தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 45

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

உவமம் என்பது ஒருபுடையன்று

முன்னுரை

‘ஒருபுடை’ என்றால் ஒரு பக்கம் என்பது பொருள். ‘ஒரு பகுதி’ என்பது பொருள். ‘ஒருபுடை’ என்ற சொல் தமிழாசிரியர் மற்றும் பேராசிரியர்களிடம் புழங்கி வருகிறது. எங்கே புழங்கி வருகிறது என்றால் அவர்கள் சொல்லும் உவம விளக்கத்தில் புழங்கி வருகிறது. சான்றாகப் ‘பசுபோல் சாதுவானவன்’ என்றால் பசுவின் இயல்பை மட்டுமே குறிக்குமேயன்றி அதன் தோற்றம், வினை, அதன் பயன்பாடு ஆகியவற்றைக் குறிக்காது என்பதாக அவர்கள் கருதுகின்றனர். அவர்கள் கருதாவிட்டாலும் அதுதான் உண்மை. காரணம் ஒரு பொருளை எதற்கெல்லாம் எப்படியெல்லாம் உவமிக்கலாம் என்பதை முன்னாலேயே வடிகட்டி வைத்திருக்கிறார்கள் நம்முடைய இலக்கண முன்னோர்கள்.  அவர்கள் அனைத்தும் அறிந்து அமைதியாக இருந்தவர்கள். உவம அமைப்பை வினை, பயன், மெய், உரு என வகுத்துவிட்டதனால் அந்தந்த வகையில் அவை முழுமையாகவே செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். இவர்கள் சொல்லுகிற ஒருபுடை என்பது நான்கு வகையுள் ஏதேனும் ஒன்றில் அடங்கிவிடும். ‘புலிபோலப் பாய்ந்தான்’ என்பது வினையுவமம். இதில் ‘ஒருபுடை’ என்ற பேச்சுக்கே இடமில்லை. அதாவது வினைக்கான உவமம் என்றாகிவிட்டதால் அதில் அது முழுமையானது. ‘ஓரளவு பாய்ந்தது’ என்று பொருள் தராது. ‘பால்போலும் இனிமையாகப் பேசினாள்’ என்பது பண்புவமம். ஓரளவு இனித்தாள் என்பது பொருளன்று. முழுமையாக இனித்தாள் என்பதே பொருள். இவள் கற்பில் கண்ணகி என்றால் அது கண்ணகியின் கற்பினை முழுமையாக உவமித்தது. ஓரளவு கற்பு என்றாகாது. அது அறியாமையினால் வந்த மயக்கம். ஒரு பொருளின் எந்தப் பகுதி உவமிக்கப்படுகிறது என்பதை வினை, பயன், மெய், உரு என்னும் பகுப்பே காட்டிவிடுதலின் ‘ஒருபுடை’ என்பது பொருளற்றது என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். பொருளின் அதாவது உவமேயத்தின் ஒரு கூற்றினை விளக்கவே உவமத்தின் ஒரு கூறு கொள்ளப்படுகிறது என்பது கருத்து. இந்த அடிப்படையில் மணிவாசகரின் திருவெம்பாவை, ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை ஆகிய இலக்கியங்களில் காணப்படும் சில உவமப்பயன்பாடுகளின் தனித்தன்மை இக்கட்டுரையில் சுருக்கமாக ஆராயப்படுகின்றது.

உவமத்தின் முழுப் பரிமாணம்

பொருள் விளக்கத்திற்காக உவமத்தைப் பொருளோடு நோக்குகையில் எத்தகைய நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைத் திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் தமது புலமைநலம் வெளிப்படக் கூறியிருக்கிறார். இரண்டு குறட்பாக்களின் உவம அமைதி கொண்டும் அவற்றுக்குப் பரிமேலழகர் தரும் விளக்கவுரை கொண்டும் இதனைத் தெளியலாம். எல்லாருக்கும் தெரிந்த குறட்பா,

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்” (969)

என்பதாகும். இக்குறட்பாவிற்குத்,

“தன் மயிர்த்திரளில் இருந்து ஒரு மயிர் நீங்கினும் உயர்வாழாத கவரிமானை ஒப்பார் உயிர் நீக்கத் தான் மானம் எய்தும் எல்லை வரின் அதனைத் தாங்காது இறப்பார்”

எனப் பதசாரம் எழுதிய பரிமேலழகர்,

“இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. உயிரும் மானமும் உடன் நில்லாமைக்கண் பின்னும் போவதாய உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய மானத்தை எய்துவர் என்பதாம்.

உவமை அவர்க்கு அது இயல்பென்பதை விளக்கி நின்றது”

என்று விளக்கவுரை தருகிறார். இந்த விளக்கவுரையில்தான் அவர் உவமத்தைப் பொருளோடு நோக்கும் நெறிபற்றித் தொல்காப்பியம் சொல்லாததைச் சொல்லுகிறார். என்ன சொல்லுகிறார்? ‘வாழாது’ என்பது உவவமத்தின் வினை. ‘நீப்பர்’ என்பது பொருளின் வினை. அவ்வளவுதான் உவமத்தினால் பெறக்கூடியது. தொல்காப்பிய விதிப்படி பெற வேண்டியது. பரிமேலழகர், சொல்லியது கொண்டு சொல்லாததைப் பெறுவதும் உவமக் கோட்பாடு அல்லது உவமப்பயன் என்று உவமத்தின் முழுக் கொள்ளளவையும் கொண்டுவருகிறார். அது என்ன முழுக் கொள்ளளவு? மயிர் இழந்த கவரிமா உயிரிழப்பது அந்த ஒரு மானுக்கன்று. அந்த மான் வர்க்கத்திற்கே இயல்பு. இந்தக் கருத்து பாட்டில் இல்லை. உவமத்தில் இல்லை. உவமம் இதற்காகவும் சொல்லப்படவில்லை. ஆனால் அழகர் உவமச்சுரங்கத்தில் இறங்கிப் பொருள் மணிகளைக் கொண்டுவருகிறார். யாராவது சான்றோர் என்பது இல்லை. சான்றோர் அனைவருக்கும் பொதுவான இயல்பு மானம் காப்பது. இது பாட்டில் சொல்லப்படாவிட்டாலும் உவமத்திலிருந்து பெறக் கூடிய கருத்து.

  1. மயிர்நீப்பின் கவரிமா உயிர்வாழாது என்பது அவ்வினத்திற்கு இயல்பு.
  2. மானமா? உயிரா? என்றவழி உயிர்கொடுத்து மானம் காப்பது சான்றோர்க்கு இயல்பு.

வள்ளுவரின் குறட்பாவில் இல்லாத அல்லது சொல்லப்படாத இந்தக் கருத்துக்களை உவமத்தின் முழுப்பரிமாணத்தையும் கொண்டு வந்து உரைசொல்லும் அழகர் எழுதுகிற உரையில் அறிய முடிகிறது.

“தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை” (964)

என்னும் குறட்பாவிலும் உவமத்தின் முழுமையான பொருட்பரிமாணத்தையும் வெளிக்கொணர முயல்கிறார் பரிமேலழகர். ‘மயிரனையர்’ என்பதால் இது பொருளுவமம். நிலையின் இழிந்த மாந்தர் என்பது பொருள். தலையின் இழிந்த மயிர் உவமம்.

“குடிப்பிறந்த மாந்தர் தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனின்று தாழ்ந்த வழி, தலையைவிட்டு அதனின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர்”

என்பதுதான் இந்தப் பாட்டில் சொல்லப்பட்ட கருத்து. பரிமேலழகர் என்ன செய்கிறார்? ‘இழிந்தக்கடை’ என்னும் சொற்பயன்பாட்டைக் கருத்திற்கொண்டு ‘உயர்ந்த கடை’ (உயர்ந்து நின்ற பொழுது) என்பதை வரவழைத்துக் கொள்கிறார். இந்தக் கருத்து குறட்பாவில் இல்லை. கொண்டு, (தலையினின்றும்) வீழ்ந்தபோது அதன் நிலை இவ்வாறென்றால் (தலையில்) இருந்தபோது அதன் நிலை என்ன என்பதைச் சிந்திக்கிறார். சிந்திக்கவே சொல்லப்பட்ட பொருளுவமத்தின் பொருட்பரிமாணத்தை இன்னும் ஆழமாக்கி,

“அந்நிலையை விடாது நின்றவழிப் பேணப்படுதலும் விட்டுத் தாழ்ந்தவழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்”

என்றும் எழுதுகிறார். அழகரின் இந்த நுண்ணியம் அழகருக்கே உரியது. மேலும் உவமத்தைப் பொருளோடு பொருத்துகிறபோது இலக்கண வரையறையைத் தாண்டியும் படைப்பாளனின் உள்ளத்தை ஊடுருவிச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தையும் எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. உண்மையில் ஒருபுடை ஒப்புமை என்றால் அழகரின் ஆய்வு ‘உரிமை மீறலுக்கு’ உரியதாம் என்க.

திருப்பாவையில் பெய்த மழை

பொருளை உவமிக்கிறபோது அணுஅணுவாக அனுபவித்து உவமித்திருக்கிறார்கள் சான்றோர்கள். முந்தைய பத்திகளில் எடுத்துக்காட்டப்பட்டனவெல்லாம் உரையாசிரியர் அதனைக் கையாள்கிற முறை பற்றியது. ஆனால் ஆண்டாள் நாச்சியாரும் மணிவாசகப்பெருமானும் பாடிய பெருமக்கள். படைப்பாளர்கள். இவர்களுள் நாச்சியார் பாடிய திருப்பாவையுள் ஒரு பாடலில்  உவமத்தைப் பொருளாக்கி உரைக்கிறார். மற்றொரு பாடலில் உவமத்தின் ஒவ்வொரு அசைவையும் பொருளுக்கேற்றியுரைக்கிறார். அதாவது ‘பொருளே உவமம் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும்’ (1239) என்னும் தொல்காப்பியத்தையும் கடைப்பிடிக்கிறார். உவமத்தின் வண்ணனைகளையும் செயல்பாடுகளையும் அப்படியே முழுமையாகப் பொருளுக்குப் பொருத்திக் காணவேண்டும் என்ற உவமக் கோட்பாட்டினை முன்னெடுத்து ‘ஒருபுடை ஒப்புமை’ என்னும் கருத்தியலை முற்றிலுமாக நிராகரிக்கிறார்.

“ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!”

இந்தப் பாட்டில் பெண்கள் மழைக்கண்ணனாகிய வருணனை விளித்து ‘பெய்திடாய்’ என்று வினைமுடிபு செய்கிறார்கள். செயப்படுபொருள் மழை. இந்த மழை எப்படிப் பெய்ய வேண்டும் என்று அவர்கள் விவரிக்கிறபோது பெருமாளின் தரிசனம் முழுமையாகக் கிட்டி விடுகிறது என்பதை உணரலாம். மழை எப்படிப் பெய்ய வேண்டுமாம்? நாச்சியார் சொல்கிறார்.

  1. ஆழியுள் புக்கு, நீரை முகந்து, ஆர்த்து, வான்வெளியில் ஏறி வருதல் வேண்டும்.
  2. ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுக்க வேண்டும்.
  3. பத்மநாபன் வலக்கையில் உள்ள சக்கரத்தைப் போல மின்னுதல் வேண்டும்.
  4. அவன் இடக்கையில் உள்ள சங்கின் நாதத்தைப் போல முழக்கம் வேண்டும்.
  5. சார்ங்கம் என்னும் வில்லினின்றும் பாயும் அம்புபோலப் பெய்தல் வேண்டும்.

சங்கு, சக்கரம், சார்ங்கம் என்னும் மூவகை ஆயுதங்களையும் உவமையாகச் சொல்லிப் பொருளாகிய மழையின் வினையை வரன்முறை செய்கிறார் நாச்சியார். உவமமயக்கமோ பொருள் மயக்கமோ ஏதுமின்றிப் பொருளின் ஒவ்வொரு வினைக்கும் பொருத்தமான உவமவினைகளை நிரல்படுத்திவிடுகிறார். திருப்பாவை இலக்கியத்தின் தனிப்பயன் நல்ல கணவன். பொதுப்பயன் நாட்டிற்கு நல்ல மழை. ஆதலின் உவமத்தைப் பொருளாக்கியுரைத்தார் என்க. ‘ஊழிமுதல்வன் உருவம்போல்’ மெய்கறுத்து என்றவழி மெய் உவமமும், உரு உவமமும் ‘ஆழிபோல் மின்னி ‘வலம்புரிபோல்’ நின்றதிர்ந்து என்றவழி வினையுவமமும் ‘சரமழைபோல்’ என்றவிடத்துப் பயன் உவமையும் அமைந்து மரபுவழி உவமக்கோட்பாட்டை வலியுறுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன.

திருவெம்பாவையில் பெய்த மழை

திருப்பாவையில் நாச்சியார் உவமத்தைப் பொருளாக்கிப் பொருளை உவமமாக்கியதைப் போலவே மணிவாசகப் பெருமானும் பாடியிருக்கிறார். மழையைப் பற்றிப் பாடுகிற இவ்விரண்டு பாடல்களிலும் இவ்வாறு பொருளே உவமமாகியிருப்பது நோக்குதற்குரியது.

“முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்”

“மேகமே! முதலில், இந்தக் கடல்நீரை உட்கொண்டு, மேல் எழுந்து, – எம்மையுடையாளாகிய அம்மையினது திருமேனி போல நிறத்தோடு விளங்கி, எம்மை அடிமையாகவுடையவளது,  சிற்றிடை போல மின்னி விளங்கி, எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த, – பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து,  அவளது திருப்புருவம் போல,- வானவில்லிட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய, அவ்வன்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கோமான் -எங்கள் தலைவனாகிய இறைவனது,  அடியார்களுக்கும், நமக்கும் – பெண்களாகிய நமக்கும், அவள் திருவுளங்கொண்டு,  முந்திச் சுரக்கின்ற இனிய அருளே போன்று, பொழிவாயாக!”. என்பதே இப்பதிகத்தின் பொருளாம். திருப்பாவையில் கண்டது போலத் திரும்வெம்பாவையில் காணும் உவமங்களைப் பொருளொடு பொருத்தினால்,

  1. உமாதேவியின் மேனி போல் மேகம் கறுக்க வேண்டும்.
  2. அம்மையின் இடைபோல மின்னல் தோன்ற வேண்டும்.
  3. அவள் காற்சிலம்புபோல இடி ஒலிக்க வேண்டும்.
  4. அப்போது தோன்றுகிற வானவில் அவள் திருப்புருவம் போல் திகழவேண்டும்.
  5. சிவபெருமானுடைய அருள் பொழிவதுபோல மேகம் மழையாகப் பொழிய வேண்டும்.

உமாதேவியின்  திருமேனி  நீல நிறமாகும். பெண்களது  இடைக்கு  மின்னலை உவமமாக்குவது இலக்கிய மரபு.  இறைவன் அம்மையின் மூலமாகத்தான் உயிர்களுக்கு அருளுவானாதலின், ‘அவள் அன்பர்க்கும் நமக்கும் முன் சுரக்கும் இன்னருளே!’ என்ன’ என்றனர். இது, நீராடச் சென்ற பெண்டிர் பொதுப்பயனாகிய மழையை வேண்டிப் பாடியதாம்.  இதனால், இறைவன் சத்தி மூலமாக மெய்யடியார்களுக்கு அருளை வழங்குவான் என்பது கூறப்பட்டது.

உவமத்தின் செயலணுக்கள்

‘உவமையால் பெற்றாம்’ என்னும் பரிமேலழகரின் தொடர் உவமத்தை எப்படி நோக்க வேண்டும்? நோக்கிப் பொருளோடு அதனை எப்படிப் பொருத்திப் பார்க்க வேண்டும்? என்ற புதிய நெறியைத் தமிழுக்கு வழங்கியிருக்கிறது. ‘பெற்றாம்’ உற்றுநோக்கிப் பெறவேண்டியது கற்பார் கடன்! உவமத்தின் பரிபூரணத்தை உணர்ந்தாலேயொழிய பொருளின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள இயலாது. அத்தகையதொரு உவமச் சித்திரிப்பை நாச்சியார் காட்டுகிறார்.

“மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!”

பள்ளிகொண்டிருக்கிற திருமாலை ஆயர்குலத்துப் பெண்கள் துயில் எழுப்புகிறார்கள்.  மேலே கண்ட பாடல்களில் பொருளை உவமமாக்கியும் உவமத்தைப் பொருளாக்கியும் ‘இது போல இது’ என்னும் விளக்கத்தோடும் (உவம விரியாக) பாடிய பெண்கள் இந்தப் பாட்டிலே உறங்கும் பெருமாளுக்குச் சிங்கத்தை உவமமாக்கி அதன் வினையை மட்டும் பாடுகிறார்கள். ‘படுத்திருக்கும் சிங்கம் எழுந்து வந்தாற்போலப் பள்ளிகொண்ட பெருமாள் எழுந்து வந்தான்’ என்று ஒரே தொடரில் உவமத்தைப் பொருளோடு பொருத்திக்காட்டிவிடலாம். ஆனால் நாச்சியார் உறங்கும் சிங்கத்தின் ஒவ்வொரு அசைவையும் நுணுகிக் கண்டு அனுபவித்துப் பாடுகிறார். உவமத்தையும் பொருளையும் முற்றுமாகப் பொருத்திக்காட்டும் உவமக்கோட்பாட்டை வலியுறுத்துவது இந்தக் கட்டுரையின் முதல் நோக்கமெனின் இந்தக் கட்டுரையின் இரண்டாவது நோக்கம் இப்படி அமைகிறது. அதாவது உவமத்தின் ஒவ்வொரு அசைவையும் நுண்பகுதிகளையும் உற்று நோக்கியுரைத்துக் கற்பாரை அவற்றைப் பொருளோடு பொருத்திப் பார்க்கத் தூண்டுவது. ‘ஒருபுடை உவமம்’ என்னும் தொடர் வெற்றசையாக வெளிறி நிற்பது இங்கேதான்.

பாட்டு முழுமையும் உவமமாகிய சிங்கத்தின் செயல்பாடுகளே நிரல்படுத்தப்படுகின்றன. ஆராயப்படுகின்றன. ‘மாரி மழை’ என்றால் மழைபோலப் பனிவிழும் மார்கழி என்பது பொருள். முன்னொரு பாசுரத்தில் ‘பனித்தலை வீழ’ என்றதும் அது. ‘முழைஞ்சில்’ என்றால் குகை. குகையில் படுத்திருக்கும் சிங்கம் எப்படிப் படுத்திருக்கிறது. ‘மன்னிக் கிடந்து உறங்குகிறது’. கடுங்குளிரில் தன் பெடையொடு செயலின்றி உறங்கும் சிங்கம் என்பது பொருள். மன்னி என்பதற்குச் சோம்பலை அள்ளிப் பூசிக்கொண்டு உறங்குகிறது என்று எழுதுவார் வியாக்கியாணக்கார். மழைக்காலம் முடிந்த நிமித்தங்கள் கண்டு, அதுவரை அசையாமல் இருந்தது – திடீரென்று உயிர் வந்ததுபோல் அசைந்து, உறங்கிய பின் பார்க்கிற முதல் பார்வையாகையால் சிறிது சிவந்து விழித்த விழிகள் – வேரி மயிர் பொங்க –என்றால் பரிமளம் என்கிற விலங்கினத்திற்குரிய மணம் கமழ – பிடரி மயிர்களை உதறி, வெப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து – உடம்பில் இன்னமும் ஒட்டியிருக்கும் சோம்பலை உதறுகிறதாம். முன்னங்கால்களை நீட்டி உடம்பை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்து, பின் பின்னங்கால்களை நீட்டி மறுபடியும் உடம்பை இழுத்து சோம்பலை உதறுகிறதாம். பிறகு முழங்கி வேட்டையாடக் கிளம்பும் சிங்கத்தைப்போலே என்று சொல்கிறார்கள் பெண்கள். ‘நான் என்ன சிங்கம் மாதிரி கருணை இல்லாமலா இருக்கிறேன்? பெருமாள் பார்க்க, (பார்ப்பதாக இவர்கள் எண்ணம்)  சிங்கத்தை உன் பெருமிதத் தோற்றத்திற்காகவே உவமித்தோம் என்பார், ‘பூவைப்பூவண்ணா!’ என்று தலைகீழாக மாறிப் பேசுகிறார்கள். காளையின் வீறுகொண்ட நடையும் வேழத்தின் பெருமிதமும் புலியின் சினமும் சிங்கத்தின் சாமர்த்தியமும் கொண்ட அரங்கனின் நடையழகை அனுபவித்துப் பாடுகிறார்கள் பெண்கள். வந்த காரிய நோக்கத்தைச் சொல்வதற்கு முன் இங்கே எழுந்து வந்து நாங்கள் வந்த காரியத்தை ஆராய வேண்டும் என்று வேண்டுகிறார்கள். என்ன காரியம் என்பதனைச் “சிற்றஞ் சிறுகாலே’ என்னும் அடுத்த பாட்டில் வைத்தார்கள்.

பாட்டில் சிங்கம் உவமம். அரங்கன் பொருள். அரங்கன் செய்ய வேண்டும் வினைக்கு சிங்கத்தின் வினைகள் உவமம். எனவே வினையுவமம். இந்த வினையுவமத்தில் ஒருபுடை என்ற பேச்சுக்கே இடமில்லை. அரங்கனைப் பற்றி ஓர் அசை கூடச் சொல்லாமல் அத்தனைச் செயல்பாடுகளையும உவமமாகிய சிங்கத்திற்கே நுண்துகளாக நோக்கி உரைத்தார். கவிதையாய் ஆக்கியுரைத்தார் நாச்சியார்.

“சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமாப் போலே”

என்பன உவம வண்ணனை. ‘அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து, உதறி, மூரி நிமிர்ந்து, முழங்கிப், புறப்பட்டுப் போதருமாப் போலே” என்னும் அத்தனை எச்சங்களும் உவமத்தின் தொடர் நிகழ்வுகள். எனவே அத்தனையும் பொருளான அரங்கனுக்கானவை. ‘போந்து, அருளி, காரியம் ஆராய்ந்து அருளேல்’ என்பது பொருளாகிய  அரங்கனுக்கானவை. ‘போந்து அருளி ஆராய்ந்து என்னும் எச்சங்கள் ‘அருள்க!’ என்னும் வினைமுடிபு கொண்டன. இந்தச் செயலைச் செய்வதற்கு முன்னாலே அரங்கன் எப்படி எழுந்து வந்தான் என்பதை உவமத்தைக் கொண்டு அனுமானிக்க வேண்டியது அறிவார் கடன்! அரங்கன் அருளையும் ஆண்டாள் அருளையும் வேண்டுவார் கடன்!

நிறைவுரை

வினை, பயன், மெய், உரு என உவமப் பயன்பாட்டின் நோக்கத்தை நான்காகப் பிரித்திருக்கிறார்கள். காரணம் அத்தகைய பிரிவு பிரிவின் அடர்த்தியைத் துல்லியமாக நோக்கி உவமத்தைச் சிறக்கச் செய்வது. அதனால் பொருளின் பரிமாணத்தை மேலும் புலப்படச் செய்வது. காட்டலாகாப் பொருளாகிய இறைவனுக்குத் திருவள்ளுவர் அகர ஒலியை உவமமாக்கிய நுண்ணியமும் ‘காணப்பட்ட உலகத்தினின்றும் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் ‘ஆதிபகவன் முதற்றே’ என உலகின் மேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க’ என்னும் அழகரின் உரையாழமும் ஈண்டு நினையத்தகுவன. மேற்கண்ட பத்திகளில் உவமத்தையும் பொருளையும் ஒவ்வொரு கூறாகப் பொருத்திக் காட்டிய ஒன்றும் உவமத்தை மட்டும் கூறு கூறாக விளக்கி அதன்வழிப் பொருளைப் புலப்படச் செய்த மற்றொன்றும் காட்டப்பட்டன. இவ்விரண்டு நெறிகளிலும் ‘ஒருபுடை’ என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். உவமம் அழகியல் சார்ந்தது மட்டுமன்று. பொருண்மையின் நுண்ணியம் துலக்கும் கருவியுமாகும்!.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.