கவிதைகள்

புதிருக்குப் பதில்தேடி ..,,,

க. பாலசுப்பிரமணியன்

 

கல்லுக்குள் சிலையாய் கதிருக்குள் ஒளியாய்

வில்லுக்குள் விசையாய் வித்துக்குள் சத்தாய்

காற்றுக்குள் இசையாய் கற்பனையில் புதிராய்

காலத்தின் அசைவாய் உருக்கொண்ட அருவே !

 

சொல்லுக்குள் பொருளாய் சுவையெல்லாம் புதிதாய்

வயிற்றுக்குள் பசியாய் வருகைக்குச் செலவாய்

விடியலுக்கு முடிவாய் முடிவுக்குப்பின் முதலாய்

குறைவுக்கு நிறைவாய் குடிகொண்ட திருவே !

 

கோளெல்லாம் உனதோ கும்மிருட்டே முதலோ

ஒளியாக வந்தாயோ ஒளிர்விட்டு நின்றாயோ

வளிதன்னை வளர்த்தாயோ வானகத்தில் நின்றாயோ

மெய்யென்ன யானறியேன் மேய்ப்பவனே நீதானோ?

 

கற்பனைக்குள் நின்று கதைகள்பல சொல்லிட்டாய்

கல்லுளிக்குள் மறைந்து கலைகள்பல படைத்திட்டாய்

கலையாத மோனத்தில் கடவுளென்றே அமர்ந்திட்டாய்

சிலையாக நான்நின்று சிந்தனையில் தவிக்கின்றேன் !

 

ஒன்றோ இரண்டோ உருவங்கள் எத்தனையோ

தாயோ தந்தையோ தனயனோ தூதுவனோ

அன்றோ என்றோ எங்கிருந்துவந்த நன்றோ ?

இன்றே வருவாய்அறிவாய் எனையாளும்புதிரே !

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க