இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (275)

0

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்களுடன் இதோ அடுத்த வாரம் மீண்டும் உங்களுடன் மடல் மூலம் உறவாடும் வேளை வந்து விட்டது. எதிர்பாராத பல நிகழ்வுகளை உள்ளடக்கியதே வாழ்க்கை. எண்ணியிருக்காத நேரத்தில் எண்ணவே முடியாத நிகழ்ச்சிகள் நடந்தேறுவது வாழ்க்கையில் பல சமயங்களில் நாம் கண்கூடாகக் பார்ப்பதுவோ அல்லது செய்திகளாக கேள்விப்படுவதோ வாழ்வில் நிகழும் சாதாரண நிகழ்வுகளாகும். இவற்றில் சில எமக்கு மகிழ்வையும், இன்பத்தினையும் தரவல்லன, மற்றும் சிலவோ துயரத்தையும், துன்பத்தினையும் அளித்துச் செல்கின்றன. உலகில் பிறந்த அனைவருமே ஒரு நாள் இறப்பது என்பது வாழ்க்கையின் யதார்த்தம். ஆனால் அந்த இறப்பு என்பது நடக்கும் துரதிருஷ்ட வசமான நிகழ்வினாலே எதிர்பார்க்காத தருணத்தில் நிகழ்வது என்பதனை ஏற்றுக் கொள்ள மனதுக்குப் பலகாலம் எடுக்கின்றது.

இங்கே நான் படித்த ஒரு கதை ஞாபகத்துக்கு வருகின்றது. ஒருமுறை புத்த பகவான் தனது சீடர்களுடன் ஒரு பயணத்தை மேற்கொண்டு நடந்து கொண்டிருந்தார். அப்போது அனைவரும் களைப்படைந்து ஓய்வெடுத்துக் கொள்ள எண்ணினார்கள். ஆற்றங்கரையிலிருந்து சிறிதுதூரத்தில் இருந்த ஆலமர நிழலில் அனைவரும் அமர்ந்து கொண்டார்கள். அப்போது ஒரு சீடன் ” குருவே என் மனம் மிகவும் குழப்பமடைந்திருக்கும் வேளையில் அமைதியடைய என்ன செய்யலாம் என்று கேட்டான். அதற்கு புத்த பகவான் ஒரு பதிலும் கூறவில்லை. சிறிது நேரம் கழித்து புத்த பகவான் அச்சீடனிடம் அருகிலிருந்த ஆற்றிலிருந்து குடிப்பதற்கு நீர் எடுத்து வருமாறு கேட்டுக் கொண்டார். அச்சீடனும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றான். அப்போது அவன் தண்ணீர் எடுக்க வந்த இடத்தில் சில மனிதர்கள் அவ்வாற்றினுள் இறங்கி அடுத்த கரையை நோக்கி அவசரமாக நடந்தார்கள். அதனால் ஆற்றுநீரின் அடியிலிருந்த சேறு மேல்நோக்கி வந்து ஆற்றுநீர் அவ்விடத்தில் முற்றாகக் கலங்கி விட்டது.

கலங்கிய சேற்று நீரைத் தனது குருவுக்கு குடிக்க கொடுக்க முடியாது எனும் காரணத்தினால் அச்சீடன் திரும்பவந்து புத்த பகவானிடம் நடந்ததைக் கூறினான். புத்த பகவானும் சிறிது நேரம் கழித்துத் திரும்பச் செல்லுமாறு கூறினார். அவன் திரும்பச் சென்ற போது ஆற்றில் அவன் முன்பு சென்ற இடத்தில் சேறு எல்லாம் அடியில் அடைந்துவிட நீர் தெளிவாக, சுத்தமாக இருந்தது. அவனும் அந்நீரை அள்ளிச்சென்று புத்த பகவானிடம் கொடுத்தான். அவனிடம் புத்தர் ” நீ முன்பு பார்த்தபோது கலங்கிய நிலையில் இருந்த நீர் இப்போது தெளிவடைந்திருந்தது அல்லவா? அதற்கு நீ ஏதாவது செய்தாயா?” என்றார். அதற்கு அச்சீடன்  “இல்லை” என்று பதிலளித்தான். அப்போது புத்தர் ” அதுபோலத்தான் மனம் குழப்பமடையும் போது அச்சமயத்தில் நாம் எதுவும் செய்யத்தேவையில்லை; மனதை அதன் போக்கிலேயே விட்டு விட்டால் அது தானாகவே தெளிவாகிவிடும். மனதின் குழப்பத்தின் தீவிரத்தைப் பொறுத்து அதற்கான காலம் தேவைப்படுகிறது” என்றார்.

அதைப் போலவே எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் நிகழும் எதிர்பாராத நிகழ்வுகளைத் தாங்கிக் கொள்வதற்காக எதுவிதமான நடவடிக்கைகளை எடுப்பதென்பது இயலாத காரணம் . அத்தகைய ரணங்களை ஆற்றும் மருந்து காலம்தான் என்பதுவே மறுக்க முடியாத உண்மை. கடந்த வருடம் இங்கிலாந்தில் ஒரு பயங்கரத் தீ விபத்து நிகழ்ந்தது . இலண்டன் நகரின் பகுதியாகிய வெஸ்ட் மினிஸ்டர் நகரசபையின் கட்டுப்பாட்டில் இயங்கிய பல்லடுக்கு மாடிகளைக் கொண்ட வாடகை இருப்பிடங்கள உள்ளடக்கிய கிறென்வெல் எனும் கட்டிடம் யதேச்சையாகப் பயங்கர தீ விபத்துக்குள்ளாகியது. அதன் விளைவாக 72 பேர் உயிரிழந்தார்கள்.

அதைத்தொடர்ந்து அத்தீவிபத்தின் காரணத்தையும், அது நிகழ்வதைத் தடுத்திருக்கக்கூடிய வல்லமை கொண்டவர்களையும் அடையாளம் காண்பதற்காகவும் இங்கிலாந்து அரசாங்கத்தினால் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. அவ்விசாரணைக் கமிஷன் அத்தீவிபத்தோடு மிக நெருங்கிய சம்பந்தமுடையவர்களின் பிரத்தியேக வாக்குமூலங்களைச் செவிமடுக்கும் பணியினை கடந்த வாரம் ஆரம்பித்தது. சாட்சியளித்தவர்கள் அத்தீவிபத்தில் உயிரிழந்த தமது குடும்ப உறுப்பினர்களை நினைவுகூர்ந்து வழங்கிய வாக்குமூலங்களைக் கேட்ட அனைவரது கண்களிலும் கண்ணீர் திரண்டது என்பது மிகையாகாது. இத்தகைய ஒரு நிகழ்வு ஒவ்வொரு குடும்பத்தையும் எவ்வகையில் பாதிக்கிறது என்பதைப் பார்க்கும்போது உணர்வுகள் கொந்தளிக்கின்றன.

குறிப்பாக இந்தக் கட்டிடத்தில் வசித்து வந்தவர்களில் பெரும்பான்மையோர் இங்கிலாந்துக்குள் அகதிகளாகத் தஞ்சம்கோரி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தாம் பிறந்து வளர்ந்த தமது தாய்மண்ணில் வாழ வகையின்றி அரசியல் சூழல்களினாலும், வேறு பல பிரச்சனைகளாலும் மொழிபுரியாத நாடுகளுக்குள் தமது உயிரைப் பணயம் வைத்து வந்தவர்கள் தீயின் நாவினால் தமது உயிரை இழந்த பரிதாப நிகழ்வு பல அரசியல் கேள்விகளை ஆழமாகத் தூக்கிப் போட்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மை. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இவ்விசாரணையின் முடிவு அடுத்த வருடமே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தீ விபத்தினால் எழுப்பப்பட்டுள்ள பல கேள்விகளுக்கான பதிலில் பல அரசியல் கொள்கைகளின் நியாயத்தன்மையின்மீது விமர்சனங்கள் எழும் என்பது பலரது கணிப்பாக இருக்கிறது.

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *