Author: admin

  • அரும்புகள்

    சித்ரப்ரியங்கா ராஜா

    chit

     

    இறை அவன் கிருபையால்
    சிறு மழலையாய் ஜனித்து
    குலம் தான் தழைக்கவே
    இல்லத்தின் தெய்வமாகி
    தாய் தந்தை தாம் மகிழவே
    பிள்ளைக்கலி தான் தீர்த்து
    உற்றாரும் உளம் குளிரவே
    நிலா என நித்தம் உலா வந்து
    சின்னஞ் சிறு அரும்புகளாய்
    குறும்புகள் பலவும் செய்து
    சிரித்து உடன் விளையாடி
    கனிமழலைக் கவிகள் பேசி
    அகவை பல கடந்து வந்து
    ஆற்றலால் சிறந்து நின்று
    மெச்சி ஊரார் தானும் புகழ
    பெற்றோர் தம் மேனி சிலிர்க்க
    ஏற்படும் ஆனந்தம் என்னே
    நாமும் மழலைகள் அவர் முன்னே!

    – சித்ரப்ரியங்கா ராஜா,
    திருவண்ணாமலை.
    14.11.16

    Share
  • நலமுடன் வாழ்க

     

    நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்

     

     

    குளிர் பானம் குடிப்பதைத் தவிர்த்திடு
    கூழோ கஞ்சியோ குடித்துவிடு
    சிற்றின்பத்தைத் தவிர்த்திடு
    பேரின்பத்தை அடைந்துவிடு
    மாபெரும் சபையில் அரிமா போல் நடந்துவிடு
    ஆன்மீகப் பாதையில் நடந்து விடுதலை பெற்றுவிடு
    அளவாக உணவருந்திவிடு
    வளமாக வாழ்ந்திடு
    அதிக நேரம் தூங்குவதை விட்டுவிடு
    அதிக நேரம் உழைத்து வெற்றி என்ற இலக்கை அடைந்துவிடு

     

    Share
  • விஷ்ணுசித்தரும் வாத்சல்ய பாவமும்

    -முனைவர் நா.கவிதா

    கண்ணன் கோகுலத்தில் வளர்ந்து வந்த வரலாறு மட்டுமே தனது உயிர் மூச்சாகக் கொண்டு பாசுரங்கள் இயற்றியவர் பெரியாழ்வார். ”மன்னர்கள் யாவரும் உய்யவரு கோமான் தன் கண்ணன் என” கோகுலத்தில் அனைவரும் கொண்டாடும்பொழுது, யசோதையாகத் தன்னைக் கருதி எல்லையின்றிப் பெருகும் அன்பால் பெருமாள்மீது இன்தமிழால் பாசுரங்கள் பாடியுள்ளார்.

    பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர்  பெருமாளிடம் தாய்ப்பாவனையில் பாசுரங்கள் பாடியவர்கள் ஆவர். இவர்களில் குலசேகராழ்வார் மட்டும் தந்தை நிலையிலும் பாசுரங்கள் பாடியுள்ளார். இவற்றில் பெரியாழ்வாரின் தாய்ப்பாவனைப் பாசுரங்களின் சிறப்புகளையும், தாய் சேய் பாவ உணர்வாகிய வாத்சல்ய பாவம் எங்ஙனம் அமைந்துள்ளது எனும் கருத்தினை   எடுத்துரைப்பதாகவும்  இவ் ஆய்வுக் கட்டுரை அமைந்துள்ளது.

     வாத்சல்ய பாவம் (தாய் – சேய் பாவம்):

     திருமாலுக்குரிய பண்புகளில் ஒன்றாக krishna“வாத்சலயம்”என்பது குறிக்கப்படுகின்றது. “வத்ஸ்லா” என்பது கன்றினைக் குறிக்கும் வடமொழிச் சொல்லாகும். கன்றின் மேல் பசு கொள்ளும் அன்பினைப்போல் இறைவனும் உயிர்கள்மேல் அன்பு உடையவன் என்னும் கருத்தினையே இப்பண்பு உணர்த்துகிறது. அதுவே, தாய் – சேய் அன்பு நிலையே வாத்சல்ய பாவமாக எடுத்துரைக்கப்படுகின்றது. இத்தகைய பாவ உணர்வில் இறைவனின் உயர்ந்த நிலையையும், தனது தாழ்ந்த நிலையையும் முற்றிலும் அடியவர்கள் மறந்து விடுகின்றார்கள்.   இறைவனைத்  தம்முடைய குழந்தையாகப் பாவித்துத் தம்மைத் தாயாகவும், தந்தையாகவும் எண்ணி உண்மையான அன்பினை வெளிப்படுத்துகின்றனர். இப்பூலோகத்தைக் காப்பவனையே தனது அரவணைப்பால் காக்கப்பட வேண்டிய குழந்தையாக எண்ணி பாடுகிறார் விஷ்ணுசித்தர்.

    தாய் – சேய் பாவ பாசுரங்கள்

    வ.எண் பதிகங்களின் தொடக்கம் பாசுர எண் உள்ளடக்கம்
     

    1.

    வண்ண மாடங்கள் 13-22 கண்ணன் பிறந்தான்
     

    2.

    சீதக் கடலுள் 23-43 திருமேனி எழில்
     

    3.

    மாணிக்கங்கட்டி 44-53 கண்ணன் தாலாட்டு
     

    4.

    தண்முகத் துச்சுட்டி 54-63 அம்புலிப்புருவம்
     

    5.

    உய்ய வுலகுபடைத்து 64-74 செங்கீரைப்பருவம்
     

    6.

    மாணிக்கக் கிண்கிணி 75-85 சப்பாணிப்பருவம்
     

    7.

    தொடர்சங் கிலிகை 86-96 தளர்நடைப்பருவம்
     

    8.

    பொன்னியற் கிண்கிணி 97-107 அச்சோப் பருவம்
     

    9.

    வட்டு நடுவே 108-117 புறம் புல்கல்
     

    10.

    மெச்சூது சங்க 118-127 அப்பூச்சி காட்டுதல்
     

    11.

    அரவணையாய் ஆயரேறே 128-138 தாய்ப்பாலுண்ண அழைத்தல்
     

    12.

    போய்ப்பா டுடைய 139-151 காதுகுத்தல்
     

    13.

    வெண்ணெய் 152-161 நீராட அழைத்தல்
     

    14.

    பின்னை மணாளனை 162-171 குழல்வாரக் காக்கையை வா எனல்
     

    15.

    வேலிக்கேல் வெட்டி 172-181 காக்கையைய் கோல்  கொண்டு  வரக்  கேட்டல்
     

    16.

    ஆனிரை மேய்க்கநீ 182-191 பூச்சூட அழைத்தல்
     

    17.

    இந்திர னோடு 192-201 காப்பிடல் (திருஷ்டி கழித்தல்)
     

    18.

    வெண்ணெய் விழுங்கி 202-212 பிள்ளை விளையாட்டு
     

    19.

    தன்னே ராயிரம் 223-233 தாய்பாலூட்ட  அஞ்சுதல்

    பெரியாழ்வாரது பாசுரங்களில் ஏறக்குறைய பாதிக்கும் மேலாக தாய் – சேய் பாவமே காணப்படுகின்றது.  “தாயார் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்தனை” என்று தனது குழந்தை வளர்கின்ற நிலையைக் கண்டு அவனது லீலைகளைப்  பாடியுள்ளார். சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்டதாக, இசையோடு பாடி மகிழும் வகையில் இப்பாடல்கள் யாவும் அமைந்துள்ளன.

    தேவகி யசோதையாக யசோதை பெரியாழ்வாராக

         பெரியாழ்வார் பாசுரங்களில் தாய்மை உணர்வு மிகுதியும் மிளிர்கின்றது என்பதைத் தொடக்கத்தில் இருந்தே கண்டுவருகிறோம். அதிலும் தொடக்கப் பாசுரங்களில் எல்லாம் பெரியாழ்வார் கண்ணனைத் “தேவகியின் குழந்தையாகவே” மறக்காமல் தேவகியை நினைவூட்டுகிறார். பின்னர், “யசோதையின் குழந்தை” என்பதையும் முன்வைத்ததோடு, ஒரு கட்டத்தில் தேவகி, யசோதை என்பதெல்லாம் மறைந்து – என் பிள்ளை, என்மகன் கோவிந்தன், என் சிறுக்குட்டன் என்று தன் மகனாகவே எண்ணிப்பாடி மகிழ்கின்றார்.

    ”சீதக் கடலுள் ளமுதன்ன தேவகி
    கோதைக் குழலா ளசோதைக்குப் போத்தந்த
    பேதைக் குழவி!” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 23) என்பதில் கண்ணன் தேவகி குழவியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளான்.
    பின்னர்,
    மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
    செய்த்தலை நீல நிறத்துச் சிறுபிள்ளை!” (நாலாயிர திவ்யப்  பிரபந்தம்-34) என்று யசோதை வளர்க்கும் நீலநிறமான சிறுபிள்ளை என்று அடைமொழியிட்டுப் பாடுகிறார். அதனை அடுத்து, யசோதை மறைந்து பெரியாழ்வார் வெளிப்படையாக என்மகன் என்று கூறுகின்ற முறைமையை,

    ”என் மகன் கோவிந்தன்கூத்தினை இள மாமதீ
    நின்முகம் கண்ணுள ஆகில்,நீயிங்கே நோக்கிப் போ” (நாலாயிர திவ்யப்  பிரபந்தம்-54) என்ற பாசுரத்தில்  காணலாம். குழந்தைக்கு அம்புலியைக்காட்டி அமுது கொடுக்கும் இப்பதிகத்தில் பெரியாழ்வார் தனது குழந்தையைக் கோவிந்தா, பெருமான் என்று பதிவு செய்துள்ளார்.

    ”என் சிறுக்குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான்
    தன் சிறுக் கைகளால் காட்டிக் காட்டி யழைக்கின்றான்” (நாலாயிர திவ்யப்  பிரபந்தம்-55)

    “என் குழந்தை மிகச் சிறியவன், இனிய அமுது போன்று இனிக்கக்கூடியவன் என்னைக் கண்டு வரும்படியாகக் கைகளால் சைகை காட்டி அழைக்கிறான்” என்பதில் பெருமிதத்துடன் எனது குட்டன், என்மகன் என்று கூறுவதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ஆக, மேற்கூறிய பாசுரங்களால் பெருமாளை வளா்ப்பதில் தனது அன்பினைப் பதிவுசெய்தவர்களாகத் தேவகி யசோதையாக யசோதை பெரியாழ்வாராக மிளர்வதைக் காண இயலுகின்றது.

    திருமேனி அழகில் மயங்கும் தாய்உள்ளம்

         தாய் தனது குழந்தையின் எல்லாச் செயல்களிலும்  தனது மனத்தினைப் பறிகொடுக்கிறாள். தனது குழந்தை தூங்கினாலும், அழுதாலும் அழகுடையதாகவே தாயின் பார்வையில் காண்ப்படுகிறது. அவ்வகையில் உலகையே படைத்த இறைவன் குழந்தையாக அவதரித்தவுடன் அழகில் மயங்கிய தாய்உள்ளம் கோகுலத்தில் உள்ள கோபியர்கள் அனைவரையும் அழைத்துக் கண்ணனின் அழகைக் காணவரும்படி அழைக்கிறது. பாதாதி கேச வருணனையாகப் பெருமாளின் பாதத்தில் தொடங்கிக் கால்விரல், முழந்தாள், தொடை, முத்தம், இடை, உந்தி, வயிறு, மார்பு, தோள்கள், கைகள், கழுத்து, வாய், மூக்கு, கண்கள், புருவம், மகரக்குழை, நெற்றி, குழல் என்று அனைத்து உறுப்புகளின் அழகையும் அணுஅணுவாக இரசிக்கிறார்.

         இங்கு யசோதையாகவே பெரியாழ்வார் மாறிவிட்டார் என்தற்கான மற்றொரு சான்று புலப்படுகிறது. தாயின் பார்வையில் குழந்தையின் உறுப்புகளில் வேறுபாடு இல்லை. அதனால்தான் ஆண் குழந்தையின் பிறப்பு உறுப்பை முத்தம் என்ற சொல்லினால் எடுத்துரைத்து வருணனை  செய்கின்றார்.

    “பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
       பாதக் கமலங்கள் காணீரே, பவளவாயீர்! வந்து! காணீரே!”      (நாலாயிர திவ்யப் பிரபந்தம்-23)

    என்று பாதாதிகேச வருணனையில் பாதத்தினைக் காணக் கோபியர்களை அழைக்கின்றார். அப்பாதாதிகேச வருணனையின் உள்ளடக்கத்தைப் பின்வரும் பகுதியில்  காணலாம்.

    • பாதம் – தாமரை மலர் போன்ற பாதங்களை வாயில் வைத்து சுவைக்கும் அழகு.
    • பத்து விரல்கள் – முத்தும், மணியும், வயிரமும், நன்பொன்னும் கலந்தாற் போன்ற பத்து விரல்களின்அழகு.
    • கணுக்கால் – வெள்ளித்தண்டை பெருமானின் கணுக்காலில் இருப்பதால் தண்டைக்கு என்னே ஒரு பெருமை.
    • முழந்தாள் – கயிற்றால் அடிக்க வரும் யசோதையிடம் இருந்து தப்பிக்க கண்ணன் தவழும் பொழுது உள்ள முழந்தாள் அழகே அழகு.
    • தொடை – பூதனை, இரணியன் என்ற இருவரையும் கொன்ற கண்ணனின் தொடை அழகினைக் கோபியர்களே காண்பீர்களாக.
    • முத்தம் – அஸ்த நட்சத்திற்கு பத்து நாட்கள் முன்பு தேவகியின் வயிற்றில் பிறந்த கண்ணனின் முத்தத்தின் அழகை ஆனந்திக்கிறாள்.
    • இடை – இடையில்  உள்ள அரைஞாண், பவழவடம், முத்துவடம் இவற்றின் பெருமையைக் கூறல்.
    • உந்தி – குட்டியானை போன்று யாதவச் சிறுவர்களை வெற்றிபெறும் கண்ணனின் உந்தி அழகை அவன் துயிலும் பொழுது மட்டுமே காண இயலும்.
    • உதரம் – கண்ணனது விஷமம் தாங்காமல் கட்டப்பட்ட தாம்புக் கயிற்றால் உண்டாகிய தழும்பினைக் காணுங்கள்.
    • திருமார்பு – கௌஸ்துப மணி துலங்கும் கண்ணனது மார்பழகு.
    • தோள்கள் – சகடாசுரனை நாலைந்து மாதக் குழந்தையாக இருந்த கண்ணன் சிறிய பாதத்தால் உதைத்தழித்தான். அவனது தோள் அழகினைக் காண்பித்து மகிழ்தல்.
    • கைகள் – சங்கு, சக்கர ரேகைகள் பொருந்திய களவுசெய்து உண்ட நெய்ப்பசையுடைய கைகளின் அழகைத் தோழியரிடம் காட்டல்.
    • கண்டம் – நந்தகுமாரன் வயிற்றில் பிரளய காலத்தில் உலகங்களே அடைக்கலமாயின. அத்தகைய கழுத்து அழகினைக் கண்டு மெய்சிலிர்த்தல்.
    • வாய் – கொவ்வைக் கனியை ஒத்த வாயை உடைய சிங்கக் குட்டி கண்ணனே.
    • எள்ளுப்பூ நாசி – கண்ணனைக் குளிப்பாட்ட மஞ்சளால் நாவினை தேய்க்கும் பொழுது – கண்ணழகால், உதட்டில் தோன்றும் குறும்புச் சிரிப்பழகால், எள்ளுப்பூ நாசி அழகால் யசோதையையும் கோகுலத்தில் உள்ள அனைவரையும் பூரிப்படையச் செய்வான்.
    • கண்கள் – அசுரர்களின் தீமையை அழித்து வளர்கின்ற கண்ணனின் கண் அழகே அவனுக்கு அப்பெயரை இட்டுத்தந்தது. அக்கண்ணழகைக் காண இரு கண்கள் போதுமா?
    • புருவம் – கருப்பு வைரம் போன்ற புருவ அழகைக் காரிகையீரே காண்பீர்களாக.
    • காது – மகரகுண்டலங்களைக் காதில் அணிந்து அவற்றுக்குக் கண்ணன் பெருமை சேர்க்கிறான்.
    • நெற்றி – சிறுமிகளது விளையாட்டுப் பொருட்களான சிறுமுறம், குட்டிப்பானை, வளர்ப்பு மைனா ஆகியவற்றைப் பிடுங்கிக் கொண்டு நெற்றியில் முத்து முத்தாக வியர்வை அரும்ப ஓடும் கண்ணன் அழகைக் காணுங்கள்!
    • கூந்தல் – கன்றுகளை மடக்கக் கண்ணன் பொன்கொம்பினைப் பிடித்துக் கொண்டு ஓடும்பொழுது காற்றில் கண்ணனின் சுருண்ட முடிகள் அசைகின்ற அழகைக் காண  விரைந்து வருவீர்களாக.

    இவ்வாறு  கண்ணனின் அழகைக் கூறும் 21 பாசுரங்களை எவா் பக்திமையுடன் இயம்புகின்றனரோ அவர்கள் பெருமானுடன் பரமபதத்தில் பிரியாது இருப்பர் என்று கூறி இப்பாசுரப் பகுதியினை நிறைவு செய்கிறார்.

    ”சுருப்பார்குழலி யசோதை முன் சொன்ன
    திருப்பாத கேசத்தைத் தென்புதுவைப் பட்டன்
    விருப்பால் உரைத்த இருபதோ டொன்றும்
    உரைப்பார் போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே!”  (நாலாயிர திவ்யப் பிரபந்தம்-43)

    இப்பதிகப் பகுதியில் பெரியாழ்வார் தன்னை முழுமையாக யசோதையாக மாற்றிக் கொண்டமைக்குப் பல சான்றுகள் காணக் கிடக்கின்றன.

    வாய்மொழி இலக்கியப் பதிவாகத் தாலாட்டு :

    குழந்தையைத் தூங்கச் செய்வதற்காக உறவினர்கள் அளிக்கும் பரிசுப் பொருட்களை வரிசைப்படுத்திக்கூறித் தாலாட்டுப் பாடும் இயல்பான தாயாக பெரியாழ்வார் “தாலாட்டு”  என்ற பாசுரப் பகுதியில் மிளிர்கிறார். வாய்மொழி இலக்கியமாக மிளிரும் நாட்டுப்புற இலக்கியத்தில் குழந்தையைத் தூங்க வைக்கும் தாலாட்டுப் பாடல்களில் உறவினர்கள் பரிசுப் பொருட்களுடன் வந்து பார்க்கும் நிலை நவிலப்பட்டுள்ளது.

    “சின்னண்ணன் வந்தானோ கண்னே! – உனக்கு
    சின்னச் சட்டை கொடுத்தானோ? – உனக்கு
    பட்டு ஜவுளிகளும் கண்ணே! – உனக்கு
    பலவர்ணச் சட்டைகளும்
    பட்டுப் புடவைகளும் கண்ணே! – உனக்கு
    கட்டிக்கிடக் கொடுத்தானோ?”

    என்ற வாய்மொழி இலக்கியக் கருத்தினைப் பதிவுசெய்வது போன்று உலகின் முழுமுதல் கடவுளான பெருமாளுக்குப் பிரம்மா, சிவன் முதலிய கடவுளர்களும் ஏனைய தேவர்களும் பரிசுப் பொருட்களுடன் வந்த தத்தமது தகுதிக்கேற்ற இடத்தில்  நின்றனர் என்று பெரியாழ்வார் பாடுகிறார்.

    “மாணிக்கங் கட்டி வயிர மிடைகட்டி
    ஆணிப்பொன் னாற்செய்த வண்ணச் சிறுதொட்டில்
    பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
    மாணிக் குறளனே தாலேலோ” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 44)

    திருமாலின்  உந்தியில் இருந்து பிறந்தமையால் பிரம்மனுக்குத் திருமால் தந்தை உறவாகும். அதே திருமால் கண்ணனாக அவதரித்த பொழுது பிரமன் ஆணிப்பொன்னால் சிறுதொட்டிலைத் தருகிறான். இந்திரனோ அழகான சதங்கையைத் தருகிறான். பரிசுப்பொருளைத் தந்துவிட்டு வெகுதூரத்திலும் இல்லாமல் அருகிலும் இல்லாமல் நடுவில் நின்றான் என்று கூறித் தாலாட்டுப் பாடிக் கண்ணனைத் தூங்கவைக்க முயல்கிறார்.

         சிவந்த திருக்கண்களை உடைய கருமேகம் போன்ற கண்ணனே, உனக்கு அனைத்து தேவர்களும் சங்கில் உயர்ந்ததாகத் திகழும் வலம்புரியையும், உனது திருவடிக்குச் சதங்கைகளையும், அழகிய முன்சரிவளையும், தங்க அரைஞாண் கயிறும், திருமார்பில் அணிய நாணும் அனுப்பியுள்ளனர் என்று பரிசுப்பொருட்களின் பட்டியலைக் குழந்தைக்கண்ணனிடம் கூறிவிட்டுத் தாலாட்டுப் பாடுகின்றார் பெரியாழ்வார். இதனை,

    “சங்கின்  வலம்புரியம் சேவடிக் கிண்கிணியும்
    அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
    அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
    செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!”     (நாலாயிர திவ்யப்  பிரபந்தம் – 47)

    என்ற பாசுரத்தில் அறியலாம். அத்துடன் கண்ணனுக்கு வந்த பரிசுப் பொருட்கள் பற்றிப் பெரியாழ்வார் கூறும் கற்பனை வளத்தைப் பின்வரும் பட்டியல்  பகுதியில் காணலாம்.

    பெரியாழ்வாரின் கற்பனையும் ஆழ்ந்த அன்பும்

    வ.எண் பரிசுப் பொருட்கள் பரிசுவழங்கியவா்
    1. ஆணிப்பொன் தொட்டில் பிரம்மன்
    2. இடைச் சுரிகை ஈசன்
    3. சதங்கை இந்திரன்
    4. தேவர்கள் வலம்புரிச்சங்கு,சதங்கை,அரைஞாண் கயிறு,

    முன்சரிவளை

    5. குபேரன் ஐம்படைத்தாலி,ஆரம்
    6 வருணன் முத்தாரம்,சங்குவளை
    7 திருமகள் துளசிமாலை
    8 பூமாதேவி கச்சை,உடைவாள், தங்கவளையல், நவரத்தினச்சுட்டி, தங்கப்பூ
    9 பார்வதி வாசனைப்பொருட்கள்,

    கண்ணுக்கு மை, சிந்துரம்

    இத்தகையப் பரிசுப் பொருட்கள் பற்றிய விளக்கத்தில் பட்டா்பிரானின் கற்பனையும் பெருமாள்மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பும் புலப்படுகின்றது. எவர் இத்தகைய பத்து பாசுரங்களை பக்தியோடு படிப்பரோ அவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை.

    கருமலைக்குட்டியின் தளர்நடையில் மகிழும் விஷ்ணுசித்தர்:

         பாதங்களை முழுவதும் தரையில் பதிக்காமல் தத்தி நடைபயிலும் குழந்தையின் தளர்நடையில் யசோதை மனம்விரும்பி மூழ்கி காணப்படுகிறாள். ஓரடி எட்டு வைத்து நடைபயிலும் குழந்தை, தான் சாதித்த மனவுணர்வினால் பெரும் புன்னகையை வெளிப்படுத்தும். இதில் மனம் மகிழ்ந்து யசோதை இருப்பதை,

    “முன்நல் ஓர் வெள்ளிப் பெருமலைக்
    குட்டன் “மொடு மொடு” விரைந்தோட
    பின்னைத்  தொடர்ந்ததோர் கருமலைக்
    குட்டன் பெயர்ந்தடியிடுவது போல்
    பன்னியுலகம் பரவிஓ வாப்
    புகழ் பலதேவன் என்னும்
    தன் நம்பியோடப் பின்கூடச்
    செல்வான் தளர்நடை நடவானோ!” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 90)

    என்ற பாசுரத்தில் காணலாம். வெண்மலைக்குட்டி போல பலராமன் முன்னே ஓட, கருமலைக்குட்டி போன்ற கிருஷ்ணன் பின்னே தளர்நடை மிளிர உடன்பிறந்தோனைத் துரத்துகிறான். இத்தகைய நடையழகை  யசோதையுடன் பெரியாழ்வாரும் மானசீகமாகக் கண்டு மனம்மகிழ்கின்ற பகுதியே மேற்கூறிய பகுதியாகும்.

    மேலும், எம்பெருமானது தளர்நடை எவ்வாறு இருக்கவேண்டும் என்று தனது மன விருப்பத்தினை எடுத்துரைக்கிறார். பகைவர்களை வென்று, அவர்களின் தலையின் மேல் தளர்நடை எடுத்து நீ நடக்க வேண்டும். அந்நடை நடவானோ? என்று கேட்பதில்  கண்ணன் அவதாரமூர்த்தி என்பதை உணர்த்திச் செல்கிறார். இதனை,

    “தன்னைப் பெற்றோற்குத் தன்வா யமுதம்தந்
    தென்னைத் தளிர்ப்பிக்கின்றான்
    தன்னெற்று மாற்றலர் தலைகள்
    மீதெ தளர் நடை நடவானோ!”   (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 89)
    என்ற பாசுரத்தால் அறியலாம். கண்ணனை நோக்கி நடவானோ? எனத் தனது வினாவினைக் கேட்பதன் வாயிலாகக் கண்ணன் அவதராமூர்த்தி என்பதையே கூறிச்செல்கிறார். 

    குழந்தைப் பராமரிப்பில் பெரியாழ்வார் உள்ளம்: 

         பெரியாழ்வாரின் பாசுரங்களில் காணலாகும் சொல்லாட்சியில் ஓர் அன்னையின் கவலையும், ஆதங்கமும், உண்மையான அன்பு மிகுதியும் மிளிர்கின்றன. ஓர் ஆண்மகனால் குழந்தைப் பராமரிப்புச் செயல்களாகிய நீராட்டுதல், பூச்சூடுதல், அணிகலன்கள் அணிவித்து அலங்கரித்தல், தூங்கச் செய்தல் போன்ற பணிகளைச் சிறப்பாக, அன்பாகச் செய்ய இயலுமா? என்பதைத் தனது நுட்பமான உணர்ச்சிகளால், நளினமான மன உணர்வுகளால் தன்னை யசோதையாகப் பாவித்து மிகச் சிறப்பாக, யதார்த்தம் புலப்படும் வகையில் பாசுரங்களைப் படைத்துச் செல்கிறார் பெரியாழ்வார்.

    “கறந்தநற் பாலும் தயிரும் கடைந்தஉறிமேல் வைத்த வெண்ணெய்
    பிறந்ததுவே முதலாகப் பெற்றுஅறியேன் எம்பிரானே
    சிறந்த நற்றாய் அலர்தூற்றும் என்பதனால் பிறா்முன்னே
    மறந்தும் உரையாட மாட்டேன்! மஞ்சனம் ஆடநீ வாராய்.” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் -158)

    என்ற பாசுரத்தில் முழுமையாக ஒரு தாயின் மனஉணர்வுகளோடு கண்ணனிடம் உரையாடும் பெரியாழ்வாரைக் காண இயலுகின்றது. கண்ணா! நீ பிறந்தநாள் முதற்கொண்டு கறந்த பாலையும் கட்டித்தயிரையும் உறியில் வைத்த வெண்ணெயையும் ஒருசேர நான் ஒருபொழுதும் பார்க்கவில்லை. நான் உனக்குச் சிறந்ததாயாக இருந்து நீ செய்த தீம்புகளை மற்றவர்முன் மறந்தும் பேசமாட்டேன்! என்று உறுதிமொழி தருகிறாள். ஆக, ”கண்ணா மஞ்சனம் ஆட வருவாயாக!” என்று தாய்மையுடன் அழைக்கிறார் பெரியாழ்வார்.

         நீராடும் முறைமைப்பற்றிக் கூறுகையில் குளிர்ச்சிக்காக நெல்லிக்காய் இட்ட நீரை நீராடுதலும், உடலுக்குப் பாதுகாப்பாக மஞ்சள் பயன்படுத்திய முறைமையையும் காண முடிகின்றது.

    “காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில பூரித்து வைத்தேன்
    வாய்த்த புகழ்மணி வண்ணா! மஞ்சனம் ஆடநீ வாராய்.” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 154)

    என்பதிலும்,

    “மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும்
    அஞ்சனமும் கொண்டு வைத்தேன், அழகனே! நீராட வாராய்.” (நாலாயிர திவ்யப்  பிரபந்தம் -155)

    என்ற பகுதியிலும், குறும்புகள் செய்யும் மாயக்கண்ணனை நீராட வருமாறு  அழைப்பதையும், நீராடப் பயன்படுத்திய பொருட்கள் பற்றியும் காணமுடிகின்றது. இன்றும் கோயில்களில் திருமாலின் திருமஞ்சனத்தின் போது பெரியாழ்வார் இயற்றிய நீராட அழைக்கும் பாசுரங்களைப் பாடுவது வழக்கமாகும்.

     காப்பிடும் வழக்கு:

         பெரியாழ்வார் தம்மைத் தாயாகவும், யசோதையாகவும், ஆயர்பாடியின் ஆய்ச்சியாகவும்,  செவிலித் தாயாகவும், பல தாயர்களின் கூற்றுகளில்  தமது பாசுரங்கள் அனைத்தையும் அமைத்துள்ளார். பக்திமை உணர்வின் பெட்டகமாக அன்பின் களஞ்சியமாகத் திகழும் இப்பாசுரங்கள் தாய் சேய் பாவத்திற்கு நல்லதோர் சான்றாகத் திகழ்கின்றது. இப்பகுதியில் காப்பிடல் (திருஷ்டி கழித்தல்) என்கின்ற பகுதி தாய்மையின் ஆழ்அன்பின் பதிவாகத் திகழ்கின்றது.

         கண்ணனின் அழகினைக் கண்டு, குறும்புகளைக் கண்டு கண்ணேறு வராதபடி காப்பிட வேண்டும் என்று யசோதை எண்ணுகிறாள். குழந்தைகள் உள்ள வீட்டில் கண்டிப்பாகக் கண்ணேறு  கழித்தல் செய்வர். ஏனெனில் சில கண்களுக்குத் தீமை விளைவிக்கும் சக்தி உண்டு என்ற நம்பிக்கை உண்டு. அதன்படியே யசோதை கண்ணனுக்குக் கண்ணேறு படாமல் இருக்கவும் அந்திப்பொழுதில் தீயசக்திகள்  நெருங்காமல் இருக்கவும் கண்ணனைக் காப்பிட  அழைக்கிறாள்.

    “மன்றில் நில்லேல். அந்திப் போது மதிள்திரு வெள்ளறை நின்றாய்!
    நன்று கண்டாய் என்றன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய்”     (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 193)

    என்ற அடிகளில் சந்திவேளையில் கெட்ட தேவதைகள் நாற்சந்தியில் நிற்கும். அதனால் கண்ணனுக்கு ஏதேனும் துன்பம் உண்டாகுமோ என்று யசோதை அஞ்சும் உள்ளத்தைக் காணமுடிகின்றது.

         மேலும் அந்திப்பொழுதில் விளக்கேற்றி அந்தணர்கள் சங்கிலே நீர் கொண்டு மந்திரம் கூறிக் காப்பிடும் வழக்கு உண்டு என்பதைப் பின் வரும் பாசுர அடிகளில் காணலாம்.

    “இருக்கொடு நீர்ச்சங்கிற் கொண்டிட்
     டெழில் மறையோர் வந்து நின்றார்
    தருக்கேல்நம் பிசந்தி நின்று
    தாய்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்
    திருக்காப்பு நானுன்னைச் சாத்தத்
    தேசுடை வெள்ளறை நின்றாய்
    உருக்காட்டு மந்தி விளக்கின்
    றொளிகொள்ள ஏற்றுகேன் வாராய்!” (நாலாயிர திவ்யப் பிரபந்தம் – 200)

    இங்கு யசோதையின் புலம்பல்மொழிகள் பதிவாகியுள்ளன. ”வேதம்கூறிக் கொண்டு நல்ல நீரை சங்கிலே ஏந்திக்கொண்டு வரும் பிராமணர்கள் கண்ணா உனக்கு இரட்சையிட வந்துள்ளார்கள். ஆனால்  நீயோ நாற்சந்தியிலே நின்று கொண்டிருக்கிறாய். அழகிய இரட்சையை உனக்கு இட, உன் வடிவத்தைக் காட்டும் அந்தி விளக்கை ஒளியுடன் நான் ஏற்றுவேன் என்றும் அதைக் காண விரைந்து வருவாயாக!” என்றும் யசோதை அழைக்கிறாள்.பண்டைக்கால காப்பிடும் வழக்கு முறைமைகளையும் இங்கு அறிய இயலுகின்றது.

         இவ்வாறாக, தாய்பாவனை என்ற பகுதியில் அவதார நாயகனுக்குத் தமிழகக்  குழந்தையின் வளர்ப்புமுறையை ஏற்றிக்கூறும் பொழுது பல்வேறு வழிமுறைமைகளைப் பதிவுசெய்துள்ளார் பெரியாழ்வார். தமிழக மக்களின் குழந்தை தொடர்பான காதுகுத்தல், தொட்டிலிடுதல், குழந்தையின் உணவினைத் தேர்ந்தெடுத்தல், யானைத்தந்தத்தால் செய்த சீப்பால் குழல்வாருதல்,  பூச்சூடல் போன்ற இன்னும் பல தரவுகளைப் பதிவுகளாக்கிப் பாசுரத்திற்குப் பொலிவும், படிக்கும் அடியவர்களுக்கு நெகிழ்வும், ஈடுபாடும் தோன்றும் வகையில் பாசுரங்கள் யாவற்றையும் சிறப்புடன் அமைந்துள்ளார்

    ***** 

    முனைவர் நா.கவிதா,
    உதவிப்பேராசிரயர், தமிழ்த்துறை,
    எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி,
    தன்னாட்சி,
    சிவகாசி.

     

     

     

     

    Share
  • சூரியகாந்தனின் ‘எதிரெதிர் கோணங்கள்’ நாவலில் பெண்ணியம்          

    ச.சங்கர்

    முன்னுரை

    படைப்பிலக்கியத்தின் பொதுத்தன்மைகளைக் கொண்டு பல கோட்பாடுகள் உருவாகின. அவ்வாறு உருவான கோட்பாடுகளில் ஒன்று பெண்ணியம். பெண் படும்பாடுதான் பெண்ணியப் படைப்புகளின் அடிப்படைத்தளமாக அமைந்துள்ளது. இதற்கு ஆண்படுத்தும் பாடுகள் மட்டுமின்றிச் சமூகச்சூழல்களும் கலாசாரமும் மதமும் அடிப்படைக்காரணமாக அமைகின்றன. சூரியகாந்தனால் எழுதப்பட்ட நாவல்கள் பெண்களின் வாழ்வைச் சீரழிக்கும் சிக்கல்களைத் தமது அனுபவங்களாக முன் வைத்துள்ளன. இவருடைய எதிரெதிர் கோணங்கள் நாவலின்வழி பெண்களுக்கு ஏற்படக்கூடிய கொடுமைகளையும், பெண்ணியச் சிந்தனைகளையும் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    பெண்ணியம்விளக்கம்

    பெண்ணியம் என்பது உலகளாவியது; இஃது உலகில்உள்ள அனைத்து மனித குலத்துள்ளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் முன்னேற்றத்தை விமர்சிக்க ஏற்பட்டது எனலாம். இது பெண்களின் சமத்துவத்தையும் முன்னேற்றத்தையும் வலியுறுத்துவதாகும்.

    `Feminism` என்ற ஆங்கிலச்சொல் Femina என்ற இலத்தீன் சொல்லிலிருந்து `மருவி` வந்ததாகும். Femina என்றால் பெண்ணின் குணாதிசயங்களைக் கொண்டுள்ளன என்பது பொருளாகும். இச்சொல் முதலில் பெண்களின் பாலியல் குணாதிசயங்களைக் குறிப்பிடவே வழங்கப்பட்டது. பின்பே பெண்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதற்காக எடுத்தாளப்பட்டது.1

    1889இல் Womanism என்ற சொல் பெண்களின் உரிமைப் பிரச்சினையையும் அதனடிப்படையிலான போராட்டத்தையும் உணர்த்தப் பயன்படுத்தப்பட்டது. 1890ஆம் ஆண்டு Womanism என்ற சொல்லினிடத்தை Feminism  என்ற சொல் பெற்றது. 1894ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் முதன்முதலில் இச்சொல் எடுத்தாளப்பட்டது. Feminism என்ற சொல்லுக்குத் தன்வாழ்வின் மூலம் அர்த்தம் ஏற்படுத்திக் கொடுத்தவர் ரேஸ்ரேசே என்ற பெண்மணி ஆவார்.2 பெண்ணியம் என்ற சொல்லாடல் பெண்விடுதலைக்கான கோட்பாட்டுப்பதிவாக அமைந்துள்ளது.

    இலக்கியங்களில் பெண்ணியம்

    மனித வாழ்வின் பிரதிபலிப்பே இலக்கியம். இலக்கியங்கள் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் திகழ்கின்றன. இலக்கியங்கள் பெண்ணிய உணர்வின் அடிப்படையில் எழுந்தவையாக இருந்தாலும் வாசகர்களின் மனநிலைக்கு ஏற்ப இன்பமாகவோ, துன்பமாகவோதான் அதன் முடிவு அமைந்திருக்கும். பெண்ணிய உணர்வுடன் எழுதப்படும் இலக்கியங்கள் பெண்களின் மனஉணர்வுகள் பண்புகள் பிரச்சனைகள் போன்றவற்றைக் கூறுகின்றன.

    சூரியகாந்தனும் பெண்ணியமும்

         பெண்ணியத்தை மையப்படுத்தி பல படைப்பாளிகள் பல படைப்புகளை படைத்து வருவதை காண்கிறோம். ஒவ்வொரு படைப்பாளியும் இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைப்பெறக்கூடிய நிகழ்வுகளை அவர்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்பத் தம்முடைய படைப்புகளில் படைக்கின்றனர். அந்த வகையில் சூரியகாந்தனும் தம்முடைய படைப்புகளின் வாயிலாகப் பெண்களுக்கு ஏற்படக்கூடிய கொடுமைகளையும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களையும் பெண்ணியம் குறித்த செய்திகளாகச் சுட்டிக்காட்டுகிறார்.

    எதிரெதிர் கோணங்கள் நாவலில் சமூகக் கொடுமைகள்

         இன்றைய சமூகத்தில் பெண்களுக்குப் பல்வேறு கோணங்களில் இருந்து ஏதாவது ஒரு வகையில் துன்பங்கள் வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் சூரியகாந்தனின் எதிரெதிர் கோணங்கள் நாவலில் சீனிவாசனின் மூத்தமகள் பாக்யரதி கஸ்தூரிராஜ் அண்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பெர்சனல் ஸ்டெனோவாகப் பணிபுரிந்து வருகிறாள். அதே நிறுவனத்தில் வேலை செய்யும் அஸிஸ்டெண்ட் மேனேஜர் ராபர்ட்டைக் காதலித்து வந்தாள். தன் காதல் வீட்டுக்குத் தெரியும்முன்பே தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி ராபர்ட்டைக் கேட்க, குடும்பச் சூழ்நிலையையும் மதத்தையும் காரணம்காட்டித் தன் தாய் சம்மதத்தோடுதான் திருமணம் இல்லையேல் உன்வீட்டில் பார்க்கும் ஒருவரைத் திருமணம் செய்துகொள் என்று கூறித் தப்பித்துக்கொள்ளும் ஆண்களின் மனநிலையைப் படம்பிடித்துக்காட்டுகிறார்.

    சமூகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏராளம் நிகழ்கின்றன. குறிப்பாக, திருமணம் செய்யப்பட்ட பெண்களின் கொடுமைகள் குடும்பம் சார்ந்தும், உறவுகள் சார்ந்தும் நிகழ்வதைக் காணமுடிகிறது. திருமணம் நிகழ்ந்து கணவன் தனது தவறான நடவடிக்கை அல்லது தற்செயலாக அவன் இறத்தலுக்கு மனைவியே காரணம் என்ற தவறான எண்ணம் மக்கள் மனத்தில் இருப்பதைக் காணமுடிகிறது. இதனைச் சூரியகாந்தனும் தனது எதிரெதிர் கோணங்கள் நாவலில் “துக்கம் விசாரிக்க வந்தவர்களில் பெரும்பாலோர் பாக்யரதியை கபோதித்தனத்தோடும், கழிசடைத்தனத்தோடும் ஒரு மாதிரியாக வெறித்துப் பார்த்தனர். கால் முதல் தலை வரையிலும் கண்களால் அளந்தனர். தாலி கழுத்தில் ஏறின பதினஞ்சாம் நாளே உனக்கு இந்தக்கதி வந்துடுத்தே… எம் மகளே” (ப-129). என அலமேலு தலையில் அடித்துக்கொண்டு அழுததையும் தாலிச்சரடு கழுத்தை விட்டு நீங்கின மறுநாளே கங்காதரன் வீட்டார் தாங்கள் போட்டிருந்த நகைகளையும் இவளிடமிருந்து கழட்டிக்கொண்டு வீட்டைவிட்டு விரட்டும் அவலங்களைக் குறிப்பிட்டும் தாலி ஏறுவதற்கும், தாலி அறுபடுவதற்கும் பெண்ணே காரணம் என்ற சமூக அவலத்தைப் புலப்படுத்துகின்றார்.

    கணவனால் ஏற்படும் கொடுமைகள்

    திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பர். பாக்யரதி வாழ்க்கையில் அது நரகமாகிப் போனது. காதலனால் கைவிடப்பட்டவள் பெற்றோர் சம்மதத்துடன் பார்சல் சர்வீஸ் ஒன்றில் வேலைசெய்த கங்காதரனைத் திருமணம் செய்து கொள்கிறாள். இவளின் காதல் வாழ்க்கையைத் தெரிந்துகொண்ட கங்காதரன் ஒவ்வொரு நாளும் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாக்குகின்றான். “உன்னைத் தாண்டி உத்தமி…… நாங் கேட்டது கூட காதில் விழலையா? உன்னோட மாஜி காதலனோட நெனப்பு இப்ப வந்துடுச்சோ…. சொல்லேண்டி உங்களோட காதல் லீலைகளை… சிதம்பரம் பூங்காவிலேயும், ரேஸ்கோர்ஸ் ரோட்டிலேயும் பார்த்தவனாச்சே”3 என்னோட பணத்துக்கு ஆசைப்பட்டு உன்னைக்கட்டி வெச்சிட்டானா உங்கப்பங்காரன்.” என்று ஒவ்வொரு நாளும் தன் மனைவியை அடித்தும், உதைத்தும், சிகரெட்டால் சுட்டும் துன்புறுத்துகின்றான். போதை தலைக்கு ஏறிய உடன் வண்ண, வண்ண நீலப்படங்களை வைத்துக்கொண்டு அதில் உள்ளது போல் தன்னுடன் இருக்க வேண்டும் என வற்புறுத்தி தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் மிருகங்களுக்கு மத்தியில் தன் குடும்ப கௌரவத்திற்காகவே போராடும் பெண்களின் உளக்குமுறலைக் குறிப்பிடுகிறார்.

    பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள்

    ஆண்களையும் பெண்களையும் சமமாகக் கருதும் இக்காலகட்டத்தில் ஒரு சிலர் பெண்களைப் போகப்பொருளாகவே கருதுவதையும், பணிபுரியும் இடத்தில் பெண்கள் அனுபவிக்கின்ற துன்பங்களையும் சூரியகாந்தனின் எதிரெதிர் கோணங்கள் நாவலில் காணலாம். கல்பனா பிரியா அட்வடைஸிங் ஏஜென்ஸியில் பணிபுரிந்து வருகிறார் அதே கம்பெனியில் வேலை செய்யும் அசோக் ஓனர் இல்லாத சமயங்களில் அவளிடம் சம்பந்தம் இல்லாமல் பேசுவது, ஆசை வார்த்தைகளைக் கூறுவது, தொட்டுப் பேசுவது, அவள் அழகை வர்ணிப்பது என சக இடத்தில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் காணமுடிகின்றது.

          கல்பனாவின் குடும்ப சூழ்நிலையையும் அவளுடைய குடும்ப வறுமை நிலையையும் நன்கு புரிந்துகொண்ட முதலாளி கணேசமூர்த்தி அவளைத் தன்னுடைய இச்சைக்கு இணங்குமாறு வற்புறுத்துவதையும் யாருமில்லா சமயத்தில் அவளை அடைய நினைப்பதையும், அதற்காக ஆசைவார்த்தைகளைக் கூறுவதையும் காணமுடிகிறது. “நெக்ஸ்ட் மன்த்லேர்ந்து உனக்கு இருநூறு இல்லெ ஐந்நூறு ரூபாய் அதிகப் படுத்தலாம்னு ஃபீல் பன்றேன்”4 என்று சொல்லிக்கொண்டே தோளில் படர்ந்த கைகள் மெல்ல மெல்ல இறுகிக் கீழ்நோக்கி இறங்குவதை உணர்ந்து கொண்ட இவள் `அய்யோ……இந்த அநியாயத்தை என்னால் அனுமதிக்க முடியாது என்று ஒரே தள்ளாக அந்த ஆளைத் தள்ளிவிட்டாள்”5 இவ்வாறு பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகும் கல்பனா அதை வெளியில் சொல்லமுடியாமல் மனதளவில் புழுங்குவதையும் வேலைக்கு செல்லும் பெண்கள் தன் குடும்ப கௌரவத்தைக் காக்கத் தன் பிரச்சனையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் உணர்ச்சிகளை மனதில் அடக்கிக் கொண்டு வாழ்ந்து வருவதையும் காண முடிகின்றது. 

    முடிவுரை

    சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய அவலங்களையும் அவர்களுக்கு எதிராக ஏற்படக்கூடிய கொடுமைகளையும் ஆசிரியர் தம்முடைய எதிரெதிர் கோணங்கள் நாவலின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். எதிரெதிர் திசைகள் ஒரு மையத்தில் சந்தித்தால் புதிய பாதைகள் உருவாகும். எதிரெதிர் கோணங்கள் ஒரு நோக்கில் சிந்தித்தால் புறப்பாடுகள் சமமாகும். உணர்ச்சிபூர்வமாகச் சிந்தித்தவள் அறிவுப்பூர்வமாக சிந்திக்கத்தொடங்குகிறாள். பெற்றோர்களை, சகோதரிகளை, சிநேகிதிகளைத் தனக்குத் துரோகம் செய்தவர்களை நினைத்துப் பார்க்கும் பண்புடையவளாக சூரியகாந்தன் தன் நாவலில் பெண்ணியச் சிந்தனைகளை சுட்டுகிறார்.

    அடிக்குறிப்பு

    [1].  பெண்ணியம் – முனைவர் இரா.பிரேமா – ப.11
    2. பெண்ணியம் – முனைவர் இரா.பிரேமா – ப.12
    3. சூர்யகாந்தனின் எதிரெதிர் கோணங்கள்- ப.139.
    4. சூர்யகாந்தனின் எதிரெதிர் கோணங்கள்- ப.62.
    5. சூர்யகாந்தனின் எதிரெதிர் கோணங்கள்- ப.63

    *****

    ச.சங்கர்
    முனைவர் பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த்துறை,
    எஸ்.கே.எஸ்.எஸ்.கலைக்கல்லூரி
    திருப்பனந்தாள்.

     

    Share
  • கணினி – திறன்பேசிக் கருவிகளில் தமிழ் எழுத்துருக்கள்

    -க.பிரகாஷ் எம்.ஏ, எம்.பிஃல், (பிஎச்.டி)

         அன்றாட வாழ்க்கையில் மக்கள் அனைவரும் கணினியோடும், கையடக்கக் கருவியோடும் கொஞ்சி விளையாடி வருகின்றனர். நாளுக்குநாள் அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு நிறுவனங்களில் கணினி சார்ந்த பயன்பாடுகள் மேம்பட்டு வருகின்றன.

         கணிப்பொறியின் பயன்பாடுகளோடு சேர்ந்து தற்போது  அலைபேசிப் பயன்பாடும் வளர்ந்து நிற்கின்றது. பெருமளவில் கணிப்பொறி பயன்பாட்டில் இருந்து கையடக்கக் கருவிகளைப் பயன்படுத்தும் முறைக்கு மாறிவிட்டனர். பலகைக் கணினி, மடிக்கணினி, வில்லைக் கணினி என்று கணினியின் வகைகளைக் குறிப்பிடுகின்றனர்.

         இன்றைய காலகட்டத்திலும் வருங்காலங்களிலும் தன் கையடக்கத்திலே எல்லாப் பணிகளையும் முடித்துக் கொள்ளும் அளவிற்குக் கருவிகளைக் கண்டுப்பிடித்துக் கொண்டே இருக்கின்றனர். தொலைபேசி, திறன்பேசி, நுண்ணறிபேசி, மாத்திரை என்று பலபெயர்களைச் சூட்டிக்கொண்டு வருகின்றனர்.

         pic5இவ்வகைக் கருவிகளில் நமக்குத்தேவையான அனைத்து மென்பொருள்களும் இயங்கும் அளவிற்கு உருவாக்கியிருக்கின்றனர். இக்கருவிகளில் ஒவ்வொரு மென்பொருளிலும் தமிழ்மொழியை உள்ளீடு செய்யும் அளவிற்கு ஒருங்குறி என்ற எழுத்துருவை உருவாக்கியிருக்கின்றனர். ஒரு மென்பொருளை ஆங்கில மொழியைக் கொண்டு எளிதாகச் செயல்படுத்த முடியும். ஆனால் தமிழ் மொழியை எளிமையாகச் செயல்படுத்த முடியாது.

         pic1ஒரு கணினியில் இயல்பாகவே ஆங்கில மொழியை உள்ளீடு செய்திருப்பர். ஆங்கில மொழியை உள்ளீடு செய்து இருந்தாலும் தமிழ்மொழியை நிறுவிக் கணினி அமைப்பில்  மொழியைத் தேர்வுசெய்து தமிழ்மொழியை இயக்கு செயலில் பயன்படுத்த முடியும். ஆனால் ஆங்கில விசைப்பலகையில் தமிழ் மொழியை அல்லது எழுத்துருவைப் பயன்படுத்த வேண்டுமானால் தமிழ் எழுத்துருக்களை நிறுவ வேண்டும். அப்படி நிறுவினாலும்  ஆங்கிலமொழிபோல் இருக்காது. அதில் இருந்து மாறுபட்டிருக்கும். ஆங்கில எழுத்துருவானது ஒரு பொத்தானுக்கு ஒரு எழுத்துரு மட்டுமே இருக்கும். ஆனால் தமிழ் எழுத்துருவானது ஒரு பொத்தானுக்கு இரண்டு எழுத்துருக்களைக் கொண்டு இருக்கும். ஆங்கிலத்தில் பல எழுத்துருக்களை மாற்றினால் வடிவங்கள் மட்டுமே மாறுபடும். தமிழ் எழுத்துருவில் ஒவ்வொரு எழுத்துருவும் ஒவ்வொரு வகையாக இருக்கும். இயல்பாகப் பயன்படுத்தும் எழுத்துருக்களை இணையத்தில் பயன்படுத்த முடியாத காரணத்தினால் ஒருங்குறி எழுத்துருவை உருவாக்கி இருக்கின்றனர்.

    இ – கலப்பை, தமிழ்விசை, என்.ஹெச்.எம். ரைட்டர், இணையத் தமிழ் தட்டச்சுப் பொறிகள், தமிழ் எழுத்துரு மாற்றிகள், இணைய எழுத்துரு மாற்றிகள் செல்லினம், எழுத்தாணி, முரசொலி எனப்பல தமிழ் மென்பொருள்களை உருவாக்கி இருக்கின்றனர்.

         இவ்வகை மென்பொருட்களை நிறுவிக் கணினியில் அல்லது கையடக்கக் கருவிகளில் உள்ளீடு செய்தபிறகு பயன்படுத்த முடியும். கணினியில் தமிழ் எழுத்துருக்களைத் தட்டச்சு செய்திட நாம் விரும்பிய எழுத்துருவை தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் தட்டச்சுத் தெரியாதவர்களும் தட்டச்சு செய்திட முடியும். தமிழில் அவ்வாறு முடியாது.

         ஆங்கிலத்தில் இருக்கும் விசைப்பலகையில் தமிழ் எழுத்துருக்களைப் பொருத்தியிருப்பதும், ஆங்கிலத்தைவிட தமிழ் எழுத்துருக்கான மென்பொருள்கள் அதிகமாக உருவாக்கியிருப்பதும் தமிழுக்குச் சிறப்புக்குரியது என்று நான் கருதுகிறேன்.

    தமிழ் ஒருங்குறி எழுத்துரு

         தமிழ் பல எழுத்துருக்களைக் கொண்டடிருக்கும் நிலையில் ஒருங்குறி என்ற எழுத்துருவைப் பொதுவானதாக உருவாக்கியுள்ளனர். இணையதளங்களில் பயன்படுத்த தமிழ் எழுத்துருவான பாமினி, எழுத்துரு வடிவமைப்புக் கொண்டு வடிவமைத்து இருக்கின்றனர். ஒருங்குறி எழுத்துருவில் ‘லதா’ என்ற பெயரில் தெரிவுசெய்யுபடி இருக்கும். இந்த எழுத்துருவைக் கொண்டு இணையதளங்களில் எல்லாவகையான பணிகளையும் செய்திடலாம். இவ்வகையான எழுத்துருக்களைக் கொண்டு இணையதளங்களை உருவாக்கலாம், சொற்செயலியைச் செயல்படுத்த, தமிழ்ச்சொற்களை அகரவரிசைப்படுத்த, தமிழில் தேடுபொறியைப் பயன்படுத்த, சொற்பிழை நீக்க, சந்திப்பிழைத் திருத்த, நிரலாக்க மொழியாகப் பயன்படுத்த எனப் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தலாம்.

    தமிழ் ஒருங்குறி மென்பொருள்

        தமிழ்ஒருங்குறி எழுதிகள் விசைப்பலகைகள் என்னும் மென்பொருட்கள் கணினிகளில் ஒருங்குறித் தமிழ் உள்ளீட்டிற்காக உருவாக்கப் பெற்றுள்ள மென்பொருள் ஆகும். இவ்வகை மென்பொருட்களை மிக எளிதாகக் கணினியில் நிறுவலாம். கணிப்பொறிகளிலும் மடிகணினிகளிலும், ஒருங்குறித் தமிழில் தட்டச்சு செய்யப் பின்வரும் மென்பொருள்களுள் ஒன்றினைத் தரவிறக்கம் செய்து அவற்றைக் கணினியில் நிறுவித் தமிழ் உள்ளீடு செய்யலாம்.

    என்.ஹெச்.எம். ரைடர்

        pic2இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து அவற்றைக் கணினியில் நிறுவிய பிறகு ந
    மக்குத் தேவையான எழுத்துருவை கொண்டு தட்டச்சு செய்திடலாம். ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்கள், தமிழ் 99, தமிழ் ஆங்கில ஒலிபெயர்ப்பு, தமிழ் பழைய தட்டச்சுப் பொறி, பாமினி, தமிழ் இன்ஸ்கிரிப்ட், தமிழ் 99 டேஸ், தமிழ் ஒலிபெயர்ப்பு டேஸ் ஆகிய முறைகளிலும் மற்றும் வேறு மொழிகளிலும் தட்டச்சு செய்திடலாம்.

    தமிழ் விசை

        pic3
    கணினியில் எழுதஉதவும் ஒரு பயர்பாக்ஸ் நீட்சியாகும். இதனைத் “தமிழா”ஏன்ற அமைப்பைச் சேர்ந்த
    முகுந்தராஜன் முதலில் முயன்று வெளியிட்டார். இதில் voice on wings  மேம்படுத்தித் தந்தார். இவ்வகையில் தமிழ்நெட் 99, பாமினி, புதிய பழைய தமிழ்த் தட்டச்சு விசைப்பலகையில் பயன்படுத்தலாம். இதற்கு ஏதேனும் ஒருங்குறி எழுத்துருவைக் கணினியில் நிறுவி இருக்க வேண்டும்.

    இ – கலப்பை

         இவ்வகை மென்பொருளைத் pic4தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவி தமிழ் உள்ளீட்டைச் செய்யலாம். இம்மென்பொருளில் தமிழ் 99, தமிழ் ஆங்கில ஒலிபெயர்ப்பு, தட்டச்சுப் பொறி, பாமினி, இன்ஸ்கிரிப்ட் ஆகிய முறைகளில் தமிழ் ஒருங்குறியை உள்ளீடு செயலாம்.

    இணையத்தில் எழுத்துரு மாற்றிகள்

    இயல்பாகவே  நாம் தட்டச்சுசெய்த ஒரு கோப்பினை ஒருங்குறிக்கு மாற்றவேண்டுமானால் என்.ஹெச்.எம். கன்வெர்ட்டர் என்கின்ற எழுத்துரு மாற்றியைக் கொண்டு பாமினி என்ற எழுத்துருக்கு மாற்றியமைக்கலாம். இதுபோன்று நமக்கு வேண்டிய எழுத்துருக்கு மாற்றியமைப்பதற்கு, எழுத்துரு மாற்றி என்கிறோம்.

         இணையதளத்தில் நேரடியாக ஒரு கோப்பினை நகல் எடுத்து இணையப் பக்கத்தில் ஒட்டி நமக்கு வேண்டிய எழுத்துருக்கு மாற்றிவிடலாம். மாற்றியபிறகு மீண்டும் நகல் எடுத்துப் புதிய ஒரு கோப்பினை உருவாக்கிச் சேமித்து வைக்கலாம். இதுபோன்ற பல எழுத்துரு மாற்றிகள் இணையத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.  எழுத்துரு மாற்றிகளில் சில வகைகள் உண்டு. நேரடியாக மாற்றும் முறை, மென்பொருள் வழியாக மாற்றும் முறை, இணையதளத்தின் மூலம் மாற்றும் முறை ஆகிய முறைகளில் மாற்றுவது உண்டு.

    திறன்பேசிக் கருவிகளில் எழுத்துருக்கள்

        பல வகையான அலைபேசிகளைக் கையடக்கக் கருவிகள் என்று குறிப்பிடுவது உண்டு. அவ்வகை அலைபேசிகளின் வகைகள் சில, தொலைபேசி, திறன்பேசி, நுண்ணறிபேசி, மாத்திரை ஆகியன. தொழில்நுட்ப வளர்ச்சியினால் பல்வேறு நிறுவனங்கள் பலவகையான கையடக்கக் கருவிகளைத் தயாரித்து வருகின்றனர். அவ்வகையில் நமக்குத் தேவையான அளவிற்கும் தேவைகளுக்கேற்பப் பயன்படுத்தும் அளவிற்கும் நினைத்ததை நினைக்கும் அளவிற்குப் பூர்த்திசெய்துவிடுகின்றன இவை. கையடக்கக் கருவிகளில் குறுஞ்செய்திகளும், மின்னஞ்சல், இணைய உலாவி, குறிப்புகள் இதுபோன்று பல தகவல்களையும் பதிவு செய்வதற்கும் தமிழ் ஒருங்குறி என்ற எழுத்துருவை உருவாக்கியிருக்கின்றனர். இவ்வகை எழுத்துருக்கள் அனைத்துமே மென்பொருளாக வடிவமைத்துள்ளனர். இவ்வகை மென்பொருளைப் பதிவிறக்கம் செய்து நாம் பயன்படுத்தும் கையடக்கக் கருவிகளில் அமைப்பில் சென்று மொழிமாற்றியை மாற்றம்செய்து நாம் பதிவிறக்கம் செய்து நிறுவிய எழுத்துருவைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்திடலாம்.  பதிவு செய்தபிறகு  தட்டச்சு செய்திடலாம்.

         இனி வளர்ந்துவரும் காலங்களில் நாம் பயன்படுத்தும் அத்துணைக் கருவிகளிலும் தமிழ்மொழியை உள்ளீடு செய்யும் அளவிற்கு வல்லுநர்கள் வளர்ந்து கொண்டு இருக்கின்றனர். அது போல் தமிழ் மென்பொருட்களும் வளர்ச்சியடையச் செய்கின்றனர். தமிழுக்கென்று பல மென்பொருள்கள் உருவாக்கிப் பெருமை சேர்ப்பது நம்மொழிக்கு நாம் செய்யும் சிறப்பாகும்.

     

    Share
  • செல்வி கார்த்திகா மகேந்திரனின் நூல் அறிமுகமும் இன்னிசை நிகழ்வும்

    முல்லை அமுதன்

    as1

    “விதந்தகு கோடி இன்னல்
    விளைத்தெனை அழித்திட்டாலும்
    சுதந்திரதேவி! நின்னைத்
    தொழுதிடல் மறக்கிலேனே…”

    என்று பாடிய விடுதலை மகத்துவத்தின் யாசகனான மகாகவிஞன் சுப்ரமணிய பாரதியின் வாழ்க்கைப் பதிவையும், ஏனைய பல இசைமேதைகளின் பதிவுகளையும் கொண்ட ‘Subramanya Bharathi and other legends of Carnatic music’ எனும் நூல் வெளியீடு கடந்த 22.10.2016 சனிக்கிழமை அன்று மண்டபம் நிறைந்த ஆர்வலர்கள் முன்னிலையில் இடையிடையே நூலாசிரியரின் இன்னிசைச் சமர்ப்பணத்துடன் மிக நேர்த்தியாக நடந்தேறியது.

    வரவேற்புரைகளும், மனமார்ந்த வாழ்த்துரைகளும், ஆர்வலர்களின் சிறப்பரைகளும், சிறுவர்களின் கண்ணுக்கினிய நடனங்களுமாக, அவசியமற்ற ஆடம்பரங்கள் இல்லாது தமிழ் மரபுகளுக்கேற்ப ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந் நிகழ்வு மனதிற்கு இதமாகவும் எம் இளைய தலைமுறைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் அமைந்திருந்தது.

    as

    நூலாசிரியர் செல்வி கார்த்திகா மகேந்திரனதும்; பைந்தமிழ்க்காவலரும் கார்த்திகாவின்; தந்தையும், நல்வழிகாட்டியுமான திரு மகேந்திரனதும் நன்றியுரைகளுடன் இந்நிகழ்வு இனிதாக நிறைவு பெற்றது.

    காலத்தின் கோலத்தால் சிதறுண்டு திசைமாறி உருமாறி அடைளாளங்களைத் தொலைத்து விடுவோமோ என்று கலங்கி நிற்கும் வேளையில் இதுபோன்ற ஆக்கங்களும் நிகழ்வுகளும் அகத்தியமாகின்றன.

    நாம் அகதிகளாகப் பிறக்கவில்லை!.
    அருமை பெருமையாக வாழ்ந்தவர்கள்!!.

    எம் மொழியின் ஒப்பற்ற சிறப்புகளையும், எம்மினத்தின் கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களையும் அவற்றின் பெருமைகளையும் எம் குழந்தைகளுக்குச் சொல்லித்தரவேண்டும். அவர்கள் நாளை தலை நிமிர்ந்து தமிழராக வாழ நாம் வழிவகுக்க வேண்டும். ஆங்கில மொழியில் இந்நூல் அமைந்திருந்தாலும் எளிய நடையில் அழகாக வடிவமைக்கப்பட்டு வாசகரை வாசிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. பல இளைய தலைமுறையினர் இந்நூலை ஆர்வத்துடன் வாசித்துப் பலனடைவார்கள் என்று நம்புகின்றேன்.

    செல்வி கார்த்திகா இரசாயனத்துறையில் தன் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பைத் தொடரும் அதேவேளையில் தன் இசைப்பணியை Ilford பகுதியில் சனிக்கிழமைகளில் நடைபெறும் தமிழ்க் கல்விக்கூடத்தில் ஆற்றிவருவது எமக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கின்றோம். செல்வி கார்த்திகாவுக்கும் அவர் பெற்றோருக்கும் எம் கல்விக்கூடத்தின் அனைத்து ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர் சார்பிலும் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்;.

    வாழ்த்துவது
    திருமதி சாந்திகுமாரன்.
    (அதிபர்.தமிழ் கல்விக் கூடம் எசெக்ஸ்)

    Share
  • புறநானூறு சுட்டும் மறக்குலத்தாயின் மாண்புகள்

    முனைவர் கு.சக்திவேல்

     

    இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி’ என்பர். ஏனெனில் ஓர் இலக்கியம் தான்எழுந்த கால மக்களின் பழக்கவழக்கம், பண்பாடு, நாகரிகம், கலாசாரம் என அனைத்தையும் பிரதிபலிக்கக் கூடியதாக அமைவதே ஆகும். அவ்வகையில் தமிழ்மொழிக்குச் செம்மொழித் தகுதியைத் தந்த சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறு அக்கால மக்களின் போரினையும், போர் அறங்களையும், வீரத்தினையும், கொடைச்சிறப்பினையும் பாடியதோடு அல்லாது அதற்கு வித்திட்ட மறக்குலத் தாயின் வீர உணர்வினையும், நாட்டுப்பற்றினையும் விரிவாக எடுத்தியம்பியுள்ளது. இத்தகு பெண்களின் வாழ்வியல் விழுமியங்களைச் சிறிதளவு கோடிட்டுச் செல்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    war-eles-hampi_thumb

    நன்மக்கட்பேறு:

    பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
    மக்கட்பேறு அல்ல பிற.       (குறள் -61)

     

    என வள்ளுவர் தன்னையே முன்னிலைப்படுத்திக் கூறுதலால் மக்கட்பேற்றின் மேன்மையினையும், உயர்வினையும் அறியமுடிகின்றது. அக்காலத்தில் ஒவ்வொரு தாயும் நன்மக்கட் பேற்றினைப் பெறுதல் தன்னுடைய கடமைகளுள் ஒன்றாக எண்ணியதை, ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே (புறம்,312:1) என்ற புறநானூற்றுப் பாடலடியால் உணரமுடிகின்றது. மேலும், தன் கடமை மட்டும் அல்லாது மகனை நல்ல சான்றோனாக உருவாக்குதல் கணவனின் கடமை எனவும், போர்க்கருவிகளை வடித்துத்தருதல் கொல்லனின் கடமை எனவும், சிறந்த வீரனாக உருவாக்குதல் வேந்தனின் கடமை எனவும், இத்தகு நற்பண்புகளைப் பெற்ற காளை போர்க்களத்திலே பகைவரின் யானைகளைக் கொன்று மீளுதல் கடமை எனவும் வீரத்தாய் அடுக்கிக் கொண்டே செல்லுதலால் ஒரு தாயின் கடமையும் பொறுப்புணர்ச்சியும் என்னவென்பது கூறாமலேயே விளங்கும்.

    புலியின் கல்லளை:

    மறக்குலத்தாய்த் தனக்குரிய கடமையென நினைத்து வீரத்திருமகனைப் பெற்றெடுத்த பெருமையில் இல்லாளுக்குரிய பணிவிடைகளை ஆற்றியிருக்கும் வேளையில், ஒருநாள் தன்மகனைக் காணாது தன்னை நோக்கிக் கேட்ட மருமகளிடம், (அண்ணன் மகள்) பெருமிதத்துடனும், கம்பீரத்துடனும் ”என் மகன் எங்கே எனக்கேட்கிறாய்? யான் அறியேன்; புலி தங்கிப்போகிய குகை (ஈன்ற வயிறு) இதுவே. வேட்டைக்குப்போகும் புலியெனத் தோன்றுவான் மாதே போர்க்களத்திலே” என்கிறாள்.
    இதனை,
    சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
    யாண்டுளனோ? என வினவுதி; என்மகன்
    யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ரும்
    புலி சேர்ந்து போகிய கல்அளை போல
    ஈன்ற வயிறோ இதுவே;
    தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே(புறம்: 86)     

    எனக் காவற்பெண்டு பாடிய பாடலால் அறியமுடிகின்றது.

    மறக்குலத்தாயின் மாண்புகள்:

    ஆணின் வெற்றிக்குப்பின் பெண் இருக்கிறாள் என்பர். இருந்தும் பெண்ணுக்குத் துணையாகத் தந்தையாகவும், கணவனாகவும், மகனாகவும் ஓர் ஆண் இருக்கிறான் என்பதும் உண்மையே. அவ்வகையில் மறக்குலத் தாய் ஒருத்தி தன்னைக் காத்தற்கு யாரும் இல்லாத நிலையில், போர்ப்பறை ஒலிகேட்டு நாட்டிற்கும் நாட்டு மன்னனுக்கும் வெற்றியைத் தேடித்தரும் போரில் தன் குடும்பத்தினரின் பங்களிப்பும் கட்டாயம் வேண்டும் என நினைக்கிறாள். எனவே, விளையாடிக் கொண்டிருக்கும் தன் சிறு வயது மகனுக்குப் போர்க்கோலம் பூணுவித்துக் களத்துக்கு அனுப்புகிறாள்.

    இப்பெண்ணின் தந்தையோ முன்னர் நடைபெற்ற போரில் யானையை வென்று அதனால் மாண்டவன். நேற்றைய போரிலே இவளது கணவனும் ஆநிரைகளைக் காக்கும் பொருட்டு இறந்துள்ளான். இந்நிலையில்தான் தன் ஒரே மகனையும் இன்று போருக்கு அனுப்புகிறாள். இக்காட்சிதனைக் கண்ட ஒக்கூர் மாசாத்தியார் அவர்கள், உள்ளத்துணிவுடன் அச்சத்தைத் தரும் இச்செயலினைச் செய்யும் இத்தாயின் எண்ணம் கெடுக என்பதுடன், மூதின் மகளீர் ஆகுதலால் இத்தகு எண்ணம் எழுதல் இயல்பே எனப் பாடுகிறார்.

    இக்காட்சிதனை,
    கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
    மூதின் மகளிர் ஆதல் தகுமே;
    —— —— —— ——
    இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
    வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
    பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
    ஒருமகன் அல்லது இல்லோள்,
    செருமுக நோக்கி
    ச் செல்க என விடுமே(புறம்: 279)

    என்ற புறப்பாடலால் அறியமுடிகின்றது. இவ்வரலாற்றுப் பதிவால் மறக்குலத்தாயின் வீரஉணர்வும், நாட்டுப்பற்றும் கூறாமலேயே விளங்குகிறது.

    இத்தகு மறக்குலத்தாயின் மகன் ஒருவன் போர்க்களம் சென்றவன் இன்னும் வீடு திரும்பவில்லை. இம்மறவனோடு சென்ற மற்ற வீரர்கள் வீடு திரும்பிய நிலையினில் அவர்களின் விழுப்புண் குணமடைய; அவர்களின் மனைவியர் வேம்பின் கிளைகளை ஒடித்தும், காஞ்சிபாடியும், நெய்யுடை கையராக வீட்டிலே உள்ளனர்.மேலும், வெண்சிறு கடுகினைப் புகைத்துக் கொண்டும் இருத்தலால் எல்லா வீடுகளிளும் ‘கல்’லென்ற ஆராவாரம் கேட்கின்றது. இத்தகு நிலையில் தன் மகன் மட்டும் வீடு திரும்பாததைக் கண்டு பதறாது, வருந்தாது களத்திலே இன்னும் பகைவர் உள்ளனர் போலும் எனவேதான் மகன் வரவில்லை. அவர்களையும் முற்றிலும் ஒழித்தே வீடு திரும்புவான் என நினைக்கும் தாயின் உள்ளமும், துணிவும், மகன்மீது கொண்ட நம்பிகையும் என்னவென்று கூறுவது. இந்நிகழ்வுதனை விளக்கும் விதமாகப் புறநானூற்றிலே பாடல்(296) ஒன்று இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது.

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாய்: 

    மணமுடிந்து ஆண்டுகள் பலவாகித் தவமாய்த் தவம் இருந்துபெற்ற பிள்ளை, போர்க்களத்திலே பகைவரின் களிற்றினை வீழ்த்தித் தானும் மாண்டான் என்னும் செய்திகேட்டு, அவனை ஈன்ற பொழுதைவிட, போரிலே வெற்றிவாகை சூடி வீரசொர்க்கம் அடைந்தான் எனும் செய்தி கேட்டு களிப்பெய்திய தாயைப்பற்றி,

    மீன்உண் கொக்கின் தூவி அன்ன
    வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
    களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
    ஈன்ற ஞான்றினும் பெரிதே  (புறம்,277:1-4)

    எனப் பூங்கணுத்திரையார் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. மகனின் இறப்பு கேட்டுக் கலங்காது மகிழும் தாயின் நிலையை நோக்க, ஒரு பொருளைப் பெற்ற காலத்தைவிட அதனால் உண்டான பயன்பெறும் காலமே மகிழ்வாகும் என்பதுபோல், வீரக்குடியில் பிறந்த ஒருவன் போர்க்களத்திலே பகைவரை வென்று மாய்வதே பெருமை என்பதை உணர்ந்தவள் இம்மறக்குலத்தாய் என்பது புலனாகிறது.

    போர்க்களம் சென்று மீள்வோரிடம் தன் மகனைப்பற்றி விசாரிக்கும் தாயிடம், அவன் புறமுதுகிட்டு இறந்ததாகக் கூறுகின்றனர் அறியாத சிலர். இச்சொல் கேட்டு கொதிப்படைந்த தாய், என் மகன் புறப்புண்பட்டு இறந்திருப்பானானால் அவன் பாலுண்ட மார்பை இவ்வாளால் அறுத்தெறிவேன் எனப் போர்க்களம் நோக்கிச் செல்கிறாள். பிணக்குவியல்களைத் தன் வாளால் புரட்டிப் பார்க்கிறாள். அப்போது ஓர் உடலைப் பார்த்து ஆனந்தம் அடைகிறாள். ஏனெனில் தன் மகன் புறப்புண்பட்டு இறக்காது போரிட்டு விழுப்புண்பட்டே வீரமரணம் அடைந்துள்ளான் என்பதே அதற்கு காரணம். இதனை,

    நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
    முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
    படைஅழிந்து மாறினன் என்று பலர் கூற,
    மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
    முலைஅறுத் திடுவென், யான் எனச் சினைஇக்
    கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
    செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
    படுமகன் கிடக்கை காணூஉ,
    ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே (புறம்: 278)

    என்ற புறப்பாடலின் வழி உணரமுடிகிறது.மற்றொரு தாய், பகைவரால் வெட்டுண்டு சிதைந்து கிடக்கும் தன் மகனின் உடலைப் போர்க்களத்திலே பார்த்துக் கலங்காது, அவன் பகைவரை வீழ்த்தியே சொர்க்கம் எய்தினான் என்பதை அறிந்து, அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்வை விடப் பன்மடங்கு பெருமிதமும் மகிழ்வும் அடைகிறாள். இதனால் அவளது வற்றிய மார்பிலே பால்ஊறிச் சுரக்கிறது. இத்தகு காட்சிதனை விளக்கும் விதமாக,

    “இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய
    சிறப்புடை யாளன் மாண்புகண் டருளி
    வாடுமுலை ஊறிச் சுரந்தன
    ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே(புறம்,295:5-8)

    என மற்றுமொரு புறப்பாடல் அமைந்துள்ளதையும் காணமுடிகிறது. இவ்வாறு தன்மகன் போர்க்களத்திலே இறந்தான் என எண்ணி வருந்தாது மகிழ்வடையும் மறக்குலத்தாயின் மாண்புகளை வார்த்தைகளால் விளக்கிக் கூறுதல் என்பது இயலாத ஒன்றே.

    மன்னர்களுக்கு ஆபத்துதவிகளாகவும், மெய்க்காப்பாளர்களாகவும் பல வீரர்கள் இருந்துள்ளனர் என்பது நாம் அறிந்ததே. இத்தகு வீரர்களை ஈன்ற மறவர்களின் தாய், தாய்ப்பாலோடு நாட்டுப்பற்றையும், வீர உணர்வையும் சேர்த்தே ஊட்டி வளர்த்துள்ளாள். இவ்வாறு வளரும் தன் மகன் பிறவிப்பயனாக மன்னருக்காகவும், நாட்டிற்காகவும் உயிர் நீத்தான் என்பதை அறிந்து மகிழ்வெய்தியதை அறியும்போது, ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தாயாக இருந்தாள் என்பது புலப்படுகிறது. ‘தாயைப் போல பிள்ளை’ என்பதால் இத்தகு மறவர்களின் தாயும் அரசிக்கும், இளவரசிக்கும் ஆபத்துக்காலங்களில் உயிர்காக்கும் தோழிகளாக இருந்துள்ளனர் என்பதும் வரலாறு பேசும் உண்மையே. இவ்வாறான பெண்களின் வாழ்வியல் விழுமியங்களைப் புறநானூறு பல இடங்களில் பேசிச்சென்றுள்ளதை நாம் காணமுடிகின்றது.

    ***

    முனைவர்கு.சக்திவேல்
    உதவிப்பேராசிரியர்

    தமிழாய்வுத்துறை
    அ.வ.அ.கல்லூரி(தன்னாட்சி)
    மன்னன்பந்தல்-609305

                    

     

    Share
  • இலக்கியங்களில் காதுகுத்துதல்

    -முனைவா் பா.பொன்னி

    தன்னைச் சுற்றி வாழும் மனிதா்களின் செயல்களைக்கண்டு தானும் அதனைப் போன்றே செய்ய முற்படுவது மனிதனின் இயல்பு. மனிதா்களின் இந்த இயல்பே சடங்கு முறைகளுக்குக் காரணமாக அமைகிறது. காதுகுத்துதல் என்பது முதன் முதலில் பழக்கமாகிப் பின்னர்  வழக்கமாகிச் சடங்காக மாறியிருக்கிறது. சடங்குகள் இருவகைப்படும். அவை மங்கலச் சடங்கு மற்றும் அமங்கலச் சடங்கு. இவற்றுள் மங்கலச் சடங்குகளுள் ஒன்றான காது குத்துதல் குறித்து இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    சங்க இலக்கியங்களில் காதணி அணிதல்

    சங்க இலக்கியங்களில் காது குத்துதல் ஒரு சடங்காகப் பதிவு செய்யப்பட வில்லை. ஆடவரும் மகளிரும் தம் காதுகளை மலா்களைக் கொண்டும் அணிகலன்களைக் கொண்டும் அலங்கரித்த தன்மை இலக்கியங்களில் காணப்படுகின்றது.
    சுடுநீா் வினைக் குழையின் ஞாலச் சிவந்த
    கடிமலா்ப் பிண்டி தன் காதில் செரீஇ
      (பரி 12: 87-88)

    இப்பாடலடிகளில் தலைவி அசோகின் சிவந்த புதுமலரை, தீயில் இட்டுச் சுட்டமையால் ஒளிமிக்க இயல்புடைய தொழிற் சிறப்புடைய காதணி போல் தொங்கும் படியாகத் தன் செவியில் செருகிக் கொண்டாள் என்று குறிக்கப்பட்டுள்ளது. இதன் வழி மகளிர் மலா்களைச் செவியில்சூடித் தம்மை அழகுபடுத்திக் கொண்டமையை அறியமுடிகிறது.

    சாய்குழை பிண்டித் தளிர் காதில் தையினாள்
    பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்
    குவளைக் குழைக்காதின் கோலச் செவி
    (பரி 11:  95-98)  
    என்ற பாடலடிகள் அசோகந் தளிரையும், குழையையும் அணிந்தமையைச் சுட்டுகின்றன.

    மகளிர் குழை அணிதல்

    மகளிர் அட்டிகை, இட்டடிக்கை, ஓலை, மாணிக்கஓலை, கடிப்பினை, கடுக்கன், கன்னப்பூ, குண்டலம், குணுக்கு, குதம்பை, குறடு, குழை, குவளை, கொப்பு, சன்னாவ தஞ்சம், சின்னப்பூ, செவிப்பூ, தடுப்பு, கொப்பு, சன்னாவ தஞ்சம், சின்னப்பூ, செவிப்பூ, தடுப்பு, தண்டட்டி, தாளுருவி, திரிசரி, தோடு, பொன்தோடு, மணித்தோடு, நவசரி, நவகண்டிகை, நாகபடம், பஞ்சசரி, பாம்படம், பாம்பணி, புகடி, மகரி, மஞ்சிகை மடல், மாத்திரை, முடுச்சு, முருகு, மேலீடு, வல்லிகை, வாளி போன்ற காதணிகளை அணிந்துள்ளனா்.  கடிப்பு என்னும் அணிகலனை தொடர்ந்து அணிந்து வர காதுமிக நீண்டதாக ஆகும் என்பா். இவற்றுள் குழை என்னும் அணிகலனே சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையான இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது.

    களிர் பல்வேறு வகையான குழைகளை அணிந்தமையை சங்க இலக்கியங்கள் வழி அறிலாகின்றது.

    ஊசல் ஒண்குழை உடை வாய்த்தன்ன (நற் 286 :1)

    கனங்குழைக்கு அமா்த்த சேயரி மழைக்கண் (நற் 16 : 9)

    கயல் ஏா் உண்கண் கனங்குழை (நற் 316 : 3)

    குழை மாண் ஒள் இழை (அகம் 6 : 7)

    கொடுங்குழைக்கு அமர்த்த நோக்கம் (அகம் 3 : 17)

    கொடுங்குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை (அகம் 236 : 12)

    பனி பொலங் குழைத் தெறிப்ப (அகம் 351:12)

    என்ற அடிகள்  மகளிர் குழை அணிந்தமையை விளக்குகின்றன.

    ஒண்சூட்டு அவிர்குழை மலைந்த நோக்கே (அகம் 253 : 26)

    என்ற அடியில் மத்தகமணி அமைந்து விளங்கும் காதணி  சுட்டப்படுகிறது.

    செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர ( அகம் 86 : 27 )

    என்ற அடியில் சிவந்த ஒளி பொருந்திய குழை அணிந்தமை சுட்டப்படுகிறது.

    ஆடவா் குழை அணிதல்

    சங்க காலத்தில் ஆடவரும் குழை அணிந்தமையைக் காணலாகின்றது.

    பலதேவன்  ஒரு காதில் குழை அணிந்தவனாகச் சுட்டப்படுவதனை

    வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு குழை ஒருவனை ( பரி 1: 5 ) என்ற அடியால் அறியலாகின்றது.

    குழையன் கோதையன் குறும் பைந் தொடியன் ( நற் 50 : 2 ) என்ற அடியும் ஆடவர் குழை அணிந்தமைக்குச் சான்றாக அமைகிறது.

    பாலியல் உணா்வு

    காதணி பாலியல் உணா்வின் வெளிப்பாடாகவும் அமைகிறது. தொல்காப்பியா் களவுக்கால மெய்ப்பாடுகளுள் ஒன்றாக காதொன்று களைதல் என்பதனைக் குறிப்பிடுகிறார். காதொன்று களைதல் என்பது, கூந்தலைப் போலன்றிக் காதிடைப்பெய்து அணியப்பெற்ற தோடு முதலிய அணிகளுள் ஒன்று நிற்ப மற்றொன்று நெகிழ்ந்து வீழ்தல். இதனைச் செவியில் பூட்டாது செருகிய தோடு ஒன்றைத் திருத்துவாள் போலக் கழற்றுதல்’ என்பர்.

    தலைவனின் மார்பில் உற்ற முயக்கத்திடை நெரிந்த குழையுடையவளாக பரத்தை திகழ்ந்தாள் என்பதனை

    மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர்குழை (நற் 20:9) என்ற பாடலடி விளக்குகின்றது.

    பக்தி இலக்கியத்தில் காதுகுத்துதல்

    சங்க காலத்தில் அழகிற்காக அணியப்பட்ட காதணி பக்திஇலக்கிய காலத்தில் சடங்காக மாற்றம் பெறுகிறது.

    காரிகை யார்க்கு முனக்கு மிழுக்குற்றென்
    காதுகள் வீங்கி யெரியில்
    தாரியா தாகில் தலைநொந்தி டுமென்று
    விட்டிட்டேன் குற்றமே யன்றே
    சேரியில் பிள்ளைக ளெல்லாரும் காது
    பெருக்கித் திரியவும் காண்டி
    ஏர்விடை செற்றிளங் கன்றெறிந் திட்ட
    இருடீகே சாஎன்றன் கண்ணே (பெரியாழ்வார் திருமொழி 2 : 3- 10) என்ற பாசுரம் காதுபெருக்குதல் என்ற பெயரில் குழந்தைகளுக்கு காதுகுத்தியமையை விளக்குகிறது.

    நாட்டுப்புறப்பாடல்களில் காதுகுத்துதல்

    ஆண்குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் காதுகுத்தும் மரபு பிற்காலத்தில் தமிழரிடையே வளா்ச்சிபெற்றது. “குழந்தைக்குச் சிறுகாயம் ஏற்படாவிட்டால் எமன் குழந்தையைத் தூக்கிச் சென்றுவிடுவான் என்ற நம்பிக்கையின் காரணமாகக் காதுகுத்தும் வழக்கம் தமிழ்நாட்டில் தோன்றியிருக்க வேண்டும். காதுகுத்தும் வழக்கம் தமிழ்நாடு மட்டுமின்றி, ஆசியா, எகிப்து போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. காதுகுத்தும்போது ஏதேனும்  உலோகத்தையும் அணிவிப்பா். தீமைதரும் ஆவிகள் தலை,வாய்,மூக்கு, காது ஆகிய உறுப்புகள் வழியாக எளிதில் புகுந்துவிடும் என்ற நம்பிக்கையில் ஏதேனும் ஓா் உலோகத்தை அணிவித்தால் காது வழியாகத் தீ ஆவி நுழைவதைத் தடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இப்பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். காதுகுத்தும் சடங்கிற்கு இத்தகைய நம்பிக்கைகள் அடிப்படைக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது”. (சு.சக்திவேல் நாட்டுப்புற இயல் ஆய்வு ப. 195)

    மேலும் “குழந்தையின் உடலில் காயம் ஏற்படுத்துவதால் தீய ஆவிகளினால் துன்பம் உண்டாகாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இச்சடங்கு தோன்றியது என்பா்” (ஞானசேகரன் மக்கள்வாழ்வில் மந்திரச் சடங்குகள் ப.23) தீய ஆவிகளின் தாக்குதலிலிருந்து குழந்தைகளைக் காக்க ஏற்பட்ட இச்சடங்கு காலமாற்றத்தால் பெண்ணுக்குப் பிறந்தவீட்டுடன் நெருக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் வீட்டில் நடத்தும் விழாவாக மாற்றம்பெற்றது எனலாம்.

    மாம்பிஞ்சு கொண்டு
    மதுரைசிமிக்கி கொண்டு
    காதுகுத்த வாராக
    கனகமுடி உங்களம்மான் (தமிழர் நாட்டுப்பாடல்கள் ப. 101) என்ற நாட்டுப்புறப்பாடலடிகள் காதுகுத்துவதில் மாமனின் சிறப்பிடத்தை அறியத் தருகின்றன.

    தற்காலத்தில் காதுகுத்துதல்

    தற்காலத்தில் காதுகுத்துதல் சடங்குமுறையாக மாற்றம் பெற்றாலும் அச்சடங்கிற்கு ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் கருத்துகள் கூறப்படுகின்றன. ஆன்மீக ரீதியாக ’ஓ’ என்னும் காதுவடிவில் ’ம்’ என்னும் புள்ளி குத்தப் பெறுவதால் இயக்கம் – புனிதத்தன்மை கிடைக்கிறது என்பதை உணர்த்தவே இந்தக் காதுகுத்தல் இந்து சமயத்தவரிடையே உள்ளது என்பா். அறிவியல்ரீதியாக தங்கம் போன்ற உலோகங்களின் வழியாகத் தண்ணீர் வந்து நம் உடலில் படும்போது நம் உடல் நலத்துக்கு உகந்தது என்பா். மேலும் காதுகுத்துவதால் ஹிரணியா, ஹைடிரோசல் முதலிய நோய்கள் வராது என்றும் குறிப்பிடுவா்.

    சங்ககாலத்தில் காதணிகள் அழகிற்கென அணியப்பட்டன. பக்தி இலக்கிய காலத்தில் அது சடங்காக மாற்றம் பெற்றது. பிற்காலத்தில் பெண்களுக்குப் பிறந்த வீட்டுடனான தொடர்பிற்காகவும் தாய்மாமனின் முதன்மைக்காகவும் நடத்தப்படும் சடங்காகவும், பெண்களுக்கான சீா்முறைகளில் இடம்பெறும் சடங்காகவும் மாறியது. இக்காதுகுத்துதல் அறிவியல் முறைப்படி உடல்நலனுக்கு ஏற்றதாகவும் அமைகிறது.

    *****

    -முனைவா் பா.பொன்னி
    உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவா்

    எஸ்எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
    சிவகாசி.

     

    Share
  • அ  கலாம்  ஆகலாம்!

    – சித்ரப்ரியங்கா ராஜா,  திருவண்ணாமலை

     

    apj

     

    அழகிய மழலையாய் அவதரித்தாய்
    அக்னிச் சிறகு நாயகனே இன்று
    ஆனந்தத்திற்கோ அளவில்லை
    அ கலாம் நீ எங்களுடனே என்று
    அன்னை உனையும் ஈன்றிருக்கலாம்
    அள்ளி உச்சி தான் முகர்ந்திருக்கலாம்
    அல்லல் மறந்துனை வளர்த்திருக்கலாம்
    ஆ! என் மகனென வியந்திருக்கலாம்
    அயராது நீயும்  உழைத்திருக்கலாம்
    அணுஆற்றலை நீ அசைத்திருக்கலாம்
    அகிலமும் அதனால் அதிர்ந்திருக்கலாம்
    அய்யனே நீ தானே எங்கள் அ  கலாம்!
    ஆகாயத்திற்கு நீயும் விண்கலன் அனுப்பி
    அணு விஞ்ஞானியாய் உயர்ந்த கலாம்
    அவனியில் பலரும் வியந்திடத் தானே
    அறிவழகனாய் பவனி வந்த கலாம்
    அ கலாமாய் நாங்களும் ஆகிடத் தானே
    ஆர்வம் பலருக்கும்  நீ அறிவாய்  ஐயா
    அன்று நீ எங்களுக்கு இயம்பிய சொல்லே
    ஆழமாய்ப் பசுமரத்தாணி போல் மனதுள்
    அண்ணலே உன் பிறந்த நாளில் தானே
    ஆவலுடன் உறுதி பூணுவோமே நாங்கள்
    அன்னை பாரதமுமே வல்லரசாய் மாற
    ஆற்றுவோம் பணி உன் வழியில் எனவே
    அய்யனே உன் பிறப்பு அழகிய சரித்திரமே!

     

     

    Share
  • மனிதநேயம் எங்கே போகிறது!

    -மணிமுத்து

    அழகான அந்திமாலை மெதுவாகத் தன்னை மறைத்துக்கொண்டிருந்த நேரம். சூரியனுக்கு பயந்து ஒளிந்திருந்த நட்சத்திரங்கள் தலைகாட்ட ஆரம்பித்திருந்தன.

    போக்குவரத்து நிறைந்த பழைய மகாபலிபுரம் ரோட்டினில் ஒரு பெரிய தெரு. எப்போதோ ரோடு போடுவதற்காகத் தோண்டிய குழிகள் ஆங்கங்கே வாயைப்பிளந்து கொண்டிருந்தன.

    எவ்வளவு பெரிய வித்தகனும் அவனுடைய வண்டியினுடைய வேகத்தை அங்குக் காட்டமுடியாது.

    மென்பொறியாளர்கள் அதிகம் வாழும் ஏரியாவாக இருக்க வேண்டும். ஏனென்றால் எல்லோர் கழுத்திலும் ஏதோ ஒரு நிறத்தில் அவர்களை அறிமுகப்படுத்தும் அட்டை தொங்கிக்கொண்டிருந்தது.

    சில பெரியவர்கள் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். சிலர் கைகளில் காய்கறிக்கூடை மறுநாள் சமையலுக்கு மட்டுமில்லாமல், மறுநாள் நிச்சயம் வாழ்வோம் என்ற தன்னம்பிக்கையை ஊட்டுவதாய். ஏனோ எனக்குள் காய்கறிக் கூடையில் உள்ள கத்திரிக்காயும், முள்ளங்கியும் பேசிக் கொண்டதுபோல் ஓர் உணர்வு. நாளை சம்பாருக்கு நீயா இல்லை நானா என்று சிரித்தபடி. வாழ்க்கை முடியப் போகிறபோதும் கூட சிரிக்கின்ற அவைகளுக்குத் தெரியும் உண்மை “எதுவும் நிரந்தரமில்லை.” ஏனோ நம்மால் மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாததாய்.

    ஒருசில பள்ளிச்சிறுவர்கள், மாலை வகுப்பு முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்தனர் மிதிவண்டியில் நண்பர்களுடன் பேசியபடி.

    அவளும் வேலைமுடிந்து திரும்பிக் கொண்டிருந்தாள் சுற்றிலும் வேடிக்கைப் பார்த்தப்படி. அவளும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் தான் வேலை செய்யவேண்டும், அவள் கழுத்திலும் ஊதா நிறத்தில் அவளுடைய அறிமுகம் தொங்கிக் கொண்டிருந்தது.

    களைத்துக் கூடு திரும்புகின்ற குருவிகள்போல எல்லோர் முகங்களிலும் ஒரு நிம்மதி; காலை நேரப் பரபரப்பு சுத்தமாக வடிந்திருந்தது. ஆனால் அவளிடம் மட்டும் திடீரென்று ஒரு பரபரப்பு… வேகமாக ஒடினாள்.

    மத்திய வயதுடைய ஒரு மனிதர் ஐம்பதைத் தொடக்கூடும், நடுரோட்டில் அமர்ந்திருந்தார். பார்ப்பதற்கோ குடிபோதையில் வழி ஞாபகமில்லாமல் நடுரோட்டில் அமர்ந்திருப்பதைப்போல் தோன்றியது.

    அருகிலேயே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த சாலை ஓரக்கடை, கடையைச் சுற்றியிலும் வண்டாக மொய்த்த சிலர். அவரவர் கதைகளைப் பேசியப்படி தட்டில் இருப்பதை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தனர்.

    நமக்கெதற்குப் பஞ்சாயத்து என்று எல்லோரும் ஒதுங்கிப்போக, எதிரே வேகமாக வந்த சீருந்தோ அவரை இடிக்காமல் அதுவும் ஓரமாக ஒதுங்கிச்சென்றது. சுற்றிலும் எத்தனைபேர் இருந்தபோதிலும் ஏன் என்று கேட்க ஒருவர் இல்லை; ஆனால் அவளோ வேகமாகச்சென்று அவரின் கையைப்பிடித்து ஓரமாக ஒருமரத்தின் அடியில் அமர வைத்தவள், பின்பு அவரை விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவருக்கு மாலையில் பார்வை அவ்வளவாகத் தெரியாதென்று. அவர் நடுரோட்டில் தான் அமர்ந்திருக்கிறோம் என்பதே அவள் சொல்லித்தான் உணர்ந்துகொண்டார்.

    மனது கசந்தது அவளுக்கு. ஏனிப்படி மனிதநேயம் இல்லாமல் போனது நமது சமுகத்தில் என்று. கலங்கிய கண்களுடன் சுற்றி நோட்டம் விட, அப்போதும் அவரவர் வேலையில் கண்ணாக இருந்தனர்.

    பிறகு அவருக்கு அங்கிருந்த கடையில் சாப்பிட வாங்கிக்கொடுத்தவள், அவரிடம் தொலைபேசி எண்ணை விசாரித்தாள், அவருடைய வீட்டிற்கு தொடர்புகொள்ள.

    ஆனால் அவரிடம் தொலைபேசி எண் எதுவும் இல்லை, அந்த மரத்தின் கீழேயே தங்கிவிட்டுக் காலையில் செல்வதாகக் கூறினார்.

    அவரை அங்கேயே விட்டுவிட்டு வேகமாகச் சென்றவள், சென்ற வேகத்தில் திரும்பிவந்தாள், கைகளில் தண்ணீர் பாட்டிலுடன். அதை அவர் கையில் கொடுத்துவிட்டு அவளும் சென்றாள் மனதில் கனத்துடன்.

    நம்மிடம் கருணை இல்லாமல் போகவில்லை. இன்னும் பலரிடம் இருக்கத்தான் செய்கிறது, அவளைப் போல.

    வாழ்க்கை மிகவும் அழகானதுதான் நமக்காக வாழும்போது மட்டுமல்ல பிறரிடம் சிறிது அன்பைச் செலுத்தும் போதும்தான்!

    நமக்கென்ன என்றொதுங்கி நாம் வாழ்க்கையில் எதைச் சாதித்தோம்?

    நாம் பாதுகாப்பு வட்டத்துக்குள் இருப்பதாக நினைக்கிறோம், அது முழுவதும் நிஜமா?

    நம்முள் பலருக்கும் கேள்வி எனக்கு யார் உதவினார்கள் என்பதுதானே?

    நமக்குத் தெரிந்தே நாம் சமூகத்திலிருந்து பிரிந்து தனித்தனி தீவுகளாக வாழ்கிறோம்!

    இதுவா நம் முன்னோர்கள் நம்மைப்பற்றிக் கனவுகண்ட ஒற்றுமையான சமுகம்?

    ”இல்லை!”

    சிறு தீக்குச்சிதான் பெரிய பொறியாக மாறும்.

    நாம் முதலில் சிறிய தீக்குச்சியாக இருப்போம்!

    எல்லாப் புரட்சிக்கும் எப்போதுமே ஏதாவது ஒரு சிறிய செயல்தான் தூண்டுகோலாய் இருந்தது!

    அந்த ஒருவனை ஏன் நாம் மற்றவனில் தேட வேண்டும்?

    மாற்றத்தை மற்றவர்களில் காண நமக்குள் மாற்றத்தை விதைப்போம் தோழா!

    Share
  • அழகு

    கவிஞர் ஜவஹர்லால்

    எதுஅழகு ? எப்படி? இப்படிப் பார்க்கலாமா?
    எதிலழ கில்லை? ஏனழ கங்கில்லை ?

    அழகு நிலவுவது எதிலே ? சேர்க்கையில்
    அழகெனப் படுவது பொருளிலா ? பார்வையிலா ?

    காக்கை கருப்புத்தான்; காக்கைக் கதுவெறுப்பா?
    சேர்க்கையில் அவைசிரித்துச் சிலிர்ப்பதில் அழகிலையா?

    மண்ணை இருட்டாக்கும் வான்மேகக் கருங்கூட்டம்
    எண்ணத்தை மயக்கும் இனிய அழகிலையா ?

    வண்ணத்தி லாஅழகு ? இல்லை; பார்க்கும்நம்
    எண்ணத்தில் எதுவினிக்கும் அதிலே அழகிருக்கும்.

    பூத்துச் சிரிக்கின்ற புதுமலர் தானழகா ?
    காற்றில் உதிர்கின்ற மலரிதழில் அழகிலையா ?

    நெடிதோங்கி நிமிர்ந்தாடும் நெடுமரம் தானழகா ?
    ஒடிந்தே அசைகின்ற சிறுகொம்பில் அழகிலையா ?

    மான்களின் கண்மருட்சி அழகுதான்; ஆனாலும்
    கான்திரியும் கொடும்புலியின் முறைப்பும் அழகுதானே !

    எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?
    அங்கங்கே காண்பவைதாம் அகம்தழுவின் அழகுவரும்.

    நிமிர்ந்தவையா? வளைந்தவையா? எதற்குமே அடங்காமல்
    திமிர்ந்தவையா? திரிபவையா? திருடி வாழ்பவையா?

    எதுவாக இருந்தாலும் அதுவாக அதுவிருந்தால்
    எதுபோழ்தும் அதுவழகு; இதயங்கள் கொளலழகு.

    கண்ணழகு; மூக்கழகு; காணும் முகவழகு;
    முன்னழகு; பின்னழகு; இவைக்கெது அளவுகோல் ?

    இடையழகு எதிலிருக்கும் ? இல்லாம லிருப்பதிலா ?
    நடையசைவில் ஒடிந்துவிடும் கொடியிடையின் அசைவினிலா ?

    ஒருவனுக்கு வானவில் வண்ணம் பேரழகு;
    ஒருவனுக் கவ்வில்லின் வளைவு பேரழகு;

    வண்ணமா ? வளைவா? எதிலே அழகிருக்கும் ?
    எண்ணத்தி லெதுபதியும்? அதிலே அழகிருக்கும்.

    கொடியிடையின் அசைவுநடம் அழகுதான்; ஆனாலும் துடிப்படங்கித் தடுமாறும் தளர்நடையில் அழகிலையா ?

    இளஞ்சேயின் சிறுமழலை அழகுதான்; ஆனாலும்
    நலஞ்சிதைந்த முதியோர்தம் நடுக்கம் அழகிலையா?

    பனிமொழியின் இதழ்சுரக்கும் நீர்நலந்தான்; ஆனாலும்
    கனிந்தகிழத் திதழொழுகும் கடைவாய்நீர் அழகிலையா ?

    எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?
    அங்கங்கே காண்பதிலே அகம்தழுவின் அழகுவரும்.

    காலைக் கதிரொளியின் களிநடனம் தானழகா ?
    மாலைக் கருக்கிருட்டின் மைநடனம் அழகிலையா ?

    இருளோட்டும் கதிரோனின் எழிற்பயணம் தானழகா ?
    மருளூட்டும் இருள்வானச் சுடர்மீன்கள் அழகிலையா?

    இருட்டில் அழகிலையா ? இளஞ்சோடி சொல்லட்டும்.
    இருட்டறையில் குருட்டாட்ட இயக்கம் அழகிலையா ?

    சிங்கத்தின் கம்பீரம் அழகுதான்; ஆனாலும்
    அங்கிருக்கும் குள்ளநரித் தந்திரமும் அழகுதானே !

    கொல்லேற்றின் திமிலசைவு அழகுதான்; ஆனாலும்
    நல்லதொரு தாய்ப்பசுவின் மடியசைவும் அழகுதானே ?

    எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?
    அங்கங்கே காண்பவைதாம் அகம்தழுவின் அழகுவரும்.

    நங்கநல்லூர்—20-02-2000

    Share
  • புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் தொடக்க விழா

    மு.இளங்கோவன்

    amu

    இலங்கையில் பிறந்த விபுலாநந்த அடிகளார் யாழ்நூல் என்ற நூலை எழுதி உலக அளவில் அறிமுகம் ஆனவர். இவர் சென்னை இராமகிருஷ்ண மடத்தில் துறவியாக இணைந்து, அந்த மடத்தின் பணிகளை இலங்கையில் கவனித்தவர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உறவுப் பாலம் அமைத்த இவரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக்கும் முயற்சியில் மு.இளங்கோவன் ஈடுபட்டுள்ளார். விபுலாநந்த அடிகளாரின் கடிதங்கள், கையெழுத்துச் சுவடிகள், நூல்கள், புகைப்படங்கள், நேர்காணல்கள் ஆகியவற்றின் துணையுடன் இந்த ஆவணப்படம் உருவாக உள்ளது.

    இந்த ஆவணப்படத்தின் தொடக்க விழா புதுச்சேரியில் 06.10.2016 வியாழன் மாலையில் நடைபெற்றது. புதுச்சேரி காமராசர் சாலையில் உள்ள ஜெயராம் ஓட்டலில் நடைபெற்ற ஆவணப்படத்தின் தொடக்க விழாவில் புதுச்சேரி உயர்கல்வித்துறை அமைச்சர் இரா. கமலக்கண்ணன் ஆவணப்படத்தைத் தொடங்கிவைத்தார். சட்டப்பேரவையின் துணைத்தலைவர் வே.பொ. சிவக்கொழுந்து. திருக்குறள் தமிழ் – ஆங்கிலப் பதிப்பினையும், இணையம் கற்போம் என்ற நூலினையும் வெளியிட்டார். தில்லித் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் கி.வா.க. பெருமாள் நூலின் முதல்படிகளைப் பெற்றுக்கொண்டார்.

    amu1

    கனடாவைச் சேர்ந்த சிவம் வேலுப்பிள்ளை சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

    ஆய்வறிஞர் கு. சிவமணி, புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் க. இளமதி சானகிராமன், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ஒப்பிலா. மதிவாணன்,  அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் அரங்க பாரி, வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியின் பேராசிரியர் ப. சிவராஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் புலவர் இ. திருநாவலன், புதுவை மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர் அரங்க.மு. முருகையன் வரவேற்புரையாற்றவும், மு.இளங்கோவன் ஏற்புரையாற்றவும், பேராசிரியர் உரு. அசோகன் நன்றியுரையாற்றினர். நிகழ்ச்சியைப் பேராசிரியர் மா. சுஜாதா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மிகுதியாகக் கலந்துகொண்டனர்.

    Share
  • தமிழ் இலக்கியங்களில் தாவர அறிவியல்

    -சு.விமல்ராஜ்

    சங்க இலக்கியங்கள் பழையனவற்றைப் பாதுகாக்கின்ற ஆவணங்களாக விளங்குகின்றன. பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்து அதன் முழுமைத்தன்மையைச் சிதைத்துவிடாமல் மிக நுணுக்கமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த இலக்கியங்கள் மிகச்சரியான சான்றுகளாக விளங்குகின்றன. தமிழர்களின் இந்த நுணுக்கம், வானியல்,தாவரவியல்,விலங்கியல்,உளவியல், மொழியியல் போன்ற பல்துறைப் புலமை இவைகளெல்லாம் பல நூற்றாண்டுகள் காடு, மலை, கடல், விலங்கு, பறவை, வானம் என்ற இயற்கையின் எல்லா நிலைகளையும் அதன் ஆழ அகலங்களில் நுழைந்து அனுபவித்து வாழ்ந்ததன் மூலம் பெற்ற பட்டறிவின் வெளிப்பாடே என்று சொல்லலாம்.

    தமிழிலக்கியத்தில் இருக்கக்கூடிய தாவார அறிவியல் உண்மைகள், தாவர மேலாண்மை, சுற்றுச்சூழல் அல்லது இயற்கை மீதான முழுமையான அன்பு இவைகளைப் பார்ப்பதற்குமுன்னால் தமிழர்களின் உயிர்க்கொள்கையைச் சற்று நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். காரணம், அந்த உயிர்க்கொள்கையே மிக அற்புதமானது. மேலைநாட்டு அறிஞர் பெருமக்கள் உயிர்க்கொள்கை, தாவரம் சார்ந்த கொள்கை இவைகளைப் பதிவுசெய்தது 19ஆம் நூற்றாண்டு. ஆனால் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக இலக்கிய இலக்கண நூல்களின் வாயிலாகப் பல்வேறு அறிவியல் நுணுக்கங்களைத் தமிழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

    ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
    இரண்டறி வதுவே அவற்றோடு நாவே
    மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே
    நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
    ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே
    ஆறறி வதுவே அவற்றோடு மனனே
    (தொல்.மர.1526)

    என்று உயிர்களை அதன் அறிவின் தன்மைக்கேற்ப வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர். கரோலஸ் லின்னேயஸ் உலக உயிர்களை இரண்டு பிரிவாக பிரித்தார். ஒன்று தாவர உலகம், மற்றொன்று விலங்கு உலகம். தொல்காப்பியர் சுட்டும் ஓரறிவு உயிர் தாவர உலகம். ஏனைய நான்கு உயிர்களும் விலங்கு உலகத்தைச் சார்ந்தது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களின் அறிவுகளை வைத்தே உயிர்களின் வகைப்பாட்டியலைத் தொல்காப்பியர் முன்வைக்கிறார். ஆறாவது புலனாக மனத்தைச் சுட்டியே மனத்தின் ஆற்றல் பயன்படுத்தப்படுகிற உயிராக மனித விலங்கை அடையாளப்படுத்துகிறார். அதுமட்டுமின்றி மனிதனை உயர்திணை என்று பிரித்துக்காட்டி, மனிதனைத் தவிர்த்த ஏனைய உயிர்களை அல்திணை என்றார் அவர். ஹிப்போகிரேட்டஸ், அரிஸ்டாடில், தியோஃபரஸ்டஸீம், ப்ளைனி த எல்டர், ஜான்ரே, கரோலஸ் லின்னேயஸ், அகஸ்டின் பாரமஸ்டின் கண்டோல் ஆகிய இவர்களெல்லாம் உயிரினம் தொடர்பாகவும், தாவரத்தின் வகைப்பாடுகள் தொடர்பாகவும் விதியைப் படைத்தவர்கள்.

    தொல்காப்பியர் புலன் அறிவை வைத்துப்பேசுகிறார். மேலை நாட்டு அறிஞர் பெருமக்கள் உயிர் இயங்குதல் அல்லது திசுக்களின் அடிப்படையில் பிரிக்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டில் வார்மிங் நீர்வாழ் தாவரங்கள், இடைனிலைத் தாவரங்கள், வறள்நிலத் தாவரங்கள் என்று மூன்றாகப் பிரித்தார். தாவர வகைப்பாடு என்பது அதன் வளரும் தன்மையை வைத்துத்தான் பிரிக்கப்படுகிறது. தாவரங்கள் வளரும் இடம், அதன் சூழல் எது என்பதை வைத்து அதன் தன்மையைப் பிரிக்கிறார்கள் அறிவியலாளர்கள். தமிழர்களின் தாவர வகைப்பாடு வளர்நிலை அடிப்படையில் இருந்தது, மேலை நாட்டு வகைப்பாடும் வளர்நிலை அடிப்படையில் இருந்தபோதும் 18-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாகத் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்பு அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது. தமிழில் இத்தகைய செயல்முறை அறிவியல் வளர்ச்சி இல்லை.

    மேனாட்டு அறிஞர்களின் பார்வையில் தாவரங்கள் தாலோபைட்டா, பிரையோபைட்டா, டெரிட்டோபைட்டா என்று மூன்று பெரும்பிரிவாகப் பார்க்கப்படுகிறது. தாலோபைட்டாவை தகட்டுத்தாவரங்கள் என்றும் பிரையோபைட்டாவை பாசத்தாவரங்கள் என்றும் டெரிட்டோபைட்டாவை குழாய்த்தாவரங்கள் என்றும் தமிழில் அழைப்பர். குழாய்த்தாவரம் என்னும் அமைப்பில்தான் பெரும்பாலான புல், மரம், செடி, கொடி ஆகிய அனைத்தும் அடங்கும். மேலும் விதைமூடிய தாவரம் விதைமூடாத தாவரம் என்றும் சுட்டுவர். விதை மூடியது ஆஞ்சியோஸ்பெர்ம் என்னும் பொதுவானது. விதை மூடாதது ஜிம்னோஸ்பெர்ம். இது குளிர்பகுதிகளில் வளரக்கூடியது.

    இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று அறிஞர்கள் கருதும் தொல்காப்பியர் ஓரறிவு உடையது என்று தாவரத்தையே சுட்டுகிறார். “புல்லும் மரனும் ஓரறி வினவே”(தொல்.மர.1527) என்கிறார். இந்த இடத்தில் புல் என்றும், மரம் என்றும் தாவரத்தை இரண்டாக பிரிக்கிறார். புறக்காழ் உடையது புல், அகக்காழ் உடையது மரம், காழ் என்பதை வைரம் என்று பேச்சு வழக்கில் கூறுவார்கள். இந்த வகைப்பாடு உள்ளீடு அடிப்படையிலானது. உலகில் உள்ள அனைத்துத் தாவரங்களையும் இந்த வகைப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்பது தொல்காப்பியரின் எண்ணம். புறவயிர்ப்பு உடைய புல்லின வகைத் தாவரத்திற்குரிய உறுப்புகளைக் குறிப்பதற்கென்று தனியே பெயர் வழக்குகள் உள்ளனவென்பதைத் தொல்காப்பியர்,

    தோடே மடலே ஓலை என்றா
    ஏடே இதழே பாளை என்றா
    ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும்
    புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்
    (தொல்.மர.1586)

    என்று குறிப்பிடுகிறார். புல்லினத்தின் இலை தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ் என்னும் பெயர்களால் வழங்கப்படுகிறது. அவற்றின் பூவுறுப்பு பாளை எனப்படுகிறது. பழம் கொத்தாகத் தோன்றுவதால் அவை குலை என்று பெயரிட்டுக் கூறப்படுகிறது. நீண்ட இலையின் மைய நரம்புகள் ஈர்க்கு என்று அழைக்கப்படுகிறது.

    அகவயிர்ப்பு உடைய மரவகைத் தாவரத்திற்கு உரிய உறுப்புகளைக் குறிப்பதற்கு தொல்காப்பியர்,

    இலையே முறியே தளிரே தோடே
    சினையே குழையே பூவே அரும்பே
    நனையே உள்ளுறுத்த அனையவை எல்லாம்
    மரனோடு வரூஉம் கிளவி
    (தொல்.மர.1587) என்கிறார்.

    புல்லினம் மரஇனம் என்ற இரண்டிற்கும் பொதுவான உறுப்புகளைச் சுட்டிக்காட்டுவதற்கு,

    காயே பழமே தோலே செதிளே
    வீழோடு என்றாங்கு அவையும் அன்ன
    (தொல்.மர.1588)

    என்கிறார். தென்னையும் கமுகு என்னும் பாக்கும்  புல்வகையைச் சார்ந்தது இதன் காய் தேங்காய் கமுகங்காய் எனப்படுகிறது. வேம்பு மருதம் இவ்விரண்டும் மரவகையைச் சார்ந்தது. இதன் காய் வேப்பங்காய் மருதங்காய் எனப்படுகிறது. பழத்திற்கும் இதையே கூறுவர். பனை புல்வகையைச் சார்ந்தது; வேம்பு மரவகையைச் சார்ந்தது. இவ்விரண்டிற்கும் பனந்தோல், வேப்பதந்தோல், பனஞ்செதில் வேப்பஞ்செதில் என்பன பொதுவாக உள்ளன.

    புல் மரம் என்ற பகுப்பு அதன் உள்ளீடு தொடர்பானது. அதுமட்டுமல்லாமல் தமிழில் வளரியல்பு நோக்கில் தாவரம் வகைப்படுத்தப்படுகிறது. அவை மரத்தாவரம், கொடித்தாவரம், நிலத்தாவரம், நீர்த்தாவரம் என்பனவாகும். இந்த வகைப்பாடு பூவை முன்னிலைப்படுத்தியே பிரித்துப்பார்க்கப்படுகிறது. இந்த அடிப்படையில் பூவை மரத்தில் பூக்கக்கூடிய கோட்டுப்பூ, கொடிப்பூ, செடி அல்லது புல்லினங்களில் பூக்கக்கூடிய நிலப்பூ, நீர்ப்பூ என்று நான்காக வகைப்படுத்தப் படுகிறது.

    கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப் பூவொடு
    புதல்பூ
    என்று இவை நால்வகைப் பூவே ( பிங். நிகண்.2781) என்கிறது பிங்கல நிகண்டு. இந்த நான்குவகை அடிப்படையில் பல்வேறு சான்றுகளைத் தாங்கி நிற்கிறது சங்க இலக்கியங்கள். கோங்க மரத்தின் பூந்தாதினைச் சொல்லும்பொழுது அகநானூற்றில் சினைப் பூங் கோங்கின் நுண் தாது’ (அகம்.25.10) என்று இடம்பெற்றிருக்கிறது. சினை என்பது மரத்தாவரத்தின் உறுப்புப்பெயர். வண்டுகள் மாலை நேரத்தில் கூம்பும் இயல்புடைய நீர்ப்பூக்களில் இருந்து விலகி மரத்தின் பூக்களைப் போய்ச்சேர்ந்தன என்னும் செய்தியை அகநானூற்றின் ஒரு பாடல் வழியே பெறமுடிகிறது.

    அதாவது,
    வண்டினம்
    சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர
    (அகம்.71.4) என்று சுட்டுகிறது.

    புதலில் பூக்கள் பூத்திருந்ததைப் புறநானூற்றுப்பாடல் “வயலகம் நிறைய புதல்பூ மலர” (புறம்.117.3) என்கிறது.

    சங்க இலக்கியத்தில் இருக்கக்கூடிய வகைப்பாடுகளை எடுத்துக்கொண்டால், மரம், கொடி, புதல், செடி, பூண்டு, பயிர், நீர்த்தாவரம், புல், பாசி, காளான், நார், புலன் உணர்வுத்தாவரங்கள், விரிவாக எடுத்துக்கொண்டால் அதில் மரங்கள் வளரியல்பு அடிப்படையில் எடுத்தாளப்படுகிறது. மரம் என்ற சொல் திராவிட மொழிகளில் மரம், மரனு, மர, மேன், மர்ம், மாக், மக் என்று ஒரே பொருளை உணர்த்தியும் ஒலித்திரிபு அடைந்தும் வழங்கப்படுகிறது. மரவழிபாடுதான் மிகப்பழமையான வழிபாடு.

    சங்க இலக்கியம், வாவல் பழுமரம் (குறுந்.172), காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த ( நற்.256), மரம் தலை மணந்த நனந்தலை கானத்து ( நற்.246) என்று மரவகையைச் சுட்டி நிற்கிறது. மரவகைக்கு மேலை நாட்டு அறிவியல் அறிஞர்கள் கூறும் நெறிமுறைகள் சங்கத்தமிழில் நிறைந்து காணப்படுகிறது. பராரை (அகம்.69) என்னும் அதன் திண்மையுடைய வைரம் அகநானூற்றில் குறிப்பிடப்படுகிறது. மீமிசைச்சாந்து (நற்.1), வான் பொரு நெடுஞ்சினை ( நற்.3) என்ற நற்றிணைப்பாடல் வரிகள் மரம் உயர்ந்து வளரக்கூடியது என்பதை எடுத்துக்காட்டுகிறது. தொல் மூதாலம் (குறுந்.15) என்னும் குறுந்தொகைக் கவிதை மரம் நீண்டநாள் உயிர் வாழக்கூடியது என்பதை உணர்த்துகிறது. காழ் என்னும் மரத்தின் வயிர்ப்பை உணர்த்துவது போல் வெளிறுஇல் காழ்வேலம் [வேல மரம்] (நற்.302.), நறுங்காழ் ஆரம் [சந்தன மரம்] ( நற்.5) புறக்காழ் உடைய புல் இனமான மூங்கிலைக் குறுந்தொகைப்பாடல் (304) ‘முளிவெதிர் நோன்காழ்’ என்கிறது.

    அரைப்புல்லுருவி வகையாகச் சந்தனத்தைக் கூறுகிறது,

    குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
    நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப
    ( நற்.5) என்பது நற்றிணைப்பாடல். இது தமக்கு உரிய உணவைத் தயாரித்துக்கொண்டு மீதமுள்ள உணவுக்கு ஏனைய தாவரங்களில் இருந்து எடுத்துக்கொள்ளும். புல்லுருவி வகை என்பது உண்டு. இது தமக்கு உரிய உணவைத் தாமே தயாரிக்கும் ஆற்றல் இல்லாமல் பிற தாவரம் அல்லது உயிர்களைச் சார்ந்து அவற்றிலிருந்து உணவைப் பெறுபவை ஆகும். இதைப் புல்லுருவி அல்லது சாறுண்ணி என்று அழைப்பர்.

    அடுத்து கொடிவகைகள் நீண்டு வளரக்கூடியவை. ஆனால் தாமாகவே தனித்து நிற்கும் ஆற்றல் இல்லாமல் பிறவற்றைச்சார்ந்து நிற்கக்கூடியது. இவற்றின் தண்டுப்பகுதி மிக மெல்லியவை. கயிறு போன்று இருக்கக்கூடியவை. வேர்க்கொடி, படர்க்கொடி, பற்றுக் கம்பிக்கொடி, சுற்றுக்கொடி, பெருங்கொடி என்று ஐந்துவகையாகக் கொடியைப் பிரிப்பர். கொடியின் மெலிந்த தன்மையை நுண்கொடி(அகம்.237), புன்கொடி(மலைபடு.101), மென்கொடி(குறுந்தொ.186) என்பனவும், பரூஉக்கொடி (மலைபடு.216) தண்டின் பருத்த தன்மையைக் காட்டுகிறது. நெடுங்கொடி(ஐங்குறு.6),  மாக்கொடி(குறுந்தொ.256) என்பன கொடியின் வளமான தன்மையை எடுத்துக்காட்டுகிறது. வெண்கொடி(ஐங்.456),கருங்கொடி(மலைபடு.521),செங்கொடி(ஐங்குறு.25),பைங்கொடி(பெரும்பாண்.337) என்பன கொடியின் நிறத்தை உணர்த்துகிறது. நறுங்கொடி தாமலம்(நற்.292) என்பது மணத்தைக் குறிக்கிறது. இவர் கொடிப்பீரம் (ஐங்.464), இவர்ந்த அதர்கொடி அதிரல் (அகம்.159), இவர்ந்த பைங்கொடி அவரை (குறுந்தொ.240), தவழ்கொடி(கலி.102), நெடுங்கண் ஆரத்து அலங்குசினை வலந்த பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலம்  ( நற்.292),  குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர் நறுங்காழ் ஆரம் சுற்றுவன( நற்.5) என்னும் இடங்கள் எல்லாம் படரியல்பு அடிப்படையில் படர்கொடி இதனை ஆங்கிலத்தில் கிரீப்பர் என்பர், ஏறுகொடி என்பதை ஆங்கிலத்தில் கிளைம்பர் என்பர். இவ்வகை கொடிக்கு இவை சான்றாக அமைகின்றன. கொடிக்கு பவர் என்னும் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    புதல் வகையை எடுத்துக்கொண்டால் செடி என்|றும் பொருள் கொள்ளலாம். ஏனெனில் இது நிலத்தில் புதர் புதராய் மண்டி வளரக்கூடியது.  சிறு செடிகளையும், குற்று மரங்களையும் செடி என்று வழங்குவர். செடியை அவற்றின் வாழ்நாள் அடிப்படையில் ஒரு பருவச்செடி, இருபருவச்செடி, பல பருவச்செடி என்று மூன்றாகக்கொள்வர். ஒரு பருவச்செடி ஒரு குறிப்பிட்ட பருவத்தில் தோன்றிச் சிலவாரம் அல்லது மாதங்களில் இலையும், பூவும் கனியும் உண்டாகி விதைமுற்றி அப்பருவத்திலேயே பட்டுப்போகும். இருபருவச் செடியில் முறையே சேமித்தல் முதல் பருவத்திலும் அவ்வுணவைக் கொண்டு பூவும் கனியும் உண்டாக்குதல் இரண்டாம் பருவத்திலும் நிகழும். இரண்டாம் பருவத்தின் முடிவில் அத்தாவரம் முழுமையும் பட்டுப்போகும். பல பருவச்செடியில் ஒருமுறை செடி தோன்றியபின் அது வளர்ந்து பூ, கனிகளை உண்டாக்கியதும் மேற்புறமிருக்கும் தண்டுக்கிளை மட்டுமே அழிந்து போகும். நிலப்பரப்பின் உட்புறம் உள்ள கிழங்கு அல்லது மட்டத் தண்டுக்கிழங்கு முதலியவற்றிலிருந்து புதிய தண்டுக்கிளை முளைத்து வளரும் இத்தகைய வளர்ச்சி முறை மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் வரை நிகழும். இந்த பகுப்பை வைத்துப்பார்த்தால் பலபருவச்செடி என்பது குறுமர வகுப்பு அல்லது புதலை குறிப்பதாகும். இருபருவ வாழ்விகளை செடி என்று கொள்ளலாம். ஒரு பருவ வாழ்விகளைப் பூடு என்று அழைக்கலாம்.

    அணிலின் வால்போல் கதிர்கொண்ட ஊகம்புல், மணமிக்க புல்லாகிய நரந்தம், பசும்புல், நுண்புல் முற்றா இளம்புல், முளிபுல் என்று ஊகம்புல்லும், நரந்தம்புல்லும், பொது நிலையில் புல்லின் வளரி இயல்பும் கோடிட்டுக்காட்டப்படுகிறது.

    விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா
    வழும்பு கண் புதைத்த நுண்ணீர்ப் பாசி
    அடிநிலை தளர்க்கும் அருப்பம்
    (மலைபடு.220-22) என்ற மலைபடுகடாம் வரிகள் பாசித்தாவரத்தின் வழுக்கும் இயல்பை வழும்பு என்ற சொல்லால் குறிக்கிறது. பாசியின் வழுக்கும் தன்மைக்குக் காரணம் மியூக்கஸ் என்னும் நெய்ப்புத்தன்மையுடைய ஒரு திரவம்தான். அந்த மியூக்கஸை வழும்பு என்ற சொல்லால் சங்க இலக்கியம் குறித்துவைத்திருக்கிறது.

    கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான்யாற்று
    கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ (நற்.65.2-3) என்று நீரின் அலையால் பிரிந்தும் சேர்ந்தும் பரவும் தன்மைக்கொண்ட பசிய நிறமுடைய பச்சைப்பாசியை குறிக்கிறது., இவை அன்றி இழைப்பாசி, கொட்டைப்பாசி ஆகியனவும் காட்டப்படுகிறது. பசுங்கனிகங்கள் பொருந்தித் தம் உணவைத் தாமே தயாரித்துக்கொள்ளும் இயல்பால் அமைந்த இதைத் தாவரமாக உணர்ந்து பாசி என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர் சங்கக்கவிஞர்கள்.

    தம் உணவைத் தாமே தயாரிக்காமல் பிறவற்றைச் சார்ந்து வாழக்கூடியவை காளான்கள். இது பெசிடியோமைசீட் என்னும் வகையைச் சார்ந்தது. சங்க இலக்கியத்தில் காளான்கள், காளான், ஆம்பி என்ற பெயரால் வழங்கப்பட்டுள்ளது.

    ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ்
    உறையமை தீந்தயிர் கலக்கி நிரைதெரிந்து
    (பெரு.157-58)

    ஆடு நனி மறந்த கோடுயர் அடுப்பின்
    ஆம்பி பூத்த
    (புறம்.164)

    புல்லென் அட்டில்
    காழ் சேர்முது சுவர்க் கணச்சிதல் அரித்த
    பூழி படர்ந்த புழற்காளாம்பி
    (சிறுபாண்.132-34)

    என்று காளான் குறிக்கப்படுகிறது. காளானின் தன்மை ஈரப்பசை பொருந்திய இருண்ட இடங்களில் குறிப்பாக புழுதியில் தோன்றுவன. அதையே, பல நாள்கள் அடுதொழில் நடைபெறாத அடுப்பு, சமையலறைச் சுவர்கள் ஆகியவற்றின் மீது முளைத்திருப்பதைக் காட்டியிருக்கிறது.

    நார் என்பது மிக முக்கிய ஒன்றாகும். தாவரங்களின் சத்துக்களைக் கடத்துவதற்கு இந்த நார் பங்குவகிக்கிறது. முருங்கை மரத்தின் நார் தொடர்ச்சியற்றது. இதை,

    சுரம் புல்லென்ற அற்ற அலங்குசினை
    நாரில் முருங்கை நவிரல் வான்பூ
    (அகம்.1)

    என்ற அகநானூற்றுப்பாடல் சுட்டிக்காட்டுகிரது. எளிதில் முறியும் இயல்பினாலே இது முருங்கை என்னும் பெயர் பெற்றதென்பர்.

    வாழை, தென்னை, மரல், சணல், பாலை, ஆம்பல் ஆகியவற்றில் நீர் கடத்தும் நார் பற்றிய உண்மை சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புலன் உணர்வுபெற்ற தாவரங்களாக நெருஞ்சி, அனிச்சம் ஆகியன காட்டப்பெறுகிறது. தரைத்தாவரமான நெருஞ்சி மலர்ந்ததும் கதிரவனின் ஒளியை நோக்கி திரியும் தன்மையை,

    சுடரொடு திரிதரும் நெருஞ்சி(அகம்.336)

    பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ ஏர்தரு சுடரின் எதிர்கொண்டாஅங்கு(புறம்.155)

    என்ற பாடல் வரிகளும்,

    தூநீர் பயந்த துணையமை பிணையல்
    மோயினள் உயிர்த்த காலை மாமலர்
    மணியுரு இழந்த அணி அழிதோற்றம் (அகம்.5)

    என்ற வரிகளும் தாவரங்களின் புலன்உணர்வை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன.

    உலகில் தற்போது வாழ்ந்து வரும் தாவரங்கள் ஏறத்தாழ 3,63,730 தாவரப் பேரினங்களில் அடங்கும். இவை பரிணாம முறையில் நுண்மங்கள், பாசிகள், காளான்கள், ஈரற்செடிகள், பெரணைகள், விதை மூடாத தாவரங்கள் பூக்கும் தாவரங்கள் எனப் பாகுபடுத்தப்பட்டுள்ளன. பூக்கும் தாவரங்களில் மட்டும் 96,680 பேரினங்கள் உலகெங்கிலும் வளர்கின்றன. ஒரு பேரினத்தில் பல சிற்றினங்கள் உண்டு. பண்டைய இந்திய நாட்டில் மட்டும் வளரும் சற்றேறக்குறைய 47,200 சிற்றினங்கள் பற்றிய விளக்கங்களை ஜெ.டி.ஹூக்கர் (1897) என்பவர் எழுதியுள்ளார்.பழைய சென்னை மாநிலத்தில் 9300 சிற்றினங்கள் பற்றிய விளக்கங்களை ஜெ.எஸ். காம்பில்(1915) எழுதியுள்ளார். இம்மாநிலத்தில் வளரும் ஏறக்குறைய 10,640 மரம், செடி, கொடிகளின் தாவரச் சிற்றினப் பெயர்களையும் அவற்றின் தமிழ்ப்பெயர்களையும் ஏ.டபுள்யூ.லஷிங்டன் (1915) என்பவர் பட்டியலிட்டுள்ளார்.

    சங்க இலக்கியங்களில் மட்டும் 210 மரம் செடி கொடிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட தாவரங்கள், இனி புதிய தாவரத்தைக் கண்டறிந்தாலும் அதை இண்டர்நேஷனல் கொட் ஆஃப் பொடான்னிகல் நோமென்க்லேச்சர்- ஐ சி பி என் என்ற விதிமுறைக்கு உட்பட்டே பகுக்கின்றனர். புதிய அனுமதி பெறுவதற்கு லண்டல் கியூ நிறுவனத்தை நாடவேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தாவரப்பட்டியல் வெளியிடப்படுகிறது., அதற்கு இண்டெக்ஸ் கெவென்சிஸ் என்று பெயர்.

    பழந்தமிழர்கள் இயற்கையை மிக ஆழமாக நேசித்திருக்கிறார்கள். தங்களின் ஒவ்வொரு அசைவையும் இயற்கையின் விதியை மீறாமல் நடத்தியிருக்கிறார்கள். இன்று இயற்கையை மதியாத பல விதிமீறல்கள்  நடைபெறுவதால் தான் வானம் பொய்க்கிறது; இல்லையேல் காலம் மாறிப் பெய்கிறது. சுற்றுச்சூழலை மனிதன் மதித்து நடக்கவேண்டும். கவிஞர் வைரமுத்து அவர்கள் மரத்தின் பயனாகா பட்டியலிடுவார்,

    “பிறந்தோம்
    தொட்டில்
    மரத்தின் உபயம்
    நடந்தோம்
    நடைவண்டி
    மரத்தின் உபயம்
    ………………………………………
    இறந்தோம்
    சவப்பெட்டி பாடை
    எரிந்தோம்
    சுடலை விறகு
    மரத்தின் உபயம்”(இ.பூ.168)

    மரம் மனிதனுக்குக்கொடுப்பது…..

    உண்ணக்கனி- ஒதுங்க நிழல்
    உடலுக்கு மருந்து – உணர்வுக்கு விருந்து
    அடையக்குடில் – அடைக்கக் கதவு
    அழகு வேலி – ஆடத்தூளி
    தடவத் தைலம் – தாளிக்க எண்ணெய்
    எழுதக் காகிதம் – எரிக்க விறகு (இ.பூ.166)

    இத்தனைப் பயன்களையும் பெற்றுக்கொண்டு இயற்கையை

    மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான் என்று மரத்தை உயர்த்தியும் மனிதனின் தவற்றை உணர்த்தியும் கூறியிருக்கிறார். இயற்கையை இனிது போற்றுவோம்; எழிலார்ந்த வாழ்வை கூடிப்பெறுவோம்.

    *****

    சு.விமல்ராஜ்
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    அ.வ.அ.கல்லூரி(தன்.)
    மன்னன்பந்தல்.
    அலை:8220470590
    மின்:thamizvimal@gmail.com

     

     

    Share
  • உலக இதய நாள்

    சித்ரப்ரியங்கா ராஜா
    itayam

    அடே மனிதா நினைவில் நிறுத்து

    ஆபத்தான புகையை குறைத்து

    இதயத்தை நீ தான் காத்திடுவாயே

    ஈடில்லா வாழ்வு வாழ்ந்திடுவாயே

    உள்ளம் என்பது கோயில் ஆகும்

    ஊறு தான் வரின் இதயமே வாடும்

    எல்லா நாளும் கவலையை குறைத்து

    ஏறு போல் வலிமை இதயத்தே நிறுத்து

    ஐயம் தவிர்த்து இதயம் பல வெல்வாய்

    ஒற்றுமை பேணியே நல்வழி செல்வாய்

    ஓய்வெடுத்து நீயும் இதயத்தை காத்து

    கோவிலாய் அதில் நீ சுடரேற்றிடுவாய்

    Share
  • சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

    -க.பிரகாஷ் 

    விருந்தோம்பல்

         விருந்தோம்பல் என்பது ஒரு விருந்தினர் மற்றும் அவரது புரவலர் ஆகியோருக்கு இடையிலான உறவுமுறை. பொதுவாக விருந்தோம்பல் உயிர்களுக்கு ஆதரவளிக்கும் குணத்தைக் குறிப்பதுண்டு.  ஆங்கிலத்தில் விருந்தோம்பல் என்ற சொல்லுக்கு ‘ஹாஸ்பிட்டாலிட்டி’ என்று குறிப்பிடுகின்றனர். இது இலத்தீன் மொழிச் சொல்லான ஹாஸ்பெஸ் என்பதிலிருந்து பெறப்படுகிறது. இச்சொல்லோ ‘அதிகாரம் கொள்ளல்’ எனப் பொருள்படுவதான ‘ஹாஸ்டடிஸ்’ என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. ‘ஹோஸ்ட்’ என்பதன் பொருள் சொற்சார்ந்து அப்படியே உரைப்பதாயின் அந்நியர்களின் பெருமகன் எனப் பொருளாகும்.

         ஹோமரின் காலங்களில் கிரேக்க மதக் கடவுளரின் தலைவராக இருந்த ஜீயஸ் என்னும் கடவுளின் பொறுப்பில் விருந்தோம்பல் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். ஜீயஸ் கடவுளை ஜெனோஸ் ஜீயஸ் (ஜெனோஸ் என்பதன் பொருள் அந்நியன்) என்றும் கூறுவதுண்டு. விருந்தோம்பலே தலையாய பணி எனும் மெய்ம்மையை வலியுறுத்துவதாக இது அமைந்தது. கிரேக்கத்தில் ஒரு வீட்டுக்கு வெளியே சென்று கொண்டிருக்கும் அந்நியர் ஒருவரை அவ்வீட்டில் வசிப்பவர்கள் இல்லத்தினுள் வருமாறு அழைப்பு விடுப்பர். வீட்டின் தலைவரான புரவலர் அந்த அந்நியரின் பாதங்களைக் கழுவி உணவு மற்றும் திராட்சை ரசத்தை அளித்து அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகே அவரது பெயரைக் கூடக் கேட்டறிந்து கொள்ளும் வழக்கம் உண்டு.

    பண்டைய கால விருந்தோம்பல்

         பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களுக்கு விருந்தேம்பல் என்பது ஒரு தெய்வீக நிலையாக இருந்தது. தனது விருந்தாளிகளின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டனவா என்று உறுதிசெய்து கொள்வது ஒரு புரவலனின் கட்டுப்பாடாக இருந்தது. பண்டைய கிரேக்கச் சொல்லான எக்ஸெனியா என்பதன் பொருள் விருந்தாளி – நட்புச் சடங்கு உறவைச் சுட்டுவதாகும்.

         பண்டைய உலகில் விருந்தோம்பல் எவ்வாறு மிகப்பெரும் இடம் பெற்றிருந்தது என்பதை பாசில் மற்றும் ஃபிலோமின் கதை விவரிக்கிறது. இக்கதையில் பழங்காலத்திய கடவுளரான ஜீயஸ் மற்றும் ஹெர்ரமஸ் ஆகியோர் ஃபிர்ஜியா நகரில் எளிய உழவர் போல வேடம் புனைந்து வருகின்றனர். இரவுக்கான உணவும் உறைவிடமும் தேடி அவர்கள் அலைகையில் பெரும்பாலும் மூடிய கதவுகளையே சந்திக்கின்றனர். இறுதியாக பாசிஸ் மற்றும் ஃபிலோமினின் இல்லத்தை அடைகின்றனர். தாங்கள் ஏழ்மையில் வாடியபோதும் இத்தம்பதி இருக்கும் மிகக் குறைவான உணவை விருந்தினருக்கு அளிக்கின்றனர். தங்களது விருந்தினர் உண்மையில் கடவுள் என அறிகையில் தங்களது வீட்டைக் காக்கும் ஒரே வாத்தையும் வெட்டிப் படைப்பதற்கு முன்வருகின்றனர். இதற்கு வெகுமதியாக கடவுளர் அவர்களுக்கு வரம் ஒன்றை கொடுக்கின்றனர்.

    செல்ட்டிக் நாகரிகங்களில் விருந்தோம்பல்

         விருந்தோம்பல் என்னும் பண்பு, குறிப்பாக, பாதுகாப்பு அளிப்பது ஆகும்.  செல்ட்டிக் நாகரிகத்தைச் சார்ந்த சமூகங்களில் மிகுந்த அளவில் மதிப்புற்றிருந்தது. அடைக்கலம் கேட்டு வரும் ஒருவருக்குப் புரவலரானவர், உண்டியும் உறைவிடமும் மட்டும் அன்றித் தமது கவனிப்பில் இருக்கையில் அவருக்குத் தீங்கு ஏதும் நேராத வண்ணம் பாதுகாக்கவும் வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு யதார்த்தமான வாழ்க்கையில் உதாரணம் ஒன்றை வரலாறு அளிக்கிறது.

    கி.பி 17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்தது ஸ்காட்டிஷ் மெக்கிராகோர் எனும் குலம். இலாமோண்ட் என்னும் குலத் தலைவர் கிளைன்ஸ்டிரேவில் வாழும் மெக்கிராகோர் தலைவரின் இல்லத்தை அடைந்து தாம் எதிரிகளிடம் இருந்து தப்பித்து வருவதாகக் கூறி அடைக்கலம் கோருகிறார். தமது சகோதரத் தலைவரை கேள்விகள் ஏதும் கேட்காமலேயே மெக்கிரோகர் வரவேற்கிறார். பின்னர், இரவுப் பொழுதில் இலாமோண்ட் தலைவரைத் தேடி வரும் மெக்கிரகோர் குல மக்கள் மெக்கிரகோரிடம் உண்மையில் அவரது மகனையே இலாமோண்ட் தலைவர் கொன்றுவிட்டதாக குறிப்பிடுகின்றனர். விருந்தோம்பலின் புனிதக் கடமையின் பாற்பட்டு மெக்கிரோகர் தலைவர் இலாமோண்ட்டைத் தனது குல மக்களிடம் ஒப்படைக்க மறுப்பது மட்டும் அல்லாது மறுநாள் காலை அவரை அவரது பூர்வீக இடத்திற்குத் தாமே வழித்துணையாக உடன்சென்று அனுப்பிவைக்கின்றார்.

    இந்தியாவில் விருந்தோம்பல்

         உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று. தொன்மையான கலாசாரங்களைப் போலவே விருந்தோம்பல் உள்ளிட்ட பல அருமையான பண்புகளை இந்தியக் கலாசாரமும் கொண்டுள்ளது. மூடன் ஒருவன் அழையாத விருந்தாளியுடன் தனது சிறு உண்டியை மறுபேச்சின்றிப் பகிர்ந்து கொள்கையில் தன்னிடம் வந்த விருந்தாளி மாறுவேடம் பூண்ட இறைவன் என்பதைக் கண்டு கொள்கிறான். அவனது தாராள மனத்திற்காகக் கடவுள் அவனுக்கு மிகுந்த செல்வமளிக்கிறார்.

         பசியுடன் இருக்கும் அனைவரும் உண்பதற்காகப் பெண் ஒருத்தி தன்னிடம் இருக்கும் கிச்சடி அனைத்தையும் சமைத்து அளிக்கிறாள். ஒரு நாள் அவளிடம் இருக்கும் உணவுப் பண்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடவே இறுதியாகப் பசியுடன் வரும் ஒருவனுக்குத் தன் உணவையே அவள் அளிக்கையில் இறைவனிடம் இருந்து என்றும் குன்றாது நிறைந்தே இருக்கும் கிச்சிடி கொண்ட பாத்திரம் ஒன்றைப் பெறுகிறாள். குழந்தைகளாகத் தாம் இருந்த காலம்தொட்டே இத்தகைய கதைகளைக் கேட்டு வளரும் பெரும்பாலான இந்தியர்கள், விருந்தாளியே ஆண்டவன் என்பதை உணர்ந்து, சமூக நிகழ்வுகளிலும் விருந்தாளிகளின்பால் அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளும் இந்த அணுகு முறையை உருவாக்கினர்.

    எனவே தமிழில் படைக்கப்பட்ட தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், நீதி நூல்கள், சிலப்பதிகாரம் போன்றவற்றிலும் விருந்தோம்பல் பற்றிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

    “…………………………………………………………………………………………….
         உண்டாயின் பதம் கொடுத்து
         இல்லாயின் உடன் உண்ணும்
         இல்லோர் ஒக்கல் தலைவன்
        அண்ணல் எம்கோமான், வைந் நுதி வேலே”                (புறம் – 95)

         செல்வமுடையராய் இருக்கும்போது உணவு கொடுத்தும், இல்லாதபோது இருப்பதைப் பகிர்ந்து உடன் உண்ணும் வறியோர் சுற்றத்திற்குத் தலைவனும், தலைமை சான்றவனுமாகிய வேந்தன், அவனுடைய கூரிய துனியையுடைய வேல் முதலான அவைதாம் பகைவரைக் குத்துதலால் பிடியும் நுனியும் சிதைந்து குறுகிய பணிக் களரியில் கிடப்பனவாயின.

         “ஒரு தலைப் பதலை தூங்க ஒரு தலைத்
           தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக்
           கவிழ்ந்த மண்டை மலர்க்கு நர்யார் எனச்
          சுரன் முதல் இருந்த சில்வளை விறலி”                                     – (புறம் – 103)

         தோள் அமையினது ஒருபுறத்தே பதலை என்னும் கருவி தொங்குகின்றது. மற்றொரு புறத்தே துளையுடைய சிறிய முழா தொங்குகின்றது. இவற்றைச் சுமந்தவாறே எமக்கு உணவு இடுவார் யாருமிலராயினர். எமக்கு உணவு இட்டு கவிழ்ந்து கிடைக்கும் உண்கலத்தை மலர்த்த வல்லார் யாரெனச் சொல்லிச் சுரத்திடையே வந்திருந்து வருந்தும் விறலியே… நீ அவனிடத்துச் செல்வையாயின், பல வேற்படையையுடைய அதியாமான் ஒருபொழுதும் ஓயாமல் உண்ணவும் தின்னவும் படுதலால் ஈரம் காயாத உண்கலத்தில் மெழுகான் இயன்ற மெல்லிய அடைபோலக் கொழுத்த நிணம் மிக அளித்தல் வல்லன்.

         “………………………………………………………………………………………………
         பிறர் அஞ்சுவது அஞ்சி
         புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழிஎனின்
         உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
         அன்ன மாட்சி அனையர் ஆகி”  ( புறம் – 182)

         தேவர்க்குரிய அமிழ்தம் தெய்வத்தாலோ தவத்தாலோ தமக்க வந்து கூடுவதாயினும் அதனை இனிதென்று கொண்டு தனித்து உண்டலும் இலர். யாரோடும் வெறுப்பிலர் பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி, அது தீர்த்தற் பொருட்டுச் சோம்பியிருத்தலும் இலர். புகழ் கிடைக்குமாயின் தம் உயிரையும் கொடுப்பர், பழியெனின் அதனால் உலகம் முழுதும் பெறினும் கொள்ளார்; மனக்கவலை இல்லார். அத்தகைய மாட்சிமைப்பட்ட தன்மையராய், தமக்கென முயலாது பிறர்க்கென முயலும் சான்றோரால் இவ்வுலகம் இருக்கின்றது.

         தனித்துத் தாம் மட்டும் உண்ணுவதை விரும்பார்; இதனை இனிது எனத் தமியர் உண்டலும் இலர் என்றார். யாவரிடத்தும் அன்புடையர் என்பதை உணர்த்த முனிவிலர் என்றும் அஞ்சத்தகும் துன்பத்திற்கு அஞ்சி, அதனால் செயல்படாது சோம்பியிரார் என்பதை ‘துஞ்சலும் இலர்’ என்று குறித்தார்.

         “உண்க என உணரா உயவிற்று ஆயினும்     ………………………………………………………………………………………………………………………..
         வரகும் தினையும் உற்றவை எல்லாம்
    இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென
        …………………………………… கூட்டு” ( புறம் – 333)

         தம்மிடம் உள்ள வரகும் தினையும் இரவலர்க்கு வழங்கப்பட்டுவிட்டன. குறி எதிர்ப்பாகத் தந்த பொருள்களும் கிடைக்கப் பெறவில்லை. வீரனின் மனைவி, விதைப்பதற்காக வைத்திருந்த தினையைக் குத்தி உணவு சமைத்து வழங்கினாள். அவ்வுணவே போர் மேற்செல்லும் வீரனின் உணவுமாயின. ஒரு வீரனின் மனைவியின் விருந்தோம்பும் இயல்பு இப்பாடலால் விளக்கப்பட்டுள்ளது. பகைவரொடு போர் செய்வதற்கு அரசர்கள் வழங்கும் பொருளை அவன் பாணர் முதலியோர்க்கும் பரிசாக வழங்குவான்.

         “எழுதி யன்ன திண்நிலைக் கதவம்
         கழுதுவழங்கு அரைநாள் காவல் மடிந்தென     ……………………………………………………………………………………………………..
         இம்மை உலகத்து இல் எனப் பல்நாள்
         பொம்பல் ஓதி நீவிய காதலொடு”  (அகம் – 311)

              மழை பெய்யாது பொய்த்தமையால் திசையெல்லாம் வெப்பம் மிகுந்தது. பாலைவழி வருவோரைப் பேணிக் காக்கும் பண்பினைப் பெற்ற வெற்றி ஆயர்கள் இளைய எருதுகளின் எழுத்தில் கட்டிய மூங்கில்குழாயுள் அடைத்து வைத்த சுவைமிக்க புளிச் சோற்றினை தேக்கின் இலையில் இட்டு அப்புதியோரின் பசி நீங்கக் கொடுத்தார்.

         அத்தகைய புல்லி என்பானது நல்ல நாட்டின் அப்பாலுள்ள கடத்தற்கரிய பாலை வழியைக் கடந்து நம் தலைவர் சென்றிருந்தாலும் காலந் தாழ்த்தாது நின்னை நினைந்து விரைந்து வருவார்.

         “ அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்              முல்லை சான்ற கற்பின்
          மெல்இயற் குறுமகள் உறைவின் ஊரே”

                                           ( நற்றி – 142)

         இரவு நேரத்தே விருந்து வரினும் உவப்பவள் என் தலைவி. அவள் என்சொற் கேட்டு இல்லிருந்து நல்லறம் செய்யும் கற்பினையும், மென்மையான இயல்பையும் இளமையையும் உடையவள் ஆவாள். அத்தகைய காதலி தங்கியிருப்பதும் பொய்யாத வருவாயுடையதுமான ஊர் காட்டகத்தே அமைந்தது.

    ***** 

    குறிப்புகள்: 

    சங்க இலக்கியம்
    புறநானூறு – 1, 2
    அகநானூறு – 1, 2
    குறுந்தொகை – 1, 2
    நற்றிணை – 1 – நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ்
    41 – பி -சிட்கோ, இண்டஸ்டிரியல் எஸ்டேட்
    அம்பத்தூர், சென்னை – 098

    *****

    க.பிரகாஷ்
    தொழில் நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
    முனைவர் பட்ட ஆய்வாளர் ( பகுதி நேரம்)
    தமிழ்த்துறை
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

     

     

    Share