தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 48

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
வைரமுத்து கவிதை உவமங்களில் மரபு
முன்னுரை
தற்காலத் தமிழ்க்கவிதை உலகில் சில கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களை எழுதி வைத்துக்கொண்டு தன்னையொரு ‘மரபுப்பாவலர்’ என்று சொல்லும் போக்கு பெருகிவருகிறது. இத்தகைய போக்கு உண்மையில் இரண்டு வகையில் நெடிய தமிழ்க்கவிதை மரபினைப் பாதிக்கிறது. ஒன்று மரபு என்பது யாப்பு மட்டுமல்ல என்னும் புரிதலுக்கு எதிராக அமைகிறது. இரண்டு உண்மையான தமிழ்க்கவிதை மரபுகளை மீட்டுருவாக்கம் செய்யும் பணி முற்றிலும் தடைபடுகிறது. மரபு பற்றிய நிலைப்பாடு இதுவெனின் புதுமை பற்றிய நிலைப்பாடு இன்னும் மோசமாக இருக்கிறது. ‘சொல்புதிது பொருள்புதிது சோதிமிக்க நவகவிதை’ என்னும் மகாகவியின் தொடர் எவ்வளவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பதைத் தற்காலத்தில் வெளியாகும் கவிதை நூல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. மரபின் வேர்களிலிருந்து பிறக்க வேண்டிய புதுமைப்பூக்களைத் தவிர்த்து இறக்குமதிச் சரக்குகளைப் புதுமை என எண்ணும் போக்கும் நிலவுகிறது. புதிய பேனாவில் புதிய தாளில் எழுதுவதெல்லாம் புதுக்கவிதை ஆகிவிடாது. இந்தப் பின்புலத்தில் வைரமுத்து கவிதைகளில் இயல்பாகவே ஊடுருவி நிற்கும் மரபிழைகளை இந்தக் கட்டுரை சுருக்கமாக ஆராய முற்படுகிறது.
பொருளதிகாரத்தின் உள்ளடக்கம்
எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் அச்சொற்களால் அமையும் இலக்கியத்தைப் பற்றிப் பேசியதே பொருளதிகாரம். தமிழ்மீது அதீதப் பற்றும் உணர்ச்சி வசப்படும் இயல்பும் கொண்ட அறிஞர் சிலர் தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தமிழர்தம் வாழ்வியல் கூறும் நூல் என்று மயங்கினர். மயங்கி அக்கருத்தை வலியுறுத்தினர். வலியுறுத்தவே வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பவாகலின் உலகிலேயே வாழ்வுக்கு இலக்கணம் வகுத்தவன் தொல்காப்பியன் என்னும் பெருமைக்குள் அவரைத் திணிக்க முற்பட்டனர். காலம் செல்லச் செல்ல உலகம் தழுவிய இலக்கியம் மற்றும் திறனாய்வுக் கொள்கைகள் வெளிச்சத்திற்கு வந்த காரணத்தால் அவ்வாறு சொன்ன அறிஞர்களே தமது கருத்துக்களிலிருந்து பின்வாங்கினர். தொல்காப்பியம் அரிஸ்டாட்டிலின் ‘கவிதையியல்’ (POETICS) போலக் கவிதையிலக்கணம் கூறும் நூல் என்பதைப் புரிந்து கொள்ள நெடுங்காலத்தை நாம் இழந்திருக்கிறோம். எழுத்தினைத் தொடர்ந்து சொல், சொல்லினைத் தொடர்ந்து இலக்கியந்தானே இருக்க வேண்டும்? என்ற சாதாரண புரிதல் கூட இல்லாமல் போனது பேரிழப்பாக முடிந்தது. இந்த இழப்புத்தான் செய்யுள் மரபு அல்லது கவிதை மரபு என்பதைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் நம்மவர்க்கு இல்லாது போனதற்குக் காரணமாக அமைந்தது. அறிஞர் தமிழண்ணல், அ.சா.ஞானசம்பந்தனார் முதலிய அறிஞர்கள் காலம் கடந்து உணர்ந்த இந்த உண்மையை உணர்ந்து வெளிப்படுத்தினர். வளைந்து கோணிக் கொண்டு சென்ற தமிழ்க்கவிதைகள் பற்றிய கொள்கை விளக்கம் பெறுவதற்கு அவர்கள் உதவினர்.
தமிழ்க்கவிதை மரபு
வாழ்வியலைப் பேசுகிறவன் செய்யுளுக்கு இலக்கணம் செய்வானா? தொல்காப்பியச் செய்யுளியல் எந்த வகையில் வாழ்வியலாக முடியும்? தொல்காப்பியப் பொருளதிகாரத்தைக் கவிதை பற்றிய கொள்கை விளக்கக் குறிப்பு என்று தொடக்கத்திலேயே கண்டிருந்தால் தமிழ்த் திறனாய்வு இந்நேரம் உலக உச்சத்திற்குச் சென்றிருக்கும். இலக்கிய உருவாக்கத்தில் தொல்காப்பியத்தின் சட்ட திட்டங்கள் ஒரு பண்பட்ட சமுதாயத்தின் இலக்கியப் படைப்பாற்றலை எதிரொளிக்கிறது என்பதே உண்மை. இன்னார்தான் உவமம் சொல்ல வேண்டும்! இப்படித்தான் உவமிக்க வேண்டும்! இப்படித்தான் உவமம் அமைதல் வேண்டும்! தெரியாத பொருளை உவமம் சொல்லக் கூடாது. பெற்ற தாய் பேசவே கூடாது! என்றெல்லாம் ஓர் இலக்கியக் கட்டமைப்பை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தூக்கி நிறுத்திய இலக்கியப் பேராசிரியர் தொல்காப்பியர். தமிழில் ‘மரபு’ என்னும் சொல்லின் பொருளடர்த்தி மிகவும் ஆழமானது. தொல்காப்பியர் ‘நூன்மரபு’, ‘மொழிமரபு’, ‘தொகைமரபு’, ‘விளிமரபு’, ‘மரபியல்’ என்றெல்லாம் அதனை ஆராய்ந்திருக்கிறார். இவற்றைத் தவிர திணை மரபு, சொல் மரபு, பொருள் மரபு, கூற்று மரபு, யாப்பு மரபு எனப் பல்வகை மரபு சார்ந்த பொருண்மைகள் அவரால் ஆராயப்பட்டுள்ளன. ‘மரபுவழாநிலை’, ‘மரபுவழுவமைதி’ முதலியனவும் அவரால் ஆராயப்பட்டனவே. தொல்காப்பியத்தின் ‘அகப்பொருள் மரபு’ தமிழுக்கே சிறப்பானதும் நுட்பமானதுமாகும். மரபுக்கவிதைகள் என்றால் பொருண்மை, வடிவம், உத்தி ஆகியவற்றில் மரபு சார்ந்திருக்கும் கவிதைகளைக் குறிப்பதாகும். புதுக்கவிதைகள் என்பவை இவற்றின் மாறாக அமைந்திருப்பவை. வடிவத்தை இழப்பதானலேயே புதுக்கவிதை ஆகிவிடாது. இழப்பதனாலேயே ஒன்று புதுமையாகிவிடவும் முடியாது.
‘மரபு’ என்னும் சொற்பொருள் விளக்கம்
‘மரபு’ என்னும் சொல்லுக்குரிய வரைவிலக்கணம் தொல்காப்பியத்துள் காணுமாறில்லை. ஆனால் அச்சொல்லுக்கு விளக்கம் கூறப்புகும் உரையாசிரியர்கள் உள்ளிட்ட அறிஞர் பலரும் பல்வேறு சூழலுக்கேற்ப அதன் பொருளை விரித்துக் காட்டியுள்ளனர். தொல்காப்பியர் தனிமொழியாகவும் தொகைமொழியாகவும் சற்றொப்ப முப்பது இடங்களில் ‘மரபு’ என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இத்தகைய இடங்களில் எல்லாம் அச்சொல் பல்வேறு பொருளைக் குறித்து நின்றாலும் ‘உயர்திணை அஃறிணை ஆகிய இருவகைப் பொருட்களை, உலகியல் வழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்குகளிலும் சான்றோர் தொன்றுதொட்டு வழங்கிவரும் முறைமை’ என்னும் அளவிலேயே அதன் பொருள் புலப்பாடு நிறைவு பெற்றுவிடுவதாகத் தெரிகிறது.
