவரால் ஆராயப்பட்டனவே. தொல்காப்பியத்தின் ‘அகப்பொருள் மரபு’ தமிழுக்கே சிறப்பானதும் நுட்பமானதுமாகும். மரபுக்கவிதைகள் என்றால் பொருண்மை, வடிவம், உத்தி ஆகியவற்றில் மரபு சார்ந்திருக்கும் கவிதைகளைக் குறிப்பதாகும். புதுக்கவிதைகள் என்பவை இவற்றின் மாறாக அமைந்திருப்பவை. வடிவத்தை இழப்பதானலேயே புதுக்கவிதை ஆகிவிடாது. இழப்பதனாலேயே ஒன்று புதுமையாகிவிடவும் முடியாது.

    ‘மரபு’ என்னும் சொற்பொருள் விளக்கம்

    ‘மரபு’ என்னும் சொல்லுக்குரிய வரைவிலக்கணம் தொல்காப்பியத்துள் காணுமாறில்லை. ஆனால் அச்சொல்லுக்கு விளக்கம் கூறப்புகும் உரையாசிரியர்கள் உள்ளிட்ட அறிஞர் பலரும் பல்வேறு சூழலுக்கேற்ப அதன் பொருளை விரித்துக் காட்டியுள்ளனர். தொல்காப்பியர் தனிமொழியாகவும் தொகைமொழியாகவும் சற்றொப்ப முப்பது இடங்களில் ‘மரபு’ என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இத்தகைய இடங்களில் எல்லாம் அச்சொல் பல்வேறு பொருளைக் குறித்து நின்றாலும் ‘உயர்திணை அஃறிணை ஆகிய இருவகைப் பொருட்களை, உலகியல் வழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்குகளிலும் சான்றோர் தொன்றுதொட்டு வழங்கிவரும் முறைமை’ என்னும் அளவிலேயே அதன் பொருள் புலப்பாடு நிறைவு பெற்றுவிடுவதாகத் தெரிகிறது.

    “மரபென்ற பொருண்மை என்னையெனில் கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவும், செய்யுளியலுள் மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவுமன்றி இருதிணைப் பொருட்குணனாகிய இளமையும் ஆண்மையும் பெண்மையும் பற்றிய வரலாற்று முறைமையும் உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும் அஃறிணை புல்லும் மரனும் பற்றிய மரபும் அவைபற்றி வரும் உலகியல் மரபும் நூன்மரபும் என இவையெல்லாம் மரபெனப்படும்”

    என்னும் பேராசிரியர் விளக்கத்தால் காணமுடிகிறது. இதனால் தொல்காப்பியத் தளத்துள் மரபு பற்றிய களங்கள் விரிந்து பரந்துள்ளன என்பதைத் தெளிவாக உணரமுடிகிறது. திருக்குறள், அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியுமாப் போலத், தொல்காப்பியத்துள் ஓதப்பட்ட அனைத்துக் கருத்துக்களும் தமிழ்நெறியே என்பதற்குச் சான்றாக, ‘நூன்மரபு’ எனத் தோற்றுவாய் செய்து ‘மரபியல்’ என முடித்துக் காட்டும் ஆசிரியரது சதுரப்பாட்டினை ஓர்ந்துணர்ந்து கொள்க.

    மரபு பற்றிய தற்கால மதிப்பீடு

    மரபியல் சார்ந்த கருத்துக்களும் சிந்தனைகளும் தொல்காப்பியத்துள்ளும் அதன் உரைகளுள்ளும் பல்வேறாகக் காணக்கிடக்கின்றன. கிடப்பினும் மரபியலை நன்குணர்ந்த ஆய்வறிஞர்கள் தற்காலத்துக்கு ஏற்ற வகையில் புதிய பொருண்மைகளை உள்ளடக்கிக் கூறும் விளக்கம் இங்குச் சுட்டப்படுவது பொருத்தமாகலாம்.

    “மரபு என்பது இலக்கணம் மட்டுமல்ல., மரபு என்பது இலக்கியத்திற்கு மட்டுமல்ல., மரபு என்பது முந்தையத் தலைமுறைகள் சேர்த்து வைத்திருக்கும் அனுபவம், அறிவு, முடிவு ஆகிய அனைத்தும் சேர்ந்தது. கால நீட்சியில் மானுடவாக்கம் தன் அறிவுத் தோட்டத்தில், அனுபவத் திளைப்பில் உணர்ந்துத் தெளிந்து உருவாக்கிய முடிவுகள் அவை. வருங்காலத்திற்கென்று இலக்கியமாக, சமயமாக, அறநெறியாக, பிற அறிவுத்துறைகளாக முந்தையத் தலைமுறை விட்டுச் சென்ற அனுபவத் திரட்டுதான் மரபு. மத, சமூக அமைப்புக்களுக்குச் சடங்குகள் சம்பிரதாயங்கள் இருப்பது போல, இலக்கியத்திற்கும் மரபு இருக்கிறது. இலக்கிய மரபு என்பது வெறும் யாப்பு மரபு அல்லது இலக்கண மரபு மட்டுமல்ல. இலக்கிய ஆசிரியர்கள் காலம் தோறும் முன்வைத்து வந்திருக்கும் சிந்தனைகள், எண்ணங்களின் மரபும் இலக்கிய மரபுகள்”

    எனப் பேராசிரியர் பாலா தரும் விளக்கம், மரபின் விரிந்து பரந்த ஆதிக்கத்தையும் அவ்வாதிக்க எல்லைக்குள் அதனுடைய பொருள் புலப்பாட்டுத் திறனையும் தெளிவாக்குவதாக உள்ளன.

    வைரமுத்து உவமைகளில் மரபு போற்றுதல்

    பாரதிதாசனுக்குப் பின் வந்த கவிஞர்கள், ‘புதுக்கவிதை’ என்னும் பெயரால் வடிவமாகிய உருவத்திலும் சிந்தனையாகிய உள்ளடக்கத்திலும் பெரும் மாற்றத்தைச் செய்தனர். கவிதைக்குக் ‘கருத்துக்களுக்கே முதன்மை’ என்னும் புதிய கருதுகோள் உருவாக்கப்பட்டது. உள்ளடக்கத்துக்கு அடுத்த நிலையிலேயே உருவம் மதிப்பிடப்பட்டது. இவ்வாறு காலத்திற்குக் காலம், வாழ்க்கையை இன்னதென்று அடையாளம் காட்டும் முயற்சியில், தமிழ்க்கவிஞர்களின் சிந்தனையும் மாறி வந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது. உள்ளடக்கத்திற்குப் பொருந்தும் மேற்கண்ட நிலைப்பாடு, அதனை வெளிப்படுத்தும் உத்திகளில் ஒன்றான உவமைக்கும் பொருந்தும். ‘மரபின் தாக்கம் அல்லது மரபின் ஆளுமை’ என்ற அளவில், மரபை ‘அப்படியே பின்பற்றுதல்’ என்னும் முறையில் வைரமுத்து கவிதைகளில் அமைந்துள்ள உவமைகளை இப்பகுதி ஆராய்கிறது. மரபு வழியாகப் பயன்படுத்தப்படும் உவமைகளின் பொருளாளுமை மிகவும் பொருத்தமாக இருந்ததாலும், அதற்கிணையான வேறொரு உவமம் கிட்டாத நிலையிலும் மரபு அப்படியே பின்பற்றப்படும். உண்மையில் இது முதன்முதலாக அவ்வுவமையைப் பயன்படுத்தியவரின் இலக்கிய ஆளுமைக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படலாம். அவ்வெற்றியைப் ‘பாட்டன் தேட்டம் பேரனுக்கு’ என்பது போலப் பின்னாள் தோன்றுகிற படைப்பாளர் அனைவரும் அனுபவிக்கின்ற உவம இன்பமாகும்.

    இருவகை அழலிலும் எரியாத  உவமம்

    முறையான தமிழ்க்கல்வியைப் பெறக்கூடிய வாய்ப்பு கிட்டிய தமிழ்க்கவிஞர் சிலருள் வைரமுத்தும் ஒருவர். பழந்தமிழ் இலக்கியச் சிந்தனைகளும் அச்சிந்தனைகளை வெளிப்படுத்தி நிற்கும் சொற்களும் அவரையும் அறியாமல் அவருள்ளத்தில் பதிந்திருக்கின்றன. இதனால் மரபு என்பது அவர் மனத்துள் எல்லா நிலைகளிலும் எளிதாகப் பதிந்து போனதை உறுதி செய்யலாம். சான்றாகத்,

    “திரியழல் காணின் தொழுப, விறகின்
    எரியழல் காணின் இகழ்ப, ஒரு குடியில்
    கல்லாது மூத்தானைக் கைவிட்டுக், கற்றான்
    இளமை பாராட்டும் உலகு.”

    என்னும் கீழ்க்கணக்கு வெண்பா ஒன்று, ‘அழலாகச் சுடுவதனாலேயே சுடரையும் நெருப்பையும் ஒன்றாகக் கருதமுடியாது. அதுபோல, அகவை மூத்திருப்பதாலேயே கல்லாதவனை மதித்துவிட முடியாது., கற்றவனுடைய இளமையே பாராட்டுக்குரியதாகும்’ என்னும் கருத்தைச் சுட்டுகிறது. விளக்குச் சுடரும் எரிநெருப்பும் ஒன்றாயினும் வேறுபடும் மதிப்பீட்டிற்குள்ளாவன. மூப்பு எல்லாருக்கும் பொதுவாயினும் கல்வியே மதிப்பிடும் கருவியாகும். இக்கருத்தையும் உவமத்தையும் உள்வாங்கிக் கொண்ட கவிஞர், தம்முடைய கன்னித் தொகுப்பான ‘வைகறை மேகங்களில்’ கோவலனின் ஒழுக்கச் சிதைவு அளவுக்கு மீறியது என்னும் கருத்து விளக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

    “அளவாகத் தீயெரிந்தால் அதனை விளக்கென்போம்
    அளவுக்கு மீறிவிட்டால் அதனை நெருப்பென்போம்’
    அளவுக்கு மேல்பொறுமை அன்னமே நீ காட்டியதால்
    களவுக்குப் போனதம்மா காத்து வைத்த உன்சொத்து”

    இவ்வரிகளில் நான்மணிக்கடிகையின் சாரம் அப்படியே படிந்திருப்பதைக் காணலாம். கோவலனின் புறவொழுக்கத்திற்கு ‘அளவு’ காணும் கவிஞரின் கருத்துப் பற்றி இங்கு ஆராய்வது நோக்கமில்லையாயினும், தொடக்கத்திலேயே கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் கவிஞரின்  கருத்து நிலைக்காக, மரபு சார்ந்த உவமத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது ஈண்டுச் சுட்டப்படுகிறது.

    கவரிமாவை(னை)ப் பின்பற்றும் கவிஞர்

    ‘கவரிமா’ என்பது விலங்கினங்களில் ஒன்று. ‘மா’ என்பது பொதுப்பெயர். ‘கவரி’ என்பது சிறப்புப் பெயர். எனவே ‘கவரிமா’ என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. இதனைக் ‘கவரிமான்’ என்றே தமிழிலக்கிய உலகம் வழங்கிவருகிறது. ‘கவரிமான்’ என்னும் வழக்கு திருக்குறளில் இல்லை. இந்தக் கவரிமாவின் சிறந்த இயல்பைத் திருவள்ளுவர் தம் திருக்குறளில் குடிப்பிறந்தார்க்கு உவமையாகப்  பயன்படுத்துகிறார்.

    “மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர் நீப்பர் மானம் வரின்”

    என்னும் குறட்பாவில், தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவின் இயல்பை, மானத்தைக் காப்பதற்காக உயிரையே விடும் சான்றோர்களுக்கு உவமமாக்கியிருப்பதைக் காணலாம். மானத்தைக் காப்பதற்குப் பெரும்பாலும் உவமமாகப் பயன்படும் கவரிமாவைக் கவிஞரும் அதே பொருள் விளக்க நோக்கத்திற்காக,

    “மயிருதிர்ந்தால் வாழாத மானமுள்ள மான்போல”

    எனப் பயன்படுத்துவதை அறியமுடிகிறது. பிணத்தைப் பற்றிப் பாடவரும் கவிஞர் மயிரிழந்த மானை உயிரிழந்த பிணத்திற்கு உவமமாக்குகிறார். ‘உயிர்த்துடிப்பு போனதனால் உதவாத உடல் ஓடமாகிவிட்ட பிணத்தின் மான உணர்வை கவரிமானாகிய உவமம் கொண்டு விளக்குவதைக் காணமுடிகிறது.

    பசித்தவன் முன் பசும்பால்

    பசியால் வாடுபவனின் துடிப்பைப் பாவேந்தர் பாரதிதாசன் அழகியல் உணர்வை வெளிப்படுத்துதற்கு உவமையாக்கியிருக்கிறார்.

    “பசித்த மக்கள்
    சிறிது கூழ் தேடுங்கால் பானை ஆரக்
    கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்”

    முழு நிலவைக் காணும் இன்பத்திற்கு உவமையாக்கப்பட்டிருப்பது போலவே கவிஞரும்,

    “உலகம் தண்ணீர்ப்
    ‘பஞ்சத்தில் தவிக்கின்ற போதில் நானும்
    பசுப் பாலைப் பார்ப்பதுபோல்”

    தண்ணீர்ப் பஞ்சத்தில் தவிக்கிறவன் பசும்பாலைக் கண்டதுபோல் தன் காதலியைக் கண்டு மகிழ்ந்தான் என உவமிப்பதைக் காணமுடிகிறது. இது போன்ற நேர்வுகளில் கவிஞர் அப்படியே மரபினை எவ்வித மாற்றமும் இல்லாமல் பின்பற்றிவிடுவதை அறியமுடிகிறது.

    அடக்கமும் ஆமையும்

    திருக்குறளில் ஒருமுறை ஒரு கருத்து விளக்கத்திற்காகப் பயன்படுத்திய உவமை, வேறொரு இடத்தில் வேறொரு கருத்து விளக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணமுடியவில்லை. மனம், மொழி, செயல் ஆகியவற்றில் அடக்கத்தைக் கடைப்பிடிக்க வற்புறுத்தும் நூல் திருக்குறள். அதனுள் மெய்யடக்கத்தை வற்புறுத்துதற்கு ஆமையை உவமமாகப் பயன்படுத்திக் கொள்வதை அறியமுடிகிறது.

    “ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
    எழுமையும் ஏமாப் புடைத்து”

    என்னும் குறட்பாவில் இடர்புகாமல் தனது ஐந்துறுப்புக்களையும் ஆமை அடக்கிக் கொள்வது போலப், பாவம் புகாமல் ஒருவன் தனது ஐம்பொறிகளையும் அடக்கிக் கொள்ள வேண்டும் என்னும் கருத்து விளக்கம் புலப்படுவதைக் காணலாம்.

    பாவேந்தர் கண்ட ஆமை

    உண்மையான பெண்ணுரிமைக்கு உரத்த குரல் எழுப்பியவர் பாவேந்தர். பிறப்பாலும் புலன்களாலும் ஆணுக்கிணையானவள் பெண் என்பது பாவேந்தர் கருத்து. தனிக்கவிதையாயினும் காப்பியமாயினும் பெண்ணைப் பற்றிப் பாடும் பொழுதெல்லாம் பண்பாட்டுக்குப் பங்கம் வராத உண்மையான பெண்ணுரிமையை அவர் வலியுறுத்த தவறியதே இல்லை. சஞ்சீவிப் பர்வதத்தின் சாரல் என்னும் காப்பியத்தின் பாத்திரமொன்றின் வாயிலாக,

    “ஊமை என்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்
    ஆமை நிலைதான் ஆடவர்க்கும் உண்டு.”

    என ஆடவரின் பின்னடைவுக்கு ஆமையை உவமம் காட்டுகிறார். திருக்குறள் உவமையில் ஆமையின் ஒடுக்கம் நேர்முகமானது., பாவேந்தர் உவமையில் அது எதிர்முகமானது., கூடாதது. பெண்ணை மதிக்காவிடின் ஆடவரின் முன்னேற்றம் ஆமையின் உறுப்புக்கள் போல் உள்ளொடுங்கிவிடும் என்பது கருத்து.

    வைரமுத்து கண்ட ஆமை

    பாவேந்தரைப் பின்பற்றி மரபுக்கவிதை செய்யும் வைரமுத்து, உவமையால் மரபு காத்து, உறுப்பினரை மாற்றிவிடுகிறார். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நாற்குணங்களைக் கணவனோடு தனியாக இருக்கும் போது காட்டக்கூடாது என்பதைக் கூறவரும் கவிஞர், கணவன் வாய்மொழியில்,

    “ஓட்டுக்குள் ஆமைபோல் உன்னை யொளித்தாய்”

    எனப் பதிவு செய்கிறார். அடங்குதற்கு உவமமான ஆமை, ‘குறிப்பிட்ட சூழலில் அடக்கம் அதன் பயனைத் தராது’ என்பதற்கும் உவமமானது தமிழ்க்கவிஞர்களின் கவிதைத் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்துவதாகலாம்.

    உள்ளும் புறமும்

    ஓர் உண்மையை வலியுறுத்துவதற்குப் பல உத்திகளைப் படைப்பாளர் கையாளுவர். காணமுடியாத கடவுளின் உண்மையை நிலைநாட்ட திருவள்ளுவர் ஒலிவடிவான அகரத்தின் எழுத்துத் தலைமையை உவமையாக்கி உரைக்கிறார். கண்ணால் காண இயலவில்லை என்பதற்காக அகர ஒலியே இல்லையென்றாகிவிடாது., மாறாக எல்லா மொழிகளுக்குள்ளும் எல்லா ஒலிகளுக்குள்ளும் அவ்வகரம் மறைந்தே நிற்கிறது. அதுபோலக் கண்ணால் காணமுடியவில்லை என்பது கொண்டே இறைவனை இல்பொருளாக்கிவிட முடியாது., உணர்ந்து அனுபவித்து அறியவேண்டிய உண்மை அது. இது திருவள்ளுவர் கையாண்ட உவம நுட்பமாகும். இத்தகைய உவம உத்தியை திருக்குறளில் வேறுசில இடங்களிலும் அவர் கையாண்டிருக்கிறார் என்பதும் அதுவே உவம மரபாக மாறிவிடுகிறது என்பதும் ஈண்டுச் சுட்டப்பட வேண்டிய செய்தியாகும்.

    மணிக்குள் நூலும் மொட்டுக்குள் மணமும்

    கண்டதைக் கொண்டு காண இயலாததை உறுதி செய்து கொள்ளும் அளவையியலைச் சார்ந்த இவ்வுத்தியைத் காமத்துப்பால் தலைவனும் பின்பற்றுவதைக் காணமுடிகிறது. தலைவி தானுற்ற காதலை வெளிப்பட உரைத்தல் இயல்பன்றாதலின், தலைவன் இரண்டு உவமைகளைப் பயன்படுத்தித் தலைவியின் காதல் குறிப்பை உணர்ந்து கொள்கிறான்.

    “மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
    அணியில் திகழ்வதொன் றுண்டு”

    என்னும் தலைவன் கூற்றில், ‘மணியில் மறைந்திருக்கும் நூல்போல் இத்தலைவியின் அழகுக்குள் மறைந்திருப்பது ஒன்றுண்டு’ என்னும் கருத்து புலப்படுவதைக் காணலாம். ‘திகழ்தரு நூல்’ என்பதற்கு ஆசிரியர்  பரிமேலழகர், “அகத்துக் கிடந்து புறத்துப் புலனாகா நூல்போல” என்னும் பதவுரையை ஈண்டுச் சுட்டுவது பொருத்தமாகலாம். மேலும்,

    “முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
    நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு”

    என்னும் தலைமகன் கூற்றிலும், ‘மொட்டுக்குள் மறைந்திருக்கும் மணம்போல் இத்தலைவியின் புன்னகையில் மறைந்திருப்பது ஒன்றுண்டு’ என்னும் கருத்து புலப்படுவதைக் காணலாம். ‘மொக்குள் உள்ளது நாற்றம் போல்’ என்னுந் தொடருக்கு ஆசிரியர் பரிமேலழகர் ‘முகிழ்ப்பின் உளதாய்ப் புறத்துப் புலனாகாத நாற்றம் போல’ எனக் கூறும் பதவுரையை நினைவு கூறலாம்.

    அப்பர் கண்ட  ஆண்டவன்

    நாயன்மார்களில் ஒருவரான அப்பரடிகள், இறைவனின் உண்மையைக் கூறுதற்குத் திருவள்ளுவர் பயன்படுத்திய உவம உத்தியையே பயன்படுத்திப் பதிகம் பாடியிருக்கிறார். ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ முயன்றாலன்றி இறைவனைக் காண்பது அரிது என்னும் உண்மையை எடுத்துக்காட்டும் அப்பர்  பெருமான்,

    “விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
    மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்”

    என இரண்டு உவமைகளால் உறுதி செய்வதைக் காணமுடிகிறது. விறகின்றி நெருப்பில்லை., விறகே நெருப்பில்லை., விறகுக்கு உள்ளேதான் நெருப்பு. பற்ற வைத்தால் விறகு நெருப்பாகும்., இல்லையெனின் விறகு விறகாகவே இருந்துவிடும்., பாலின்றி நெய்யில்லை., பாலே நெய்யில்லை., பாலுக்கு உள்ளேதான் நெய். பிறை ஊற்றித் தயிர், மோர், வெண்ணெய் என்னும் படிநிலைகளைத் தாண்டினால் கிடைப்பது நெய். படிநிலை இல்லையெனின் பால் பாலாகவே இருந்து விடும். மானுடத்தின் முயற்சியினால் கிட்டுவது இறைநிலை. இந்த உண்மையை விளக்குதற்கு அப்பர் கையாளும் உவம உத்தி தொடர்ந்து மரபாகி வைரமுத்து கவிதைகளிலும் இழைவதைக் காணமுடிகிறது.

    வெடிக்குள் தீயான காதலன்

    திருக்குறளிலும் தேவாரப் பதிகத்திலும் கையாளப்பட்டுள்ள இவ்வுவம உத்தியை வைரமுத்து கவிதைகளிலும் காணமுடிகிறது. கவிஞர் வைரமுத்து தமது கவிதைகளின் கன்னித் தொகுப்பான ‘வைகறை மேகங்களிலேயே’ இந்த உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார். காதலனைப் பிரிந்த காதலியின் புலம்பலாக அமைந்திருக்கும் கவிதையொன்றில்,

    “தீ நின்ற வெடியாகச் சிதறிப் போகும்
    தேன்நின்ற என்னுயிரைப் பார்”

    என்னும் வரிகளில் தலைவியின் உயிர் வெடி. வெடிக்குள் தீயிருக்கிறது. வெடியே தீயில்லை. பற்ற வைத்தால் வெடித்துத் தீ சிதறும். தலைவனைப் பற்றிய எண்ணங்கள் தீ. தீயை உள்ளடக்கியது அவள் உயிர். ‘வருவான்’ என்றெண்ணிய தலைவன் வரவில்லையாதலின் அவள் உயிர் சிதறுகிறது. இத்தகைய பொருண்மைகளையெல்லாம் உள்ளடக்கிய மரபு சார்ந்த உவமமாக இது அமைந்திருக்கிறது.

    கவிதைக்கு அழகூட்டும் காரணிகளில் முரணுக்கு முக்கியமான பங்குண்டு. அது சொல்லாலும் அமையலாம். பொருளாலும் அமையலாம். மேற்கண்ட எடுத்துக்காட்டில் தலைவன் அருகிருக்கும் போது தேனாக இருப்பது அவன் பிரிந்த போது தீயாக மாறுகிறது என்னும் முரண் கவிதைக்கு அழகு சேர்ப்பதைக் காணலாம்.

    தீப்பெட்டிக்குள் சிறைகிடக்கும் தீ

    ‘கவிராஜன் கதை’ என்னும் பாரதி காவியம் முழுமையும் பாரதி கதிரவனாகவும் நெருப்பாகவும் உருவகம் செய்யப்பட்டிருக்கிறார். கவிஞர் பாரதியை ‘நெருப்பு’, ‘தீ’ என்னும் இரு சொற்களால் உருவகம் செய்வார். ‘தீயை’ யாரும் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தி வைத்தால் என்றாவது ஒரு நாள் பற்றிக் கொள்வது உறுதி. காசியில் தன் அத்தை வீட்டிலிருந்து திரும்பிய பாரதிக்கு எட்டையபுர அரண்மனையில் ஒரு பதவி கிடைத்தது. அந்தப் பதவி புயல் ஓய்வெடுக்கப் போதுமானதாக இல்லை. அந்த நிலையை விளக்க வரும் கவிஞர்,

    “தீப்பெட்டிக்குள் சிறைகிடக்கும்
    தீ மாதிரி
    அரண்மனை வேலை
    அவனை அடக்கியது”

    எனப் பதிவு செய்கிறார். இவ்வுவமையில் தீ தீக்குச்சிக்குள் சிறையிருக்கிறது. தீக்குச்சிகள் தீப்பெட்டிக்குள் சிறையிருக்கின்றன. எனவே தீ தீப்பெட்டிக்குள் சிறையிருக்கிறது. தீப்பெட்டியே தீயில்லை. ஆனால் தீப்பெட்டிக்குள்தான் தீயிருக்கிறது. மகாகவி பாரதியை உரசினால் பற்றிக் கொள்ளும் தீக்குச்சிக்குள் தீயாகக் காணும் கவிஞரின் பார்வை பெரிதும்  சிந்தனைக்குரியது.

    நிறைவுரை

    பண்பாடு குறையாத மரபுவழிக் கருத்துக்களையும் அழகியல் நிறைந்த கற்பனையையும் பாடும் நோக்கத்திற்கேற்ப உணர்ச்சியையும் கவிதைக் கட்டுக்கோப்பு சிதையாத வடிவத்தையும் கொண்டிலங்கும் வைரமுத்தின் கவிதைகளில் உவமங்களும் மரபியல் தழுவியனவாகவே அமைந்துள்ளன. பொருளாதாரம் காரணமாக நகர்ப்புற வாழ்க்கையில் தன்னை ஒப்படைத்துக் கொண்டாலும் வடுகப்பட்டியில் பிறந்து வாழ்ந்த நாள்களை மறக்காத படைப்பாளராகவே அவர் இருக்கிறார். இதற்கு அவருடைய ‘கள்ளிக்காட்டு இதிகாசமும் கருவாச்சி காவியமும்’ சான்றாகத் திகழ்கின்றன. மரபு சார்ந்த உவமங்களில் கூடச் சமுதாயப் பார்வையும் வாழ்வியல் நுண்ணியமும் ஆழமாகப் பதிவாகியிருக்கின்றன.  அவற்றை இன்னும் ஆழமாக நோக்கிப் படித்துச் சுவைத்துப் பயன்பெறுவதற்கு இந்தக் கட்டுரை ஒரு கைகாட்டியாகலாம்!

    (தொடரும்…)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 9

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 9

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    நூல் மதிப்பீடு

    முன்னுரை

    ‘நீ நொண்டி சிந்து எழுதினாய் தமிழ் எழுந்து நடந்தது’ என்று எழுதினான் ஒரு கவிஞன். நொண்டி சிந்து எழுதியவன் பாரதி! அவனைப் பாராட்டி எழுதிய கவிஞன் பெயர் தெரியவில்லை. யார் எழுதினால் என்ன? உண்மையை யார் சொன்னால்தான் என்ன? கவனிப்பதற்கு ஒன்று உண்டு.  எழுந்து நடந்தது என்று பாராட்டுகிறானே கவிஞன், அது எங்கே விழுந்து கிடந்தது? எங்கே முடங்கிக் கிடந்தது? இடைக்கால மன்னர் அரண்மனைகளின் அந்தப்புரங்களிலிருந்து எட்டையபுரத்து இளைக்காத சமஸ்தானம் வரை தமிழ் உள்ளூரிலேயே அடிமைப்பட்டுக் கிடந்தது. தமிழைப் பிணித்திருந்த அந்த அடிமைச் சங்கிலியை நொறுக்கி எளிய பதங்கள், மக்களுக்கு ஏற்ற மெட்டு எனப் புதியன பெய்து தமிழுக்குப் புதுமுகம் காட்டிய புலவன் பாரதி! அதனாலே என்ன ஆனது? தமிழ் புலவர்களுக்கானது அன்று நமக்கானது! நம் தாய்மொழி தமிழ்’ என்னும் புரிதல் தமிழர்களுக்கு வந்தது. இதுதான் பாரதி செய்த வித்தை! பாரதி பிறந்திருக்காவிட்டாலும் நாடு விடுதலையடைந்திருக்கும்! ஆனால் அவன் பிறந்திருக்காவிட்டால் இந்தக் கட்டுரை இந்த நேரத்தில் வல்லமையில் வெளிவந்திருக்க முடியாது. இந்தப் பின்புலத்தில் பாட்டுக் கட்டும் உரிமை மக்களுக்குச் சென்றது. புலவர்களின் தனியுடைமை நிராகரிக்கப்பட்டது. மக்களைப் பற்றிப் பாடியவர்கள் மக்கள் கவிஞர்கள் என அழைக்கப்பட்டனர். மக்களே கவிஞரும் ஆனார்கள். மக்களால் மக்களுக்காக மக்களைப் பற்றி எழுதப்படும் கவிதையே தமிழ்க்கவிதை என்னும் புதிய வரைவிலக்கணப் பரிமாணத்தை வரையறை செய்தனர். தமிழை முறையாகப் படித்தவர்கள்தாம் எழுத வேண்டும் என்ற நிலை மெல்ல மெல்ல ஆனால் நிலையாக உறுதியாக மாறியது, உட்கார்ந்து தமிழைப் படிக்காதவர்கள் ஓராயிரம் நூல்களைப் படைத்தார்கள். ஆர்வத்தால் யாப்பிலக்கணம் கற்றார்கள். அதன் கடுமையை உணர்ந்தார்கள். இருப்பதைக் கொண்டு எழுதிப் பார்ப்போமே என்று எழுதினார்கள். தங்கள் வாழ்க்கையில் தாங்கள் பட்ட இன்னலை எழுதினார்கள். எல்லார்க்கும் பாடமாக்கினார்கள். யாப்பிலக்கணத்தோடும் எழுதினார்கள். யாப்பு இல்லாமலும் எழுதினார்கள். யாப்பு இருந்தால்தான் அது கவிதை என்னும் மரபையும் உடைத்தெறிந்தார்கள். கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிற்பத்தைக் கண்டறிவதுபோலத் தங்கள் திறமையைத் தாங்களே அறிந்து கொண்டார்கள். அவ்வாறு அறிந்து கொண்டவர்களில் ஒருவர்தான் குளித்தலை அன்பர் தண்டபாணி. தொழிற்சாலைகளின் கணக்கு வழக்குகளின் தணிக்கையாளர் அவர். கணிதத்தைத் தணிக்கை செய்யலாம். அவர் கவிதையைத் தணிக்கை செய்ய இயலுமா? இதயத்தை மூளையால் அளப்பது எப்படி? அவர் எழுதிய ‘கவிதை ஊருணி’ என்னும் அளவில் சிறிய கவிதை நூல் என் பார்வைக்கு வந்தது! படித்தேன்! சுவைத்தேன்! சுவைத்ததைச் சுருக்கமாக இங்கே பகிர்கிறேன்! பந்தி வைக்கிறேன். இது ஏழைவீட்டுப் பந்தி! பலகாரங்களின் எண்ணிக்கை குறையலாம். சுவை குறையாது!

    புரியாதவன் இன்னும் தேடுகிறான்

    கண்ணப்ப நாயனார் புராணத்தில் பெரும்பாலோர் திண்ணனின் ஆழமான பக்தியைச் சிலாகித்துப் பேசுவார்கள். பெரியபுராணத்தை நோக்குவார்க்கு ஒன்று நன்கு புரியும். அறுபத்து மூன்று தனியடியார்களும் தொண்டினால் உயர்ந்தவர்கள். சிவபதம் பெற்றவர்கள்! ‘தொண்டு’ என்பது மனித நேயத்தின் பழைய வழக்கு. காளத்திநாதரைச் சிவகோசரியார் சிலையாகத்தான் எண்ணினார். கடவுளாக எண்ணி வழிபட்டார். ஆனால் கண்ணப்பன் தன் தந்தையாகக் கருதினான்! ‘அத்தனார்க்கு அடுத்த தென்னோ?’  கடவுளுக்குக் கேடு வருமா? என்பது பகுத்தறிவாகக் கருதுவர். தந்தைக்குக் கேடு வரலாம் அல்லவா? தாய் மட்டுமன்று தந்தையும் பசித்திருக்கக் கூடாது என்பதுதான் மனித நேயம்!

    கையில் சூலம் கொண்டோ
    சங்குச் சக்கரம் கொண்டோ
    ஒளியின் திருவாய் மலர்ந்தோ
    இறைவன் நம்மிடம் வருவதில்லை!”

    வீழும்போது தூக்கி விடுவோரும்
    தாழும் போது தோள் கொடுப்போரும்
    நற்செயலை நாளும் செய்வோரும்
    நான் காணும் கடவுளின் வடிவங்கள்

    புரிந்தவன் கடவுளைக் காணுகிறான்
    புரியாதவன் இன்னும் தேடுகிறான்

    தனக்குப் பல நூற்றாண்டுக் காலம் முன்னே தோன்றிய திருமூலர் சொன்ன அறச் சிந்தனைதான் பத்தொன்பதாம் நூற்றாண்டு வள்ளலாருக்கு வந்தது.

    படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
    நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
    படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே

    என்னும் திருமந்திரத்தைப் பசிப்பிணி என்னும் கொடுநோய் போக்கி வள்ளலார் நடைமுறைப்படுத்தினார். பொதுவாகக் கவிதை எழுதுபவர்கள் இன்றும் ஆறு, குளம், குட்டை, ஏரி, மேகம், வான் என்று புவியியல் தலைப்புக்களாகவே சிந்திப்பார்கள். கேட்டால் இயற்கையைப் பாடுகிறேன் என்பார்கள். அவர்கள் பார்வையில் மனிதன் செயற்கைபோலும்! மனிதனுடைய வாழ்வியல் சிக்கல்கள் செயற்கை போலும்! ஆனால் விதிவழியே எல்லாம் நடக்கும் என்றும் சொல்வார்கள்! ஆனால் அல்துறைக் கவிஞர் தண்டபாணி சமுதாயத்தையே தனது கன்னிப்படைப்பின் கருப்பொருளாக்கியிருக்கிறார்!

    பெரு வியப்பின் நுண் இருப்பு

    எதனையாவது யாருக்காவது எப்பொழுதாவது எப்படியாயினும் சிலவற்றைச் சொல்ல வேண்டும் என்னும் உள்ளத் துடிப்பு எல்லார்க்கும் இயல்பு. கவிஞர்களுக்கு அல்லது கவியுள்ளம் படைத்தவர்களுக்கு வெகு இயல்பு. நேர்மையாக வாழ வேண்டும் என்ற தேவை கூட இல்லை. இனியாவது நேர்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு முதலடி எடுத்து வைக்கிறபோதே அதற்கு எதிர்மறையானதொரு சமுதாயக் கட்டமைப்பை ஒருவன் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.  அங்கிங்கு எனாதபடி ஒரு போலித்தனத்தையே போர்வையாகப் போர்த்திக் கொண்டு நிற்கும் இரங்கத்தக்க நிலை நீக்கமற நிறைந்திருக்கிறது. மனம், மொழி, மெய்களால் சத்தியம் காக்க வேண்டும் என்ற உயரிய நெறிக்குப் பதிலாக மானுடத்தைச் சீரழிக்கும் சிந்தனைகள்!, வெளிப்பாடுகள்!, செயல்பாடுகள்!.

    ஒப்பனை செய்த சிரிப்பு
    ஒத்திகை பார்த்த அழுகை
    கடன்
    கொடுத்தவனிடம் கனிவு
    கொடுத்த கடன்
    கேட்பவனிடம் கோபம்

    வாழ்பவனைக் கண்டு வயிற்றெரிச்சல்
    வழுக்கி
    வீழ்ந்தவனைக் கண்டால் எகத்தாளம்!
    காசு பணம் தேவைக்காக நட்பு!
    நம்பிக்கைக்காகக் கொஞ்சம் நடிப்பு!
    எளியவனைக் கண்டால் அகங்காரம்
    வலியவனைக் கண்டால்
    காலில் விழும் கலாச்சாரம்

    மேலே கவிஞர் சொல்லியிருக்கிற அல்லது வெளிப்படுத்தியிருக்கிற வரிகளால் அவர் குடும்பத்திற்கு என்ன நன்மை? ஒரு நன்மையும் இல்லை என்பது அவருக்கும் தெரியும். நமக்கும் தெரியும். பிறகு ஏன் எழுதுகிறார்? ஆற்றாமை! சமுதாயத்தின் எதிர்மறை போக்குக் கண்டு தாங்க முடியாத ஓர் இதயத்தின் இளகிய வெளிப்பாடு! மனிதனாக வாழ்வது எப்படி என்று நீதிநூல்கள் கற்பிக்கின்றன!. அதனைப் படித்துணர்ந்து செப்பம் செய்து கொள்ள வேண்டிய சமுதாயம் அதற்கு நேர் எதிர்த்திசையில்! வாழ்வியல் உண்மைகளையும் சமுதாயப் போக்குகளையும் நூலறிவு மற்றும் பட்டறிவு கொண்டு அறிந்து கொண்ட சாதாரண மனிதன் ‘ஊருக்கு வந்தது தனக்கு’ என்று எண்ணிச் சமாதானமடைகிறான். ஆனால் சமுதாய அக்கறையும் பிறரை மதித்து நேசிக்கும் ஒரு வேறுபட்ட படைப்பாளனால் அவ்வாறு இருக்க முடிவதில்லை.

    தேடிப்பார்க்கிறேன்!
    இருக்கும் மனிதர்களில் பெரும்பாலும்
    மனிதனவன்
    எவரும்
    மனிதனாக இல்லை!”

    என்று எழுதுகிறார் தண்டபாணி. மனிதர்களாயிருந்தால் வாழ்வார்கள். அல்லது வாழ்பவர்கள்தாம் மனிதர்கள்! ‘இருப்பவர்கள்’ மனிதர்கள் அல்லர். ‘LIVING’  என்பது வேறு. ‘EXISTING’ என்பது வேறு. ‘எப்படி இருக்குறீங்க?’ என்றுதான் நலம் விசாரிப்போம்! ‘ஏதோ இருக்குறேன்!’ என்றுதான் விடையளிப்பார்கள்! இங்கே பிறப்பார்கள்!. இருப்பார்கள்! இறப்பார்கள்! முடிந்தது வாழ்வு! இந்த வாழ்வு வாழப்படாதா? என்று ஏங்குகிறார் தண்டபாணி! மானுடம் தன் பெயரைத் தக்கவைத்துக் கொள்ளாதா? ‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்று வேண்டிப் பெற்ற வாழ்வு வீணாகிவிடுமோ என்று வேதனைப்படுகிறவர் பலர். அப்படிப் பாடியவர்களில் வேதனைப் பட்டவர்களில் ஒருவராகத் திகழ்கிறார் தண்டபாணி!

    கவிதைகளில் எல்லாச் சொற்களும் நினைக்கப்படா. நிலைக்கவும் செய்யா. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்பன போன்ற தொடர்கள் ஊழிக்காலத்திற்கும் உலாவரும். தண்டபாணி எழுதியுள்ள,

    சிறந்த மனிதம்
    தன் பெருமை தானறியாத்
    தத்துவத்தின் சிறுகுறிப்பு
    தவிர்க்கவே முடியாத
    பெருவியப்பின் நுண் இருப்பு!”

    இந்த வரிகளில் உள்ள ‘பெருவியப்பின் நுண்ணிருப்பு’ என்னும் தொடர் மிகவும் ஆழமான தத்துவார்த்த சித்திரிப்பாகவே அமைந்துள்ளது. இது  போன்ற தொடர்கள் இவருக்கேகூட எல்லாப் பாடல்களிலும் அமைவதில்லை.  மனிதன் தன்னை உணரவேண்டும். சிறந்த மனிதன் தன்னை உணர்ந்தே ஆகவேண்டும் ஆனால் இந்தப் பிறவியின் மகத்துவம் உணராது, தன்னுடைய பெருமையைத் தானே உணராத மானுடத்தை எண்ணி மருகுகிறார். அரக்கனை அழிக்க இறைவன் எடுத்த வடிவம் மானுடம். இறைவன் வருந்தி எடுத்த பிறவியை எளிதாகப் பெற்றதனால் இப்பிறப்பின் அருமையை உணரவில்லையோ என எண்ணி வருந்துகிறார். ‘விசித்திர நாடகங்கள்’ என்னுந் தலைப்பில் கவிஞர் எழுதியிருக்கும் இந்த வரிகளை மகாகவி பாரதியின்,

    தேடிச்சோறு நிதம் தின்று பல
    சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
    வாடித் துன்பமிக உழன்று பிறர்
    வாடப் பலசெயல்கள் செய்து நரைக்
    கூடிக் கிழப்பருவம் எய்திக் கொடுங்
    கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் பல
    வேடிக்கை மனிதரைப் போலே நான்
    வீழ்வேன் என்று நினைத்தாயோ

    என்னும் வரிகளோடு ஒப்பிடலாம். மகாகவி எந்தச் சமுதாயத்தைப் பற்றி என்றைக்குப் பாடினானோ அந்தச் சமுதாயம் அன்றைக்கு எப்படி இருந்ததோ அப்படியே தான் செக்கு மாடுபோல் ஒரே இடத்தைத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதைத் தண்டபாணியின் வரிகள் தெளிவாகப் படம் பிடிக்கின்றன. படைப்பாளர்கள் படத்திறப்பு விழாவுக்கும் படைப்புக்கள் பட்டிமன்றத்தில் சிலர் காசு சேர்ப்பதற்குமே பயன்படுகிறது. கம்பன் பிறந்தும் இங்குக் காவியம் செழிக்கவில்லை! திருவள்ளுவன் எழுதியும் இங்கு நீதி தழைக்கவில்லை! வள்ளலார் தோன்றியும் இங்குப் பசி போகவில்லை! வேலு நாச்சியார் வாழ்ந்தும் இங்கு வீரம் சிறக்கவில்லை! மொத்தத்தில் மானுடம் தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை!

    எங்கே தேடுவேன்?

    ஒரு கவிதை இப்படித் தொடங்குகிறது. அறிவியல் வளர்ச்சி என்ற பெயராலும் நவீனத்துவம் என்ற பெயராலும் நகர்ப்புற மேம்பாடு என்ற பெயராலும் மரங்கள் வெட்டப்படுகின்றன. மாறாகக் கட்டடங்கள் விதைக்கப்படுகின்றன. பசுமை நிறப்பெயராகவே அறியப்படுகிறது.

    நான்கு வழிச்சாலையில்
    வெப்பத்தை உள்வாங்கி
    நெருப்பை உமிழ்ந்து
    கொண்டே தேடுகிறேன்

    தான்தோன்றி மலைகளைத் தேடுகிறார். காட்டுக் குயிலினங்கள் கானம் ஒலித்த கருவேலங்காடுகளைத் தேடுகிறார். ஆர்ப்பரித்துச் சென்ற ஆற்றுப் படுகைகளைத் தேடுகிறார். ஏரிகளைச், சாலைகளை என்று எல்லா இடங்களிலும் தேடுகிறார் இயற்கையை! எப்படி நிறைவு செய்கிறார் தெரியுமா?

    என் இளமையைத் தாலாட்டிய
    இயற்கையே!
    பேராசைப் பேய்களின்
    பெருத்த வயிற்றுக்குள்
    இரையாகிப் போன
    உன்னை
    எங்கே தேடுவேன்!”

    மனிதனைத் தேடி ஏமாந்தவர் இப்போது இந்தப் பாட்டில் இயற்கையைத் தேடி ஏமாந்து நிற்கிறார்!

    கவிதை குடியிருக்கும் காட்டாறு

    எவ்வகைப் பயனையும் எதிர்பாராது ஒரு தனிமனிதன் பொருட்செலவைப் பொருட்படுத்தாது ஒரு நூலை எழுதி வெளியிடுகிறான் என்றால் அதன் காரண நுண்ணியம் கருதத்தக்கது. எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பது அவனுக்குத் தெரியும். இருந்தும் செலவழித்து வெளியிடுகிறான் என்றால் அவன் உள்ளம் ஏதோ ஒன்றினைச் சொல்ல வேண்டும் என்று தவிப்பதாகத்தான் கொள்ள வேண்டியதிருக்கிறது. ‘தண்டபாணியின் கவித்துவம் இந்த நூலின் எல்லாப் பக்கங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது’ என்பது உயர்வு நவிற்சி! இன்னும் துணிந்துத் தெளிவாகச் சொன்னால் போலிப் புகழ்ச்சி! நூலெல்லாம் சமூக ஆர்வலராக, ஒரு படைப்பாளியாகத் தோன்றும் அரிமா தண்டபாணி.

    காட்டு வெள்ளம் வந்து போகும்
    காட்டாறு ஓடைகள்

    என்னும் இரண்டு வரிகளில் கவிஞர் தண்டபாணியாக அவதாரம் எடுக்கிறார். மேற்கில் தோன்றிக் கிழக்கில் கலப்பது இந்திய நதிகளின் இயற்கை. காட்டாறு என்பது மழைவந்தால் வரும். மழை போனால் ஆறும் போய்விடும். என்ன ஒரு கவித்துவம் பாருங்கள்? ஆற்றினை விருந்தாளியாக்கிப் பார்க்கிறார். வந்து போகும் ஆறாம்! கவிதையைத் தொழிலாகச் செய்பவனுக்கும் அவ்வளவு எளிதாக வர இயலாத கற்பனை இது! ஆலயங்களில் பக்தர்கள் வந்து போவார்கள்! வழித்தடங்களில் பேருந்துகள் வந்து போகும்! ஆறு என்பதன் இலக்கணமே ஒரு இடத்தில் தோன்றி வேறொரு இடத்தில் இன்னொரு ஆற்றில் கலக்கும் அல்லது பெரும்பாலும் கடலில் கலக்கும். இதுதான் ஆறு. ஆற்றுக்கு ஒருமுகப் பயணம்தான்! காட்டாற்றுக்கும் இது பொருந்தும். ஆனால் காட்டாறு தோன்றுவதும் மறைவதும் அதாவது வருவதும் போவதும் மழையைப் பொருத்ததேயன்றி ஊற்றினைப் பொருத்ததன்று தலைக்காவிரி போல!

    எது தவறு?

    வாழ்க்கை ஒரு சக்கரம்! சுழல்வது அதன் இயல்பு! அது சுற்றுகிறது என்பதைப் புரிந்து கொள்கிறவன் தனக்கான வாய்ப்பு வரும்போது தக்கவைத்துக் கொள்கிறான். விழித்துக் கொண்டே தூங்குகிறவன் ஏமாந்து போகிறான். சிரிப்பு அழுகையில் முடிவதும் அழுகை சிரிப்பாக மாறுவதும் உலகியற்கை!

    அழுவது தவறில்லை
    விழுவதும் தவறில்லை!
    ஆனால்
    அழுதபின்பு சிரிக்காமல் இருப்பதும்
    வீழ்ந்த பின்பு எழாமல் இருப்பதுமே தவறு

    அறியாமை குற்றமன்று. அறியாமல் போனோமே என்று வருந்தாமல் இருப்பது தவறு. அதனைத் தொடர்ந்து அதனை அறிந்து கொள்ள முயலாமை பெருந்தவறு. எனவே ஒரு சிக்கலில் எது தவறு என்பதை அறிவதற்கும் ஞானம் தேவைப்படுகிறது. ‘வாழ்க்கைச்சிக்கல்’ ஒரு நூற்கண்டு என்று உருவகித்தால் அதன் நுனியைக் காணும் திறன் வேண்டும். அத்திறன் வாய்க்கப் பெற்றால் அழுகை சிரிப்பாகும்! வீழ்ச்சி உயர்ச்சியாகும்! வெற்றி தொடர்ச்சியாகும்! கீழே விழுவதெல்லாம் எழுந்திருப்பதற்காகவே! அதற்காக ‘எழுந்திருப்பதெல்லாம் விழுவதற்காகவே’ என்று எண்ணினால் வாழ்க்கையின் நோக்கம் திசைமாறும்! ஏக்கம் எக்காளமிடும்!

    அந்தாதி அறிவுரை

    ‘தலை உள்ளவன் எல்லாம் தலைவனாக முடியாது. தலையில் உள்ளவன்தான் தலைவனாக முடியும்” என்பது உலகியல். எதனையும் யாரையும் தன் இயல்பால், தன் அறிவால், தன் ஆற்றலால் தன்வசப்படுத்திக்  கொள்பவன் வாழ்க்கையில் நிற்கிறான்., நிலைக்கிறான். சூழ்நிலையின் கைதியாகும் எவனும் அல்லது அதில் கரைந்து போகிற எவனும் வாழ்க்கைப் போராட்டக் களத்தில் எதிர் நீச்சல் போட இயலாது. தண்டபாணி எழுதுகிறார்,

    சூழ்நிலைக்குள் கரைந்து போகிறவன்
    சாதாரணத் தலைவன்!
    சூழ்நிலையைத் தகர்த்து எழுபவனே
    சாதனைத் தலைவன்!
    எண்ணுபவர் விழிப்பர்!
    விழிப்பவர் உழைப்பர்!
    உழைப்பவர் உயர்வர்!
    உயர்வாருக்கே இவ்வுலகம்!”

    தொடை விகற்பம் என்பது யாப்பு வல்லார்க்கானது. தணிக்கையாளரும் இந்த விகற்பத்தைத் தம் கவிதையில் கையாண்டுள்ளார். எதிலும் ஆர்வம் இருந்தால் எதுவும் கைகூடும் என்பதற்கு இந்த ‘அந்தாதித் தொடை அறிவுரை’ அழிக்க முடியாத ஒரு சான்றாகத் திகழ்கிறது.

    நிறைவுரை

    குளிர்பதன அறையில் வசதியான திண்டில் சாய்ந்து கொண்டு ‘வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே?’ மனிதனைத் தேடாமலேயே காணோம் என்று சொல்லிக் காசு பார்ப்பவர் ஒருபுறம். பணி ஓய்வு பெற்றுப் பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ வேண்டிய நேரத்தில் அக்கறையோடு புலம்புகிறவர்கள் மற்றொரு புறம். முன்னவன் பணத்திற்காக எழுதுகிறான். இவர் பாசத்தோடு எழுதுகிறார். அவன் தத்துவம் சொல்வதாகக் கருதிக் கொண்டு சம்பாதிக்கிறான். இவர் சம்பாதித்த காசைப் பொருட்படுத்தாது தான் வாழுகிற சமுதாயத்தின் மீது தான் கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறார். தொழிலாளர் நலன் சார்ந்தும் நிறுவனங்கள் சார்ந்தும் அமைந்த தணிக்கைத் துறை அலுவலர் பணி ஓய்வு பெற்ற பின்பு எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது! தன்னைச் சுற்றிய சமுதாயத்தைப் பற்றித் தானே சிந்தித்ததைத் தனக்குத் தெரிந்த மொழியில் தானே பதிவிட்டிருக்கும் இந்த எழுபது வயது இளைஞருடைய கவிதைகளை இந்த எண்பது வயது முதியவன் படித்தேன்! சுவைத்தேன்! அதனால் பகிர்ந்தேன்! நீங்களும் சுவைக்க வேண்டுமென்பதற்காக!

    தணிக்கையாளர் அரிமா .தண்டபாணி M.A.,M.L.M.,M.B.A.,

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 47

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 47

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமச் சிகரம் சுரதா! 

    முன்னுரை

    உலகவழக்கில் பாக்கியலட்சுமியைப் ‘பாக்கி’ என்றும்  வெங்கடேசனை ‘வெங்கு’ என்றும் அழைப்பதுண்டு. ‘சுப்புரத்தினதாசன்’ என்னும் நீண்ட பெயரை எழுதுவதற்கு அஞ்சலட்டையில் இடமில்லாத காரணத்தால் ‘சுப்பு – ரத்தின – தாசன்’ என்னும் தனது புனைபெயரையே சுருக்கெழுத்துப்போல் ‘சுரதா’ எனச் சுருக்கிக் கொண்டார். ‘வேண்டாத ஆணிகள்’ என்ற தொடரை நமது நகைச்சுவைக் கலைஞர் திரு. வடிவேல் அவர்கள் சொல்லித்தான் பலருக்கும் தெரியும். உண்மையில் அந்தத் தொடரை முதன் முதலில் பயன்படுத்தியவர் மேற்கண்ட நேர்வில் உவமைக் கவிஞர் சுரதாவே. கவிதை பற்றியும் கவிஞராவது பற்றியும் பெரும்பாலும் நடைமுறையில் இருக்கும் நம்பிக்கைகளோடு முரண்படுவார் அவர். கவிதையைக் கணிதமாகவே கருத வேண்டும் என்பர். கவிஞராவது பயிற்சியினால் உருவாவது என்னும் கருத்தியல் நிலைப்பாட்டாளர் அத்தகைய சிந்தனையாளர்தம் கவிதைகளில் பயின்றுள்ள சில அசாதாரணமான உவமங்களை ஆராய்வதாக  இக்கட்டுரை அமைகிறது.

    சுரதா உவமங்கள் ஒரு பருந்துப் பார்வை

    “உழைகுலாம் நயனத்தார் மாட்டு ஒன்றொன்று விரும்பற் கொத்த  அழகெலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்ற வல்லார்?” என்று கம்பராமாயணத்தில் ஒரு தொடர் உண்டு. சுரதாவின் கவிதை உவமங்களுக்கு இது அப்படியே பொருந்தும். பாடுபொருளைப் பற்றிய சிந்தனைகளைப் புதுமையாகவே அமைத்துக் கொள்வதும் பொருட்களைக் கவிதையாகவே நோக்குவதுமே இதற்குக் காரணம். பொருத்தமான ஆழமான அழகியல் சார்ந்த உவமங்கள் அவர்தம் கவிதைப் படைப்புக்களில் அமர்வதற்கு இதுதான் காரணம். அல்லி நிலவு கண்டும் தாமரை கதிரவன் கண்டும் மலர்கிறபோது வானத்து மின்னலுக்கு ஏதாவது மலராமலா இருக்கும்? என்ற சிந்தனையின் விளைவாகத்தான் ‘சுடர் மின்னற் கண்டுதாழை மலர்வதுபோலே உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே’ எனவும் ‘அகிலம் யாவும் அழகின் வேலை! நீல ஆகாயம் செங்கதிர் செல்லும் சாலை!’ எனவும் அவரால் எழுத முடிந்ததற்கு விரிந்த வான் நிகழ்வுகள் மேல் அவர் செலுத்திய நுண்ணோக்கே காரணம். பழந்தமிழ் இலக்கியப் பதிவுகள், இலக்கண நுட்பங்கள், இயற்கைக் காட்சிகள், வரலாற்று நிகழ்வுகள், சான்றோர் மொழிகள் என அனைத்திலும் அவருடைய இந்த நுண்ணோக்கு தனித்த ஆதிக்கம் செலுத்தியது. செலுத்தவே பொருண்மை விளக்கத்திற்கான உவமங்களும் புதிதாய் அவருக்குத் தோன்றியன. ‘அந்தக் காலத்து அரசன் பற்பலப் பெண்களைத் தழுவி மகிழ்ந்தாற்போல் வளைந்தும் நெளிந்தும் வருகின்ற பற்பல நதிகளைப் புணரும் தண்ணீர் நாயகன்’ என்று கடலை அக்கால மன்னர்களோடு ஒப்பிட்டுப் பாடுவதற்கு இந்த நுண்ணோக்கே காரணம்.

    நால்வரும் இவரும்

    இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞர்களில் மக்களைப் பாதித்தவர் நால்வர். மகாகவி, பாவேந்தர், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவர்களுடைய பாடல்கள் நிரல்நிரையாக விடுதலைப் போராட்டம் தொடங்கி இருபத்தோராம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை தமிழ்ச் சமுதாயத்தைப் பாதித்தே வந்திருக்கின்றன. அப்பாதிப்பு இன்றும் தொடர்கிறது. சமுதாயச் சிக்கல்கள் பெரிதும் பாதிக்காத கவிஞராகவே சுரதா இருந்திருக்கிறார் என்பது அவர்தம் கவிதைகளால் அறியப்படும்  ஆய்வுண்மையாகும். ஒட்டுமொத்த இந்தியாவின் சிக்கலைப் பாரதி பாடுபொருளாக்கியதுபோலவோ தமிழ் மொழி, இன, நாடு என்னும் இவற்றை இவற்றின் சுணக்கத்தைப் போக்கி எழுச்சியடையச் செய்ய வேண்டும் என்பனவற்றைப் பாரதிதாசன் பாடுபொருளாக்கியது போலவோ சுரதாவின் பாடல்களில் காண்பது அரிதாக இருக்கிறது. தனிமனித உளவியல் சிக்கல்கள் கண்ணதாசனின் பாடுபொருளாயின. உழைக்கும் வர்க்கத்தினரின் சிக்கல்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடுபொருட்களாயின. இந்த நான்கு கவிஞர்களிடமிருந்தும் சுரதா வேறுபடுவதாகவே தெரிகிறது. சுருங்கச் சொன்னால் கவிதை கவிஞனுக்கானது என்பதுதான் சுரதாவின் ஒருவரிப் படைப்புக் கொள்கையாக அமைந்திருக்கிறது. அவருடைய கவிதைகளில் ஆண்மையின் வீரியத்தைவிடப் பெண்மையின் நளினமே தூக்கலாக இருக்கிறது. அதேபோல், உரைநடையைப் பற்றிக் கூறும்போது, ‘‘உரைநடை – பசிக்குச் சோறு’’ என்று பதிலளித்தாராம். இதனால் கவிதையை அவர் விருந்தாகத்தான் கருதியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.    சமுதாயச் சிக்கல்கள் பெரிதும் பாதிக்காத கவிஞராகவே சுரதா இருந்திருக்கிறார். இது அவர்தம் ஒட்டுமொத்த கவிதைகளை ஆராய்ந்தவழி அறியப்படும் ஆய்வுண்மையாகும்.

    உவமமாகும் இலக்கணக் குறியீடுகள்

    வேறுபட்ட புதுமையான உவமங்களைக் கூறுவதில் சுரதா வல்லாளர் என்பது உண்மையே. இருப்பினும் இலக்கணக் குறியீடுகளை உவமமாகப் பயன்படுத்திய நுண்ணியமே அந்தப் பெருமைக்குச் சான்றாகத் திகழ்கிறது. இலக்கணக் குறியீடுகளின் உயிர்ப்புத் தன்மையை உள்ளத்தில் வாங்கி உட்கொண்டு, அதனை மாறுபட்ட கோணத்தில் உவமமாகக் கையாள்கிற கவிதைத் தொழில்நுட்பம் பெரும்பாலும் சுரதாவிடம் தொடங்கிச் சுரதாவிடமே நிறைவடைந்து விடுகிறது. அதற்குப் பின்னாலே வந்தவர்கள் ஏதோ பயன்படுத்தினார்கள். அவை வெற்றிபெறவில்லை. காரணம் இலக்கண உறவின்மை. இலக்கணப் புலமை என்பது வேறு. இலக்கணத்தைக் கவியுள்ளத்தோடு நோக்குவது என்பது வேறு. அந்த உள்ளத்தைச் சுரதா பயிற்சியினால் பெற்றிருந்தார்.

    மணமக்களை இரட்டைக் கிளவியாக்கியவர்

    பொதுவாகத் திருமண வாழ்த்துரை என்பது சடங்காக முடியும் ஒரு நிகழ்வு. மலரும் மணமும் போல, வீணையும் நாதமும் போல, அன்றில் பறவை போல’ என்றவாறே வாழ்த்துக்கள் அமைந்த காலம் அது. ஒரு திருமண விழாவில் மணமக்களை ‘இரட்டைக் கிளவிபோல்’ வாழுங்கள் என்று வாழத்தினார் சுரதா. இரண்டாகவே அமையும் என்பதும் பிரித்தால் பொருள் தராது என்பதும் இலக்கண உண்மை. கணவன்-மனைவி இருவராகவே வாழ்தல் வேண்டும் என்பதும் பிரிந்தால் இல்லறம் கடைபோகாது என்பதும் வாழ்வியல் நுண்ணியம். இந்த வாழ்வியல் நுண்ணியத்தை ஒரு இலக்கணக் குறியீட்டில் கண்டறிகிற திறன் அவருக்கு மட்டுமே இருந்தது. மணமக்களுக்கு இரட்டைக் கிளவியை உவமமாக்கியதில் சுரதாவின் தமிழ்ப்பண்பாடு பற்றிய கருத்தும் பார்வையும் மற்றொரு நுண்ணியமாக அமைந்திருக்கிறது. அது என்ன? தமிழ்ப் பண்பாட்டியலில் களவு மணம் என்பது விதிவசமானது. விதிக்கப்படுவது விதி. அதாவது இயற்கை. இதனை ‘ஊழ்’ என்பார் திருவள்ளுவர். ‘ஊழ்’ என்பதற்குச் சொற்பொருள் விரித்த பரிமேலழகர்,  ஊழ், பால், முறை, உண்மை, வைப்பு, தெய்வம், நியதி, விதி என்பன ஒருபொருட்கிளவி என்கிறார். ‘பாலது ஆணையின்’ என்பது தொல்காப்பியம்! இறையனார் அகப்பொருள் களவியலின் சாரமும் இதுவே. இன்றைக்கும் தமிழகச் சிற்றூர்களில் பெண்பிள்ளைகள் பூப்பெய்தியவுடன் சொல்கிற சொலவடை ‘இனிமேலா உனக்கு ஒருவன் பிறக்கப் போகிறான்?’ என்பதுதான். ‘ஏற்கனவே பிறந்திருக்கிறான்’ என்பது பொருள். எனவே தமிழ்ப் பண்பாட்டில் திருமணம் என்பது இயற்கை நெறிக்குட்பட்டது. அதனை விதியென்றும் சொல்லலாம். அதாவது இயற்கையாகவே நிகழ்கின்ற நிகழ்வு. ‘இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா’ என்பதனால் அது பிறக்கிறபோது இரட்டையாகத்தான் பிறக்கும் என்பது பெறப்படும், படவே மணமக்களின் பிறப்பும் மணமும் ஒன்றை மற்றொன்று நோக்கியது என்பதும் புலப்படும். ‘இறைவன் உறுதி செய்ததை மனிதர்கள் பிரிக்காதிருக்கட்டும்’ என்னும் விவிலியத்தின் சாரமும் இதுவே. மணமக்கள் இரட்டைக் கிளவிபோல் வாழ்க என்றால் தோற்றம், வாழ்வு, நிறைவு என எல்லாத் திறங்களிலும் ஒற்றுமையாக வாழ்க என்பது பொருள்.

    உயிர்ப்புணர்ச்சியும் உடம்படு மெய்யும்

    தமிழ்ப் புணர்ச்சியிலக்கணத்தில் அமைந்துள்ள நுண்ணியங்களில் ‘உடம்படுமெய்’ என்பது தனித்துவம் மிக்கது. மெய்யோடு உயிர் சேர்தல் என்பது இயல்பு. மெய்யோடு மெய் சேராது, இணையாது. அப்படிச் சேர்ந்தால் அதற்கு மெய்ம்மயக்கம் என்று பெயர். அதனைப் போன்றே உயிரோடு உயிர் இணையாது. சில நேர்வுகளில் அவ்வாறு இணையும். இரண்டு உயிர்கள் இணையும் போது அவற்றை இணைக்கும் பற்றாசிட்டாகப் பயன்படுவது மெய். அதற்குத்தான் ‘உடம்படு மெய்’ என்று பெயர். உலகத்தில் உயிரால்தான் மெய்க்குப் பெருமை. தமிழிலக்கணத்தில் மெய்யால்தான் உயிருக்கு வாழ்வு! மெய்தான் இரண்டு உயிர்களையே இணைக்கிறது! இந்த இலக்கணப் பின்புலத்தில் சில செய்திகளைக் காணலாம்.

    சிலப்பதிகாரம் காட்டும் புணர்ச்சி

    சிலப்பதிகாரத்தில் ஆர்வம் காட்டப்படாத பகுதிகள் எனச் சில உண்டு. அவற்றுள் கண்ணகி கோவலன் இல்லறம் பற்றியது. கண்ணகியின் இல்லறம் பற்றி அடிகள் முழுமையாகக் கூறவில்லை என்பாரும் கண்ணகியைவிட மாதவி கோவலனுக்குப் பொருத்தமானவள் எனப் புகார்நகரத்தில் மாதவி வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் அப்போது வாழ்ந்தவர் போலவும் இங்கே கதை விடுவார் பலர். அடிகள் எழுதுகிறார்,

    “வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
    கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்,
    தாரும் மாலையும் மயங்கிக், கையற்று”

    என்று. இது கதைப்போக்கில் கண்ணகியும் கோவலனும் முதல் நாள் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வு. மனையறம்படுத்த காதையின் இறுதியில் ஆசிரியர் இளங்கோவடிகள் தன் கூற்றாகக் கூறுகிறார்.

    “தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என, ஒருவார்
    காமர் மனைவி எனக் கைகலந்து, நாமம்
    தொலையாத இன்பம் எலாம் துன்னினார் – மண்மேல்
    நிலையாமை கண்டவர் போல் நின்று!”

    சிற்றூர்களில் பல நேர்வுகளில் பாம்புப் புணர்ச்சியைக் காணலாம்.  நாகமும் சாரையும் என்பார்கள். உண்மையில் நாகமும் நாகமுமே புணரும். அவ்வாறு புணருங்கால் இரண்டு பாம்புகளின் வால்களின் நுனி மட்டுமே தரையில் நிற்கும். மற்ற பகுதிகள் உச்சித் தலைவரை இரண்டும் பின்னிப் பிணைந்து நிற்கும். ஆடாது, அசையாது. பிறகு ஒன்றினை ஒன்று தழுவிக்கொண்டு தரையில் புரண்டு விளையாடும். அப்போதும் உடல் பிரியாது. கண்ணகியையும் கோவலனையும் மன்மதனோடும் ரதியோடும்   உயர்திணையில் இணைத்துக் கூறிப் புணர்ச்சியைப் பாம்புகள் மேல்வைத்துக் கூறிப் பண்பாடு காத்தவர் அடிகள்.

    சுரதாவின் கவிதையில் இலக்கணப் புணர்ச்சி

    பாவேந்தர் இந்த இல்லறப் புணர்ச்சியைத் தமிழ்நாட்டுப் பெண்களின் நாட்கடமையில் வைத்துக் கூறியிருக்கிறார். பாவேந்தர் எழுதிய குடும்ப விளக்கு ஒரு நாள் நிகழ்ச்சி படுக்கையறையில் நிறைவு பெறுகிறது.

    “சொல்லரிதாய் மிகஇனிதாய் நாழி கைபோம்!
    சுடர்விழிகள் ஈரிரண்டு நான்கு பூக்கள்
    புல்லிதழில் போயொடுங்கும் தமை மறந்து
    பூரிப்பார் நலம்பாடி இரவு செல்லும்!”

    என்று அந்த இரவைத் தமிழ்ப் பண்பாட்டுக் குறிப்போடு நிறைவு செய்திருப்பார் பாவேந்தர்.

    “கச்சிதமாய் உறங்கிக் கொண்டிருப்பேன் வீட்டில்;
    கண்கலந்த என் கணவர் அருகில் வந்தே
    நச்சரிப்பார்; நயமாகப் பேசி, சற்றே
    நகரென்பார்; நான்மறுப்பேன்; ஊடல் தீர்ப்பார்!

    “இச்சமயம் ஒளியிலையே அத்தான்” என்பேன்;

    “இருள்தானே பூனைக்கு வேண்டும்!” என்பார்;
    உச்சரிப்பு நின்றுவிடும்; தொடுவார்; ஈர
    உடைபோல்நான் அவருடலில் ஒட்டிக் கொள்வேன்.”

    நீர்நிலைகளில் குளித்து வரும் பெண்கள் ஈர உடையை அணிந்து இல்லம் திரும்புவது தமிழகத்துப் பெண்டிரின் நாட்கடமை. படுக்கையறையில் உவமம் சொல்கிற பெண், தனக்கு நாளும் பழக்கமான ஒன்றினையே உவமமாக்குகிறாள் என்பதுதான் உவமச் சிறப்பு. அவள் அறிந்தது குற்றாலம்! அதனால் உவமமாக்குகிறாள். அவள் நயாகராவைச் சொல்லியிருந்தால் உவமப்பூ ஊமத்தம்பூ ஆகியிருக்கும்! பாவேந்தர், சுரதா ஆகியோர் பாடல்களுக்குத்,

    “தனியாகக் காணவருவார் – இவள்
    தளிர்போலத் தாவி அணைவாள்
    கண்போலச் சேர்ந்து மகிழ்வாள் – இரு
    கண்மூடிமார்பில் துயில்வாள்

    எழிலான கூந்தல் கலையாதோ
    இதமான இன்பம் மலராதோ
    எழிலான கூந்தல் கலையாதோ
    இதமான இன்பம் மலராதோ

    மலராத பெண்மை மலரும் முன்பு
    தெரியாத உண்மை தெரியும்
    மயங்காத கண்கள் மயங்கும் – முன்பு

    விளங்காத கேள்வி விளங்கும்
    இரவோடு நெஞ்சம் உருகாதோ
    இரண்டோடு மூன்று வளராதோ
    இரவோடு நெஞ்சம் உருகாதோ
    இரண்டோடு மூன்று வளராதோ”

    என ஒரு திரையிசைப் பாடலில் பதவுரை, விளக்கவுரை, சிறப்புரை ஆகிய அனைத்தையும் எழுதியிருப்பார் கண்ணதாசன். பாவேந்தர் பாடியது அப்படி! சுரதா பாடியது அப்படி! கண்ணதாசன் உரையெழுதியது இப்படி! இவை எல்லாவற்றையும் ஒரே ஒரு இலக்கணக் குறியீட்டில் அடக்கிவிடுகிறார் சுரதா!

    “பூவெல்லாம் பொன்னே உன் உடலின் மீது
    பூத்திருக்க நீயவற்றைப் பார்த்திருந்தும்
    காவெல்லாம் சென்று சென்று நின்று நின்று
    கால்நோவப் பூப்பறித்துச்சூடும் பெண்ணே!
    நாவில் நீ! நெஞ்சில்நீ! அஞ்சன் ஆட்சி
    நல்லதமிழ்ப் பாடல் நீ! அன்றோ என்றான்!
    ஓவம்மாள் ஈன்ற மகள் சிரிப்பை ஈன்றாள்!
    உடம்படுமெய் இலக்கணத்தை இரவில் கண்டார்!”

    பூ+அழகு என்பது ‘பூவழகு’ என்று இணையும். இச்சொல்லில் நிலைமொழி ஈற்று ஊகாரமும் வருமொழி முதல் அகரமும் உயிர். உடம்பொடு உயிர் வந்து ஒன்றுவதுதான் இயல்பு. இங்கே உயிரல்லாத வேறொரு மெய் (வ்) தோன்றி இணையாத உயிர்களை இணைப்பதைக் காணலாம். உடல் பிணைப்பை உடம்படுமெய்யாக்கி உவமித்ததன்மூலம் உயிர்ப்பிணிப்பின்  துடிப்பைக் கேட்க வைத்திருக்கிறார் சுரதா!

    எதுகையும் மோனையும்

    நாற்பத்து மூன்றுவகை தொடை விகற்பங்களில் பாட்டுக்கு அழகூட்டி அதனைச் நிலைக்கச் செய்வன எதுகையும் மோனையும். இதற்கு அடுத்த படியாக முரண் அமையலாம். தொடைவிகற்பங்களை அளவடிக்கு மட்டுமே கணக்கிட இயலும். பொதுவாக ஆண் முன்னாலே செல்வதும் பெண் அவனைத் தொடர்ந்து பின்னாலே செல்வதும் உலக வழக்கு. ‘எங்கெங்கே போனாலும் நிழல் போகும் தன்னோட எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட’ என்பது புலமைப்பித்தன் கண்ட பெண்மை. ‘நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்’ என்பதும் வழக்கு. ஆதிமந்தி – ஆட்டனத்தி இருவரும் வருகிறார்கள்.

    “மதிமதுரப் புலவரெல்லாம் மகிழ்ந்து பாட
    வரலாற்றுப் பேரழகி ஆதிமந்தி
    எதுகைவரல் போல் அடுத்து வந்தாள் அத்தி
    என்பானோ மோனையைப்போல் முன்னே வந்தான்!”

    தமது கவிதைப் படைப்புக்களில் ஒவ்வொரு அசையிலும் மரபையன்றி வேறு எதனையும் பதியம் போடாத சுரதா, இங்கே ‘முன்னாலே’ வந்த அத்தியை மோனையாக்கினார். ‘அடுத்து’ வந்த ஆதிமந்தியை எதுகையாக்கினார். ‘எழுவாய் எழுத்தொன்றின் மோனை…………இரண்டாம் வழுவா எழுத்தொன்றின் எதுகை’ என்னும் தொடையிலக்கணத்தை உயர்திணை வரவுக்கு உவமமாக்கியிருக்கிறார்.

    பரிசும் விருதும் பகுதி போன்றது

    பதமாகிய சொல் பகுபதம், பகாப்பதம் என இருவகைப்படும். பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறுறுப்புக்களைப் பெற்று வருவது பகுபதம். இவற்றுள் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடைநிற்பது சந்தி. விகுதிக்கும் இடைநிலைக்கும் இடைநிற்பது சாரியை. பகுதி தவிர ஏனைய மாற்றத்திற்குரியன. தொட்டான், தொட்டாள், தொட்டனர், தொட்டது, தொட்டன என்னும் ஐம்பால் வினைச்சொற்களில் பால்காட்டும் விகுதிகள் மாறி நிற்பதும் ‘தொடு’ என்னும் பகுதியாகிய ஏவல் நிலைத்து நிற்பதும் காண்க. இதிலிருந்து ஒரு பகுபதம் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டாலும் அதன் உயிராகிய பகுதி மாறவே மாறாது. நிலைத்து நிற்கும். பாரதிதாசனுக்குப் புரட்சிக்கவிஞர் என்பதைத் தவிர வேறு எந்தப் பட்டமும் பொருந்தாமற்போனது. நம் சுரதாவிற்குப் பொருந்திய ‘உவமைக் கவிஞர்’ என்னும் பட்டம் வேறு எவருக்குமே பொருந்தாமற் போனது.  தற்காலக்கவிஞர் சிலர் போட்டுக் கொள்கிற பட்டம் மொட்டைத் தலையில் பூ தைப்பது போலப் பொருந்தாமற் போய்விடுகிறது. அவர்கள் ஒரு நாளைக்கு நாலைந்து முறை பட்டங்களை மாற்றிப் போட்டாலும் அவை நிலைப்பதில்லை. காரணம் பெற்றவருக்கும் தகுதியில்லை. கொடுத்தவர்க்கும் தகுதியில்லை. விளம்பர உலகில் இது வெகு சாதாரணம். இதனைச் சொல்கிறார் சுரதா.

    “தகுதி மிக்கோர் தருகின்ற பட்டம்
    பகுதி போன்று நிலைத்து நிற்கும்”

    வினைச்சொல்லுக்கும் வினையாலணையும் பெயருக்கும் மட்டுமே பகுதி உண்டு. தகுதி உடையவர் தருகின்ற பட்டங்கள்தாம் நிலைத்து நிற்கும். வி.சி.கணேசனுக்குச் ‘சிவாஜி’ என்னும் பட்டத்தைக் கொடுத்தவர் தந்தை பெரியார். மோகன்தாஸ் காந்திக்கு ‘மகாத்மா’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர் தாகூர். தகுதியுடையவர் தந்த பட்டங்கள் அவை. நிலைத்து நிற்கும் என்ற உண்மையை வினைச்சொல்லில் பகுதி நிலைத்து நிற்கும் என்னும் உறுப்பிலக்கண உண்மையோடு உவமமாக்கி விளக்கியவர் சுரதா.

    உவமப் பந்தி

    திருக்குறள் உவமங்களின் தனித்தன்மை பற்றிய கட்டுரை இந்தத் தொடரின் ஐம்பதாவது இறுதிக் கட்டுரையாக அமையும். திருக்குறளில் ஒரு கருத்தினை விளக்கத் திருவள்ளுவர் மற்றொரு கருத்தினையே உவமமாக்குவார். உவமமாகும் அந்தக் கருத்து வேறொரு அதிகாரத்திற்கு உரியதாகவும் இருக்கும். வேறொரு உண்மையை உணர்த்துவதாகவும் இருக்கும். விரிப்பின் பெருகும். அந்த நெறியில் வந்த சுரதா தற்காலத் தமிழர்களின் நிலையைப் பாடவருகிறார். பாரதியைப் போல் இவருக்கும் நெஞ்சு பொறுக்கவில்லை. என்ன சொல்கிறார்? தமிழர்கள் மேல்நாட்டாரைப் போல் இருக்க வேண்டும் என்றெல்லாம் கதைவிடவில்லை.

    “இன்றுள்ள தமிழரெல்லாம் அந்த நாளில்
    இருந்தவர்போல் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்!
    என்றென்றும் செந்தமிழைக்காத்தல் வேண்டும்!
    ஏமாற்றும் மனப்பான்மை மறைதல் வேண்டும்!”

    என நறுக்குத் தெறித்தாற் போல் பதிவிடுகிறார். தமிழினத்திற்கு இணையானதொரு இனம் அன்றைக்கும் இல்லை. என்றைக்கும் இல்லை. இவனை விளக்க உவமம் ஏதுமில்லை. இவனுக்கு இவனே உவமம் என்று கருதிய சுரதா அக்காலத் தமிழனைத் தற்காலத் தமிழனுக்கு உவமமாக்கினார். இதுவரையில் தமிழ்க்கவிதைகளில் கண்டிராத உவமக் கோட்பாடு!

    “மணமாலை தனைசூடி உறவாடுவார்! மனம்
    மாறாமல் பலகாலம் உறவாடுவார்!
    ஒருகாலத் தமிழ்நாடு இதுதானடா! இதை
    உன்காலத் தமிழ்நாடு அறியாதடா”

    என்னும் கண்ணதாசன் பாடல் இங்கே நினைக்கத்தகும்.

    கணிதமும் உவமமாகும்

    உயிரெழுத்து பன்னிரண்டு. மெய் பதினெட்டு. குற்றியலுகரம் ஆறு, தளை ஏழு, தொடைவிகற்பங்கள் நாற்பத்து மூன்று, கலிப்பா மூன்று,  கலிப்பாவின் உறுப்புக்கள் ஆறு எனக் கணிதத்தோடு தொடர்புடையது தமிழ். ‘ஏரம்பம்’ என்பது அந்நாளில் மக்கள் வழக்கில் இருந்த கணித நூல். சுரதா எதனையும் கவிதையாக நோக்கும் பேராற்றலுடையவர்.

    “உயரத்தைப் படுக்க வைத்தால் நீட்டமாகும்
    உள்ளத்தைப் பழுக்கவைத்தால் புதுமை தோன்றும்”

    உயரத்தை ஆணவத்தின் குறியீடாகவும் நீட்டத்தைப் பணிவின் குறியீடாகவும் பயன்படுத்தியிருக்கிறார். பக்குவம் பணிவைத் தரும்.  முதிர்ச்சியைப் பழம் என்பது மரபு. ‘ஞானப்பழம்’ என்பது முருகனுக்கான திருநாமங்களில் ஒன்று. அனுபவத்தில் முதிர்ந்த சான்றோர்களைப் ‘பழுத்த பழம்’ என்பது உலகியல்.  ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ என்பது பெரியாரைப் பற்றிய பாவேந்தரின் உருவகம். ‘தேனாய்த் தீம்பழமாய்’ என்பது திருவருட்பா. ‘பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்’ என்பது பூவை செங்குட்டுவன் வரி!

    பூவை செங்குட்டுவனும் சுரதாவும்

    “கெடலெங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க” என்பார் பாவேந்தர். பிறரை ஊக்குவிக்கும் பேருள்ளம் படைத்தவர் சுரதா. வறுமையின் உச்சத்தில் வாடியவர் செங்குட்டுவன். வாடகை சைக்கிள் கடைவைத்துப் பிழைப்பு நடத்தியவர். ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ என்ற பூவையின் பாடலைப் பிலிம்சேம்பர் விழாவில் இயக்குநர் ஏ.பி. நாகராசன் அவர்களோடு அமர்ந்து கேட்ட கண்ணதாசன் வியந்து போயிருக்கிறார். ‘தான் எழுதியிருந்தாலும் அவ்வளவு சிறப்பாக எழுதியிருக்க முடியாது’ என்று மனந்திறந்து பாராட்டி, அந்தப் பாடலைக் ‘கந்தன் கருணை’ என்ற படத்தில் இணைக்கச் சொன்னார். கவிஞர்களுக்கு இந்தப் பேருள்ளம் மிகவும் இன்றியமையாது இருக்க வேண்டிய பண்பு. பலரிடம் இல்லை என்பது உண்மை. இந்தப் பாடலைப் பற்றி அன்றைக்குச் சென்னை நூலகத்தில் நடைபெற்ற விழாவொன்றில் ‘வில்லிப்புத்தன்’ என்னும் நபர் ‘திருப்பரங்குன்றத்தில் சிரித்துத் திருத்தணியில் எதிரொலித்தால் முருகன் என்ன வில்லன் சிரிப்பா சிரித்தான்?’ என்று ஏளனமாகக் கேட்டிருக்கிறார். கூட்டத்தில் அமர்ந்திருந்த சுரதா வெகுண்டெழுந்தார். “ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் இடைவெளி குறைவாக இருந்தால் இடையில் பேசுவதால், பாடுவதால் ஏற்படும் ஒலி மிகுந்து ஒலிக்கும். பள்ளத்தாக்கு உட்பட்ட இடைவெளியில் மிகுந்து ஒலிப்பதற்குக் காரணமாக இருப்பதால் மலைக்குச் ‘சிலம்பு’ என்பது காரணப்பெயர். ‘சிலம்பு என்பதற்கு ‘ஒலித்தல்’ என்பதும் ‘மலை’ என்பதும் பொருள். காலில் அணிகிற சிலம்பின் பரல்கள் ஒலிப்பதால்தான் அதற்குச் சிலம்பு என்பது பெயர். செங்குட்டுவன் சிறப்பாக எழுதியிருக்கிறார். எதனையும் தெரிந்து பேச வேண்டும். தெரியாமல் உளறக் கூடாது’ என்று கண்டித்திருக்கிறார். நினைத்துப் பார்க்க முடியாத நிகழ்வு. ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் உதவுகின்ற பேருள்ளத்தையும் ஒருங்கே பெற்றவர் சுரதா. கட்டுரைப் பொருளுக்குத் தொடர்பில்லாவிடினும் ஒரு மாபெரும் கவிஞனைப் பற்றிய வரலாற்று நிகழ்விலிருந்து அவனுடைய பண்பாட்டை அறிந்து கொள்வதற்காகச் செய்யப்பட்ட பதிவு இது.

    உவமத்திற்கும் உவமம் சொன்ன சுரதா

    எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் உவமம் சொன்ன சுரதா உவமம் எதனைப் போல் இருக்க வேண்டும் என்று உவமத்திற்கே உவமம் சொல்லியிருக்கிறார்.

    “கவிதையில் கருத்து வேண்டும்!
    கட்டாயம் உவமை வேண்டும்!
    உவமைதான் கவிதைகட்கு
    உயிர்நாடி பெருமை சேர்க்கும்!
    உவமை யிலாத பாடல்
    உப்பு சேராத பண்டம்!
    அவிழ்ந்திடா தாமரைப்பூ!
    அழகில் லாத மங்கை!”

    உயிர்நாடி, உப்பு, அவிழ்ந்த தாமரைப்பூ, அழகுடைய மங்கை என்னும் உவமங்களை ஒரு முழுக்கவிதையோடு ஒப்பிட்டு நோக்கினால் உவமத்தின் அருமை புரியக் கூடும்.

    சுழிக்குள் சிக்கிய சுரதா

    தனது வழிகாட்டி பாவேந்தரைப் பாடுகிறார் சுரதா. அது ஒரு கையறு நிலைப்பாடல். கையறுநிலைப் பாடலில் பாடப்படும் இரக்கத்திற்குரிய தலைமகனின் பெருமைகள் மட்டுமே சுட்டப்படல் வேண்டும் என்பது இலக்கிய மரபு. ஒரு பாட்டில் ஒரு உவமம்தான் சொல்லப்பட வேண்டும் என்பதும் உவமத்திற்கு உவமம் புணர்த்தல் ஆகாது என்பதும் பழந்தமிழ் உவமமரபு. சுரதா பாடுகிறார்,

    “திருத்தத்தில் வெற்றிபெற்றான் ஒட்டக் கூத்தன்
    தீர்ப்பளித்து வெற்றி பெற்றான் கரிகாற்சோழன்
    நிருத்தத்தில் வெற்றிபெற்றான் ஆட்டனத்தி
    நிதியளித்து வெற்றி பெற்றான் பாரிவள்ளல்
    வருத்தத்தில் வெற்றிபெற்றான் வடலூர் வள்ளல்
    வாளேந்தி வெற்றிபெற்றான் சேரலாதன்
    விருத்தத்தில் வெற்றி பெற்றான் கம்பன் அந்த
    வெற்றியினை இவர்பெற்றால் என்னைப் போல”

    என்று. இந்தப் பாட்டைப் படிக்கின்ற அன்பர்கள் பலரும் இதனை உவம அணியாகக் கொண்டு பாராட்டி மகிழ்கின்றனர். அது சரியே. ஆனால் உவம இலக்கண வரையறைக்குள் இது அடங்குமா என்பது சிந்தனைக்குரியது.

    உவம அணியும் எடுத்துக்காட்டு உவமமும்

    எடுத்துக்காட்டு (EXAMPLE) என்பது வேறு. ஒப்பீடு (SIMILE) என்பது வேறு. எடுத்துக்காட்டே ஒப்பீடானால் அது எடுத்துக்காட்டு உவமம். இந்த நுட்பத்தை அறியாமல் எடுத்துக்காட்டு உவமையின் வெளித்தோற்றத்தை மட்டும் கண்டவர்கள் பொருளையும் உவமத்தையும் தனித்தனியே கூறி உவம உருபைக் கூறாது விடுதல் எடுத்துக்காட்டு உவமம் என்றே சொல்லிவருகிறார்கள். இது பாடத்திட்டக் குழுவின் பாடநூலில் சொல்லப்பட்ட வரையறைக்குட்பட்ட மதிப்பெண் மயக்கம். இலக்கிய ஆராய்ச்சியில் உவமத்திற்கான ஆய்வுப் பார்வையைக் கல்வி நிலையங்கள் எதிரொளிப்பதில்லை. ஆனால் உவம அணி அத்தகையதன்று, உவமமும் பொருளும் ஒவ்வொரு துகளும் ஒத்திருத்தல் வேண்டும். ஒருபுடை என்ற பேச்சுக்கே இடமில்லை.

    உயர்ந்ததன் மேற்றே உள்ளுதல் வேண்டும்

    வினை, பயன், மெய், உரு என்னும் நான்கும் தனித்தனியாகப் பாடுபொருளாகும்போது உவமங்களும் தனித்தே இயங்க வேண்டுமேயன்றி மயங்குதல் கூடா. இந்தப் பாட்டில் மூன்று செய்திகளை நிரல்படுத்துகிறார் சுரதா!

    1. வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்.
    2. பாவேந்தர் பெற்ற வெற்றி
    3. சுரதா தன்னை உவமமாக்கிப் பாவேந்தரைப் பொருளாக்கியது

    இந்த வகைபாடுகளில் முதலில் வெற்றிபெற்றவர்கள் பல்வினை நாயகர்கள். அவர்கள் அடைந்த வெற்றிதான் ஒப்புமையே தவிர, அது எவற்றால் எல்லாம் பெற்றார்கள் என்பது ஒப்புமை ஆகாது. வெற்றி ஒரு காட்டலாகாப் பொருள். அது தொழிற்பெயர் என்றால் அதற்கான காரணங்கள் ஒன்றாக இல்லை.

    1. திருத்துவதில் ஒட்டக் கூத்தர்
    2. தீர்ப்பளிப்பதில் கரிகாற்சோழன்
    3. நாட்டியத்தில் ஆட்டனத்தி
    4. நிதியளிப்பதில் பாரி
    5. வருத்தத்தில் வள்ளலார்
    6. வாளேந்துவதில் சேரலாதன்

    தனித்தனி தன்மை கொண்ட ஆறு வினைகளை நிரல்படுத்தி எடுத்துக் காட்டுகிறார். இவற்றுள் எங்கே இருக்கிறது உவமம்? இவர்கள் பெற்ற வெற்றியைத்தான் மற்றொரு வெற்றியோடு ஒப்பிடுகிறார். அது கம்பன் விருத்தத்தில் அதாவது விருத்த யாப்பில் பெற்ற வெற்றி. கம்பன் பெற்ற வெற்றியைச் சுரதா பெற்றிருக்கிறார். சுரதாவைப்போல் பாவேந்தரும் பெற்றிருக்கிறார். யாரை உயர்த்திப் பாட வந்தாரோ அவரைப் பொருளாக்கினால் அவருக்கான உவமம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். இது ஆய்வு. ஆனால் வெளிப்பாட்டு உத்தியில் பொருளான பாவேந்தர் உவமமாகிய சுரதாவினும் குறைந்திருக்கிறார். சுரதா தன்னையே உவமமாக்கியதால் இதனை உணரலாம். ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை’ என்னும் விதியின் அடிப்படையில் நோக்கினால் பாவேந்தரினும் சுரதா உயர்ந்துவிடுகிறார். இதனால் பாடுபொருள் மயக்கத்திற்கும் தடுமாற்றத்திற்கும் ஆளாகிறது என்பதோடு கவிச்செருக்கின் காரணமாகப் பாட்டு மாசடைகிறது. விடுதலைப் போராட்டத்திற்குப் போர்ப்பரணி பாடிய பாரதி, வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்புக் கவிதை அளித்ததைக் கல்வியாளர் கா.திரவியம் ஒரு சுருதிபேதமாகவே தமது ‘தேசியம் வளர்த்த தமிழ்’ என்ற நூலில் கூறுகிறார். பாரதிதாசனைப் பற்றிய சுரதாவின் இந்தப் பார்வையும் அவரது படைப்புக்களில் ஒரு கரும்புள்ளியாகவே தெரியும்.

    நிறைவுரை

    சுரதா அவர்களுக்கு அன்றைய சங்க இலக்கியம் முதல் இன்றைய புதுக்கவிதை வரை இயல்பான நீச்சல் குளம். பாரதிக்கு ஒரே ஒரு தாசன்தான் அவர் பாரதிதாசன் மட்டுமே. ஆனால் பாரதிதாசனுக்கு பல தாசன் கிடைத்தார்கள் அவர்களில் நானும் ஒருவன் என்கிறார் சுரதா அடக்கமாக. ஆனால் தாசன்களில் முதலிடம் பெற்றவர் சுரதாதான்.

    “தண்ணீரின் ஏப்பந்தான் அலைகள்,

    “பறக்கும் நாவற்பழம் வண்டு”

    “கரும்புக்குப் பூத்த வெறும்பூ”

    “உன்னைப்பார்த்தால் மதுவுக்கும் கூட மயக்கம் வரும்”

    “கனவில் கூடச் சோரம் போகாத நானா விலைமகள்?”

    “இழுத்துவிட்ட மூங்கில் போல நிமிர்ந்தான்”

    “நீ தொட்டால் விஷம் கூடச் செத்துவிடும்”

    என்றெல்லாம் உரைநடையைக் கவிதையாக்கிக் கவிதையை உரைநடையாக்கி இரண்டிற்கும் கலப்புமணம் செய்து வைத்தவர் சுரதா! ‘‘அவன் உரைக்காத உவமையில்லை. அவனுக்குத்தான் உவமையில்லை’’ என்பார் திரைப்படப் பாடலாசிரியர் வாலி. சுரதாவைக் கொஞ்சம் படித்த பிறகு “சுரதாவைப் போல யாராவது எழுத மாட்டார்களா? என்று ஒரு நாள் என் தந்தையைக் கேட்டேன்! தந்தை திருப்பிக் கேட்டார்! “உன் ஆசைக்கு அளவேயில்லையா?” தந்தை சொன்னால் தமிழ் சொன்னது மாதிரி!

    (தொடரும்…)

    Share
  • வேலைக்காக (சிறுகதை)

    வேலைக்காக (சிறுகதை)

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப்பேராசிரியர்
    அரிய கையெழுத்துச்  சுவடித் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர் – 613 010.
    கைபேசி: 6381629365

    சென்னை செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகர். மாநகரின் பரபரப்பு அதிகம் இல்லை. அருகருகே இரண்டு தனியார் பள்ளிக் கூடங்கள். ஆர்ப்பாட்டம் இல்லாமல் மாணவ மாணவிகள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். சில வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தனவே தவிர வேறு பரபரப்பு எதுவும் தென்படவில்லை.

    மாநகரப் பேருந்தில் இருந்து இறங்கி கையில் ஃபைல்லோடு நடந்து வந்த பெண் ஒரு பள்ளியினுள் நுழைந்தாள். காவலர் கேட்டார், “என்ன விசயம்”?

    “டீச்சர் வேலைக்காக… வாய்ப்பு இருக்குமானு கேட்க…”

    “அதோ அந்த ரூம்தான் கரஸ்பான்டன்ட் ரூம் போய் பாருங்க”

    குளிரூட்டப்பட்ட நாகரீக அறையின் முன் சென்று நின்றாள். அங்கிருந்த தாளாளரின் உதவியாளரிடம் தகவல் சொன்னாள். அவன் அமரச் சொன்னான். சிறிது நேரத்தில் தாளாளரிடம் இருந்து அழைப்பு வந்தது.

    மெதுவாக உள்நுழைந்த அவளை உற்றுப்பார்த்தப்படி அமர்ந்திருந்தார் தாளாளர்.

    “குட்மாணிங்சார். மே ஐ கம் இன் சார்..”

    “வாம்மா… உட்காரு”

    அமர்ந்த அவள் நேரத்தை வீணடிக்க விரும்பாததால் “சார் என்னுடைய பயோடேட்டா” என்று தன்விவரக் குறிப்பை நீட்டினாள். பொறுமையாகப் பார்த்த அவர் சான்றிதழ்களைக் கேட்டார். ஃபைலோடு கொடுத்தாள். பார்த்துவிட்டு தாளாளர், “அம்மா எம்.ஏ., பி.எட்., நல்ல கிரேடுல பாஸ் பண்ணிருக்கீங்க… அனுபவமும் இருக்கு, உங்க தகுதிக்கு… அதிகமா சம்பளம் தரலாம். ஆனா எங்களால மாதம் ஏழாயிரம் ரூபாய்தான் தரமுடியும். ஓகேனா அடுத்த வாரம் மண்டே ஜாய்ன் பண்ணலாம். மற்ற ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் ஃபிரின்ஸ்பால் சொல்வாங்க” என்றார்.

    “சார் ஹவுஸ் ரென்ட் மட்டுமே செவன் தவுசன்ட் …”

    “எங்களுக்கும் கூடுதலாதர ஆசைதான். உங்க நாலட்ஜ்க்கும், ஃபெர்சனாலிட்டிக்கும் கண்டிப்பா கூடுதலா தரலாம். ஆனா இப்ப வாய்ப்பில்லமா… ஆமா பயோ டேட்டா பார்க்கும் போது ஆறு மாசமா வேலையில்லாம இருந்தது தெரியுது எப்படி சமாளிச்சீங்க…”

    “வீட்ல நான் மட்டும்தான் ஏனிங் பெர்சன் சார். ஹவுஸ் ஓனர் ரெண்ட்ட அட்வான்ஸ்ல கழிச்சிகிட்டுவரார். பக்கத்துல உள்ள பிள்ளைங்களுக்கு டியூசன் எடுக்கிறதுல கொஞ்சம் கிடைக்கும். ரேசன்ல அரிசியும், உப்பும் ஃப்ரியா கிடைக்குது… சமாளிக்கிறோம் சார்..”

    “ஏழாயிரம் ரூபாய்தான் முடியும்மா” அவரின் கண்டிப்பான பதிலால் அவளின் சோகம்கூட ஒரு நொடி  விலகி மீண்டும் ஒட்டியது,

    “சர்டிபிக்கேட் ஃபைலைக் கொடுங்க சார் வீட்டுக்குப் போயிட்டு பதில் சொல்றேன்…”

    ஃபைலை வாங்கியபடி வெளியே வந்த அவளின் துக்கம் அவளுக்கே அவமானமாக இருந்தது. சாப்பாட்டுகே போராடும் நிலை என்றாவது மாறுமா? அவள் உள்ளம் பதைத்துக் கொண்டிருந்தது.

    சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

    “பார்க்க டீசன்டா இருக்கிற… கவனமா பிளாட்ஃபாம்ல போம்மா” என்று பைக்கில் சென்றவர் சொல்லும் போதுதான் இயல்பாகி பக்கத்துப் பள்ளியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவளையும் மீறி கண்ணில் திரண்டிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு அந்த பள்ளியின்  தாளாளர் அறையை அடைந்தாள். அங்கிருந்த உதவியாளரிடம் தன் விவரக் குறிப்பைக் கொடுத்தனுப்பினாள். வரச்சொன்னார். வலியும், சோகமும் அவள் அழகைக் கொன்று கொண்டிருந்தாலும் அவள் நடையின் கம்பீரத்தையும், நாகரீகத்தையும் வைத்து எடைபோட்ட தாளாளர் ஏதேதோ கேள்விகள் கேட்டார். பழகிய கேள்விகளுக்கு அவள் உதடுகள் யதார்த்தமாய் பதிலளித்தன. கடைசியாக விசயத்துக்கு வந்தார்.

    “அம்மா மாசம் நான்காயிரம் ரூபாய்தான் சம்பளம்… சரி வேறு எங்கெல்லாம் பயோ டேட்டா குடுத்து இருக்கீங்க?”

    “சார் உங்க ஸ்கூல வாய்ப்பு கேட்டுதான் வந்திருக்கேன். இந்த சேலரி போதாது சார்” என்றபடி ஏனோ வேகமாக எழுந்தாள்.  நீட்டிய அவள் கைகளுள் ஃபைலை திணித்தார் தாளாளர். வெளியேறிய அவள் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் மனதில் பயமும் சோகமும் படர ஆரம்பித்தது,

    திடீரென திரும்பி முதலில் சென்ற பள்ளியை நோக்கி நடந்தாள். தாளாளர் அவர் அறையின் வெளியே நின்றுகொண்டு இருந்தார்.

    “குட்மாணிங் சார்… ஜாய்ன் பண்ணலாம்னு…”

    “ஓகே.. ஓகே.. வாழ்த்துகள். பியூன் இவங்கள ஃபிரின்ஸ்பால்கிட்ட கூட்டிக்கிட்டுபோ”

    அழுதுவிடகூடாது என்பதில் உறுதியாக இருந்த அவள் முதல்வர் அறையை நோக்கி நடந்தாள்.

    Share
  • சர் ஜகதீஸ் சந்திர போஸ் விருது பெறும் நா.கணேசன், பிரியா ஆபிரகாம்

    சர் ஜகதீஸ் சந்திர போஸ் விருது பெறும் நா.கணேசன், பிரியா ஆபிரகாம்

    வணக்கம்,

    எனக்கும், பிரியா ஆப்ரகாம் (Director, National Institute of Virology, Pune), Dr. A. Ramachandra, D.Sc – இந்த ஆண்டு சர் ஜகதீஸ் சந்திர போஸ் அவார்ட் ஜனவரி 6, 2022 – 10:30 AM Bharatiyar University Campus – இந்தியா ஸயன்ஸ் மானிட்டர் குழுமம் வழங்க உள்ளது. என் பேரா. ராடம் நரஸிம்ஹா (Aeronautics) போன்றோர் பெற்ற விருது ஆகையால் எனக்குப் பெருமை.

    தாங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்து வாழ்த்த வேண்டுகிறேன்.

    அன்புடன்,
    நா. கணேசன்
    http://nganesan.blogspot.com
    துச்சில்: பொழில்வாய்ச்சி, தமிழ்நாடு, இந்தியா

    இந்தியாவின் முதல் விஞ்ஞானி:
    இவரை ஆதரித்தவர் சகோதரி நிவேதிதை. போஸ் பிரசங்கத்தை அச்சிட்டு (பழனியப்பா பிரதர்ஸ்) வழங்க உள்ளேன்.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 8

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 8

    முனைவர். ச.சுப்பிரமணியன்

    ‘வெற்றிப் பேரொளி’ பாவலனுக்கும் உண்டு ஓர் பாடாண் திணை! 

    முன்னுரை

    பொதுவாகப் பாடாண்திணைப் பாடல்களும் கையறுநிலைப் பாடல்களும் மன்னனை நோக்கியனவாகவே அமையும்.! மிகச் சிறிய அளவில் கையறு நிலைப்பாடல்கள் பாவலரை நோக்கி அமைவதுண்டு. மன்னனையே பாடிய புலவர்கள் தம்மையொத்த புலவர்களையும் பாடுவது அரிது. அவர்கள் மறைவுக்குப் பின் கவிஞன் ஒருவனுக்காக மற்றொரு கவிஞன் பாடும் கையறுநிலையும் மிக அரிதான நிகழ்வாகவே கருதப்படுகிறது.  கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்துறந்த காலை, கண்ணகனார், பொன்முடியார் ஆகிய சான்றோர்கள் பிசிராந்தையாரின் பெருமையை அவர்தம் இறுதி நொடியில் பாடியிருக்கிறார்கள். அதற்குப் கவிமணி சிலருக்குச் சில கையறுநிலைகளைப் பாடியிருக்கிறார். பின்னாலே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்காகக் கண்ணதாசன் கையறுநிலை பாடினார். ஆனால் கண்ணதாசன் மறைவுக்காக யாரும் கையறுநிலை பாடியதாகத் தெரியவில்லை. பாடியிருந்தாலும் அது மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்ததா என்பது ஐயமே. ‘‘தமிழாற்றுப்படை’ என்னும் நூலில் திரு வைரமுத்து, கூறியுள்ள கருத்துக்களும் புதுக்கவிதை வடிவத்தில் திரு வாலி எழுதிய அஞ்சலிக் கவிதை வரிகளையும் கையறுநிலை அடர்த்தி கொண்டவையெனக் கருதுதற்குத் தயக்கம் ஏற்படுகிறது.   கவிஞன் கண் மூடியபின் பாடப்படும் கையறு நிலைக்கே இந்தக் கதி என்றால் பாடாண் திணை பற்றிச் சொல்லவேண்டியதே இலலை.

    இந்தக் கட்டுரையில் பாடாண்திணை

    பாடுதலாகிய தொழிலையும் பாடப்படும் ஆண் மகனையும் குறிக்காது அவனுடைய பெருமைக்குரிய ஒழுக்கமே பாடுபொருளாவதால் இதற்குப் பாடாண்திணை எனப்பெயராயிற்று.. திணையாகிய இந்த ஒழுக்கம் இந்தக் கட்டுரையில் கவித்திறன் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது வாழுகின்ற படைப்பாளன் ஒருவனின் கவித்திறத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் மற்றொரு பாவலன் பாடுகிற பாடாண் திணயாகக் கொள்ளப்படுகிறது. கவிஞன் ஒருவனை மற்றொரு கவிஞன் பண்பாடு கருதிப் பாராட்டுவதே அரிதானதொரு சமுதாயச் சூழலில் அவனுடைய கவித்திறத்தையே பாடுபொருளாக்குவது  அரிதினும் அரிதல்லவா? ஒரு முகநூல் பதிவில் நான் கண்ட கவிதை பற்றிய திறனாய்வாக இது அமைகிறது.

    கவிதையைத் தேடும் கண்கள்

    கலம்பகம் பார்த்து ஒரு கலம்பகமும் அந்தாதி பார்த்து ஒரு அந்தாதியும் பிள்ளைத்தமிழ் பார்த்து ஒரு பிள்ளைத்தமிழும் எழுதினார்கள் எழுதியதற்குக் காரணம் கவித்துவம் பொங்கியது என்றார்கள். என்னவாயிற்று?.  எத்தனைக் கலம்பகம் நிற்கின்றன?  எத்தனை அந்தாதி நிற்கின்றன? எத்தனைப் பிள்ளைத்தமிழ் நிற்கின்றன? ஒரு நந்திக்கலம்பகம்! ஒரு அபிராமி அந்தாதி! ஒரு மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்! மற்றவை என்ன ஆயின? எனவே கவித்துவம் என்பது ஒரு முழு இலக்கியத்தில்தான அமைந்திருக்கும் என்று எண்ணுவதே சிந்தனைப் பிழை! நான் அடிக்கடி எழுதி வருகிறேன். சில வெற்றசைகளில் கூட கவித்துவம் அதாவது கவிஞனின் உணர்ச்சி வெளிப்பட வாய்ப்புண்டு. உணர்ச்சி ஆழமாக இருந்தால் போதும்! கவிதை ஆழமாகவே பதிவாகும்! அதன் வெளிபபாடும் உறுதியாக இருக்கும்.

    பாடுபொருளா? படைப்பாற்றலா?

    பாடுபொருளால் படைபபாளன் சிறக்கிறானா? படைப்புத் திறமையால் பாடுபொருள் சிறககிறதா? இது ஒரு பட்டிமன்ற வினா! இரண்டும் சிறக்கிற நேர்வுகள் மிகக் குறைவு. திருக்குறளால் திருவள்ளுவர் சிறக்கிறார். திருவள்ளுவரால் திருக்குறள் சிறக்கிறது. ஆனால் இராமகாதையால் கம்பன் சிறக்கிறானா? கம்பனால் இராமகாதை சிறக்கிறதா என்றால் கம்பனால்தான் இராமகாதை சிறக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. காரணம் இராமகாதையை யார் யாரோ எழுதியிருக்கிறார்கள். ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்கள். இந்தியத் துணைக்கண்டத்தில் பெரும்பாலும் அனைத்து மொழிகளிலும் இராமாயணம் பாடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது கம்போடியா உள்ளிட்ட நாடுகளிலும் இராமகாதையின சாரம் உணரப்படுவதாக அறிகிறோம். ஆனால் நம்முடைய தமிழில் கம்பனின் கவியாளுமைக்குமுன் மற்ற படைப்புக்கள் மங்கி ஒளியிழந்துவிடுகின்றன என்பதே  அறிஞர் கருத்தாக உள்ளது. பாரதியின் பாஞ்சாலி சபதம் பாரதக் கதைக்குள் புத்தொளி பாய்ச்சுவதை உணர வேண்டும். வெற்றிப் பேரொளியின் கவிதையில் திணையும் சிறக்கிறது. பாடியவரும் சிறக்கிறார்!

    படைப்பாளன் நிலைப்பது எப்படி?

    பாடுபொருள்களும் படைப்பாளர்களும் எண்ணிக்கை முரணில் அமைந்திருக்கிறார்கள். அதாவது படைப்பாளர்களைவிட பாடுபொருள் எண்ணிக்கையில் குறைவு. சான்றாகக் கறபு என்னும் பாடுபொருள் கபிலரால் பாடப்ட்டுள்ளது. இளங்கோவால் பாடப்பட்டுள்ளது. கம்பனால் பாடப்பட்டுள்ளது. பாரதியால் பாடப்பட்டுள்ளது. மயூரம் வேதநாயகராலும் பாடப்பட்டுள்ளது. ஆனால் அது யாருடைய படைப்பில் சிறந்து விளங்குகிற்து? இந்த வினாவிற்கு விடை நுகர்வோருக்கு ஏற்ற வகையில் மாறுபடலாம். பொதுவான கருத்துநிலையில் இளங்கோ முதலிடத்தைப் பெறுகிறார். இது கவிஞர்களின் ஒப்புமையால் வந்ததன்று. கவிதைகளின் தாக்கத்தால் ஏற்பட்ட அனுபவ விளைவு!.

    கவிஞனைப் பாடுபொருளாக்கிய கவிஞன்

    ‘கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்’ என்பார் பாரதி! ஆனால் இளங்கோவைச் சொல்லுகிறபோது ‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்பார். .இறைவனை மனிதனாக்கிப் பாடியதால் வந்த பெருமை முந்தையது. பத்தினிப் பெருமையைப் பாட்டில் சொன்னதால் வந்த பெருமை பிந்தையது. முன்னதில் படைப்பாளனும் பின்னதில் பாடுபொருளும் சிறந்து நிற்பதை உணரலாம்.  கவிஞர் வசந்தராசன் சென்னை மாதவரத்தில் பால்பண்ணைக்கு இணையாகக் கவிப்பண்ணை நடத்திக் கொண்டுவரும் கவிஞர். கவிஞர் வெற்றிப்போரொளி தஞ்சை சீனிவாசநகரில் பேரன் பேத்தியரைக் கவிதைகளோடும் கொஞ்சி விளையாடும் எழுபது வயது இளைஞர். முன்னவர் உரத்தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னவர் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி அந்தப் பணியில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றவர். முகநூல் எழுத்துக்களால் எனக்கு இனிப்பான இவர்களை. நான் நேரில் கண்டதே இல்லை என்பது உண்மை. தங்கத் துண்டுகளைச் செம்பினால் பற்றாசிட்டு இணைப்பதைப் போல இந்தக் கட்டுரையில் இவர்களை நான் இணைக்க முயன்றிருக்கிறேன்.

    கவிக்கோவின் செங்கோல் 

    தமிழ்நாட்டுக் கவிஞர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் வைத்துக் கொள்ளும் அல்லது போட்டுக் கொள்ளும பட்டங்களில் மன்னராட்சி ‘வாடை’ அடிப்பதை அனைவரும் உணரலாம். இது மக்களாட்சிக் காலம்! மன்னராட்சிக் காலத்தில் கூட வெண்பாவிற் புகழேந்தி என்றுதான் சொன்னார்கள். தற்காலத்தில் ஒருவர் ‘வெண்பாப்புலி’ என்று பயமுறுத்துகிறார். ஒருவர் ‘கவிப்பேரரசு’ என்கிறார். மற்றொருவர் அடக்கமாகச் சொல்வதாக நினைத்துக் கொண்டு ‘கவியரசு’ என்கிறார். இன்னொருவர் ‘அரிமாப் பாவலர்’ என்கிறார். வேறொருவர் ‘கவிக்கோ’ என்கிறார். அன்பின் காரணமாகச் சமுதாய மக்கள் தருகின்ற பட்டங்களை விமர்சிப்பது நமது நோக்கமன்று. இதுபற்றிய ஒரு விழிப்புணர்வைத் தூண்டுவதுதான் நோக்கம். எனக்குத் தெரிநதவரை பாரதியாருக்கு மகாகவி என்ற பட்டமும் பாரதிதாசனுக்குப புரட்சிக்கவிஞர் என்ற பட்டமும் சுரதாவிற்கு உவமைக் கவிஞர் என்ற பட்டமும் பொருந்திவருவதற்கு அவர்தம் படைப்புக்களே காரணம். ஒரு படைப்பைக் கூட முழுப்படைப்பாய்த் தரவியலாதவர்கள் போட்டுக் கொள்ளும் பட்டங்கள் பட்டங்களாகவே பறக்கின்றன.  இந்தப் பாடாண் திணைப் பாட்டின நாயகனாக இருப்பவர் கவிக்கோ என்ற பட்டத்துக்கு உரியவர் தம்பி வசநதராசன் அவர்கள். அவருக்கு அன்பர்கள் தந்த பட்டம் அது. அவருடைய படைப்புக்களை நான் ஆழ்ந்து நோக்கிப் பயின்று வருகிறேன். அந்தப் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் அவர் தொடர்ந்து எழுதிவருவது நெஞ்சிற்கு இனிமையையும் அமைதியையும் தருகிறது, இப்படித்தான் கவிஞர்கள் இருக்க வேண்டும். யாப்பினைப் பொருத்தவரையில் வசந்தராசன் விருத்தங்களில் ஒன்றிரண்டு வகைகள், வெண்பாக்களில் நேரிசை வெண்பாக்கள், எனத் தம்  வடிவ எல்லையை வரையறுத்துக் கொண்டிருக்கிறார். எண்ணங்களைப் பதிவு செய்வதில் சீர்பிரிப்பு மிக முக்கியமானது. சொற்களை அறுத்துக் கட்டத் தெரிந்திருக்க வேண்டும். அவர்தான் திணை நாயகர். தம் நாயகரைப் பற்றிய தமது பாடலில் பேரொளி இப்படி எழுதுகிறார்.

    “இனிக்கின்ற செங்கரும்பின் சாறு! “

    கவிதையின்பத்தைச் செங்கரும்புச் சாறாக உருவகம் செய்வதில் சில நுண்ணியங்களைக் காணுகிறேன்.  சாறு பருகினால்தான் சுவை தெரியும். கண்ணால் பார்ப்பதாலோ பிறர் அருந்துவதைக் காண்பதாலோ அதன் இனிப்புச் சுவையை உணர  முடியாது. ‘கொங்கு நாட்டுச் செங்கரும்பு’ என்பது செங்கரும்பின் விளைநிலம் பற்றிய சொல்லாடல். இந்தத் தொடரில் இருக்கின்ற இனிக்கின்ற என்னும் பெயரெச்சத்தைக் ‘கரும்பு’ என்பதோடும் ‘சாறு’ என்பதோடும் பொருத்தி ‘இனிககின்ற கரும்பு’ ‘இனிக்கின்ற சாறு’ எனப் பொருளுணர வேண்டும். ஒரே பொருளில் இருவகை உவமங்களைப் பொருத்திகாட்டும் நுண்ணியம் பாவேந்தருக்கு வெகு இயல்பு!

    “உணவுண்ணச் சென்றாள் அப்பம்
    உண்டனள் சீனி யோடு
    தணல் நிற மாம்பழத்தில்
    தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்
    மணவாளன் அருமை பற்றி
    மனம் ஒரு கேள்வி கேட்க
    இணையில்லா அவன் அன்புக்கு
    ஈடாமோ இவைகள் என்றாள்”

    என்று தலைவி உணவுண்ணச் சென்ற காட்சியைச் சித்திரிக்கிறார். தலைவி உண்டது மாம்பழம்.  மாம்பழத்தைக்  கண்ணால் நிறத்தைக் காணுகிறாள். உண்டு சுவையை உணர்கிறாள். தணல் நிற மாம்பழம் என்றதால் உரு உவமை. தமிழ் நிகர் சுவை என்றதால் பண்புவமை. இத்துடன் இன்னொரு உவமத்தையும் வெகுநுட்பமாகக் கையாள்கிறார். கணவன் கண்ணுக்கு அழகானவன். மனத்திற்கு இனிமையானவன். அந்த அழகும் இனிமையும் இந்த மாம்பழத்திற்குக் கிடையாதாம். அணி வேற்றுமையாக இருந்தாலும் மாம்பழத்தின் உருவும் பண்பும் கணவனுக்கும் பொருந்துமாறு உவமம் புணர்த்தியிருக்கும் நுண்ணியத்தைப் பேரொளியின் படைப்பிலும் பொருததிச் சுவைக்கலாம். ‘செங்கரும்பு’ என்பது கவிதையின் புறக்கூறுகளுக்கும் ‘சாறு’ என்பது கவிதைச் சுவையாகிய  அகக்கூறுக்குமான உவமம் என்பதை உணர்ந்து அனுபவிக்க இயலும். இனி கரும்புக்குக் கொடுக்கப்பட்டுள்ள ‘செம்மை’ என்னும் அடைமொழி ‘செவ்விளநீர்’ ‘செங்காந்தள்’ என்பதுபோல நிறம்பற்றியதாக இருப்பினும் அது இனிமையை உணர்த்தியதாகவும் கொள்ளலாம்,.  ‘செந்நா’ என்றவழி நிறத்தைக் குறிக்காது பொய்கூறாப் பண்பைக் குறிப்பது போல. கரும்பு பற்களால் நூறுகிறபோதும் சாறாக அருந்துகிறபோதும் இனிமை என்பது கருத்து. வசநதராசன் பாடல்களைச் சொல்லிச் சுவைக்கிறபோதும், எண்ணி மகிழ்கிறபோதும இனிக்கின்றன என்பது மையக்கருத்து!

    யாப்புத் தோப்பு!

    கவிதையில் ஒருவரைக் கவர்வது இதுதான் என்று வரையறுக்க இயலாது. யாப்பினைக் கண்டு மலைப்பார் உண்டு. கற்பனையை வியப்பார் உண்டு. கருத்துக்களை நயப்பார் உண்டு. உணர்ச்சி கண்டு உருகுவார்  உண்டு. வசந்தராசன் கவிதைகளின் யாப்பினாலும் கவரப் பெற்றிருக்கிறார் வெற்றிப் பேரொளி

    “யாப்பில்
    கனிச்சுளைகள் பந்தி வைக்கும் தோப்பு !

    தமிழ்க்கவிதைகள் எந்த யாப்பில் அமைந்திருந்தாலும் பெரும்பாலும் அவை  காய்ச்சீர் கனிச்சீர் விரவப்பெற்றே அமைந்துள்ளன.  வாய்பாட்டில் சொற்களை அமைத்துத் திணறுவார் நடுவே சீர்களில் வாய்பாட்டைக் காணும் நுண்ணியம் தெரிந்தவர் வசந்தராசன் ‘யாப்பில் வந்தடங்கும வார்த்தைகளே கவிதையாகும்’ என்பார் சுரதா. சொற்களை அடக்கியாள்பவனுடைய கவிதை  வாழா வெடடியாகிவிடும். சீர்களோடு உறவாடுபவனை விட்டுக் கவிதைக் காதலி பிரியமாட்டாள். தான் சரியாகக் கையாளப்படுகிறோமா என்னுங் கவலை ஒவ்வொரு சீர்களுக்கும் இருப்பதைக் கவிதைக் கணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வசந்தராசன் புரிந்து கொண்டார் என்பதைத் தானும் புரிந்து கொண்டு நமக்கும் புரிய வைத்திருக்கிறார் வெற்றிப் பேரொளி.

    பழந்தமிழார் கவிக்கோ

    இந்தத் தொடரில் பழந்தமிழர் என்பதே ‘பழந்தமிழார்’ என்று பிசகியிருக்மோ என்னும் ஐயம் சிலருக்கு வரக்கூடும். வசந்தராசன் மரபு தழுவிய கவிஞர். அவரைப் போலவே வெற்றிப் பேரொளியும் மரபு தழுவிய கவிஞர். சில நேர்வுகளில் நடைமேடைக்காகத் தண்டவாளம் மாறினாலும் மீண்டும் தலைவழிக்கே (MAIN LINE) வந்து விடுவார். ஆர்தல் – நிறைதல் தமிழார் கவிக்கோ என்றால் தமிழ்க்கூறுகளால் நிறையப்பெற்றவர் கவிக்கோ என்று பொருள்.

    1. ‘‘நெஞ்சில் இளநீரைச் சுமக்கின்ற அன்பு’
    2. “ஈரக் கால்வாய்கள் கண்ணிரண்டும்”
    3. ‘வாழத்தும் போது தலைமடையின் பெருக்கெடுப்பு’
    4. நனைந்தோரெல்லாம் பனிக்காலை பரங்கிப்பூக்கோல வீதி!

    என்றெல்லாம பாட்டுடைத் தலைவனைப் பாடுகிறார் பேரொளியார். “பாடாண்” என்பது பாடுதல் வினையையும் பாடப்படும்  ஆண்மகனையும் நோக்காது அவனது ஒழுகலாறாகிய திணையுணரத்தினமையின் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை’ என விளக்கம் தருவார் நச்சினார்க்கினியர்.  பாட்டுடைத் தலைவனின் பன்முகப் பண்பு நலன்களையும் தொகுத்துக் கூறி நச்சினார்க்கினியரின் விளக்கத்துக்கு இலக்கியம் செய்திருக்கிறார் பேரொளியார்.  இநத விருத்தத்தைக் ‘கவிக்கோவின் செங்கோல்’ என்று நிறைவு செய்திருக்கிறார்.  வேந்தர்கள் கையில் செங்கோல் இருக்கும். முறை செய்து மக்களைக் காப்பாற்றினால்தான் அது செங்கோல்!. இல்லாவிடின் அது கொடுங்கோல். வசந்தராசன் பாடல்களின் கவிதைக்குரிய அத்தனைப் பண்புகளும் நிறைந்து வழிவதால் அவர் கையில் இருப்பது செங்கோல் எனச் சொல்வதன் மூலம் கவிக்கோ என்பதை நியாயப்படுத்துகிறார்.  உண்மையை உரக்கச் சொல்லும் உரம் இது!.

    இனத்தோட்டக் காவல்காரன்

    பாடுபொருளில் ஒன்றிய மனம் மூளையிலிருந்து விலகித் தனித்துவமிக்க படைப்புலகில் சஞ்சாரம் செய்யப் புறப்பட்டுவிடும். கவியெழுதுகிற காலங்களில் கவிஞர் அனைவருக்குமான பொது நியதி. அனுபவம் இது. “நீல நெருக்கடியில் நெஞ்சு செலுததி நேரம் கழிவதினும் நினைப்பின்றியே சாலப் பலப்பல நற்பகற்கனவில் தன்னை மறந்த லயம் தன்னில் இருந்தேன்” என்று பாரதி பாடுவார். பேரொளியார் அடைந்த அத்தகைய மனநிலையைப் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன. ஒரே சொல்லை வைத்துக் கொண்டு சில பேர் வித்தை காட்டுவார்கள். அந்த வித்தை காண்பார்தாம் புருவத்தை உயர்த்தக்கூடும். இதயத்தை அந்நியப்படுத்திவிடும்

    “தேரோட்டத் திருவிழாதான் கவிதை மன்றில்!
    தேனோட்டப் பெருவெள்ளம் புலமை யாற்றில்!

    வசந்தராசனின் கவித்ததிறனையும் புலமைத் திறனையும் இவ்வாறு சுட்டிச் செல்லும் பேரொளி, சோம்பல் முரிக்கும் கவிதைகளில் தீப்பாய்ச்ச வந்தவன் என்கிறார். பகுத்தறிவுச் சிந்தனையில் வளர்ந்த வசந்தராசன் தாய்மொழி தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் தமிழ் இனத்திற்கும் எத்தகைய பணிகளைச் செய்து வருகிறார் என்பதைக்

    குளிரோட்டக் கவியோட்ட வசந்த ராசன் !
    ஈரோட்டுப் படைவீட்டுக் களத்து வீரன் !
    இனத்தோட்ட வாசலிலே காவல் காரன்!

    என்னும் வரிகளால் எடுத்துக் காட்டுகிறார்  சங்க இலககியப் பாடாண்திணைப் பாடல்கள் மனனர்களைப் பற்றியே அமைந்து போனதால் வீரத்தினையும் பாராண்ட மன்னர்களின் பண்பு  நலன்களையுமே திணை என்னும் சொல்லால குறித்தனர். மக்களாட்சி மாண்புகள் மலிநதுள்ள தற்காலத்தில் அத்தகைய பாடுபொருள் கிட்டாது. கிடைக்காது. கிடைத்தாலும் மணக்காது! இன்றைக்கு ஒரு மாநிலத்து முதலமைச்சர் அடுத்த மாநிலத்தில் படையெடுக்க முடியாது. மன்னர்களின் கொடைப்பண்பு கூட அவர்கள் போரில் பெற்ற வெற்றியைச் சார்ந்தும் அதில் கொண்டு வரும் பொருளைக் கொண்டுமே அமைந்திருந்த காலம் அது. எனவே பாடாண் திணை என்பதன் பொருண்மை முற்றிலும் மாறுபட்டு நிற்கின்ற தற்காலத்தில் ஒப்பற்ற தனித்திறனும் அரிய ஒழுகலாறுகளும் பண்புநலன்களுமே பாடுபொருளாகக் கூடியன. பதவிகளுக்காகக் கட்சி மாறுபவர்களைப் பாடுவது பாடாண்திணை ஆகாது!. ஒழுக்கச் சிதைவோடு கூடிய எந்த மன்னனையும் தமிழ்க்கவிதை பாடியதில்லை!. மொழி, நாடு, இனம் என்னும் பாடுபொருள்களைத் தனித்துவமான கவிதைகளில் பாடும் வசந்தனுடைய தனித்திறனும் உயர் பண்புகளுமே பேரொளியின் பாடாண்திணை பாடலுக்கான உள்ளடக்கமாகத் திகழ்கின்றன.

    நிலைக்கின்ற மின்சொற்கள்

    ‘புறப்பொருள் வெண்பா மாலை’ என்று ஓர் இலக்கியம் தமிழில் உண்டு. வெண்பாக்களால் ;ஆன அந்த நூலில் ;அமைந்த வெணபாக்களுக்கு மின்னல் வெண்பாக்கள் என்றே பெயர். காரணம் அளவுக்கு அதிகமான  இனிப்பு. சுவையோ சுவை! புறப்பொருளுக்கான இலக்கணம் கூறும் நூலெனினும் முழுமையும் கற்பனையையே உள்ளடக்கமாகக் கொண்ட வெண்பாக்கள். இது பற்றிப் பேரொளி அறிந்திருப்பாரா என்பது நமக்குத் தெரியாது.

    காலத்தை வென்ற சொற்களும் தொடர்களும்

    கவிதைகளில் எலலாச் சொற்களும் நிலைதது விடாது என்பதும் சில சொற்களைக் காலம் நினைத்தாலும் அழிகக முடியாது என்பதும் பேரொளிக்கு நன்றாகத் தெரியும். காரணம் அவர் ஒரு கவிஞர். படைப்பாளி.  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவுடன் புறநானூற்றுப் பூங்குன்றன் நினைவில் வருவார். ‘நம்மை மறந்தாரை நாம் மறக்க மாடடோம்’ என்றவுடன் இலக்கியச் சுவைஞர்கள் அத்தனைப் பேரும் பூம்புகார் கடற்கரைக்குச் சென்றுவிடுவார்கள். ‘அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்’ என்றவுடன் முந்தைய வரிகள் தெரியாதவர்கூட சனகன் அரசவைக்குச் சென்றுவிடுவார்கள்! தருமததின் வாழ்வதனைச் சூது  கவ்வும்., தருமம் மறுபடி வெல்லும் என்றவுடன் பாரதி நினைவுக்கு வருவார்.. ‘தன்னைப் பழித்தவனைத் தாய்தடுத்தால் விட்டுவிடு தமிழைப் பழித்தவனைத் தாய்தடுத்தாலும் விடாதே!; என்றவுடன் இருமிப் படுத்தவனும் எழுந்துவிடுவான். ‘பார்ப்புகட்குக் குடைபிடிக்கும் பறவைத்தாய்’ என்றவுடன் வசந்தன் நினைவுக்கு வருவார்.

    1. ‘சீராட்ட மறந்ததனால் சிதறி விட்டோம்!’
    2. ‘போதிமர வேர் நெய்த தாடி வானம்’
    3. ‘உனைத்தொட்ட விரல் நுனியில் சூரியன்கள்’
    4. ‘ஞானச் செருக்குகளின் நாற்றங்கால்’
    5. ‘கோபுரங்கள் வயதுக்கு விதிவிலக்கு’

    என்பன போன்ற தொடர்களால் எதிர்காலத் தமிழக்கவிதைத் திறனாய்வுலகைத் தன் படைப்பு வலையில் சிக்கவைத்திருக்கிறார வசந்தராசன். தம்பி பேரொளி அதனைப் படம் பிடித்துக் காட்டுகிறார்

    “மின்னலுக்கு நிலையான வடிவ மில்லை!
    மின்சொற்கள் உன்சொற்கள் நிலைக்கும் !”

    வசந்தனின் கவிதைச் சொற்களில் பேரொளியே தம் வசம் இழந்த தருணம். முகநூல் படிக்கும் தமிழாசிரியப் பெருமக்கள் வேற்றுமையணியை விளக்கப் பேரொளியின் இந்த வரிகளைப் பயன்படுத்திக் கொணடால் வகுப்பில் பிள்ளைகள் குறட்டை விடும் நேரத்தைக் கொஞ்சம் குறைக்கலாம்.  ஒரே படத்துடன் நடிப்பிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்கள் உண்டு. பணியிலிருந்து நீக்கப்பட்டவரும் உண்டு.

    “பாட்டுப் பொன்னளக்கும் அடியாழத் தமிழ்ச்சு ரங்கம்!

    என்று பாடுகிறார் பேரொளி கவிஞர்களில் பலர் கன்னி கழியாமலேயே மூப்பெய்தி விடுகிறார்கள். எழுதி வெளிவந்த முதல் நூலையே வாழ்நாள் சாதனையாக்கி விருது பெறும் வீர்க்கவிஞர்கள் நிறைந்த நாடு இது. திருமண அழைப்பிதழ் எழுதியவுடனேயே திவ்வியப் பிரபந்தம் எழுதிவிட்டதாக நினைத்துக் கொள்கிறவர்கள் இங்கு ஏராளம்! தம்பி வசந்தராசன் வற்றாத கவிதைச் சுரங்கம். “பாட்டுப் பொன்னளக்கும் அடியாழத் தமிழ்ச்சுரங்கம்! என்னும் தொடர் உருவகங்களினால் மட்டுமன்று உள்ளடக்கத்தாலும் சிறக்கச் செய்கிறார் அவரும் உயர்ந்து நிற்கிறார். கட்டுரையாளர், வசந்தராசனுடைய கவிதைகளைக் கண்டது சில திங்களுக்கு முன்புதான். இமயத்தில் இருந்திருக்க வேண்டியவர் இப்போதுதான் வீட்டு வாசலின் இறுதிப்படிக்கட்டிலிருந்து இறங்கி வருகிறார். கட்டுரையாளரோ பாடாண் பாடிய பேரொளியோ வசந்தராசனுக்குக் கைகொடுக்கவில்லை.! சிவப்புக் கம்பளத்தை விரிக்கிறோம்! கட்டுரையாளருக்கும் கவிதைக்கும் ஏழாம் பொருத்தம்! பேரொளிக்கு அது பெருமாள் கோவில் பிரசாதம்!

    யாப்பில் கனிச்சுளைகள் பந்திவைக்கும் தோப்பு

    பாட்டுடைத் தலைவனை அறிமுகம் செய்யும் பேரொளி அவனுடைய பாத்திறத்தின் அடையாளமாக யாப்பினைத்தான் முன்னுறுத்துகிறார். பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா சிந்து ஆகியவற்றையும் இனங்களில் விருத்தத்தையும் வசந்தராசன் கையாளுகின்ற திறனைப் பலபடப் பாடியிருக்கிறார். அப்படிப் பாடிப் பெருமைப்படுத்தக் கூடிய வசந்தராசனின் திறமைகளைப் பினவரும் சில எடுத்துக்காட்டுக்களால் அறியலாம்  இதனால் ஒரு கவிஞனைப் பற்றிய இன்னொரு கவிஞனின் புகழ்மொழி பொய்மொழியாக இல்லாமல் பொருள்சேர் புகழ்மொழியாகவே அமைந்திருக்கிறது என்பதைப் புரிநது கொள்ள இயலும்.

    “ஆடையல்ல எழுத்தெனக்குக் கழற்றி மாட்ட!
    அணிந்திருக்கும் நகையல்ல அழகு பார்க்க!
    கூடவந்த உடலின்தோல்! எலும்பைப் போர்த்திக்
    கொண்டிருக்கும் என்னுயிரை! உடலைக் காட்ட
    மேடைதரும்விழிவெளிச்சப் பாதைதன்னில்
    மெருகேறி வருவதுதான்! மீண்டும் சொல்வேன்!
    ஏடடைந்த சொல்வேறு நான்வே றல்ல!
    எனைப்பிரியா என்தோல்தான் என் னெழுத்து!”

    என்னும் எண்சீர் விருத்தம் வசந்தராசன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் கொள்கைப் பிரகடனம்! இன்றைக்கு மரபுக்கவிதை என்னும் மயக்கத்தில் உளறிக்கொட்டும் அத்தனைப் பேருக்கும் ஓரளவு தெரிந்த யாப்பு இந்த எண்சீர் விருத்தம்தான். இதில் பல்வகையான பிரிவுகள் உண்டு. அவற்றையெல்லாம் இவர்கள் கண்டு கொள்வதே இல்லை. மரபு என்பதை யாப்பு என்று கருதுகிறவரைத் தமிழ் மரபுக்கவிதைக்கு எதிர்காலம் இல்லை. என்பது பாகற்காய் இனிக்காது என்பது போல உண்மை.  இத்தகைய எண்சீர் விருத்தங்களில் சொற்களை அறுத்துக் ;கட்டுகிற தொழில்நுட்பம் தெரிந்தாலேயொழிய வெற்றி பெற முடியாது. வசந்தராசனுக்கு அது கைவந்த கலை.

    “தரையில் நடந்த தாடிச்சூரியன்
    தத்துவம் முளைக்கும் புத்தக வயல்வெளி!
    தடியால் பூமியைத் தட்டி எழுப்பி
    விடியலைக காட்டிய சூரிய் விழிகள்!”

    என்னும் ஆசிரியப்பாவில் தன் முத்திரையைப் பதிக்கும் வசந்தராசன்

    “புத்திப் புரட்சியின்
    வித்து வளர்ந்திட
    சத்து மழைப்பாடல் நெய்வேன்! வரும்
    சங்கடங்கள் நான் கொய்வேன்!- அதில்
    கொத்து கொத்தாய் தினம்
    பூத்துக் குலுங்கிடும்
    சொத்தைப் பொதுவினில் வைப்பேன் – தனிச்
    சொநதம் கொண்டாடினால் வாய் தைப்பேன் – நான்

    நான் புத்தம் புதுக் கவிஞன் – புரட்சி
    வித்து தரும் கவிஞன்

    என்று சிந்தினில் கொஞ்சுவதைக் காணலாம்.

    “குத்தா நொடிமுள்நீ! குற்றாலச் சாரல்நீ !
    முத்துவேல் மைந்தர்க்கு மொத்தமும்நீ ! — சொத்தாய்
    உனைவைத்துச் சொக்கட்டான் ஆடிவென்றார்! நீதான்
    நினைத்தாலே நீட்டும் நிழல்!”

    இந்தக் கையறுநிலைப் பாட்டு அணமையில் மறைந்த கலைஞரின் நேர்முக உதவியாளர் திரு சண்முகநாதனின் மறைவுக்கு வசந்தராசனால் பாடப்பட்ட நேரிசை வெண்பாக்களில் ஒன்று. தெய்வத்தைக் கண்ட கண்களுக்குக் கல் தெரியாததுபோலக் கவிதையோடு கலந்து விடுகிறபோது யாப்பு மறைந்துவிட வேண்டும். யாப்பினையும் வாய்பாடுகளையும் முன்னிறுத்தி முக்கித் திணறும் பலர் நடுவே வசந்தராசனின் கவிதைகள் சிலைகளாய் உருப்பெறுகின்றன.  இத்தனைச் செய்திகளையும் அடக்கிக் காட்டுகிறார் வெற்றிப் பேரொளி.

    “நீநடந்தால் உடன்நடக்கும் விருத்தக் கூட்டம்!
    நிறைநிலவுப் பூப்பூக்கும் வெண்பாத் தோட்டம் !
    தீநடந்து கண்டதில்லை! உன்னைக் கண்டேன்!
    தித்திப்புச் சிந்துகளாம் கள்ளும் உண்டேன் !
    பூநடந்து பார்த்ததில்லை உன்சி ரிப்புப்
    பூக்காட்டு வெளிச்சநடை அழகின் உச்சம் !
    மாநகரின் மாதவரம் தமிழின் பண்ணை !
    மழைத்தமிழில் நானிசைத்தேன் வாழ்த்துப் பண்ணை “

    ‘பௌர்ணமி’ என்னும் வடசொல்லுக்குத் தமிழில் ‘முழுமதி’ என்றார்கள். ‘நிறைமதி’ என்றார்கள்.  எல்லாருக்கும் புரிநத இலக்கியத் தமிழில் இவர் ‘நிறைநிலவு’ என்கிறார். ஒரு புதிய சொல்லாடசி தமிழுக்கு வரவுதானே! ‘விருத்தத்தில் வெற்றி பெற்றான் கம்பன் அந்த வெற்றியினை இவர்பெற்றார் என்னைப் போல’ என்று கவிஞர் சுரதா தமக்கேயுரிய புலமைச் செருக்குடன் பாவேந்தரைப் பாடியிருக்கிறார். இந்த வெளிப்பாடடு உத்தியைத் தம்பி வெற்றிப் பேரோளி

    “நீ நடந்தால் உடன் நடக்கும் விருத்தக் கூட்டம்”

    என்ற தொடரில் வைத்துக் காடடுகிறார். விருத்தம் வசந்தராசனுக்குப் பின்னால் வராதாம். கையைப் பிடித்துக் கொண்டு உடன் நடைபழகுமாம். இது அழகியல். வசந்தனின் நடைவேகத்திற்கு விருத்தம் ஈடுகொடுக்காது என்பது நுண்ணியம்!. தொடைவிகற்பங்களில் எதுகை மோனை ஆகியவற்றுக்கு அடுததபடியாகக் கவிதைக்கு மெருகேற்றுவதும் அதனைப் பெருமிதத்துடன் நிமிர்ந்து நிற்கச்செய்வதும் முரண்தொடையே! ஒரு கவிஞன் பாரதியை  இப்படிப் பாடுகிறான்!

    நீ நொண்டி சிந்து எழுதினாய்! தமிழ் எழுந்து நடந்தது’

    என்று! நொண்டுதலும் நடத்தலுமாகிய முரண்கள் கவிஞனின் பார்வையையும் நோக்கத்தையும் தெளிவுபடுத்திக் கவிதைப் பொருண்மையைக் கடல் ஆழத்திற்குக் கொண்டு செலுத்துவது முரணே என்பதைப் புரிந்து கொள்ளலாம். பேரொளி

    தீ நடந்து பாரத்ததில்லை! உன்னைக் கண்டேன்
    தித்திப்பு சிந்துகளாம் கள்ளும் உண்டேன்!

    என்று பாடுகிறார். தீயினுக்கு நீர்தான் முரண் என்பதன்று. மாறுபட்ட இரு தன்மை கொண்ட எவையும் முரணே உண்மையில் வசந்தனுக்கு அவரெழுதிய பாடாண் திணைப் பாடலுக்கு இந்தக் கட்டுரை ஓர் அழகியல் உரையாகத்தான அமைய முடியுமேயன்றிப் புதிய வெளிச்சம் எதனையும் பாய்சசவதாக நான் கருதவில்லை. ஒரு கவிஞன் மற்றொரு கவிஞனின் படைப்பில் தன்னை மூழ்கடித்துக் கொள்வது என்பது அசாதாரண நிகழ்வு. அதில் முத்துக்களைக் காண்பது அரிதினும் அரிது. அதனைக் கோத்து ஆரமாக்குவது அதனினும் அரிது. அரியனவற்றையே நாட்கடமையாகக் கொண்டிருக்கும் பேரொளிக்கு இது கையறி மடைமை. கவிஞர்கள் படைப்பதற்கு மட்டுமல்ல. படிப்பதற்கும் கூட என்னும் படைப்புண்மையை அவர் புரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் இலக்கியத்தின பன்முகப் ;பரிமாணங்களில் அவரால் பயணிக்க முடிகிறது. அதற்காகப் பல நூல்களையும் படிக்கத் தூண்டுகிறது

    நிறைவுரை

    கவிதை ஓர் அழகியல் வெளிபபாடு மட்டுமன்று.  சிநதனைகளின் வெளிப்பாடும் ஆகும். அழகியல் உணர்ச்சி சார்ந்தது, சிந்தனை அறிவு சார்ந்தது. ஒரு கவிதையில் இவ்விரண்டும் கூறுகளும் இருந்தால்தான் அது கவிதை. அழகியலைச் சுவைக்க ;இதயம் வேண்டும். சிநதனையைப் புரிநது கொள்ள மூளை வேண்டும். இரண்டில் ஒன்று குறைந்தாலும் படைப்பு பாழாகும். திறனாய்வு திசைமாறும்.  கருத்தியல் சார்ந்த சிந்தனைகள் தங்குதடையின்றிப் பொங்கிவரும்போது அவ்வுணர்ச்சிகளைக் கற்பனைத் தேன்கலந்து வடிவ வரையறைக்குள் கொண்டு வந்து பரிமாறுவது எல்லாருக்கும் இயலாது. பாடாண்திணை நாயகர் வசந்தராசனுக்கு அது கைவரப் பெற்றிருப்பது போலவே பாடிய பேரொளிக்கும் கைவரப் பெற்றிருக்கிறது. பலவற்றைப் பாடியிருக்கிறார் வசந்தராசன்! பாடியவரைப் பாடியிருக்கிறார் பேரொளி மன்னர்களைப் புலவர்கள் பாடிய  காலம் சங்கக் காலம்! ஒரு கவிஞனை மற்றொரு கவிஞன் பாடும் இந்தக் காலம் தங்கக் காலம்! தமிழ்க்கவிதைக்குப் பொற்காலம்!

    இனிக்கின்ற செங்கரும்பின் சாறு! நெஞ்சில்
    இளநீரைச் சுமக்கின்ற அன்பு! யாப்பில்
    கனிச்சுளைகள் பந்தி வைக்கும் தோப்பு ! ஈரக்
    கால்வாய்கள் கண்ணிரண்டும் ! அவைகள் ஆண்டு
    தனித்தியங்கும் கவிமுழக்கம்! வாழ்த்தும் போது
    தலைமடையின் பெருக்கெடுப்பு! நனைந்தோ ரெல்லாம்
    பனிக்காலை பரங்கிப்பூக் கோல வீதி !
    பழத்தமிழார் கவிக்கோவின் செங்கோல் வாழ்க!

    தேரோட்டத் திருவிழாதான் கவிதை மன்றில்!
    தேனோட்டப் பெருவெள்ளம் புலமை யாற்றில்!
    கூரோட்டக் கணைதொடுக்கும் வில்லின் தோள்கள்!
    குளிரோட்டக் கவியோட்டும் வசந்த ராசன் !
    ஈரோட்டுப் படைவீட்டுக் களத்து வீரன் !
    இனத்தோட்ட வாசலிலே காவல் காரன்!
    நேரோட்ட நெஞ்சத்துக் கவிதை வாழ்வன்!
    நீடுவளர் வரம்பெற்ற வாணாள் சேர்க!

    மின்னலுக்கு நிலையான வடிவ மில்லை!
    மின்சொற்கள் உன்சொற்கள் நிலைக்கும் ! காதல்
    கன்னலினை மொழிக்குவளை ஏந்தும்! பொங்கும்
    கடலழைத்துக் கமண்டலத்துள் புதைக்கும்! பாட்டுப்
    பொன்னளக்கும் அடியாழத் தமிழ்ச்சு ரங்கம்!
    புகழளக்கும் வரலாற்றின் சொந்தம்! சொந்தம்!
    தென்றலுக்கு மறுபெயர்தான் உன்றன் பேரா?
    திசையெட்டும் உச்சரிக்கும் கம்பன் பேரா!

    நீநடந்தால் உடன்நடக்கும் விருத்தக் கூட்டம்!
    நிறைநிலவுப் பூப்பூக்கும் வெண்பாத் தோட்டம் !
    தீநடந்து கண்டதில்லை உன்னைக் கண்டேன்!
    தித்திப்புச் சிந்துகளாம் கள்ளும் உண்டேன் !
    பூநடந்து பார்த்ததில்லை உன்சி ரிப்புப்
    பூக்காட்டு வெளிச்சநடை அழகின் உச்சம் !
    மாநகரின் மாதவரம் தமிழின் பண்ணை !
    மழைத்தமிழில் நானிசைத்தேன் வாழ்த்துப் பண்ணை

    திணை:  பாடாண்

    துறை விளக்கம்!

    ஏனைய புறத்திணைகளுக்குத் ‘திணை’ தனியாகவும் அவை ஒவ்வொன்றுக்குமான துறைகள் தனித்தனியாகவும் இயங்கும். ஆனால் பாடாண்திணை தனக்குரிய துறைகளோடு ஏனைய ஏழுதிணைப் பொருட்களையும் தனக்குரிய துறைகளாகக் கொள்ளும். கொள்ளவே பாடாண்திணை என்பதும் புறத்திணை என்பதும் ஒன்றென்பதும் தெளியப்படும்.  தெளியவே அத்தனைப் புறத்திணைக் கூறுகளும பாடாண் திணைக்குள் அடங்கும். .இதனை

    “பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
    நாலிரண் டாகும் பாலுமா ருண்டே” (தொல்.புற.80)

    என்னும் நூற்பாவானும்

    “நாலிரண்டாவன (பாடாண் திணை எட்டுப் பிரிவுகளாவது) இப்பாடாண் திணைக்கு ஓதுகின்ற பொருட்பகுதி பலவும் கூட்டி ஒன்றும், (1) இருவகை வெட்சியும் (2) பொதுவியலும் (3) வஞ்சியும (4) உழிஞையும் (5) தும்பையும் (6) வாகையும் (7) காஞ்சியும் (8) ஆகிய பொருள்கள் ஏழுமாகிய எட்டுமாம்”

    என்னும் ஆசிரியர் ;நச்சினார்க்கினியர் உரைப்பகுதியானும் உணர்க!

    (தொடரும்)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 46

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 46

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ஒரே நாளில் ஓராயிரம் உவமங்கள்

    முன்னுரை

    ‘நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள்’ என்னும் உலகியல் வழக்கில் உள்ள ‘நாலுவிதம்’ என்பது நான்கை வரையறுக்காது ‘பலரும் பலவகையாகப் பேசுவார்கள்’ என்பதைக் குறிக்குமல்லவா? அதுபோல ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தைச் சித்திரிக்கும் ஓர் இலக்கியப் பதிவில் காணப்படும் எண்ணற்ற பொருத்தமான உவமங்களைக் குறிக்கவே ‘ஒரே நாளில் ஓராயிரம் உவமங்கள்’ எனத் தலைப்பிடப்பட்டது. ‘ஆயிரம் நிலவே வா!’, ‘ஆயிரம் பெண்மை மலரட்டுமே’, ‘ஆயிரம் வாசல் இதயம்’ என்பன போல. பாவேந்தர் பாரதிதாசனுக்கு நிலைத்த புகழைக் கொடுத்தவை இரண்டு. ஒன்று, அவர் தன் புனைபெயரைத் தன் வழிகாட்டியான பாரதியுடன் இணைத்து அமைத்துக் கொண்டது. இரண்டு அவருடைய புதுமையான சிந்தனைகளும் கற்பனைகளும் அடங்கிய கவிதை இலக்கியங்கள். பின்னவற்றுள் குறிப்பிடத்தக்கதும் தமிழ்க்கவிதை இலக்கிய நெறியில் புதுமையாகவும் அமைந்தது ‘குடும்ப’ விளக்கு. குடும்ப விளக்கின் முதற்பகுதியாகிய ஒருநாள் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உவமச்சிறப்பையே இக்கட்டுரை சுருக்கமாக ஆராய முற்படுகிறது.

    குடும்ப விளக்கின் கட்டமைப்பு

    ‘நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்’ என்பது பொருளாழமுடைய ஒரு தொடர். நாட்டில் பல்கலைக்கழகங்கள் பெருகிய அளவுக்கு நல்ல குடும்பங்கள் தழைத்திருக்கின்றனவா என்பது எளிதில் விடை காணமுடியாத வினா. ‘குடும்ப விளக்கு’ என்பது நடப்பியல் சார்ந்த கற்பனை கலவாத ஒரு காவியம். ஒருநாள் நிகழ்ச்சி, விருந்தோம்பல், திருமணம், மக்கட்பேறு, முதியோர் காதல் என்னும் அவ்வைந்து  பிரிவுகளில் ‘ஒருநாள் நிகழ்ச்சி’ என்பது ‘ஓர் இரவு’ என்பதுபோல ஒரு நாள் ஒரு குடும்பத்து இயல்பான நிகழ்வுகளைச் சித்திரிக்கும் பகுதியாகும்.

    ஒருநாள் நிகழ்ச்சி

    குடும்பத்தலைவி விடியற்காலையில் படுக்கையை விட்டு எழுந்திருப்பது, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, கணவனைப் பணிக்கு அனுப்புவது, மாமனார் மாமியாருக்குரிய பணிவிடைகளை மகிழ்ச்சியுடன் செய்வது, குடும்ப உறுப்பினர்களுக்குப் பிடித்தமான உணவுகளைத் தயாரிப்பது, பள்ளி சென்று திரும்பிய குழந்தைகளை வரவேற்பது, அவர்களுக்குப் பாடம் கற்பிப்பது, அவர்களை உறங்க வைப்பது, கணவனோடு பொதுநலம் குறித்துப் பேசுவது, உறங்கச் செல்வது என நிரல்படக் கோத்த அருமணி ஆரமாகத் திகழ்வது ஒருநாள் நிகழ்ச்சியாகும். நாட்டுப்படலம், நகரப்படலம் எனத் தொடங்கிய  தமிழ்க்காப்பிய உலகில் வாசலில் கோலமிடும் வைகறைத்  தலைவியிலிருந்து தொடங்கிச் சித்திரித்துக் காட்டலாம் என்ற எண்ணமே காப்பியப் புரட்சியாகும். கவிதைப் புரட்சியாகும்.

    மடமையிருள் கலைந்தது

    கவிதையில் உவமத்தின் ஆற்றலை நன்குணர்ந்திருந்த பாவேந்தர் தன் காப்பியத்தை உவமங்களிலேயே தொடங்குகிறார். இது ஒருவகையில் தமிழ்க்கவிதை மரபினைச் சார்ந்தது எனலாம். ‘அகர முதல’ எனத் தொடங்கிய திருவள்ளுவரும், ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு’ என்னும் நக்கீரரும் இவர்க்கு முன்னோடியாகலாம். குடும்பப் பெண்கள் விடியற்காலத்திலேயே படுக்கையிலிருந்து எழுந்து வாசல் தெளித்துக் கோலமிடுதல் ஒரு பண்பாட்டு மரபு. பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பலபடப் பேசியிருந்தாலும் குடும்ப விளக்குக் காப்பியம் முழுமையும் பண்பாட்டுக் கூறுகளே நிறைந்துள்ளன. கதிரவன் கீழ்த்திசையில் உதிக்காத போதும், அதனால் விலகவேண்டிய இருளாகிய போர்வை நீங்காதபோதும் நள்ளிரவு மென்மையாய் நடந்து கொண்டிருந்ததாம்.

    “இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை
    இரவு போர்த்த இருள் நீங்கவில்லை!
    ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்
    நள்ளிரவு மெதுவாய் நடந்து கொண்டிருந்தது”

    என்று வண்ணனை செய்து அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ என்னும் திருக்குறள் உவமக் கருத்தினை உள்ளீடாக்குகிறார். தொடர்ந்து மலர்கின்ற காலைப் பொழுதினைத்,

    “தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
    கலப்பென இருள் தன் கட்டுக்குலைந்தது”

    என்று எழுதுகிற பாவேந்தர், நூலின் முதல் உவமத்தில் அறிவை முன்னிறுத்தியிருப்பது நோக்கத்தக்கது. நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பதே நூலின் நோக்கமாதலின் அதனைக் குறிப்பாய் உணர்த்தினார் என்பதாகவும் கொள்ளலாம். கற்றலும் கேட்டலும் இணைந்ததே அறிவெனினும் இந்த உவமத்தில் கேள்விக்கு முதன்மை கொடுத்திருப்பது  நூலறிவு பெற இயலாதவரையும் மனத்துட் கொண்டே நூலின் முன்னுரையில்,

    “குடும்ப விளக்கைப் பெறும் தோழர்கள் தாமேயன்றி மறந்து போகாமல் தம் துணைவியர்க்கும் படிக்கக் கொடுக்க. துணைவியர் எழுத்தறிவு இல்லாராயின் படித்துக்காட்டுக! துணைவர்க்கு எழுத்தறிவு இழுப்பாய் இருந்தால் துணைவியார் சொல்லிக் காட்ட மறவாதிருக்க வேண்டுகிறேன்”

    என்னும் பகுதி ‘கேள்வியால் அகலும் மடமைபோல்’ என்னும் உவமத்தின் ஆழத்தை ஓரளவு தெளிவாக்கக் கூடும். படிக்க இயலாத காலையில் கேட்டலுக்கு முதன்மை தந்தவர் மாலை நிகழ்வில் கற்றலுக்கு முதன்மை தருவதைக் காணலாம்.

    குளத்து நீரில் குதிக்கும் கெண்டை மீன்

    தமிழிலக்கியத்தில் பெண்களின் கண்களுக்கு வேல், கெண்டைமீன் முதலியவை உவமமாக்கப்படினும் அதன் வினைபடுபொருள்களாகக் கண்ணீரைத்தான் காட்டினார்கள் தமிழ்க்கவிஞர்கள். சீதையின் கண்களும்  கண்ணகி மற்றும் மாதவியின் கண்களும் மீன்களாக உருவகம் செய்யப்பட்டிருப்பினும் காப்பியங்கள் அவர்களுடைய கண்ணீரைத்தான் காட்டின. ஆனால் பாவேந்தர் விழித்த தலைவியின் கண்களைத்,

    “தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி
    குளத்து நீரில் குதிக்கும் கெண்டை மீன்”

    எனக் களிப்பு மேலிடத் தாவிக் குதிக்கும் கெண்டைமீன்களாகச் சித்திரித்தார். ‘கருக்கலில் ஒளிபடும் அவள் விழி’ என்னும் பொருளை விளக்கக் ‘குளத்துநீரில் குதிக்கும் கெண்டைமீன்’ என்னும் உவமத்தால் விளக்கினார். ‘தெளிவிலாக் கருக்கல்’ என்னும் பொருளுக்குத்  ‘தெளிவிலாக் குளத்து நீரையும்’ கருக்கலில் அலைபாயும் அவள் ‘விழிக்குக்’, குதிக்கும் கெண்டைமீனையும் உவமித்ததில் கவிஞரின் உவம ஆற்றல் புலப்படுவதைக் காணலாம்.

    பொடிமுத்துச் சுடர்

    சொல்லப்படுகிற உவமம் எந்த வகைமையில் பொருளுக்கு உவமமாக்கப்படுகிறதோ அந்த வகையில் முழுமையான விளக்கத்தைத் தரவேண்டும். அதுதான் உவமத்தின் பணி. ஆனால் அந்த விளக்கத்திற்காகத் தெரிவுசெய்யப்படும் துல்லியமான பொருத்தமான உவமம் படைப்பாளனின் துல்லிய நோக்கையும் பரந்த பார்வையையும் வெளிப்படுத்தும். அவ்வாறு பொருள் விளக்கத்திற்கான துல்லியமான ஆழமான உவமங்கள் கிட்டாதபோது படைப்பாளனே சில உவமங்களைப் படைத்தும் பொருள் விளக்கத்தைச் செய்துவிடுவான். சான்றாகப் ‘பசுத்தோல் போர்த்திய புலி’ என்பதுதான் உலக வழக்கு. திருவள்ளுவர் புலித்தோல் போர்த்திய பசுவைக் காட்டுகிறார். புலித்தோல் போர்த்திய பசு என்பது யாரும் காணாதது. துறவறத்திற்குச் சென்றவர்கள் அந்தத் துறவற வேடத்தைப் பயன்படுத்திக் கொண்டு கூடாவொழுக்கத்தில் ஈடுபடுவதை விளக்குதற்காகத் திருவள்ளுவர் இந்த உவமத்தை இட்டுக்கட்டியிருக்கிறார்.

    பாவேந்தர் பாரதிதாசன் நுண்மாண் நுழைபுலமும் உற்று நோக்கும் இயல்பும் கொண்டவர். கருத்துக்களில் புதுமை தேக்கினும் பண்பாட்டில் பழந்தமிழ்ப் பண்பாட்டையே முன்னெடுப்பவர். அதனால் மூக்குத்தி அணிந்த பெண்களையே பாடுபொருளாக்கியிருக்கிறார். அவர்களுடைய மூக்குத்தியையும் பாடுபொருளாக்கியிருக்கிறார். அதில் தொங்கும் முத்தையும் உவமமாக்கியிருக்கிறார். காதில் தோட்டோடு தொங்குவதுபோல மூக்குத்தியிலிருந்தும் முத்து தொங்கும். அது அளவால் மிகச் சிறியது. இதனை எங்கோ கண்ணால் நோக்கி மனத்துள் பதிய வைத்திருந்த பாரதிதாசன் குடும்ப விளக்கில் அகல்விளக்கின் சோர்ந்து போன சுடருக்கு உவமமாக்கியிருக்கிறார்.

    “சின்ன மூக்குத் திருகொடு தொங்கும்
    பொன்னாற் செய்த பொடிமுத்தைப் போல்
    துளி ஒளி விளக்கின் தூண்டுகோலைச்
    செங்காந்தள் நிரல் மங்கை விரலால்
    பெரிது செய்து விரிமலர்க் கையில்
    ஏந்திச்”

    செல்கிறாளாம். சுடரின் சோர்வைத் தூண்டுகோலால் அடிப்பகுதி நூலைத் தூக்கிவிடுவதன் மூலம் ஒளிவிடச் செய்கிறாளாம். விளக்கைத் துடைப்பதும், விளக்கேற்றுவதும், எண்ணெய் குறைந்தால் ஊற்றுவதும், குறைந்த சுடரைப் பெருக்கிக்காட்டுவதும் பெண்களின் இல்லறக் கடமைகளில் ஒன்று. ஆனால் பாரதிதாசன் இதனை உற்று நோக்கியிருக்கிறார். பண்பாடு சார்ந்த விளக்குச் சுடரேற்றும் நிகழ்வை மற்றொரு பண்பாடு சார்ந்த மூக்குத்தியின் பொடிமுத்தை உவமமாக்கி உரைத்ததன் மூலம் தான் ஒரு மரபுக்கவிஞர் என்பதை மீண்டும் உறுதி செய்கிறார்.

    உணவுக் கூடமா? உவம மண்டபமா?

    காலை உணவு, நண்பகல் உணவு என்றெல்லாம் அடுக்களையில் சமையல் செய்யச் செல்கிறாள் தலைவி. அடுக்களையில் ஒருநாள் சமையற்கான பொருளைத் தேர்ந்தெடுப்பதிலும் குடும்பத்தில் உள்ள யார் யார் என்னென்ன விரும்புவார்கள் என்பதிலும் மிக நுண்ணிய பார்வையைப் பாரதிதாசன் செலுத்தியிருக்கிறார்.

    “பொரியலோ பூனைக் கண் போல்
    பொலிந்திடும்!”

    பொரியலை உண்ணாதார் இலர். பூனையைக் காணாதார் இலர். ஆனால் பாரதிதாசனால் மட்டுமே பூனைக் கண்ணையும் பொரியலையும் ஒப்பிட்டுக் காண முடிந்திருக்கிறது. தேங்காய்த் துருவல், கடுகு முதலியன இட்டு வதக்கி வறுத்துச் செய்யப்படும் பொரியல் பூனைக் கண் போலவே இருப்பதைப் பாரதிதாசன் கவிதையைப் படித்த பிறகுதான் தெரிகிறது. பள்ளி செல்லும் பிள்ளைகளுக்குக் காலில் செருப்பணிவிக்கிறாள். அந்தச் செருப்புக்கும் உவமம் சொல்கிறார்.

    “புன்னைஇலைபோல் புதையடிச் செருப்புகள்
    சின்னவ காலிற் செருகி”

    என்று. குழந்தைகளின் அதாவது பெண் குழந்தைகளின் காலடிகளுக்குப் புன்னையிலையை உவமம் கூறுவது எவ்வளவு பொருத்தம் என்பதை புன்னையிலையைப் பார்த்தவர்களுக்குப் புரியும். பாரதிதாசன்,

    “காலுக்குப் புன்னையிலை போலும் செருப்பணிந்து
    கையில் விரித்த குடை தூக்கி”

    என்று பிறிதொரு இடத்திலும் பாடுவார். செயல்களின் மாற்றமே ஓய்வு. இந்த நுண்ணியத்தைப் பாவேந்தர் எப்படிக் காட்சிப்படுத்துகிறார் தெரியுமா? பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் கையில் விரித்த குடையைக் கொடுத்துத் தெருவரை அவருடன் நடந்து மற்ற பிள்ளைகளோடு அவர்களையும் அனுப்பிவிட்டு வீட்டுக்கு வருகிறாளாம். எப்படி?

    ‘கிளைமாறும் பசுங்கிளிபோல ஓடி
    ஆளனோடு அளவளாவினாள்”

    வேன்களில் குழந்தைகளை அனுப்பும் வழக்கத்தையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் தற்காலத் தாய்மார்களுக்கு இந்த அனுபவமும் கிட்டாது. பாவேந்தரின் இந்தப் பாட்டும் கிட்டாது.

    பாண்டியனும் பாவேந்தரும்

    சேர, சோழ, பாண்டியர்களில் பாவேந்தரின் படைப்புக்களில் பெரிதும் நிறைந்திருப்பவர் பாண்டியரே. காரணம் பாவேந்தரின் அளப்பரிய தமிழ்ப்பற்று. பாண்டியர்கள் தமிழை வளர்த்தார்கள். சோழ நாட்டிலும் சேரநாட்டிலும் பயனை அனுபவித்தார்கள். என்ன பயன் பாண்டியர் காத்த தமிழில் கவிதைகளையும் காப்பியங்களையும் யாத்தனர். முத்தொழில்களிலும் காத்தல்தானே தலைசிறந்தது? அதனால் பாண்டியரை அவர் முன்னெடுப்பதில் வியப்பேதும் இல்லை!. குடும்பத்தலைவன் மணவழகர் உடுத்த வேண்டிய ஆடை கிழிந்திருக்கிறது. அதனைத் தைத்து அவனை அணியச் செய்து அவன் அழகைப் பருகுகிறாளாம் அவள். எப்படித் தெரியுமா?

    “பொத்தலும் கிழிசலும் பூவை கண்டாள்!
    தைத்தாள் தையல் சடுகுடு பொறியால்!
    ஆண்டநாள் ஆண்டு மாண்ட செந்தமிழ்ப்
    பாண்டிய மன்னன் மீண்டது போல”

    என்று எழுதுகிறார். காப்பியம் புதுமை தேக்கியது. உவமம் மரபு சான்றது. ‘செந்தமிழ்ப்பாண்டியன்’ என்றதாலே அவர் பாண்டியனை முன்னெடுத்ததற்குத் தமிழே காரணம் என்பதும் பெறப்படும்.

    “கூண்டுவண்டி கட்டி நாம்
    கூடலூர் அடைந்தால்
    பாண்டியன் குடும்பம் என்று
    பார்த்து மகிழ்வார்கள்”

    என்று பிறிதொரு இடத்திலும் பாண்டியனை உவமமாக்கியிருப்பார் பாவேந்தர். எண்சீர் விருத்தங்களால் ஆன தமது காப்பியத்திற்குப் ‘பாண்டியன் பரிசு’ என்றுதான் அவர் பெயர் வைத்திருக்கிறார். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிய அந்தத்தாய், அடுத்துத் தன் கணவனைக் கடைப்பணிக்கு அனுப்புகிறாள். அவன் உணவருந்தியபின் தமிழ் மரபுப்படி வெற்றிலைப் பாக்கு உண்ண விரும்புகிறான். வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொள்வதில் பலவகை உண்டு. தானே எடுத்துத் தானே கிள்ளித், தானே தடவித் தன்னுடைய வாயில் தானே போட்டுத் தானே மென்று தானே துப்புவது. வெற்றிலை முதலானவற்றை மனைவி எடுத்துச் சுண்ணாம்பு தடவி மடித்துக் கணவனிடம் கொடுத்துப் போட்டுக் கொள்ளச் சொல்வது. அப்படி மடித்த சுருளைக் கணவன் கையில் கொடுக்காமல் கணவன் வாயிலேயே கொடுப்பது. இன்னொன்றும் உண்டு. தாம்பூலத்தை முதலில் தலைவி தரித்து மென்று உமிழ்நீரோடு கணவனோடு பரிமாறிக் கொள்வது. பெரும்பாலும் இலக்கியங்களில் பேசப்படாத நிகழ்வு இது. ஆனால் துணிச்சல் மிக்க திருவள்ளுவர் இதனைக் குறிப்பாகக் காட்டியிருக்கிறார்.

    “பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயிறு ஊறிய நீர்”

    என்ற தலைவனின் பட்டறிவு பகர்வில் நீர் பாலும் தேனும் கலந்த சுவையினைப் பெற்றது காண்க.

    “எயிறூறிய என்றவிடத்து இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது. வேறுவேறு அறியப்பட்ட சவையவாய பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னதென்று அறியலாகா இன்சுவைத்தாம் ஆதலின் அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க”

    என்னும் அழகர் உரைகொண்டு இக்காட்சியை நோக்கலாம்.  தலைவனின் அந்த நிகழ்ச்சி களவியல் வெளிப்பாடு. பாவேந்தரின் இந்த வெளிப்பாடு வேறுமாதிரியாக அமைந்திருக்கிறது. காரணம் இது கற்பியல்.

    “வெற்றிலைச் சுருளைப் பற்றி ஏந்தினாள்
    கணவன் கைமுன் காட்டி அவன் மலர்
    வாயில் தரத்தன் மனத்தில் நினைத்தாள்!
    தூயவன் அப்போது சொன்னது என்னெனில்
    சுருளுக்கு விலை என்ன சொல்லுவாய் என்றான்
    பொருளுக்குத் தக்கது போதும் என்றாள்.
    கையில் கொடுப்பதைக் காட்டிலும் சுருளை
    வாயிற் கொடுத்திடு மங்கையே! என்றான்.
    சேயிழை அன்பால் செங்கை நீட்டினாள்!
    குடித்தனப் பாங்கைக் கூட்டி எடுத்து
    வடித்த சுவையினை வஞ்சிக்கு அளித்தல்போல்
    தளிர்க்கைக்கு முத்தம் தந்து
    குளிர்வாய் வெற்றிலை குழைய ஏகினனே!”

    பாங்கோடு குடும்பம் நடத்தியவள் தலைவி. அனுபவித்தது குடும்பம். குடும்பத் தலைவன் அனுபவித்த அந்தச் சுவையை உவமமாக்குகிறார் பாவேந்தர். விரைவுச் சாப்பாட்டில் வாழ்க்கையை முடித்துக்  கொள்வாருக்கு இந்தக் கவிதையும் புரியாது. உவமமும் புரியாது.

    “உணவுண்ணச் சென்றாள் அப்பம்
    உண்டனள் சீனி யோடு
    தணல் நிற மாம்பழத்தில்
    தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்
    மணவாளன் அருமை பற்றி
    மனம் ஒரு கேள்வி கேட்க
    இணையில்லா அவன் அன்புக்கு
    ஈடாமோ இவைகள் என்றாள்”

    என்று குடும்பத்தலைவி உணவுண்ணச் சென்ற காட்சியைச் சித்திரிக்கிறார் பாவேந்தர். அப்பம் உண்பது ஒரு சிறிய வினை. அந்த வினையை உவமத் தோரணத்தால் அணிசெய்துவிடுகிறார். மாம்பழத்தைக் கண்ணால் கண்டு நிறத்தை அறிகிறாள். உண்டு சுவையை உணர்கிறாள். தணல் நிற மாம்பழம் என்றதால் உரு உவமை. தமிழ் நிகர் சுவை என்றதால் பண்புவமை. இத்துடன் இன்னொரு உவமத்தையும் வெகுநுட்பமாகக் கையாள்கிறார். கணவன் கண்ணுக்கு அழகானவன். மனத்திற்கு இனிமையானவன். அந்த அழகும் அவ்வினிமையும் இந்த மாம்பழத்திற்குக் கிடையாதாம். அணி வேற்றுமையாக இருந்தாலும் மாம்பழத்தின் உருவும் பண்பும் கணவனுக்கும் பொருந்துமாறு உவமம் புணர்த்தியிருக்கும் நுண்ணியம் உணரத்தக்கது.

    “குழந்தைகள் பள்ளி விட்டு
    வந்தார்கள் குருவிக் கூட்டம்
    இழந்தநல் உரிமை தன்னை
    எய்தியே மகிழ்வதைப் போல்”

    என்பது ‘சிட்டுக்குருவி போலே விட்டு விடுதலையாகி’ என்னும் பாரதியின் தொடரோடு ஒப்பு நோக்கத்தக்கது.

    பழைமையைப் பழுதுபார்க்கும் பண்டிதர்கள்

    உவமங்கள் அழகியல் சார்ந்தவை என்பது அவற்றின் இலக்கிய  நோக்கம். பொருள் விளக்கம் என்பது அவற்றின் உயிர் நோக்கம். அரசுக்குக் கொள்கைமுடிவு என்பதுபோலப் படைப்பாளனின் கொள்கை அடையாளங்களின் குறிப்பு என்பது கூடுதல் சிறப்பு. இந்தக் கொள்கை அடையாளத்தைப் பெரும்பாலான கவிஞர்கள் வெளிப்படச் சொல்ல மாட்டார்கள். இலைமறை காய்மறையாகத்தான் சொல்வார்கள். சுவைப்பார் அல்லது திறனாய்வார் கண்டறிந்து பந்தி வைக்க வேண்டும். பாரதி பழைமைக்கு எதிரி. அதாவது பயனற்ற பழைமைக்கு எதிரி. இந்தப் பழைமை எதிர்ப்பை அவன் தனது எல்லாப் படைப்புக்களிலும் பதிவு செய்திருக்கிறான். இந்த மூடநம்பிக்கை, பொருளற்ற பழைமை இவற்றில் பாரதிக்கு இருந்த உறுதியும் தெளிவும் கனகசுப்புரத்தினம் பாரதிதாசன் ஆவதற்கான காரணங்களுள் தலையாயது.

    “பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப்
    பழமை இருந்தநிலை கிளியே
    பாமரர் ஏதறிவார்?”

    என்னும் பாரதியத்தை உள்வாங்கிய பாரதிதாசன் அந்தக் கருத்தினோடு தமக்கிருக்கும் ஒத்திசைவைக் குடும்பத்தின் ஒருநாள் நிகழ்ச்சியில் வைத்துக் காட்டுகிறார். காலைமுதல் அனைத்துக் கடமைகளையும் முடித்த தலைவி இறுதியாகப் பசுவுக்கும் கன்றுக்கும் வைக்கோல் வைப்பதற்கு முன்னால் இந்த உவமத்தைப் பயன்படுத்துகிறார். எப்படி?

    “கண்டு, படுக்கை திருத்தி, உடை திருத்திக்
    காற்றில்லாப் போதினிலே விசிறி வீசி,
    வண்டுவிழி திறக்குமொரு குழந்தை தண்ணீர்
    வையென்னும் ஒன்றுதலை தூக்கிப் பார்க்கும்!
    பண்டிதரின் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம்
    பணிக்கையிடல் போல்அனைத்தும் தணிக்கை செய்தே!”

    படுக்கை திருத்துவது முதலாகத் தொடங்கிக் குடி தண்ணீரைத் தலைமாட்டில் வைப்பதுவரை தலைவி செய்யும் செயல்களுக்கெல்லாம் பழைமையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் பண்டிதர்களின் செயல்களை உவமமாக்கியுரைக்கிறார் பாரதிதாசன்.

    பாகற்காய் கசக்கும்! பாடல் இனிக்கும்

    ‘குடும்ப விளக்கு’ பலவகைகளில் தமிழ்க்கவிதைகளிலும் காப்பியங்களிலும் புதுமை தேக்கி நிற்கும் சிறப்புடையது. கணவன், மனைவி இரவில் படுக்கையில் சந்திக்கின்ற காட்சியைப் பண்பாட்டுடன் முதன்முதலில் சித்திரித்துக் காட்டிய பெருமை பாவேந்தருக்கு உண்டு. தனிமனிதன் குடும்பமாகிறான். குடும்பம் தெருவாகிறது. தெரு ஊராகிறது. ஊர் நாடாகிறது. நாடு உலகம் ஆகிறது என்பதுதான் மகாகவி பாரதி, பாரதிதாசன் ஆகியோர்தம் சமுதாயக் கட்டுமானக் கொள்கையாகும். இந்தக் கருத்தியலைப் பாவேந்தர் படுக்கையறையில் வைத்துக் காட்டுகிறார். பகலெல்லாம் தலைவி வீட்டிலும் தலைவன் கடையிலும் உழைத்து வந்து படுக்கையில் விழுகின்ற நேரத்திலும் சுயநலம் நோக்காத அவர்தம் மனநிலையைப் பதிவு செய்கிறார்.

    “கண்டான் கண்டாள் உவப்பின் நடுவிலே ஓர்
    கசப்பான சேதியுண்டு கேட்பிர் என்றாள்”

    மனைவி இதனைச் சொன்னவுடன் கணவன் சொல்லுகிற சொல்தான் காப்பியத்தை நினைக்க வைக்கிறது. கணவன் சொல்லுகிறான்,

    “மிதிபாகற்காய் கசக்கும் எனினும் அந்த
    மேற்கசப்பின் உள்ளேயும் சுவையிருக்கும்”
    அதுபோலத் தானேடி? அதனால் என்ன
    அறிவிப்பாய் இளமானே! என்றான் அன்பன்”

    மிதிபாகற்காயை அறிந்தாலேயொழிய இந்த உவமத்தை உள்வாங்க முடியாது. பாகற்காயில் பலவகை உண்டு. இவற்றுள் மிதிபாகற்காய் என்பது படியில் அளந்து கொடுப்பார்கள். மேற்புறம் இருக்கும் கசப்பு குறைவாகவும் உள்ளிருக்கும் இனிப்பு அதிகமாகவும் இருக்கும். பாகற்காய் கசக்கும் என்பது இதற்கு அவ்வளவாகப் பொருந்தாது. பக்குவப் பெண்கள் சமைத்தால் இனிப்பு இருமடங்காகும். இந்தப் பாகற்காயை மனைவியின் பேச்சுக்கு உவமித்ததன் மூலம் தலைவி சொல்லவரும் கருத்து இனிப்பானதே என்ற சிந்தனையோடு அணுகுகிறான் தலைவன். தலைவி அப்படி என்ன பேசுகிறாள் படுக்கையறையில்?

    “அதிகாலை தொடங்கி நாம்இரவு மட்டும்
    அடுக்கடுக்காய் நமது நலம் சேர்ப்பதல்லால்
    இதுவரைக்கும் பொதுநலத்துக்கென்ன செய்தோம்
    என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவும் இல்லை”

    இவைதான் அவள் பேசிய கசப்பான சேதி!. உள்ளே இருக்கும் சுவை என்ன? மனைவி இரவில் சொல்ல வந்ததைக் கணவன் பகலிலேயே செய்து முடித்துத் தமிழினத்தின் உயர்வுக்கான சிந்தனையோடு வீடு வருகிறான். அவனுடைய பேச்சைக் கேட்டு மனைவி முடிக்கிறாள் இப்படி!

    “பழம் இடுவேன்! சர்க்கரைப்பால் வார்ப்பேன்! உங்கள்
    பண்பாடும் வாய்திறப்பீர், அத்தான்! என்றாள்!”

    உள்ளத்தால் இணைந்த கணவன் மனைவியர்தம் இல்லறத்தின் நோக்கம் பொதுநலம். விடுகதை போடலாம் என்று மனைவி எண்ணியிருந்தாள். கணவன் விடையோடுதான் வந்திருக்கிறான் என்பதை அவள் அறியாள். மனைவி சொல்லிக் கணவன் செய்வதைவிடக் கணவன் சிந்திப்பதையே மனைவி எண்ணுவது சிறந்தது. சொல் கசப்பாயிருக்கலாம். பொருளும் பயனும் இனிப்பானவை என்பது கருத்து.

    நிறைவுரை

    வைகறையில் தொடங்கி முன்னிரவில் நிறைவு செய்து காட்டியிருக்கும் ஒருநாள் நிகழ்ச்சியில் பாவேந்தர், குடும்பப் பாங்கான உவமங்களையே கையாண்டிருக்கிறார். ‘வண்டுவிழி’, ‘அன்றிலடி நாமிருவர்’, ‘குன்றத்தில் படர்ந்த மலர்க்கொடி’, ‘செங்காந்தள் நிகர் விரல்’, ‘பூவிதழ் மேல் பனிதூவிய துளிபோல்’ என்றெல்லாம் ‘தொட்ட இடமெல்லாம் தட்டுப்படும்’ உவமங்களால் நிறைந்தது ஒருநாள் நிகழ்ச்சி!  ஒருநாள் சித்திரிப்பில் ஓராயிரம் உவமங்கள். ஆனால் அவை அழகு பெற்றதும் அழியா வாழ்வு பெற்றதும் தமிழிலக்கியத்தில் புதுத் தடம் கண்டதும் காட்டியதும் பயன்படுத்தப்பட்ட உவமங்களால் என்பது அவ்வுவமங்களில் மனங் கரைந்தார்க்கே புலனாம்.

    (தொடரும்…)

    Share
  • (Peer Reviewed) க.நா.சுவின் ‘அசுரகணம்’ – பித்தேறி அலையும் அடர் காமம்

    (Peer Reviewed) க.நா.சுவின் ‘அசுரகணம்’ – பித்தேறி அலையும் அடர் காமம்

    ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல்
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    முதுகலைத் தமிழாய்வுத்துறை
    ஜமால் முகமது கல்லூரி
    திருச்சி – 20.
    george.joshe@gmail.com
    +91 9788784958

    க.நா.சு தினமும் நாற்பது பக்கங்களுக்கு குறையாமல் எழுதிக் குவித்தார் என்று சொல்வர். அத்தனை பக்கங்கள் எழுதியிருக்க மாட்டார் எனப் ப்ரமிள் விமர்சித்ததும் ஊரறிந்தது. அவர் அப்படி எழுதினார் என்று எடுத்துக் கொண்டால், இந்நாவலை மூன்று நாட்களில் எழுதி முடித்திருக்கலாம். ஆனால், இதைத் திருப்திகரமாக எழுதி முடிக்க, பதினைந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன் என முன்னுரையில் குறிப்பிடுகிறார் க.நா.சு. மேலும் இத்தனை காலம் நாவலின் தத்துவப் போக்கைப் கனப்படுத்த பயன்பட்டது என்று குறிப்பிடுகிறார். அவரது வார்த்தையிலிருந்தே, இது அவருக்கு எத்தனை முக்கியமான பிரதி என்பதை உணரலாம்.

    தாயைச் சிறுவயதிலே இழந்த இளைஞன் வாலிபம் மீதூறும் காலத்தில் தாயொத்த வயதுடைய பெண்ணின்மேல் உண்டாகும் காமத்தை, அடக்கியாளத் துன்பப்படும் நிலையே நாவலின் களம்.

    ஃப்ராய்டியம், இடிபஸ் உளச்சிக்கல் என நவீன உளவியல் கூறுகளின் புனைவாக்கமே அசுரகணம் என எடுத்துக் கொண்டு கடந்துவிடாதபடி செய்கிறது, இதன் ராமாயணத் தொன்மத்தின் மீளுருவாக்கப் பிறழ்ச் சித்திரிப்புகள்.

    அவதூதர், பொய்த்தேவு போன்ற நாவல்களில் ஞானத்தை அடைந்த, நிம்மதியை அடைய எண்ணித் துறவு பூண்ட கதாப்பாத்திரங்கள், இடம்பெற்றிருக்கும். அந்நாவல்களை விடவும் க.நா.சுவின் இருத்தலியல்சார் கேள்விகள், விசாரணை எய்தி வெளிப்பாட்டை நோக்கி நகரும் நாவல், அசுரகணம்.

    “ நாதசுர சப்தம் கேட்டால் யாருக்காவது சாவு நினைவுகளாக வருமோ?
    எனக்கு  வருதே என்ன செய்ய?”

    என்றுதான் நாவல் ஆரம்பிக்கின்றது.

    மங்களம் எனக் குறிப்பிட்ட நாதத்தை அமங்களமாக உணரும் இளைஞன் எனத் தொடக்கத்திலே நாவலின் போக்கை உணரத் தருகிறார், ஆசிரியர். தன்னுடைய வித்தியாசமான பார்வையினாலே ராமன் ’செமி (பைத்தியம்)’ என்று வகுப்பு மாணவர்களாலும் பேராசிரியர்களாலும் சுட்டப்படுகிறான். படிப்பில் முதலிடம் என்றாலும் பொது காரியங்களில் ராமனுக்கு அறிவு போதாது என்கிற விவரணைகள் ராமனைச் சிந்தனையாளனாக, தனித்து நிற்கும் புத்தி ஜீவியாக முன்வைக்கிறது.

    இடிபஸ் உளச்சிக்கல் என்பது எந்த இளைஞனுக்கும் இருக்கலாம். ஆனால், அதை ஓர் புத்திஜீவியான இளைஞன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதில்தான் பிரதியின் கனம் கட்டமைகிறது.

    ராமனின் அதிகப்படியான சிந்தனைப் போக்கிற்குத் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளுதல் முக்கியக் காரணமாக அமைகிறது. நடைப் பயணத்தில் அலாதியின்பம் காணும் ராமன், எங்கு சென்றாலும் நடந்தே செல்கிறான். அந்த நடைப் பழக்கமே அவனது சிந்தனைப் பெருக்கத்திற்கு உதவியும் புரிகிறது. மனிதர்களின் பலத்தரப்பட்ட முகவமைப்புகள் பற்றி வியக்கும் பார்வைகளுக்கு மத்தியில் க.நா.சு ராமனை, ஒவ்வொருவரின் தனித்துவமான கழுத்துகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவும் உறுப்புகளில் கூட மனிதர்களிடமுள்ள மாற்றங்களை எண்ணி வியக்கவும் வைக்கிறார்.

    நூல்கள், தங்கை என இரண்டைத் தவிர அவனுடன் உரையாடுவதற்கு யாரும் இல்லை. அவன் அதை உருவாக்கிக் கொள்ளவுமில்லை. தாயைச் சிறுவயதிலே இழந்த பாரதி, தந்தையுடன் ஒருமித்து வாழ முடியாதது போலத்தான் ராமனும் வாழ்கிறான். தான் தன் தந்தையைப் போல் இருந்துவிடக் கூடாதென்ற தவிப்புகள், அவனைத் துண்டாடுகிறது. தன்னியல்பாக நடந்து கொள்ளும் வேளையில் அவனை யாராவது தந்தையைப் போல் நடந்து கொள்கிறாய் என்று சொல்லிவிட்டால் சமநிலை குலைந்துவிடுகிறான்.

    சமநிலை அறுபடுவது, கற்பனையின் பிடியில் அவனைச் சமர்ப்பிக்கிறது. தன்னை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படும் வேளைகளில், அவனைப் ஆட்கொள்ளும் கற்பனை நிஜம் போலவே தோற்றம் கொண்டு ஆளுகை செய்கிறது.

    தன்னிலையின் இயல்பிலிருந்து பிறரைக் காண்பதிலுள்ள சிக்கல், அவர்களும் தன்னைப் போன்றே எல்லாக் காரியங்களையும் சிந்திப்பதாக மயக்கம் கொள்வது. ஆனால் ராமனின் தன்னிலையிலிருந்து எழும் சிந்தனை பிறர் தன்னைப் போல் எதையும் சிந்திக்கவோ அணுகவோ மாட்டார்கள் என்று மயங்குவதாக உள்ளது. தன்னுடைய போக்கை நியாயப்படுத்தும் சுயபச்சபாத உணர்வின், முழுத் தொகுப்பாகவே ராமன் எழுதப்பட்டிருக்கிறான்.

    சாதாரண காரியத்திற்காகச் சென்ற ஓரிடத்தில் கண்டடையும் அசாதாரணத்திலிருந்து மீட்சிக் கொள்ள வழியுண்டா? என அலைகிறது ராமனின் மனம். தன் வகுப்புத் தோழியின் தாயாக இருக்கும் மத்திய வயதுடைய பெண்ணின் அழகு ராமனைக் கொதிப்படையச் செய்கிறது. அவனுலகில் அவளது ரூபம், இயல்விதி கடந்து எங்கும் வியாபித்தலைகிறது. பெருந்தாபம் கனலாகிக் கருத்தில் வெற்றி கொள்ள முனகும் உடலின் கொந்தளிப்பை, பூர்வ கவியின் கற்பனை மாந்தர்களைக் கொண்டு அணைத்துவிட நினைக்கிறார், க.நா.சு.

    ராமன் அவளைச் சூர்ப்பணகையாகவே பார்க்கிறான். தனது இன்ப ஒடுக்கத்தைக் களவாடும் ரவிவர்மனின் மோகினியாகவே கண்டு கலங்குகிறான். இளமையை உடல் களையும் பருவத்தில், மீண்டுமாய் ருதுவெய்திய காலத்து பரிபூர்ண அழகு மேலெழுந்து மெருகேறுவதைக் கண்டு அல்லல் படுகிறான்.

    அவனது மீட்புச் சுயமாய் நிகழமுடியும் என நம்பமுடியாத நிலைக்குப் போய்விடுகிறான். சூர்ப்பணகையின் மூக்கறுக்க லட்சுமணன் வேண்டுமெனத் தேடுகிறான். இல்லாத லட்சுமணனைத் தெரிந்தே வரவழைக்கத் துடிக்கிறான். தாபத்தை மேலும் எரியூட்டி வளர்ப்பதாக உள்ளது, ஹேமாவின் வருகை. ஹேமா அச்சூர்ப்பணகையின் மகள். அவளைத் தான் விரும்புவதாகச் சிந்திப்பதன் பின்னாலும் அவளது தாயே உள்ளதைக் கண்டடைவதோடு நாவல் முடிகிறது. மகளைக் கைப்பிடித்ததால் தாயின்மேல் நாட்டம் விலகியதாகச் சொல்லும் ராமன், ஹேமாவைத் தாயாகப் பார்க்கும் நிலையிலிருந்து தன்னுடைய நிரந்தர போராட்டத்தைத் தொடக்கிவிடுகிறான். தாய் நிலையை மனைவிக்கு வழங்குவதில் மீண்டும் குடிகொண்டுவிடுகிறது ஃப்ராய்டின் தத்துவம்.

    இங்கே கேள்வி, அத்தாய்மைக் கருத்துரு இருவரில் யாருடைய தாயாக உருக்கொள்கிறது என்பதில் மீண்டும் முடிச்சு கிளைவிடுகிறது. நாவல் மறுவாசிப்பிற்கும், புதுதிறப்பிற்கும் கண்டடைதலுக்கும் அழைத்துச் செல்லும் பகுதி, இக்கேள்வியிலிருந்துதான் துளிர்க்கிறது.

    இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை பிராமணச் சமூகத்தில் பெரும்பாலான பெண்களுக்குத் தனது முதல் மகளை, மணம் முடித்து வைக்கும்போது வயது, நாற்பதிற்குள் தானிருக்கும். பண்பாட்டு ரீதியாக மணவயது பொருட்படுத்தப்படாத காலத்தில் இளவயதிலே பெண்கள் பேரப்பிள்ளைகளை எடுத்துவிடுவார்கள். இன்றும்கூட சொற்ப அளவில் பெண்கள் இளவயதிலே தன் இரண்டாம் தலைமுறையைக் காண்பதைப் பார்க்கிறோம். அப்படியான இளவயதுடைய தன்னுடைய வகுப்புத் தோழியின் தாயாக இருப்பதும் அவள் கவர்ச்சிகரமாக இருப்பதுமே ராமனைத் திக்குமுக்காட வைத்ததன், பின்னணி.

    ராமன் என்கிற பெயருக்கு, பதிவிரதன் என்னும் பொருள் சூட்டப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. அந்தத் தேய்வழக்குச் சிந்தனைப் போக்கை (Stereotype mentality) கூறுபோடுவது போல க.நா.சு, ராமனை நாலரை ரூபாய் கொடுத்து விலைமாதுவிடம் காதல் பயின்றதாகக் காட்சிப்படுத்துகிறார்.

    தன் தந்தையை நகல் செய்து வாழக்கூடாதென ராமன் நினைக்கிறான். தந்தையை வெல்லவேண்டுமென்பதே அவனுடைய ஏக்கமாக இருக்கிறது. இங்கு தந்தையை வெல்லுதல் என்பது தந்தையின் குணாம்சத்தை, தான் அறிந்தும் அறியாமலும் சுவீகரித்துக் கொண்டு தளைப்பட்டுவிடக்கூடாது என்பதாகும். ராமனுடைய தந்தை இதிகாசத்தின்படி தசரதன் தானே. தசரதனின் போக இயல்பைத் தானும் பின் தொடர்ந்து யாருக்கும் தளைப்பட்டு (தசரதன் கையேயிடன் தளைப்பட்டதைப் போல்) விடக்கூடாதென்று ராமன் நினைக்கிறான்.

    தசரதனின் போகந்துய்க்கும் பண்பு, நாவலின் தசரதனாகிய நாராயணனிடம் உள்ளதைச் சுட்டிக் காட்டுமிடம் நுட்பமானது. தான் காதல் பாடம் பயின்ற இடத்திற்குத் தந்தையும் அடிக்கடிச் சென்று வருபவர் என்பதால் அவருக்குத் தான் போய் வந்தது தெரிந்திருக்கும் என்கிறான் ராமன்.

    அதற்கு முன்னும் பின்னும் நாராயணின் அச்செயலைப் பற்றி எவ்வித அறவியல் தீர்மானமும் (Moral correctness) ராமனிடமிருந்து வெளிப்படவில்லை. ராமனே அத்தீர்மானப் போக்கிற்கு எதிரான மனநிலை உள்ளவனாகவே தன்னைக் குறிப்பிடுகிறான். இவையாவும் நேரடி கூற்றாகவோ நனவோடையாகவோ இடம்பெறாமல் நுண்வாசிப்பில் வெளிப்படுவது, இந்நாவலின் சிறப்பு. க.நா.சுவின் மறைபிரதி என்று அசுரகணத்தைக் குறிப்பிடுவது சாலத் தகும்.

    அந்தரங்கங்களிலிருந்து தப்பலாம் ஆனால் அந்தரங்கக் கதைகளிலிருந்து தப்புவது என்பது ஞானமடைந்ததாகத் திரிபுற்று சாக்கடைக் குழியில் சவமாகி மிதக்கும் சோமு பண்டாரத்தின் நிலைதான்.

    மானுட வாழ்வுள்ளவரை அவனுக்கு ஒழுக்கவியல் சிந்தனையும் போதிக்கப்பட்ட அறவியலை மீறுவதால் உண்டாகும் குற்றவுணர்வும் உள்ளவரை, அசுரகணங்களை அவன் எதிர்க்கொண்டுத்தான் ஆக வேண்டும். அதை நுட்பமாகவும் எக்காலத்திற்கும் பொருந்துவதாகவும் பிரதியாக்கிய க.நா.சு, இந்நாவலுக்காக என்றும் நினைக்கப்படுவார்.

    க.நா.சுவின் அசுர வார்த்தைகளாலே இக்குறுங்கட்டுரையை நிறைவுச் செய்கிறேன்:

    ”சிறை (புலன்) வாழ்வென்பது சுவடு தேய்ந்த பாதையிலே வளைய வருவதாகும்”.

    முதன்மை நூல்:

    1. க.நா.சு, அசுரகணம், எழுத்து பிரசுரம், சென்னை – 40, முதற்பதிப்பு – 2020.

    துணைமை நூல்:

    1. ஜெயமோகன், நவீனத்தமிழிலக்கியஅறிமுகம் கிழக்கு பதிப்பகம், சென்னை – 14, முதற்பதிப்பு – 2011.

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review): 

    கட்டுரையாளர் அசுரகணம் நாவலைப் படித்துத் தெளிவாக உள்வாங்கி இருக்கிறார். தமிழ் இலக்கிய மரபில் வரும் பெருந்திணை சார்ந்த கதையாடல் இந்நாவலில் வந்திருப்பதை உளவியல் கண்ணோட்டத்தில் இடிபஸ் சிக்கலாக எடுத்துக் கூறுவது சிறப்பு. ராமனுக்கும் அவனது தந்தையாகிய நாராயணனுக்கும் இடையே இருக்கும் குணம் சார்ந்த தலைமுறைப் போக்கிலிருந்து விடுபட என்னும் ராமனின் முயற்சிகளைக் கட்டுரையாளர் மிகவும் கவனத்துடன் உற்று நோக்கி இருக்கிறார். ஒவ்வொரு மகனும் தனது தந்தையின் சாயலில் இருந்து விடுபட்டுத் தனக்கான அடையாளத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிற, போராடுகின்ற மனநிலை இங்குச் சிந்திக்கத்தக்கது. ராமனின் அப்பா பெண் சார்ந்த ஈடுபாட்டில் மயங்கி திரிவதில் இருந்து தான் மீண்டு வர வேண்டும் என்று எண்ணுகின்ற இயக்கப் போக்கு நாவலின் உட்சரடாக இருப்பதை இக்கட்டுரையாளர் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார். க.நா.சுவின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் பாங்கில் இந்தக் கட்டுரை அமைந்துள்ளது.


    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 45

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 45

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமம் என்பது ஒருபுடையன்று

    முன்னுரை

    ‘ஒருபுடை’ என்றால் ஒரு பக்கம் என்பது பொருள். ‘ஒரு பகுதி’ என்பது பொருள். ‘ஒருபுடை’ என்ற சொல் தமிழாசிரியர் மற்றும் பேராசிரியர்களிடம் புழங்கி வருகிறது. எங்கே புழங்கி வருகிறது என்றால் அவர்கள் சொல்லும் உவம விளக்கத்தில் புழங்கி வருகிறது. சான்றாகப் ‘பசுபோல் சாதுவானவன்’ என்றால் பசுவின் இயல்பை மட்டுமே குறிக்குமேயன்றி அதன் தோற்றம், வினை, அதன் பயன்பாடு ஆகியவற்றைக் குறிக்காது என்பதாக அவர்கள் கருதுகின்றனர். அவர்கள் கருதாவிட்டாலும் அதுதான் உண்மை. காரணம் ஒரு பொருளை எதற்கெல்லாம் எப்படியெல்லாம் உவமிக்கலாம் என்பதை முன்னாலேயே வடிகட்டி வைத்திருக்கிறார்கள் நம்முடைய இலக்கண முன்னோர்கள்.  அவர்கள் அனைத்தும் அறிந்து அமைதியாக இருந்தவர்கள். உவம அமைப்பை வினை, பயன், மெய், உரு என வகுத்துவிட்டதனால் அந்தந்த வகையில் அவை முழுமையாகவே செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். இவர்கள் சொல்லுகிற ஒருபுடை என்பது நான்கு வகையுள் ஏதேனும் ஒன்றில் அடங்கிவிடும். ‘புலிபோலப் பாய்ந்தான்’ என்பது வினையுவமம். இதில் ‘ஒருபுடை’ என்ற பேச்சுக்கே இடமில்லை. அதாவது வினைக்கான உவமம் என்றாகிவிட்டதால் அதில் அது முழுமையானது. ‘ஓரளவு பாய்ந்தது’ என்று பொருள் தராது. ‘பால்போலும் இனிமையாகப் பேசினாள்’ என்பது பண்புவமம். ஓரளவு இனித்தாள் என்பது பொருளன்று. முழுமையாக இனித்தாள் என்பதே பொருள். இவள் கற்பில் கண்ணகி என்றால் அது கண்ணகியின் கற்பினை முழுமையாக உவமித்தது. ஓரளவு கற்பு என்றாகாது. அது அறியாமையினால் வந்த மயக்கம். ஒரு பொருளின் எந்தப் பகுதி உவமிக்கப்படுகிறது என்பதை வினை, பயன், மெய், உரு என்னும் பகுப்பே காட்டிவிடுதலின் ‘ஒருபுடை’ என்பது பொருளற்றது என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். பொருளின் அதாவது உவமேயத்தின் ஒரு கூற்றினை விளக்கவே உவமத்தின் ஒரு கூறு கொள்ளப்படுகிறது என்பது கருத்து. இந்த அடிப்படையில் மணிவாசகரின் திருவெம்பாவை, ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை ஆகிய இலக்கியங்களில் காணப்படும் சில உவமப்பயன்பாடுகளின் தனித்தன்மை இக்கட்டுரையில் சுருக்கமாக ஆராயப்படுகின்றது.

    உவமத்தின் முழுப் பரிமாணம்

    பொருள் விளக்கத்திற்காக உவமத்தைப் பொருளோடு நோக்குகையில் எத்தகைய நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைத் திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் தமது புலமைநலம் வெளிப்படக் கூறியிருக்கிறார். இரண்டு குறட்பாக்களின் உவம அமைதி கொண்டும் அவற்றுக்குப் பரிமேலழகர் தரும் விளக்கவுரை கொண்டும் இதனைத் தெளியலாம். எல்லாருக்கும் தெரிந்த குறட்பா,

    “மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர் நீப்பர் மானம் வரின்” (969)

    என்பதாகும். இக்குறட்பாவிற்குத்,

    “தன் மயிர்த்திரளில் இருந்து ஒரு மயிர் நீங்கினும் உயர்வாழாத கவரிமானை ஒப்பார் உயிர் நீக்கத் தான் மானம் எய்தும் எல்லை வரின் அதனைத் தாங்காது இறப்பார்”

    எனப் பதசாரம் எழுதிய பரிமேலழகர்,

    “இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. உயிரும் மானமும் உடன் நில்லாமைக்கண் பின்னும் போவதாய உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய மானத்தை எய்துவர் என்பதாம்.

    உவமை அவர்க்கு அது இயல்பென்பதை விளக்கி நின்றது”

    என்று விளக்கவுரை தருகிறார். இந்த விளக்கவுரையில்தான் அவர் உவமத்தைப் பொருளோடு நோக்கும் நெறிபற்றித் தொல்காப்பியம் சொல்லாததைச் சொல்லுகிறார். என்ன சொல்லுகிறார்? ‘வாழாது’ என்பது உவவமத்தின் வினை. ‘நீப்பர்’ என்பது பொருளின் வினை. அவ்வளவுதான் உவமத்தினால் பெறக்கூடியது. தொல்காப்பிய விதிப்படி பெற வேண்டியது. பரிமேலழகர், சொல்லியது கொண்டு சொல்லாததைப் பெறுவதும் உவமக் கோட்பாடு அல்லது உவமப்பயன் என்று உவமத்தின் முழுக் கொள்ளளவையும் கொண்டுவருகிறார். அது என்ன முழுக் கொள்ளளவு? மயிர் இழந்த கவரிமா உயிரிழப்பது அந்த ஒரு மானுக்கன்று. அந்த மான் வர்க்கத்திற்கே இயல்பு. இந்தக் கருத்து பாட்டில் இல்லை. உவமத்தில் இல்லை. உவமம் இதற்காகவும் சொல்லப்படவில்லை. ஆனால் அழகர் உவமச்சுரங்கத்தில் இறங்கிப் பொருள் மணிகளைக் கொண்டுவருகிறார். யாராவது சான்றோர் என்பது இல்லை. சான்றோர் அனைவருக்கும் பொதுவான இயல்பு மானம் காப்பது. இது பாட்டில் சொல்லப்படாவிட்டாலும் உவமத்திலிருந்து பெறக் கூடிய கருத்து.

    1. மயிர்நீப்பின் கவரிமா உயிர்வாழாது என்பது அவ்வினத்திற்கு இயல்பு.
    2. மானமா? உயிரா? என்றவழி உயிர்கொடுத்து மானம் காப்பது சான்றோர்க்கு இயல்பு.

    வள்ளுவரின் குறட்பாவில் இல்லாத அல்லது சொல்லப்படாத இந்தக் கருத்துக்களை உவமத்தின் முழுப்பரிமாணத்தையும் கொண்டு வந்து உரைசொல்லும் அழகர் எழுதுகிற உரையில் அறிய முடிகிறது.

    “தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
    நிலையின் இழிந்தக் கடை” (964)

    என்னும் குறட்பாவிலும் உவமத்தின் முழுமையான பொருட்பரிமாணத்தையும் வெளிக்கொணர முயல்கிறார் பரிமேலழகர். ‘மயிரனையர்’ என்பதால் இது பொருளுவமம். நிலையின் இழிந்த மாந்தர் என்பது பொருள். தலையின் இழிந்த மயிர் உவமம்.

    “குடிப்பிறந்த மாந்தர் தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனின்று தாழ்ந்த வழி, தலையைவிட்டு அதனின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர்”

    என்பதுதான் இந்தப் பாட்டில் சொல்லப்பட்ட கருத்து. பரிமேலழகர் என்ன செய்கிறார்? ‘இழிந்தக்கடை’ என்னும் சொற்பயன்பாட்டைக் கருத்திற்கொண்டு ‘உயர்ந்த கடை’ (உயர்ந்து நின்ற பொழுது) என்பதை வரவழைத்துக் கொள்கிறார். இந்தக் கருத்து குறட்பாவில் இல்லை. கொண்டு, (தலையினின்றும்) வீழ்ந்தபோது அதன் நிலை இவ்வாறென்றால் (தலையில்) இருந்தபோது அதன் நிலை என்ன என்பதைச் சிந்திக்கிறார். சிந்திக்கவே சொல்லப்பட்ட பொருளுவமத்தின் பொருட்பரிமாணத்தை இன்னும் ஆழமாக்கி,

    “அந்நிலையை விடாது நின்றவழிப் பேணப்படுதலும் விட்டுத் தாழ்ந்தவழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்”

    என்றும் எழுதுகிறார். அழகரின் இந்த நுண்ணியம் அழகருக்கே உரியது. மேலும் உவமத்தைப் பொருளோடு பொருத்துகிறபோது இலக்கண வரையறையைத் தாண்டியும் படைப்பாளனின் உள்ளத்தை ஊடுருவிச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தையும் எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. உண்மையில் ஒருபுடை ஒப்புமை என்றால் அழகரின் ஆய்வு ‘உரிமை மீறலுக்கு’ உரியதாம் என்க.

    திருப்பாவையில் பெய்த மழை

    பொருளை உவமிக்கிறபோது அணுஅணுவாக அனுபவித்து உவமித்திருக்கிறார்கள் சான்றோர்கள். முந்தைய பத்திகளில் எடுத்துக்காட்டப்பட்டனவெல்லாம் உரையாசிரியர் அதனைக் கையாள்கிற முறை பற்றியது. ஆனால் ஆண்டாள் நாச்சியாரும் மணிவாசகப்பெருமானும் பாடிய பெருமக்கள். படைப்பாளர்கள். இவர்களுள் நாச்சியார் பாடிய திருப்பாவையுள் ஒரு பாடலில்  உவமத்தைப் பொருளாக்கி உரைக்கிறார். மற்றொரு பாடலில் உவமத்தின் ஒவ்வொரு அசைவையும் பொருளுக்கேற்றியுரைக்கிறார். அதாவது ‘பொருளே உவமம் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும்’ (1239) என்னும் தொல்காப்பியத்தையும் கடைப்பிடிக்கிறார். உவமத்தின் வண்ணனைகளையும் செயல்பாடுகளையும் அப்படியே முழுமையாகப் பொருளுக்குப் பொருத்திக் காணவேண்டும் என்ற உவமக் கோட்பாட்டினை முன்னெடுத்து ‘ஒருபுடை ஒப்புமை’ என்னும் கருத்தியலை முற்றிலுமாக நிராகரிக்கிறார்.

    “ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
    ஆழியுள் புக்கு முகர்ந்துகொ டார்த்தேறி
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
    பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
    ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
    வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
    மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!”

    இந்தப் பாட்டில் பெண்கள் மழைக்கண்ணனாகிய வருணனை விளித்து ‘பெய்திடாய்’ என்று வினைமுடிபு செய்கிறார்கள். செயப்படுபொருள் மழை. இந்த மழை எப்படிப் பெய்ய வேண்டும் என்று அவர்கள் விவரிக்கிறபோது பெருமாளின் தரிசனம் முழுமையாகக் கிட்டி விடுகிறது என்பதை உணரலாம். மழை எப்படிப் பெய்ய வேண்டுமாம்? நாச்சியார் சொல்கிறார்.

    1. ஆழியுள் புக்கு, நீரை முகந்து, ஆர்த்து, வான்வெளியில் ஏறி வருதல் வேண்டும்.
    2. ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுக்க வேண்டும்.
    3. பத்மநாபன் வலக்கையில் உள்ள சக்கரத்தைப் போல மின்னுதல் வேண்டும்.
    4. அவன் இடக்கையில் உள்ள சங்கின் நாதத்தைப் போல முழக்கம் வேண்டும்.
    5. சார்ங்கம் என்னும் வில்லினின்றும் பாயும் அம்புபோலப் பெய்தல் வேண்டும்.

    சங்கு, சக்கரம், சார்ங்கம் என்னும் மூவகை ஆயுதங்களையும் உவமையாகச் சொல்லிப் பொருளாகிய மழையின் வினையை வரன்முறை செய்கிறார் நாச்சியார். உவமமயக்கமோ பொருள் மயக்கமோ ஏதுமின்றிப் பொருளின் ஒவ்வொரு வினைக்கும் பொருத்தமான உவமவினைகளை நிரல்படுத்திவிடுகிறார். திருப்பாவை இலக்கியத்தின் தனிப்பயன் நல்ல கணவன். பொதுப்பயன் நாட்டிற்கு நல்ல மழை. ஆதலின் உவமத்தைப் பொருளாக்கியுரைத்தார் என்க. ‘ஊழிமுதல்வன் உருவம்போல்’ மெய்கறுத்து என்றவழி மெய் உவமமும், உரு உவமமும் ‘ஆழிபோல் மின்னி ‘வலம்புரிபோல்’ நின்றதிர்ந்து என்றவழி வினையுவமமும் ‘சரமழைபோல்’ என்றவிடத்துப் பயன் உவமையும் அமைந்து மரபுவழி உவமக்கோட்பாட்டை வலியுறுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன.

    திருவெம்பாவையில் பெய்த மழை

    திருப்பாவையில் நாச்சியார் உவமத்தைப் பொருளாக்கிப் பொருளை உவமமாக்கியதைப் போலவே மணிவாசகப் பெருமானும் பாடியிருக்கிறார். மழையைப் பற்றிப் பாடுகிற இவ்விரண்டு பாடல்களிலும் இவ்வாறு பொருளே உவமமாகியிருப்பது நோக்குதற்குரியது.

    “முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
    என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
    மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
    பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
    என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
    தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
    முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
    என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்”

    “மேகமே! முதலில், இந்தக் கடல்நீரை உட்கொண்டு, மேல் எழுந்து, – எம்மையுடையாளாகிய அம்மையினது திருமேனி போல நிறத்தோடு விளங்கி, எம்மை அடிமையாகவுடையவளது,  சிற்றிடை போல மின்னி விளங்கி, எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த, – பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து,  அவளது திருப்புருவம் போல,- வானவில்லிட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய, அவ்வன்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கோமான் -எங்கள் தலைவனாகிய இறைவனது,  அடியார்களுக்கும், நமக்கும் – பெண்களாகிய நமக்கும், அவள் திருவுளங்கொண்டு,  முந்திச் சுரக்கின்ற இனிய அருளே போன்று, பொழிவாயாக!”. என்பதே இப்பதிகத்தின் பொருளாம். திருப்பாவையில் கண்டது போலத் திரும்வெம்பாவையில் காணும் உவமங்களைப் பொருளொடு பொருத்தினால்,

    1. உமாதேவியின் மேனி போல் மேகம் கறுக்க வேண்டும்.
    2. அம்மையின் இடைபோல மின்னல் தோன்ற வேண்டும்.
    3. அவள் காற்சிலம்புபோல இடி ஒலிக்க வேண்டும்.
    4. அப்போது தோன்றுகிற வானவில் அவள் திருப்புருவம் போல் திகழவேண்டும்.
    5. சிவபெருமானுடைய அருள் பொழிவதுபோல மேகம் மழையாகப் பொழிய வேண்டும்.

    உமாதேவியின்  திருமேனி  நீல நிறமாகும். பெண்களது  இடைக்கு  மின்னலை உவமமாக்குவது இலக்கிய மரபு.  இறைவன் அம்மையின் மூலமாகத்தான் உயிர்களுக்கு அருளுவானாதலின், ‘அவள் அன்பர்க்கும் நமக்கும் முன் சுரக்கும் இன்னருளே!’ என்ன’ என்றனர். இது, நீராடச் சென்ற பெண்டிர் பொதுப்பயனாகிய மழையை வேண்டிப் பாடியதாம்.  இதனால், இறைவன் சத்தி மூலமாக மெய்யடியார்களுக்கு அருளை வழங்குவான் என்பது கூறப்பட்டது.

    உவமத்தின் செயலணுக்கள்

    ‘உவமையால் பெற்றாம்’ என்னும் பரிமேலழகரின் தொடர் உவமத்தை எப்படி நோக்க வேண்டும்? நோக்கிப் பொருளோடு அதனை எப்படிப் பொருத்திப் பார்க்க வேண்டும்? என்ற புதிய நெறியைத் தமிழுக்கு வழங்கியிருக்கிறது. ‘பெற்றாம்’ உற்றுநோக்கிப் பெறவேண்டியது கற்பார் கடன்! உவமத்தின் பரிபூரணத்தை உணர்ந்தாலேயொழிய பொருளின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள இயலாது. அத்தகையதொரு உவமச் சித்திரிப்பை நாச்சியார் காட்டுகிறார்.

    “மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
    வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
    மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
    போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
    கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
    சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
    காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!”

    பள்ளிகொண்டிருக்கிற திருமாலை ஆயர்குலத்துப் பெண்கள் துயில் எழுப்புகிறார்கள்.  மேலே கண்ட பாடல்களில் பொருளை உவமமாக்கியும் உவமத்தைப் பொருளாக்கியும் ‘இது போல இது’ என்னும் விளக்கத்தோடும் (உவம விரியாக) பாடிய பெண்கள் இந்தப் பாட்டிலே உறங்கும் பெருமாளுக்குச் சிங்கத்தை உவமமாக்கி அதன் வினையை மட்டும் பாடுகிறார்கள். ‘படுத்திருக்கும் சிங்கம் எழுந்து வந்தாற்போலப் பள்ளிகொண்ட பெருமாள் எழுந்து வந்தான்’ என்று ஒரே தொடரில் உவமத்தைப் பொருளோடு பொருத்திக்காட்டிவிடலாம். ஆனால் நாச்சியார் உறங்கும் சிங்கத்தின் ஒவ்வொரு அசைவையும் நுணுகிக் கண்டு அனுபவித்துப் பாடுகிறார். உவமத்தையும் பொருளையும் முற்றுமாகப் பொருத்திக்காட்டும் உவமக்கோட்பாட்டை வலியுறுத்துவது இந்தக் கட்டுரையின் முதல் நோக்கமெனின் இந்தக் கட்டுரையின் இரண்டாவது நோக்கம் இப்படி அமைகிறது. அதாவது உவமத்தின் ஒவ்வொரு அசைவையும் நுண்பகுதிகளையும் உற்று நோக்கியுரைத்துக் கற்பாரை அவற்றைப் பொருளோடு பொருத்திப் பார்க்கத் தூண்டுவது. ‘ஒருபுடை உவமம்’ என்னும் தொடர் வெற்றசையாக வெளிறி நிற்பது இங்கேதான்.

    பாட்டு முழுமையும் உவமமாகிய சிங்கத்தின் செயல்பாடுகளே நிரல்படுத்தப்படுகின்றன. ஆராயப்படுகின்றன. ‘மாரி மழை’ என்றால் மழைபோலப் பனிவிழும் மார்கழி என்பது பொருள். முன்னொரு பாசுரத்தில் ‘பனித்தலை வீழ’ என்றதும் அது. ‘முழைஞ்சில்’ என்றால் குகை. குகையில் படுத்திருக்கும் சிங்கம் எப்படிப் படுத்திருக்கிறது. ‘மன்னிக் கிடந்து உறங்குகிறது’. கடுங்குளிரில் தன் பெடையொடு செயலின்றி உறங்கும் சிங்கம் என்பது பொருள். மன்னி என்பதற்குச் சோம்பலை அள்ளிப் பூசிக்கொண்டு உறங்குகிறது என்று எழுதுவார் வியாக்கியாணக்கார். மழைக்காலம் முடிந்த நிமித்தங்கள் கண்டு, அதுவரை அசையாமல் இருந்தது – திடீரென்று உயிர் வந்ததுபோல் அசைந்து, உறங்கிய பின் பார்க்கிற முதல் பார்வையாகையால் சிறிது சிவந்து விழித்த விழிகள் – வேரி மயிர் பொங்க –என்றால் பரிமளம் என்கிற விலங்கினத்திற்குரிய மணம் கமழ – பிடரி மயிர்களை உதறி, வெப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து – உடம்பில் இன்னமும் ஒட்டியிருக்கும் சோம்பலை உதறுகிறதாம். முன்னங்கால்களை நீட்டி உடம்பை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்து, பின் பின்னங்கால்களை நீட்டி மறுபடியும் உடம்பை இழுத்து சோம்பலை உதறுகிறதாம். பிறகு முழங்கி வேட்டையாடக் கிளம்பும் சிங்கத்தைப்போலே என்று சொல்கிறார்கள் பெண்கள். ‘நான் என்ன சிங்கம் மாதிரி கருணை இல்லாமலா இருக்கிறேன்? பெருமாள் பார்க்க, (பார்ப்பதாக இவர்கள் எண்ணம்)  சிங்கத்தை உன் பெருமிதத் தோற்றத்திற்காகவே உவமித்தோம் என்பார், ‘பூவைப்பூவண்ணா!’ என்று தலைகீழாக மாறிப் பேசுகிறார்கள். காளையின் வீறுகொண்ட நடையும் வேழத்தின் பெருமிதமும் புலியின் சினமும் சிங்கத்தின் சாமர்த்தியமும் கொண்ட அரங்கனின் நடையழகை அனுபவித்துப் பாடுகிறார்கள் பெண்கள். வந்த காரிய நோக்கத்தைச் சொல்வதற்கு முன் இங்கே எழுந்து வந்து நாங்கள் வந்த காரியத்தை ஆராய வேண்டும் என்று வேண்டுகிறார்கள். என்ன காரியம் என்பதனைச் “சிற்றஞ் சிறுகாலே’ என்னும் அடுத்த பாட்டில் வைத்தார்கள்.

    பாட்டில் சிங்கம் உவமம். அரங்கன் பொருள். அரங்கன் செய்ய வேண்டும் வினைக்கு சிங்கத்தின் வினைகள் உவமம். எனவே வினையுவமம். இந்த வினையுவமத்தில் ஒருபுடை என்ற பேச்சுக்கே இடமில்லை. அரங்கனைப் பற்றி ஓர் அசை கூடச் சொல்லாமல் அத்தனைச் செயல்பாடுகளையும உவமமாகிய சிங்கத்திற்கே நுண்துகளாக நோக்கி உரைத்தார். கவிதையாய் ஆக்கியுரைத்தார் நாச்சியார்.

    “சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமாப் போலே”

    என்பன உவம வண்ணனை. ‘அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து, உதறி, மூரி நிமிர்ந்து, முழங்கிப், புறப்பட்டுப் போதருமாப் போலே” என்னும் அத்தனை எச்சங்களும் உவமத்தின் தொடர் நிகழ்வுகள். எனவே அத்தனையும் பொருளான அரங்கனுக்கானவை. ‘போந்து, அருளி, காரியம் ஆராய்ந்து அருளேல்’ என்பது பொருளாகிய  அரங்கனுக்கானவை. ‘போந்து அருளி ஆராய்ந்து என்னும் எச்சங்கள் ‘அருள்க!’ என்னும் வினைமுடிபு கொண்டன. இந்தச் செயலைச் செய்வதற்கு முன்னாலே அரங்கன் எப்படி எழுந்து வந்தான் என்பதை உவமத்தைக் கொண்டு அனுமானிக்க வேண்டியது அறிவார் கடன்! அரங்கன் அருளையும் ஆண்டாள் அருளையும் வேண்டுவார் கடன்!

    நிறைவுரை

    வினை, பயன், மெய், உரு என உவமப் பயன்பாட்டின் நோக்கத்தை நான்காகப் பிரித்திருக்கிறார்கள். காரணம் அத்தகைய பிரிவு பிரிவின் அடர்த்தியைத் துல்லியமாக நோக்கி உவமத்தைச் சிறக்கச் செய்வது. அதனால் பொருளின் பரிமாணத்தை மேலும் புலப்படச் செய்வது. காட்டலாகாப் பொருளாகிய இறைவனுக்குத் திருவள்ளுவர் அகர ஒலியை உவமமாக்கிய நுண்ணியமும் ‘காணப்பட்ட உலகத்தினின்றும் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் ‘ஆதிபகவன் முதற்றே’ என உலகின் மேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க’ என்னும் அழகரின் உரையாழமும் ஈண்டு நினையத்தகுவன. மேற்கண்ட பத்திகளில் உவமத்தையும் பொருளையும் ஒவ்வொரு கூறாகப் பொருத்திக் காட்டிய ஒன்றும் உவமத்தை மட்டும் கூறு கூறாக விளக்கி அதன்வழிப் பொருளைப் புலப்படச் செய்த மற்றொன்றும் காட்டப்பட்டன. இவ்விரண்டு நெறிகளிலும் ‘ஒருபுடை’ என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். உவமம் அழகியல் சார்ந்தது மட்டுமன்று. பொருண்மையின் நுண்ணியம் துலக்கும் கருவியுமாகும்!.

    (தொடரும்…)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 44

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 44

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘கூம்பேறும் பறவை’ குலசேகர ஆழ்வார்

    முன்னுரை

    தமிழில் இலக்கண விளக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் உவமங்களுக்கும் இலக்கியப் பொருண்மை புலப்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் உவமங்களுக்கும்  தனித்தனி இயல்புகள் உண்டு. இது தனி ஆய்வுக்கு உரியது. உயிரோடு மெய் கலப்பதற்கு ‘அப்போடு கலக்கும் உப்பு’ என்பது இலக்கண உவமம். நல்லவரோடு நல்லவர் கலந்துரையாடுவதற்கு ‘நற்றாமரைக் குளத்தில் நல்லன்னம் சேர்வது’ என்பது இலக்கிய உவமம். முன்னது அறிவு சார்ந்தும் பின்னது உணர்வும் அழகியலும் சார்ந்ததுமாகும். ஆனால் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் உவமங்கள் இவற்றினும் வேறாகி அமைகின்றன. காரணம் பக்தியுணர்வு அகப்புற உணர்வுகளினின்றும் மாறுபட்டு நெகிழ்ச்சியை மட்டுமே மையமாகக் கொண்டிருப்பதே. இது பற்றிய சில கருத்துக்கள் முந்தையக் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தன. வைணவப் பாசுரங்களில் தனித்து விளங்கும் குலசேகர ஆழ்வார் எழுதிய பெருமாள் திருமொழியில் உருக்கும் சில உவமங்களை இக்கட்டுரை ஆராய்வதாக அமைகிறது.

    குலசேகர் ஆழ்வாரின் உள்ளமும் உவமமும்

    ‘அரற்றுதல்’ என்பது ஒன்று. அனுபவித்தல் என்பது மற்றொன்று. சைவத் திருவடியார் நால்வரும் அரற்றியவர்கள். அவ்வரற்றுதலில் இறைவன் மேனியழகைக் கண்டு அனுபவிப்பது என்பது அளவால் குறைவு. குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும்’ என்பது போன்ற பாடல்கள் சைவத்தில் குறைவு. ‘ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்’ என்பது போன்ற அரற்றலே மிகுதி. வைணவத்தில் இறைவனின் திருமேனி அழகைப் “பச்சை மா மலைபோல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்” என்று ஒவ்வொரு துளியாகச் சுவைத்து அனுபவித்துப் பாடித் தாமும் மயங்கிக் கற்பாரையும் மயக்குவர்.

    ‘தன்னைக் கைவிடலாகாது காத்தல் வேண்டும்’ என்பதே பொதுவான அடியவர்தம் வேண்டுகோளாயினும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் வேண்டுகிற முறையில் வேறுபாடு உண்டு. குலசேகரர் வித்துவக் கோட்டு அம்மானிடம் வைக்கின்ற வேண்டுகோள் கைவிடலாகாது என்பதேயாயினும் அதற்காக அவர் காட்டுகின்ற உவமங்கள் பல திறத்தன. பாசம் நிறைந்த உறவுகளைக், கடமை தவறாத பணியாளர்களை, முறைதவறா மன்னர்களைச், சிறகடித்துப் பறக்கும் பறவைகளைக், கடலை மறக்காத ஆறுகளை எல்லாம் மையமாக வைத்து உவமம்  சொல்கிறார். இறுதியாகப் பற்றற்ற நிலையில் தான் விரும்பாச்  செல்வம் நிழலைப்போல் தன்னைத் தொடரும் என்று செல்வத்தையும் பெருமாளுக்கு உவமமாக்கியுரைக்கிறார்.

    பெருமாளைத் தாயாக்கிய ஆழ்வார்

    அரசியல் தலைவர்களில் தொடங்கி ஆண்டவன் வரை அனைவராலும் பயன்படுத்தப்படுகிற உவமம் தாயும் சேயும். தாய் அன்பின் வடிவம். தந்தை அறிவின் வடிவம். தாயன்புக்கு வரம்பில்லை. தந்தையின் அன்பின் வரம்பு வெளிப்படத் தெரிவதில்லை. தாய் குழந்தையை மறப்பதில்லை, இயலாது. வள்ளற்பெருமான் தன்னை  மகவாகவும் இறைவனைத் தாயாகவும் வைத்துப் பாடுகிறார்.

    “பெற்றதம் பிள்ளைக் குணங்களையெல்லாம்
    பெற்றவர் அறிவரே அல்லால்
    மற்றவர் அறியார் என்று எனை ஈன்ற வள்ளலே!”

    “பெற்றதாயை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
    …………………………………………………………………
    நற்றவத்தவர் உள் இருந்து ஓங்கும்
    நமசிவாயத்தை நான் மறவேனே!”

    என்றெல்லாம் வள்ளற் பெருமான் தன்னைச் சேயாகவும் இறைவனைத் தாயாகவும் உருவகித்தும் உவமித்தும் பாடுவதைப் போலவே குலசேகரரும் பாடுகிறார்.

    “அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள்தன்
    அருள் நினைந்தே அழுங்குழவி அதுவே போன்றிருந்தேனே” (688)

    ‘அரிசினம்’ என்பது அரிதாக வருகின்ற சினம் என்பது பொருள். ‘அளவுகடந்த சினம்’ என்பது பொருள். ‘பெற்ற தம் பிள்ளை’, ‘ஈன்ற தாய்’ என்னும் பெயரெச்ச அடைகள் எல்லாம்  அவர்தம் அருமை உணர்த்தி நின்றன. அவர் அவ்வாறு செய்யமாட்டார் என்பதாம்! எனவே இறைவனும் தம்மை வெறுக்காது அணைப்பன் என்பது கருத்து. ‘அம்மை நீ! அப்பன் நீ’ எனத் தாய்க்கு முதன்மை தந்து பாடிய அப்பர் நினைவுக்கு வருவார். இந்தப் பாட்டில் ஒரு நுண்ணியம் உணரப்படுகிறது. குழந்தை இரண்டு வகையாக அழுகிறது. அடி தாங்காமல் அழுவது ஒன்று. அடிக்கின்ற தாயின் அருள் வேண்டி மற்றொன்று. ‘அழுகை’ மாறாதது. ஆனால் உனக்கு வேண்டியது என் அழுகைதான் என்றால் நான் உன் அருளுக்காக அழுகிறேன் என்பது கருத்து. ‘மறந்தாலும்’, ‘அகற்றிடினும்’ என்னும் உம்மைகள் எதிர்மறை.

    கொண்டானை அன்றிப் பிறரை அறியாக் குலமகள்

    தமிழிலக்கிய உலகில் சேதாரமில்லாது சிந்தையில் நிற்கும் பாத்திரங்கள் இரண்டு. அவையிரண்டும் ஆண் பாத்திரங்கள். சிந்தையில் நிற்பதற்கு அவர்களின் ஒழுக்கச் சிதைவே காரணம். ஒருவன் இராவணன். இவன் இராமாயணத்தின் எதிர்நிலைப் பாத்திரம். மற்றொருவன் கோவலன். இவன் சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தலைவன். காப்பியத்தில் தலைவிக்கே முதலிடம் ஆதலின் இவனுக்குக் காப்பியத் தலைமையில்லை என்பதும் அறிஞர் சிலருடைய வாதம். இவ்விரண்டு பாத்திரங்களாலும் இவர்தம் மனைவியராகிய மண்டோதரியும் கண்ணகியும் வானுயர்ந்து நிற்கிறார்கள்.

    மண்டோதரியும் கண்ணகியும்

    கம்பன் படைத்த பாத்திரங்களுள் கம்பனையே படைத்த பாத்திரமாகி நிற்பவள் மண்டோதரி. சீதையைத் தேடி இலங்கை செல்லும் அனுமன் இராவணன் அருகில் உறங்கும் மண்டோதரியைச் சீதையென்று கருதி மயங்கினான் என்கிற அளவுக்கு மண்டோதரியின் பாத்திரம் உயர்ந்தது.

    “இன்ன தன்மையின் எரிமணி விளக்கங்கள்
    எழில்கெடப் பொலிகின்ற
    தன்னது இன்னொளி தழைப்புற துயில் உறு
    தையலைத் தகைவு இல்லாள்
    அன்னள் ஆகிய  சானகி இவள் எனஅயிர்த்து,
    அகத்தெழுதீ வெந்தீ துன்னும் ஆருயிர் உடலொடு சுடுவது
    ஓர் துயர் உழந்து”

    என்பது கம்பன் வாக்கு. மண்டோதரி இராவணனை எதிர்த்துத் தன் கருத்துக்களைக் கூறியதாக இராமாயணத்தில் பதிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இராவணனுக்கு வரவிருக்கும் பேரழிவை முன் உணர்ந்தே அவள் நிகழ்வுகள் அமைகின்றன. இந்திரசித்தன் மறைந்தபோது,

    “அஞ்சினேன் அஞ்சினேன் சீதையென்ற  அமிழ்தால் செய்த
    நஞ்சினால் இலங்கைவேந்தன் நாளைஇத் தகையன் அன்றோ?”

    என்று புலம்பிய மண்டோதரியைக் காணமுடிகிறது. மேற்கண்ட தரவுகளால் இராவணனைக் கண்டார்கள்  இகழ்ந்தாரன்றி மண்டோதரி இகழவில்லை. ஆனால் கோவலனைக் கண்டார்  இகழ்ந்தார்கள். கண்ணகியும் இகழ்ந்திருக்கலாம். ஆனால் இல்லற நெறி இழந்ததைத்தான் அவள் பெரிதாகக் கண்டாள் என்பதை அறிந்து கொள்ள முடியும். “போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’  என்னும் தொடரில் அமைந்துள்ள ‘ஒழுக்கம்’ என்னும் சொல் அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஓம்புதல், துறவோர்க்கு எதிர்தல், விருந்தெதிர் கோடல் என்னும் இல்லற நெறிகளே.

    காப்பிய மகளிரும் குலசேகர ஆழ்வாரும்

    இராவணனும் கோவலனும் மிக உயர்ந்த பண்புகளைப் பெற்றிருந்தும் ஒழுக்கச் சிதைவு காரணமாக அவர்தம் பெருமையினை இழந்தனர். கண்டவர் இகழ்வது இருக்கட்டும் அவ்விரு காப்பியங்களைப் படிக்கின்றவர் இன்றைக்கும் வேதனைப்படுகிறார்கள் அவர்களை நினைத்து. இருப்பினும் அக்காப்பிய மாதர் இருவரும் தம் கணவன்மாரை வெறுத்தார் இலர். இராவணன் இறந்தவுடனேயே மண்டோதரியும் களத்திலேயே உயிர்விடுகிறாள். கண்ணகியோ கணவன் பழி துடைக்கிறாள். ‘போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’ எனத் தன் மனைவியினாலேயே நோக்கப்பட்டவன் கோவலன். ஆழ்வாரின் ‘கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்’ என்ற தொடருக்குப் பொருத்தமானவர்களாகவே அவ்விரு பெண்களும் திகழ்கிறார்கள் என்பது கட்டுரையாளர் கருத்து.

    “கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
    கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்” (689)

    என்னும் உவமத்தில் வரும் ‘குலமகள்’ என்பது நுண்ணியமிக்க சொல்லாட்சி. இந்த இடத்தில் நல்லகுடிப் பிறப்பை மட்டும் அது குறிப்பதாகக் கொள்ளாமல் கணவனையன்றிப் பிற ஆடவர் மனத்திலும் புகாத உயரொழுக்கத்தைக் குறித்ததாகக் கொள்ளலாம். கண்டறிதல், கேட்டறிதல் என்னும் இருவகை அறிவில் எந்த  அறிவாலும் கணவனைத் தவிர பிற ஆடவரை அறியாதார் என்பது கருத்து. இகழ்வன என்னும் பன்மை வினையாலணையும் பெயர் கணவன் செய்த தொடர் நிகழ்வுகளைக் குறித்தது. ‘அத்தனையும் தாங்கி அவனையே கொண்டொழுகும் பத்தினியர் போலத் தானும் திருமாலையன்றி வேறொருவனை எண்ணேன்’ என்பதாம். ‘நீ கொண்டு ஆளாகியிலும்’ என்னுந் தொடர் மனைவியைக் கொண்டு செலுத்த வேண்டிய கணவன் அவ்வாறு செலுத்தாவிடினும் அவனை நம்பி வழிபடும் மனைவியைப்போல் தான் என்பதை உணர்த்தி நின்றது. ‘குலமகள்’ தன் கணவனை மட்டுமே அறிவாள் என்றதால் ஆழ்வார் பெருமாளையன்றிப் பிற தெய்வம் அறியார் என்பது குறிப்பு. இனி, இகழ்வன செய்யும் கணவனுக்குப் பெருமாள் உவமம் ஆனதால் ஆழ்வார் மனைவியாகிறார். எனவே இந்தப் பாட்டில் ‘கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்’ என்னும் துறைக்கருத்து இழைய, நாயக நாயகி பாவம் முன்னெடுக்கப்பட்டது என்க. இது வள்ளற் பெருமான் பாடிய ‘இங்கித  மாலையோடும் மகாகவி பாடிய கண்ணன் பாட்டோடும் ஒக்கும்.

    மன்னனை நோக்கும் மக்கள்  மருத்துவனை நோக்கும் நோயாளி!

    திருக்குறள் பொருட்பாலின் தலையதிகாரமே இறைமாட்சி என்பதாகும். நாட்டை ஆளுவது என்பது அதிகாரப் பீடம் என்பதை விட்டு மக்களுக்குத் தொண்டு செய்வதற்கான வாய்ப்பு என்பதைக் கருத வேண்டும். இது மன்னராட்சிக்கும் பொருந்தும் மக்களாட்சிக்கும் பொருந்தும். ஓச்சுதல் கடிது போலத் தோன்றினாலும் எறிவது மென்மையாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் காட்டும் மாட்சி. இறைமாட்சியுள் அமைந்த பத்து குறட்பாக்களில் முன்னவை ஐந்தும் மன்னனின் தகுதி பற்றியன. பின்னவை ஐந்தும் மன்னனின் பண்பு பற்றியன.

    1. காட்சிக்கு எளியன் கடுஞ்சொல் அல்லன்
    2. இன்சொலால் ஈத்து அளிக்க வல்லான்
    3. முறைசெய்து காப்பாற்றும் மன்னன்
    4. செவிகைப்பச் சொல் பொறுக்கும் வேந்தன்
    5. கொடை, அளி, செங்கோல், குடியோம்புபவன்

    முந்தைய தகுதிகளை அதிகாரத்தை மையமாக்கி ஒரு மன்னன் செயல்படின் மக்கள் துன்புறுவர்.. பிந்தைய பண்புகளை, மக்களை மையமாக்கி ஒரு மன்னன் செயல்படின் மக்கள் இன்புறுவர். முன்னது நடக்கும் காலத்திலும் அம்மக்கள் பிந்தைய காலம் வராதா என ஏங்கி நிற்பர். அதனைத்தான் குலசேகர ஆழ்வார் உவமமாகப் பயன்படுத்துகிறார்.

    “தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
    கோல்நோக்கி வாழும் குடிபோன்றிருந்தேனே” (690)

    மன்னன் மக்களுக்குச் செய்கிற துயர் அதிகாரத்தினால் வருவது. இறைவன் அடியவருக்குத் தரும் துன்பம் அவனைப் பக்குவப்படுத்துவது. அல்லது வினைவழி வருவது. கொடுங்கோல் ஆட்சி செய்யும் மன்னனின் அன்பையே மக்கள் எதிர்நோக்குவர். அதுபோலத் திருவடிப் பேறு வேண்டி நிற்பார் இத்தகைய துன்பங்களையும் இன்னல்களையும் பொருட்படுத்தாது அவற்றின் நோக்கமறிந்து செயல்படுவராதலின் இடர் தரும் இறைவனையே எதிர் நோக்குவர் என்பதாம். துன்பம் தருபவனையே எதிர்நோக்கும் இரண்டு சூழல்களில் ஒன்று நாட்டை ஆளும் மன்னனிடம் அன்பை எதிர்நோக்குவது. இரண்டு சிகிச்சையில் துன்பம் தரும் மருத்துவனையே நம்பி அவனையே எதிர்நோக்குவது.

    “வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
    மாளாத காதல் நோயாளன் போல்” (691)

    எதிர்வினையைக் கருத்திற் கொள்ளாது மக்களை வாட்டும் மன்னனை ஒதுக்காமல் அவனை அவனுடைய செங்கோலையே எதிர்பார்த்து வாழும் மக்களை உவமமாகச் சொன்ன ஆழ்வார் இந்தப்பாட்டிலும் ‘கொடுமை’ செய்யும் மருத்துவனையே நேசிக்கும் நோயாளியை உவமமாக்குகிறார். இந்தப் பாட்டில் ‘அறுப்பது’ ஒரு வினை. ‘சுடுதல்’ மற்றொரு வினை. அறுவைச் சிகிச்சை என்பது இவ்விரண்டும் இணைந்ததே. நோயாளி தன் உடல் அறுக்கப்படும்போதும் அல்லல் உறுகிறான். அறுத்த இடத்தில் சுடப்படுகிறபோதும் அல்லல் படுகிறான். எனவே ‘அறுத்து’ என்பது எச்சமாகாது தனித்த வினையைக் குறித்தது.

    நோய் தீர்ந்தவுடன் மருத்துவனை மறந்துவிடுதல் இயல்பு. ஆனால் இந்தப் பாட்டில் நோய் தீராமலேயே அவன்பால் தீராத காதல் உடைய நோயாளன் என்கிறார். அறுவைச் சிகிச்சை உடலுக்கானது. அதற்குத் தீர்வு காணும்வரை அவன்பால் வைத்திருக்கும் அன்பு குறையாது. எனவே அது நீளும். அதனால் மாளாத அன்பு என்றார். பிறவி நோய் தீர்ந்து திருவடிப்பேற்றுக்காக இறைவன் தரும் சோதனைகள் தாங்கொணாவாக இருப்பினும் அவன் மேல் கொண்டிருக்கும் அன்பு ‘மாளாது’ என்பது பெறப்படும். அடித்து மேய்ப்பவனே அணைத்து மீட்பான் என்பது கருத்து.

    தொடர்ந்து சுட்டெரிக்கும் வேறொரு பொருளையும் சுட்டெரிக்கும் அதனையே விரும்பும் மற்றொரு பொருளையும் இணைத்து உவமம் கூறுகிறார் ஆழ்வார். கதிரவனுக்குத் தாமரை மலரும் என்பது இயற்கையும் கவிமரபும் ஆகும். இந்த மரபுகள் கவியின்பத்திற்காக மாற்றப்படுவது உண்டு. ‘சுடர் மின்னற் கண்டு தாழை மலர்வது போலே உனைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே’ என்பதும் ‘தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க’ என்பதும் மரபு காத்த திரையிசைப்பாடல் வரிகள்.

    “செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம்
    அந்தரஞ்சேர் வெங்கதிரோற்கல்லால் அலராவால்” (693)

    கதிரவன் கனன்றாலும் தாமரை அதற்கே மலர்வது போலத் தானும் பெருமாளுக்கே மகிழ்கிறார் என்பது கருத்து. கொடுங்கோல் மன்னனால் வரும் துன்பத்திற்குக் காரணம் ஏவுதற் கருத்தா. மருத்துவனால் வரும் துன்பத்திற்குக் காரணம் இயற்றுதற் கருத்தா. இவையிரண்டிலிருந்தும் மாறுபட்டுத் துன்பம் தருவது கதிரவன். அது அந்தரத்தில் நிற்கிறதேயன்றிச் சுற்றாது சுழலாது. ஆனால் அதன் ஒளிக்கதிர்கள் சுட்டெரிக்கும். சினைவினை முதல்வினையாகக் கருதப்படும். காணாதார் தரும் துயரமும் கண்டார் தரும் துயரமும் காண இயலாதன தரும் துயரமும் என எதுவாயினும் தாங்கிக் கொள்வது போல இறைவன் எத்தகைய துன்பத்தைக் கொடுத்தாலும் அவனுடைய அருளையே வேண்டுவன் என்பதாம்.

    மழைநோக்கும் பயிர்கள்

    கடவுள் வாழ்த்து என்னும் தலையதிகாரத்தைத் தொடர்ந்து திருவள்ளுவர் எழுதிய அதிகாரத்திற்குப் பெயர் ‘வான் சிறப்பு’. மழையினது சிறப்பு என்பது பொருள். மழை இல்லாவிடின் உலகியல் இல்லை. உலகியல் என்பது மக்களையும் ஞானிகளையும் உள்ளடக்கியது. இவர்களைப் பசியடக்கும். எனவே உலகியல் நடக்க வேண்டுமெனின் பசியடங்க வேண்டும்.  பசியென்னும் நோயைப் பற்றியும் அது தணிக்கும் வாயில் பற்றியும் தணித்தவர் அடையும் பெருமை பற்றியும் பேசாத இலக்கியங்கள் எண்ணிக்கையில் குறைவு. நோய் என்பது உடலுக்கு வருவது. பிணி என்பது உயிருக்கு வருவது. உடலுக்கு வரும் நோயை உயிருக்கு ஆக்கியது அதன் கொடுமை பற்றி. இறுதியாக வள்ளற்பெருமானைத் தொடர்ந்து உணர்ந்து பாடியவர் மகாகவி. ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்’ என்பது அவர் வாக்கு. அந்தச் சோற்றுக்குக் காரணமானது பயிர். பயிர் தழைக்க நீர் வேண்டும். அந்த நீர் வானின்று வருவது. பயிர் இருவகைப்படும். வான்நீரின் பல்வகைப் பரிமாணங்களாகிய ஏரி, ஆறு, குளம் என்பவற்றால் உயிர்தழைப்பன ஒன்று. வான் மழையை மட்டுமே நம்பியிருப்பன மற்றொன்று. முன்னது நன்செய் என்றும் பின்னது புன் செய் எனவும் வழங்கப்படும். நன்செய்க்கும் மழைதான் மூலமெனினும் ‘வானம் பார்த்த பூமி’ என்னும் சொல்வழக்கு புன்செய்ப் பயிரையே குறிக்கும். வானத்தை நோக்கியே வளரும் புன்செய்ப் பயிரை இறைவனின் அருள் வேண்டி நிற்கும் ஆழ்வார் தனக்கு உவமமாக்கியுரைக்கிறார்.

    “எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
    மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்று அவைபோல” (694)

    இந்தப் பாட்டில் வானம் பயிர்களைக் காக்க வேண்டியது கடமை என்பதுபோலப் பாடுவதைக் காணலாம். வானம் மழைபெய்ய மறந்துவிட்டதாகக் கூறும் நுண்ணியம் உணரத்தக்கது. மழைபெய்யாவிடினும் அம்மழையையே எதிர்நோக்கும் புன்செய்ப் பயிராகத் தன்னை உருவகித்துக் கொள்கிறார். மாமுகில் என்னும் உரிச்சொற்றொடரில் உள்ள மா என்பது முகிலுக்கு அடையாகி நின்று இறைவனின் அளப்பரிய பேரருளைக் குறிப்பாகச் சுட்டியது.  உவமத்திற்கான அடைமொழிகள் பொருளுக்கும் ஆகிவரும் என்னும் உவமக் கொள்கைக்கு அரண் சேர்ப்பது.

    போக்கிடமின்றிப் புலம்பும் குலசேகரர்

    ‘திக்குத் தெரியாத காட்டில் உன்னைத் தேடித் தேடி இளைத்தேனே’ என்பார் பாரதி. உய்யும் வழி ஏதுமின்றி மானுட உயிர்கள் வழி காணாது தவித்து இறுதியாகத்தான் இறைச்சிந்தனை வரப்பெற்று (அதற்கும் ஊழ் இருக்க வேண்டும். அவனருளாலே அவன்தாள் வணங்கி என்பது திருவாசகம்) இறைவனை நோக்கித், தம் வழியில் நடக்கத் தொடங்குகின்றன.

    “தொக்கு இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
    புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவை போல” (695)

    உயிர்கள் ஆறெனின் இறைவனே கடல். ஆறுகள் கடலை நோக்கிச் செல்வது இயல்பு. இந்த இயல்பு மாறினாலோ மாற்றப்பட்டாலோ உட்படுத்தினாலோ உலகியல் வாழ்க்கை தடம் புரளும். நீர்வழித்தடங்களைத் தடுக்கக் கூடாது என்பது நீதிமன்ற ஆணை. உயிர்கள் பிறப்பது இறப்பதற்காக. பிறப்புக்குப் பயணம் கிடையாது. ஆனால் இறப்புக்குப் பயணம் உண்டு. அந்தப் பயணம்தான் மானுட வாழ்வு. இந்த வாழ்வின் குறிக்கோள் பிறந்த இடத்தையே சேர்வது. பிறந்த இடம் என்பது இறைவன் திருவடி. உலகியல் என்னும் மாயை உயிர்களின் வழித்தடத்தை மறைக்கும் திரைகள். உயிர்கள் தோன்றுகிற இடத்தையும் இறைவன் கோயில் கொண்டிருக்கும் இடத்தையும் ‘கருவறை’ என்ற சொல்லாலேயே குறிக்கும் நுண்ணியம் இதுதான். தன்னை ஆறாக உருவகித்துக் கொள்ளும் குலசேகரர்  இறைவனாகிய கடலன்றி வேறு போக்கிடம் காணாது அதனையே தன் உயிர்க்கான புகலிடமாகக் கொள்கிறார் என்பது கருத்து.

    உவமத்தை இன்னும் விரிவுபடுத்துகிறார் ஆழ்வார். ஆறு கடல்வழி தெரிந்து அதனுள் கலக்கும். ஆனால் கடலுக்குள் சென்றுவிடின் கரை தெரியாது. தன்னை ஆறாக உருவகப்படுத்திக் கொண்டவர் தொடர்ந்து கடற்பரப்பில் சென்ற திசைமாறிய பறவையாக உருவகித்துக் கொள்கிறார். பிறவியைப் பெருங்கடல் என்றார் திருவள்ளுவர். ஒரு பிறவி முந்தைய பிறவியின் காரியமாகவும் வர இருக்கும் பிறவிக்குக் காரணமாகவும் கரையின்றி வருதலின் பிறவியைப் பெருங்கடல் என்றார். இதற்குக் கரையில்லை. இதனை உள்வாங்கிய ஆழ்வார் பாடுகிறார்.

    “எங்கும்போய் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டேகும்
    வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே” (682)

    வங்கம் என்னும் பலபொருள் ஒரு சொல் ஈண்டு நாவாயைக் குறித்தது. நாவாயின் உச்சியில் இருக்கும் ஒரு பகுதிக்குக் கூம்பு என்று பெயர். முக்கோண வடிவில் கொடிமரத்தின் உச்சியில் இருக்கும் அந்தக் கூம்பினைப் பிடித்துக் கொண்டாலேயே கப்பல் பயணம் கைகூடுவதைப் போல இறைவனாகிய கூம்பைப் பிடித்துக் கொள்ளும் புத்திசாலிப் பறவையைத் தனக்கு உவமமாகக் கூறிக் கொள்கிறார் ஆழ்வார்.

    உவமத்தின் உச்சம்

    அருவப்பொருளை அருவப்பொருளுக்கே உவமமாக்கிக் கூறுவது தமிழ்க் கவிதைகளில் காணப்படும் நுண்ணிய உவமக் கொள்கையும் கோட்பாடும் ஆகும். இது முந்தைய கட்டுரைகள் பலவற்றில் சொல்லப்பட்டது. ஒருவனுடைய நிழல் அவனையே தொடர்ந்து சென்று அவன் காலடியிலேயே தங்குவதுபோல அவன் செய்த தீவினைக்கான பயன் அவனையே சென்று அடும் (208) என்பது வள்ளுவம்! இதனை வேறுமாதிரியாகவும் கவிஞர்கள் கற்பனை செய்திருக்கிறார்கள். நிழலை நீ புறந்தள்ளினால் அது உன்னைத் தொடரும் அதுபோலச் செல்வத்தை நீ மனத்தால் புறந்தள்ளினால் அது உன்னைத் தொடரும் என்றும் பாடியிருக்கிறார்கள். கணவனே எல்லாம் என்றிருக்கும் மனைவி தன்னை நிழலாகப் பாவித்து ‘எங்கெங்கே போனாலும் நிழல்போகும் தன்னோட எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட’ என்னும் திரையிசைப்பாடல் நிழலை உறவுக்கோணத்தில் பார்க்கிறது. இந்தப் பின்புலத்தில் குலசேகர ஆழ்வார் பாடல் நோக்கப்படுகிறது.

    “நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
    தன்னையே தான் வேண்டும் செல்வம்போல்” (696)

    உலகிலேயே அழியாத பொருள் இறைவன். தோற்றம் இல்லாததால் அழிவும் இல்லையாயிற்று. அதனால் அது நிலைபேறுடையதாயிற்று. நில்லாதவற்றை நிலையென்று நம்பும் புல்லறிவுக்கும், பொருள் அல்லவற்றைப் பொருள் என்று நம்பும் அறியாமைக்கும் இது புலப்படுவதில்லை. அப்படியானால் நிலையானது எது? பொருள் எது? நிலைப்பவை மட்டும் நிலைக்கும் என்பதை உணர்வது ஞானம். நிலைப்பது எது? இறைவன் மட்டுமே! எனவே நிலைத்த செல்வமாகிய இறைவனை நினைத்துத் தொடர்ந்தால் நிலையாத செல்வம் இவனைத் தொடருமாம். அந்தச் செல்வத்தைப்போல ஆழ்வார் இறைவனைத் தொடர்கிறாராம். எவ்வளவு ஆழமான சிந்தனை? ஆழமான உவமம்?

    நிறைவுரை

    சைவ நாயன்மார்களின் அரற்றலைப் பாசுரங்களைப் பொருத்தவரையில் பெருமாள் திருமொழியிலேயே செவிமடுக்க முடிகிறது. வித்துவக்கோட்டம்மா என்னும் பகுதியில் அவர் நிரல்படுத்தியிருக்கும் உவமங்கள் குடிமக்கள், நோயாளி, குழந்தை, குலமகள், பயிர், ஆறு, பறவை எனப் பல திறத்தன. இவற்றின் கொடுமுடியாகத் திகழ்வது வேண்டாத  செல்வமாகும். ‘அற்றது பற்றெனில் உற்றது வீடு’ என்பது நம்மாழ்வாரின் கொள்கையாதலின் அதனை வழிமொழிவதைப் போல அமைந்த உவமம் இது. நம்மால் துறக்கப்பட்ட பொருள் நம்மைத் தேடிவரும் என்பது உலகியல் நம்பிக்கை. எல்லாருக்குமாக எழுதப்பட்டது இந்தக் கட்டுரை. இதன் ஆழமான நுண்ணியத்தையும் விரிவான அழகியல் சித்திரிப்பையும் பெரியவாச்சான் பிள்ளையின் பிரபந்த உரை கண்டு தெளியலாம்.

    (தொடரும்…)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 7

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 7

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் எழுதிய ‘எண்ணம் பிறந்த மின்னலில்’ சில பாடுபொருள்கள்’

    முன்னுரை

    இலக்கியம் சமுதாயத்திற்கானது என்பதால் அதன் நோக்கம் சமுதாயத்தைச் செப்பனிடுவதாகவே இருக்க முடியும். சமுதாயத்தைச் செப்பனிடுவது என்பது எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம் என்றாக்குவதோடு பொருளாதாரத்திலும் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்பதும் அடங்கும். இவை முழுமையாக நிறைவேற வேண்டுமானால் இலக்கியத்தின உள்ளடக்கம் இவற்றை நோக்கியதாக இருத்தல் வேண்டும். எனவே  தமிழிலக்கியத்தைப் பொருத்தவரையில் இலக்கியத்திற்கான கூறுகளுள் ‘உள்ளடக்கம்’ என்பது தலைமை சான்றது என்பது பெறப்படும். ‘இலக்கியத்தின் நோக்கம் இன்புறுத்துவது’ என்பதற்கு இது எதிரானதன்று. கூடுதலானது. ஏனைய கூறுகளை விட முதன்மை பெறுவது. மாபெரும் காப்பியங்கள் கூட சில குறிப்பிட்ட நீதிகளைத் தமது காப்பிய நோக்கங்களாகத் தொடக்கத்திலேயே வலியுறுத்துவதற்கு இதுதான் காரணம். இது பாடுபொருளைத் தெரிவு செய்வதில் படைப்பாளை நிதானிக்க வைக்கிறது. இளங்கோவடிகள் கண்ணகியைப் பாடியதற்கும் கம்பன் இராமனைப் பாடியதற்கும் பாரதி பாஞ்சாலியைப் பாடியதற்கும் இதுதான் காரணம். மூன்று வெவ்வேறு காலக் கட்டங்களில் தோன்றிய இந்த இலக்கியங்களை ஒரு முறை கற்றாரும் உணர்ந்து கொள்ளக் கூடிய உண்மை இது. இந்த அடிப்படையில் கவிஞர் திரு மீனாடசி சுந்தரம் அவர்கள் எழுதிய ‘எண்ணம் பிறந்த மின்னல்’ என்னும் கவிதைத் தொகுதியில் நான் கண்ட சில பாடுபொருள் பற்றிய திறனாய்வை இக்கட்டுரை சுருக்கமாக முன்வைக்க முயல்கிறது.

    எண்ணம் பிற்நத மின்னல் – ஓர் அறிமுகம்

    வஙகி மேலாளராகப் பெரும்பாலும் த்மிழகத்தைத் தவிர்த்த வெளி மாநிலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு மீனாடசி சுந்தரம் அவர்கள் எழுதிய ‘எண்ணம் பிறந்த மின்னல்’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதை நூல் பல நூறு ‘பயிற்சிக் கவிதைகளைத்’ தனது உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து பயிற்சிக் கவிதைகளே நூலாகும் ‘விந்தையை’ முதன்முதலாகக் காண்கிறேன். முயற்சியும் நமபிக்கையும் கலந்த கலவையின் முகப்போவியமாகத் திகழ்கிறது இந்த நூல். யாப்பமைக கவிதைகளை மரபுக்கவிதைகள் எனச் சொல்லி அச்சுறுத்துவோர் ஒரு பக்கம் தம் ‘பணி’யைச் செய்து கொண்டிருந்தாலும் பணி ஓய்வுக்குப் பின்னர் அதாவது தமது அறுபதாம் வயதில் தேமா புளிமா கற்று ஆசைபற்றிக் கவிதை எழுதிய கவிதைக் காதலர் இவர். இந்த நூலில் ஒரு புதுமையைச் செய்திருக்கிறார். எல்லாப் பாடல்களுமே விருத்தங்களாக அமைநதிருப்பதும் அவற்றுக்கான வாய்பாடுகளை அவராகவே வரையறுத்துச் சொல்லியிருப்பதுமாகும். இது எந்த அளவுக்குக் கவிதையின் வெற்றிக்குத் துணை நிற்கிறது என்பது தனி வினா!. புதுமை செய்து காட்ட வேண்டும் என்னும் அன்னார் நோக்கத்தில் பழுதிருப்பதாகத் தெரியவில்லை. இனி தொடக்கநிலைக் கவிஞர்கள் அதாவது பயிற்சிக் கவிஞர்கள் விருத்தங்களை எழுதிப் பழகுவது என்பது கவிமரபே! எனினும் சிந்துகளில் பயிற்சி எடுப்பது தொடைவிகற்பங்கள் வசப்பட ஏதுவாகலாம். மீயுயர் தகுதியை (DISTINCTION)  இந்தக் கவிதை நூல் பெறுகிறது என்று சொன்னால் எனக்கு நானே சிரித்துக் கொள்ள வேண்டியதிருக்கும். ஆனால் முதல்வகுப்பில் (FIRST CLASS) தேரியிருக்கிறது என்று நான் சொல்கிறபோது அதனை அவ்வளவு எளிதாக யாரும் மறுத்துவிட முடியாது. மறுப்பாரைக் களங்காண நான் காத்திருக்கிறேன். பயிற்சித் தேர்விலேயே முதல் வகுப்பில் தேரிய மாணவன் எழுதிய தேர்வுத் தாளாக இநதத் தொகுப்பு திகழ்கிறது. இந்த நூலின் முதல்வகுப்புத் தகுதிக்குக் கவிதைகளின் ஏனைய கூறுகளைவிட பாடுபொருள் தேர்வே முன்னிற்கிறது என்பதால் அவற்றில் ஒரு சிலவற்றைச் சுட்டிக்காட்டுவதை  இந்தக் கட்டுரை தனது தலையாய நோக்கமாகக் கொள்கிறது.

    பாடுபொருளும் பாவலரும்

    கவிதையின் கூறுகளில் கருத்து அல்லது பாடுபொருள் என்பது மிகச் சிறிய பங்களிப்பையே தரும். அதாவது கருத்தே கவிதையாகிவிடாது. ஒதுக்கப்பட்ட அல்லது பிறரால் புறக்கணிக்ப்பட்ட,நோக்கிற்கு ஆளாகாத பாடுபொருளைப் பாடுவதாலேயே அது சிறந்துவிடாது. அதனை வெளிப்படுத்தும் கற்பனை கலந்த உத்திகளே அவற்றின்  நிலைப்பேற்றுக்குக் காரணமாகும். ‘கற்பு’ என்னும் பாடுபொருள் பலராலும் பாடப்பட்டிருந்தாலும் சிலம்பும் இராமாயணமும் நிலைத்திருப்பதே இதனை உறுதி செய்யப் போதுமானதாகும். எனவே கவிதையின் சிறப்பு பாடுபொருளில்  மட்டும் இல்லை  வள்ளுவர் ஈரடியில் சொன்னவற்றைத்தான் பதினெண் கீழ்க்கணக்கு நான்கடிகளில் சொல்லுகிகின்றன. ஆனால் பயன்? வள்ளுவம் பெற்ற புகழை நு}ற்றில் ஒரு பங்கினைக் கூட பதினேழு  நூல்களில் எதுவும் பெறவியலவில்லை.

    பாடுபொருள் வெற்றி பெறவது எப்போது?

    குமரி முனையையும் பாடலாம் குண்டூசியையும் பாடலாம். முன்னதைப் பற்றிய கவிதை தோல்வியடையலாம். பின்னதைப் பற்றிய கவிதை வெற்றியையும் அடையலாம். நாங்கூழ் புழுவைப் பற்றிப் பேராசிரியர் சுந்தரனார் பாடி வெற்றி பெற்றிருக்கிறார். அற்பப் புழு எனக் கருதக்கூடாது என்பதை, நடராசனின் வாய்மொழி நமக்கு உணர்த்துகிறது. எம்மண்ணையும் நன்மண்ணாக்கி எறும்பு, புழு, பூச்சிகள் தரும் தொல்லைகளைப் பொருட்படுத்தாமல், தன் செயலில் கண்ணுங் கருத்துமாக உள்ள நிலையைத் தெளிவுபட விரித்து உரைக்கிறான். மனிதர்க்கான வாழ்வியல் ரகசியத்தை உணர்த்தியதால் மண்புழு இலக்கியத் தகுதியைப் பெற்றுவிடுகிறது.

    பார்ப்பது வேறு நோக்குவது வேறு

    கவிதைப் படைப்பில் கவனிக்க வேண்டிய இரண்டு கூறுகள் இன்றியமையாதன. எல்லாரும் பார்க்கிறார்கள். போகிறார்கள். கவிஞன் நோக்குகிறான். சிந்திக்கிறான். மற்றவர; எல்லாம் பார்த்துச் செல்வதால் சிந்திப்பதில்லை., இவன் நோக்குவதால் சிந்திக்கிறான். ‘சென்று பார்த்தாலும் பார்த்துச் சென்றாலும் பயனும் இல்லை., பாடலும் வராது. ‘நோக்கரிய நோக்கே’ என்பது திருவாசகம். மலர்களின் சிவப்பை எல்லாரும் பார்த்தனர் ;. சென்றனர் பாரதிதாசனுக்குத்தான் அந்தச் சிவப்புக்குப் பின்னால் இருக்கும் உழைப்பாளியின் குருதி தெரிகிறது.எல்லாரும் பார்த்த் மலர்தான் அது. இதுதான் கவிஞனின் நோக்கு. மற்றவர்களுக்கெல்லாம் பூனைக்குட்டியாகத் தெரிவது பாரதிக்குத்தான் பூனையின் பிள்ளையாகத் தோன்றுகிறது.. காரணம் அவனுடைய பார்வை  பூனைக்குட்டிகளையே குழந்தைகளாக நோக்கியவருக்கு  இந்திய மக்களை ஒருதாய்ப் பிள்ளைகளாகக் கருதுவதில்; சங்கடம் இல்லை. இதனால் நாட்டின் ஒருமைப்பாடு பற்றிய சிந்தனை பாரதிக்கு எளிதாகக் கைவந்தது. இயற்கையாகவும் அமைந்து. அமைவது. மற்றவர்களிடமிருந்து கவிஞன் வேறுபடும் இடங்களில் இதுவும் ஒன்று. இந்த வேறுபாடுதான் ஒருவனைக் கவிஞனாக்குகிறது.

    சோப்புப் பெட்டி கூட்டணி அமைத்த பொன்னடியான்

    பல்வகைச் சோப்புக்களைப் பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் சோப்பு வைக்கும் பெட்டியைப் பற்றிய சிந்தனை பொன்னடியாருக்குத்தான் வந்திருக்கிறது. சோப்புப் பெட்டியைப் பாப்பதும் பயன்படுத்துவதும் எல்லாருக்கும் பொதுவானவையே. ஆனால் உடம்பைத் தூய்மைப்படுத்தும் சோப்புப் பெட்டி அழுக்காய் இருப்பதைப் பொன்னடியாரால்தான் நோக்க முடிகிறது. இந்த முரணே கற்பனையைச் சிறக்கச் செய்கிறது. இத்தகைய கற்பனையின் பரிணாமம் கவிஞனே சோப்புப் பெட்டியாவதில் சென்று முடிந்திருக்கிறது.

    “தங்கள் தூய்மையும் எங்கள் தூய்மையும்
    ஒன்றே என்பதை உணர மறுத்தால்………….
    இந்தக் குளியல் அறையில் என்போல்
    ஓரமாக ஒதுங்கிக் கிடக்கும்
    வாளி குவளை அனைத்தையும் சேர்த்து
    அரசியல் வாதிகள் அமைப்பதைப் போல
    பொருந்தாக் கூட்டணி புதிதாய் அமைப்பேன்!
    …………………………………………….
    எங்களைப் பற்றியே கவலை கொள்ளாரை
    மருத்துவர்களிடம் அலைய வைத்து
    அவர் உடல் நலத்தை, சோ;த்த பணத்தை
    இருக்கும் அமைதியை இழக்க வைப்பேன்!
    என்று முழங்கிய சோப்புப் பெட்டியின்
    எழுச்சியால் குளியல் அறையே கொதித்தது!”

    என்னும் பகுதி பொன்னடியாரின் கற்பனையின் உச்சத்தைக் காட்டுவதாக உள்ளது. அஃறிணையைப் பேசவைப்பது மரபு சார்ந்த கவித்திறன். அதற்குக் கவிஞன் தேர்ந்தெடுத்துக் கொண்ட பொருளும், மானுடம் சார்ந்த உரிமை முழக்கத்தைச் சோப்புப் பெட்டிக்கும் அறிமுகம் செய்து வைத்திருக்கும் பாங்கும் இறுதியாக குளிர்ச்சியாக இருக்கும் குளியல் அறையையே கொதிக்க வைத்துச் சமுதாயப் புரட்சியை ஒரு குறியீடாகக் காட்டியிருக்கும் படைப்புத் திறனும் பெரிதும் போற்றத்தக்கனவாக உள்ளன. கோலமாவு விற்பவளின் அலங்கோல வாழ்வைப் பாடியிருக்கிறார் பொன்னடியான்.    கொசுவைப் பாடியிருக்கிறார். பூசணிக்காயைப் பாடிய பாரதிதாசன்  . அதன் கைவண்ணத்தையும் கறிவண்ணத்தையும் பாடி எதனையும் பாடுபொருளாக்க முடியும் என்பதை நிறுவியிருக்கிறார்;. கவிமணி மாட்டையும் கன்றையும் பாடிக் குழந்தைகள் மனத்தில் மாறாத இடம் பெற்றிருக்கிறார். பசும்புல்லை உண்டு வெண்மையாகப் பாலைக் கறக்கும் விந்தையைப் பாடியிருக்கிறார் படைப்பாளுமை விஞ்சி நிற்கிறபோது கண்ணில் படும் எதுவும் மனத்தில் தோன்றும் எதுவும் கவிதையாகப் பாpணமிக்க இயலும். கவிஞர; மேத்தா அரளிப்பூவைப் பாட வைத்திருக்கிறார்.  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய வெள்ளாட்டைக் கவிஞர் பொன்னடியானும்  பாடியிருக்கிறார். துணிந்து சேவலையே தூதுவிட்டவர் பட்டுக்கோட்டையார். சிரங்கைச் ‘சித்தன் சிரங்கப்பராயன் என்று பாடினார் கவிமணி.

    நாயைப் பாடிய சுந்தரம்

    பொதுவாக நன்றியுணர்ச்சியின் குறியீடாகவே நாய் பயன்படுத்தப்படுகிறது. நட்பினை மறவாது அன்புகாட்டும் ஒருவரது நட்பே கொள்ளத்தக்கதாகும் என்னும் கருத்தினை

    “யானை அனையவர் நண்பொரீஇ, நாயனையார்
    கேன்மை கெழீஇக் கொளல்வேண்டும்;-யானை
    அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
    மெய்யதா, வால்குழைக்கும் நாய்”. (நாலடியார் 213)

    என்பன நாலடியார் வரிகள். இனி சிலேடைக் கவிஞர் காளமேகம் தமது சிலேடை வெண்பாவில் நாயைப்பயன்படுததியிருக்கிறார்

    ஓடு மிருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
    நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
    தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
    தேங்காயும் நாயுமெனச் செப்பு .

    நாய்க்கும் தேங்காய் மூடிக்கும் பாடிய சிலேடை இப்படி அமைந்திருக்கிறது என்றால் பத்துப்பாட்டு இலக்கியங்களில் பாடிணியின் பாதத்து அழகிற்கு நாயின் நாக்கு உவமமாகக் கூறப்பட்டுள்ளதையும் காண முடிகிறது,

    “வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி”   (பொரு. 42)

    “உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ
    வயங்கு இழை உலறிய அடியின்”  (சிறு. 17)

    “மதம் தபு ஞமலி நாவின் அன்ன
    துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி”  (மலை.42)

    என்றெல்லாம் சங்க கால இலக்கியங்களில் நாயின் நாக்கு உவமமாக்கப்பட்டுள்ளதை அறியலாம் தூதாகச் சென்ற அங்கதனைத் தன் வலைக்குள் சிக்கவைக்கு முயன்ற இராவணன் அவனுக்குக் கிட்கிந்தாவிற்குத் தலைவன் பதவி தர முனைகிறான். அப்போது அங்கதன் கூறுகிறான்

    “நீ தரக் கொள்வேன் யானே
    இதற்கு இனி நிகர் வேறுஎண்ணின்
    நாய்தரக் கொள்ளும் சீயம்
    நல்அரசு என்று நக்கான்”

    வறுமையினால் தாழ்வுற்ற காலத்து ஒருவனுக்குச் செய்யும் உதவிபோல் நாயை உயர்த்த நல்ல தமிழைப் பயன்படுத்துகிறார் சுந்தரனார். இது மரபுவழிச்சிந்தனையை மீட்டெடுத்தல் என்றும் கருத முடியும். அவர் பாடுகிறார்.

    “சிவப்புடன் பச்சை வண்ணம்
    சீர்பிரித்தறியா கண்ணில்
    உவப்புடன் அனபு மட்டும்
    உறைந்திடும் வண்ணம் கொண்டேன்
    செவித்திறன் கூர்மை கொண்டு
    சிற்றொலி உணர்ந் தறிந்தேன்
    புவியெலாம் புகழும் என்றன்
    புதிர் எனும் முகரும் தன்மை”

    பங்குச் சந்தையில் உயர்ச்சியும் தாழ்ச்சியும் இருப்பதுபோல தமிழிலக்கியத்தில் உயர்ச்சியில் இருந்த நாய் மணிவாசகர் முதலிய அடியவர்களால் தாழ்ச்சியை அடைந்து மீண்டும் உயர்ச்சி நிலையை அடைந்திருக்கிறது நாயைத் தவிசேற்ற முயன்றவரில் நமது செல்வ மீனாட்சி சுந்தரனார் முன்களக் கவிஞராகவும் திகழகிறார்.

    சிரிப்பைப் பாடும் செல்வ மீனாடசி

    நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று மெய்பாடுகளின் நிரலில் நகையை முன்வைத்துத் தொடங்கினார் தொல்காபபியர். உயிரினங்களுள் மனிதனை அடையாளப்படுத்தும் தலையாய காரணி அதுதான் என்பது அவர் உள்ளடக்கிடக்கை. சினம் நகையைக் கொல்லும எனவே நகையின் எதிரியாகச் சினத்தைக் கொண்டார் திருவள்ளுவர். ‘முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு’ என்று வள்ளுவர் கண்ட தலைவன் அனுமானித்தான. பெண்ணின் சிரிப்பு ஆணைக் கைதியாக்கும் என்பதைக் கண்ணதாசன் சிரித்துச் சிரித்து என்னைச சிறையிலிட்டாள்” என்பதனால் உணர்த்தினர்.

    நகைக்கு நகை என்று பெயர் வந்தது ஏன்?

    திருவள்ளுவர் நகையைக் கொல்லுவது சினம் (304) என்று நகைக்கு எதிராக்கியதை மீனாட்சி ‘வெகுளிக்கு எதிரானது நகை’ என அளவையியல் நுட்பத்துடன் பதிவு செய்கிறார். எபப்டி? நகைக்கு வெகுளி பகையானால் வெகுளிக்கு நகை பகைதானே? இந்தச் சிந்தனையை இந்தக் கவிதையில் காணலாம். இது ஒரு உத்தி. ஆனால் சிந்தனையின் படிநிலை வளர்ச்சி. உரைநடையில் இது எடுபடாது. ஆனால் கவிதையில் சிறக்கும். எதுபோல? ‘ஒன்னும் ஒன்னும் ரெண்டு’ எனறால் எல்லாரும் சரிப்பார்கள். ஆனால் ‘ஒன்னும் ஒன்னும் ரெண்டு உன்மேல் ஆசை உண்டு’ என்றால் எல்லாரும் ரசிப்பார்கள். அது போன்றது இது.

    தற்குறிப்பேற்ற அணிக்காகவே மதுரையில் இல்லாத மதிலில் இன்னும் அந்த சாயம் போன மீன் கொடி பறந்து கொண்டிருப்பதாகத் தமிழாசிரியர்கள் நம்புகிறார்கள்.  செல்வமோ தொல்காப்பியர் நகையைத் தலைமை மெய்ப்பாடாக வைத்த காரணத்தைக் கவிதையில் சிந்திக்கிறார். நகைக்கான வேர்ச்சொல் ‘நகு’ இந்த வேர் நகுதல் அல்லது நகைத்தல் என்பதற்கானது.நகைக்கு அது வேர்ச்சொல்லாகுமா என்பதுபற்றிச் சொல்ல வேண்டியவர் மொழியாராய்ச்சி வித்தகர்களே. அணிகலன் என்பதே தமிழ். செய்யுளணி என்பதே வழக்கு. இருந்தாலும் நம்முடைய செல்வமீனாட்சி

    “கவர்ந்திடும் எழிலாள் கனிச்சுவைத் திரளாள்
    கனிந்திடும் சினநதனின் எதிராள்!
    உவப்பதின் மகளாள்! உருகிடும் மெழுகாய்
    உணர்வினில் விழுந்திடும் மழையாய்
    தவழ்ந்திட இதழில் பொலிவுறும் முகமும்
    தண்மதி வந்ததோ எனவாய்
    தவறுதல் இன்றி அணிந்திட வேண்டித்
    தமிழரும் நகையெனச் சொன்னார்!”

    என்று பாடுகிறார் பொறுமையென்னும் நகையணிந்து பெருமை கொள்ள வேண்டும் பெண்கள் என்பது அந்தக் காலத்தில் கொடுமுடி கோகிலம் அன்னை கே.பி.சுந்தாராம்பாள் பாடிய பாட்டு. பொறுமையை நகையாச் சொன்னார் அவர். நம் செல்வமீனாட்சியார் நகையை நகையாக அணிந்து கொள்ளுங்கள் என்கிறார். இது ஒரு மரபுவழிச் சிந்தனை என்றால் பலருக்கும வியப்பாக இருக்கும். பணக்காரனுக்குப் புத்தி சொல்கிறபோது பணத்தைத் தொடர்புபடுத்தவேண்டும் என்பது திருவள்ளுவருக்குத் தெரியும். அதனால்தான்

    “எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
    செல்வர்க்கே செல்வந் தகைத்து”

    என்று பணிவை ஓர் செல்வமாக்கினார். தற்காலத்தில் நடமாடும் நகைக்கடைகளாக ஆண்கள் சிலரும் வலம்வருவதை வலைத்தளங்களால் அறிய முடிகிறது. நகையை விரும்பும் அத்தகைய ஆண் பெண் இருபாலாருக்கும் சிரிப்பின் சிறப்பை ‘நகை’ என்ற சொல்லால் புலப்படுத்துகிறார். என்ன ஒரு சங்கடம்?  இந்த நகைகக்கு வங்கிகள் கடன் தராதே என நினைக்கலாம்! வங்கிகளால் இதனை மதிப்பிட இயலாது என்பதே உண்மை!  சிரிக்கத் தெரிந்தவனுக்கு கடன் வராது. அது மட்டுமன்று ஒரு நல்ல ஆண்மகனுக்கு மற்ற திறன்களைவிட புன்னகைதான் நற்றிறன் ஆகும்.  இந்த விஷயத்தில் கம்பன் ஒரு புரட்சி செய்திருக்கிறான் ஆணின் விரிமார்பும், மலைத்தோளும் தாழ்ந்த தடக்கையுமே ஒரு பெண்ணைக் கவரும். ஆனால் இத்தனையும் இருந்தாலும் இராமனுடைய புன்னகைதான் சீதையைத் தடுமாறச் செய்தது என்று பாடுகிறான்

    “இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
    சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
    சுந்தர மணி வரைத் தோளுமே அல
    முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே “!

    என்பது கம்பன் பாட்டு. இராமபிரானின் கருத்த முடியோ, சந்திரமுகமோ, தாழ்ந்த தடக்கையோ மாணிக்கத்தோளோ சீதையைக் கவரவில்லயாம். இவற்றையெல்லாம் தான் காண்பதற்கு முன்பே தன்னுயிரை இராமபிரானின் புன்னகை கொள்ளை கொண்டதாம். கம்பன் அப்படிப் பாடியதைச் செல்வ மீனாட்சி இப்படிப் பாடியிருக்கிறார். எழில்நங்கையாக உருவகத்திருக்கிறார். ‘இந்தப் புன்னகை என்ன விலை?’ எனச் சந்தைப் படுத்தியவர்களும் உண்டு.

    கோடுகளும் குடைக்கம்பிகளும்

    ஒன்றைப் பிறிதொன்றாக நோக்கி மயங்குதல் இலக்கியத்தில் இயல்பு. இராமனிடம் மயங்கியவள் சூர்ப்பனகை சீதையிடம் மயங்கியவன் இராவணன். எனவே இராவணன் சூர்ப்பனகையின் கண்களுக்கு இராமனாகத் தெரிகிறான். இராவணன் கண்களுக்குச் சூர்பபநகை சீதையாகத் தெரிகிறாள். ஆனால் சமுதாயச் சிந்தனையுடைய கவிஞர்கள் இது போன்ற வெறும் கற்பனைகளுக்கு இடம் தராமல் தங்கள் உள்ளத்துக் கவலையை, தங்கள் பக்குவத்தைக் கவிதைப் பதிவில் காட்டிவிடுவார்கள். மகாகவி ‘காக்கை குருவி எங்கள் சாதி’ என்று பாடியவன். உயிர்களிடத்தில் அன்பு வேணும்’ என்று பாடியவன். பாட்டுக்காகப் பாடாமல் தான் பாவீத்ததைப் பாடியவன். பிறரெல்லாம் பூனையையும் அதன் குட்டியையைபும் பார்த்தார்கள். மகாகவி பாரதி இயல்பிலேயே உயிர்களை நேசித்தவராதலின் வெள்ளை நிறத்தொரு பூனை ஏங்கள் வீட்டில் வளருது கண்டீர்! பிள்ளைகள் பெற்றதப்பூனை’ என்று குட்டிகளைப் பிள்ளையாகத்தான அவரால் நோக்க முடிந்திருக்கிறது. தேசப்பற்றுடைய கவிஞர் மேத்தா இந்திய வரைபடத்தைப பார்ககிறார்.  அதிலே நெளியும் மாநிலங்களின் எல்லைக் கோடுகள்,ள நதிகளைக் குறிக்கும் கோடுகள் முதலியவற்றைக் கோடுகளாகக் கொள்ள அவரால முடியவில்லை. அவர் எழுதுகிறார

    “தேசப்படத்திலுள்ள கோடுகள்
    விடுதலப் போராடிய வீரித் தியாகிகளின்
    விலா எலும்புக்கூடுகள்” மு.மேத்தா

    மேத்தாவினால்தான் இப்படி நோக்கமுடியும். அதுபோல செல்வமீனாட்சி சுந்தரனார் குடை தன் வரலாற்றைக் கூற செய்திருக்கிறார். எப்படி? கம்பிகளுக்கு மேல் பின்னப்பட்டிருக்கும் கறுப்புத் துணியைத் தோல் என்கிறார். எனவே கம்பிகள் எலும்பாம்.

    “எலும்பும் தோலும் மட்டும்
    இணைத்தே கொண்டேன் என்னுடம்பை
    அழுகும் தசையைக் கொள்ளேன்
    அழகாய் மெலிந்த எழில்கொண்டேன்
    நழுவும் உடைகொள் கைபோல்
    நட்பில் இணைந்தோர் நலங்காத்தேன்
    தழுவிக் கக்கம் கொள்வார்
    தவமாய்ப் பெற்ற பிள்ளையென!

    எலும்பும் தோலுமாய் என்னும் உலக வழக்கைக் கவிதைக்குள் கொண்டு வருகிற உத்தி இது. இந்த உத்தி இன்னும் சிறக்க இன்னொரு படிமத்தையும் காடசிப்படுத்துகிறார். நாமெல்லாம் கைத்தடியைத்தான் மூன்றாவது காலாகச் சொல்லுவோம். ஐயா பெரியார் கைத்தடிக்கும் இது பொருந்தும். ஆனால் எனக்குத் தெரிந்தவரை மடக்கி ஊன்றி அதனைத் தாங்கிய குடையை  மூனறாங்கால் என்று பாடியவர் நமது செல்வமாகத்தான் இருக்க முடியும்.

    “நிலத்தில் என்னை ஊன்றி நிமிர்ந்தோர் கொண்ட மூன்றாங்கால்”

    வெயிலுக்கு நிழல்தரும் குடையை ஒற்கத்தின் ஊன்றுகோலாகப் பார்த்ததும் சிறப்பு! பாடியதும் சிறப்பு! கருப்பு களங்கம் என்பாரும் கூட கருப்புச் சேலைபோர்த்திய குடையைத்தாங்கி நடக்கிறாராம்!,

    ‘கட்டிக் கொள்ள முன்னம் கருப்புச் சேலை கொண்டோனே’

    என்று பாடி தமது கொள்கையை மிக இலாவகமாகப் பதிவு செய்திருக்கிறார் செல்வம்.

    கைக்கிளையில் தொடங்குவதுதான் காதல்

    ஆடியைத் தவிர வேறு எந்தப் பொருளும் ஒரே நேரத்தில் செயல்படாது. தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை’ என்பது குறுந்தொகை. கைக்கிளை என்பதை ஒருதலைக் காதல் என்பது பிழைநோக்கு. அது காதலின் தொடக்கம். தலைவன்தான் முதலில் நோக்குவான். அந்த நோக்குதான் கைக்கிளை எனப்படும். ‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை’ என்பது தொல்காப்பியம். எனவே கைக்கிளையே காதலின் தொடக்கம். இந்தத் தொடக்கத்தை நிகழத்த வேண்டியவன் ஆண். இது மரபு.  ஒரு பெண் தன் உள்ளத்துக் காதலையும் செயலையும் முனனெடுப்பது கருத்தியல் வளர்ச்சி. இலக்கியப் புரட்சி. இந்தப் புரடசியை நிகழ்த்திக்காட்டியவர் பாவேந்தர்.

    “தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
    எண்ணுங்காலை கிழததிக்கு இலலை”

    எனத் தன் உள்ளத்துக் காதலை வாய்விட்டுச் சொல்லவே முடியாத இலக்கியத் தலைவியை முதலில் சமுதாயத் தலைவியாக்கினார் பாவேந்தர். சொல்வதென்ன?  செயலையும் நீயே தொடங்கு என்று வினைப்புரட்சி செய்தவர் பாவேநதர்.

    “…………………………………………………..அடி
    கோதை தொடங்கடி என்று சொன்னான் இன்பம்
    கொள்ளை கொள்ளை அந்த மாந்தோப்பில்”

    என்று தலைவியை வினைத்தொடக்கம் செயய்ச் சொனனார் பாவேந்தர் இல்லற வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்கு இடமில்லை என்பது பாவேந்தர் கருத்து. வினையைத் தொடங்கி முடித்த தலைவிகளின் பட்டியலை நீளச் செய்கிறார் செல்வம். பாவேந்தரை வழிமொழிகிறார். ஆனால் அஞ்சுகிறார். பாவேந்தர் செயல் தொடக்கத்திற்கே அனுமதியளித்த பின் ‘காதலை மங்கை சொன்னால்’ என்ற நிலையிலேயே சிந்தனை வளர்ச்சியைக் காட்டுமா?

    “ஊதலால் நடுங்கும் தேகம்
    உலர்த்திடும் வெம்மை தேடி
    காதலாள் பக்கம் நின்று
    கனிவுடன் கொஞ்ச ஏங்கும்!
    மீதமாய் வைத்த லின்றி
    மேகமாய் பொழியும் அன்பால்
    காதலை மங்கை சொன்னால்
    கோதெலாம் கன்னல் சாறே!

    பழம் என்றாலே கனிந்ததுதான். கனிந்த பழம் என்றால்? மழலை என்றாலே கனிந்த சொல்தான். மழலையே கனீந்தால் எப்படி இருக்கும்? இப்படிச் சிந்தித்தவர் கண்ணதாசன். ‘கனியக் கனிய மழலை பேசும் கண்மணி’ என்பது அவர் சுவைத்த காதல். அப்புறம் இங்கே மீனாட்சி சுவைப்பதைப் பார்க்கிறோம். இவர் என்ன சொல்கிறார்? ‘கனிவுடன் கொஞ்ச’ என்கிறார். கொஞ்சுதல் என்றாலே கனிவுடன்தான் கொஞ்ச முடியும். கோபமாகவா கொஞ்சுவார்கள்? பி.எஸ். வீரப்பாவும் சி.டி.ராஜகாந்தமும் காதல் பாட்டில் வந்தால் என்ன ;ஆகும்? இவர் சொல்கிறார் கனிவுடன் கொஞ்ச வேண்டுமாம். அவர் அனுபவம். அவர் கொடுத்து வைத்தவர். கொஞ்சப்பட்டவர். தான் பெற்ற இன்பத்தை வையகமும் பெற வெண்டும் என்று விரும்புகிறவர். எல்லாரும் செல்வம் ஆக இயலுமா என்ன? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! ‘தேன்வந்து பாயுது என்கிறார் பாரதியார். இவருக்குத் தன் காதலி தனது காதலைத்தனது மொழியில் தானே சொன்னால் காதெல்லாம் கன்னல் சாறாம். பாரதியாவது ‘வந்து பாயுது’ என்றார். இவருக்கு வந்து  பாய்ந்ததா? வராமல் பாயந்ததா என்பது தெரியவில்லை.

    நல்லினமா? புல்லினமா?

    தன்னுடைய குறிப்பை ஏற்றி உரைப்பதற்குத் தற்குறிப்பேற்றம் என்பது அணியிலக்கணப் புலவர்கள் அடிக்கடிச் சொல்லும் தனி மந்திரமான அணிமந்திரம். ஆனால் அந்தத் தற்குறிப்பேற்றத்தை வெளிப்படுத்துவதில் பல முறைகள் இருக்கின்றன என்பதைச சில கவிதைகளால் அறிந்து கொள்ள முடியும். அதாவது தற்குறிப்பேற்றத்தை  வினாவடிவிலும் அமைத்துக் காடட இயலும். அது ஒரு வகையான படைபபாளுமை.

    “பசுமையாம் புல்லைத் தின்றே
    பசுவதும் பால் கொடுக்கும்!
    பசுவது பொழியும் பாலைப்
    பச்சிளங்குழந்தை உண்ணும்!
    சிசுவதன் தாய்ப்பால் என்றே
    செப்பினால் தவறு முண்டோ?
    பசுமையாம் புல்லினந்தான்
    பார் இதின் உணவுக்கூடம்!

    அருகெனும் புல்ல ரைத்து
    அதில்வரும் சாற்றைக் அள்ளிப்
    பருகிட வாதம் பித்தம்
    பறக்குமே உடலை விட்டு!
    மருந்துடன் உணவும ஈந்து
    மனிதரின உயிரைக் காக்கும்
    இருந்தும் ஏன் புல்லினத்தை
    இழிகுலம் என்றே சொன்னார்?”

    ‘விசும்பின் துளிவீழின்அல்லால் பசும்புல் தலைகாண்பதும் அரிது என்பார் திருவள்ளுவர்.’ஓரறிவு உயிரும் இல்லை என்பதாம்’ என்று உரைகாண்பார் பரிமேலழகர். ‘புல்’ என்பது தமிழறிஞர் இளங்குமரனார் எழுதிய தன் வரலாற்று நூலுக்குப் பெயர். அவர் தன்னைப் புல்லாக்கிக் கொண்டவர். கவிஞர் காமராசன் பனித்துளியின படுக்கையறையாகவும் குசேலரின் உணவுக் களஞ்சியமாகவும் புல்லை நோக்கியதைக் கறுப்புமலர்களில் காணலாம். காலனைத் தன் காலடியில் வரச்சொல்லி அவனைப் புல்லெனவே மிதிப்பதற்கு எத்தனித்தவர் மகாகவி. ‘நெல்லுக்கு இரைதத நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும பொசியுமாம்’ என்று நெல்லை உயர்த்தியும் புல்லையும் தாழ்த்திப் பாடியவர் ஔவையார். ‘புல்லாகிப் பூடாகிப் புழுவாய மரமாகி’ என மணிவாசகப் பெருமானும தன் பிறவிகளைப் புல்லென்னும் கீழ் நிலையிலிருநதே தொடங்கிப் பாடுகிறார். இப்படி புலலைத் தாழ்த்தியே பாடி வந்த கவிஞர்கள் நடுவில் புல்லை உயர்த்திப் பாடிய கவிஞர் நம்முடைய செல்வம்!

    மருந்துடன் உணவும ஈந்து
    மனிதரின உயிரைக் காக்கும்
    இருந்தும் ஏன் புல்லினத்தை
    இழிகுலம் என்றே சொன்னார்?”

    மழலையிலிருந்து மண்ணுக்குப் போகிறவரை உதவுகிற ஒரு தாவரத்தை இழிவாக நோக்குவதும் பாடுவதும் இயற்கைக்கு முரண் என்பது கவிஞர் கருத்து. இது பாடுபொருளை வேறுபட்ட கோணத்தில் பார்க்கத் துணியும் கவித்துவத்தின் மாற்றுநிலை எனக் கருதலாம்.

    செருப்புக்குள் பிரிவுண்டா? பேதமுண்டா?

    செருப்போடு ஒரு நேர்காணல் நிகழ்த்தியவர மேத்தா. காலுக்கொரு செருப்புமில்லை கால்வயிற்றுக் கூழுமிலலை என்று ஏழைகளுக்காகப் பாடியவர ஜீவா.

    “திங்களின்மேல் முதன்முதலாய்த் தடம்பதித்தேன் என்னுருவை
    செருப்பே நானே!
    உங்களைநான் ஆண்டேனே! உயிரிருக்கை மேலமர்ந்தே
    உலகின் வேந்தாய்!
    எங்கனுமே துணையுடனே வாழ்ந்தோமே பெருமிதமாய்
    இருந்தோம் ஒன்றாய்
    பங்கமதே இணைபிரிதல் எமைப்போலே இணைபிரியாப்
    பாடம் கற்றே!

    கவிதையைப் பற்றிய என்னுடைய திறனாய்வுக் கட்டுரைகளில் ஒரு கருத்தினைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். ஒரு கவிஞனின் அத்தனைப் படைப்புக்களும் கவிதைகளாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதாவது கவிதை பாடல்களின் எண்ணிக்கையையோ வெளியிடப்படும் நூல்களையோ பொருத்தது அன்று. ஒரே கவிதையாக இருந்தாலும அக்கவிதையின் எல்லா வரிகளும் அடிகளும் கவிதையாக இருக்க வேண்டும் என்ற தேவையும் கிடையாது. கவிதை முழுமையான சீர்களிலோ அடிகளிலோதான் அமைதல் வேண்டும் என்று எந்த இலக்கணமும் வரையறுக்கவில்லை. ஓரசையே போதும்! இரண்டசையே போதும்! பொருளற்ற அசைச்சொற்களே கவிதையாக மாறும் ஒரு வியப்பிடைச் சொல் கவிதையாக மாறும்.  ‘ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியாக அழகுடையான்’ என்னும் கம்பன் அடியில் ‘ஐயோ’ என்னும் ஒரு வியப்பிடைச் சொல் கவிதையானது காண்க. ஒண்ணுதற் ‘கோஒ’ என்ற தொடரில் ‘ஓஒ’ என்னும் நேரசையிரண்டு மட்டும் நின்று கவிதையானது காண்க.  அவைபோல இந்தப் பாட்டில் நிலவின் மீது நீல் ஆம்ஸ்ட்ராங்கின் காலணியே முதலில் பட்டதும் அயோத்தியை  அது ஆண்டதும் தெரிந்த சேதிகளே. ஆனால் உங்களால் ஒதுக்கப்படுகிற நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் நீங்கள் எங்களைப் பார்த்துப் பாடம் கற்றுக்கொள்ளக் கூடாதா? என்று இணைச்செருப்பு ஏங்குவது செல்வ மீனாட்சியாரின் சமுதாயப் பார்வை. பாடுபொருள் புதுமை! பொருண்மை ஆழம்! செருப்புக்கள் பிரிவதில்லை அவற்றுள் பேதமில்லை. ஆனால் மனிதர்க்குள்? அதுவும கணவன் மனைவிக்குள்?  அச்சாணியை வைத்து நீதிசொல்வார் வள்ளுவர். அடிச்செருப்பை வைத்து நீதி சொல்கிறார் செல்வம்!. இநத ஒரு சேதி போதும் இது கவிதை என்பதற்கு! சரியா

    நிறைவுரை

    “ஒரு சிறந்த எழுத்தாளருக்கு ஓரளவு சக்தி வாய்ந்த உள்ள இயல்பும் உணர்ச்சி நிறைந்த வளமும் இன்றியமையாதனவாகும்” மேற்கண்ட கருத்துரையில் அமைந்துள்ள ‘சக்திவாய்ந்த உள்ளம்’ உணர்ச்சி நிறைந்த வளம்’ ஆகிய இரண்டும் கற்பனைக்கும் பொருந்தும். அதனால்தான் பிறரால் நோக்கப்படாத பொருட்கள் செல்வம் மீனாட்சி சுந்தரனாரால் நோக்கப் பட்டிருக்கின்றன.  நாய்,, குடை, விளக்குமாறு, புல், கைக்கிளை, சிரிப்பு,  எனப் புதுமையாகப் பாடுபொருள்களைத் தெரிவு செய்து, அவற்றைக் கற்பனை கலந்து கவிதையாக்குவதற்குரிய இதயத்தைச் செல்வ மீனாட்சியார்  பெற்றிருக்கிறார். “பூமிக்கடியில் ஓடும் நீரோட்டத்தைக் கண்டறிவதுபோல சொற்களைக் கொண்டு” அஃறிணையை கவிதைகளால் உயர்திணையாக்கிருக்கிறார். பட்டறிவும், பாசமும் நேசமும் கற்பனையும் கவித்துவமும் இழையோடும் இந்தக் கவிதைகளைப் பயிற்சிக்கவிதைகள் என்று அவர் சொல்கிறார்!  நம்ப முடியவில்லை!)

    நூலாசிரியர் திரு செல்வ மீனாட்சி அவர்களைப் பற்றி

    வணிகவியல் முதுகலைப் பட்டதாரியாகி, வங்கியின் எழுத்தர் பணியில் தொடங்கிய இவரது பணிக்காலம பொதுமேலாளராக நிறைவடைந்தது. கொங்கு மண்டலத்தில் தொடங்கிய தன் வங்கிப் பயணததைக் கர்நாடக மாநிலம் மங்களூரில் தானாகவே நிறைவு செய்து கொண்டார். தற்போது சென்னை வேளச்சேரி இராமநகரில் வாழ்ந்து வரும் இவர் பிறந்தது மதுரை அனுப்பானடியில். அனுப்பானடியில் பிறந்ததால்  இவருக்கு குறளடி உள்ளிட்ட அத்தனை அடிகளும் அறிமுகம். வாய்பாடுகளை முன்னெழுதி அதற்கான கவிதைகளைத் தொடுப்பது இவரது தனிப்பாணி முகநூலில் இந்தக் குயிலின குரல் கேட்டதனால் இவருடைய முழுக் கச்சேரியையும் கேட்க விரும்பி நான் இவரிடம் கேட்டுப் பெற்ற நூல்தான் எண்ணம் பிறந்த மின்னல்’ ஐந்நூறு கவிதைகளில் உள்ள பாடுபொருள்களில் சிலவற்றைப் பற்றியே இந்தக் கடடுரை பேசுகிறது.  இவர்தம் கவித்துவம் பின்னர் பிறிதொருவரால் பேசப்படலாம். பேசப்படும்!

    (தொடரும்)

    Share