குறளின் கதிர்களாய்…(381)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(381)
மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்
தாஅய தெல்லா மொருங்கு.
– திருக்குறள் – 610 (மடியின்மை)
புதுக் கவிதையில்…
சோம்பலில்
சுகமது காணா
சுறுசுறுப்பான மன்னன்,
அன்று
தன் அடியால்
ஓங்கி உலகளந்தோன்
கடந்த
உலகை யெல்லாம்
ஒருசேர அடைவான்…!
குறும்பாவில்…
தன் திருவடியால் உலகளந்தவன்
தாண்டிய உலகமனைத்தையும் ஒன்றாய்ப் பெறுவான்
சோம்பலே இல்லாத அரசன்…!
மரபுக் கவிதையில்…
தலையில் காலை வைத்தேதான்
தரணி யெல்லா மொன்றாக
அலையில் துயில்வோன் அளந்திட்ட
அகில மனைத்தும் பெற்றிடுவான்,
நிலையே யில்லா உலகத்தில்
நிம்மதி யென்றே சோம்பலென்னும்
வலையில் விரும்பி வீழ்ந்திடாத
வல்லோ னான மன்னவனே…!
லிமரைக்கூ…
மன்னவன் சோம்பலே இல்லான்,
மண்ணளந்தோன் அடியாலளந்த உலகை யெல்லாம்
ஒன்றாய்ப் பெற்றிட வல்லான்…!
கிராமிய பாணியில்…
கொடியது கொடியது
சோம்பலு கொடியது,
சோம்பலில்லா வாழ்க்க
சொர்க்கமா மாறுமே..
மாவுலி தலயில கால்வச்சி
மண்ண யெல்லாம்
ஒண்ணா அளந்த பெருமாளு
கடந்த
ஒலகத்த யெல்லாமே
ஒண்ணாப் பெறுவாரு
சோம்பலுல சொகம்காணாத
சுறுசுறுப்பான மகராசாவே..
தெரிஞ்சிக்கோ,
கொடியது கொடியது
சோம்பலு கொடியது,
சோம்பலில்லா வாழ்க்க
சொர்க்கமா மாறுமே…!