“மரபென்ற பொருண்மை என்னையெனில் கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவும், செய்யுளியலுள் மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவுமன்றி இருதிணைப் பொருட்குணனாகிய இளமையும் ஆண்மையும் பெண்மையும் பற்றிய வரலாற்று முறைமையும் உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும் அஃறிணை புல்லும் மரனும் பற்றிய மரபும் அவைபற்றி வரும் உலகியல் மரபும் நூன்மரபும் என இவையெல்லாம் மரபெனப்படும்”
என்னும் பேராசிரியர் விளக்கத்தால் காணமுடிகிறது. இதனால் தொல்காப்பியத் தளத்துள் மரபு பற்றிய களங்கள் விரிந்து பரந்துள்ளன என்பதைத் தெளிவாக உணரமுடிகிறது. திருக்குறள், அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியுமாப் போலத், தொல்காப்பியத்துள் ஓதப்பட்ட அனைத்துக் கருத்துக்களும் தமிழ்நெறியே என்பதற்குச் சான்றாக, ‘நூன்மரபு’ எனத் தோற்றுவாய் செய்து ‘மரபியல்’ என முடித்துக் காட்டும் ஆசிரியரது சதுரப்பாட்டினை ஓர்ந்துணர்ந்து கொள்க.
மரபு பற்றிய தற்கால மதிப்பீடு
மரபியல் சார்ந்த கருத்துக்களும் சிந்தனைகளும் தொல்காப்பியத்துள்ளும் அதன் உரைகளுள்ளும் பல்வேறாகக் காணக்கிடக்கின்றன. கிடப்பினும் மரபியலை நன்குணர்ந்த ஆய்வறிஞர்கள் தற்காலத்துக்கு ஏற்ற வகையில் புதிய பொருண்மைகளை உள்ளடக்கிக் கூறும் விளக்கம் இங்குச் சுட்டப்படுவது பொருத்தமாகலாம்.
“மரபு என்பது இலக்கணம் மட்டுமல்ல., மரபு என்பது இலக்கியத்திற்கு மட்டுமல்ல., மரபு என்பது முந்தையத் தலைமுறைகள் சேர்த்து வைத்திருக்கும் அனுபவம், அறிவு, முடிவு ஆகிய அனைத்தும் சேர்ந்தது. கால நீட்சியில் மானுடவாக்கம் தன் அறிவுத் தோட்டத்தில், அனுபவத் திளைப்பில் உணர்ந்துத் தெளிந்து உருவாக்கிய முடிவுகள் அவை. வருங்காலத்திற்கென்று இலக்கியமாக, சமயமாக, அறநெறியாக, பிற அறிவுத்துறைகளாக முந்தையத் தலைமுறை விட்டுச் சென்ற அனுபவத் திரட்டுதான் மரபு. மத, சமூக அமைப்புக்களுக்குச் சடங்குகள் சம்பிரதாயங்கள் இருப்பது போல, இலக்கியத்திற்கும் மரபு இருக்கிறது. இலக்கிய மரபு என்பது வெறும் யாப்பு மரபு அல்லது இலக்கண மரபு மட்டுமல்ல. இலக்கிய ஆசிரியர்கள் காலம் தோறும் முன்வைத்து வந்திருக்கும் சிந்தனைகள், எண்ணங்களின் மரபும் இலக்கிய மரபுகள்”
எனப் பேராசிரியர் பாலா தரும் விளக்கம், மரபின் விரிந்து பரந்த ஆதிக்கத்தையும் அவ்வாதிக்க எல்லைக்குள் அதனுடைய பொருள் புலப்பாட்டுத் திறனையும் தெளிவாக்குவதாக உள்ளன.
