க. பாலசுப்பிரமணியன்

செயல்திறன்கள் இருந்தால் மட்டும் போதுமா ?

“அறிவும் திறனும் உள்ள பலர் வாழ்க்கையில் முன்னேறாமல் எங்கேயோ முடங்கிக்கிடக்கிறார்களே” என்று சிலர் அங்கலாய்ப்பது காதுகளில் விழத்தான் செய்கிறது. அது உண்மையே !  அறிவும் திறனும் இருந்தால் மட்டும் போதாது. வளர்ச்சியும் முன்னேற்றமும் நமது வீடுகளைத் தேடி வந்து வாசல் கதவுகளைத் தட்டுவதில்லை. நாம்தான் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

“முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் ” என்பதுதானே முதுமொழி.

“முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.”

என்று திருவள்ளுவர் சொன்னதை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டாமா?

வாழ்க்கையில் பல பேர் வெற்றிகளை நோக்கிச் செல்ல முடியாமைக்குக் காரணம் அவர்கள் முயற்சிக்கான வழியில் நடைப்பயணத்தைத் துவக்காததுதான்.

உண்மையின் பொருளை உணர்ந்து கொள்வதற்கான முயற்சிகளை இளைஞர் நரேந்திரன் எடுத்தார் . அவருக்கு வெற்றி கிட்டியது. மெய்யறிவின் தத்துவத்தை ஆழமாக உணர்ந்த அவர் விவேகாநந்தராக மாறினார். மனித நேயத்தை வளர்த்து சமூக சேவைக்குத் தன்னை அர்பணித்துக் கொண்டார்

எத்தனையோ இன்னல்களுக்கிடையே ஏழ்மையால் வாடும்பொழுதும் தன்னுடைய முயற்சிகளை விடாமல் மேரி கியூரி (Marie Curie) தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அவருக்கு பெயரும் புகழும் மட்டுமின்றி நோபல் பரிசும் கிடைத்தது.

மிக ஏழ்மையான நிலையிலும் உண்பதற்குக் பொருளாதாரம் இல்லாத நிலையிலும் கணக்கில் தனது ஆர்வத்தையும் முயற்சிகளையும் விடாமல் தொடர்ந்த இராமானுஜம் கணித மேதையாக உலங்கெங்கும் பாராட்டுப் பெற்றார்.

பல தடங்கல்களும் இன்னல்களுக்குமிடையே தனது மனிதநேய மனப்பான்மையை விட்டுக்கொடுக்காமல் முயற்சி செய்த இளம் பெண்மணி அன்னை தெரேசாவாக உலகெங்கும் போற்றுதலுக்குரியவராக மாறினார்.

ஒரு சைக்கிளில் துணிகளை ஏற்றி வீடு வீடாக விற்று வந்த திருபாய்  அம்பானி (Dhirubai Ambani) தன்னுடைய விடா முயற்சியால் உலகம் வியக்கும் தொழிலதிபராக மாறினார்.

இப்படி வாழ்க்கையில் முன்னேறிய பலருடைய வாழ்க்கை வரலாறுகள் நமக்கு வாழ்க்கையின் தத்துவத்திடை முன்மொழிகின்றன முயற்சி செய்து தோற்றவர்கள் மிகக் குறைவு. அவ்வாறு அவர்கள் தோல்வியைத் தழுவினால் அதற்கு அவர்களுடைய செயல்முறைகளில் இருக்கும் குறைபாடுகளே காரணமாக இருக்க வாய்ப்புண்டு.  “முயற்சி எப்பபோழுதும் நீங்கள் அதை விட்டுவிட மறுக்கும்பொழுதுதான் தன் பலனைக் கொடுக்கும் ” என்பது ஒரு மேலைநாட்டுப் பழமொழி. (Effort will release its reward only after you refuse to quit).

முயற்சிகள் என்றுமே ஆரம்பத்திலேயே தங்கள் பலன்களை அள்ளிக் கொடுப்பதில்லை. முயற்சிகளை எடுக்கும் பொழுது சோதனைகள், தடங்கல்கள், போட்டிகள், தோல்விகள் ஆகியவை வரத்தான் செய்யும். ஆனால் அவைகளைத் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ளுதல் வேண்டும்.  ஆகவே முயற்சிகளின் பலன்களுக்குத் தேவை

  1. தன்னம்பிக்கை
  2. துணிவு

தன்னம்பிக்கை தான் ஒரு மனிதனை வெற்றிப்படிகளுக்கு அறிமுகம் செய்கின்றது. அது நம்முள் உறைந்துள்ள ஆக்க சக்தியை ஒருவழிப்படுத்தி தலை நிமிர்ந்து நிற்கச் செய்கின்றது. இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகராகக் கருதப்படும் அமிதாப் பச்சன் முதல் முறையாக குரல்வளத்திற்கான சோதனைக்குச் சென்ற பொழுது அவருக்குச் சரியான குரல்வளம் இல்லை என்று நிராகரிக்கப்பட்டார். அவருடைய தன்னம்பிக்கையும் துணிவுமே அவரைத் திரை உலகில் முன்னணியில் நிறுத்தியது.

“தவறுகளே செய்யாத ஒரு மனிதன் வாழ்க்கையில் எதையுமே முயன்றதாக ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகின்றார். (Anyone who has never made a mistake has never tried anything new) “தன்னம்பிக்கையே ஒரு அழகான மனிதனுக்கு முகவரி.” என்று பல மனநல நிபுணர்கள் எடுத்துக்கூறியிருக்கின்றார்கள்.

ஒரு ஏழை ஆட்டோ ஓட்டுபவரின் மகளும் ஒரு குடிசையில் போதிய மின் வசதியின்றி இருந்தும் படித்தவரும், கூலியாக இரயில் நிலையத்தில் உழைத்து கிடைத்த நேரத்தில் படித்தவரும் IAS தேர்வுகளில் வெற்றி பெறுவது அவர்களின் தன்னம்பிக்கைக்கும் உழைப்பிற்கும் முயற்சிக்கும் முன்னுதாரணமாக அமைகின்றது.

தன்னம்பிக்கை இல்லாத முயற்சி தடுமாற்றங்களை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை முயற்சிகளை முடுக்கிவிட்டு அதன் ஓட்டத்திற்கு வலிமையையும் சக்தியையும் கொடுக்கின்றது.

சிலருக்கு தன்னம்பிக்கை இருந்தாலும் துணிவு இருப்பதில்லை. வாழ்க்கையில் வெற்றிபெற்றோர் சரித்திரங்களை அலசும்பொழுது அவர்களுடைய துணிவு அவர்களின் வெற்றிக்கு எவ்வாறு கைகொடுத்திருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

“துணிவு என்பது பயமின்மை அல்ல. அது பயத்தை சந்தித்து அதன்மேல் கொள்ளும் ஆளுமையே ” என்று மிகச் சிறந்த மேதை மார்க் ட்வைன் (Mark Twain) என்பவர் கூறுகின்றார்.  (Courage is resistance to fear, mastery over fear and not absence of fear). இதே கருத்தை வலியுறுத்தி நெல்ஸன் மண்டேலா கூறுகின்றார் “நான் துணிவு என்பது பயமின்மை அல்ல, ஆனால் பயத்தின் மேல் கொள்ளும் வெற்றியே என்பதை அறிந்து கொண்டேன்” (I learnt that courage is not absence of fear, but the triumph over it)

“துணிந்தவனுக்குத் தூக்குமேடை மெத்தை.” என்ற வசனம் உங்களுக்கு நினைவுக்கு வருகின்றதா?

துணிவோடும் தன்னம்பிக்கையோடும் நமது முயற்சிகளை மேற்கொள்ளலாமே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *