-கா. தினேஷ் 

முன்னுரை

அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருந்த அனைவரையும் அன்பால் இச்சகத்தே திருத்தவந்தவர் சிதம்பர இரமலிங்கம் என்னும் வள்ளலார். இவர் வடலூரிலே மக்கள் அனைவரும் ஆன்மநேய ஒருமைப்பாடு காண விரும்பிச் சமரசச் சுத்தச் சன்மார்க்கச் சங்கத்தை ஏற்படுத்திச் சத்திய ஞான சபையை நிறுவியவர். இவர் கொண்ட மார்க்கம் சன்மார்க்கம். இது ஞானமார்க்கமாகும். ஞானத்திற்கு அடிப்படை அன்பேயாகும். இம்மார்க்கத்தின் மூலம் மரணமிலாப் பெருவாழ்வை அடைந்துள்ளார்; அத்தகைய வாழ்விற்கு  அன்பு என்ற ஒன்றையே வழியாகக் கொண்டவர். அத்தகைய அன்பு எத்தகைய வல்லமையைப் பெற்றது என்பதைக் காண்பதே இக் கட்டுரையாகும்.

வல்லமை – பொருள் விளக்கம்

வல்லமை என்னும் சொல்லுக்கு வலிமை, ஆற்றல் எனப் பொருள் கூறுகிறது தமிழ்மொழி அகராதி[1]. வல்லமை என்பது ஓர் ஆற்றலாகும். வல்-என்ற வேர்ச் சொல்லிலிருந்து பல சொற்கள் உருவாகியுள்ளன. வல்லமை, வல்லாண்மை, வல்லபம் போன்றவை ஒரு பொருள் குறித்த பல சொல்லாகும்.  “பெயர்ச்சொல்லில் உயர் வழக்காகப்பெறும் வலிமை (‘ராணுவ வல்லமை உள்ள நாடு’‘) என்றும் ஒன்றை நிகழ்த்தக் கூடிய ஆற்றல், சக்தி, திறன்” (சர்வ வல்லமை படைத்த இறைவன், கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை கொண்ட ஏவுகணைகள்) என்றும் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது[2].

வல்லமை என்னும் சொல்லுக்கு நேரடிப்பொருள் ஆற்றல் என்றே பெரும்பாலான அகராதிகளிலும் இலக்கியங்களிலும் பயின்று வருகின்றது. ஆனால் இத்தகைய ஆற்றல் இறை ஆற்றல், இயற்கை ஆற்றல், இயந்திர ஆற்றல் எனப் பல வகைப்படுகிறது. அனைத்தையும் பெறும் ஆற்றலைச் சர்வ வல்லமை என்ற அடைமொழியால் வழங்குவர். சர்வ என்பதற்கு அனைத்தும் என்பது பொருள்[3]. (சான்று- சர்வச் சாக்கிரதை, சர்வ நாசம், சர்வ முட்டாள்).

பாரதியார் தம் பாடலில் வல்லமை என்னும் சொல்லை நேரடியாகப் பயன்படுத்துகிறார்.

வல்லமை தாராயோ, வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
வல்லமை தாராயோ –  இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே சொல்லடி, சிவசக்தி
 [4]

என்று கூறுகிறார். இந்நாட்டிற்காக வாழ்வதற்கு நல்லதோர் ஆற்றல் (வல்லமை) தர வேண்டும் என்று வினவுகிறார்.

திருக்குறளுக்கு உரைசெய்த முனைவர் மு.வ. அவர்கள் வல்லமை என்ற சொல்லை அநேக இடங்களில் பயன்படுத்துகிறார்.

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.[5] இதற்கு உரையாக மு.வ அவர்கள் வறுமையுள் வறுமையாகக் கருதப்படுவது விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும். என்று கூறுகிறார்[6]. இங்கும் வல்லமை என்பது ஆற்றல் அல்லது வலிமையைக் குறிக்கிறது. இதுபோன்று வலிமை என்று வரக்கூடிய பல குறள்களுக்கு வல்லமை என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். 

வள்ளலார் வகுத்த வல்லமை

வள்ளலார் தம் வாழ்நாளில் ஒரு தனி வல்லமையைப் பயன்படுத்தி இறைவனின் சர்வ வல்லமையைப் பெற்றுள்ளார். அது சாகாக்கல்வி என்னும் மரணமிலாப் பெருவாழ்வேயாகும். அவ் வாழ்வைத் தாம் பெற்றதோடு பிறருக்கும் உபதேசித்தார். அத்தகைய வல்லமை யாதெனில் அன்பு என்ற ஒன்றேயாகும். அன்பு என்ற ஒன்றாலே அனைத்தையும் பெற முடியும் என்று உறுதிபூண்டவர். அன்பு என்னும் சொல்லிற்கு அநேக இடங்களில் வல்லமை என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார்.

இதனைத் தம் உபதேசக் குறிப்பில்

“கடவுள் சர்வ வல்லமையுடையவன் ஆகையால் நம்மையும் சர்வ ஜீவத் தயையுடையவர்களாய்ச் சர்வ வல்லமையும் பெற்றுக்கொள்ளும்படி மனிதத் தேகத்தில் வருவித்தார்; ஞானிக்குத் தயவு அதிகம் அதிகப்படியிருக்கிறபடியால் கேளாத கேள்வி முதலிய மகா அற்புதங்களான இறந்தாரெழுதல் முதலிய அற்புத வல்லமையைப் பெற்றிருக்கிறார்[7]என்று கூறுகிறார். உயிர்களிடத்தே இரக்கம் செலுத்துவதற்காகவே இறைவன் மனிதத் தேகத்தில் இவ்வுயிரை வருவித்தான் என்றும் ஞானிகளுக்கு உயிரிரக்கம் அதிகமாக இருப்பதால் அவர்கள் இறந்தவரை எழுப்பும் அற்புத வல்லமை பெற்றுள்ளனர் என்றும் கூறுகிறார். ஆகவே உயிரிரக்கத்திற்கு அடிப்படை அன்பு ஒன்றேயாகும். இதனைத் தம் உபதேசக் குறிப்பில்,

“நம்முடைய தலைவராகிய கடவுளை நாம் அடைவதற்கு அவர் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும்; அவ்வருள் அன்பினாலல்லது வேறு வகையால் அடைவது அரிது. அவ்வன்பு ஜீவகாருண்ணியமல்லவல்லது வேறு வகையால் வராது. ஜீவகாருண்யத்தின் இலாபமே அன்பு; இந்த ஜீவகாருண்யம் உண்டாவதற்கு மார்க்கம் யாதெனில் கடவுளினது பெருமையும் வல்லமையும் தரத்தையும் நம்முடைய சிறுமையும் தரத்தையும் விசாரித்தால்தான் அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாமல் நடத்தலே ஜீவகாருண்யம். இதுதான் சித்தி பெறுவதற்கு வழி”[8].

என்று கூறுகிறார். இறைவனை அடைவதற்கு அருள் வேண்டும். அந்த அருள் அன்பினாலே தோன்றும் வேறுவகையால் தோன்றாது. இதனை வள்ளுவர்,

அருளென்னும் அன்பீன் குழவி.[9]

என்று கூறுகிறார். அருள் என்பது அன்பின் வழிப் பெறப்படுவது என்பது தெளிவாகிறது. இதனை வள்ளலார்,

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே 
அன்பெனும் குடில்புகும் அரசே
 
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
 
அன்பெனும் கரத்தமர் அமுதே
 
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
 
அன்பெனும் உயிரொளிர் அறிவே
 
அன்பெனும் அணுவுள் அமைந்தபேரொளியே
 
அன்புருவாம்பர சிவமே[10].

என்று கூறுகிறார். அன்பு என்னும் வல்லமையால் அனைத்தையும் பெற முடியும் என்பதே இப் பாடலின் பொருளாகும். வள்ளலார் அன்பை ஜீவகாருண்யம் என்ற சொல்லால் குறிக்கிறார். அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதே ஜீவகாருண்யம் என்று குறிப்பிட்டார். இதற்கென ஒரு தனி உரைநடை நூலினைப் படைத்தார். ஜீவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்று வலியுறுத்தினார்.

ஜீவகாருண்யம்-உயிரிரக்கம்

வள்ளலாரால் எழுதப்பெற்ற இந்நூல் உயிர்களிடத்தே அன்புகாட்டுதலும், பசித்தோர்க்கு உணவிடுதலும், புலை என்னும் கொலையைத் தவிர்த்தலும் பற்றிக் கூறுகிறது. இதனைக் கடைபிடித்தால் இயற்கை உண்மை விளங்கி ஆன்ம இலாபம் பெற்று இறைவனைத் தயவு என்னும் வல்லமையால் அடையலாம் என்று முன்நிறுத்திக் கூறியுள்ளார்.

புலால் மறுத்தல்/ புலை கொலை தவிர்த்தல்

ஜீவகாருண்யத்தின் அங்கமான உயிர்க்கொலை புரிதலைத் தடுத்தல் என்பது பெரும்பங்காகத் திகழ்கிறது. ஜீவகாருண்யத்தின் முக்கிய இலட்சியமே உயிர்க் கொலை செய்யாதிருத்தலும், புலால் புசிக்காமல் இருத்தலுமே ஆகும். இதனை வள்ளுவர்

“அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்[11]

கொல்லாமை நெறியை வள்ளலார் அகவலில் பல இடங்களில் கூறியுள்ளார். இதனை,

எங்கே கருணை இயற்கையின் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே[12]

என்றும்,

“கொல்லா நெறியே குருவருள் நெறி எனப்
பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்சிவமே[13]” என்று கூறுகிறார்.

புலால் மறுத்தல்

கொல்லாமையை வலியுறுத்தியே புலால் உண்ணுதல் தவிர்க்கப்பட வேண்டும் என்று வள்ளலார் கூறுகிறார். புலால் உண்பதால்  ஏற்படும் அவத்தைகளைத் திருமூலர்

“பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே[14]

என்று கூறுகிறார். கொல்லாமை மற்றும் புலால் மறுத்தவனை எல்லா உயிர்களும் தொழும் என்பதை வள்ளுவர்

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா  உயிரும் தொழும்[15]

என்று புலால் மறுத்தல் என்னும்  அதிகாரத்தின் வாயிலாகக் கூறுகிறார்.  எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி ஒழுகும் உத்தமர்களின் அடிக்கு ஏவல் செய்ய என் சிந்தை விழைந்தது என்பார் வள்ளலார் இதனை

எவ்வுயிரும் பொதுஎனக்கண்டிரங்கி உப
கரிக்கின்றார் யாவர் அந்தச்
செவ்வியர்தம் செயல் அனைத்தும் திருவருளின்
செயல் எனவே தெரிந்தேன் இங்கே[16]

என்று கூறுகிறார்.  அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி அன்பு செலுத்த வேண்டும். எவ்வுயிரும் தம்முயிர்போல் கருதுவதே ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை ஆகும். உயிர் இரக்கத்தின் மூலம் கடவுளைக் கண்டவர் வள்ளலார். உயிர் இரக்கத்தின் மூலம் கடவுளை மக்களுக்குக் காட்ட வந்தவர் வள்ளலார் இதனை

“உயிருள்யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
உயிர் நலம் பரவுக என்றுரைத்த மெய்ச்சிவமே[17]

என்று இறைவனே தமக்கு அறிவித்ததாகக் கூறுகிறார். இறைவனை அடைய அன்பு என்ற ஒன்றே போதும் என்று வலியுறுத்துகிறார்.

முடிவுரை

வள்ளலார் வாடிய பயிரைக் கண்ட போது வாடிய தகைமையர். இரக்கமே வடிவானவர். உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுக் கோல் என்று வலியுறுத்தியவர். அவர் அன்பு என்னும் வல்லமையைக் கொண்டு மரணமிலாப் பெருவாழ்வை அடைந்தவர். அத்தகைய வல்லமையைக் கொண்டு இறாவாத வாழ்வை இகத்திலே பெறலாம் என்பதே இவ்ஆய்வின் முடிவாகும்.

ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள்

  1. திருவருட்பா, மூலமும் உரையும் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை(உ.ஆ), அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு பதிப்பு.1989.
  2. திருவருட்பா உரைநடைப் பகுதி, தெய்வநிலையம்,வடலூர்
  3. கலைக் களஞ்சியம், தமிழ்வளர்ச்சிக் கழகம், சென்னை:1959
  4. பாரதியார் கவிதைகள், கவிதா பப்ளிகேஷன்-2016
  5. திருமந்திரம்,மாணிக்கவாசகம்,சாரதா பதிப்பகம்-2016
  6. tamilmozhiagarathi.com
  7. ’https://ta.oxforddictionaries.com
  8. திருக்குறள்,
  9. டாக்டர் மு.வரதராசனார், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.

[2] . தமிழ்மொழி அகராதி.

[2] . ’https://ta.oxforddictionaries.com

[3] . ’https://ta.oxforddictionaries.com

[4] . பாரதியாரின் தெய்வப்பாடல்கள்-12

[5] .  திருக்குறள்-153

[6] . திருக்குறள் டாக்டர் மு.வ உரை.

[7] .திருவருட்பா உரைநடைப்பகுதி-உபதேசக்குறிப்பு.

[8] . திருவருட்பா உரைநடைப்பகுதி-உபதேசக்குறிப்பு.

[9] .திருக்குறள்-757

[10] .திருவருட்பா-3269

[11] .திருக்குறள்-321

[12] .அகவல்-962,963

[13] .அகவல்-968,969

[14] .திருமந்திரம்-199

[15] .திருக்குறள்-260

[16] .திருவருட்பா-5296

[17] .அகவல்-974,975

*****

கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
தமிழியல் துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலை நகர்-608002

 

 

4 thoughts on “வள்ளலார் வகுத்த வல்லமை

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க