நிர்மலா ராகவன்

உலகில் பிறரும் உண்டு

ஒரு தாய் தன் மகளுக்குச் சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்த இன்னொரு பெண், “ஐயே! இவ என்ன குழந்தையா? ஊட்டி விடறியே!” என்றாள் கேலியாக.

“என் குழந்தைக்கு ரொம்ப ஜூரம்!” என்று பரிந்தாள் தாய். `குழந்தை என்று அவள் குறிப்பிட்டது எட்டு வயதான பெண்ணை. அக்காட்சியைப் பார்த்து அதிசயித்தவளுக்கோ நான்கு வயதுதான். அவள் பெருமையாக, “எனக்கு ஜூரம் வந்தாலும், நானேதான் சாப்பிடுவேன்!” என்றாள்.

ஊட்டுவது எப்போதுவரை?

ஒரு வயதோ, இரண்டு வயதோ ஆன குழந்தைகளுக்கு ஊட்டிவிட வேண்டியது தவிர்க்க முடியாதது. அந்த வயதுக் குழந்தைகள் வாயைத் திறக்கவே படுத்தும். அப்போது, பூனையோ, நாயோ அருகில் இருந்தால், அந்தப் பிராணிகளுக்கு ஒரு வாய் போட்டு, குழந்தை வாயிலும் போடலாம்.

மூன்று வயதானதும், ஒரு ஸ்பூனில் உணவை வைத்து, நாம் கண்ணை மூடிக்கொண்டால், குழந்தை சுயமாகச் சாப்பிடும். பக்கத்தில் மிருகங்கள் படம் போட்ட புத்தகத்தை வைத்துக்கொண்டு, “ஐயோ! கரடி சாப்பிட்டுப் போயிடுத்து,” என்று அதிர்வதுபோல் பாவனை செய்தால், குழந்தை பெருமையாகத் தன் வாயைச் சுட்டிக்காட்டும். அடுத்த கவளத்திற்கு, குரங்கின்மேல் பழி போடலாம்.

நான்கு வயதிற்குமேல், ஒரு சிறுமியின் வாயில் போவதைவிட அதிகமாகவே தரையில் விழும். கூடவே அமர்ந்து கதை சொன்னால், சாப்பிடும் பிரக்ஞையே இல்லாமல் சாப்பிட்டு முடித்துவிடுவாள்.

உதவியா, உபத்திரவமா?

குழந்தை செய்யக்கூடிய எந்த வேலையும் அரைகுறையாகத்தான் இருக்கும். அதற்காகப் பரிதாபப்பட்டோ, அவனுக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டோ, அல்லது தன் அன்பை வெளிக்காட்டும் விதமாகவோ ஒருவர் அந்த வேலையைத் தானே முனைந்து செய்தால், என்றாவது, `எங்கு தவறு செய்தேன்?’ என்று வருந்த நேரிடும்.

`நான் ஊட்டினால், விரைவாகச் சாப்பிடுவான். அதோடு, சுத்தப்படுத்தும் வேலையும் மிச்சம்!’ என்னும் தாய் தன் சௌகரியத்திற்காகப் பார்க்கிறாள். குழந்தையோ, தன்னைச் சுற்றித்தான் உலகமே இயங்குகிறது என்று தவறாகப் புரிந்துகொள்வான்.

தன் விருப்பப்படிதான் எல்லாமே நடக்கவேண்டும் என்ற பிடிவாதம் எழுகிறது. அவன் எதிர்பார்த்தபடி ஏதாவது நடக்காவிட்டால், வீட்டில் அதிகாரம் தூள்பறக்கும். பதின்ம வயதில் இப்போக்கு அதிகரிக்கையில், `வயதுக்கோளாறு!’ என்று அலட்சியப்படுத்திவிடுகிறோம்.

எல்லா பதின்ம வயதினருமே இப்படி நடப்பதில்லையே என்று பார்த்தால், அவர்களுக்கு அந்தந்த வயதுக்கேற்ற வேலையும், சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது புலனாகும்.

நான்தான் முக்கியம்

ஒரு கல்யாணத்தை முன்னிட்டு, இருபது பேருக்கு மேற்பட்ட நெருங்கிய உறவினர்கள் கூடியிருந்தார்கள் அந்த வீட்டில். பதினான்கு வயதான ஆனந்த் வீட்டுக்கு ஒரே மகன். தன் விருப்பப்படி எதையும் செய்யலாம் என்ற எண்ணம் அவனுக்கு. பிறர் வீட்டில் அப்படி நடக்கக்கூடாது என்று அவனுக்குப் பெற்றோர் சொல்லிக்கொடுக்கவில்லை. அதனால், நாள் முழுவதும் தொலைகாட்சியை அலற விட்டான். பிறர் எவ்வளவு சொல்லியும் ஒலியைக் குறைக்கவில்லை. பொறுக்க முடியாமல் போக, எண்பது வயதான தாத்தா எழுந்துபோய், தொலைகாட்சியை நிறுத்தினார்.

அவ்வளவுதான். ஆத்திரம் பீறிட்டது ஆனந்துக்கு. “நீ டி.வி. பாக்கறச்சே, நான் நிறுத்தறேன் பாரு!” என்று உறுமினான்.

நான் திகைப்புடன் அவனுடைய தாயை நோக்கினேன். `பெரியவர்களிடம் மரியாதையாகப் பேசு!’ என்று சொல்லிக்கொடுக்க மாட்டாளோ, ஒரு தாய்?

அவளோ, “அவன் நீதிமான் (righteous) என்றாள், பெருமையாக. அதாவது, அவனுக்கு ஒரு நியாயம், அளவுகடந்த ஓசையைச் சகிக்க முடியாத தாத்தாவிற்கு ஒரு நியாயம் என்பதை எதிர்ப்பானாம்!

லல்லி ஒரே குழந்தை இல்லை. ஆனாலும், உடற்குறையுடன் பிறந்தவள் என்பதால், பாட்டி வீட்டில் வளர்ந்தவளுக்கு விசேட கவனிப்பு அளிக்கப்பட்டிருந்தது.

வேறு இடத்தில் இருந்த தாய்வீட்டுக்கு வந்தபோது, `எல்லாரும் என் தேவைகளைத்தான் கவனிக்க வேண்டும்,’ என்பதுபோல் நடந்துகொண்டாள் லல்லி. அவள் (மிக உரக்க) பேசுவதைத்தான் எல்லாரும் கவனிக்க வேண்டும். பிறருக்குப் பேச வாய்ப்பு கிடையாது. தன் விருப்பப்படி எல்லாம் நடக்காவிட்டால், ஆத்திரத்துடன் கத்துவாள். உடன்பிறந்தவளுடன் எதையும் பங்கு போட்டுக்கொள்ளவும் சம்மதிக்கவில்லை. விளைவு: லல்லிக்கும் பெற்ற தாய்க்கும் அவள் அதிகாரப் போக்கைக் குறித்து ஓயாத சண்டை.

பகிரப் பழக்குவது

பிறருடன் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தை இரண்டு வயதிலேயே ஏற்படுத்த முடியும். ஒரு தட்டில் சில பிஸ்கோத்துகளைப் போட்டு, `எல்லாருக்கும் குடுத்துட்டு, நீயும் எடுத்துக்கோ,’ என்று அதை ஒரு சிறுவன் கையில் கொடுத்துப் பாருங்கள். தான் ஏதோ பெரிய வேலை செய்யும் பெருமிதத்துடன் அப்படியே செய்வான். யாராவது எடுத்துக்கொள்ள மறுத்தால், தன்னை அலட்சியப்படுத்துகிறார்கள் என்று அழுகை வரும்.

பிறவி நடிகன்

என் மாணவனான அப்துல் குடும்பத்தில் கடைசிக்குழந்தை. அம்மாக்கோண்டு என்ற ரகம். பள்ளிக்கூட நாடகங்களில் திறம்பட நடிப்பான். `அதனால் பெண்களுக்கு என்னைப் பிடிக்கிறது,’ என்று என்னிடம் வெட்கத்துடன் தெரிவித்திருக்கிறான்.

பிரச்னை என்னவென்றால், தாயைப்போலவும், உடன் பயிலும் பதின்ம வயதுப்பெண்களையும்போல் எல்லாருமே தன்னைக் கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவனிடம் இருந்ததுதான். யாராவது ஆசிரியர் திட்டிவிட்டால், `மூச்சு விட முடியவில்லை!’ என்று ஒரேயடியாகத் திணறுவதுபோல் நடிப்பான். ஒரு முறை நானே அவனை அவன் வீட்டில் உடனடியாகக் கொண்டுவிட நேர்ந்தது.

அவனுடைய அண்ணன் உத்தியோகம் பார்ப்பவர். முகத்தில் வெறுப்புடன், `எல்லாம் அம்மா கொடுக்கும் இடம்!’ என்று முணுமுணுத்தார். பதறியவளாக, அருமைப்பிள்ளையின் முதுகைத் தடவிக்கொடுத்தாள் தாய்.

இம்மாதிரி பல முறை அவன் நடந்திருக்கிறான் என்று பிறகு தெரியவந்தது. பிறருக்குத் தன்மேல் இரக்கம் சுரந்தால், அதை அன்பு என்று நினைப்பவர்கள் இந்தப் பையன் அப்துலைப் போன்றவர்கள்.

ஒரு குடும்பத்திலோ, பள்ளியிலோ மிக புத்திசாலி என்று கருதி, ஒரு குழந்தைக்கு மட்டும் விசேட சலுகைகள் கொடுத்தால் இப்படித்தான் அதிகாரம் செய்வான். இத்தகையவர்களுக்கு அவர்களுடைய சுகம், சௌகரியம் – இதெல்லாம்தான் முக்கியம். பிறரைப்பற்றிய அக்கறை அறவே கிடையாது.

அளவு கடந்த சலுகைகளை அளிக்கும் பெற்றோர், அடிப்படை சலுகைகளை மூர்க்கத்தனமாக மறுக்கும் பெற்றோர் – இருவகையினருமே குழந்தைகளுக்குத் தீங்கு இழைக்கிறார்கள், தம்மையும் அறியாது.

கதை

மன் லீ என்ற சீனப்பெண்ணின் பெற்றோர் தனியார் பள்ளிக்கூடத்தில் அவளைச் சேர்த்திருந்தார்கள். அவர்களுக்கு அதிகப் படிப்பில்லை. ஆனால் செல்வம் குவிந்திருந்தது. தங்களைப்போல் இல்லாது, மகளாவது கல்வியில் உயர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானதுதான். அதற்காக, எந்நேரமும் `படி, படி!’ என்றால், என்ன ஆகும்?

தாம் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறாத மகளை மூன்று தினங்கள் ஓர் அறையில் பூட்டிவைத்த தாய், மகள் தலையில் இரும்புத்தடியால் அடிக்க முயன்ற தாய் ஆகியோரை நான் அறிவேன். இப்பெண்கள் ஒரு முறை நல்லவிதமாகத் தேர்ச்சி பெற்றுவிட்டால், தாய்க்கு கர்வம் எழும். ஆனால், அடுத்த முறை எல்லாவற்றிலும் மிகக் குறைந்த மதிப்பெண்கள்தாம் வாங்குவாள் மகள். அவ்வளவு மன இறுக்கம்.

மன் லீக்குத் தன்னைப்போல் அடியோ, திட்டோ வாங்காத பிற மாணவிகளைக் கண்டால் பொறுக்காது. அவர்களுக்கு நேரிலும். இயலாவிட்டால் தொலைபேசிமூலமும் தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பாள்.

பாதிக்கப்பட்ட ஒரு பெண் தலைமை ஆசிரியையிடம் புகார் செய்ய, `உனக்கு எதனால் பாதிப்பு?’ என்று அன்புடன் விசாரித்தாள் அவள். அப்பெண் அழுதபடி, தன் அவலக்கதையைக் கூறினாள். (மன இறுக்கத்தால் பாதிக்கப்படும் சிறுவர்களிடம் பேசினாலே போதும். தாமும் ஒரு பொருட்டு என்று பிறர் கருதவேண்டும் என்ற ஏக்கம்தான் அவர்களை ஆட்டுவிக்கிறது).

பொறுப்பாகச் செயல்படுவது

சில இல்லங்களில், `பெரியவன் ஆனதும், தானே தெரிந்துவிட்டுப்போகிறது!’ என்று எதையும் பழக்கமாட்டார்கள். எந்தப் பழக்கமும் தானே வருவதில்லை.

தொலைகாட்சியில் நல்ல படம், அல்லது வீடியோ விளையாட்டுகளில் ஆழ்ந்துபோனதில் வீட்டுப்பாடம் செய்ய மறந்துவிட்டது என்று காலங்கடந்து உணர்ந்து, ஆசிரியர் திட்டுவாரே என்று பயப்படும் சிறுவனுக்காக வக்காலத்து வாங்குவது ஏன்? அவன் தண்டனை பெறட்டும். அப்போதுதான் இன்னொரு முறை மறக்கமாட்டான்.

`கணினி, நண்பர்களுடன் உரையாடுவது – எதுவாக இருந்தாலும், வீட்டுப்பாடம் செய்த பிறகுதான்,’ என்று ஒரு வரையறை வகுத்திருக்கலாமே!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *