சங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள்

-கி. ரேவதி 

முன்னுரை

நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் மக்களைச் சுற்றிப் படர்ந்திருப்பவை. நம்பிக்கை என்பது நம் நாட்டில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நாட்டிலும் பன்னெடுங்காலமாக வேரூன்றிக் கிடக்கின்றது. நம் தமிழர்களின் பண்பாடு சார்ந்த நம்பிக்கைகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன.

நிமித்தம்

நிமித்தம் என்ற சொல்லிற்குக் காரணம், பொருட்டு அடையாளம் என்ற பல பொருள்கள் உண்டு.

“வேண்டிய பொருளின் விளைவுநன்கு அறிதற்கு                                ஈண்டுஇருள் மாலைச் சொல்ஓர்த் தன்று” (புற.பொருள்.ப.17)

நம்பிக்கை அடிப்படையில் நிமித்தத்தினை நோக்கும்போது சகுனம் பார்த்தல் என்ற பொருளைத் தந்து சிறப்பிக்கின்றது.

சகுனம் அறிவிப்போரையும் சகுனத்தின் பயன்களைக்  கூறுவோரையும் நிமித்திகர்கள் என்று கூறுவர். அறிஞர்கள் கருத்துக்கேற்ப நிமித்தம் என்பது நல்ல, தீய சகுணங்களைப் பார்த்தல் என்பது புலனாகின்றது.

தெய்வ நம்பிக்கை

சங்க காலம் முதற்கொண்டே தமிழர்களிடம் தெய்வ நம்பிக்கை உள்ளது. உலகம் கடவுளால் காக்கப்படுகிறது என்ற உண்மையை,

“சேவல் அம்கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே” (குறுந்.1)

என்று குறுந்தொகையின் முதல்பாடலே கடவுள் வாழ்த்தோடு தொடங்குகிறது.

தலைவன் களவுக் காலத்தில் சூளுரை செய்தல், தலைவிக்கு வரும் காதல் நோய்க்கு கடவுள் காரணம் என்று நம்புதல், தெய்வங்களின் உறைவிடம் மலை போன்ற செய்திகளின் மூலம் அக்கால மக்களின் தெய்வ நம்பிக்கையை அறியலாம். மேலும்,

“மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம்”    
(குறுந்.87)

என்ற பாடலில் தெய்வமானது கொடியவரை வருத்தும் என்ற செய்தியும் கூறப்படுகிறது.

விண்ணியல்

பண்டைய நாளில் தூரத்தில் இயங்கும் கோளையும், விண்மீன்களையும் கண்டு உணர்ந்து அவைகளின் இயக்கத்திற்கும் மண்ணில் வாழும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

நற்றிணையில் விண்மீனைக் கைதொழுது வணங்கி வந்தனர் என்பதை,

“மையற விளங்கிய மணிநிற விசும்பின்
கைதொழுது மரபின் எழுமீன் போலப்”   (நற்.231)

என்ற அடிகள் முனிவரின் தோற்றமாகிய ஏழு விண்மீனை மக்கள் தொழுதனர். எனவே விண்மீனையும் தெய்வமாகத் தொழும் பழக்கம் மக்களிடம் இருந்துள்ளது என்பதை அறியமுடிகின்றது.

பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்கள் நட்சத்திரத்தைக் கூட்டம் கூட்டமாக வகுத்து அவை இன்ன இன்ன உருவம் என்று பிரித்தனர். புறநானூற்றில் வெள்ளிமீன் தெற்குத்திசை தோன்றினால் மழை பொய்த்துவிடும் என்ற செய்தியை,

“அலங்கு கதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்
இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும்”      (புறம்.35)

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

பட்டினப்பாலையில் மகம் என்னும் வெண்ணிற விண்மீன் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

மழை நீங்கிய மாவிசும்பில்
மதி சேர்ந்த மகவெண்மீன்
உரு கெழு திறல் உயர் கோட்டத்து
”            (பட்டின.34-36)

என்ற வரிகள் நிலவுடன் சேர்ந்து விளங்கும் விண்மீன்களை மக்கள் தொழுது வணங்கினர்.

பறவைகளின் நிமித்தம்

தனிமனிதப் பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் காலப்போக்கில் உணர்ச்சிப் பெருக்கால் மாறும் தன்மையுடையன. ஆனால் ஒரு சமுதாயத்தின் பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் எளிதில் மாற்றத்திற்கு உட்படா.

நற்றிணையில் பறவை நிமித்தத்தை கூறும் தலைவன் நம் வருகையைக் காக்கை முதலிய புள்ளினங்கள் அவருக்கு அறிவுறித்தினவோ என்று கூறுவதாகப் பாடலொன்று அமைகின்றது.

தோள்வழி யாப்ப ஈண்டுநம் வரவினைப்
புள்அறி வுறீஇயின கொள்ளோ தௌளிதின்
”        (நற்.161)

என்ற வரிகள் பறவை நிமித்தத்தை உணர்த்துகின்றன.

காகம் கரைதல்

சங்க காலத்து மகளிர் நம்பிக்கையுடன் வாழ்ந்தனர். காகம் தம் இல்லத்தருகில் கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கை இருந்தது.

பெருந்தோள் நெகிழ்ந்த செல்வதற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே”         (குறுந்.210)

காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கையும் அக்காலத்தில் இருந்தமையை அறிய முடிகிறது. இன்றும் இந்த நம்பிக்கையை மக்கள் பின்பற்றுகின்றன.

விலங்குகளின் சகுனம்

பழந்தமிழர் விலங்குகள் வாயிலாகவும் சகுனம் பார்த்து வந்துள்ளனர். பல்லி, ஓணான், கூகை போன்ற உயிரினங்கள் எழுப்பும் ஓசைக்கும் பலன் உண்டு என்பதை அறிந்துள்ளனர்.

பல்லிச்சகுனம்

சங்க இலக்கியத்தில் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி தலைவன் வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து நல்ல பலனை எதிர்நோக்கும் போது பல்லியும் ஓசை எழுப்பி அதற்கு இணக்கமான நல்ல நிமித்தத்தை ஒலிக்கின்றது.

“முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்
வருவம் என்னும் பருவரல் தீரப்
படும்கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி”      (நற்.பா.169-வரி.1-3)

வினைமுற்றி மீளும் தலைவன் தன் வருகையை பல்லி தலைவிக்கு அறிவிக்குமெனத் தன் நெஞ்சுக்கு அறிவுறுத்துகிறான். அஃறிணை உயிரும் அஃறிணையான பல்லியின் சகுனத்தைப் பார்க்கின்றது.

பன்றியும் பல்லிச் சகுனம் பார்த்துத் தனக்கு இடையூறு நேரும் என்று குகையில் பதுங்குவதை நற்றிணையில் 98-ம் பாடலும், 169, 246 பாடலும், அகநானூற்றில் 9, 88, 151, 289, 351 பாடலும் சகுனத்தை உணர்த்துவதாக அமைகின்றன.

குறுந்தொகையில் ஆண் பல்லி தன் துணையை அழைக்க ஒலி எழுப்பிய செய்தியும் குறிப்பிடப்படுகின்றது.

“உகிர்நுதி புரட்டும் ஓசை போல
செங்காற் பல்லி தன்துணை பயிரும்
அம்காற் கள்ளி அம்காடு இறந்தோரே”        (குறுந்.16)

கட்டுவிச்சி

குறி கேட்கும் வழக்கம் பண்டைத்தமிழ்  மக்களிடம்  இருந்து இன்று வரை வழக்கில்  இருந்து கொண்டிருக்கின்றது. குறி கூறுகின்றவர்கள் தெய்வத்தின் உதவியினால் உண்மையை அறிந்து உரைக்கின்றனர் என நம்பி  வந்தனர். குறி கூறும்போது  குலதெய்வத்தை வழிபட்டுக் கூறுகின்றமுறை  இருந்திருக்கின்றது.

குறுந்தொகையில் குறி கூறுகின்ற பெண்டிரைக் கட்டுவிச்சி என்று கூறுகின்ற  மரபு இருந்திருக்கின்றது.

“அகவன் மகளே! அகவன் மகளே!
மனக் கோப்பு  அன்ன நல்நெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே”   (குறுந்.23)

என்ற அடிகள் தெய்வத்தை அழைத்துப் பாடுகின்ற கட்டுவிச்சி என்ற கருத்தைக் கூறுகின்றது.

கண்துடித்தல்

பெண்களுக்கு இடதுகண் துடிப்பதைச் சங்க இலக்கியங்கள்  நல்நிமித்தமாகக் கொண்டுள்ளன. கண் துடித்தல் தலைவன் வருகையை உணர்த்தும் நற்குறியாக அமைந்துள்ளது.

நுண்ணோர் புருவத்த கண்ணும் ஆடும்
மயில்வார் முன்கை வளையும் செறுஉம்”      (ஐங்.218)

என்று ஐங்குறுநூற்றுப் பாடல் விளக்குகின்றது.

சொர்க்கம் – நரகம்

சொர்க்கம் நரகம் என்ற நம்பிக்கைகள் மக்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றன. நன்மை செய்தால் சொர்க்கத்திற்குச் செல்லலாம். தீமை செய்தால் நகரத்திற்குச் செல்வார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பழந்தமிழரிடம் இருந்ததை இலக்கியங்கள்வழி தெரிந்துக்கொள்ள முடிகின்றது.

தமிழர்கள் மட்டுமின்றி அமெரிக்கர், ஜப்பானியர் போன்ற நாட்டினருக்கும் சொர்க்கம் நரகம்மீது ஆழ்ந்த நம்பிக்கை இருந்துள்ளது. போர்க்களத்தில் வீரர்கள் விழுப்புண்பெற்று மாண்டுபோனாலும் அவர்கள் தேவர்கள் உலகத்திற்குச் செல்வர் என்றும் அதுதான் அவர்களுக்குப் புகழ் என்றும் மதிக்கப்பட்டது. வடமோதங்கிழார் இதனைக்,

“கையகத்து உயர்ந்த கன்றுடைப் பல்லான்
நிரையொடு வந்த உரையான் ஆகி
உரிகளை அரவ மானத் தானே
அரிது செல் உலகில் சென்றனன் உடம்பே
கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால் உற்று”      (புறம்.260)

என்கிறார். மேலும் யானைப்படையையுடைய நெடுமாவளவன் தேவர் உலகத்தை அடைந்தான். ஆதலால் வீரமரணமும் சொர்க்கத்தை அடையும் ஒரு வழியாக உள்ளது.

கொடி நுடங்கு யானை நெடுமாவளவன்
தேவர் உலகம் எய்தினன் ஆதலின்”      (புறம்.228)

என்ற புறநானூற்றுப் பாடலும் தேவர் உலகம் பற்றிய செய்தியைக் கூறுகின்றது.

தேவர் உலகம் என்பது சொர்க்கம் ஆகும். தேவர்கள் அமுதம் உண்டு வாழ்பவர்கள் என்றதால் குறுந்தொகையில் தோழி தலைவியிடம் கூறும்போது செவிலித்தாய் தலைவன் வரைவோடு வருவான் என்று கூறுகிறாள். எனவே இந்த நற்சொல்லைக் கூறிய அவள் பெறுதற்கு அரிய அமுதமே உண்ணும் உணவாகக் கொண்ட தேவர்கள் வாழ்கின்ற பெரும் உலகத்தை அடையப் பெறுவாளாக! என வாழ்த்துகிறாள்.

முடிவுரை

மனிதனின் தன்னல உணர்வும் சமுதாய உணர்வுமே நம்பிக்கைகளை வளர்த்துவிடுகின்றன. நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொன்னாலும் அது விளக்க இயலாத தன்மைபெற்று விளங்குகிறது. திருமணச் சடங்குகளும், இறப்பு பற்றிய சடங்குகளும் தமிழரின் வாழ்வியல் சடங்குகளும் பெரும்பாலும் அக்கால மக்களின் நம்பிக்கை சார்ந்தே அமைந்துள்ளதைக் காணமுடிகின்றது.

அடிக்குறிப்பு

1.ஐயனாரிதனார்., – புறப்பொருள் வெண்பாமாலை,கழக வெளியீடு, சென்னை,2002.

2.நாகராசன்.வி, (ப.ஆ) குறுந்தொகை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

3.மேலது

4.நாகராசன்.வி;, (ப.ஆ)  நற்றிணை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009

5.நாகராசன்.வி;, (ப.ஆ)  புறநானூறு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009

6.இராசமாணிக்கனார்.ம, பத்துப்பாட்டுஆராய்ச்சி, சென்னைப்பல்கலைக்கழகம்,2010.

7.நாகராசன்.வி;, (ப.ஆ)  நற்றிணை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009

8.நாகராசன்.வி, (ப.ஆ) குறுந்தொகை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004

9.நாகராசன்.வி;, (ப.ஆ)  நற்றிணை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009

10.நாகராசன்.வி, (ப.ஆ) குறுந்தொகை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

11.மேலது

12.மாணாக்கனார்.ஆ, (உரை) ஐங்குறுநூறு, சாரதா பதிப்பகம், சென்னை, 2009

13.நாகராசன்.வி;, (ப.ஆ)  புறநானூறு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009

14.நாகராசன்.வி;, (ப.ஆ)  புறநானூறு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009

*****

கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்,
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, (தன்னாட்சி),
விழுப்புரம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *