Author: admin

  • அகநானூற்றில் இல்லற விழுமியங்கள்

    இரா. அமுதா

     

    முன்னுரை

     

              உலகில் இனத்தாலும் மொழியாலும் தனித்தன்மை உடையவரே தமிழர்; ஆவார். சங்ககாலம் தமிழரின் வரலாற்றில் தலைசிறந்த காலம். சங்ககால மக்களின் மாசற்ற வாழ்வினை வெளிப்படுத்தும் காலம். இக்காலத்தே தோன்றிய இலக்கியங்கள் கருத்துவளமும் கற்பனைச் சிறப்பும் பொருந்திய அழகான பாடல்களைப் பெற்று மிளர்வன. ஈராயிரம் ஆண்டுகட்க்கு முன்னே தமிழர் வாழ்ந்த வாழ்க்கையை விளக்குவன. தமிழ் மக்கள் பலமுறை பயின்று படித்துப் பயன்பெறும் வற்றாத செல்வங்கள் அவை. புறத்தே தோன்றும் காட்சிகளையும் அகத்தே தோன்றும் கருத்துகளையும் புனைத்து நிற்கும் அழகு ஓவியங்கள் அவை. சொல்வளமும் இனிமையான ஓசையும் கொண்டு மனித மனத்தை ஆராய்ந்து கூறுவதோடு பல்வேறு இல்லற, தனிமனித,சமுதாய விழுமியங்களை வெளிப்படுத்துவதில் சங்க நூல்கள் சிறப்புமிக்கதாயுள்ளன.

              சங்க இலக்கியங்கள் என்று கூறப்படும் பத்துப்பாட்டு;ம், எட்டுத் தொகையும் தமிழரின் பொற்கால இலக்கியங்களாகப் போற்றப் பெறுகின்றன. அவைகள் பண்டைத் தமிழர்தம் வாழ்வில் கொண்டிருந்த சிறந்த கொள்கைகளையும் எண்ணங்களையும் நமக்கு மானுட விழுமியங்களாக உணர்த்திவருகின்றன.

              தமிழர் தம் பண்பாட்டு வாழ்க்கைக்கு, பண்பட்ட வாழ்க்கைக்கு அடித்தளமாகத் திகழ்வது அகவாழ்க்கையே என்பதைச் சங்கப்பாக்கள் புலப்படுத்தி நிற்கின்றன. சங்க இலக்கியங்களில் பத்துப் பாட்டில் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய மூன்றும் எட்டுத் தொகையில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்தும் அகவாழக்கையைப் பற்றிக் கூறும் இலக்கியங்களாகும.; இவற்றில் அகநானூற்றில் கூறப்பட்டுள்ள அகவாழ்விற்கு அடித்தளமான இல்லறம் பற்றியும்,அவற்றுள் வெளிப்படும்  விழுமியங்கள் பற்றியும் ஆய்வதே இக்கட்டு;ரையின் நோக்கமாகும்.

    இல்லறம் –

              ஆண், பெண் இருவரும் மனம்ஒத்து, கருத்தொத்து இணைந்து வாழ்க்கை நடத்துவதோடு பல்வேறு அறங்களையும் ஆற்றுபவர்களாக இருப்பதே இல்லறத்தின் சிறப்பாகும். இல்வாழ்க்கை வாழ்பவன் பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூவர்க்கும் மட்டுமின்றி துறவிகள், ஏழைகள், இறந்த முன்னோர்கள் ஆகியோர்க்கும் துணையாக இருந்தல் வேண்டும். பழிக்கு அஞ்சுபவனாகவும், பகுத்துண்ணும் வழக்கம் உடையவனாகவும் வாழ்தல் வேண்டும். அவனது வாழ்வில் அன்பும் அறமும் இருத்தல் வேண்டும். இவ்வாறு அறநெறியில் இல்லறத்தில் வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன் தெய்வத்துக்குச் சமமாகக் கருதப்படுவான். ஆதலால் நல்ல மனைவி, மக்களையும், சுற்றத்தினையும் பெற்று வாழும் ஆண்மகனுக்கு அமையும் வாழ்க்கைத் துணையாளும் குடும்பத்திற்கு ஏற்ற குணநலன்களோடு நற்பண்புகளையும், கற்பு என்னும் வலிமையையும் பெற்று வாழ்க் கூடியவளாக இருத்தல் அவசியம். சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றில் இத்தகைய சிறப்புகளையும் மாண்புகளையும் கொண்ட தலைவன், தலைவியரை மையமாகக் கொண்ட பாடல்கள் புனையப்பட்டுள்ளன. ஆதலால் இந்நூலில் வெளிப்படுத்தப்படும் இல்லற விழுமியங்கள் காலத்தால் அழியாததாகவும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகவும் இருப்பதில் ஐயமில்லை.

    இல்லற அறம் –

              சங்க காலத்தில் ஆற்றுதல், போற்றுதல், பண்பு, அன்பு, அறிவு, செறிவு, நிறைவு, முறை, பொறை முதலான இல்லற அறப்பண்புகள் வாழ்வியலில் மேற்கொள்ளப்பட்டன. பொதுவாக இன்னுரை பேசுதலும் இன்னாதன செய்யாதிருத்தலுமே சிறந்த அறமாகக் கருதப்பட்டது. இல்லறக்கடன் ஆற்றுதல் வேண்டி தலைவன் பொருள் தேடிச் செல்லலும் அவன் வரும்வரை தலைவி ஆற்றியிருந்து இல்லறக்கடன் ஆற்றுலும் அகநானூற்றில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் அறம்பல புரிவதற்கும் பிறர் கடைவாயில் சென்று நிற்காத நிலைமைக்கும் பொருள் இன்றியமையாதது என்பதனை

                       “அறன்கடைப் படாஅவாழ்க்கையும் என்றும்

                     பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும்

                     பொருளின் ஆகும்”           (அகம் 155:1-3)   

      

              என்ற பாடல் விளக்குகிறது. இப்பாடல் இல்வாழ்வில் அறம் தவறாதிருத்தலையும் பொருளின் இன்றியமையாமையையும் விளக்கி இல்லற விழுமியங்களை வெளிப்படுத்துகிறது.

              இல்வாழ்வார்க்குரிய அறச் செயலின்றும் பிறழாமல் நடத்தலும், நெருங்கிய சுற்றத்தார்க்கு எய்திய துன்பங்கள் பலவற்றையும் நீக்கி அவர்களை நல்வாழ்க்கை வாழச் செய்தலும் வேண்டுமெனில் தலைவியாகிய நீ சிலகாலம் என் பிரிவை ஆற்றியிருத்தல் அவசியம் என்று தலைவன் கூறுவதை

                        “அறந்தலைப் பிரியாதுஒழுகலும் சிறந்த

                      கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும்

                      வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்” (அகம் 173:1-3)

             

              என்ற பாடல் விளக்குகிறது. நாம் துன்பத்தால் வாடி வருந்தினாலும் கவலையில்லை என்று சொல்லிய மனத்தின் தூய்மையை உணர்த்தும் இல்லற விழுமியம் போற்றத்தக்கது.

    விருந்தோம்பல் –

              இல்லறத்தில் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று விருந்தோம்பல். விருந்தோம்பும் பெருவாழ்க்கையினை மகளிர் விரும்பினர். போக்குவரத்து வசதிகளும்,காசு கொடுத்து அறுசுவை உணவு கொள்ளும் உணவுச் சாலைகளும் இல்லாத அக்காலத்தில் விருந்தோம்பற் பண்பு சிறந்த இல்லற அறமாக மேற்கொள்ளப்பட்டது. விருந்தோம்பலைத் தலைமக்களுக்குரிய சிறந்த கடமைகளுள் ஒன்றாகத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.

                        “விருந்து புறந்த ருதலும் சுற்றம் ஓம்பலும்

                      பிறவும் அன்ன கிழவோர் மாண்புகள்” (தொல் கற்பு-11)

              என்ற வரிகள் விருந்தோம்பலைத் தலைசிறந்த விழுமியமாக எடுத்துரைப்பதைக் காணலாம். பண்டைக் காலத்தில் வீடு தேடி வரும் புதியவர்களே விருந்தினர் எனப் போற்றப்பட்டனர். அவர்களை அகமும், முகமும் மலர இனிதே வரவேற்று விருந்தளித்தனர் என்பதை

                        “வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பிற்

                       செறிந்த சேரிச் செம்மன் மூதூர்“(அகம்:15:6-7)

     

     என்ற வரிகள் விளக்குகின்றன.

    இல்லற மகளிர்க்குரிய மாண்புகள்

              சங்க அக இலக்கியங்களின் வாயிலாக பெண்களின் பண்பாட்டை ஓரளவு உணர்ந்து கொள்ளலாம். ஒரு குடும்பம் வாழ்வதும், தாழ்வதும் பெண்ணால்தான் என்று அக்கால மக்கள் நம்பி வந்தனா.; அந்த நம்பிக்கை இன்றும் உண்டு. பெண்கள் புகுந்த வீட்டின் இயல்புக்கேற்ப நடந்து கொண்டு பிறந்த வீட்டைப் பற்றி எண்ணி இருப்பர். பிறந்த வீட்டின் உதவியை எதிர் பாராதும், உதவி கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளாதும் வாழ்ந்து சிறப்பு எய்தினர். அவர்கள் வாழ்வில் அன்பும், அறமும், அறிவும் பின்னியதாகவே அமைந்திருந்தது.

              பொருள்வயின் பிரிய எண்ணிய தலைமகன் தலைவியின் இயல்புகளை எண்ணி செலவழுங்கிநிற்கும் இடத்தில்

                         “….. நன்மனைப்

                      பன்மாண் தங்கிய சாயல் இன்மொழி” (அகம் 193 : 11-12)

              என்று கூறி தலைவியை சிறப்பிக்கின்றான.; நாள்தொறும் விருந்தோம்பல் முதலான நல் அறங்கள் நிகழ்தற்கு இடமான நன்மையுடைய நமது இல்லத்திற்கு உரியவளாகிய கற்புடை மகளிர்க்;கு இன்றியமையாத பல்வேறு மாண்புகளும் பொருந்திய தலைவி என்று தலைவியின் சிறப்புகளைத் தலைவன் விழுமியங்களாக வெளிப்படுத்துகின்றான். இதே கருத்தை தொல்காப்பியம்.

                       “கற்பும் காமமும் நற்பால் ஒமுக்கமும்

                     மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்

                     விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்

                      பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்” (தொல் கற்பு-11)

    என்று தலைவியின் மாண்புகளை எடுத்துரைக்கிறது.

     இல்வாழ்வில் மழலை இன்பம் –

              அக்காலத்தில் மக்கட்பேற்றைப் பெறும்போதுதான் உண்மையான உh,,,யர்ந்;த நிறைவு பெற்ற மனித நிலையை ஒவ்வொருவரும் எய்தினர் என்ற கருத்தை உணர்த்துகின்ற பாடல்கள் பல அகநானூற்றில் இடம் பெற்றுள்ளன. அத்தகு மாண்புடைய மக்கட்பேற்றை அடைந்தவரின் விழு நிலையையும், அடையாதவரின் இழி நிலையையும் இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.

              இல்வாழ்க்கையின் பயனாக மக்களைப் பெற்றவரையே மாண்புடையவராகத், தலைமைப்பேறு உடையவராகப் பண்புடையோர் கருதினா.; குழந்தைப் பேற்றின் காரணமாக இவ்வுலகத்திலும் புகழொடு விளங்குவார்கள். மறுமை உலக வாழ்வினையும் குற்றமின்றி எய்துவர் எனப் பலரும் கூறிய பழைய மொழிகள் எல்லாம் உண்மையாதலைக் காணலாம் என்பதனை

                       “இம்மை உலகத்து இசையொடும் விளங்கி

                      மறுமை உலகமும் மறுவின்று எய்துப

                      செறுநரும் விழையும் செயி;ர்தீர்;  காட்சிச்

                      சிறுவர்ப் பயத்த செம்மலோர் எனப்

                       பல்லோர் கூறிய பழமொழி  எல்லாம்,

                       வாயே ஆகுதல் வாய்த்தனம் – தோழி” (அகம்:66:1-6)

     

     என்ற பாடல் விளக்குகிறது.

    வறுமையில் செம்மை –

            கணவன் இல்லம் வறுமையுற்ற போதிலும் செல்வம மிகுந்த தம் தந்தை வீட்டை நாடிச் செல்லாத தலைவி சிறப்பிக்கப்படுகிறாள். தலைவனின் இல்லிலிருந்து வந்த தலைவியிடம் தலைவன் இல் குறித்து வினவும் தோழியிடம் தலைவி உயர்வாகக் கூறி கணவன் இல்லறத்தைச் சிறப்பிக்கிறாள்.  இல்லறப் பெண்கள் அழகாலும், குணத்தாலும் சிறந்ததோடு, அன்பு, தலைவன் மனமறிந்து வாழ்தல், புதல்வரைப் போற்றும் பாங்கு, இல்லறக் கடமை, தெய்வக்;கற்பு முதலானவற்றான் சிறப்புற்று விளங்கி இல்லறத்தைச் சிறப்பித்தனர்.

    தன்னலமற்ற பண்பு –

                            ‟விளைகவயலே! வருக இரவலர் ” (ஐங்.2:2)

              என்ற அடி தமிழர் அருள் நெறியை விளக்குவதாகும.; வயலில் தானியங்கள் விளைவது நமக்கு மட்டுமன்று இல்லாதவர்களுக்கு உதவுவதற்காகவே என்ற கருத்தைக் கொண்டதே இவ்வடி. இல்லறமே நல்லறம் என்ற கொள்கை தமிழரின் உயாந்த அருள் நெறியை உணர்த்துகிறது. இல்லறத்தில் வாழ்கின்றவர்கள் உழைத்து, உற்பத்தி செய்து பிறர்க்கு உதவும் தன்னலமற்ற பண்பு உடையவர்கள் என்பதனை அக நூல்கள் உயர்ந்த விழுமியமாகக் காட்டுகின்றன.

              தமிழர்கள் அகத்தையும்,புறத்தையும் இரு கண்களாகக் கண்டனர் அகம், புறம் என்னும் இரண்டும் ஒற்றுமை,வேற்றுமைகளைப் பெற்றிருப்பினும் புறத்தினும் அகமே சிறப்புடையதாகக் கருதப்பட்டது. புறத்திணைப் பொருளான வீரம் மக்களுள்  சிலர்க்N;க உரியது. ஆனால் அகத்திணைக்குப் பொருளான காமமோ ஆண் பெண் என்னும்  பிரிவுகளைக் கொண்ட உயர்திணை, அஃறிணை உயிர்களுக்கெல்லாம் பொதுவானதாகும். ஆண் பெண் இணைந்து வாழும் உயர்திணை வாழ்வினை இல்லறம் என சிறப்பிக்கின்றனர். இவ்வில்லறத்தில் தலைவனும் தலைவியும் இணைந்து அன்புநெறி பூண்டு விருந்தோம்பல், விட்டுக் கொடுத்தல், காத்திருத்தல், பகுத்துண்ணல் சுற்றத்தைக் காத்தல், கேட்டினை விலக்கல், ஈத்துவத்தல், புகழ்தேடல், முதலான உயரிய விழுமியங்களை வெளிப்படுத்த இல்லற மக்கள் கைக்கொள்ளும் ஒழுக்கங்களுக்கு இடப்படும் சிறப்புப் பெயரே பண்பு. பயன்தரும் பண்பின் இரட்டைக் குழந்தைகள் தான் அன்பும், அறமும். இவை வெளிப்படும் இடமே இல்லறம். இவ்வில்லறத்தின் வாயிலாக மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு விழுமியங்களை அகநானூற்றுப் பாடல்கள் வெளிப்படுத்தியிருத்தலை இக்கட்டு;ரை விளக்குகிறது.

    துணை நூற்பட்டியல-;

    1)       பொ.வே.சோமசுந்தரனார் உரை, அகநானூறு, கழக வெளியீடு, பதிப்பு-1970.

    2)       நச்சி;னார்க்கினியர் உரை, தொல்காப்பியம், கழக வெளியீடு, பதிப்பு-1966.

    3)    அ.தட்சி;ணாமூர்த்தி, சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உணர்வுகள்,                   மங்கயர்கரசி பதிப்பகம், பதிப்பு-2001.

    4) முனைவர்.ப.கோமதி முதலானோர், சங்க இலக்கியங்களில் மானுட   விழுமியங்கள், அ.இ.பதிப்பகம், பதிப்பு-2011 

     

    இரா.அமுதா,

    முனைவர் பட்ட ஆய்வாளர்,

    தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி,

    கோவை-10.

    Share
  • அன்னையர் தினம்

    உன்னை ஈன்ற அன்னையைப் போற்று
    தன்னுயிர் போகும் ஆபத்து எனினும்
    உன்னுயிர் காத்தல் முக்கியமென்றெண்ணி
    எண்ணற்ற வேண்டுதல்கள் ,எத்தனை பத்தியங்கள்
    கண்மூடித் தூங்குகையிலும் கருத்தினிலே கருவிருக்கும்
    உண்ணும் உணவினிலும் உன்மேலதான் கவனமெல்லாம்.
    புரண்டு படுக்கையிலும் , பொறுப்பெல்லாம் கருவின்மேல்.
    வறண்ட மனதினிலே ,வண்ண மலர்ச்சோலையாக
    திரண்ட குழந்தைதான் திகட்டாத இன்பமன்றோ.
    மனைவி எனும் நிலைமாறி , அன்னையெனும் நிலைபெறுதல்
    நினைவினிலே சுகமளிக்கும்,நெஞ்சமெலாம் நிறைந்திருக்கும்.
    உதிரத்தைப் பாலாக்கி உனக்குக் கொடுக்கையிலும்
    உதிர்க்கும் வார்த்தைகளின் உன்னத மழலையிலும்
    தொட்டிலிலிட்டு தாலாட்டு இசைப் பதிலும்
    வட்டிலில் சோறுவைத்து வான் நிலா காட்டுவதிலும் ,
    மடியினில் சுமந்த பிள்ளை ,மண்மீது தவழ்கையிலும்
    அடிமேல் அடியெடுத்து ஆடி ஆடி நடக்கையிலும்
    பள்ளிப் பருவத்தில் பாடம் சொல்லிக்கொடுப்பதிலும்
    துள்ளி விளையாடுகையில் அள்ளி அணைப்பதிலும்,
    ஒவ்வொரு கட்டத்திலும் , உன் ஒவ்வொரு அசைவினிலும்
    ஒவ்வொரு முன்னேற்றத்தையும் , உவகையுடன் ரசிப்பதிலும்
    உற்றாரும் ,மற்றோரும் பாராட்டும்போதேல்லாம்
    சற்றே பெருமையுடன் , சந்தோஷப் படுவதிலும்.
    சுணக்கமும் இல்லாமல் , சுமையாகக் கருதாமல்
    தனக்கென்று வாழாமல் உனக்கென்று வாழ்வதிலும்
    பாசத்தின் பொருளாக , தியாகத்தின் உருவாக
    நேசத்தைப் பொழிகின்ற , அன்னையைப் போற்று.

    விண்ணகத் தேவர்கள் , தங்கள் பிரதிநிதியாய்
    மண்ணகத்தே படைத்த மாண்புக்கு அன்னையை
    என்ன துன்பம் வரினும் , என்ன விலை கொடுத்தும்
    கண் எனக் காப்பதுன் கடமைஎன்றுணர்ந்துகொள் .

    எத்தனை பிறவிகள் எடுத்தாலும் , எண்ணற்ற செல்வம் கொடுத்தாலும்
    அத்தனையும் போதாது , அன்னையின் கடன் தீர்க்க.
    வித்தகனாய் விளங்குவதில் பெருமையில்லை , அன்னைக்கு
    முத்தனைய பிள்ளையாய் வாழ்வதே பெருமையன்றோ.

    சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

    Share
  • கொடுத்த அல்வா போதும்!

    சேசாத்திரி பாஸ்கர்

    தமிழிசை பற்றி எழுதியதற்காக சூர்யா தேவி என்ற பெண்மணி கைது செய்யப்பட்டு உள்ளார் . ஜாமீன் மறுக்கப்பட்டும் எஸ் வீ சேகரை காவல்துறை நெருங்க முடியவில்லை .ஒன்று தமிழக அரசு இதில் ஞாயம் பார்த்து காவல் துறையை பணித்து கைது செய்து இருக்கலாம் .பா ஜ க வினர் அரசியல் நேர்மையை கருதி அவரை சரண் அடைய சொல்லியிருக்கலாம் .குறைந்த பட்சம் சட்டத்தின் மாண்பினை மதித்து சேகராவது நீதிமன்றத்தில் சரண் அடைந்திருக்கலாம் . இதை எல்லாம் தாண்டி அவர் பழைய மோடியுடன் ஆன சந்திப்பை- நிகழ்வை கணினியில் உலவ விட்டு தனக்கு இருக்கும் செல்வாக்கை காட்டிகொண்டு சிறையை தவிர்க்க நினைப்பது அவரை மேலும் குற்றவாளியாக்குகிறது .நேற்று கூட ஒரு வழக்கில் பிரியா என்ற பெண்ணை காவல்துறை கைது செய்து இருக்கிறது . ஜாமீன் மறுக்கப்பட்டவுடன் சரண் அடைய வேண்டும் என்று ஒரு விதியை நீதிபதி சொல்லிருக்கிறார்.–கடைசி வரை அவர் சிறைக்கு செல்லாமல் ஏதேனும் ஒரு வழியில் தன்னை விடுவித்து கொள்ள நினைப்பது பெரிய தவறு . ஒரு பிரபல நடிகர் , முன்னால் சட்டமன்ற உறுப்பினர் இப்படி செய்வது அடுத்தவர்க்கு முன் உதாரணமாகி விடும் சட்டத்தின் முன் பிரியா , சூர்யா , சேகர் எல்லாம் சமம்.சட்டம் அதை செய்யாமல் அவர் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுத்து கொண்டு இருக்கிறது .ஒரு சாமான்யனுக்கு இதை எல்லாம் பார்த்தால் ஏன் கோபம் வராது ?இது பற்றி அவருக்கு மூன்று முறை மின்னஞ்சல் அனுப்பினேன் . இரண்டு முறை பதில் சொன்ன அவர் மூன்றாம் முறை பதில் அளிக்கவில்லை — சட்டத்திற்கு பயந்து அல்ல , மதிப்பளித்து அவர் சரண் ஆகியிருந்தால் அவர் மேல் இருக்கும் மதிப்பு அதிகமாகி இருக்கும் .அவர் கொடுத்த அல்வா போதும் .அல்லது அவர் தனது அலுவலக இருக்கைக்கு பின் உள்ள “When God is with me why there should be fear” என்ற வாசகத்தை எடுத்து விட்டால் குறைந்த பட்சம் என்னை போன்ற அரை குறைகளுக்கு பிரயோஜனமாக இருக்கும் .

    Share
  • வள்ளலார் வகுத்த வல்லமை

    -கா. தினேஷ் 

    முன்னுரை

    அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருந்த அனைவரையும் அன்பால் இச்சகத்தே திருத்தவந்தவர் சிதம்பர இரமலிங்கம் என்னும் வள்ளலார். இவர் வடலூரிலே மக்கள் அனைவரும் ஆன்மநேய ஒருமைப்பாடு காண விரும்பிச் சமரசச் சுத்தச் சன்மார்க்கச் சங்கத்தை ஏற்படுத்திச் சத்திய ஞான சபையை நிறுவியவர். இவர் கொண்ட மார்க்கம் சன்மார்க்கம். இது ஞானமார்க்கமாகும். ஞானத்திற்கு அடிப்படை அன்பேயாகும். இம்மார்க்கத்தின் மூலம் மரணமிலாப் பெருவாழ்வை அடைந்துள்ளார்; அத்தகைய வாழ்விற்கு  அன்பு என்ற ஒன்றையே வழியாகக் கொண்டவர். அத்தகைய அன்பு எத்தகைய வல்லமையைப் பெற்றது என்பதைக் காண்பதே இக் கட்டுரையாகும்.

    வல்லமை – பொருள் விளக்கம்

    வல்லமை என்னும் சொல்லுக்கு வலிமை, ஆற்றல் எனப் பொருள் கூறுகிறது தமிழ்மொழி அகராதி[1]. வல்லமை என்பது ஓர் ஆற்றலாகும். வல்-என்ற வேர்ச் சொல்லிலிருந்து பல சொற்கள் உருவாகியுள்ளன. வல்லமை, வல்லாண்மை, வல்லபம் போன்றவை ஒரு பொருள் குறித்த பல சொல்லாகும்.  “பெயர்ச்சொல்லில் உயர் வழக்காகப்பெறும் வலிமை (‘ராணுவ வல்லமை உள்ள நாடு’‘) என்றும் ஒன்றை நிகழ்த்தக் கூடிய ஆற்றல், சக்தி, திறன்” (சர்வ வல்லமை படைத்த இறைவன், கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை கொண்ட ஏவுகணைகள்) என்றும் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது[2].

    வல்லமை என்னும் சொல்லுக்கு நேரடிப்பொருள் ஆற்றல் என்றே பெரும்பாலான அகராதிகளிலும் இலக்கியங்களிலும் பயின்று வருகின்றது. ஆனால் இத்தகைய ஆற்றல் இறை ஆற்றல், இயற்கை ஆற்றல், இயந்திர ஆற்றல் எனப் பல வகைப்படுகிறது. அனைத்தையும் பெறும் ஆற்றலைச் சர்வ வல்லமை என்ற அடைமொழியால் வழங்குவர். சர்வ என்பதற்கு அனைத்தும் என்பது பொருள்[3]. (சான்று- சர்வச் சாக்கிரதை, சர்வ நாசம், சர்வ முட்டாள்).

    பாரதியார் தம் பாடலில் வல்லமை என்னும் சொல்லை நேரடியாகப் பயன்படுத்துகிறார்.

    வல்லமை தாராயோ, வல்லமை தாராயோ – இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே
    வல்லமை தாராயோ –  இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே சொல்லடி, சிவசக்தி
     [4]

    என்று கூறுகிறார். இந்நாட்டிற்காக வாழ்வதற்கு நல்லதோர் ஆற்றல் (வல்லமை) தர வேண்டும் என்று வினவுகிறார்.

    திருக்குறளுக்கு உரைசெய்த முனைவர் மு.வ. அவர்கள் வல்லமை என்ற சொல்லை அநேக இடங்களில் பயன்படுத்துகிறார்.

    இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை.[5] இதற்கு உரையாக மு.வ அவர்கள் வறுமையுள் வறுமையாகக் கருதப்படுவது விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும். என்று கூறுகிறார்[6]. இங்கும் வல்லமை என்பது ஆற்றல் அல்லது வலிமையைக் குறிக்கிறது. இதுபோன்று வலிமை என்று வரக்கூடிய பல குறள்களுக்கு வல்லமை என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். 

    வள்ளலார் வகுத்த வல்லமை

    வள்ளலார் தம் வாழ்நாளில் ஒரு தனி வல்லமையைப் பயன்படுத்தி இறைவனின் சர்வ வல்லமையைப் பெற்றுள்ளார். அது சாகாக்கல்வி என்னும் மரணமிலாப் பெருவாழ்வேயாகும். அவ் வாழ்வைத் தாம் பெற்றதோடு பிறருக்கும் உபதேசித்தார். அத்தகைய வல்லமை யாதெனில் அன்பு என்ற ஒன்றேயாகும். அன்பு என்ற ஒன்றாலே அனைத்தையும் பெற முடியும் என்று உறுதிபூண்டவர். அன்பு என்னும் சொல்லிற்கு அநேக இடங்களில் வல்லமை என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார்.

    இதனைத் தம் உபதேசக் குறிப்பில்

    “கடவுள் சர்வ வல்லமையுடையவன் ஆகையால் நம்மையும் சர்வ ஜீவத் தயையுடையவர்களாய்ச் சர்வ வல்லமையும் பெற்றுக்கொள்ளும்படி மனிதத் தேகத்தில் வருவித்தார்; ஞானிக்குத் தயவு அதிகம் அதிகப்படியிருக்கிறபடியால் கேளாத கேள்வி முதலிய மகா அற்புதங்களான இறந்தாரெழுதல் முதலிய அற்புத வல்லமையைப் பெற்றிருக்கிறார்[7]என்று கூறுகிறார். உயிர்களிடத்தே இரக்கம் செலுத்துவதற்காகவே இறைவன் மனிதத் தேகத்தில் இவ்வுயிரை வருவித்தான் என்றும் ஞானிகளுக்கு உயிரிரக்கம் அதிகமாக இருப்பதால் அவர்கள் இறந்தவரை எழுப்பும் அற்புத வல்லமை பெற்றுள்ளனர் என்றும் கூறுகிறார். ஆகவே உயிரிரக்கத்திற்கு அடிப்படை அன்பு ஒன்றேயாகும். இதனைத் தம் உபதேசக் குறிப்பில்,

    “நம்முடைய தலைவராகிய கடவுளை நாம் அடைவதற்கு அவர் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும்; அவ்வருள் அன்பினாலல்லது வேறு வகையால் அடைவது அரிது. அவ்வன்பு ஜீவகாருண்ணியமல்லவல்லது வேறு வகையால் வராது. ஜீவகாருண்யத்தின் இலாபமே அன்பு; இந்த ஜீவகாருண்யம் உண்டாவதற்கு மார்க்கம் யாதெனில் கடவுளினது பெருமையும் வல்லமையும் தரத்தையும் நம்முடைய சிறுமையும் தரத்தையும் விசாரித்தால்தான் அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாமல் நடத்தலே ஜீவகாருண்யம். இதுதான் சித்தி பெறுவதற்கு வழி”[8].

    என்று கூறுகிறார். இறைவனை அடைவதற்கு அருள் வேண்டும். அந்த அருள் அன்பினாலே தோன்றும் வேறுவகையால் தோன்றாது. இதனை வள்ளுவர்,

    அருளென்னும் அன்பீன் குழவி.[9]

    என்று கூறுகிறார். அருள் என்பது அன்பின் வழிப் பெறப்படுவது என்பது தெளிவாகிறது. இதனை வள்ளலார்,

    அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே 
    அன்பெனும் குடில்புகும் அரசே
     
    அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
     
    அன்பெனும் கரத்தமர் அமுதே
     
    அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
     
    அன்பெனும் உயிரொளிர் அறிவே
     
    அன்பெனும் அணுவுள் அமைந்தபேரொளியே
     
    அன்புருவாம்பர சிவமே[10].

    என்று கூறுகிறார். அன்பு என்னும் வல்லமையால் அனைத்தையும் பெற முடியும் என்பதே இப் பாடலின் பொருளாகும். வள்ளலார் அன்பை ஜீவகாருண்யம் என்ற சொல்லால் குறிக்கிறார். அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதே ஜீவகாருண்யம் என்று குறிப்பிட்டார். இதற்கென ஒரு தனி உரைநடை நூலினைப் படைத்தார். ஜீவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்று வலியுறுத்தினார்.

    ஜீவகாருண்யம்-உயிரிரக்கம்

    வள்ளலாரால் எழுதப்பெற்ற இந்நூல் உயிர்களிடத்தே அன்புகாட்டுதலும், பசித்தோர்க்கு உணவிடுதலும், புலை என்னும் கொலையைத் தவிர்த்தலும் பற்றிக் கூறுகிறது. இதனைக் கடைபிடித்தால் இயற்கை உண்மை விளங்கி ஆன்ம இலாபம் பெற்று இறைவனைத் தயவு என்னும் வல்லமையால் அடையலாம் என்று முன்நிறுத்திக் கூறியுள்ளார்.

    புலால் மறுத்தல்/ புலை கொலை தவிர்த்தல்

    ஜீவகாருண்யத்தின் அங்கமான உயிர்க்கொலை புரிதலைத் தடுத்தல் என்பது பெரும்பங்காகத் திகழ்கிறது. ஜீவகாருண்யத்தின் முக்கிய இலட்சியமே உயிர்க் கொலை செய்யாதிருத்தலும், புலால் புசிக்காமல் இருத்தலுமே ஆகும். இதனை வள்ளுவர்

    “அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
    பிறவினை எல்லாம் தரும்[11]

    கொல்லாமை நெறியை வள்ளலார் அகவலில் பல இடங்களில் கூறியுள்ளார். இதனை,

    எங்கே கருணை இயற்கையின் உள்ளன
    அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே[12]

    என்றும்,

    “கொல்லா நெறியே குருவருள் நெறி எனப்
    பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்சிவமே[13]” என்று கூறுகிறார்.

    புலால் மறுத்தல்

    கொல்லாமையை வலியுறுத்தியே புலால் உண்ணுதல் தவிர்க்கப்பட வேண்டும் என்று வள்ளலார் கூறுகிறார். புலால் உண்பதால்  ஏற்படும் அவத்தைகளைத் திருமூலர்

    “பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
    எல்லாரும் காண இயமன்தன் தூதுவர்
    செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
    மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே[14]

    என்று கூறுகிறார். கொல்லாமை மற்றும் புலால் மறுத்தவனை எல்லா உயிர்களும் தொழும் என்பதை வள்ளுவர்

    “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா  உயிரும் தொழும்[15]

    என்று புலால் மறுத்தல் என்னும்  அதிகாரத்தின் வாயிலாகக் கூறுகிறார்.  எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி ஒழுகும் உத்தமர்களின் அடிக்கு ஏவல் செய்ய என் சிந்தை விழைந்தது என்பார் வள்ளலார் இதனை

    எவ்வுயிரும் பொதுஎனக்கண்டிரங்கி உப
    கரிக்கின்றார் யாவர் அந்தச்
    செவ்வியர்தம் செயல் அனைத்தும் திருவருளின்
    செயல் எனவே தெரிந்தேன் இங்கே[16]

    என்று கூறுகிறார்.  அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி அன்பு செலுத்த வேண்டும். எவ்வுயிரும் தம்முயிர்போல் கருதுவதே ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை ஆகும். உயிர் இரக்கத்தின் மூலம் கடவுளைக் கண்டவர் வள்ளலார். உயிர் இரக்கத்தின் மூலம் கடவுளை மக்களுக்குக் காட்ட வந்தவர் வள்ளலார் இதனை

    “உயிருள்யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
    உயிர் நலம் பரவுக என்றுரைத்த மெய்ச்சிவமே[17]

    என்று இறைவனே தமக்கு அறிவித்ததாகக் கூறுகிறார். இறைவனை அடைய அன்பு என்ற ஒன்றே போதும் என்று வலியுறுத்துகிறார்.

    முடிவுரை

    வள்ளலார் வாடிய பயிரைக் கண்ட போது வாடிய தகைமையர். இரக்கமே வடிவானவர். உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுக் கோல் என்று வலியுறுத்தியவர். அவர் அன்பு என்னும் வல்லமையைக் கொண்டு மரணமிலாப் பெருவாழ்வை அடைந்தவர். அத்தகைய வல்லமையைக் கொண்டு இறாவாத வாழ்வை இகத்திலே பெறலாம் என்பதே இவ்ஆய்வின் முடிவாகும்.

    ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள்

    1. திருவருட்பா, மூலமும் உரையும் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை(உ.ஆ), அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு பதிப்பு.1989.
    2. திருவருட்பா உரைநடைப் பகுதி, தெய்வநிலையம்,வடலூர்
    3. கலைக் களஞ்சியம், தமிழ்வளர்ச்சிக் கழகம், சென்னை:1959
    4. பாரதியார் கவிதைகள், கவிதா பப்ளிகேஷன்-2016
    5. திருமந்திரம்,மாணிக்கவாசகம்,சாரதா பதிப்பகம்-2016
    6. tamilmozhiagarathi.com
    7. ’https://ta.oxforddictionaries.com
    8. திருக்குறள்,
    9. டாக்டர் மு.வரதராசனார், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.

    [2] . தமிழ்மொழி அகராதி.

    [2] . ’https://ta.oxforddictionaries.com

    [3] . ’https://ta.oxforddictionaries.com

    [4] . பாரதியாரின் தெய்வப்பாடல்கள்-12

    [5] .  திருக்குறள்-153

    [6] . திருக்குறள் டாக்டர் மு.வ உரை.

    [7] .திருவருட்பா உரைநடைப்பகுதி-உபதேசக்குறிப்பு.

    [8] . திருவருட்பா உரைநடைப்பகுதி-உபதேசக்குறிப்பு.

    [9] .திருக்குறள்-757

    [10] .திருவருட்பா-3269

    [11] .திருக்குறள்-321

    [12] .அகவல்-962,963

    [13] .அகவல்-968,969

    [14] .திருமந்திரம்-199

    [15] .திருக்குறள்-260

    [16] .திருவருட்பா-5296

    [17] .அகவல்-974,975

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
    தமிழியல் துறை
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
    அண்ணாமலை நகர்-608002

     

     

    Share
  • சங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள்

    -கி. ரேவதி 

    முன்னுரை

    நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் மக்களைச் சுற்றிப் படர்ந்திருப்பவை. நம்பிக்கை என்பது நம் நாட்டில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நாட்டிலும் பன்னெடுங்காலமாக வேரூன்றிக் கிடக்கின்றது. நம் தமிழர்களின் பண்பாடு சார்ந்த நம்பிக்கைகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன.

    நிமித்தம்

    நிமித்தம் என்ற சொல்லிற்குக் காரணம், பொருட்டு அடையாளம் என்ற பல பொருள்கள் உண்டு.

    “வேண்டிய பொருளின் விளைவுநன்கு அறிதற்கு                                ஈண்டுஇருள் மாலைச் சொல்ஓர்த் தன்று” (புற.பொருள்.ப.17)

    நம்பிக்கை அடிப்படையில் நிமித்தத்தினை நோக்கும்போது சகுனம் பார்த்தல் என்ற பொருளைத் தந்து சிறப்பிக்கின்றது.

    சகுனம் அறிவிப்போரையும் சகுனத்தின் பயன்களைக்  கூறுவோரையும் நிமித்திகர்கள் என்று கூறுவர். அறிஞர்கள் கருத்துக்கேற்ப நிமித்தம் என்பது நல்ல, தீய சகுணங்களைப் பார்த்தல் என்பது புலனாகின்றது.

    தெய்வ நம்பிக்கை

    சங்க காலம் முதற்கொண்டே தமிழர்களிடம் தெய்வ நம்பிக்கை உள்ளது. உலகம் கடவுளால் காக்கப்படுகிறது என்ற உண்மையை,

    “சேவல் அம்கொடியோன் காப்ப
    ஏம வைகல் எய்தின்றால் உலகே” (குறுந்.1)

    என்று குறுந்தொகையின் முதல்பாடலே கடவுள் வாழ்த்தோடு தொடங்குகிறது.

    தலைவன் களவுக் காலத்தில் சூளுரை செய்தல், தலைவிக்கு வரும் காதல் நோய்க்கு கடவுள் காரணம் என்று நம்புதல், தெய்வங்களின் உறைவிடம் மலை போன்ற செய்திகளின் மூலம் அக்கால மக்களின் தெய்வ நம்பிக்கையை அறியலாம். மேலும்,

    “மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
    கொடியோர்த் தெறூஉம்”    
    (குறுந்.87)

    என்ற பாடலில் தெய்வமானது கொடியவரை வருத்தும் என்ற செய்தியும் கூறப்படுகிறது.

    விண்ணியல்

    பண்டைய நாளில் தூரத்தில் இயங்கும் கோளையும், விண்மீன்களையும் கண்டு உணர்ந்து அவைகளின் இயக்கத்திற்கும் மண்ணில் வாழும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

    நற்றிணையில் விண்மீனைக் கைதொழுது வணங்கி வந்தனர் என்பதை,

    “மையற விளங்கிய மணிநிற விசும்பின்
    கைதொழுது மரபின் எழுமீன் போலப்”   (நற்.231)

    என்ற அடிகள் முனிவரின் தோற்றமாகிய ஏழு விண்மீனை மக்கள் தொழுதனர். எனவே விண்மீனையும் தெய்வமாகத் தொழும் பழக்கம் மக்களிடம் இருந்துள்ளது என்பதை அறியமுடிகின்றது.

    பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்கள் நட்சத்திரத்தைக் கூட்டம் கூட்டமாக வகுத்து அவை இன்ன இன்ன உருவம் என்று பிரித்தனர். புறநானூற்றில் வெள்ளிமீன் தெற்குத்திசை தோன்றினால் மழை பொய்த்துவிடும் என்ற செய்தியை,

    “அலங்கு கதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்
    இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும்”      (புறம்.35)

    என்ற அடிகள் உணர்த்துகின்றன.

    பட்டினப்பாலையில் மகம் என்னும் வெண்ணிற விண்மீன் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

    மழை நீங்கிய மாவிசும்பில்
    மதி சேர்ந்த மகவெண்மீன்
    உரு கெழு திறல் உயர் கோட்டத்து
    ”            (பட்டின.34-36)

    என்ற வரிகள் நிலவுடன் சேர்ந்து விளங்கும் விண்மீன்களை மக்கள் தொழுது வணங்கினர்.

    பறவைகளின் நிமித்தம்

    தனிமனிதப் பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் காலப்போக்கில் உணர்ச்சிப் பெருக்கால் மாறும் தன்மையுடையன. ஆனால் ஒரு சமுதாயத்தின் பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் எளிதில் மாற்றத்திற்கு உட்படா.

    நற்றிணையில் பறவை நிமித்தத்தை கூறும் தலைவன் நம் வருகையைக் காக்கை முதலிய புள்ளினங்கள் அவருக்கு அறிவுறித்தினவோ என்று கூறுவதாகப் பாடலொன்று அமைகின்றது.

    தோள்வழி யாப்ப ஈண்டுநம் வரவினைப்
    புள்அறி வுறீஇயின கொள்ளோ தௌளிதின்
    ”        (நற்.161)

    என்ற வரிகள் பறவை நிமித்தத்தை உணர்த்துகின்றன.

    காகம் கரைதல்

    சங்க காலத்து மகளிர் நம்பிக்கையுடன் வாழ்ந்தனர். காகம் தம் இல்லத்தருகில் கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கை இருந்தது.

    பெருந்தோள் நெகிழ்ந்த செல்வதற்கு
    விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே”         (குறுந்.210)

    காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கையும் அக்காலத்தில் இருந்தமையை அறிய முடிகிறது. இன்றும் இந்த நம்பிக்கையை மக்கள் பின்பற்றுகின்றன.

    விலங்குகளின் சகுனம்

    பழந்தமிழர் விலங்குகள் வாயிலாகவும் சகுனம் பார்த்து வந்துள்ளனர். பல்லி, ஓணான், கூகை போன்ற உயிரினங்கள் எழுப்பும் ஓசைக்கும் பலன் உண்டு என்பதை அறிந்துள்ளனர்.

    பல்லிச்சகுனம்

    சங்க இலக்கியத்தில் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி தலைவன் வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து நல்ல பலனை எதிர்நோக்கும் போது பல்லியும் ஓசை எழுப்பி அதற்கு இணக்கமான நல்ல நிமித்தத்தை ஒலிக்கின்றது.

    “முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்
    வருவம் என்னும் பருவரல் தீரப்
    படும்கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி”      (நற்.பா.169-வரி.1-3)

    வினைமுற்றி மீளும் தலைவன் தன் வருகையை பல்லி தலைவிக்கு அறிவிக்குமெனத் தன் நெஞ்சுக்கு அறிவுறுத்துகிறான். அஃறிணை உயிரும் அஃறிணையான பல்லியின் சகுனத்தைப் பார்க்கின்றது.

    பன்றியும் பல்லிச் சகுனம் பார்த்துத் தனக்கு இடையூறு நேரும் என்று குகையில் பதுங்குவதை நற்றிணையில் 98-ம் பாடலும், 169, 246 பாடலும், அகநானூற்றில் 9, 88, 151, 289, 351 பாடலும் சகுனத்தை உணர்த்துவதாக அமைகின்றன.

    குறுந்தொகையில் ஆண் பல்லி தன் துணையை அழைக்க ஒலி எழுப்பிய செய்தியும் குறிப்பிடப்படுகின்றது.

    “உகிர்நுதி புரட்டும் ஓசை போல
    செங்காற் பல்லி தன்துணை பயிரும்
    அம்காற் கள்ளி அம்காடு இறந்தோரே”        (குறுந்.16)

    கட்டுவிச்சி

    குறி கேட்கும் வழக்கம் பண்டைத்தமிழ்  மக்களிடம்  இருந்து இன்று வரை வழக்கில்  இருந்து கொண்டிருக்கின்றது. குறி கூறுகின்றவர்கள் தெய்வத்தின் உதவியினால் உண்மையை அறிந்து உரைக்கின்றனர் என நம்பி  வந்தனர். குறி கூறும்போது  குலதெய்வத்தை வழிபட்டுக் கூறுகின்றமுறை  இருந்திருக்கின்றது.

    குறுந்தொகையில் குறி கூறுகின்ற பெண்டிரைக் கட்டுவிச்சி என்று கூறுகின்ற  மரபு இருந்திருக்கின்றது.

    “அகவன் மகளே! அகவன் மகளே!
    மனக் கோப்பு  அன்ன நல்நெடுங் கூந்தல்
    அகவன் மகளே! பாடுக பாட்டே”   (குறுந்.23)

    என்ற அடிகள் தெய்வத்தை அழைத்துப் பாடுகின்ற கட்டுவிச்சி என்ற கருத்தைக் கூறுகின்றது.

    கண்துடித்தல்

    பெண்களுக்கு இடதுகண் துடிப்பதைச் சங்க இலக்கியங்கள்  நல்நிமித்தமாகக் கொண்டுள்ளன. கண் துடித்தல் தலைவன் வருகையை உணர்த்தும் நற்குறியாக அமைந்துள்ளது.

    நுண்ணோர் புருவத்த கண்ணும் ஆடும்
    மயில்வார் முன்கை வளையும் செறுஉம்”      (ஐங்.218)

    என்று ஐங்குறுநூற்றுப் பாடல் விளக்குகின்றது.

    சொர்க்கம் – நரகம்

    சொர்க்கம் நரகம் என்ற நம்பிக்கைகள் மக்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றன. நன்மை செய்தால் சொர்க்கத்திற்குச் செல்லலாம். தீமை செய்தால் நகரத்திற்குச் செல்வார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பழந்தமிழரிடம் இருந்ததை இலக்கியங்கள்வழி தெரிந்துக்கொள்ள முடிகின்றது.

    தமிழர்கள் மட்டுமின்றி அமெரிக்கர், ஜப்பானியர் போன்ற நாட்டினருக்கும் சொர்க்கம் நரகம்மீது ஆழ்ந்த நம்பிக்கை இருந்துள்ளது. போர்க்களத்தில் வீரர்கள் விழுப்புண்பெற்று மாண்டுபோனாலும் அவர்கள் தேவர்கள் உலகத்திற்குச் செல்வர் என்றும் அதுதான் அவர்களுக்குப் புகழ் என்றும் மதிக்கப்பட்டது. வடமோதங்கிழார் இதனைக்,

    “கையகத்து உயர்ந்த கன்றுடைப் பல்லான்
    நிரையொடு வந்த உரையான் ஆகி
    உரிகளை அரவ மானத் தானே
    அரிது செல் உலகில் சென்றனன் உடம்பே
    கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால் உற்று”      (புறம்.260)

    என்கிறார். மேலும் யானைப்படையையுடைய நெடுமாவளவன் தேவர் உலகத்தை அடைந்தான். ஆதலால் வீரமரணமும் சொர்க்கத்தை அடையும் ஒரு வழியாக உள்ளது.

    கொடி நுடங்கு யானை நெடுமாவளவன்
    தேவர் உலகம் எய்தினன் ஆதலின்”      (புறம்.228)

    என்ற புறநானூற்றுப் பாடலும் தேவர் உலகம் பற்றிய செய்தியைக் கூறுகின்றது.

    தேவர் உலகம் என்பது சொர்க்கம் ஆகும். தேவர்கள் அமுதம் உண்டு வாழ்பவர்கள் என்றதால் குறுந்தொகையில் தோழி தலைவியிடம் கூறும்போது செவிலித்தாய் தலைவன் வரைவோடு வருவான் என்று கூறுகிறாள். எனவே இந்த நற்சொல்லைக் கூறிய அவள் பெறுதற்கு அரிய அமுதமே உண்ணும் உணவாகக் கொண்ட தேவர்கள் வாழ்கின்ற பெரும் உலகத்தை அடையப் பெறுவாளாக! என வாழ்த்துகிறாள்.

    முடிவுரை

    மனிதனின் தன்னல உணர்வும் சமுதாய உணர்வுமே நம்பிக்கைகளை வளர்த்துவிடுகின்றன. நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொன்னாலும் அது விளக்க இயலாத தன்மைபெற்று விளங்குகிறது. திருமணச் சடங்குகளும், இறப்பு பற்றிய சடங்குகளும் தமிழரின் வாழ்வியல் சடங்குகளும் பெரும்பாலும் அக்கால மக்களின் நம்பிக்கை சார்ந்தே அமைந்துள்ளதைக் காணமுடிகின்றது.

    அடிக்குறிப்பு

    1.ஐயனாரிதனார்., – புறப்பொருள் வெண்பாமாலை,கழக வெளியீடு, சென்னை,2002.

    2.நாகராசன்.வி, (ப.ஆ) குறுந்தொகை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

    3.மேலது

    4.நாகராசன்.வி;, (ப.ஆ)  நற்றிணை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009

    5.நாகராசன்.வி;, (ப.ஆ)  புறநானூறு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009

    6.இராசமாணிக்கனார்.ம, பத்துப்பாட்டுஆராய்ச்சி, சென்னைப்பல்கலைக்கழகம்,2010.

    7.நாகராசன்.வி;, (ப.ஆ)  நற்றிணை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009

    8.நாகராசன்.வி, (ப.ஆ) குறுந்தொகை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004

    9.நாகராசன்.வி;, (ப.ஆ)  நற்றிணை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009

    10.நாகராசன்.வி, (ப.ஆ) குறுந்தொகை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

    11.மேலது

    12.மாணாக்கனார்.ஆ, (உரை) ஐங்குறுநூறு, சாரதா பதிப்பகம், சென்னை, 2009

    13.நாகராசன்.வி;, (ப.ஆ)  புறநானூறு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009

    14.நாகராசன்.வி;, (ப.ஆ)  புறநானூறு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்,
    தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, (தன்னாட்சி),
    விழுப்புரம்.

     

    Share
  • சொந்தச் சிறகுகள்

     

     

    முனைவர் இரா.முரளி கிருட்டினன்

     

     

    உதவிப்பேராசிரியர்,தமிழாய்வுத்துறை,

    தூய வளனார் தன்னாட்சி்க் கல்லூரி,

    திருச்சிராப்பள்ளி-2

     

    பறக்க முடியவில்லை என்பதற்காக

    எந்தப் பறவையும்

    சிறகுகளை உதிர்ப்பதில்லை

    நீ மட்டும் ஏன்

    தன்னம்பிக்கையை உதிர்க்கிறாய்

    சோம்பலாய்  இருந்தால்

    தனிமை கூட சிறை தான்

    புறப்படு

    தென்றலாகவோ

    புயலாகவோ

    இல்லை

    காற்றாக

    உயிர்மூச்சாக

    இயங்கு…

     

    பூமிப் பந்தைப் பார்

    இயங்கிக் கொண்டு

    இருக்கிறது

    அதன் மேல் ஏன்

    தூங்கிக் கொண்டிருக்கிறாய்…

     

    ஓடும் குதிரையின்

    பிடரி போல

    அங்கும் இங்கும்

    அலையாதே

    சிங்கத்தின் பிடரி போல்

    சிலிர்ப்போடு இரு.

     

    வறுமை யானையென்றால்

    அடக்கும் அங்குசமாய் இரு

     

    வெற்றி கனியென்றால் அதை

    உண்ணும் பறவையாய் இரு…

     

    தோல்வி ஒன்றும் எட்டிக்காயல்ல

    அமிழ்தம் அடைந்து பார்..

     

    சூரியன் சுடும் தான்

    இருந்தாலும் பீனிக்ஸ் விடுவதில்லையே..

     

    நீ மட்டும் ஏன் ….

    சொந்த சிறகுகளை

    அடமானம் வைக்கிறாய்….

     

    இயங்கிக் கொண்டே இருப்போம்

     

    ஒரு வேளை

    மரணித்துப்போனால்

    மண்ணுக்குள்

    விதையாக மட்டும்.

    Share
  • யாரு நீங்க ?

     

    கேட்ட தோழனின் குரலிலுள்ள
    ஆவேசத்தை அறிந்தீரா…?
    யார் நீங்க?
    இரத்தம் தின்ற அதிகாரத் திமிரை
    கேட்காத முதிய நடிகரை மட்டுமா
    அந்த தோழன் கேட்டான்..
    யார் நீங்க…?
    துப்பாக்கித் தோட்டா
    போராட்டத் தோழர்களை
    துளைத்த செய்தியறிந்ததும்
    மனசாட்சியோடும்
    மனசாட்சியற்றும்
    மீம்ஸ் போடுவோரே..
    முகநூல் ஸ்டேஸஸ் போடுவோரே
    கருப்பு வண்ணத்தை
    துக்க சின்னமாய்
    சுயவிவரபடமாய் வைத்தோரே…
    உங்களையும் என்னையும்தான்
    கேட்கிறான் தோழன்..
    யார் நீங்க?

    உச்சி வெயிலில்
    தொண்டை வற்றி
    அடிவயிற்றிலிருந்து குரலெடுத்து
    சிறுகுடல் கிழிய கிழிய
    ”தடை செய்.. தடை செய்..
    போராடுவோம்.. போராடுவோம் ”
    என்றாவது கோஷமிட்டீரா…
    பிறகு…..
    யார் நீங்க..?

    அந்த தோழன்
    ஆணவத்தில் கேட்கவில்லை
    அதிகாரத் தோட்டாக்கள்
    நெஞ்சுக்கீறிய வலியினிலும்
    திமிராய் கேட்கவில்லை.
    அடிப்படை மனிதமற்ற
    வெகுஜனத் திரளை
    தன் ஒற்றைக் கேள்வியில்
    சத்தமில்லாத
    புரட்சி வினாவாய் கேட்கிறான்..

    யார் நீங்க..?
    யார் நீங்கலாம்…?
    தினத்திற்கொரு
    ப்ரேக்கிங் நியூஸூக்கு ஏற்ப
    பச்சோந்தியாய்…
    வலைத்தளங்களில் பொங்குவோரே…
    உங்களையும் என்னையும் தான்
    கேட்கிறான்..
    யார் நீங்க…?

    அன்றாடம் வேண்டாம்
    என்றாவது வந்தீரா?
    ரோட்டில் இறங்கி…
    உரிமைக் கேட்டு…
    அரசை எச்சரித்து……?

    யாரு நீங்க..?
    போராட்டக்காரர்களை
    சமூகவிரோதியென்றவருக்கு எதிரான கேள்வியல்ல அது..
    சமூக பரதேசிகள் நமக்கும் அதே கேள்விதான்..

    யாரு நீங்க…?
    சோற்றில் உப்பை போட்டு சாப்பிட்டது போதும்
    இனி
    உப்பில் சோற்றை இட்டு
    உண்டு விழுங்கி வாருங்கள்..!
    யாரு நீங்க..?
    சூடு சொரணை ஏதும் மிஞ்சினால்
    புரியலாம்..!

    இரா.சந்தோஷ் குமார்.

    Share
  • ஆற்றுப்படை இலக்கியத்தில் வானியல் குறிப்புகள்

    -முனைவர் க. இராஜா

    சங்க காலத்தில் இலக்கியம், இலக்கணம், வரலாறு, கணிதம், வானநூல், உளவியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் புலமை எய்திய அறிஞர்கள் இருந்தார்கள் என்பது சங்க இலக்கியங்களிலிருந்து புலனாகின்றது. அதிலும் ஆற்றுப்படை இலக்கியம் படைத்த புலவர்கள் வானியல் அறிவினை அதிகம் பெற்றிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகின்றது. அதன்படி ஆற்றுப்படை நூல்கள் குறிப்பிடும் வானியல் குறிப்புகளை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    “தமிழரின் வான நூலறிவு மிகவும் சிறப்பு மிக்கது என சிலேட்டர் போன்ற அறிஞர்கள் பாராட்டியுள்ளனர்” (அ. தட்சிணாமூர்த்தி, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ப.44) என்று அ. தட்சிணாமூர்த்தி கூறுகிறார்.

    ஞாயிறு செல்லும் வான வழியையும், அதன் இயக்கத்தையும் காற்று இயங்கும் திசையையும், ஓர் அடிப்படையுமின்றி நிலைபெற்றிருக்கும் ஆகாயத்தையும் அவ்வவற்றின் எல்லையளவும் சென்று நேரில் அளந்து அறிந்தவரைப் போல ஒவ்வொரு நாளும் இத்துணை அளவுடையன என்று ஆராய்ந்து திட்டமாகச் சொல்லும் அளவு ஆழ்ந்த அகன்ற அறிவு பெற்றவர்கள் இருந்தனர் என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் குறிப்பிடுகின்றார். இதனை,

    “செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்
    பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
    வளிதிரிதரு திசையும்
    வறிது நிலைஇய காயமு மென்றிவை
    சென்றளந் தறிந்தோர் போல வென்றும்
    இனைத்தென் போரு முளரே” (புறம்.30) என்னும் புறநானூற்றுப்  பாடலடிகள் குறிப்பிடுகின்றன.

    இயற்கையின் சீற்றத்தைக் கண்டு அஞ்சிய ஆதி மனிதன் கோள்களை வழிபடத் தொடங்கினான். விண்ணில் நிறைந்துள்ள ஏதோ ஒன்றின் மாறுதல்கள் தங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதை மனிதன் உணர்ந்தான். இங்ஙனம் தான் கண்டறிந்த சில விண்மீன்களுக்குப் பெயர் சூட்டிய மனிதன் அதன் இயல்புகளையும் அதனால் விளையும் நன்மை தீமைகளையும் காண முற்பட்டான். தான் கண்டறிந்தச் செய்திகளை எல்லாம் இலக்கியங்களிலும் ஆங்காங்கே பொதிந்து வைத்துள்ளான்.

    நுண்பெருங் கலையாகிய வானநூல் சங்க காலத்தில் ஒப்புயர்வற்ற நிலைமையில் இருந்தது. வானின்கண் மின்னுவன யாவும் மீன்கள் என்பதை,

    “வானத்தின் கண்ணுள்ள மீன்”      (புறம்.9)

    “வானம் பல மீனையும் பூக்கும்”    (புறம்.7)

    “வானத்தில் விளங்கித் தோன்றும் விண்மீன்”      (புறம்.15)

    எனப் புறநானூறு கூறும்.

    எல்லாக் கோள்களும் சூரியனை நடுவாகக் கொண்டு சுற்றி வருவனவாம்.  பொன்னால் செய்யப்பட்ட ஒரு கலத்தின் தோற்றம், ஆகாயத்தில் ஒளி பொருந்திய நிறத்தினையுடைய கோள்மீன்கள் சூழ்ந்த இளைய கிரணங்களையுடைய ஞாயிற்றின் தோற்றத்தை ஒக்கும் என்கிறது சிறுபாணாற்றுப்படை. இதனை,

    வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த
    விளங்கதிர் ஞாயிற்றெள்ளுந் தோற்றத்து
    விளங்குபொற் கலம்”  (சிறுபாண்.242-244) என்னும் அடிகள் குறிப்பிடுகின்றன.

    வெள்ளை நிறமுடைய கோள் வெள்ளி எனப்படும். இது மாலையில் அல்லது காலையிலேதான் காணப்படும். இராக்காலம் விடிதற்குக் காரணமாகிய மீன் என இதனைப் பெரும்பாணாற்றுப்படை குறிக்கும்.

    “வைகுறும் மீன்”                  (பெரும்பாண்.318)

    சூரியன் மேருவலம் வருதலை,
    “உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
    பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு”      (முருகு.1-2) என்கிறது திருமுருகாற்றுப்படை.

    சூரிய மண்டலத்தை ‘செய் மண்டிலம்’ (பெரும்பாண்.442) என்று பெரும்பாணாற்றுப்படையும்,  வெவ்வெஞ் செல்வன் (பொருநர்.136) என்று பொருநராற்றுப்படையும் கூறுகின்றன.கிழக்குத் திக்கிலே உலகைக் கவ்வியுள்ள இருளைத் தன் பொற்கிரணங்களாகிய கைகளினால் ஆர உண்டு, உலகம் உவப்பக் கடலினின்றும் செந்நிற வண்ணம் எங்கும் பரவ, என்றும் விடியலில் காட்சி தருகிறான் சூரியன். இதனை,

    அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி
    பகல் கான்று, எழுதரு பல்கதிர்ப் பருதி”       (பெரும்பாண்.1-2)

    என்று பெரும்பாணாற்றுப்படையும், திருமுருகாற்றுப்படையும் (முருகு.1-2) கூறுகின்றன. மேலும் பெரும்பாணாற்றுப்படையில்,

    “குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
    பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு”           (பெரும்பாண்.441-442)

    என்று கூறுவதைக் காணமுடிகின்றது.

    இந்தச் செஞ்ஞாயிற்றையே ‘இளஞாயிறு’ (சிறுபாண்.242 மலைபடு.464) என்று அழைக்கின்றனர். ஞாயிறு மறைந்ததும் அந்தியில் செக்கர் வானம் நெஞ்சை அள்ளும் இயற்கைப் பொலிவுடன் தோற்றம் அளிக்கிறது. அவ்வானத்தில் பிறை தோன்றும் காட்சியையும் காணுதல் கூடும். இதனைப் பெரும்பாணாற்றுப்டையில் காணலாம்.

    “அவ்வாய் வளர்பிறை சூடிச் செவ்வாய்
    அந்தி வானத்து ஆடுமழை கடுப்ப”       (பெரும்பாண்.412-413)

    திங்களின் தண்கதிரையும், அதன் பால்போன்ற வெள்ளிய தன்மையையும் பாராட்டியுரைப்பார் போன்று இதற்குப் பல சிறப்புப் பெயர்களையும் அடைமொழிகளையும் சார்த்தி உரைப்பர் ஆற்றுப்படைப் புலவர்கள். அவை

               “திங்கள்”                          (பெரும்பாண்.11)

        “நெடுவெண் திங்கள்”         (பெரும்பாண்.251, சிறுபாண்.219)

            “பாற்கதிர்”                         (பெரும்பாண்.250)

    திங்களினுடைய வளர்ச்சியின் உச்ச நிலையை,

    “பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி
    உருவ வான்மதி ஊர் கொண்டாங்கு”          (சிறுபாண்.250-251) என்கிறது சிறுபாணாற்றுப்படை.

    சுக்கிரன் எனப்படும் கோள் வெண்ணிறம் வாய்ந்தது என்பதாலேயே இது வெண்மீன், வெள்ளி என்னும் பெயரிட்டு அழைக்கப்பெறுகின்றது. சூரியன் உதயமாவதற்கு முன்னதாக ஞாயிற்றுப் புத்தேளுக்குக் கட்டியங்கூறி வருவது போல வைகறையில் காட்சி தருவது. எனவே, ‘வைகுறு மீன்’ என்றும் இதனைக் குறிப்பர். ‘குற்றங் கூறுதல் இல்லாத புகழையுடைய விளக்கமான வெள்ளிமீன்’ என்று பட்டினப்பாலை இதன் சிறப்பைப் பேசுகின்றது. இருள்செறிந்த விடியற் கருக்கலிலே விரிகின்ற வெள்ளிய கிரணங்களைக் கொண்டு எழுவது, ‘விரிகதிர் வெள்ளி முளைத்த நள் இருள் விடியல்’ (பொருநர்.72-73) என்கிறது பொருநராற்றுப்படை (மு. சண்முகம் பிள்ளை, சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும், ப.164).

    நன்னன் சேய் நன்னன் தனது பகையாகிய இருளைப் போக்கிய செயலுக்கு, இருள்நீக்கி எழும் ஞாயிற்றை ஒப்பிட்டு,

    “பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும்
    ஞாயிறு அன்ன, அவன் வசைஇல் சிறப்பும்”         (மலைபடு.84-85) எனப் பேசப்பட்டுள்ளது.

    இரும்பகை போக்கித் தோன்றிய இளஞாயிற்றுச் செல்வன் விசும்பில் படர்ந்து மேலெழுகின்றான். கரிகாலன் இளமை தொடங்கிச் சிறுகச் சிறுக வலிமை மேன்மேல் வளரத் தன் நாட்டைத் தோள் வலியால் கொண்டமைக்கு இளஞ்சூரியன் விசும்பில் மேன்மேலும் உக்கிரமுடன் எழுந்து செல்லுதலை உவமிக்கிறார் முடத்தாமக் கண்ணியார். இதனை,

    பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி,
    வெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு,
    பிறந்து தவழ் கற்றதன் தொட்டு, சிறந்தநன்
    நாடு செகிற்கொண்டு நாள்தொறும் வளர்ப்ப”       (பொருநர்.135-138) என்னும் அடிகளில் குறிப்பிடுகின்றார்.

    அமாவாசை அன்று திங்களின் உருவம் முற்றும் மாய்ந்துவிடுகிறது. அந்நாளின் பின்நாள் தொடங்கி பிறை பிறந்து வளர்ந்து வருகின்றது. ‘பிறை பிறந்தன்ன பின் ஏந்து கவைக்கடை’ (பெரும்பாண்.11) என்று யாழின் பின்புறத்தில் ஏந்தியிருக்கின்ற கவைத்தலையையுடைய கடைப் பகுதியை முதற் பிறைக்கு ஒப்பிடுகின்றார் பெரும்பாணாற்றுப்படைக்காரர்.

    எட்டாம் பக்கத்துத் தோன்றும் அரைத் திங்களைப் பெரும்பாணாற்றுப்படை,

    “எண்நாள் திங்கள் வடிவிற்று ஆகி,
    அண்-நா இல்லா அமை வரு வறுவாய்”       (பெரும்பாண்.11-12) என்று வர்ணித்துள்ளது.

    அரும்பு விரிந்த வெண்டாமரையானது நாட்காலையில் மலர்ந்த பூவில் சென்று தேனை நுகரும். நீல நிறமும் சிவந்த கண்ணும் கொண்ட வண்டுகளின் நிரையொழுங்கு திங்களைச் சேர்ந்து பற்றுகின்ற கரும் பாம்பிற்கு ஒப்ப உளது என்று,

               “முள்அரைத் தாமரை முகிழ்வரி நாட்போது
               கொங்கு கவர் நீலச் செங்கட் சேவல்
               மதிசேர் அரவின் மானத் தோன்றும்” (சிறுபாண்.183-185)

    என்று வரும் சிறுபாணாற்றுப்படை அடிகள் அறிவிக்கின்றன.

    திங்களின் அருகில் வியாழனும், வெள்ளியும் எப்பொழுதும் நீங்காமல் விளங்குகின்றன என்பதை,

    “சேண்விளங்கு இயற்கை வான்மதி சுவைஇ
    அகலா மீளின் அவர்வன விமைப்ப”                 (முருகு.87-88)

    என்ற திருமுருகாற்றுப்படை அடிகளின் வழி நக்கீரர் உணர்த்துகின்றார் (தி. மகாலட்சுமி, இலக்கியத்தில் சோதிடம், ப.70).

    இரவுப் பொழுது புலரும் விடியற் காலத்தே வெள்ளியானது வானத்தில் தோன்றும் என்ற உண்மையினைப் பல இடங்களில் கவிஞர்கள் எடுத்தியம்பியுள்ளனர். செறிந்த இரவில் விரிகின்ற கிரணங்களை உடையதாக வெள்ளி மீன் எழுந்தது. உடன் பொழுது விடிந்தது என்பதை,

    “கைக் கசடிருந்த என்கண்ணகல் தடாரி
    இருசீர்ப் பாணிக்கேற்ப விரிகதிர்
    வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்”       (பொருநர்.70-72)

    என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. அதிகாலையில் எழுந்து விடிவெள்ளியின் உதயம் கண்டு நீராடுதல், பயணம் தொடங்குதல் முதலிய நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர் என்பதை இவ்வடிகள் சுட்டுகின்றன.

    மலைபடுடாத்தில் கார்த்திகை நட்சத்திரம் பற்றிய செய்தி இடம்பெறுகின்றது. இதனை,

    “அகல் இருவிசும்பின் ஆஅல் போல
    வாலிதின் மலர்ந்தன புன்கொடி முசுண்டை”      (மலைபடு.100-101) என்னும் அடிகள் உணர்த்துகின்றன.

    வானத்து வடவயின் விளங்கும் ஏழு முனிவருள் வசிட்ட முனிவரின் பத்தினி அருந்ததி. அருந்ததி, சாலினி என்று குறிப்பிடுகின்ற இவ்வடமீனானது பெண்களின் கற்போடு தொடர்புபடுத்தப்பட்டு மக்களால் வழிபடும் தன்மையதாகக் காணப்படுகின்றது. திருமணமானதும் புதுமணமக்களை அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கச் செய்கின்ற ‘அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்’ என்ற வழக்கு இன்றும் நம்மிடம் நிலவி வருகின்றது. இதனை,

    பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
    சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்”           (பெரும்பாண்.302-303) என்று பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது. 

    முடிவுரை
    சங்ககால மக்களிடத்தில் இருந்த வானியல் பற்றிய அறிவினைச் சங்கப் பாடல்களான ஆற்றுப்படை பாடல்கள் மூலம் அறியமுடிகின்றது. சூரியன், சந்திரன் ஆகிய இருசுடர்கள் பூமியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தின. சூரியன், கிரகங்கள் இயங்குவதற்கு நடுவணாக அமைந்தது. நிலவு தேய்ந்து அமாவாசையானது; பின் வளர்ந்து முழுநிலவு நாளானது. கார்த்திகை நட்சத்திரம் மக்களிடம் சிறப்பிடம் பெற்றது. வெள்ளி, அருந்ததி போன்ற மீன்கள் மக்களிடம் நன்மதிப்பை பெற்றன. அதனை அவர்கள் வாழ்க்கையின் முன்மாதிரியாகப் பாவித்துப் பின்பற்றி வந்தனர்.

    உதவி:
    பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்

    *****

    கட்டுரையாசிரியர் – இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்
    ஸ்ரீ வித்யாமந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    காட்டேரி, ஊத்தங்கரை, கிருட்டினகிரி (மா.).

     

    Share
  • திராவிட சிசு!

    -முனைவர் அ.மோகனா

    ‘வைகாசி’ அருளாளர்கள் பல அவதரித்த மாதம். சைவ அடியார்களுக்கும் வைணவ ஆழ்வார்களுக்கும் உகந்த மாதம். பல விசேஷங்கள் நிறைந்த மாதமும் கூட. இந்த வைகாசி மாதத்தின் மூல நட்சத்திர நாளன்று அவதரித்தவர்தான் திராவிட சிசு என்று ஆதிசங்கரரால் அழைக்கப்பட்ட திருஞானசம்பந்தர். இதே நாளில்தான் திருநீலநக்கரும், திருநீலகண்ட பாணரும் அவதரித்தனர். சம்பந்தரின் வாழ்வில் இந்நாள் பல முக்கியத் தருணங்களைக் கொண்டதாக உள்ளது. சம்பந்தர் பிறந்த இதே நாளில்தான் அவருக்குத் திருமணமும் நிகழ்ந்தது. அந்நாளின் பின்னிரவு விடியலில்தான் இறைவனுடன் இரண்டறக் கலந்தது.

    சம்பந்தர் தமிழ்ப் பக்தி இலக்கியத்தின் தலைசிறந்த முன்னோடி. இவர் பாடிய பாடல்களைக் காணும்போது இவர் பற்றிய நிகழ்வுகளின் உண்மையை உணரமுடிகின்றது. தம் மூன்றாம் வயதினிலே உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டு அதன் பெருமையால் தேவாரம் பாடியவர். சிவபெருமானிடத்தே பொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும், உலவாக் கிளியும் பெற்றவர். வேதாரணியத்திலே திருக்கதவு அடைக்கப்பாடியவர். திருநீற்றுத் திருப்பதிகம் பாடிப் பாண்டியனுக்கு வெப்பு நோயை நீக்கியவர். எலும்பைப் பெண்ணாக்கியவர் எனப் பல அற்புதங்கள் நிறைந்த வாழ்வினை வாழ்ந்தவர் திருஞானசம்பந்தர். தலங்கள் தோறும் சென்று சம்பந்தர் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. குறிப்பாகக் கோளறு திருப்பதிகம். ஏனெனில் இறைவனிடம் சரணடைந்த அடியார்களை நாளும் கோளும் எதுவும் செய்வதற்கில்லை என்பதை உலகிற்கு உணர்த்த சம்பந்தரால் இப்பதிகம் பாடப்பட்டது. மதுரை அரசி மங்கையர்க்கரசி அழைப்பைஏற்று மதுரை செல்லக் கிளம்பினார். அப்போது அந்த நாள் நல்ல நாள் இல்லை என்று அவர் பயணத்தை தடுத்தார் திருநாவுக்கரசர். இறைவன் அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள்தான் என்று சொல்லி கோளறு பதிகம் என்னும் இந்த பத்துப் பாடல்களைப் பாடியருளினார் திருஞான சம்பந்தர். பத்துப் பாடல்களின் தொகுப்புக்குப் பதிகம் என்று பெயர். இதில் பதிகப் பயனுடன் சேர்த்து மொத்தம் பதினொரு பாடல்கள் இதில் உண்டு. இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது இன்றளவும் மக்களின் நம்பிக்கையாகஉள்ளது.

    வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
    மாசறு திங்கள்கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
    ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
    ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. (இரண்டாம் திருமுறை, கோளறு திருப்பதிகம், பாடல்.1)

    மூங்கிலைப் போன்ற தோளினை உடைய உமையினை ஒருபாகமாகக் கொண்டவன். விடத்தை உண்ட கண்டத்தினை உடையவன். அவன் திங்களையும் கங்கையையும் முடிமேல் அணிந்தவன். மகிழ்ச்சியுடன் வீணையை மீட்டிக்கொண்டு என் உள்ளத்தில் புகுந்துள்ளான். அதனால் ஞாயிறு, திங்கள் முதலிய ஒன்பது கோள்களும் எனக்குக் குறறத்தைச் செய்யாது. எனக்கு மட்டுமல்ல அவை அடியார்களுக்கும் நல்லதை மட்டுமே செய்யும் என்கிறார் சம்பந்தர். மேலும் கோள்கள் மட்டுமா அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பது, பதினாறு, பதினெட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவனவும் பிறவுமான நட்சத்திரங்களும் அடியார்களுக்கு அன்போடு மிக நல்லனவே செய்யும். சினம் மிக்க காலன், அக்கினி, யமன், யமதூதர், கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடையனவாய் நல்லனவே செய்யும். கொடிய சினமுடைய அவுணர், இடி, மின்னல், செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும். வலிய குரங்கு, புலி, கொலையானை, பன்றி, கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியனவும் நல்லனவே செய்யும்! கொடிய சினமுடைய அவுணர், இடி, மின்னல், செருக்குடைய பூதங்கள் ஆகியனவும் அடியார்களைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும் என அடியார்களுக்கு இப்பூவுலகில் உள்ள அனைத்து உயிர்களும், பொருட்களும் நல்லதை மட்டுமே செய்யும் என்கிறார் சம்பந்தர்.

    சம்பந்தரின் பாடல்கள் பக்திச் சுவையில் மட்டுமன்றி இலக்கிய வடிவத்திலும் சிறப்புற்று இருக்கின்றன. இரண்டு சீர்களாலான அடியில் தொடங்கிப் ஒன்பது, பத்துச் சீர்களாலான அடிகள்வரைப் பாடல்களைப் புனைந்துள்ளார் சம்பந்தர். இரண்டு சீர்களால் ஆனவற்றைத் திருவிருக்குக்குறள் என்பர். ஒன்பது சீர்களைக் கொண்ட அடிகளால் ஆனது யாழ்முரிப்பதிகம். பத்துச் சீர்களால் ஆனது திருத்தாளச்சதி. ஒன்று யாழில் அடங்காதது. மற்றொன்று ஆடுவதற்கு உகந்தது. சம்பந்தர் பாடிய பதிகங்களுக்குள் தனிச்சிறப்பு வாய்ந்த பதிகமாக இவ்விரு பதிகங்களும் அமைகின்றன. யாழ்முரிப் பதிக வரலாறு சுவாரசியமானது. சம்பந்தரின் பாடல்களுக்கு யாழ்வாசித்துத் தொண்டு செய்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். அவர் வாசித்த யாழ்க்கருவி சகோடயாழ் என்னும் பெயருடையது. அவரைச் சேக்கிழார் “சகோடயாழ்த் தலைவர்” எனப் போற்றுகின்றார். சகோடயாழின் பண்டைத் தமிழ்ப் பெயர் “செம்முறைக் கேள்வி” என்பது. இதில் பதினான்கு நரம்புகள் கட்டப் பெற்று இருக்கும். திருநீலகண்ட யாழ்ப்பாணரின் உறவினர்கள் யாழ்ப்பாணர் தேவாரப்பதிகங்களை யாழில் வாசித்து வருவதனைக் கேட்டு, “நீங்கள் அத்திருப்பதிகங்களை யாழிலிட்டு வாசிக்கும் சிறப்பினாலே அப்பதிகங்களின் இசை அகிலமெல்லாம் வளர்கின்றது” என்று பாராட்டி மகிழ்ந்தனர். யாழ்ப்பாணர் அந்த பாராட்டுரைக்கு மகிழவில்லை. அதற்கு மாறாகச் செவிபொத்தி உளம் நடுங்கினார். திருஞானசம்பந்தப் பிள்ளையாரை அடைந்து அவரது திருவடியைப் போற்றித், “திருப்பதிக இசை அளவுபடாத வகையில் இவர்கள் மட்டுமேயன்றி உலகிலுள்ளோரும் அறியும் வகையில் பலரும் புகழும் திருப்பதிகம் பாடியருள வேண்டும். அவ்வாறு பாடியருளப் பெற்றால் பண்புமிக்க அந்த இசை யாழின்கண் அடங்காமை யான் காட்டப் பெறுவன்” என்று விண்ணப்பித்தார். பிள்ளையாரும், “மாதர் மடப் பிடி”என்ற திருப்பதிகத்தை, “பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலு நிலத்தநூல் புகன்ற பேத நாதவிசை முயற்சிகளா லடங்காத வகை `காட்ட”ப் பாடியருளினார். கண்டம் என்றால் மிடறு என்று பொருள். கலம் என்றால் கருவி, யாழ் என்று பொருள். அதுவரையிலும் மிடற்றிலோ, யாழிலோ நாதவிசை முயற்சிகளால் இசைக்கப் பெற்றிராத, இசைநூல்களில் சொல்லப் பெற்றிராத இசை வகை காட்டிப் பிள்ளையார் பாடியருளினார், எனச் சேக்கிழாரும் இந்நிகழ்ச்சியைக் கூறியுள்ளார். பாடல் வருமாறு,

    மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
         -நடையுடைம் மலைமகள் துணையென மகிழ்வர்
    பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
         -அவர்படர் சடைநெடு முடியதொர் புனலர்
    வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
         -இரைந்நுரை கரைபொரு துவிம்மிநின் றயலே
    தாதவிழ் புன்னைத யங்குமலர்ச் சிறை வண்டறை
        -எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.

    (முதல் திருமுறை, யாழ்முரிப் பதிகம், பாடல் 1)

    இப்பாடல் ஒன்பது சீர்களைக் கொண்டிருந்தாலும் சந்த வாய்பாட்டில் தான தனத்தனனா – தன – தானன தானனா/ தனா – தனா – தனா தனதன தனனா என்றவாறு அமைந்துள்ளதை ந.சுப்புரெட்டியார் குறித்துள்ளார். அடிமுதற்கண் தொடங்கிய இயலும் இசையும் அவ்வடிக்குள்ளேயே முரிந்து மாறுபடும்படி அமைந்தமையால் முரி ஆனது. திருநீலகண்ட பாணர் யாழை முரிக்க முயன்றதனாலும் முரியாயிற்று.

    திருஞானசம்பந்தர் தான் வாழ்ந்த பதினாறு ஆண்டுகளுக்குள் பல்லாயிரம் ஆண்டுகள் புரிய வேண்டிய சாதனையைப் புரிந்தவர். அவர்தம் பக்திச்சிறப்பையும் இலக்கியப்புலமையையும் கருத்து நிலைப்பாட்டையும் புரிந்து கொண்டதால்தான் ஆதிசங்கரர் அவரைத் திராவிட சிசு என்றார்.

    *****

    பார்வை நூல்கள்

    சம்பந்தர்,   திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரப்  பதிகங்கள், திருமுறை (1,2,3), கயப்பாக்கம் சதாசிவ செட்டியாரால் பார்வையிடப்பெற்றன, கழகம், சென்னை, 1973.

    சேக்கிழார்,பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் (பன்னிரண்டாந்திருமுறை), சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, மூன்றாம் பதிப்பு, 1950.

    ந.சுப்பிரெட்டியார், மூவர்தேவாரம் – புதிய பார்வை, நிவேதிதா பதிப்பகம், சென்னை, 2003

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்
    தமிழ்த்துறை
    தியாகராசர் கல்லூரி
    மதுரை
    8056621869

     

     

    Share
  • சொந்தச் சிறகுகள்

     

     

    முனைவர் இரா.முரளி கிருட்டினன்

    உதவிப்பேராசிரியர்,தமிழாய்வுத்துறை,

    தூய வளனார் தன்னாட்சி்க் கல்லூரி,

    திருச்சிராப்பள்ளி-2

     

    பறக்க முடியவில்லை என்பதற்காக

    எந்தப் பறவையும்

    சிறகுகளை உதிர்ப்பதில்லை

    நீ மட்டும் ஏன்

    தன்னம்பிக்கையை உதிர்க்கிறாய்

    சோம்பலாய்  இருந்தால்

    தனிமை கூட சிறை தான்

    புறப்படு

    தென்றலாகவோ

    புயலாகவோ

    இல்லை

    காற்றாக

    உயிர்மூச்சாக

    இயங்கு…

     

    பூமிப் பந்தைப் பார்

    இயங்கிக் கொண்டு

    இருக்கிறது

    அதன் மேல் ஏன்

    தூங்கிக் கொண்டிருக்கிறாய்…

     

    ஓடும் குதிரையின்

    பிடரி போல

    அங்கும் இங்கும்

    அலையாதே

    சிங்கத்தின் பிடரி போல்

    சிலிர்ப்போடு இரு.

     

    வறுமை யானையென்றால்

    அடக்கும் அங்குசமாய் இரு

     

    வெற்றி கனியென்றால் அதை

    உண்ணும் பறவையாய் இரு…

     

    தோல்வி ஒன்றும் எட்டிக்காயல்ல

    அமிழ்தம் அடைந்து பார்..

     

    சூரியன் சுடும் தான்

    இருந்தாலும் பீனிக்ஸ் விடுவதில்லையே..

     

    நீ மட்டும் ஏன் ….

    சொந்த சிறகுகளை

    அடமானம் வைக்கிறாய்….

     

    இயங்கிக் கொண்டே இருப்போம்

     

    ஒரு வேளை

    மரணித்துப்போனால்

    மண்ணுக்குள்

    விதையாக மட்டும்.

     

    smrmurali@gmail.com

    Share
  • ஜென் நிலை – ஜென்னி நிலை

    போராட்டக் காரராக இருப்பது எளிது. போராட்டக் காரரின் மனைவியாக இருப்பது அரிது. போராட்டக் காரரின் குழந்தைகளுக்குத் தாயாக இருப்பது அதனினும் அரிது. அதைவிடவும் அரிது போராட்டக் காரரின் நோய்வாய்ப்பட்ட குழந்தையின் தாயாக இருப்பது. அதைவிடவும் கொடிது போராட்டக் காரரின் நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு வறுமை வயப்பட்ட தாயாக இருப்பது. அப்படிப் பட்ட ஒரு தாயின் கடிதத்தில் ஒலிக்கும் கதறல் இது.

    எங்களுடைய சிறு குழந்தை பிரான்சிஸ்கா, கடுமையான மார்ச்சளி நோயினால் படுத்துக் கொண்டு விட்டது. அது பாவம். மூன்று நாட்கள் எமனோடு போராடியது. அதனுடைய அவஸ்தை சொல்லி முடியாது. கடைசியில் அதனுடைய ஆயுள் முடிந்து விட்டது. எங்களோடு மற்ற மூன்று குழந்தைகளும் இருந்தன. பிரான்ஸிஸ்கா இறந்து போனதற்காக நாங்கள் அழுது கொண்டிருந்தோம். எங்களுடைய அதிகமான பணமுடை காலத்தில் அந்தக் குழந்தை இறந்து விட்டது. ஜெர்மானிய நண்பர்கள் எங்களுக்கு எவ்வித உதவியும் செய்ய முடியாதவர்களாக இருந்தார்கள். எங்களைப் போல தேசப் பிரஷ்டமடைந்து அருகாமையில் வசித்துக் கொண்டிருந்த ஒரு பிரெஞ்சு நண்பரிடம் சென்று என் குறையைத் தெரிவித்தேன். அவர் பெரிய மனது பண்ணி இரண்டு பவுன்டு கொடுத்தார். இந்தப் பணத்தைக் கொண்டு சவப் பெட்டி வாங்கினேன். அதில்தான் இப்போது என் குழந்தை சாசுவதமான நித்திரை செய்து கொண்டிருக்கிறது. அது பிறந்தபோது, அதற்குத் தொட்டில் இல்லை; இறந்த பிறகு அதற்குச் சவப் பெட்டி கிடைப்பது இத்தனை கஷ்டமாகி விட்டது” இதனை வரைந்தது உலகையே மாற்றி அமைத்த பொதுவுடைமைச் சிந்தனையைக் கொடுத்த கார்ல் மார்க்சின் காதல் மனைவி ஜென்னி மார்க்சு அவர்களின் விரல்களே.

    இன்றைய உலகின் மார்க்சிய தத்துவத்தைத் தந்தவர் கார்ல் மார்க்சு. அவரை தத்துவ மேதையாக ஆக்கித் தந்தவள் ஜென்னி மார்க்சு. ஜென்னியின் பெற்றோரும் கார்ல் மார்க்சின் பெற்றோரும் ட்ரியரில் பக்கத்துப் பக்கத்து வீட்டில் வசித்தார்கள். ஜென்னியின் தந்தை ட்ரீவ்ஸ் என்னும் நகரின் அரசு பிரதம அதிகாரியாக இருந்தார். இவரது சகோதரன் பிரஸ்ஸிய அரசில் பிரதான அமைச்சராக இருந்தார். கார்ல் மார்க்சின் தந்தை பிரபலமான வழக்கறிஞராக இருந்தார். இரு வீட்டுக் குழந்தைகளும் ஒன்றாக உண்பதும் விளையாடுவதுமாக பழகி வந்தனர்.

    ஜென்னி நல்ல அழகி; மார்க்சு. மார்க்சு குழி விழுந்த கண்கள், கருத்த மேனி என்று அழகற்றவன். அவரது குழந்தைகளே மார்க்சை ‘மூர்’  என்று அழைப்பார்கள். அவரது தாடியும் மீசையும் மூர்க்கனாகத் தோன்றியதால் அப்படி அழைத்திருக்கலாம். ஜென்னி நல்ல குணவதி; மார்க்சு மகா முரடன்; ஜென்னியை மணம் புரிபவன் மகா பாக்கியசாலியாக இருக்க வேண்டும்; மார்க்சை மணம் புரிபவள் பாவப் பட்டவள் என்றெல்லாம் பேசிக்கொள்வார்கள். மார்க்சு ஜென்னியை விட நான்கு வயது இளையவன்.  ஆனால் எப்படியோ இந்த இருவருள்ளும் காதல் மலர்ந்து விட்டது.

    சுயமாக சம்பாதிக்கும் வரை திருமணம் செய்து கொள்வதில்லை என்று உறுதியேற்று பெர்லின் சர்வகலாசாலையில் தன் கல்வியில் ஈடுபட்டார் மார்க்சு. திருமணம் ஆகாமல் இருந்த ஜென்னியை, ‘ஜென்னி ஒரு வாழா வெட்டி’ என்று உற்றாரும் உறவினரும் ஏச, அத்தனையையும் செவியில் ஏற்று மார்க்சுக்காகப் பொறுமையாக ஜென்னி ஏழு ஆண்டு காலம் காத்திருந்தாள்.  மார்க்சு பணி நிமித்தமாகப் பாரிசு சென்றான். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து மார்க்சு ஓர் பத்திரிகையைத் தொடங்கினார். நிதி நிலை ஓரளவு திருப்திகரமாக இருக்கும் காலத்தில் ஒரு வழியாக 1843 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி பெர்த்தா ஜூலியா ஜென்னிக்கும் கார்ல் மார்க்சுக்கும் திருமணம் நடந்தேறியது. அப்போது மார்க்சின் வயது 25; ஜென்னியின் வயது 29.

    இதற்கிடையில் மார்க்சின் தந்தை இறந்து விட்டார். “ஜென்னி உன்னை விவாகம் செய்து கொள்வதன் மூலம் மகத்தான  தியாகத்தைச் செய்தவளாகிறாள்” மார்க்சின் தந்தை மார்க்சுக்கு எழுதிய கடிதத்தின் வரிகள் இது. மணமாகிறது. ஆனால் மார்க்சிடம் மனமாற்றம் இல்லை. எப்போதும் எழுத்து படிப்பு என்று இருக்கிறான். ஜென்னியும் தன் காதல் கணவனின் சிந்தனை சித்தாந்தத்தை ரசித்துக் கொண்டிருக்கிறாள். உலக சிந்தனை என்று ஏதுமற்ற அவனை அப்படிப்பட்ட உயர் சிந்தனையில் புகுத்தியவளே அவள்தானே,

    ஜென்னியின் தந்தை நீங்கள் “இருவரும் தேனிலவு சென்று வாருங்கள் என்று அனுப்புகிறார். தேனிலவுக்குப் புறப்படும் போது மார்க்சு 10 பெட்டிகளில் புத்தகங்களை அடுக்கிக் கொண்டார். ஆல்ப்ஸ் மலையின் அழகிய சிகரங்களில் சுற்றிச் சுழல வேண்டிய காதலர்களின் விழகள் அச்சடித்தப் புத்தகங்களைச் சுற்றி சுழன்று வந்தன. “நாம் இருவரும் சேர்ந்து படிக்கலாம்” என்று ஜென்னியும் மார்க்சின் சிந்தனையில் கலந்து கொண்டாள். இருவரும் ஆளுக்கு ஒருபுறம் அமர்ந்து நூல்களைப் படித்துக் கொண்டிருப்பார்களாம்.

    புரட்சித் துறவி வள்ளலார் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க தம் தமக்கையின் மகள் தனக்கோடி அம்மையாரை மணம் முடிக்கிறார். மணமக்களை முதலிரவுக்குத் தயாரிக்கிறார்கள். மணப்பெண் அறையில் காத்திருக்கிறார். வள்ளலாரோ கையில் திருவாசகத்தை ஏந்தி அறைக்குள் புகுகிறார். மங்கலாக எரிந்த விளக்கைத் தூண்டி பிரகாசமாக எரியச் செய்கிறார். தனக்கோடி அம்மையாரை அருகில் அமரச் சொல்கிறார். விடிய விடிய திருவாசகத்தை முற்றோதல் செய்து முடிக்கிறார். வள்ளலார் தனக்கோடி அம்மையாரின் தேனிலவினைத் திருவாசகத் தேனிலவு என்று கூறுவார் ஊரனடிகள். அதே போல ஹெகலின் தத்துவங்களைப் படித்துக் கொண்டிருந்த மார்க்சு ஜென்னியின் தேனிலவினை ஹெகல் தேனிலவு என்று சொல்வது பொருத்தமாகும்.

    ஆனால் வள்ளலாருக்கும் மார்க்சுக்கும் வேறுபாடு உண்டு. வள்ளலார் துறவுக்காக மனைவியைத் தயாரித்தார். மார்க்சு காதலோடு ஜென்னியுடன் இல்லறம் நடத்தினார். ஜென்னி மார்க்சுடன் தத்துவம், சமத்துவம் பேசிக்கொண்டும் மார்க்சு பேசுவதைக் கேட்டுக் கொண்டும் மகிழ்ந்திருந்தாள். இந்த நிலையில் ஏழு குழந்தைகளுக்குத் தாயானாள் ஜென்னி. இதில் ஒன்றும் அதிசயம் இல்லை. ஏழைகளின் ஒரே பொழுது போக்கு காமம் என்றாகிவிடுகிறது பல நேரங்களில். இவர்களோ காதல் மணம் புரிந்த ஏழைகள்.

    ஜென்னியின் தந்தை பெரும்பணக்காரர். வீட்டில் எடுப்பதற்கும் கொடுப்பதற்கும் வேலைக்கு ஆட்கள். வசதி… வசதி. ஏழ்மையின் அகோரப் பிடியில் சிக்குண்டு நான்கு ஆண் குழந்தைகள் உயிர் இழந்தன என்று ஜென்னி கடிதம் ஒன்றில் எழுதுகிறாள். இத்தனை வறுமையில் கணவனை ஏதாவது வேலைக்குச் சென்று பணம் ஈட்டு என்று அவள் ஒரு போதும் சச்சரவு செய்ததில்லை ஜென்னி. மாறாக…..

    “தினந்தோறும் நாங்கள் எந்த மாதிரியான வாழ்க்கையை அனுபவித்து வந்தோம் என்பதற்கு உதாரணமாக எங்களுடைய ஒரு நாள் வாழ்க்கையை மட்டும் இங்கு வருணித்துக் காட்டுகிறேன். என் குழந்தைக்குப் பால் கொடுக்க ஒரு  தாதியை அமர்த்திக் கொள்ளலாம் என்றால் அதற்கு இங்கு அபாரமான செலவு ஆகும். பொறுக்க முடியாத மார்பு நோயையும் முதுகு வலியையும் பொறுத்துக் கொண்டு என் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அழகும் துரதிஷ்டமும் வாய்ந்த அந்தக் குழந்தை, என்னிடத்திலிருந்து எவ்வளவு பால் குடித்ததோ அவ்வளவு என்னுடைய துக்கத்தையும் சேர்த்துக் குடித்தது. இதனால் அது சதா அரட்டிக் கொண்டே இருந்தது. இரவும் பகலும் எப்பொழுதும் இசிவு, வலிப்பு அதற்கு வந்து கொண்டே இருந்தது. அது பிறந்தது முதல் ஒரு நாளாவது இரவு பூராவும் தூங்கினதே கிடையாது. அது உயிரோடு போராடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் அதற்கு வலிப்பு ஏற்பட்டது. வலிப்பு ஏற்படும்போது அது பால் குடித்துக் கொண்டிருந்தது. அதனால் என் மார்பு புண்ணாகி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இப்படி அவஸ்தைப் பட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கையில் எங்கள் வீட்டின் சொந்தக்காரி பிரசன்னமானாள். வீட்டு வாடகையான 5 பவுண்டுகளை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்டாள். உடனடியாக எப்படி கொடுக்க முடியும். ஏலம் போடுகிற தரகர்கள் இரண்டு பேர் உள்ளே நுழைந்தார்கள். எங்கள் துணி மணிகள், கைக்குழந்தையின் தொட்டில் முதல் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான் வரை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்தில் பணத்தைக் கொடுக்க வில்லையென்றால் எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு போய்விடுவோம் என்று அவர்கள் பயமுறுத்திச் சென்றார்கள். ஏலம் போடும் தரகர்கள் வீட்டில் நுழைந்து விட்டார்கள் என்பதைக் கேட்டு, சாமான்கள் கொடுத்து வந்த எல்லோரும் தங்களுடைய பாக்கிக்காக எங்களை நெருக்கினார்கள். எங்கள் படுக்கைகள் அனைத்தையும் விற்று வைத்தியன், ரொட்டிக்காரன், கசாப்புக்காரன், பால்காரன் முதலியவர்களின் பாக்கிகளை எல்லாம் தீர்த்து விடலாம் என்று தீர்மானித்தோம். பொருட்களைத் தெருவிலே கொண்டு போய் கை வண்டியிலேற்றினோம். அந்தச் சமயம் சூரியன் அஸ்தமித்து விட்ட சமயம். இருட்டாகி விட்டது. இருட்டு வேளையில் சாமான்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்வது (இங்கிலீஷ் சட்டப்படி) சட்ட விரோதம். உடனே வீட்டுச் சொந்தக்காரன் சில போலிஸ்காரர்களுடன் வந்து விட்டான். நாங்கள் தப்பித்து வெளிநாடு செல்ல முயல்வதாகவும் அவருடைய சாமான்களும் அந்தக் கை வண்டியில் இருக்கக் கூடுமென்றும் தாறுமாறாகப் பேசினார். அவ்வளவுதான்; ஐந்து நிமிடத்திற்குள் இருநூறு அல்லது முந்நூறு பேருக்கு மேற்பட்ட ஒரு கூட்டம் எங்கள் வீட்டு முகப்பில் கூடிவிட்டது. படுக்கைகள் திரும்பவும் வீட்டுக்குள் கொண்டு வரப் பட்டன. மறுநாள் பொழுது விடிந்த பிறகுதான் அவைகளை நாங்கள் விற்பனைக்கு அனுப்ப முடிந்தது. இங்ஙனம் எங்கள் தட்டு முட்டு சாமான்களை விற்று கடன்களை அடைத்தோம். ஆனால், இந்தச் சில்லரைத் தொந்திரவுகள் என் மன உறுதியைக் குலைத்துவிட்டனவென்று நீங்கள் கருத வேண்டாம். ஒருவித பாக்கியசாலிகளிலே நான் ஒருத்தி. நான் அதிர்ஷ்டக் காரி, ஏனென்றால் எனது கணவர் எனது வாழ்க்கையின் மூலாதாரம்” என்று எழுதுகிறாள். அவளது காதலின் கம்பீரமும் உலக நேசிப்பின் உயர்வும் இப்படி எழுத வைத்தது.

    வீட்டில் இருந்த வெள்ளிப் பொருட்கள், மார்க்சின் கோட்,  குழந்தைகளின் பூட்சு அனைத்தையும் அடகு வைத்து வாழும் வாழ்க்கையிலும் மார்க்சின் காதலை மட்டும் எதற்கும் அடகு வைக்காமல் இருந்தாள் ஜென்னி. புழுதி மண்ணில் புரண்டாலும் மார்க்சு வாணுயர்ந்த தத்துவத்தைத் தந்தே தீர்வது என்னும் தன் கொள்கையிலிருந்து மாறவே இல்லை. ஜென்னியும் மார்க்சு அப்படி மாறிவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையுடன் இருந்தாள்.

    ஒரு பெண்ணுக்கு ஆகப் பெரிய சங்கடம் அவளை விபச்சாரி என்று கைது செய்வது. அந்தக்  கொடுமையையும் அனுபவித்தவள் ஜென்னி. அரசுக்கு எதிராகப் புரட்சிக் கருத்துகளை எழுதியும் பேசியும் வந்ததாகச் சொல்லி 24 மணி நேரத்திற்குள் மார்க்சு பெல்ஜியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது பெல்ஜிய அரசு. புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் போதே காவலர்கள் சிலர் வந்து மார்க்சை உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி கைது செய்தனர். கணவனைக் காப்பாற்ற முடியாதா என்னும் ஏக்கத்தோடு யாருமற்ற அநாதையாய் பெல்ஜியம் ஜனநாயக சங்கத்தின் தலைவர் ஜோத்ரானந் என்பவரைப் பார்த்து உதவி கேட்கச் சென்றாள். திரும்பி வந்து பார்க்கும் போது வீட்டு வாயிலில் காவலர் ஒருவர் இருந்தார். உங்கள் கணவரைப் பார்க்க வேண்டுமானால் என்னுடன் வாருங்கள் என்று  வாஞ்சையோடு அழைத்தார். ஆசையோடு உடன் சென்ற ஜென்னி அங்கு விசாரனைக்குட்படுத்தப் பட்டு விபச்சாரி என்று சிறையில் அடைக்கப் பட்டார். அவள் செய்த குற்றம் அப்போதும் மார்க்சை மனமாற காதலித்ததும் அவரது செயல்பாடுகள் சரியானது என்று பேசியதுமே. “விசாரனையெல்லாம் முடிந்து அவர்கள் வெளியில் வரும்போது நாட்டை விட்டு வெளியேற கொடுத்திருந்த 24 மணி நேரம் முடிவடைந்திருந்தது. ஆகையால் அத்தியாவசியப் பொருள்களைக் கூட எடுத்துக் கொள்ளாமல் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது” என்று மார்க்சு ஒரு பத்திரிகையில் எழுதியிருந்ததைப் பார்க்கும் போது மார்க்சுதான்  வேதனை பட்டார். ஆனால் மார்க்சின் காதலுக்காக ஜென்னி இதனையெல்லாம் சுகமாகச் சுமந்திருந்தாள் என்பதே உண்மை.

    பெல்ஜியத்திலிருந்து பாரிசு மாநகரம் வந்தடைந்து அப்பாடா என்று இழுத்து நீண்டதொரு மூச்சு விட்டிருப்பார்கள். அவ்வளவுதான். 1849 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மார்க்சு பாரிசு வருகின்றார். ஜூலை மாதம் ஜென்னியும் குழந்தைகளும் பாரிசு வந்தடைகிறார்கள். இனி நீண்ட நாட்கள் மார்க்சுடன் சேர்ந்து காதல் வாழ்வு வாழப் போகிறோம் என்று கனவில் மூழ்கி இருந்தாள் ஜென்னி. அடுத்த ஒரு மாதத்தில் அந்தக் கனவும் கலைந்தது. பொழுது புலர்ந்த போது ஜென்னியின் வாழ்வில் மீண்டும் இருள் மண்டியது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் மார்க்சு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்னும் உத்தரவை ஒரு காவலர் கொண்டு வந்து கொடுத்தார். விழி நீருடன் வழியனுப்பி வைப்பதைத் தவிர என்ன செய்வாள் அவள்? 1849 ஆகஸ்டு 24 மார்க்சு பாரிசிலிருந்து கிளம்பி இலண்டன் அடைந்தார். எத்தனை அவமானங்கள்? எத்தனை நாடுகள்? மீண்டும் ஒரு மாதப் பிரிவின் பின் நாடு கடத்தப் பட்ட தன் காதல் கணவனை அடைய குழந்தைகளுடன் பயணத்தைத் தொடர்ந்தாள் ஜென்னி. இப்போது இலண்டன். இங்குதான் ஜென்னியின் மூன்று குழந்தைகள் இறந்தன.

    ஜென்னியைப் பற்றி மார்க்சின் நண்பர் ஒருவர் இப்படி கூறுகின்றார். “மார்க்சின் மனைவி ஃப்ருஷ்ய மந்திரியான வெஸ்ட் பாலன் பிரபுவின் சகோதரி, நன்றாகப் படித்தவள். வசீகரமான சுபாவமுடையவள். இந்த அநாகரிக வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டு விட்டாள் காரணம் தன் கணவன் மீதுள்ள காதல்தான். இப்போது இவளுக்கு வறுமை வாழ்க்கை என்பது சகஜமாகிவிட்டது”

    மேல் சட்டையை அடகு வைத்துவிட்டு வெளியில் செல்லாமல் இருக்கும் கணவன், சோறில்லாமல் ஒட்டிய வயிற்றோடு குழந்தைகள், பாக்கிக்காக வீட்டின் முன்பு நிற்கும் கடன் காரர்கள், மார்க்சு வீட்டில் இருக்கும் போதே ‘அப்பா வீட்டில் இல்லை’ என்று கடன் காரர்களிடம் பொய் கூறப் பழகி விட்ட குழந்தைகளின் வெள்ளை மனம், கடன் காரர் ஒருவருக்கு அஞ்சி ஊரை விட்டே ஓடிய மார்க்சின் கடன் பிரச்சனை இத்தனையும் ஜென்னியை நோயாளிக்கியது.

    எஞ்சிய நான்கு குழந்தைகளில் ஒர் ஆண் குழந்தையான எட்காரும் இறந்துவிட்டான். மார்க்சுக்கும் கண் வலி, வயிற்றுக் கோளாறு; உடலெல்லாம் கொப்புளங்கள்; காசம் என்று நோயாளியானான். ஜென்னியிடம் பற்றிக்கொண்ட மார்க்சின் ஆழமான காதல் போலவே அவனது நோயும் அவளைப் பற்றிக்கொண்டது. கல்லீரல் புற்று நோயும் பற்றிக்கொண்டது. 1881 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் ஜென்னி பூவுலக நரக  வாழ்க்கையிலிருந்து விடுபட்டாள்.

    ஏங்கெல்ஸ் இல்லை என்றால் மார்க்சின் தத்துவம் உயிர் பெற்றிருக்காது. ஜென்னி இல்லையென்றால் கார்ல் மார்க்சே உயிரோடு இருந்திருக்க மாட்டார். ஆம் ஜென்னி இறந்த போதே மார்க்சும் இறந்து விட்டார். அதன் பின் அவன் வாழ்ந்த பதினைந்து மாத காலங்கள் இறந்த வாழ்க்கையே அன்றி இருந்த வாழ்க்கை இல்லை என்று  மார்க்சின் உற்ற நண்பன் ஏங்கெல்ஸ் கூறுகிறான்.

    தன் காதல் கணவன் மார்க்சினால் தன் ஈமச் சடங்கினைக் கூடச் செய்ய முடியாமல் போகும் என்று எப்படி ஜென்னி நினைத்திருப்பாள். அதற்குக் கூட இயலாத நிலையில் நோய் வாய்ப்பட்டான் மார்க்சு. காதல்….. மார்க்சின் மீது ஆழமான காதல்.. அவனுக்காக எதையும் செய்யும் காதல்… என்று காதலைத் தவிர எதுவும் நினைக்காதவள் ஜென்னி. ஜென் நிலை என்பது எதைச் செய்கிறோமோ அதில் மட்டுமே முழுக் காதலோடு இருப்பது. ஜென்னி மார்க்சைக் காதலிக்க மட்டுமே இவ்வுலகுக்கு வந்தவள். காதலித்தாள். ஆழமாகக் காதலித்தாள்….. அணு அணுவாகக் காதலித்தாள். தீயாய்ச் சுடும் வாழ்க்கையைத் தேனாய் நினைத்தாள்.. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒர் பெண் இருக்கிறாள் என்று கூறுவது வெற்றியாளர் கார்ல் மார்க்சைப் பொறுத்த மட்டில் சத்திய வாக்கு! உயர்ந்த காதலால் உலகுக்கு மாதிரியாக மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் ஜென்னி

     ஆதிரா முல்லை

    (முனைவர் ப. பானுமதி)

    உதவிப் பேராசிரியர்

    வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி

    சென்னை 600 102

    Share
  • தமிழக அரசின் நுண்புலன் திறனற்ற நிலை

    சேசாத்திரி பாஸ்கர்

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு தமிழக அரசின் நுண்புலன் திறனற்ற நிலையைக் காட்டுகிறது. போராட்டம் உச்ச நிலையை எட்டிய நிலையில் காவல்துறை சுதாரித்துக் கொண்டு நிலையை கட்டுக்குள் கொண்டு வரத் தவறியது பெரும் தவறு . இரண்டு சாமானியன் சண்டையிட்டுக் கொள்ளும்போது உணர்ச்சி மேலோங்கி வன்முறை நிகழலாம் . ஆனால் காவல் துறையினர் சட்டென உணர்ச்சி வசப்பட்டு பதிலுக்குப் பதில் வன்மத்தில் இறங்கியது கொடூரம் .போரட்டக்காரர்கள் அந்நிய நாட்டை சேர்ந்தவர்களா என்ன ? இராணுவத்தில் தான் எதிரி சுடப்பட்டு கீழே வீழ்ந்து மடிய வேண்டும் என்ற நியதி உண்டு . இவர்கள் எல்லோரும் மண்ணின் மைந்தர்கள் .இவர்கள் கோபத்தில் எடுத்த ஆயுதம் கற்களும் பாட்டில்களும் தான் . சில இடங்களில் பெட்ரோல் குண்டு . அவர்கள் செய்ததை ஞாயப்படுத்தவில்லை .அவர்களைச் சமாளிப்பது பெரிய காரியமில்லை என எல்லோருக்கும் தெரியும் . ஆனாலும் உணர்ச்சி மேலோங்கி காவல்துறை இயங்கியது மிகத் தவறு. ஒரு வன்முறை கூட்டத்தில் முதல் பிரயோகம் தடியடி .அதுவும் கால்களில் தான் நிகழ்த்த வேண்டும் . மிஞ்சிப் போனால் பிருஷ்டத்தில் அடிக்கலாம்சே. வன்முறையைக் கட்டுப்படுத்தச் செய்ய வேண்டிய முதல் பாடம் இது . அப்போதும் கூட்டம் கலையவில்லையெனில் டியர் காஸ் என சொல்லப்படும் கண்ணீர் புகைக்குண்டை பிரயோகம் செய்ய வேண்டும் . இதில் பெரும்பாலும் கூட்டம் கலைந்து விடும் . அல்லது பலகீனம் ஆகி விடும் . இதுவும் செய்து வன்முறை அடங்கவில்லை எனில் தான் துப்பாக்கிச் சூட்டை பிரயோகம் செய்ய வேண்டும் . அப்போது கூட ஒலி பெருக்கியில் அறிவித்து விட்டு அதனைச் செய்ய வேண்டும் . அப்படிச் சுடும்போது கூட கால்களை நோக்கித் தான் சுட வேண்டும் . இதை எந்தச் சூழலிலும் கடை பிடிக்க வேண்டிய நிர்பந்தம் காவலர்க்கு என்றும் உண்டு . கலவர பூமியில் இதை எல்லாம் பற்றி அவர்கள கவலைப்படவில்லை . ஒரு பெரிய அதிகாரிகளின் படை இருந்திருப்பின் ஒரு வழிகாட்டுதல் இருந்து இருக்கும் . இதை எல்லாம் காற்றில் பறக்க விட்டு வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு என்று யார் காதில் பூ சுற்றுகிறார்கள் ? கால்களை நோக்கிச் சுட வேண்டிய காவலர்கள் ஏன் வண்டியின் மேல் நின்று குறி பார்க்கிறார்கள் ? தீய சக்தியும், எதிர்கட்சிகளும் செய்த சதியெனில் அந்த மாப்பிள்ளை இளைஞன் என்ன நக்சல்பாரியா? வாயில் சுடப்பட்டு இறந்த அந்த இளம் பெண் எந்த கட்சி ? மற்ற எல்லா நேரத்திலும் காவல்துறை எல்லா நிகழ்வுகளிலும் அங்கு பொருத்தப்பட்டு உள்ள காமிராப் பதிவை ஆராயுமே ? அதை ஏன் செய்ய முனையவில்லை ? முடிவுக்கு வந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் சரி, ஆலையின் நூறு நாள் போராட்ட நிகழ்விலும் சரி காவல்துறை சகிக்காமல் செய்த ஒரு காரியம் தான் இந்த எதிர் வினை. எனக்கு என்னவோ இந்த காவல் வன்முறைக்கும் அந்த ஆலைக்கும் சம்பந்தம் இருக்கும் எனத் தோன்றுகிறது .இல்லாவிட்டால் சுமார் அஞ்சாயிரம் கூடிய கூட்டத்தைக் கூட சமாளிக்க முடியாத அளவுக்கா காவல்துறை பலகீனமாக இருக்கிறது ?இந்த வன்முறையை நினைத்துப் பார்க்கும் போது ஒரு வேளை இதே மனப்பான்மை தான் அவர்களுக்கு ஜல்லிக்கட்டிலும் இருந்திருக்கக் கூடும் என நினைக்கத் தோன்றுகிறது. அதிகாரிகளை மாற்றினால் சம்பவம் மறந்தா போய்விடும் . ஒன்று நிச்சயம் .இந்த அரசின் காவல்துறை க்ஷீன நிலையை எட்டி நாளாகி விட்டது . இவர்களுக்குத் தங்க வீடு , சீருடை தொகை, அதிகாரம் , போக்குவரத்துக்கான வண்டி, இவர்களின் ஷூக்களுக்கு பாலிஷ் தொகை எனப் பெரிய கௌரவம் கொடுத்தும் கூட இவர்கள் மக்கள் நண்பர்களாக இன்னும் மாற முடியவில்லை. Tamilnadu has Become a state of Police Raj.

    Share
  • எம் மண்ணை எங்கே புதைப்பாய் …

     

     

     

    தொலைக்காட்சியில்

    தொலைந்து போன

    சொந்தங்களுக்கு

     

    பதினோரு வயது

    பாலசந்திரனின்

    மடல்….

     

    எம் குலம்

    எம் பிறப்பு

    மானமும் வீரமும்

    மண்டியிடாது

    பகைவனிடம்…

    எம் வீரம்

    பீரங்கி செல்களுக்கு

    மார்பு காட்டும்….

     

    நாங்கள்

    போராளிகள்

    மண்ணிற்கும்

    மானத்திற்குமான

    போராட்டம்…

     

    சொந்தமென்று

    நினைத்ததுண்டு

    உங்களை

    நேற்றுவரை…

     

    சிங்களக் காடையர்கள்

    சிதைத்தார்கள்

    சிரித்துக் கொண்டிருந்தீர்கள்

    எம் இனத்தின் எதிரிகளாய்…

    இதுவா

    இனமானம்?

    இதுவா

    இனப்பற்று?

    துரோகம்

    இனத்துரோகம்…

    கல் தோன்றி

    மண் தோன்றாக் காலத்தே

    தோன்றிய தமிழினம் – ஈழத்தோடு

    இறுதிப் பயணம்…

     

    தமிழக மக்களே…

    எம் இனம்

    எம் மக்களென்ற

    வாய்ப் பேச்சு

    வீரத்தை நிறுத்துங்கள்

     

    மரணத்திலும்

    என் ஆன்மா

    மன்னிக்காது

     

    மரணத்தின் முன்

    மண்டியிடவில்லை

    மரணம் தான் என்னிடம்

    மண்டியிட்டுருக்கிறது

     

    போராளியின் பிள்ளை

    வீராதி வீரன்

    என் மார்பில்

    துப்பாக்கித்

    தோட்டாக்கள்

    உங்கள்…?

     

     

    வீரன் என்பதை

    என் சாவு சொல்லும்

    நீங்கள்…

    கோழை என்பதை

    வரலாறு சொல்லும்…

     

    மண்ணைக் காப்பதற்காக

    இனமானத்தைக் காப்பதற்காக

    மரணத்தை முத்தமிட்டு

    மண்ணில் புதைந்தோம்

    மண் அபிமானிகளாய்….

    அபிமானமின்றி

    அலைகழிந்தவர்களாய்

    பண வெறிகொண்டு

    பண்பிழந்து

    பக்குவமிழந்து

    தரணியில்

    பவனிவரும்

    பதர்களே….

    கவனமாக இருங்கள்

    உங்கள் மண்ணும்

    களவாடப்படும்…

    சாபமல்ல…

    சத்தியம்…

    வரலாற்றின் மறுபக்கம்….

    வரலாற்றின் அடையாளமாய்

    இறுதியாய்

    சிங்களக் காடையனே

    என்னை மண்ணில் புதைப்பாய்

    எம் மண்ணை

    எங்கே புதைப்பாய்

    பி. பாலசந்திரன்

     

     

    Smrmurali@gmail.com

    புலவர் இரா.முரளி கிருட்டினன்,

    உதவிப்பேராசிரியர்,

    தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி,

    திருச்சிராப்பள்ளி

    Share
  • திறனாய்வாளர்கள் பார்வையில் மெய்ப்பாட்டியல்

    -பேரா.பீ. பெரியசாமி       

    முன்னுரை:

    இன்றைக்குச் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னதாகச் கருதப்படும் தொல்காப்பியம் மனிதர்களின் மன உணர்ச்சிகளைக் கோட்பாடுகளாக வடித்தெடுக்கும் முயற்சி எடுத்துள்ளது. தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் இலக்கியப் படைப்பிற்கான உத்திகளையும் கோட்பாடுகளையும் வகுத்துள்ளது. அவற்றுள் மனித மனஉணர்வுகளைப் பேசும் இயலாக மெய்ப்பாட்டியல் உள்ளது. அவற்றைக் குறித்து, திறனாய்வாளர்கள் கூறும் கருத்துக்களைத் திறனாய்வாளர்கள் பார்வையில் மெய்ப்பாட்டியல் எனும் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.

    இந்தியத் திறனாய்வாளர்கள் பார்வையில் மெய்ப்பாட்டியல்

    மெய்யின்கண் தோன்றும் குறிப்புகள் கருத்தில் கொண்டு புலப்படுத்தவல்லன. அக்குறிப்புகள் புறத்தாரால் புலன்களின்வழி அறியப்பட்டு வெளிப்படுகின்றன. அகப்பொருள் புலப்பாட்டு நெறியில் கேட்பவரை உளப்படுத்தி மெய்ப்பாட்டியலை படைத்துள்ளார் தொல்காப்பியர். இதனைக் குறித்து பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த இந்திய ஆய்வாளர்கள் கூறுவது,

    “மெய்ப்பாட்டியல் பழந்தமிழ் மக்களின் உளநூல்”1 என புலவர் குழந்தை எடுத்துரைக்கின்றார். “மெய்ப்பாட்டியலைப் பொதுவாக ‘மெய்ப்பாடு’ என வழங்குவர். ‘மெய்ப்பாட்டியல்’ என்பது, மெய்மை + பாடு+ இயல் என பிரியும். ‘மெய்ம்மை’ என்பது, உண்மை எனவும், ‘பாடு’ என்பது தோற்றம், வெளிப்பாடு எனவும், ‘இயல்’ என்பது இலக்கணம் எனவும் பொருள்படும்.”2 என டாக்டர் இரா. சந்திரசேகரன் கூறுகின்றார். “மெய்ப்பாடு, மெய் + பாடு. மெய் – உடம்பு, படுதல், தோன்றுதல். படு எனும் முதனிலைத் தொழிற்பெயர் ‘பாடு’ என நீண்டு மெய்ப்பாடாயிற்று. இது மெய்யின்கண் படுதல், தோன்றுதல் என்ற பொருள்படும்.”3 எனப் பொருள் கூறுகின்றார். “பேச்சுமொழி தோன்றும் முன்னரே தம் கருத்தைப் பிறருக்கு உணர்த்த மனிதனுக்குப் பயன்பட்டவை மெய்ப்பாடுகளேயாகும்”4 என க. வெள்ளைவாரணன் மெய்ப்பாட்டியலை சைகைமொழியோடு ஒப்பிட்டுக் கூறுகின்றார்.

    “தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் 244 -ஆவது நூற்பா எட்டு மனஉணர்ச்சிகளைப் பற்றி கூறுகின்றது. அவைகள் உடல்வழியாக வெளிப்படும்போது மெய்ப்பாடுகள் என்று சொல்லப்படுகின்றன. உடலின் புறக்குறிகளால் காண்பவருக்குப் புலனாகும் இந்தத் தன்மைகள் மெய்ப்பாடு எனப்படும். மெய்ப்பாடு என்பது மனத்தில் இருப்பவை உடல் உறுப்புகளின் வழியாக வெளியே தென்படுவதாகும். உள்ளத்தில் தோன்றும் எண்ண அலைகள் வெளியே மெய்ப்பாடாக வருகின்றன.”5 என யோகி மெய்ப்பாட்டை மனஉணர்ச்சிகளோடு ஒப்பிட்டுக் கூறுகின்றார். “செய்யுளில் படைக்கப்படும் தலைவன் தலைவி முதியோர் தம் உணர்ச்சிகளைப் புலப்படுத்தும் பேச்சுக்களையும் மெய்ப்பாடாகத் தொல்காப்பியர் கொண்டார்.”6 என சுந்தரமூர்த்தி கூறுகின்றார்.

    “உள்ளுணர்வுகளின் தொகுதியாகத் தோன்றும் அனுபவங்களின் அடிப்படையில் எழும் முப்பத்திரண்டு உணர்ச்சிகளும் முறையே நான்கு நான்காகத் தொகுத்துக் காணின் எட்டுவகை மெய்ப்பாட்டிற்கும் காரணமாக அமையும்”7 என தா.ஏ, ஞானமூர்த்தி கூறுகின்றார்.  “இலக்கியத்துள் அமையும் உணர்ச்சிகளை, அவை புலனாகும் மெய்ப்பாடுகளை விளக்கும் வகையில் இதனை எடுத்துரைத்தார் தொல்காப்பியர்.”8 என மு.வரதராசனார்; கூறுகின்றார். “மெய்ப்பாடு என்பது வாழ்க்கையிலும் அமைகிறது; நாடகத்திலும் வெளிப்படுகிறது; இலக்கியத்திலும் உணரப்படுகிறது.”9 எனத் தமிழண்ணல் கூறுகின்றார். “மெய்ப்பாடு என்பது உண்மைத் தோற்றம், உண்மை நிகழ்ச்சி, உண்மை நிலை என்றெல்லாம் பொருள் விளக்கம் பெறும். உலகிலுள்ள எந்த ஒன்றிலும் இம்மெய்ப்பாடு காணப்படுதல் இயல்பு. ஆனாலும், மனிதரிடத்திலே சிறந்து காணப்படுகிறது.”10 என்று புலவர் செந்துரை முத்து கூறுகின்றார். “எண்வகை மெய்ப்பாடுகள் அல்லாத பிற மெய்ப்பாடுகள் இலக்கியத்திலும் நாடத்திலும் இடையிடையே வெளிப்படுத்தப்படும். இவை பெரும்பாலும் உலக வாழ்க்கையை ஒட்டி அமைந்த மெய்ப்பாடுகளாகும்.”11 என மு.ஹம்ஸா கூறுகின்றார்.

    இதன்வழி மெய்ப்பாடென்பது இலக்கியத்தில் மட்டுமல்லாது நாடகத்திலும், வாழ்வியலும் காண முடியும். உலகிலுள்ள அனைத்து உயிர்களிடத்தும் மெய்ப்பாடு என்பது இயல்பாய் அமைந்திருக்கக் கூடியது என்பதை அறிய முடிகிறது.

    மேலைநாட்டுத் திறனாய்வாளர்களின் பார்வையில் மெய்ப்பாடுகள்

    “அனுபவத்தின் தன்மையை ஒட்டி உண்மையும் ஆழமும் வாய்ந்த உணர்ச்சிகள் தோன்றுகின்றன. அவ்வுணர்ச்சிகள் உடலின்கண் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.”12 என்பது ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ் அவர் தம் கருத்தாக உள்ளது. “கவிதை நல்கும் உள்ளுணர்வு மறைமுகமானது; இந்த உள்ளுணர்வினால் உடலின்கண் தோன்றும் மாற்றங்களைவிட அக்கவிதையினின்றும் பெறும் உணர்ச்சியினால் ஏற்படும் உடல் மாற்றங்கள் மிகுதியானவை.”13 என வில்லியம் கே. விம்சாட் கூறுகின்றனர். “உறக்க நிலையிலுள்ள உள்ளத்திலிருந்து உடற்கூறு வாயிலாக எழுகின்ற உணர்ச்சிகள் பல திறப்பட்டன. மெய்ப்பாடுகளாகப் புறஉடலில் வெளிப்படுகின்றன.”14 என ஆங்கில அகராதி கூறுகின்றது. “கிரேக்க மெய்ப்பாட்டியல் சிந்தனையும் இந்திய மெய்ப்பாட்டியல் சிந்தனையும் சற்றேறக்குறைய ஒத்துள்ளது. குறிப்பாகத் தமிழ் மெய்ப்பாட்டியல் கோட்பாடுகள் ஒத்துள்ளது எனலாம். தொல்காப்பியரின் மெய்ப்பாட்டுக் கொள்கையும் அரிஸ்டாட்டிலின் கொள்கையும் மிக நெருக்கமான நிலையில் அமைந்து கீழை நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையே ஒத்த சிந்தனைப் பாலமாக அமைகின்றது என்ற கருத்து சுட்டத் தகுந்தது.”15 என நடராசன் அவர்கள் கூறுகின்றார். இதன்வழி தமிழில் மட்டுமல்லாது மேலைநாடுகளிலும் மெய்பாட்டியல் பற்றிய கோட்பாடுகள் சிறந்து விளங்கியுள்ளன என்பதை அறிய இயலுகின்றது.

    முடிவுரை

    மன உணர்வுகளின் வெளிப்பாடே மெய்ப்பாடாகும். இது தமிழில் தனி இயலாக தொல்காப்பியத்தில் விளக்கப்பட்டுள்ளது. பின்னர் வந்த மேலைநாட்டு இலக்கியவாதிகளும் தங்கள் மொழிகளில் மெய்ப்பாட்டின் வெளிப்பாடு குறித்து பல்வேறு சொற்களில் குறித்துள்ளனர் என்பது இக்கட்டுரையின் முடிபு.

    அடிக்குறிப்புகள்

    1. புலவர் குழந்தை, தொல்காப்பியர் காலத் தமிழர், ப.
    2. டாக்டர் இரா.சந்திரசேகரன், தமிழச்சிற்றிலக்கியங்கள், பக்.66-67.
    3. கண்ணகி கலைவேந்தன் (தொ.ஆ), தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும், ப.
    4. க. வெள்ளைவாரணன், தொல்காப்பியச் சிந்தனைகள்,ப.
    5. யோகி, மனதின் இயல்புகள், ப.
    6. Sundaramoorthy, Early literary Theories in Tamil,p.91.
    7. தா.ஏ. ஞானமூர்த்தி, இலக்கியத் திறனாய்வியல், ப.
    8. மு.வரதராசனார், இலக்கியமரபு, ப.
    9. தமிழண்ணல், தொல்காப்பிய இலக்கிய கொள்கைகள், ப.
    10. புலவர் செந்துரை முத்து, மெய்ப்பாடு, ப.
    11. மு.ஹம்ஸா, தொல்காப்பிய பொருளிலக்கணக் கோட்பாடுகள் – 2, ப.
    12. A.Richards, Principles of Literary Criticism, pp.77-78.
    13. William K.Wimsatt Jn. & Cleanth Brooks, Literary Criticism, A Short History, p.290.
    14. Dictionary of Behavioural Science, p.118.
    15. Natarajan, (Essay), Beyond Meaning affective aesthetic of Anandavardhana and I.A.Richards, p.10.

    *****

    கட்டுரையாசிரியர் – தமிழ்த்துறைத்தலைவர்,
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    வேலூர்.

    Share
  • மறைமுக உரைசெயல் நோக்கில் ஐங்குறுநூறு

    -த. சிவக்குமார்

    கருத்தாடலில் நாம் பயன்படுத்தும் உரைத்தொடர்கள் கேட்போர் அல்லது வாசிப்போருக்கு எத்தகைய நோக்கத்தை அல்லது செயலை உணர்த்த கையாளப்படுகிறதோ அதனையே உரைக்கோவையின் உரைசெயல் எனலாம்.

    இவற்றில் மறைமுக உரைசெயல் என்பது ஒரு கருத்தை நேரடியாகக் கூறாமல் பிரிதொன்றன் மூலம் தன் உள்ளக்கருத்தை உணர்த்த முனையும் செயலை மறைமுக உரைசெயல் எனலாம். ஐங்குறுநூற்றுச் செயுள்களில் தோழி, செவிலி மற்றும் நற்றாயிடம் அறத்தோடு நிற்கும் சூழலில் மறைமுக உரைசெயல் நிகழ்த்தித் தலைவியின் காதலை எவ்வாறெல்லாம் வெளிப்படுத்தினாள் என்பதை இக்கட்டுரை ஆய்கிறது

    மறைமுக உரைசெயல்

    அறத்தொடு நிற்றல் துறைசார்ந்த சில பாடல்களும் வரவுரைத்த துறையில் அமைந்த சில பாடல்களும் மறைமுகமாகக் கருத்தை உணர்த்தும் நோக்கில் அமைந்து கருத்துப் புலப்பாட்டை நிறைவு செய்கின்றன.

    நேரடி உரைசெயல்

    உரைக்கோவை உருவாக்கத்தில் கருத்தைத் தெரிவிப்போர் கருத்துப் பெறுபவரிடம் நேரடியாகப் பொருள் உணர்த்தும் நோக்கில் அமைக்கும் உரைசெயலை நேரடி உரைசெயல் என்பர்.

    தோழி நேரடியாக உரைத்தல்

    தலைவியைப் பெண்கேட்டு வரும் சூழலில் தோழி, தலைவியின் காதலை நேரடியாகவே நற்றாய், செவிலித்தாய்க்கு வெளிப்படுத்துவது நேரடி உரைசெயல் வகையில் அமைக்கப்பட்டள்ளது. பொன்னிறமுடைய பூக்கள் விரியும் துறையை உடையவனே நம் தலைவன் என்றும், தலைவியின் மெலிவிற்குக் கடவுள் காரணம் அல்ல தலைவனே என்றும், தலைவனின் பெயரைக் கூறியும் தலைவனுடனான களவுப் புணர்ச்சியினை வெளிப்படுத்தியும் தலைவியின் காதலை வெளிப்படுத்துவதை ஐங்குறுநூற்றுப் பாடல்களில் காணமுடிகிறது.

    துறைவன் என் தலைவன்

    நொதுமலர் வரவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் சூழலில் அன்னையே! முன்பு தலைவன் தலைவியைக் கூட்டுவித்த ஊழே மீண்டும் கூட்டுவிக்கும்; மேலும் புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனே என் தலைவன். இது அறியாமல் இவர்கள் பெண்கேட்டு வந்தனர் எனும்பொழுது,

    அன்னை, வாழி! வேண்டு அன்னை! – புன்னை
    பொன்னிறம்
    விரியும் பூக்கெழு துறைவனை
    என்னை என்றும், யாமே; இவ்வூர்
    பிறிது
    ஒன்றாகக் கூறும்,
    ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே!” (ஐங் – 110)

    ’ஆங்கும் ஆக்குமோ பாலே’ ஊழானது பிரிக்குமோ பிரிக்காது என்று நொதுமலர் வரவைத் தடுக்கும் பொருட்டுத் தலைவியின் காதலை நேரடியாகப் போட்டு உடைத்து விடுகிறாள் தோழி. இங்கு ஊழைக் குறிக்கப் ‘பால்’ என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதும் நோக்கத்தக்கதாகும்.

    தலைமக்களை ஊழே கூட்டுவிக்கும் எனும் போது,

    பால் வரைந்து அமைத்த வல்லது அவர்வயின்
    சால்பு
    அளந்து அறிதற்கு யாம் யாரோ” (குறுந் – 366) என்கிறது குறுந்தொகை.

    அணங்கு அல்ல தலைவன்

    தலைவியின் மெலிவுக்குக் காரணம் நீர்த்துறையில் உறையும் அணங்கே காரணம் என்று நினைத்து பூசனை செய்ய முற்பட்டனர். அப்பொழுது தோழி இவள் மெலிவுக்குத் தெய்வம் காரணமல்ல ஒரு மனிதனே காரணம். அவன் தான் அணங்கியது என்கிறாள்.

    இதனை,

    “…………………………….

    கைபுனை நறுந்தார் கமழும் மார்பன்
    அருந்திறக்
    கடவுள் அல்லன்
    பெருந்துறைக்
    கண்டு இவள் அணங்கியோளே” (ஐங் – 182)

    என்று வெளிப்படையாகவே கூறிவிடுகிறாள். இதில் தலைவன் அருந்திறக் கடவுள் அல்லன் அருந்திறல் கொண்ட மனிதனே என்று தலைவனின் சிறப்பையும் உணர்த்துகிறாள்.

    தலைவன் மார்பில் துயில் கொள்ள விரும்புகிறாள்

    நொதுமலர் வரவறிந்த தலைவி வருத்தப்பட, அக்காரணத்தை செவிலி வினவுகிறாள். தலைவியின் காதலை உணர்த்தி அறத்தொடு நிற்கும் பொழுது, என் தோழியானவள் மிகுதியான நாணமுடையவள்; மேலும் நின்பால் அச்சமும் கொண்டுள்ளாள். மேலும் அவள் விரும்புவது மலைநாடனின் மார்பில் துயில் கொள்வதையே. நானும் அவள்பால் வருந்தி இதை உனக்கு உரைக்கின்றேன் என்று கூறுகிறாள்.

    இது,

    “…………………………………………….
    ஒலி வெள்ளருவி ஓங்குமலை நாடன்
    மலர்ந்த
    மார்பிற் பாயல்
    தவநனி
    வெய்யள் நோகோ யானே” (ஐங் – 205)

    என்று சுட்டப்படுகிறது. உனக்கு அஞ்சுவதால் அவள் கூறவில்லை; நான் கூறுகிறேன் என்றாள். இதனை, அகநானூறு 52-வது செய்யுளும் உணர்த்துகிறது.

    அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்ற குறளுக்கேற்பத் தலைவியின் செயல் உள்ளது.

    நொதுமலர் வரவறிந்த தோழி தலைவி கற்புக்கடம் பூண்டதைச் செவிலிக்கு உணர்த்த,‘இவள் முன்பே பலகாலும் மலைநாடனின் மார்பை முயங்கி இன்புற்றாள். அவ்வாறு முயங்காத நாட்களில் கண்கள் நீர் சொரியும். இதை உணர்ந்து செயல்படுங்கள்  என்று நேரடியாகவே தலைவியின் களவுப் புணர்ச்சியை உணர்த்தி விடுகிறாள்.

    இதனை,

    “………………………………..
    முயங்காது கழிந்த நாள், இவள்
    மயங்கு
    இதழ் மழைக்கண் கலிழும்” (ஐங் – 220) என்கிறாள் தோழி.

    தலைவியின் களவுப் புணர்ச்சியை வெளிப்படுத்தல்

    நொதுமலர் வரவின்கண் தலைவியின் காதலை செவிலிக்கு உணர்த்தப் புகும் தோழி இவள் உயிரானது, கான்யாற்று வெள்ளத்தில் மெய்தொட்டுக் காப்பாற்றியவன் பேரொடு சென்றுவிட்டது எனும் பொழுது,

    “……………………..
    விரவு மலர் அணிந்த வேனில் கான்யாற்றுத்
    தேரொடு
    குறுக வந்தோன்
    பேரொடு
    புணர்ந்தன்று – அன்னை இவள் உயிரே” (ஐங் -367)

    என்ற தலைவியின் காதலை உணர்த்துகிறாள் தோழி.

    இதில் ‘தேரொடு குறுக வந்தான்’என்பதால் முன்பின் அறியாதவன் என்ற பொருளும் இவள் உயிர் அவன் பேரொடு புணர்ந்தது என்பதால் உயிரை மீட்டுத் தந்தவன் என்ற பொருளும் தருகிறது. இச்செய்யுள், இதனை புனல்தரு புணர்ச்சி என்பர்.

    வெள்ளத்தினின்று மீட்ட தலைவனை, தலைவிப் புணர்ந்தாள் என்று செவிலியிடம் கூறும் பாங்கை, ‘காமர் கடும்புனல் கலந்தெம் மோடாடுவாள்’(39) என்கிறது கலித்தொகை.

    தோழி மறைமுகமாக உரைத்தல்

    தலைவியின் மெலிவு கண்டு வருந்திய நற்றாய் அவளுக்கு வேலனைக் கொண்டு வெறியாட்டு நடத்தும்பொழுது தலைவி அறத்தொடு நிற்கிறாள். மேலும், தலைவியின் காதலை நற்றாய் மற்றும் செவிலித்தாய்க்கு அறிவிக்கும் வகையில் தோழி, தலைவனின் தண்ணந்துறை, மலை, கடல், நாடு, களவுப்புணர்ச்சி போன்றவற்றையும் தலைவனுடனான பூத்தரு புணர்ச்சியினை கோங்க மலரோடு தொடர்புபடுத்தித் தலைவியின் காதலை மறைமுகமாக தெரிவிக்கிறாள்.

    தலைவனின் நீர்த்துறையை கூறுதல்

    நொதுமலர் வரவை அறிந்த தலைவி உணவும் உறக்கமும் இன்றி மெலிய அதுகண்ட செவிலி தோழியை வினவுகிறாள். அப்பொழுது தோழி தலைவியின் காதலை மறைமுகமாகச் செவிலிக்கு உணர்த்த அறத்தொடு நிற்றல் என்ற உத்தியைக் கையாள்கிறாள். அப்பொழுது,

    “………………………….
    தண்ணந் துறைவன் நல்கின்
    ஒண்நுதல்
    அரிவைபால் ஆரும்மே” (ஐங் – 168)

    என்கிறாள். இதன்மூலம் தண்ணந்துறைவனாகிய தலைவன் அருள் செய்தால் பாலாவது அருந்துவாள். இல்லையெனில் இறந்துபடுவாள் என்பதும் இதன்மூலம் பெறப்படுகிறது. மேலும் தலைவி கொண்ட காதல்நோயின் மிகுதியும் புலப்படுத்தப்படுகிறது.

    களவுப் புணர்ச்சியினை கூறுதல்

    தலைவியின் மெலிவு கண்டு வருந்தி அவளுக்கு வெறியாட்டு நிகழத்த ஏற்பாடு செய்தனர் செவிலியும் நற்றாயும். அப்பொழுது தலைவியின் காதலை மறைமுகமாக உணர்த்தி வெறியாட்டை தடுத்தற் பொருட்டு,

    “……………………….
    கழனி ஊரன் மார்பு உறமரீஇ
    திதலை
    அல்குல் நின்மகள்
    பசலை
    கொள்வது எவன்கொல்” (ஐங்– 29)

    தலைவனது மார்பைத் தழுவி இன்புற்ற பிறகும் இவள்பசலை கொள்வது எதனாலோ? என வினவி மறைமுகமாக அவள் காதலையும் களவில் புணர்ந்த நிலையையும் எடுத்துரைக்கிறாள்.

    மேலும், ஐங்குறுநூறு 30-வது செய்யுளும் இதே கருத்தை உணர்த்துகிறது.

    தலைவனின் சிறப்பினை எடுத்துரைத்தல்

    அறத்தொடு நின்றதற்குத் தலைவன் தலைவியை மணக்காமல் பிறிதொரு பெண்ணை மணந்தால் என் செய்வது என்று ஐயுற்று வருந்திய செவிலியின் குறிப்பை உணர்ந்த தோழி,

    “………………. தண்கடற் சேர்ப்பன்
    எம்தோள்
    துறந்தனன் ஆயின்
    எவன்கொல்
    மற்று அவன் நயந்த தோளே?”  (மே – 108)

    எம்தோளைப் புணர்ந்த சேர்ப்பன் எம்மை விடுத்து மற்றொரு பெண்ணினை மணக்கமாட்டான் என்பதையும், அவ்வாறு மணந்தால் (தோள் துறந்தால்) தலைவி இறந்துபடுவாள் என்பதையும் இதன்மூலம் குறிப்பால் உணர்த்துகிறாள். ‘எவன்கொல் மற்று அவன் நயந்த தோளே’என்பது அத்தோள்கள் என்னாகும், அழியும் என்று மறைமுகமாகச் சுட்டப்படுகிறது.

    தலைவனின் கடலைக் கூறுதல்

    தலைவியின் மெலிவுகண்டு வருந்திய செவிலி அதற்கு என்ன காரணம் ஏதேனும் நோயுற்றாளோ? என வினவ,

    “…………………………….
    தண் கடற் படுதிரை கேட்டொறும்
    துஞ்சாள்
    ஆகுதல் நோகோ யானே” (ஐங்– 107)

    அதற்குக் கடலலையே காரணம் அதனாலேயே உறக்கமின்றி நோயுற்றாள். நானும் வருந்துகிறேன் என்கிறாள். இதன்மூலம் தண்கடல் படுதிரைக்குரியவனே நோய்க்குக் காரணம் என்று மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.

    தலைவனின் குன்றைக் கூறுதல்

    தலைவி இற்செறிக்கப் படுவதோடு அவளின் மெலிவுகண்டு இது தெய்வத்தால் ஆனது என்று கூறி அன்னையர் வெறியாட்டு ஏற்பாடு செய்ய அதனைத் தடுக்கும் பொருட்டுத் தோழியானவள் மெலிவுக்குக் காரணம் காதல் நோயே என்பதையும், அது தணியும் விதத்தையும்,

    “……………………….

    புலவுசேர் துறுகல் ஏறி, அவர்நாட்டுப்
    பூக்கெழு
    குன்றம் நோக்கி நின்று
    ………………………………..
    தணிதற்கும் உரித்து அவள் உற்ற நோயே” (ஐங்– 210)

    இங்குத் தலைவனின் சிறப்பைப் பற்றி உணர்த்த ‘பூக்கெழுகுன்றம்’என்ற சொல்லும் தலைவியின் துயரை வெளிப்படுத்த ‘புலவுசேர் துறுகல்’ என்ற சொல்லும் மேலும் அவனைச் சேர்ந்தால் நோய்தீரும் என்று தலைவியின் காதலை உணர்த்த ‘தணிதற்கும் உரித்து அவள் உற்ற நோயே’என்று ஒவ்வொன்றையும் மறைமுகமாக உணர்த்தும் பாங்கு பாராட்டுக்குரியது.

    தலைவனின் குன்றம் கண்டால் தலைவி நலம் பெறுவாள் என்று குறுந்தொகைத் தலைவியின் காதலை வெளிப்படுத்தும் தோழியும் இவ்வாறு மறைமுகமாக கூறுகிறாள்.

    இதனை,

    அவர்நாட்டுக் குன்றம் நோக்கினென் தோழி
    பண்டை
    யற்றோ கண்டிசின் நுதலே” (குறுந் – 249)

    தலைவனின் மலையைக் கூறுதல்

    வெறியாட்டைத் தடுத்து தலைவியின் காதலை உணர்த்தும் தோழி தலைவியின் நோய்க்கான காரணத்தை மணங்கமழும் மலைநாட்டுத் தலைவனிடம் கொண்ட நட்பு என்பதை வேலன் அறிவானா? என்கிறாள்.

    இதனை,

    “……………. அவ்வேலன்
    வெறிகமழ்
    நாடன் கேண்மை
    அறியுமோ
    தில்ல
    ……………………………..”
                   (ஐங் – 241)

    என்று தொடர்புபடுத்துகிறது. மேலும் அன்னையின் இவ்வறியாமையால் மேலும் துயரமே. தலைவியின் மழைக்கண் புலம்பு நோய்க்கு வெறியே சிறந்தது என்று நீ கருதினால் உன்னைப்போல் அறியாமையுடையோர் எவரும் இலர் என்கிறாள் தோழி.

    இதனை,

    “…………………………
    அறியா வேலன் வெறி எனக்கூறும்
    அதுமனம்
    கொள்குவை, அனை இவள்
    புதுமலர்
    மழைக்கண் புலம்பிய நோய்க்கே” (ஐங் – 243)

    என்கிறாள். இதற்குக் காரணம் அவள்கொண்ட களவொழுக்கமே என்பதை மறைமுகமாக உணர்த்தும் தோழியின் பாங்கு சிறப்புக்குரியது.

    இதுபோலவே அன்னையின் அறியாமையைக் கூறி தலைவியின் களவை மறைமுகமாக உணர்த்தும் போது,

    அறியா வேலன் அன்னைக்கு வெறியென
    வேலன்
    உரைக்கும் என்ப” (நற் – 273) என்று நற்றிணையும்,

    வெறியென உணர்ந்த வேலன் நோய் – மருந்தறியான்” (குறுந் – 360) என்று குறுந்தொகையும் உணர்த்தி நிற்கின்றன.

    தலைவியின் மெலிவிற்குக் கூர்மலை நாடன் காரணம் என்றறியாமல் ‘முருகு’ காரணம் என்று மணலில் கழற்சிக்காயைப் பரப்பிக் கூறிய வேலன் வாழ்க என்று வேலனின் பொய்யுரையையும், அவன் மெய் கூறினால் தாயின் சினத்திற்கு ஆளாக நேரிடும் என்பதையும், தலைவியின் காதலையும் புலப்படுத்தும் நோக்கில்,

    “…………………………….
    பெய்ம்மணல் வரைப்பில் கழங்குபடுத்து அன்னைக்கு
    முருகு
    என மொழியும் வேலன்; மற்றுஅவன்
    வாழிய –
    இலங்க ருவி
    சூர்மலை
    நாடனை அறியாதோனே!” (ஐங் – 249)

    வேலன் நோய் மருந்து அறியான் எனும்பொழுது,

    வெறியே உணர்ந்த வேலன் நோய் மருந்து
    அறியா
    னாகுதல் அன்னை காணிய” (குறுந் – 360)

    என்று குறுந்தொகையிலும் மற்றும் அகநானூற்றில் 242-வது செய்யுளிலும் வேலனின் பொய்யுரையும் தலைவியின் காதலும் மறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது. பெய்மணலில் கழங்கு படுக்கும் முறைதான் சோழி பரப்பி எண்ணிக்கூறும் முறையாகத் தொன்மமாக இன்றும் நம்மிடையே எஞ்சி நிற்கிறது.

    தோழி அறத்தொடு நிற்கும் சூழலில் மறைமுக உரைசெயல் நிகழ்த்தி எவ்வாறெல்லாம் தன் கருத்தைப் புலப்படுத்தினாள் என்பதைச் சுருக்கமாக இக்கட்டுரையில் ஆய்ந்தோம்.

    *****

    பயன்படுத்திய நூல்கள்

    1. உரைக்கோவை பண்பும் பயனும் (கி.கருணாகரன், சோ.சுப்பிரமணி)
    2. ஐங்குறுநூறு
    3. அகநானூறு
    4. நற்றிணை
    5. குறுந்தொகை

    *****

    கட்டுரையாளர் – முனைவர் பட்ட ஆய்வாளர் (ப.நே)
    பாரதியார் பல்கலைகழகம்
    தமிழ்த்துறை
    கோவை-46.

     

     

     

    Share