கவிதைகள்

சொந்தங்கள் எத்தனையோ !

பருவத்தில் பட்டாம்பூச்சிக் கனவுகள் சொந்தங்களே

படுக்கையில் பசிக்கின்ற இன்பங்கள் சொந்தங்களே

பாசத்தில் கருவாகி உருவாகும் சொந்தங்களே

பாருள்ள உயிரெல்லாம் பார்வைக்குச் சொந்தங்களே !

 

தோள்தூக்கி வளர்த்த உறவெல்லாம் சொந்தங்களே

துயர்நீக்க கைகொடுக்கும் நட்பெல்லாம் சொந்தங்களே

துள்ளியாடும் நேரத்தில் துணையிருந்தோர் சொந்தங்களே

துணிவோடு வாழவைத்த துயரங்கள் சொந்தங்களே !

 

நடுவழியில் நல்வணக்கம் சொல்லுபவர் சொந்தங்களே

நாற்றோடு ஏர்பிடிக்கும் நல்நெஞ்சங்கள் சொந்தங்களே

நாம்வாழ உழைக்கின்ற தோழமைகள் சொந்தங்களே

நாலுபக்கம் தோள்தூக்கிக் கதைமுடிப்பார் சொந்தங்களே.

 

நீர்வளமும் நிலவளமும் நாம்பெற்ற சொந்தங்களே

நீலவானில் மின்மினிகள் காட்சிக்குச் சொந்தங்களே

நிகழ்வோடு நேற்றும் நாளையும் சொந்தங்களே

நிலையாத வாழ்வும் நித்தியமும் சொந்தங்களே

 

பூமணமும் புலன்வளர்க்கும் காய்கனிகள் சொந்தங்களே

புள்ளினமும் புவிவளரும் உயிரினங்கள் சொந்தங்களே

புரியாத மொழிபேசும் பாரனைத்தும் சொந்தங்களே

புரிந்துவிட்டால் சுமையில்லை சுகமான சொந்தங்களே !

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க