வைரமுத்து உவமைகளில் மரபு போற்றுதல்
பாரதிதாசனுக்குப் பின் வந்த கவிஞர்கள், ‘புதுக்கவிதை’ என்னும் பெயரால் வடிவமாகிய உருவத்திலும் சிந்தனையாகிய உள்ளடக்கத்திலும் பெரும் மாற்றத்தைச் செய்தனர். கவிதைக்குக் ‘கருத்துக்களுக்கே முதன்மை’ என்னும் புதிய கருதுகோள் உருவாக்கப்பட்டது. உள்ளடக்கத்துக்கு அடுத்த நிலையிலேயே உருவம் மதிப்பிடப்பட்டது. இவ்வாறு காலத்திற்குக் காலம், வாழ்க்கையை இன்னதென்று அடையாளம் காட்டும் முயற்சியில், தமிழ்க்கவிஞர்களின் சிந்தனையும் மாறி வந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது. உள்ளடக்கத்திற்குப் பொருந்தும் மேற்கண்ட நிலைப்பாடு, அதனை வெளிப்படுத்தும் உத்திகளில் ஒன்றான உவமைக்கும் பொருந்தும். ‘மரபின் தாக்கம் அல்லது மரபின் ஆளுமை’ என்ற அளவில், மரபை ‘அப்படியே பின்பற்றுதல்’ என்னும் முறையில் வைரமுத்து கவிதைகளில் அமைந்துள்ள உவமைகளை இப்பகுதி ஆராய்கிறது. மரபு வழியாகப் பயன்படுத்தப்படும் உவமைகளின் பொருளாளுமை மிகவும் பொருத்தமாக இருந்ததாலும், அதற்கிணையான வேறொரு உவமம் கிட்டாத நிலையிலும் மரபு அப்படியே பின்பற்றப்படும். உண்மையில் இது முதன்முதலாக அவ்வுவமையைப் பயன்படுத்தியவரின் இலக்கிய ஆளுமைக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படலாம். அவ்வெற்றியைப் ‘பாட்டன் தேட்டம் பேரனுக்கு’ என்பது போலப் பின்னாள் தோன்றுகிற படைப்பாளர் அனைவரும் அனுபவிக்கின்ற உவம இன்பமாகும்.
இருவகை அழலிலும் எரியாத உவமம்
முறையான தமிழ்க்கல்வியைப் பெறக்கூடிய வாய்ப்பு கிட்டிய தமிழ்க்கவிஞர் சிலருள் வைரமுத்தும் ஒருவர். பழந்தமிழ் இலக்கியச் சிந்தனைகளும் அச்சிந்தனைகளை வெளிப்படுத்தி நிற்கும் சொற்களும் அவரையும் அறியாமல் அவருள்ளத்தில் பதிந்திருக்கின்றன. இதனால் மரபு என்பது அவர் மனத்துள் எல்லா நிலைகளிலும் எளிதாகப் பதிந்து போனதை உறுதி செய்யலாம். சான்றாகத்,
“திரியழல் காணின் தொழுப, விறகின்
எரியழல் காணின் இகழ்ப, ஒரு குடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக், கற்றான்
இளமை பாராட்டும் உலகு.”
என்னும் கீழ்க்கணக்கு வெண்பா ஒன்று, ‘அழலாகச் சுடுவதனாலேயே சுடரையும் நெருப்பையும் ஒன்றாகக் கருதமுடியாது. அதுபோல, அகவை மூத்திருப்பதாலேயே கல்லாதவனை மதித்துவிட முடியாது., கற்றவனுடைய இளமையே பாராட்டுக்குரியதாகும்’ என்னும் கருத்தைச் சுட்டுகிறது. விளக்குச் சுடரும் எரிநெருப்பும் ஒன்றாயினும் வேறுபடும் மதிப்பீட்டிற்குள்ளாவன. மூப்பு எல்லாருக்கும் பொதுவாயினும் கல்வியே மதிப்பிடும் கருவியாகும். இக்கருத்தையும் உவமத்தையும் உள்வாங்கிக் கொண்ட கவிஞர், தம்முடைய கன்னித் தொகுப்பான ‘வைகறை மேகங்களில்’ கோவலனின் ஒழுக்கச் சிதைவு அளவுக்கு மீறியது என்னும் கருத்து விளக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.
“அளவாகத் தீயெரிந்தால் அதனை விளக்கென்போம்
அளவுக்கு மீறிவிட்டால் அதனை நெருப்பென்போம்’
அளவுக்கு மேல்பொறுமை அன்னமே நீ காட்டியதால்
களவுக்குப் போனதம்மா காத்து வைத்த உன்சொத்து”
இவ்வரிகளில் நான்மணிக்கடிகையின் சாரம் அப்படியே படிந்திருப்பதைக் காணலாம். கோவலனின் புறவொழுக்கத்திற்கு ‘அளவு’ காணும் கவிஞரின் கருத்துப் பற்றி இங்கு ஆராய்வது நோக்கமில்லையாயினும், தொடக்கத்திலேயே கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் கவிஞரின் கருத்து நிலைக்காக, மரபு சார்ந்த உவமத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது ஈண்டுச் சுட்டப்படுகிறது.
கவரிமாவை(னை)ப் பின்பற்றும் கவிஞர்
‘கவரிமா’ என்பது விலங்கினங்களில் ஒன்று. ‘மா’ என்பது பொதுப்பெயர். ‘கவரி’ என்பது சிறப்புப் பெயர். எனவே ‘கவரிமா’ என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. இதனைக் ‘கவரிமான்’ என்றே தமிழிலக்கிய உலகம் வழங்கிவருகிறது. ‘கவரிமான்’ என்னும் வழக்கு திருக்குறளில் இல்லை. இந்தக் கவரிமாவின் சிறந்த இயல்பைத் திருவள்ளுவர் தம் திருக்குறளில் குடிப்பிறந்தார்க்கு உவமையாகப் பயன்படுத்துகிறார்.
“மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்”
என்னும் குறட்பாவில், தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவின் இயல்பை, மானத்தைக் காப்பதற்காக உயிரையே விடும் சான்றோர்களுக்கு உவமமாக்கியிருப்பதைக் காணலாம். மானத்தைக் காப்பதற்குப் பெரும்பாலும் உவமமாகப் பயன்படும் கவரிமாவைக் கவிஞரும் அதே பொருள் விளக்க நோக்கத்திற்காக,
“மயிருதிர்ந்தால் வாழாத மானமுள்ள மான்போல”
எனப் பயன்படுத்துவதை அறியமுடிகிறது. பிணத்தைப் பற்றிப் பாடவரும் கவிஞர் மயிரிழந்த மானை உயிரிழந்த பிணத்திற்கு உவமமாக்குகிறார். ‘உயிர்த்துடிப்பு போனதனால் உதவாத உடல் ஓடமாகிவிட்ட பிணத்தின் மான உணர்வை கவரிமானாகிய உவமம் கொண்டு விளக்குவதைக் காணமுடிகிறது.
பசித்தவன் முன் பசும்பால்
பசியால் வாடுபவனின் துடிப்பைப் பாவேந்தர் பாரதிதாசன் அழகியல் உணர்வை வெளிப்படுத்துதற்கு உவமையாக்கியிருக்கிறார்.
“பசித்த மக்கள்
சிறிது கூழ் தேடுங்கால் பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்”
முழு நிலவைக் காணும் இன்பத்திற்கு உவமையாக்கப்பட்டிருப்பது போலவே கவிஞரும்,
“உலகம் தண்ணீர்ப்
‘பஞ்சத்தில் தவிக்கின்ற போதில் நானும்
பசுப் பாலைப் பார்ப்பதுபோல்”
தண்ணீர்ப் பஞ்சத்தில் தவிக்கிறவன் பசும்பாலைக் கண்டதுபோல் தன் காதலியைக் கண்டு மகிழ்ந்தான் என உவமிப்பதைக் காணமுடிகிறது. இது போன்ற நேர்வுகளில் கவிஞர் அப்படியே மரபினை எவ்வித மாற்றமும் இல்லாமல் பின்பற்றிவிடுவதை அறியமுடிகிறது.
அடக்கமும் ஆமையும்
திருக்குறளில் ஒருமுறை ஒரு கருத்து விளக்கத்திற்காகப் பயன்படுத்திய உவமை, வேறொரு இடத்தில் வேறொரு கருத்து விளக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணமுடியவில்லை. மனம், மொழி, செயல் ஆகியவற்றில் அடக்கத்தைக் கடைப்பிடிக்க வற்புறுத்தும் நூல் திருக்குறள். அதனுள் மெய்யடக்கத்தை வற்புறுத்துதற்கு ஆமையை உவமமாகப் பயன்படுத்திக் கொள்வதை அறியமுடிகிறது.
“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து”
என்னும் குறட்பாவில் இடர்புகாமல் தனது ஐந்துறுப்புக்களையும் ஆமை அடக்கிக் கொள்வது போலப், பாவம் புகாமல் ஒருவன் தனது ஐம்பொறிகளையும் அடக்கிக் கொள்ள வேண்டும் என்னும் கருத்து விளக்கம் புலப்படுவதைக் காணலாம்.
பாவேந்தர் கண்ட ஆமை
உண்மையான பெண்ணுரிமைக்கு உரத்த குரல் எழுப்பியவர் பாவேந்தர். பிறப்பாலும் புலன்களாலும் ஆணுக்கிணையானவள் பெண் என்பது பாவேந்தர் கருத்து. தனிக்கவிதையாயினும் காப்பியமாயினும் பெண்ணைப் பற்றிப் பாடும் பொழுதெல்லாம் பண்பாட்டுக்குப் பங்கம் வராத உண்மையான பெண்ணுரிமையை அவர் வலியுறுத்த தவறியதே இல்லை. சஞ்சீவிப் பர்வதத்தின் சாரல் என்னும் காப்பியத்தின் பாத்திரமொன்றின் வாயிலாக,
“ஊமை என்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்
ஆமை நிலைதான் ஆடவர்க்கும் உண்டு.”
என ஆடவரின் பின்னடைவுக்கு ஆமையை உவமம் காட்டுகிறார். திருக்குறள் உவமையில் ஆமையின் ஒடுக்கம் நேர்முகமானது., பாவேந்தர் உவமையில் அது எதிர்முகமானது., கூடாதது. பெண்ணை மதிக்காவிடின் ஆடவரின் முன்னேற்றம் ஆமையின் உறுப்புக்கள் போல் உள்ளொடுங்கிவிடும் என்பது கருத்து.
வைரமுத்து கண்ட ஆமை
பாவேந்தரைப் பின்பற்றி மரபுக்கவிதை செய்யும் வைரமுத்து, உவமையால் மரபு காத்து, உறுப்பினரை மாற்றிவிடுகிறார். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நாற்குணங்களைக் கணவனோடு தனியாக இருக்கும் போது காட்டக்கூடாது என்பதைக் கூறவரும் கவிஞர், கணவன் வாய்மொழியில்,
“ஓட்டுக்குள் ஆமைபோல் உன்னை யொளித்தாய்”
எனப் பதிவு செய்கிறார். அடங்குதற்கு உவமமான ஆமை, ‘குறிப்பிட்ட சூழலில் அடக்கம் அதன் பயனைத் தராது’ என்பதற்கும் உவமமானது தமிழ்க்கவிஞர்களின் கவிதைத் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்துவதாகலாம்.
உள்ளும் புறமும்
ஓர் உண்மையை வலியுறுத்துவதற்குப் பல உத்திகளைப் படைப்பாளர் கையாளுவர். காணமுடியாத கடவுளின் உண்மையை நிலைநாட்ட திருவள்ளுவர் ஒலிவடிவான அகரத்தின் எழுத்துத் தலைமையை உவமையாக்கி உரைக்கிறார். கண்ணால் காண இயலவில்லை என்பதற்காக அகர ஒலியே இல்லையென்றாகிவிடாது., மாறாக எல்லா மொழிகளுக்குள்ளும் எல்லா ஒலிகளுக்குள்ளும் அவ்வகரம் மறைந்தே நிற்கிறது. அதுபோலக் கண்ணால் காணமுடியவில்லை என்பது கொண்டே இறைவனை இல்பொருளாக்கிவிட முடியாது., உணர்ந்து அனுபவித்து அறியவேண்டிய உண்மை அது. இது திருவள்ளுவர் கையாண்ட உவம நுட்பமாகும். இத்தகைய உவம உத்தியை திருக்குறளில் வேறுசில இடங்களிலும் அவர் கையாண்டிருக்கிறார் என்பதும் அதுவே உவம மரபாக மாறிவிடுகிறது என்பதும் ஈண்டுச் சுட்டப்பட வேண்டிய செய்தியாகும்.
மணிக்குள் நூலும் மொட்டுக்குள் மணமும்
கண்டதைக் கொண்டு காண இயலாததை உறுதி செய்து கொள்ளும் அளவையியலைச் சார்ந்த இவ்வுத்தியைத் காமத்துப்பால் தலைவனும் பின்பற்றுவதைக் காணமுடிகிறது. தலைவி தானுற்ற காதலை வெளிப்பட உரைத்தல் இயல்பன்றாதலின், தலைவன் இரண்டு உவமைகளைப் பயன்படுத்தித் தலைவியின் காதல் குறிப்பை உணர்ந்து கொள்கிறான்.
“மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு”
என்னும் தலைவன் கூற்றில், ‘மணியில் மறைந்திருக்கும் நூல்போல் இத்தலைவியின் அழகுக்குள் மறைந்திருப்பது ஒன்றுண்டு’ என்னும் கருத்து புலப்படுவதைக் காணலாம். ‘திகழ்தரு நூல்’ என்பதற்கு ஆசிரியர் பரிமேலழகர், “அகத்துக் கிடந்து புறத்துப் புலனாகா நூல்போல” என்னும் பதவுரையை ஈண்டுச் சுட்டுவது பொருத்தமாகலாம். மேலும்,
“முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு”
என்னும் தலைமகன் கூற்றிலும், ‘மொட்டுக்குள் மறைந்திருக்கும் மணம்போல் இத்தலைவியின் புன்னகையில் மறைந்திருப்பது ஒன்றுண்டு’ என்னும் கருத்து புலப்படுவதைக் காணலாம். ‘மொக்குள் உள்ளது நாற்றம் போல்’ என்னுந் தொடருக்கு ஆசிரியர் பரிமேலழகர் ‘முகிழ்ப்பின் உளதாய்ப் புறத்துப் புலனாகாத நாற்றம் போல’ எனக் கூறும் பதவுரையை நினைவு கூறலாம்.
அப்பர் கண்ட ஆண்டவன்
நாயன்மார்களில் ஒருவரான அப்பரடிகள், இறைவனின் உண்மையைக் கூறுதற்குத் திருவள்ளுவர் பயன்படுத்திய உவம உத்தியையே பயன்படுத்திப் பதிகம் பாடியிருக்கிறார். ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ முயன்றாலன்றி இறைவனைக் காண்பது அரிது என்னும் உண்மையை எடுத்துக்காட்டும் அப்பர் பெருமான்,
“விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்”
என இரண்டு உவமைகளால் உறுதி செய்வதைக் காணமுடிகிறது. விறகின்றி நெருப்பில்லை., விறகே நெருப்பில்லை., விறகுக்கு உள்ளேதான் நெருப்பு. பற்ற வைத்தால் விறகு நெருப்பாகும்., இல்லையெனின் விறகு விறகாகவே இருந்துவிடும்., பாலின்றி நெய்யில்லை., பாலே நெய்யில்லை., பாலுக்கு உள்ளேதான் நெய். பிறை ஊற்றித் தயிர், மோர், வெண்ணெய் என்னும் படிநிலைகளைத் தாண்டினால் கிடைப்பது நெய். படிநிலை இல்லையெனின் பால் பாலாகவே இருந்து விடும். மானுடத்தின் முயற்சியினால் கிட்டுவது இறைநிலை. இந்த உண்மையை விளக்குதற்கு அப்பர் கையாளும் உவம உத்தி தொடர்ந்து மரபாகி வைரமுத்து கவிதைகளிலும் இழைவதைக் காணமுடிகிறது.
வெடிக்குள் தீயான காதலன்
திருக்குறளிலும் தேவாரப் பதிகத்திலும் கையாளப்பட்டுள்ள இவ்வுவம உத்தியை வைரமுத்து கவிதைகளிலும் காணமுடிகிறது. கவிஞர் வைரமுத்து தமது கவிதைகளின் கன்னித் தொகுப்பான ‘வைகறை மேகங்களிலேயே’ இந்த உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார். காதலனைப் பிரிந்த காதலியின் புலம்பலாக அமைந்திருக்கும் கவிதையொன்றில்,
“தீ நின்ற வெடியாகச் சிதறிப் போகும்
தேன்நின்ற என்னுயிரைப் பார்”
என்னும் வரிகளில் தலைவியின் உயிர் வெடி. வெடிக்குள் தீயிருக்கிறது. வெடியே தீயில்லை. பற்ற வைத்தால் வெடித்துத் தீ சிதறும். தலைவனைப் பற்றிய எண்ணங்கள் தீ. தீயை உள்ளடக்கியது அவள் உயிர். ‘வருவான்’ என்றெண்ணிய தலைவன் வரவில்லையாதலின் அவள் உயிர் சிதறுகிறது. இத்தகைய பொருண்மைகளையெல்லாம் உள்ளடக்கிய மரபு சார்ந்த உவமமாக இது அமைந்திருக்கிறது.
கவிதைக்கு அழகூட்டும் காரணிகளில் முரணுக்கு முக்கியமான பங்குண்டு. அது சொல்லாலும் அமையலாம். பொருளாலும் அமையலாம். மேற்கண்ட எடுத்துக்காட்டில் தலைவன் அருகிருக்கும் போது தேனாக இருப்பது அவன் பிரிந்த போது தீயாக மாறுகிறது என்னும் முரண் கவிதைக்கு அழகு சேர்ப்பதைக் காணலாம்.
தீப்பெட்டிக்குள் சிறைகிடக்கும் தீ
‘கவிராஜன் கதை’ என்னும் பாரதி காவியம் முழுமையும் பாரதி கதிரவனாகவும் நெருப்பாகவும் உருவகம் செய்யப்பட்டிருக்கிறார். கவிஞர் பாரதியை ‘நெருப்பு’, ‘தீ’ என்னும் இரு சொற்களால் உருவகம் செய்வார். ‘தீயை’ யாரும் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தி வைத்தால் என்றாவது ஒரு நாள் பற்றிக் கொள்வது உறுதி. காசியில் தன் அத்தை வீட்டிலிருந்து திரும்பிய பாரதிக்கு எட்டையபுர அரண்மனையில் ஒரு பதவி கிடைத்தது. அந்தப் பதவி புயல் ஓய்வெடுக்கப் போதுமானதாக இல்லை. அந்த நிலையை விளக்க வரும் கவிஞர்,
“தீப்பெட்டிக்குள் சிறைகிடக்கும்
தீ மாதிரி
அரண்மனை வேலை
அவனை அடக்கியது”
எனப் பதிவு செய்கிறார். இவ்வுவமையில் தீ தீக்குச்சிக்குள் சிறையிருக்கிறது. தீக்குச்சிகள் தீப்பெட்டிக்குள் சிறையிருக்கின்றன. எனவே தீ தீப்பெட்டிக்குள் சிறையிருக்கிறது. தீப்பெட்டியே தீயில்லை. ஆனால் தீப்பெட்டிக்குள்தான் தீயிருக்கிறது. மகாகவி பாரதியை உரசினால் பற்றிக் கொள்ளும் தீக்குச்சிக்குள் தீயாகக் காணும் கவிஞரின் பார்வை பெரிதும் சிந்தனைக்குரியது.
நிறைவுரை
பண்பாடு குறையாத மரபுவழிக் கருத்துக்களையும் அழகியல் நிறைந்த கற்பனையையும் பாடும் நோக்கத்திற்கேற்ப உணர்ச்சியையும் கவிதைக் கட்டுக்கோப்பு சிதையாத வடிவத்தையும் கொண்டிலங்கும் வைரமுத்தின் கவிதைகளில் உவமங்களும் மரபியல் தழுவியனவாகவே அமைந்துள்ளன. பொருளாதாரம் காரணமாக நகர்ப்புற வாழ்க்கையில் தன்னை ஒப்படைத்துக் கொண்டாலும் வடுகப்பட்டியில் பிறந்து வாழ்ந்த நாள்களை மறக்காத படைப்பாளராகவே அவர் இருக்கிறார். இதற்கு அவருடைய ‘கள்ளிக்காட்டு இதிகாசமும் கருவாச்சி காவியமும்’ சான்றாகத் திகழ்கின்றன. மரபு சார்ந்த உவமங்களில் கூடச் சமுதாயப் பார்வையும் வாழ்வியல் நுண்ணியமும் ஆழமாகப் பதிவாகியிருக்கின்றன. அவற்றை இன்னும் ஆழமாக நோக்கிப் படித்துச் சுவைத்துப் பயன்பெறுவதற்கு இந்தக் கட்டுரை ஒரு கைகாட்டியாகலாம்!
(தொடரும்…)