போராட்டக் காரராக இருப்பது எளிது. போராட்டக் காரரின் மனைவியாக இருப்பது அரிது. போராட்டக் காரரின் குழந்தைகளுக்குத் தாயாக இருப்பது அதனினும் அரிது. அதைவிடவும் அரிது போராட்டக் காரரின் நோய்வாய்ப்பட்ட குழந்தையின் தாயாக இருப்பது. அதைவிடவும் கொடிது போராட்டக் காரரின் நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு வறுமை வயப்பட்ட தாயாக இருப்பது. அப்படிப் பட்ட ஒரு தாயின் கடிதத்தில் ஒலிக்கும் கதறல் இது.

எங்களுடைய சிறு குழந்தை பிரான்சிஸ்கா, கடுமையான மார்ச்சளி நோயினால் படுத்துக் கொண்டு விட்டது. அது பாவம். மூன்று நாட்கள் எமனோடு போராடியது. அதனுடைய அவஸ்தை சொல்லி முடியாது. கடைசியில் அதனுடைய ஆயுள் முடிந்து விட்டது. எங்களோடு மற்ற மூன்று குழந்தைகளும் இருந்தன. பிரான்ஸிஸ்கா இறந்து போனதற்காக நாங்கள் அழுது கொண்டிருந்தோம். எங்களுடைய அதிகமான பணமுடை காலத்தில் அந்தக் குழந்தை இறந்து விட்டது. ஜெர்மானிய நண்பர்கள் எங்களுக்கு எவ்வித உதவியும் செய்ய முடியாதவர்களாக இருந்தார்கள். எங்களைப் போல தேசப் பிரஷ்டமடைந்து அருகாமையில் வசித்துக் கொண்டிருந்த ஒரு பிரெஞ்சு நண்பரிடம் சென்று என் குறையைத் தெரிவித்தேன். அவர் பெரிய மனது பண்ணி இரண்டு பவுன்டு கொடுத்தார். இந்தப் பணத்தைக் கொண்டு சவப் பெட்டி வாங்கினேன். அதில்தான் இப்போது என் குழந்தை சாசுவதமான நித்திரை செய்து கொண்டிருக்கிறது. அது பிறந்தபோது, அதற்குத் தொட்டில் இல்லை; இறந்த பிறகு அதற்குச் சவப் பெட்டி கிடைப்பது இத்தனை கஷ்டமாகி விட்டது” இதனை வரைந்தது உலகையே மாற்றி அமைத்த பொதுவுடைமைச் சிந்தனையைக் கொடுத்த கார்ல் மார்க்சின் காதல் மனைவி ஜென்னி மார்க்சு அவர்களின் விரல்களே.

இன்றைய உலகின் மார்க்சிய தத்துவத்தைத் தந்தவர் கார்ல் மார்க்சு. அவரை தத்துவ மேதையாக ஆக்கித் தந்தவள் ஜென்னி மார்க்சு. ஜென்னியின் பெற்றோரும் கார்ல் மார்க்சின் பெற்றோரும் ட்ரியரில் பக்கத்துப் பக்கத்து வீட்டில் வசித்தார்கள். ஜென்னியின் தந்தை ட்ரீவ்ஸ் என்னும் நகரின் அரசு பிரதம அதிகாரியாக இருந்தார். இவரது சகோதரன் பிரஸ்ஸிய அரசில் பிரதான அமைச்சராக இருந்தார். கார்ல் மார்க்சின் தந்தை பிரபலமான வழக்கறிஞராக இருந்தார். இரு வீட்டுக் குழந்தைகளும் ஒன்றாக உண்பதும் விளையாடுவதுமாக பழகி வந்தனர்.

ஜென்னி நல்ல அழகி; மார்க்சு. மார்க்சு குழி விழுந்த கண்கள், கருத்த மேனி என்று அழகற்றவன். அவரது குழந்தைகளே மார்க்சை ‘மூர்’  என்று அழைப்பார்கள். அவரது தாடியும் மீசையும் மூர்க்கனாகத் தோன்றியதால் அப்படி அழைத்திருக்கலாம். ஜென்னி நல்ல குணவதி; மார்க்சு மகா முரடன்; ஜென்னியை மணம் புரிபவன் மகா பாக்கியசாலியாக இருக்க வேண்டும்; மார்க்சை மணம் புரிபவள் பாவப் பட்டவள் என்றெல்லாம் பேசிக்கொள்வார்கள். மார்க்சு ஜென்னியை விட நான்கு வயது இளையவன்.  ஆனால் எப்படியோ இந்த இருவருள்ளும் காதல் மலர்ந்து விட்டது.

சுயமாக சம்பாதிக்கும் வரை திருமணம் செய்து கொள்வதில்லை என்று உறுதியேற்று பெர்லின் சர்வகலாசாலையில் தன் கல்வியில் ஈடுபட்டார் மார்க்சு. திருமணம் ஆகாமல் இருந்த ஜென்னியை, ‘ஜென்னி ஒரு வாழா வெட்டி’ என்று உற்றாரும் உறவினரும் ஏச, அத்தனையையும் செவியில் ஏற்று மார்க்சுக்காகப் பொறுமையாக ஜென்னி ஏழு ஆண்டு காலம் காத்திருந்தாள்.  மார்க்சு பணி நிமித்தமாகப் பாரிசு சென்றான். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து மார்க்சு ஓர் பத்திரிகையைத் தொடங்கினார். நிதி நிலை ஓரளவு திருப்திகரமாக இருக்கும் காலத்தில் ஒரு வழியாக 1843 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி பெர்த்தா ஜூலியா ஜென்னிக்கும் கார்ல் மார்க்சுக்கும் திருமணம் நடந்தேறியது. அப்போது மார்க்சின் வயது 25; ஜென்னியின் வயது 29.

இதற்கிடையில் மார்க்சின் தந்தை இறந்து விட்டார். “ஜென்னி உன்னை விவாகம் செய்து கொள்வதன் மூலம் மகத்தான  தியாகத்தைச் செய்தவளாகிறாள்” மார்க்சின் தந்தை மார்க்சுக்கு எழுதிய கடிதத்தின் வரிகள் இது. மணமாகிறது. ஆனால் மார்க்சிடம் மனமாற்றம் இல்லை. எப்போதும் எழுத்து படிப்பு என்று இருக்கிறான். ஜென்னியும் தன் காதல் கணவனின் சிந்தனை சித்தாந்தத்தை ரசித்துக் கொண்டிருக்கிறாள். உலக சிந்தனை என்று ஏதுமற்ற அவனை அப்படிப்பட்ட உயர் சிந்தனையில் புகுத்தியவளே அவள்தானே,

ஜென்னியின் தந்தை நீங்கள் “இருவரும் தேனிலவு சென்று வாருங்கள் என்று அனுப்புகிறார். தேனிலவுக்குப் புறப்படும் போது மார்க்சு 10 பெட்டிகளில் புத்தகங்களை அடுக்கிக் கொண்டார். ஆல்ப்ஸ் மலையின் அழகிய சிகரங்களில் சுற்றிச் சுழல வேண்டிய காதலர்களின் விழகள் அச்சடித்தப் புத்தகங்களைச் சுற்றி சுழன்று வந்தன. “நாம் இருவரும் சேர்ந்து படிக்கலாம்” என்று ஜென்னியும் மார்க்சின் சிந்தனையில் கலந்து கொண்டாள். இருவரும் ஆளுக்கு ஒருபுறம் அமர்ந்து நூல்களைப் படித்துக் கொண்டிருப்பார்களாம்.

புரட்சித் துறவி வள்ளலார் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க தம் தமக்கையின் மகள் தனக்கோடி அம்மையாரை மணம் முடிக்கிறார். மணமக்களை முதலிரவுக்குத் தயாரிக்கிறார்கள். மணப்பெண் அறையில் காத்திருக்கிறார். வள்ளலாரோ கையில் திருவாசகத்தை ஏந்தி அறைக்குள் புகுகிறார். மங்கலாக எரிந்த விளக்கைத் தூண்டி பிரகாசமாக எரியச் செய்கிறார். தனக்கோடி அம்மையாரை அருகில் அமரச் சொல்கிறார். விடிய விடிய திருவாசகத்தை முற்றோதல் செய்து முடிக்கிறார். வள்ளலார் தனக்கோடி அம்மையாரின் தேனிலவினைத் திருவாசகத் தேனிலவு என்று கூறுவார் ஊரனடிகள். அதே போல ஹெகலின் தத்துவங்களைப் படித்துக் கொண்டிருந்த மார்க்சு ஜென்னியின் தேனிலவினை ஹெகல் தேனிலவு என்று சொல்வது பொருத்தமாகும்.

ஆனால் வள்ளலாருக்கும் மார்க்சுக்கும் வேறுபாடு உண்டு. வள்ளலார் துறவுக்காக மனைவியைத் தயாரித்தார். மார்க்சு காதலோடு ஜென்னியுடன் இல்லறம் நடத்தினார். ஜென்னி மார்க்சுடன் தத்துவம், சமத்துவம் பேசிக்கொண்டும் மார்க்சு பேசுவதைக் கேட்டுக் கொண்டும் மகிழ்ந்திருந்தாள். இந்த நிலையில் ஏழு குழந்தைகளுக்குத் தாயானாள் ஜென்னி. இதில் ஒன்றும் அதிசயம் இல்லை. ஏழைகளின் ஒரே பொழுது போக்கு காமம் என்றாகிவிடுகிறது பல நேரங்களில். இவர்களோ காதல் மணம் புரிந்த ஏழைகள்.

ஜென்னியின் தந்தை பெரும்பணக்காரர். வீட்டில் எடுப்பதற்கும் கொடுப்பதற்கும் வேலைக்கு ஆட்கள். வசதி… வசதி. ஏழ்மையின் அகோரப் பிடியில் சிக்குண்டு நான்கு ஆண் குழந்தைகள் உயிர் இழந்தன என்று ஜென்னி கடிதம் ஒன்றில் எழுதுகிறாள். இத்தனை வறுமையில் கணவனை ஏதாவது வேலைக்குச் சென்று பணம் ஈட்டு என்று அவள் ஒரு போதும் சச்சரவு செய்ததில்லை ஜென்னி. மாறாக…..

“தினந்தோறும் நாங்கள் எந்த மாதிரியான வாழ்க்கையை அனுபவித்து வந்தோம் என்பதற்கு உதாரணமாக எங்களுடைய ஒரு நாள் வாழ்க்கையை மட்டும் இங்கு வருணித்துக் காட்டுகிறேன். என் குழந்தைக்குப் பால் கொடுக்க ஒரு  தாதியை அமர்த்திக் கொள்ளலாம் என்றால் அதற்கு இங்கு அபாரமான செலவு ஆகும். பொறுக்க முடியாத மார்பு நோயையும் முதுகு வலியையும் பொறுத்துக் கொண்டு என் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அழகும் துரதிஷ்டமும் வாய்ந்த அந்தக் குழந்தை, என்னிடத்திலிருந்து எவ்வளவு பால் குடித்ததோ அவ்வளவு என்னுடைய துக்கத்தையும் சேர்த்துக் குடித்தது. இதனால் அது சதா அரட்டிக் கொண்டே இருந்தது. இரவும் பகலும் எப்பொழுதும் இசிவு, வலிப்பு அதற்கு வந்து கொண்டே இருந்தது. அது பிறந்தது முதல் ஒரு நாளாவது இரவு பூராவும் தூங்கினதே கிடையாது. அது உயிரோடு போராடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் அதற்கு வலிப்பு ஏற்பட்டது. வலிப்பு ஏற்படும்போது அது பால் குடித்துக் கொண்டிருந்தது. அதனால் என் மார்பு புண்ணாகி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இப்படி அவஸ்தைப் பட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கையில் எங்கள் வீட்டின் சொந்தக்காரி பிரசன்னமானாள். வீட்டு வாடகையான 5 பவுண்டுகளை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்டாள். உடனடியாக எப்படி கொடுக்க முடியும். ஏலம் போடுகிற தரகர்கள் இரண்டு பேர் உள்ளே நுழைந்தார்கள். எங்கள் துணி மணிகள், கைக்குழந்தையின் தொட்டில் முதல் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான் வரை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்தில் பணத்தைக் கொடுக்க வில்லையென்றால் எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு போய்விடுவோம் என்று அவர்கள் பயமுறுத்திச் சென்றார்கள். ஏலம் போடும் தரகர்கள் வீட்டில் நுழைந்து விட்டார்கள் என்பதைக் கேட்டு, சாமான்கள் கொடுத்து வந்த எல்லோரும் தங்களுடைய பாக்கிக்காக எங்களை நெருக்கினார்கள். எங்கள் படுக்கைகள் அனைத்தையும் விற்று வைத்தியன், ரொட்டிக்காரன், கசாப்புக்காரன், பால்காரன் முதலியவர்களின் பாக்கிகளை எல்லாம் தீர்த்து விடலாம் என்று தீர்மானித்தோம். பொருட்களைத் தெருவிலே கொண்டு போய் கை வண்டியிலேற்றினோம். அந்தச் சமயம் சூரியன் அஸ்தமித்து விட்ட சமயம். இருட்டாகி விட்டது. இருட்டு வேளையில் சாமான்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்வது (இங்கிலீஷ் சட்டப்படி) சட்ட விரோதம். உடனே வீட்டுச் சொந்தக்காரன் சில போலிஸ்காரர்களுடன் வந்து விட்டான். நாங்கள் தப்பித்து வெளிநாடு செல்ல முயல்வதாகவும் அவருடைய சாமான்களும் அந்தக் கை வண்டியில் இருக்கக் கூடுமென்றும் தாறுமாறாகப் பேசினார். அவ்வளவுதான்; ஐந்து நிமிடத்திற்குள் இருநூறு அல்லது முந்நூறு பேருக்கு மேற்பட்ட ஒரு கூட்டம் எங்கள் வீட்டு முகப்பில் கூடிவிட்டது. படுக்கைகள் திரும்பவும் வீட்டுக்குள் கொண்டு வரப் பட்டன. மறுநாள் பொழுது விடிந்த பிறகுதான் அவைகளை நாங்கள் விற்பனைக்கு அனுப்ப முடிந்தது. இங்ஙனம் எங்கள் தட்டு முட்டு சாமான்களை விற்று கடன்களை அடைத்தோம். ஆனால், இந்தச் சில்லரைத் தொந்திரவுகள் என் மன உறுதியைக் குலைத்துவிட்டனவென்று நீங்கள் கருத வேண்டாம். ஒருவித பாக்கியசாலிகளிலே நான் ஒருத்தி. நான் அதிர்ஷ்டக் காரி, ஏனென்றால் எனது கணவர் எனது வாழ்க்கையின் மூலாதாரம்” என்று எழுதுகிறாள். அவளது காதலின் கம்பீரமும் உலக நேசிப்பின் உயர்வும் இப்படி எழுத வைத்தது.

வீட்டில் இருந்த வெள்ளிப் பொருட்கள், மார்க்சின் கோட்,  குழந்தைகளின் பூட்சு அனைத்தையும் அடகு வைத்து வாழும் வாழ்க்கையிலும் மார்க்சின் காதலை மட்டும் எதற்கும் அடகு வைக்காமல் இருந்தாள் ஜென்னி. புழுதி மண்ணில் புரண்டாலும் மார்க்சு வாணுயர்ந்த தத்துவத்தைத் தந்தே தீர்வது என்னும் தன் கொள்கையிலிருந்து மாறவே இல்லை. ஜென்னியும் மார்க்சு அப்படி மாறிவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையுடன் இருந்தாள்.

ஒரு பெண்ணுக்கு ஆகப் பெரிய சங்கடம் அவளை விபச்சாரி என்று கைது செய்வது. அந்தக்  கொடுமையையும் அனுபவித்தவள் ஜென்னி. அரசுக்கு எதிராகப் புரட்சிக் கருத்துகளை எழுதியும் பேசியும் வந்ததாகச் சொல்லி 24 மணி நேரத்திற்குள் மார்க்சு பெல்ஜியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது பெல்ஜிய அரசு. புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் போதே காவலர்கள் சிலர் வந்து மார்க்சை உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி கைது செய்தனர். கணவனைக் காப்பாற்ற முடியாதா என்னும் ஏக்கத்தோடு யாருமற்ற அநாதையாய் பெல்ஜியம் ஜனநாயக சங்கத்தின் தலைவர் ஜோத்ரானந் என்பவரைப் பார்த்து உதவி கேட்கச் சென்றாள். திரும்பி வந்து பார்க்கும் போது வீட்டு வாயிலில் காவலர் ஒருவர் இருந்தார். உங்கள் கணவரைப் பார்க்க வேண்டுமானால் என்னுடன் வாருங்கள் என்று  வாஞ்சையோடு அழைத்தார். ஆசையோடு உடன் சென்ற ஜென்னி அங்கு விசாரனைக்குட்படுத்தப் பட்டு விபச்சாரி என்று சிறையில் அடைக்கப் பட்டார். அவள் செய்த குற்றம் அப்போதும் மார்க்சை மனமாற காதலித்ததும் அவரது செயல்பாடுகள் சரியானது என்று பேசியதுமே. “விசாரனையெல்லாம் முடிந்து அவர்கள் வெளியில் வரும்போது நாட்டை விட்டு வெளியேற கொடுத்திருந்த 24 மணி நேரம் முடிவடைந்திருந்தது. ஆகையால் அத்தியாவசியப் பொருள்களைக் கூட எடுத்துக் கொள்ளாமல் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது” என்று மார்க்சு ஒரு பத்திரிகையில் எழுதியிருந்ததைப் பார்க்கும் போது மார்க்சுதான்  வேதனை பட்டார். ஆனால் மார்க்சின் காதலுக்காக ஜென்னி இதனையெல்லாம் சுகமாகச் சுமந்திருந்தாள் என்பதே உண்மை.

பெல்ஜியத்திலிருந்து பாரிசு மாநகரம் வந்தடைந்து அப்பாடா என்று இழுத்து நீண்டதொரு மூச்சு விட்டிருப்பார்கள். அவ்வளவுதான். 1849 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மார்க்சு பாரிசு வருகின்றார். ஜூலை மாதம் ஜென்னியும் குழந்தைகளும் பாரிசு வந்தடைகிறார்கள். இனி நீண்ட நாட்கள் மார்க்சுடன் சேர்ந்து காதல் வாழ்வு வாழப் போகிறோம் என்று கனவில் மூழ்கி இருந்தாள் ஜென்னி. அடுத்த ஒரு மாதத்தில் அந்தக் கனவும் கலைந்தது. பொழுது புலர்ந்த போது ஜென்னியின் வாழ்வில் மீண்டும் இருள் மண்டியது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் மார்க்சு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்னும் உத்தரவை ஒரு காவலர் கொண்டு வந்து கொடுத்தார். விழி நீருடன் வழியனுப்பி வைப்பதைத் தவிர என்ன செய்வாள் அவள்? 1849 ஆகஸ்டு 24 மார்க்சு பாரிசிலிருந்து கிளம்பி இலண்டன் அடைந்தார். எத்தனை அவமானங்கள்? எத்தனை நாடுகள்? மீண்டும் ஒரு மாதப் பிரிவின் பின் நாடு கடத்தப் பட்ட தன் காதல் கணவனை அடைய குழந்தைகளுடன் பயணத்தைத் தொடர்ந்தாள் ஜென்னி. இப்போது இலண்டன். இங்குதான் ஜென்னியின் மூன்று குழந்தைகள் இறந்தன.

ஜென்னியைப் பற்றி மார்க்சின் நண்பர் ஒருவர் இப்படி கூறுகின்றார். “மார்க்சின் மனைவி ஃப்ருஷ்ய மந்திரியான வெஸ்ட் பாலன் பிரபுவின் சகோதரி, நன்றாகப் படித்தவள். வசீகரமான சுபாவமுடையவள். இந்த அநாகரிக வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டு விட்டாள் காரணம் தன் கணவன் மீதுள்ள காதல்தான். இப்போது இவளுக்கு வறுமை வாழ்க்கை என்பது சகஜமாகிவிட்டது”

மேல் சட்டையை அடகு வைத்துவிட்டு வெளியில் செல்லாமல் இருக்கும் கணவன், சோறில்லாமல் ஒட்டிய வயிற்றோடு குழந்தைகள், பாக்கிக்காக வீட்டின் முன்பு நிற்கும் கடன் காரர்கள், மார்க்சு வீட்டில் இருக்கும் போதே ‘அப்பா வீட்டில் இல்லை’ என்று கடன் காரர்களிடம் பொய் கூறப் பழகி விட்ட குழந்தைகளின் வெள்ளை மனம், கடன் காரர் ஒருவருக்கு அஞ்சி ஊரை விட்டே ஓடிய மார்க்சின் கடன் பிரச்சனை இத்தனையும் ஜென்னியை நோயாளிக்கியது.

எஞ்சிய நான்கு குழந்தைகளில் ஒர் ஆண் குழந்தையான எட்காரும் இறந்துவிட்டான். மார்க்சுக்கும் கண் வலி, வயிற்றுக் கோளாறு; உடலெல்லாம் கொப்புளங்கள்; காசம் என்று நோயாளியானான். ஜென்னியிடம் பற்றிக்கொண்ட மார்க்சின் ஆழமான காதல் போலவே அவனது நோயும் அவளைப் பற்றிக்கொண்டது. கல்லீரல் புற்று நோயும் பற்றிக்கொண்டது. 1881 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் ஜென்னி பூவுலக நரக  வாழ்க்கையிலிருந்து விடுபட்டாள்.

ஏங்கெல்ஸ் இல்லை என்றால் மார்க்சின் தத்துவம் உயிர் பெற்றிருக்காது. ஜென்னி இல்லையென்றால் கார்ல் மார்க்சே உயிரோடு இருந்திருக்க மாட்டார். ஆம் ஜென்னி இறந்த போதே மார்க்சும் இறந்து விட்டார். அதன் பின் அவன் வாழ்ந்த பதினைந்து மாத காலங்கள் இறந்த வாழ்க்கையே அன்றி இருந்த வாழ்க்கை இல்லை என்று  மார்க்சின் உற்ற நண்பன் ஏங்கெல்ஸ் கூறுகிறான்.

தன் காதல் கணவன் மார்க்சினால் தன் ஈமச் சடங்கினைக் கூடச் செய்ய முடியாமல் போகும் என்று எப்படி ஜென்னி நினைத்திருப்பாள். அதற்குக் கூட இயலாத நிலையில் நோய் வாய்ப்பட்டான் மார்க்சு. காதல்….. மார்க்சின் மீது ஆழமான காதல்.. அவனுக்காக எதையும் செய்யும் காதல்… என்று காதலைத் தவிர எதுவும் நினைக்காதவள் ஜென்னி. ஜென் நிலை என்பது எதைச் செய்கிறோமோ அதில் மட்டுமே முழுக் காதலோடு இருப்பது. ஜென்னி மார்க்சைக் காதலிக்க மட்டுமே இவ்வுலகுக்கு வந்தவள். காதலித்தாள். ஆழமாகக் காதலித்தாள்….. அணு அணுவாகக் காதலித்தாள். தீயாய்ச் சுடும் வாழ்க்கையைத் தேனாய் நினைத்தாள்.. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒர் பெண் இருக்கிறாள் என்று கூறுவது வெற்றியாளர் கார்ல் மார்க்சைப் பொறுத்த மட்டில் சத்திய வாக்கு! உயர்ந்த காதலால் உலகுக்கு மாதிரியாக மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் ஜென்னி

 ஆதிரா முல்லை

(முனைவர் ப. பானுமதி)

உதவிப் பேராசிரியர்

வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி

சென்னை 600 102

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.