தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 47

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

உவமச் சிகரம் சுரதா! 

முன்னுரை

உலகவழக்கில் பாக்கியலட்சுமியைப் ‘பாக்கி’ என்றும்  வெங்கடேசனை ‘வெங்கு’ என்றும் அழைப்பதுண்டு. ‘சுப்புரத்தினதாசன்’ என்னும் நீண்ட பெயரை எழுதுவதற்கு அஞ்சலட்டையில் இடமில்லாத காரணத்தால் ‘சுப்பு – ரத்தின – தாசன்’ என்னும் தனது புனைபெயரையே சுருக்கெழுத்துப்போல் ‘சுரதா’ எனச் சுருக்கிக் கொண்டார். ‘வேண்டாத ஆணிகள்’ என்ற தொடரை நமது நகைச்சுவைக் கலைஞர் திரு. வடிவேல் அவர்கள் சொல்லித்தான் பலருக்கும் தெரியும். உண்மையில் அந்தத் தொடரை முதன் முதலில் பயன்படுத்தியவர் மேற்கண்ட நேர்வில் உவமைக் கவிஞர் சுரதாவே. கவிதை பற்றியும் கவிஞராவது பற்றியும் பெரும்பாலும் நடைமுறையில் இருக்கும் நம்பிக்கைகளோடு முரண்படுவார் அவர். கவிதையைக் கணிதமாகவே கருத வேண்டும் என்பர். கவிஞராவது பயிற்சியினால் உருவாவது என்னும் கருத்தியல் நிலைப்பாட்டாளர் அத்தகைய சிந்தனையாளர்தம் கவிதைகளில் பயின்றுள்ள சில அசாதாரணமான உவமங்களை ஆராய்வதாக  இக்கட்டுரை அமைகிறது.

சுரதா உவமங்கள் ஒரு பருந்துப் பார்வை

“உழைகுலாம் நயனத்தார் மாட்டு ஒன்றொன்று விரும்பற் கொத்த  அழகெலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்ற வல்லார்?” என்று கம்பராமாயணத்தில் ஒரு தொடர் உண்டு. சுரதாவின் கவிதை உவமங்களுக்கு இது அப்படியே பொருந்தும். பாடுபொருளைப் பற்றிய சிந்தனைகளைப் புதுமையாகவே அமைத்துக் கொள்வதும் பொருட்களைக் கவிதையாகவே நோக்குவதுமே இதற்குக் காரணம். பொருத்தமான ஆழமான அழகியல் சார்ந்த உவமங்கள் அவர்தம் கவிதைப் படைப்புக்களில் அமர்வதற்கு இதுதான் காரணம். அல்லி நிலவு கண்டும் தாமரை கதிரவன் கண்டும் மலர்கிறபோது வானத்து மின்னலுக்கு ஏதாவது மலராமலா இருக்கும்? என்ற சிந்தனையின் விளைவாகத்தான் ‘சுடர் மின்னற் கண்டுதாழை மலர்வதுபோலே உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே’ எனவும் ‘அகிலம் யாவும் அழகின் வேலை! நீல ஆகாயம் செங்கதிர் செல்லும் சாலை!’ எனவும் அவரால் எழுத முடிந்ததற்கு விரிந்த வான் நிகழ்வுகள் மேல் அவர் செலுத்திய நுண்ணோக்கே காரணம். பழந்தமிழ் இலக்கியப் பதிவுகள், இலக்கண நுட்பங்கள், இயற்கைக் காட்சிகள், வரலாற்று நிகழ்வுகள், சான்றோர் மொழிகள் என அனைத்திலும் அவருடைய இந்த நுண்ணோக்கு தனித்த ஆதிக்கம் செலுத்தியது. செலுத்தவே பொருண்மை விளக்கத்திற்கான உவமங்களும் புதிதாய் அவருக்குத் தோன்றியன. ‘அந்தக் காலத்து அரசன் பற்பலப் பெண்களைத் தழுவி மகிழ்ந்தாற்போல் வளைந்தும் நெளிந்தும் வருகின்ற பற்பல நதிகளைப் புணரும் தண்ணீர் நாயகன்’ என்று கடலை அக்கால மன்னர்களோடு ஒப்பிட்டுப் பாடுவதற்கு இந்த நுண்ணோக்கே காரணம்.

நால்வரும் இவரும்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞர்களில் மக்களைப் பாதித்தவர் நால்வர். மகாகவி, பாவேந்தர், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவர்களுடைய பாடல்கள் நிரல்நிரையாக விடுதலைப் போராட்டம் தொடங்கி இருபத்தோராம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை தமிழ்ச் சமுதாயத்தைப் பாதித்தே வந்திருக்கின்றன. அப்பாதிப்பு இன்றும் தொடர்கிறது. சமுதாயச் சிக்கல்கள் பெரிதும் பாதிக்காத கவிஞராகவே சுரதா இருந்திருக்கிறார் என்பது அவர்தம் கவிதைகளால் அறியப்படும்  ஆய்வுண்மையாகும். ஒட்டுமொத்த இந்தியாவின் சிக்கலைப் பாரதி பாடுபொருளாக்கியதுபோலவோ தமிழ் மொழி, இன, நாடு என்னும் இவற்றை இவற்றின் சுணக்கத்தைப் போக்கி எழுச்சியடையச் செய்ய வேண்டும் என்பனவற்றைப் பாரதிதாசன் பாடுபொருளாக்கியது போலவோ சுரதாவின் பாடல்களில் காண்பது அரிதாக இருக்கிறது. தனிமனித உளவியல் சிக்கல்கள் கண்ணதாசனின் பாடுபொருளாயின. உழைக்கும் வர்க்கத்தினரின் சிக்கல்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடுபொருட்களாயின. இந்த நான்கு கவிஞர்களிடமிருந்தும் சுரதா வேறுபடுவதாகவே தெரிகிறது. சுருங்கச் சொன்னால் கவிதை கவிஞனுக்கானது என்பதுதான் சுரதாவின் ஒருவரிப் படைப்புக் கொள்கையாக அமைந்திருக்கிறது. அவருடைய கவிதைகளில் ஆண்மையின் வீரியத்தைவிடப் பெண்மையின் நளினமே தூக்கலாக இருக்கிறது. அதேபோல், உரைநடையைப் பற்றிக் கூறும்போது, ‘‘உரைநடை – பசிக்குச் சோறு’’ என்று பதிலளித்தாராம். இதனால் கவிதையை அவர் விருந்தாகத்தான் கருதியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.    சமுதாயச் சிக்கல்கள் பெரிதும் பாதிக்காத கவிஞராகவே சுரதா இருந்திருக்கிறார். இது அவர்தம் ஒட்டுமொத்த கவிதைகளை ஆராய்ந்தவழி அறியப்படும் ஆய்வுண்மையாகும்.

உவமமாகும் இலக்கணக் குறியீடுகள்

வேறுபட்ட புதுமையான உவமங்களைக் கூறுவதில் சுரதா வல்லாளர் என்பது உண்மையே. இருப்பினும் இலக்கணக் குறியீடுகளை உவமமாகப் பயன்படுத்திய நுண்ணியமே அந்தப் பெருமைக்குச் சான்றாகத் திகழ்கிறது. இலக்கணக் குறியீடுகளின் உயிர்ப்புத் தன்மையை உள்ளத்தில் வாங்கி உட்கொண்டு, அதனை மாறுபட்ட கோணத்தில் உவமமாகக் கையாள்கிற கவிதைத் தொழில்நுட்பம் பெரும்பாலும் சுரதாவிடம் தொடங்கிச் சுரதாவிடமே நிறைவடைந்து விடுகிறது. அதற்குப் பின்னாலே வந்தவர்கள் ஏதோ பயன்படுத்தினார்கள். அவை வெற்றிபெறவில்லை. காரணம் இலக்கண உறவின்மை. இலக்கணப் புலமை என்பது வேறு. இலக்கணத்தைக் கவியுள்ளத்தோடு நோக்குவது என்பது வேறு. அந்த உள்ளத்தைச் சுரதா பயிற்சியினால் பெற்றிருந்தார்.

மணமக்களை இரட்டைக் கிளவியாக்கியவர்

பொதுவாகத் திருமண வாழ்த்துரை என்பது சடங்காக முடியும் ஒரு நிகழ்வு. மலரும் மணமும் போல, வீணையும் நாதமும் போல, அன்றில் பறவை போல’ என்றவாறே வாழ்த்துக்கள் அமைந்த காலம் அது. ஒரு திருமண விழாவில் மணமக்களை ‘இரட்டைக் கிளவிபோல்’ வாழுங்கள் என்று வாழத்தினார் சுரதா. இரண்டாகவே அமையும் என்பதும் பிரித்தால் பொருள் தராது என்பதும் இலக்கண உண்மை. கணவன்-மனைவி இருவராகவே வாழ்தல் வேண்டும் என்பதும் பிரிந்தால் இல்லறம் கடைபோகாது என்பதும் வாழ்வியல் நுண்ணியம். இந்த வாழ்வியல் நுண்ணியத்தை ஒரு இலக்கணக் குறியீட்டில் கண்டறிகிற திறன் அவருக்கு மட்டுமே இருந்தது. மணமக்களுக்கு இரட்டைக் கிளவியை உவமமாக்கியதில் சுரதாவின் தமிழ்ப்பண்பாடு பற்றிய கருத்தும் பார்வையும் மற்றொரு நுண்ணியமாக அமைந்திருக்கிறது. அது என்ன? தமிழ்ப் பண்பாட்டியலில் களவு மணம் என்பது விதிவசமானது. விதிக்கப்படுவது விதி. அதாவது இயற்கை. இதனை ‘ஊழ்’ என்பார் திருவள்ளுவர். ‘ஊழ்’ என்பதற்குச் சொற்பொருள் விரித்த பரிமேலழகர்,  ஊழ், பால், முறை, உண்மை, வைப்பு, தெய்வம், நியதி, விதி என்பன ஒருபொருட்கிளவி என்கிறார். ‘பாலது ஆணையின்’ என்பது தொல்காப்பியம்! இறையனார் அகப்பொருள் களவியலின் சாரமும் இதுவே. இன்றைக்கும் தமிழகச் சிற்றூர்களில் பெண்பிள்ளைகள் பூப்பெய்தியவுடன் சொல்கிற சொலவடை ‘இனிமேலா உனக்கு ஒருவன் பிறக்கப் போகிறான்?’ என்பதுதான். ‘ஏற்கனவே பிறந்திருக்கிறான்’ என்பது பொருள். எனவே தமிழ்ப் பண்பாட்டில் திருமணம் என்பது இயற்கை நெறிக்குட்பட்டது. அதனை விதியென்றும் சொல்லலாம். அதாவது இயற்கையாகவே நிகழ்கின்ற நிகழ்வு. ‘இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா’ என்பதனால் அது பிறக்கிறபோது இரட்டையாகத்தான் பிறக்கும் என்பது பெறப்படும், படவே மணமக்களின் பிறப்பும் மணமும் ஒன்றை மற்றொன்று நோக்கியது என்பதும் புலப்படும். ‘இறைவன் உறுதி செய்ததை மனிதர்கள் பிரிக்காதிருக்கட்டும்’ என்னும் விவிலியத்தின் சாரமும் இதுவே. மணமக்கள் இரட்டைக் கிளவிபோல் வாழ்க என்றால் தோற்றம், வாழ்வு, நிறைவு என எல்லாத் திறங்களிலும் ஒற்றுமையாக வாழ்க என்பது பொருள்.

உயிர்ப்புணர்ச்சியும் உடம்படு மெய்யும்

தமிழ்ப் புணர்ச்சியிலக்கணத்தில் அமைந்துள்ள நுண்ணியங்களில் ‘உடம்படுமெய்’ என்பது தனித்துவம் மிக்கது. மெய்யோடு உயிர் சேர்தல் என்பது இயல்பு. மெய்யோடு மெய் சேராது, இணையாது. அப்படிச் சேர்ந்தால் அதற்கு மெய்ம்மயக்கம் என்று பெயர். அதனைப் போன்றே உயிரோடு உயிர் இணையாது. சில நேர்வுகளில் அவ்வாறு இணையும். இரண்டு உயிர்கள் இணையும் போது அவற்றை இணைக்கும் பற்றாசிட்டாகப் பயன்படுவது மெய். அதற்குத்தான் ‘உடம்படு மெய்’ என்று பெயர். உலகத்தில் உயிரால்தான் மெய்க்குப் பெருமை. தமிழிலக்கணத்தில் மெய்யால்தான் உயிருக்கு வாழ்வு! மெய்தான் இரண்டு உயிர்களையே இணைக்கிறது! இந்த இலக்கணப் பின்புலத்தில் சில செய்திகளைக் காணலாம்.

சிலப்பதிகாரம் காட்டும் புணர்ச்சி

சிலப்பதிகாரத்தில் ஆர்வம் காட்டப்படாத பகுதிகள் எனச் சில உண்டு. அவற்றுள் கண்ணகி கோவலன் இல்லறம் பற்றியது. கண்ணகியின் இல்லறம் பற்றி அடிகள் முழுமையாகக் கூறவில்லை என்பாரும் கண்ணகியைவிட மாதவி கோவலனுக்குப் பொருத்தமானவள் எனப் புகார்நகரத்தில் மாதவி வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் அப்போது வாழ்ந்தவர் போலவும் இங்கே கதை விடுவார் பலர். அடிகள் எழுதுகிறார்,

“வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்,
தாரும் மாலையும் மயங்கிக், கையற்று”

என்று. இது கதைப்போக்கில் கண்ணகியும் கோவலனும் முதல் நாள் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வு. மனையறம்படுத்த காதையின் இறுதியில் ஆசிரியர் இளங்கோவடிகள் தன் கூற்றாகக் கூறுகிறார்.

“தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என, ஒருவார்
காமர் மனைவி எனக் கைகலந்து, நாமம்
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் – மண்மேல்
நிலையாமை கண்டவர் போல் நின்று!”

சிற்றூர்களில் பல நேர்வுகளில் பாம்புப் புணர்ச்சியைக் காணலாம்.  நாகமும் சாரையும் என்பார்கள். உண்மையில் நாகமும் நாகமுமே புணரும். அவ்வாறு புணருங்கால் இரண்டு பாம்புகளின் வால்களின் நுனி மட்டுமே தரையில் நிற்கும். மற்ற பகுதிகள் உச்சித் தலைவரை இரண்டும் பின்னிப் பிணைந்து நிற்கும். ஆடாது, அசையாது. பிறகு ஒன்றினை ஒன்று தழுவிக்கொண்டு தரையில் புரண்டு விளையாடும். அப்போதும் உடல் பிரியாது. கண்ணகியையும் கோவலனையும் மன்மதனோடும் ரதியோடும்   உயர்திணையில் இணைத்துக் கூறிப் புணர்ச்சியைப் பாம்புகள் மேல்வைத்துக் கூறிப் பண்பாடு காத்தவர் அடிகள்.

சுரதாவின் கவிதையில் இலக்கணப் புணர்ச்சி

பாவேந்தர் இந்த இல்லறப் புணர்ச்சியைத் தமிழ்நாட்டுப் பெண்களின் நாட்கடமையில் வைத்துக் கூறியிருக்கிறார். பாவேந்தர் எழுதிய குடும்ப விளக்கு ஒரு நாள் நிகழ்ச்சி படுக்கையறையில் நிறைவு பெறுகிறது.

“சொல்லரிதாய் மிகஇனிதாய் நாழி கைபோம்!
சுடர்விழிகள் ஈரிரண்டு நான்கு பூக்கள்
புல்லிதழில் போயொடுங்கும் தமை மறந்து
பூரிப்பார் நலம்பாடி இரவு செல்லும்!”

என்று அந்த இரவைத் தமிழ்ப் பண்பாட்டுக் குறிப்போடு நிறைவு செய்திருப்பார் பாவேந்தர்.

“கச்சிதமாய் உறங்கிக் கொண்டிருப்பேன் வீட்டில்;
கண்கலந்த என் கணவர் அருகில் வந்தே
நச்சரிப்பார்; நயமாகப் பேசி, சற்றே
நகரென்பார்; நான்மறுப்பேன்; ஊடல் தீர்ப்பார்!

“இச்சமயம் ஒளியிலையே அத்தான்” என்பேன்;

“இருள்தானே பூனைக்கு வேண்டும்!” என்பார்;
உச்சரிப்பு நின்றுவிடும்; தொடுவார்; ஈர
உடைபோல்நான் அவருடலில் ஒட்டிக் கொள்வேன்.”

நீர்நிலைகளில் குளித்து வரும் பெண்கள் ஈர உடையை அணிந்து இல்லம் திரும்புவது தமிழகத்துப் பெண்டிரின் நாட்கடமை. படுக்கையறையில் உவமம் சொல்கிற பெண், தனக்கு நாளும் பழக்கமான ஒன்றினையே உவமமாக்குகிறாள் என்பதுதான் உவமச் சிறப்பு. அவள் அறிந்தது குற்றாலம்! அதனால் உவமமாக்குகிறாள். அவள் நயாகராவைச் சொல்லியிருந்தால் உவமப்பூ ஊமத்தம்பூ ஆகியிருக்கும்! பாவேந்தர், சுரதா ஆகியோர் பாடல்களுக்குத்,

“தனியாகக் காணவருவார் – இவள்
தளிர்போலத் தாவி அணைவாள்
கண்போலச் சேர்ந்து மகிழ்வாள் – இரு
கண்மூடிமார்பில் துயில்வாள்

எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ

மலராத பெண்மை மலரும் முன்பு
தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும் – முன்பு

விளங்காத கேள்வி விளங்கும்
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ”

என ஒரு திரையிசைப் பாடலில் பதவுரை, விளக்கவுரை, சிறப்புரை ஆகிய அனைத்தையும் எழுதியிருப்பார் கண்ணதாசன். பாவேந்தர் பாடியது அப்படி! சுரதா பாடியது அப்படி! கண்ணதாசன் உரையெழுதியது இப்படி! இவை எல்லாவற்றையும் ஒரே ஒரு இலக்கணக் குறியீட்டில் அடக்கிவிடுகிறார் சுரதா!

“பூவெல்லாம் பொன்னே உன் உடலின் மீது
பூத்திருக்க நீயவற்றைப் பார்த்திருந்தும்
காவெல்லாம் சென்று சென்று நின்று நின்று
கால்நோவப் பூப்பறித்துச்சூடும் பெண்ணே!
நாவில் நீ! நெஞ்சில்நீ! அஞ்சன் ஆட்சி
நல்லதமிழ்ப் பாடல் நீ! அன்றோ என்றான்!
ஓவம்மாள் ஈன்ற மகள் சிரிப்பை ஈன்றாள்!
உடம்படுமெய் இலக்கணத்தை இரவில் கண்டார்!”

பூ+அழகு என்பது ‘பூவழகு’ என்று இணையும். இச்சொல்லில் நிலைமொழி ஈற்று ஊகாரமும் வருமொழி முதல் அகரமும் உயிர். உடம்பொடு உயிர் வந்து ஒன்றுவதுதான் இயல்பு. இங்கே உயிரல்லாத வேறொரு மெய் (வ்) தோன்றி இணையாத உயிர்களை இணைப்பதைக் காணலாம். உடல் பிணைப்பை உடம்படுமெய்யாக்கி உவமித்ததன்மூலம் உயிர்ப்பிணிப்பின்  துடிப்பைக் கேட்க வைத்திருக்கிறார் சுரதா!

எதுகையும் மோனையும்

நாற்பத்து மூன்றுவகை தொடை விகற்பங்களில் பாட்டுக்கு அழகூட்டி அதனைச் நிலைக்கச் செய்வன எதுகையும் மோனையும். இதற்கு அடுத்த படியாக முரண் அமையலாம். தொடைவிகற்பங்களை அளவடிக்கு மட்டுமே கணக்கிட இயலும். பொதுவாக ஆண் முன்னாலே செல்வதும் பெண் அவனைத் தொடர்ந்து பின்னாலே செல்வதும் உலக வழக்கு. ‘எங்கெங்கே போனாலும் நிழல் போகும் தன்னோட எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட’ என்பது புலமைப்பித்தன் கண்ட பெண்மை. ‘நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்’ என்பதும் வழக்கு. ஆதிமந்தி – ஆட்டனத்தி இருவரும் வருகிறார்கள்.

“மதிமதுரப் புலவரெல்லாம் மகிழ்ந்து பாட
வரலாற்றுப் பேரழகி ஆதிமந்தி
எதுகைவரல் போல் அடுத்து வந்தாள் அத்தி
என்பானோ மோனையைப்போல் முன்னே வந்தான்!”

தமது கவிதைப் படைப்புக்களில் ஒவ்வொரு அசையிலும் மரபையன்றி வேறு எதனையும் பதியம் போடாத சுரதா, இங்கே ‘முன்னாலே’ வந்த அத்தியை மோனையாக்கினார். ‘அடுத்து’ வந்த ஆதிமந்தியை எதுகையாக்கினார். ‘எழுவாய் எழுத்தொன்றின் மோனை…………இரண்டாம் வழுவா எழுத்தொன்றின் எதுகை’ என்னும் தொடையிலக்கணத்தை உயர்திணை வரவுக்கு உவமமாக்கியிருக்கிறார்.

பரிசும் விருதும் பகுதி போன்றது

பதமாகிய சொல் பகுபதம், பகாப்பதம் என இருவகைப்படும். பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறுறுப்புக்களைப் பெற்று வருவது பகுபதம். இவற்றுள் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடைநிற்பது சந்தி. விகுதிக்கும் இடைநிலைக்கும் இடைநிற்பது சாரியை. பகுதி தவிர ஏனைய மாற்றத்திற்குரியன. தொட்டான், தொட்டாள், தொட்டனர், தொட்டது, தொட்டன என்னும் ஐம்பால் வினைச்சொற்களில் பால்காட்டும் விகுதிகள் மாறி நிற்பதும் ‘தொடு’ என்னும் பகுதியாகிய ஏவல் நிலைத்து நிற்பதும் காண்க. இதிலிருந்து ஒரு பகுபதம் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டாலும் அதன் உயிராகிய பகுதி மாறவே மாறாது. நிலைத்து நிற்கும். பாரதிதாசனுக்குப் புரட்சிக்கவிஞர் என்பதைத் தவிர வேறு எந்தப் பட்டமும் பொருந்தாமற்போனது. நம் சுரதாவிற்குப் பொருந்திய ‘உவமைக் கவிஞர்’ என்னும் பட்டம் வேறு எவருக்குமே பொருந்தாமற் போனது.  தற்காலக்கவிஞர் சிலர் போட்டுக் கொள்கிற பட்டம் மொட்டைத் தலையில் பூ தைப்பது போலப் பொருந்தாமற் போய்விடுகிறது. அவர்கள் ஒரு நாளைக்கு நாலைந்து முறை பட்டங்களை மாற்றிப் போட்டாலும் அவை நிலைப்பதில்லை. காரணம் பெற்றவருக்கும் தகுதியில்லை. கொடுத்தவர்க்கும் தகுதியில்லை. விளம்பர உலகில் இது வெகு சாதாரணம். இதனைச் சொல்கிறார் சுரதா.

“தகுதி மிக்கோர் தருகின்ற பட்டம்
பகுதி போன்று நிலைத்து நிற்கும்”

வினைச்சொல்லுக்கும் வினையாலணையும் பெயருக்கும் மட்டுமே பகுதி உண்டு. தகுதி உடையவர் தருகின்ற பட்டங்கள்தாம் நிலைத்து நிற்கும். வி.சி.கணேசனுக்குச் ‘சிவாஜி’ என்னும் பட்டத்தைக் கொடுத்தவர் தந்தை பெரியார். மோகன்தாஸ் காந்திக்கு ‘மகாத்மா’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர் தாகூர். தகுதியுடையவர் தந்த பட்டங்கள் அவை. நிலைத்து நிற்கும் என்ற உண்மையை வினைச்சொல்லில் பகுதி நிலைத்து நிற்கும் என்னும் உறுப்பிலக்கண உண்மையோடு உவமமாக்கி விளக்கியவர் சுரதா.

உவமப் பந்தி

திருக்குறள் உவமங்களின் தனித்தன்மை பற்றிய கட்டுரை இந்தத் தொடரின் ஐம்பதாவது இறுதிக் கட்டுரையாக அமையும். திருக்குறளில் ஒரு கருத்தினை விளக்கத் திருவள்ளுவர் மற்றொரு கருத்தினையே உவமமாக்குவார். உவமமாகும் அந்தக் கருத்து வேறொரு அதிகாரத்திற்கு உரியதாகவும் இருக்கும். வேறொரு உண்மையை உணர்த்துவதாகவும் இருக்கும். விரிப்பின் பெருகும். அந்த நெறியில் வந்த சுரதா தற்காலத் தமிழர்களின் நிலையைப் பாடவருகிறார். பாரதியைப் போல் இவருக்கும் நெஞ்சு பொறுக்கவில்லை. என்ன சொல்கிறார்? தமிழர்கள் மேல்நாட்டாரைப் போல் இருக்க வேண்டும் என்றெல்லாம் கதைவிடவில்லை.

“இன்றுள்ள தமிழரெல்லாம் அந்த நாளில்
இருந்தவர்போல் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்!
என்றென்றும் செந்தமிழைக்காத்தல் வேண்டும்!
ஏமாற்றும் மனப்பான்மை மறைதல் வேண்டும்!”

என நறுக்குத் தெறித்தாற் போல் பதிவிடுகிறார். தமிழினத்திற்கு இணையானதொரு இனம் அன்றைக்கும் இல்லை. என்றைக்கும் இல்லை. இவனை விளக்க உவமம் ஏதுமில்லை. இவனுக்கு இவனே உவமம் என்று கருதிய சுரதா அக்காலத் தமிழனைத் தற்காலத் தமிழனுக்கு உவமமாக்கினார். இதுவரையில் தமிழ்க்கவிதைகளில் கண்டிராத உவமக் கோட்பாடு!

“மணமாலை தனைசூடி உறவாடுவார்! மனம்
மாறாமல் பலகாலம் உறவாடுவார்!
ஒருகாலத் தமிழ்நாடு இதுதானடா! இதை
உன்காலத் தமிழ்நாடு அறியாதடா”

என்னும் கண்ணதாசன் பாடல் இங்கே நினைக்கத்தகும்.

கணிதமும் உவமமாகும்

உயிரெழுத்து பன்னிரண்டு. மெய் பதினெட்டு. குற்றியலுகரம் ஆறு, தளை ஏழு, தொடைவிகற்பங்கள் நாற்பத்து மூன்று, கலிப்பா மூன்று,  கலிப்பாவின் உறுப்புக்கள் ஆறு எனக் கணிதத்தோடு தொடர்புடையது தமிழ். ‘ஏரம்பம்’ என்பது அந்நாளில் மக்கள் வழக்கில் இருந்த கணித நூல். சுரதா எதனையும் கவிதையாக நோக்கும் பேராற்றலுடையவர்.

“உயரத்தைப் படுக்க வைத்தால் நீட்டமாகும்
உள்ளத்தைப் பழுக்கவைத்தால் புதுமை தோன்றும்”

உயரத்தை ஆணவத்தின் குறியீடாகவும் நீட்டத்தைப் பணிவின் குறியீடாகவும் பயன்படுத்தியிருக்கிறார். பக்குவம் பணிவைத் தரும்.  முதிர்ச்சியைப் பழம் என்பது மரபு. ‘ஞானப்பழம்’ என்பது முருகனுக்கான திருநாமங்களில் ஒன்று. அனுபவத்தில் முதிர்ந்த சான்றோர்களைப் ‘பழுத்த பழம்’ என்பது உலகியல்.  ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ என்பது பெரியாரைப் பற்றிய பாவேந்தரின் உருவகம். ‘தேனாய்த் தீம்பழமாய்’ என்பது திருவருட்பா. ‘பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்’ என்பது பூவை செங்குட்டுவன் வரி!

பூவை செங்குட்டுவனும் சுரதாவும்

“கெடலெங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க” என்பார் பாவேந்தர். பிறரை ஊக்குவிக்கும் பேருள்ளம் படைத்தவர் சுரதா. வறுமையின் உச்சத்தில் வாடியவர் செங்குட்டுவன். வாடகை சைக்கிள் கடைவைத்துப் பிழைப்பு நடத்தியவர். ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ என்ற பூவையின் பாடலைப் பிலிம்சேம்பர் விழாவில் இயக்குநர் ஏ.பி. நாகராசன் அவர்களோடு அமர்ந்து கேட்ட கண்ணதாசன் வியந்து போயிருக்கிறார். ‘தான் எழுதியிருந்தாலும் அவ்வளவு சிறப்பாக எழுதியிருக்க முடியாது’ என்று மனந்திறந்து பாராட்டி, அந்தப் பாடலைக் ‘கந்தன் கருணை’ என்ற படத்தில் இணைக்கச் சொன்னார். கவிஞர்களுக்கு இந்தப் பேருள்ளம் மிகவும் இன்றியமையாது இருக்க வேண்டிய பண்பு. பலரிடம் இல்லை என்பது உண்மை. இந்தப் பாடலைப் பற்றி அன்றைக்குச் சென்னை நூலகத்தில் நடைபெற்ற விழாவொன்றில் ‘வில்லிப்புத்தன்’ என்னும் நபர் ‘திருப்பரங்குன்றத்தில் சிரித்துத் திருத்தணியில் எதிரொலித்தால் முருகன் என்ன வில்லன் சிரிப்பா சிரித்தான்?’ என்று ஏளனமாகக் கேட்டிருக்கிறார். கூட்டத்தில் அமர்ந்திருந்த சுரதா வெகுண்டெழுந்தார். “ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் இடைவெளி குறைவாக இருந்தால் இடையில் பேசுவதால், பாடுவதால் ஏற்படும் ஒலி மிகுந்து ஒலிக்கும். பள்ளத்தாக்கு உட்பட்ட இடைவெளியில் மிகுந்து ஒலிப்பதற்குக் காரணமாக இருப்பதால் மலைக்குச் ‘சிலம்பு’ என்பது காரணப்பெயர். ‘சிலம்பு என்பதற்கு ‘ஒலித்தல்’ என்பதும் ‘மலை’ என்பதும் பொருள். காலில் அணிகிற சிலம்பின் பரல்கள் ஒலிப்பதால்தான் அதற்குச் சிலம்பு என்பது பெயர். செங்குட்டுவன் சிறப்பாக எழுதியிருக்கிறார். எதனையும் தெரிந்து பேச வேண்டும். தெரியாமல் உளறக் கூடாது’ என்று கண்டித்திருக்கிறார். நினைத்துப் பார்க்க முடியாத நிகழ்வு. ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் உதவுகின்ற பேருள்ளத்தையும் ஒருங்கே பெற்றவர் சுரதா. கட்டுரைப் பொருளுக்குத் தொடர்பில்லாவிடினும் ஒரு மாபெரும் கவிஞனைப் பற்றிய வரலாற்று நிகழ்விலிருந்து அவனுடைய பண்பாட்டை அறிந்து கொள்வதற்காகச் செய்யப்பட்ட பதிவு இது.

உவமத்திற்கும் உவமம் சொன்ன சுரதா

எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் உவமம் சொன்ன சுரதா உவமம் எதனைப் போல் இருக்க வேண்டும் என்று உவமத்திற்கே உவமம் சொல்லியிருக்கிறார்.

“கவிதையில் கருத்து வேண்டும்!
கட்டாயம் உவமை வேண்டும்!
உவமைதான் கவிதைகட்கு
உயிர்நாடி பெருமை சேர்க்கும்!
உவமை யிலாத பாடல்
உப்பு சேராத பண்டம்!
அவிழ்ந்திடா தாமரைப்பூ!
அழகில் லாத மங்கை!”

உயிர்நாடி, உப்பு, அவிழ்ந்த தாமரைப்பூ, அழகுடைய மங்கை என்னும் உவமங்களை ஒரு முழுக்கவிதையோடு ஒப்பிட்டு நோக்கினால் உவமத்தின் அருமை புரியக் கூடும்.

சுழிக்குள் சிக்கிய சுரதா

தனது வழிகாட்டி பாவேந்தரைப் பாடுகிறார் சுரதா. அது ஒரு கையறு நிலைப்பாடல். கையறுநிலைப் பாடலில் பாடப்படும் இரக்கத்திற்குரிய தலைமகனின் பெருமைகள் மட்டுமே சுட்டப்படல் வேண்டும் என்பது இலக்கிய மரபு. ஒரு பாட்டில் ஒரு உவமம்தான் சொல்லப்பட வேண்டும் என்பதும் உவமத்திற்கு உவமம் புணர்த்தல் ஆகாது என்பதும் பழந்தமிழ் உவமமரபு. சுரதா பாடுகிறார்,

“திருத்தத்தில் வெற்றிபெற்றான் ஒட்டக் கூத்தன்
தீர்ப்பளித்து வெற்றி பெற்றான் கரிகாற்சோழன்
நிருத்தத்தில் வெற்றிபெற்றான் ஆட்டனத்தி
நிதியளித்து வெற்றி பெற்றான் பாரிவள்ளல்
வருத்தத்தில் வெற்றிபெற்றான் வடலூர் வள்ளல்
வாளேந்தி வெற்றிபெற்றான் சேரலாதன்
விருத்தத்தில் வெற்றி பெற்றான் கம்பன் அந்த
வெற்றியினை இவர்பெற்றால் என்னைப் போல”

என்று. இந்தப் பாட்டைப் படிக்கின்ற அன்பர்கள் பலரும் இதனை உவம அணியாகக் கொண்டு பாராட்டி மகிழ்கின்றனர். அது சரியே. ஆனால் உவம இலக்கண வரையறைக்குள் இது அடங்குமா என்பது சிந்தனைக்குரியது.

உவம அணியும் எடுத்துக்காட்டு உவமமும்

எடுத்துக்காட்டு (EXAMPLE) என்பது வேறு. ஒப்பீடு (SIMILE) என்பது வேறு. எடுத்துக்காட்டே ஒப்பீடானால் அது எடுத்துக்காட்டு உவமம். இந்த நுட்பத்தை அறியாமல் எடுத்துக்காட்டு உவமையின் வெளித்தோற்றத்தை மட்டும் கண்டவர்கள் பொருளையும் உவமத்தையும் தனித்தனியே கூறி உவம உருபைக் கூறாது விடுதல் எடுத்துக்காட்டு உவமம் என்றே சொல்லிவருகிறார்கள். இது பாடத்திட்டக் குழுவின் பாடநூலில் சொல்லப்பட்ட வரையறைக்குட்பட்ட மதிப்பெண் மயக்கம். இலக்கிய ஆராய்ச்சியில் உவமத்திற்கான ஆய்வுப் பார்வையைக் கல்வி நிலையங்கள் எதிரொளிப்பதில்லை. ஆனால் உவம அணி அத்தகையதன்று, உவமமும் பொருளும் ஒவ்வொரு துகளும் ஒத்திருத்தல் வேண்டும். ஒருபுடை என்ற பேச்சுக்கே இடமில்லை.

உயர்ந்ததன் மேற்றே உள்ளுதல் வேண்டும்

வினை, பயன், மெய், உரு என்னும் நான்கும் தனித்தனியாகப் பாடுபொருளாகும்போது உவமங்களும் தனித்தே இயங்க வேண்டுமேயன்றி மயங்குதல் கூடா. இந்தப் பாட்டில் மூன்று செய்திகளை நிரல்படுத்துகிறார் சுரதா!

  1. வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்.
  2. பாவேந்தர் பெற்ற வெற்றி
  3. சுரதா தன்னை உவமமாக்கிப் பாவேந்தரைப் பொருளாக்கியது

இந்த வகைபாடுகளில் முதலில் வெற்றிபெற்றவர்கள் பல்வினை நாயகர்கள். அவர்கள் அடைந்த வெற்றிதான் ஒப்புமையே தவிர, அது எவற்றால் எல்லாம் பெற்றார்கள் என்பது ஒப்புமை ஆகாது. வெற்றி ஒரு காட்டலாகாப் பொருள். அது தொழிற்பெயர் என்றால் அதற்கான காரணங்கள் ஒன்றாக இல்லை.

  1. திருத்துவதில் ஒட்டக் கூத்தர்
  2. தீர்ப்பளிப்பதில் கரிகாற்சோழன்
  3. நாட்டியத்தில் ஆட்டனத்தி
  4. நிதியளிப்பதில் பாரி
  5. வருத்தத்தில் வள்ளலார்
  6. வாளேந்துவதில் சேரலாதன்

தனித்தனி தன்மை கொண்ட ஆறு வினைகளை நிரல்படுத்தி எடுத்துக் காட்டுகிறார். இவற்றுள் எங்கே இருக்கிறது உவமம்? இவர்கள் பெற்ற வெற்றியைத்தான் மற்றொரு வெற்றியோடு ஒப்பிடுகிறார். அது கம்பன் விருத்தத்தில் அதாவது விருத்த யாப்பில் பெற்ற வெற்றி. கம்பன் பெற்ற வெற்றியைச் சுரதா பெற்றிருக்கிறார். சுரதாவைப்போல் பாவேந்தரும் பெற்றிருக்கிறார். யாரை உயர்த்திப் பாட வந்தாரோ அவரைப் பொருளாக்கினால் அவருக்கான உவமம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். இது ஆய்வு. ஆனால் வெளிப்பாட்டு உத்தியில் பொருளான பாவேந்தர் உவமமாகிய சுரதாவினும் குறைந்திருக்கிறார். சுரதா தன்னையே உவமமாக்கியதால் இதனை உணரலாம். ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை’ என்னும் விதியின் அடிப்படையில் நோக்கினால் பாவேந்தரினும் சுரதா உயர்ந்துவிடுகிறார். இதனால் பாடுபொருள் மயக்கத்திற்கும் தடுமாற்றத்திற்கும் ஆளாகிறது என்பதோடு கவிச்செருக்கின் காரணமாகப் பாட்டு மாசடைகிறது. விடுதலைப் போராட்டத்திற்குப் போர்ப்பரணி பாடிய பாரதி, வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்புக் கவிதை அளித்ததைக் கல்வியாளர் கா.திரவியம் ஒரு சுருதிபேதமாகவே தமது ‘தேசியம் வளர்த்த தமிழ்’ என்ற நூலில் கூறுகிறார். பாரதிதாசனைப் பற்றிய சுரதாவின் இந்தப் பார்வையும் அவரது படைப்புக்களில் ஒரு கரும்புள்ளியாகவே தெரியும்.

நிறைவுரை

சுரதா அவர்களுக்கு அன்றைய சங்க இலக்கியம் முதல் இன்றைய புதுக்கவிதை வரை இயல்பான நீச்சல் குளம். பாரதிக்கு ஒரே ஒரு தாசன்தான் அவர் பாரதிதாசன் மட்டுமே. ஆனால் பாரதிதாசனுக்கு பல தாசன் கிடைத்தார்கள் அவர்களில் நானும் ஒருவன் என்கிறார் சுரதா அடக்கமாக. ஆனால் தாசன்களில் முதலிடம் பெற்றவர் சுரதாதான்.

“தண்ணீரின் ஏப்பந்தான் அலைகள்,

“பறக்கும் நாவற்பழம் வண்டு”

“கரும்புக்குப் பூத்த வெறும்பூ”

“உன்னைப்பார்த்தால் மதுவுக்கும் கூட மயக்கம் வரும்”

“கனவில் கூடச் சோரம் போகாத நானா விலைமகள்?”

“இழுத்துவிட்ட மூங்கில் போல நிமிர்ந்தான்”

“நீ தொட்டால் விஷம் கூடச் செத்துவிடும்”

என்றெல்லாம் உரைநடையைக் கவிதையாக்கிக் கவிதையை உரைநடையாக்கி இரண்டிற்கும் கலப்புமணம் செய்து வைத்தவர் சுரதா! ‘‘அவன் உரைக்காத உவமையில்லை. அவனுக்குத்தான் உவமையில்லை’’ என்பார் திரைப்படப் பாடலாசிரியர் வாலி. சுரதாவைக் கொஞ்சம் படித்த பிறகு “சுரதாவைப் போல யாராவது எழுத மாட்டார்களா? என்று ஒரு நாள் என் தந்தையைக் கேட்டேன்! தந்தை திருப்பிக் கேட்டார்! “உன் ஆசைக்கு அளவேயில்லையா?” தந்தை சொன்னால் தமிழ் சொன்னது மாதிரி!

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *