-மேகலா இராமமூர்த்தி

நான்மணிக்கடிகை எனும் தமிழ் நீதிநூல் ஒன்றிருக்கின்றது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக வைத்தெண்ணப்படும் இது இரத்தினத் துண்டுகள் போல் நான்கு அருமையான நீதிகளைச் சொல்லிச்செல்கிறது. அதனால் பெற்ற காரணப்பெயரே நான்மணிக்கடிகை என்பது.

அதிலிருந்து ஓர் அழகிய பாடல்!

கொடுப்பின் அசனங் கொடுக்க – விடுப்பின்
உயிரிடை யீட்டை விடுக்க வெடுப்பிற்
கிளையுட் கழிந்தார் எடுக்க கெடுப்பின்
வெகுளி கெடுத்து விடல். 

ஒருவருக்கு நாம் ஒன்றைக்கொடுக்க விரும்பினால் அவர்கள் வயிறுநிறைய உணவைக் கொடுக்க வேண்டுமாம். ஏன்? போதும் எனும் நிறைவு ஒருவனுக்கு உணவில் மட்டுந்தான் ஏற்படும். மற்ற எதிலும் ஏற்படுவதில்லை!

ஒன்றை விட்டுவிட வேண்டுமென்றால் உயிர்மீதுள்ள பற்றை விற்றுவிட வேண்டுமாம். நல்ல கருத்துதான்! ஆனால் அஃது அவ்வளவு சுலபமான காரியமில்லை என்றே தோன்றுகிறது. பின்னே…நூறுவயது வாழ்ந்தாலும் மனிதர்க்கு வாழ்ந்தது போதும் எனும் எண்ணமும் நிறைவும் வரக்காணோமே! 

மனிதனுக்கு உயிர்மீதிருக்கும் பற்றினை வள்ளுவப் பெருந்தகை அழகான உவமை ஒன்றின் வாயிலாக விளக்குவார். சூதாடுகின்ற ஒருவன் அதில் எத்தனை முறை தோற்றாலும் அதனைப் பொருட்படுத்தாது மீண்டும் மீண்டும் விருப்பதோடு சூதாடுவதைப் போல, (தருமபுத்திரனைவிடவா இதற்குச் சான்று வேண்டும்?), எத்தனை துன்பம் உயிருக்கு வந்தாலும் உயிர்மீதிருக்கும் பற்றும் காதலும் மனிதர்க்குப் போவதில்லை என்கிறார். 

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர். 

அடுத்து, நாம் ஒருவருக்கு உதவவேண்டும் என்று விரும்பினால் நம் சுற்றத்தாரிலேயே ஏழ்மை நிலையில் இருப்பவர்க்கு உதவ வேண்டும் என்கிறது நான்மணிக்கடிகை. ஆனால் நடைமுறை என்ன? சுற்றத்தாரில் யார் நம் ’ஸ்டேட்டஸுக்கு’ ஏற்றாற்போல் இருக்கிறார்களோ அவர்களோடு மட்டும் நெருங்கியிருப்பதும், உடன்பிறந்தாரே ஆயினும் ஏழைகளாக இருந்தால் அவர்களைக் கழற்றிவிடுவதுமே இந்நாளில் அதிகம் காணக்கூடியதாய் இருக்கின்றது.

அவ்வளவு ஏன்…இல்லானை இல்லாளுக்கும் பிடிப்பதில்லை; ஈன்றெடுத்த தாய்க்கும் பிடிப்பதில்லை. அப்புறம் மற்றவருக்கு எப்படிப் பிடிக்கும்?

ஆனால், அறவழியில் நடக்கவிரும்புவோர் வறுமையில் உழல்வோர்க்கு உதவிசெய்து அவர்களைக் கைதூக்கி விடுவதையே விரும்புவர் என்ற அடிப்படையில்தான் இந்தப்பாடலை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சரி…ஏதாவது ஒன்றை நாம் ஒழிக்க வேண்டுமென்றால் எதை ஒழிப்பது?

இதற்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்லக்கூடும். சிலர் கடனை ஒழிக்க வேண்டும் என்பார்கள்; வேறுசிலர் தமக்குத் தொல்லைதரும் எதிரிகள் கூட்டத்தை ஒழிக்கவேண்டும் என்பார்கள். ஆனால் நான்மணிக்கடிகை சொல்வது, நம்மிடம் இருக்கும் சினத்தை நாம் ஒழிக்கவேண்டும் என்பதே.  இந்தச் சினம்தானே எல்லாத் தீச்செயல்களுக்கும் ஆதிமூலமாய் அமைகின்றது?

”சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி” என்று அதன் இயல்பைக் கூறும் வள்ளுவர்,

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் என்று எச்சரித்திருப்பதையும் இங்கே நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவே நம்மை நாடிவரும் இரவலர்க்கு உணவுதந்து, நிலையில்லா மனித உயிர்மீது நாம் கொண்டிருக்கும் பற்றைச் சற்றே குறைத்து, வறுமையில் வாடும் சுற்றத்தார்க்கு நம்மால் இயன்றஅளவில் உதவி, நண்பரையும் பகைவராக்கும் சினத்தை ஒழித்து நன்முறையில் வாழ்ந்தால் வீடும் நாடும்  நலம்பெறும் என்பதே நான்மணிக்கடிகை நமக்குச் சொல்லும் நன்னெறி!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *